













மே -1 2016 தொழிலாளர் தினத்தன்று திருச்சியில் புதிய ஐனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தோழமை அரங்குகளுடன் இணைந்து பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மூன்று நாள் தொடர் போராட்டத்துக்கு பின் பேரணிக்கு அனுமதி கொடுத்த திருச்சி காவல்துறை பேரணி துவங்கும் போது, “பேரணியில் முழக்கம் போடுவதற்கு மைக் செட் பயன்படுத்தக் கூடாது வெறும் வாயில் முழக்கம் போட்டுக்கொள்ளுங்கள்” என அடாவடித்தனம் செய்தது. தோழர்களின் விடாபடியான போராட்டத்தால் காவல்துறை பின் வாங்கியது.
விண்ணதிரும் முழக்கங்களோடு திருச்சி மரக்கடையில் பேரணி துவங்கியது. தஞ்சை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் இராவணன் பேரணிக்கு தலைமையேற்று மே நாளின் மகத்துவத்தைப் பற்றியும் மே நாள் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி அவர்கள் வென்றெடுத்த உரிமைகளை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறைகளுக்கு ஒப்படைப்பது நமது கடமை எனவும் பேசி பேரணியை துவக்கி வைத்தார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பேரணியின் முன்வரிசையில் பறையோசை முழங்க, தலைவர்களும் வழக்குரைஞர்களும் நடைபோட, அதன் பின்னால் அறுவாள் சுத்தியலை ஆணும் பெண்ணும் ஏந்தியபடி செல்ல, பாட்டளிவர்க்க ராணுவத்தின் மிடுக்கு நடையுடன் செஞ்சட்டை அணிந்த வீரர்கள் செல்ல, அவர்ளின் அடியொற்றி பெருந்திரள் தொழிலாளி வர்க்கமும் தோழமை அமைப்புகளின் தோழர்களும் செல்ல சாலையின் இருபுறமும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேரணி அமைந்தது. இறுதியில் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் பேரணி முடிவுற்று ஆர்ப்பாட்டம் துவங்கியது.
செங்கொடியும் முழக்கப் பதாகைகளும் முன்வரிசையில் நிற்க்க பறையோசையுடன் கூடிய விண்ணை முட்டும் முழக்கங்களுடன் துவங்கியது ஆர்ப்பாட்டம்.
பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர் சுந்தரராசு அவர்கள் தலைமையேற்று,
“தொழிலாளி வர்க்கம் உதிரம் சிந்தி பெற்றெடுத்த 8 மணி நேர வேலை நாள் என்பது முதலாளிகளின் லாப வெறிக்கு போதவில்லை என்பதால் இப்போதெல்லாம் 15, 16 மணி நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுகிறான் தொழிலாளி. வேலை செய்ய மறுத்தால் வேலையை பறித்து தொழிலாளியை பட்டினிபோட்டு கொலை செய்கிறான் முதலாளி. பணி நிரந்தரம் இல்லை. எதிலும் காண்ட்ராக்ட் மயம் தினிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்கு முடிவுகட்ட பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரள்வதுதான் ஒரே தீர்வு” என உரையாற்றினார்.
திருச்சி ம.க.இ.க. மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா பேசுகையில்,
“மே தினம் என்பது ஓய்வு நாள் அல்ல அஜீத்தின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காகவோ அல்ல. தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் சுரண்டலுக்கு முடிவு கட்டியநாள். 8 மணி நேர வேலை என்பதை வென்றெடுத்த தினம். இவை இன்று பறிபோகின்றன. இதனைத் தடுப்பதற்கு இளைஞர்கள் போராட முன்வர வேண்டும். இதற்காக நாம் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும்” என அறைகூவினார்.
மக்கள் அதிகாரத்தின் தோழர் ஓவியா பேசுகையில்,
“ஜனநாயகத்தின் 4 தூண்கள் எதுவும் உழைக்கும் மக்கள் யாருக்கும் பயன்படுவதில்லை. எனவே இதை யாரும் நம்ப வேண்டிய தேவையும் இல்லை என கேரளாவின் தேயிலை தோட்ட பெண் தொழிலாளிகளின் வீரமிக்க போராட்டமும் மக்கள் அதிகாரத்தின் டாஸ்மாக்கை மூடும் போராட்டமும் மக்கள் தனக்கான உரிமையை தானே நிலைநாடடிக்கொள்வதுதான் ஒரே வழி. நேற்றுவரை லஞ்ச ஊழலில் ஊறித் திளைத்த அதிகாரிகள் தான் இன்று தேர்தல் அதிகாரியாகவும் பறக்கும் படையாகவும் வலம்வருகின்றனர். இவர்கள் எப்படி தேர்தலை நியாயமாக நடத்த முடியும். மக்கள் தான் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்” என உரையை முடித்தார்.
சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் கௌரவத் தலைவர் தோழர் ராஜா பேசும் போது,
“போலிகளின் இரு (CITU, AITUC ) தொழிற்சங்கங்களும் தொழிலாளிக்கு செய்யும் துரோகங்களை பட்டியலிட்டார். தா.பாண்டியனின் ஜெயா துதிபாடலையும், முதலாளிக்கு சேவை, பாட்டாளிக்கு பட்டினி, இவைதான் மோடியின் ஆட்சி. எனவேதான் சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல் பாதை நமது பிரச்சினையை தீர்க்காது. இதனை தூக்கியெறிய வேண்டும். இதற்கு புரட்சிதான் தீர்வு” என தனது உரையை முடித்தார்.
பெண்கள் விடுதலை முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் நிர்மலா பேசுகையில், “வேலை செய்யும் ஆலைகளிலும் அரசுப்பணிகளிலும் தனியார் தொழிற்சாலையிலும், நிறுவனங்களிலும் வேலை செய்யும் பெண்கள் பாலியல் ரீதியான சுரண்டல், உழைப்பு சுரண்டலென இருவகைகளில் சுரண்டப்படுகின்றனர். இதனை மாற்றக்கூடிய வலிமை கம்யுனிஸ்ட்டுகளிடம் மட்டுமே உள்ளது” என குறிப்பிட்டார்.
ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் கோபி பேசும் போது,
“கால்டாக்சி, தனியார் பேருந்துகளின் போட்டிகளுக்கு மத்தியில் ஆட்டோ தொழில் செய்வது முடியாத காரியமாக உள்ளது. இதற்கிடையில் மாநகராட்சி அதிகாரிகளின் அடாவடித்தனம், போலீசின் பொய் வழக்கு இதனையெல்லாம் தொழிலாளியின் ஒன்றிணைந்த போராட்டத்தாலும் பு.ஜ.தொ.மு வின் சிறப்பான வழிகாட்டலினாலும்தான் முறியடிக்க முடிந்தது. எனவே துரோகத்தை ஒழித்து தொழிலாளிக்காய் பாடுபடும் பு.ஜ.தொ.மு. வில் இணைவீர்” என தொழிலாளிகளுக்கு அறைகூவல் விடுத்தார்.
அனைத்து தரைக்கடை வியாபரிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர்.பழனிச்சாமி பேசுகையில்
“முன்பெல்லாம் வயதானவர்கள் பிழைப்பு நடத்த தரைக்கடை போடுவார்கள். இன்றோ கிராமப்புறத்தில் டிகிரி படித்த மாணவர்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் தரைக்கடை போட்டு பிழைப்பு நடத்துகின்றார்கள்.
ஒருபக்கம் கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்காக தரைக்கடைகள் அழிக்கப்படுகின்றது. இன்னொருபுரம் உள்ளுரில் உள்ள சாரதாஸ், மங்கள்-மங்கள் போன்ற பெரும் நிறுவனங்கள் பொது இடத்தை ஆக்கிரமித்து கார் பார்க்கிங் அமைக்கிறார்கள். தனது கடைமுன்னால் 3 அடி கடைபோட வேண்டுமா மாத வாடகைக் கொடு என மிரட்டுகின்றார்கள். இதற்காக போலீசை வைத்து தரைக்டைகளை அப்புறப்படுத்துகின்றனர். தரைக்கடை வியாபாரிகள் மீதான தாக்குதலுக்கு எதிராக எந்த ஓட்டுக்கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் பேசவில்லை. எனவே அவர்களுக்கு ஏன் ஓட்டுபோட வேண்டும்” என வினா எழுப்பினார்.
சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் பேசுகையில்,
“1886-ம் ஆண்டு சிக்காகோ நகரில் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்பதை தொழிலாளிகள் தம் இன்னுயிரைக் கொடுத்து வென்றார்கள். இத்தகைய மகத்தான மே நாளை தோழர் லெனின் போராட்ட நாளாக அறிவித்தார். இந்தியாவில் காலனியாட்சி நடந்த போது தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறித்தெடுக்க முயன்ற போது காலனியாட்சிக்கு எதிராக தோழர் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். அதன்பின் காங்கிரஸ் தொடங்கி இன்றுள்ள பி.ஜே.பி வரை அனைத்துக்கட்சிகளும் பன்னாட்டுக் கம்பெனிக்கு ஆதரவாக கார்ப்பரேட் கம்பெனி கொள்ளைக்கு ஏதுவாக தனியாரமய – தாராளமய – உலகமயக் கொள்கைகளை போட்டி போட்டு அமுல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் கேரளாவில் தேயிலை தோட்ட பெண்தொழிலாளிகள் போராட்டம் துரோக தொழிற்சங்கங்களின் முகத்திரையை கிழித்து முதலாளித்துவ சுரண்டலுக்கு மரண அடி கொடுத்தது. சமீபத்தில் பெங்களுரில் ஆயத்த ஆடைதயாரிக்கும் லட்ச்சக்கணக்கான தொழிலாளர்கள் மூன்றே நாளில் எந்தத் தொழிற்சங்கத்தின் தலைமையும் இல்லாமல் தன்னியல்பாக போராடி பி.எஃப் பணத்தை எடுத்து பயன்படுத்துவதற்கு மத்திய அரசு போட்ட தடையை உறுதிமிக்க போராட்டத்தால் உடைத்தெறிந்தார்கள். இத்தகைய உறுதிமிக்க சமரசமற்ற போராட்டத்திலிருந்து பாடம் கற்போம்.
விவசாயம், நெசவு, சிறு தொழில், சிறு வணிகம் அழிக்கப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகின்றது, இத்தகைய சூழலை முதலாளிகள் கூட்டம் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளிகளை அற்பக் கூலிக்கு கசக்கி பிழிகின்றான். அனைத்து துறைகளிலும் புதிய வடிவத்தில் காண்டிராக்ட் மயத்தை புகுத்துகிறான்.
மனித உழைப்பை சூறையாடும் அம்பானி, டாடா, பிர்லா, அதானி மற்றும் அன்னிய பன்னாட்டு கொள்ளை கும்பலுக்கு மோடியும், லேடியும் போட்டி போட்டுக்கொண்டு சேவை செய்கின்றனர். இதனை எந்த IAS,IPS அதிகாரிகளும் தடுப்பதற்கில்லை. இவர்களை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாதிபேர் கிரிமினல்கள். தே.மு.தி.க பிரேமலதா போன்ற கந்து வட்டி பேர்வழிகள், இவர்கள் எப்படி மக்களுக்காக போராடமுடியும். எனவே தேர்தல் பாதை நமது அன்றாட பிரச்சினைகளை தீர்க்காது. மக்களை சீரழிக்கும் மதுக்கடைகளை மூடாது. கல்வி, மருத்துவத்துறையில் நடக்கும் வியாபாரத்தைத் தடுக்காது. முதலாளிகளின் லாபவெறியால் 10- ஆண்டுக்கு ஒருமுறை சரிந்துவிழும் முதலாளித்துவ பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது.
மரணப் படுக்கையில் கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நலிவடைந்த முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை வாரிவழங்கினால்தான் சாத்தியமென இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். இது எவ்வளவு பெரிய மோசடி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு, அழுகிநாறும் அரசுக்கட்டமைப்பை மக்கள் அதிகாரத்தின் மூலம் அப்புறப் படுத்திவிட்டு மக்களே ஆழ்வதன் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும்” என தனது உரையை முடித்தார். தோழரின் பேச்சை கேட்ட ஒரு போலீசார் தன்னை அறியாமல் கைதட்டி ரசித்தார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இறுதியாக ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தோழர் மணலிதாஸ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் இடைஇடையே போடப்பட்ட முழக்கங்கள், ம.க.இ.க.மையக் கலைக்குழுவின் புரட்சிகர பாடல்களும், தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் புரட்சிகர உணர்வை ஊட்டும் வகையில் அமைந்தது.
செய்தி:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி
கோவையில் மே தினப் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரிய போது “முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்ய மாலை வருகிறார். எனவே நீங்கள் காலையில் நடத்திக் கொள்ளுங்கள்; மாலையில் தர முடியாது” என்றனர். “ஜெயலலிதாவை வேண்டுமானால் வழக்கம் போல் வெயிலில் நடத்தச் சொல்லுங்கள். நாங்கள் மாலையில் தான் நடத்துவோம்” என உறுதிபடக் கூறிவிட்டோம்.
தொழிலாளர் வர்க்கப் பாரம்பரியம் தியாகம் நிரம்பிய கோவை மாநகரில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி போலிகள் வழக்கம் போல் மே தினத்தின் மகத்துவம் புரியாமல், அவர்களுடைய ஓட்டுப் பொறுக்கும் நிலைமைக்கு ஏற்ப விஜயகாந்தின் தொழிற்சங்கம், ம.தி.மு.க தொழிற்சங்கம் என இணைந்தும், மே தின ஊர்வலம் நடத்தினர். வெளிப்படையாக கம்யூனிஸ்ட் கட்சியிலும், தலைமறைவாக அ.தி.மு.க.விலும் அங்கம் வகிக்கின்ற தா.பாண்டியன் கலந்து கொண்டார். இது ஒன்றே போதும் அவர்கள் நடத்திய மே தினத்தின் அற்பத் தனத்தை புரிந்து கொள்ளலாம்.
நமது மே தின நிகழ்வு பாட்டாளி வர்க்கத்தின் எளிமை அதே சமயம் கம்பீரத்துடன் மாலை 5 மணிக்கு சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் முன்பிருந்து துவங்கியது பேரணி. மாவட்டச் செயலாளர் தோழர் திலீப் கொடியசைத்து துவக்கி வைத்தார். எஸ்.ஆ.ர்ஐ கிளை தோழர்கள் மோடி, பண்டாரு தத்தாத்ரேயா அருண் ஜெட்லி என முகமூடி அணிந்து காட்சி விளக்கத்துடன் பேரணியில் கலந்து கொண்டனர். ரோட்டில் போவோர் வருவோர் எல்லோரும் நின்று பார்க்கும் அளவுக்கு பேரணி மெதுவாக முன்னேறியது. ஜெயா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அடுத்த ஐந்து கிலோ மீட்டர் தள்ளி கொடீசியாவில் நடந்தாலும் காவல் துறை, உளவுத் துறையினருக்கு அதை விட முக்கியமானது பு.ஜ.தொ.மு நிகழ்ச்சி என முடிவு செய்து கலந்து கொண்டு சிறப்பாக உளவு வேலை செய்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பேரணி முடிவில் சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மோடி, ஜெயா ஆட்சியை அகற்றாவிட்டால் இந்தியாவில் தொழிலாளர், மாணவர் விவசாயி பெண்கள் என அனைவரும் தூக்கு போட்டு தற்கொலைதான் செய்ய வேண்டும் என காட்சி விளக்க நாடகம் சிறப்பாக நடைபெற்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தோழர் கோபிநாத் தனது தலைமையுரையில் விவசாயம் சிறுவணிகம் நெசவு என துறைவாரியாக மோடி அரசு தனது கொடுங்கரங்களை நீட்டி உழைக்கும் மக்களை பலியிடுவதை தடுத்து கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவதை வலியுறுத்தி பேசினார்.
பு.ஜ.தொ.மு நீலமலை செயலர் தோழர் பாலன் தனது கண்டன உரையில், “எட்டுமணி நேர வேலையை நாலு மணி நேர வேலையாக மாற்ற வேண்டும். புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவதன் மூலமே இதனைச் சாதிக்க முடியும். இதுவே நமது மே தினச் சூளுரை” என முழங்கினார்.
மண்டல சங்கத் தோழர் ஜெகநாதன் தனது கண்டன உரையில், “கோவை நகரின் காற்றில் ஈரப்பதம் உள்ளது. கற்றாழை தாவரத்தை வீட்டில் கட்டி தொங்க வைத்தாலே காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சியே அது வளரும். ஆனால் இப்போது காற்றில் ஈரப்பதம் இல்லை. கற்றாலழையை மண்ணில் நாட்டாலும் வளர மாட்டேங்குது. காரணம் மண்ணிலும் ஈரப்பதம் இல்லை மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ புராதானச் சின்னமாக அறிவித்து இருந்தது. இன்று அது அழியும் நிலையில் உள்ளது. பெண் போலீசார் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அரசுக் கட்டமைப்பு அழுகி நாறுவதன் வெளிப்பாடு இது. எனவே காவல்துறையினர் முதலில் தங்கள் துறையில் தற்கொலை நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு வந்து எங்களை கண்காணிக்கலாம்” என நகைச்சுவையாக பேசி முடித்தார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பு.ஜ.தொ.மு தோழர் விளவை இராமசாமி தனது கண்டன உரையில்,
“எட்டு மணி நேர வேலையை தங்கள் போராட்டத்தின் தங்கள் தியாகத்தின் மூலம் உலகுக்கு வென்று கொடுத்தவர்கள் மே தினத் தியாகிகள்.
எட்டு மணி நேர வேலை மட்டுமல்ல இந்த முழு உலகமும் உழைக்கும் மக்களுக்கே சொந்தமாக வேண்டும் என முதலாவது அகிலம் முடிவெடுத்து மே நாளை உலகத் தொழிலாளர் தினமாக எங்கெல்ஸ் அறிவித்தார்.
இதன்படி எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர தூக்கம், எட்டு மணி நேர ஓய்வு என இருந்ததை சர்வதேச அகிலம் எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர தூக்கம், எட்டு மணி நேர அரசியல் என மாற்றி அமைத்தது.
மே நாள் என்பது கொண்டாட்ட நாள் அல்ல மே தின சபதம் எடுக்க வேண்டும். மே தினச் சூளுரை எடுக்க வேண்டும். இது வரை முதலாளித்துவத்தை முறியடிக்க என்ன செய்தோம்; இனிமேல் என்ன செய்ய வேண்டும் என கணக்கு பார்த்துக் கொள்ள வேண்டிய நாள் மே நாள்.
மே நாளுக்கு ஜெயா, கருணாநிதி, ரோசையா, விஜயகாந்த் வாசன் என எல்லோரும் வாழ்த்து சொல்கிறார்கள். இது போலி கம்யூனிஸ்டுகள் ஓட்டுப் பொறுக்க போனதால் வந்த ஒழுக்கக் கேடு. நம்முடைய முதல் மே தின சூளுரை ஜெயாவை மே தின வாழ்த்து சொல்ல அனுமதிக்க கூடாது என்பதாக இருக்க வேண்டும்.
குற்றவாளி ஜெயா இப்போது கொடிசியாவில் காசு கொடுத்து கூட்டம் சேர்த்து பேசிக் கொண்டிருக்கிறார். பாசிஸ்டுகளுக்கு வரலாறு கொடுத்த தண்டனை என்ன? இத்தாலி பாசிஸ்டு முசோலினியை செம்படை தூக்கில் ஏற்றியது, செத்த பிறகு அவன் பிணத்தை எல்லோரும் காறித் துப்ப வேண்டும் என நாலைந்து நாள் தொங்க விட்டார்கள். வெயிலும் மழையிலும் இரவிலும் பகலிலும் தூக்கில் உயிர் போன பிறகும் தொங்கினான். இதனை கேள்விப்பட்ட ஹிட்லரும் நம்மையும் இதே போல்தான் தொங்க விடுவார்கள் என்று பயந்து தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். அனைத்து சர்வாதிகாரிகளுக்கும் இதே முடிவு தான் நேரிடும். ஜெ வுக்கு இதைத்தான் வரலாறு பரிந்துரைக்கும் இதனை உருவாக்க நாம் மே தினச் சூளுரை எடுக்க வேண்டும்.
வர்க்கப் போராட்டத்தை மட்டும் ஏற்றுக் கொள்பவர் மே தின சபதம் எடுக்கும் தகுதியை பெற முடியாது. தொழிலாளர் சம்பளம் போனஸ் வேண்டும் என்பவர் மே தின சூளுரை எடுக்கும் தகுதியை பெற முடியாது. வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனும் அளவுக்கு வளர்த்துச் செல்பவர் எவரோ அவரே உண்மையான கம்யூனிஸ்டு. கம்யூனிஸ்டுகளுக்கு தான் மே தின சூளுரை எடுக்கும் அருகதை உண்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய நமது பயணத்தை வேகப்படுத்த வேண்டும். இதுவே நமது மே தினச் சூளுரை.
இந்த மே தினச் சூளுரையே விவசாயம்-நெசவு-சிறுவணிகம் சிறு தொழில்களை அழித்து காண்ட்ராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம் என்பதுதான்.
இப்போது கோவை நகரில் வெயில் கொளுத்துகிறது கோவை நகரம் மட்டுமல்ல தமிழ்நாடே வெயிலில் தவித்துக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ எல்லா மாவட்டங்களிலும் வெயில் சதமடித்துவிட்டது இதற்கு என்ன காரணம்? தானாகவே நடந்து விட்டதா? இல்லை., இதற்கு கார்பரேட் முதலாளிகளே காரணம். ஆந்திராவில் 2015ஆம் ஆண்டு வெயில் கொடுமையால் ஆயிரம் பேருக்கு மேல் மாண்டார்கள். இந்த ஆண்டும் இதுவரை 140 பேர் மாண்டு போனார்கள். கரீம் நகரில் அடுப்பில்லாமல் தரையில் முட்டையை உடைத்து ஊற்றினால் வெப்பத்தில் ஆம்லெட் ஆக மாறுகிறது அதைப் போல கோவையையும் நாம் போராடா விட்டால் மாற்றி விடுவார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலையின் குழந்தைகள் நாம். மேற்கு தொடர்ச்சி மலைகள் ஈரமான காற்றை அனுப்பி கோவையை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆக்கியது மேற்கு தொடர்ச்சி மலைகள் சிறுவாணியை நமக்கு அனுப்பி நமது மாநகரத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது அது நொய்யலை அனுப்பி நமது புறநகர் பகுதியை தென்னை வாழைத் தோப்புகளாக்கியது பவானி நதியை அனுப்பி நம்மை பரவசப்படுத்தியது. குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்கிறது. நொய்யல் நதியின் கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றவாளிகள் யார்? உள்ளூர் முதலாளிகளும் கார்ப்பரேட் முதலாளிகளும் தான். நொய்யல் என்பது கோவையின் பெருமை நொய்யல் காவிரித் தாயின் பெரிய மகள் நல்லது கெட்டதுக்கு பேரூர் போனால் 20 வருடங்களுக்கு முன்னாள் நொய்யல் நாணல் புதர்களினூடாக நாணி நடந்து வருவாள். ஒரு சொம்பில் துணியால் தலைப்பாகை கட்டி மொண்டு குடித்தால் தொண்டைக் குழியில் தேனாக இறங்குவாள். இன்று., நொய்யல் அங்கே அய்யோ நதியை பேரூரில் காண முடியவில்லை. நொய்யல் ஆற்றங்கரையில் இறந்தவர்களுக்கு பார்ப்பனர்கள் காசு வாங்கி திதி கொடுப்பார்கள். பார்ப்பனர்கள் பேரூரில் சங்கமே அமைத்திருந்தார்கள். ஆக கடைசியில் நொய்யலுக்கும் திதி கொடுத்துவிட்டு வேறுபக்கம் போய் விட்டார்கள். நதியை கொன்றவனை நாம் நாசம் செய்ய வேண்டும். இதுவே மே தினச் சூளுரை.
