Friday, May 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 540

குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்…

0
The Gulbarg Society massacre took place on February 28, 2002, during the 2002 Gujarat riots, when a mob attacked the Gulbarg Society, a lower middle-class Muslim neighbourhood in Chamanpura, Ahmedabad. Most of the houses were burnt, and at least 35 victims including a former Congress Member of Parliament Ehsan Jafri, were burnt alive, while 31 others went missing. Most of the ressidents deserted their home and it became a ghost's town overnight *** Local Caption *** The Gulbarg Society massacre took place on February 28, 2002, during the 2002 Gujarat riots, when a mob attacked the Gulbarg Society, a lower middle-class Muslim neighbourhood in Chamanpura, Ahmedabad. Most of the houses were burnt, and at least 35 victims including a former Congress Member of Parliament Ehsan Jafri, were burnt alive, while 31 others went missing. Most of the ressidents deserted their home and it became a ghost's town overnight. Express archive photo

தினான்கு ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நடந்த முசுலீம் இனப் படுகொலை வழக்குகளில் ஒன்றான குல்பர்க் சொசைட்டி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, நீதி வழங்கப்பட்டதைப் போன்ற தோற்றத்தைத்தான் தந்திருக்கிறது. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சங்கப் பரிவார அமைப்புகளைச் சேர்ந்த 66 இந்து மதவெறியர்களுள் 36 பேர் விடுவிக்கப்பட்டு, 24 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த 24 பேரிலும் 11 பேர் மட்டுமே கொலைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மீதி 13 பேர் மீது தீ வைத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், சட்டவிரோதமாகக் கூடி கலாட்டா செய்தல் – என ஒப்புக்குச் சப்பாணியான, மிகக் குறைவான தண்டனை அளிக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு, அவர்களுள் 12 பேருக்கு ஏழாண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

குல்பர்க் சொசைட்டி
ஆள் அரவமற்று, பேய்க் குடியிருப்பாக மாறி நிற்கும் குல்பர்க் சொசைட்டி. (கோப்புப்படம்)

இந்து மதவெறி பாசிச குற்றக் கும்பலுக்கு அதீதமான கருணையைக் காட்டியிருக்கும் இத்தீர்ப்பு, இன்னும் ஒருபடி மேலேபோய் இவ்வழக்கில் குற்றவாளிகள் சதித் திட்டம் தீட்டியதற்கோ, பாலியல் வன்முறையில் ஈடுபட்டதற்கோ ஆதாரமில்லை என்று கூறி, அக்குற்றச்சாட்டுக்களை முழுமையாக ரத்து செய்துவிட்டது. சுருக்கமாகச் சொன்னால், சங்கப் பரிவாரக் கும்பல் குல்பர்க் சொசைட்டியில் குடியிருந்து வந்த முசுலீம்கள் மீது திட்டமிட்டு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை, ஏதோவொரு சில வன்முறையாளர்களின் திடீர்த் தாக்குதலாகச் சுருக்கிவிட்டது, இத்தீர்ப்பு.

ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார இந்து மதவெறி அமைப்புகளும் நரேந்திர மோடி அரசும் இணைந்து குஜராத்தில் நடத்திய முசுலீம் படுகொலை எத்துணை கொடூரமாகவும், வக்கிரமாகவும் நடத்தப்பட்டது என்பதற்கு குல்பர்க் சொசைட்டி மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு வகைமாதிரி. குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரில், ஆதிக்க சாதி இந்துக்கள் அதிகமாக வாழும் சமன்புரா பகுதியில் தனித்தீவாக அமைந்திருந்த முசுலீம் குடியிருப்பான குல்பர்க் சொசைட்டி மீதான தாக்குதல், கோத்ரா சம்பவம் நடந்த மறுநாள் – பிப்ரவரி 28, 2002 – காலையில் தொடங்கி மாலைவரை நீடித்தது. இத்தாக்குதலில் அக்குடியிருப்பில் இருந்த 18 வீடுகள் முற்றிலுமாகக் கொளுத்தப்பட்டதோடு, காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்று உறுப்பினர் இஷான் ஜாஃப்ரி உள்ளிட்டு 35 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். குறிப்பாக, இந்து மதவெறிக் கும்பலை எதிர்த்து நின்ற இஷான் ஜாஃப்ரி, அங்க அங்கமாக வெட்டிச் சிதைக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டார். இவர்களுக்கு அப்பால் அக்குடியிருப்பைச் சேர்ந்த 31 பேரின் கதி என்னவென்பது இன்றுவரை தெரியவில்லை. அவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை என்பதே உண்மை. ஆனாலும், அவர்களின் உயிரற்ற உடல்கள்கூடக் கிடைத்துவிடாதபடி கொல்லப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டனர். கிட்டதட்ட 500 குடும்பங்கள் வசித்து வந்த அக்குடியிருப்பு, இன்று யாருமே வசிக்காத, எரிந்து போன, சிதிலமடைந்த கட்டிடங்கள் மட்டுமே எஞ்சி நிற்கும் பேய்க் குடியிருப்பாக மாறி நிற்கிறது.

தீஸ்தா செதல்வாத்.
தீஸ்தா செதல்வாத்.

இந்தத் தீர்ப்பு, இப்படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்ட முசுலீம் குடும்பங்களுக்கு மட்டுமல்ல; தனது மகனைப் பறிகொடுத்துவிட்டு, அவன் உயிரோடு இருக்கிறனா, இல்லையா என்பதுகூட நிச்சயமாகத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ரூபா மோடி குடும்பத்துக்கும் இழைக்கப்பட்டிருக்கும் இரண்டாவது அநீதியாகும். முதல் அநீதியை, இவ்வழக்கை விசாரிக்க உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு இழைத்தது.

ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த இந்து மதவெறி பயங்கரவாதிகள் குல்பர்க் சொசைட்டியைத் தாக்கத் தொடங்கியவுடனேயே, அக்குடியிருப்பைச் சேர்ந்த முசுலீம்களும், முசுலீம் அல்லாத ரூபா மோடியும் அவரது இரு குழந்தைகளும் அக்குடியிருப்பில் வசித்து வந்த இஷான் ஜாஃப்ரி வீட்டில் தஞ்சமடைந்தனர்.முதல்வர் மோடியின் அலுவலகத்தையும் போலீசு அதிகாரிகளையும் தொலைபேசி வழியாகப் பலமுறை தொடர்பு கொண்டு, தங்களைக் காப்பாற்றுமாறு கோரினார் இஷான் ஜாஃப்ரி. தாக்குதல் நடந்த அன்று காலை தொடங்கி மதியம் வரை இஷான் ஜாஃப்ரி திரும்பத் திரும்ப தொடர்பு கொண்ட பிறகும், முதல்வர் அலுவலக அதிகாரிகளோ, போலீசு அதிகாரிகளோ அவர்களைக் காப்பாற்ற ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை. இத்துணைக்கும் குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்கு அருகாமையில், ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அகமதாபாத் நகர போலீசு கமிசனர் அலுவலகம் இருந்தும், மோடி அரசும் அதிகார வர்க்கமும் தங்களைக் காப்பாற்றுமாறு கெஞ்சியவர்களை இந்து மதவெறிக் கும்பலின் கைகளில் சிக்கி சாகவிட்டனர்.

குஜராத்தில் நடந்த முசுலீம் இனப் படுகொலையில் மோடி அரசுதான் அடிக்கொள்ளியாக இருந்தது என்பது மட்டுமல்ல, அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி, நரோடா பாட்டியா பகுதிகளில் நடந்த படுகொலைகளில் அவரது அரசிற்கு நேரடியான பங்கும் இருந்தது. நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் மோடி அரசில் அமைச்சராக இருந்த கோத்னானி தளபதியாகச் செயல்பட்டது நிரூபிக்கப்பட்டு, அவர் தண்டிக்கப்பட்டார். குல்பர்க் சொசைட்டி படுகொலையில் மோடி அரசின் பங்கை இஷான் ஜாப்ரியின் தொலைபேசி உரையாடல்கள் அம்பலப்படுத்தின. இந்த அடிப்படையில்தான் நரேந்திர மோடியையும், அவரது அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரையும் குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் எனக் கோரி வழக்கு தொடுத்தார், இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி. அவரது கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு உத்தரவிட்டது.

ஜாகியா ஜாப்ரி
குல்பர்க் சொசைட்டி படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் தண்டிக்கக் கோரிப் போராடிவரும் இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரும் முன்னாள் சி.பி.ஐ. இயக்குநருமான ராகவன் நரேந்திர மோடியிடம் விசாரணை என்ற நாடகத்தை நடத்திவிட்டு, அவரைக் குற்றவாளியாக்கக்கூடிய சாட்சியங்கள் எதுவுமில்லை என அறிக்கை அளித்ததோடு மட்டுமின்றி, “இஷான் ஜாப்ரி துப்பாக்கியால் சுட்டதையடுத்துதான், கலவரக் கும்பல் ஆத்திரமடைந்து அவரைக் கொன்று போட்டதாக”க் குறிப்பிட்டு, குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கை நீர்த்துப் போகச் செய்தார்.

விசாரணையைக் கண்காணித்து வருவதாகக் கூறிய உச்ச நீதிமன்றமோ, நரேந்திர மோடியைக் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்த ராகவனின் அறிக்கையைப் பரிசீலிக்க வேண்டிய தனது பொறுப்பைக் கைகழுவிவிட்டு, அதனை குஜராத் மாநில கீழமை நீதிமன்றத்திடம் ஒப்படைத்தது. குஜராத் பெருநகர குற்றவியல் நடுவர் மன்றம் ராகவனின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு, நரேந்திர மோடி மீது ஜாகியா ஜாப்ரி சுமத்திய குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்தது.

நரேந்திர மோடி மட்டுமல்ல, அவரது அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரில் ஒருவர்கூட குல்பர்க் சொசைட்டி வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படவில்லை. பா.ஜ.க.வைச் சேர்ந்த அகமதாபாத் நகர கவுன்சிலர் பிபின் படேல், விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த அதுல் வைத்யா உள்ளிட்ட இரண்டாம் மட்டத் தலைவர்களும், மேகானிநகர் போலீசு நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த கே.ஜி.எர்டா போன்ற அம்புகள் மட்டுமே இப்படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர். இவர்களுள் பிபின் படேலையும் கே.ஜி.எர்டாவையும் அப்பாவிகள் என நீதிமன்றம் கூறாததுதான் பாக்கி. அவர்கள் இருவரும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுவிட, அதுல் வைத்யா மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள கைலாஷ் குமார் தோபியை போலீசு இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறது.

ஆர்.கே.ராகவன்
குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் தொடர்புடைய மோடியையும், அவரது அதிகாரிகளையும் கொலைக் குற்றத்திலிருந்து விடுவித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவன். (கோப்புப்படம்)

“இருபதுக்கும் மேற்பட்ட பங்களாக்களையும், பத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் 500 குடும்பங்களையும் கொண்ட மிகப்பெரிய காலனியான குல்பர்க் சொசைட்டி மீது நாள் முழுவதும் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலை, தீ வைப்பை, படுகொலைகளை வெறும் 24 பேர் மட்டுமே நடத்தியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது விந்தையாக இருக்கிறது” என இத்தீர்ப்பின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார் இஷான் ஜாப்ரியின் மகன் தன்வீர் ஜாப்ரி.

குஜராத் இனப் படுகொலை குறித்து இரகசியப் புலனாய்வு செய்து அம்பலப்படுத்திய “தெகல்கா” வார இதழின் முன்னாள் செய்தியாளர் ஆஷிஷ் கேதான், “இஷான் ஜாப்ரியைக் கொலை செய்ததில் தமக்குப் பங்கிருப்பதை என்னிடம் ஒத்துக் கொண்ட மூன்று பேரில் இரண்டு பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பதை”ச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இவ்வழக்கில் சதிக் குற்றச்சாட்டை நிரூபிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு முயற்சி செய்யவேயில்லை எனக் குற்றஞ்சாட்டுகிறார், தீஸ்தா சேதல்வாத். குறிப்பாக, குல்பர்க் சொசைட்டி மீது தாக்குதல் நடந்த சமயத்தில் போலீசு அதிகாரிகளுக்கு இடையே தொலைபேசி வழியாகவும், வயர்லெஸ் வழியாகவும் நடந்த உரையாடல்கள், தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அவர்கள் அந்தச் சமயத்தில் எங்கிருந்தார்கள், எங்கே போனார்கள் என்ற விவரங்களையெல்லாம் திரட்டி, சதிக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்களையும் சாட்சியங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழு முன்வைக்கவேயில்லை. குறிப்பாக, இஷான் ஜாப்ரி மோடியின் முதலமைச்சர் அலுவலகம் தொடங்கி பல்வேறு போலீசு அதிகாரிகள் வரை தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்களைச் சேகரிக்க முயலாமல், இஷான் ஜாப்ரியின் தொலைபேசி பதிவுகள் அழிக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது, சிறப்புப் புலனாய்வுக் குழு என அம்பலப்படுத்தியிருக்கிறார், அவர்.

இஷான் ஜாப்ரி
அங்க அங்கமாகச் சிதைத்து, பின் எரித்துக் கொல்லப்பட்ட இஷான் ஜாப்ரி. (கோப்புப்படம்)

குல்பர்க் சொசைட்டிக்கு மிக அருகாமையில், ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நரோடா பாட்டியாவில் நடந்த படுகொலை தாக்குதல் வழக்கில் சதி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் சதிக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என நீதிமன்றம் கூறியிருப்பது முரண்பாடு மட்டுமல்ல; முக்கிய குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் உள்நோக்கத்தோடு நீதிமன்றம் நடந்திருப்பதையும் அம்பலப்படுத்துகிறது.

குல்பர்க் சொசைட்டி வழக்கில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது; தண்டிக்கப்படுபவர்களுக்கு மரண தண்டனையைவிடக் குறைவான தண்டனை தரக்கூடிய விதத்தில் மட்டுமே தீர்ப்பு அமைய வேண்டும் என்ற நோக்கில்தான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் புலனாய்வும், நீதிமன்றத்தின் விசாரணையும் நடந்துள்ளன என்பதைத்தான் இத்தீர்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ள தண்டனைகளும் எடுத்துக் காட்டுகின்றன.

ஆனால், இப்படிபட்ட “பரந்த மனப்பான்மை”யை முசுலீம் தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள் வெளிப்படுத்துவதில்லை. அப்சல் குருவின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாதபோதும், தேசத்தின் மனசாட்சியைத் திருப்திப்படுத்துவதற்காக அவரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதி மன்றம். மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாறிய அப்பாவி யாகுப் மேமன் தூக்கில் தொடங்கவிடப்பட்டார். இந்தத் தண்டனைகளைக் கொண்டாடிய நகர்ப்புற நடுத்தர வர்க்கம், இந்து மதவெறி பயங்கரவாதிகள் சட்டப்படியே தப்ப வைக்கப்படுவதை எதிர்த்துக் கேள்வி கேட்க மறுக்கிறது.

“நீதிக்கான எனது போராட்டம் முடிவுக்கு வந்திருக்க வேண்டும்; ஆனால், இத்தீர்ப்பைப் பார்த்தவுடன் எனது போராட்டத்தைத் தொடருவது என முடிவு செய்திருக்கிறேன்” என்கிறார், வயதையும் மீறிய போர்க்குணத்துடன் ஜாகியா ஜாப்ரி.

நீதியை வழங்க வேண்டிய அரசே காவிமயமாகி, அநீதிக்கும் துரோகத்திற்குமான இடமாகிப் போய்விட்ட நிலையில், ஜாகியா ஜாப்ரி, தீஸ்தா செதல்வாட் போன்றோரின் துணிவுமிக்க போராட்டங்கள்தான் நம்பிக்கை ஒளிக்கீற்றுகளாக விளங்குகின்றன.

– செல்வம்
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

வினோதினி, வினுப்ரியா, சுவாதி கொலைகளுக்கு தீர்வு என்ன ?

4

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

நமது சமூகத்தில் தினமும் பல சம்பவங்கள் நடக்கின்றன. அதில் சில ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கிப் போட்டுவிடுகிறது. சமீபத்தில் நடந்த சுவாதி கொலையும் அத்தகைய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கூலிப்படை கும்பல்களை பற்றிய செய்திகளைத்தான் தினமும் கேள்விப்படுகிறோம். இம்மாதத்தில் மட்டும் தமிழகத்தில் ஒரே நாளில் ஏழு கொலைகள் நடந்திருக்கின்றன.

இதில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் மிகவும் வக்கிரமான முறையில் நடக்கின்றன. நுங்கம்பாக்கத்தில் சுவாதி, சேலத்தில் வினுப்ரியா, அதற்கு முன்பு ஜிஷா, நிர்பயா, வினோதினி என்று வரிசையாக பல பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர், தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

சுவாதி வாயில் வெட்டி கொல்லப்பட்டார். ஜிஷா என்கிற தலித் பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்தி இரு மார்பகங்களையும் அறுத்து எரிந்து, வயிற்றைக் கிழித்து குடலை உருவிப்போட்டனர். டெல்லியில் நிர்பயா என்கிற பெண்ணை பேருந்திற்குள் பலாத்காரம் செய்து பிறப்புருப்பு வழியே இரும்பு கம்பியை செருகி குடல் வரை இறக்கி கொன்றனர்.

சுவாதி கொலையை பொருத்தவரை யார் கொலையாளி என்பது தான் முதலில் பரபரப்பாக பேசப்பட்டது. பிறகு ராம்குமார் என்கிற இளைஞரை swath-murder-pala-noticeபிடித்து வந்து இவர் தான் கொலைகாரர் என்று கூறியதும் பரபரப்பு அடங்கியது. ஆனால் ராம்குமார் உண்மையான குற்றவாளியா என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன என்று போலீசை நோக்கி பலர் நூற்றுக்கணக்கான கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். போலீசின் நடவடிக்கைகளும் சந்தேகத்திற்குரியவையாக உள்ளன என்றாலும் யார் கொலைகாரன் என்கிற புலனாய்வுக்குள் நாம் இப்போது செல்ல வேண்டாம். ராம்குமாரே குற்றவாளியாக இருந்தாலும், இத்தகைய கொடூர கொலைகளுக்கு தனிநபர்கள் மட்டும் தான் காரணமா என்பதை பார்ப்போம்.

இதற்கு முன்பும் இது போன்ற கொலைகளும், பலாத்காரங்களும் நம் சமூகத்தில் நடந்திருக்கின்றன. ஆனால் இப்போது நடப்பதை போல ஒரே நாளில் டஜன் கணக்கிலும், வக்கிரமான முறையிலும் நடந்ததில்லை. இது முற்றிலும் புதிய நிலைமை. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளைஞன் தான் காதலிக்கும் பெண்ணிடம் காதலை கூறி அவள் ஏற்கவில்லை என்றால் தாடி வளர்த்துக்கொண்டு குடிகாரனாகி கவிதை எழுதிக்கொண்டிருப்பான். ஒருதலை ராகம் போன்ற திரைப்படங்கள் அப்போது வந்தன. ஆனால் இப்போதோ ஆசிட் ஊற்றி முகத்தை சிதைப்பது, கொடூரமாக கொலை செய்வது என்பதாக மாறியிருக்கிறது. பத்து நாட்களுக்கு முன்பு ஒரு சிறுமியை பலாத்காரப்படுத்தி பானைக்குள் அடைத்து வைத்திருக்கிறான் ஒரு சிறுவன்.

பெருகி வரும் இத்தகைய சம்பவங்களால் சமூகத்தில் ஒருவித அச்சமும் பாதுகாப்புணர்வும் அதிகரித்திருக்கிறது. எங்கே எப்போது என்ன நடக்குமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள். வீட்டிற்குள்ளேயே கூட பெண்கள் தனியாக இருக்க பயப்படுகிறார்கள்.

பாலியல் பலாத்காரம் செய்து இரும்பு ராடை செருகுவது, மார்பகங்களை அறுத்தெரிவது, பிறப்புறுப்பில் பூச்சிகளை விடுவது, இரும்பால் அடித்துக் கொல்வது போன்ற வக்கிர நடவடிக்கைகளுக்கு என்ன காரணம்? எது இவர்களை இவ்வாறு வெறிபிடித்த மிருகங்களாக்கியிருக்கிறது?

உயர்ந்தவன் தாழ்ந்தவன், மேலானவன் கீழானவன் என்கிற ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாக கொண்டது பார்ப்பனிய இந்து மதம். இந்த மதம் தான் நம் மக்களை கூறு கூறாக பிரித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆணாதிக்கத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும் போற்றி பாதுகாக்கும் பார்ப்பன இந்து மதத்தில் ஜனநாயகம் என்பது துளியும் கிடையாது.

சிறு வயது முதலே குழந்தைகளை பாலினப்படி ஆண் பெண் என்று பிரித்து வைக்கிறது.

இரு பாலரையும் சேர்ந்து விளையாடக் கூட அனுமதிப்பதில்லை. பெண்கள் வயதுக்கு வந்த பிறகு வாசற்படியை தாண்டவிடுவதில்லை.

ஒருபுறம் பெண்களை மூடி மறைத்து வைப்பதன் மூலம் பாலியல் விசயங்களில் பிற்போக்குத்தனத்தையும் அறியாமையையும் ஏற்படுத்துகிறது. மறுபுறம் பெண்களை ஆண்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அடிமைகளாக வைத்திருக்கிறது. சிறு வயது முதலே இரு பாலரையும் தனித்தனியே பிரித்து வளர்ப்பதால் பெண் மீது ஆணுக்கும் ஆண் மீது பெண்ணுக்கும் ஒருவகையான ஈர்ப்பும், குறுகுறுப்பும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இயற்கையான உணர்ச்சிகளுக்கெதிரான இத்தகைய கட்டுப்பாடுகள் திருட்டுத்தனமான தவறுகளுக்கு வழிவகுக்கிறது. வீட்டிற்குள் பெண்ணுக்கு இழைக்கப்படும் அடி, உதை, சித்திரவதை, பாலியல் கொடுமைகள் போன்ற அநீதிகள் மரபு, கலாச்சாரம் என்கிற பெயரில் நியாயப்படுத்தப்பட்டு சமூகத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. பார்ப்பன இந்து மதத்தின் இத்தகைய பழக்க வழக்கம் காரணமாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய சமூகம் பாலியல் விழிப்புணர்வற்றதாகவும், வறட்சி கொண்டதாகவும் இருந்து வந்திருக்கிறது.

இந்நிலையில் 1990-களுக்கு பிறகு உலகமயமாக்கல் கொள்கை நம் நாட்டில் அமலுக்கு வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் உலகமயமாக்கல் வாரி வழங்கிய வாய்ப்புகள் அதுவரை கட்டுப்படுத்தப்பட்டு கிடந்த உணர்ச்சிகளை மொத்தமாக கட்டவிழ்த்து விட்டது. அடுத்த சில ஆண்டுகளில் இணைய வசதி பரவலானது. அதுவரை இன்டர்நெட்டை கம்ப்யூட்டரில் தான் பார்க்க வேண்டும் என்கிற நிலை மாறி ஸ்மார்ட் போன் வந்த பிறகு அனைவரின் கைகளிலும் இணையம் வந்தது. அதுவரை எவையெல்லாம் மறைத்து வைக்கப்பட்டதோ, மறுக்கப்பட்டதோ அவற்றை எல்லாம் விதவிதமாகவும் வெறித்தனமாகவும் நுகரும் வாய்ப்பு கிட்டியது.

