கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டத்தை ஆதரிப்போம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளே கௌரவ விரிவுரையாளர்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், நிரந்தரப் பேராசிரியர்களின் சம்பளத்தில் கால்பங்கு அளவுகூட இவர்களுக்குக் கொடுப்பதில்லை.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் 22.01.2025 முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ல்கலைக்கழக மானியக் குழு (UGC) வழிகாட்டிய அடிப்படையிலும், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசு ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டுமென்று கோரி, தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் 80க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் ஒருவார காலமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு பகலாக கல்லூரிக்குள் உள்ளிருப்புப் போராட்டமாக இது நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 164 அரசுக் கலைக் கல்லூரிகளில் 7,360 கௌரவ விரிவுரையாளர்கள் ரூ. 25,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். 15 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள் கூட ரூ.15,000 என்ற அளவிலேயே ஊதியம் பெற்று வந்த நிலையில், பல்வேறு கட்ட போராட்டங்களின் ஊடாகத்தான் ரூ.25,000 ஊதியம் நடைமுறைக்கு வந்தது. இந்த தொகுப்பூதியம் எந்த வகையிலும் கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரத்திற்குப் போதுமானது அல்ல என்ற அடிப்படையில்தான் தற்போது ரூ.50,000 ஊதியம் கோரி போராடி வருகின்றனர். உயர்கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நிகழ்ச்சிப்போக்கின் காரணமாக, பணி நிரந்தரம் என்பது கானல்நீராகிய நிலையில்தான் ஊதிய உயர்வை மையப்படுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹரியானாவில் ரூ. 57,700 ஊதியம் வழங்கப்படுகிற நிலையில், அருகாமை மாநிலங்களில் ரூ.40,000க்கும் கூடுதலாக ஊதியம் வழங்கப்படுகிற நிலையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கௌரவ விரிவுரையாளர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. உயர் கல்வித்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்கான காரணமே கௌரவ விரிவுரையாளர்கள்தான் என்றால் அது மிகையல்ல. ஆனால், இவர்களின் உழைப்பை ஒட்டச் சுரண்டி இரத்தத்தை உறிஞ்சி விட்டு, அதனால் கிடைக்கும் பெருமை மட்டும் திமுக அரசுக்குத் தேவைப்படுகிறது. இது அவலமில்லையா?

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர்

உண்மையில், கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்க்கை நிலைமை படுமோசமான நிலையில்தான் உள்ளது. உண்மையில் உயர்கல்வித் துறையின் நவீன கொத்தடிமைகளாகத்தான் கௌரவ விரிவுரையாளர்கள் இருத்தப்பட்டிருக்கின்றனர். தமது வாழ்க்கைத் தேவைகளை ஈடு செய்ய அரசு தரும் அடிமாட்டுக் கூலி போதாத காரணத்தால், பல விரிவுரையாளர்கள் பணியை முடித்துவிட்டு ஸ்விக்கி, ஜொமாட்டோ, பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பகுதி நேரமாக பணியாற்றுகின்றனர்.

திரு.வி.க அரசு கலைக்கல்லூரி, திருவாரூர்

கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றும் பலர், பல நிரந்தரப் பேராசிரியர்களை விட அதிகம் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளே கௌரவ விரிவுரையாளர்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், நிரந்தரப் பேராசிரியர்களின் சம்பளத்தில் கால்பங்கு அளவுகூட இவர்களுக்குக் கொடுப்பதில்லை. வகுப்பெடுப்பதைத் தாண்டி எல்லா வேலைகளையும் இவர்களிடம் ஏவுவது என்பதுதான் பெரும்பாலான கல்லூரிகளில் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பெண்களாக இருக்கும் கௌரவ விரிவுரையாளர்கள் பாலியல் சீண்டல்களை அனுபவிக்கும் துயரமும் நடந்தேறுகிறது. இவர்களுக்கு மகப்பேறு விடுமுறை கூட கிடையாது என்பது அதைவிடக் கொடுமை. ESI, PF, Pay Slip எதுவும் கிடையாது; ஒரு பர்சனல் லோன் கூட இந்தப் பணியை வைத்து வாங்க முடியாது என்ற நிலைமைதான் உள்ளது என்றால், இதற்குப் பெயர்தான் சமூகநீதியா? திராவிட மாடலா?

கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, திருவண்ணாமலை

ஒட்டுமொத்த உயர் கல்வித்துறையையும் கார்ப்பரேட்மயமாக்குவதற்கு ஏற்ப ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மிகத்தீவிரமாக கார்ப்பரேட்மயமாக்கத்தை உயர் கல்வித்துறையில் கொண்டு வரும் நோக்கில் அண்மையில் வெளியான, UGC-யின் வரைவறிக்கை கல்வியாளர்கள் மத்தியிலும், ஜனநாயக சக்திகள் மத்தியிலும் கடும் கண்டனத்திற்கு ஆளானது. பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.

கார்ப்பரேட்மயமாக்கத்தை நடைமுறைப்படுத்துவதைக் கொள்கையாகக் கொண்டுள்ள காரணத்தால்தான் ஒன்றிய, மாநில அரசுகள் பணிநிரந்தரம் என்பதை யோசிப்பது கூட கிடையாது. கடுமையான போராட்டங்களுக்குப் பின்னர்தான், ஊதிய உயர்வும் கூட சிறு அளவில் வழங்கப்படுகிறது. வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, உடனடிக் கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டியது அவசியம்தான். அந்த வகையில், கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வுக்கான கோரிக்கையை அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களும் ஆதரிக்க வேண்டும். ஏனெனில், அது அவர்களின் வாழ்க்கைப் பிரச்சினை மட்டுமல்ல, மாணவர்களின் தரமான கல்வி தொடர்பான பிரச்சினையுமாகும்.

அதேசமயம், கல்வியை கார்ப்பரேட்மயமாக்குவதை எதிர்த்து பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் இயக்கங்கள் என அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டியதும், அதற்கான மாபெரும் களத்தைக் கட்டியமைக்க வேண்டிய தேவையும் உள்ளது. அதுவே நிரந்தரத் தீர்வாக அமையும்.

தோழர் இரஞ்சித்,
மக்கள் அதிகாரம்,
கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க