பவானி நதியில் சாயக்கழிவு நீரை கலந்தவன், விஸ்கோஸ் கழிவு நீரை கலந்தவன், மேற்கு தொடர்ச்சி மாலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாங்கி தியானலிங்கம் அமைத்து காட்டை அழிப்பவன் யார்? ஜக்கி வாசுதேவ். ஜக்கி வாசுதேவுக்கு சொம்பு தூக்குவது யார் ? கோவையின் எழுத்தாளர்கள், முதலாளிகள் தாமிரா ரிசார்ட் உரிமையாளர் சிறுதுளி வனிதா மோகன், சின்மயானந்தா மிஷன், காருண்யா தினகரன் இந்த கூட்டம் தான் மேற்கு தொடர்ச்சி மலையை அழித்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களை விரட்டி அடிக்க வேண்டும். இன்றே இப்போதே செய்ய வேண்டும். இல்லையென்றால் நொய்யலை அழித்ததை போல பவானியையும் அழித்து விடுவார்கள் சிறுவாணியையும் இல்லாமல் செய்து விடுவார்கள். சிறுவாணி இல்லாத கோவையை கற்பனை செய்து பாருங்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு இல்லாத, ஈரக்காற்று இல்லாத கோவையை கற்பனை செய்து பாருங்கள் இவை எல்லாம் அழிந்து விட்டால் கரீம் நகரில் நடப்பது போல் கோவை வீதிகளிலும் ஆம்லெட்தான் போட வேண்டும்.
இவையெல்லாம் நடக்காது. கூடுதலாக பயமுறுத்துகிறார் என சிலர் நினைக்கலாம். அவர்களைப் பார்த்து நாம் கேட்கிறோம் தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் நூற்றுக்கணக்கான மில்கள் மூடப்படும் என்று யாராவது நினைத்தீர்களா? ஆனால் மூடப்பட்டு விட்டதே! தலையில் பஞ்சோடும், கையில் வெற்றிலை செல்லத்தொடும் பஞ்சாலைகளில் வேலை முடித்து கோவை நகர வீதிகளை அலங்கரித்த நம் தாய்மார்கள் எங்கே? ஆஃப் நைட், ஃபுல் நைட் பகல் என பஞ்சாலைகளில் வேலை முடித்து அல்லும் பகலும் நடமாடி, டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசி கோவை நகரத்தை தூங்கா நகரமாக்கிய பஞ்சாலைத் தொழிலாளர்கள் எங்கே? இதுவெல்லாம் நடக்கும் என நினைத்தோமா? ஆனால் நடந்து விட்டதே! அது போலத்தான் இனியும் அமைதியாக இருந்தால் போராடாமல் இருந்தால் நகரை நாசமாக்கி விடுவார்கள். நமது முன்னோர்கள், நமது பெற்றோர் நமக்கு மலையையும் நதியையும் காப்பாற்றி நமக்குக் கொடுத்து விட்டு போனார்கள். நாம் நம் குழந்தைகளுக்கு என்ன கொடுக்கப் போகிறோம். சிறுவாணி இல்லாத கோவையா தரப்போகிறோம். எனவே இன்றே இப்போதே போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளையும் கார்ப்பரேட் சாமியார்களையும் அடித்து விரட்ட வேண்டும் இதுவே நமது மே தினச் சூளுரை
இந்திய வனச் சட்டத்தை திருத்தி 10 கோடி ஹெக்டேர் நிலத்தை ரிசர்வ் பாரஸ்டை பராமரிப்புக்கு தனியாருக்கு கொடுக்கப் போகிறான். இயற்கையையும் மனித குலைத்தையும் ஒரு சேர அழிக்கின்ற கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டத்தை இந்த மண்ணிலிருந்தே காலி செய்ய வேண்டும். பேஸ்புக், டிவிட்டர் பின்னூட்டம் நிலைத் தகவல் மூலம் அல்ல. களமாடி சிறை சென்று போராட வேண்டும்.
மத்திய அரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை விற்க மோடி அரசு திட்டமிடுகிறது. தமிழ் இந்து ஏப்.25 இல் செய்தி வந்துள்ளது. 77 பொதுத் துறை நிறுவனங்கள் 27,360 கோடி நட்டத்தில் இயங்குகிறது இதில் கோவையில் இயங்கும் 5 என்.டி.சி மில்களும் அடக்கம்.
விஜய் மல்லையா என்ற ஒருவனின் வாராக்கடன் சுமார் 9,000 கோடி ரூபாய் அம்பானி வைத்திருப்பதோ 40,000 கோடி ரூபாயை நெருங்குகிறது. 2015 மார்ச் வரை 2.67 இலட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் மத்திய அரசுக்கு உள்ளது. (தமிழ் இந்து – செப்.28-15) இதை வசூல் பண்ண துப்பில்லை 27,300 கோடி ரூபாய் நட்டத்துக்காக பொதுத் துறையை விற்பது என்.டி.சி.யை மூடுவது பச்சை அயோக்கியத்தனம்.
ஆக மக்களுடைய, தொழிலாளர்களுடைய பணத்தை வாரியாக பெற்று முதலாளிகளுக்கு கடனாக கொடுத்து விட்டு அதனை வசூலிக்க துப்புக் கேட்ட மோடி கும்பல் பொதுத் துறையை விற்கிறான் இதில் யார் தேசத் துரோகி ? பொதுத் துறையை விற்கிற புரோக்கர் வேலைக்கு உன்னை எதற்கு நாங்கள் ஓட்டு போட்டு பிரதமர் முதலமைச்சர் என்று ஆக்கணும்.
நட்டம் என்று சொல்லி இவர்கள் இதுவரை இவ்த்த விற்கப்போற பொதுத் துறை நிறுவனங்களை இவ்வளவு பெரிய இந்திய அரசை விட திறம்பட நிர்வாகம் பண்ணி ஒரு தனியார் முதலாளி லாபம் கொண்டு வர முடியும் என்றால் என்ன அர்த்தம் ?
இத்தனை அறிவாளிகள், அருண் ஜெட்லி, ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை வைத்து அரசாளுகிற உன்னை விட ஒரு தனியார் சிறப்பாக செயல்பட முடியும் என்றால் என்ன பொருள் ?
அரசு மருத்துவ மனையை தனியாருக்கு கொடுக்கிறாய்; அரசுக் கல்லூரியை தனியாருக்குக் கொடுக்கிறாய்; உன்னோட அரசை விட ஒரு தனியார் லாபகரமாக செயல்படுத்த முடியுது என்றால் என்ன பொருள் ?
ஆக, எந்த ஒரு நிர்வாகத்தையும் உன்னை விட உன் அரசை விட தனியார் சிறப்பாக செய்ய முடியுமென்றால் உன்னை எதுக்கு நாங்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். அம்பானிக்கும் அதானிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லி விட வேண்டியது தானே?
உன்னாலே முடியலை என்று நீயே சொல்லிவிட்டப் பின்பு ஒதுங்கிக் கொள்வதுதான் உனக்கு மரியாதை, இல்லையென்றால் ஒதுங்க வைக்கும் தொழிலாளி வர்க்கம். அதற்கு ஒரு சின்ன டீஸர் தான் பெங்களூரு தொழிலாளர் போராட்டம். தொழிலாளர்கள் வர மாட்டார்கள் என்று எவனாவது சொன்னால் பளார் என்று அவன் முகத்தில் அடிக்க வேண்டும். பெங்களூர் கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் எப்படி போராட வந்தார்கள்; போராடி வெற்றி கண்டார்கள். உனக்கும் எனக்குமான வருங்கால வைப்பு நிதியை களவாட சட்டம் போட்ட மோடி கூட்டத்தை சட்டையை பிடித்து உலுக்கினார்கள். இதற்கு பதில் சொல் என்று அவநம்பிக்கை வாதிகளைக் திருப்பி கேட்க வேண்டும்.
பெங்களூர் தொழிலாளர் போராட்டம், அதுவும் பெண்கள் நடத்திய போராட்டம். இந்திய தொழிற் சங்க வரலாறு இருண்டு கிடந்தது. அதில் ஒளிக்கீற்றாக உதயமாகி உள்ளது. இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மூணார் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆனைகட்டி போராட்டங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
அது போல நாமும் திரண்டு போராடினால் நம் உரிமைகளை பெற முடியும். கார்ப்பரேட் முதலாளிகளை வீழ்த்த முடியும்.
1887-ல் தூக்கில் ஏற்றப்பட்ட மே தினத் தியாகிகளில் ஒருவரான தோழர் அகஸ்டஸ் ஸ்பைஸ் தூக்கு மேடையில் நின்று முழங்கினார்.,
“இன்று நீங்கள் எங்கள் கழுத்தை நெரிக்கலாம் குரலை முடக்கலாம்; ஆனால், எங்கள் மவுனம் ஆற்றல் மிகுந்த சக்தியாக வெளிப்படும் காலம் வரும்”
தோழர் அகஸ்டஸ், உங்கள் மவுனத்தை இங்கே சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் மூலம் மொழி பெயர்க்கிறோம். ஆற்றல் மிக்க சக்தியாக உருமாறி இயற்கையை மனித குலத்தையும் நாசம் செய்கிற முதலாளித்துவத்தை அழிப்போம் என்று சூளுரைக்கிறோம்.”
என்று முடித்தார்.
இறுதியாக பு.ஜ.தொ.மு கோவை மாவட்ட இணைச் செயலர் தோழர் நித்தியானந்தனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை
கார்ப்பரேட் காட்டாட்சியை ஒழிக்க மே நாளில் சூளுரைப்போம் !
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து மதுரை யா.ஒத்தக்கடையில் மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
தேர்தலை காரணம் காட்டி காவல் துறை பேரணிக்கு மட்டும் அனுமதி கொடுத்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை.
மே நாள் அன்று, காலை 11 மணியளவில் கொளுத்தும் வெய்யிலை பொருட்படுத்தாமல் விண்ணதிரும் முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்டது தொழிலாளர் வர்க்கப் படை. பேரணிக்கு பு.ஜ.தொ.மு தோழர் பிரகாஷ் தலைமை தாங்கினார். வி.வி.மு தோழர் போஸ் பேரணியை துவக்கி வைத்தார்.
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் உணர்வுபூர்வமாக பேரணியில் பங்கேற்றனர். தோற்று, திவாலாகி அழுகி நாறும் இந்த அரசு கட்டமைப்பு முற்றிலும் மக்கள் விரோதமாக மாறிவிட்டதையும், தேர்தல் ஒரு பித்தலாட்டம் என்பதையும் மக்கள் அதிகார அலகுகளை உருவாக்குவதே மாற்று என்பதையும் ஒத்தக்கடை மக்களுக்கு எளிமையாகவும், எழுச்சிகரமாகவும் புரிய வைத்தன பேரணி முழக்கங்கள். அப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது.
பேரணி முடிவில் ஆர்ப்பாட்டம் அனுமதி இன்றி நடத்தப்பட்டது. ம.க.இ.க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் சிறப்புரை ஆற்றினார். 131 ஆண்டுகளுக்கு முன்னர் சிகாகோ தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி, உயிர் கொடுத்து பெற்றுத்தந்த உரிமைகளை, இன்று கார்ப்பரேட் கம்பெனிகளும், அவர்களின் கூஜா மோடியும் எப்படி காலில் போட்டு மிதிக்கின்றனர் என்பதையும், விளக்கினார். இனியும் வேடிக்கை பார்க்க முடியாது, இது போராடும் தருணம் என்பதை உணர்த்தும் வகையில் எழுச்சி உரையாற்றினார். பு.ஜ.தொ.மு தோழர் போஸ் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மதுரை.
2011 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட இச்சிறு வெளியீடு, தேர்தல் புறக்கணிப்பு குறித்து எளிய மொழியில் மக்களிடம் விளக்குகிறது. கட்சிகள், தலைவர்கள், இலவசங்கள், முதலாளிகள், அரசுகள், மட்டுமல்ல இங்கே மக்களும் கூட விமரிசிக்கப்படுகிறார்கள். நீண்ட கட்டுரை, பொறுமையாக படியுங்கள்.
-வினவு
இது 13 வது சட்டமன்றத் தேர்தல். மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்களா? ஒரு முறை ஏமாறுவது மனிதனுக்கு இயல்பு; இரண்டு முறை ஏமாறுபவன் ஏமாளி; மூன்று முறை ஏமாந்தால் அவனை முட்டாள் என்றும் சொல்லலாம்.12 முறை ஏமாற்றப் பட்டபிறகும் சொரணையில்லாமல் பல்லிளித்துக் கொண்டு ஓட்டுப் போடச் செல்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?
அப்பன், பாட்டன், கொள்ளுப்பாட்டன் என்று மூன்று தலைமுறைகள் ஏமாந்த பிறகும் புத்தி வராமல்,”அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே” என்ற சத்தம் கேட்டவுடனே நான்காவது தலைமுறையும் ஓடுகிறது; மசால் வடைக்கு மயங்கும் எலியைப்போல வாக்குச்சாவடியின் முன்னால் வரிசையில் நிற்கிறது. இந்த மானக்கேட்டை யாரிடம் சொல்லி அழுவது?
தேர்தல் என்ற அறிவிப்பு வந்தவுடன் கரண்டு கம்பத்தைக் கண்டால் காலைத்தூக்கும் தெருநாயைப் போல, தானாக வந்து ஓட்டுப் போடுவான் என்று நம்மைக் கேவலமாக நினைக் கிறார்களே ஓட்டுப் பொறுக்கிகள், இந்த அவமானத்திற்கு எப்போதுதான் முடிவு கட்டுவது?
பழனிக்கும் திருப்பதிக்கும் மொட்டை போடும் பக்தன் கூட தன்னுடைய நம்பிக்கைக்கு ஒரு விளக்கம் சொல்கிறான். “இந்தச் சாமிக்கு நேர்ந்து கொண்டால் இது நடக்கும்” என்று நம்பவும் செய்கிறான். ஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் ‘சாவடியில்’தவறாமல் மொட்டை போட்டுக் கொள்ளும் வாக்காளனுக்கோ இந்தத் தேர்தலின் மீது அப்படியொரு நம்பிக்கை கூடக் கிடையாது.
“எவன் வந்தாலும் விலைவாசி குறையப் போவதில்லை, விவசாயம் விளங்கப் போவதில்லை, வேலை கிடைக்கப் போவதில்லை, லஞ்சம் ஒழியப் போவதில்லை, ஊழல் குறையப் போவதில்லை” என்று ஆணித்தரமாகப் பேசுகிறான். “அப்புறம் எதற்காக ஓட்டுப் போடுகிறாய்?” என்று கேட்டால், “வேறென்ன செய்ய முடியும்?” என்று எதிர்க் கேள்வி கேட்கிறான். வாக்குரி மையை ‘வேஸ்ட்’ ஆக்காமல் யாராவது ஒரு திருடனுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட வேண்டுமென்று துடிக்கிறான்.
“ஓட்டுப் போடவில்லையென்றால் செத்ததுக்குச் சமமாமே” என்று பாமரத்தனமாகச் சிலர்அஞ்சுகிறார்கள். இது உண்மை யென்றால் மன்மோகன் சிங் செத்த இடத்தில் புல் முளைத்திருக்க வேண்டும். 3 தேர்தலாக ஓட்டுப்போடாத மன்மோகன்சிங் தான் இந்த நாட்டின் பிரதமர். தேர்தல் ஒரு நாடகம் என்றும் எவன் ஜெயித்தாலும் அந்த ஆட்சி நம்ம ஆட்சிதான் என்றும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும் டாடா பிர்லா போன்ற பெரு முதலாளிகள் முதல் உள்ளூர்ப் பணக்காரர்கள் வரை யாரும் எப்போதும் ஓட்டுப் போடுவதில்லை. கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று இந்த ‘ஜனநாயகத்தை’க் காப்பாற்றுவது பாமர மக்கள்தான்.
ஏனென்றால், “தேர்தலைப் புறக்கணித்து விட்டால் இருக்கின்ற ஒரே ஒரு பிடியையும் நாம் இழந்துவிடுவோம். ஜெயலலிதா சரியில்லை என்றால் கருணாநிதியைக் கொண்டு வரலாம், சோனியா சரியில்லை என்றால் வாஜ்பாயியைக் கொண்டு வரலாம். புறக்கணிப்பதன் மூலம் என்ன சாதித்து விடமுடியும்? வேறென்ன வழி இருக்கிறது?”என்று எண்ணுகிறான் வாக்காளன்.
தேர்தல் தோல்வி என்பது ஓட்டுப் பொறுக்கிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை அல்ல, இன்று தோற்றாலும் நாளை நாம்தான் என்று ஐந்தாண்டுகள் அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். ஆட்சிக்காலத்தில் அடித்த கொள்ளையை அனுபவிக்கிறார்கள். தத்தம் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் அரியணை ஏறுகிறார்கள்.
“மக்களுக்குத்தான் இதை விட்டால் வேறு வழியில்லை” என்ற சலிப்பு! ஓட்டுக் கட்சிகளுக்கோ “நம்மை விட்டால் மக்களுக்கு வேறு நாதி இல்லை” என்ற இறுமாப்பு!
தேர்தலைப் புறக்கணிக்க மக்கள் தயங்கலாம். ஆனால் மக்களின் இந்தக் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டுதான் கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை மிகவும் அலட்சியமாகப் புறக்கணித்து வருகிறது தேர்தல் அரசியல்.
தொடர்ந்து நம்மைப் புறக்கணித்து வரும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலை நாம் ஏன் புறக்கணிக்க மறுக்கிறோம் என்பதுதான் எங்களது கேள்வி.
“கலர் டிவி, கிலோ 2 ரூபாய்க்கு அரிசி, 2 ஏக்கர் நிலம்” என்று வாக்குறுதி தருகிறார் கருணாநிதி. “இலவச சைக்கிள் கொடுத்தேன், பாடநூல் கொடுத்தேன், வெள்ள நிவாரணம் கொடுத்தேன், கோயிலில் அன்னதானம் போட்டேன், இலவசத் திருமணம் நடத்திவைத்தேன்” என்று சாதனைப் பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா. “மாதம் 15 கிலோ அரிசி இலவசமாகத் தருகிறேன், அதையும் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறேன், கல்யாணம் பண்ணி வைத்து பிள்ளை பெத்தால் அதற்கும் பணம் கொடுக்கிறேன்” என்கிறார் நடிகர் விஜயகாந்த்.
இந்த வாக்குறுதிகளைப் படிப்பவர்கள், தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் பிச்சைக்காரர்கள் என்ற முடிவுக்குத்தான் வர முடியும்.இப்படி எல்லாவற்றையும் இலவசமாக அள்ளி அள்ளிக் கொடுத்தால் அரசாங்க கஜானாவே காலியாகி விடுமென்று ஆத்திரம் பொங்க பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள் திமிர் பிடித்த மேட்டுக்குடி அறிவாளிகள்.
யாருடைய பணத்திலிருந்து நமக்கு இந்த ‘இலவசங்களை’ வழங்குகிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்? அரசாங்க கஜானாவில் சேரும் வரிப்பணத்தில் ஆகப்பெரும்பகுதி ஏழை- நடுத்தர மக்கள் கொடுக்கும் மறைமுக, நேர்முக வரிப்பணம்தான். ஏழை களின் வரிப்பணத்திலிருந்து ஏழைகளுக்குச் செலவிடுவதை ‘இலவசம்’ என்று எப்படி அழைக்க முடியும்?
இலவச சைக்கிளுக்கு 83 கோடி, பாடநூலுக்கு 113 கோடி, சத்துணவுக்கு 850 கோடி, உழவர் பாதுகாப்புத் திட்டத்துக்கு 300 கோடி – என்று பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா.
போர்டு, ஹ¥ண்டாய், கோகோ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலமும், தண்ணீரும், மின்சாரமும், சாலை வசதிகளும் செய்து கொடுத்து அவர்களுக்கு வரிச் சலுகை களையும் வாரி வழங்கியிருக்கிறது ஜெ அரசு. மக்களுடைய வரிப்பணத்திலிருந்து பன்னாட்டு முதலாளிகள் ஒவ்வொரு வருக்கும் எத்தனை ஆயிரம் கோடி சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற இரகசியத்தை ஜெயலலிதா வெளியிடுவாரா? ‘முதலாளிகளுக்கான இலவசத் திட்டங்கள்’ என்று இவை அழைக்கப் படுவதில்லையே, ஏன்?
2004-05 ஆம் ஆண்டில் மட்டும் பன்னாட்டு முதலாளிகள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு ப.சிதம்பரம் வழங்கி யுள்ள வரித்தள்ளுபடி 1,58,661 கோடி ரூபாய் என்கிறது முதலாளி வர்க்கத்தின் பத்திரிகையான பிசினஸ் ஸ்டாண்டர்ட். ஆனால் இதே ஆண்டில் நாடு முழுவதும் உள்ள மக்களின் ரேசன் அரிசிக்காக சிதம்பரம் வழங்கிய மானியம் ரூ.25,000 கோடி மட்டும்தான். யார் வழங்கும் மானியத்தில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறதா?
ஆண்டொன்றுக்கு டாஸ்மாக்கின் மொத்த விற்பனை 24,000 கோடி என்கிறார் ஜெயலலிதா. இதில் அரசுக்குக் கிடைக்கும் ஆண்டு வருவாய் சுமார் 5000 கோடியாம். என்றால், சசிகலாவின் சாராயக் கம்பெனி அடித்த லாபம் எத்தனை ஆயிரம் கோடி? சாராயத்தில் வரவு 5000 கோடி, சத்துணவுக்குச் செலவு 850 கோடி. இந்த அயோக்கியத் தனத்துக்குப் பெயர் இலவசத் திட்டமாம்!
தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகிக் கொண்டிருக்கிறது என்றும் இதைச் சாதித்தது நான்தான் என்றும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இந்தப் பெருமைக்குப் போட்டி போடுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்கும் இத்தகைய ‘இலவச’த் திட்டங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதுதான் தமிழகத்தின் முன்னேற்றமா?
கிலோ 2 ரூபாய்க்குக் கிடைக்கும் புழுத்த அரிசியில்தான் கஞ்சி குடிக்க முடியும் என்ற அளவிற்கு மோசமான வறுமை நிலையில் தமிழ்நாட்டின் பல கோடி மக்கள் வைக்கப்பட்டிருப் பது ஏன்? நிலமில்லாத கூலி விவசாயி மட்டுமல்ல, தன்னுடைய நிலத்தில் நெல் பயிரிடும் விவசாயி கூட சொந்த நிலத்தில் விளைந்ததை வந்த விலைக்கு விற்று விட்டு, இந்த 2 ரூபாய் புழுத்த அரிசியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? எதை நட்டாலும் விவசாயம் விளங்காத போது கருணாநிதி கொடுக்கவிருக்கும் புறம்போக்கு நிலத்தில் யாரை நடுவது?
பெற்ற பிள்ளைக்குத் திருமணம் செய்யவும், கட்டிய மனைவிக்கு சேலை எடுத்துக் கொடுக்கவும், அவளுக்குப் பிரசவம் பார்க்கவும் விஜயகாந்த் பணம் கொடுக்க வேண்டிய நிலைமைதான் 12 தேர்தல்களில் நாம் கண்ட முன்னேற்றமா?
2000 ரூபாய் காசுக்காக சென்னை நகரில் 50 பேர் மிதிபட்டுச் செத்திருக்கிறார்களே, மக்களை இந்த அவலமான வாழ்க்கை நிலைக்கு விரட்டியது யார்?
ஜெயலலிதா கூட்டத்துக்குப் போனால் சோறு போட்டு 100 ரூபாய், ஸ்டாலின் கூட்டத்துக்குப் போனால் சேலை, இன்னொரு மந்திரி கூட்டத்துக்குப் போனால் 2 கிலோ அரிசி, புரட்சித் தலைவி பிறந்த நாளுக்கு அன்னதானம்… என்று எட்டுத்திக்கும் பிச்சை யெடுத்துத் திரிய வேண்டிய மானங்கெட்ட நிலைமை மக்களுக்கு ஏன் ஏற்பட்டது?
இப்படிப்பட்ட கேள்விகளை ஓட்டுப்பொறுக்கிகள் யாரும் எழுப்புவதில்லை. இலவச டிவி கொடுக்க முடியுமா முடியாதா, 2 ரூபாய் அரிசி போட முடியுமா முடியாதா என்று அனல் பறக்கும் விவாதம் நடத்துகிறார்கள். பண்ணையார்களிடம் பொங்கல் இனாம் வாங்கப்போன பண்ணையாட்களைப் போல மக்களைத் தங்கள் முன்னால் கையேந்தி நிற்க வைக்கிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கிகள்.
தாம் சொந்தமாகச் சம்பாதித்த காசிலிருந்து பழனி படிக்கட்டில் காத்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்கிறார்கள் பக்தர்கள். ஆனால் ஓட்டுப்பொறுக்கிகளோ, நம்மைக் கொள்ளையடித்த பணத்திற்குச் சில்லறை மாற்றி 50, 100, 500 என்று நமக்கே விட்டெறிகிறார்கள். இவர்களுக்கு எப்படி வந்தது இந்தப் பணம்?
அரசாங்க காண்டிராக்டில் அடித்த கொள்ளை, காடுகளையும் மலைகளையும் வெட்டி விற்ற காசு, புறம்போக்குகளை விற்று ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றிக் குவித்த பணம், ரேசன் அரிசி,வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம்,வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் சுருட்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்க அதிகாரிகள் வாங்கும் லஞ்சப்பணத்தில் வசூலிக்கும் கப்பம், சட்டவிரோத சமூக விரோதத் தொழில்கள், போலீசுடன் கூட்டு சேர்ந்து நடத்தும் கட்டைப் பஞ்சாயத்து கலெக்சன், இவையனைத்துக்கும் மேலாக பன்னாட்டு முதலாளிகளிடம் நாட்டைக் கூட்டிக் கொடுத்து வாங்கிய கமிசன்…….. என்று இவர்கள் சூறையாடிய பொதுச் சொத்துதான் தொகுதிக்கு 4 கோடி 5 கோடி என ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
முன்னர் முதலாளிகளிடம் லஞ்சம் வாங்கித் தின்று கொண்டிருந்த ஓட்டுப்பொறுக்கிகள், தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய பின்னர் தாங்களே முதலாளிகளாக மாறத் தொடங்கிவிட்டார்கள். கந்து வட்டிக் காரர்கள், காண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முதலாளிகள், சினிமா தயாரிப்பாளர்கள், தண்ணீர் வியாபாரிகள், கிரானைட் அதிபர்கள், பஸ் கம்பெனி அதிபர்கள், சுயநிதிக் கல்லூரி முதலாளிகள், பன்னாட்டுக் கம்பெனிகளின் ஏஜெண்டுகள் .. என இந்த ஓட்டுப் பொறுக்கித் தொழிலதிபர் களின் கொள்ளை லாபம் பன்மடங்கு அதிகரித்து விட்டது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத் தன்னுடைய சாராயக் கம்பெனி லாபத்திலிருந்து, ஜெயா-சசி கும்பல் ஓட்டுக்கு 1000 ரூபாய் கூடக் கொடுக்கும்; ஒரே ஆண்டில் போட்ட காசையும் எடுக்கும். தன்னால் போண்டியாக்கப்பட்ட ஏழை மக்களையே தனக்கு விசுவாசமான ஓட்டு வங்கியாக உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, அவர்களைத் தன்னுடைய கையேந்திகளாகத் திட்ட மிட்டே மாற்றி வருகிறது ஜெயா – சசி கும்பல். கருணாநிதியோ ஏழைகளை அரசாங்கக் கையேந்திகளாக ஆக்கும் திட்டங்களை அடுக்கடுக்காக அறிவிக்கிறார்.
தள்ளாத வயதிலும் கடுமையாக உழைத்துக் கஞ்சி குடிக்கும் மானமுள்ள உழைக்கும் மக்கள் பிச்சைக்காரர்களாக நடத்தப் படுகிறார்கள். சூடு, சொரணை, மான ரோசமில்லாமல் பதவிக்காக எவன் காலையும் பிடிக்கத் தயங்காத இழிபிறவிகளும், அடுத்தவனை ஏமாற்றியே உடம்பை வளர்த்த சோம்பேறிகளும், பொதுச் சொத்தை வளைக்கவும் சொந்த மனைவியை விலை பேசவும் தயங்காத கயவர்களும் “எம்.எல்.ஏ காட்டன், மினிஸ்டர் காட்டன்’ சட்டைகளுக்குள் புகுந்துகொண்டு மினுக்கித் திரிகிறார்கள்.
கேவலம் ஒரு டீயைக் கூட அடுத்தவன் காசில் மட்டுமே குடித்துப் பழகிய இந்த அயோக்கியர்கள் மக்களுக்கு இலவசத் திட்டம் அறிவிக்கிறார்கள்; ஓட்டுக்கு 200, 300 பணமும் கொடுக்கிறார்கள். இவர்களிடம் கையேந்தி நிற்பதும், இப்படிப்பட்ட தேர்தலில் வாக்களிப்பதும் நம்மை நாமே பிச்சைக்காரர்கள் என்று ஒப்புக்கொள்வதற்குச் சமமல்லவா என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி.
ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம், விஜயகாந்த் சுனாமி சுற்றுப்பயணம்… என்று தமிழ்நாடு முழுவதும் புழுதி பறந்து கொண்டிருக்கிறது. ‘எனக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களைச் சந்திக்க வரும் தலைவர்களின் அணிவகுப்பால் எல்லாச் சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இந்தச் ‘சாலை மறியலுக்கு’ போலீசு காவல் நிற்கிறது. இக்காட்சிகளைப் புகைப்படம் எடுத்து பக்கம் பக்கமாகப் பிரசுரிக்கின்றன பத்திரிக்கைகள்.
“எங்களுக்கு குடிக்கத் தண்ணீர் வேண்டும், பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டும், பள்ளிக்கூடம் வேண்டும், சாலை வேண்டும், பேருந்து விடவேண்டும், வெள்ள நிவாரணம் வேண்டும், வறட்சி நிவாரணம் வேண்டும்” – என்று மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய சாலை மறியல் போராட்டங்கள் கொஞ்சமா?
சாலை மறியல் என்றவுடனே போலீசு வரும், பிறகு அதிரடிப்படை வரும், அதன்பின் ஆயுதப்படை வரும். இவை எதற்கும் பயப்படாமல் மக்கள் துணிந்து நின்றால் கடைசியாக தாசில்தார் வருவார். கலைந்து போகச்சொல்வார். கொளுத்தும் வெயிலில் பிள்ளை குட்டிகளோடு தெருவில் உட்கார்ந்திருக்கும் மக்களைச் சந்திக்க மந்திரி, எம்.எல்.ஏ, வட்டம், குட்டம் எவனும் எப்போதும் வந்ததில்லை. அவர்களுடைய கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்டதுமில்லை. ஆளும் கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் எனப்படுவோரின் யோக்கியதையும் இதுதான்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களைக் கொஞ்சம் நினைவு படுத்திப் பாருங்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் டிசம்பர் 2001- இலேயே பேருந்துக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப் பட்டது. மாணவர் பஸ் பாஸ் ரத்து, அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்குக் கட்டணம், நோயாளியைப் பார்க்கப் போகும் பார்வையாளர்களுக்குக் கட்டணம், ரேசன் அரிசி விலை ஏற்றம், அரிசி வாங்க கூப்பன் … எல்லாம் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டன. தமிழகமெங்கும் மக்கள் எதிர்த்துப் போராடினார்கள்.
அரசுக் கல்லூரிகள் பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப் பட்டன. கல்லூரிகளை லாபமீட்டும் கம்பெனிகளாக்கி ஏழை மாணவர்களின் கல்வியைப் பறிப்பதற்கெதிராக மாணவர்கள் போராடினார்கள்.
நீதிமன்றக் கட்டணம் 100 மடங்கு உயர்த்தப் பட்டதை எதிர்த்து வழக்குரைஞர்கள் போராடினார்கள். மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க 25 ரூபாய் கட்டணம், நகர்ப்புற நடுத்தர மக்களைக் கொள்ளையடிக்க கட்டிட வரன்முறைச் சட்டம்… என ஆட்சிக்கு வந்த எட்டே மாதத்தில் எல்லா மக்கட்பிரிவினர் மீதும் தாக்குதல் தொடுத்தது ஜெயா ஆட்சி.
காவிரியில் தண்ணீரில்லாததால் விவசாயிகள் எலிக்கறி தின்றார்கள். நெற்களஞ்சியமாம் தஞ்சையில் பட்டினிச்சாவு தொடங்கியது. 22 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார் கள். ஜெ அரசோ விவசாயிகளுக்கான கூட்டுறவுக் கடனையும் கடன் தள்ளுபடியையும் நிறுத்தியது. அரசாங்க நெல் கொள்முதலையும் குறைத்தது.
கிணறு தோண்டித் தோண்டி தண்ணீரைக் காணாமல் திவாலான ஒரு விவசாயியின் குடும்பம் கரண்டு கம்பியை உடலில் சுற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது. ஜெயலலிதா பம்பு செட்டுக்கு மீட்டர் போடப்போவதாக அறிவித்தார். அதே நேரத்தில் தனியார் தண்ணீர் வியாபாரம் ஊக்குவிக்கப்பட்டது. தாமிரவருணி கோகோ கோலாவிற்கு விலை பேசப்பட்டது.
கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்கள் குறைக்கப்பட்டதால் நசிந்து போன நெசவாளர்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது ஜெ அரசு. இலவச வேட்டி சேலை கொள்முதலை நிறுத்தியதால் தேங்கிய துணிகளை விற்க முடியாமல் பல லட்சம் நெசவாளர்கள் பட்டினிச் சாவுக்கும் தற்கொலைக்கும் தள்ளப் பட்டனர். கஞ்சித் தொட்டியின் முன்னால் கையேந்தி நின்ற அந்த நெசவாளர்கள் மீதும் தடியடி நடத்தியது ஜெ அரசு.
18,000 கிராமப்புறத் தொடக்கப் பள்ளிகளில் 5 ஆசிரியர்களை 2 ஆகக் குறைத்தது ஜெ அரசு. 1500 பள்ளிகளுக்கு ஒரே ஆசிரியர். நூற்றுக்கணக்கான பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. ஆசிரியர் களும் பேராசிரியர்களும் இனி காண்டிராக்டு முறையில்தான் நியமிக்கப் படுவார்களென்று பகிரங்கமாக அறிவித்தது அரசு.
இழந்த உரிமைகளை மீட்பதற்காகப் போராடிய போக்குவரத்துத் தொழிலாளர்கள் 27,000 பேர் சிறையிலடைக்கப் பட்டார்கள். அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டமோ இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. 2 லட்சம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். 50-க்கும் மேற்பட்டோர் மாரடைப் பால் இறந்தார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் நலப் பணியாளர்களும் சாலைப் பணியாளர்களும் ஒரே நொடியில் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். 64 சாலைப் பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
மதமாற்றத் தடைச்சட்டம், கிடா வெட்டுத் தடைச்சட்டம் என பார்ப்பன பாசிச சட்டங்கள் திணிக்கப்பட்டன. கிடா வெட்டி சாமி கும்பிடப் போன பக்தர்களும் பூசாரிகளும் கைது செய்யப் பட்டார்கள். கிராமப்புறக் கோயில்கள் போலீசின் புறக்காவல் நிலையங்களாகவே மாற்றப்பட்டன.
தலித் மக்களின் வாயில் மலத்தைத் திணிப்பது, சிறுநீர் கழிப்பது, பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தல்களை சாதி வெறியர்கள் முடக்குவது… என தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன.
அதிரடிப்படையின் அக்கிரமங்கள், லாக் அப் கொலைகள், போலி மோதல் கொலைகள், ஏட்டு முதல் எஸ்பி வரை நீண்டு சென்ற ஜெயலட்சுமி புராணம், கான்ஸ்டபிள் முதல் டி.ஐ.ஜி வரையிலான அனைத்து போலீசு அதிகாரிகளின் களவாணித் தனங்கள் .. என ஜெயலலிதாவால் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட போலீசின் அட்டூழியங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்தன.
இவற்றின் விளைவாகக் கொண்ட ஆத்திரத்தில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தார்கள். ஆனால் மக்களுடைய வாக்குகளை அறுவடை செய்து கொள்வதற்கு இந்த எதிர்க்கட்சிகளுக்கு என்ன அருகதை இருக்கிறது?
இன்று ஓட்டுக்கேட்டு உங்கள் மத்தியில் ஊர்ஊராகச் சூறாவளி சுற்றுப் பயணம் வரும் ஓட்டுப் பொறுக்கிகள் அன்று மக்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கினார்களா? இணைந்து போராடினார்களா? இல்லை. வீட்டிலிருந்தபடியே அறிக்கை விட்டார்கள். ஜெயலலிதாவிடம் அடிபடும் மக்கள் அடுத்த தேர்தலில் எப்படியும் தங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள் என்று எண்ணி, மக்கள் அடிவாங்கு வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார்கள். இது மிகையல்ல, உண்மை.
தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்று கூறும் நாங்கள்தான் மக்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாகத் தமிழக மெங்கும் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தோம். போராடினோம். சிறையும் சென்றோம்.
ஒருவேளை மக்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக மற்றெல்லாக் கட்சியினரும் ‘கூட்டணி சேர்ந்து’ போராடி யிருந்தால் மக்கள் தனித்தனியே போராடி அடிவாங்கித் தோற்றுத் துவண்டு விழும் நிலை ஏற்பட்டிருக்காது. இத்தனை அரசு ஊழியர்களும் சாலைப்பணியாளர்களும் நெசவாளர்களும் விவசாயிகளும் அநியாயமாகச் செத்து மடியவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது.
ஆனால் மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமைகளை தங்களுடைய சொந்தக் கரங்களாலேயே போராடி வென்றெடுப் பதை ஓட்டுப்பொறுக்கிகள் யாரும் விரும்புவதில்லை. அது அவர்களுடைய முதலுக்கே மோசமாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள்.
“ஐந்தாண்டுகள் அடக்குமுறைகளைப் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக்கொள்ளுங்கள், அதற்குப் பிறகு எங்களுக்கு ஓட்டுப் போட்டு நாற்காலியில் உட்கார வையுங்கள். நாங்கள் வந்து கிழிக்கிறோம்” என்று கூறி மக்களுடைய போராட்டங் களை முடமாக்குகிறார்கள். ஜனநாயக உணர்வை மழுங்கடிக் கிறார்கள்.
வாக்குரிமையை மிகவும் புனிதமான உரிமையாகச் சித்தரிக்கும் ஓட்டுப்பொறுக்கிகள், மக்களுடைய பிற வாழ்வுரி மைகளையும் ஜனநாயக உரிமைகளையும் எப்போதுமே கால்தூசுக்குச் சமமாகத்தான் மதிக்கிறார்கள். எந்த ஆட்சியாக இருந்தாலும் போலீசின் அனுமதி இல்லாமல் நீங்கள் பொதுக்கூட்டம் நடத்தவோ, பேரணி நடத்தவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ முடியாது. ஓட்டுப்போடுவதற்கு மட்டும் போலீசு அனுமதி தேவையில்லை எனும்போது, பேசுவதற்கும் போராடுவதற்கும் மட்டும் ஏன் போலிசைக் கேட்க வேண்டும்? வாக்குரிமையைப் போல கருத்துரிமையும் ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை என்பதை எந்த ஆட்சியும் ஏற்பதில்லை.
அதனால்தான், மக்கள் தண்ணீர் கேட்டுப் போராடினால் குடிநீர் வாரிய அதிகாரி வருவதில்லை; போலீசு வருகிறது. சாலை கேட்டால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி வருவதில்லை, போலீசு வருகிறது. பள்ளிக்கூடம் கேட்டால் கல்வித்துறை அதிகாரி வருவதில்லை, போலீசுதான் வருகிறது. அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் போராடும் மக்களைச் சந்திப்பதற்கு எப்போதுமே வருவதில்லை. ஏனென்றால் மக்களின் அடிப்படை உரிமைகள் எதையும் ஓட்டுப் பொறுக்கிகள் அங்கீகரிப்பதேயில்லை.
வாக்குரிமையைத் தவிர வேறெந்த உரிமையைப் பற்றி மக்கள் பேசினாலும் அது ஓட்டுப்பொறுக்கிகளுக்கு வேப்பங்காயாய்க் கசக்கிறது. விவசாயிகள் வாழவேண்டு மானால் விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை அவர்களுக்கு வழங்கப் படவேண்டும். கருணாநிதியோ
“2 ரூபாய்க்கு அரிசி போடுகிறேன் கஞ்சி குடித்துக்கொள்” என்று ‘கருணை’ காட்டுகிறார்.
இலவச மருத்துவம் மக்களின் உரிமை. “எனக்கு ஓட்டுப் போட்டால் பிரசவத்துக்கு பணம் கொடுக்கிறேன்” என்கிறார் விஜயகாந்த். இலவசக் கல்வி என்பது மக்களின் உரிமை. அம்மாவோ சைக்கிள் கொடுக்கிறார், ஏழை மாணவர்கள் 4 பேருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தாயுள்ளத்துடன் தருமம் கொடுத்துவிட்டு பத்திரிகைகளில் பிலிம் காட்டுகிறார்.
‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற பேச்சே ஒரு பித்தலாட்டம். இப்போது நாம் காண்பது ஒரு புதிய வகை மன்னராட்சி. ராஜாவுக்குப் பிறந்தவன் ராஜா என்பதற்குப் பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த மன்னர் போடும் பிச்சைதான் உங்கள் வாழ்க்கை.
வாக்குரிமை என்பது மற்றெல்லா உரிமைகளையும் அடியறுக்கும் ஆயுதமாகவே மாற்றப்பட்டு விட்டது. இந்த ஆயுதத்தை நமக்கெதிராக நாமே பயன்படுத்துவது மடமை யில்லையா, என்பதுதான் எங்கள் கேள்வி.
ஒரு வாக்காளர் என்ற முறையில் சொல்லுங்கள். ஓட்டுக் கட்சிகளுக்கு உங்கள் ஓட்டு ஏன் தேவைப்படுகிறது? ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் என்ற இந்தக் கூத்தினால் என்ன பயன்?
“தேர்தல் என்ற ஒன்று நடக்காமல் அரசாங்கம் எப்படி அமையும்? நல்லதோ கெட்டதோ, அரசாங்கம் என்ற ஒன்று அமையாமல், சட்டசபை என்ற ஒன்று இல்லாமல், சட்ட திட்டங்கள் வகுப்பது எப்படி? நிர்வாகம் நடப்பது எப்படி? மக்களுக்கு நல்லது கெட்டது செய்வது எப்படி?” என்று நீங்கள் திருப்பிக் கேட்கக் கூடும்.
இது ஓட்டுப் போடும் வாக்காளராகிய உங்களுடைய கருத்து. ஓட்டு வாங்கும் வேட்பாளர்களிடம் இதே கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். வை.கோ என்ற அசிங்கத்தைப் பார்த்த பிறகும் இந்தத் தேர்தல் என்பது பொறுக்கித் தின்பதற்கான போட்டி என்பதை இவர்களிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?
தயாநிதியும் அன்புமணியும் திடீர் மந்திரிகளாக்கப் பட்டதும், முதல்வர் நாற்காலியைப் பிடிப்பதற்காகக் கருணாநிதியின் முதுகுக்குப் பின்னால் ஸ்டாலின் தயாராகக் காத்து நிற்பதும் வேறெதற்கு?
வீரபாண்டி ஆறுமுகம் தனக்கொரு சீட், தன் மகனுக்கு ஒரு சீட், மச்சானுக்கு ஒரு சீட் வாங்கியிருப்பதும், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் அன்பரசுவும் தமது பிள்ளைகளுக்கு சீட் வாங்கியிருப்பதும் எதற்கு, குடும்பத்தோடு மக்கள் தொண்டாற்றவா?
“எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று விஜயகாந்த் கெஞ்சுவதும், “கருணாநிதி குடும்பம் மட்டும்தான் கொள்ளை யடிக்க வேண்டுமா, காத்திருக்கும் நாங்களெல்லாம் இளித்த வாயர்களா” என்று வை.கோ குமுறி வெடிப்பதும், எல்லாக் கட்சிகளின் ‘செயல் வீரர்’ கூட்டங்களிலும் நாற்காலிகள் பறப்பதும், சத்தியமூர்த்தி பவனில் அன்றாடம் பத்து இருபது கதர்ச்சட்டைகள் கிழிவதும் எதற்காக?
இதில் மூடு மந்திரம் எதுவும் இல்லை. அ.தி.மு.க வில் வேட்பாளர் விண்ணப்பத்துக்கான கட்டணம் 10,000 ரூபாய். வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டு ஜெயித்தால் பல கோடி பம்பர் பரிசு. தோற்றால், தேர்தல் செலவுக்கு அம்மா கொடுக்கும் 2 கோடியில் அமுக்கியவரை லாபம் – இது ஆறுதல் பரிசு. ஜெயித்தாலும் தோற்றாலும் பரிசு தரும் லாட்டரிச் சீட்டு உலகத்தில் வேறெங்காவது உண்டா?
“சீட்டு கிடைக்காதவர்கள் கோபப்படாதீர்கள்; ராஜ்யசபா சீட்டு தருகிறேன், மேல்சபைக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறேன்” என்று உடன் பிறப்புகளுக்கு உற்சாகபானம் ஊற்றி உசுப்பி விடுகிறார் கலைஞர்.
தேர்தலின் நோக்கம் என்ன என்பது பற்றி வாக்காளராகிய நீங்கள் ஏதாவது முட்டாள்தனமாகக் கற்பனை செய்து கொண்டிருக்கலாம். ஆனால், தாங்கள் போட்டியிடுவதன் நோக்கம் என்ன என்பதில் வேட்பாளர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். ஒளிவு மறைவோ கூச்சநாச்சமோ இல்லாமல் அதை வெளிப்படையாகப் பேசவும் செய்கிறார்கள்.
ஆயுத பேரத்தில் லஞ்சம், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம், தொகுதி மேம்பாட்டு நிதியை மக்களுக்குச் செலவிடுவதற்கு லஞ்சம் .. என அனைத்தும் தெளிவாக வீடியோ படமெடுத்து நாடெங்கும் ஒளிபரப்பப்பட்டுவிட்டன. நடைபெறவிருப்பது இரண்டு கொள்ளைக் கூட்டணிகளுக் கிடையிலான ‘ஜனநாயக பூர்வமான’ மோதல்.
மக்களிடம் மாமூல் வசூலிப்பதில் ஒரே ஊரிலுள்ள இரண்டு ரவுடிக்கும்பல்களுக்கிடையே போட்டி வந்தால் என்ன நடக்கும்? அடிதடி வெட்டு குத்தின் மூலம் ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியை ஒழித்துக் கட்டி, தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளும்.
அவ்வாறில்லாமல், கொள்ளையடிக்கும் உரிமையை ‘ஜனநாயகபூர்வமான’ முறையில் முடிவு செய்வதுதான் இந்தத் தேர்தல். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் யாரால் கொள்ளை யடிக்கப்பட விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் ‘ரகசியமாக’த் தெரிவித்து விட்டால், அதன்பின் அவர்கள் உங்களைப் பகிரங்கமாகவும் சட்டபூர்வமாகவும் கொள்ளையடிப்பார்கள். இதுதான் தேர்தல் விசயத்தில் வேட்பாளர்கள் கொண்டிருக்கும் நோக்கம்.
யாருடைய நோக்கம் நிறைவேறப் போகிறது? வாக்காளர் களாகிய உங்களுடைய நோக்கமா, கொள்ளையர்களாகிய அவர்களுடைய நோக்கமா?
புழுத்து நாறிவிட்டது இந்த ஜனநாயகம். இதற்குப் புனுகு பூசி, நம்பிக்கையிழந்து வெறுத்துப் போன வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டி, தேர்தலில் ஒரு விறுவிறுப்பை உருவாக்கி வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கிறார்கள் ஆளும் வர்க்கங்கள்.