பின்தங்கிய இந்திய சமூகத்தில் மூடிமறைத்து கட்டுப்பாடு போடப்பட்டிருந்த அனைத்தையும் அப்பட்டமாக விலக்கிக்காட்டியது உலகமயமாக்கல். பிறப்பிலேயே பெண்களை இழி பிறவிகளாகவும் பாலியல் அடிமைகளாகவும் வைத்திருக்கும் பார்ப்பனிய பண்பாட்டுக்கு, பெண்களை நுகர்ந்து எறிய வேண்டிய பண்டங்களாக கருதும் ஏகாதிபத்திய பண்பாடு கனகச்சிதமாக பொருந்தியது. வறண்ட பாலையில் நீரைக் கொட்டினால் உறிஞ்சிய மறுகணமே வறண்டு போவதை போல இந்திய சமூகத்திற்கும் தாகம் தீரவில்லை.

ஏகாதிபத்திய உலகமயப் பண்பாடு நுகர்வு வெறியையும், பாலியல் வெறியையும் தூண்டிவிட்டு மனிதனை மிருகமாக்கியிருக்கிறது. பொருட்களை மட்டுமே வாங்கு புதிது புதிதாக வாங்கு என்று தூண்டுகிறது. பொருட்களை நேசிக்கவும், மதிக்கவும் கற்றுக் கொடுக்கிறது. விரும்பியதை அடைய எந்த எல்லைக்கும் செல் என்று துரத்துகிறது. அனைத்திலும் கட்டுக்கடங்காத நுகர்வையும், நிறைவின்மையையும், அடங்காத தாகத்தையும், வெறித்தனத்தையும் ஊட்டிவிடுகிறது. விரும்பிய பெண்ணை அடைய எதையும் செய்யலாம். ஏற்க மறுத்தால் தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது, உயிரோடும் இருக்கக் கூடாது என்று ஒருவனை கொலைகாரனாக்குகிறது.

ஒருபுறம் தனியார்மய, தாராளமய கொள்கை பெண்களை நுகர்ந்து எறிய வேண்டிய பாலியல் பொருளாக்கி வக்கிரங்களை தூண்டிவிடுகிறது. மறுபுறம் நிலவுகின்ற சாதி, மத ஆதிக்கம் நிறைந்த பிற்போக்கு இந்து சமூகம் பெண்ணை அடிமையாக்கி வைத்திருக்கிறது. ஒருபுறம் உலகமயம் தூண்டிவிடும் வரம்பற்ற பாலியல் சுதந்திரம், பாலியல் உறவு. மறுபுறம் கற்பு, ஒழுக்கம், அடக்கம், குடும்பக் குத்துவிளக்கு என்கிற பார்ப்பன இந்துமதப் பண்பாடு என்கிற இரண்டு ஈட்டிமுனைகளும் பெண்களை பதம் பார்க்கின்றன. இவை இரண்டும் இணைந்த கலவை கலாச்சாரம் தான் இது போன்ற குற்றவாளிகளை உருவாக்குகிறது. எனவே இத்தகைய குற்றங்களுக்கு முதன்மைக் காரணம் நுகர்வுவெறியும் பார்ப்பனீயமும் தானே தவிர தனிநபர்கள் அல்ல. அவர்கள் அம்பு தான் அதை எய்துவிடும் வில்லாக இருப்பவை இவையே.

தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கை அமலுக்கு வந்த பிறகு கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம், ஒழுக்கம், சமூக அக்கறை, நேர்மை, நியாயம் அனைத்தும் முட்டாள் தனமானதாகவும், சுயநலம், இலாபவெறி, நுகர்வுவெறி, குடிவெறி, வரைமுறையற்ற இன்பம், சொகுசு வாழ்க்கை, பாலியல் வக்கிரங்கள், போதை மருந்து, கிரிமினல் குற்றங்கள் போன்ற சமூக குற்றங்கள் தவறானவை அல்ல என்கிற கருத்தும் பரப்பப்படுகிறது. மொத்த சமூகமும் கொலை, கொள்ளை, வழிபறி, ஆட்கடத்தல், கிரிமினல் குற்றங்களை தொழிலாக கொண்ட விலங்குத்தனமான காடுபோல மாறியிருக்கிறது.

தொடர்ச்சியாக நடந்து வரும் இத்தகைய கொலைகளும், கொள்ளைகளும் இந்த சமூக அமைப்பை பண்பாடற்ற விலங்கு நிலையை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. இதை இப்படியே அனுமதித்தால் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தவறு செய்யாத அப்பாவிகளுக்கும் கூட வெட்டு விழலாம். சாலைகளில் யாரும் நிம்மதியாக நடக்க முடியாது. எங்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என்று மொத்த சமூகமும் கிரிமினல் குற்றக்கும்பல்களின் பிடிக்குள் சென்றுவிடும்.

இவற்றை தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் கடமை. ஆனால் நிலவுகின்ற அரசால் இவற்றை தடுக்க முடியவில்லை, இனிமேலும் தடுக்க முடியாது. ஏனெனில் இது ஆளத் தகுதியற்ற அரசாகிவிட்டது. பல குற்றங்களில் அரசே குற்றவாளிகளுக்கு உடந்தையாகவும் இருக்கிறது. போலீசு பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. பல வழக்குகளில் குற்றவாளிகளின் கூட்டாளிகளே போலீசுதான். நீதிமன்றத்தின் யோக்கியதை என்ன? குற்றவாளிகளான நீதிபதிகள்தான் பிற குற்றங்களையே விசாரிக்கின்றனர். தம்மைப் போன்ற சக குற்றவாளிகளுக்கு சலுகை காட்டி விடுவிக்கவும் செய்கின்றனர். எனவேதான் இந்த அரசமைப்பின் கீழ் எந்த பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்கிறோம். எனில் தீர்வு என்ன? அறிந்து கொள்ள வாருங்கள் விவாதிப்போம்.

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை – 95518 69588

கல்விக் கொள்ளைக்கு எதிராக உயிரைக் கொடுத்த ஆசிரியர்கள்

1

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக மெக்சிகோ ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடம்!

முன்னுரை: மூன்றாம் உலக நாடுகளில் ஏகாதிபத்தியக் கல்விக்கொள்கை

ந்தியாவைப் போன்று 90-களில் புகுத்தப்பட்ட தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளால் உழைக்கும் மக்கள் சின்னாபின்னமாக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று. வேலையில்லாத் திண்டாட்டம், பாரதூரமான ஏற்றத்தாழ்வு, தொழிலாளிகள் உதிரிகளாக்கப்பட்டது, போதை மருந்து சீரழிவு, விபச்சாரம் என மெக்சிகோவின் அவலநிலையை கேரி லீச், “முதலாளித்துவம்: ஒரு கட்டமைக்கப்பட்ட மக்கட்படுகொலை (Capitalism: A Structural Genocide)” எனும் புத்தகத்தில் விளக்குகிறார்.

mexico-teachers-protest-against-nep-14இன்றோ ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகநாடுகளில் அடுத்த கட்ட சீர்திருத்தம் எனும் பெயரில் கல்வி, பொதுசுகாதாரம், மின்சாரம், தண்ணீர், எரிசக்தி என சேவைத்துறைகளை சூறையாட தீவிரமான தாக்குதலைத் தொடுத்து வருகிறது. சேவைத்துறை என்று சொல்கிற பொழுது முதலில் அடிபடுவது கல்வித் துறைதான். வளரும் நாடுகளில் புல்லுருவி அரசாங்கங்களை வைத்துக்கொண்டு, பொதுக்கல்விக்கான கட்டமைப்பைத் தகர்த்து, ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு ஏற்ப கல்வியை வடிவமைக்கிற வேலையை ஏகாதிபத்திய கும்பல்கள், புதிய கல்விக்கொள்கை எனும் பெயரில் செய்யத் துடிக்கின்றன. இதில் இந்தியா, மெக்சிகோ, சிலி என எந்த மூன்றாம் உலக நாடுகளும் இந்த தாக்குதல்களுக்கு தப்பவில்லை.

சான்றாக, இந்தியாவில் அமல்படுத்தப் போகும் புதிய கல்விக்கொள்கை நிரந்தக் கூலிகளை (Skilled Human Capital-பணித்திறன் மிக்க மனித மூலதனம்) பன்னாட்டு நிதிமூலதனக்கும்பல் சுரண்டுவதற்கு ஏதுவாக தயாரிக்க முனைகிறது. இதன் மூலம் சமூகத்திற்கு அறிவூட்டும் கடமையைப் புறக்கணித்து, சந்தைப் பொருளாதாரத்திற்கு தேவையான விலைமலிவான கூலிகளை உருவாக்க முனைகிறது. மேலும் பார்ப்பனிய இந்துத்துவ பாசிசத்தைப் புகுத்தும் வண்ணம் சமஸ்கிருதத் திணிப்பு, குலக்கல்வி, இந்து-இந்தி-இந்தியா எனும் ஆர்.எஸ்.எஸ் அகண்ட பாரதக் கொள்கையையும் சேர்த்து திணிக்க முற்படுகிறது.நம் நாட்டு உழைக்கும் மக்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அறிவுத்துறையினர் மற்றும் ஆசிரியர்கள் புதியக் கல்விக்கொள்கையின் அபாயத்தை உணராத வண்ணம் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆனால், மெக்சிகோ நாட்டில் ஆசிரியர்கள் தங்களை வலுவாகத் திரட்டிக் கொண்டு மாணவர்கள்-பெற்றோர்கள்-மருத்துவர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் பேராதரவோடு அந்நாட்டில் புகுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக தீரமுடன் போராடி வருகின்றனர். போராடும் ஆசிரியர்கள் தங்களை கல்வித் தொழிலாளிகள் (Education Workers) என்று அந்நாட்டில் அழைத்துக் கொள்கின்றனர். ‘கல்வித் தொழிலாளிகளின் தேசிய கூட்டமைப்பு’ (National Coordination of Education Workers) எனும் பெயரில் செயல்படும் ஆசிரியர் சங்கமான CNTE, கடந்த மூன்று வருடங்களாக கல்விச் சீர்திருத்தத்திற்கு எதிராக போராடி வருகிறது. போராட்டத்தின் உச்சகட்டமாக 19-06-2016 அன்று மெக்சிகோவின் பெனா நியோட்டாவின் தலைமையிலான ஏகாதிபத்திய அடிவருடி அரசாங்கம் பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நடுவீதியில் சுட்டுக்கொன்றது. தங்களின் உயிரையும் மாய்த்து மெக்சிகோ ஆசிரியர்கள் கட்டியமைத்த போராட்டம் இன்று மெக்சிகோ முழுவதிலும் வீச்சாக பரவி வருவதுடன் புதிய கல்விக் கொள்கை எனும் அபாயத்தை எதிர்நோக்கும் பல்வேறு வளரும் நாடுகளின் அறிவுத்துறையினரை தட்டியெழுப்பும் வண்ணம் அமைந்துள்ளது. அது பற்றிய போராட்ட செய்தி இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் கல்விச் சீர்திருத்தம்

mexico-teachers-protest-against-nep-06ஓ.ஈ.சி.டி (OECD – Organization for Economic Co operation and Development) எனும் ஏகாதிபத்திய அமைப்பு வட-தென் அமெரிக்க நாடுகளில் சேவைத்துறையை தனியார்மயமாக்கும் கொள்கையை வடிவமைத்து தருகிறது. ஓ.ஈ.சி.டி-ன் அங்கத்தினராக உலக வங்கி, பன்னாட்டு நிதி முனையம் (ஐ.எம்.எஃப்), அமெரிக்க வங்கி (Inter American Development Bank) மற்றும் கார்ப்பரேட்டுகள் இருக்கின்றனர். ஓ.ஈ.சி.டி , மெக்சிகோ நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்துகிறேன் என்று கல்விச் சீர்திருத்தத்தை கொண்டு வந்தது. இதே ஓ.ஈ.சி.டி தான் சிலி நாட்டிலும் புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து பொதுக்கல்வியைத் தகர்க்கும் வேலையைச் செய்திருக்கிறது.

மெக்சிகோ நாட்டில் புகுத்தப்பட்ட கல்விச்சீர்திருத்தம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளைக் கலைக்கச் சொல்கிறது. ஆசிரியர் பணியிடங்களை தேசிய அறிவுத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கச் சொல்கிறது. அரசுக் கல்வி நிறுவனங்களை தனியார் முதலீட்டாளர்களுக்கு திறந்து விடச் சொல்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் அனுமதிக்கச் சொல்கிறது. இச்சீர்திருத்தத்தின் படி அரசுக் கல்விநிலையங்களின் சொத்துக்கள் ஊகபேர சந்தையில் சூதாட அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி முதல் கல்வித் துறை பாண்டுகள் பி.பி.வி.ஏ பேங்கோமர் & மெரில் லிஞ்ச் (BBVA Bancomer & Merril Lynch) கார்ப்பரேட் கம்பெனியால், மெக்சிகோ பங்குச் சந்தையில் 44 கோடி அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ 2,900 கோடி) வாங்கப்பட்டிருக்கின்றன.

இரண்டாவதாக, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளைக் கலைப்பதன் மூலமாக பல்வேறு அடித்தட்டிலிருந்து இருக்கும் மக்கள், ஆசிரியர் ஆவதற்கான, கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும் வாய்ப்பு முற்றிலுமாக தகர்க்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவதாக ஆசிரியரை உருவாக்குகிற வேலையை புறக்கணித்து விட்டு, தேசிய தேர்வு முறையை அறிமுகப்படுத்துவது என்பது ஆசிரியப் பணியிடங்களை வெகுவாக குறைத்து ஆசிரியர்களை கூண்டோடு வெளியேற்றுகிற செயலாக அமைந்திருக்கிறது. இப்படிச் செய்வதன் நோக்கம் சுரண்டும் நவதாராளமயக் கொள்கைக்கு பொதுக்கல்வி அமைப்பும் ஆசிரியர்களும் தேவையற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதே.

mexico-teachers-protest-against-nep-03ஓ.ஈ.சி.டி-ன் இத்திட்டத்தை மெக்சிகானோ-பிரைமரோ எனும் முதலாளிகள் குழு ஆதரித்து லாபியிங் வேலை செய்தது. மெக்சிகோவின் அதிபராக பெனோ நியாட்டோ 2012இல் பதவியேற்ற வெகு சில மாதங்களில் ஓ.ஈ.சி.டி-ன் கல்விச் சீர்திருத்தம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

பெனோ நியாட்டோவின் அரசு, இக்கல்விச்சீர்திருத்தம் மட்டுமல்லாது பத்துக்கும் மேற்பட்ட நவதாராளமய சீர்திருத்தங்களை தொழிலாளர் நலச்சட்டம், கருவூலம், நிதித்துறை, எரிசக்தி, தேர்தல் வழிமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு என அனைத்து துறைகளிலும் அமல்படுத்தியிருக்கிறது. இன்னும் 22-க்கும் மேற்பட்ட ஏகாதிபத்திய திட்டங்கள், சீர்திருத்தம் எனும் பெயரில் அமல்படுத்தப்பட உள்ளன.

மெக்சிகோ கல்வித் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் நிலை

2012-ல் பெனா நியோட்டோ புகுத்திய புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து மெக்சிகோ நாட்டின் ஆசிரியர் சங்கமான சி.என்.டி.ஈ (CNTE), கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலை முற்றுகை, கல்விச் செயலக முற்றுகை, ஆர்ப்பாட்டம், பேரணி, ஊர்வலம் என பல்வேறு போராட்டங்களை மக்கள் ஆதரவுடன் கட்டியமைத்திருக்கிறது. ஆசிரியர்களின் இச்சங்கம் 1970-ல் நிறுவப்பட்டதாகும். சி.என்.டி.ஈ ஆசிரிய உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்பொழுதுவரை 2 இலட்சத்திற்கும் மேல் என்கிறார்கள்.

mexico-teachers-protest-against-nep-13மெக்சிகோவில் தொழிற்சங்கங்கள், புல்லுருவி அரசை எதிர்த்து இயங்குவது அத்துணை எளிதான காரியமல்ல. இதுவரை அதிபராக வந்தவர்கள் தனியார்மயத்தை ஆதரிக்கும் ஏகாதிபத்திய ஏவலாளிகளாகவே இருந்திருக்கின்றனர். இவர்கள் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவது, வேலை நேரத்தை அதிகப்படுத்துவது, சங்கம் அமைத்துக்கொள்ளும் உரிமையைப் பறிப்பது போன்றவற்றிற்கு அரசு எந்திரத்தை பயன்படுத்துகின்றனர் (அரசு என்பதே அதற்குத்தானே?). தொழிற்சங்கத் தலைவர்களின் மீது பொய்கேசு போட்டு தொழிற்சங்கத்தை முடக்க நினைக்கின்றனர். அடிபணிய மறுக்கும் தொழிற்சங்கங்கள் போராளிக்குழுக்களாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது இராணுவ பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

சான்றுகள்:

2006-ல் கனீனா தாமிரச் சுரங்கத் தொழிற்சங்கத் தலைவரின் மீது பொய் கேசு போட்டு, குரூப்-மெக்சிகோ தனியார் முதலாளிக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தை முடக்கினர். இத்தாமிரச் சுரங்கம் மெக்சிகோ தொழிலாளர் இயக்க வரலாற்றின் முன்னோடியான களமாக இருந்திருக்கிறது.

2009-ல் மெக்சிகோ நாட்டில் மின்சக்தி துறை தனியார்மயமாக்கப்பட்டது. 40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டதுடன் மெக்சிகன் மின் பணியாளர் சங்கம் கலைக்கப்பட்டது.

2012-ல் பெனா நியோட்டா அரசாங்கம் தொழிலாளர் சீர்திருத்தங்களை மக்கள் மீது ஏவியது. வேலைகளை அவுட்-சோர்ஸ் செய்வது, பகுதி நேர, ஒப்பந்த தொழிலாளிகளை அமர்த்திக்கொள்ள அனுமதி, வேலை நேர அதிகரிப்பு, மணி நேர அடிப்படையில் சம்பளம் என்று அடுக்கடுக்கான சுரண்டல்கள் தொழிலாளிகள் மீது ஏவப்பட்டன. இதை எதிர்த்த பாஜா-கலிபோர்னியா பண்ணைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இராணுவம் கொண்டு அடக்கப்பட்டது.

மெக்சிகோவின் தொழிற்சங்க நிலைமை இது. சுருக்கமாக சொன்னால் கடந்த 25 வருடங்களில் தொழிலாளர் இயக்கங்கள் வரலாறு காணாத கடும் பின்னடைவைச் சந்தித்திருப்பதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இந்நிலையில் தான் கல்விச் சீர்திருத்தத்திற்கு எதிரான சி.என்.டி.ஈ-யின் நாடு தழுவிய ஆசிரியர் போராட்டம் உலகத் தொழிலாளர் இயக்கங்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆசிரியர் போராட்டங்களை, மெக்சிகோ ஆளும் வர்க்கம் எதிர்கொள்ளும் விதம் அதன் ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 2014 செப்டம்பர் மாதத்தில் புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக போராடிய 43 ஆசிரிய பயிற்சி பள்ளி மாணவர்கள் ஆளும் அரசால் கடத்தப்பட்டனர். எதிர்கேள்வி எழுந்தபொழுது மெக்சிகோ அரசாங்கம் போராடிய மாணவர்களை போதை மருந்துக்கும்பல் என்று அதிரகார வர்க்கத் திமிருடன் புளுகியது.

தேசிய பொது வேலை நிறுத்தம் மற்றும் ஜூன் 19 துப்பாக்கிச் சூடு

Protesters from the National Coordination of Education Workers (CNTE) teachers’ union clash with riot police officers during a protest against President Enrique Pena Nieto's education reform, in the town of Nochixtlan, northwest of the state capital, Oaxaca City, Mexico June 19, 2016. REUTERS/Jorge Luis Plataமே 16, 2016 அன்று சி.என்.டி.ஈ சங்கத்தினர் நவதாராளமயக் கல்விச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி தேசிய அளவில் பொது வேலை நிறுத்தத்தில் இறங்கினர். தேசிய அளவிலான இப்போராட்டம், மெக்சிகோவின் தெற்குப் பகுதியான ஒசாசா, சியாபஸ், குயாரீரோ போன்ற மகாணங்களில் வலுத்தும் மெக்சிகோவின் பிற 24 மகாணங்களில் பரவாமலும் இருந்தது. இதில் போராட்டத்தின் மையமான ஒசாசா மெக்சிகோவின் ஏழ்மையான மாகாணங்களில் ஒன்று. இங்கு சி.என்.டி.ஈ ஆசிரியர் சங்கத்தின் 22 பிரிவு வலுவான நிலையில் இருக்கிறது. மே பதினாறு தொடர் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு, மெக்சிகோ அரசு நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிலிருந்து தூக்கி எறிய உத்தரவிட்டிருக்கிறது. மேலும் ஜூன்-12-2016 அன்று போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய முன்னணியாளர்கள் மீது நிதி மோசடி வழக்கு புனைந்து சி.என்.டி.ஈ ஆசிரியர் சங்கத்தின் தலைவர்களை கைது செய்தது.

போராட்டம் வலுவிழந்துவிடும் என்ற எதிர்பார்த்த அரசின் எண்ணத்தில் மண்விழுந்த கதையாக, ஜூன்-19 தேதி சி.என்.டி.ஈ ஆசிரியர் சங்கம் தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்தது. ஒசாசா மாகாணத்தின் கிறித்து தேவலாயங்களின் மணி பிராத்தனைக்காக அன்றி போராடும் குழுக்களை அறை கூவி அழைப்பதற்காகவும் ஒன்றிணைப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கல்வி சீர்திருத்தத்திற்கு எதிரான மூன்று வருட போராட்டத்தில் ஆசிரியர்கள், நெடுஞ்சாலை முற்றுகையை பிரதான போராட்ட வடிவமாக பயன்படுத்தி வருகின்றனர்.

வகுப்பறையில் கரும்பலகையுடன் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் நாட்டின் மீது இருள்குவியும் பொழுது வீதிக்கு வந்து போராடுகின்றனர். ஒயிட் ஸ்காலர்ஸ் என்று அழைக்கும் இத்தகைய மூளை உழைப்புத் தொழிலாளிகளின் சாலை மறியல் போராட்டம் மெக்சிகோ அரசை மரண பீதி அடையச் செய்திருக்கிறது. ஆகையால் தான் போராட்டத்தை நசுக்க காவல் துறையை வீதியில் இறக்கி, போராடும் ஆசிரியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது.

பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஜூன் 19 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பேராதரவோடு நடைபெற்ற இப்போராட்டத்தில் மக்களும் மாணவர்களும் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் ஆயுதம் பயன்படுத்தவில்லை என முதலில் பொய் புளுகிய பெனா நியாட்டோ அரசு முழுக்கவும் அம்பலப்பட்ட பிறகு துப்பாக்கிச் சூட்டை ஒத்துக்கொண்டிருக்கிறது. மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சையை மெக்சிகோ அரசு திட்டமிட்டு மறுத்தத்தை உலகின் அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டித்துள்ளனர்.

mexico-teachers-protest-against-nep-08ஊடகங்களின் நிலைப்பாடு

2012-ல் மெக்சிகோவில் நவதாராளமய கல்விச் சீர்திருத்தம் புகுத்தப்பட்ட பொழுதிலிருந்தே ஆளும் வர்க்க ஊடக ஒட்டுண்ணிகளாக டெலிவிசா (Televisa) மற்றும் டி.வி ஆஸ்டெகா (TV Azteca), கல்விச் சீர்திருத்தம் என கருத்து விபச்சாரம் செய்துவந்தன. மேலும் மெக்சிகோவின் பக்கத்து நாடான அமெரிக்க கார்ப்பரேட் ஊடகங்களும் ஆசிரியர் படுகொலை குறித்து வாய்திறக்க மறுத்தன. ‘வெனிசுலாவாக இருந்தால் ஜனநாயகம் குறித்து படமெடுக்க அடித்துக்கொண்டு ஓடும் அமெரிக்க ஊடகங்கள், மெக்சிகோ ஆசிரியர் படுகொலையை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?’ என்று கேட்கிறார் ஜேம்ஸ் நார்த். மற்றபடி Avisp amidia போன்ற ஒசாசா மாகாண சுய ஊடகக் குழுக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தை உலக மக்களின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றனர்.

மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு

ஜூன் 19 துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு தென்மாகாணங்களில் பரவியிருந்த ஆசிரியர் போராட்டம் மெக்சிகோ முழுவதும் விரிவாக பரவத் தொடங்கியிருக்கிறது. இம்முறை ஆசிரியர்கள் மட்டுமன்றி, மெக்சிகோவின் பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களும் நவதாரளமயக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் மெக்சிகோ கிராமங்களில் ஒவ்வொரு குடும்பமும் ஆசிரியருடன் முறையாக இணைக்கப்பட்டிருப்பதால், ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்திற்கு பொதுமக்கள் பங்கேற்பும் ஆதரவும் பெரும் அளவில் இருக்கிறது.

நம் நாட்டு ஆசிரியர்கள் என்ன செய்ய போகிறார்கள்?

தங்கள் நாட்டில் புகுத்தப்பட்ட நவதாராளமயக் கல்விக்கொள்கையை எதிர்த்து மெக்சிகோ நாட்டு ஆசிரியர்கள் உயிரைக் கொடுத்து சமசரமின்றி போராடிவருகின்றனர். பொதுமக்களும் அறிவுத்துறையினரும் ஆசிரியருடன் அணிவகுத்து நிற்கின்றனர். நாங்கள் மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம் என்று மெக்சிகோ ஆசிரியர்கள் உறுதியுடன் களத்தில் நிற்கின்றனர். இந்தியாவிலும் புதிய கல்விக்கொள்கை ஏகாதிபத்தியம், பார்ப்பனியம் எனும் இரட்டை நுகத்தடியுடன் அமல்படுத்தப்பட காத்திருக்கிறது. நம் நாட்டு ஆசிரியர்கள் புதிய கல்விக்கொள்கையின் அபாயத்திலிருந்து தங்களையும் தன் நாட்டு மக்களையும் காப்பதற்கு என்ன செய்யப்போகிறார்கள்?

– இளங்கோ

செய்தி மேற்கோள்கள்

  1. In Push for Education Reforms, Mexican Government Kills Teachers in the Street
  2. Neoliberal Teaching Reform Irrelevant to Mexico Needs: Analyst
  3. Rebellion Spreads in Mexico After a Police Massacre
  4. State Terrorism and Education, the New Speculative Sector in the Stock Market
  5. Mexico Spends Millions to Promote Neoliberal Education Reform
  6. Mexican Doctors Rally Against Privatization, Oaxaca Repression

ஆட்டோமேசன் வந்தால் ஆட்குறைப்பு ஏன் செய்ய வேண்டும் ?

10

“ஐ.டி துறை ஊழியர்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்தும், ஐ.டி நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை” என்று கடந்த மே மாத இறுதியில் தமிழக அரசை அறிவிக்க வைத்த பு.ஜ.தொ.மு-வின் வெற்றியைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான ஐ.டி ஊழியர்கள் பு.ஜ.தொ.மு.வை தொடர்பு கொண்டு வருகின்றனர். அவர்களில் பலர் சங்கத்தில் உறுப்பினர் ஆகியுள்ளனர்.

மேலும், ஆட்டமேசன் மூலம் 2022-க்குள் 6 லட்சம் ஐ.டி ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்ற முதலாளிகள் சங்கங்களின் முன்னறிவிப்புகள் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்தச் சூழலில், இந்த புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது குறித்தும், தொழிற்சங்கமாக அணிதிரள்வதன் அவசியம் குறித்தும் புரிந்து கொள்ள ஏற்பாடு செய்யும் வகையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர் பிரிவின் ஊழியர்கள் கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் 16-07-2016 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

nsa-surveillance
இந்தக் கருவிகள் அனைத்தும் முதன்மையாக கார்ப்பரேட் லாபத்தை பெருக்குவதற்கான விளம்பரத் துறையிலும், பொதுமக்கள் மீதான அரசுகளின் கண்காணிப்புக்காகவுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கூட்டத்தின் தொடக்கத்தில், ஐ.டி ஊழியர் பிரிவு உறுப்பினர்களிடையே புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றில் அடங்கியிருக்கும் அரசியல் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் பிக் டேட்டா (Big Data), ஓப்பன் சோர்ஸ் (Open Source) தொடர்பான உரைகள் நிகழ்த்தப்பட்டன.

முதலில் பிக் டேட்டா பற்றி உரையாற்றிய சங்க உறுப்பினர் ராஜா, தரவுகளிலிருந்து அறிவியல் கோட்பாடுகள் உருவாவதை 17-ம் நூற்றாண்டில் கோள்களின் நகர்வுகள் தொடர்பான டைகோ பிராகேவின் அளவீடுகள், அவற்றிலிருந்து கெப்ளர் உருவாக்கிய கோள்களின் இயக்கம் தொடர்பான கோட்பாட்டு விதிகள், அந்தத் தரவுகளை பகுத்தாய நியூட்டன் உருவாக்கிய புள்ளிவிபர உத்திகள் ஆகியவற்றின் மூலமாக விளக்கினார். அடுத்த 3 நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி இப்படி புற உலகு தொடர்பான பதிவுகளிலிருந்து கோட்பாட்டை உருவாக்குவதாக அமைந்ததையும், அதன் தொடர்ச்சியாக 1950-களில், மனித மூளை பருப்பொருட்களை உணர்ந்து கொள்ளும் நிகழ்முறையின் அடிப்படையிலான நியூரல் நெட்வொர்க் என்ற கோட்பாடு படைக்கப்பட்டதையும், அதை நடைமுறையில் பயன்படுத்துவதற்கான கணினி செயல்திறன் உருவான பிறகு அந்தக் கோட்பாடு கூகிள், யாஹூ போன்ற நிறுவனங்களால் பொருத்தமான முறையில் வளர்த்தெடுக்கப்பட்டு பெரு அளவிலான தரவுகளிலிருந்து பயன் தரக்கூடிய முடிவுகளை எடுக்கும் கருவிகள் உருவாக்கப்பட்டதையும் விவரித்தார். இந்தக் கருவிகள் அனைத்தும் முதன்மையாக கார்ப்பரேட் லாபத்தை பெருக்குவதற்கான விளம்பரத் துறையிலும், பொதுமக்கள் மீதான அரசுகளின் கண்காணிப்புக்காகவுமே பயன்படுத்தப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டினார்.

அதைத் தொடர்ந்து, ஓப்பன் சோர்ஸ் தொடர்பாக சங்க உறுப்பினர் குமார் ஆற்றிய உரையில், “கணினி மென்பொருள் உலகில் ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கப்படும் மென்பொருட்கள் அவை உருவாக்கப்பட்ட நோக்கங்கள் தோற்கடிக்கப்பட்டு கார்ப்பரேட் நலனுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. அறிவியல் துறையில் அறிவை பகிர்ந்து கொள்ளும், வளர்த்துச் செல்லும் ஏற்றுக் கொண்ட பொதுவான சமூக அடிப்படையிலான முறையை உடைத்து, மென் பொருள் துறையில் பில் கேட்ஸ் போன்ற முதலாளிகள் பல பில்லியன்கள் லாபத்தை குவிப்பதற்காக 1970-களின் இறுதியில் குளோஸ்ட் சோர்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த முறையை எதிர்த்து ரிச்சர்ட் ஸ்டால்மேன் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் மூலம் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கும், பயன்படுத்துபவர்களுக்கும் மூல நிரலை படிப்பது, தேவைக்கேற்ப மாற்றி பயன்படுத்துவது, பிறருடன் பகிர்ந்து கொள்வது போன்ற உரிமைகளை உறுதி செய்யும் வகையில் மென்பொருட்களை உருவாக்கி வெளியிடும் பாரம்பரியத்தை தொடர்வதற்கு வழிவகுத்தார். அதைத் தொடர்ந்து லினக்ஸ், ஃபயர்ஃபாக்ஸ் உட்பட பல நூறு கட்டற்ற மென்பொருட்கள் பல ஆயிரம் மென்பொருள் நிரலாளர்களால் உருவாக்கப்பட்டாலும், அவை இறுதியில் கரையான் புற்றெடுக்க பாம்பு குடிபுகுவது போல ஐ.பி.எம் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் நலனுக்கு பயன்படுவதாகவே முடிந்துள்ளது. இதற்கு மத்தியில் சீனா, இந்தியா, தென் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் பல மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் இந்த ஓப்பன் சோர்ஸ் மென்பொருளை பயன்படுத்துகின்றன” என்று விளக்கப்பட்டது.

தொழில்நுட்ப உரைகளைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொருளாளர் தோழர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்,

03-tcs-dr-rudran
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டி.சி.எஸ் நிறுவனம் 25,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ததைத் தொடர்ந்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் எழுந்த இந்த உணர்வின் அடிப்படையில் பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு தொடங்கப்பட்டது. (கோப்புப் படம்)

“இந்தியாவில் இன்று 90% தொழிலாளர்கள் அமைப்பாக்கப்படாமல் உள்ளனர். இந்தச் சூழலில் 37 லட்சம் ஊழியர்களைக் கொண்ட ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கமாக திரள்வதன் அவசியத்தை உணர்ந்தது முக்கியத்துவம் வாய்ந்ததது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டி.சி.எஸ் நிறுவனம் 25,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ததைத் தொடர்ந்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் எழுந்த இந்த உணர்வின் அடிப்படையில் பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு தொடங்கப்பட்டது.

சென்ற ஆண்டு ஜனவரி மாதம் தொழிலாளர் சட்டங்கள் ஐ.டி நிறுவனங்களுக்கும் பொருந்துமா என்று கேட்டு பு.ஜ.தொ.மு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், இது தொடர்பாக முடிவு எடுக்கும்படி நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், அரசு முடிவெடுக்காமல் இழுத்தடித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பு.ஜ.தொ.மு-வின் விடாப்பிடியான முயற்சிகளுக்குப் பிறகு இறுதியில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்த பிறகு தொழிலாளர் சட்டங்கள் ஐ.டி துறைக்கு பொருந்தும் என்று அறிவித்திருக்ககிறது தமிழ்நாடு அரசு.

இந்தத் தொழிலாளர் சட்டங்களின் பின்னணி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

18, 19-ம் நூற்றாண்டுகளிலேயே ஐரோப்பாவில் தொழிற்சங்க இயக்கம் தொடங்கியது. தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை விட, அவர்களை வேலையிலிருந்து நீக்கி ரிசர்வ் பட்டாளங்களை உருவாக்குவதிலேயே முதலாளி வர்க்கம் லாபம் தேடுகிறது என்பது பேராசான் மார்க்சின் கூற்று. 18 மணி நேரம், 19 மணி நேரம் வேலை என்ற கடுமையான சுரண்டலை எதிர்த்த போராட்டங்களைத் தொடர்ந்து 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்பதை தொழிலாளி வர்க்கம் தனது போராட்ட முழக்கமாக எடுத்துக் கொண்டது. அதன் அடிப்படையில் நடந்த கடுமையான போராட்டங்களைத் தொடர்ந்து பல நாடுகளில் வேலை நேரத்தை வரையறுக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கட்டத்திலிருந்தே தொழிற்சங்க இயக்கத்தில் இரண்டு முக்கியமான போக்குகள் ஆரம்பித்து தொடர்ந்து வருகின்றன. ‘8 மணி நேர வேலை அதற்கான ஊதியம் என்பதோடு தொழிற்சங்க நடவடிக்கைகளை முடித்துக் கொள்ள வேண்டும். எஞ்சிய நேரத்தில் என்ன செய்வது என்பது தொழிலாளர்களின் சொந்த விஷயம்’ என்ற தொழிற்சங்கவாத போக்கு ஒரு புறம். “8 மணி நேரம் ஓய்வு என்ற பகுதியில் தொழிலாளி வர்க்கத்தை பாதிக்கும் சமூக விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும், அவற்றை எதிர்த்து போராடுவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும்” என்ற போக்கு மறுபுறம்.

union-workersஉதாரணமாக, தற்போது தமிழக அரசு பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவுக்கு எழுதிய கடிதத்தில் ‘ஐ.டி துறைக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்துமா என்ற கேள்விக்கே இடமில்லை. அவை எப்போதுமே அமலில்தான் உள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. உண்மைதான். அப்படியானால், 2014-ம் ஆண்டு இறுதியில் டி.சி.எஸ் நிறுவனம் சட்டங்களுக்கு விரோதமாக 25,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்த போது அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், அதுதான் மத்திய மாநில அரசுகளின் கொள்கை. இத்தகைய கொள்கைகள் தொழிலாளர்களை நேரடியாக பாதிக்கின்றன. இது போல கல்வி தனியார் மயமாக்கும் முடிவு தொழிலாளர் வர்க்கத்தை பாதிக்கிறது. போராடி பெறும் சம்பள உயர்வு சட்டைப் பையிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டு முதலாளிகளின் பைக்கு மாற்றப்பட்டு விடுகிறது. இவற்றை எல்லாம் எதிர்த்து போராடாமல் தொழிலாளர் தமது வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள முடியாது.

ஆசியாவிலேயே முதல் தொழிலாளர் சங்கம் 1918-ல் பின்னி மில்லில் மெட்ராஸ் லேபர் யூனியன் என்ற பெயரில் தொடங்கப்பட்டது ஆகும். முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் ராணுவத்துக்குத் தேவையான துணியை உற்பத்தி செய்வதற்காக தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப்பட்டனர். தூங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் கூட போதுமான நேரம் கொடுக்காமல் வேலை வாங்கப்பட்டனர். அதை எதிர்த்து கேட்டால் ராஜ துரோகம் என்று அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

அதை எதிர்த்து தொழிலாளர்கள் அணிதிரண்டு போராடினர். 1921-ல் இந்தியாவிலேயே மிகப்பெரிய வேலை நிறுத்தம் சென்னையில் நடத்தப்பட்டது. இவற்றைத் தொடர்ந்துதான் 1926-ல் தொழிற்சங்க சட்டம் காலனிய ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டது. இவ்வாறு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை என்பது காலனி ஆட்சியின் போதே இந்தியத் தொழிலாளர்கள் போராடி பெற்றுக் கொண்ட ஒன்றாகும்.

தமது பி.எஃப் பணத்தை முடக்கத் திட்டமிட்ட மோடி அரசின் சதியை எதிர்த்து போர்க்குணமிக்கப் போராட்டம் நடத்திய பெங்களூரு ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்கள்.(கோப்புப்படம்)
தமது பி.எஃப் பணத்தை முடக்கத் திட்டமிட்ட மோடி அரசின் சதியை எதிர்த்து போர்க்குணமிக்கப் போராட்டம் நடத்திய பெங்களூரு ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்கள். (கோப்புப்படம்)

இரண்டாம் உலகப் போரின் போது தொழிலாளர் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன. தமக்கான உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்று மான்செஸ்டர், லங்காஷயர் தொழிலதிபர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இதை முறைப்படுத்த வைத்தனர். தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடைமுறைகளை வகுப்பதற்காக 1947 மார்ச் மாதம் தொழில்தகராறு சட்டம் அமலுக்கு வந்தது. இந்த காலனிய சட்டங்களின் தொடர்ச்சியாகவே 1950-ல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவில் அமைப்பாக திரளும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, உயிர் வாழும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட மத்திய சட்டங்களும், நூற்றுக்கணக்கான மாநில சட்டங்களும் தொழிலாளர் பிரச்சனைகள் தொடர்பாக இயற்றப்பட்டுள்ளன.

இந்தச் சட்டங்கள் எல்லாம் தொழிலாளர் போராட்டங்களை தவிர்ப்பதற்கான சேஃப்டி வால்வ் ஆகவே கொண்டு வரப்பட்டன. தொழிலாளர்கள் பிரஷர் குக்கரில் வெந்து கொண்டிருக்கும் போது நிலைமை தாங்க முடியாமல் போகும் போது அவர்கள் மீதான அழுத்தத்தை சிறிதளவு குறைப்பதற்கான வழியாகவே இந்த சட்டங்கள் ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டன. இவற்றை அந்த அளவில் மட்டும் நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். நமது வாழ்க்கையை தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து போராடுவதற்கான ஒரு கருவியாக இந்த சட்டங்கள் வழங்கும் உரிமைகளை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமாகவே உரிமைகளை தக்க வைத்துக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தின் நிரந்தர விடுதலையை சாதிக்க முடியும்.

ஐ.டி துறையில் ஆட்டோமேஷன் வருகிறது, 2020-க்குள் 6 லட்சம் ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இது ஐ.டி துறையில் மட்டுமின்றி வாகன உற்பத்தித் துறையிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரிய நாட்டு நிறுவனமான ஹூண்டாய் அந்த நாட்டு மேலாளர்களை தனது சப்ளையர் நிறுவனங்களுக்கு அனுப்பி தானியங்கி எந்திரங்களை நிறுவுகிறது. வேலை இழக்கப் போகும் தொழிலாளர்களைக் கொண்டே அந்த எந்திரங்களை நிறுவும் வேலையை செய்விக்கிறது.

layoff-management-1பொதுவாக சூழ்நிலை பாதிக்கப்படும் போது ஒரு பிரமிடின் மேல்பகுதிதான் முதலில் விழும், ஆனால் இங்கு மட்டும் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் மேல்தட்டு மேலாளர்கள் பாதிக்கப்படாமல், பிரமிடின் அடித்தளத்தில் உள்ள ஊழியர்கள் பலி கொடுக்கப்படுகின்றனர். புதிய தொழில்நுட்பம், ஆட்டோமேஷன் வந்தால் ஏன் ஆட்குறைப்பு செய்ய வேண்டும்? ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து புதிய வேலையில் ஏன் ஈடுபடுத்த முடியாது?

ஆனால், லாபத்தையே குறிக்கோளாக செயல்படும் கார்ப்பரேட் நிர்வாகம், 80,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியருக்கு பயிற்சி அளித்து ஊதியத்தை உயர்த்தி புதிய பணியில் அமர்த்துவதை விட அவரை தூக்கி எறிந்து விட்டு 20,000 சம்பளத்தில் 5 புதிய இளம் பட்டதாரிகளை எடுத்து வேலை வாங்குவதுதான் லாபகரமானது என்று கணக்கு போடுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி லாபவேட்டையை நோக்கமாகக் கொண்டவர்கள் கையில் இருக்கும் போது இப்படித்தான் நடைபெறும். இதன்படி ஒரு ஊழியர் வயதாகும் போது அவரை தேவையற்றவராக கருதுவது நடைமுறையாகி இருக்கிறது.

ஐ.டி துறையில் உள்ள பலர் 40 வயதை நெருங்கும் போது பலவிதமான மனநல பிரச்சனைகளுக்கு உள்ளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில் மனநல மருத்துவர்களை நாடுபவர்களில் 10-க்கு 7 பேர் ஐ.டி துறையைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர். பிரச்சனைகளை தனியாக எதிர் கொள்ள நேரிடுவது, அதை நினைத்து மனதை வருத்திக் கொள்வது இதற்குக் காரணமாக உள்ளது. அமைப்பாக திரண்டு யூனியனின் பின்புலம் இருக்கும் போது எந்தப் பிரச்சனையையும் எதிர் கொள்ளலாம் என்ற தைரியத்தை கொடுக்கிறது.

ஒரு தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் என்றால் அந்தத் தொழிற்சாலைக்கு மட்டும்தான் பாதிப்பு. ஆனால், ஐ.டி ஊழியர்கள் அமைப்பாக திரண்டால், அவர்களது பலம் உலகத்தையே ஆட்டுவிப்பதாக இருக்கும்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 1998 முதல் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் நலனில் முழுமையான உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருவதால் அவர்களது நலன்களை நிலைநாட்டுவதில் உறுதியுடன் நிற்கிறது. ஐ.டி ஊழியர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்பாக தொழிலாளர் துறையில் வழக்கு தொடரவும், நீதிமன்றத்தில் தடையாணை வாங்கவும் தொழிற்சங்கம் மூலமாக நடவடிக்கை எடுக்கலாம்.

அப்ரைசல் முறை, வேலை நேரத்தை முறைப்படுத்துவது முதலான உரிமைகளை நிலைநாட்டுவதற்கு சட்டரீதியாகவும், அமைப்புரீதியாகவும் போராடுவதற்கு பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு செயலாற்றி வருகிறது. ஐ.டி ஊழியர்கள் அனைவரையும் அமைப்பாக திரட்டி வலுப்படுத்துவதை நோக்கி பணியாற்றி வருகிறது.”

கூட்டத்தில், பல ஐ.டி ஊழியர்கள் முதல்முறையாக கலந்து கொண்டனர். தொழில்நுட்ப உரைகளும், யூனியன் அமைப்பது பற்றிய தோழர் விஜயகுமாரின் விரிவான உரையும் பல புதிய விஷயங்களை தெரிவிப்பதாக அமைந்தன என்று கருத்து தெரிவித்தனர்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர் பிரிவு
சென்னை

தொடர்புக்கு:
combatlayoff@gmail.com
9003198576

ஜாட் கலவரம் : சாதி என்றொரு பெருந்தீமை !

0

ரியானா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஜாட் சாதிவெறிக் கும்பல், பிற சாதியினரைக் குறிவைத்து நடத்திய தீ வைப்பு, சூறையாடல், கொள்ளை, பாலியல் வன்முறை உள்ளிட்ட வன்முறை வெறியாட்டம், சாதி என்பது எத்தகையதொரு பேரழிவு சக்தி என்பதையும், இந்த அட்டூழியங்கள் அனைத்தையும் நியாயப்படுத்தும் சுயசாதி பெருமிதம் மனித நாகரிகத்துக்கே எதிரானது என்பதையும் மீண்டுமொருமுறை எடுத்துக் காட்டியிருக்கிறது.

jat-riots-gutted-cars
ஜாட் சாதிவெறியர்களால் எரிக்கப்பட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள்

தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனக் கோரி ஜாட் சாதியினர் நடத்திய போராட்டம், தன்னெழுச்சியாக வன்முறை வடிவத்தை எடுத்துவிட்டதைப் போலச் சித்தரிப்பதெல்லாம் உண்மையை மூடிமறைப்பதாகும். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே, ஜாட் சாதியினர் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் தங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் என்றபோதும், கடந்த பிப்ரவரி மாதம் அச்சாதியினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தின் இலக்கு இட ஒதுக்கீடு சலுகை அல்ல. அதற்கும் மேலாக, அரியானா மாநிலத்தில் தமக்குள்ள சமூக, அரசியல் மேலாண்மையை உறுதிப்படுத்திக் கொள்வதுதான்.

அரியானா, பஞ்சாப், டெல்லி, உ.பி., இராசஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஜாட் சாதியினர் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வந்தாலும், அரியானாவில்தான் அவர்கள் மற்ற சாதியினரைவிட அதிக எண்ணிக்கையிலும், அடர்த்தியாகவும் வசித்து வருகின்றனர். அம்மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் 27 சதவீதம் ஜாட் சாதியினராக இருப்பதோடு, 90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில் ஏறக்குறைய முப்பது தொகுதிகளின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக ஜாட் சாதியினர்தான் உள்ளனர். 1966-ல் அம்மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, இதுவரை அம்மாநிலத்தை ஆண்ட பத்து முதலமைச்சர்களுள் ஏழு முதலமைச்சர்கள் ஜாட் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

jat-riots-gutted-shops-2
ஜாட் சாதிவெறியர்களால் எரிக்கப்பட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள்

நிலவுடமை வர்க்கமான ஜாட் சாதியினரிடம்தான் அம்மாநிலத்தின் நான்கில் மூன்று பகுதி விவசாய நிலங்கள் குவிந்திருப்பதாகவும்; அச்சாதியினரில் வெறும் 10 சதவீதம் பேர்தான் நிலமற்றவர்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஜாட் சாதியினரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது குறித்து ஆராய்ந்த கே.சி.குப்தா கமிசன், “அம்மாநில அரசின் உயர் பதவிகளில் 17.82 சதவீதமும், கீழ்நிலைப் பதவிகளில் 40 முதல் 50 சதவீதமும் ஜாட் சாதியினரால் நிரம்பியிருப்பதாக”க் குறிப்பிடுகிறது.

இப்படி ஆதிக்க சாதிகளுள் ஒன்றாகவும், அரசியல்-பொருளாதார செல்வாக்கும் கொண்டதாகவும் உள்ள ஜாட் சாதியினர், குறிப்பாக 1990-களில் மண்டல் கமிசன் அறிக்கை அமல்படுத்தப்படுவதற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். இப்போது தம்மைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு சலுகையை அளிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். இட ஒதுக்கீடு சலுகையைப் பெற்றுள்ள ஆஹிர், குஜ்ஜார், லோதா, சைனி, யாதவ் உள்ளிட்ட பிற ஆதிக்க சாதி மேட்டுக்குடி வர்க்கத்துடன் போட்டியிடுவதுதான் ஜாட் மேட்டுக்குடி வர்க்கத்தின் நோக்கம். விவசாயத்தின் அழிவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை ஜாட் சாதியினரை இவர்கள் தம் பக்கம் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் வென்று, தனித்து ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. அரசில் ஜாட் சாதியினரின் பங்கு முன்பு இருந்ததை விட வெகுவாகக் குறைந்தது. ஜாட் சாதியைச் சேராத மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக்கப்பட்டார். கட்சியின் முக்கிய பதவிகளிலும் ஜாட் அல்லாத பிற ஆதிக்க சாதியினர் அமர்த்தப்பட்டனர்.

other-castes-against-jats
ஜாட் சாதியினருக்கு எதிராக மற்ற 35 ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்.

உ.பி.யில் ஜாட் சாதியினரைத் திரட்டி முசுலீம்களுக்கு எதிரான முசாஃபர் நகர் கலவரத்தை நடத்திய பா.ஜ.க., அரியானாவில் ஜாட் சாதியினரைப் புறக்கணித்ததற்கு, அம்மாநில சட்டசபைத் தேர்தலில் ஜாட் சாதியினரைவிடப் பிற ஆதிக்க சாதியினர் பா.ஜ.க.விற்கு அதிக அளவில் வாக்களித்திருப்பதும்; ஜாட் சாதியினர் இன்னமும் காங்கிரசு மற்றும் அகில இந்திய லோக் தளக் கட்சியின் வாக்கு வங்கியாக இருப்பதும் காரணங்களாகக் கூறப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மைய ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் எதிர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு, ஜாட் சாதியினரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் ஆணையை வெளியிட்டது. இந்த ஆணையை உச்ச நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டில் ரத்து செய்தது. மேலும், அரியானா மாநிலத்தில் ஜாட், சீக்கிய ஜாட், பிஷ்னோய், தியாகி, ரோர் உள்ளிட்ட ஆதிக்க சாதியினருக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் 10 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கும் சலுகை அளிக்கப்பட்டிருந்தது. இந்தச் சலுகையை பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதி மன்றம் ரத்து செய்தது.

இந்தப் பின்னணியில்தான் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து ஜாட் சாதி சங்கங்கள் கடந்த பிப்ரவரியில் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கின. இப்போராட்டம் பா.ஜ.க. அரசிற்கும், தனது மேலாதிக்கத்திற்கு சவலாக எழுந்திருக்கும் பிற ஆதிக்க சாதியினருக்கும் பாடம் கற்றுக்கொடுக்கும் நோக்கத்தில் திட்டமிட்ட வன்முறைத் தாக்குதலாக நடத்தப்பட்டது.

jat-riots-khattar-gharoed
ஜாட் சாதிவெறியர்களால் முற்றுகையிடப்படும் அரியான மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார். (உள்ளே: மனோகர் லால் கட்டார்.)

“ஜாட் அல்லாத 35 சாதிகளுக்கு எதிராக ஜாட்” எனப் பொருள்படும், “35 க்கு எதிராக ஒன்று” என்ற சாதிவெறியைத் தூண்டிவிடும் முழக்கத்தை முன்வைத்து இக்கலவரத்திற்கு ஜாட் சாதியைச் சேர்ந்த இளைஞர்களும் உதிரிகளும் திரட்டப்பட்டனர். இந்த 35 சாதிகளுள், சைனி மற்றும் பஞ்சாபியர்கள் இக்கலவரத்தின்பொழுது குறிவைத்துத் தாக்கப்பட்டனர். மேலும், தாகுர், பனியா, பார்ப்பனர், வால்மீகி ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்களின் சொத்துக்களும் குறிவைத்து அழிக்கப்பட்டன.

குஜராத் இனப்படுகொலையின்போது முசுலீம்களின் வீடுகளும், கடைகளும் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு தாக்கப்பட்டதைப் போலவே அரியானாவிலும் நடந்திருக்கிறது. ஒரே தெருவில் இருக்கும் ஜாட் சாதியினருக்குச் சொந்தமான கடைகள், வீடுகள், வாகனங்களைத் தவிர்த்துவிட்டு, அதே தெருவில் உள்ள பிற சாதியினரின் சொத்துக்கள் ‹றையாடப்பட்டு, தீ வைத்து அழிக்கப்பட்டிருக்கின்றன. பிற சாதியினரின் வீடு உள்ளிட்ட சொத்துக்களை, கடை உள்ளிட்ட வாழ்வாதாரங்களை அழிப்பதன் மூலம் அவர்களை உள்ளூரிலேயே அகதிகள் போன்ற நிலைக்குத் தள்ளும் திட்டத்தோடு ஜாட் சாதிவெறிக் கும்பல் இக்கலவரத்தை நடத்தியிருக்கிறது.

21 மாவட்டங்களைக் கொண்ட அம்மாநிலத்தின் எட்டு மா-வட்டங்கள், கலவரம் நடந்த இருபது நாட்களும் ஜாட் சாதிவெறியர்களின் முற்றுகையின் கீழ் கொண்டுவரப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்ட இராணுவத்தினரை வான்வழியாகத்தான் கலவரப் பகுதிகளில் இறக்க முடிந்தது என்பதிலிருந்தே இந்தக் கலவரம் ஒரு உள்நாட்டுப் போரைப்போல நடத்தப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பொறுப்பான போலீசிலும், சிவில் நிர்வாகத் துறையிலும் ஜாட் சாதியினர் நிரம்பியிருந்தது, ஜாட் சாதிவெறியர்களுக்குப் பக்கபலமாக அமைந்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை, ஜாட் சாதிவெறியர்கள் பொதுச் சொத்துக்களையும், தனியார் சொத்துக்களையும் கொள்ளையிடுவதற்கும், தீயிட்டுக் கொளுத்துவதற்கும் பயன்படுத்திக் கொண்டனர். இந்த அட்டூழியத்திற்கு போலீசே பாதுகாப்புக் கொடுத்தது.

பானிபட் மாவட்டத்தில், டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முர்தால் எனும் ஊரில் சாலைகளில் தடையரண்களை ஏற்படுத்தி வாகனப் போக்குவரத்தை முற்றிலும் முடக்கிய ஜாட் சாதிவெறியர்கள், வாகனங்களில் இருந்த பெண்களைப் பாலியல்ரீதியில் சீண்டியுள்ளனர்; பத்து பெண்கள் பக்கத்திலுள்ள வயல்வெளிக்குள் இழுத்துச் செல்லப்பட்டுக் கும்பலாகப் பாலி-யல் பலாத்காரப்படுத்தப்பட்டுள்ளனர். “குடும்ப கௌரவம் சந்தி சிரித்துவிடும்; அதனால் புகார் கொடுக்க வேண்டாம்” என போலீசே பாதிக்கப்பட்ட பெண்களை அச்சுறுத்தி இக்குற்றத்தை மறைத்துவிட முயற்சி செய்தாலும், அதனையும் மீறிக் கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவரும், டெல்லியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் இது குறித்து போலீசில் புகார் அளித்திருக்கின்றனர்.

இந்தப் புகார்கள் பத்திரிகைகள் வாயிலாக அம்பலமானதையடுத்து, பஞ்சாப் மற்றும் அரியான உயர்நீதிமன்றம் இதனைப் பொதுநல வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இனிமேலும், இக்குற்றத்தை மறைக்க முடியாது என்ற நிலையில், அரியானா அரசு முர்தாலில் நடந்துள்ள கும்பல் பாலியல் வன்புணர்ச்சி குறித்து விசாரிப்பதற்குச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திருக்கிறது.

“கலவரம் தீவிரமாக நடந்த எட்டு மாவட்டங்களில் மட்டும் பிற சாதியினருக்குச் சொந்தமான 2,000 கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள், 371 வாகனங்கள், 30 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், 75 வீடுகள், 50 உணவு விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, 23 பெட்ரோல் நிரப்பும் நிலையங்களும், மத நிறுவனங்களுக்குச் சொந்தமான 15 கட்டிடங்களும் ‹றையாடப்பட்டிருக்கின்றன.

jat-riots-prakash-sings-committeeபொதுச் சொத்துக்களை எடுத்துக் கொண்டால், 7,232 சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு, அவை பிற்பாடு திருடிச் செல்லப்பட்டுவிட்டன. 45 அரசு வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. 29 போலீசு நிலையங்களும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 160 வாகனங்களும் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளன. போலீசுநிலையங்களிலிருந்து 170-க்கும் மேற்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் திருடப்பட்டுள்ளன” என இக்கலரவம் குறித்து ஆய்வு செய்ய அரசால் நியமிக்கப்பட்ட பிரகாஷ் சிங் கமிட்டியின் அறிக்கை சேதாரங்கள் குறித்துப் பட்டியல் இட்டிருக்கிறது. இந்தக் கலவரத்தில் அழிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாயாகும் எனக் குறிப்பிடுகிறது, தரகு முதலாளிகளின் சங்கமான அசோசெம்.

மேலும், உள்துறைச் செயலர் பி.கே.தாஸ் உள்ளிட்டு 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், டி.ஜி.பி. யஷ்பால் சிங்கால் உள்ளிட்ட 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள், சிவில் துறையைச் சேர்ந்த 21 உயர் அதிகாரிகள், போலீசு துறையைச் சேர்ந்த 59 அதிகாரிகள் ஆகியோர் கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், ஜாட் சாதிவெறியர்களுக்கு ஒத்துழைப்புக் கொ-டுத்திருப்பதையும் இக்கமிசனின் அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.

அரியானாவில் ஜாட் சாதியினரை கட்டுக்குள் வைக்க சைனி உள்ளிட்ட பிற ஆதிக்க சாதிகளுக்குக் கொம்புசீவிவிட்ட பா.ஜ.க., ஜாட்டுகள் கலவரத்தில் இறங்கியவுடன், பீதியடைந்து ஒதுங்கிக் கொண்டது. ஜாட்டுகள் நடத்திய கலவரத்தை அரசுப் படைகளைக் கொண்டு ஒடுக்கினால், அதனின் பின்விளைவுகளை எதிர்வரும் உ.பி. சட்டமன்றத் தேர்தலில் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதுடன் ஒரு உள்நாட்டுப்போரை ஒத்த சூழலை எதிர்கொள்ள நேரும் என்றும் பா.ஜ.க. அஞ்சியது. எனவே, பா.ஜ.க மாநில அரசு, ஒருபுறம் கலவரத்தின்பொழுது கைது செய்யப்பட்ட ஜாட்டுகளை உடனடியாகப் பிணையில் விட்டுவிட்டு, இன்னொருபுறம், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 இலட்ச ரூபாய் அளவிற்கு நட்ட ஈடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

***

ன்றைய நவீன சமூகத்தில், சாதி என்பது, ஒவ்வொரு சாதியையும் சேர்ந்த மேல்தட்டுக் கும்பலின் நலனுக்கோ அல்லது இந்து மதவெறி அரசியல் உள்ளிட்ட ஆளும் வர்க்கங்களின் அரசியல் நலன்களுக்கோ மட்டும்தான் பயன்பட்டு வருகிறது. பொதுவாக சாதிவெறித் தாக்குதல் என்பது முதன்மையாக தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதியினரின் தாக்குதலாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, அரியானாவில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தாக்குதல்களில் முன்னணியில் நிற்பது ஜாட் சாதிதான்.

வன்னிய சாதிவெறியர்கள் தலைமையில் நடைபெற்ற நத்தம் காலனி தாக்குதல் தமிழகத்தில் ஒரு எடுத்துக்காட்டு. முசாபர்பூரில் ஜாட் சாதிவெறியையே இந்து வெறியாக மாற்றி, இசுலாமிய மக்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்தது பாரதிய ஜனதா. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.

தாழ்த்தப்பட்ட மக்களையும் இசுலாமியர்களையும் தாக்கும்போது, அதனை ஆதரித்த, அல்லது நமக்கென்ன என்று ஒதுங்கி நின்ற மற்ற சாதியினருக்கு பாடம் கற்பித்திருக்கிறது தற்போது அரியானாவில் ஜாட் சாதியினர் நடத்தியிருக்கும் வெறியாட்டம். பிற சாதியினரின் சொத்துகளைக் குறிவைத்து அழித்து அவர்களை அகதிகளாக்கியிருப்பது மட்டுமல்ல, நெடுஞ்சாலையில் பயணம் செய்த பெண்களையெல்லாம் வளைத்துப் பிடித்து வல்லுறவுக்கு ஆளாக்கியதன் மூலம், சாதி என்பது தன் இயல்பில் ஒழுக்கமோ, நெறிகளோ இல்லாத ஒரு சமூக விரோத நிறுவனம் என்பதைக் காட்டியிருக்கிறது.

தமிழகத்தில் வன்னிய சாதி வெறியர்கள் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நத்தம் காலனித் தாக்குதலை நடத்தி, அதனைப் பயன்படுத்தி ஆதிக்க சாதியினரின் ஓட்டுக்களை அறுவடை செய்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அன்புமணி, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார். அன்புமணியின் தேர்தல் வெற்றிக்குப் பின், பெரும்பான்மைச் சாதி என்ற திமிரில் அந்தத் தொகுதியில் பா.ம.க.வினர் செய்த அடாவடித்தனங்கள்தான் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று அந்த வட்டாரத்தின் வன்னிய சாதி மக்களே கூறுவதை சென்ற இதழ் கட்டுரையொன்றில் பதிவு செய்திருந்தோம்.

சாதி சங்கங்கள் அல்லது சாதிக் கட்சிகள் அச்சாதியைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களின் நலனையும் பிரதிநிதித்துவப்படுவதாகக் கூறிக்கொள்வதெல்லாம் கடைந்தெடுத்த மோசடி. சாதியும், சாதி சங்கங்களும் அச்சாதிகளைச் சேர்ந்த ஓட்டுச்சீட்டு அரசியல் பிரமுகர்களுக்கும், கல்வி வியாபாரிகள் உள்ளிட்டு திடீர் பணக்காரர்களாக உருவெடுத்திருக்கும் மேல்தட்டு பிரிவினருக்கும்தான் அவசியமாக உள்ளது.

இக்கும்பல் தமது பலத்தைக் காட்டுவதற்கும், கலவரங்களில் பலியிடுவதற்கும் உழைக்கும் மக்களை அடியாட் படையாகப் பயன்படுத்திக் கொள்கிறது. சாதியின் பெயரால் அக்கும்பல் செய்யும் அனைத்து அட்டூழியங்களையும் நியாயப்படுத்தும் அளவிற்கு அவர்களின் மூளையைச் சலவை செய்கிறது. யுவராஜால் கோகுல்ராஜ் கொல்லப்பட்டதைக் கவுண்டர்களும், சங்கர் கொல்லப்பட்டதைத் தேவர்களும், இளவரசன் சாவுக்குத் தள்ளப்பட்டதை வன்னியர்களும் ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்விக்கு விடை சுயசாதிப் பற்று என்ற தீமையில்தான் உள்ளது.
அரியானாவில் ஜாட் சாதியினர் நடத்திய கலவரத்தில் பாதிக்கப்பட்ட பிற சாதியினர், நேரம் கிடைக்கும் சமயத்தில் திருப்பிக் கொடுப்பதற்கு தயாராகி வருவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இந்த அணுகுமுறை சாதி ரீதியான முனைவாக்கத்தைத்தான் தீவிரப்படுத்தும். சாதி, உழைக்கும் மக்களுக்கோ, பொதுவில் சமூகத்துக்கோ எந்தவிதமான நற்பயனையும் தரமுடியாத ஒரு தீமை. அதனால்தான் சாதி கட்டமைப்பை வேரடி மண்ணோடு வெட்டியெறிவது அவசியமாகிறது.

– குப்பன்
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

சுவாதி கொலை – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு பத்திரிகை செய்தி

3
கொலை செய்யப்பட்ட இன்ஃபொசிஸ் ஊழியர் சுவாதி

.டி ஊழியர் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடக பரபரப்பு, உயர்நீதிமன்ற கோமாளித்தனம், குற்றம் சாட்டப்பட்டவர் அதிரடி கைது போன்ற நகர்வுகளைத் தாண்டி இந்தக் கொலைக்கு காரணம் என்ன என்பதை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட இன்ஃபொசிஸ் ஊழியர் சுவாதி
கொலை செய்யப்பட்ட இன்ஃபொசிஸ் ஊழியர் சுவாதி

தமிழக தலைநகரில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பொது இடமான நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற ஐ டி துறையில் வேலை செய்யும் தொழிலாளி படுகொலை செய்யப்படுகிறார். கோர்ட் உடனே தலையிடுகிறது. இதன் தொடர்ச்சியாக, குற்றவாளியை பிடிக்க துரிதகதியில் போலீஸ் மூலம் விசாரனை செய்யப்பட்டு ஒரு வார காலத்திற்குள் குற்றவாளியை பிடித்து ஜெயிலுக்குள் அடைக்கின்றனர். மீடியாக்களும் அந்த நேர பரபரப்பாக இதனை ஒளிபரப்பி தங்களது விளம்பர வருவாயை பெருக்கி கொண்டனர். அதன் பிறகு வழக்கம்போல வேறு பரபரப்பை தேடி நகர்ந்து விட்டனர். அரசு தனது கடமையை முடித்துக்கொண்டதாய் காட்டிக்கொண்டது.

இந்தப் படுகொலையின் பின்னணியில் அப்பட்டமாக வெளிப்பட்டிருப்பது பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் பரப்பி வரும் நுகர்வு வெறியும், அதனோடு கூட்டு சேர்ந்துள்ள பார்ப்பனிய ஆணாதிக்க வெறியும் இணைந்த சீரழிவு கலாச்சாரமே. இதன்படி புதிது புதிதாக பொருட்களை நுகர வேண்டும், அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம், இது அறம், இது அறமில்லை என்பதைப் பற்றி கவலையில்லை. இந்தப் போக்கு தேவைக்கு ஏற்ப நுகர்வு என்பதின்றி, நுகர்வுக்கு ஏற்ப தேவை என்றளவில் மாறி நிற்கிறது. உதாரணமாக, லேட்டஸ்ட் செல் ஃபோன் வேண்டுமென்றால் திருடியாவது, கொள்ளை அடித்தாவது அல்லது கூலிப்படையாக கொலை செய்தாவது அதை வாங்கி விட வேண்டும் என்பது நுகர்வு கலாச்சாரம் போதித்திருக்கும் பாடம். இன்று பல்கி பெருகியிருக்கும் கொள்ளை சம்பவங்களும், கொலைக் குற்றங்களும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், இதன் பாரதூரமான வெளிப்பாடே ஆகும்.

இந்தியாவில் நிலவும் பார்ப்பனிய கலாச்சாரத்தில் பெண் என்பவள் என்றுமே ஆண் நுகரக்கூடிய பண்டமாகவே பார்க்கப்படுகிறாள். ஆணுக்கு அடங்கிய, தனக்கென்று எந்தவொரு அபிலாசைகளும், உணர்சிகளுமற்று வீட்டில் முடங்கி, ஆணின் காம இச்சையை பூர்த்தி செய்து கொள்ளும் பண்டமாகவே உருமாற்றப்படுகிறாள். ஒரு காலத்தில் காதல் தோல்வியுற்ற ஆண் தாடி வைத்துக்கொண்டு, தண்ணி அடித்துக்கொண்டு தேவதாசாக சுற்றி, பிறகு காலப்போக்கில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நிலை மாறி இன்றைய சூழலில் எனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற நிலைக்கு பார்ப்பனிய ஆணாதிக்கத்துடன் கலந்த நுகர்வு வெறி தள்ளியிருக்கிறது.

தன்னை ஏற்றுக்கொள்ளாத பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிப்பது, பெண்ணின் நடத்தையை பற்றி அவதூறு பரப்புவது, பெண்ணை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் பதிவிடுவது எல்லாம் இதனின் வெளிப்பாடே. இந்தப்போக்கு வளர்ந்து தனக்குக் கிடைக்காத பெண்ணை கொலை செய்யும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. சமீப காலங்களில் வெளிவந்த திரைப்படங்களும் பாடல்களும் இதனை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. தனுசின் “Why this kolaveri”, “அடிடா அவள, உதடா அவள, வெட்ரா அவள” முதல் சிம்புவின் “பீப் சாங்” வரை ஆணாதிக்கத்தை தூக்கிப்பிடிப்பது சரியானது என்ற கோணத்திலேயே பாடலாக்கப்பட்டிருந்தது. ஒருபுறம் இப்படி என்றால் மறுபுறம் அப்பெண் காதலை ஏற்று கொண்டால், ஜாதி சங்கங்களும், மத நிறுவனங்களும் ஓடுகாலி என்று பெயர் வைத்து பெற்றோரே அவளை கௌரவ கொலை செய்ய தூண்டுகிறது பார்ப்பனிய உச்சிக் குடுமி கோலோச்சும் இச்சமூகம். எங்கும் பெண்ணின் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

இந்தப் பிரதான பிரச்சனை பற்றிய புரிதல் இருந்தும் பிரச்னையின் ஆணிவேர் தெரிந்தும், ஏதோ ஒருவனை மட்டும் குற்றவாளியாக நிறுத்துவதன்மூலம் தனது தவறை அவனுக்கு அளிக்கப்படும் தண்டனை மூலமாக மறைத்துக் கொள்ள பார்க்கிறது இந்த அரச கட்டமைப்பு.

பார்ப்பனிய நாட்டமைகளால் சூழப்பட்ட கட்டப்பஞ்சாயத்து செய்யும் கோர்ட் அழுகி நொறுங்கி கொண்டிருக்கும் இந்த அரச கட்டமைப்பை தூக்கி நிறுத்த போலிசை உடனடியாக குற்றவாளியை கைது செய்து கேசை முடிக்கும்படி விரட்டுகிறது, கூடவே ‘பொது இடங்கள் அனைத்துமே கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவேண்டும், அனைத்து இடங்களிலுமே சி.சி.டி.வி காமெராக்கள் பொருத்தப்பட வேண்டும். போலீஸ் ரோந்தை அதிகப்படுத்த வேண்டும்’ என்கிறது. சி.சி.டி.வி வைத்தால் குற்றங்களை தடுத்து விட முடியுமா? கொலை செய்தவன் என்ன சி.சி.டி.வி இருக்கும் என்று பயந்து போய் முகத்தை மூடிக்கொண்டு வந்தா கொலை செய்தான். தெளிவாக முகத்தை எல்லாருக்கும் காட்டியபடி வந்து கொலை செய்திருக்கிறான். அவனுக்கென்று இந்த அரச கட்டமைப்பின் மீது எந்தவித பய உணர்வோ சிறிதும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. சமீபத்தில் சென்னை அண்ணா நகரில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையடித்தவன் கையோடு சி.சி.டி.வி மற்றும் அதன் ஹார்ட் டிஸ்க் இரண்டையுமே கொள்ளையடித்துவிட்டு சென்றுவிட்டான். இதனை சமூகத்தை பாதுகாக்கும் அம்சமாக நம்மை நம்பவைக்க முயற்சிக்கிறது இந்த அரச கட்டமைப்பு.

வானளாவிய அதிகாரங்களை கொண்டிருக்கும் போலிசுக்கு இன்னும் அதிகமான அதிகாரங்களை வழங்குவதன் மூலம் குற்றங்களை தடுக்க முடியாது. இது மக்களை மிரட்டி பணம் பறிப்பதற்கு மட்டுமே பயன்படுமே ஒழிய பாதுகாப்புக்கு பயன்படாது. சேலம் வினுப்ரியா தற்கொலையில் நடந்தது என்ன? தற்கொலைக்கு நான்கு நாட்களுக்கு முன் தனது மகளின் படத்தை தவறாக மார்பிங் செய்து வெளியிட்ட சுரேஷ் மீது புகார் அளிக்க சென்ற வினுப்ரியாவின் பெற்றோரிடம் இருந்து பணம் பறித்துக்கொண்ட போலீஸ், அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்காத செயலே அந்த பெண்ணின் உயிரை பலி கொண்டிருக்கிறது. செங்கம் அருகே சாதாரண குடும்ப பிரச்சனையில் தலையிட்டு தந்தையையும், மகனையும் அடித்து நொறுக்கி தங்களது அதிகாரத்தை போலிசு எப்படி நிறுவியது என்பதை காட்டும் வீடியோக்களை நாம் கண்கூடாக பார்த்தோம்.

தோற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பால் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்பதையே சுவாதி, வினுப்ரியா ஆகியோரது மரணங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இருக்கின்ற அரசு கட்டமைப்பு எல்லா இடங்களிலும் தோற்று வருகிறது, அதில் பட்டி டிங்கரிங் இனிமேலும் செய்ய முடியாத அளவிற்கு ஓட்டையாகியிருக்கிறது. நுகர்வுவெறி, பார்ப்பனியம், ஆணாதிக்கம், மத அடிப்படைவாதம் போன்ற தீமைகளை ஒழித்துக் கட்டும் சமூக அரசு கட்டமைப்பு இன்றைய தேவையாக எழுந்திருக்கிறது. மக்கள் எழுச்சியினால் காலாவதியான இந்த போலிக்கட்டமைப்பை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் அதிகாரத்தின் மூலம் புதிய கட்டமைப்பை நிறுவுவதுதான் இதற்கான ஒரே வழி.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர் பிரிவு,
தமிழ்நாடு

தொடர்புக்கு:
combatlayoff@gmail.com
9003198576

அழகின் பிரிவினை – கேலிச்சித்திரங்கள்

3
மக்கள் பிடிக்கிறார்கள், அரசு பறிக்கிறது !

மக்கள் பிடிக்கிறார்கள், அரசு பறிக்கிறது !

மக்கள் பிடிக்கிறார்கள், அரசு பறிக்கிறது !
மக்கள் பிடிக்கிறார்கள், அரசு பறிக்கிறது !

கேலிச்சித்திரம் நன்றி: kyle-kazukyna

——————————————————————-

ஸ்மார்ட் ஃபோன் காலத்தில் கால்பந்து விளையாட கூட்டாளி இல்லை !

ஸ்மார்ட் ஃபோன் காலத்தில் கால்பந்து விளையாட கூட்டாளி இல்லை !
ஸ்மார்ட் ஃபோன் காலத்தில் கால்பந்து விளையாட கூட்டாளி இல்லை !

நன்றி: Cuban cartoonist Angel Boligan

———————————————————–

தென்னாப்பிரிக்காவின் சேரி – நகரம் ஒரு பறவைப் பார்வை !

africa-slum
தென்னாப்பிரிக்காவின் சேரி – நகரம் ஒரு பறவைப் பார்வை !

மண்ணிலிருந்து பார்த்தால் ஏற்றத்தாழ்வு உங்களுக்குத் தெரியாமல் போகலாம். வானிலிருந்து பார்த்தால் நெருக்கத்தில் உழலும் சேரிகளும், அலங்காரத்தில் மணக்கும் மேட்டுக்குடி பகுதிகளும் உங்கள் கண்களை உறுத்துவது நிச்சயம்!

புகைப்படம் நன்றி: Johnny Miller, Cape Town-based photographer

———————————————————

அழகு IIM-களும் அவலமான ஆதி திராவிடர் விடுதிகளும்!

அழகு IIM-களும் அவலமான ஆதி திராவிடர் விடுதிகளும்!
அழகு IIM-களும் அவலமான ஆதி திராவிடர் விடுதிகளும்!

மேலே இருப்பது கேரள மாநிலம் கோழிக்கோடு நகரத்தில் இருக்கும் இந்திய மேலாண்மைக் கழக வளாகத்தின் ‘எழில்’ கொஞ்சும் புகைப்படம். இதை இந்திய அரசு 1996-ம் ஆண்டு ஐந்தாவது IIM கல்வி நிறுவனமாக துவங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் இரு மலைகளுக்கிடையே 100 ஏக்கரில் அமைந்திருக்கும் இக்கல்லூரியில் 13 மாணவர் விடுதிகள், உலகத்தரமான நூலகம் இன்னபிற வசதிகள் உள்ளன. கீழே இருப்பது தமிழகத்தில் இருக்கும் 1294 ஆதி திராவிடர் விடுதிகளில் ஒன்று. குடிநீர், கழிப்பறை வசதிகள் இன்றி ஏதோ தங்கி ஏதோ உண்டு நமது மாணவர்கள் படிக்கிறார்கள்.

இதுதாண்டா இன்றைய இந்தியா !

வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் மற்றும் படங்கள்.

ஒன்பதாம் ஆண்டில் வினவு

24

vinavu 9th anniversaryட்டாம் ஆண்டின் துவக்க நாளான 17.07.2015 அன்றுதான் “மக்கள் அதிகாரம்” அமைப்பின் “மூடு டாஸ்மாக்கை” வீடியோ டீஸர் வெளியிடப்பட்டது. அதன் பிறகு பச்சையப்பா கல்லூரி மாணவர் போராட்டம், தோழர் கோவன் கைது, தமிழகமெங்கும் போராட்டங்கள், முத்தாய்ப்பாக சென்ற மே 5 போராட்டம் என ஓராண்டிலேயே இந்த கோரிக்கை மக்களின் குரலாக மாற்றப்பட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலிலும் டாஸ்மாக் பிரச்சினையே முதன்மையாயக பேசப்பட்டது. இறுதியில் ஜெயா அரசாங்கம் பெயரளவிற்கேனும் தடையை கொண்டு வரும் நிர்ப்பந்தத்தை தோழர்களும், மக்களும் ஏற்படுத்தினர்.

இதற்காக பல்வேறு இடங்களில் தோழர்கள், மாணவர்கள், மக்கள், இதர கட்சியினர் அனைவரும் மக்கள் அதிகாரம் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றனர். சிலருக்கோ போலிசின் சித்திரவதையும் பரிசாக கிடைத்தது.

மக்கள் அதிகாரத்தின் இந்த நெடிய போராட்டப் பாதையில் “வினவு” தளமும் பங்களிப்பு செலுத்தியிருக்கிறது. அவ்வப்போது வரும் போராட்டச் செய்திகள், வீடியோக்கள், நேர்காணல்கள், கேலிச்சித்திரங்கள், ஆவணப்படம் என்று இந்த ஓராண்டு விறுவிறுப்புடன் இயங்கியிருக்கிறோம்.

தோழர் கோவன் கைதுக்கு காரணமான “ஊற்றிக் கொடுத்த உத்தமி”யை வெளியிட்டமைக்காக வினவு பொறுப்பாளர் தோழர் கன்னையன் ராமதாஸ் மீதும் வழக்கு பதியப்பட்டு தேடப்பட்டார். வினவு தளத்தை தடை செய்ய வேண்டுமன்று பா.ஜ.க, அ.தி.மு.கவினர், போலீஸ் அதிகாரிகளோடு தந்தி டி.வி பாண்டேவும் வழிமொழிந்தார். ஆயினும் வினவு முடங்கவில்லை, தோழர் கோவனும் சிறை வாசலில் பிணையில் வெளியே வந்து அதே பாடலை அதே வரியில் பாடினார். இந்திய அளவில் கோவன் கைது பேசப்பட்டு, ஜெயா அரசு தனிமைப்படுத்தப்பட்டது.

குமரி முதல் சென்னை வரை டாஸ்மாக்கை மூடும் இந்த வலிமையான இயக்கத்தில் அடக்குமுறைக்கு அஞ்சாத எமது தோழர்களின் வழியில் வினவும் தொடர்ந்து பயணிக்கும்.

இந்த ஆண்டு வினவு, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் கட்டுரைகளை  உள்ளடக்கிய புதிய கலாச்சாரத்தின் நூல் ஒரு தலைப்பில் தொகுக்கப்பட்டு மாதந்தோறும் கிரமமாக வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் எமது கட்டுரைகள் அச்சு ஊடகத்திலும் கால் பதித்திருக்கின்றன. தரமான புத்தகக் கட்டமைப்பில் இருபது ரூபாய் விலையில் அரிய கட்டுரைகளுடன் வெளிவந்திருக்கும் இந்த புத்தகங்கள் மக்களிடம் குறிப்பிடத்தக்க வரவற்பைப் பெற்றிருக்கின்றன.

புதிய ஜனநாயகம் இதழின் பி.டி.எஃப் மாதந்தோறும் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு பு.ஜ-வை தரவிறக்கம் செய்வோரும், குறிப்பிடத்தக்க கட்டுரைகளை மிக அதிக அளவில் படிப்போரும அதிகரித்திருக்கின்றனர். எம்.ஜி.ஆரின் வரலாறு, சமீபத்தில் வெளிவந்த “ஆர்.எஸ்.எஸ்-ஐ தோலுரித்த ரகுராம் ராஜன்” போன்ற கட்டுரைகள் சில சான்றுகள்.

ஃபேஸ்புக்கில் குறுஞ்செய்திகள் போடுவதை இந்த ஆண்டு ஒரு பரிசோதனை முயற்சியாக ஆரம்பித்தோம். அதை இடைவிடாது செய்ய முடியவில்லை என்றாலும் முடிந்த அளவு வெளியிடுகிறோம். சில பதிவுகள் இலட்சத்தை தாண்டியும் படிக்கப்பட்டன. பிறகு கேலிச்சித்திரம், களச்செய்திகள் ஆகியவற்றுக்கு தனிப்பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவையும் கிரமமாக செயல்படுகின்றன.

வினவு யூடியூபில் இந்த ஆண்டு கணிசமான வீடியோக்கள் வெளியிடப்பட்டன. கோவன் கைது காலத்தில் யூடிபின் பார்வையாளர் எண்ணிக்கை பேரளவில் அதிகரித்திருந்தது. காட்சி ஊடக்தின் வலிமையினையும், தொழில் நுட்பத்தினையும் இந்த ஆண்டில் கற்றுக் கொண்டோம் எனலாம். அம்மாவின் மரண தேசம் ஆவணப்படம் படப்பிடிப்பு முடிந்தும் படத்தொகுப்பிற்காக எமது வேலைச்சுமையால் இரண்டு மாதங்கள் தள்ளிப் போனது. பிறகு கோவன் கைதை ஒட்டி இணையத்தில் வெளியிடப்பட்டது. குடி என்பது ஒரு தனிநபரின் உரிமை என நினைத்திருந்தேன், இந்த ஆவணப்படத்தை பார்த்து அதை மாற்றிக் கொண்டு தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வரப்படுவதை ஆதரிக்கிறேன் என்று ஒருவர் கருத்து தெரவித்திருந்தார்.

இந்த ஆண்டு கணிசமான நேரடி ரிப்போர்ட்டுகளும் இடம் பெற்றிருக்கின்றன. ஜே.என்.யூ கட்டுரைகள் – நேர்காணல்கள், உடுமல சங்கர் கொலையுண்ட கிராமத்தின் கள ஆய்வு போன்றவை வாசகரிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. நாங்களும் நேரடி கள ஆய்வில் குறிப்பிடத்தக்க அனுபவங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம்.

இவையன்றி வழமையான அரசியல் – பண்பாட்டுத் துறையில் பல்வேறு தரமான கட்டுரைகள் இவ்வாண்டு எழுதப்பட்டிருக்கின்றன. “காக்கா முட்டை, விசாரணை” போன்ற திரைப்பட விமரிசனங்கள் காத்திரமான வரவேற்பை பெற்றன. சமூகரீதியான பார்வையை அறிமுகம் செய்வதில் எமது கட்டுரைகள் பயன்பட்டிருக்கும் என நம்புகிறோம்.

இருப்பினும் செய்ய வேண்டிய பணிகளும் நிறைய காத்திருக்கின்றன. அன்றாடம் கடந்து போகும் பல முக்கியமான அரசியல் நிகழ்வுகளை எம்மால் முழுவதும் எழுத முடியவில்லை. மார்க்சியக் கல்வி, கேள்வி பதில் போன்ற நிலுவையில் உள்ள வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி – வீச்சுக்கு ஏற்ப செயல்படும் கட்டமைப்பை இன்னும் அடையவில்லை. இவையெல்லாம் இந்த ஆண்டிலாவது நிறைவேற்றுவோம் என்று நம்புகிறோம்.

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா!!  என்றொரு கட்டுரை 2008 நவம்பரில் வெளியிட்டிருந்தோம். ஐ.டி துறை ஆட் குறைப்பு, தொழிற்சங்கம் இல்லாமை குறித்து பேசிய அந்தக் கட்டுரைக்கு ஐ.டி துறை நண்பர்களிடமே எதிர்ப்பு அதிகமிருந்தது. பலர் மறுமொழி பெட்டியிலேயே விதம் விதமாக விவாதித்தார்கள். ஐ.டி துறையில் யூனியன் சாத்தியமில்லை, தேவையில்லை என்றார்கள். இந்தக் கட்டுரையை அன்று சுமார் 200-க்கும் மேற்பட்டோர் விரும்பியும் பகிர்ந்தும் இருந்தார்கள்.

இன்று 2016-ம் ஆண்டில் ஐ.டி துறை தொழிற்சங்க உரிமையை, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி பிரிவு சாதித்திருக்கின்றது. இது தொடர்பான கட்டுரை பல்லாயிரம் பேரால் படிக்கப்பட்டும், 1500க்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டும் இருக்கிறது. ஃபேஸ்புக்கில் பல்வேறு ஐ.டி துறை நண்பர்கள் இச்செய்தியினை பகிர்ந்தனர். இத்தகைய மாற்றம் எட்டு ஆண்டுகளுக்குள்ளாகவே நடந்திருக்கும் போது சமூக மாற்றம்,புரட்சி குறித்து நண்பர்கள் சோர்வடையத் தேவையில்லை. வாருங்கள், எங்களுடன் இணையுங்கள்!

மாநகர பேருந்து தொழிலாளர்கள் – வினவு ஆய்வறிக்கை எனும் கள ஆய்வுக் கட்டுரை 2014 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. வாசகர்களிடம் வரவேற்பு பெற்ற இக்கட்டுரை இன்றுதான் உரியவர்கள் பார்த்திருக்கின்றனர். தற்செயலாக இன்று காலைஃபேஸ்புக்கில் தேடிக் கொண்டிருந்த போது இதே கட்டுரையை ஒரு நடத்துநர் இரண்டு நாட்களுக்கு முன் பகிர்ந்திருந்தார். பல நடத்துநர்கள், ஓட்டுநர்கள் அதை பகிர்ந்திருந்தார்கள். அவருக்கு ஒரு நட்பு அழைப்பு கொடுத்ததும் ஏற்றுக் கொண்டார்.

“வினவு” உரியவர்களுக்காக வேலை செய்கிறது, உரியவர்களிடம் சென்றடைந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. ஒன்பதாம் ஆண்டில் கால் பதிக்கிறோம்.

அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்!

நட்புடன்
வினவு

உழைக்கும் மக்களின் இணையக் குரலான வினவு தளத்திற்கு நன்கொடை தாருங்கள்!

மோடி – காஷ்மீர் : கேலிச்சித்திரங்கள்

0
காஷ்மீரில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைகளை சி.ஆர்.பி.எஃப் படைகள் தாக்குகின்றன!

காஷ்மீரில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைகளை சி.ஆர்.பி.எஃப் படைகள் தாக்குகின்றன !

காஷ்மீரில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைகளை சி.ஆர்.பி.எஃப் படைகள் தாக்குகின்றன!
காஷ்மீரில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைகளை சி.ஆர்.பி.எஃப் படைகள் தாக்குகின்றன!

ஆம்புலன்ஸ் ஒட்டுநர்: ஐயா, நோயாளி இறந்து கொண்டிருக்கிறார். தயவு செய்து எங்களை போக விடுங்கள்!

இராணுவ வீரர்: முடியாது. காஷ்மீர் சாலைகளில் இறந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். உனது நோயாளி சாகட்டும்!

நன்றி: Rebel Politik Arun

———————————————————–

மோடி பிரதமரான பிறகு தனது முதல் நேர்காணலை அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்திருக்கிறார்.

மோடி பிரதமரான பிறகு தனது முதல் நேர்காணலை அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்திருக்கிறார்.
மோடி பிரதமரான பிறகு தனது முதல் நேர்காணலை அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்திருக்கிறார்.

கார்ட்டூன் நன்றி: Tanmaya Tyagi

——————————————————-

இனிமே எங்க பேரு சுதேசி இல்லடா, விதேசி ஜாகரன் மஞ்ச் !

இனிமே எங்க பேரு சுதேசி இல்லடா, விதேசி ஜாகரன் மஞ்ச் !
இனிமே எங்க பேரு சுதேசி இல்லடா, விதேசி ஜாகரன் மஞ்ச் !

மோடியின் அன்னிய முதலீட்டிற்கான ஆசனம், 9 முக்கிய துறைகளில் 100% அன்னிய முதலீட்டை அனுமதிக்கிறது!

கார்ட்டூன் நன்றி: Tanmaya Tyagi

வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள்.

அரசியல் கட்டமைப்பில் அதிகரித்து வரும் அராஜகம் : மக்கள் அதிகாரமே மாற்று !

2

தேர்தல்களை ஒருபோதும் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டு விட்டது. பணப்பட்டுவாடாவில் மட்டுமல்ல; வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முதற்கொண்டு தேர்தல் செயற்போக்கின் எல்லாக் கூறுகளிலும் எந்த வகையிலான முறைகேடுகளையும் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என்று தேர்தல் ஆணையமே கைவிரித்துவிட்டது. ஆனாலும், ஜனநாயகம் என்ற மெகா மோசடியை மக்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே அவர்கள் தேர்தல்கள் மீது இன்னமும் நம்பிக்கைகொள்ளும் வகையில் பல பொய்களைப் பரப்புகிறார்கள். தமிழ்நாட்டில்தான் தேர்தல் முறைகேடுகள் உச்சநிலையை எட்டியிருக்கிறது, மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை என்று நம்பச் சொல்லுகிறார்கள். முக்கியமாக தேர்தல் ஆணையத்தின் தலைமையில் கார்ப்பரேட் ஊடகங்களுமும் அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் கூலி அறிவுஜீவிகளும் இந்தப் புளுகைப் பரப்புகிறார்கள்.

திருப்பூரில் பாதுகாக்கப்பட்ட கண்டெய்னர்கள்
தேர்தல் ஆணையம் அம்மா ஆணையமாக நடந்து கொண்டதற்கு திருப்பூரில் பாதுகாக்கப்பட்ட கண்டெய்னர்களே சாட்சி.

சாதி, மத அடிப்படையில் பிரச்சாரம், வாக்குச் சேகரிப்பு சட்டப்படியே தண்டனைக்குரிய தேர்தல் முறைகேடு இல்லையா? நீதிக் கட்சிக் காலத்திலேயே சாதியத் தேர்தல் முறைகேடு நடக்கவில்லையா? உத்தமர்கள் நேருவும் காமராஜ நாடாரும் மன்னர்கள், ஜமீன்தார்கள், பண்ணையார்களை வைத்து சாதியத் தேர்தல் முறைகேடுகளைச் செய்யவில்லையா? பா.ஜ.க. – சிவசேனா கட்சிகளும் கூட்டணியும் சாதி, மதவெறியை அடிப்படையாகக் கொண்டவையில்லையா? ஆனால், இவை தேர்தல் முறைகேடுகள் என்று தடுக்கப்படவே இல்லை. பால் தாக்கரேயின் மதவெறிப் பிரச்சாரம் குற்றச் செயல் என்று அறிவித்த உச்ச நீதிமன்றமே அவரைத் தண்டிக்கவே இல்லை. சாதி, மதவெறிக் கலவரங்கள் நடக்காத, கொங்கு மண்டலம் போன்ற பகுதிகளிலெல்லாம் சாதி, மத ஆதிக்கம், கொடூரங்கள் இல்லை என்று கருத முடியுமா? எவ்வித எதிர்ப்பும் காட்டாது மக்கள் ஒடுங்கிக் கிடக்கிறார்கள் என்றுதான் பொருள். அதுபோலத்தான் சாதி, மத அடிப்படையில் மட்டுமல்லாது, பணப்பட்டுவாடா உட்படப் பலவிதத் தேர்தல் முறைகேடுகளும் நாட்டில் எங்கும் நிறைந்திருக்கின்றன என்பதுதான் உண்மை!

