Thursday, July 31, 2025
முகப்பு பதிவு பக்கம் 603

ஆந்திர போலீசை துண்டு துண்டா வெட்டணும் – நேரடி ரிப்போர்ட்

0

செம்மரம் வெட்டிகடத்தியதாக கூறி கொலை செய்யப்பட்ட 20 தொழிலாளிகளில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 7 பேர் தர்மபுரி மாவட்டத்தையும், ஒருவர் சேலம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இதில் தருமபுரி மாவட்ட கிராமங்களுக்கு சென்று சேகரித்த நேரடி செய்தி  அறிக்கையை நேற்று வெளியிட்டிருந்தோம். இன்று திருவண்ணாமலை கிராமங்களின் மக்கள் கருத்தை தொகுத்து தருகிறோம்

வினவு

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பழனி, மூர்த்தி, முருகன், பெருமாள், முனுசாமி, சசிகுமார், மகேந்திரன், வெள்ளிமுத்து, கோவிந்தசாமி, ராஜேந்திரன், சின்னசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் குடும்பங்களை சந்திப்பதற்காக அவர்களின் கிராமங்களுக்கு சென்றோம்.

கொலை செய்யப்பட்ட தொழிலாளிகளில் முதல் 7 பேர் கண்ணமங்கலம் எனும் சிறு நகரத்திற்கு அருகில் உள்ள காளசமுத்திரம், முருகபாடி, புதூர் காந்தி நகர், படவேடு ஆகிய நான்கு கிராமங்களை சேர்ந்தவர்கள். அடுத்த 5 பேர் ஜவ்வாது மலையில் இருக்கும் மேல்குப்சானூர் என்கிற மலை கிராமத்தை சேர்ந்தவர்கள். கண்ணமங்கலத்திலிருந்து இக்கிராமம் 35 கிலோ மீட்டர் தொலைவில் ஜவ்வாது மலையின் உச்சியில் இருக்கிறது.

இக்கிராமங்கள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவையாக இருந்தாலும் கண்ணமங்கலத்திலிருந்து 20 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் வேலூர் தான் அருகில் இருக்கும் பெரிய நகரம். முதல் நான்கு கிராமங்களிலும் மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இதர தமிழக கிராமங்கள் போல விவசாயம் வறண்டு போயிருக்கிறது. எனவே, ஊருக்கு பாதி பேர் சென்னை, பெங்களூர், திருப்பூர் போன்ற நகரங்களுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர். இதில் சமவெளி பகுதி மக்களில் பெரும்பான்மையினர் வன்னியர்கள்.

பழனி, காளசமுத்திரம்.

பழனிக்கு வயது 35. பி.எட் பட்டதாரி, தற்காலிகமாக ஒரு தனியார் பள்ளியில் சில மாதங்கள் ஆசிரியராக பணி புரிந்திருக்கிறார். திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. நாற்பது நாளில் ஒரு கைக்குழந்தை இருக்கிறது.

வீட்டில் பழனியின் துணைவியார் இல்லை. அன்று அப்பகுதிக்கு அன்புமணி ராமதாஸ் வந்ததால் இறந்தவர்களின் மனைவிமார்களும், தாய் தந்தையும் அங்கே சென்றுவிட்டிருந்தனர். வீட்டில் பழனியின் தம்பி மனைவியும், அத்தையும் இருந்தனர். அவர்களிடம் பேசினோம். பெரும்பாலான கேள்விகளுக்கு பழனியின் தம்பி மனைவியே பதிலளித்தார்.

pazani-house
“வெட்டி வெட்டி துண்டு துண்டா மூஞ்ச கூட பாக்க முடியாத மாரி அநியாயமா கொல பண்ணிட்டீங்க”

“நூல் வாங்க கண்ணமங்கலத்துக்கு போறதா சொல்லிட்டு போனவரு அன்னைக்கு வரல. அடுத்த நாள் காலயிலயும் வரல. அப்புறம் செவ்வாக்கிழமை நைட்டு போலீசுக்காரங்க வந்து போட்டோவ காட்டி இதுபோலன்னு சொன்னாங்க, அதுல மூஞ்சி கூட சரியாத் தெரியல, போட்ருந்த துணிய வச்சு எங்க மாமியார் தான் அது என் புள்ளைன்னு அடையாளம் காட்னாங்க. பொழைக்கிறதுக்கு அவர் டெய்லர் கடை வச்சிருந்தாரு.

கொஞ்ச நாள் டீச்சர் வேலைக்கும் போய்க்கிட்ருந்தாரு, சம்பளம் பத்தலைன்னு முழுசா டெய்லர் வேலையே செய்ய ஆரம்பிச்சுட்டாரு. கண்ணமங்கலம், வேலூரு தாண்டி வேற எங்கையும் போக மாட்டாரு. அதுவும் கொழந்த பொறந்ததிலிருந்து எங்கையும் போறதில்ல.

வெட்டி வெட்டி துண்டு துண்டா மூஞ்ச கூட பாக்க முடியாத மாரி அநியாயமா கொல பண்ணிட்டீங்க. இன்னைக்கு புருசனை இழந்து நிக்கும் அந்த பொண்ணுக்கும் அதோட குழந்தைக்கும் இந்த அரசாங்கம் தான் பதில் சொல்லணும்.”

மூர்த்தி, முருகப்பாடி.

வீட்டில் துணைவியார் இல்லை, மாமியார் இருந்தார். மூர்த்திக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது, எட்டு மாத கைக்குழந்தை இருக்கிறது.

moorthy-murugapadi
“குத்தி, சுட்டு கொன்னுப்புட்டு அப்புறம் போட்டோவ வந்து காட்டுறீங்களே அய்யா, இது நியாயமா !” – கொல்லப்பட்ட தொழிலாளி மூர்த்தியின் மாமியார்.

“கூலி வேலைக்கு போறேன் மறுநா வந்துடுறேன்னுதாம்பா சொல்லின்னு போனான். அவன் வேலைக்கு போயி அவன் குடும்பத்த மட்டுமில்ல, எங்க குடும்பத்தையும் காப்பாத்தினு இருந்தான்.

கல்யாண சப்ளையர் வேலைக்கு அப்பப்ப போவான், புரோக்கருங்க எல்லாத்தையும் ஒரு எடத்துக்கு அழைச்சினு வந்து அங்கிருந்து ஒவ்வொரு மண்டபத்துக்கா பிரிச்சி அனுப்புவாங்க.

மரம் வெட்டவும் போகல எதுக்கும் போகலப்பா, அந்த மாதிரி வேலை எல்லாம் அவனுக்கு தெரியாது. ஊருக்குள்ள வேணுமின்னா நீயே விஜாரிச்சி பாத்துக்க. கட்டட வேலைக்கு போவான், சப்ளையர் வேலைக்கு போவான் அவ்வளவு தான்.

மரம் வெட்ட போனான்னு சொன்னா இந்த போலீசு புடிச்ச எடத்துலயே எங்களுக்கு தகவல் சொல்ல வேண்டியது தானே, ஏன் சொல்லல ? குத்தி, சுட்டு கொன்னுப்புட்டு அப்புறம் போட்டோவ வந்து காட்டுறீங்களே அய்யா, இது நியாயமா !

எனக்கு பசங்க இல்லப்பா, ரெண்டும் பொம்பள புள்ளைங்க, வீட்டுக்காரர் இல்ல. சொந்தம்னு சொல்லிக்கவும் யாரும் இல்ல.

வேல செய்ய மாமனார் மாமியாருக்கு தெறம் இல்ல, அம்மாவுக்கும் தெறம் இல்லையேன்னு பூவை இழந்து, பொட்ட இழந்து, சாப்புடாம கொள்ளாம இருக்க எம் பொண்ணு சொல்லிச் சொல்லி அழுவுது. எங்களுக்கு கேக்கிறதுக்குன்னு யாரும் இல்ல, இனி நான் வேலைக்கு போய் ஒழைச்சா தான் சோறு. எங்களுக்கு வேற கல்லு, மாத்துக்கல்லு மறுகல்லா இருக்குது. எம்புள்ளைக்கு 18 வயசுதாம்பா ஆவுது. இந்த வயசுலயே ஆம்பளைய எழந்து கைக்கொழந்தையோட நிக்கிது.

முதியோர் பணத்தை வச்சு நான் ஏதோ காலம் ஓட்டிகினு இருந்தேன் இனி என்ன செய்யப் போறமோ?”

முனுசாமி, முருகபாடி.

வீட்டில் முனுசாமியின் துனைவியார் இல்லை. அக்கா சுலோச்சனா இருந்தார். முனுசாமிக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு பையனும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றன.

sulochana
கொல்லப்பட்ட தொழலாளி முனுசாமியின் அக்கா சுலோச்சனா கதறி அழுகிறார்.

“திங்ககிழமை ரேசன் கடைக்கு போயி அரிசி எல்லாம் வாங்கி வச்சிட்டு வேலைக்கு போறேன்னு சொல்லின்னு தாம்பா போயிருக்கான். சப்ளையர் வேல, மேஸ்திரி வேலைக்கு தான் போவான். மரம் வெட்ற வேலைக்கெல்லாம் போனதில்ல. அந்த வேல இல்லாத நாள்ல விவசாய வேலய பாத்துக்குவான்

மரம் வெட்னதாவே கூட இருக்கட்டும், நீ டவுட்டு பட்டு தானே இட்னு போன ? இட்னு போயி அரெஸ்ட் பண்ணி டேசன்ல வைக்க வேண்டியது தானே, 10 வருசம் கூட தண்டனை கொடு. அப்படி பண்ணாம ஏன் கொலபாதகம் பண்றீங்க ?

எங்களுக்கு வந்த கெதி உங்களுக்கு வராதா, ஏன்டா இப்படி பண்றீங்க ? மரம் வெட்ட போனாங்க புடிச்சோம்னு சொல்றீங்களே, திங்க கிழம ராவு போனா கூட நைட்டுக்குள்ள எத்தன கட்டைய வெட்டிருக்க முடியும், நீயே சொல்லுப்பா ?

இவனுங்களுக்கு ஏத்த தண்டனையை வாங்கி குடுங்க, தூக்கு ஆர்டர் போடுங்க. அப்ப தான் எங்க மனசு திருப்தியா இருக்கும். எவ்வளவு பணம் காசு கொடுத்தாலும் என் தம்பிக்கு ஈடாகாது. இன்னைக்கு அவன் பொண்டாட்டி மொட்டையா நிக்கிது. யாரு இனி புள்ளை குட்டிங்களை காப்பாத்துறது ?

பாடிய வீட்ல கொண்டு வந்து வச்சிருக்கோம் கொழந்தைங்க கேக்குது, யாரும்மா இது எதுக்காக இவ்வளவு பேரு நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க ? அப்பா எப்பம்மா வருவாரு, எங்களுக்கு அப்பா வேனும்னு கேக்குது. நாங்க என்ன பதில் சொல்றது ? அப்பாவ வேணும்னு கேக்குற குழந்தைகளுக்கு எங்க போய்ப்பா நாங்க அப்பாவ வாங்கித்தர்றது?” (கண்ணீர் விட்டு கதறுகிறார்.)

மகேந்திரன், புதூர் காந்தி நகர்.

வீட்டில் மகேந்திரனின் அம்மா இல்லை. தாத்தா பாட்டி இருந்தனர். மகேந்திரன் 22 வயது இளைஞர். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு போலீசு வேலைக்கு முயற்சி செய்தவர்.

mahendran-grand-parents
“என் கொயந்தைய இப்படி பண்ணவனுங்களை துண்டு துண்டா வெட்டி எடுக்கனும், கை கால வாங்கனும். இல்லன்னா தூக்கு தண்டனை கொடுக்கனும்”- கொல்லப்பட்ட தொழிலாளி மகேந்திரனின் தாத்தா, பாட்டி

“கம்பி கட்ற வேலைக்கு போவான், சப்ளையர் வேலைக்கு போவான். யாரும் கூட்னு போமாட்டாங்கப்பா அவனே பூடுவான். சனிக்கெழம வருவான், ஞாயத்துகெழம இருப்பான், திங்க கெழ கெளம்பி பூடுவான். பத்து நாளு, ஒரு வாரம்னு போய் வருவான். வந்தா ஐயாயிரம் ஆராயிரம்னு எடுத்துனு வருவான்.

mahendran-homageஅவன் மரம் வெட்ற வேலைக்கே போகல சாமி, அதெல்லாம் அவனுக்குத் தெரியாது. எவனோ இப்டி கூட்னு போய் கொன்னுட்டானுங்க. கட்ட வெட்ட போனா போன எடத்துலயே இல்ல புடிக்கணும், அப்புடியா பண்ணாங்க, பஸ்ல போனவங்கள புட்சி இய்த்தாந்து கொன்ருக்கானுங்க. என் கொயந்தைய இப்படி பண்ணவனுங்களை துண்டு துண்டா வெட்டி எடுக்கனும், கை கால வாங்கனும். இல்லன்னா தூக்கு தண்டனை கொடுக்கனும்”.

இறந்தவர்களின் குடும்பத்தினர் பா.ம.க அன்புமணியை சந்தித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அங்கே இருந்த மகேந்திரனின் அம்மாவிடம் பேசினோம். அழுது அழுது தொண்டை கட்டி போயிருந்தது அவருக்கு.

mahendran-amma
“எப்புடி செதைச்சி வச்சிருக்கானுங்க எம்புள்ளைய” – மகேந்திரனின் அம்மா.

“மெட்ராசுக்கு பிளம்பர் வேலைக்கு போறதா சொல்லிட்டுதாம்பா போனான். அறியாத பசங்கள எதுக்கு புட்ச்சின்னு போனானுங்கன்னு தெர்ல. புட்சின்னு போய் இப்படி கொலைபாதகம் பண்ணி வச்சிருக்கானுங்கோ.

அன்னிக்கு என்ன நடந்துச்சோ ஏது நடந்துச்சோ, எவன் கூட்னு போனானோ தெர்லப்பா. இவனுக்கு பிளம்பர் வேலைதாம்பா தெரியும், அதுக்காக தான் மெட்ராசு, பாண்டிச்சேரின்னு போவான். மரம் வெட்ற வேலைக்கெல்லாம் அவன் போனதில்ல.

mahendran-house
மகேந்திரனின் சிதிலமடைந்த வீடு.

எனக்கு மூணு பசங்க, இவன் ரெண்டாவது பையன். எம் புள்ளைய நெனச்சி நெனச்சி எனக்கு வேதனையா இருக்குப்பா, எப்புடி செதைச்சி வச்சிருக்கானுங்க எம்புள்ளைய. படத்த பாக்க முடியலப்பா எனக்கு, என் பையன கொடூரமா வெட்டி வச்சிருக்கானுங்க. என் பையன் எப்படி செத்தானோ அது போல அதை பண்ணவனுங்களும் துடிதுடிச்சு சாகணும்”.

சசிக்குமார், படவேடு.

சசிக்குமாருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். ஒரு குழந்தைக்கு நான்கு வயது, இன்னொரு குழந்தைக்கு இரண்டு வயது. அவருடைய மனைவி முனியம்மா பேசினார்.

“எனக்கு கல்யாணம் ஆனாதுலயிருந்து அவர் கூலி வேலைக்கு தான் சார் போறாரு. அன்னிக்கு திருத்தணிக்கு பெயிண்ட் வேலைக்கு போறதா சொல்லிட்டு தான் போனாரு. போய் ஒரு நாளாச்சுங்கிறதால புள்ளைங்க அப்பாகிட்ட பேசணும்னு சொன்னிச்சுங்கோ, அதனால போன் பண்ணேன். ரிங்கு போனதேங்காட்டி யாரும் எடுக்கல, அப்புறம் போலீசுக்காரங்க வந்த பிறகு தான் இந்த மாதிரி நடந்துச்சுன்னு தெரியும்.

sasikumar-manaivi
“அவரை மூஞ்சில எல்லாம் சுட்ருக்காங்க, கத்திய வச்சு சித்ரவதை பண்ணியிருக்காங்க. இனி நான் மட்டும் இருந்து என்னா பண்ணப் போறேன்” – கொல்லப்பட்ட தொழிலாளி சசிகுமாரின் மனைவி முனியம்மா.

மரம் வெட்டப் போனதா சொல்றது பொய், அந்த வேலைக்கெல்லாம் அவர் போனதில்லை, அந்த வேலையே அவருக்குத் தெரியாது. உங்களுக்கு சந்தேகம் இருந்தா அவரோட செல்போன்ல யாரோட நெம்பர் இருக்குன்னு பார்க்கச் சொல்லுங்க. பெயிண்டிங் வேலை செய்றவங்க நெம்பர் தான் இருக்கும். அவரை மூஞ்சில எல்லாம் சுட்ருக்காங்க, கத்திய வச்சு சித்ரவதை பண்ணியிருக்காங்க. இனி நான் மட்டும் இருந்து என்னா பண்ணப் போறேன். எங்களுக்குக் கஞ்சி ஊத்தி காப்பாத்துன ஆம்படையானே போய்ட்டாங்க.

பெருமாள், படவேடு.

பெருமாளுக்கு மூன்று குழந்தைகள். 12, 14 வயதில் இரு பெண் குழந்தைகளும், 9 வயதில் ஒரு பையனும் உள்ளனர். அவருடைய மனைவி செல்வி பேசும் போது..

perumal-manaivi
“என் குழந்தைங்க அப்பா எங்கே, அப்பா எங்கேன்னு ? ராத்திரிலே அழுவுதுங்க நான் என்ன பதில் சொல்றது சார் ?” – கொல்லப்பட்ட தொழிலாளி பெருமாளின் மனைவி செல்வி மற்றும் குழந்தைகள்

“கேரளாவுக்கு போறேன்னு சொல்லிட்டு தான் போனாரு. கலவை கலக்குறது, மேஸ்திரி வேலை, கல்யாணத்துல சப்ளையர் வேலைக்குன்னு எல்லா வேலைக்கும் போவாரு.

எனக்கு ஒண்ணுமே புர்ல, பஸ்ல போம்போதே புட்சினு போய் இப்படில்லாம் பண்ணிருக்காங்க அதுக்கு என்ன காரணம்னு தெர்ல, எம் பொண்ணு ஒரு நாளைக்கு எவ்வளவு கூலினு கேட்டதுக்குக் கூட, 400 ரூபான்னு சொல்லிட்டுதான் போயிருக்காரு.

இப்படி ஆனப்புறம் தான் இவங்க இவங்கல்லாம் போய்ருக்காங்கன்னே எங்களுக்கு தெர்து. இவங்கள மட்டும் தனிய ஏன் இய்த்துனு போகணும் ? அதுக்கு முன்னடி பின்னாடி வர்ற பஸ்ச சேத்து மடக்க வேண்டியது தானே ? புடிச்சப்புறம் ஒனக்கு யார் இருக்காங்க, எந்த ஊர்னு எல்லாத்தையும் கேட்டு எங்களுக்கு தகவல் சொல்லியிருக்கலாம் இல்ல, அப்படி பண்ணாம எல்லாத்தையும் பிளான் பன்னி புட்சினு போய் சுட்டு கொன்னிருக்காங்க.

என் குழந்தைங்க அப்பா எங்கே, அப்பா எங்கேன்னு ? ராத்திரிலே அழுவுதுங்க நான் என்ன பதில் சொல்றது சார் ? எதிர்காலமே கேள்விக்குறியா இருக்கு, கொஞ்சம் நெலம் இருக்கு. ஆனா தண்ணி இல்ல, எங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க இருக்கு. அர்சாங்கம் தான் எங்களுக்கு உதவி பன்னனும். எங்க வீட்டுக்காரங்கள கொன்னவனுங்கள வேலையிலிருந்து டிஸ்மிஸ் பண்ணணும், எங்க குடும்பம் இன்னிக்கு அநாதையா நிக்கிற மாதிரி அவங்களும் அநாதையா நிக்கணும். நாங்க எப்படி இந்த செய்தியை எல்லாம் பாத்து துடிக்கிறமோ அந்த மாதிரி அவங்க குடும்பத்துல உள்ளவங்களும் துடிக்கணும்.”

முருகன், படவேடு.

முருகனுக்கு ஹேமலதா (18) குமுதா (13) என்கிற இரு பெண் பிள்ளைகள் இருக்கின்றன. அவருடைய மனைவி தஞ்சையம்மாள் கூறும் போது…

murugan-manaivi-padavedu
“மரம் வெட்டி சம்பாதிக்கிறதா இருந்தா நாங்க ஏன் ஊரான் வீட்ல குடியிருக்க போறோம்.” – கொலைசெய்யப்பட்ட தொழிலாளி முருகனின் மகள்கள் குமுதா, ஹேமலதா மற்றும் மனைவி தஞ்சையம்மாள்

“பெயிண்ட் வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு தான் போனாரு, போனா எப்பவுமே ரெண்டு நாள் மூனு நாளைக்கு தங்கி வேலையை முடிச்சிட்டு தான் வருவாரு. இந்த தடவயும் அப்படி தான் ரெண்டு மூனு நாளாகும்னு சொல்லிட்டு போனாரு.

நாங்க ஊரான் வீட்ல வாடகைக்கு குடியிருக்கோம், அன்னாடம் சம்பாதிச்சாதான் சோறு. மரம் வெட்டி சம்பாதிக்கிறதா இருந்தா நாங்க ஏன் ஊரான் வீட்ல குடியிருக்க போறோம். எங்க புள்ளைங்க கவர்மெண்டு ஸ்கூல்ல தான் படிகுது. அப்படி சம்பாதிச்சிருந்தா நாங்க ஏன் இந்த நெலமையில இருக்கப்போறோம் ?

அவங்களும் ஒரு தாய் வயித்துல பொறந்தவங்கதான? எங்க ஆம்படையானுக்கு நடந்த மாதிரி கொடும யாருக்கும் நடந்திருக்காது. நாங்க என்ன கஷ்ட்டத்தை அனுபவிக்கிறமோ அந்த கஷ்டத்தை அவங்க குடும்பமும் அனுபவிக்கனும், நாங்க எப்படி எங்க தாலிங்களை அறுகுறமோ அந்த மாதிரி அவங்களும் அறுக்கனும்.”

மகள் ஹேமலதா: “இனிமே எங்கம்மா எங்களை எப்படி காப்பாத்துவாங்க சார் ? அவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னாலும், எங்களுக்கு ஒடம்பு சரியில்லைன்னாலும் எப்படி மருத்துவம் பாப்பாங்க, என் தங்கச்சியை எப்படி படிக்க வைப்பாங்க. எங்கப்பா இருந்திருந்தா எப்படியாவது எங்களை கவனிச்சிப்பாரு எங்கம்மாவ வேலைக்கு போகவிடமாட்டாரு. இப்ப எங்க அப்பாவ கொன்னுட்டாங்க அவங்களா இனிமே எங்களுக்கு சோறுப்போடுவாங்க, வைத்தியம் பாப்பாங்க? எங்கம்மாவுக்கு அரசாங்க வேலை வேணும்.”

ஊர் மக்களின் கருத்து

வேலு, ஆட்டோ ஓட்டுனர், கண்ணமங்கலம்:

semmaram-killings-polur-villages-01

“தி.மலை மாவட்டம் வறட்சி மாவட்டம்னு அறிவிச்சிட்டாங்க, மழை பேஞ்சா கொஞ்ச நாளைக்கு விவசாயம் நடக்கும். கூலி வேலைக்கு 20 வயசிலிருந்து 50 வயசு வரைக்கும் பெங்களுரு, சென்னை, கேரளான்னு வெளியூருக்கு போறாங்க. கூலிக்கு மரம் வெட்ட போனவங்க, பெரிய பில்டிங் வாங்கணும், அத வாங்கணும், இத வாங்கணும்னு போகல. வயித்துப் பொழப்புக்கு தான் போயிருக்காங்க, உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சி தான் போயிருக்காங்க.

ஏழுமலை, ஆட்டோ டிரைவர், கண்ணமங்கலம்:

“இது கண்டிப்பா தப்பான தொழில்தான். ஆனா நமக்கு எது உண்மைன்னு தெரியலையே. அதனால என்ன நடந்துச்சின்னு சரியா சொல்ல முடியல. இங்கிருந்து வெளியூருக்கு வேலைக்கு போனதுக்கு காரணம் வறட்சி தான். பெங்களூர்க்கு தான் நிறைய பேர் போறாங்க, நிறைய பேர் கேரளாவுக்கும் போறாங்க.

அழகர்சாமி, ஆட்டோ ஓட்டுனர், கண்ணமங்கலம்.

“கொல்லப்பட்ட எல்லோரும் கூலிக்கு மரம் வெட்ட போனவங்க தான் சார். ஆட்டோல சவாரி ஏர்றவங்க பேசிக்கும் போது இத பத்தி பல விசயங்களை கேள்விப்பட்டிருக்கேன். இந்த வேலைக்காக ஆந்திர அரசு பஸ் ரெண்டு நேரடியா அழகர்சேனைங்கிற ஊருக்குள்ளயே வந்து ஆளுங்களை ஏத்திட்டு போனதா சொல்றாங்க. திருவண்ணாமலை To திருப்பதி போற ஆந்திர பஸ் முழுக்க மரம் வெட்றவங்கள ஏத்திக்கிட்டு பஸ் ஃபுல்லாகிடுச்சுன்னு வண்டியை எடுத்துட்டு போறதாவும் சொல்றாங்க. இந்த பிரசினையில் ஆந்திர வனத்துறை ஆளுங்கதான் முக்கிய ஏஜெண்டா கூட்டிட்டு போறாங்க.”

பரமசிவம், தேநீர் கடை, காட்டுக்காநல்லூர்.

semmaram-killings-polur-villages-04“வயித்துப்பாட்டுக்காக போனவங்களை தான் இப்படி கொன்னிருக்கானுங்க. இதுல எல்லா அரசியல் கட்சிக்காரனுக்கும் தொடர்பு இருக்கு. இந்த பக்கம் உள்ளவங்களுக்கு இதுல ஒன்னும் அனுபவம் இல்ல, மலை கிராமத்து மக்களுக்கு தான் மரம் வெட்றதுல நல்ல அனுபவம் இருக்கு”.

நூறு நாள் வேலை செய்துகொண்டிருந்த சண்முகம், வசந்தா, கலைவாணி, வனிதா, தமிழ்செல்வி:

semmaram-killings-polur-villages-07

“இந்த ஊர்க்காரங்க யாரும் மரம் வெட்ற வேலைக்கு போகலைங்க, எல்லாம் கூலி வேலைக்கு போனவங்க. அப்படி போனவங்கள தான் மரம் வெட்ட போனாங்கன்னு புடிச்சின்னு போய் கொன்னுட்டாங்க.

பத்து பதினைஞ்சு வருசமா எங்களுக்கு எந்த வருமானமுமில்லைங்க, விவசாயம் பண்ண முடியல. தண்ணி இல்லாம பயிர் எல்லாம் காயிது. விவசாயம் பண்றதே கொறஞ்சு போச்சு. ஊருக்கு பாதி பேரு மெட்ராஸ், பெங்களூருன்னு போயிட்டாங்க.”

தனசேகர், காளசமுத்திரம்:

“வேலை இல்லாததுதாங்க இதுக்கு முக்கிய காரணம். மேலும் தவறான தொழில் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. அவங்களை பொறுத்த வரை மரம் வெட்ட போறோம். எந்த மரம் என்றெல்லாம் தெரியாது, அங்க போன பிறகு தான் தெரியுது. அதோட பணத்தை முன்கூட்டியே வங்கிட்டோம். வாங்கிய பணத்துக்கு வெட்டிட்டு வருவோம்னும் நினைக்கிறாங்க”.

தயாளன், காளசமுத்திரம்:

“நூல் வாங்க போறேன்னு சொல்லிட்டு கண்ணமங்கலம் போனவனை தூக்கின்னு போய் கொன்னுட்டானுங்க. கற்பழிக்கிறவனுக்கெல்லாம் தண்டனை தர துப்பில்ல, பொழப்புக்காக போனவங்கள சுட்டு தள்ளியிருக்கானுங்க. மரத்தை வெட்டும் போதுனா கூட பரவால்லைங்க பஸ்ல இருந்து புடிச்சுட்டு போய் சுட்ருக்கானுங்க. அவங்க பண்ணது தப்புனா தண்டனை கொடுத்திருக்கலாம் மரத்துக்கு இருக்க பாதுகாப்பு கூட மனுஷனுக்கு இல்ல”.

மணி, விவசாயி, காளசமுத்திரம்:

“இப்ப வேலைக்கு போனவங்களும், இதுக்கு முன்னடி மரம் வெட்ட போயி அரெஸ்ட் ஆகி ஜெயில்ல இருக்கவங்களும் மரம் வெட்ட கூலிக்கு போனவங்க தான் சார். அவங்களுக்கும் மரக்கடத்தலுக்கும் சம்பந்தமே இல்ல. பக்கத்துல பள்ளக்கொல்லைன்னு ஒரு ஊரு இருக்கு அங்கே ஜெகநாதன்னு ஒருத்தன் இருந்தான், எனக்கு தெரிஞ்சு அவன் தான் இங்கே இருந்த பெரிய ஏஜெண்ட். இவங்களை வேலைக்கு இட்டுன்னு போறது வர்றது எல்லாத்தையும் பன்னது அவன் தான்.

இந்த தொழிலுக்கு முன்னாடி சாராயம் காய்ச்சினிருந்தான். மரம் வெட்றதுக்கு ஆளுங்களை கூட்டிட்டு போய் புரோக்கர் வேலை பார்த்து கோடிக்கணக்குல சம்பாதிச்சிட்டு இப்ப தொழிலை விட்டே தலைமறைவாயிட்டான். அப்ப பா.ம.க வுல இருந்தான் இப்ப எங்க இருக்கான்னு தெரியல, இப்பயும் கட்சியோட தொடர்பு இருக்கலாம்”.

செந்தில், ஆசிரியர், காளசமுத்திரம்:

“ஜவ்வாது மலை கீழ்கனைவாயூர் மலைகிராமத்தில் உள்ள அரசு பள்ளியில தான் ஆசிரியரா இருக்கேன். ஊர்ல உள்ள எல்லோரையும் இந்த வேலைக்கு போறவங்கன்னு சொல்ல முடியாதுங்க அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு சிலர் போய்டுறாங்க. நாங்கூட பசங்ககிட்ட, ஏண்ட இப்படி போய் மாட்டிக்கனும் இந்த வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லுங்கடான்னு சொல்லுவேன். சொல்றோம் சார்ம்பாங்க.