“நல்லவர்கள், வல்லவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. நல்ல பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தால் நல்ல சட்டம் போடுவார்கள். வல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நாட்டை வல்லரசாக்குவார்கள். வெல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் மக்களாகிய நீங்கள்தான். உங்கள் பிரதிநிதிகள்தான் சட்டமியற்றுகிறார்கள். எனவே அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண் டியது உங்கள் கடமை” என்று நம்மை ஏற்கச் செய்கிறார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாம்! இந்த நியாய உரிமையை வைத்துக் கொண்டுதான் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும், ஜெயலலிதாவும் எல்லா வகையான மக்கள் விரோதத் திட்டங்களையும் அமலாக்குகிறார்கள். நாட்டின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை கொண்டவர்கள் போல நடிக்கிறார்கள். “தமிழ்நாடு முதல் மாநிலமாகிறது, இந்தியா வல்லரசாகிறது” என்ற பிரமைகளைப் பரப்பிவிட்டு மக்களை மயக்கத்திலாழ்த்துகிறார்கள்.
சட்டமன்றத்தில் நடக்கும் விவாதங்களின் யோக்கிய தையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? “ஜெயலலிதா எங்களைப் பேசவே விடுவதில்லை” என்று கூறி எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் வெளிநடப்பு செய்தன. மீறிப் பேசினால் அவைக் குறிப்பிலிருந்து நீக்குவார் காளிமுத்து. இவர்களுடைய பேச்செல்லாம் அவைக் குறிப்பில் ஏறினால் என்ன, இறங்கினால் என்ன?
இந்த அவையிலேயே இல்லாத உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும் தான் அவையில் நிறைவேற்றப்படும் சட்ட திட்டங்கள் அனைத்தையும் தீர்மானிக்கின்றன. 2001 இல் நாற்காலியில் அமர்ந்த மறுகணமே பேருந்துக் கட்டண உயர்வு, ரேசன் விலை உயர்வு, பம்பு செட்டுக்கு மீட்டர் என்று ஒரே நாளில் அறிவித்தாரே ஜெயலலிதா, அவை உலக வங்கியின் உத்தரவுகளன்றி வேறென்ன? அரசு ஊழியர் சலுகைகளை வெட்டும் சதித்திட்டம் முதல், மகளிர் சுய உதவிக்குழு போன்ற ‘நலத்திட்டங்கள்’வரை அனைத்தும் உலக வங்கியின் ஆணைகள். தண்ணீர் தனியார்மயம், கடற்கரை தனியார்மயம், பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கவிருக்கும் பண்ணை விவசாயம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் சட்டங்கள் ரத்து என்பன போன்ற அனைத்தும் உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுகள்.
இத்தகைய மசோதாக்களெல்லாம் தமிழக சட்டமன்றத்தில் ஒரே நாளில் 10, 15 என்று கொத்துக்கொத்தாக விவாதமின்றி நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. ‘ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு 8000 ரூபாய் தண்ணீர் வரி’ என்ற மசோதா உட்பட 16 மசோதாக்களை ஒரே மணிநேரத்தில் நிறைவேற்றியது மகாராட்டிரச் சட்டமன்றம்.
நாடாளுமன்றத்தில் நடப்பதென்ன?
பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கை களையெல்லாம் அமல்படுத்திவிட்டு, அப்புறம் போனால் போகிறதென்றுதான் பாராளுமன்றத்துக்குச் சேதி சொல்கிறார் ப.சிதம்பரம். உலக வங்கியின் வழிகாட்டுதலின் கீழ்தான் மத்திய மாநில பட்ஜெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
பிறகு, டாடா, பிர்லா, பஜாஜ், அம்பானி, நாராயணமூர்த்தி, மல்லையா போன்ற தரகு முதலாளிகள் நிதியமைச்சருக்கு ‘ஆலோசனை’ வழங்குகிறார்கள். அதன்பின் இந்த மாபெரும் ‘ரகசிய ஆவணத்திற்கு’ அரக்கு சீல் வைத்து, ஆயுதக் காவல் போட்டு மக்கள் பிரதிநிதிகளுக்கு விநியோகிக்கிறார் நிதியமைச்சர்.
சமீபத்தில் அமெரிக்காவுடன் போடப்பட்ட ராணுவ ஒப்பந்தம், அணுசக்தி ஒப்பந்தம், விவசாய ஒப்பந்தம் ஆகியவற்றில் என்ன இருக்கிறது என்றுகூட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிமிடம் வரை முழுமையாகத் தெரியாது. நம்முடைய நாட்டையே வல்லரசுகளுக்கு அடிமையாக்கும் ‘காட்’ ஒப்பந்தமோ அதிகாரிகளால் கையெழுத்திடப்பட்டு அதன் பின்னர் அரைகுறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் தலைவிதியையும் மக்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்ற கொள்கைகள் – திட்டங்கள் பற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே எதுவும் தெரிவிக்கப் படுவதில்லை எனும்போது, மக்களாகிய நம்முடைய நிலைமையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
“என்னைத் தேர்ந்தெடுத்தால் ரேசன் விலையை ஏற்றுவேன், பம்புசெட்டுக்கு மீட்டர் போடுவேன், பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவேன், தொழிலாளர்களுக்கு போனஸை வெட்டுவேன்” என்று மக்களுக்கு ‘வாக்குறுதி’ அளித்திருந்தால், 2001 இல் ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியுமா?
“எங்களைத் தேர்ந்தெடுத்தால் ஆண்டுக்கு 1000 விவசாயிகளையாவது மருந்து வைத்துக் கொல்லுவோம், லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்குத் தள்ளுவோம், சில்லறை வணிகத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவோம் – இதுதான் எங்களுடைய குறைந்த பட்ச செயல் திட்டம்” – என்று கூறி காங்கிரஸ் வென்றிருக்க முடியுமா?
இன்ன கொள்கையைத்தான் அமல்படுத்தப் போகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொன்னால் ஓட்டுப் பொறுக்கிகள் மக்களிடம் ஓட்டு வாங்குவது கடினம். எனவேதான் கள்ளத் தனமான வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள். பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று ஆள்வதற்கான நியாய உரிமையைப் பெறுகிறார்கள்.நம்மைச் சுரண்டிச் சூறையாடி ஒடுக்குவதற்கான நியாய உரிமையை ஆளும் வர்க்கங்களுக்கும் அவர்களது எடுபிடிகளான ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் நாமே வழங்குவது அறிவுடைமையா என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி.
‘வாக்காளப் பெருமக்களே!’ என்று அலறும் ஒலிபெருக்கிச் சத்தம் இந்தத் தேர்தல் முடிவதற்குள் குறைந்தது சில ஆயிரம் தடவைகளாவது உங்கள் காதுகளைக் குடைந்துவிடும். இந்தச் சொல்லின் பொருள் என்ன என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?
பண்ணையார்கள்- விவசாயிகள், முதலாளிகள்- தொழிலாளர்கள், அதிகாரிகள் – ஊழியர்கள் என்று பல்வேறு வர்க்கங்களாகப் பிரிந்திருக்கும் இந்தச் சமுதாயத்தில் கோடீசுவரன் முதல் குப்பன் சுப்பன் வரை எல்லோரையும் ஒரே பட்டியிலடைத்து ‘வாக்காளப் பெருமக்கள்’ ஆக்கி, இவர்கள் எல்லோருக்கும் பொதுவாக நடுநிலையாக ஒரு அரசாங்கத்தை நடத்த முடியுமா? முதலாளியும் தொழிலாளியும் ஒரே நபரைத் தங்களுடைய வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க முடியுமா? முடியாது. ஆனால் நடந்து கொண்டிருப்பதென்னவோ அதுதான்.
நாங்கள் முதலாளிகளின் பிரதிநிதிகள் என்றோ, பண்ணை யார்களின் பிரதிநிதிகள் என்றோ எந்தக் கட்சியும் சொல்லிக் கொள்வதில்லை. தாங்கள் பெரும்பான்மை ஏழை மக்களின் பிரதிநிதிகள் என்றுதான் எல்லா ஓட்டுக் கட்சிகளும் கூறிக்கொள்கின்றன. ஆனால், ஏழ்மையின் சாயலைக்கூட எந்த வேட்பாளரிடமும் நாம் பார்க்க முடிவதில்லை.
நாட்டிலேயே எண்ணிக்கையில் பெரிய வர்க்கம் விவசாயி வர்க்கம். நிலமற்ற கூலி விவசாயிகள் தஞ்சை மாவட்டத்தில் எலிக்கறி தின்றார்கள், பட்டினியால் செத்தார்கள். நெல், கரும்பு, பருத்தி, தென்னை விவசாயிகளும், தக்காளி முதலான காய்களைப் பயிரிட்ட விவசாயிகளும் கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அல்லது திருப்பூருக்கு கூலி வேலைக்கு ஓடுகிறார்கள். உலகமயமாக்கம் தோற்றுவித்த விலை வீழ்ச்சியால் போண்டியான நீலகிரி தேயிலை விவசாயிகளோ கோவை நகரில் மூட்டை தூக்கி வயிற்றைக் கழுவுகிறார்கள். இந்தப் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள் எத்தனைப் பேர்?
கைத்தறிக்கான நூல் ரகங்கள் ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டதால் கைத்தறி நெசவுத் தொழிலே ஒழிந்து வருகிறது. ஜெ ஆட்சியில் கஞ்சித்தொட்டியின் முன் கையேந்தி நின்ற அந்தக் கைத்தறி நெசவாளர்களை எந்தக் கட்சி வேட்பாளராகத் தெரிவு செய்திருக்கிறது?
பன்னாட்டுக் கம்பெனிகளின் வரவால் அழிந்து வரும் சிவகாசியின் தீப்பெட்டித் தொழில், கோலா பானங்களால் கொல்லப்பட்ட சோடா கலர் கம்பெனிகள், சோப்பு, சீப்பு, ஊறுகாய், வத்தல், வறுவல், மிட்டாய் என பன்னாட்டு நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்படும் ஆயிரக்கணக்கான குடிசைத் தொழில் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கும், சில்லறை வணிகர்களுக்கும் எந்தக் கட்சி சீட் கொடுத்திருக்கிறது?
தொழிற்சங்க உரிமைகள் இழந்து, வேலை உத்திரவாதம் இழந்து, குறைந்தபட்ச ஊதியம் எனும் சட்டப் பாதுகாப்பும் இன்றி நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறார்களே தொழிலாளர்கள் அவர்களுக்கும், நாடெங்கும் இரைந்து கிடக்கும் உதிரித் தொழிலாளர்களுக்கும் எந்தக் கட்சியில் பிரதிநிதித்துவம் இருக்கிறது?
பெயருக்குக் கூட நம்முடைய வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் இல்லாத மன்றம், நம்முடைய நலனைப் பற்றி எப்படிச் சிந்திக்க முடியும்?
“என்ன சாதி, எவ்வளவு ரூபாய் செலவு செய்வாய்” என்ற இரண்டு கேள்விகளின் அடிப்படையில்தான் ஓட்டுக் கட்சிகளின் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ‘பெரிய’ சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் வசதி சிறியதாக இருக்கும் கட்சித் தொண்டன் வேட்பாளராகவே முடியாது. இது தெரிந்த விசயம்தானே என்று நீங்கள் கருதலாம்.
விசயம் தெரிந்த பிறகும் நீங்கள் வாக்களிக்கிறீர்கள் என்றால் இவர்களை உங்கள் பிரதிநிதிகளாக ஒப்புக் கொள்கிறீர்கள் என்றே பொருள்.
சினிமாவில் நடித்து கோடி கோடியாய்ச் சம்பாதித்து, பிறகு தி.மு.க வில் சேர்ந்து எம்.பி பதவியும் வாங்கிவிட்ட சரத்குமார் என்ற நடிகனுக்கு மந்திரிப்பதவி வேண்டுமாம். இல்லை யென்றால் நாடார் சமுதாயம் பொங்கி எழுமாம். இதை ஆதரிக்க ஒரு கூட்டம். பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகக் கட்டுரைகள். அதே நாடார் சமூகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதை எதிர்த்தும், கோகோ கோலாவை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கிறார்களே இந்த நடிகனா அவர்களுடைய பிரதிநிதி?
விவசாயம் பொய்த்துப் போய், ஆந்திராவில் முறுக்கு சுட்டு விற்கவும், கேரளத்து எஸ்டேட்டுகளில் கூலி வேலை பார்க்கவும், திருப்பூர் பனியன் கம்பெனியில் கொத்தடிமையாக உழைத்து கந்துவட்டிக் கடனை அடைக்கவும் ஓடுகிறார்கள் மதுரை மாவட்டத்தின் தேவர் சாதியைச் சேர்ந்த விவசாயிகள். ‘சின்ன ஜமீன்’ கார்த்திக்கா இவர்களுடைய பிரதிநிதி?
குடித்து வளர்ந்த தாமிரவருணித் தண்ணீரையே கோகோ கோலாகாரனுக்குக் கூட்டிக் கொடுத்துவிட்டு, அதற்கு உத்தரவிட்ட ஜெயலலிதாவுடன் கூட்டணியும் அமைத் திருக்கும் கோபாலசாமியா ஈழத்தமிழர் விடுதலைக்குப் பிரதிநிதி?
திண்ணியத்தில் மலம், திண்டுக்கல்லில் சிறுநீர், தென் மாவட்டமெங்கும் தனிக்குவளை, பாப்பாப்பட்டி கீரிப்பட்டியில் அரசாங்க முத்திரை பெற்ற தீண்டாமை….. தலித் மக்களுக்கு ஜெயலலிதா அருளிச் செய்துள்ள இந்த ‘சலுகை’களெல்லாம் போதாதென்று 9 தொகுதிகளையும் சேர்த்து வாங்கியிருக்கிறார் திருமா. புரட்சித் தலைவியிடம் சொல்லி பொதுச் சுடுகாடு களில் தலித் பிணங்களுக்கும் 9 இடங்களை பெற்றுத் தருவாரா இந்த தலித் பிரதிநிதி?
கல் சுமக்கவும் கட்டிட வேலை பார்க்கவும் பெங்களூருக்கு ஓடும் சேலம், தருமபுரி வன்னிய விவசாயிகளின் பிள்ளைகளை டாக்டராக்கி அழகு பார்க்கத்தான் மருத்துவக் கல்லூரி கட்டுகிறாரா மருத்துவர் அய்யா?
பாகிஸ்தானைப் பந்தாடி, ஊழல் போலீசை ஒழித்து, ஆஸ்பத்திரி லஞ்சத்தை ஓழித்து, இருட்டரங்கில் இந்தியாவை வல்லரசாக்கிக் காட்டிய விஜயகாந்த், வெளிச்சத்துக்கு வந்தவுடன் சுயநிதிக் கல்லூரி முதலாளியாகி விட்டார். இலவச அரிசிக்குப் பதில் இலவசக் கல்வி தருகிறேன் என்று அவர் ஒரு பேச்சுக்குக் கூட சொல்லாத மர்மம் என்ன? அவர் கல்விக் கொள்ளையர்களிடம் லட்சக்கணக்கில் ஜேப்படி கொடுத்த மாணவர்களின் பிரதிநிதியா, ஜேப்படி அடித்த ஜேப்பியாரின் பிரதிநிதியா?
உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிகிறது உண்மை. இதை மறைப்பதற்குத்தான் ஓட்டுப்பொறுக்கிகள் அரும்பாடு படுகிறார்கள். தங்களுக்கு சீட் கிடைக்காத சோகத்திற்காக உங்களை அழச்சொல்கிறார்கள். தங்களுக்குப் பொறுக்கித் தின்னும் வாய்ப்பு மறுக்கப்பட்டதை விளக்கி அதற்காக உங்களைக் கோபப்படச் சொல்கிறார்கள். தங்களுடைய அரசியல் எதிரிகளின் சந்தர்ப்பவாதங்களைச் சொல்லி உங்களைச் சிரிக்கச் சொல்கிறார்கள். சிம்ரன், விந்தியா போன்ற நடிகைகளை மேடையேற்றி அவர்களை ரசிக்கச் சொல்கிறார்கள்.
உங்களுடைய வர்க்கத்தின் கோரிக்கை என்ன என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்காமல், ‘வாக்காளப் பெருமக்களாகவே’ நீடிக்கும் வரை இவர்கள் நம்முடைய பிரதிநிதிகளாவதைத் தடுக்க முடியாது; பிதாமகன் சினிமாவில் வரும் ஒரு காட்சியைப் போல, நடிகை சிம்ரன் ஊர் ஊராகப் போய் இலவசமாக டான்ஸ் ஆடிக்காண்பித்து விட்டு, தன்னுடைய ரசிகப் பெருமக்களை அப்படியே வாக்காளப் பெருமக்களாக மாற்றி, முதல்வர் நாற்காலியிலும் அமர்ந்துவிட முடியும்.
வாக்காளப் பெருமக்களாகவே நீடிக்கப் போகிறீர்களா, வர்க்க உணர்வு கொண்ட உழைக்கும் மக்களாக மாறப் போகிறீர்களா என்பதுதான் எங்களுடைய கேள்வி.
தி.மு.க கூட்டணிக்கும் அ.தி.மு.க கூட்டணிக்குமிடையில் என்ன கொள்கை வேறுபாடு? ஹமாம் சோப்புக்கும் லைப்பாய் சோப்புக்குமிடையில் உள்ள வேறுபாடுதான் இவர்களுக்கிடை யிலான கொள்கை வேறுபாடு. இவர்கள் பேசுவதைக் கவனிப்பதற்குப் பதிலாக, பேசாதவற்றைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.
தமிழகத்திலிருந்து போன மத்திய அமைச்சர்கள் மீது அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டுகிறார் ஜெயலலிதா. ஆனால், சென்னைத் துறைமுகத்தை ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு விற்றுவிட்டார் டி.ஆர்.பாலு என்றோ, அரசுத் தொலைபேசித் துறையை முடமாக்கி தனியார் தொலைபேசி முதலாளிகளைக் கொழுக்க வைக்கிறார் தயாநிதி மாறன் என்றோ, டிரிப்ஸ் (TRIPS) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மருந்துகளின் விலையை ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக்கிவிட்டார் அன்புமணி என்றோ ஜெயலலிதா குற்றம் சாட்டுவதில்லை. வை.கோ இவை பற்றியெல்லாம் மூச்சே விடுவதில்லை.
ஜெயலலிதாவின் சுனாமி ஊழல், வெள்ள நிவாரண ஊழல் பற்றியெல்லாம் விலாவாரியாகப் பேசும் தி.மு.க, தாமிரவருணி ஆற்றையே கோகோ கோலாவிற்குத் தாரை வார்த்த மாபெரும் ஊழலைப் பற்றி வாய் திறப்பதில்லை. தமிழகத்தில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களிலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் எவ்விதத் தொழிற்சங்க உரிமையும் இல்லாமல் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வைக்கப் பட்டிருப்பதை “ஜெயலலிதாவின் சர்வாதிகாரப் போக்கிற்கு’ ஒரு சான்றாகக் கூடக் காட்டுவதில்லை.
“நோக்கியாவை நான் கொண்டு வந்தேன்” என்கிறார் தயாநிதி மாறன். “·போர்டு, ஹ¥ண்டாய் கம்பெனிகளை நான் கொண்டுவந்தேன்” என்று வாங்கிப் பாடுகிறார் ஜெயா. “தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட டைடல் பார்க் முதலான கணினித்துறை தொழில் வளர்ச்சிகளை அ.தி.மு.க அரசு தொடர்வதால், மேலும் முதலீடு போடுமாறு பில் கேட்ஸைக் கேட்டுக்கொண்டேன்” என்கிறார் கருணாநிதி.
சிவகங்கை கூட்டுறவு வங்கி மூடப்பட்ட விவகாரத்தைப் பேசி வரும் ஜெயலலிதா, விமான நிலையத் தனியார்மயம், காப்பீடு தனியார்மயம், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி போன்ற பிரச்சினைகளை ப.சிதம்பரத்துக்கு எதிராக தவறியும் பேசுவதில்லை.
உலக வங்கி – உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சி, அதனடிப் படையில் வகுக்கப்படும் இந்திய மக்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றில் இருவருமே முழுமையாக உடன்படுகிறார்கள். இவற்றைத் தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம்தான் தமிழகத்தை முதல் மாநிலமாக்க முடியுமென்றும் கூறுகிறார்கள். இந்தக் கொள்கைகளின் விளைவாகப் பாதிக்கப்படும் மக்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசைப் பலப்படுத்துவதையும் போலீசுக்குச் சலுகை வழங்குவதையும் போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.
இப்படி மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்து வதில் ஒரே கூட்டணியாகச் செயல்படும் இவர்கள், இந்தக் கொள்கைகளுக்கும் அரசியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதாக மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள். தங்களுக்கிடையிலான இந்த முக்கியமான ஒற்றுமையைப் பார்க்காமல், முக்கியத்துவமற்ற வேற்றுமைகளைப் பெரிதுபடுத்திக் காட்டி அதிலேயே மக்களை மயங்கவும் வைத்திருக்கிறார்கள்.
இவ்விரண்டு கூட்டணிகளுமே பிழைப்புவாதக் கூட்டணிகள்தான் என்பது மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் வேறு மாற்று தெரியாததால், “ஏதோவொரு அயோக்கியனைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?” என்று சிந்திக்கிறார்கள். “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்று அவர்கள் சார்பில் வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். சில மூடர்கள் “விஜயகாந்துக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்தா லென்ன?” என்று விபரீதமாகச் சிந்திக்கிறார்கள்.
லஞ்சத்தை வெறுத்த மக்களை ‘லஞ்சம் தவிர்க்க முடியாதது’ என்று காலப்போக்கில் ஏற்கச் செய்ததைப் போல, குடிநீருக்கும் சிறுநீருக்கும் கூடக் காசு கொடுத்தாக வேண்டும் என்று மக்களைப் பழக்கியதைப்போல, கல்வியும் மருத்துவமும் காசுக்கு மட்டும்தான் என்பதை சகஜமாக்கியதைப் போல அரசியல் சீரழிவுக்கும் மக்களைப் பழக்கியிருக்கிருக்கிறார்கள்.
இந்தத் தேர்தல் ஜனநாயகம் சீரழிந்ததற்குக் காரணமான வர்கள் ஓட்டுப் பொறுக்கிகள் மட்டுமல்ல. மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக நாட்டின் இறையாண்மையும், மக்களின் வாழ்வுரிமைகளும் பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்பட்டு, உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைகளுக் கேற்ப இந்திய அரசு ஆடிவரும் சூழலில், ‘ஜனநாயகம்’ என்பதும், ‘வாக்குரிமை’ என்பதும் கவைக்குதவாத கேலிப்பொருட்களாகி வருகின்றன.
நாடே அந்நிய வல்லரசுகளுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும்போது, இந்த பொம்மைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதால் என்ன பயன்? இராக்கை நேரடியாக ஆக்கிரமித்துக் காலனியாதிக்கம் செய்கிறது அமெரிக்கா. அந்த ஆதிக்கத்தின் கீழ் ஏதோவொரு அமெரிக்கக் கைக்கூலியைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் போலித் தேர்தலைப் புறக்கணித்து அமெரிக்க இராணுவத்திற்கெதிராக ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள் இராக் மக்கள்.
நாம் சந்தித்துக் கொண்டிருப்பதோ மறுகாலனியாதிக்கம். அன்று நம் நாட்டை வணிகம் என்ற பெயரில் அடிமைப்படுத்திய கிழக்கிந்தியக் கம்பெனியின் இடத்தில், இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள்; அந்த நிறுவனங்களின் எடுபிடிகளாக பல்வேறு ஓட்டுப்பொறுக்கிகள். இந்த ஓட்டுப் பொறுக்கிகளில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவா நாட்டை விடுவிக்க முடியும்? தேச விடுதலையை யாரேனும் ஓட்டுப் பாதையின் மூலம் வென்றெடுத்ததாக வரலாறு உண்டா?
இந்தத் தேர்தல் முறை என்பதொன்றும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தோன்றியதுமல்ல; வேறு மாற்றே இல்லாத ஒரே ஆட்சி முறையுமல்ல. தனக்குச் சேவகம் செய்யும் கைக்கூலிகளை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியவைதான் இன்று நாம் காணும் சட்டமன்றமும், தேர்தல் முறையும். அன்று திவான் பகதூர்களும் ராவ் பகதூர்களும் சட்டமன்றப் பதவிச்சொகுசை அனுபவித்துக் கொண்டிருக்க, உண்மையான விடுதலை வீரர்கள் தெருவிலிறங்கிப் போராடினார்கள்.
அந்த ராவ் பகதூர்களின் வாரிசுகளான ஓட்டுப்பொறுக்கிகள் இன்று நாட்டை அந்நிய வல்லரசுகளுக்கு விலை பேசுகிறார்கள். பன்னாட்டு முதலாளிகள் வீசும் எலும்புத் துண்டுகளுக்கும், அரசுச் சன்மானங்களுக்கும் அடித்துக் கொள்வதையே ஜனநாயகம் என்று சித்தரிக்கிறார்கள்.
மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் நாங்கள், இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்கிறோம். மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டத்தினூடாக ஒரு புதிய ஜனநாயக அரசமைப்பை உருவாக்க வேண்டுமென்கிறோம்.
இலவசங்களுக்கு மயங்கியது போதும். வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டது போதும். நம் காலடியிலிருந்து நழுவித் தேசமே அந்நியன் கைகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. போராடி வென்றெடுத்த உரிமைகள் எல்லாம் நம் கைகளிலிருந்து ஒவ்வொன்றாய் உருவப்படுகின்றன. சூறைக்காற்றில் சிக்கிய காகிதமாய் பிடிமானமின்றி அலைக்கழிக்கப் படுகிறது நம் வாழ்க்கை.
நின்று ஒரு கணம் சிந்தியுங்கள். ஏன் என்று ஒரு முறை கேட்டுப் பாருங்கள். இந்தத் தேர்தலை விட்டால் வேறு வழியில்லை என்ற உங்கள் கருத்து மாறும்.
“ஓட்டுப் போடாதே, புரட்சி செய்” என்ற எங்கள் முழக்கம் உங்களது முழக்கமாக உடனே மாறும்! நேபாளத்தின் மாவோயிஸ்டுகள், பிலிப்பைன்ஸின் ‘தேசிய மக்கள் படை’, பெருவின் ‘ஒளிரும் பாதை’, என்ற அணிவரிசையில் இந்தியாவின் நக்சல்பாரிப் பாதை விடுதலைக்கான புதிய வழியைப் படைத்துக் காட்டும்!
– ஓட்டுப் போடாதே, புரட்சி செய்!
2011 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் வெளியிட்ட சிறு வெளியீடு!
02-05-2016 திங்கள் மாலை 3 மணியளவில் உசிலம்பட்டி செல்லம்பட்டி கிராமத்தில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்களைக் கெடுக்கும் டாஸ்மாக்கை மூடுவதற்காக மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்கள் பங்கேற்போடு தப்படித்து வெடி வெடித்து செல்லம்பட்டி பகுதி இரண்டு டாஸ்மாக் கடைகளை 05-05-2016 முதல் மூடச்சொல்லி ஆணையாளரிடம் மனுகொடுக்க மக்கள் திரளோடு சென்றனர்.
ஆணையாளரோ, “எனக்கு அதிகாரம் என்னவோ ரோடு, சாக்கடை இப்படி பிரச்சனைன்னா சரி பண்ண முடியும், டாஸ்மாக்கெல்லாம் பெரிய விவகாரம்” என்றார்.
தோழர்களோ, “இப்பகுதிக்கு நீங்கள் தான் தற்போது பெரிய அதிகாரி, இம்மனுவை தங்கள் மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி மூடச்செய்யுங்கள். இல்லையேல் 5-ம் தேதி நாங்கள் மூடச்செய்வோம்” என்றனர்.
ஆணையாளரும் மேலே அனுப்பி வைப்பதாக ஒப்புதல் அளித்தார்.
தோழர்கள் நிகழ்ச்சியை முடித்து வெளியில் சென்று டீக்கடையில் பேசிக்கொண்டிருந்த பொழுது ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஒருவர் ஓடி வந்து பார்த்துவிட்டு மக்கள் அதிகாரம் மனுவை வருவாய் கோட்டாட்சியர்,வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் கையெழுத்திட்ட பதில் மனுவை தோழர் கையில் ஒப்படைத்து சென்றார்.
மூக்கு வேர்த்த நுண்ணறிவு போலீஸார் கண்கொத்தி பாம்பாய் ஆரம்பம் முதல் கடைசி வரை கவனித்தபடியே இருந்தனர்.
தேர்தல் நேரத்தில் மக்கள் அதிகாரம் செயல்பாட்டினால் செல்லம்பட்டி பகுதியில் மக்களின் முக்கிய பேசு பொருளாக டாஸ்மாக் விவகாரம் மாறி உள்ளதை காண முடிந்தது.
தகவல்
பு.ஜ செய்தியாளர்கள்
உசிலம்பட்டி
மதுரவாயல் பகுதியில் உள்ள டாஸ்மாக்கை மூடு, இல்லையேல் நாங்களே இழுத்து மூடுவோம் – மக்கள் அதிகாரம் அரசுக்கு எச்சரிக்கை!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் உச்சநீதிமன்ற உத்திரவுகளையெல்லாம் துளியும் மதிக்காமல் நெடுஞ்சாலை அருகிலும், குடியிருப்புகளின் மத்தியிலும் அமைந்து மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக்கை எடுக்க வலியுறுத்தி நொளம்பூர் பகுதி மக்களிடையே மக்கள் அதிகாரம் அமைப்பினர் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வந்தனர். அதன் முதல் கட்டமாக நேற்று (02-05-2016) பொதுமக்களை திரட்டி வட்டாட்சியரிடம் மனு கொடுக்க திட்டமிட்டிருந்தனர். அதற்காக நொளம்பூர் மாதா கோவில் நகர், சின்ன நொளம்பூர், ஓம்சக்தி நகர் ஆகிய டாஸ்மாக்கிற்கு அருகில் உள்ள பகுதி மக்களை அழைத்து செல்ல நேற்று காலை அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக் குழுவை சார்ந்த தோழர்கள் சென்றிருந்தனர்.
காலையிலேயே குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை பாதுகாக்க போலீசு தடுப்பு வளையத்துடன் டாஸ்மாக் வாயிலில் நாற்காலிகள் போட்டு காவல் காத்துக் கொண்டிருந்தது. அந்த கடைக்கு மிக அருகில் உள்ள ஓம்சக்தி நகருக்கு சென்ற தோழர் கணேசனை, பகுதிக்குள் செல்லும் முன்பாகவே டாஸ்மாக்கிற்கு காவல் காத்துக்கொண்டிருந்த போலீசும், உளவுப்பிரிவு போலீசும் அவரை முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்து மதுரவாயல் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றது. தகவல் அறிந்து தோழர்கள் உடனடியாக போலீஸ் ஸ்டேசனுக்கு விரைந்தனர்.
“தேர்தல் நேரத்தில் நீங்கள் ஊர் மக்களை திரட்டுவது சரியில்லை. மீண்டுமொருமுறை இப்படி நடந்தால் உங்களை ரிமாண்ட் செய்வோம்” என்று மிரட்டியது போலீசு. ‘ஜனநாயக’ தேர்தல் நேரத்தில் மனுகொடுக்க செல்வது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உண்டுபண்ணிவிடுமாம்!
“நியாயாமாக பார்த்தால் சட்டத்திற்கு புறம்பாக உள்ள அந்த டாஸ்மாக்கை போலீசு நீங்கள்தான் மூடவேண்டும். உங்கள் வேலையைத்தான் நாங்கள் செய்கிறோம். அதுவும் ஊர் பிரச்சினைக்காக மனுகொடுக்க மக்களை அழைத்து செல்ல கூடாது என்று நீங்கள் சொல்வதுதான் சட்ட விரோதம், இப்போது மனு கொடுக்க நாங்கள் ஊர் மக்களோடு செல்கிறோம். அவரை விடுகிறீர்களா இல்லையா?” என்றனர் மக்கள் அதிகாரம் தோழர்கள். பயந்து பின்வாங்கிவிடுவார்கள் என நினைத்த போலீசு, தோழர்கள் ஏறி பேசவே தாங்கள் சற்று பின்வாங்கினர்.
“நீங்கள் மனு கொடுக்க மட்டும்தான் செல்கிறீர்கள். அங்கு எதாவது போராட்டம் நடத்தினால் இவரை உடனே ரிமாண்ட் செய்து விடுவோம்” என்று கூறிவிட்டு தோழர் கணேசனை தன்னுடன் அழைத்துக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது.
வட்டாட்சியர் அலுவலகத்திலும் காலையில் இருந்தே அங்கு வருபவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தது போலீசு. இரண்டு வாயில்களிலும் யாரையும் விடாமல் தடுப்பு அமைத்து இருந்தது. தோழர்களும் ஊர் மக்களும் வந்தவுடன், தடுப்புகளையும் போலீசையும் கண்டு அஞ்சாமல் மனு கொடுக்க உள்ளே சென்றனர். இதில் நகைக்கதக்க விசயம் என்னவெனில், அலுவலக படிக்கட்டுகளில் தடுப்புகளை வைத்து அலுவலகத்தையே மறைத்து, போலீசு காவல் காத்துக் கொண்டிருந்தது. இதை பார்த்து அலுவலகத்திற்கு வந்த சிலர் விடுமுறை என கருதி திரும்பி சென்றனர்.
மூன்று ஊர் மக்கள் மனு கொடுக்க வருவதை பார்த்து அஞ்சிய போலீசு, ஐந்துபேர் மட்டுமே உள்ளே செல்லமுடியும் என கண்டிசன் போட்டது. போலீசுக்கும் தோழர்களுக்கும் இடையிலான நீண்ட வாக்குவாதத்திற்கு பின்னர் 5 பேர் மனுகொடுக்க உள்ளே சென்றனர்.
உள்ளே சென்ற் வட்டாட்சியரிடம் மனுவைக்கொடுத்து படித்து பாருங்கள் என்றனர். மனுவை மேலோட்டமாக பார்த்துவிட்டு, “என்னப்பா! 5 ஆம் தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என போட்டிருக்கு” என நக்கலாக சொன்னார்.
“ஆமா சார்!, 5-க்குள் நீங்கள் மூடவில்லையென்றால் நாங்களே மூடிக்கொள்கிறோம் அதையும் படிச்சிப்பாருங்க” என தோழர்கள் பதிலுக்கு சொல்ல அமைதியாகிவிட்டார் தாசில்தார்.
ஆனால், அருகில் இருந்த தேர்தல் அதிகாரி, “தேர்தல் நேரத்தில் இப்படி ஏதாவது செய்தீர்கள் என்றால் ரிமாண்ட் செய்துவிடுவோம்” என பூச்சாண்டி காட்டினார்.
எத்தன பேர்ரா இதயே சொல்வீங்க என நினைத்துக்கொண்டு தோழர்கள், “சரி நீங்க என்னமோ பண்ணுங்க, ஆனா மொதல்ல கடைய மூடுங்க, இல்ல நாங்களே மூடிக்கிறோம்” என முடிவாக சொல்லிவிட்டு புறப்படத் தயாராகினர்.
பின்னர் அவர்களை சமாதானப்படுத்த முயல்வதாக நினைத்துக்கொண்டு, “இது தேர்தல் நேரம் எங்களால எதுவும் செய்ய முடியாது. நான் வேணும்னா இத உடனே கலெக்டருக்கு ஃபார்வார்டு பண்னி விடறேன்” என தேனொழுகப் பேசினார்.
“நீங்க யாருக்கு வேணும்னாலும் அனுப்பிக்கோங்க, எங்களுக்கு அந்த கடை மூடியாகணும்” என மீண்டுமொருமுறை சொல்லிவிட்டு வெளியே வந்தனர் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.
பின் அடுத்தக்கட்ட போராட்டத்தை பற்றி வந்திருந்த மக்களிடம் பேசி அங்கிருந்து கலைந்து சென்றனர். அதிகாரிகளிடம் வரும் அனைவரும் பம்மிக்கொண்டும், குனிந்துக்கொண்டும் வந்து போகையில் அவர்களுக்கு கட்டளையிடும் விதத்தில் மக்கள் அதிகாரத்தினர் வந்துசென்றது அங்கிருந்த பொதுமக்களுக்கு உற்சாகத்தை அளித்தது.
தகவல்
வினவு செய்தியாளர்கள்,
சென்னை.
பேண்டு வாத்தியம் முழங்க மனுகொடுக்க சென்ற நாப்பாளையம் பகுதி மக்கள்!
– ’மூடு டாஸ்மாக்கை’ திருவிழா தொடக்கம்!
மீஞ்சூரை அடுத்துள்ள நாப்பாளையம் பகுதியில் ஒரே இடத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்தக்கடைகளால் பாதிக்கப்படும் கிராமங்களில் இருந்து 75-க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.
போகும் போதே திருவிழாவிற்கு செல்வது போல் பேண்டு, டோலக்கு, பறை ஆகியவற்றை அடித்துக்கொண்டு, ஊர் மக்கள், பள்ளி மாணவர்கள் என ஒட்டுமொத்த படையும் திரண்டு பேரணியாக கோட்டாச்சியர் அலுவலகம் நோக்கி “டாஸ்மாக்கை மூடு , எங்கள் குடும்பத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடையை மூடு” என முழக்கமிட்டபடி சென்றனர். அதோடு பத்தடி உயர டாஸ்மாக் பாட்டில் போல் வடிவமைத்த அட்டையில், கடை எண்ணை குறிப்பிட்டு, இந்த கடையை வரும் 5 -ம் தேதிக்குள் மூட வேண்டும் என எழுதி கையோடு கொண்டு சென்றனர்.
அலுவலகம் உள்ள தெருவில் நீதிமன்றம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களும் இருந்தன. எனவே திருவிழா போன்ற சத்தத்தை கேட்டதும் வக்கீல்கள், போலீசு, பொதுமக்கள் என அனைவரும் வெளியே வந்து பார்த்தனர். அலுவலகத்தை அடைந்ததும் தயாராக இருந்த போலீசு பொதுமக்களை தடுத்து நிறுத்தியது.
“ஐயாவை பார்க்க முடியாது, அவர் தேர்தல் பற்றிய முக்கிய வேலையாக இருக்கிறார் 2 மணி வரை பார்க்க முடியாது. உங்களை பார்க்கவும் அனுமதிக்க முடியாது” என்றது போலீசு.
“சரி, அப்போ நாங்கள் 2 மணி வரை மறியல் அல்லது போராட்டம் செய்து கொண்டிருக்கிறோம் உங்கய்யாவ பொறுமையா வரச்சொல்லுங்க” என கூறி அங்கேயே முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்யத் துவங்கினர்.
மக்களின் இந்த நடவடிக்கையை கண்டு பயந்து பின்வாங்கிய போலீசு சமாதானத்திற்கு வந்தது. “இரண்டு பேர் என்னுடன் வாங்க அய்யாவ பார்க்கலாம்” என பணிந்து சொன்னது.
“இல்லை! உள்ளே போனால் நாங்கள் அனைவருமே உள்ளே செல்வோம். இல்லையெனில் நாங்கள் உள்ளே வந்து பார்க்க முடியாது, அவர் மக்களுக்காகத்தானே வேலை பார்க்கிறார். அவரை இங்கு வர சொல்லுங்கள்” என்று மக்கள் எந்த அச்சமும் இல்லாமல் அரசுக்கு கட்டளையிட்டனர்.
நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு, 75 பேரையுமே உள்ளே அழைத்து சென்றது போலீசு. மக்களின் அதிகாரத்துக்கு முன்பு போலீசு எம்மாத்திரம்?
ஆனால், கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்துவைத்த கதையாக கோட்டாட்சியருக்கு பதிலாக அவரது அலுவலகத்தில் வட்டாட்சியரை கொண்டுவந்தது போலீசு. அவரைக்கண்டவுடன் அவருக்கு எதிரிலேயே “நாங்கள் இவரை பார்க்க வரவில்லை, இவரிடம் நாங்கள் பேசமுடியாது. நீங்கள் RDO- வை வர சொல்லுங்கள்” என்று மக்கள் உறுதியாக கூறிவிட்டனர்.
”இவரும் அதிகாரிதான், இவருகிட்டயும் மனு கொடுக்கலாம்” என போலீசு சமாளிக்கப் போய் அது வஞ்சப்புகழ்ச்சி அணியாக மாறி வட்டாட்சியரை கண்டு எள்ளி நகையாட வைத்தது. பின்னர் மீண்டும் ஒரு நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு மக்களை சந்திக்க கோட்டாச்சியர் வந்து சேர்ந்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட அவர் “ஆமா! ஒரு நாளைக்கு நான் நூற்றுக்கணக்கான மனுவாங்குகிறேன். டாஸ்மாக்கை எப்போது மூட வேண்டுமென்று எனக்கு தெரியும்” என்று அதிகாரிகளுக்கே உரித்த திமிருடன் கூறினார்.
ஆனால், மனுகொடுத்தது மக்கள் அதிகாரமாயிற்றே! “நீங்கள் டாஸ்மாக் கடை நடத்த வேண்டுமென்றால், உங்க அலுவலகம் பக்கத்துலயோ இல்ல உங்கள் வீட்டிலயோ வைத்துக்கொள்ளுங்கள் அதன்பின் எப்போது உங்களுக்கு மூடத்தெரியுமோ அப்போது மூடிக்கொள்ளுங்கள்” என்று பதிலடி கொடுத்தனர்.
அதுமட்டுமன்றி கோட்டாட்சியரை வைத்துக்கொண்டே மக்கள் அதிகாரத்தை சார்ந்த ஒரு தோழர், “நாம் இப்போ இவரிடம் மனுக்கொடுத்து விட்டோம், மனுவில் கூறியபடி இவர் 5-ம் தேதிக்குள் கடையை மூடவில்லையென்றால் நாமளே கடைய மூடிக்கொள்ளலாம்” என்று அறிவித்தார்.
இப்போதுதான் கோட்டாட்சியர்க்கு மக்கள் அதிகாரத்தை பற்றி முழுமையாக புரிந்திருக்க வேண்டும். ஏனெனில் அதுவரை திமிராக பேசிக்கொண்டிருந்த கோட்டாட்சியர் இதற்குபின்னர் அவர் பேசுவது அவருக்கே புரியாதபடி “என்ன பன்றீங்க! என்ன பன்றீங்க!” என பயத்தில் உளற ஆரம்பித்து விட்டார். அந்த உளறலை கண்டுக்கொள்ளாமல் அந்த அறையை விட்டு உற்சாகத்துடன் வெளியேறினர் மக்கள் அதிகாரத்தினர்.
வெளியே வந்த மக்கள் பத்திரிக்கைகளுக்கு தங்கள் போராட்டத்தைப் பற்றி பேட்டியளித்தனர். பேட்டியளித்துக் கொண்டிருக்கும்போதே ஒருவர் “தோழர் அந்த போஸ்டரை கொடுங்க!” என வாங்கி ஊடகங்களின் கேமரா முன்பாகவே அந்த போஸ்டரை சுவற்றில் ஒட்டினர்.
“மக்களுக்கு இடையூறாக உள்ள எங்கள் குடும்பத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மே 02 அன்று கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தவறினால் மே 5-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்” என டாஸ்மாக் எதிர்ப்புக்குழு மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. போஸ்டர் ஒட்டிய விதமே மிகவும் கோலாகலமாக இருந்தது.
பின் அந்த போஸ்டரை பார்த்து, “இதில் எழுதப்பட்டுள்ளபடி 5-ம் தேதிக்குள் நாப்பளையத்தில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடை மூடப்படவில்லை என்றால் நாங்களே மூடிக்கொள்வோம்” என பத்திரிக்கையாளர்களிடம் மக்கள் தெரிவித்து 5-ம் தேதி போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தனர்.
இந்தச் செய்தி தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனால், அனைத்து ஊர் மக்களும் டாஸ்மாக்கை மூடமுடியும் என நம்பிக்கையும், மிகுந்த உற்சாகமும் அடைந்துள்ளனர். மக்கள் தங்கள் அதிகாரத்தை எப்படி அரசு அதிகாரிகளிடம் காட்டுவது என்பதை நடைமுறையில் காட்டியுள்ளனர் நாப்பாளையம் பகுதி பொதுமக்கள். தேர்தல் பாதையின் மூலம் டாஸ்மாக் கடைகளை உட முடியாது, மக்கள் அதிகாரமே ஒரே தீர்வு என்பதனை உணர்த்தும் வகையில் அமைந்தது இந்த மனுகொடுக்கும் நிகழ்ச்சி.
தகவல்
வினவு செய்தியாளர்கள்,
சென்னை.
மூடு டாஸ்மாக்கை – மே 5 கெடு! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் அதிகாரம்!
விழுப்புரம் மாவட்டம் அயினம்பாளையம் கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு மேல் உள்ளது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கடை உயர்நீதி மன்ற உத்தரவுக்கு பிறகு, கடையின் முன்பக்க வழியை அடைத்து விட்டு பின்பக்கமாக திறந்து கொண்டனர். அந்தளவிற்கு விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இந்த கடையை அகற்றக்கோரி சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்துள்ளனர். அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது காவல்துறை. இனிமேல் போராட்டம் ஏதாவது நடத்தினால் உங்கள் அனைவரையும் “உள்ளே” தள்ளிவிடுவேன் என மிரட்டியும் உள்ளது.
முக்கியமாக அந்த கடையை நான்கு முறை மாற்றி அதே ஊரில் வைத்துள்ளனர். காரணம், அயினம்பாளையத்தை சுற்றியுள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் அந்த ஒரு கடை தான் உள்ளது. எனினும் அரசின் டார்கெட் அயினம்பாளையம் தான்.
ஏப்ரல் 20 அன்று “வேர் அவுஸிங்” குடோனில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்தினார். இந்தச் செய்தி வினவு உட்பட அனைத்து நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
அந்த குடோனில் தான் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் சுமார் 98 பேர் சுமை தூக்கும் தொழிலாளராக வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவர்கள் தான். இவர்கள் சம்பாதிப்பதில் பெரும்பான்மையை இந்த கடையில் குடித்தே அழிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு பதினைந்து நாள் மட்டுமே வேலை இருக்கும். மற்ற நாட்கள் வீட்டில் தான் இருப்பார்கள்.
இவர்களின் உழைப்பை சுரண்டுவதற்காகவே இந்த குடோனிற்கு நேர் எதிராக இரண்டு டாஸ்மாக் கடைகளை சட்ட விரோதமாக உயர்நீதி மன்ற உத்தரவை கூட மதிக்காமல் நெடுஞ்சாலையில் வைத்துள்ளது தமிழக அரசு.
கடுமையான உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்கள் உடல் வலியை காரணம் காட்டி நிறைய குடிக்கின்றனர். வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் போதும் தொடர்ந்து குடித்து குடித்து குடல் வெந்து பலர் இறந்தும் போயுள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் குடிக்கு அடிமையாகியுள்ளனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இரண்டு பிரிவினருக்கும் இதில் ஏற்றத்தாழ்வு இல்லை. இந்த கிராம மக்களின் கணிசமான சேமிப்புகள் அனைத்தும் குடித்தே அழித்து விட்டனர்.
தற்போது அந்த கிராமத்தில் உள்ளவர்கள் பலர் குடிக்கு அடிமையானதாலும், பல பெண்கள் தங்கள் கணவனை இழந்தாலும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் அவர்கள் நம்பி இருப்பது கூலி விவசாயம் தான். நகரமயமாக்கலின் காரணமாக விவசாயமும் அழிக்கப்பட்டு வருவதால் இனி அவர்களின் எதிர்காலம் என்பதே கேள்விக்குறி தான்…..
தங்களின் வாழ்க்கையையும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் நாசமாக்கிய இந்த சாராயக்கடையை விரட்டுவது தான் இனி ஒரே தீர்வு என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர்.
இந்த அரசின் மீதும், ஓட்டுக்கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்து விட்ட மக்கள் கடந்த 24 ம் தேதியிலிருந்து மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர்களுடன் இணைந்து பிரச்சாரம் செய்து வந்தனர். மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர்களும் அந்த கிராம மக்களோடு தங்கி சாதியை தகர்த்து அவர்களை போராட்ட களத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை 02.05.2016 திங்கள் கிழமை இன்று சந்தித்து “வருகிற 05-05-2016 தேதிக்குள் எங்கள் ஊர் கடையை மூடிவிட வேண்டும். இல்லையேல் நாங்களே மூடிவிடுவோம்” என கெடு விதித்து எச்சரித்து விட்டு வந்துள்ளனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
வினவு செய்தியாளர்,
விழுப்புரம்.
மக்கள் அதிகாரம் கோத்தகிரி தாலுக்கா நெடுகுளா பஞ்சாயத்து கேர்கம்பை சுற்றுவட்டார பொது மக்கள் இணைந்து கேர்கம்பை என்ற இடத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை (எண் 8024) மூடக்கோரி கேர்கம்பை ஹட்டி, இந்திரா நகர் மற்றும் காக்கசோலை மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியதில் அந்த பகுதி மக்கள் பெண்கள் 100 பேர், பள்ளி மாணவ மாணவிகள் 40 பேர் மற்றும் 60 ஆண்கள் கையெழுத்து இட்டனர்.
அதை 02-05-2016 திங்கள் அன்று கோட்டாட்சியர் அவர்களிடம் கொடுத்து குறிப்பிட்ட கடையை மூடவலியுறுத்தப்பட்டது. அதற்கு, “நான் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் அனுப்பிவைக்கிறேன்” என்றார்.
“நாங்கள் கொடுத்த மனுவுக்கு ரசீது கொடுங்கள்” என்று கேட்டோம்.
“ரசீது இல்லை” என்றார்.
“எப்போது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிந்து கொள்வது எப்படி” என்று கேட்டோம்.
“எடுக்கும் நடவடிக்கை பற்றி எனக்கு தகவல் கொடுப்பார்கள், அந்தத் தகவலை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்” என்றார்.
“உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் நாங்கள் எடுப்போம்” என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது..
தகவல்
மக்கள் அதிகாரம்
கோத்தகிரி
130-வது உலகத் தொழிலாளர் தினமான மே-1 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் “விவசாயம் – நெசவு, சிறுவணிகம், சிறுதொழில்களை அழித்து, காண்ட்ராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்!” என்கிற தலைப்பின் கீழ் கும்மிடிப்பூண்டியில் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. தேர்தலைக் காரணம் காட்டி, பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டம் மட்டும் எழுச்சிகரமாக நடத்தப்பட்டது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் கே.எம்.விகந்தர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய பின்னர், தலைமை உரையாற்றினார். “நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்து கட்டி காண்டிராக்ட் முறையை அமல்படுத்தி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வைத்துச் சுரண்டிக் கொழுக்கின்றனர், முதலாளிகள். இந்த சுரண்டலுக்கு அரசு துணை நிற்கிறது. ஆளத் தகுதியிழந்துவிட்ட இந்த அரசுதான் நம்மை கட்டிக் காப்பதாகவும், நமக்காக இருப்பதாகவும் கூறி நம்மை ஏமாற்றி வருகின்றனர். நாம் போராடுவதன் மூலமே நமது உரிமைகளைப் பெற முடியும்” என உரையாற்றினார்.
SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் ஆறுமுகம், லைட்விண்டு ஸ்ரீராம் கிளையின் தலைவர் தோழர் பிரவீன், பாரத் டெக்ஸ்டைல்ஸ் கிளையின் தலைவர் தோழர் ஆனந்தன் ஆகியோர் தங்களது சொந்த வாழ்வியல் அனுபவங்களிலிருந்து அரசென்பது உழைக்கும் மக்களுக்கு எதிராகவே உள்ளது என்பதை பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்ட எழுச்சியுரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் சுதேஷ்குமார், தேர்தல் ஆணையத்தை அம்பலப்படுத்தியும், விவசாயம் நெசவு, சிறுதொழில், சிறுவணிகம் என ஒவ்வொரு துறையும் எப்படியொரு தாக்குதலை எதிர்கொண்டுள்ளது என்பதையும், இதைத் தீர்க்க உழைக்கும் மக்களாக நாமனைவரும் ஒன்றிணைவதைத் தவிர வேறேதும் தீர்வில்லை என்பதை ஆணித்தரமாக பதியவைத்தார்.
மாவட்டப் பிரச்சாரக் குழுவின் சார்பாக புரட்சிகரப் பாடல்கள் பாடப்பட்டன. கூட்டத்தின் இடையிடையே ஆர்ப்பாட்ட முழக்கமிடப்பட்டது.
இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகுமார் நன்றியுரையாற்றினார். உழைக்கும் மக்கள் தொழிலாளிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம், பாட்டாளி வர்க்க சர்வதேசகீதத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
தேர்தல் ஓட்டுச்சீட்டு அரசியல் என்பது மக்களின் பிரச்சனைகளுக்கு எந்தவகையிலும் தொடர்பற்றது மட்டுமல்ல, அவை, அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்புபவையும் கூட. ஒசூரில் இதனை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்தது இந்த ஆண்டு மே நாள். வழக்கமாக மே நாள் என்றவுடன் போலிகளின் சி.ஐ.டி.யூ.-ஏ.ஐ.டி.யூ.சி சங்கங்கள் சில பல தொழிலாளர்களை கொண்டு ஒரு அடையாள ஊர்வலமும் ஒரு ஆர்ப்பாட்டமும் நடத்துவார்கள். பிற ஓட்டுக் கட்சிகள், உதிரி அமைப்புகளும் இந்த நாளைக் கடைப்பிடிப்பார்கள் சுவரொட்டிகள் ஒட்டுவார்கள். ஆனால், இவை எதையும் இன்று ஒசூரில் காணவில்லை. மே நாளுக்கு தொழிற்சங்கங்கள் சுவரொட்டி ஒட்டக் கூடாது என தேர்தல் கமிசன் சொல்லவில்லை என்றாலும், இவை அனைத்தும் ஓட்டு போதைக்குள் அடங்கிவிட்டன. தேர்தல் ஓட்டு வேட்டைக்குக் கூட மே நாளைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்த ஓட்டுச்சீட்டு தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன போலும்!
இன்று மே நாளும் ஞாயிற்றுக் கிழமையும் சேர்ந்து வந்ததால், ஒசூரில் பல ஆலைகளில் விடுமுறை வழங்கவில்லை. குறிப்பாக, சண்டே ஒர்க் செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு சென்று கொண்டுதான் இருந்தார்கள். இதனை எதிர்த்துக் கேட்டதற்காக வேலைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்கள். இவை ஒப்பந்தத் தொழிலாளர்கள் படும் துன்பம்! பு.ஜ.தொ.மு. தலைமையில் இன்று ஒசூரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் இத்துன்பத்திற்கான காரணங்களையும் தீர்வுகளையும் முன்வைத்து தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டு வகையில் அமைந்தது.
பேருந்துகளின் உறுமல், போக்குவரத்து நெரிசல், வியாபாரிகளின் கூவல் என ஓயாத பேரிரைச்சலால் சூழப்பட்ட ஒசூர் பேருந்து நிலையமும் அதன் அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலகமும் எழுச்சிகரமான பறை முழக்கத்தால் கவரப்பட்டது. பறை முழக்கமும் அதனைத் தொடர்ந்து உயிரைக் கொடுத்து தோழர்கள் எழுப்பிய வின்னைக் கிழிக்கும் ஆர்ப்பாட்ட முழக்கங்களும் பாதசாரிகள் முதல் பயணிகள் வரை அனைவரும் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்தது; பலரையும் நின்று கேட்க வைத்தது.
சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கில் தோழர்களும் தொழிலாளர்களும் திரண்டிருந்த மே நாள் ஆர்ப்பாட்டத்தை பு.ஜ.தொ.மு.வின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மேநாளின் தியாக வரலாற்றையும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்களின் வரலாற்றையும் நினைவுகூர்ந்த தோழர், பிரிக்கால் தொழிலாளர்கள் 8 பேர் இரட்டை ஆயுள்தண்டனை அனுபவித்து வருவதையும் மாருதி தொழிலாளர்கள் 3 ஆண்டுகளாக சிறையில் வாடுவதையும் நினைவு கூர்ந்து உரையாற்றினார். பிறகு இங்கே ஓசூரில் உள்ள லேலாண்டு, டி.வி.எஸ், டைட்டான், குளோபல் ஃபார்மாடெக், ஆவ்டெக், எக்ஸைடு போன்ற கம்பெனிகளில் தொழிலாளர்கள்மீதான நிர்வாகத்தின் ஒடுக்குமுறை, சி.எல், காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் என்ற முறையில் இளம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கசக்கிப் பிழிந்து வேலைவாங்கி உற்பத்தியிலக்கை எட்டியபிறகு அவர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி வெளியேற்றும் கொடுமைகளை பட்டியலிட்டு சாடினார். ஆலைநிர்வாகம் தங்கள் ஆலையில் உள்ள தொழிற்சங்கங்களில் தனக்கு பாதசேவைசெய்யும் தொழிற்சங்கங்களை மட்டும் அங்கீகரித்து வைத்துக்கொண்டு மற்ற நேர்மையானதொரு தொழிற்சங்கம் உருவாவதை தடைசெய்துவருகின்றன. பாதுகாப்பற்ற வேலைமுறையினால் விபத்துக்குள்ளாகி இறக்கின்ற தொழிலாளர்களை தனதுக்கணக்கில்கூட கொண்டுவராமல் தட்டிக்கழித்து தனதுக் கொலையை மறைத்துவிடுகின்றன, இதனை எதிர்த்து குரல் கொடுக்கும் தொழிலாளர்கள் அல்லது சங்கங்களை மிரட்டி பணியவைக்கின்றன. இதுபோன்ற கொடூரமான கார்ப்பரேட் சுரண்டல்களை, கொலைகளை கோடிக்கால் பூதமான தொழிலாளர் வர்க்கம் தியாகத்திற்கு அஞ்சாத நெஞ்சுரத்துடன் புரட்சிகர சங்கமாய் எழுந்து முறியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று அறிவித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மண்ணைத் தோண்டி “வெட்டி எடுத்த தங்கம் யாருக்கு” என்ற புரட்சிகர பாடலை பென்னாகரம் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் இசைத்து மக்களுக்கு உணர்வூட்டினர். தொடர்ந்து, கோலார் தங்கவயல் தொழிலாளர்கள் குறிப்பாக, பெம்மல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் நகராட்சி ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்களின் அண்மைகால போராட்ட அனுபவங்களைத் தொகுத்து தோழர் ரமேஷ் எடுத்துரைத்தார். குறிப்பாக கே.ஜி.எப் ஒப்பந்தத் தொழிலாளர்களின் இன்றைய அவல வாழ்க்கை நிலைமைகளை விவரித்துக்கூறி அதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள புரட்சிகர தொழிற்சங்கத்தின் தேவையை வலியுறுத்தி உரையாற்றியது நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
தொடர்ந்து விவசாயத்திலும் சிறுதொழில்கள், சிறுவணிகத்திலிருந்தும் மக்கள் வெளியேற்றக் காரணமாக உள்ள கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதிக்கம், காண்டிராக்ட்மயம் குறித்து விவசாயிகள் விடுதலை முன்னணியின் பென்னாகரம் வட்டச் செயலாளர் தோழர்.கோபிநாத் விளக்கிப் பேசி விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒன்றிணைந்து மீண்டும் ஒரு மேநாளை உருவாக்குவோம் என அறைகூவி பேசினார்.
“25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டமைப்பு முழுவதும் இன்று இல்லை; குறிப்பாக தொழிலாளர் நலத்துறையை எடுத்துக் கொண்டால் அது முழுக்க முழுக்க முதலாளிகளின் நலனைப் பேணுகின்ற துறையாக வெட்டவெளிச்சமாகவே தெரிகிறது. இதனை தொழிலாளர்கள் தங்களின் சொந்த அனுபவத்தின் ஊடாகவே காணமுடியும். பார்ப்பனர்களின் மனுதர்ம படிநிலைகளைப்போலவே தொழிலாளர்கள் சி.எல், காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் என பல படிநிலைகளாக பிரித்துவைத்து அடிமைகளாக்கி கார்ப்பரேட் முதலாளிகளால் சுரண்டப்பட்டுவருகின்றனர். அரசுத் துறை என்று சொல்லப்படு்பவை அனைத்துமே கார்ப்பரேட் முதலாளிகளின் அலுவலகமாக மாறிப்போயுள்ளது. மொத்தத்தில் அரசுக் கட்டமைப்பு முழுவதுமே கார்ப்பரேட்மயமும் காண்டிராக்ட்மயமும் இணைந்த ஒரு கலவையாக உள்ளது.” எனவே, ஆளத் தகுதியிழந்த அரசுக் கட்டமைப்பு என்பதையும் மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.முத்துக்குமார் உரையாற்றினார்.
இறுதியாக, பு.ஜ.தொ.மு.வின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ராஜூ நன்றியுரையாற்றினார்.
இப்படிக்கு,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தொடர்புக்கு : 9788011784, ஓசூர்.
திருச்சியில் மே தினத்தை ஒட்டி வெளியிடப்பட்ட சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள்:
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஏப். 20, 2016 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் தொகுப்பு!
———————————————————
அய்யா நம்மாழ்வார் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் நம் அரசியல்வாதிகளுக்கு திடீர் அக்கறை முளைத்திருக்கிறது. நம்மாழ்வார் பெயரில் விவசாயத் திட்டம், இயற்கை விவசாயத்திற்கு மானியங்கள், விவசாயத்திற்கு தனி பட்ஜெட், விவசாயக் கடன் தள்ளுபடி என தேர்தல் வாக்குறுதிகளை பல கட்சிகளும் அறிவித்திருக்கின்றன. காதல்-காமெடி-டூயட்-சென்டிமென்ட்-சண்டை-குத்துப்பாட்டு-என மசாலா படத்தின் வெற்றி பார்முலா போல இருக்கும் இவர்களின் தேர்தல் அறிக்கைகள் ஒரு பக்கம் இருக்க, விவசாயத்தின் மீது இவர்களின் திடீர் அக்கறைக்கு காரணம் என்ன? இவர்கள் கூறுவது நடைமுறை சாத்தியமானதா?
50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயன்படுத்திய ரசாயான உரங்களால் மேல்மண்ணில் உள்ள உயிர்ச்சத்துக்களை முற்றிலுமாக இழந்து நிலமே மலடாகிவிட்டது! பிள்ளைக்கு புட்டிப் பால் ஊட்டுவதைப் போல, அவ்வப்போது ரசாயான உரம் போட்டால்தான் எதுவும் விளையும் என்கிற அளவுக்கு சீரழிந்து கிடக்கிறது விவசாயம்! இந்நிலையில், எருவையும்-மண்புழு உரத்தையும் போட்டு ஒரே நாளில் இயற்கை விவசாய நிலமாக மாற்ற முடியுமா?
“ரசாயன உரத்தின் பாதிப்பிலிருந்து நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு மாற்ற வேண்டுமானால், குறைந்தது 3 வருடமாகும். முதல் வருடத்தில் ரசாயன உரம் 75 சதவீதம், இயற்கை உரம் 25 சதவீதம், அடுத்த ஆண்டில் 50:50, அடுத்து 25:75 என்று படிப்படியாக இயற்கை உரப் பயன்பாட்டை அதிகரிப்பதன் வாயிலாகவே இயற்கை விவசாயத்திற்கு உகந்ததாக நிலத்தை மாற்றமுடியும்! இந்த 3 வருடத்திலும் சராசரியை விட குறைந்த விளைச்சலே கிடைக்கும்!” என்கிறார்கள் நிபுணர்கள்! இவ்வாறு முறையான பரிசோதனைக்கும்,கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட்ட நிலத்திற்குத்தான் ‘அபெடா’ நிறுவனம் ‘ஆர்கானிக்’ சான்றிதழ் வழங்குகிறது! இச்சான்றிதழ் இருந்தால்தான் விளைபொருள்களை ஏற்றுமதி செய்ய முடியும்!
ஏற்கனவே உரம் முதலான இடுபொருட்கள் விலை உயர்வு, விளைபொருட்கள் விலை வீழ்ச்சி என்று கடனில் மூழ்கி நிலத்தை விட்டு ஓடும் நிலையில் உள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு இதுவெல்லாம் ஒத்துவருமா?
நடைமுறையில், ஒரு சில பணக்கார விவசாயிகளும், ஐ.டி.துறையிலிருந்து வரும் புதுப் பணக்காரர்களும்தான் இயற்கை விவசாயம் செய்கின்றனர். 10 ஏக்கர் நிலம் இருந்தால், 9 ஏக்கரில் ரசாயன உரம் போட்டுவிட்டு, ஒரு ஏக்கரில் இயற்கை விவசாயமும் செய்கிறார்கள். இவர்களுக்கு 3 வருட இழப்பு அல்லது வருமானக் குறைவு என்பது பெரிய பாதிப்பாக இருக்காது. மேலும் நம்மாழ்வார் முன்வைக்கும் இயற்கை விவசாயம், நம் பாரம்பரிய விவசாயத்தோடு தொடர்புடையது. இது பன்னாட்டுக் கம்பெனிகளின் வீரியரகப் பயிர்களுக்கு பயன்படாது என்பதே உண்மை! ஏனெனில், வீரியரகப் பயிர்கள் அனைத்தும் ரசாயன உரங்களின் தன்மைக்கு ஏற்பவே உருவாக்கப்படுகின்றன.
ரசாயனப் பாதிப்புகளில்லாத இயற்கை உணவுப் பொருள்கள் என்பது நடுத்தர வர்க்கத்தின் விருப்பம் என்பதையும் தாண்டி பேஷனாகி விட்டது. உடனே முதலாளிகளும் மூலிகை-இயற்கை ஆர்வலர்களாக உருமாறத் தொடங்கி விட்டனர். இதனால்தான் பப்பாளி-வேம்பு சோப்பு, கற்றாழை கிரீம், மூலிகை பற்பசை, துளசி மிட்டாய், புதினா பிஸ்கட்டுகள் போன்றவை சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன, மேலும், உலக நாடுகளின் ஏற்றுமதி சந்தையில் இது அதிக லாபம் ஈட்டக் கூடியதாகவும் இருக்கிறது. அதிகரித்துவரும் இதன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது நம்நாட்டு விவசாயத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
“நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கரில் இயற்கை விவசாயம் அறிமுகப்படுத்தப்படும்” என அறிவித்துள்ள பிஜேபி அரசு, நடப்பு பட்ஜெட்டில் இதற்காக 412 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது!
‘வேளாண் மின்னணு மேடை, வேளாண் சந்தைகளை இணையதளம் மூலம் இணைப்பது, வேளாண் பொருள்களுக்கான ஆன்லைன் சந்தை ஆகியவை மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போகிறோம்” என்று நடப்பு பட்ஜெட்டில் மோடி அரசு தம்பட்டம் அடித்ததையே தி.மு.க, ம.ந.கூ, பா.ம.க ஆகியவற்றின் தேர்தல் அறிக்கைகளும் வழிமொழிகின்றன.
இதன் மூலம், உலகின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, நம்நாட்டில் ஒரு பொருளை அதிகளவில் கொள்முதல் செய்வதன் மூலம் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் விலையை உயரவிட்டு, பிறகு அதிக விலைக்கு சந்தையில் விற்றுக் கொள்ளையடிக்க முடியும்! ஏற்கனவே இத்தகைய பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் வர்த்தக சூதாட்டத்திற்காக வேளாண் பொருள்களின் மீதான ஆன்லைன் வர்த்தகத்தை ஏற்கனவே அனுமதித்துள்ளது மத்திய அரசு! அண்மைக் காலங்களில் உப்பு, புளி, மிளகாய், மஞ்சள், பயறுவகைகள், எண்ணெய் வகைகள் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருள்களின் கடும் விலைவாசி உயர்வுக்கும் இந்த ஆன்லைன் வர்த்தகமே முக்கிய காரணம்!
வேளாண் பொருள்கள் விற்பனைச் சந்தையில், பெரு முதலாளிகளும், பன்னாட்டுக் கம்பெனிகளும் நுழைவதற்கு வழிவகுப்பதுதான் ஆன்லைன் வர்த்தகத்தின் உண்மையான நோக்கம்.! பொட்டலம் மடித்துக் கொடுக்கும் அண்ணாச்சி மளிகைக் கடைகள் இருந்த இடத்தில், சூப்பர் மார்க்கெட்டுகளும், சலுகை விலையில் விற்கும் பெரும் மால்களும், வணிகப் பெயரிட்ட மளிகைச் சாமான்களின் விற்பனையும் அதிகரித்து வருவது, ஆன்லைன் வர்த்தகத்தின் மற்றுமொரு கோர முகம்தான் !
அந்நியக் கம்பெனிகள் சில்லறை விற்பனையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு தேவையானதை மொத்தமாக ஒரே இடத்தில் கொள்முதல் செய்வதற்கு வசதியாக தற்போது வேளாண் சந்தைகளையும் ஆன்லைனில் இணைக்கும் திட்டத்தில் மோடி அரசு இறங்கியுள்ளது!. அரைகுறையாக இன்னமும் நிலத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு-குறு விவசாயிகளை, நிலத்திலிருந்து விரட்டியடிக்கவும், சிறுவணிகர்களை முற்றாக ஒழித்துக் கட்டவுமே இது உதவும்!
இவ்வாறு ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் மக்கள் விரோத,தேசத்துரோகக் கொள்கைகளால் கட்டி எழுப்பப் பட்டிருக்கும் நிலையில், தனி பட்ஜெட், கடன்தள்ளுபடி, இயற்கை விவசாயம், ஆகியவற்றால் விவசாயிகளை வாழ வைக்கப் போகிறோம் என்கின்றன ஓட்டுக்கட்சிகள்!
வெயிலில் விவசாய மக்களை வம்படியாக அழைத்து வந்து கொல்லும் அ.தி.மு.கவின் தேர்தல் கூட்டங்கள் ஒரு புறம். இன்னொரு புறம் நம்புகின்ற அப்பாவிகளுக்கு, “தமிழகத்தின் தொழில்வளர்ச்சியை மேம்படுத்த, முதலீட்டாளர்களின் நீண்டகால நண்பனாக அரசு செயல்பட, அரசியல் சாராதவர்களைக்!! கொண்ட மாநில பொருளாதார வளர்ச்சி வாரியம் அமைக்கப்படும்” என்று முதலாளிகளுக்கு ஆதரவாக ஆப்படிக்கிறார் கலைஞர்! தி.மு.க, அ.தி.மு.க வுக்கு மாற்று தேடுபவரா நீங்கள்? இதோ, “பெரும் முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டும்” என்கிறது மாற்று அரசியல் புகழ் ம.ந.கூட்டணியின் தேர்தல் அறிக்கை! நீங்கள் ஓடி ஒதுங்குவதற்கு சட்டமன்ற ஜனநாயகத்திற்குள் பாதுகாப்பான இடம் எதுவுமில்லை!
– விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி.
அன்பார்ந்த நண்பர்களே,
மே தினத்தின் 130வது ஆண்டு இது. 1886-வது ஆண்டில் தொழிலாளி வர்க்கம் எத்தகைய அடக்கு முறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்தும், 8 மணி நேர வேலை என்கிற உரிமைக்காகவும் போராடி இரத்தம் சிந்தியதோ, அந்த கொடியநிலைமை இன்றைக்கு மீண்டும் வந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால், அடக்குமுறையும், சுரண்டலும் அப்போது இருந்ததைவிட பன்மடங்கு கொடூரமானதாகவும், நவீனப்படுத்துப்பட்டும் அமுல்படுத்தப்படுகிறது.
கார்ப்பரேட்மயம் – காண்டிராக்ட்மயம்!
எந்த ஒரு ஆலையிலும் நேரடி உற்பத்தி சாராத வேலைகளில் மட்டும் காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், நேரடி உற்பத்தி நடக்கிற வேலையிலும் காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்வது அதிகரித்து வருகிறது. எந்த ஆலையிலும் நிரந்தரத் தொழிலாளர்களது எண்ணிக்கையை விட காண்டிராக்ட் தொழிலாளர்களது எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. காண்டிராக்ட் தொழிலாளர்கள் இல்லை என்றால் ஆலையே ஓடாது என்கிற அளவுக்கு ஒட்டுமொத்த ஆலையுமே காண்டிராக்ட் தொழிலாளிமயமாகிவிட்டது.
நெருப்புக்குழம்பு ஒடுகின்ற இரும்பு உருக்காலையானாலும், தூசும், மாசும் மூச்சை முட்டுகின்ற சிமெண்ட் ஆலையானாலும், பாறைகள் சரிந்து சாகடிக்கின்ற சுரங்கமாக இருந்தாலும் நுரையீரல் திணற நூல் நூற்கும் பஞ்சாலையாக இருந்தாலும் காண்டிராக்ட் தொழிலாளி இல்லாமல் ஒரு துரும்பு கூட நகரமுடியாது. கல்லூரி பேராசிரியர் நியமனம் கூட காண்டிராக்ட் முறையில் நடக்கிறதென்றால் இதைவிட அவலம் வேறென்ன இருக்க முடியும்?
தொழிற்துறையின் உயிர்த்துடிப்பு!
ஆனால், உயிராதாரம் பறிப்பு!
தொழிலின் உயிர்த்துடிப்பாகிவிட்ட காண்டிராக்ட் தொழிலாளிக்கு உயிர்வாழும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. வேலை நிரந்தரம் கேட்டால் கேலி பேசுகிறான், முதலாளி. ஆபத்துகள் மிகுந்த வேலைகளில் கூட எந்த பாதுகாப்பும் இல்லாமல் வேலை செய்தாக வேண்டும் என்று நிர்ப்பந்தம். அப்போது ஆலை விபத்து ஏதேனும் ஏற்பட்டு உயிரே போனாலும் அற்பப்பணத்தை வீசி எறிந்துவிட்டு அடுத்த காண்டிராக்டுக்கு மாறி விடுகிறான், முதலாளி. ஆலைவிபத்துக்களில் செத்துப்போன பல்லாயிரக்கணக்கான காண்டிராக்ட் தொழிலாளர்களது கதியும், கதையும் இப்படித்தான் ‘முடிக்கப்பட்டது’.
காண்டிராக்ட் தொழிலாளிக்கு முறையான சம்பளம் கூட கிடைப்பதில்லை. நிரந்தரத் தொழிலாளிக்கு கிடைக்கின்ற சம்பளத்தில் பாதிகூட கிடைப்பதில்லை. இரண்டு பேரும் ஒரே வேலையை செய்தாலும் காண்டிராக்ட் தொழிலாளி என்றால் கொத்தடிமை தான். சம்பளத்தில் மட்டுமல்ல சாப்பிடும் சோற்றில்கூட இரண்டாம்தரமாக நடத்தப்பட்டு, அவமானத்தில் குன்றிப்போகிறான், காண்டிராக்ட் தொழிலாளி. இதனை நிரந்தரத் தொழிலாளியும், அவர்களது தொழிற்சங்கமும் கண்டும், காணாமலும் இருப்பது மானக்கேடு. இன்னும் ஒருபடி மேலே போய் நிரந்தரத் தொழிலாளிக்கு சம்பள உயர்வு கொடுத்து காண்டிராக்ட் தொழிலாளி மீதான சுரண்டலைப் பாதுகாத்துக் கொள்கின்றனர், முதலாளிகள். ஊழல்படுத்தப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களோ, முதலாளிகளின் இளைய பங்காளிகளாக மாறி காண்டிராக்ட் தொழிலாளிக்கு எதிரியாக மாறி, தனக்குத்தானே குழிதோண்டிக் கொள்கின்றனர்.
மறுகாலனியாக்கத்தால் தீவிரமாகும் நிலைமை!
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் – மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் விளைவாக விவசாயம் நாசமாகிப்போன நிலையில் தற்கொலை செய்து கொள்வதைவிட நகரத்துக்குப் போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று ஓடிவருகின்ற விவசாயிகளுக்கும், விவசாயக்கூலிகளுக்கும் வேறென்ன வழி இருக்கிறது? நெசவும், நூற்பும் பன்னாட்டுக்கம்பெனிகளது ஏகபோகத்துக்குப் போய்விட்டதால் நவீன எந்திரங்களுடன் போட்டிப்போட முடியாமல் என்ன இருக்கிறது?
செய்து வந்த சிறுதொழிலை நவீன எந்திரங்கள் முழுங்கி விட்டன. சிறுவணிகத்தை கார்ப்பரேட் கடைகளும், ஆன்லைன் வர்த்தகமும் காவுவாங்கி விட்டன. இதனால் பிழைப்புத் தேடி அலைபவர்கள் வேறெங்கு போக முடியும்? இவர்கள் அனைவரையும் தொழிற்பேட்டைகள் நரகத்துக்கு தள்ளிவிடுகின்ற நிலையில், காண்டிராக்ட் புரோக்கர்களைத் தவிர வேறு யாரும் கைகொடுப்பதில்லை. காண்டிராக்ட் கூலிகளில் பெரும்பாலானோர் இப்படி வந்தவர்கள் தான். எந்த மலிவான கூலிக்கும் உழைப்பது, எத்தனை ஆபத்தான வேலையையும் செய்வது என்கிற நிர்ப்பந்தத்தில் வாழ்கின்ற இவர்களை வைத்துத் தான் கார்ப்பரேட் உலகம் தன்னுடைய இலாப வெறியை தீர்த்துக் கொள்கிறது.
20 காண்டிராக்ட் தொழிலாளருக்கு மேல் வைத்துக் கொண்டால் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்கிற விதிமுறையினை மாற்றி, 100 பேர் வரை லைசென்ஸ் இல்லாமலேயே வைத்துக் கொள்ளலாம் எனவும், எந்த வேலையிலும், எத்தனை மணிநேரத்துக்கும் காண்டிராக்ட் தொழிலாளியை ஈடுபடுத்தலாம் எனவும் சட்டத்திருத்தம் செய்வதற்கு மோடியின் அரசு தயாராகி வருகிறது. சட்டத்தின் பெயரால் கட்டுப்பாடுகள் இருக்கின்ற போதே கசக்கிப்பிழிகின்ற முதலாளிகள், சுரண்டலுக்கும், அடக்குமுறைகளுக்கும் சட்டபூர்வமாகவே அங்கீகாரம் கிடைத்து விட்டால் எப்படி நசுக்குவார்கள் என்பதை நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது.
தொழிலாளர்களது உரிமைகளை உத்திரவாதம் செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற தொழிலாளர் நலத்துறையானது, முதலாளிகள் நலத்துறையாக அப்பட்டமாக செயல்படுகிறது. தொழிலாளர்களது சட்டபூர்வமான கோரிக்கைகளைக்கூட பரிசீலிக்க மறுப்பதோடு, நாங்கள் முதலாளிகள் பக்கம் தான் நிற்போம் என்று பகிரங்கமாகச் சொல்லுகின்றனர், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தொழிலாளர்களை வேட்டையாடுவதற்கு முதலாளிகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்துகிற, முன்னாள் தொழிலாளர் இணை ஆணையரான ரவீந்திரன், இதற்கொரு எடுத்துக்காட்டு.
தொழிலாளர் நலத்துறையின் தொழிலாளர் விரோதப்போக்குக்கு அரியானாவில் மாருதி ஆலை, ராஜஸ்தானில் ஹோண்டா மோட்டார்ஸ், மராட்டியத்தில் பஜாஜ் ஸ்கூட்டர்ஸ், குஜராத்தில் நானோ, கர்நாடகத்தில் டயோட்டா, தமிழகத்தில் ஹூண்டாய், நோக்கியா, ஜி.எஸ்.எச். என பலநூறு உதராணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் தான் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்கு எதிர் நிலையாகவும், செயல்படுவதற்கு தகுதியற்றதாகவும் மாறியுள்ள நிலையில் தொழிலாளர் நலத்துறையானது ஒரு சுற்று அதிகமாக நாறுகிறது.
மூடப்பட்ட கதவு தானாகத் திறக்காது; உடைத்தெறி!
சமீபத்தில் பெங்களுருவில் ஆயத்த ஆலைத்தொழிலாளர்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தொழிலாளர்கள் தங்களது பி.எப். சேமிப்பினை பெறுவதற்கு மத்திய அரசு போட்ட புதிய விதிமுறைகளை தகர்த்தெறிந்தது, பெங்களுரு பெண் தொழிலாளர்கள் முன்னின்று நடத்திய போராட்டம். தினம் தினம் தீவிரமடைந்து வருகின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு மென்மையான வார்த்தைகளோ, சாந்தமான சட்டபூர்வமான போராட்டங்களோ புரியாது. அவற்றை நசுக்கத்தான் செய்யும். 1886-ல் மேதினத்தில் தொழிலாளி வர்க்கம் சிந்திய இரத்தமும், மேதினத் தியாகிகளது உயிர்ப்பலியும் நமக்கு திரும்பத் சொல்லிக் கொடுப்பது ஒன்றைத் தான். தொழிலாளி வர்க்கமே, அடங்கிக்கிடக்கின்ற உனது குரலையும், கைகளையும் உயர்த்து! மூடப்பட்டுள்ள நெடுங்கதவை நொறுக்கு. காட்டுத்தீயாய் பரவிடு. கார்ப்பரேட் கொட்டத்தைப் பொசுக்கிடு!
நிகழ்ச்சி நிரல்:
நேரம்: மாலை 4:30
பேரணி : பவர் ஹவுஸ் – சிவானந்த காலனி
நேரம் : மாலை 5:30
ஆர்ப்பாட்டம் : சிவானந்தா காலனி
தலைமை: தோழர் M. கோபிநாத், அமைப்பு செயலாளர் பு.ஜ.தொ.மு கோவை.
பேரணி துவக்கம் : தோழர் C.திலீப், மாவட்ட செயலாளர், பு.ஜ.தொ.மு கோவை.
கண்டன உரை: தோழர் விளவை இராமசாமி, மாநில துணைத்தலைவர், பு.ஜதொ.மு.
தோழரை: தோழர் பாலன், பு.ஜ.தொ.மு, நீலகிரி மாவட்டம்
நன்றி உரை: தோழர் நித்தியாநந்தன், இனைச்செயலாளர், பு.ஜ.தொமு கோவை.
தொடர்புக்கு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
க.எண்.137 முதல் தளம், K.R.R.காம்ப்ளக்ஸ்,
தடாகம் சாலை, K.N.G.புதூர் (பிரிவு), கோவை – 641 108.
90924 60750
28-04-2016 நள்ளிரவு 12.45 மணியளவில் விருத்தாசலம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரின் நேர்முக காவல் ஆய்வாளர் சுரேஷ்கண்ணன் ஆகியோர் மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம் செல் போனில் பேசி உங்கள் வீட்டுக்கு அருகில் நிற்கிறோம். வெளியே வாருங்கள் என அழைத்துள்ளனர். அதற்கு ராஜு “நான் வெளியூரில் இருக்கிறேன் இந்த நேரத்தில் பேசுவதும் வீட்டுக்கு வருவதும் அவசியமில்லை” என பேசினார்.
“இன்று விழுப்பரத்தில் ஜெயலலிதா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, நீங்கள் போராட்டம் நடத்த போவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அதனால்தான் டி.ஐ.ஜி, எஸ்.பி சொல்லி நாங்களே இந்த நேரத்தில் வந்துள்ளாம். நேரில் பேச வேண்டும் வாருங்கள்” என அழைத்தனர். “அறிவிக்காமல் எந்த போராட்டமும் எங்கள் அமைப்பினர் செய்ய மாட்டார்கள். இன்றைய தினம் எந்த போராட்டமும் அறிவிக்கவில்லை. க்யூ பிரிவு போலீசார் வேண்டுமென்றே வதந்தியை கிளப்புவார்கள் நீங்கள் போங்கள்” என போனில் பேசி அனுப்பி விட்டார்.
அதிகாலை 4.30 மணியளவில் வெளியூரில் இருந்து வீட்டிற்கு ராஜு வந்துள்ளார். வீட்டிற்கு செல்லும் அனைத்து வழிகளிலும் போலீசு ஜீப்போடு காவலுக்கு போட்டுள்ளனர். வீட்டை விட்டு வெளியே போக முடியாத நிலைமை. பத்திரிக்கையாளர்களும். மக்கள் அதிகார தோழர்களும், பல்வேறு கட்சி பிரமுகர்களும் பொது மக்களும் செய்தி கேள்விப்பட்டு கூட்டம் கூடிய பிறகு காலை 8-00 மணியளவில்தான் போலீசார் கல்லூரி நகரை விட்டு சென்றனர். ஆனால் வெளிப்பகுதியில் மப்டியில் அதிகாமான போலீசாரை தற்போதும் கண்காணிப்புக்கு அனைத்து வழியிலும் போட்டுள்ளனர்.
விழுப்பரத்தில் மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், தோழர் ரஞ்சித் ஆகியோரை காலை 6-00 மணிக்கு வீட்டில் வைத்து கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். ஜெயா பொதுக்கூட்டம் நடத்தினால் போலீசு பாதுகாப்பு கொடுக்கட்டும் மக்கள் அதிகார தோழர்களை கைது செய்வது காவல் துறையின் ரவுடித்தனம். சுதந்திரம் ஜனநாயகம், சட்டம் மனித உரிமை எதுவும் ஜெயா ஆட்சியில் கிடையாது. தேர்தல் ஆணையம் ஜெயா கட்டுபாட்டில் இருப்பதால் அது தொடர்கிறது. மக்கள் அதிகாரம் சார்பில் காவல் துறையின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மதுவிலக்கை தேர்தல் வந்ததால் அனைத்து கட்சிகளும் வாக்குறுதி அளிக்கின்றனர். மக்கள் அதிகாரம் ஒரு வருடமாக மதுவிலக்கை மக்களே அமுல்படுத்த போராடி வருகிறது. தேர்தலுக்கும் மக்கள் அதிகார அமைப்பினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தேர்தலினால் மக்களின் எந்தக் கோரிக்கையும் நிறைவேறாது. அதனால்தான் மக்கள் அதிகாரம் அமைப்பினைக் கண்டு அரசு பயப்படுகிறது, அடக்குமுறையை ஏவிவிடுகிறது. இதனால் எங்களது போராட்டம் ஓயாது, முன்னிலும் அதிகமாக போராடுவோம். டாஸ்மக் கடைகளை நிரந்தரமாக மக்கள் மூடுவார்கள்!
தகவல்: மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
இந்தியாவில சுமார் 33 கோடி மக்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவை சேர்ந்த மாரத்வாடா பகுதியில் வறட்சியோ தலைவிரித்தாடுகிறது. மோடி அரசு முன்வைக்கும் “வளர்ச்சி” அரசியலின் உண்மை முகம் காண விரும்புவோர் மராட்டிய மாநிலத்திற்கு செல்ல வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் இந்த வறட்சியும் அந்த வறட்சியை எதிர் கொள்ளாமல் போகும் மத்திய மாநில அரசுகளும் சேர்ந்து மராட்டியத்தின் மராத்வாடா பகுதியில் யாரும் வாழ முடியாத நிலையை கொண்டு வந்துள்ளது.
அங்கே சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசையும் தாண்டி மக்களை வதைக்கிறது. வெயிலின் கொடுமையால் கிராமப்புறத்தில் வசிக்கும் மக்கள் எங்கெல்லாம் நீர் ஆதாரங்கள் கிடைக்கின்றதோ அதை அலைந்து திரிந்து பருகி உயிர் வாழும் மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இங்குள்ள கிணற்று நீரை பருகுவதினால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்தும், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வேறுவழியின்றி மேலும் மேலும் கிணற்றை தோண்டி அதே நீரை குடித்து அவதிக்குள்ளாகின்றனர். மருத்துவ துறை தனியார் மயமாகி, அரசு கைவிடும் போக்கினால் இம்மக்கள் வாழ்வில் மட்டுமல்ல, நோயிலும் தாக்கப்படுகின்றனர்.
வறட்சி மற்றும் அரசுகளின் அலட்சியம் காரணமாக பலர் ஊரை விட்டே சென்றுவிட்டனர். இங்குள்ளவர்கள் தங்களின் கிணறுகளில் தோண்டும் ஒவ்வொரு மீட்டரிலும் வரும் நீரில் கால்சியமும் உப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
யானைப்பசிக்கு சோளப்பொறி போல, மகாராஷ்டிரா அரசு இரயில்களின் மூலம் தண்ணீரை சொட்டு சொட்டாக அளிக்க முயல்கிறது. அதுவும் கிடைக்காத மக்கள் தண்ணீருக்கு அவ்வட்டாரம் முழுவதும் அலைகிறார்கள். தமிழகத்தில் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருப்போர் கொஞ்சம் மராட்டியத்தின் அவலத்தை பாருங்கள்! தமிழகமும் இந்நிலை நோக்கித்தான் செல்கிறது.
நன்றி: Al Jazeera, புகைப்படங்கள் Neha Tara Mehta
தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: கலா
தேர்தல் புறக்கணிப்பால் என்ன பயன்? இதையே வலிந்து பேசிக் கொண்டிருப்பதால் நீங்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட மாட்டீர்களா என்று ஒவ்வொரு தேர்தலின் போதும் சிலர் சந்தேகம் எழுப்புகிறார்கள்.
இதையே இன்னும் விரித்துக் கூறுகிறார் வாசகர் சுகதேவ்.
“உணர்ச்சிப்பூர்வமான ஒரு காரணம் இருந்தால் மட்டும் தான் மக்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள். உடனடி நலன் சார்ந்த ஒன்றை மட்டுமே அவர்கள் நெருக்கமாக உணர்கிறார்கள். அரசுக் கட்டமைப்பின் செயல்படாத தன்மைக்காக தேர்தல் புறக்கணிப்பில் அமைப்புகள் ஈடுபடலாம். மக்கள் ஈடுபடுவது கடினம்.
ஒரு பிரச்சினையின் நீண்ட பரிமாணத்தை மக்கள் புரிந்து கொள்வது சிரமம். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் வேட்டந்திட்டை என்ற கிராமத்தில் மக்களின் போராட்டத்தை கடுமையாக நசுக்கி உள்ளது போலீஸ். அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஜூ.வி நிருபரை பார்த்து ஒரு பெண்மணி எம்.ஜி.ஆர் தான் அவரை அனுப்பி வைத்ததாக சொன்னாராம்.
தேர்தலில் ஈடுபடாத கட்சிகளை மக்கள், ஊடகங்கள் மற்றும் அரசு கூட பொருட்படுத்துவதில்லை. மக்களுக்கு அவநம்பிக்கை. ஊடகங்களுக்கு சுவாரசியமின்மை. அரசுக்கு கையாள்வது எளிதாக இருக்கிறது. நா.த.க, பா.ஜ.க ஆகியவை பேராபத்தாக தமிழ்ச் சமூகத்தில் வளர்ந்து வருகின்றன. இதனை தேர்தல் புறக்கணிப்பு உத்தி தடுத்து விடுமா என்று சிந்திப்பது நல்லது. இன்னொரு பக்கம் அரசு மேலும், மேலும் மக்களை வதைத்து வருகிறது. தனது தோல்வியை மறைக்க இன்னும் ஒரு ஐந்து வருடத்தில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாய ஆணை பிறப்பிக்கப்படலாம். குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை அமலில் இருக்கிறது. அப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய்ய முடியும்? நீதிமன்ற ஆணைக்கிணங்க மனித உரிமை பாதுகாப்பு மையத்தை மக்கள் உரிமை பாதுகாப்பு மையமாக மாற்றியது போன்று மக்கள் அதிகாரமும் அப்படி ஒரு நெருக்கடிக்கு பிறகு முடிவை மாற்றிக் கொள்ள நேரிடும். அப்படி செய்தால் அது பெரும் இழப்புக்கு பிறகு எடுக்கும் முடிவாக இருக்காதா?
காஷ்மீர் மக்களாலேயே புறக்கணிக்க இயலாத தேர்தலை இந்தியாவின் பிற பகுதிகள் புறக்கணிக்க இயலுமா?” – சுகதேவ்
“மனித உரிமை“ பெயரை மனித உரிமை அமைப்புக்கள் பயன்படுத்தக் கூடாது எனும் நீதிமன்ற ஆணைக்கிணங்க மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் என்பதாக மாற்றியிருக்கிறார்கள். இது வெறும் பெயர் மாற்றமே அன்றி கொள்கை மாற்றமல்ல. ஒரு வேளை அனைவரும் வாக்களிப்பது கட்டாயம் என்று அரசு உத்தரவு போட்டால் அதை ஏற்கத்தானே வேண்டுமென நினைக்கிறார் சுகதேவ்.
இந்த வாதத்தை நீட்டித்தால் ஆளும் வர்க்கம் சட்டபூர்வமாக அனுமதித்தால் மட்டுமே ஒரு நாட்டில் புரட்சி நடத்த நினைக்கும் கம்யூனிசக் கட்சிகளின் விருப்பம் ஈடேறும் என்றாகிறது. அரசு, நீதிமன்றங்களை எதிர்த்துக் கொண்டு என்ன அரசியல் வேலை செய்யமுடியும் என்று ஐயப்படுகிறார் நமது வாசகர்.
முதலாளித்துவ ஜனநாயகம் நிலவும் நாடுகளில் அந்த “ஜனநாயகம்” வழங்கும் வாய்ப்புக்களை ஒரு புரட்சிகர கட்சி பயன்படுத்திக் கொள்கிறது, அவ்வளவே. மாறாக அந்த வாய்ப்புதான் மக்களிடையே வேலை செய்யவும், புரட்சியை நிறைவேற்றவும் நிபந்தனை என்று புரிந்து கொள்வது பாரிய பிழை. புரட்சி என்பது ஆளும் வர்க்கங்களை தூக்கி எறியும் ஒரு மாபெரும் நடவடிக்கையென்றால் அதை ஒருக்காலும் முதலாளித்துவ அரசு அனுமதிக்கவே அனுமதிக்காது.
எனவே அவர்களது ஜனநாயகம் எந்த அளவு அனுமதிக்கிறதோ அதை பயன்படுத்திக் கொள்கிறோம், அதற்கு மேல் மீறுகிறோம். அந்த வகையில் ஒரு கம்யூனிசக் கட்சி வெளிப்படையாக மட்டுமல்ல இரகசியமாகவும் செயல்படுவதற்கு தயாராக இருக்க வேண்டும். புரட்சி நடந்த நாடுகளில் கம்யூனிசக் கட்சிகள் மேற்கண்ட இருமுறையிலும் வேலை செய்திருக்கின்றன.
நமது நாட்டைப் பொறுத்தவரை இங்கு முதலாளித்துவ ஜனநாயகம் என்பது அரசு வடிவத்தில்தான் உள்ளது. சமூக உள்ளடக்கத்திலோ அரை காலனியாதிக்கமும், அரை நிலபிரபுத்துவமுமே நிலவுகிறது. அதனால்தான் இதை போலி ஜனநாயகம் என்று அழைக்கிறோம்.
இன்றைக்கு கட்டமைப்பு நெருக்கடியின் காலத்தில் இந்த போலி ஜனநாயகத்தை மக்களே உணர்ந்து கொண்டு பேசுகிறார்கள். அரசு உறுப்புகள் எதையும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை. கடைசியாக நடந்த பெங்களூரு தொழிலாளிகளின் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மத்திய அரசின் பி.எஃப் நிதியை முடக்கும் உத்திரவுக்கு எதிராகப் போராடியவர்கள் சாதாரண தொழிலாளிகள் மட்டுமே. அவர்களில் கணிசமானோர் பகுதி நேரத் தொழிலாளிகளும் கூட. இந்த அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வர அவர்கள் மனு தாக்கல், மந்திரிகளிடம் முறையீடு, கலெக்டரிடம் கருணை மனு இன்னபிறவெல்லாம் வேலைக்காகாது என்பதை புரிந்து கொண்டவர்கள். அதனால்தான் மத்திய அரசு ஒரிரவில் உத்திரவை ரத்து செய்யும் வண்ணம் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தினார்கள்.
பி.ஆர். பழனிச்சாமி கிரானைட் கொள்ளை முதல் அம்பானியின் இயற்கை எரிவாயு கொள்ளை வரை அனைத்தையும் இந்த அரசமைப்பே காப்பாற்றுகிறது என்பதை மக்கள் அறிவார்கள். தற்போதைய தேர்தலில் அ.தி.மு.கவின் ஊழல் பணம் கோடி கோடியாய் கைப்பற்றப்பட்டாலும் அந்தக் கட்சியை தடை செய்ய வேண்டும், குறைந்த பட்சம் தேர்தலிலாவது போட்டியிடத் தடை செய்ய வேண்டும் என்று இங்கே ஏதோ ஒரு ஊடகத்தில் கூட பேசப்படாததற்கு என்ன காரணம்? அதுதான் போலி ஜனநாயகம்.
இருப்பினும் இதெல்லாம் தெரிந்த மக்கள் வாக்களிக்கத்தானே போகிறார்கள் என்று சுகதேவ் கேட்கிறார். ஆம், வாக்களிக்கத்தான் போகிறார்கள். ஆனால் அது அவர்களது தலையெழுத்தை மாற்றும் என்றோ, பாரிய மாற்றம் வரும் என்பதாலோ அல்ல. சாதாரண மக்களைப் பொறுத்த வரை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிப்பது என்பது மாதம் ஒரு முறை ஆண்டவனை வழிபடுவது போலத்தான். தனது பிரச்சினைகளை எள்ளளவு கூட சாமி குறைக்காது என்றாலும் இந்த வழிபாடு மாற்ற முடியாத ஒரு சடங்கு போல நிலவுகிறது, அவ்வளவுதான்.
தேர்தல் பரபரப்பு என்பது மக்களைப் பொறுத்தவரை அதிக பட்சம் ஒரிரு வாரங்களுக்கு மட்டுமே. அதற்கு முன்னும் பின்னும் இந்தத் தேர்தல் அரசியல் குறித்து அதாவது இதுதான் தமது வாழ்க்கையில் பாரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பதாக ஒரு குழந்தை கூட நினைக்காது. இன்னும் எளிமையாகச் சொன்னால் தோற்றுப் போன இந்த அரசு என்பது ஏதோ ரேசன் கார்டு, சாதிச் சான்றிதழ், இலவசங்கள் அளிப்பது போன்ற சில்லறைச் சமாச்சாரங்களுக்கு மட்டுமே பயன்படும் என்று பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.
எங்கே தேர்தல் புறக்கணிப்பு செய்தால் அந்த உரிமைகளை பெறமுடியாமல் போய்விடுமோ என்பதைத் தாண்டி மக்களுக்கு இந்த தேர்தலின் மீது எந்தக் காதலும் இல்லை. இல்லையென்றால் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு போன்ற முதன்மைத் தேவைகள் இந்த தேர்தல் மாற்றத்தால் மாறிவிடுமா என்று கேட்டுப் பாருங்கள்! எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனியார் கல்வியின் கொள்ளையோ, தனியார் மருத்துவமனைகளின் வழிப்பறியோ முடியாது என்பது தெரிந்த மக்கள் தேர்தலில் வாக்களிப்பதை மாபெரும் அரசியல் நடவடிக்கையாக கருதுவதில்லை. நாம் ஏன் கருத வேண்டும்?
முதலாளி என்ற முறையில் பாரிவேந்தர் பச்சைமுத்துவையும், காமடி என்ற பெயரில் நடிகர் கார்த்திக்கையும் தேர்தலுக்காக நேர்காணல் செய்யும் புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் போலவோ இல்லை இந்த ஊடகங்கள் கிளப்பும் இப்பேற்ப்பட்ட அக்கப் போர்களில் மண்டிக் கிடக்கும் அரதப்பழசான அபத்தக் காமடிகளை மாபெரும் அரசியல் விவாதமாக கருதும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் போலவோ மக்கள் தேர்தலை அணுகுவதில்லை.
தேர்தலுக்கு முந்தைய மாதத்திலோ, இல்லை தேர்தலுக்கு பிந்தைய மாதத்திலோ மக்கள் யாரும் சீமானின் பிளிறலையோ, வைகோவின் கண்ணீரையோ, ஜெயாவின் ஹெலிகாப்டரையோ, கருணாநிதியின் தேர்தல் அறிக்கை குறித்தோ நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.
யார் யாருடன் கூட்டணி, யார் யாருக்கு துரோகம் செய்கிறார்கள், யார் யார் குறித்து இரகசியங்கள் தெரிவிக்கிறார்கள், தொகுதி கிடைக்காமல் ஜனநாயகம் குறித்து புலம்புவர்கள் யார், எந்த தொகுதியில் யார் வெல்வார்கள், அந்தக் கணிப்பை யார் திறம்பட செய்கிறார்கள் இவைதானே ஒவ்வொரு தேர்தலின் போதும் பரபப்பாக பேசப்படுகிறது? இதில் ஒரு தேசத்தையோ இல்லை அந்த தேசத்து மக்களின் தலைவிதியையோ தீர்மானிக்கும் எதுவுமில்லை.
ஆக மக்களே சடுதியில் மறந்து போகும் தேர்தல் பரபரப்பை சுகதேவ் போன்றவர்கள் கொஞ்சம் தத்துவப்படுத்தி பார்க்கிறார்கள். அந்த ‘தத்துவம்’ சமூக இயக்கத்தின் விதிகளை மறந்து விட்டு சென்சேஷனில் சிக்கிக் கொள்கிறது, இதுதான் பிரச்சினை!
ஒவ்வொரு தேர்தலின் போதும் சில அறிஞர் பெருமக்கள் எமது தேர்தல் புறக்கணிப்பு குறித்து புள்ளிவிவரங்கள் கேட்பார்கள். அதாவது தமிழகத்தில் எத்தனை சதவீத மக்கள் தேர்தலை புறக்கணித்திருக்கிறார்கள், தேர்தல் புறக்கணிப்பை எவ்வளவு வருடமாக செய்கிறீர்கள் என்றெல்லாம் மடக்குவார்கள்.
தேர்தல் புறக்கணிப்பை மதிப்பிடும் அளவு கோல் வெறுமனே தேர்தலில் பதியப்படாத வாக்குகளை வைத்து மட்டுமல்ல. ஏனெனில் முந்தைய காலத்தில் இது போலி ஜனநாயகம் என்று நாம் மட்டும் பேசி வந்தோம். அப்போது ஏதோ ஒரு விதத்தில் மக்களுக்கு இந்த அமைப்பு மீது கொஞ்சமாவது நம்பிக்கை இருந்தது. இன்று அது துளியளவும் இல்லை. துறை சார்ந்து பார்த்தால் பல்வேறு பிரிவினர்களிடையே இந்த புரிதல் வளர்ந்து வருகிறது.
சட்டத்தை வைத்து பிழைக்கிறார்கள் என்று தூற்றப்பட்ட வழக்கறிஞர்களே இன்று நீதிமன்றங்களையும் ஊழல் நீதிபதிகளையும் அம்பலப்படுத்துகிறார்கள். அந்த அளவு நீதித்துறை திவாலாகியிருக்கிறது. வழக்கறிஞரை விடுங்கள், ஒரு ஏழையிடம் கேட்டால் கூட, குமாரசாமி கணக்குதான் நீதிமன்றத்தின் கணக்கு என்பதை சட்டென்று கூறிவிடுவார்.
மாருதி தொழிலாளியோ இல்லை கோவை பிரிக்கால் தொழிலாளியோ இந்த அரசும், நீதித்துறையும் யாருக்கு ஆதரவானது என்று கேட்டால் என்ன சொல்வார்? இந்துமதவெறியர்களையும், ரன்வீர் சேனா போன்ற ஆதிக்க சாதி குண்டர் படைகளையும் விடுதலை செய்து ஏராளமான தீர்ப்புகள் சமீப காலத்தில் வந்துள்ளன. கயர்லாஞ்சி போட்மாங்கே குடும்பத்தினரிடமோ இல்லை சுண்டூர் தாழ்த்தப்பட்ட மக்களிடமோ இல்லை முஃசாபர் நகர் முஸ்லீம்களிடமோ இந்த அமைப்பு மீது நம்பிக்கை இருக்கிறதா என்றால் கோபப்படமாட்டார்களா?
ஆனால் இந்த பிரிவு மக்கள் தேர்தலில் வாக்களிப்பார்களா என்றால் நிச்சயம் வாக்களிப்பார்கள். ஏன்? காசுமீரிலேயே தேர்தல் புறக்கணிப்பு சாத்தியமாகாத போது மற்ற பகுதிகளில் எப்படி சாத்தியமாகும் என்று சுகதேவ் கேட்பதை எடுத்துக் கொள்வோம். இங்கே தேர்தல் நடந்து விட்டதாலேயே காஷ்மீர் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முடிவுக்கு வந்ததா பொருளா? இல்லை இலட்சக் கணக்கில் துருப்புக்களை நிறுத்தியிருக்கும் இந்திய இராணுவம்தான் இனி போராட்டம் இல்லை, ஜனநாயகம் வந்து விட்டது என்று காலி செய்து வெளியேறுமா? காஷ்மீர் மாணவி ஒருவரின் நேர்காணலை சுகதேவ் படித்திருப்பார். அதில் இந்த அமைப்பு குறித்து ஏதாவது கடுகளவாவது நம்பிக்கை தெரிகிறதா?
டாஸ்மாக் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். சசி பெருமாள் எதற்காக உயிர் துறந்தார்? ஒரு கடையை இடம் மாற்றவேண்டும் என்ற நீதிமன்ற உத்திரவைக் கூட இந்த அரசு செயல்படுத்த மறுத்ததால்தானே? மக்கள் அதிகாரம் நடத்திய திருச்சி மாநாட்டின் மக்கள் உரைகளைக் கேளுங்கள்! வழக்கமாக தோழர்கள் பேசுவதைக் காட்டிலும் வீரியமாக மக்கள் பேசுகிறார்கள். காரணம் இந்த அமைப்பு திவாலாகி வருகிறது என்பதை நடைமுறை அனுபவமாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதை தேர்தல் பங்கேற்பு – புறக்கணிப்பு என்பதாக மட்டும் சுருக்கிப் பார்க்க வேண்டாம் என்கிறோம்.
அதே நேரம் இந்த தேர்தல் பங்கேற்பினால் ஏதோ ஒரு நம்பிக்கையை வைத்திருக்கவும் மக்கள் பயிற்று வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நாம் தேர்தல் புறக்கணிப்பையும் விடாது செய்ய வேண்டும். தோற்றுப் போன இந்த சமூக அமைப்பிற்கான மாற்று தோன்றி வளர்வதற்கேற்ப தேர்தல் புறக்கணிப்பும் வீச்சாக நடக்கும். இதைத்தாண்டி இதில் குறுக்கு வழி ஏதுமில்லை.
எவ்வளவு ஆண்டுகளாக தேர்தல் புறக்கணிப்பு செய்கிறீர்கள் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு, டாஸ்மாக் பிரச்சனையை இந்த அமைப்பு முறையால் தீர்க்க முடியாது என்ற உண்மையை மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர அமைப்புகள் பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் கொண்டு வரவில்லையா? அ.தி.மு.க தவிர அனைத்து கட்சிகளும் இந்த கோரிக்கையை கொள்கையளவிலாவது ஏற்கவில்லையா? அடுத்த அரசாங்கம் அது அ.தி.மு.க அல்லது தி.மு.க என்று யார் வந்தாலும் டாஸ்மாக்கை மூடாவிட்டால் பெரும் போராட்டம் வெடிப்பது உறுதி என்பதாக இந்த சமூக நிலைமை மாற்றப் பட்டிருக்கிறதா இல்லையா?
தேர்தல் புறக்கணிப்பை ஊடகங்கள் கண்டு கொள்ளப் போவதில்லை என்பதால் என்ன பிரச்சினை? நாம் சொல்லும் கட்டமைப்பு நெருக்கடி ஊடக உலகிற்கும் பொருந்தும். தேர்தல் குறித்த கட்சி மற்றும் வேட்பாளர் செய்திகள் பெரும் பணத்தை வாங்கிக் கொண்டு வெளியிடப்படுகின்றன, பெரும் முதலாளிகளே ஊடகங்களை ஏற்று நடத்துகிறார்கள்..இவையெல்லாம் என்ன? பச்சமுத்துவுக்கு கட்சி இருக்கிறது, கல்லூரி இருக்கிறது, ஊடகமும் இருக்கிறது அதே போல வைகுண்டராசனுக்கு, அம்பானிக்கு.. முதலாளி மல்லையா மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். பொதுத்துறை வங்கிகளுக்கு பட்டைநாமம் போட்டுவிட்டு அதிகாரப் பூர்வமாகவே வெளிநாடு செல்பவராகவும் இருக்கிறார்.
அவரது கடன் குறித்த செய்திகள் வந்த போது மல்லையா சவால் விட்டார். தனது விருந்துபுசாரத்தில் புரண்ட பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்களின் பட்டியல் எல்லாம் பக்காவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்று பகிரங்கமாகவே பேசினார். அதை எந்த ஊடகமாவது மறுத்ததா?
இறுதியாக தோற்றுப் போன இந்த அமைப்பு முறையை எப்படி நீக்க வேண்டும் என்பதே கேள்வி. அதில் தேர்தல் புறக்கணிப்பு ஒரு முறை என்கிறோம். மாறாக மக்கள் எப்படியும் தேர்தலில் பங்கேற்பதால் நாமும் பங்கேற்ற வேண்டும் என்றால் அது எங்கே போய் முடியும்?
சந்தர்ப்பவாதம் அங்கேதான் தன்னை தவிர்க்க இயலாமல் ‘நியாய’ப்படுத்திக் கொள்கிறது. எது முடியுமோ அதைச் செய், எது சாத்தியமோ அதை எடுத்துக் கொள் என்பதெல்லாம் நாகரீகமான முறையில் முன்வைக்கப்படும் காரியவாதம். துவக்கத்தில் புரட்சி கூட சாத்தியமில்லைதான். எனவே புரட்சியை மறுக்க இயலுமா? இந்துமதவெறியை எதிர்த்து இந்துக்களிடம் பிரச்சாரம் செய்ய முடியாது என்றால் ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர் கொள்வது எப்படி? வன்னிய சாதிவெறியை அம்பலப்படுத்தாமல் இளவரசனின் மரணத்திற்கு நீதியை எப்படி பெற முடியும்?
இதனாலெல்லாம் இவை சுலபமான அரசியல் நடவடிக்கைகள் என்று சொல்லவில்லை. கடினமானதுதான். ஆனால் நீங்கள் உறுதியாக இருக்கும் வரையிலும் முயற்சியை விடாது தொடரும் போதும் அந்த மாற்றங்கள் நடந்தே தீரும். வெல்ல முடியாத அமெரிக்காவை வியட்நாம் மக்கள் வெல்லவில்லையா? ஏகாதிபத்தியங்கள் சுற்றி வளைத்தாலும் சோவியத் யூனியனில் சோசலிசம் குறிப்பிட்ட காலம் வரையிலாவது வெற்றி பெறவில்லையா?
இந்த அமைப்பு திவாலாகி விட்டது, இது ஒரு போலி ஜனநாயகம் என்பதை நண்பர் சுகதேவ் மறுக்கமாட்டார் என்று நம்புகிறோம். எனில் இதை மக்களிடம் விளக்குவதற்கு தேர்தல் பங்கேற்பு சரியாக இருக்குமா இல்லை தேர்தல் புறக்கணிப்பு சரியா இருக்குமா?
உலகமயம் என்பது உலகை அரிப்பதுதான்,
புதிதாக உருவாக்குவதல்ல!
நன்றி: Cartoon Movement ஓவியர்: Gatis Sluka
————————————————————
முதலாளிகளின் தயவில் இருக்கும் ஜனநாயகம் என்பது இதுதான்!
நன்றி: cartoon movement
———————————————
முதலாளித்துவம் – மீள முடியாத புதை குழி
கடைசி மரம் வெட்டப்படும் போதும், கடைசி மீனை சாப்பிடும் போதும், நச்சாக்கப்பட்ட கடைசி நீர் காலியாகும் போதும் மட்டும்தான் நீ உணருவாய், பணத்தை சாப்பிட முடியாது என்று!
நன்றி: cartoon movement ஓவியர்: Maram Heshan
———————————————–
அகதிகள் இரு வகை!
வாழ வழியற்ற ஏழைகள்,
செலவு வழியற்ற செல்வந்தர்களின் பணம்!
Brandan Reynolds
நன்றி: cartoon movement
——————————————————
உலக ஏழைகளின் உழைப்பில் உலக பணக்காரர்கள் பறித்துப் பதுக்கிய – பனாமா லீக்ஸ்
கேலிச்சித்திரம்: Alfredo Martirena
நன்றி: cartoonmovement
வினவு கேலிச்சித்திரம் – பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள்.
இணையுங்கள்:
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
ஏப்ரல்-22, மாமேதை லெனின் அவர்களின் பிறந்த நாள். லெனின் பிறந்த நாளை தொழிலாளி வர்க்கமும், உழைக்கும் மக்களும் ஏன் கொண்டாட வேண்டும்? என தொழிலாளர்களுக்கு விளக்கிப் புரட்சிக்கு அறைகூவி அழைக்கும் விதமாக ஆசான் லெனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
மன்னராட்சி நிலவிய ரசியாவில் ஜார் மன்னனின் ஆட்சியில் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பரந்துபட்ட உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலும், ஒடுக்குமுறையும் கேள்விக்கிடமற்ற வகையில் நிலவி வந்தது. மனிதனை மனிதன் சுரண்டும் இந்த சுரண்டல் முறையை ஒழிக்க அதே தொழிலாளர்கள், விவசாயிகளை அணிதிரட்டி ஜாரின் காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர் தோழர் லெனின். உலகில் முதன் முதலாக பாட்டாளி வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்திக் காட்டியவர். மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டியவர். தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிக்கும் ஏதேச்சதிகாரத்திற்கு முடிவு கட்டியவர். உழைக்கும் மக்களுக்கு எதிரான சர்வாதிகாரத்தை ஒழித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியரவர் என்ற வகையில் லெனினும் அவருடைய வழியும் நமக்கு இன்றும் தேவைப் படுகிறது. குறிப்பாக ரசியாவில் இருந்த நிலை தான், இந்தியாவில் இன்றைய முதலாளித்துவ பாராளுமன்ற தேர்தல் முறையில் மக்களின் நிலையாக உள்ளது.
தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமைகள் முதலாளிகளால் மறுக்கப்பட்டு வந்த நிலையில் அதையும் முழுவதுமாக துடைத்துவிடவும், சில மாற்றங்கள் என்ற வகையில் முதலாளிகளுக்கு சாதகமாக திருத்தமும் செய்து வருகிறது மோடி தலைமையிலான அரசு. இதனால், தொழிலாளி வர்க்கம் வறுமையில் வாடுவதும், தற்கொலைக்கு ஆளாவதும் நடக்கிறது. சட்ட்திருத்தத்திற்கு எதிராகப் போராடினால் தொழிலாளர்கள் மீது வழக்கு, காவல்துறையினரை வைத்துத் தாக்குதல் நட்த்துவது என காட்டுமிராண்டித் தனமான செயல்களை மாணவர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் ஜனநாயக ரீதியான கருத்துக்களை தேசவிரோத பேச்சுகள், கருத்துக்கள் என்று தேசபக்த முலாம் பூசி அவர்களைத் தற்கொலைக்கு ஆளாக்கியும், படுகொலையும் செய்து வருகிறது.
விவசாயிகளின் மானியம் ரத்து செய்யப்படுவதும், படிப்படியாக குறைக்கப் படுவதும், கடன்கள் மறுக்கப்படுவதும் செய்து வருகிறது அரசு. இன்னொரு பக்கம் முதலாளிகளுக்கு மானியத்தைத் திறந்துவிடுவதும், கடன்களைத் தள்ளுபடியும் செய்கிறது இதே அரசு தான். இதையே நாட்டின் வளர்ச்சி என்று கூறி, தனது தவறுகளை மூடி மறைத்து நியாயம் கற்பித்து வருகிறது. தனது உழைப்பின் மூலம் மக்களுக்குச் சோறு போடும் விவசாயிகளை இழிவாகப் பார்ப்பதும், மக்களுடைய வரிப்பணத்தை விழுங்கி, தொழிலாளர்களின் உழைப்பினை விழுங்கி ஊதாரித்தனமாக மது, மாது என செலவு செய்யும் முதலாளிகளை உயர்வாய்ப் பார்த்து சலுகைகளை வாரி வாரி வழங்குவதும் தான் இன்று நாம் காட்சியாக உள்ளது.
இவற்றை எல்லாம் மூடி மறைத்து ஓட்டுக்கட்சிகளில் நேர்மையானவர் களுக்கு, அதுவும் நியாயமானவர்களுக்கு வாக்களித்தால் நமது நிலைமைகள் மாறிவிடும் என்றும், எனவே, அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் எனவும் தேர்தல்துறை பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் உழைக்கும் மக்களின் வாழ்வில் மாற்றம் பெற்று ஏற்றம் வரவில்லை.
எனவே, உழைக்கும் மக்களின் நல்வாழ்விற்காக தங்களின் போராட்டத் தலைவராக இருந்த உலகத் தொழிலாளர்களுக்கு லெனின் சரியான வழிகாட்டியுள்ளார் என்பதை நெஞ்சிலேந்தி நமது நாட்டிலும் ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்திக் காட்டத் தயாராக வேண்டும் என தற்போதைய அரசியல் சூழல் கோருகிறது. ஆம்! அது தான் தற்போது பெங்களூருவில் தொழிலாளர்கள் நடத்திய பி.எஃப் வயது வரம்பிற்கான போராட்டமும் உணர்த்துகிறது.
எனவே, உலகில் ஆறில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற பெருமைக்குரியவரான மாமேதை லெனின் பிறந்த நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையின் கீழ் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு உழைத்திட உறுதியேற்பு திருபுவனை கிளை அலுவகத்தில் கொண்டாடப்பட்டது. மாமேதை லெனின் அவர்களின் உருவப்படத்தை வைத்து, இன்றைக்கு ஏன் லெனின் நமக்குத் தேவைப்படுகிறார் என்பதை விளக்கி, பு.ஜ.தொ.மு புதுச்சேரி தலைவர் சரவணன் பேசினார்.
ஏற்கனவே, பிறந்தநாள் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது, அந்தப் பக்கம் நோட்டம் விட்டுக் கொண்டிருந்த போலிசு, வெடி வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டிருக்கும் போது, அவ்வழியே வந்த தேர்தல் ‘பறக்கும் படை’ போலிசை ஏவி விட்டுச் சென்றது. ஏற்கனவே, பாயக் காத்து நின்ற போலிசு, உடனடியாக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து, “அனுமதி வாங்கினீர்களா? அனுமதி இல்லாமல் நடத்தக் கூடாது, யாரு வெடி வெடித்தது? யாரு தலைவர்? உடனே ஸ்டேசனுக்கு வாங்க!” என்றது. மேலும், “விசயம் தெரிந்த நீங்களே இப்படி அனுமதி வாங்காமல் செய்யலாமா?” என்ற வழக்கமான டயலாக்கையும் எடுத்து விட்டது.
“எங்களது ஆசான் லெனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை. மேலும், ஒலிபெருக்கி, வைக்கவும் இல்லை. அதனால், அனுமதி வாங்கத் தேவையில்லை.” என்று கூறிய நமது தோழர்களிடம், “ஸ்குவாடு வந்து சொல்லிட்டுப் போயிட்டாங்க, ஸ்டேசன் வரைக்கும் வந்துட்டுப் போயிடுங்க” என்று கெஞ்சிய போலிசிடம், “இதோ வருகிறோம்” என்று சொல்லி ஸ்டேசனுக்குச் சென்று பார்த்த போது, “இது மாதிரி செய்யும் போது, ஒரு பேப்பர்ல எழுதிக் கொடுத்துட்டு அனுமதி வாங்கிச் செய்யுங்க” என்று சொல்லி அனுப்பியது போலிசு.
அவ்வழியாகச் சென்ற மக்களிடம், இனிப்பு வழங்கியும், யார் லெனின் என்பதை பிரசுரம் கொடுத்து விளக்கும் விதமாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கும் தொழிற்பேட்டைப் பகுதியில் வெடிவெடித்தும் கொண்டாடியது தொழிலாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு: தோழர். பழனிசாமி, 95977 89801.