வடநாட்டின் பல மாநிலங்களில் தலித்துகளும் இசுலாமியர்களும் வாக்குச் சாவடிக்குள் போகவே முடியாது; அடித்து விரட்டப்படுகிறார்கள். படித்த மேதாவிகள், ஒழுக்க சீலர்கள் நிறைந்த ஊடகங்கத்திற்கே இலஞ்சம்கொடுத்து செய்திக்குப் பணம் (PAID NEWS) என்ற பிரச்சினை பூதாகரமாக வளர்ந்துவிட்ட நிலையில், எம்.எல்.ஏ., எம்.பி.,களுக்கே ஓட்டுக்குப் பணம் என்றாகிவிட்ட நிலையில், வாக்காளர்களுக்கு ஓட்டுக்குப் பணம் போன்ற முறைகேடுகள் என்பது இங்கு மட்டுமே நடப்பது என்று புளுகித் தமிழன் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். தேர்தலுக்கான பறக்கும்படை, அதிகாரிகளின் திடீர் சோதனை, பலகோடி அளவுக்குப் பணம் பறிமுதல் என்று தினமும் பரபரப்புக் காட்டுகிறார்கள்.

கரூர் - அய்யம்பாளையம்
கரூர் – அய்யம்பாளையத்திலுள்ள அ.தி.மு.க. அன்புநாதனின் உதவியாளர் சுதர்சன் குடோனில் நடந்த கண்துடைப்பு ரெய்டு. (உள்ளே) அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடா தளபதியாகச் செயல்பட்ட கரூர் அன்புநாதன்.

ஆனால், இக்குற்றங்களுக்காக எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டார்கள்; எவ்வளவு பேர் தண்டிக்கப்பட்டார்கள் என்று யாரும் கவனிப்பதில்லை. எல்லாம் வெறும் நாடகம்; ஜனநாயகம் என்ற மோசடி மக்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக நடத்தப்படுவன. தேர்தல் நடத்துவதற்காக வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்கள் மக்கள் உரிமைகளைப் பறித்து ஒடுக்குவதற்கும் ஊடகங்களின் துணையோடு வெற்றுக் கெடுபிடிகள், பரபரப்பு எற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டன.

தேர்தல் முறைகேடுகள் எல்லாமும் தேர்தல் ஆணையம் உட்பட அனைத்து அதிகார மையங்களுக்கும் தெரிந்தே, அவற்றின் உடந்தையோடுதாம் நடக்கின்றன. தேர்தலை நடத்துவது மட்டுதான் எமது வேலை; பணப்பட்டுவாடா, பறிமுதல் உட்பட தேர்தல் முறைகேடுகள் பிரச்சினைகளைக் கையாளுவதற்கான அதிகாரமும் ஆள்பலமும் கிடையாது. பிரச்சினைகள், புகார்கள் எதுவானாலும் கோர்ட்டுக்குப் போங்கள் என்று வேறுபக்கம் கைகாட்டுகிறது. தேர்தல் நிகழ்வுப் போக்குகள் தொடங்கிய பிறகு, எல்லாம் தேர்தல் ஆணையத்தின் கீழ் வந்துவிடுகின்றன; கோர்ட் தலையிட முடியாது என்று நீதித்துறை கைவிரித்து விடுகிறது. ஆளுக்கு ஆள் கைகாட்டிவிட்டு நியாயம் கேட்டுப் போகிறவர்களை அலைக்கழித்து பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும், இறுதியில் நீதி-நியாயத்துக்கு எதிராகவும் தமது ஆதாயத்துக்கும் ஏற்ற வகையில் நடப்பதும் அதிகார வர்க்கத்துக்கு இயல்பானதுதான். அது சட்டத்தின், விதிமுறைகளின் சந்துபொந்துகளை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறது. தில்லுமுல்லுகள் செய்வதும், பிடிபட்டால் அவற்றை மூடிமறைப்பதும் நழுவிக்கொள்வதும் தப்பித்துக்கொள்வதும் அதிகார வர்க்கத்தின் கைவந்த கலை. நீதிமன்றமும் ஓர் அதிகாரவர்க்க அமைப்புதான். வெளிப்படைத் தன்மையும் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடும் இல்லாது, ஒளிவு மறைவான செயல்பாடுகள் கொண்டவர்கள்தான் இந்த அதிகார வர்க்கத்தினர். இவர்களின் உடந்தையோடுதான் ஓட்டுக் கட்சிகள் எல்லாத் தேர்தல் முறைகேடுகளையும் செய்கின்றன.systemic-crisis-caption-1

தேர்தல் நிகழ்வுப்போக்குகள் தொடங்குவதற்கு முன்பாகவே பல லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கைக்கு எதிரான வழக்கிலேயே இரண்டுங்கெட்டான் தீர்ப்பு வழங்கி உயர்நீதி மன்றம், மழுப்பி, தேர்தல் தில்லுமுல்லுக்குப் பச்சைக்கொடி காட்டியது. அப்போதிருந்து எத்தனை தேர்தல் தில்லுமுல்லுகளுக்குப் புகார்கள். அத்தனையையும் அநீதி, அநியாய அடிப்படையில் சமாளித்து போலீசு, நீதிமன்ற, தேர்தல் ஆணைய அதிகார வர்க்கமும், மத்திய – மாநில ஆளும் கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து மீண்டுமொரு ஜனநாயகக் கூத்தை நடத்தி முடித்திருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளாக ஆளும் கட்சியின் கூட்டாளியாகவும் கையாளாகவும் செயல்பட்ட போலீசு மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள்தாம் தேர்தல்களை நடத்தும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டார்கள். அதுபோன்று பறக்கும் படைகளும் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டன. பல அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் புகாரளித்தனர். கண்துடைப்பாக சிலர் மாற்றப்பட்டனர். ஆனால், அவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செயலற்ற பொம்மைகளாக வைக்கப்பட்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை அம்மாவின் விசுவாசிகள் கைப்பற்றிக்கொண்டு, ஆளுங்கட்சித் தொண்டர்களோடு கைகோர்த்துகொண்டு ஒருதலைப்பட்சமாக வேலை செய்தார்கள். வேட்பாளர் தேர்வு முதற்கொண்டு அம்மாவின் தேர்தல் பிரச்சார ஏற்பாடுகள், தொகுதிகளுக்குக் கோடிகோடியாக பணக் கடத்தல், பண விநியோகம் மற்றும் பணம் பட்டுவாடா வரை முன்னாள் இந்நாள் உளவுத்துறை அதிகாரிகள் ஆளுங்கட்சியின் செயற்குழுவைப் போன்று நிர்வாகப் பணிகளைச் செய்தனர்.

நரேந்திர மோடியின் பிரச்சாரக் கூட்டம்
2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது, உ.பி.யில் ராமர் கோவில் விவகாரத்தைக் கிளறிவிடும் நோக்கில், ராமர் உருவப் படத்தின் பின்னணியில் நடத்தப்பட்ட நரேந்திர மோடியின் பிரச்சாரக் கூட்டம்.

இவையும் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, பதவியேற்பு ஆகிய அனைத்தும் ஜனநாயகத்தின் போலித்தனத்தையே பறைசாற்றின. தேர்தல் நிகழ்வுப்போக்குகள் தொடங்கியதிலிருந்து ஆளுங்கட்சி அரங்கேற்றிய கிரிமினல் பெறுக்கி அரசியல் அராஜகங்கள், தேர்தல் முறைகேடுகள், கரூர் அன்புநாதன் வீடு-கிடங்குகள், எழும்பூர் சகோதரர்கள் அறைகள், பொள்ளாச்சி மருத்துவர் மாளிகைகள், திருப்பூரில் மூன்று கண்டெய்னர்கள் ஆகியவற்றில் கோடிகோடியாகக் கள்ளப்பணம் கைப்பற்றப்பட்டும் அரசியல் குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டதும், 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசம், பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் 100-க்கும் குறைவான வித்தியாசம் என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை இழுபறியாக இருந்தபாதே ஜெயலலிதாவை பிரதமர் வாழ்த்தியது; அரசு அதிகாரிகள் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசிபெறத் தயாராக வரிசைகட்டியது; எதிர்த்தரப்பு வெற்றிபெற்றுவிடும் என்ற நிலையில் இருந்த தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையையும் முடிவுகள் அறிவிப்பதையும் நிறுத்தி வைத்ததும் எதிர்த்தரப்பினர் போராட்டத்தில் குதித்த பிறகே முடிவை அறிவித்ததும் நடந்தன; தபால் வாக்குப்பதிவுகளில் தடை, வாக்குப் பதிவிலும் எண்ணிக்கையிலும் இயந்திரங்கள் பழுது, அழியும் மை, வோட்டர்களாக வெளிமாநில ஆட்கள் – இவ்வளவு தடையையும் தாண்டி, ஆளுங்கட்சியுடன் நேரடியாக மோதிய தொகுதிகளின் மொத்த வாக்காளர்களில் கூடுதலானவர்கள் ஆளும் தரப்பைவிட எதிர்த்தரப்பையே ஆதரித்தனர்; என்றாலும், ஒரு அரசியல் குடைக்கவிழ்ப்பைப்போல, தேர்தல் முடிவுகளை ஆளும் தரப்பு தனது பணபலமும் அதிகாரபலமும் கொண்டு சாதித்துக் கொண்டது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையிலே கார்ப்பரேட் பிரச்சாரம், பணபலம் ஆகியவற்றை எதிர்த்தரப்பும் முன்னிருத்தியதால் கணிசமான அளவு வெற்றிபெற முடிந்தது.

நடந்து முடிந்த தேர்தல்களில், ஆளும்தரப்பு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது, எதிர்த் தரப்பு அதிகாரபூர்வத் தகுதியைப் பெற்றது என்ற வகையில் இரண்டுமே வெற்றியைக் கொண்டாடுகின்றன. தனது இரகசியக் கூட்டுக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, தனது எதிரிக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றாலும் அது அதிகாரபூர்வ எதிர்க்கட்சி தகுதியைப்பெற்றது என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வுக்கு உவப்பும் கசப்பும் கலந்தே கிடைத்தது. திராவிடக் கட்சிகளை எதிர்ப்பது என்ற பெயரில் தமிழர் அடையாளங்களை அழிப்பது என்ற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. போர்த்தந்திரப் பணியை தலைமேற்கொண்டு செயல்பட்ட பிற கட்சிகள் (மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க; சீமான் கட்சி) எல்லாம் துடைத்தெறியப்பட்டு விட்டன.

systemic-crisis-caption-2இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தமிழக வாக்காளர்களில் பெரும்பாலோர் அரசியல் விழிப்புணர்வு பெறவில்லை என்பதை இந்தத் தேர்தல்கள் மீண்டும் உறுதி செய்துவிட்டன. வாக்களிப்பதற்கு முன்பு கடந்த ஐந்தாண்டுகளில் ஆட்சியாளர்கள் என்னென்ன செய்தார்கள்; அடுத்த ஐந்தாண்டுகளில் என்னென்ன செய்யப் போவதாக வாக்குறுதிகள் வழங்குகிறார்கள்; அவற்றை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்பதைக்கூட தொகுத்துப் பார்ப்பதில்லை. அவ்வாறு வாக்காளர்கள் பார்க்காதவாறு ஊடகங்கள் பரபரப்பூட்டும் அன்றாடச் செய்திகளில் மூழ்கடிக்கிறார்கள்; இப்படிச் செய்வது ஊடகத்தாரின் விற்பனை உத்தியாகவும் ஆட்சியாளர்களுக்கு சேவை செய்வதாகவும் இருக்கிறது.

மூவாயிரமாக இருந்த சாராயக் கடைகளை ஆறாயிரமாகத் திறந்தவர்தான் படிப்படியாக மதுவிலக்கென்றும், 500 கடைகளை மூடுவதாகவும் நேரத்தைக் குறைப்பதாகவும் நாடகமாடுகிறார். சாராயக் கள்ளச்சந்தையை நடத்துகிறார்; பால்விலை, மின்விலையை கிடுகிடுவென உயர்த்திவர்தான் இப்போது (வோட்டுக்காக) குறைப்பதாக நாடகமாடுகிறார். ஊடகங்கள் இதையெல்லாம் சொல்லுவதேயில்லை. இந்த வாக்குறுதிகள் எல்லாம் ஏதோ நேற்றுத் தொடங்கிய கட்சியின் செய்தி அறிவிப்புகள் போல அப்படியே வெளியிடுகின்றன. சாராய போதையிலும் இலவச ஏக்கத்திலும் மூழ்கிக் கிடக்கும் வாக்காளர்களும் இதை நம்புகின்றனர். தேர்தல்களில் மட்டுமல்ல, மக்களை இவற்றில் மூழ்கடிப்பதிலும் இரண்டு கட்சிகளுமே வெற்றி பெற்று விட்டன; அதைத் தடுக்கமுடியாமற்போன மக்கள் தாமாகவே தோல்வியைத் தழுவிக் கொண்டார்கள்.

பால் தாக்கரே
இந்து மதவெறியைத் தூண்டிவிட்டுப் பிரச்சாரம் செய்வதை தேர்தல் உத்தியாகக் கொண்டிருந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேயே (படம்) உச்ச நீதிமன்றம் கூடத் தண்டிக்கவில்லை

மீண்டும் மக்கள் விரோத பொறுக்கி அரசியல் கிரிமினல் குற்றக் கும்பல் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டிருப்பது, நிலவும் சட்டமன்ற-நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் அரசியல் வரம்புக்குள்ளேயே ஆட்சி மாற்றத்தைச் செய்துவிட முடியும் என்று நம்பிய கட்சிகளின் அணிகளுக்குத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அலைகளை ஏற்ப்படுத்தியிருக்கிறது. ஆட்சியைப் பிடித்துவிடமுடியும் என்று நம்பியிருந்த எதிர்க்கட்சியே கூடத் திகைத்து நிற்கிறது. ஆளுங்கட்சியின் தேர்தல் தில்லுமுல்லுகளையும் முறைகேடுகளையும் சவால்களையும் எதிர்கொள்ள முடியாமல் ஏற்கெனவே இடைத்தேர்தல்களைப் புறக்கணித்தபோதிலும், மாநிலந் தழுவிய பொதுத் தேர்தல்களில் அப்படி நடக்காது என்று நம்பின. ஆனால், ஆளுங்கட்சியின் தேர்தல் தில்லுமுல்லுகளும் முறைகேடுகளும் உச்சத்தை எட்டின. இனி என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சாதாரணமான, நியாயமான வழிமுறைகளில் தேர்தல்களில் வெல்லவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது தேர்தல்களில் போட்டி என்பது கட்சிகளிடையே, வேட்பாளர்களிடையே, தேர்தல் அறிக்கைகளிடையே இல்லை. யார், எவ்வளவு பணம், கார்ப்பரேட் பிரச்சாரம், அதிகாரபலம் ஆகியவற்றை வைத்துச் சூதாடுவதாகி விட்டது. இதில் மக்களுக்குரியவை, மக்கள் நலனுக்கானவை என்று எதுவும் கிடையாது.

இதெல்லாம் மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு தற்போதைய அரசியல் கட்டமைப்பு நெருக்கடியின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் கட்டமைப்பில் அதிகரித்து வரும் அராஜகம், நெருக்கடியைக் குறிக்கின்றன. ஆகவே, நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் கட்டமைப்புக்கு வெளியே மக்களே தங்கள் பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காண்பதற்கான மக்கள் அதிகாரத்தை நிறுவிக்கொள்ள வேண்டும்.

_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

செங்கம் போலீசு காட்டுமிராண்டித்தனம் மற்றும் களச் செய்திகள்

0

1. திருவண்ணாமலை மாவட்டம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பாக செங்கம் போலீசு காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

chengam-police-attack-prpc-demoதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவடியைச் சேர்ந்த ராஜா என்ற ஆட்டோ ஓட்டியும், அவரது மனைவி செங்கம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்தும் பிழைத்து வருகிறார்கள். அவர்களது மகன் சூர்யா 12-வது வகுப்பு படித்துள்ளார்.

கடந்த 11-07-2016 காலை 11 மணிக்கு ராஜாவின் குடும்பப் பிரச்சினையில் தலையிட்ட செங்கம் காவலர்கள் நம்மாழ்வார், விஜயகுமார் மற்றும் முருகன் ஆகியோர் ராஜா குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தியதை கண்டித்து 15-07-2016 காலை 10 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற வழக்கறிஞர் ஐ.சேகர் தனது தலைமையுரையில், ராஜாவின் செயல் தவறானது என்றாலும் காவல்துறையினர் அதை சட்டப்படி அணுகாமல் மிருகத்தனமாக நடந்து கொண்டதை கண்டித்து பேசினார்.

அடுத்து பேசிய செங்கம் வழக்கறிஞர் சந்திரசேகரன் போலீஸ் வன்முறையை கண்டித்ததோடு துப்பரவு தொழிலாளி உஷா தனது வேலைக்காகவும் முகத்தை துடைக்கவும் வைத்திருந்த துண்டை ராஜா தாக்கியதால கிழிந்த ஆடையுடன் இருந்த உஷாவுக்கு போலீஸ் கொடுத்ததாக பொய் பிரச்சாரம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

செங்கம் வழக்கறிஞர் மணியரசன் ஆளும் வர்க்கத்தின் அத்துமீறலையும், எளியவர்களின் மீதான போலீஸ் அடக்குமுறையையும் சாடினார்.

அடுத்ததாக பேசிய திருவண்ணாமலை வழக்கறிஞர் சு.கண்ணன் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் போலீஸ் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களை பட்டியலிட்டும், செங்கம் போலீசின் மனித உரிமை மீறலையும் கண்டித்தார்.

அடுத்து பேசிய மு.ஜெயபாலன் காவல்துறையினர் சமீப காலங்களில் இதுபோன்ற அத்துமீறல்களை தொடர்ந்து செய்து வருவதையும் தங்களை திருத்திக் கொள்ள எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை எனவும் பேசினார்.

chengam-police-attack-prpc-demo-posterஅடுத்ததாக பேசிய கடலூர் வழக்கறிஞர் செந்தில் போலீஸ் உங்கள் நண்பன் என்று சொல்லிக் கொண்டு எல்லா இடங்களிலும் போலீஸ் லஞ்சம் வாங்குவதையும், வசதி படைத்தவனை நெருங்க பயப்படும் போலீசு ஏழை எளிய உழைக்கும் வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்துவதையும் கோடிட்டு பேசினார்.

அடுத்து பேசிய சிதம்பரம் வழக்கறிஞர் செந்தில் காவல்துறையின் போக்கிரிகளை அரசே வளர்த்து வருவதாகவும் மக்கள் நியாயமான பிரச்சனைகளுக்கு போராடும்போது அவர்களை ஒடுக்குவதற்காக இது போன்றவர்களின் தயவு தேவைப்படுவதாகவும் பேசினார்.

அடுத்து பேசிய திருவண்ணாமலை வழக்கறிஞர் சித்தார்த்த கௌதமன், தமிழக அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாக இருப்பதால்தான் இதுபோன்ற போலீசின் அத்துமீறலை கண்டிக்க முடியாதவர்களாக இருப்பதாகவும் சட்டத்தை இயற்றி அதனை பராமரிப்பவர்களை அதை மீறுபவர்களாக இருக்கக் கூடாது என்றும் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

இறுதியாக பேசிய விருத்தாச்சலம் வழக்கறிஞர் புஷ்பதேவன் தொடரும் போலீசின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால் மக்கள் போராட்டக் குழுவினை கட்டியமைத்து எதிர்க்க வேண்டும் என்று பேசினார்.

மேற்படி கண்டன ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் செங்கம் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிறையிலடைக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

  • தோக்கவாடி ராஜா குடும்பத்தினரை கொடூரமாக தாக்கிய செங்கம் போலீசார் நம்மாழ்வார், முருகன், விஜயகுமார் ஆகியோரை கைது செய்! டிஸ்மிஸ் செய்!

பொது மக்களே!

  • மக்கள் போராட்டம் மூலமே குற்றவாளி போலீசாரை தண்டிக்க முடியும்!

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
திருவண்ணாமலை கிளை
94437 24403

2. செங்கம் போலீசு காட்டுமிராண்டித்துக்கு பு.ஜ.தொ.மு கண்டனம்

chengam-police-attack-ndlf-posterஇதுதாண்டா போலீசு…!

  • ராஜா குடும்பப் பிரச்சினையில் மூக்கை நுழைத்து கொலைவெறியாட்டம் நடத்தியது செங்கம் போலீசு!
    வேடிக்கை பார்த்த பொதுமக்களை கடித்துக் குதறிய போலீசு வெறிநாய்கள்!

தமிழக அரசே!

  • செங்கம் போலீசாரின் கொலைவெறிக்கு ஆளான ராஜா மற்றும் குடும்பத்திற்கு மருத்துவ உதவி செய்!
    நிவாரணமாக தலா ரூ 10 லட்சம் வழங்கு

உழைக்கும் மக்களே!

  • தோற்றுப் போய் திவாலாகி, மக்கள் விரோதமாக செயல்படும் காவல்துறை உட்பட அரசுக் கட்டமைப்பை தகர்த்திடுவோம்!
    தட்டிக் கேட்கவும், நிர்வகிக்கவும் அதிகாரமுள்ள மக்கள் அதிகார அமைப்புகளை கட்டியமைப்போம்

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம் – திருவள்ளூர் (கிழக்கு), (மேற்கு) – வேலூர் மாவட்டங்கள்
88075 32859, 94453 89536, 94453 68009, 84897 35841

 

3. அதிகரிக்கும் பெண்கள் மீதான தாக்குதல்! தலைமுறைகளை சீரழிக்கும் டாஸ்மாக்! தீர்வு காண என்ன செய்ய வேண்டும்? – திருச்சி கலந்தாய்வுக் கூட்டம்

மீபத்தில் நடந்த சுவாதி படுகொலையும், வினுப்பிரியா தற்கொலையும், பெண்கள் மீதான தாக்குதல் மேலும் மேலும் பல்வேறு வடிவங்களில் அதிகரித்து வருவதும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் விடப்படும் சவால், எச்சரிக்கை.

கொலையாளிகளை பிடிப்பது எப்படி, தண்டிப்பது எப்படி என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீதிமன்றம், போலீசு தரப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் எந்தத் தீர்வையும் கண்டு விடவில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் இத்தகைய படுகொலைகளுக்குக் காரணம் என்ன? பெண்களுக்கு பேராபத்து என்பது ஆணாதிக்க வக்கிர மனோபாவம் கொண்ட தனிப்பட்ட கிரிமினல் குற்றவாளிகளால் மட்டும் நடைபெறுவதில்லை. அவர்களது சொந்தக் குடும்பத்தாராலேயே – சாதி, மதவெறி பிடித்த பெற்றோர்களால், உற்றார் உறவினர்களாலும் கூட ஏற்படுகின்றன. அவை நமது சமூகத்தை கவ்வியுள்ள நோய். அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது? அவற்றை நீதிமன்றம், போலீசும் உட்பட அரசு எந்திரத்தால் ஏன் தடுக்க முடியவில்லை? இது குறித்தும் அக்கறைப்படும் நாம் அனைவரும் அவசியம் விவாதிக்க வேண்டும். தீர்வு காண வேண்டும்.

பெண்கள் மீதான தாக்குதலுக்கு குடிபோதை முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசின் படிப்படியான மதுவிலக்கு என்பது மோசடியானது. தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை அண்டை மாநிலத்தில் போய்க் குடிப்பார்கள் என சட்டமன்றத்தில் சொன்னவர்கள் 500 கடைகள் மட்டும் மூடலை வைத்து படிப்படியான மதுவிலக்கு என்று பம்மாத்து காட்டுகிறார்கள். சாராய சாம்ராஜ்யத்தின் வருமானத்தில் சிறிதும் குறைந்து விடக் கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. பூரண மதுவிலக்கை பீகார் அரசு அமல்படுத்தியிருக்கிறது. கள்ளச்சாராய ரவுடிகளுக்கு கடும் தண்டனை என சட்டம் இயற்றியதுடன், கண்காணிக்கும் பொறுப்பை மக்கள் கையில் வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் ஏன் முடியாது என்பது பற்றி விவாதிக்க கலந்தாய்வு கூட்டங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். அவற்றில் தாங்கள் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சமூகத்தில், பண்பாட்டில் ஏற்பட்ட நெருக்கடி பற்றி பரிசீலிக்க வேண்டும். பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை, பெற்றோர்களே ஆணவக் கொலை செய்கிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிறார்கள், ஆசிரியரே சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார். பெண்களுக்கு எதிராக பாலியன் கொடுமைகள் பெரும்பாலும் தெரிந்தவர்கள் – உறவினர்களாலேயே நடக்கின்றன. பெண்கள் மீது பழி போடுவது, நடத்தையை சந்தேகிப்பது, கட்டுப்பாடுகள் விதிப்பது, சிறு வயதிலேயே ஆண்களுக்கு தனிமனித ஒழுக்க நீதிபோதனைகள் சொல்லிக் கொடுப்பது, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிப்பது போன்ற தீர்வுகள் அனைத்தும் தோற்றுப் போய் விட்டன.

trichy-pp-meeting-flexசாதி மத அமைப்புகள் எல்லாம் காலம் காலமாக பெண்களின் உரிமைகளை மறுப்பதாகவும், ஆணாதிக்கத்தை நிலைநாட்டுவதாகவும் இருக்கின்றன. பெண்களை சக மனிதர்களாக ஏற்கும் ஜனநாயகப் பண்பு சமூகம் முழுவதும் நிலைநாட்டப்பட வேண்டும். அனைத்து உரிமைகளும் சமூகத்தின் சரிபாதி பெண்களுக்கு இருக்கு்ம போது மட்டுமே இந்த சமூகம் விடுதலை பெற்றதாக சுதந்திரமானதாக இருக்க முடியும். ஒரு ஆண் தனது பாலியல் இச்சைகளுக்காக பெண்களை துன்புறுத்தி வன்கொடுமைகள் புரியும் வக்கிர செயல்களுக்காக ஒட்டு மொத்த சமூகமும் வெட்கப்பட வேண்டும்.

ஆணாதிக்கம், சாதிவெறி தீ வேரூன்றிய சமூகத்தை சீர்திருத்துவதற்கு மாறாக, அதில் பெட்ரோல் ஊற்றுவது போல, பாலியல் நுகர்வு வெறியைத் தூண்டும் ஆபாச இணைய தளஙள், “பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும், பார்க்காமலே பிடிக்கும், ஒத்துக்கல கொன்று விடுவேன், எனக்கு கிடைக்கலன்னா நீ யார் கூடவும் வாழ முடியாது..” என பெண்களை துரத்தி துரத்தி, விரட்டி – மிரட்டிப் பணியவைக்கும் காட்சிகள், பீர் பாட்டிலோடு திரியும் நடிகர் நடிகளை வைத்துக் காட்டப்படும் சினிமாக்கள் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

பெண்களின் வாழ்வுரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டிய ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் நெருக்கடியில் சிக்கித் திணறுகிறது. மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு தர முடியாமல் முயன்று முயன்று தோற்றுப் போனதுடன் ஆளும் அருகதையை இழந்து நிற்கிறது. போலீசிடம் புகார் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் வினுப்பிரியா இறந்துள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் அனைத்து துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் படுகொலை செய்யப்பட்டனர். குற்றங்களை தடுத்து கண்காணிக்க வேண்டியே போலீசே குற்றக் கும்பலாக மாறி விட்டது. சிவகங்கை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் எஸ்.ஐ முதல் ஏ.டி.ஜி.பி வரை சம்பந்தப்பட்டுள்ளனர். கோடம்பாக்கத்தில் பள்ளிச் சிறுவர்களை பிடித்து ஓரினச் சேர்க்கையில் காவல்துறையினரே ஈடுபடுத்தினர். ஓசூரில் லம்பாடி பெண்ணின் மீது பாலியல் வன்கொடுமையில் எஸ்.ஐ ஈடுபடுகிறார். மேலும் உடுமலை சங்கர், கோகுல்ராஜ், இளவரசன் ஆகியோர் சாதிவெறிக்கு எதிராக பாதுகாப்பு கேட்டு காவல் துறையில் முறையிட்டு போலீசு கண்காணிப்பில் இருந்த போதுதான் கொலை செய்யப்பட்டனர்.
அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் ஊழல்வாதிகளாகவும், கொள்ளைக்கு துணை போகும் குற்றவாளிகளாகவும் இருக்கும் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், அமைச்சர்கள், முதலாளிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை. அரசு எந்திரம் முழுவதும் கிரிமினல் மயமாக மாறியதுடன் பயன்படுத்த முடியாத நிலைக்கு போய் விட்டது. மக்களை பாதுகாப்பதற்கு பதில் எதிராக செயல்படுகிறது.

அதிகரிக்கும் பெண்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மதுவிலக்கு மட்டுமல்ல, தீர்வு காண முடியாத மக்களின், சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அரசியல், சமூக, கலாச்சார கட்டமைப்பு நெருக்கடியாம் (சிஸ்டமிக் கிரைசிஸ்) காரணம் என்பதை முன் வைக்கிறோம். இது குறித்து உரிய ஆலோசனைகள், கருத்துக்களை வழங்க, விவாதிக்க உங்களை அழைக்கிறோம். அனைத்து பிரிவு மக்களின் ஆதரவை, நம்பிக்கையை பெறாமல் கட்டமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

கலந்தாய்வுக் கூட்டம்
நாள் 17-07-2016 மாலை 5.30 மணி, இடம் சண்முகா மண்டபம், புத்தூர், திருச்சி – 17

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருச்சி

ஆப்பிள் மரங்கள்

5
1989 ல் பெர்லின் சுவர்.
1989 ல் பெர்லின் சுவர்.

1989 நவம்பர் 9-ம் நாளன்று கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பிரித்த பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. பெர்லின் சுவரின் வீழ்ச்சியே கம்யூனிசத்தின் வீழ்ச்சியாகவும், அந்த இடிந்த சுவரின் செங்கற்கள் முதலாளித்துவ சுதந்திரத்தின் குறியீடுகளாகவும் போற்றப்பட்டன. இடிந்த பாபர் மசூதியின் கற்களை வைத்துக் கொண்டு கரசேவகர்கள் எப்படி வெறியாட்டம் போட்டார் களோ அப்படி பெர்லின் சுவரின் கற்களை வைத்துக் கொண்டு முதலாளித்துவத்தின் சேவகர்கள் களி வெறியாட்டம் நடத்தினார்கள்.

ரசியாவிலும் கிழக்கு ஜெர்மனி போன்ற கிழக்கு ஐரோப்பியநாடுகளிலும் சோசலிச அரசமைப்பு என்ற பெயரில் அதிகார வர்க்க முதலாளித்துவத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்று 1960-களின் இறுதிப் பகுதியிலேயே உலகெங்கிலும் உள்ள கம்யூனிசப் புரட்சியாளர்கள் அறிவித்து விட்டார்கள். அதற்கான காரணங்களையும் விளக்கியிருக்கிறார்கள்.

ஏகாதிபத்தியவாதிகள் இந்த உண்மையை மறைத்துவிட்டு அதிகார வர்க்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையே கம்யூனிசத்தின் வீழ்ச்சியாகச் சித்தரிக்கிறார்கள்.

“சோசலிசத்தில் ஏன் இப்படியொரு வீழ்ச்சி? முதலாளித்துவத்தை மக்கள் விரும்பக் காரணம் என்ன? யாருமே இதனை எதிர்த்துப் போராட வில்லையா?” என்ற கேள்விகளுக்குரிய விடையை இந்தப் படத்தின் கதைக்குள்ளே வாசகர்கள் கண்டுபிடிக்க முடியும்.

***

ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸ் (Helma Sanders Brahms) என்ற மேற்கு ஜெர்மன் பெண் இயக்குநரால் இயக்கப் பட்ட “ஆப்பிள் மரங்கள்” என்ற ஜெர்மானியத் திரைப்படம் 1992-ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப் படத்தின் கதை, பெர்லின் சுவர் தகர்க்கப்படுவதற்குச் சற்று முன்னர் தொடங்கி, அச்சுவர் தகர்க்கப்பட்டு, மேற்கும் கிழக்கும் இணையும் சமயத்தில் முடிவடைகிறது. .

ஹெல்மா
ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸ்

கிழக்கு ஜெர்மனியின் ஒருகிராமத்தில் அமைந்திருக்கும் கூட்டுறவு ஆப்பிள் பண்ணை தான் கதையின் களம். அக்கூட்டுறவுப் பண்ணையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி ஹீன்ஸ். கம்யூனிஸ்டு கட்சி ஊழியரான அத்தொழிலாளியின் மனைவி லீனா. அந்த ஆப்பிள் பண்ணையின் மேலாளர், சீங்க்.

இந்த மூன்று கதாபாத்திரங்களின் வழியாகத்தான், போலி சோசலிசம் வீழ்ந்து கொண்டிருந்த காலத்தில், கிழக்கு ஜெர்மன் மக்களின் சமூக – அரசியல் வாழ்க்கையும், மனோநிலையும் படம் பிடித்துக் காட்டப்படுகிறது.

கிழக்கு ஜெர்மனியின் பொருளாதாரத்தில் ஆப்பிள் உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் முக்கியப் பங்குண்டு. போலி சோசலிச ஆட்சியின் இறுதி நாட்களில், ஆப்பிள் பழங்கள் விற்பனையாகாமல் தேங்கத் தொடங்குகின்றன. பண்ணையெங்கும் ஆப்பிள் பழங்கள் கூடை கூடையாக வீணாகி, நாதியற்றுத் தரையில் கொட்டிக்கிடக்கும் காட்சிகள் வந்து போகின்றன. மேலிடத்தில் ஏதோ கோல்மால் நடப்பதுதான் இந்தத் தேக்கத் திற்குகாரணம் என்று குற்றம் சுமத்துகிறான் தொழிலாளி ஹீன்ஸ்.

பண்ணைத் தொழிலாளிகள், ஆப்பிள் தேங்கிக்கிடப்பது பற்றிக்கவலைப்பட்டுக் கொண்டிருக்க, பண்ணையின் மேலாளர் சிங்க் மேற்கு நாடுகளில் தான் ரகசியமாகப் போட்டு வைத்திருக்கும் கருப்புப் பணம் பற்றிக் கவலைப்படுகிறான். சககட்சி உறுப்பினரான லீனாவை, அதாவது ஹீன்ஸின் மனைவி லீனாவை எப்படி அடைவது என்று கவலைப்படுகிறான்.

நோயாளியான சீங்க்கின் மனைவியே தனது கணவனின் காம இச்சைக்கு லீனாவை இணங்கச் செய்ய மறைமுகமாக வேலை செய்கிறாள். கட்சியில் சீங்க் பெரிய ஆளாக வருவான் என்று எதிர்பார்த்துத் தான் தந்தை அவனுக்குத் தன்னைத் திருமணம் செய்து வைத்ததாகக் கூறி லீனாவுக்கு ஆசைகாட்டுகிறாள்.

”ஆப்பிள் மரங்கள்” - திரைப்படம்
”ஆப்பிள் மரங்கள்” – திரைப்படம்

மேற்கு ஜெர்மனியின் முதலாளித்துவத்திலும், நுகர்பொருள் கலாச்சாரத்திலும் மயங்கிக் கிடக்கும் லீனா, சீங்க்கின் ஆசைக்கு இணங்குகிறாள். ”உனது கழுத்தில் கண்டிப்பாக நான் தாலி கட்டுவேன்” என சத்தியம் செய்யும் நம்மூர் வில்லன்களைப் போல, லீனாவை மேற்கு ஜெர்மனிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தனது இச்சையைத் தீர்த்துக் கொள்கிறான், சீங்க்.

சீங்க்கின் உதவியோடு திருட்டுத் தனமாக மேற்கு ஜெர்மனிக்குத் தப்பித்து ஓடி விட லீனா முயலுவது தோல்வியில் முடிகிறது. அவள் மே.ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்படுகிறாள்.

லீனாவின் ஆசைக் கனவுக்குத் தடையாக, குறுக்கே நின்ற பெர்லின் சுவர், அடுத்த சில நாட்களிலேயே நொறுங்கி விழுகிறது. பெர்லின் சுவர் இடித்துத் தள்ளப்படுவதை, தொலைக்காட்சியில் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் லீனா சுதந்திர ஜோதியில் கலந்து விட முடிவெடுத்து, தனது கைக் குழந்தையைத் துக்கிக் கொண்டு, மேற்கு நோக்கி ஓடுகிறாள்.

மேற்கில் உள்ள தனது கள்ளக் காதலனின் முகவரியை அலைந்து, திரிந்து, தேடிக்கண்டுபிடித்து, அழைப்புமணியை அழுத்துகிறாள். சீங்க்கின் உருவம் ஜன்னலோரமாக நிழலாடுகிறது. அழைப்பு மணியை மீண்டும். மீண்டும் அழுத்துகிறாள். ஆனாலும் அவன் வெளியே வரவில்லை.

ஏமாற்றமும், சோர்வும் தாக்க, எங்கே போவது எனத் தெரியாமல், நகரத்துத் தெருக்களில் அலைகிறாள் லீனா, நியான் விளக்குகளின் வெளிச்சம் தார்ச்சாலையை ஜொலிக்கவைக்கிறது. ஷோ-கேஸ்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட் களை ரசித்துப் பார்க்கக் கூட மனமின்றி நடக்கும் மரியா, ஒரு ரொட்டிக்கடைமுன் நிற்கிறாள்.

உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரொட்டி; வெளியே, கையில் குழந்தையோடு மரியா. ரொட்டித் துண்டுகளும், மரியாவும் இணைக்காட்சிகளாக அடுத்த டுத்துகாட்டப்படுகின்றன. முதலாளித்துவ சுதந்திரத்தின் கீழ் கையில் காசில்லாமல் ஒரு ரொட்டித் துண்டு கூடக் கிடைக்காது என்பது மரியாவுக்குத் தெரியும். ரொட்டிக் கடையை விட்டு அகன்று நடக்கிறாள். சிறிது தூரம் சென்றவுடன் தெருவின் நடைபாதையில் குழந்தையைக் கிடத்திவிட்டு அதனருகில் சுருண்டு படுக்கிறாள்.

ஆப்பிள் மரங்கள் திரைப்படத்தின் லீனா
முதலாளித்துவத்தின் நுகர்வுக் கலாச்சாரத்திலும், தனி நபர்வாதத்திலும் மூழ்கிக்கிடந்த லீனா போன்ற நடுத்தர வர்க்கத்தினர்

இப்பொழுது ஜெர்மனி ஒன்றுபட்டு விட்டது. தங்களது கூட்டுறவுப்பண்ணை தனியாருக்கு விற்கப்படுவதை எதிர்த்து தொழிலாளர்களைத் திரட்டுகிறான் ஹீன்ஸ். மேற்கு ஜெர்மனியின் மயக்கத்தி லிருந்து விடுபட்ட லீனாவும் அவனது போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கிறாள். பண்ணையை எவனுக்கோ விற்பதை விடத் தொழிலாளர்களே பணம் போட்டு , அதை வாங்கிவிடலாம் என்கிறான் ஹீன்ஸ்.

ஆனால் தொழிலாளர்களிடம் ஏது அவ்வளவு பணம்? நிர்வாகியாக இருந்து பண்ணையின் சொத்தைத் திருடிச் சேர்த்த சீங்க்கிடம் பணம் கேட்கிறான் ஹீன்ஸ். தன்னிடம் பணமில்லை என அவன் கை விரிக்கிறான்.

சில நாட்களில் கூட்டுறவுப் பண்ணை தனியார் வசமாகிறது. பண்ணையை வாங்கியவன் சீங்க் தான் எனப் பின்னர் தெரியவருகிறது. புல்டோசர் ஒன்று கூட்டுறவுப் பண்ணைக்குள் பெரும் சத்தத்தோடு நுழைகிறது. ஒரு ஆப்பிள் மரம் வேரோடு பிடுங்கப்பட்டு துக்கியெறியப்படுகிறது. அடுத்தடுத்து, ஆப்பிள் மரங்களை ஒவ்வொன்றாகப் பிடுங்கிக் கொண்டே, செல்கிறது புல்டோசர்,

***

1989 நவம்பரில் ஜெர்மன் இணைப்பு தொடர்பாக கிழக்கு ஜெர்மனியில் நடந்த கருத்துக் கணிப்பில் 27 சதவீதம் பேர் இணைப்புக்கு ஆதரவாகவும், 71 சதவீதம் பேர் இணைப்புக்கு எதிராகவும் வாக்களித்தனர். இருப்பினும் இணைப்பு நடந்தது.

அந்த 27 சதவீதம் பேர் வேறு யாருமல்ல. கட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொந்த நாட்டையே கொள்ளையடித்த சீங்க் போன்ற அதிகார வர்க்கத்தினர்; முதலாளித்துவத்தின் நுகர்வுக் கலாச்சாரத்திலும், தனி நபர்வாதத்திலும் மூழ்கிக்கிடந்த லீனா போன்ற நடுத்தர வர்க்கத்தினர்.

போலி சோசலிச ஆட்சியாயிருப்பினும் கிழக்கு ஜெர்மனி மக்கள் உணவு, உடை, வீடு போன்றவற்றிற்கு அரசு தந்த மானியம் காரணமாக தமது வருமானத்தில் குறைந்த பங்கையே செலவழித்து வந்தனர். ஆனால், நுகர்பொருட்கள் மீதான மோகம் நடுத்தர வர்க்கத்தைப் பிடித்து ஆட்டியது. ஜெர்மனி இணைந்து விட்டால், மேற்கு ஜெர்மனியின் நாணய விகிதத்தில் வருமானம் பெற்றால், தற்போது மலிவு விலையில் கிடைக்கும் வீடு, உணவு, உடை போக மேற்கண்ட நுகர்வுப் பொருட்களும் ‘போனசாக’ கிடைக்கும் என கி.ஜெர்மனி நடுத்தர வர்க்கம் கனவு கண்டது.

ரசியாவிலும் சரி, பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சரி கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் ஆட்சியில் இருந்த அதிகாரவர்க்க முதலாளிகள், மேலை ஏகபோக முதலாளிகளோடு கூட்டு சேர்ந்துதான் போலி சோசலிசத்தைக் கவிழ்த்திருக்கிறார்கள்
ரசியாவிலும் சரி, பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சரி கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் ஆட்சியில் இருந்த அதிகாரவர்க்க முதலாளிகள், மேலை ஏகபோக முதலாளிகளோடு கூட்டு சேர்ந்துதான் போலி சோசலிசத்தைக் கவிழ்த்திருக்கிறார்கள்

ஆனால் இணைப்புக்குப் பின் நடந்ததென்ன? ஹீன்ஸ் போன்ற தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இணைப்பு நடந்த சில வாரங்களிலேயே, எட்டு இலட்சம் (கிழக்கு) ஜெர்மனி தொழிலாளர்கள் வேலையிழந்து விட்டதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

கிழக்கு ஜெர்மனிப் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கருக்கலைப்பு உரிமை, சம வேலை வாய்ப்பு, சம ஊதிய உரிமை போன்றவை பறிக்கப்படும் அபாயம் எழுந்தது. ஜனநாயகம் என்ற போர்வையில், தொழிலாளர்களின் பொருளாதார அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்ட அதே சமயம், புதிய நாஜிக்கட்சிகள் மீதான தடைகள் நீக்கப்பட்டன. சுருக்கமாகச்சொன்னால், (கிழக்கு) ஜெர்மனி இருந்ததையும் இழந்து, புதிதாக எதையும் பெறாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

இணைப்பின் போது மேற்கு ஜெர்மன் அதிபராயிருந்த ஹெல்மெட் கோல், கிழக்கு ஜெர்மன் இணைப்பு; நமக்கு 2000 ஆண்டில் 117,300 கோடி ரூபாய் லாபத்தைத் தரும் என்று அறிவித்தார். லீனாவுக்குத் தரப்பட்ட சுவரைத் தாண்டும் சுதந்திரத்திற்கும் பட்டினி கிடக்கும் சுதந்திரத்திற்கும் வசூலிக்கப்பட்ட கட்டணம் இது.

ஜெர்மன் இணைப்பால் சிங்க் பெற்றது ஆப்பிள் தோட்டம். சீமன்ஸ், பென்ஸ், ஒபல், தாய்ல்மர், வோக்ஸ்வாகன் போன்ற ஜெர்மன் ஏகபோக முதலாளிகள் பெற்றதோ பல லட்சம் கோடி மதிப்புள்ள கிழக்கு ஜெர்மனியின் சொத்துக்கள் மற்றும் மலிவான உழைப்பு; ஆனால் போலி கம்யூனிஸ்டு அதிகாரவர்க்கத்தை அம்பலப்படுத்திய இந்தத் திரைப்படம் ஜெர்மன் ஏகபோக முதலாளிகளைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை.

ரசியாவிலும் சரி, பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சரி கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் ஆட்சியில் இருந்த அதிகாரவர்க்க முதலாளிகள், மேலை ஏகபோக முதலாளிகளோடு கூட்டு சேர்ந்துதான் போலி சோசலிசத்தைக் கவிழ்த்திருக்கிறார்கள் என்பதற்கு இத்திரைப்படம் சான்று பகர்கிறது.

கட்சிக்குள் நிறைந்திருந்த நடுத்தர வர்க்கம் அதனுடைய முதலாளித்துவ மோகம் ஆகியவற்றின் வகை மாதிரி லீனா.

கம்யூனிஸ்டு கட்சியில் சேராமல் தானுண்டு தன்வேலையுண்டு என்றிருந்த தொழிலாளி ஹீன்ஸ், அதிகாரவர்க்கத்தின் ஊழலைத் தட்டிக் கேட்கும் போதும், தாங்கள் உருவாக்கிய பண்ணையை எவனோ ஒரு முதலாளி அபகரிப்பதை எதிர்த்துப் போராடும்போதும் மெல்ல மெல்ல வர்க்க உணர்வு பெறத் தொடங்குகிறான்.

கம்யூனிசத்தின் தோல்வி பெற்றெடுக்கப் போகும் புதிய கம்யூனிஸ்டுகளுக்கு அவன் ஒரு வகை மாதிரி ஆகக்கூடும்.

– புதிய கலாச்சாரம், ஜூன், 2001.

ஏன் ? – டிரேஸி சாப்மன் பாடல்

1

உணவு இருக்கிறது
உலகத்துக்கே சோறு போடலாம்
குழந்தைகளோ பட்டினியால் சாகிறார்கள்
ஏன்

நாம் இத்தனைப் பேர் இருக்கிறோம்
ஆதரவற்றவர்களும் இருக்கிறார்கள்
ஏன்

tracy-chapman1கொல்வதற்குக் குறி பார்க்கும்
ஏவுகனைகள்
அமைதிப் படைகள் என்று
அழைக்கப்படுகின்றனவே
ஏன்

ஒரு பெண்ணிற்கு
சொந்த வீட்டில் கூட பாதுகாப்பில்லையே
ஏன்

வெறுப்புக்குப் பொருள் அன்பு
போருக்குப் பொருள் அமைதி
இல்லையென்பதன் பொருள் ஆம்
நாமோ
சுதந்திர மனிதர்களாம்!

இதற்கெல்லாம் பதில் சொல்லாமல்
தப்ப முடியாது
காலம் நெருங்குகிறது.

எத்தனை கேள்விகள்
எத்தனை முரண்பாடுகள்!

இதற்கு விடை தேடுவோர்
உண்மையைத் தேடுவோர்
இருக்கத்தான் செய்கிறார்கள்.

பதில் சொல்லாமல் தப்ப முடியாது
காலம் நெருங்குகிறது.

கண்ணை இறுக்கும் கட்டுகள் அறுத்து
குருடர்கள்
பார்க்கப் போகிறார்கள்.

ஊமைகள்
பேசப் போகிறார்கள்
உண்மையைப் பேசப் போகிறார்கள்

பதில் சொல்லாமல் தப்ப முடியாது
காலம் நெருங்குகிறது.

– டிரேஸி சாப்மன், அமெரிக்கக் கறுப்பினப் பாடகி
புதிய கலாச்சாரம், ஜூலை 2000.

https://youtu.be/K-WpxSrmV4Y

நீதித்துறையின் அடாவடித்தனம் ! வழக்கறிஞர்களின் போராட்டம் !

1

பத்திரிகை செய்தி: நீதித்துறையின் அடாவடித்தனம்! வழக்கறிஞர்களின் போராட்டம்!

நீதித்துறை தானே முகங்கொடுக்க வேண்டிய, தீர்வு காணவேண்டிய பொறுப்புகள், கடமைகள் ஏராளமாகக் குவிந்து கிடக்கன்றன. உச்சநீதி, உயர்நீதி மன்றங்களில் பல ஆயிரம் வழக்குகள், கீழமை நீதிமன்றங்களில் பல இலட்சம் வழக்குகள் பல ஆண்டு காலமாகத் தேங்கிக் கிடக்கின்றன. நீதிமன்றத் தீர்ப்புகளை, உத்தரவுகளை மத்திய-மாநில அதிகாரிகளும் ஆட்சியாளர்களும், பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும், இயற்கை வளக் கொள்ளையர்களும் அவர்களின் கிரிமினல் குற்றக் கும்பல்களும் சாதி, மதவெறியர்களும் மதிப்பதேயில்லை. இந்த நிலையில் நீதித்துறையின் மீது காலனிய காலத்திலிருந்து கட்டி எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி கேட்கவே கூடாத புனிதத் தோற்றம் உடைந்து நொறுங்குகிறது. இதற்குக் காரணமும் பொறுப்பும் நீதித்துறைதான். ஆனால், தான் மதிப்பிழந்து போவதையும் தனது சரிவையும் தடுக்க முடியாத நீதித்துறை, அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாக நீதிமன்ற (வளாகத்தின்) கண்ணியத்தையும் மாண்பையும் காக்கும் திருப்பணியை மேற்கொண்டுள்ளது. நீதித்துறையின் மாண்பும் கண்ணியமும் வழக்கறிஞர்களால்தான் கெட்டுப்போவதாகப் பழிபோட்டு, அவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறார்கள்.

lawyers-struggle-salem-rally
நீதிமன்றத்தின் பாசிச அடக்குமுறையைக் கண்டித்து ஜூன் 27 அன்று மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய ஆர்ப்பாட்டம்.

உச்சநீதி மன்றம் முதல் கீழமை நீதி மன்றங்கள் வரை எல்லா மட்டங்களிலும் நீதிபதிகளின் தகுதியற்ற நியமனங்கள், இலஞ்ச-ஊழல், அதிகார முறைகேடுகள், கட்டைப் பஞ்சாயத்துகள், பாலியல் குற்றங்கள் நிரம்பி வழிகின்றன. சுயமுரண்பாடுகள் நிறைந்த, சட்டத்துக்கு முரணாக, ஒருதலைப்பட்சமான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் ஓய்வுபெற்ற, பதவியிலுள்ள நீதிபதிகளே ஒப்புக் கொள்கிறார்கள். இப்போது வழக்கறிஞர்களுக்கு எதிராக, நீதிபதிகளுக்கு ஆதரவாக வரிந்துகட்டிக்கொண்டு வாதாடும் நீதிபதி சந்த்ருவே கிராணைட் கொள்ளையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிபதிகள் தீர்ப்புகள் வழங்கியதையும் விசாரிக்கச் சொல்லவில்லையா? கிராணைட் கொள்ளைக் குற்றவாளிகளை விடுவித்த மேலூர் மாஜிஸ்ட்ரேட் இடைநீக்கம் செய்யப்பட்டதும் என்ன எழுதினார்? உயர்நீதி மன்றத்தின் மூன்று முரண்பட்ட தீர்ப்புகள் அடிப்படையிலேயேதான் அவ்வாறு செய்ததாக கூறினார்.

நீதித்துறை சர்வாதிகாரிகள்: சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்
நீதித்துறை சர்வாதிகாரிகள்: சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்

கிராணைட் மட்டுமல்ல; தாதுமணல், ஆற்றுமணல் போன்ற இயற்கை வளக்கொள்ளை, சாதிவெறி ஆணவக்கொலைகள், முத்துக்குமாரசாமி மற்றும் விஷ்ணுபிரியா தற்கொலை போன்றவைகளில் நியாயமான விசாரணைக்கு முட்டுகட்டை போடும் தீர்ப்புகள்; ஆளுங்கட்சிக்கும் அரசுக்கும் எதிரான வழக்குகளில் (எம்.ஜி.ஆர். சமாதியில் இருப்பது இரட்டை இலை அல்ல, பறக்கும் குதிரைதான் என்று சொன்னது; சொத்துக்குவிப்பு உட்பட ஜெயலலிதாவுக்கு எதிரான பல வழக்குகளை அப்பட்டமாகவே சட்டவிரோதமாக இரத்து செய்தது; தேர்தல் குற்றவழக்குகளிலிருந்து அவரை விடுவித்தது; தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பது சரியெனத் தீர்ப்புச் சொன்னது; மதுவிலக்கு அரசின் கொள்கை, அதில் தலையிட முடியாதென ஒதுங்கிக் கொண்டது – இப்படிப் பலவற்றில்) ஒருதலைப்பட்சமாக ஜெயலலிதாவுக்கு சாதகமாக வழங்கிய தீர்ப்புகள்; சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து, பெங்களூர் நீதிபதி குமாரசாமி போன்றவர்களின் செயல்பாடுகள் நீதிபதிகளை மதிக்கக் கூடியதாகவோ நடுநிலையாளர்களாகவோ கருதக் கூடியதாக இல்லை. தமிழகத்தில் குற்றஞ்சாட்டி விசாரணைக்கு நிறுத்தப்படுவோரில் 70 விழுக்காடு விடுதலை செய்யப்படுகிறார்கள். கட்டைப் பஞ்சாயத்தும் கையூட்டுமே இதற்குக் காரணம். கீழமை நீதிமன்றங்களில் ஊழல் பெருகிவிட்டதாக சமீபத்தில் உயர்நீதி மன்ற நீதிபதியே புலம்பினார்.

நீதிபதி ராமசுப்பிரமணியன்
நீதித்துறை சர்வாதிகாரிகள்: நீதிபதி ராமசுப்பிரமணியன்

நீதித்துறையின் மீதான இத்தகைய புகார்கள், குறைபாடுகளைப் பல ஆண்டுகளாக நீதிபதிகள் சுயபரிசீலனை செய்வதே கிடையாது. தங்கள் முது
கை அவர்கள் திரும்பிப் பார்ப்பதே கிடையாது. நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக் கொள்வார்கள்; பதவி உயர்களையும் தாங்களே போட்டுக் கொள்வார்கள்; தங்கள் மீதான குறைபாடுகள், புகார்களைத் தாங்களே விசாரித்துக் கொள்வார்கள்; இவைபற்றி வேறுயாரும் தலையிடவோ, பேசவோ கூடாது என்கிறார்கள். இது மன்னராட்சியைவிட மோசமானதில்லையா? இது கொடூரமான சர்வாதிகாரமில்லையா? யார் இந்த அதிகாரத்தை நீதிபதிகளுக்குக் கொடுத்தது? நீதிபதிகள் தங்களுக்குத் தாங்களே புனிதர்களாக ஒளிவட்டம் போட்டுகொண்டு, அத்துமீறிய அதிகாரத்தைச் சுவீகரித்துக் கொண்டது, வெளிப்படைத்தன்மையும் யாருக்கும் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடும் இல்லாதது; ஒளிவு மறைவான செயல்பாடு கொண்டதாகவும் நீதிமன்ற அவமதிப்பு என்ற ஆயுதமும் எளிதில் பதவிநீக்கம் செய்யமுடியாத கவசமும் தரித்திருப்பதால் சர்வாதிகாரிகளாக நடந்து கொள்கிறார்கள்.

அன்றாடம் நீதித்துறையும் சட்டத்துறையும் இனைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. இதில் நீதித்துறையின் மீது வழக்கறிஞர்களுக்கு மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் நீதிபதிகளின் நடத்தை, செயல்பாடுகளால் ஏற்படுத்தப்பட வேண்டியன. நீதிபதிகள்தாம் தமது தலைமைப் பண்புகளால் முன்னுதாரணமாகச் செயல்பட்டு வழக்கறிஞர்களிடையே கண்ணியமான, மதிக்கத்தக்க நல்லுவுறகளைப் பேணிக்கொள்ள வேண்டும். ஆனால், அவ்வாறில்லாத நீதிபதிகளின் மேற்கண்ட நடத்தைகள் அருகிலிருந்து அன்றாடம் காணும் வழக்கறிஞர்களிடையே நல்லுறவையும் பொது மக்களிடையே நீதித்துறையின் மீது கண்ணியத்தையும் ஏற்படுத்தக் கூடியவையாக இல்லை.

lawyers-struggle-madurai-demo
நீதிமன்றத்தின் பாசிச அடக்குமுறையைக் கண்டித்து ஜூன் 27 அன்று மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இருந்தாலும், தமது சுயநல சீரழிவுப் போக்குகளை மாற்றிக்கொள்ளாத நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீது சர்வாதிகாரத் தாக்குதல்களை ஏவியிருக்கின்றனர். பதவிஉயர்வைக் குறிவைத்து சமீபத்தில் ஆந்திராவுக்கு மாற்றல் வாங்கிக் கொண்டுபோன ஒரு நீதிபதி தனது பிரிவுபச்சார விருந்தில் பின்வருமாறு பேசியிருக்கிறார்.

“நான் போர்க்களத்திலிருந்து ஓடிவிடவில்லை. தொலை தூர ஏவுகணைகளை வீசி எதிரி முகாம்களை முற்றிலுமாக அழிப்பதற்குத் தோதான தூரத்தை கணக்கிட்டு, அதற்குப் பொருத்தமான இடத்தில் நிலைகொள்ளவிருக்கிறேன். வெகுதூரம் போய்விடவில்லை. தலைமை நீதிபதி தொலைபேசியில் அழைத்தால் ஆஜராகும் தொலைவில்தான் இருக்கிறேன். இங்கிருந்து போன பின்னரும், இங்கே என்ன நடக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவனாக நான் இருப்பேன். கனவிலும் வந்து உங்களை அச்சுறுத்துவேன்.”

மாண்புமிகு என்றழைக்கப்படும் ஒருநீதிபதி, நியாயத்துக்குப் போராடும் வழக்கறிஞர்கள் மீது வஞ்சம் தீர்க்கும் வகையில் இப்படி பேசியதும், தலைமை நீதிபதிக்கு தனக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டி மிரட்டும் அவரது சிறுமையையும் இப்போது வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதித் திருத்தம் என்ற பெயரில் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலையையும் வேறுவேறானதாகக் கருதமுடியுமா?

நீதிமன்ற ஊழலுக்கு உதாரணமாக முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, ஜெயாவிற்குப் பிணை வழங்கிய விவகாரம் சந்தி சிரித்தது.
நீதிமன்ற ஊழலுக்கு உதாரணமாக முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, ஜெயாவிற்குப் பிணை வழங்கிய விவகாரம் சந்தி சிரித்தது.

குடித்துவிட்டு நீதிமன்றத்துக்கு வருவதும் வழக்கு விசாரணைகளில் ஈடுபடுவதும், கட்டைப் பஞ்சாயத்து செய்வதும் சில வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, நீதிபதிகளிடமும் காணப்படும் சீரழிவுகள் இல்லையா? அதனால் நீதித்துறையின் மாண்பும் கண்ணியமும் பாதிக்கப்படாதா? இம்மாதிரியான தவறுகளுக்குத் தக்க விசாரணையின்றி நீதிபதிகளை தண்டிக்கலாம் என்றால், அதே தவறுகளுக்கு நீதிபதிகளைத் தண்டிப்பது யார்? அதற்காக உச்சநீதி மன்றத்துக்கே போனாலும், அவை பல ஆண்டுகளாகக் கிடப்பில் தானேபோடப்பட்டுள்ளன? வழக்கறிஞர்கள் சிலரின் தவறுகளுக்காக அந்தச் சமூகம் முழுவதையும் தண்டிப்பது சரியா?

நீதிமன்ற அதிக்கிரமங்களையும் அநீதிகளையும் அநியாயங்களையும் அன்றாடம் அருகிலிருந்து அனுபவிப்பவர்கள் மற்றவர்களைவிட வழக்கறிஞர்கள். அவற்றின் சட்ட நுட்பங்களை அறிந்தவர்கள் வழக்கறிஞர்கள். ஆகவே, அவற்றுக்கும் வேறு சமூகப் பிரச்சினைகளுக்காகவும் போராட வேண்டிய கூடுதலான உரிமையும் கடமையும் கொண்டவர்கள் வழக்கறிஞர்கள். நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயோ, வெளியேயோ எங்கும் பேசவோ, போராடவோ கூடாது என்றால் வேறுயார், எங்குபோய் போராடுவார்கள்? ஆகவே, இது வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அரசியல் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் அனைத்துப் பிரிவு மக்கள் மீதான நீதிமன்றத்தின் பாசிசத் தாக்குதல். நீதிமன்ற பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றுதிரளுவோம்! போராடுவோம்!

– மாநில ஒருங்கிணைப்புக் குழு,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

கோவை, விருதை, திண்டிவனம் களச் செய்திகள் – 15/07/2016

0

1. இருண்ட காலம் எதிரில் காத்திருக்கிறது, முறியடிக்க அணி திரள்வோம்

கோவை மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகவும் நீதிமன்ற பாசிசத்துக்கு எதிராகவும் செஞ்சிலுவை சங்கம் அருகே உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்து மாநகர காவல்துறை எழுத்துபூர்வ கடிதம் கொடுத்தது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ndlf-kovai-demo-in-solidarity-with-lawyers-2இதனையொட்டி கோவை நீதிமன்ற வளாகம் முழுவதும் இரண்டு நாட்களாக தோழர்கள் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக சுவரொட்டியும் ஒட்டப்பட்டது. கோவை மாவட்டத்தில் எந்த ஓட்டுக் கட்சியும் செய்யாத நிலையில் புரட்சிகர அமைப்புகள் வீச்சாக பிரச்சாரம் செய்தன.

மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரிடமும் செயலாளரிடமும் நேரில் துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. தொழிலாளி வர்க்கம் தனக்கான் போனஸ், சம்பளம் போன்ற கோரிக்கைகளுக்காக மட்டும் போராடுவர் என்பதை மாற்றி சமூகத்துக்காகவும் போராடுவர் என்பதை நிலை நாட்டும் வகையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தோழர் எம்.கோபிநாத் தலைமை தாங்கினர். பின்னர் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்பட்டது.

காவல்துறை அனுமதி மறுத்த காரணத்தால் இதர தோழர்கள் பேச முடியவில்லை. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநிலத் துணைத் தலைவர் விளவை இராமசாமி பேசுகையில்,

“சட்டத்திருத்தம் எனும் பெயரில் வந்த இந்த தாக்குதல் வழக்கறிஞர்களுக்கு மட்டும் எதிரானதல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரானது.

இந்த சட்ட திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என தமிழ்நாட்டின் அனைத்து பிரிவினரும் பாதிக்கப்படுவோம்.

ndlf-kovai-demo-in-solidarity-with-lawyers-1இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் இது போல வழக்கறிஞர்களுக்கு எதிரான வாய்ப்பூட்டு இல்லை. இது தமிழகத்தில் மட்டும் வருவதற்கு காரணம், அணு உலைகளுக்கு எதிரான எதிர்ப்பை இல்லாமல் செய்ய வேண்டும். மீத்தேன் திட்டம் தடையின்றி நிறைவேற வேண்டும். நியூட்ரினோ திட்டம் நிறைவேற வேண்டும். கார்ப்பரேட்டுகள் தமிழகத்தில் தங்கள் சுரண்டலை தடங்கலின்றி நிறைவேற்ற வேண்டும் தமிழகத் தொழிலாளர்களின் போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இப்படி ஒரு விரிவான சூழ்ச்சியின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் என நாம் பார்க்க வேண்டும்.

வழக்கறிஞர்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டால் நாளை தமிழகத்தில் போராடும் விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஒடுக்கப்படுவோம். வழக்கறிஞர்கள் மீதான சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கமே நீதிமன்றத்தை ஆர்‌.டி‌.ஓ அலுவலகம் போல மாற்றுவது ஆகும். வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு விட்டால் நீதிமன்றத்தில் யாருடைய ஆதிக்கம் அரங்கேறும்? நீதிபதிகளுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டத்தின் கொட்டமே அதிகமாகும். ஜாமீனுக்கு இவ்வளவு ரேட் என நிர்ணயம் செய்யப்படும். ஆர்‌.டி‌.ஓ அலுவலகத்தில் லைசென்ஸ் கொடுக்க, பெயர் மாற்றம் செய்ய தொகை போல நீதிமன்றத்திலும் நடக்கும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சட்டத் திருத்தத்தை எதிர்கள் சுலபமாக திரும்பப் பெற மாட்டார்கள் வழக்கறிஞர்கள் தொழிலாளிகள், விவசாயிகள் என தமிழக மக்களோடு இணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதைத் தவிர வேறு மார்க்கமில்லை. மனிதச் சங்கிலி உண்ணாவிரதம் புறக்கணிப்பு போன்ற போராட்டங்களை எதிரிகள் சுலபமாக ஜீரணித்து விடுவார்கள்.

எனவே பாட்டாளி வர்க்கம் தனது தோள்களில் இந்தப் போராட்டத்தை பல்வேறு வகைகளில் நடத்த வேண்டும். இதனை உணர்ந்து உடனே விழித்துக் கொள்ள வேண்டும். இருந்த காலம் காத்திருக்கிறது. எதிர்கொள்ள தயாராவோம்” என்று பேசி முடித்தார்

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைதாகி இரவில் விடுவிக்கப்பட்டனர்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

2. அ.தி.மு.க அலுவலகமாக மாறிய விருதை அரசு கலைக்கல்லூரி – பு.மா.இ.மு முற்றுகை போராட்டம்

rsyf-struggle-in-virudai-govt-arts-college-12016-2017-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை விருதை திருகொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த சேர்க்கைக்கு முதல் கலந்தாய்வு இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்றது. அந்த கலந்தாய்வின் போதே மாணவர்களை மதிப்பெண் மற்றும் இட ஒதிக்கீடு அடிப்படையில் சேர்க்காமல் அரசியல் கட்சிகளின் சிபாரிசுக்கு முன்னுரிமை கொடுப்பது நடந்தது. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எரிச்சலையும், கவலையையும் ஏற்படுத்தி இருந்தது. கல்லூரி வளாகத்தின் வாயிலில் தனியார் கல்லூரிகள் ஸ்டால் போட்டு தங்கள் கல்லூரிக்கு ஆள் பிடித்தனர்.

இருந்தாலும் விருதை சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து வரும் ஏழை விவசாய பின்னணி கொண்ட மாணவர்களுக்கு இக்கல்லூரியே அடைக்கலம். அதனால் இரண்டாம் கலந்தாய்வு வரை காத்திருந்து பலர் 12-07-2016 அன்று வந்திருந்தனர். இந்த கலந்தாய்வு தொடங்கிய ஆரம்பம் முதலே கட்சிகாரர்களின் லெட்டர் பேடுகள் அனைத்து துறை தலைவர்களிடம் சென்று சிபாரிசு செய்தது. மேலும் இந்த கலந்தாய்வில் தகுதியான மாணவர்களை புறக்கணித்து அவர்களை வெளியே அனுப்ப அவர்கள் கலந்தாய்வுக்கு கால தாமதம் என காரணம் கூறியது கல்லூரி நிர்வாகம். ஆனால் கலந்தாய்வுக்கு தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டது நேரம் அறிவிக்கப்படவில்லை. 10.15 மணிக்கு வந்த மாணவர்களை கூட வெளியே அனுப்பியது. அந்த மாணவர்கள் பு.மா.இ.மு தோழர்களிடம் தகவல் கூறினர்.

இதையடுத்து பு.மா.இ.மு தோழர்கள் கல்லூரியில் விசாரிக்க சென்றனர். அப்போது அரசு கலைக் கல்லூரி அ.தி.மு.க கட்சி அலுவலகம் போல் காட்சி அளித்தது. இதையடுத்து மாணவர்களின் புகார் குறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கலாவதியிடம் பேச சென்ற பு.மா.இ.மு செயலாளர் தோழர் மணிவாசகத்திடம், “உன்னிடம் பேச முடியாது வெளியே போ” என பேசி அனுப்பினார். இதையடுத்து தோழர்களும் மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். தோழர்கள் முழக்கமிட்டு சென்றதை பார்த்த பெற்றோர்கள், மாணவர்கள் அங்கு திரண்டனர்.

உடன் வந்த போலிஸ், “இது போல் கல்லூரியில் போராடக் கூடாது” என்று போராட்டத்தை தடுத்து நிறுத்தியது.

“இது எங்கள் உரிமை நீங்கள் உள்ளே வந்தது தான் தவறு” என தோழர்கள் எதிர்த்து பேசியவுடன் அமைதியாகிவிட்டது.

கல்லூரி முதல்வரோ போலிஸிடம், “இவர்கள் என்னை வேலை செய்ய விடாமல் தடுத்து விட்டார்கள்” எனப் புகார் அளிப்பதாகக் கூறினார்.

“நீங்கள் என்ன வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் அதற்கு அஞ்சமாட்டோம்இங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் அறிவிக்கப்படும்” என கல்லூரி முதல்வரிடம் கூறினர்.

மாணவர்கள் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயார் என தெரிவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விருதை 88703 81056.

3. கல்லூரி மாணவர்களுக்கு பு.மா.இ.மு வரவேற்பு – திரு அ.கோவிந்தசாமி கலை & அறிவியல் அரசினர் கல்லூரி, திண்டிவனம்

04-07-2016 அன்று முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களையும், பேராசிரியர்களையும், பொறுப்பு முதல்வரையும், ஊழியர்களையும், கல்லூரி மாணவர்களை தினமும் ஏற்றிவரும் ஆட்டோ, ஓட்டுநர்கள் மற்றும் அரசு போக்குவரத்து ஓட்டுநர், நடத்துனர்களையும் வரவேற்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF) சார்பாக இனிப்பு வழங்கி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்லூரி பொறுப்பு முதல்வர், வரலாற்றுத் துறை எச்.ஓ.டி உஷா ரகோதம் நிகழ்ச்சியின் இறுதிவரை உடனிருந்தனர். இந்த கல்லூரி மாணவர்களை சமூகப் பொறுப்புள்ளவர்களாக வளர்த்து விடுங்கள் என்று கூறினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திண்டிவனம்.