தமிழ்நாடு முழுவதிலுமுள்ள 171 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் சுமார் 7,360 கௌரவ விரிவுரையாளர்கள், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வகுப்புகளைப் புறக்கணித்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு 2019-ஆம் ஆண்டு வெளியிட்ட வரைவறிக்கையில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு வகுப்பிற்கு ரூ.1,500 என்றும் மாத ஊதியம் அதிகபட்சமாக ரூ.50,000 வரை வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், யு.ஜி.சி. வெளியிட்டுள்ள வழிகாட்டுதலைப் பின்பற்றி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று மாநில உயர்கல்வித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும் அதை தற்போது வரை நடைமுறைப்படுத்தாமல் மாநில அரசு கௌரவ விரிவுரையாளர்களை அலைக்கழித்து வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் கௌரவ விரிவுரையாளர்கள் மாதந்தோறும் ரூ.25,000 பெற்றுக்கொண்டு தற்காலிகமாகப் பணியாற்றி வருகின்றனர். எனினும் இந்த ஊதியம் தங்கள் வாழ்க்கை செலவுகளைப் பூர்த்தி செய்வதற்குக் கூட போதவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். அனைத்திந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியைச் (All India Save Education Committee) சார்ந்த சுதாகர் என்பவர் கூறுகையில், “பேராசிரியர்கள் பலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியும் அவர்களுக்கு நிரந்தரப் பணி மறுக்கப்படுகிறது. மேலும், யு.ஜி.சி. பரிந்துரைத்த ஊதியத்தை வழங்காமல் தமிழ்நாடு அரசு பல்வேறு காரணங்களைக் கூறி எங்கள் கோரிக்கைகளைப் புறக்கணித்து வருகிறது” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து உயர்கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ஆண்டுதோறும் ஒதுக்கப்பட வேண்டிய ரூ.40 கோடியை தமிழ்நாட்டிற்கு அளிக்காமல் பல்கலைக்கழக மானியக் குழு தவிர்த்து வருகிறது. இவ்வாறான நிலையில் கூட ஊதியத்தை நிறுத்தி வைக்காமல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தமிழ்நாடு அரசு கௌரவ பேராசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்கி வருகிறது. யு.ஜி.சி. நிதி அளிப்பதை நிறுத்திவிட்ட போதும் கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.5,000 உயர்த்தி, தற்போது 25,000 கொடுத்து வருகிறோம்” என்றார். மாணவர்களின் கல்வி மீது தமிழ்நாடு அரசு காட்டும் அக்கறை இவ்வளவு தான்.
படிக்க: கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டத்தை ஆதரிப்போம்!
யு.ஜி.சி. பரிந்துரைத்த ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை, பணி நிரந்தரம் தொடர்பாக மதுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இப்போராட்டங்களில் மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மே மாதம் ஊதியம் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் வலியுறுத்தப்படுகின்றன.
ஆனால், பேராசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது தி.மு.க. அரசு. இதுகுறித்து செய்தி வெளியிடும் ஊடகங்கள் ஒன்றிய, மாநில அரசுகளின் போக்கை அம்பலப்படுத்தாமல் பேராசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகப் பரப்புரை செய்து வருகின்றன.
ஒட்டுமொத்த கல்வித்துறையையும் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்த்து கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நோக்குடன் செயல்படும் ஒன்றிய-மாநில அரசுகளுக்குப் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்துப் பணி நிரந்தரம் செய்து தற்போதுள்ள கல்வி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. எனினும் இத்தகைய நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது என்னவோ மாணவர்களின் கற்றல்தான்.
எனவே கௌரவப் பேராசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்தும், கௌரவ பேராசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து பேராசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள் ஆகியோர் இந்தப் போராட்டத்தை ஆதரித்து, மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை அணிதிரட்டி ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டியமைப்பதே இதற்கு நிரந்தர தீர்வாகும்.
கௌரவப் பேராசிரியர்களின் தொடர் போராட்டத்தை ஆதரித்துக் களமிறங்குவோமாக!
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram