Saturday, June 15, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மே 5 முதல் டாஸ்மாக் மூடப்படும் ஊர்கள் - மக்கள் அதிகாரம் அறிவிப்பு !

மே 5 முதல் டாஸ்மாக் மூடப்படும் ஊர்கள் – மக்கள் அதிகாரம் அறிவிப்பு !

-

பட்டியல் 1

1. உசிலம்பட்டி

pp-petition02-05-2016 திங்கள் மாலை 3 மணியளவில் உசிலம்பட்டி செல்லம்பட்டி கிராமத்தில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்களைக் கெடுக்கும் டாஸ்மாக்கை மூடுவதற்காக மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்கள் பங்கேற்போடு தப்படித்து வெடி வெடித்து செல்லம்பட்டி பகுதி இரண்டு டாஸ்மாக் கடைகளை 05-05-2016 முதல் மூடச்சொல்லி ஆணையாளரிடம் மனுகொடுக்க மக்கள் திரளோடு சென்றனர்.

ஆணையாளரோ, “எனக்கு அதிகாரம் என்னவோ ரோடு, சாக்கடை இப்படி பிரச்சனைன்னா சரி பண்ண முடியும், டாஸ்மாக்கெல்லாம் பெரிய விவகாரம்” என்றார்.

தோழர்களோ, “இப்பகுதிக்கு நீங்கள் தான் தற்போது பெரிய அதிகாரி, இம்மனுவை தங்கள் மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி மூடச்செய்யுங்கள். இல்லையேல் 5-ம் தேதி நாங்கள் மூடச்செய்வோம்” என்றனர்.

bdo-replyஆணையாளரும் மேலே அனுப்பி வைப்பதாக ஒப்புதல் அளித்தார்.

தோழர்கள் நிகழ்ச்சியை முடித்து வெளியில் சென்று டீக்கடையில் பேசிக்கொண்டிருந்த பொழுது ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஒருவர் ஓடி வந்து பார்த்துவிட்டு மக்கள் அதிகாரம் மனுவை வருவாய் கோட்டாட்சியர்,வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் கையெழுத்திட்ட பதில் மனுவை தோழர் கையில் ஒப்படைத்து சென்றார்.

மூக்கு வேர்த்த நுண்ணறிவு போலீஸார் கண்கொத்தி பாம்பாய் ஆரம்பம் முதல் கடைசி வரை கவனித்தபடியே இருந்தனர்.

தேர்தல் நேரத்தில் மக்கள் அதிகாரம் செயல்பாட்டினால் செல்லம்பட்டி பகுதியில் மக்களின் முக்கிய பேசு பொருளாக டாஸ்மாக் விவகாரம் மாறி உள்ளதை காண முடிந்தது.

தகவல்

பு.ஜ செய்தியாளர்கள்
உசிலம்பட்டி

2. மதுரவாயல், சென்னை

துரவாயல் பகுதியில் உள்ள டாஸ்மாக்கை மூடு, இல்லையேல் நாங்களே இழுத்து மூடுவோம் – மக்கள் அதிகாரம் அரசுக்கு எச்சரிக்கை!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் உச்சநீதிமன்ற உத்திரவுகளையெல்லாம் துளியும் மதிக்காமல் நெடுஞ்சாலை அருகிலும், குடியிருப்புகளின் மத்தியிலும் அமைந்து மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக்கை எடுக்க வலியுறுத்தி நொளம்பூர் பகுதி மக்களிடையே மக்கள் அதிகாரம் அமைப்பினர் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வந்தனர். அதன் முதல் கட்டமாக நேற்று (02-05-2016) பொதுமக்களை திரட்டி வட்டாட்சியரிடம் மனு கொடுக்க திட்டமிட்டிருந்தனர். அதற்காக நொளம்பூர் மாதா கோவில் நகர், சின்ன நொளம்பூர், ஓம்சக்தி நகர் ஆகிய டாஸ்மாக்கிற்கு அருகில் உள்ள பகுதி மக்களை அழைத்து செல்ல நேற்று காலை அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக் குழுவை சார்ந்த தோழர்கள் சென்றிருந்தனர்.

காலையிலேயே குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை பாதுகாக்க போலீசு தடுப்பு வளையத்துடன் டாஸ்மாக் வாயிலில் நாற்காலிகள் போட்டு காவல் காத்துக் கொண்டிருந்தது. அந்த கடைக்கு மிக அருகில் உள்ள ஓம்சக்தி நகருக்கு சென்ற தோழர் கணேசனை, பகுதிக்குள் செல்லும் முன்பாகவே டாஸ்மாக்கிற்கு காவல் காத்துக்கொண்டிருந்த போலீசும், உளவுப்பிரிவு போலீசும் அவரை முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்து மதுரவாயல் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றது. தகவல் அறிந்து தோழர்கள் உடனடியாக போலீஸ் ஸ்டேசனுக்கு விரைந்தனர்.

“தேர்தல் நேரத்தில் நீங்கள் ஊர் மக்களை திரட்டுவது சரியில்லை. மீண்டுமொருமுறை இப்படி நடந்தால் உங்களை ரிமாண்ட் செய்வோம்” என்று மிரட்டியது போலீசு. ‘ஜனநாயக’ தேர்தல் நேரத்தில் மனுகொடுக்க செல்வது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உண்டுபண்ணிவிடுமாம்!

“நியாயாமாக பார்த்தால் சட்டத்திற்கு புறம்பாக உள்ள அந்த டாஸ்மாக்கை போலீசு நீங்கள்தான் மூடவேண்டும். உங்கள் வேலையைத்தான் நாங்கள் செய்கிறோம். அதுவும் ஊர் பிரச்சினைக்காக மனுகொடுக்க மக்களை அழைத்து செல்ல கூடாது என்று நீங்கள் சொல்வதுதான் சட்ட விரோதம், இப்போது மனு கொடுக்க நாங்கள் ஊர் மக்களோடு செல்கிறோம். அவரை விடுகிறீர்களா இல்லையா?” என்றனர் மக்கள் அதிகாரம் தோழர்கள். பயந்து பின்வாங்கிவிடுவார்கள் என நினைத்த போலீசு, தோழர்கள் ஏறி பேசவே தாங்கள் சற்று பின்வாங்கினர்.

“நீங்கள் மனு கொடுக்க மட்டும்தான் செல்கிறீர்கள். அங்கு எதாவது போராட்டம் நடத்தினால் இவரை உடனே ரிமாண்ட் செய்து விடுவோம்” என்று கூறிவிட்டு தோழர் கணேசனை தன்னுடன் அழைத்துக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது.

வட்டாட்சியர் அலுவலகத்திலும் காலையில் இருந்தே அங்கு வருபவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தது போலீசு. இரண்டு வாயில்களிலும் யாரையும் விடாமல் தடுப்பு அமைத்து இருந்தது. தோழர்களும் ஊர் மக்களும் வந்தவுடன், தடுப்புகளையும் போலீசையும் கண்டு அஞ்சாமல் மனு கொடுக்க உள்ளே சென்றனர். இதில் நகைக்கதக்க விசயம் என்னவெனில், அலுவலக படிக்கட்டுகளில் தடுப்புகளை வைத்து அலுவலகத்தையே மறைத்து, போலீசு காவல் காத்துக் கொண்டிருந்தது. இதை பார்த்து அலுவலகத்திற்கு வந்த சிலர் விடுமுறை என கருதி திரும்பி சென்றனர்.

மூன்று ஊர் மக்கள் மனு கொடுக்க வருவதை பார்த்து அஞ்சிய போலீசு, ஐந்துபேர் மட்டுமே உள்ளே செல்லமுடியும் என கண்டிசன் போட்டது. போலீசுக்கும் தோழர்களுக்கும் இடையிலான நீண்ட வாக்குவாதத்திற்கு பின்னர் 5 பேர் மனுகொடுக்க உள்ளே சென்றனர்.

உள்ளே சென்ற் வட்டாட்சியரிடம் மனுவைக்கொடுத்து படித்து பாருங்கள் என்றனர். மனுவை மேலோட்டமாக பார்த்துவிட்டு, “என்னப்பா! 5 ஆம் தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என போட்டிருக்கு” என நக்கலாக சொன்னார்.

“ஆமா சார்!, 5-க்குள் நீங்கள் மூடவில்லையென்றால் நாங்களே மூடிக்கொள்கிறோம் அதையும் படிச்சிப்பாருங்க” என தோழர்கள் பதிலுக்கு சொல்ல அமைதியாகிவிட்டார் தாசில்தார்.

ஆனால், அருகில் இருந்த தேர்தல் அதிகாரி, “தேர்தல் நேரத்தில் இப்படி ஏதாவது செய்தீர்கள் என்றால் ரிமாண்ட் செய்துவிடுவோம்” என பூச்சாண்டி காட்டினார்.

எத்தன பேர்ரா இதயே சொல்வீங்க என நினைத்துக்கொண்டு தோழர்கள், “சரி நீங்க என்னமோ பண்ணுங்க, ஆனா மொதல்ல கடைய மூடுங்க, இல்ல நாங்களே மூடிக்கிறோம்” என முடிவாக சொல்லிவிட்டு புறப்படத் தயாராகினர்.

பின்னர் அவர்களை சமாதானப்படுத்த முயல்வதாக நினைத்துக்கொண்டு, “இது தேர்தல் நேரம் எங்களால எதுவும் செய்ய முடியாது. நான் வேணும்னா இத உடனே கலெக்டருக்கு ஃபார்வார்டு பண்னி விடறேன்” என தேனொழுகப் பேசினார்.

“நீங்க யாருக்கு வேணும்னாலும் அனுப்பிக்கோங்க, எங்களுக்கு அந்த கடை மூடியாகணும்” என மீண்டுமொருமுறை சொல்லிவிட்டு வெளியே வந்தனர் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.

பின் அடுத்தக்கட்ட போராட்டத்தை பற்றி வந்திருந்த மக்களிடம் பேசி அங்கிருந்து கலைந்து சென்றனர். அதிகாரிகளிடம் வரும் அனைவரும் பம்மிக்கொண்டும், குனிந்துக்கொண்டும் வந்து போகையில் அவர்களுக்கு கட்டளையிடும் விதத்தில் மக்கள் அதிகாரத்தினர் வந்துசென்றது அங்கிருந்த பொதுமக்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

தகவல்

வினவு செய்தியாளர்கள்,
சென்னை.

3. மீஞ்சூர், சென்னை

பேண்டு வாத்தியம் முழங்க மனுகொடுக்க சென்ற நாப்பாளையம் பகுதி மக்கள்!
– ’
மூடு டாஸ்மாக்கை’ திருவிழா தொடக்கம்!

shutdown-tasmac-ponneri-deadline-3மீஞ்சூரை அடுத்துள்ள நாப்பாளையம் பகுதியில் ஒரே இடத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்தக்கடைகளால் பாதிக்கப்படும் கிராமங்களில் இருந்து 75-க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.

போகும் போதே திருவிழாவிற்கு செல்வது போல் பேண்டு, டோலக்கு, பறை ஆகியவற்றை அடித்துக்கொண்டு, ஊர் மக்கள், பள்ளி மாணவர்கள் என ஒட்டுமொத்த படையும் திரண்டு பேரணியாக கோட்டாச்சியர் அலுவலகம் நோக்கி “டாஸ்மாக்கை மூடு , எங்கள் குடும்பத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடையை மூடு” என முழக்கமிட்டபடி சென்றனர். அதோடு பத்தடி உயர டாஸ்மாக் பாட்டில் போல் வடிவமைத்த அட்டையில், கடை எண்ணை குறிப்பிட்டு, இந்த கடையை வரும் 5 -ம் தேதிக்குள் மூட வேண்டும் என எழுதி கையோடு கொண்டு சென்றனர்.

shutdown-tasmac-ponneri-deadline-2அலுவலகம் உள்ள தெருவில் நீதிமன்றம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களும் இருந்தன. எனவே திருவிழா போன்ற சத்தத்தை கேட்டதும் வக்கீல்கள், போலீசு, பொதுமக்கள் என அனைவரும் வெளியே வந்து பார்த்தனர். அலுவலகத்தை அடைந்ததும் தயாராக இருந்த போலீசு பொதுமக்களை தடுத்து நிறுத்தியது.

“ஐயாவை பார்க்க முடியாது, அவர் தேர்தல் பற்றிய முக்கிய வேலையாக இருக்கிறார் 2 மணி வரை பார்க்க முடியாது. உங்களை பார்க்கவும் அனுமதிக்க முடியாது” என்றது போலீசு.

“சரி, அப்போ நாங்கள் 2 மணி வரை மறியல் அல்லது போராட்டம் செய்து கொண்டிருக்கிறோம் உங்கய்யாவ பொறுமையா வரச்சொல்லுங்க” என கூறி அங்கேயே முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்யத் துவங்கினர்.

shutdown-tasmac-ponneri-deadline-4மக்களின் இந்த நடவடிக்கையை கண்டு பயந்து பின்வாங்கிய போலீசு சமாதானத்திற்கு வந்தது. “இரண்டு பேர் என்னுடன் வாங்க அய்யாவ பார்க்கலாம்” என பணிந்து சொன்னது.

“இல்லை! உள்ளே போனால் நாங்கள் அனைவருமே உள்ளே செல்வோம். இல்லையெனில் நாங்கள் உள்ளே வந்து பார்க்க முடியாது, அவர் மக்களுக்காகத்தானே வேலை பார்க்கிறார். அவரை இங்கு வர சொல்லுங்கள்” என்று மக்கள் எந்த அச்சமும் இல்லாமல் அரசுக்கு கட்டளையிட்டனர்.

நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு, 75 பேரையுமே உள்ளே அழைத்து சென்றது போலீசு. மக்களின் அதிகாரத்துக்கு முன்பு போலீசு எம்மாத்திரம்?

shutdown-tasmac-ponneri-deadline-7ஆனால், கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்துவைத்த கதையாக கோட்டாட்சியருக்கு பதிலாக அவரது அலுவலகத்தில் வட்டாட்சியரை கொண்டுவந்தது போலீசு. அவரைக்கண்டவுடன் அவருக்கு எதிரிலேயே “நாங்கள் இவரை பார்க்க வரவில்லை, இவரிடம் நாங்கள் பேசமுடியாது. நீங்கள் RDO- வை வர சொல்லுங்கள்” என்று மக்கள் உறுதியாக கூறிவிட்டனர்.

”இவரும் அதிகாரிதான், இவருகிட்டயும் மனு கொடுக்கலாம்” என போலீசு சமாளிக்கப் போய் அது வஞ்சப்புகழ்ச்சி அணியாக மாறி வட்டாட்சியரை கண்டு எள்ளி நகையாட வைத்தது. பின்னர் மீண்டும் ஒரு நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு மக்களை சந்திக்க கோட்டாச்சியர் வந்து சேர்ந்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட அவர் “ஆமா! ஒரு நாளைக்கு நான் நூற்றுக்கணக்கான மனுவாங்குகிறேன். டாஸ்மாக்கை எப்போது மூட வேண்டுமென்று எனக்கு தெரியும்” என்று அதிகாரிகளுக்கே உரித்த திமிருடன் கூறினார்.

shutdown-tasmac-ponneri-deadline-8ஆனால், மனுகொடுத்தது மக்கள் அதிகாரமாயிற்றே! “நீங்கள் டாஸ்மாக் கடை நடத்த வேண்டுமென்றால், உங்க அலுவலகம் பக்கத்துலயோ இல்ல உங்கள் வீட்டிலயோ வைத்துக்கொள்ளுங்கள் அதன்பின் எப்போது உங்களுக்கு மூடத்தெரியுமோ அப்போது மூடிக்கொள்ளுங்கள்” என்று பதிலடி கொடுத்தனர்.

அதுமட்டுமன்றி கோட்டாட்சியரை வைத்துக்கொண்டே மக்கள் அதிகாரத்தை சார்ந்த ஒரு தோழர், “நாம் இப்போ இவரிடம் மனுக்கொடுத்து விட்டோம், மனுவில் கூறியபடி இவர் 5-ம் தேதிக்குள் கடையை மூடவில்லையென்றால் நாமளே கடைய மூடிக்கொள்ளலாம்” என்று அறிவித்தார்.

இப்போதுதான் கோட்டாட்சியர்க்கு மக்கள் அதிகாரத்தை பற்றி முழுமையாக புரிந்திருக்க வேண்டும். ஏனெனில் அதுவரை திமிராக பேசிக்கொண்டிருந்த கோட்டாட்சியர் இதற்குபின்னர் அவர் பேசுவது அவருக்கே புரியாதபடி “என்ன பன்றீங்க! என்ன பன்றீங்க!” என பயத்தில் உளற ஆரம்பித்து விட்டார். அந்த உளறலை கண்டுக்கொள்ளாமல் அந்த அறையை விட்டு உற்சாகத்துடன் வெளியேறினர் மக்கள் அதிகாரத்தினர்.

shutdown-tasmac-ponneri-deadline-1வெளியே வந்த மக்கள் பத்திரிக்கைகளுக்கு தங்கள் போராட்டத்தைப் பற்றி பேட்டியளித்தனர். பேட்டியளித்துக் கொண்டிருக்கும்போதே ஒருவர் “தோழர் அந்த போஸ்டரை கொடுங்க!” என வாங்கி ஊடகங்களின் கேமரா முன்பாகவே அந்த போஸ்டரை சுவற்றில் ஒட்டினர்.

“மக்களுக்கு இடையூறாக உள்ள எங்கள் குடும்பத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மே 02 அன்று கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தவறினால் மே 5-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்” என டாஸ்மாக் எதிர்ப்புக்குழு மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. போஸ்டர் ஒட்டிய விதமே மிகவும் கோலாகலமாக இருந்தது.

shutdown-tasmac-ponneri-deadline-6பின் அந்த போஸ்டரை பார்த்து, “இதில் எழுதப்பட்டுள்ளபடி 5-ம் தேதிக்குள் நாப்பளையத்தில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடை மூடப்படவில்லை என்றால் நாங்களே மூடிக்கொள்வோம்” என பத்திரிக்கையாளர்களிடம் மக்கள் தெரிவித்து 5-ம் தேதி போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தனர்.

இந்தச் செய்தி தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனால், அனைத்து ஊர் மக்களும் டாஸ்மாக்கை மூடமுடியும் என நம்பிக்கையும், மிகுந்த உற்சாகமும் அடைந்துள்ளனர். மக்கள் தங்கள் அதிகாரத்தை எப்படி அரசு அதிகாரிகளிடம் காட்டுவது என்பதை நடைமுறையில் காட்டியுள்ளனர் நாப்பாளையம் பகுதி பொதுமக்கள். தேர்தல் பாதையின் மூலம் டாஸ்மாக் கடைகளை உட முடியாது, மக்கள் அதிகாரமே ஒரே தீர்வு என்பதனை உணர்த்தும் வகையில் அமைந்தது இந்த மனுகொடுக்கும் நிகழ்ச்சி.

shutdown-tasmac-ponneri-deadline-5

தகவல்

வினவு செய்தியாளர்கள்,
சென்னை.

4. விழுப்புரம்

மூடு டாஸ்மாக்கை – மே 5 கெடு! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் அதிகாரம்!

vpm-shutdown-tasmac-deadline-7விழுப்புரம் மாவட்டம் அயினம்பாளையம் கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு மேல் உள்ளது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கடை உயர்நீதி மன்ற உத்தரவுக்கு பிறகு, கடையின் முன்பக்க வழியை அடைத்து விட்டு பின்பக்கமாக திறந்து கொண்டனர். அந்தளவிற்கு விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இந்த கடையை அகற்றக்கோரி சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்துள்ளனர். அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது காவல்துறை. இனிமேல் போராட்டம் ஏதாவது நடத்தினால் உங்கள் அனைவரையும் “உள்ளே” தள்ளிவிடுவேன் என மிரட்டியும் உள்ளது.

vpm-shutdown-tasmac-deadline-9முக்கியமாக அந்த கடையை நான்கு முறை மாற்றி அதே ஊரில் வைத்துள்ளனர். காரணம், அயினம்பாளையத்தை சுற்றியுள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் அந்த ஒரு கடை தான் உள்ளது. எனினும் அரசின் டார்கெட் அயினம்பாளையம் தான்.

ஏப்ரல் 20 அன்று “வேர் அவுஸிங்” குடோனில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்தினார். இந்தச் செய்தி வினவு உட்பட அனைத்து நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

vpm-shutdown-tasmac-deadline-8அந்த குடோனில் தான் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் சுமார் 98 பேர் சுமை தூக்கும் தொழிலாளராக வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவர்கள் தான். இவர்கள் சம்பாதிப்பதில் பெரும்பான்மையை இந்த கடையில் குடித்தே அழிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு பதினைந்து நாள் மட்டுமே வேலை இருக்கும். மற்ற நாட்கள் வீட்டில் தான் இருப்பார்கள்.

vpm-shutdown-tasmac-deadline-6இவர்களின் உழைப்பை சுரண்டுவதற்காகவே இந்த குடோனிற்கு நேர் எதிராக இரண்டு டாஸ்மாக் கடைகளை சட்ட விரோதமாக உயர்நீதி மன்ற உத்தரவை கூட மதிக்காமல் நெடுஞ்சாலையில் வைத்துள்ளது தமிழக அரசு.

கடுமையான உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்கள் உடல் வலியை காரணம் காட்டி நிறைய குடிக்கின்றனர். வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் போதும் தொடர்ந்து குடித்து குடித்து குடல் வெந்து பலர் இறந்தும் போயுள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் குடிக்கு அடிமையாகியுள்ளனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இரண்டு பிரிவினருக்கும் இதில் ஏற்றத்தாழ்வு இல்லை. இந்த கிராம மக்களின் கணிசமான சேமிப்புகள் அனைத்தும் குடித்தே அழித்து விட்டனர்.

vpm-shutdown-tasmac-deadline-1தற்போது அந்த கிராமத்தில் உள்ளவர்கள் பலர் குடிக்கு அடிமையானதாலும், பல பெண்கள் தங்கள் கணவனை இழந்தாலும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் அவர்கள் நம்பி இருப்பது கூலி விவசாயம் தான். நகரமயமாக்கலின் காரணமாக விவசாயமும் அழிக்கப்பட்டு வருவதால் இனி அவர்களின் எதிர்காலம் என்பதே கேள்விக்குறி தான்…..

தங்களின் வாழ்க்கையையும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் நாசமாக்கிய இந்த சாராயக்கடையை விரட்டுவது தான் இனி ஒரே தீர்வு என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர்.

vpm-shutdown-tasmac-deadline-0இந்த அரசின் மீதும், ஓட்டுக்கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்து விட்ட மக்கள் கடந்த 24 ம் தேதியிலிருந்து மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர்களுடன் இணைந்து பிரச்சாரம் செய்து வந்தனர். மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர்களும் அந்த கிராம மக்களோடு தங்கி சாதியை தகர்த்து அவர்களை போராட்ட களத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை 02.05.2016 திங்கள் கிழமை இன்று சந்தித்து “வருகிற 05-05-2016 தேதிக்குள் எங்கள் ஊர் கடையை மூடிவிட வேண்டும். இல்லையேல் நாங்களே மூடிவிடுவோம்” என கெடு விதித்து எச்சரித்து விட்டு வந்துள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

வினவு செய்தியாளர்,
விழுப்புரம்.

5. கோத்தகிரி

க்கள் அதிகாரம் கோத்தகிரி தாலுக்கா நெடுகுளா பஞ்சாயத்து கேர்கம்பை சுற்றுவட்டார பொது மக்கள் இணைந்து கேர்கம்பை என்ற இடத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை (எண் 8024) மூடக்கோரி கேர்கம்பை ஹட்டி, இந்திரா நகர் மற்றும் காக்கசோலை மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியதில் அந்த பகுதி மக்கள் பெண்கள் 100 பேர், பள்ளி மாணவ மாணவிகள் 40 பேர் மற்றும் 60 ஆண்கள் கையெழுத்து இட்டனர்.

அதை 02-05-2016 திங்கள் அன்று கோட்டாட்சியர் அவர்களிடம் கொடுத்து குறிப்பிட்ட கடையை மூடவலியுறுத்தப்பட்டது. அதற்கு, “நான் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் அனுப்பிவைக்கிறேன்” என்றார்.

“நாங்கள் கொடுத்த மனுவுக்கு ரசீது கொடுங்கள்” என்று கேட்டோம்.

“ரசீது இல்லை” என்றார்.

“எப்போது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிந்து கொள்வது எப்படி” என்று கேட்டோம்.

“எடுக்கும் நடவடிக்கை பற்றி எனக்கு தகவல் கொடுப்பார்கள், அந்தத் தகவலை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

“உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் நாங்கள் எடுப்போம்” என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது..

தகவல்
மக்கள் அதிகாரம்
கோத்தகிரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க