எப்படி கூட்னு போனாங்க யார் கூட்னு போனாங்கங்கிற டீட்டெய்ல் எல்லாம் தெரியல. அவங்க மரம் வெட்ட போகல கூலி வேலைக்கு தான் போனாங்கன்னும் பேசிக்கிறாங்க. எது உண்மை எது பொய்னு தெரியல.

யார் ஏஜென்ட்னு தெரியாது, அது மரம் வெட்ட போற எல்லோருக்கும் கூட தெரியாது, ஊர்ல இருந்து எல்லோரையும் கூட்னு போற அந்த டீம்ல இருக்க ஒருத்தருக்கு மட்டும் தான் ஏஜென்டோட லிங்க் இருக்கும். அவருக்கு மத்தவங்களை விட கொஞ்சம் கூடுதலா கமிஷன் கிடைக்கும்.

ஜவ்வாது மலையில 6 பஞ்சாயத்துல 300 குக்கிராமங்கள் இருக்கு. இதுல தோராயமா 30,000 பேர் வாழ்றாங்க. இங்கிருந்து தான் அதிகம் பேர் மரம் வெட்ட போறாங்க. காரணம் விவசாயத்தை தவிர வேறு வேலை இல்ல, அதோட மரம் வெட்றதுல அவங்களுக்கு நல்ல திறமையும் இருக்கதால போறாங்க.

இதுல பிடிபட்டு சிறைக்கு போனவங்க அதிகம். பலர் இன்னும் சிறையிலேயே இருக்காங்க அதனால அவங்க குழந்தைங்க ரொம்ப பாதிக்கப்படுறாங்க. இப்படி பாதிக்கப்பட்டவங்களோட குழந்தைங்க பள்ளிக்கூடத்துக்கு வர்றதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு மாதிரி அப்செட்டாவே இருப்பாங்க.

சிறைக்கு போய்ட்டு வெளியே வந்தவங்க பெரும்பாலும் திரும்ப அந்த வேலைக்கு போறதே இல்ல தவறை உணர்ந்து பிறகு குடும்பத்தோடு கேரளாவிற்கோ கர்நாடகாவிற்கோ சென்று விடுகின்றனர். இதனால ஒவ்வொரு வருசமும் மாணவர்கள் சேர்க்கை குறைஞ்சிட்டே வருது”.

_______________________________

காளசமுத்திரம் உள்ளிட்ட மேற்கண்ட கிராமங்களில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வெட்டுவதில் கைதேர்ந்தவர்கள் அல்ல. கடந்த சில ஆண்டுகளாக தான் இப்பகுதியிலிருந்து சிலர் மரம் வெட்டச்செல்வதாக கூறுகின்றனர்.

இங்கு வசிக்க கூடிய பெரும்பாலான மக்கள் வன்னியர்கள். இவர்கள் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் என்று சிறு அளவில் தான் நிலம் வைத்திருக்கின்றனர். வெகுசிலர் தான் ஐந்து ஏக்கர் வைத்திருக்கின்றனர். தண்ணீர் இல்லாததால் பெரும்பாலும் நெல் பயிரிடுவதில்லை. கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக கரும்பும், வாழையுமே பயிரிடுகின்றனர். கரும்புக்கும் தண்ணீர் தேவை தான், ஆனால் தண்ணீரை அளவாக விடுகிறோம் என்கின்றனர். எனினும் இந்த விவசாயமும் விவசாயிகளுக்கு கைகொடுப்பதில்லை.

semmaram-killings-polur-villages-22சமீப ஆண்டுகளில் இங்குள்ளவர்கள் குடும்பத்தோடு சென்னைக்கும், பெங்களூருக்கும் கட்டிட வேலை உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றனர். ஊரில் பாதி பேர் வெளியூர்களில் தான் உள்ளனர்.

இறந்தவர்களின் குடும்பங்கள் அனைத்தையும் சந்தித்து விட்டு ஜவ்வாது மலையை நோக்கி பயணமானோம். கொல்லப்பட்டவர்களில் ஐந்து பேர் அங்குள்ள மேல் குப்சானூர் என்கிற கிராமத்தை சேர்ந்தவர்கள். மலைகிராமத்தை சென்றடைந்த போது நன்றாக இருட்டி விட்டிருந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை இரவு நேரத்தில் தான் சந்தித்தோம்.

சின்னசாமியின் மனைவி மலர், மேல்குப்சானூர்:

“என் பேரு மலருங்க, எங்க வீட்டுக்காரர் பேரு சின்னசாமி. அவரு கூலி வேலைக்கு கேரளாவுக்கு போறேன்னு சொல்லிட்டு தான் போனாரு. அதுக்கு மரம் வெட்டற வேலையெல்லாம் தெரியாது. யார் கூட்டிட்டுப் போனாங்கன்னு தெரியல.

chinnasamy-manaivi-malar
“கூலி மட்டும்தான் சார் கண்ணுல பார்ப்போம். யாரு கூட்டிட்டுப் போறாங்க, எங்க போறாங்க அதெல்லாம் எங்ககிட்ட சொல்லமாட்டாங்க.” – கொலை செய்யப்பட்ட தொழிலாளி சின்னசாமியின் மனைவி மலர்

கல்லு ஒடைக்க, குருமொளகு பறிக்க, காப்பி தோட்டங்களுக்கு வேலைக்காக கேரளாவுக்கு போவாரு, கூலி வேலைக்கு போனாதான் கஞ்சி சார். பத்து நாள், ஒரு மாசம் இருந்துட்டு 1000, 2000 வாங்கிக்கிட்டு வருவாரு. கூலி மட்டும்தான் சார் கண்ணுல பார்ப்போம். யாரு கூட்டிட்டுப் போறாங்க, எங்க போறாங்க அதெல்லாம் எங்ககிட்ட சொல்லமாட்டாங்க.

பத்து வருசமா இந்த வேலை தான் செய்ஞ்சிக்கிட்டு இருக்காரு. இதுவரைக்கும் மரம் வெட்ற வேலைக்கு போனதில்ல. எனக்கு இரண்டு குழந்தைங்க. சின்ன பையன் முருகனுக்கு 7 வயசு. பெரிய பொண்ணுக்கு 20 வயசு. ஆந்திர அரசாங்கம் பொய் சொல்லுது.”

ராஜேந்திரன் மனைவி நதியா:

ராஜேந்திரனுக்கு 30 வயது, நதியாவுக்கு 20 வயது. திருமணமாகி 9 மாதங்கள் தான் ஆகின்றன. நதியா இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறார்.

rajendran-family
“அவருக்கு கண்ணுல பூ விழுந்துருச்சி அதனால நைட்டானா கண்ணு தெரியாது” – கொலை செய்யப்பட்ட தொழிலாளி ராஜேந்திரனின் மனைவி நதியா (வெள்ளை ஷால் போட்டிருப்பவர்)

“அவரு மரம் வெட்டவெல்லாம் போகலீங்க, கூலி வேலைக்கு போறேன்னுட்டு தான் போனாரு. அவருக்கு கண்ணுல பூ விழுந்துருச்சி அதனால நைட்டானா கண்ணு தெரியாது”.

நதியாவின் சின்னம்மா:

“இவங்க ரெண்டு பேருக்கும் அம்மா அப்பா இல்லைங்க. ராஜேந்திரனுக்கு கண்ணு தெரியததனால தான் இவ்வளவு காலமா கல்யாணம் ஆகாம இருந்துச்சு. அப்புறம் இதுங்க ரெண்டுமே பேசி கல்யாணம் பன்னிக்கிச்சுங்க.

ஊருக்குள்ள யாரும் மரம் வெட்ற வேலைக்கு போறது இல்லைங்க, எல்லாம் கூலி வேலைக்கும், கேரளாவுக்கும் தான் போவாங்க.”

கோவிந்தசாமி மனைவி முத்தம்மா:

“மெட்ராசுக்கு கூலி வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு தான் போனாரு” என்றார். இவருக்கு வெள்ளையன் (13) சித்தமரம் (12) திரிஷா (5) சாமி (3) ஆகிய நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். நான்கு பேரையும் எப்படி வச்சு காப்பாத்த போறேனோ என்று அழுதுகொண்டே கூறினார்.

வெள்ளிமுத்து அத்தை சின்னபுள்ளை:

வெள்ளிமுத்துக்கு 22 வயது. வாய் பேச முடியதவர், காதும் கேட்காது. எட்டு வயது குழந்தையாக இருக்கும் போது அம்மா அப்பா இருவரும் இறந்துவிட்டனர். அதன் பிறகு இவரை எடுத்து வளர்த்தது அத்தை சின்னபுள்ளை தான்.

vellimuthu-aththai
“மேஸ்திரி வேலைக்கு மெட்ராசுக்கு போறேன்னு சொல்லிட்டு போனாம்பா.” – கொலை செய்யப்பட்ட தொழிலாளி வெள்ளிமுத்துவின் அத்தை சின்னப்பிள்ளை மற்றும் தம்பி

“மேஸ்திரி வேலைக்கு மெட்ராசுக்கு போறேன்னு சொல்லிட்டு போனாம்பா. மரம் வெட்ற வேலை எல்லாம் அவனுக்கு தெரியாது, அந்த வேலைக்கெல்லாம் இதுவரைக்கும் போனதில்ல”.

பிரபாகரன், மேல் குப்சானூர்:

வேலூரில் எம்.ஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

“எங்களுக்கும் தமிழ் தான் சார் தாய்மொழி, ஆனா அதை பேசுறது கொஞ்சம் வேற மாதிரி இருக்கும். இங்க இருக்கிற குழந்தைங்க எல்லாம் அதிகம் படிக்கறதில்ல. வேலூருக்கு போனா கூட எப்படி திரும்பி வர்றதுன்னு தெரியாத மக்கள் எங்க மக்கள். அப்படி போய் ஊருக்கு வர்ற வழி தெரியாதவங்கள யாராவது கூட்டிட்டு வந்து விடுவாங்க.

கூலி வேலைக்கு கூட்டிட்டு போய்ட்டு, நிறைய வேலை வாங்கிட்டு கம்மியான கூலி கொடுத்து ஏமாத்துவாங்க. எஜென்டுகள்லாம் எங்க இருந்து வர்றாங்கன்னு தெரியாது. ஏலகிரி மலை, ஜவ்வாது மலை ஆட்கள் எல்லாரும் சேர்ந்து வேலை செய்வாங்க.

கட்டிட வேலைக்கும் பெயிண்டிங் வேலைக்கும் தான் கூலிக்கு போவாங்க. வாரத்துக்கு ஒருமுறை வந்து வீட்டு செலவுக்கு பணம் கொடுத்துட்டு மறுபடியும் கிளம்பிடுவாங்க. அவங்க எடுத்துடுட்டு வரும் கூலிக்காக குடும்பமே காத்திருந்து, காய்கறி வாங்கி சோறு ஆக்குவாங்க. ஊருக்கு உள்ளயே யாரும் மரம் வெட்ட மாட்டாங்க. கூட்டிட்டு போனவங்க யாருன்னு எங்களுக்கு தெரியாது. மரம் வெட்ட யாரு எங்கிருந்து போறாங்கனு தெரியாது, ஆந்திரா மரம் வெட்றதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.

ஒரு மாசம் ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்துட்டு போவாங்க. மழை இல்லாதததால விவசாயம் செய்ய முடியல. கேரளாவுக்கும், மெட்ராசுக்கும், பெங்களூருக்கும், திருப்பூருக்கும், பவானிக்கும் தான் கூலி வேலைக்கு போவாங்க.

மலையில ஃபாரஸ்ட்காரங்க ஆடு, மாடு மேய்க்க கூடாதுன்னு தடை போடுறாங்க, மீறி மேய்ச்சா அபராதம் போடுறாங்க, ஆட்டை மடக்கி வச்சிக்கிறாங்க.

______________

ஜவ்வாது மலை சென்னையிலிருந்து 170 கி.மீ. தொலைவிலுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாகும். இம்மலைத்தொடர் திருவண்ணாமலை வேலூர் மாவட்ட எல்லைகளை உள்ளடக்கி கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த மலையிலும் இதே போன்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள சேர்வராயன் மலை, கல்வரயன் மலை, கொல்லி மலை, பச்சை மலை, ஏலகிரி மலை, சித்தேரி மலை ஆகிய மலைப்பகுதிகளிலும் வசித்து வரும் பழங்குடி மக்கள் மலையாளக் கவுண்டர்கள் என்றும் மலையாளிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்

semmaram-killings-polur-villages-15
முருகப்பாடி கிராமத்தின் வறண்டு போன கிணறு.

ஜவ்வாது மலையிலுள்ள 230 கிராமங்களில், முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். சமவெளி பகுதிகளில் இருப்பதை போன்று ஊர்கள் அடுத்தடுத்ததாக இல்லை. குறைந்தது 3 கி.மீட்டலிருந்து 10 கி.மீ இடைவெளியில் இம்மலைக்கிராமங்கள் அமைந்திருக்கின்றன.

semmaram-killings-polur-villages-16
முருகப்பாடி கிராமம்

மலையாளிகள் என்றால் மலையை ஆள்பவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இன்று இவர்களின் வாழ்கை அதற்கு நேரெதிரானதாக மாறியுள்ளது. மறுகாலனியாக்க கொள்கைகள் எங்கோ ஒரு மலையின் மீதிருக்கும் இந்த மக்களையும் விட்டு வைக்கவில்லை. இயற்கையை நம்பி வாழும் இவர்களுக்கு விவசாயம் தான் ஒரே தொழில். அதுவும் மழையை நம்பியே இருக்கிறது. பெரும்பாலான மக்களிடம் உள்ள நிலம் வீட்டில் உள்ள தோட்டத்தின் அளவிற்கே இருக்கிறது. ஒன்றிரண்டு ஏக்கர் வைத்திருப்பவர்கள் மிக மிக சொற்பமானவர்கள். இந்நிலங்களில் பெரும்பாலும், கேழ்வரகு, சாமை திணை போன்ற பயிர்களை ஒருபோகம் விளைவிக்கின்றனர்.

நிலத்தை விட்டு பிரியாத இம்மக்களை உலகமயமாக்கல் நகரங்களை நோக்கி வீசி எறிந்திருக்கிறது. தொடர் வறட்சியும் விவசாய நிலத்தை விட்டே இம்மக்களை விரட்டியடிக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் பாதிக்கு பாதி பேர் வெளியூர்களுக்கு சென்றிருக்கின்றனர் பெரும்பாலும் கேரளாவிற்கு குறுமிளகு, காபி கொட்டை பறிக்கவும், சென்னை பெங்களூர் போன்ற நகரங்களுக்கு கட்டிட வேலைகளுக்கும், பெயிண்டிங் வேலைகளுக்கும் செல்கின்றனர். இவற்றுக்கும் ஏஜெண்டுகள் மூலமே செல்கின்றனர். வேலைக்குச் செல்பவர்கள் அவ்வப்போது கொண்டு வரும் அற்பக் கூலியை வைத்துத்தான் மொத்த குடும்பமும் உயிர் வாழ்கிறது.

மாடுகள் மேய பசும்புல் வெளி இல்லாததாலும், போதிய தீவனம் போடப்படாததாலும் இம்மக்களின் கால்நடைகள் மெலிந்து காணப்படுகின்றன. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஓட்டுப் பொறுக்கிகள் அனைவரும் மலையின் இயற்கை வளங்களையும் அதன் மூலாதாரங்களையும் சூறையாடி மலைகளை சூன்ய பிரதேசமாக மாற்றிவிட்டார்கள்.

semmaram-killings-polur-villages-24
மலைகிராமம் மேல்குப்சானூரில் இப்போதுதான் ரோடு போடுவதற்கு கல் போட்டிருக்கிறார்கள்.

80% பழங்குடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். 70% சதவீதத்துக்கும் மேலானோர் கல்வியறிவு அற்றவர்கள். 100% சதவீதப் பழங்குடிப் பெண்கள் இரத்தச் சோகைக்கு ஆட்பட்டுள்ளனர். 70% சதவீத குழந்தைகள் பிறக்கும்போதே எடைக்குறைந்து 2.5 கிலோவுக்கும் குறைவான எடையில் பிறக்கின்றன. கர்ப்பகாலத்தில் பழங்குடி பெண்கள் குறைந்தபட்சம் எடைக்கும் குறைவான எடையிலேயே உள்ளனர், இதனால் பிரசவம் என்பது அவர்களுக்கு மறுபிறப்பாக இருக்கிறது.

கொல்லப்பட்ட ஐந்து பேரின் உடல்களையும் இம்மக்கள் உடனடியாக சென்று வாங்கவில்லை. ஏனென்றால் இதற்கு முன்பு கைது செய்யப்ப்பட்ட, கொலைசெய்யப்பட்ட சிலரின் உறவினர்கள் என்று சென்றவர்கள் மீதும் வழக்கு போட்டு உள்ளே தள்ளியிருக்கிறது ஆந்திர அரசு. எனவே இந்த மக்கள் தற்போது யாரையும் நம்பத் தயாராக இல்லை. அனைவரைக் கண்டும் அஞ்சுகிறார்கள். தங்களுக்கு மரம் வெட்டவே தெரியாது, பிற கூலி வேலைகளுக்குத்தான் செல்கிறோம் என்கின்றனர். இவர்களை மரம் வெட்ட அழைத்துச் செல்லும் எஜென்டுகள் யார், உள்ளூரில் அவர்களோடு தொடர்பில் இருப்பவர்கள் யார் யார், ஏற்கெனவே சிறைக்குச் சென்று வழக்கை முடித்துக்கொண்டு வெளியே வந்திருப்பவர்கள் யார் யார் என்று எதற்கும் பதில் தெரியவில்லை. அவர்கள் கூறுவதெல்லாம் எங்களுக்கு மரம் வெட்ட தெரியாது. நாங்கள் அந்த வேலைக்கே போனதில்லை என்று மட்டும்.

இதே போன்று தான் சமவெளி பகுதியிலுள்ள ஏழு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கூறினர். இவர்கள் அனைவரும் நிரந்தர வேலை இன்றி பல்வேறு வேலைகளையும் செய்து வருகின்றனர். மழை பெய்யும் போது கொஞ்சம் விவசாயம், முகூர்த்த நாட்களில் கல்யாண வேலை, கல் உடைக்கும் வேலை, பெயிண்டிங் வேலை, நகரங்களில் சில நாட்களுக்கு கட்டிட வேலைகள், தோட்ட வேலைகள் என்று பல்வேறு வேலைகளையும் செய்து வருகின்றனர்.

pannen-selvam
மேல்குப்சானூர் கிராமத்திற்கு போகும் வழியில் ஒரு அஞ்சலி பிளக்ஸ் மரத்தில் தொங்குகிறது!

ஒரு வேலை ஒரே வாழ்க்கை என்றில்லாமல் கிடைக்கும் அத்தனை வேலைகளையும் செய்கின்றனர். கையில் காசிருக்கும் போது தடபுடலாக செலவு செய்வது காசு காலியான பிறகு மீண்டும் வேலைக்கு செல்வது என்று நிலையான ஒரு வேலையோ வாழ்க்கையோ இல்லாமல் இருக்கும் இவர்களை வர்க்கத்தில் உதிரி பாட்டாளிகள் என்றழைக்கலாம். கொஞ்சம் அதிகமாக காசு கிடைக்கிறது என்றால் உதிரிகள் எதற்கும் துணிவார்கள். அந்த வகையில் ஒரு சில நாட்கள் மரம் வெட்டினால் சில ஆயிரங்களை பார்க்க முடியும் என்பதால் இந்த வேலைக்கு சென்றிருக்கலாம்.

விவசாயம் பொய்த்து போய் வானத்தை பார்த்துக்கொண்டிருந்த இம்மக்களின் காடு பற்றிய அறிவையும், மரம் வெட்டும் திறமையையும், நகர வாசிகளின் சூதுகளை அறியாத வெள்ளேந்தித்தனத்தையும் அறிந்து கொண்ட சமூகவிரோதிகள், அண்டை மாநிலங்களுக்கு நல்ல சம்பளத்துக்கு அழைத்துச் செல்வதாக ஆசை வார்த்தைகளை கூறி சில பல ஆயிரங்களை முன் பணமாக கொடுத்து தமது சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இதில் சகல ஓட்டுக்கட்சி தலைவர்களும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். இவர்களோடு அரசு அதிகாரிகளும், போலீசும் கள்ளக் கூட்டு வைத்திருக்கிறது. இவர்களை இவ்வாறு தான் செம்மரக் கடத்தலில் ஈடுபடுத்தியுள்ளனர். ஓரிரு முறை சென்றவர்கள் இதில் நல்ல வருமானம் வருகிறதே என்று மீண்டும் மீண்டும் போகத் துவங்கியுள்ளனர்.

semmaram-killings-polur-villages-18
பா.ம.க அன்புமணி ராமதாஸ், வேட்டைகிரிபாளையத்திற்கு வந்த போது ஒரு காட்சி.

இது தவறு என்று அந்த மக்களுக்கு தெரியாதா? தெரியும். தவறு என்று தெரிந்தும், உயிருக்கு ஆபத்தான வேலை என்று அறிந்தும் தான் இவ்வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். விவசாயம் பொய்த்துப் போனதும், வேலையின்மையுமே பிரதான காரணமாக இருக்கிறது.

செம்மரக்கடத்தலில் முக்கிய குற்றவாளிகளாக இருப்பது மாஃபியா கும்பலும், ஓட்டுக்கட்சிகளும் மட்டுமல்ல, வனத்தை பாதுகாப்பதற்காக இருக்கும் வனத்துறையே இவர்களுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கும் முக்கிய குற்றவாளியாக இருக்கிறது. ஆந்திர வனத்துறை தான் தொழிலாளிகளை கூட்டிச் செல்லும் முக்கியமான ஏஜென்ட் என்கிறார்கள் மக்கள். வனத்துறையின் ஒப்புதல் இல்லாமல் செம்மரக் கடத்தல் நடைபெற வாய்பே இல்லை.

இதில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வயிற்றுப்பாட்டுக்காக, கொஞ்சம் கூடுதல் கூலி கிடைக்கிறதே என்பதற்காக சென்ற அப்பாவி ஏழை விவசாயிகள், மற்றும் பழங்குகளாவர். விவசாயத்தின் அழிவும் அதன் காரணமாக மோசமாகி வரும் தமது வாழ்நிலைமையுமே அவர்களை இதை நோக்கி தள்ளியிருக்கிறது.

இருப்பினும் இவை எதுவும் கொலைகார ஆந்திர போலீசின் செயலை நியாயமாக்கிவிடாது. பிறந்த ஊரில் வாழ முடியாமல் ஆக்கியிருக்கும் இந்த சமூக அமைப்புத்தான் இவர்களை இறக்கமின்றி கொல்லப்படுவதற்கும் காரணமாக இருக்கிறது. ஏழைகள் என்பதால் இவர்களை எந்த வேலைக்கும், எந்த அபாயத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.

செம்மரத்தில் செய்யப்பட்ட வரவேற்பறை நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு முதலாளிகள் தமது தொழிலை பேசுவதற்கும், முதலாளிகளின் மனைவிமார்கள் செம்மரத்தில் செய்யப்பட்ட பிள்ளையாரை பூஜை செய்து வணங்குவதற்கும் இத்தகைய இரக்கமற்ற நரபலிகள் தேவைப்படுகிறது.

– வினவு செய்தியாளர்கள்

ஹாசிம்புரா படுகொலை தீர்ப்பு : முதுகில் குத்திய துரோகம் !

0

மக்கு இழைக்கப்பட்ட கொடூரமான அநீதிக்கு நீதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் 28 ஆண்டுகளாகக் காத்திருந்து, அதற்காகப் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு, அதற்காகப் போராடி வந்தவர்களை எள்ளிநகையாடும் விதத்தில் இன்னொரு அநீதி இழைக்கப்படும்பொழுது, அத்துயரத்தை எந்தவொரு வார்த்தையாலும் எடுத்துச் சொல்ல முடியாது. 1987-ல் நடந்த ஹாசிம்புரா முசுலீம் படுகொலை வழக்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்த இந்து மதவெறி பிடித்த போலீசு மிருகங்கள் அனைவரையும் விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு அநீதியானது மட்டுமல்ல, நீதிமன்றங்கள் உள்ளிட்டு அரசு இயந்திரத்தின் அனைத்துக் கூறுகளும் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிசத்தின் கைக்கூலியாகச் செயல்படுவதன் அடையாளமும் ஆகும்.

ஹாசிம்புரா படுகொலைகள்
படுகொலைக்கு முன்பு : ஹாசிம்புராவைச் சேர்ந்த முசுலீம்களை, தமது வீடுகளிலிருந்து இராணுவச் சிப்பாய்களால் துப்பாக்கி முனையில் இழுத்து வரப்பட்டு, சாலையில் கைகளைத் தூக்கியவாறு உட்கார வைக்கப்பட்டுள்ள பயங்கர காட்சிகள்.

உ.பி. மாநிலம் மீரட் நகரில் உள்ள ஹாசிம்புராவில் நடந்த முசுலீம் படுகொலையை மோடியின் குஜராத்தில் நடந்த முசுலீம் பெருந்திரள் படுகொலையின் முன்னோடி எனலாம். போலீசு, இராணுவம் உள்ளிட்ட மொத்த அரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ்ஸாக மாறி நடத்திய படுகொலை இது. இப்படுகொலையின் தொடக்கப்புள்ளியாக இரண்டு சம்பவங்கள் அமைந்தன.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷா பானு என்ற வயதான, கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட தாய், ஜீவனாம்சம் தரக்கோரி தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்றம் அவருக்குச் சாதகமான தீர்ப்பை ஏப்ரல் 1985-ல் அளித்தது. இத்தீர்ப்பைத் தமது மதக் கோட்பாடுகளின் மீதான தாக்குலாக முசுலீம் அடிப்படைவாத சக்திகள் ஊதிப் பெருக்கவே, அப்பொழுது ராஜீவ் காந்தி தலைமையில் இருந்த காங்கிரசு அரசு, உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும் விதத்திலான சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தயாரானது. இச்சட்டம் 1986 மே மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே, பாபர் மசூதி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ராமர் சிலையை அவ்வளாகத்தினுள் சென்று வழிபடுவதற்கு இந்துக்களை அனுமதிக்குமாறு உத்தரவிட்ட பைசலாபாத் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, 1986 பிப்ரவரியில் பாபர் மசூதி வளாகம் திறந்துவிடப்பட்டது.

முசுலீம் தாய்மார்கள்
இந்து மதவெறி கொண்ட பிரதேச ஆயுதப்படை போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களுடன் முசுலீம் தாய்மார்கள் (கோப்புப் படம்)

இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்து, முசுலீம் மதவெறி அரசியல் செழித்து வளர்வதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிட்டன. குறிப்பாக, வெகுகாலமாகப் பூட்டப்பட்டுக் கிடந்த பாபர் மசூதி வளாகத்தை ராமர் வழிபாட்டுக்காகத் திறந்துவிட்ட நிகழ்வு, ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பலுக்குத் தமது நிகழ்ச்சிநிரலை மேலும் வன்மத்தோடு எடுத்துச் செல்வதற்கு உந்து விசையாகப் பயன்பட்டது. அக்கும்பல் இந்தி பேசும் வடமாநிலங்களில், “அறம் காப்போம், ஆலயம் காப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து, ஊர்வலங்களையும், ரத யாத்திரைகளையும் நடத்தி, எந்நேரத்திலும் இந்து-முசுலீம் கலவரம் வெடிக்கலாம் என்ற முறுகல் நிலையை ஏற்படுத்தி வந்தது.

இச்சூழ்நிலையில்தான் உ.பி. மாநிலத்திலுள்ள மீரட் நகரில் 1987 ஏப்ரல், மே மாதங்களில் இந்து-முசுலீம்களிடையே அடுத்தடுத்து மோதல்களும், கலவரங்களும் நடந்தன. அதில் இரு தரப்பிலும் சொத்துக்களுக்கும், தொழில்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டதோடு, கணிசமான உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன. உ.பி.யை ஆண்டு வந்த காங்கிரசு அரசு ஒருபுறம் இம்மோதலில் குளிர்காய்ந்துகொண்டே, இன்னொருபுறம் இந்து மதவெறிக்குச் சார்பாக ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டது. அச்சமயத்தில் மீரட் நகரையும் உள்ளடக்கிய காசியாபாத் மாவட்ட போலீசு கண்காணிப்பாளராக இருந்த விபூதி நாராயண் ராய் இப்படுகொலை பற்றி நினைவுகூர்கையில், “போலீசு மற்றும் பிரதேச ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்களுள் பெரும்பாலோர் இந்துக்களாக இருந்ததோடு, அவர்கள் அனைவரும் கலவரத்திற்குக் காரணம் முசுலீம்கள்தான் என்று நம்பினர். மீரட் மினி பாகிஸ்தானாக மாறிவிட்டதென்றும், முசுலீம்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டியது அவசியமானது என்றும் அவர்கள் கருதி வந்ததாக”க் குறிப்பிட்டிருக்கிறார். பிரதேச ஆயுதப்படை போலீசு ஹாசிம்புராவைச் சேர்ந்த 42 முசுலீம்களைச் சுட்டுப் படுகொலை செய்ததற்கு அடிப்படையாக இருந்தது இந்து மதவெறிதான் என்பதற்கு விபூதி நாராயணின் இந்த வாக்குமூலத்திற்கு அப்பால் வேறு சான்றுகள் தேவையில்லை.

1987, மே 22 அன்று மீரட் நகரில் முசுலீம்கள் நெருக்கமாக வாழ்ந்துவந்த ஹாசிம்புரா பகுதியைச் சுற்றிவளைத்த பிரதேச ஆயுதப் படையைச் சேர்ந்த 41 ஆவது பாட்டாலியன் பிரிவு, முசுலீம்கள் அனைவரையும் வீட்டைவிட்டு வெளியேறுமாறும், தவறினால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்றும் உத்தரவிட்டது. வீட்டைவிட்டு வெளியேறிய ஆண்,பெண், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் நடுத்தெருவில் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டனர். காலியாக இருந்த வீடுகளினுள் புகுந்து தேடுதல் வேட்டை நடத்திய ஆயுதப் படை போலீசார் வீட்டினுள் இருந்த உடமைகளைச் சேதப்படுத்தியதோடு, பணம், நகைகளைக் கொள்ளையடித்தனர். துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்ட முசுலீம்களுள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் தனியாகவும் இளவயது முசுலீம்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டனர். இளவயது முசுலீம்களுள் 42 பேர் பிரதேச ஆயுதப் படை போலீசாரால் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றப்பட்டுக் கடத்திச் செல்லப்பட்டனர். இன்னுமொரு 324 பேர் அருகிலுள்ள போலீசு நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.

டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குண்டடிபட்ட தடயத்தைக் காட்டும் முகமது உஸ்மான்.
டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குண்டடிபட்ட தடயத்தைக் காட்டும் முகமது உஸ்மான்.

சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, கடத்திச் செல்லப்பட்ட 42 பேரில் ஒரு பகுதியினர் முராத் நகரில் உள்ள மேல்கங்கை கால்வாய் பகுதியில் நிற்க வைத்து ஒருவர் பின் ஒருவராகச் சுட்டுக் கொல்லப்பட்டு, அவர்களின் சடலங்கள் அக்கால்வாயில் வீசியெறியப்பட்டன. மற்றொரு பகுதியினர் மகான்பூர் பகுதியில் உள்ள ஹிண்டன் கால்வாய் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டு வீசியெறியப்பட்டனர். இதே சமயத்தில் போலீசு நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட 324 பேரும் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, மீரட் மற்றும் ஃபதேகர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அங்கும் அவர்கள் தாக்கப்பட்டதில் ஐந்து முசுலீம்கள் ஃபதேகர் சிறையிலேயே மரணமடைந்தனர். மேலும், மலியானா என்ற கிராமத்தில் பிரதேச ஆயுதப் படை நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்பட்டனர்.

முராத் நகர் மேல்கங்கை கால்வாய் கரையிலும் ஹிண்டன் கால்வாய் கரையிலும் சுடப்பட்ட 42 பேரில் ஆறு பேர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர். இவர்களுள் நால்வர் முராத் நகர் போலீசு நிலையத்திலும், இருவர் இணைப்புச் சாலை போலீசு நிலையத்திலும் கொடுத்த புகாரையடுத்துதான் இப்படுகொலை சம்பவம் அம்பலத்திற்கு வந்தது. எனினும், படுகொலை நடந்த சமயத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசும், அதற்குப் பின் வந்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி அரசுகளும் 36 அப்பாவி முசுலீம்களை பச்சைப் படுகொலை செய்த போலீசாரைத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதில்தான் குறியாக நடந்துகொண்டன.

இப்படுகொலை நடந்த இரண்டாவது நாளே உ.பி. மாநில அரசின் சி.பி.சி.ஐ.டி. பிரிவு விசாரணையைத் தொடங்கிவிட்டாலும், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிரதேச ஆயுதப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டு 60 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தமது விசாரணையில் குற்றவாளிகளாக அடையாளம் காட்டியிருந்தாலும், உ.பி. மாநில அரசு 19 கீழ்நிலை போலீசார் மீது மட்டுமே வழக்கு தொடர அனுமதியளித்தது. இவர்களுள் 16 பேர் மீதுதான் கொலைக்குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டன. எனினும், இந்த 19 பேரும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படவில்லை. மாறாக, அவர்களுக்குப் பதவி உயர்வுகள் தடையின்றி வழங்கப்பட்டன.

ஹாசிம்புரா படுகொலைகள்
அரசு பயங்கரவாத குற்றவாளிகளை விடுதலை செய்த தீர்ப்பைக் கண்டித்துத் தன்னார்வ அமைப்புகள் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

1996-ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உ.பி. மாநில காசியாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கியபோதும், இக்குற்றவாளிகளுள் ஒருவர்கூட அந்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர்கள் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றத்தில் புளுகியது, உ.பி மாநில அரசு. மேலும், இப்படுகொலை குறித்த தடயங்கள் ஒவ்வொன்றும் – படுகொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் தொடங்கி, முதல் தகவல் அறிக்கைகள் உள்ளிட்டு அனைத்தும் அழிக்கப்பட்டன அல்லது காணாமல் போகச் செய்யப்பட்டன.

இந்நிலையில்தான் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடிவந்த ஹாசிம்புரா பாதுகாப்பு கமிட்டி, “இந்த வழக்கு காசியாபாத்தில் நடந்தால் நீதி கிடைக்காது; எனவே, வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்” என்று கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ததை யடுத்து, இவ்வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது. 2002-ல் வழக்கு மாற்றப்பட்ட சமயத்தில் முக்கிய சாட்சியங்களுள் பெரும்பாலோர் இறந்துவிட்டிருந்தனர். முக்கிய தடயங்களும் அழிக்கப்பட்டிருந்தன. டெல்லி நீதிமன்றத்திலும் பதின்மூன்று ஆண்டுகளாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில், “சந்தேகத்தின் பலனைக் குற்றவாளிகளுக்கு அளித்து அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து” தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

“ஹாசிம்புராவைச் சேர்ந்த 42 முசுலீம்கள் பிரதேச ஆயுதப் படை வேனில் கடத்திச் செல்லப்பட்டது உண்மை. அம்முசுலீம்களுள் 36 பேர் ஆயுதப் படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதும் உண்மை” என ஒப்புக்கொண்டுள்ள நீதிமன்றம், “குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டவர்கள்தான் அந்தப் படுகொலையைச் செய்தார்கள் என்பதை அரசு தரப்பும் சாட்சியங்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கவில்லை” எனக் கூறி குற்றவாளிகளை விடுதலை செய்திருக்கிறது.

படுகொலையைச் செய்தது பிரதேச ஆயுதப் படைதான் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள நீதிமன்றம், “அப்படையைச் சேர்ந்த வேறு யார் இப்படுகொலையைச் செய்தது? உண்மையான குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் அரசு அவர்களைப் பாதுகாப்பது ஏன்?” என்ற கேள்விகளை எழுப்ப வாய்ப்பிருந்தும் அவற்றை உள்நோக்கத்தோடு புறக்கணித்துவிட்டது. மாறாக, தப்பிப் பிழைத்தவர்கள் அளித்த சாட்சியங்களில் காணப்படும் குறைபாடுகளைப் பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்ந்து, அவற்றை வஞ்சகமாக ஒதுக்கித் தள்ளிவிட்டது.

பிரதேச ஆயுதப் படை போலீசார், தமது அடையாளத்தை மறைக்கும்படி தலைக்கவசம் அணிந்துகொண்டுதான் இப்படுகொலையைச் செய்துள்ளனர். இப்படுகொலையில் தப்பிப் பிழைத்து சாட்சியம் அளித்தவர்கள், தாம் துப்பாக்கியின் முன் நிறுத்தப்பட்டபொழுது உயிர் பயத்திலும் பதற்றத்திலும் போலீசாரின் அடையாளத்தை கவனித்திருக்க மாட்டார்கள். அப்படியே கவனித்திருத்தாலும், படுகொலை நடந்து இருபது ஆண்டுகள் கழித்து குற்றவாளிகளை அச்சுப்பிசகாமல் அடையாளம் காட்டுவது அசாத்தியமானது. மேலும், வழக்கின் முக்கியமான தடயங்கள் அனைத்தும் அரசால் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருந்தன. இப்படிப்பட்ட நிலையில் நீதிமன்றம் சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டு குற்றவாளிகளைத் தண்டித்திருக்க முடியும். ஆனால், முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டது, சாட்சியங்கள் குற்றவாளிகளைச் சந்தேகத்திற்கிடமின்றி அடையாளம் காட்டத் தவறியது – என ஒவ்வொன்றையும் குற்றவாளிகளுக்குச் சாதகமாக்கித் தீர்ப்பு அளித்திருக்கிறது, டெல்லி நீதிமன்றம்.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அப்சல் குருவைத் தண்டிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லாதபோதும், சமூகத்தின் கூட்டு மனசாட்சியைத் திருப்திபடுத்துவதற்காக அவருக்குத் தூக்கு தண்டனையை உறுதி செய்தது, உச்சநீதி மன்றம். இந்த வழக்கிலோ பாதிக்கப்பட்ட முசுலீம்களின், 28 ஆண்டுகளாக நீதிமன்றத்தை நம்பியிருந்தவர்களின் மன உணர்வுகளை நீதிமன்றம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு ஒரு நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும்  என்ற நியாய உணர்வுக்கு பதிலாக, குற்றவாளிகளைத் தப்ப வைக்க வேண்டும் என்ற காவி உணர்வோடு நீதிமன்றமும் செயல்பட்டிருப்பதை இத்தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.

கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளில் நாடெங்கும் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் போலீசாரால் எவ்வித ஆதாரமுமின்றித் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  இக்கொலை வழக்குகளுள் ஒருசில, நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகின்றன.  இந்த நிலையில் ஹாசிம்புரா குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டிருப்பது போலீசார் இந்து மதவெறியோடு நடத்திவரும் படுகொலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆசிர்வாதமேயாகும்.

– செல்வம்
___________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
___________________________

மாட்டுக்கறி தடைச் சட்டம் : வலது கையில் கோமியம் இடது கையில் ஹாம்பர்கர்

3

சுவதைத் தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சித் தடைச் சட்டத்தை நிறைவேற்றுவதிலும் தண்டனையைக் கடுமையாக்குவதிலும் பா.ஜ.க. மாநில அரசுகள் ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன. மாட்டை வெட்டினால் மகாராட்டிரத்தில் 5 ஆண்டு சிறை, மத்திய பிரதேசத்தில் 7 ஆண்டுகள், அரியானாவில் 10 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை. மாட்டை விற்கும் விவசாயி தொடங்கி, வாங்குபவர், லாரி டிரைவர், வெட்டுபவர், சமைப்பவர், சாப்பிடுபவர் உள்ளிட்ட அனைவரும் இச்சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றவாளிகள். மாட்டுக்கறி வைத்திருப்பதாகவோ, சாப்பிடுவதாகவோ சந்தேகப்பட்டால் ஒரு போலீசு ஏட்டுகூட வீடு புகுந்து சோதனை செய்யலாம்.

சதீஷ் சோலங்கி
“குடும்பத்திற்கே சோறு போட முடியாத நிலையில், நாங்கள் பசுக்களை எப்படி பராமரிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இந்து விவசாயி சதீஷ் சோலங்கி.

குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி கொலைக்குற்றமாக இருந்தாலும் ஒருவர் குற்றவாளி என்று போலீசு தான் நிரூபிக்க வேண்டும். ஆனால், மாட்டைக் கொன்றதாகவோ தின்றதாகவோ நீங்கள் கைது செய்யப்பட்டால், நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளாதவரை நீங்கள் குற்றவாளிதான் என்கின்றன, ம.பி, மகாராட்டிரா, டில்லி மாநில சட்டங்கள்.

மாட்டிறைச்சியை முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்.-ன் நோக்கம். எனவேதான் அம்மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் நோக்கத்துடன் இச்சட்டம் இன்னொரு பொடா சட்டமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருபுறம், இந்து மதத்தினர் பசுவைப் புனிதமாக கருதுவது குறித்துப் பல புனைகதைகளை சங்கப் பரிவாரம் பரப்பிவந்த போதிலும், மத உணர்வைப் புண்படுத்துவதால் மாடு வெட்டுவதைத் தடை செய்வதாக இச்சட்டம் கூறவில்லை. கால்நடைச் செல்வத்தைப் பாதுகாப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு அவசியம் என்று மதச்சார்பற்ற மொழியில் தந்திரமாகப் பேசுகின்ற, அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாடு பிரிவு 48-ன் கீழ்தான் இச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இது பார்ப்பனியத்தின் கபட வேடத்துக்கு இன்னொரு சான்று.

மாட்டுக்கறிக்கு தடைஇசுலாமியர் ஆட்சிக் காலத்துக்குப் பின்னர்தான் மாட்டுக்கறி தின்னும் பழக்கமே இந்துக்கள் மத்தியில் பரவியது என்பது சங்கப் பரிவாரம் பரப்பி வரும் முக்கியமான கட்டுக்கதை. கிறித்தவமும் இசுலாமும் தோன்றுவதற்கு 1500 ஆண்டுகள் முன்னதாகவே, மாடுகளை யாகத்தில் பலியிடுவதும் புரோகிதப் பார்ப்பனர்கள் அவற்றை உண்டு கொழுப்பதும் எல்லை மீறிய அளவில் நடந்துள்ளன. ரிக் வேதத்தில் தொடங்கி இராமாயணம் வரையிலான பலவற்றிலும் பார்ப்பனர்கள் பசு மாமிசம் தின்றது பலவிதமாக விளக்கிக் கூறப்பட்டிருக்கிறது. இதனை அம்பேத்கர், டி.டி.கோசாம்பி, டி.என்.ஜா முதலான ஆவாளர்கள் ஆதாரங்களுடன் அம்பலமாக்கியிருக்கின்றனர். விவேகானந்தரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சொல்லப்போனால், அன்றைய விவசாய சமூகத்தின் மக்கள், பலியிடுதலை நிராகரித்த பவுத்தத்தையும், கொல்லாமையை வலியுறுத்திய சமணத்தையும் தழுவுவதற்கு, பார்ப்பனர்களின் மாடு தின்னும் வெறியும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. பவுத்தத்தையும் சமணத்தையும் வீழ்த்தி, தங்களுடைய சமூக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டுமானால், மாட்டுக்கறியைத் தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் கவிச்சியை வெறுத்தார்கள் பார்ப்பனர்கள் என்பது வரலாறு.

இவையெல்லாம் நாம் கூறும் வரலாற்று விளக்கங்கள் மட்டுமல்ல, வேள்விகளில் பசுமாடுகளைப் பலியிடுவதும் சாப்பிடுவதும் சாத்திரப்படியும் சம்பிரதாயப்படியும் அவசியமானது என்று வலியுறுத்தி, செத்துப்போன சங்கராச்சாரி வழங்கியுள்ள அருளுரைகளை 1993-ல் ஆனந்தவிகடன் நூல் தொகுப்பாகவே வெளியிட்டிருக்கிறது. எனவே, கோமாதாவைக் கொல்வது இந்து மதத்தின் வழிபாட்டுரிமை.

பா.ஜ.க.வின் பசு வதைத் தடைச் சட்டங்களால், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25, பார்ப்பனர்களுக்கு வழங்கியிருக்கும் மாடு வெட்டும் உரிமையைப் பறிக்க முடியாது என்பதே உண்மை. இந்தச் சட்டத்தினால், கறிக்கடை பாயையும், கறி தின்னும் சூத்திர, தலித், பழங்குடி மக்களையும்தான் கைது செய்ய முடியும். இதில் யாருக்காவது சந்தேகமிருந்தால், கருவறைத் தீண்டாமை பார்ப்பனர்களின் மத உரிமை என்று உச்சநீதி மன்றத்தில் வாதாடிவரும் மூத்த வழக்குரைஞர் பராசரனிடம் விளக்கம் கேட்டுக் கொள்ளலாம்.

மும்பை ஆர்ப்பாட்டம்
மாட்டுக்கறி தடைச் சட்டத்திற்கு எதிராக முசுலீம்கள், தாழ்த்தப்பட்டோர், ஏழைகள் உள்ளிட்ட பல பிரிவினரும் இணைந்து மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

பசுவின் புனிதம் என்பது வடிகட்டிய பொய். இது குறித்த கருத்து பார்ப்பன மதத்திலேயே சுமார் 8-ம் நூற்றாண்டு வாக்கில் தான் தோன்றியிருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஆய்வுரித்துத் தின்னும் புலையர் என்று கூறித் தீண்டாமையை நிலைநாட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இந்தக் கருத்து, பிற்காலத்தில் விடுதலைப் போராட்டத்தை பார்ப்பன இந்து தேசியமாகத் திரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் திலகர் அறிமுகப்படுத்திய விநாயகர் ஊர்வலத்தைப் போலவே இதுவும் இந்துத்துவத்தின் இன்னொரு அரசியல் துருப்புச்சீட்டு. அவ்வளவே.

கலவரத்தைத் தூண்டும் கருவியாக அயோத்திப் பிரச்சினை அரங்கிற்கு வருவதற்கு முன்பு வரையில் இராமன் இருந்த இடத்தில், மாடுதான் இருந்து வந்தது. கோயில் வாசலில் கோமாதாவை வெட்டி விட்டார்கள் முஸ்லிம்கள் என்ற வதந்தியைப் பரப்பித்தான், நூற்றுக்கணக்கில் கலவரம் நடத்தி அப்பாவி முஸ்லிம்களை வெட்டியிருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். காலிகள்.

கோயில் வழிபாட்டை ஆக்கிரமித்துக் கொண்டதாக இருக்கட்டும், புலால் உணவைத் துறந்ததாக இருக்கட்டும், குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் எவற்றையெல்லாம் தனது மேலாதிக்க நோக்கத்துக்குப் பார்ப்பனியம் பயன்படுத்திக் கொண்டதோ, அவற்றையெல்லாம், சமூகத்தின் இலட்சியப் பண்பாடாக அது சித்தரித்து வந்திருக்கிறது. அந்த வகையில் புலால் உணவை மறுக்கின்ற பார்ப்பன-பனியா பண்பாட்டை இந்துக்கள் அனைவரின் பொதுப்பண்பாடாக காட்ட தற்போது முனைந்திருக்கிறது. 2003-ல் ஜெயலலிதா கொண்டுவந்த கிடா வெட்டு தடைச்சட்டமும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

எம்.கே.ஆர் ஃப்ரோசன் ஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்.
மதன் அபோத் என்ற இந்து முதலாளி டெல்லியில் நடத்திவரும் மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனம் – எம்.கே.ஆர் ஃப்ரோசன் ஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்.

இருப்பினும், ஆகப் பெரும்பான்மையான மக்கள் புலால் உண்பவர்கள் என்பது மறுக்கவியலாத உண்மை. மாட்டுக்கறியோ ஏழைகளின் மலிவான மாமிச உணவு. இந்தியாவின் புலால் உற்பத்தி ஆண்டுக்கு 63 லட்சம் டன். இதில் 40 இலட்சம் டன் மாட்டுக்கறிதான். 22 லட்சம் டன் இந்தியாவில் உண்ணப்படுகிறது. 18 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வட கிழக்கிந்திய மாநிலங்களில் மாட்டுக்கறிக்கு எவ்வித தடையும் கிடையாது. கேரளா, தமிழ்நாடு, மே.வங்கம் ஆகிய மாநிலங்களில் பயன்படாதவை என்று சான்றளிக்கப்பட்ட பசுக்களை வெட்டலாம். ஆந்திரா, பீகார், ஒரிசா, கோவா, கர்நாடகா மாநிலங்களில் காளைகளை வெட்டலாம். இப்படி பலவிதமாக சட்டம் இருக்கக் காரணமே, சிறுபான்மை மதத்தினர் மட்டுமின்றி, தலித் மக்கள், பழங்குடியினர், பல மாநிலங்களில் சாதி இந்துக்கள் உள்ளிட்டோர் மாட்டுக்கறி உண்பதுதான்.

இருந்த போதிலும், இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் கணிசமானவர்கள் இசுலாமியர்கள் என்பதால் அச்சமூகத்தைப் பொருளாதார ரீதியில் சீர்குலைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.-ன் வக்கிர நோக்கம் இச்சட்டத்தைக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஆனால், இச்சட்டம் முஸ்லிம்களைப் பாதிப்பதைக் காட்டிலும் அதிகமாக விவசாயிகளையும் தலித் மக்களையும் ஏழைகளையும்தான் பாதிக்கிறது.

“பெண்டாட்டி பிள்ளைக்கே சோறு போட முடியாமல் தவிக்கும் நாங்கள் பால் சுரக்காத, உழவுக்குப் பயன்படாத மாட்டைப் பராமரிக்க நாளொன்றுக்கு 200 ரூபாய் எப்படி செலவு செய்வோம்? பயன்படாத மாட்டை விற்றால்தான் புதிய மாடு வாங்க முடியும். விற்பது குற்றம் என்றால், இனி மாடே வேண்டாம் என்று தலை முழுகிவிட வேண்டியதுதான்” என்று குமுறுகிறார்கள் மகாராட்டிரா விவசாயிகள்.

பா.ஜ.க. கும்பல் புளுகுவதைப் போல மாட்டுக்கறி விற்பனையின் காரணமாக மாடுகளின் எண்ணிக்கை குறையவில்லை. 2012-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2007-ல் இருந்ததைக் காட்டிலும் மாடுகளின் எண்ணிக்கை 7.16% அதிகரித்திருக்கிறது. இந்த தடைச் சட்டத்தின் காரணமாக, பால் மாடுகளையும் உழவு மாடுகளையும் வைத்திருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகள் இனி மாடு வளர்ப்பது கட்டுப்படியாகாது என்று முடிவு செய்தால், அதன் விளைவுதான் மோசமாக இருக்கப்போகிறது. பயன்பாடில்லாமல் போன குதிரைகள் காலப்போக்கில் அருகிப் போனதைப் போல, பல்வேறு ரகங்களைச் சேர்ந்த நாட்டு மாடுகள் நிரந்தரமாக அழிந்துவிடும்.

இன்று பால் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கிறது இந்தியா. கூட்டுறவு பால் உற்பத்தி அமைப்பான அமுல் நிறுவனத்தை குஜராத்தில் உருவாக்கிய குரியனுக்கு இதில் முக்கியப் பங்குண்டு. பசுவதைத் தடைச்சட்டம் பால்மாடு வைத்திருக்கும் விவசாயிகளை அழித்துவிடும் என்று சங்கராச்சாரியிடமே சென்று வாதாடியவர் குரியன். விளைநிலத்திலிருந்து விவசாயியை விரட்டி விட்டு, கார்ப்பரேட் விவசாயத்துக்கு கால்கோள் இடுவதைப் போல, பால் உற்பத்தியிலிருந்தும் விவசாயியை விரட்டுவது, இந்த சட்டத்தின் பின்புலத்தில் மோடி போட்டிருக்கும் திட்டமாக இருக்கக் கூடும்

உலகில் மாட்டுக்கறி (எருமை மாடு) ஏற்றுமதியில் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் முன்னணி மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனங்கள் ஆறில் நான்கின் முதலாளிகள் இந்துக்கள். அவற்றில் மும்பையை தலைமையிடமாக கொண்ட இரண்டு நிறுவனங்கள், அல் கபீர், அரேபியன் எக்ஸ்போர்ட் என்று இசுலாமியப் பெயர்களைச் சூட்டிக் கொண்டிருப்பதை முஸ்லிம் மிர்ரர் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது. நிறவெறி பிடித்த பார்ப்பனியம், பசு மாமிச ஏற்றுமதிக்குத்தான் தடை விதித்திருக்கிறது. எருமைக்கறி ஏற்றுமதியை அனுமதித்திருக்கிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு கோ மாமிசத்தையும் எருமைக்கறி என்று லேபில் ஒட்டி ஏற்றுமதி செய்கிறார்கள் மேற்படி ஹிந்து ஏற்றுமதியாளர்கள். பத்திரிகையாளர் வீர் சங்வி இதனை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

அதேபோல, மாட்டுக்கறி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் குஜராத். மாட்டுக்கறி தடை செய்யப்பட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலோ பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மாட்டுக்கறிக்கு நட்சத்திர விடுதிகளில் தடை இல்லையாம். ஏனென்றால், அது இறக்குமதி செய்யப்பட்ட கோமாமிசமாம். ஏற்றுமதிக்கும் தடை இல்லை, இறக்குமதிக்கும் தடை இல்லை. உள்நாட்டு உபயோகத்துக்குத்தான் தடை!

காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தைப் பிளவுபடுத்த பசுவதையைப் பயன்படுத்திக் கொண்ட பார்ப்பனியம், இன்று மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப எடுத்திருக்கும் புதுப்பிறவி இது. வலக்கரத்தில் கோமியம், இடக்கரத்தில் ஹாம்பர்கர்! கேலிக்கூத்துதான். ஆனால், இதனை வீழ்த்தத் தவறினால் குஜராத்தைப் போன்றதொரு ஊழிக்கூத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

– மருதையன்
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________

கல்விக் கொள்ளையர்களின் அம்மா !

1

மிழக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு மைய அரசு ஒதுக்கியிருந்த 4,400 கோடி ரூபாயை – கவனியுங்கள்; ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அல்ல – பயன்படுத்தாமல், அதனைக் கரையான் தின்ன விட்டிருக்கிறது, தமிழக அரசு. டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த திட்ட ஒப்புதல் வாரியக் கூட்டத்தில் மனித வள மேம்பாட்டுத் துறையின் இடைநிலைக் கல்வித் துறை செயலர் பிருந்தா சரூப் இது குறித்து தனது கண்டனத்தைத் தமிழக அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். பா.ம.க. நிறுவனர் ராமதாசு தமிழக அரசின் இந்த அலட்சியப்போக்கைக் கண்டித்திருக்கிறார். பினாமி ஜெயா அரசோ எதற்கும் பதிலளிக்காமல் கல்லுளிமங்கனாக உட்கார்ந்திருக்கிறது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள சன்னாசிநல்லூர்
கருவேலங்காட்டுக்குள் வகுப்பறை : அரியலூர் மாவட்டத்திலுள்ள சன்னாசிநல்லூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் அவலம்.

“தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்தின்படி 2009 முதல் 2012 வரையிலான மூன்றாண்டுகளில் தமிழகத்தில் 1,096 பள்ளிகள் புதிதாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2009-10 முதல் 2015 பிப்ரவரி வரையிலான ஆறாண்டுகளில் 125 பள்ளிகள் மட்டுமே புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. 75 பள்ளிகள் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 896 பள்ளிகளைக் கட்டுவதற்கான ஆயத்த பணிகள்கூட இன்னும் தொடங்கப்படவில்லை. 2,033 பள்ளிகளைச் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்ட பிறகும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. மாணவிகளுக்கு 44 விடுதிகளைக் கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இதுவரை 18 விடுதிகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.”

“5,265 பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 920 பள்ளிகளில் மட்டுமே இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், 1,616 அறிவியல் ஆய்வகங்கள், 1,504 கணினி அறைகள், 1,873 நூலகங்கள், 1,990 கலை/கைத்தொழில் அறைகள் கட்டுவதற்கு அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதற்கான பணிகளைத் தமிழக அரசு இன்னும் தொடங்கவில்லை.”

– இவை அனைத்தும் 4,400 கோடி நிதியைப் பெற்றுவிட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகள். அதிகார வர்க்க மெத்தனம், அலட்சியம் என்ற வழக்கமான கண்டனத்திற்குள் இதனை அடக்கிவிட முடியாது. மாறாக, இது அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டும், தனியார்மயத்திற்கு ஆதரவான தீய நோக்கத்தைக் கொண்ட சதிச் செயல், கிரிமினல் குற்றம்.

  • மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள எம்.புதுப்பட்டியில் அமைந்துள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து மாணவ, மாணவியர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள வடஅகரம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் அலங்கார வளைவுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்தாம் வகுப்பு மாணவன் அகால மரணமடைந்தான்.
  • தமிழகம் முழுவதுமுள்ள 25,200 அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளில் 10,000 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் இருபதுக்கும் மேற்பட்ட பாடங்களை இந்த இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில், ஒருவர் விடுப்பு எடுத்தாலோ அல்லது மாற்றுப் பணிகளுக்குச் சென்றுவிட்டாலோ அன்று பள்ளிக்கு ஏறத்தாழ விடுமுறைதான்.
  • ஓராசிரியர் பள்ளிகளே இருக்கக் கூடாது எனத் தமிழக அரசு கூறி வந்தாலும், வத்திராயிருப்பு அருகேயுள்ள ரெங்கபாளையம் தொடக்கப்பள்ளி, பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களும், பெற்றோர்களும் தமது பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கி வருவதைக் கண்டித்துப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
  • தமிழகத்திலுள்ள 2,600 அரசு மேநிலைப் பள்ளிகளுள் 1,400 பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப் பிரிவுக்கு ஆசிரியர்கள் அறவே நியமிக்கப்படாததால் கணினி ஆய்வகங்கள் மூடிக் கிடக்கின்றன. ஜனவரி 2014-க்குள் கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
  • தமிழகமெங்குமுள்ள 300 அரசுப் பள்ளிகள் தலைமையாசிரியர்களே இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்தக் கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த பிறகும் இப்பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையைக் கருதியாவது உடனடியாகத் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் கோரியுள்ளன.

இவை அங்கொன்றும் இங்கொன்றுமான புள்ளிவிவரங்கள் அல்ல. தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளின் அவல நிலையை எடுத்துக்காட்டும் குறுக்குவெட்டுத் தோற்றமிது. கட்டிட வசதி இல்லாமல் மரத்தடியில் நடக்கும் பள்ளிக்கூடங்கள், ஆய்வுக்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாத பள்ளிக்கூடங்கள் என ஓராயிரம் பிரச்சினைகளை அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்கின்றனர்.

கல்வி தனியார்மயம்அரசுப் பேருந்துகளை ஓட்டை உடைசலாக ஓடவைத்து அதன் மூலம் தனியார், ஆம்னி பேருந்து முதலாளிகளின் கொள்ளைக்கு உதவுவதைப் போலவே, தனியார் கல்விக்கொள்ளைக்காக அரசுப்பள்ளிகள் ஒழித்துக் கட்டப்படுகின்றன. தனியார்மயத்தை மேலும் மேலும் தீவிரப்படுத்துவதற்காகவே ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைப் படிப்படியாகக் குறைப்பது மட்டுமின்றி, மைய அரசால் ஒதுக்கப்பட்ட 4,400 கோடி ரூபாயையும் திருப்பியனுப்பியிருப்பதன் மூலம், நான் கல்வி வியாபாரிகளின் கையாள்தான் என்று ஐயந்திரிபற நிரூபித்திருக்கிறது ஜெ அரசு.

முதல்வர் பதவியில் அமர்ந்தவுடனேயே பொதுப் பாடத்திட்ட முறையைப் (சமச்சீர் கல்வி) புதைகுழிக்கு அனுப்ப முயன்று தோற்றுப் போன ஜெயா கும்பல், அரசுப் பள்ளிகளை முடிந்த மட்டும் ஒழித்துக் கட்டுவதையே தனது கொள்கையாகக் கொண்டு செயல்படுகிறது.

சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான ஏழு பள்ளிகளில் காணப்படும் குறைவான மாணவர் சேர்க்கையைக் காட்டி, அவற்றின் நிர்வாகத்தைத் தனியார்வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. போதிய மாணவர்கள் சேரவில்லை என்ற காரணத்தைக் காட்டி, தமிழகமெங்கும் ஏறத்தாழ 1,000 பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. தோசையைத் திருப்பிப் போடுவது போல, மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிட்டதைக் காட்டி 1,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இடையே கற்கும் திறனில் பெருத்த வேறுபாடு இல்லை என்பதைப் பல ஆய்வுகள் மெய்ப்பித்த பிறகும், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அரசுப் பள்ளிகளைவிட அதிகரித்துக் கொண்டே போவதற்கு பெற்றோர்களின் ஆங்கில மோகம் மட்டுமின்றி, அரசு பள்ளிகளில் காணப்படும் இந்தச் சீரழிவிற்கும் முக்கிய இடமுண்டு. இச்சீரழிவை மென்மேலும் தீவிரப்படுத்துவதன் வழியாகத் தமிழக மாணவர்களை வேகவேகமாகக் கல்விக் கொள்ளையர்களிடம் தள்ளிவிடுகிறது, மக்கள் முதல்வரின் ஆட்சி.

– குப்பன்
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________

ஏப்ரல்-14 : கூண்டுக்குள் அடைபட்ட அம்பேத்கர் சிலைகள்

2

சேரிக்குள்
சிறை வைக்கப்பட்ட
தாழ்த்தப்பட்ட மக்கள்

அம்பேத்கர் சிலை
கூண்டுக்குள் அடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைகள்…

கூண்டுக்குள்
அடைக்கப்பட்ட
அம்பேத்கர் சிலைகள்.

சுதந்திரமாக திரியும்
சாதி வெறியர்கள்
தந்திரமாக
அம்பேத்கர் சிலைக்கு
மாலை போட்டுவிட்டு
தாழ்த்தப்பட்டோர் குடிசைக்கு
தீ வைக்கும்
‘சமூகநீதி ‘ காவலர்கள்

மாட்டிறைச்சிக்குத்தான் தடை
தலித் இறைச்சி
தேசமெங்கும் தாராளமாக.
ரத்தம் உறைவதற்கு முன்பே
உறைந்துவிடும் நீதி
சாதிப்பஞ்சாயத்துக்களில்
துடைத்துப் போடப்படும்
அரசியல் சட்டங்கள்

தலித் காலனி தீவைப்பு
… தாழ்த்தப்பட்டோர் குடிசைக்கு தீ வைக்கும் ‘சமூகநீதி ‘ காவலர்கள்

தீண்டாமையில்
தேசிய ஒருமைப்பாடு
மலம் அள்ளுவதற்கு மட்டும்
இட ஒதுக்கீடு

திருஞான சம்பந்தருக்கு
ஞானப்பால்
‘தீண்ட்டத்தகாதோருக்கு’
சாணிப்பால்!
இதுதான் இந்து மதம்

இந்த
இழி சமூக அமைப்பை
வெறுக்கவும் கூடாது
இயல்பாக
சமூக உறவை
விரும்பவும் கூடாது என
விதிக்கப்பட்ட
தண்டனையாய்
இந்து சமூக வாழ்க்கை

வரலாறு தெரியாதவனால்
வரலாறு படைக்க முடியாது என
முதலில்
பார்ப்பன இந்துமத
அடிமைச்சங்கிலிக்கு
அம்பேத்கர் வெடி வைத்தார்

ராமன் கிருஷ்ணன் புதிர்
ராமன்_ கிருஷ்ணன் புதிர் மூலமாக மனுதர்ம பாம்புகளின் நச்சுப் பற்களை நறுக்கிக் காட்டினார்

ராமன்_ கிருஷ்ணன் புதிர்
மூலமாக
மனுதர்ம பாம்புகளின்
நச்சுப் பற்களை
நறுக்கிக் காட்டினார்

சாதிக்கறையின்
மனங்கள் தெளிய
மக்களோடு குளத்தில் இறங்கினார்
சாதி இந்துக்களும் மனிதராக
சட்டத்தை வெளுத்தார்

ஒரு பக்கம்
காந்திய கட்டுவிரியன்
மறுபக்கம்
ஆர்.எஸ்.எஸ். ஆதிசேசன்
பிடுங்கலின் நடுவே
பார்த்த இடமெங்கும்
பார்ப்பனியம்
பிடுங்கி எறிந்தார்

கைம்பெண் உரிமை.. ஜுவனாம்சம்
ஒருதார மணம்
பெண்களுக்கு சொத்துரிமை
அனைவருக்கும் கல்வி உரிமை….. என
அம்பேத்கர் சட்டம் பேசப் பேச…
பீனல் கோடுகளை கட்டிப்போட
பூணூல் கோடுகள் வெகுண்டு பாய்ந்தன!

சாதி ஒழிப்பு
ஒரு பக்கம் காந்திய கட்டுவிரியன் மறுபக்கம் ஆர்.எஸ்.எஸ். ஆதிசேசன் பிடுங்கலின் நடுவே பார்த்த இடமெங்கும் பார்ப்பனியம் பிடுங்கி எறிந்தார்.

சமூகப்போராட்டத்தின்
சாதனைகள்
அரசியல் சட்டங்களில்
நீர்த்துப்போனதை
உணர்ந்த அம்பேத்கர்
தெளிவுபடுத்தினார்;
” பார்ப்பனர்களுக்கு
ஒரு ராமாயணம் தேவைப்பட்டது
வால்மீகி பயன்பட்டார்,
பார்ப்பனர்களுக்கு
ஒரு மாபாரதம் தேவைப்பட்டது
வியாசர் பயன்பட்டார்.
பார்ப்பனர்களுக்கு
ஒரு அரசியல் சட்டம் தேவைப்பட்டது
என்னை பயன்படுத்திக் கொண்டார்கள்”…

முட்டிமோதி
பட்டுத்தெளிந்து சொன்னார்;
” இது… இலட்சியத்திற்கு
பயன்படாதெனில்.. இந்த
அரசியல் சட்டத்தை கொளுத்தும்
முதல் ஆளாக நானே இருப்பேன்”

அம்பேத்கரின்
சிந்தனை அழகு
சிலையில் மட்டுமா?
இந்த நிலையில் உள்ளது

முடிவுக்கு வந்த
அம்பேத்கரின்
அரசியல் சிந்தனைத் தொடர்ச்சியாய்
செயல்பட வேண்டிய காலமிது!

அம்பேத்கர் வெறுத்துப் போன அரசியல் சட்டம்
அம்பேத்கரே வெறுத்துப்போன அரசியல் சட்ட கட்டமைப்பை நம்ப வைக்க போராடுவது ஏமாற்று வேலை

அம்பேத்கரே
வெறுத்துப்போன
அரசியல் சட்ட கட்டமைப்பை
நம்ப வைக்க போராடுவது
ஏமாற்று வேலை
அடுத்த கட்டம் சிந்திப்பதுதான்
அடித்தள மக்களின் தேவை.

பார்ப்பனக் காலைச்
சுற்றுவதற்கு
பாபாசாகேப் படம் எதற்கு?
பஞ்சாயத்து தலைவராகவே
உட்கார முடியாத ஜனநாயகத்தில்
பாராளுமன்ற
காவடி எதற்கு?

இன்னல்களின் நடுவே
பார்ப்பன பயங்கரத்தின்
பின்னல்களில் சிக்காமல்
இந்துமதக் கொடுங்கோன்மைக்கு எதிராக
மக்களின்
எண்ணங்கள் வளர்த்தவர் அண்ணல்,

அம்பேத்கர் இந்து சட்டம்
அம்பேத்கர் சட்டம் பேசப் பேச… பீனல் கோடுகளை கட்டிப்போட பூணூல் கோடுகள் வெகுண்டு பாய்ந்தன!

“இன்னமும்.. நான்
பார்ப்பனிய அடிமை” என
எறியும் காசுக்காக
காவி அடிமையாய்
அலையும் கூட்டமும்
அம்பேத்கரை தொடுவது
அரசியல் இழிதகைமை!

அம்பேத்கர்
‘கற்பி’ என்றது,
படித்து ஐ.ஏ.ஸ், அய்.பி.எஸ் ஆகி
போராடும் தலித்துக்களையும்
போட்டு மிதிக்க அல்ல.
சமூக இழிவுகளைப் போக்க
போராட்டங்களை கற்பிக்கச் சொன்னார்!

ஆதிக்கசாதி ஆதிக்க வர்க்க
அரசாட்சியில்
உழைக்கும் மக்கள்
உரிமைக்காகப் போராடினால்
உதைக்க மட்டுமே சட்டம்!
எதிர்க்கும் குரலுக்கு
சாதிவெறியின் சிறுநீர்

இந்தக் கட்டமைப்பை
ஏற்றுக் கொண்டால்
தனிச் சுடுகாடும் தகராறு
கம்யூனிசத்தை
ஏற்றுகொண்டதால்
பண்ணை அடிமைத்தனதை
போட்டுப் புதைத்த
கீழத்தஞ்சை வரலாறு!

அடித்தள மக்களை
அடித்த திசையெங்கும்
அரசியல் சட்ட ஒப்பாரி,
ஆதிக்க ‘ரன்வீர்சேனா’வை
அடித்து விரட்டியது
உழைக்கும் மக்களின் நக்சல்பாரி!

ஒடுக்கும் வர்க்கத்தின்
இந்தக் கட்டமைப்பை
ஒழிக்காமல் மக்களுக்கு
ஒரு போதும் விடியாது
என்ற உண்மையை
ஓங்கிச் சொல்லும்
ஒரே அரசியல் ‘நக்சல்பரி’

தனிக்குவளை…
தனிக் கிணறு
தனிச் சுடுகாடு..
மட்டுமல்ல
இது தனி ஜனநாயகம்
சுரண்டுபவன்
ஆயுதமேந்தினாலும்
அது அகிம்சை
பாதிக்கப்பட்டவர்
நகம் வளர்த்தாலும் தீவிரவாதம்

மாறிவிடவில்லை எதுவும்
தலித்துகளின்
பழங்குடிகளின், உழைக்கும் மக்களின்
நிலத்தை பிடுங்கும் கார்ப்பரேட் ஆண்டைகள்
ஊரைவிட்டே விலக்கும்
வளர்ச்சித்திட்டம்
நாடு கடத்தும் கூலி வேலை,
கழனி விட்டு
கணினி போனாலும்
எதிர்த்துப் பார்த்தால்
இ- மெயிலில் சவுக்கடி
இணையத்தில் சாணிப்பால்!

கிராமம் விட்டு
தப்பி வந்தாலும்
தனியார்மய தாராளமய
மறுகாலனிய பண்ணைகளில்
கால நேரமின்றி
கசக்கிப்பிழியப்படும் வாழ்வு!

முற்றிலும்
ஆதிக்கச்சுரண்டலுக்காகவே
அமைக்கப்பட்டிருக்கும்
இந்த போலிஜனநாயகத்தில்
தலித்தே ஆட்சிக்கு வந்தாலும்
தாழ்த்தப்பட்டோரையும்
மனுதர்மும்
மறுகாலனீய தர்மமும்
ஒடுக்கவே செய்யும்!

அம்பேத்கர்
இல்லைதான்..
அவலங்களை பார்த்துகொண்டிருக்கும்
நாம் ஒரு முடிவுக்கு
வரலாம்தான்…
இந்த கட்டமைப்பை தகர்க்காமல்
அதிகாரத்தை கையில் எடுக்காமல்
ஏது ஜனநாயகம்?
ஏது வாழ்க்கை?

– துரை. சண்முகம்

ஆந்திர படுகொலை – அரசநத்தம் கிராமத்தில் வினவு

1

”தலைலேர்ந்து கால் வரேயும் வெள்ளே துணி போட்டு சுத்தின உடம்பைத் தான் கண்ணுல காமிச்சாங்க… இது தான் உம் புருசன்னு சொன்னாங்க….”

 விஜயா
பயங்கரமான செம்மரக் கடத்தல்காரர் என்று ஆந்திரப் போலீசாரால் சித்தரிக்கப்பட்டு போலி மோதலில் படுகொலை செய்யப்பட்ட சிவக்குமாரின் மனைவி விஜயா.

”…. என்னாலெ தாங்க முடியலைங்க.. ஞாயித்துக்கிழமை எங் கண்ணு மின்னே முழுசா போனவரு… என்னாலெ நம்ப முடியேலை… கடேசியா ஒருக்கா எம் புருசன் மூஞ்சிய பாக்கணுமின்னு நான் தலையெ சுத்தியிருந்த துணியைக் கிழிச்சி எடுத்தென்… அய்யோ அந்த கோராமைய எப்பிடிச் சொல்வேன்…”

“….அந்த மொகத்துல மூக்கையே காணம். மூஞ்சியெல்லாம் பிளேடு போட்டு அறுத்திருந்தாங்க.. தோ, வாயி ஓரமா இங்கேர்ந்து காது வரையும் நீளமா கிழிச்சிருந்தாங்க.. வாயிக்குள்ளே பல்லையே காணும்.. எம் புருசன் தானான்னே தெரியாத அளவுக்கு பண்ணி வச்சிருந்தாங்க….”

அதற்கு மேல் விஜயாவால் பேச முடியவில்லை. கதறி அழுது கொண்டிருந்தவரைத் தேற்ற வழி தெரியாமல் நாங்கள் நின்றோம். இடம் அரசநத்தம்.

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுக்காவின் மலைப்பகுதியில் சித்தேரி பஞ்சாயத்தைச் சேர்ந்தது இக்கிராமம்.

விஜயாவுக்கு வயது 27. ‘பயங்கரமான செம்மரக் கடத்தல்காரர்’ என்று ஆந்திரப் போலீசாரால் சித்தரிக்கப்பட்டு போலி மோதலில் படுகொலை செய்யப்பட்ட விஜயாவின் கணவர் சிவக்குமாருக்கு 30 வயது. 7 வயதில் ஜீவா என்ற மகனும் 1 வயது நிரம்பிய சன்மிதா என்ற மகளும் இனி அப்பாவைக் காண முடியாது.

குழந்தை சன்மிதாவுக்கு மூளை வளர்ச்சியில் ஏதோ குறைபாடு. அரூரில் உள்ள மருத்துவமனையில் அதற்கான சிகிச்சை வசதியில்லாததால் சென்னைக்குப் போய் வைத்தியம் பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள்.

“பிள்ளைய மெட்ராசுக்கு எடுத்திட்டு போயி வைத்தியம் பாக்க காசு இல்லே. ‘இந்த ஊரிலெ யாரு கிட்டயும் கைநீட்டி காசு வாங்க முடியாது புள்ளே.. எல்லாருமே நம்மைப் போல வறுமையில இருக்காங்கே.. கட்டிட வேலை ஒன்னு வந்திருக்கு.. அப்பார்மெண்டு கட்டறாங்களாம். பெயிண்டு வேலைக்கு கூப்பிடறாங்க.. ஒருவாரம் வேலை பாத்திட்டு வந்தா கொஞ்சம் காசு கிடைக்கும்.. பிள்ளைய மெட்ராசுக்கு கூட்டிப் போயி வைத்தியம் பாக்கலாம்’ அப்படின்னு சொல்லிட்டு ஞாயித்துக் கிழமை காலைல 8 மணிக்கு கிளம்பிப் போனவரு தான்….

சித்தேரி மலை கிராமம்
”இந்த மலையால எங்களுக்கு ஒரு நாளைக்கு 10 ரூபாய் வருமானம் கிடைச்சா கூட நாங்க ஏன் ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் போகணும்”

.. செவ்வாகிழம உம் புருசனை ஆந்திராவுல சுட்டுக் கொன்னுட்டதா டீ.வில காட்டுறாங்கன்னு சொன்னப்போ தான் எனக்குத் தெரியும்”

”அரசு அதிகாரிங்க யாராவது உங்க கிட்ட பேசினாங்களா?”

“கலெக்டரு வந்தாரு.. மினிஸ்டரு வந்தாரு.. படிச்சிருந்தா கெவருமெண்டு வேலை போட்டுக் குடுக்கிறதா சொன்னாங்க”

“நீங்க படிச்சிருக்கீங்களா?”

”ஆறாப்பு வரைக்கும் படிச்சிருக்கேன்.. கவருமெண்டு கிட்ட பேசி எதுனா சத்துணவு ஆயா வேலை வாங்கிக் குடுங்க சார்.. நான் வீட்டுக்கும் போவ முடியாது.. இங்கயும் பிள்ளைங்கள வச்சி காப்பாத்த முடியாது.. தெருவில விட்டுட்டாங்க சார்”

கணவர் விபத்தில் இறந்த விட்ட நிலையில் விஜயாவின் ஒரு அக்கா தாய் வீட்டோடு தான் இருக்கிறார். தாய் வீட்டின் கஷ்ட ஜீவனம் விஜயாவை பிறந்த வீட்டுக்குச் செல்லத் தடுக்கிறது.

சிவக்குமாரின் உடல் எரியூட்டப்பட்ட இரண்டாம் நாளில் அரசநத்தம் மலைகிராமத்திற்குச் சென்றோம்.

சித்தேரி மலைப்பகுதியில் சுமார் 64 மலை கிராமங்கள் உள்ளன. ஆந்திர போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட  20 பேரில் 7 பேர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அரிகிருஷ்ணன், லட்சுமணன், வெங்கடேசன், இன்னொரு லட்சுமணன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். வேலாயுதம் ஆலமரத்துவலவு கிராமத்தைச் சேர்ந்தவர். சிவலிங்கம் என்பவர் கருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.

அரூரில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதிய கொக்காரப்பட்டி பிரிவில் இடதுபுறம் திரும்பி பத்து கிலோமிட்டர் பயணித்தால் வாச்சாத்தி பிரிவு வருகிறது. அதற்கு மேல் மலையின் மேல் மண் சாலையில் சுமார் எட்டு கிலோமீட்டர் பயணித்தால் அரசநத்தம்.

வாச்சாத்தி பிரிவிலிருந்து அரசநத்தம் கிராமத்துக்கு மேலேறும் அந்தச் சாலை உண்மையில் நரகத்துக்குச் செல்லும் பாதை போலிருந்தது. நாங்கள் இருசக்கர வாகனத்தில் சென்றோம். பாறைகளும், உடைந்த சரளைகளும் நிரம்பிய அந்தச் சாலை சுமார் 45 டிகிரி கோணத்தில் வளைந்து மேலேறியது – கரணம் தப்பினால் மரணம்.

அரசநத்தம் மலைப்பாதை
45 டிகிரியில் வளைவுகளோடு உயரே செல்லும் பாதை. பொதுப்போக்குவரத்து கிடையாது.

இத்தகைய ஏற்றத்தில் இருசக்கர வாகனத்தின் மூலம் சென்றாலும் கடும் உடல் வலி இருக்கும். பொதுப்போக்குவரத்து ஏதும் இங்கே கிடையாது. கீழே ஏதாவது வேலைக்கு கிராம மக்கள் தேவைப்பட்டால் ஜீப் வைத்து அழைத்துச் செல்கிறார்கள். மேலே ஓரிருவர் பைக் வைத்திருக்கிறார்கள். இதைத் தவிர்த்து பார்த்தால் மக்கள் கால்நடையாகத்தான் மலையேறுகிறார்கள். கீழே பொருள் வாங்கி வந்தாலும் இப்படித்தான் சுமந்து செல்ல வேண்டும்.

நாங்கள் சென்ற நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களது உறவினர்களும் அரூரில் நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக் கிளம்பியிருந்தனர். ஊரில் இருந்த மற்றவர்களிடம் பேசிப் பார்த்தோம். புதியவர்களை திடீரென்று பார்ப்பதால், மருண்ட பார்வையோடே பெரும் தயக்கத்தோடு தான் பேசினர். சிலர் பேசுவதையே தவிர்த்தனர். இளைஞர்கள் ஓரளவு பேச முன்வந்தனர்.

மேலும் அங்கிருந்த உளவுத்துறை போலீசார் மக்களை ஏதோ அச்சுறுத்தி எங்களிடம் பேசுவதற்கு வரம்புகள் போட்டிருந்தாகத் தெரிகிறது.

கொல்லப்பட்ட ஏழு பேரும் கட்டிட வேலை அல்லது பெயிண்ட் வேலை என்று வீட்டில் சொல்லி சொல்லி விட்டு கடந்த 5-ம் தேதி காலை எட்டு மணிக்குக் கிளம்பியுள்ளனர். 9-ம் தேதி பிணங்களாக ஊர் திரும்பியுள்ளனர். அனைவரின் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருக்கின்றன.

கொல்லப்பட்ட தொழிலாளி ஒருவரின் தந்தை
கொல்லப்பட்ட தொழிலாளி ஒருவரின் கண்பார்வை இழந்த தந்தை

ஒரு உடலில் இரண்டு கால்களும் சிதைக்கப்பட்டு ஒன்றாகச் சேர்த்து கட்டப்பட்டு ஒரே காலாக, சதைப் பிண்டமாக காட்சியளித்திருக்கிறது. இன்னொருவர் முகம் முழுவதும், கத்தியால் கீறியும் கட்டையால் அடித்தும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்; அந்த முகத்திலிருந்து கண்கள் இரண்டு பிதுங்கி வெளியே தொங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அந்த உடல்களின் மேல் நிகழ்த்தப்பட்ட வன்முறையை விவரிக்க குடும்பத்தினர் நடுங்குகிறார்கள்.

இறந்தவர்கள் வீட்டில் சொல்லிச் சென்ற காரணம் உண்மையாகவும் இருக்கலாம். கூலி வேலை என்று சொல்லி அவர்களை மலையை விட்டுக் கீழிறக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னர் ஏஜெண்டை சந்திக்கும் வரை சேஷாச்சலம் வனத்திற்கு செல்லப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு சொல்லப்படாமல் பின்னர் தெரிவிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

ஆனால், அவர்கள் காட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே நகரி பேருந்து நிலையத்திற்கு அருகே கைது செய்யப்பட்டு இரகசிய இடத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள் என்பது நிச்சயமான உண்மை.

வறுமையும் பிழைப்பதற்கு வேறு வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையுமே அம்மக்களை மலையை விட்டு விரட்டியுள்ளது.

”இந்த மலையால எங்களுக்கு ஒரு நாளைக்கு 10 ரூபாய் வருமானம் கிடைச்சா கூட நாங்க ஏன் ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் போகணும்” என்றார் நாங்கள் சந்தித்த பழங்குடியினத்தைச் சேர்ந்த நடுத்தர வயதுப் பெண் ஒருவர்.

இறந்தவர்களில் லெட்சுமணனின் மகன் சண்முகம் சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்துள்ளார். கட்டணம் கட்ட முடியாமல் ஆறு மாதங்களுக்கு முன் படிப்பை நிறுத்தி விட்டு தற்போது வீட்டில் உள்ளார். லெட்சுமணனின் மகள் சங்கீதாவின் செவிலியர் படிப்பும் பணம் கட்ட முடியாமல் இடையில் நிறுத்தப்பட்டு சமீபத்தில் தான் அ.தி.மு.க ஏற்பாடு செய்திருந்த 102 ஜோடி திருமண நிகழ்ச்சியில் வைத்து திருமணம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

ஒரு கல்லூரி படிப்போ அல்லது செவிலியர் படிப்போ கூட இங்கே சாத்தியமாக முடியாது என்றால் இந்த மலைகிராமத்தின் சூழலை புரிந்து கொள்ளலாம்.

உறவினர்கள்
ஒரு கல்லூரி படிப்போ அல்லது செவிலியர் படிப்போ கூட இங்கே சாத்தியமாக முடியாது.

மலையாளிகள் என்ற மலைச்சாதியைச் சேர்ந்த இம்மக்கள் அடிப்படையில் மலை பெற்றெடுத்த குழந்தைகள். கள்ளம் கபடமற்ற இவர்கள் யார் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பக் கூடியவர்களாகவும், வெளியுலக சூதுவாது அறியாதவர்களாகவுமே இருக்கிறார்கள். சமவெளியில் இருக்கும் எந்த வசதிகளும், விழிப்புணர்வும், ஜனநாயகமும், உரிமைகளும் இவர்களுக்குத் தெரியாது.

இவர்களை கொத்துக் கொத்தாக வேலைக்கு அழைத்துச் செல்லும் தரகர்கள் இந்த ஆதரவற்ற ஏழ்மையை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆகவே இங்கே வேலைக்கு அழைக்கும் போது எந்த உத்திரவாதமும், ஆசையும் காட்ட தேவையில்லை. கூடவே வேலை குறித்த அச்சமும், பயமும், இடரும் இவர்களுக்குத் தேவையில்லை.

இந்த அடிப்படையில் ஏஜெண்டுகள் சொல்வதை நம்பி இவர்கள் சேஷாச்சலம் வனப்பகுதிக்கு சென்றிருக்கும் வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது.

நாங்கள் ஏற்கனவே மரம் அறுக்கச் சென்று திரும்பியவர்களைச் சந்திக்க முயற்சித்தோம். ஆனால், கிராமவாசிகள் தங்களுக்கு அப்படிச் சென்றவர்கள் யாரையும் தெரியாது என்று மறுத்தார்கள். போலி மோதல் கொலையைத் தொடர்ந்து கிராமமே மிரட்சியில் உள்ளது. வெளி நபர்களை அதிகம் கண்டிராத இந்தக் கிராமங்களுக்கு தற்போது அரசின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் வந்து போகிறார்கள். குறிப்பாக உளவுப் பிரிவு போலீசின் கண்காணிப்பும் அதிகரித்துள்ளது. வெளியார்களிடம் பேசுவதை தவிர்க்கிறார்கள்; பேசியவர்களும் அளந்து பேசுகிறார்கள்.

வினவு செய்தியாளர்களைத் தவிர இங்கே இதுவரை வேறு ஊடகங்கள் எதுவும் வரவில்லை. பல சுற்று முயற்சிகளுக்கு பிறகு மக்களிடம் திரட்டிய தகவல்களை இப்படி தொகுக்கலாம்.

வெட்டப்படும் செம்மரத்திற்கு கிலோவிற்கு ஐநூறு ரூபாய்கள் கிடைத்தாலும், இந்த வேலை தொடர்ச்சியாக கிடைக்க கூடிய ஒன்றில்லை. மேலும் சொல்லப்படும் தொகையும் முழுமையாக வழங்கப்படுவதில்லை. ஆந்திரா ஏஜெண்டுகள், அவர்களோடு தொடர்பில் உள்ள தமிழக ஏஜெண்டுகள் என்று இரண்டு, மூன்று கைகள் மாறியே இம்மக்கள் தொடர்பு கொள்ளப்படுகிறார்கள். ஒரு முறை சென்று திரும்ப பத்து நாட்கள் ஆகலாம்.

சேஷாச்சலம் வனத்தின் அடர்ந்த பகுதியில் மரத்தை வெட்டி தலைச் சுமையாக டிரக்குகள் வரை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். ஒருவர் அதிகபட்சம் நாற்பது கிலோ வரை சுமந்து வர முடியும்.

கிலோவுக்கு ஐநூறு என்று தரப்படும் கூலியில் இடையில் உள்ள ஏஜெண்டுகளுக்கு கமிஷனாக கொடுத்தது போக சில ஆயிரங்கள் மிஞ்சும். மீண்டும் செல்லும் வாய்ப்பு உடனடியாக கிடைக்காது. அங்கே தோதான அதிகாரிகள் இருக்கிறார்களா, மரக்கடத்தல் மாஃபியா குழுக்களில் எந்தக் குழுவின் கை அந்த சமயத்தில் ஓங்கியிருக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்த வேலை வரும். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வேலை வந்தால் அதுவே அதிகம்.

மலைப்பாதை
காசுக்கு ஆசைப்பட்டு மரம் அறுக்கப் போயிருக்கிறார்கள், மரம் அறுத்த காசில் மலையின் மேல் வசதியாக வாழ்கிறார்கள் என்று சொல்லப்படும் கருத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆங்கில ஊடகங்களுடையது மட்டுமல்ல.

காசுக்கு ஆசைப்பட்டு மரம் அறுக்கப் போயிருக்கிறார்கள், மரம் அறுத்த காசில் மலையின் மேல் வசதியாக வாழ்கிறார்கள் என்று சொல்லப்படும் கருத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆங்கில ஊடகங்களுடையது மட்டுமல்ல; அருகில் இருக்கும் புதிய கொக்காரப்பட்டியில் நாங்கள் சந்தித்த ரங்கசாமி என்ற முதியவரும் அதே கருத்தைச் சொன்னார்.

அரசநத்தத்தில் சுமார் பதினோரு கிலோமீட்டர் தொலைவில் சமவெளியில் உள்ள கிராமம் புதிய கொக்காரப்பட்டி. ரங்கசாமிக்கு சொந்தமாக பத்து ஏக்கர் நிலம் உள்ளது. தென்னை மரங்களும், மாமரங்களும் நிற்கிறது. மானாவரியாக மஞ்சள் விளைவிப்பதாகச் சொன்னார். அரசநத்தம் கிராமம் குறித்தும், போலி மோதல் கொலைகளைக் குறித்தும் அவரிடம் விசாரித்தோம்.

”தம்பி அதெப்படி நம்ம நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு மரம் அறுக்கப் போவலாம்? அதான் போட்டுட்டானுவோ. இப்பவும் மலைக்காரானுங்களுக்கு கெவருமெண்டு நட்ட ஈடு குடுக்கறாங்களாமே. அ.தி.மு.க குடுக்குது, தி.மு.க குடுக்குது.. அட விஜயகாந்து கூட அம்பதாயிரம் குடுக்கறாராமே? எப்படியும் ஒரு பத்து லட்சம் தேறுமில்லே?” என்றார்.

”அய்யா நீங்க அந்த கிராமத்துக்குப் போய் பார்த்திருக்கீங்களா?”

“ம்.. சின்ன வயசில அங்கெல்லாம் சுத்தியிருக்கேன். இப்ப அங்கே நல்ல வசதி வந்திருச்சின்னு சொல்றாங்க. கெவருமென்டே வீடு கட்டிக் குடுத்திருக்காம். கெவருமெண்டு வேலைல அவங்களுக்கு தான் முன்னுரிமையாம்.. நம்ம வன்னிய பசங்கன்னா படிச்சி மார்க்கு எடுக்கனும்.. அவனுங்களுக்கு மார்க்கே இல்லைன்னாலும் வேலை தாரானாமே?”

இன்னொரு புறம் வன்னியர்களின் கட்சிகளான பா.ம.கவும், வேல்முருகன் கட்சியும் கொல்லப்பட்ட தொழிலாளர்களுக்காக போராடுவதாக கூறும் சமயத்தில் ஒரு கிராமத்தில் வாழும் வன்னியரின் கருத்தே இப்படித்தான் உள்ளது.

மலை கிராமங்களின் நிலைமை வெளியில் இருப்பவர்களின் கற்பனைகளில் உள்ளதைப் போல் இல்லை. எட்டாம் வகுப்பு வரை உள்ள ஓராசிரியர் பள்ளி ஒன்று அரசநத்தத்தில் செயல்படுகிறது. செயல்படுகிறது என்று சொல்வதே பெரிய குற்றம். எட்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு ஆசிரியர்; அவரும் வாரம் ஒருமுறை வந்து கையெழுத்திட்டுச் செல்வார். அதையும் போலியாக மாதம் ஒன்று போட்டால் வரவே தேவையில்லை போலும்.

பள்ளிக் குழந்தைகள்
தினசரி போடப்படும் இலவச மதிய உணவைத் தவிற வேறு செயல்பாடுகள் அந்தப்பள்ளியில் இல்லை.

தினசரி போடப்படும் இலவச மதிய உணவைத் தவிற வேறு செயல்பாடுகள் அந்தப்பள்ளியில் இல்லை – அந்த மதிய உணவும் கடந்த ஒரு வாரகாலமாக போடப்படுவதில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

அரசநத்தத்தில் சுமார் ஐம்பது வீடுகள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் அரை ஏக்கர், ஒரு ஏக்கர், ஒன்றரை ஏக்கர் என்று சிறு அளவில் நிலம் உள்ளது. மானாவரி விவசாயம். பெரும்பாலும் ஆரியம் (ராகி – கேழ்வரகு) தூவுகிறார்கள். நல்ல மழை பிடித்தால் ஒரு போகம் விளையும். ஏக்கருக்கு இரண்டு மூட்டை ஆரியம் தேறுவது அதிசயம். அதையும் உணவுத் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நாங்கள் அங்கே இருந்த போது கிராமத்தின் ஒரே குடிநீர் ஆதாரமான கிணற்றை கிராம மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து தூர்வாரிக் கொண்டிருந்தனர். சுமார் ஐம்பது அறுபது அடி ஆழமிருந்த அந்தக் கிணற்றின் ஊற்றுக் கண் மூடியிருந்தது. உள்ளே இருவர் நிற்க, வெளியே சிலர் கயிற்றில் கூடையைக் கட்டி அதில் கறுப்பான சேற்றைக் கோரி இறைத்துக் கொண்டிருந்தனர்.

“இதிலேர்ந்து தான் குடிக்க தண்ணீர் எடுப்பீங்களா?”

“ஆமாங்க..”

“இந்த ஊருக்கு அரசாங்கம் தண்ணீர் பைப் போட்டுத் தரலையா?”

“இருக்கு.. ஆனா தண்ணீ வராதுங்க.. எப்பயாச்சும் வந்தா வரும்”

தண்ணீர் தேடல்
“இருக்கு.. ஆனா தண்ணீ வராதுங்க.. எப்பயாச்சும் வந்தா வரும்”

கடந்த ஓராண்டாக மழையின்றி நிலத்தடி நீர் குறைந்து போயுள்ளது. கிணறு தூர்ந்து போனதால் நீண்ட தொலைவிலிருந்து குடிநீர் எடுத்து வருகிறார்கள். மலையிலிருந்து கீழிறங்க சாலை இல்லை. கொடிப்பாதையாக (ஒற்றையடிப் பாதை) இருந்ததை கிராம மக்களே சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பாக வெட்டி மண் பாதை ஏற்படுத்தியுள்ளனர். இரவு நேரத்திலோ மழைக்காலத்திலோ அந்தச் சாலையிலும் பயணிக்க முடியாது.

மருத்துவ அவசரம் என்றால் கூட உடனடியாக கீழே இறங்க முடியாது. கிராமத்திலேயே கை வைத்தியம் ஏதாவது செய்து சமாளிக்க வேண்டும். வருமானத்திற்கான வாய்ப்புகள் ஏதும் மலையில் இல்லை என்பதால் அவர்கள் வேறு வழியின்றி கூலி வேலைகளுக்காக மலையை விட்டுக் கீழிறங்கியாக வேண்டும். அனேகமான வீடுகளில் குடும்பத்தலைவர் இல்லை. பலர் கட்டிட வேலைகளுக்கும், கோவையில் உள்ள செங்கல் சூளை, நாமக்கல் கோழிப் பண்ணை, கருநாடகத்தின்  காப்பித் தோட்டங்கள் என்று செல்கிறார்கள்.

வெளியுலகச் சூதுவாது தெரியாதவர்கள் என்பதால், உழைப்புச் சுரண்டல் என்னவென்றோ நியாயமான கூலி என்னவென்பதையோ அறியாதவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்களிடம் விசாரித்த போது, வெளியூருக்கு வேலைக்குப் போனால் ஓரிரு ஆண்டுகள் ஊருக்கு வர முடியாது என்கிறார்கள். வேலைக்கு போகும் முன்பே முன்பணம் பெற்றுக் கொள்வோம் என்றும், இரண்டு ஆண்டுகள் கழித்து கணக்கு முடிப்பார்கள் என்றும் தெரிவித்தனர். அது கொத்தடிமைச் சுரண்டல் என்பதைக் கூட அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட பரதேசி படத்தில் வரும் கொத்தடிமைகள் போன்ற வாழ்க்கைதான்.

கலசப்பாடி, ஆலமரத்துவலவு மற்றும் கருக்கம்பட்டி கிராமங்களும் அரசநத்தம் கிராமத்தை ஒத்திருந்த சிறிய கிராகங்கள் தாம். ஏறக்குறைய நாகரிக உலகின் எல்லைக்கு அப்பாலிருந்த அந்தக் கிராமங்களில் வாழ்வதே சித்திரவதை தான். மறுநாள் பசிக்கு என்ன செய்யலாம் என்பதே அந்த மக்களின் உடனடிக் கவலையாக இருக்கிறது.

இவ்வாறானதொரு சமூகப் பொருளாதார நிலையும் அதை முன்னேற்றுவதற்கு எந்த முனைப்பையும் காட்டாத அரசின் அலட்சியமும் தான் இம்மக்களை செம்மரக் கடத்தல் மாஃபியா கும்பலுக்கு பலியாக்கியிருக்கிறது.

நாங்கள் சென்ற தினம், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே அரூரில் சி.பி.எம் கட்சியின் மலைவாழ் மக்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றிற்காக கீழே இறங்கியிருந்தனர்.

சி.பி.எம் ஆர்ப்பாட்டம்
சி.பி.எம் கட்சியின் மலைவாழ் மக்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம்.

சித்தேரி மலையின் அடிவாரத்தில் வாச்சாத்தி பிரிவில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனத்தைப் பிடித்தோம். அங்கே வைத்து தான் கொல்லப்பட்ட சிவக்குமாரின் மனைவி விஜயாவை பேட்டி கண்டோம். பொதுவாக ஆள் நடமாட்டம் அதிகமில்லாத வாச்சாத்தி பிரிவு அந்த நேரத்தில் அன்று பரபரப்பாகியிருந்தது.

மலைமக்களை ஏற்றி வந்த பிக்கப் வாகனத்தை வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் பா.ம.கவைச் சேர்ந்தவர்களும் மடக்கி நிறுத்தியிருந்தனர். இவ்விரு கட்சியினரிடையே அம்மக்களை கட்டுப்படுத்துவது யார் என்ற சண்டை நடந்து கொண்டிருந்தது.

வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சிவக்குமாரிடம் பேசினோம்.

”சார், நாங்க மத்தவங்க மாதிரி இல்லே சார். இதுவரைக்கும் சிறையில் இருக்கும் ரெண்டாயிரம் பேரைப் பத்தி யாரும் யோசிக்கலை, நாங்க தான் அதைக் கையில் எடுத்திருக்கோம், இனிமேல் தான் அவர்களுக்காக வழக்குப் போடப் போகிறோம். அதே மாதிரி எங்க தலைவர் அம்மா கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்கார். பாதிக்கப்பட்ட இந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்தவங்களை அம்மா முன்னாடி அசெம்பிள் செய்யப் போறோம்”

வாழ்வுரிமைக் கட்சி டீம்
“பாதிக்கப்பட்ட இந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்தவங்களை அம்மா முன்னாடி அசெம்பிள் செய்யப் போறோம்.”

”எதுக்கு?”

“எதுக்குன்னா… இன்னும் கூடுதலா எதுனா நட்ட ஈடு வாங்கிக் குடுக்கலாமில்லே?

ஆக வேல்முருகன் கட்சி அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதால் அம்மாவிற்கு நற்பெயர் வாங்கித்தரவேண்டிய கடமை உணர்வில் தீவிரமாக இருந்தார்கள்.

அடுத்து பா.ம.கவைச் சேர்ந்த தர்மபுரி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் அரசாங்கம் (இவரது பெயரே அதுதான்) மற்றும் மாவட்ட செயலாளர் மதியழகனைச் சந்தித்தோம்.

“சார் நாங்க 25 லட்ச ரூபா நட்ட ஈடு வாங்கித் தரப் போறோம் சார்” என்றார் அரசாங்கம்.

”சரிங்க.. இங்க வாழ்வுரிமைக் கட்சிக்காரங்களும் இருக்காங்க நீங்களும் இருக்கீங்க. உங்க ரெண்டு இயக்கங்களும் ஏன் இப்படி போட்டி போடுறீங்க?”

”அது வந்து… நாங்க மத்தவங்களைப் பத்தி சொல்ல முடியாது. எங்களை எடுத்துக்கிட்டீங்கன்னா எங்க சின்னய்யா தன்னோட பாராளுமன்ற கன்னிப் பேச்சிலயே மலைவாழ் மக்களைப் பத்தித் தான் பேசிருக்கார்.. இப்பவும் நாங்க தான் அதிகபட்சமா 25 லட்சம் வாங்கித் தரப்போறதா சொல்லியிருக்கோம்” என்றார்.

பா.ம.க டீம்
“இப்பவும் நாங்க தான் அதிகபட்சமா 25 லட்சம் வாங்கித் தரப்போறதா சொல்லியிருக்கோம்”

பா.ம.கவைப் பொறுத்த வரை தேர்தல் காலத்தில் இம்மக்கள் ஓட்டுப்போடவேண்டும் என்ற எண்ணிக்கைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அதனால்தான் சின்னய்யாவின் டெல்லி குரல், 25 லட்சம் என்று சாதனைகளை வீசிக் கொண்டிருந்தனர்.

மூன்று மணி நேரம் இவ்விரு இயக்க செயல்வீரர்களின் பிடியிலும் சிக்கிக் கிடந்த மக்களிடம் பேச்சுக் கொடுத்தோம். பழங்குடியினப் பெண்மணி ஒருவரிடம்,

”அம்மா… உங்களுக்கு இவர்களெல்லாம் நஸ்ட ஈடு வாங்கித் தரப்போறாங்களாமே.. அதை வச்சி இனிமேல் பிள்ளைங்களை காப்பாற்றி விடுவீர்கள் இல்லையா?”

பணம் ஏரு ஓட்டுமா?
”அய்யா.. கோடிக்கணக்குல கொடுக்கட்டுமே.. அந்தப் பணம் பேசவா போகுது? இல்லை அந்தப் பணம் ஏரு ஓட்டுமா?, எங்காட்களை திரும்ப கொடுக்குமா”

”அய்யா.. கோடிக்கணக்குல கொடுக்கட்டுமே.. அந்தப் பணம் பேசவா போகுது? இல்லை அந்தப் பணம் ஏரு ஓட்டுமா?, எங்காட்களை திரும்ப கொடுக்குமா” என்று சலித்துக் கொண்டார்.

மதியம் அரூர் தாலுக்கா அலுவலகம் எதிரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்டத் திடலுக்குச் சென்றோம். சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த தொகுதி எம்.எல்.ஏ டில்லிபாபு தன்னால் மலை மக்களுக்குக் கிடைத்த நன்மைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இனி இம்மக்களை தங்களது அரசியல் நாடகங்களுக்கு “செட் பிராப்பர்டிகளாக” பராமரிப்பது யார் என்ற போட்டி சூடுபிடிக்கும். தமிழினவாதிகளும் கோதாவில் குதித்திருப்பதால் போட்டி கடுமையாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எல்லாம் சில நாட்களுக்கோ அல்லது ஒரு சில வாரங்களுக்கோ தான்.

கேட்க நாதியற்றவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக சிதைத்துக் கொல்லப்பட்ட அந்த உடல்கள் எரிந்து சாம்பலாகி விட்டன.. ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் அந்தச் சாம்பலைக் கிளறி கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

சித்தேரி மலையின் 64 கிராமங்களும், அதன் பன்னிரண்டாயிரம் மக்கள் தொகையும் ஓட்டுக்களும் ஒரு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போவதில்லை. தீர்மானிப்பதாக இருந்தாலும் அவர்களுக்கு உரிமைகளோ இல்லை முன்னேற்றமோ கிடைத்து விடாது.

சித்தேரி மலை கிராமம்
சீந்துவாரின்றி சித்தேரி மலைமேல் வீற்றிருக்கும் அந்தக் கிராமங்களில் இனி ஏழு பேர் கிடையாது.

காலம் காலமாக அரசு இயந்திரத்தால் கைவிடப்பட்ட அந்த மக்களை இன்னும் சில நாட்களில் கரை வேட்டிகளும் கைவிட்டுச் செல்வர் – எப்போதும் போல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கிழவிகளைக் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு ஓட்டுப் பொறுக்கிச் செல்ல மட்டும் திரும்ப வருவர்.

சீந்துவாரின்றி சித்தேரி மலைமேல் வீற்றிருக்கும் அந்தக் கிராமங்களில் இனி ஏழு பேர் கிடையாது. வாழ்வதற்காக அழுது கொண்டிருக்கும் மக்களிடம் சாவதற்காக அழுமளவு தெம்பில்லை.

–    வினவு செய்தியாளர்கள்.

முத்துக்குமாரசாமி தற்கொலை: ஏ-1 யார்? அம்மாவா? அக்ரியா?

0

விபச்சாரக் கும்பலிடம் சிக்கிய பெண்ணின் நிலையில் இருக்கிறது தமிழகம். தம்மளவில் நேர்மையாக வாழ விரும்புகிறவர்களுக்குக்கூட, அதற்கான வாய்ப்போ, உரிமையோ கிடையாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. திருநெல்வேலி கோட்டத்தில் வேளாண்மைத் துறையில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றிவந்த முத்துக்குமாரசாமி, தச்சநல்லூர் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கோரச் சம்பவம் இதைத்தான் காட்டுகிறது. முத்துக்குமாரசாமி ஊழலைத் தடுக்க முயற்சிக்கவில்லை, ஊழல் பேர்வழிகளைத் தண்டிக்க முயற்சிக்கவில்லை, வாங்கும் சம்பளத்துக்கு யோக்கியமாக நடந்து கொள்ள முயற்சித்தார். அதற்கு அவர் கொடுத்த விலை மரணம்.

ஏ-1 யார்? அம்மாவா? அக்ரியா?வேளாண் துறையில் தற்காலிக ஓட்டுநர் பணியிடம் ஒன்றுக்கு மக்கள் முதல்வர்’ ஜெ.வின் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நிர்ணயித்திருக்கும் விலை ரூ 3 லட்சம். 7 பணியிடங்களை ரூ 21 லட்சத்துக்கு விற்றுவிட்டு, தான் சோன்ன ஆட்களை நியமனம் செய்யுமாறு முத்துக்குமாரசாமியை அக்ரியின் கையாட்கள் நிர்ப்பந்தித்துள்ளனர். அவரோ அரசு விதிப்படி, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 7 பேரை நியமனம் செய்திருக்கிறார். அப்படியானால் 21 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடு, இல்லையேல் ஊழல் வழக்கில் உள்ளே தள்ளுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள் அமைச்சர் அக்ரியின் ஆட்கள். வாழ்க்கை முழுவதும் நேர்மையாக வாழ்ந்துவிட்டு இறுதியில் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்று மானமிழந்து சாவதைவிடத் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்று ரயில் முன் பாந்திருக்கிறார் முத்துக்குமாரசாமி.

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பெயர் அம்பலமாகிவிட்டதால், முதலில் அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக நாடகம் நடந்தது. பிறகு வேறுவழியின்றி அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இருப்பினும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அலுவலக பி.ஏ. என்று சொல்லிக் கொள்ளும் பூவையாவிடம், முத்துக்குமாரசாமியை மிரட்டியது நான்தான், அமைச்சருக்கோ மற்றவர்களுக்கோ இதில் தொடர்பில்லை என்று வாக்குமூலம் பெற்று அக்ரியைத் தப்புவிக்கும் நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருகின்றன.

முத்துக்குமாரசாமி
நேர்மையாக வாழ்ந்துவிட்டு, இறுதியில் ஊழல் வழக்கில் சிக்கி மானமிழப்பதைவிட சாவதே மேல் என்று தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரசாமி.

அமைச்சரின் பி.ஏ. என்பவர், எல்லா விதமான திருட்டுத்தனங்களையும் சட்டவிரோத முறைகேடுகளையும் செய்து கொடுக்கும் நம்பகமான கையாள் என்பது நாடறிந்த ரகசியம். அக்ரியின் பி.ஏ. பூவய்யா என்றால், அமைச்சராவதற்கு முன்புவரை அம்மாவின் பி.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்பதும், அந்த விசுவாசமான அடிமைச் சேவகத்துக்குக் கிடைத்த பரிசுதான் அமைச்சர் பதவி என்பதும் அனைவரும் அறிந்த ரகசியம்.

பழைய தமிழ் வார இதழ்களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள். போயஸ் தோட்டத்தின் கேட் கீப்பரும், அம்மாவின் கணக்குப்பிள்ளையும், கங்காணியும் அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் என்பது தெரியும். ஒவ்வொரு துறை அமைச்சரும், உயர் அதிகாரிகளும் என்னென்ன வழிகளில் எப்படி எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்று கண்காணித்து, அவர்கள் முழுக்கொள்ளைக்கும் அம்மாவிடம் நேர்மையாக கணக்கையும் பணத்தையும் ஒப்படைக்கிறார்களா, அல்லது அம்மாவையே ஏமாற்றுகிறார்களா என்று உளவுத்துறையை வைத்து மோப்பம் பிடிப்பது, அம்மாவிடம் போட்டுக்கொடுப்பது – ஆகியவைதான் அக்ரி ஆற்றிவந்த பணிகள்.

அந்த வகையில் அக்ரி வசூலித்திருக்கும் ஒவ்வொரு காசும் அம்மாவுக்குப் போச்சேரும் பணம்தான். ஆகவே அக்ரியை விட்டுவிட்டு அவருடைய பி.ஏ. பூவய்யாவைப் குற்றவாளியாக்குவதா என்பதல்ல கேள்வி. அம்மாவை விட்டுவிட்டு அவருடைய பி.ஏ. அக்ரியைக் குற்றவாளியாக்குவதா என்பதுதான் கேள்வி.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி
போயஸ் தோட்டத்து கேட் கீப்பரும், அம்மாவின் கணக்குப்பிள்ளையும், கங்காணியுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

அக்ரி மீது நடவடிக்கை என்பதற்கு சாட்டையைச் சுழற்றுகிறார் ஜெயலலிதா என்று தலைப்பிடுகின்றனர். ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒரு கிரிமினலை நீதி தேவதையாகச் சித்தரிக்கும் இழிநிலையை வேறெங்கு காண முடியும்? ஜெயலலிதா ஏதோ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, விதிவசத்தால் தண்டனை பெற்று முடங்கிக் கிடப்பதைப் போலவும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஊழல் அதிகாரிகளும் அமைச்சர்களும் பகற்கொள்ளையில் ஈடுபடுவது கண்டு மனம் புழுங்கித் தவிப்பது போலவும், சொத்துக் குவிப்பு வழக்கை அப்பீலில் முறியடித்து, மீண்டும் பதவியில் அமர்ந்து நல்லாட்சியைத் தருவது எப்படி என்று ஜெயலலிதா துடித்துக் கொண்டிருப்பது போலவும் ஒரு தோற்றத்தைக் கூச்சமே இல்லாமல் பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன.

1991-96 காலத்திலும் இதையேதான் செய்தார்கள். சசிகலா கும்பல் போயஸ் தோட்டத்தில் ஊடுருவி, ஜெ.வுக்குத் தெரியாமல் கொள்ளயடித்து வருவது போலவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களின் உண்மைச் சொரூபம் தெரியாமல் ஜெயலலிதா ஏமாந்து விட்டதைப் போலவும் கதையளந்தார்கள். ஆனால், இந்தப் பித்தலாட்டங்கள், அனைத்துக்கும் ஆப்பறைந்து, முதல் சதிகாரி, முதல் குற்றவாளி, அதாவது அக்யூஸ்டு நம்பர் 1 ஜெயலலிதாதான் என்று சட்டபூர்வமாகவே நிலைநாட்டியது குன்ஹாவின் தீர்ப்பு.

ஜெயலலிதா தலைமையிலான கும்பல் ஒரு அரசாங்கம் என்று அழைக்கப்படுவதற்கு அணுவளவும் தகுதியற்றது. அது ஒரு கொள்ளைக்கூட்டம். பதவியைப் பயன்படுத்திக் கொண்டு சாத்தியமான அத்தனை வழிகளிலும் நாட்டைக் கொள்ளையிடுவது, எந்தத் திட்டத்தில் எவ்வளவு கொள்ளையடிக்க முடியும் என்பதைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் திட்டங்களை வகுப்பது, அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ.க்கள் வரையிலான அனைவரும் தங்களது கொள்ளைப் பணத்தில் உரிய கப்பத்தைக் கட்டுகிறார்களா என்று சோதித்தறிவது, ஏமாற்றுபவர்களை அடிப்பது, பதவியைப் பறிப்பது, உள்ளே வைப்பது என்பதுதான் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா நடத்தி வந்த நிர்வாகம்.

எந்தெந்தத் துறைகளில் எத்தனை கோடி தேறும் என்று கணக்கு போட்டுக் கொடுப்பதுதான் அம்மாவின் அருள் பெற்ற ஆலோசகர்களின் வேலை. அதை முறைப்படி வசூலித்து கொடுப்பதுதான் அமைச்சர்களின் கடமை. அவர்கள் இட்ட பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பதுதான் ஊழல் அதிகாரிகளின் அன்றாடப் பணி. ஜெ கும்பலால் நிர்வகிக்கப்படும் ஆட்சியானது, தாவூத் இப்ராகீம் மாஃபியாவைப் போல, ஒரு கொள்ளைக் கம்பெனியாகத்தான் இயங்கி வருகிறது.

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
முத்துக்குமாரசாரியைத் தற்கொலைக்குத் தள்ளிய குற்றவாளிகளைக் கைது செய்ய சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம்.

காசில்லாதவன் கடவுளேயானாலும் கதவைச் சாத்தடி என்பதுதான் போயஸ் தோட்டத்தின் கொள்கை. மலையாள மாந்திரீகர்களையும், சூனியக்காரர்களையும் தவிர, வேறு யாரும் சூட்கேசு இல்லாமல் போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்ததில்லை. அம்மாவுக்குரிய கப்பத்தைக் கட்டாதவன் அடி வாங்காமல் வெளியேறியதும் இல்லை. வளர்ப்பு மகன் மீதான கஞ்சா கேசாகட்டும், நடராசன் மீதான வழக்குகளாகட்டும், மன்னார்குடி குடும்பமே சிறை வைக்கப்பட்ட கதையாகட்டும், சசிகலாவின் வெளியேற்றமாகட்டும் அனைத்தும் இதற்கான ஆதாரங்கள்.

ஒரு ஓட்டுனர் பதவியின் விலை என்ன என்பது போயஸ் தோட்டத்துக்குத் தெரியும். அதில் தோட்டத்துக்குச் சேர வேண்டிய தொகை சேரவில்லையென்றால் நடக்கக்கூடிய விபரீதம் என்னவென்பது மற்றெல்லோரையும் விட முன்னாள் கணக்குப்பிள்ளை அக்ரிக்கு நன்றாகத் தெரியும். அதன் விளைவுதான் முத்துக்குமாரசாமியின் மரணம்.

தென் மாவட்டங்களில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்துவிட்டு, மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்றிட வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது. கடந்த 2013-14-ம் கல்வியாண்டில் இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட 62 ஆசிரியர்களுக்கு பல மாதங்களாகியும் ஒப்புதல் வழங்கப்படாததோடு, சம்பளமும் தரப்படாமல் உள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஒவ்வொருவரும் ரூ 3.5 லட்சம் வீதம் முழுத் தொகையையும் ஒரே தவணையில் கப்பம் கட்டினால்தான் ஒப்புதல் வழங்கப்படும் என்று மாவட்டக் கல்வி அலுவலர்கள் அமைச்சரின் புரோக்கர்களாகச் செயல்படுகின்றனர். கப்பம் கேட்டு இந்த அதிகாரிகள் பலரோடு பேசிய உரையாடல்கள் இப்போது “வாட்ஸ் அப்” மூலம் ஊடகங்களில் சந்தி சிரிக்கிறது. ஜெ கும்பலின் ஆட்சியில் ஆசிரியர் பணியிட மாற்றம் என்பது ஆண்டுதோறும் நடக்கும் மிகப்பெரிய ‘லஞ்சமேளா’வாகிவிட்டது. இதில் முதல் குற்றவாளி யார்? வீரமணியா, ஜெயலலிதாவா?

ஆவின் பால் கலப்படக் கொள்ளையன் வைத்தி.
உச்சநீதிமன்றம் வரை சென்று பிணை வாங்கிக் கொடுத்து ஜெ. கும்பலால் தப்பிக்க வைக்கப்பட்டுள்ள ஆவின் பால் கலப்படக் கொள்ளையன் வைத்தி.

ஆவின் பால் கலப்பட கொள்ளை அம்பலமானதும், -பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்து ஜெ கும்பல் அவரைப் பாதுகாத்தது. ஜெ கும்பலுக்கு முறையாகக் கப்பம் கட்டிவந்த மாதவரம் மூர்த்தியின் பினாமியாகச் செயல்பட்ட ஆவின் பால் கலப்படக் கொள்ளையன் வைத்திக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று அவனுக்குப் பிணை வாங்கிக் கொடுத்து தப்பிக்க வைத்திருக்கிறாரே ஜெயலலிதா, ஆவின் கொள்ளையில் முதல் குற்றவாளி வைத்தியா? ஜெயாவா?

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், டிரைவர், கண்டக்டர், எழுத்தர், இளநிலைப் பொறியாளர், உதவியாளர் பணி நியமனங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு ரேட் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் எடுபிடிகள், ஆம்னி பஸ்ஸுக்கு டிக்கெட் ஏற்றும் புரோக்கர்கள் போலக் கூவிக்கூவிக் கூப்பிடுவதை பத்திரிகைகள் நாறடிக்கின்றனவே, இது ஜெ.வுக்குத் தெரியாமல் நடக்கும் கொள்ளையா?

திட்டத்தில் ஊழல் என்பது அம்மாவின் ஆட்சியில் கிடையாது. வருமானம் எவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்ட பின்னர்தான், திட்டமோ டெண்டரோ அறிவிக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படும். முட்டையின் வெளிச்சந்தை விலை ரூ 3.18 ஆக இருக்கும்போது, அதனை ரூ 4.50 வீதம் கொள்முதல் செய்ய, கோழிப்பண்ணையே வைத்திராத ஒரு நிறுவனத்துடன் ஜெ.அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதே, இதனைக் கொள்ளைக் கூட்டத் தலைவி ஜெயாவின் துணிச்சல் என்பீர்களா, அமைச்சர் வளர்மதியின் துணிச்சல் என்பீர்களா?

கடுமையான மின்வெட்டு நிலவும் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் மின்நிறுவனங்களிடம் அடாத விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்து, அதில் காசு பார்த்ததை அறிவீர்கள். ஆனால், தமிழக மின்வாரியமும் மைய அரசு நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனமும் இணைந்து துவங்கவிருந்த உடன்குடி திட்டத்தை நிறுத்தியது ஏன், அதனை ஒரு சீன நிறுவனத்துக்குத் தரப்போவதாக கூறியது ஏன், அதன் பின்னர் கடந்த 6 மாதங்களாக ஒப்பந்தத்தை இறுதியாக்காமல் இழுத்தடித்து, இப்போது இன்னொரு தரகு முதலாளி கூடுதல் ரேட்டு பேசியவுடன் புதிதாக ஒப்பந்தம் போடத் துடிக்கிறதே ஜெ அரசு, இவ்வளவு கேடுகெட்ட களவாணிக் கும்பலை ஒரு அரசாங்கம் என்று அழைப்பது அயோக்கியத்தனமில்லையா?

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக ரேசன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடு நிலவுவதற்குக் காரணமே, கடந்த ஜனவரி முதலாக பருப்பு கொள்முதலுக்கான ஒப்பந்தப் புள்ளி இறுதியாக்கப்படாததுதான். கோடிக்கணக்கிலான பேரம் படியாததால் அம்மாவின் ஆணைப்படி தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்னமும் இதை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் என்ற விவகாரம் சந்தி சிரிக்கிறதே, இதில் குற்றவாளி யார்? அமைச்சர் காமராஜா?

அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சராக இருந்தபோது, ‘நலிந்தோர் நல நிதி’ என்ற பெயரில் விவசாய அதிகாரிகளுக்கு ஒரு ரேட், டெபுடி டைரக்டர்களுக்கு ஒரு ரேட் என்று வசூல் வேட்டை நடத்தப்பட்டதும், கொடுக்க மறுத்த அதிகாரிகளுக்கு டிரான்ஸ்ஃபர் மிரட்டல் கொடுக்கப்பட்டதும் சந்தி சிரித்தன.

கனிமவளக் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, சவுடு மணல் கொள்ளை என்று எங்கு திரும்பினாலும் கொள்ளை நடக்கிறது. மக்கள் போராட்டங்களை விலைபேசியோ, கொலை செய்தோ இந்தக் கொள்ளைகளை நடத்தும் துணிச்சல் யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்குத்தான் போயஸ் தோட்டத்தின் கதவுகள் திறக்கின்றன.

பெங்களூரு நீதிமன்றத்தில் வாதாடும் வக்கீல்களின் சாப்பாடு, தங்குமிடத்துக்கு மணல் கொள்ளையன் படிக்காசு பொறுப்பு, வக்கீல் செலவுக்கு இன்னொரு கொள்ளையன், கோயில்களில் பரிகாரங்களைச் செய்வதற்கு ஒரு கொள்ளைக்கூட்டம், இந்தக் கொள்ளைக்கு ஆலோசனையும் பாதுகாப்பும் அளிக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி நீட்டிப்பு – என்பவையெல்லாம் நாடே அறிந்த உண்மைகள். அவ்வாறிருக்க, ஜெயலலிதாவைத் தவிர வேறொருவரை முதல் குற்றவாளி என்று கூறினால், அதைவிடப் பெரிய பொய் வேறொன்று இருக்க முடியுமா?

– சூரியன்
_____________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
_____________________________

அரசு அதிகாரி டி.கே.ரவி மர்மச் சாவு : நேர்மைக்கு இடமில்லை !

0

ர்நாடகா, பெங்களூரு வணிகவரி (அமலாக்கத் துறை) கூடுதல் ஆணையர் “டி.கே.ரவி- மாதாரி ஐ.ஏ.எஸ். அதிகாரி” என்ற 36 வயதேயான நேர்மையான, துணிச்சலான, மூத்த, இளம் அரசு நிர்வாகப் பணி அதிகாரி, புறநகர் கொரமங்களாவிலுள்ள அவரது அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த மார்ச் 16-ம் தேதி மர்மமான முறையில் மாண்டுபோனார்.

அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான பல பின்னணி அடிப்படை ஆதாரங்கள் உள்ளன. என்றாலும், உடல்கூறு ஆய்வு செய்யும்முன்னரே, அவரது உடல் மண்ணில் புதைக்கப்படும் முன்னரே அவரது மரணம் குறித்த உண்மைகள் அவசர அவசரமாகப் புதைக்கப்பட்டுவிட்டன.

அவரது உடல் மின்விசிறியில் தரைதட்டிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது என்பதைத் தவிர, வேறு எந்தத் தடய ஆதாரமுமின்றி, அடுத்த சில மணிகளில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த பெங்களூரு நகரப் போலீசு ஆணையர் எம்.என். ரெட்டி, “இது தற்கொலைதான் என்று முதல்பார்வையிலேயே தெரிகிறது. வேறு தில்லுமுல்லுவையும் நாங்கள் காணவில்லை” என்று உறுதிபட அறிவிக்கிறார். அங்கு வந்த மாநில போலீசு மந்திரி ஜார்ஜ், “நடந்தது தற்கொலைதான். எனக்குத் தெரிய இரகசிய உலக, நில அபகரிப்புக் குற்றக் கும்பல் மிரட்டல்கள் எதுவும் அவருக்குக் கிடையாது” என்று பச்சையாகப் புளுகினார்.

டி.கே.ரவி மரணம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவியின் மர்மச் சாவு குறித்த விசாரணையை சி.பி.ஐ அமைப்பிடம் ஒப்படைக்கக் கோரி பெங்களூருவில் நடந்த ஆர்ப்பாட்டம்.

ஆனால், கர்நாடகா மக்கள் அனைவரும் அறிந்த பின்வரும் உண்மையோ இரகசியமாக இருக்கவில்லை.

  • சாதிய ஒடுக்கு முறைகளும், நில அபகரிப்புகளும் வீடு மற்றும் வீட்டுமனை மோசடிகளும் நிரம்பிவழியும் பெங்களூருவை அடுத்த கோலார் மாவட்டத்தின் துணை ஆணையராக 2013-2014 ஆண்டுகளில் 14 மாதங்கள் அரசு நிர்வாகப் பணியாற்றிய டி.கே.ரவி அந்த இரகசிய உலக, அரசியல் – கிரிமினல் குற்றக் கும்பல்களின் சமூகவிரோதச் செயல்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுத்தார்.
  • அதனாலேயே இந்த எதிரிகளின் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக கடந்த ஆண்டு பெங்களூரு வணிகவரி (அமலாக்கத் துறை) கூடுதல் ஆணையராக டி.கே.ரவி மாற்றபட்டபோது, அதற்கு எதிராக கோலார் மாவட்ட மக்கள் தன்னெழுச்சியாகப் போராடினர்.
  • பெங்களூருவில் பணியாற்றிய சில மாதங்களில் 400 கோடி ரூபாய் அளவுக்கு வீடுகள்-சொசைட்டிகளின் மோசடிகளைக் கண்டுபிடித்து வசூலித்துள்ளார்; இன்னும் பல பெரும் வணிகமுதலைகளின் வரி மோசடிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

இதனால், அம்மாநில மக்கள் தமது ஆதரவைப் பெருமளவு பெற்றிருந்த ரவியின் மரணம் கொலைதான் என்று நம்புகின்றனர்; நீதி நிலைநாட்டப்படவேண்டுமெனப் போராடுகின்றனர்.

ஆனால், சமூவிரோத, இரகசிய உலக, அரசியல்-கிரிமினல் குற்றக் கும்பல்களின் கைப்பாவையாகவுள்ள அரசோ, ரவியின் மரணத்தில் உண்மையை மூடிமறைக்கவும் மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவும் பல்வேறு தகிடுதத்தங்களில் இறங்கியுள்ளது.

  • போலீசு அதிகாரிகள் ரவியின் மரணத்தின் தடயங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள அதேசமயம், போலீசு விசாரணைகள் நடக்கும்போதே அதன் விவரங்களில் சிலவற்றை மட்டும் தெரிந்தெடுத்து முதலமைச்சரும் போலீசு அமைச்சரும் சட்டமன்றத்திலும் பத்திரிகைகளிடமும் பரப்பும், விசாரணையைச் சீர்குலைக்கும் வேலைகளைச் செய்கிறார்கள்.
  • ரவியின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்தும் தாமதப்படுத்தியும், மாநிலக் குற்றப்பிரிவு, விசாரணை என்ற பெயரில் ரவி மரணமடைந்த தருணத்தில் அவரது குடியிருப்புக்கு வந்து சென்றவர்களின் பதிவையும் சி.சி.டி.வி. ஒளிப்பதிவையும் கைப்பற்றிக்கொண்டது.
  • ரவியின் உடற்கூறு ஆய்வு நடக்கும்போதே அங்கு மாநில முதலமைச்சரும் போலீசு அமைச்சரும் போய் போலீசுக்கு அறிவுறுத்தல்கள் கொடுத்துள்ளனர்.
  • ரவி மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கிய பிறகு மாநிலக் குற்றப்பிரிவு தலைமைப் போலீசு அதிகாரி பிரனோப் மொகந்தி இடத்தில் பிரதாப் ரெட்டி என்பவர் நியமிக்கப்பட்டார்.
டி.கே. ரவி
டி.கே. ரவி

எல்லாவற்றுக்கும் மேலாக, குற்றங்களை மூடிமறைக்க வழக்கமாக அரசியல் – போலீசு கிரிமினல்கள்மேற்கொள்ளும் தந்திரமொன்றை கர்நாடகா அரசும் மேற்கொண்டது. பாலியல் வன்கொடுமைக் குற்றமிழைக்கும் அவர்கள், அதற்குப் பலியாகும் பெண்ணை விபச்சாரி என்று குற்றஞ்சுமத்தி தப்பித்துக்கொள்வார்கள். அவர்களின் குற்றங்களுக்குப் பலியானவர்கள் ஆண்களானால், காதல் தோல்வி அல்லது கள்ளத் தொடர்பு காரணமாகத் தற்கொலை என்று கதைகட்டித் தப்பித்துகொள்வார்கள்.

இதே தந்திரத்தைக் கையிலெடுத்த கர்நாடகா முதலமைச்சர், “ரவி தற்கொலை செய்துகொண்ட அன்று அவரது சக அரசு நிர்வாகப்பணி பெண் அதிகாரியோடு ஒருமணிநேரத்தில் 44 தடவை அழைத்துப் பேசியுள்ளார். ஆகவே, அவரது தற்கொலைக்குத் தனிப்பட்ட சொந்தக் காரணம்தான் அடிப்படையாக உள்ளது” என்று அழைப்பு பதிவேடுகளைக் காட்டிப் பத்திரிகைகளுக்குச் செய்தியளித்துள்ளார்.

  • டி.கே.ரவி ரோஹிணி சிந்தூரி தாசரி என்ற தனது சக அரசு நிர்வாகப் பணி பெண் அதிகாரியோடு ஒருதலைக் காதலில் இருந்ததாகவும், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மைசூரு விடுதியில் தன்னோடு தங்கும்படி நிர்ப்பந்தித்ததாகவும், அவரது கணவரை விவாகரத்து செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டியதாகவும் செய்தி வெளியிடும்படி கர்நாடகா போலீசு அதிகாரிகள் கன்னட செய்தியாளர்களை அவசரமாக அழைத்து வற்புறுத்தியுள்ளனர்.
  • இரண்டு மாதங்களுக்கு முன்பே ரோஹிணி சிந்தூரி தாசரி ஆந்திர முதல்வரின் நெருங்கிய ஆலோசகரிடம் புகார் செய்ததாகவும், அவரது ஆலோசனைப்படி கர்நாடகா மாநிலத் தலைமைச் செயலருக்குப் புகார்க் கடிதம் எழுதியதாகவும் காணாமல் போன அக்கடிதத்தைத் தேடிவருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
  • டி.கே.ரவி மரணத்திற்குப் பிறகு கர்நாடகத் தலைமைச் செயலரையும். குற்றப்பிரிவு போலீசையும் சந்தித்த சிந்தூரி, ரவி தனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளையும் மின் கடிதங்களையும் அழைப்புகளையும் கையளித்ததாகக் கூறப்படுகிறது.

டி.கே.ரவி போன்ற ஒரு நேர்மையான அதிகாரி தவறான பாலியல் பண்புகளைக் கொண்டவராகவும் இருக்கலாம்; அவர் மர்மமான முறையில் இறந்த பிறகு, சிந்தூரியேகூட தனது எதிர்காலம் கருதி வேறு சிக்கல்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க முயலலாம்.

ஆனால், நாடே ஒரு சமூக ஜனநாயக அடிப்படையைக் கொண்டதாக இல்லாமல், ஆணாதிக்க நிலவுடைமைச் சமூகத்தைக் கொண்டதாகவும் அதன் வெட்கக்கேடான, கீழ்த்தரமான பிற்போக்கு சமூக விழுமியங்களையும் கொண்டிருக்கிறது; இதை அடிப்படையாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் – கிரிமினல் குற்றக் கும்பல்கள் சமூகவிரோதச் செயல்களில் துணிச்சலாக ஈடுபடமுடிகிறது என்று கருதவே இடமுள்ளது.

ஆனால், டி.கே.ரவி போன்ற நேர்மையான, துணிச்சலான அதிகாரிகளுக்கான இடம் விரைவாக அருகி வருகிறது. சமூகவிரோதத் தொழில் மற்றும் அரசியல் – கிரிமினல் குற்றக் கும்பல்களின் பேராசைகள் வெறியாக மாறிவிட்டன. அதன் காரணமாக, அவர்களின் சமூகவிரோதக் குற்றங்களுக்கு உடந்தையாகச் செயல்படும்படி அரசு நிர்வாகப் பணி அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் மீதான நெருக்குதல்கள் பன்மடங்கு அதிகரிக்கின்றன. இதன் விளைவாக, மக்களுக்கு எதிரான அவர்களின் பாய்ச்சல்கள் இன்னும் கடுமையாகி வருகின்றன.

டி.கே.ரவிக்காக வாரக் கணக்கில் கொதித்துப்போகும் தேசிய ஊடகங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்த முத்துக்குமாரசாமி, தியாகராஜன் போன்ற அதிகாரிகளின் தற்கொலைகள் பற்றி கண்டுகொள்ளாதபோது, இந்நிலைமை குறித்துத் தமிழக மக்களாகிய நாம் கூடுதலான அரசியல் அக்கறை கொள்ளவேண்டும்.
___________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
___________________________

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை தண்டிக்கப்படுமா ?

0

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் 2008-ம் வருடம் விழுப்புரம் மாவட்டத்தில் இலவச கண்மருத்துவ சிகி்ச்சை மூலம் நடத்திய கண்புரை அறுவை சிகிச்சையால் 66 பேருக்கு நிரந்தரமாக பார்வை பறி போனது. மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் (அப்போது மனித உரிமை பாதுகாப்பு மையம்) தாக்கல் செய்த பொது நல வழக்கில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் என ரூ 66 லட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்ப்பானது.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை
22-4-15 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்ற நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்திரவிடப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டது.  இவ்வழக்கில், திருச்சி தலைமை நீதித்துறை நடுவர் திரு. ஸ்ரீதர் முன்னிலையில் 10-04-2015 அன்று வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. வரும் 22-04-2015 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்ற நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை நிர்வாகி டாக்டர் நெல்சன் ஜேசுதாசன் A1, டாக்டர் அவ்வை A2, கிறிஸ்டோபர் தாமஸ் A3, டாக்டர்  பி.அசோக் A4, டாக்டர் எம்.சௌஜன்யா A5, டாக்டர் தென்றல் பொன்னுதுரை A6, டி.ஆன்ரோஸ் A7 ஆகியோர் குற்றவாளிகளாக விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் முதன் முறையாக தவறான சிகிச்சைக்காக மருத்துவர்கள் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருப்பது இதுதான் முதன் முறை. அதனால் வழங்க இருக்கும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை அனைவரின் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை தண்டிக்கப்பட்டால் குறிப்பாக ஆங்கில மருத்துவர்கள், இதை உச்சநீதிமன்றம் அல்ல உலக நீதிமன்றம் வரை எடுத்துச் செல்வார்கள். கண் பார்வை பறி போன ஏழைகளுக்கு நீதி என்பதை காட்டிலும், மருத்துவர்கள் தண்டிக்கப்படுவது சரியா? தவறா? என்பதில் விவாதம் அனல் பறக்கும்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை
கண் பார்வை பறி போன ஏழைகளுக்கு நீதி என்பதை காட்டிலும், மருத்துவர்கள் தண்டிக்கப்படுவது சரியா? தவறா? என்பதில் விவாதம் அனல் பறக்கும்.

மருத்துவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்ரா சம்பத் அவர்கள் வாதிட்டார் “சொட்டு மருந்து கெட்டு விட்டது. மருந்து கம்பெனிதான் பொறுப்பு நாங்கள் சரியாகதான் சிகிச்சை அளித்தோம். பார்வை பறிபோனதற்கு மருத்துவர்கள்தான் காரணம் என்பதை அரசுத் தரப்பு முழுமையாக நிருபிக்கவில்லை” என்று வாதிட்டதுடன் அறுவை அரங்கம், கண்புரை சிகிச்சை, பயன்படுத்தப்படும் மருந்துகள் என மருத்துவ மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போல் நீதிமன்றத்தில் பாடம் நடத்தினார்கள்.

சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் வாதத்தில் “விழுப்புரத்தில் நடத்திய கண் சிகிச்சை முகாமிற்கு

1. இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும். வாங்கவில்லை.

2. அறுவை சிகிச்சைக்கு முன்பாக நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய இரத்த அழுத்தம், சிறு நீர், சர்க்கரை, இதய துடிப்பு போன்ற பரிசோதனைகள் எதுவும் செய்யவில்லை.

3. முகாமிற்கு வேடிக்கை பாரக்க வந்தவர்களைக்கூட வலுக்கட்டாயமாக அழைத்து வந்துள்ளனர்.

4. அறுவை சிகிச்சை செய்ய மயக்கமருந்து கொடுத்தவர் அதற்கான தகுதி பெற்ற மருத்துவர் அல்ல. ஊழியர்தான் அனைவருக்கும் மயக்கம் மருந்து ஊசி போட்டுள்ளார்.

5. 65 பேருக்கும் கண்ணில் சூடோமோனோ என்ற நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பார்வை பறி போனதுடன் சீழ்பிடித்து கடுமையான வலி, வாந்தி எற்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளின் உறவினர்களுக்கு தகவல் சொல்லவில்லை. அரசுக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். ஏன் என்றால் ஒரு கண்ணுக்கு ரூ 750 அரசிடமிருந்து பெறுகிறார்கள், ஆனால், தெரிவிக்கவில்லை. நோயாளிகளுக்கும் தெரிவிக்கவில்லை. 20 நாட்கள் கழித்து 22-8-2008 அன்று பாதிக்கபட்டவர்கள் உறவினர்களுடன் சாலை மறியல் செய்த பிறகுதான் செய்தி வெளி உலகுக்கு தெரியும்.

6. மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கம் ஸ்டெரில் செய்யப்படவி்ல்லை. ஒரே அறுவை அரங்கம்தான் அதில் 66 பேருக்கும் இடைவேளை இல்லாமல் தொடர்ந்து கண் புரை அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். ஒருவருக்கு ஏற்பட்ட நோய்த் தொற்று மற்றவருக்கும் பரவும்.

7. ஒவ்வொரு ஆப்ரேசனுக்கு பிறகும் கையுறை மாற்ற வேண்டும். 2 மருத்துவர்கள், ஒரு அசிஸ்டெண்ட், ஒரு செவிலியர் மொத்தம் 4 பேர் 66×4 266 கையுறை வேண்டும். இருப்புப் பதிவேட்டில் அவ்வாறு இல்லை.

8. அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளிக்கு ஏதேனும் சிக்கல் எற்பட்டால் அதை சமாளிக்க தேவையான எந்த முன்னேற்பாடுகளும் இல்லை.

9. அனைவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டவுடன் அவர்களை திருச்சி மருத்துவமனைக்கு மாற்றி உரிய நடவடிக்கை எடுக்காமல் ஒரே அறையில் அனைவரையும் வைத்தது அதன் வீரியத்தை அதிகப்படுத்தியுள்ளது.

10. 66 பேருக்கும் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்த ஆறுவை சிகிச்சை மதியம் 2-00 மணிக்கு முடித்து விட்டார்கள். அவ்வளவு வேகமாக நெருக்கடியாகவும் ஏன் செய்ய வேண்டும்?

11. சிகிச்சையின் போது பயன்படுத்திய ரிங்கர் லேக்டேட் என்ற திரவம் ஸ்டெரில் செய்யப்படவில்லை. ஒரு முறை பயன் படுத்தியதை மீண்டும் பயன் படுத்தக் கூடாது.

12. ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு ஒரு அறுவை அரங்கத்தில் சிகிச்சை செய்யும் போது நோய்த்தொற்று ஏற்படும். ஒவ்வொரு முறையும் மருந்துகள் அடங்கிய அனைத்து உபகரணங்களும் ஸ்டெரிலைஸ் செய்யப்பட வேண்டும்.

13. ராமு என்பவருக்கு கண்ணில் பொருத்தப்பட்ட லென்சு கீழே விழுந்து விட்டது. அந்த அளவிற்கு லூசாக பொருத்தியுள்ளார்கள்.

14. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மருத்துவர்கள் நோயாளிகளின் நலத்தை பார்ப்பதில்லை.

15. மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ம.உ.பா.மையம் தொடுத்த இதே வழக்கில் தலா ஒரு லட்சம் இழப்பீடு கொடுத்துள்ளார்கள். ஆனால் இங்கு குற்றம் சாட்டபட்ட இவர்கள் நாங்கள் கொடுக்கவில்லை என உண்மைக்கு மாறாக சொல்கிறார்கள்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை
எந்த கேள்வியும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கேட்க முடியாது. கிரிமினல் வழக்கு தொடுக்க முடியாது என்ற நிலைதான் உள்ளது.

மேற்கண்ட நடைமுறைகளை தினம் தோறும் ஆயிரக்கணக்கில் மருத்துவமனை மருத்துவர்கள் ஏதேனும் ஒரு வடிவத்தில் அரங்கேற்றி வருகிறார்கள். எந்த கேள்வியும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கேட்க முடியாது. கிரிமினல் வழக்கு தொடுக்க முடியாது என்ற நிலைதான் உள்ளது.

இந்த வழக்கில் நமது நெடிய போராட்டம் என்ன சாதித்தது என்றால்,  ‘கவனக்குறைவாக டி.வி.எஸ் 50 வண்டியில் இடித்தால் 2 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம்’ என்ற இ.த.ச பிரிவு 338 படி மட்டுமே இந்த மருத்துவர்களை தண்டிக்க முடியும். அது கூட நடக்கிறதா? உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் அதை அனுமதிக்குமா? நாம் அது வரை பல லட்சங்கள் செலவு செய்து தொடர்ந்து வழக்கு நடத்த முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

‘ஏழைகள் என்றால் எதையும் செய்யலாம் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்’ என்ற மருத்துவத் துறையின் திமிரை நாம் கேள்வி கேட்டிருக்கிறோம்.

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
கடலூர், திருச்சி மாவட்டம்.

 

மலை முழுங்கி கொள்ளையர்க்கு எங்கே என்கவுண்டர் ?

3

கொலைகார அரசு, பிணம் தின்னும் வளர்ச்சி!

ன்னும்
சில தூரம் நடந்திருந்தால்
அறுந்து போகக் காத்திருக்கும்
செருப்புகள்…

ஆந்திரா என்கவுண்டர் படுகொலைகள்
இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் வர்க்கம் உயிர் வாழும் உடல்கள்…

இன்னும்
சில தொலைவு கடந்திருந்தால்
மண்ணோடு கசங்கிடும்
பைகள்…

இன்னும்
சில பொழுது அணிந்திருந்தால்
வியர்வைக் கந்தலாகும்
உடைகள்…

இன்னும்
சில நேரம் பார்த்திருந்தால்
மீள வழி தேடும்
விழிகள்…

இன்னும்
சில காலம் வாழ்ந்திருந்தால்
வர்க்கம் உயிர் வாழும்
உடல்கள்…

கச்சிதமாக வாழ்வோர்
மனம் அறியுமோ
தொழிலாளர் படும்
துயர்கள்…

செம்மரக் கட்டைகள்
செத்தவர்களை விட செம்மரக் கட்டைகளுக்கு மதிப்பு அதிகம்தான்!

செல்வம்
மெச்சிடும் உலகில்,
செத்தவர்களை விட
செம்மரக் கட்டைகளுக்கு
மதிப்பு அதிகம்தான்!

கட்டைகளின்
தரம் அறிந்தவர்கள்
பிணங்களின் தரத்தை
கேள்விக் குள்ளாக்குகிறார்கள்.

கேட்க
நாதியற்றவர்களுக்கு
நீதி மட்டும்
கிடைக்குமா என்ன?

அரைக்கிலோ வெங்காயம்
எடை போடப்படு போதே
தராசு குறிமுள் நுனியில்
நீதி வழுவாமல்
நிறை கட்டி நிற்கும்
கனவான்கள்,

கூலித் தொழிலாளிகளின்
மனிதக் கறியை
பார்த்த மாத்திரத்திலேயே
நியாயம் பேசுகிறார்கள்;
” அவன்தான்
வந்தா சுடுவோம்னானே
இவன் ஏன்
அங்க போனான்?”

என்கவுண்டர் படுகொலை
விவசாயமில்லை… வேலை வாய்ப்பில்லை… வேறு வழியில்லை.. வேலை விபரம் உண்மையில்லை..

விவசாயமில்லை…
வேலை வாய்ப்பில்லை…
வேறு வழியில்லை..
வேலை விபரம் உண்மையில்லை..
என,
ஏதிலிகள் சூழலை
இயன்றவரை
பிணங்களின் ரணங்கள்
பேசினாலும்,

இவையெல்லாம்
ஏன் இல்லை
என்பது வரைக்கும்
சிந்திக்க மறுப்பவர்கள்…

திரும்பத் திரும்ப
சலிப்பில்லாமல்
நாட்டை ஆள்வதற்கு
திருடர்களைத் தேர்ந்தெடுப்பவர்கள்…
கூலித்தொழிலாளிகள் மட்டும்
கொல்லப்படுவது
தவிர்க்க முடியாதது என
ஏ.கே.47 இதயத்தை
இப்படித் திறக்கிறார்கள்,
“திருட்டு வேலைக்குப் போனா
விடுவானா?”

போலி மோதல் கொலை
கூலித்தொழிலாளிகள் மட்டும் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது என ஏ.கே.47 இதயத்தை இப்படித் திறக்கிறார்கள், “திருட்டு வேலைக்குப் போனா விடுவானா?”

ஊர் அறிந்த திருடர்கள்
ஜெயா- சசி கும்பலை
நீதியின் ஆரத்தி
நெற்றித் திலகமிட்டல்லவா
விட்டிருக்கிறது!

ஆளுக்கேற்ற மாதிரி
அளவு மாறினால்
அதற்குப் பெயர்
அறச்சால்பல்ல
‘அல்சேசன்’ வால்!

காரணங்களை
கண்டு கொள்ளாமல்
விளைவுகளை மட்டும்
விமர்சிப்பவனின் அறிவு
கொலைக் கருவியை விட
கொடியதல்லவா!

இது மட்டுமா?
ஏதுமற்றவர்களின்
பிணங்களைப் பார்த்தாலே
ஆளும் வர்க்கத்தின் தயாரிப்பில்
சிலர் மூளை
அழுகி நாறுகிறது;
” இவன் ஏன் குடிக்கப் போறான்?
இவன் ஏன்
சாதி மாறிப் போய்
கல்யாணம் பண்ணான்?
இவள் ஏன்
தனியா போனா?”

ரெட்டி சகோதரர்கள்
மலைகளையே வெட்டும் ரெட்டி சகோதரர்களுக்கும், கிரானைட், தாதுமணல் கொள்ளையர்க்கும் ‘என் கவுண்டர்’ எங்கே?

இன்னும் பல கேள்விகள்
வாழ்பவர்களிடம் இருக்கிறது,
பதில் சொல்லத்தான்
பாதிக்கப்பட்டவர்கள்
உயிருடன் இல்லை!

உயிர் வாழ்வதே
கேள்விக்குறியானவர்களுக்கு
விடை சொல்லவும்
வாய்ப்பில்லை.

வாழ்க்கையைப் பார்த்து
வாய் திறக்காதவர்கள்
சாவைப் பார்த்தாவது
விவாதிக்கட்டும்- என்று
விடை பெற்றுக்கொண்டார்கள்!

மரம் வெட்டப்போன
தொழிலாளிகளுக்கு
மரண தண்டனை
என்றால்,

மலைகளையே வெட்டும்
ரெட்டி சகோதரர்களுக்கும்,
கிரானைட், தாதுமணல்
கொள்ளையர்க்கும்
‘என் கவுண்டர்’ எங்கே?

ஆற்றுமணல் கடத்தல்
ஆற்றையே சுரண்டி நீர்க்குரல்வளை நெறித்து மணல் கடத்தும் மாஃபியாக்களை சுட்டுக்கரியாக்க துப்பாக்கி எங்கே?

வேற்று ஊருக்கு
கூலிவேலைக்கு போகிறவர்களை
வழிமறித்து கடத்தி
வெட்டிப்பொசுக்கலாம் எனில்,

ஆற்றையே சுரண்டி
நீர்க்குரல்வளை நெறித்து
மணல் கடத்தும்
மாஃபியாக்களை
சுட்டுக்கரியாக்க
துப்பாக்கி எங்கே?

ஓ! இப்படியெல்லாம்
கேட்டால்
அது தீவிரவாதம்…
சட்டம்
‘அனைத்தையும் பார்த்துக் கொல்லும்’,

வர்க்கம் பார்த்துதான்
துப்பாக்கியும் சுடும்
நியாயமும் வரும்…
நீங்கள்
உங்களுடையதா என
பிணங்களை மட்டும் பாருங்கள்!

கட்டிட இடிபாடு
கட்டிட இடிபாடுகளுக்குள் முகமற்றுப்போன தொழிலாளிகளின் படுகொலையை விதி! என்று தீர்ப்பெழுத ரியல்எஸ்டேட்டு முதலாளிகளால் முடிகிறது!

ஜனநாயகம்
எதையும் மறைக்கவில்லை,
முறிக்கப்பட்ட கை…
உரிக்கப்பட்ட தோல்..
கருக்கப்பட்ட முகம்.
இனி தப்பே
செய்ய முடியாத அளவுக்கு
நிறுத்தப்பட்ட இதயம்..
எல்லாமே,
சட்டத்தைக் காப்பாற்றத்தான்!

ஏன் ?
எதற்கு?
யாருக்காக?
கேள்விகளால்
சட்டத்தை அறுத்துப்பார்ப்பது
தேசவிரோதம்,
வேண்டுமானால்
சடலங்களை அறுத்துப்பாருங்கள்
சட்டத்தின் தீவிரமும்
தேசபக்தியும் தெரியும்!

கிரானைட் கொள்ளை
வளர்ச்சித் திட்டங்களால் நிலவளம் பறித்து மலை வளம் சுரண்டி மக்களின் வயிறு வரைக்கும் பள்ளம் தோண்டியவர்கள்…

வளர்ச்சித் திட்டங்களால்
நிலவளம் பறித்து
மலை வளம் சுரண்டி
மக்களின்
வயிறு வரைக்கும்
பள்ளம் தோண்டியவர்கள்…
அதிகாரவர்க்கத்தின்
அசல் திருடர்கள்
கூச்சமின்றி கூறுகிறார்கள்
உழைக்க மட்டுமே
தெரிந்தவர்களைப் பார்த்து
” அவர்கள் சட்ட விரோதமானவர்கள்”!

மக்களின்
வாழ்வாதாரங்களை
கொள்ளையடித்து
வாழ்விடப் பரப்பை விட்டு
மக்களையே
கடத்தியவர்கள்
தொழிலாளர்
பிணங்களின் மீதும்
பழியைப் போடுகிறார்கள்
‘அவர்கள் கடத்தல்காரர்கள்’

உழைப்பவர்க்கு
ஒன்று எனில்
கேட்க யார் இருக்கிறார்கள்
என்ற இறுமாப்பில்
எல்லாம் நடக்கிறது….

ராணிப்பேட்டை ரசாயனக் கழிவு
ஆலை சுற்றுச்சூழல் விதிகளுக்கு புறம்பாக தெரிந்தே லாபத்திற்காக ரசாயனக் கழிவை தேக்கி

வரைமுறைகளுக்கான
எல்லா விதிகளையும்
திட்டமிட்டே மீறிவிட்டு
ஒரே நிமிடத்தில்
உருக்குலைந்த
மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளுக்குள்
முகமற்றுப்போன தொழிலாளிகளின்
படுகொலையை
விதி! என்று தீர்ப்பெழுத
ரியல்எஸ்டேட்டு முதலாளிகளால் முடிகிறது!

ஆலை சுற்றுச்சூழல் விதிகளுக்கு
புறம்பாக
தெரிந்தே லாபத்திற்காக
ரசாயனக் கழிவை தேக்கி
ஒரே இரவில்
தொழிலாளிகளை
அமிலத்தாக்குதலில்
அடையாளம் தெரியாமல் கரைத்துவிட்டு
‘விபத்து’ என படுகொலையை
மூடி மறைக்க
தோல் தொழிற்சாலை முதலாளிகளால் முடிகிறது!

முறையான பணித்திட்டமின்றி
எழுப்பப்படும்
வானளாவிய
‘மெட்ரோ’ அழகுக்காக
நொறுக்கப்பட்ட தொழிலாளர் உடல்களை
சத்தமின்றி பையில் தினித்து
இவ்வளவுதான் என கையில் திணிக்க
கார்ப்பரேட் கிரிமினல்களால்
முடிகிறது!

எந்தப் பணிபாதுகாப்பும் தராமல்
ஒரே நாளில்
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின்
வாழ்க்கையை படுகொலை செய்ய
பன்னாட்டு கம்பெனிகளால் முடிகிறது!

சட்டம்- போலீசு- நீதி
அரசு அனைத்து கட்டமைப்பும்
அவர்களுக்காகவே இருக்கிறது.

செம்மரக் கடத்தல் கொலைகள்
உடல்களை மண்ணில் புதைப்போம் வர்க்கத்தை நெஞ்சில் விதைப்போம்…

கொலை காரர்களையும்
கொள்ளைக்காரர்களையுமே
ஆளும் வர்க்கமாய் கொண்டிருக்கும்
இந்தக் கட்டமைப்பை
வெட்டி எறியாமல்,
உழைக்கும் வர்க்கம்
உயிர் காக்கவும் முடியாது
என்பதை
உணர்த்தும் படுகொலை இது!

உடல்களை
மண்ணில் புதைப்போம்
வர்க்கத்தை
நெஞ்சில் விதைப்போம்…
வளரும் செம்மரம்
மண்ணில்
மனதில்!

– துரை.சண்முகம்

ஆந்திர போலீசின் நரவேட்டை – தமிழகமெங்கும் போராட்டம்

4

டந்த 8-ம் தேதி இரவில், செம்மரம் கடத்தியதாக சொல்லி, 20 தொழிலாளிகளை திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில், ஆந்திர போலீசு சுட்டுக் கொன்றனர்.

தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த செம்மரக்கடத்தலில் ஈடுபட்டுவரும், மாபியாக்களையும், அரசியல் வாதிகளையும் கைது செய்ய வக்கற்று, வயிற்றுப் பிழைப்பிற்காக, கூலிக்காக, இப்படி வேலைகளுக்கு வந்த தொழிலாளிகளை போலி என்கவுன்டர் கொலை நடத்தி 20 பேரைக் கொன்றுள்ளது ஆந்திர போலீசு.

இதை நாட்டுமக்கள் அனைவருக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாக கருதி உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க அனைவரும் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக போராட முன்வரவேண்டும் என அறைகூவி

  • 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலை! ஆந்திர போலீசின் பச்சைப் படுகொலை!
  • டி.ஐ.ஜி காந்தாராவ் உள்ளிட்ட கொலைகார போலீசை கொலை வழக்கில் கைது செய்!
  • நடுநிலையாளர்கள் ஜனநாயக சக்திகள் கொண்டு விசாரனை நடத்தி குற்றவாளிகளை தண்டி!

என்ற முழக்கங்களின் கீழ் புரட்சிகர அமைப்புகள் சார்பில் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

1. சென்னை

ஆந்திர போலீசின் நரவேட்டையை மூடி மறைக்கும் தமிழக போலீசு

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம்.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

முந்தைய நாள் இரவில் இருந்தே, தொடர்பு கொண்ட காவல் துறை, “நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள் எந்த பிரச்சனையும் இல்லை, மீடியாவையும் வர வைத்து விடுகிறோம்” என்று கூறினர்.

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்
“நீங்கள் ஏற்கனவே முடிவு செய்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது. நாங்கள் சொல்லும் இடத்தில் தான் நடத்த வேண்டும்”

காலை சென்றவுடன், “நீங்கள் ஏற்கனவே முடிவு செய்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது. நாங்கள் சொல்லும் இடத்தில் தான் நடத்த வேண்டும், வால்டேக்ஸ் ரோடு அருகில் 30 நிமிடங்கள் நடத்திக் கொள்ளுங்கள், மீடியாவையும் நாங்கள் அங்கேயே வரவைத்து விடுகிறோம்” என்றனர்.

“மீடியாவிற்கு பேட்டி கொடுப்பது மட்டும் எங்களுடைய நோக்கம் அல்ல, மக்களிடம் இந்த விசயத்தை கொண்டு சேர்ப்பது தான் நோக்கம், அதனால் நாங்கள் முடிவு செய்த இடத்தில் தான் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்று தோழர்கள் உறுதியாகக் கூறினார்கள்.

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்
தோழர்களை ஒவ்வொருவராக வண்டியில் வலுக்கட்டாயமாக இழுத்து தள்ளினர்.

இதனால் கடுப்பான காவல் துறை, ஆர்ப்பாட்டம் செய்ய விடக்கூடாது, என்ற முடிவிற்கு வந்துவிட்டது. தோழர்களை ஒவ்வொருவராக வண்டியில் வலுக்கட்டாயமாக இழுத்து தள்ளினர். எப்போதும் சிறிது நேரம் நாம் முழக்கம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னரே கைது செய்யும் காவல் துறை இந்தமுறை அதற்கு நேரமே கொடுக்காமல், உடனடியாக வேனில் ஏறும் படி நிர்ப்பந்தித்து உள்ளே தள்ளினர். அதற்கு அனுமதி கொடுக்காமல், இழுக்கும் போலீசிடம் தொடர்ந்து, வாக்குவாதம் செய்து,  தோழர்கள் முழக்கமிட்டனர்.

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்
போலீசிடம் தொடர்ந்து, வாக்குவாதம் செய்து, முழக்கமிட்டுக் கொண்டே சென்றோம்.

ஆரம்பித்த உடனே பத்திரிகையாளர்கள் வந்து விட்டனர். அவர்களிடம் பேசக் கூட விடாமல், தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருந்தனர். தோழர்களைச் சுற்றி வளைப்பதும், கயிறு போட்டு மடக்கிப் பிடிப்பதும், வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றுவதும் என பயங்கரமான பீதியூட்டல்கள் நடைபெற்றது.

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்
அப்பாவிகளை துரத்தித் துரத்திப் பிடிப்பதும், இழுத்து வந்து வேனில் ஏற்றுவதும், என அப்பாவிகளை அச்சுறுத்தும் புஜபலபராக்கிரமசாலி என்பதைக் காட்டிக் கொண்டது போலிசு.

ஒரு பயணி, “தான் ஆர்ப்பாட்டத்துக்கு வரவில்லை, பேருந்துக்காகத்தான் காத்திருந்தேன்” என்று கூறி அழுத போதும், அவரை அப்படியே தூக்கிக்கொண்டு வந்து வேனில் ஏற்றியது போலிசு. இதுபோல அங்கே நின்று கொண்டிருக்கும் அப்பாவிகளை துரத்தித் துரத்திப் பிடிப்பதும், இழுத்து வந்து வேனில் ஏற்றுவதும், என அப்பாவிகளை அச்சுறுத்தியது போலிசு.

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்
தோழர்களைச் சுற்றி வளைப்பதும், கயிறு போட்டு மடக்கிப் பிடிப்பதும், வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றுவதும் என பயங்கரமான பீதியூட்டல்கள் .

“டேய் போய் பிடிங்கடா, மாடு மாதிரி நிக்கிறீங்களே, போங்கடா, போங்கடா” என்று ஒருமையில் பேசியதோடு, ஒரு கீழ் நிலை போலிசை கன்னத்தில் பளார் என அறைந்தார் மேற்கு மண்டல இணை ஆணையர் சண்முகவேல். போலீசையே அடிப்பவர்கள் மக்களை என்கவுண்டர் செய்ய மாட்டார்களா என்ன?

செம்மரக் கடத்தலை தொடர்ந்து நடத்தி வரும் கிரிமினல் முதலாளிகளையும், மாஃபியாக்களையும் கைது செய்ய வக்கற்ற காவல் துறை, அதை எதிர்த்து போராடுபவர்களை, தங்களுடைய எதிர்ப்பினை கூட தெரிவிக்க விடாமல் கைது செய்ததில் இருந்து காவல்துறையின் வர்க்க பாசம் எந்த அளவில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்
காவல்துறையின் வர்க்க பாசம் எந்த அளவில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்

அவரின் வயிற்றில் மேலும் ஒரு கிலோ புளி கரைக்கும் விதமாக வந்தனர் ஒரு செஞ்சட்டை அணிந்த குழுவினர்.

அடுத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் தலைமையில் வந்த தோழர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சந்திரபாபு நாயுடுவின் சொந்த சகோதரர்களைப் போல தோழர்களை பேட்டியளிக்கவும் விடாமல் சுற்றி வளைத்து கைது செய்து வேனில் ஏற்றியது போலிசு.

கைது செய்த தோழர்களை வழக்கம் போல், ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

மண்டபத்தின் உள்ளே சென்றவுடனேயே, பெண் போலீசு, “ஒருவர், கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல், அழைத்து வந்து இருக்கீங்களே” என்றார். அவரிடம், “அங்கே சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களிலும் அப்படி தான் இருப்பார்கள், அவர்களை உங்கள் போலீசு தான் கொன்றது” என்றதும் போய் விட்டார்.

அரசின் இத்தகைய நடவடிக்கைகள் தான், அரசின் உண்மை முகத்தை மக்களுக்கு காட்டுவதாகவும், புரட்சிகர அமைப்புகளின் செல்வாக்கை உயர்த்துவதாகவும் அமைகிறது என்பதை ஆளும் வர்க்கத்தின் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்வதாக அமைந்தது இந்த ஆர்ப்பாட்டம்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை

2. ஓசூர்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

செம்மரம் ஒசூர் ஆர்ப்பாட்டம்இவ்வார்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த பாகலூர் பகுதி பொறுப்பாளர் தலைமைத்தாங்கினார். இவ்வமைப்பின் மாநில துணைத்தலைவர் தோழர் சு. பரசுராமன் கண்டன உரையாற்றினர்.

செம்மரம் ஒசூர் ஆர்ப்பாட்டம்“தாதுமணல் கொள்ளை , கிராணைட் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை போன்று இயற்கை வளங்களை சூறையாடும் தாதாக்களை மக்களே தங்களை அமைப்பாக்கி திரண்டுவந்து தண்டித்து அதிகாரங்களை பறித்தெடுப்பதன் மூலம் மட்டுமே இதுபோன்ற அநியாயமான பச்சைப்படுகொலைகளை தடுத்துநிறுத்தவும், இயற்கைவளங்களைப் பாதுகாக்கவும் முடியும்” என்று பேசினார்.

செம்மரம் ஒசூர் ஆர்ப்பாட்டம்இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினார்.

செம்மரம் ஒசூர் ஆர்ப்பாட்டம்தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர்

3. கோவை

கோவை மேட்டுபாளையம் ரோட்டில் துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் 11.04.2015 அன்று மாலை 5 மணி அளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆந்திரா போலிசார் நடத்திய போலி மோதல் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

செம்மரம் கோவை ஆர்ப்பாட்டம்புஜதொமு கோவை மாவட்ட தலைவர் தோழர் பொ. ராஜன் தலைமை தாங்கினார் . நூற்றுக்கணக்கான SRI ,CRI தொழிலாளர்கள் அணி திரண்டனர் . நாங்களும் கலந்து கொள்வோம் என்று மழைமேகங்கள் வானத்தில் திரண்டு அளவாகப் பொழிந்து ஆர்ப்பாட்டத்திற்கு வசதியாக வானத்தில் அணி வகுத்து தோழர்கள் முழக்க மெழுப்பியவுடன் மின்னலாகவும் இடியாகவும் வழிமொழிந்தன . சில்லென்ற காற்றை அனுப்பி தோழர்களை உற்சாகப்படுத்தின .

கோவை மாவட்ட இயக்க பொறுப்பாளர் தோழர் கோபிநாத் தனது கண்டன உரையில் போலி மோதல் படுகொலையை திரை கிழித்து பேசி வர்க்க உணர்வை நிலை நாட்டினார்.

CRI கிளை செயலாளர் தோழர் K .G குமாரவேல் தனது கண்டன உரையில் ஆந்திராவில் நடப்பதும் , கோவை CRI கம்பெனியில் நடப்பதையும் இணைத்து இரண்டுமே முதலாளித்துவ பயங்கரவாதம் என விளக்கிப் பேசினார்.

இறுதியாக மாநிலத்துணைத்தலைவர் விளவை. இராமசாமி தனது கண்டன உரையில் செம்மரம் என்பது எத்தகைய வெப்பத்தையும் தனக்குள்ளே இழுத்து குளிர்ச்சியாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது . அது போல பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தின் கொடூரத்தை உள்ளிழுத்து வர்க்க வீரமாக வெளிப்படுத்தவேண்டும். போலி மோதல் படுகொலையை எதிர்த்து பேசுவதற்கு எந்த ஓட்டுக் கட்சிக்கும் அருகதை கிடையாது. ஏனெனில் போலி மோதல்களை தங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நடத்தாத கட்சியே கிடையாது .

நம்முடைய கோபம் போலிசு, வனத்துறை, சுங்கச்சாவடி அதிகாரிகள், மாவட்ட ஆட்சிதலைவர் உள்ளிட்ட வருவாய்த்துறை கொள்ளையர்கள், ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகள் என அனைவர் மீதும் திரும்பவேண்டும் .

கூலிக்காக போனவர்களை கொன்றவர்களே ? அனுப்பிய கொள்ளைக்காரனை என்ன செய்தீர்கள் . வேறு வேலைக்கு போகவேண்டியதுதானே என எகத்தாளம் பேசுபவர்களே முத்துகுமாரசாமி தற்கொலைக்கு பிறகும் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலைக்கும் போகமுடியாது என்பது தெரிந்த பிறகும் இது போல பேசுவது மோசடியில் முதல்தரமான மோசடி .

மாட்டைக் கொல்வது குற்றம் என்று பேசும் கூட்டமே மனிதர்களை கொள்வது குற்றம் என்று ஏன் பேசவில்லை. சந்திரபாபு நாயுடு உங்கள் கூட்டணிக் கட்சிக்காரன் என்பதினால் தானே பேசவில்லை .

தாலியின் புனிதம் காக்க சோத்து டப்பாவில் பட்டாசு கொளுத்தியவர்களே 20 இந்து பெண்கள் தாலி பறி போய்விட்டதே ஏன் ஒரு கொள்ளு பட்டாசு கூட கொளுத்தவில்லை .

செம்மரக் கடத்தல்காரன் ஆந்திராவில் மட்டுமா , தமிழகத்தில் கரகாட்டக்காரி மோகனா, அணைக் கட்டு திமுக ஒன்றிய செயலாளர் பாபு , காங்கிரஸ் சீத்தாராமன் போன்றவர்களை உருவாக்கிய தமிழகத்தின் ஓட்டுக் கட்சி கூட்டத்தையும் எதிர்த்து போராட வேண்டும் .

ஆந்திராவில் நடந்தது அப்பட்டமான முதலாளித்துவ பயங்கரவாதம் . இதனை மொழி எனப் பேசுவதன் மூலமாகவோ, இனம் எனப் பேசுவதன் மூலமாகவோ , வேறு எப்படி பேசினாலும் தீர்க்கமுடியாது . வர்க்கம் என்ற அடிப்படையில் நக்சல்பாரிகள் எனும் அடையாளத்தில் அணிதிரள்வதின் மூலமே தடுக்க முடியும் . ஓட்டுப்போடுவதால் மாற்றம் வராது. மக்களை அணி திரட்டி மாற்று அதிகார அமைப்பாக போதுதான் வெல்லமுடியும்”

CRI கிளைத்தலைவர் தோழர் மூர்த்தி நன்றியுரையாற்றினார்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

4. கோத்தகிரி

நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக – கோத்தகிரி மார்க்கெட், ஜீப் நிலையத்தில் – 11.03.2015 (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு – ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து – கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு தோழர் ஆனந்தராஜ் தலைமையேற்றார். தோழர் பாலன் (மாவட்ட செயலாளர்) கண்டன உரையாற்றினார்.

செம்மரம் கோத்தகிரி ஆர்ப்பாட்டம்இறுதியாக தோழர் ராஜா நன்றி கூறினார்.

தகவல்

இரா.ஆனந்தராஜ் – தலைவர்,
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்,
கோத்தகிரி, நீலகிரி மாவட்டம்.
தொடர்பு எண். 9787556161.

5. பென்னாகரம்

20 தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை ஆந்திர போலீசின் பச்சை படுகொலை

ருமபுரி மாவட்டம் கடும் வறட்சியும், வறுமையும் எப்போதும் நிறைந்திருக்கின்ற பகுதி. பெரும்பான்மையான மக்கள் இந்த மாவட்டத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கு சென்றும் வருகின்றனர். எங்கு சென்றாலும் வறுமையின் பிடியில் இருந்து மீளமுடியாத மக்கள் மாவட்டம் முழுவதும் பெருகிக்கொண்டே இருக்கின்றர். கூலி அதிகம் என்று கூறி செம்மரம் வெட்ட அழைத்து செல்லப்படுகின்றனர். குறிப்பாக, தருமபுரியின் மலைவாழ் மக்கள் இருக்கின்ற கிராமங்களிலும் அதிகமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.

அரூர் வட்டம் சித்தேரி மலைகிராமங்களில் அரசநத்தம், கருக்கம்பட்டி, ஆலமரத்து வலவு ஆகிய மலை கிராமங்களை சேர்ந்த 7 பேரை பேருந்தில் சென்ற போது பாதிவழியில் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, கை கால் கட்டி கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்தது ஆந்திர போலீசு.

இவ்வாறு செய்த பச்சைப் படுகொலையை, நியாயப்படுத்தி இயற்கை வளத்தை பாதுகாக்க செய்தது சரிதான் என்று திமிராகவே பேட்டி கொடுக்கின்றனர். துளியும் குற்ற உணர்ச்சியின்றி இந்த பொய்களையே கூறி வருகிறது ஆந்திர அரசு.

செம்மரம் வெட்டுவதும், இதனை கடத்துவதும், ஆந்திர வனத்துறையும், தமிழ்நாடு வனத்துறையும், ஆந்திர போலீசும், தமிழ்நாடு போலீசும் கூட்டுத்துவத்தோடுதான் நடக்கிறது. ஆந்திர செக்போஸ்டிலிருந்து பாதுகாப்பாக செம்மரங்களை அனுப்பி வைக்கின்றனர். அங்கிருந்து பாதுகாப்பாக துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் வேலையை செய்வர்கள் தமிழ்நாட்டு போலீசும், வனத்துறை மற்றும் அதிகாரிகளும்தான். இவ்வாறு மாபியா கும்பலின் அடியாட்கள்தான் போலீசு.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக பென்னாகரம் வட்டத்தில் செம்மரம் வெட்ட சென்றதில் கிடைத்த கூலி தொகையை கொண்டு வரும்போது மடக்கியது பென்னாகரம் போலீசு கும்பல். இதில்  பென்னாகரம் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் விஜயசங்கர் தலைமையில் 5 போலீசார் சேர்ந்து 5 லட்சத்தை வழிபறி செய்தனர். இதற்கு பென்னாகரம் டி.எஸ்.பி அண்ணாமலையும் உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

எப்போதும் திருடி வயிறு வளர்க்கும் போலீசு கும்பல்தான் இன்று கூலி ஏழைத்தொழிலாளர்களை சுட்டுப்படுகொலை செய்து இயற்கை வளத்தை பாதுகாக்க இருப்பதாக கதை அளந்தவிடுகின்றனர்.

இந்த பச்சைப்படுகொலையை கண்டித்து தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் தோழர் மாரியப்பன் வட்டக்குழு உறுப்பினர் தலைமைதாங்கினர். மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலர் தோழர் ஜானகிராமன், பு.மா.இ.மு தருமபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் ராஜா, வி.வி.மு வட்டார செயலர் தோழர் கோபிநாத் உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரையாற்றினர். தோழர்கள் நகரத்தில் பேருந்து பிரச்சாரமும் செய்தனர்.

செம்மரம் பென்னாகரம் ஆர்ப்பாட்டம்
தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி – 9943312467

6. திருவாரூர்

திருவாரூரில் மாற்றத்திற்கான மக்கள் களம் சார்பில் 20 கூலித் தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற ஆந்திர அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தனர். திருவாரூர் மாவட்ட (RSYF) புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணித் தோழர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

செம்மரம் திருவாரூர் ஆர்ப்பாட்டம்

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருவாரூர்

7. திருச்சி

திருச்சியில் உள்ள உறையூர் குறத்தெரு பகுதியில் 11-04-2015 அன்று மாலை 5.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செம்மரம் திருச்சி ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டத்தை பாய்லர் ப்ளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர் சுந்தராஜ் தலைமை ஏற்று நடத்தினார். தலைமையுரையில், “மனித உயிர்களை மயிருக்கு சமமாக கூட மதிக்காத தன்மையில் ஆந்திர போலீசு என்கவுண்டர் என்ற பெயரில் சாதாரண கூலித் தொழிலாளர்களை சுட்டுக் கொன்றது. மரம் வெட்ட சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த இந்த கதிதான், சாதாரண மக்களுக்கும் ஏற்பட நேரிடும். அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இந்திய ஜனநாயகம் என்பது பித்தலாட்டம்” என்று பேசினார்.

பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர் பவானி கண்டன உரையாற்றினார். தோழர் பேசுகையில், “செம்மரம் என்பது விலை உயர்ந்த மரம். ஆந்திரத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட செம்மரம் சென்னை வழியாக அரபு நாடுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு வந்து விவசாயம் அழிந்து போனதால் தான் வேலை தேடி ஆந்திர மாநிலத்திற்கு போகிறோம். ஆனால், போலீசு அப்படி செல்லும் மக்களை கொன்றிருக்கிறது. மக்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு மக்களுக்கே துரோகம் செய்வது தான் போலீசு” என்று போலீசின் யோக்கியதையை தோலுரித்துக் காட்டும் வகையில் உரையாற்றினார்.

செம்மரம் திருச்சி ஆர்ப்பாட்டம்
“மக்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு மக்களுக்கே துரோகம் செய்வது தான் போலீசு”

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர் வசந்த் கண்டன உரையாற்றினார். இவர் பேசுகையில், “ஆந்திராவில் நடந்த செம்மரக் கடத்தல் விவகாரம் என்பது ஒரு இயற்கை கனிம வள சூறையாடல். எப்போது தனியார்மய கொள்கைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கொடுத்தார்களோ அப்போதில் இருந்து தான் இது போன்ற கனிம வள சூறையாடல் என்பது நடந்து கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் ஏராளமான மாபியா கும்பல்கள் உள்ளனர். பி.ஆர்.பி, வைகுண்டராஜன், ரெட்டி சகோதர்கள் இன்னும் பலர் உள்ளனர். அவர்களை எல்லாம் தண்டிக்க வக்கில்லாதது தான் இந்த அரசாங்கம். ஏனென்றால் இந்த சட்டம் என்பது முதலாளிகளுக்கு சாதகமாக தான் செயல்படுகிறது. ஆதலால் இந்த சட்டத்தைக் கொண்டு இவர்களை தண்டிக்க முடியாது. போலீசு, ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து அதிகாரங்களை பிடிங்கி மக்கள் கையில் கொடுத்தால் மட்டுமே இது போன்ற இயற்கை கனிம வள சூறையாடலை தடுத்து நிறுத்த முடியும். உழைக்கும் மக்களுக்கான விடுதலையைப் பெற முடியும்” என்று பேசினார்.

செம்மரம் திருச்சி ஆர்ப்பாட்டம்
“போலீசு, ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து அதிகாரங்களை பிடிங்கி மக்கள் கையில் கொடுத்தால் மட்டுமே இது போன்ற இயற்கை கனிம வள சூறையாடலை தடுத்து நிறுத்த முடியும்”

ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் தர்மராஜ்  சிறப்புரையாற்றினார். இவர் பேசுகையில், “சட்டத்தை இந்த ஆட்சியாளர்கள், அதிகாரிகள் யாரும் மதிக்க மாட்டார்கள். இவர்கள் அனைவரும் ஊழல் செய்து விட்டு வெளிப்படையாக வலம்வருவார்கள். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தேர்தல் பாதையை நம்புவது அல்ல. மாறி மாறி ஓட்டுப் போட்டால் பிரச்சனை தீர்ந்து விடாது. இந்திய ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்லக்கூடிய துறைகள் அனைத்தும் மக்களுக்கு எதிராக தான் செயல்படுகின்றன. இதன் மூலம் மக்களுக்கு தீர்வு கிடைக்காது. இவர்களை தண்டிக்க வேண்டுமானால் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். சாதி, மதம், இனம் கடந்து போராட்டம் நடத்த வேண்டும். மக்கள் கையில் அதிகாரம் இருக்க வேண்டும். அப்போது தான் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்” என்று பேசினார்.

செம்மரம் திருச்சி ஆர்ப்பாட்டம்ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் கோபி நன்றியுரை தெரிவித்தார். பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர்கள் புரட்சிகர பாடல்களை பாடினர்.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
99431 76246
திருச்சி.

8. குடந்தை

20 தமிழக கூலி தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து குடந்தை தலைமை தபால் நிலையம் அருகில் ஏப்ரல் 11 மாலை 5 மணிக்கு  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

செம்மரம் குடந்தை ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் குடந்தை பகுதி அமைப்பாளர் வழக்குரைஞர் தமிழ். ஜெயபாண்டியன் தலைமை வகித்து நடத்தினார். தனது தலைமை உரையில் “இந்த என்கவுண்டர் ஆளும் அதிகாரவர்க்க கும்பலின் கிரிமினல் குற்றங்களை மறைப்பதற்காக நடத்தப்பட்டது” என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

செம்மரம் குடந்தை ஆர்ப்பாட்டம்க.மா. இரணியன் தனது கண்டன உரையில் ஆந்திர அரசின் பயங்கரவாத செயலை கண்டித்து பேசினார்.

வழக்குரைஞர் சி. குருமூர்த்தி, “20 கூலித் தொழிலாளர்களை ஆந்திராவில் சுட்டுக் கொன்றதை போல நாம் தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடினால் தமிழக அரசும் சுட்டுத் தள்ளும். ஆகையால் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு இதை கண்டித்து போராட வேண்டும்” என்று விளக்கி பேசினார்.

வழக்குரைஞர் கோ. ராஜ்குமார், “மனித உரிமை ஆணையம் அதிகார வர்க்க குற்றக் கும்பலின் கிரிமினல் குற்றங்களை மறைக்கவும், போராடுகிற மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்கவும் செய்கின்றதே தவிர இதுவரை எந்த மனித உரிமை மீறலையும் தண்டிக்கவில்லை” என்று விளக்கி பேசினார்.

செம்மரம் குடந்தை ஆர்ப்பாட்டம்மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த ம. சங்கத்தமிழன் தனது கண்டன உரையில், “இந்த படுகொலை குற்றக் கும்பல்களுக்கு இடையிலான போட்டியில் நடத்தப்பட்டது. ஆளும் வர்க்கத்துக்கும், மாஃபியா கும்பலுக்கும் சேவை செய்வதே இந்த அரசியல் அமைப்பின் பணியாக உள்ளது. மக்கள் அதிகாரத்தை தங்கள் கையில் எடுப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு” என்பதை வலியுறுத்தி பேசினார்.

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
குடந்தை

9. விருத்தாச்சலம்

10.04.2015 அன்று விருத்தாசலம் பாலக்கரையில், செம்மரம் கடத்தியதில் ஈடுபட்டதாக கூறி 20-தமிழக தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீசார் போலி என்கவுண்டர் நடத்தியதை கண்டித்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

செம்மரக் கடத்தல் படுகொலைகள் விருத்தாச்சலம் ஆர்ப்பாட்டம்கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம். கூலிப்படையாக செயல்பட்ட ஆந்திரா போலிசை கண்டிக்கிறோம்” என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் R. புஷ்பதேவன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜு, மாவட்ட துணை செயலாளர் சிதம்பரம் வழக்கறிஞர் செந்தில், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க கடலூர் மாவட்ட தலைவர் வை.வெங்கடேசன், துணைத் தலைவர் அன்பழகன், சேத்தியதோப்பு கிளைத் தலைவர் தமிழரசன், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பஞ்சமூர்த்தி, அறிவரசன், திருக்குறள் திருவள்ளுவர் கழகத்தின் சார்பாக சிறு தொண்ட நாயனார், அசோக், PRPC செயற்குழு உறுப்பினர் செல்வக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

செம்மரக் கடத்தல் படுகொலைகள் விருத்தாச்சலம் ஆர்ப்பாட்டம்மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் மற்றும் மாணவர்களின் கல்விஉரிமைக்கான பெற்றோர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். நகரம் முழுவதும் நோட்டீஸ்கள் வினியோகிக்கப்பட்டன. போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

செம்மரக் கடத்தல் படுகொலைகள் விருத்தாச்சலம் ஆர்ப்பாட்டம்தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்

10. புதுச்சேரி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

கம்மா , ரெட்டி செம்மர மாஃபியாக்கள் – சிறப்புக் கட்டுரை

5

ருபது அப்பாவி உயிர்கள் நரவேட்டையாடப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் படுபயங்கரமான கடத்தல்காரர்கள் என்று சித்தரிக்கின்றது ஆந்திர போலீசு.

செம்மரம் படுகொலை
ஆந்திரப் போலீசின் கதையில் வரும் பயங்கர ஆயுதம், ஒரே ஒரு கத்தி மட்டுமே!

பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தங்களை தாக்க முனைந்ததாகவும், தற்காப்புக்காக திருப்பிச் சுட்டதில் அவர்கள் இறந்ததாகவும் கதையளக்கிறது ஆந்திர போலீசு. என்கவுண்டருக்காக இந்திய போலீசு கூறும் அரதப்பழசான பச்சைப் பொய் இது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆய்வின் படி ஒரே ஒரு கத்தியைத் தவிர வேறு ஆயுதங்கள் எதுவும் அப்பகுதியில் இல்லை. அதாவது ஆந்திரப் போலீசின் கதையில் வரும் பயங்கர ஆயுதம், ஒரே ஒரு கத்தி மட்டுமே!

சுட்டுக் கொல்லப்பட்ட 20 கூலித் தொழிலாளர்களின் உடல்கள் திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா ருயா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. பிரேத பரிசோதனை முடிவுகளோ நடந்தது அப்பட்டமான போலி மோதல் கொலைகள் என்று நமக்கு உணர்த்துகின்றது. கொல்லப்பட்ட உடல்களில் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்ததால் ஏற்பட்ட காயங்களைப் பரிசோதித்த போது, அவை மிக அருகில் இருந்து சுடப்பட்டதால் ஏற்பட்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், தோட்டாக்கள் மிகச் சரியாக உயிராதாரமான பகுதிகளான மார்பு, கழுத்து, தலை போன்ற உறுப்புகளைத் தாக்கியுள்ளன. குண்டு காயம் பட்ட பல தொழிலாளர்களின் உடல்கள் அழுகிக் காணப்பட்டதாகவும், அவர்கள் திங்கட்கிழமையே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

செம்மரம் படுகொலை
சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களும் வெட்டுக்காயங்களும் அந்த உடல்களில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இவை தவிர, சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களும் வெட்டுக்காயங்களும் அந்த உடல்களில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இவ்வுடல்களை சம்பவ இடத்தில் நேரில் கண்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர்களும், தீயினால் உடல்கள் பொசுக்கப்பட்டதையும் பல உடல்களில் கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டிருந்ததையும், இறந்தவர்களின் ஏழு பேரின் முகம் மற்றும் கழுத்தின் பின்புறமாக துப்பாக்கிச் சூட்டின் அடையாளம் இருந்ததையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

தற்போது ஆறு உடல்களை சென்னை உயர்நீதிமன்ற தடையுத்தரவினால் இறுதிச் சடங்கு செய்யாமல் வைத்துள்ளனர். ஒருவேளை மறு பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டு, நடுநிலையான மருத்துவர்களால் மீண்டும் ஆய்வு செய்யப்படும் போது மேற்கண்ட தகவல்கள் உறுதி செய்யப்படுவதற்கே வாய்ப்பு அதிகம்.

நடந்தது கொடூரமான கொலைகள் தான் என்பதற்கு வேறு சில சாட்சியங்களும் வெளியாகியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் முருகாபாடி கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் கடந்த 6-ம் தேதி திருத்தணி சென்று அங்கிருந்து சித்தூருக்கு நகரி வழியாக பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது நகரி பேருந்து நிறுத்தம் அருகே திடீரென்று பேருந்தில் ஏறி பயணிகளிடம் சோதனை நடத்தியுள்ளது ஆந்திர அதிரடிப்படை போலீசு. இந்தச் சோதனையில் ஏழு தமிழர்களை சந்தேகத்தின் பேரால் கைது செய்வதாக கூறி அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். கைதாகாமல் தப்பிய எட்டாவது நபரின் பெயர் சேகர். சேகர் கைதான ஏழு பேருடன் அமராமல், பெண்கள் இருக்கையில் தனியே அமர்ந்திருந்ததாலேயே மயிரிழையில் தப்பியுள்ளார்.

படுகொலை செய்யப்பட்டவர்கள்
படுகொலை செய்யப்பட்டவர்கள் (படம் : நன்றி தினத்தந்தி)

நகரியில் கைது செய்த இவர்களை உடனடியாக வேறு இரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே வேறு இடங்களில் பிடிபட்ட தொழிலாளர்களோடு இவர்களையும் கொடூரமாக வதைத்த பின் சேஷாச்சலம் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கைகளைப் பின்னால் கட்டி அருகிலிருந்தே சுட்டுக் கொன்றுள்ளனர்.

இறந்த உடல்களுக்கு அக்கம் பக்கமாக தயாராக கொண்டு வந்த சில செம்மரக் கட்டைகளை பரப்பிப் போட்டு என்கவுண்டர் கதையை எழுதியுள்ளது ஆந்திர போலீசு.

ஆனால், உடல்களின் அருகில் போடப்பட்டிருந்த செம்மரக் கட்டைகள் வேறு சந்தர்ப்பங்களில் பிடிபட்டவை என்றும், அவற்றின் மேல் எழுதப்பட்டிருந்த பழைய வழக்கு எண்கள் அழிக்கப்பட்ட அடையாளங்கள் இருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. மேலும், கொலைகள் நடந்த இடத்தைச் சுற்றிய ஐந்து சதுர கிலோ மீட்டர் பரப்பிற்குள் செம்மரங்கள் இல்லை என்பதும், உடல்களுக்கு அருகே கிடந்த செம்மரங்கள் காய்ந்து போன பழைய மரங்கள் என்பதும் ஊடகங்களில் வரும் செய்திகளில் இருந்து அறிய முடிகிறது.

நடந்தது தெளிவாக திட்டமிடப்பட்ட போலி மோதல் படுகொலை. சம்பவம் நடந்து இரண்டே நாட்களில் வெளியாகியுள்ள தடயங்கள் மற்றும் சாட்சியங்களே இதை மெய்ப்பிப்பதாக உள்ளது. இதற்கு மேல் நடக்கவுள்ள விசாரணைகளில் மேலும் விவரங்கள் வெளிப்படக்கூடும் அல்லது இருக்கும் விவரங்கள் அழிக்கப்படவும் கூடும். நினைக்கவே நெஞ்சு பதறும் படுபாதகச் செயலை வனச்செல்வத்தைக் காப்பாற்றும் நோக்கில் நடந்ததாகச் சித்தரிக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

செம்மரக் கடத்தல்
முதலாளித்துவ ஊடகங்கள் இப்போது நடந்திருக்கும் போலி மோதல் கொலைகளை ஆந்திர போலீசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சிப்பது போன்ற வார்த்தைகளில் நியாயப்படுத்துகின்றன.

செம்மரக் கடத்தலைத் தடுக்க தமது தரப்பிலிருந்து கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகாவும், தமது மாநில போலீசு கடத்தலைத் தடுக்க கண் துஞ்சாமல் கடமையாற்றுவதாகவும் ஆந்திர மாநில ஆளும் வர்க்கம் ஒரு சித்திரத்தை தோற்றுவித்து வருகிறது. தங்கள் மாநில எல்லையை ஒட்டிய தமிழக மலைக்கிராமங்களில் இருந்தே மரக் கடத்தல் பேர்வழிகள் ஊடுருவுவதாகவும், அதைத் தடுக்க அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுக்களை ஏற்படுத்தி அக்கிராம மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பிரச்சாரங்கள் செய்து வருவதாகவும் ஆந்திர அரசு தெரிவிக்கிறது.

‘இதையும் தாண்டி தமது மாநிலத்திற்கும் பணத்தாசை பிடித்த தமிழ்க் கடத்தல்காரர்கள் புகுந்து அரியவகை வனச் செல்வமான செம்மரங்களை கடத்திச் செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்கள், பல முறை ஆந்திர வனக் காவலர்களை தமிழ்க் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்றும் ஆந்திர அரசால் சொல்லப்படுகிறது. முதலாளித்துவ ஊடகங்கள் இப்போது நடந்திருக்கும் போலி மோதல் கொலைகளை ஆந்திர போலீசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சிப்பது போன்ற வார்த்தைகளில் நியாயப்படுத்துகின்றன.

மேற்படி கதைகளில் தொக்கி நிற்கும் கோணம் செம்மரக் கடத்தல் என்பது ஆந்திரப் போலீசு மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் நடக்கும் ஒரு சம்பவம் என்பதாகும்.

இது உண்மையா?

செம்மரக் கடத்தல்
செம்மரக்கட்டைகள் சட்டைப் பைக்குள் ஒளித்து வைத்து கடத்தி விடக் கூடிய சமாச்சாரம் இல்லை.

ஆந்திரக் காடுகள் அரசால் அணுகப்பட முடியாத அடர் பிரதேசங்கள் இல்லை. ஆந்திராவில் செயல்பட்டு வந்த மக்கள் யுத்த குழுவை (தற்போது மாவோயிஸ்ட்டுகள்) ஒடுக்கும் நோக்கில் ஆந்திராவின் காடுகள் மற்றும் மலைப் பிரதேசங்கள் பற்றி மிகப் பருண்மையான ஆய்வுகளை ஆந்திர மாநில போலீசும் வனத்துறையும் எண்பதுகளிலேயே செய்து முடித்து விட்டனர். இப்பகுதிகளைப் பற்றிய புவியியல் அறிவு மாத்திரமின்றி, மிகப் பரந்துபட்ட அளவிலான உள்ளூர் உளவு வலைப்பின்னலும் ஆந்திராவின் அதிகார வர்க்கத்துக்கு உண்டு.

செம்மரக்கட்டைகள் சட்டைப் பைக்குள் ஒளித்து வைத்து கடத்தி விடக் கூடிய சமாச்சாரம் இல்லை. காட்டுக்குள் வெட்டப்படும் செம்மரங்களை துண்டுகளாக்கித் தலைச்சுமையாகவோ, மாட்டு வண்டிகள் மூலமாகவோ டிரக்குகளுக்குக் கொண்டு வர வேண்டும். அந்த டிரக்குகளை வனத்துறை, சுங்கத்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் செக் போஸ்டுகளைத் தாண்டி வெளியே கொண்டு வர வேண்டும்.

செம்மரம் அறைக்கலன்கள்
மருந்து பொருட்கள், அறைக்கலன்கள், இசைக் கருவிகள் செய்ய செம்மரம் சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது .

செம்மரக்கட்டைகளுக்கு சீனாவின் கள்ளச் சந்தையில் நல்ல விலையுண்டு என்பதால், அவை சென்னைத் துறைமுகத்தின் மூலமோ, மும்பை துறைமுகத்தின் மூலமாகவோ அனுப்புகிறார்கள். அல்லது கோடியக்கரை வழியாக இலங்கைக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து சீனாவுக்கு அனுப்புகிறார்கள். இந்த வழித்தடங்கள் நெடூக போலீசு, கலால்துறை, சுங்கத்துறை, துறைமுகம், வருவாய்த்துறை உள்ளிட்ட ஏராளமான அரசுத் துறைகளின் கண்காணிப்பு உண்டு.

கடந்த பதினைந்தாண்டுகளில் கடத்தப்பட்ட மொத்த செம்மரக்கட்டைகளில் பத்தில் ஒரு பங்கைத் தான் கைப்பற்றியிருப்பதாக ஆந்திர அதிகார வர்க்கத்தினர் தெரிவிக்கின்றனர் – அதன் அளவு மட்டுமே 10,000 டன்கள். எனில், 90 சதவீத செம்மரக் கட்டைகள் அரசின் கண்ணில் மண்ணைத் தூவி கடத்தப்பட்டனவா?

செம்மரக் கடத்தல் நடக்கும் முறையைப் புரிந்து கொள்வோம்.

செம்மரக் கடத்தல் என்பது நான்கு வெவ்வேறு செயல் அடுக்குகளின் (Operational Layers) ஒத்திசைவோடு நடக்கிறது. இதில் மரத்தை வெட்டுகிறவர்கள் கீழ்மட்ட அடுக்காக வருகிறார்கள். மரத்தைச் சாய்த்து, அதைத் துண்டுகளாக்கி டிரக்குகளுக்கு கொண்டு செல்லும் வேலையை முதல் அடுக்கில் வரும் கூலித் தொழிலாளர்கள் செய்கிறார்கள். இந்த டிரக்குகளை அரசின் பல்வேறு செக்போஸ்டுகளைக் கடந்து ஏற்றுமதி செய்பவரின் கையில் ஒப்படைக்கும் வேலை இரண்டாவது அடுக்கு.

செம்மரக் கடத்தல்
செம்மரக் கடத்தல் என்பது நான்கு வெவ்வேறு செயல் அடுக்குகளின் (Operational Layers) ஒத்திசைவோடு நடக்கிறது.

இரண்டாவது அடுக்கில் மூன்று உள்வேலைப் பிரிவினைகள் உள்ளன. முதலில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் டிரக் செல்ல வேண்டிய வழித்தடத்தில் சென்று தோதான அதிகாரிகள் தான் செக் போஸ்டில் இருக்கின்றனரா என்பதை உத்திரவாதப்படுத்திக் கொள்கிறார். அவரைத் தொடர்ந்து, குறைந்த எடையோடு ஒரு லோடு முன்னே செல்கிறது. இவ்வாறு குறைந்த செல்லும் லோடை சிலவேளைகளில் கணக்குக் காட்டுவதற்காக அதிகாரிகள் பிடித்து வைத்துக் கொண்டு மற்ற வண்டிகளைக் கடந்து செல்ல அனுமதிக்கிறார்கள்.

டிரக்குகளின் மூலம் மூன்றாவது அடுக்காக செம்மரக் கட்டைகள் ஏற்றுமதி செய்பவர்களிடம் வந்து சேர்கிறது. நான்காவதாக, இம்மூன்று அடுக்குகளையும் மேலிருந்து இயக்கும் வேலையை செம்மர மாஃபியா கும்பல் கட்டுப்படுத்துகிறது. இந்த மாஃபியா கும்பலின் தலைமையில் ஆந்திராவின் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த செல்வாக்கு மிகுந்த கம்மா மற்றும் ரெட்டி சாதியைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளனர்.

செம்மரக் கடத்தல்
இந்தக் குற்றக் கும்பல்கள், தமக்குள் தெளிவான வேலைப் பிரிவினைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகின்றன.

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மாஃபியா கும்பலைப் போல் செயல்படும் இந்தக் குற்றக் கும்பல்கள், தமக்குள் தெளிவான வேலைப் பிரிவினைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகின்றன. தமிழகத்தின் மலைகிராமங்களைச் சேர்ந்த ஆதிவாசிப் பழங்குடியினரை கூலித் தொழிலாளர்களாக அழைத்து வரும் பொறுப்பை அதற்கான ஏஜெண்டுகள் கவனித்துக் கொள்கிறார்கள். இந்த ஏஜெண்டுகளுக்கு தமிழகப் பகுதியில் உள்ள உள்ளூர் அரசியல் ரவுடிகளோடு நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இத்தகைய மரங்களை வெட்டும் தேர்ச்சியும், அனுபவமும் தமிழக தொழிலாளிகளுக்கு அதிகமுள்ளதும் மாற்று வேலை வாழ்க்கை இல்லையென்பதும் இம்மக்கள் இத்தொழிலை துணிந்து மேற்கொள்ள முக்கிய காரணமாகும்.

தமிழகத்தின் வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் சேலம் சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள பகுதிகளைச் சேந்த சர்வ கட்சிகளையும் சேர்ந்த உள்ளூர்த் தலைவர்கள் தத்தமது பகுதிகளில் இருந்து கூலித் தொழிலாளர்களை அமர்த்திக் கொடுக்கிறார்கள். அதற்கான கமிஷனாக பெரும் தொகையைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.

செம்மரக் கடத்தல் மாஃபியா கும்பலின் அடுத்த வேலைப் பிரிவு வனத்துறை, காவல்துறை, சுங்கத்துறை, மற்றும் துறைமுக அதிகாரிகளை விலைக்கு வாங்கி அதிகார மட்டத்தில் தமக்குத் தோதானவர்களை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது. அடுத்து மாஃபியா கும்பலின் தலைவனுக்கு நெருக்கமான குழுவொன்று மொத்த வேலைகளையும் மேலிருந்து வழிகாட்டி இயக்குவது மற்றும் நிதி விவகாரங்களைக் கவனித்துக் கொள்கிறது.

சேஷாச்சலம் வனப்பகுதி
2013 மற்றும் 2014 காலப்பகுதியில் இதே சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல்காரர்களை ஒடுக்குவது என்ற பேரில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 11 கூலித் தொழிலாளிகள் போலி மோதல்களில் கொல்லப்பட்டனர்.

செம்மரக் கடத்தல் கும்பலின் செயல்பாட்டு முறைகள் (Modus Operandi) பற்றி பட்டியலிடப்படாத பழங்குடியினருக்கான தேசிய மனித உரிமை இயக்கத்தின் (National Campaign for DNT Human Rights (NCDNTHR) ஏற்பாட்டில் 2014-ல் வெளியான உண்மையறியும் குழுவொன்றின் அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

2013 மற்றும் 2014 காலப்பகுதியில் இதே சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல்காரர்களை ஒடுக்குவது என்ற பேரில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 11 கூலித் தொழிலாளிகள் போலி மோதல்களில் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 2000 கூலித் தொழிலாளிகள் செம்மரக் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் ஆந்திரத்தின் பல்வேறு சிறைகளில் அடைபட்டிருந்தனர் (இன்றைக்கு இந்த எண்ணிக்கையோடு மேலும் சில நூறு பேர் இணைந்திருக்க கூடும்)

குறிப்பாக 2014 மே, ஜூன் மாதங்களில் மட்டும் ஏழு பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவங்களை ஒட்டி NCDNTHR மேற்படி உண்மை அறியும் குழுவை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்தப் படுகொலைகள்?

சேஷாச்சலம் வனப்பகுதியில் நடக்கும் போலி மோதல் கொலைகளுக்கு அடிப்படை காரணம் என்ன? கடத்தலைக் கட்டுப்படுத்துவது யார் என்பதற்காக மாஃபியா கும்பல்களுக்கு இடையே நடக்கும் போட்டியே முதன்மையானது.

சேஷாச்சலம் வனப்பகுதி ஆந்திராவின் நெல்லூர், கடப்பா, கர்நூல், சித்தூர் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கி தமிழத்தின் ஜவ்வாது மலை வரை நீள்கிறது. செம்மரங்கள் உலகிலேயே இப்பகுதியில் மட்டுமே விளைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் அரிய வகைக் கலைப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.

செம்மரப் பொருட்கள்
அரிய வகைக் கலைப் பொருட்கள் செய்யப் பயன்படும் செம்மரங்கள்.

செம்மரங்களின் அரிய தன்மையும் குறைவாகக் கிடைப்பதும் சந்தையில் அதன் தேவையை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் டன் ஒன்றுக்கு 27 லட்சம் ரூபாய் வரை விலைபோகும் செம்மரம், சீனாச் சந்தையில் 50 – 80 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. 2000-வது ஆண்டில் அருகி வரும் தாவரவியல் பட்டியலில் செம்மரம் இணைக்கப்பட்ட பின், அதன் எல்லாவகை ஏற்றுமதியும் வர்த்தகமும் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது.

இரண்டாயிரங்களின் துவக்கத்தில் ஆந்திராவின் செல்வாக்கு மிகுந்த ரெட்டி மற்றும் கம்மா ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் தங்கள் முதலீடுகளைக் கொட்டியிருந்தனர். 2007-ல் துவங்கிய பொருளாதார மந்த நிலை ரியல் எஸ்டேட் தொழிலை கடுமையாக பாதித்தது. தங்களது முதலீடுகள் மொத்தமும் நிலத்தில் முடங்கி விட்ட நிலையில், ஆந்திராவின் அரசியல் ரவுடிகளின் பார்வை செம்மரங்களை நோக்கித் திரும்பியது.

ஏற்கனவே தம்மிடம் உள்ள குற்ற கும்பல் வலைப்பின்னலையும் அரசு அதிகார மட்டத்தில் தமக்கிருந்த செல்வாக்கையும் செம்மரக் கடத்தலுக்கு பயன்படுத்திக் கொண்டனர். இந்தக் கும்பல்களில் பிரதானமானது பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி (peddyreddi Ramachandra Reddy) என்பவர் தலைமையில் இயங்கிய கும்பலாகும். இவருக்கு போட்டியாக கிஷோர் குமார் ரெட்டியின் கும்பல் இயங்கி வந்தது. இவ்விரு மாஃபியா கும்பல்களைத் தவிர வேறு சில குற்ற கும்பல்களும் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்தன.

கிஷோர் குமார் ரெட்டி, கிரண் குமார் ரெட்டி
கிஷோர் குமார் ரெட்டி, கிரண் குமார் ரெட்டி (ராமச்சந்திர ரெட்டியின் போட்டி கும்பலை இயக்கும் கிஷோர் குமார் ரெட்டி முன்னாள் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியின் தம்பி)

தனது கல்லூரி காலத்திலிருந்தே சந்திரபாபு நாயுடுவின் அரசியல் எதிர் முகாமில் செயல்பட்டு வந்த நாயுராமச்சந்திர ரெட்டி தற்போது YSR காங்கிரசின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர், முன்பு ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது வனத்துறை அமைச்சராக இருந்தார். ராமச்சந்திர ரெட்டியின் போட்டி கும்பலை இயக்கும் கிஷோர் குமார் ரெட்டி முன்னாள் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியின் தம்பி.

பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டிக்கு ராயலசீமாவின் மூன்று மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் நல்ல செல்வாக்கு உண்டு. ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையின் கீழ் இயங்கி வரும் ராமச்சந்திர ரெட்டியை தனது தெலுங்கு தேசம் கட்சிக்கு இழுத்துக் கொண்டால் இம்மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள முடியும் என்பது சந்திரபாபு நாயுடுவின் கணக்கு. 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் நடந்த போலி மோதல் கொலைகள் இந்தப் பின்புலத்தில் ராமச்சந்திர ரெட்டிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே நடத்தப்பட்டன.

இவ்விரு குழுக்கள் தவிர தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வட்டார தளபதிகள் தலைமையின் கீழ் இயங்கும் சிறிய குழுக்களும் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்தன. இந்த வெவ்வேறு குழுக்களும் அரசு அதிகார மட்டத்தில் தமது செல்வாக்கின் கீழ் இயங்கும் பிரிவினரை ஏற்படுத்தி வைத்திருந்தனர். இதற்காகவே லட்சக்கணக்கில் லஞ்சப்பணம் அரசு எந்திரத்தின் பற்சக்கரங்களுக்கிடையே மசகு எண்ணை போல் கொட்டப்பட்டுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

சீமாந்திராவின் தென்பகுதியைச் சேர்ந்த அரசு எந்திரம் செம்மரக் காசில் மூழ்கிக் கிடக்கிறது. தமது போட்டி கும்பல் காட்டில் புகுந்து மரம் வெட்டுவதை அறிந்தால் அதை போலீசு மற்றும் வனத்துறையில் உள்ள தமது விசுவாசிகள் பிரிவை வைத்துத் தடுப்பதும், எதிரணிக்கு விசுவாசமான அதிகாரிகளை விலைக்கு வாங்குவதுமான கழுத்தறுப்புப் போட்டிகள் இரண்டாயிரங்களின் இறுதி ஆண்டுகளில் வேகமெடுத்தது.

ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பின் ஆட்சியதிகாரத்தின் துணையை ராமச்சந்திர ரெட்டி இழக்கிறார். கிரண் குமார் ரெட்டி பதவிக்கு வந்ததும் தனது வனத்துறை அமைச்சர் பதவியை இழக்கிறார். எனினும், இருப்பதிலேயே பெரிய மாஃபியா கும்பல் என்ற முறையில் அரசு நிர்வாக எந்திரத்தில் ஏற்கனவே இவருக்கு நெருக்கமாக இருக்கும் அதிகாரிகளை ஓரளவுக்குப் பராமரித்து வந்துள்ளார்.

கிரண்குமார் ரெட்டியின் தம்பி கிஷோர் குமார், ராமச்சந்திர ரெட்டிக்கு விசுவாசமான அதிகாரிகளை தனக்கு விசுவாசமானவர்களைக் கொண்டு பதிலீடு செய்துள்ளார். இந்த அதிகாரிகளைக் கொண்டு ராமச்சந்திரனின் ’தொழிலை’ கட்டுப்படுத்தி கையகப்படுத்த முனைந்துள்ளார். கடத்தலை தடுக்க வரும் அதிகாரிகளோடு ராமச்சந்திர ரெட்டியின் ஏஜெண்டுகள் பேசி சிலரை விலைக்கு வாங்கியுள்ளனர் – அப்படி படியாதவர்களை மிரட்டியுள்ளனர்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இந்த தொழில் போட்டியின் பின்னணியில் தான் இரண்டு வனக்காவலர்கள் 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ராமச்சந்திர ரெட்டிக்காக மரம் அறுக்கச் சென்ற தொழிலாளர்களை தனது விசுவாச போலீசைக் கொண்டு போலி மோதல்களில் கொன்று கணக்குத் தீர்த்துள்ளார் கிஷோர் குமார் ரெட்டி.

தற்போது நடந்துள்ள போலி மோதல் கொலைகளும் இக்கடத்தலை கட்டுப்படுத்துவது எந்த மாஃபியா கும்பல் என்ற போட்டியின் பின்னணியிலேயே நடந்துள்ளது. ஆனால் இந்த குற்றக் கும்பல்களின் போட்டி என்பது கீழ் நிலையில் உள்ள தொழிலாளிகளைக் கொன்று மட்டும் நடந்துள்ளது.

ரெட்டி மற்றும் கம்மா சாதியைச் சேர்ந்த கும்பல்களே ஆந்திராவின் அரசியல் செல்வாக்கைக் கைப்பற்றுவதற்கான கழுத்தறுப்புப் போட்டியில் இறங்கியுள்ளன. பலமான சமூக பொருளாதார செல்வாக்கு மிக்க பழைய நிலபிரபுக்களான இவர்கள், ரியல் எஸ்டேட் முதல் கணிம வளக் கொள்ளை வரை அனைத்து விதமான மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு தமக்கென சொந்தமாக ஆயுமேந்திய குற்ற கும்பல்களையும் பராமரித்து வருகின்றனர்.

சேஷாச்சலம் வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் போலி மோதல் கொலைகள் இந்த மாஃபியா கும்பலின் சீருடையணிந்த பிரிவாக போலீசும் இணைந்து கொண்டதைக் குறிக்கிறது. ஆனால் தேசிய ஊடகங்களும், சமூக வலைத்தளங்களில் வாந்தியெடுத்து வரும் காக்கி நிற மூளை கொண்ட சில மண்டை வீங்கிகளும் நடந்த கொலைகள் காடுகளைக் காப்பாற்ற நடந்தவை என்றே சொல்கின்றனர்.

உண்மையில் காடுகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால், வனப்பாதுகாப்புச் சட்டத்தின் ஷரத்துகளைத் திருத்தி, இந்தியாவெங்கும் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளையும் மலைகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் சுரண்டலுக்கும் சூறையாடலுக்குமாக திறந்து விட்டுள்ளவர்களை அல்லவா என்கவுண்டர் செய்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் சேஷாச்சலம் வனத்தைக் காப்பாற்ற ராமச்சந்திர ரெட்டியையும், கிஷோர் குமார் ரெட்டியையும் இன்ன பிற கும்பல்களின் தலைமைகளில் இருக்கும் கம்மா மற்றும் ரெட்டிகளையும் அல்லவா போட்டுத் தள்ளியிருக்க வேண்டும். அப்பாவிக் கூலித் தொழிலாளிகள் செய்த பாவம் என்ன?

எஸ்.கே.பி கருணா
எஸ்.கே.பி கருணா – என்ஜினியரிங் கல்லூரி நடத்தும் கல்வி வியாபாரியான இவர், சீட்டுக்கு ஒரு லட்சம் அடித்தால் முன்னூறு சீட்டுக்கு மூன்று கோடி.

அவர்கள் அனைவரும் பணத்தாசை பிடித்தவர்கள் என்று எழுதுகின்றன பார்ப்பன கொழுப்பேறிய தேசிய ஊடகங்கள். ஜெயமோகனின் புரவலர்களில் ஒருவரும் தி.மு.கவில் இருந்து கொண்டு சுயநிதிக் கல்லூரி தொழிலை நடத்தும் எஸ்.கே.பி கருணா நாளொன்றுக்கு இவர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது என்று வியக்கிறார். மேலும் இறந்த இருபது பேர்களுக்கும் நினைவகங்கள் திறப்பார்களா என்று எக்காளத்துடன் கேட்டு ஜெய்ஹிந்தோடு முடிக்கிறார்.

என்ஜினியரிங் கல்லூரி நடத்தும் கல்வி வியாபாரியான இவர், சீட்டுக்கு ஒரு லட்சம் அடித்தால் முன்னூறு சீட்டுக்கு மூன்று கோடி. இத்தகைய ‘சாமர்த்தியம்’ திருவண்ணாமலை விறகு வெட்டும் தொழிலாளிகளுக்கு இருந்தால் அவர்கள் ஏன் ரிஸ்க் எடுத்து விற்கு வெட்ட போக வேண்டும்? கருணா மட்டுமின்றி வேறு சிலரும் சமூக வலைத்தள ’பிரபலங்களும்’ இவ்வாறாக பிதற்றித் திரிகின்றனர்.

போகட்டும்.

வெவ்வேறு ஊடகங்களில் கூலித் தொழிலாளர்களின் ஊதியமாக வெவ்வேறு கணக்குகள் சொல்லப்படுகின்றன. வெட்டப்பட்ட செம்மரத்தின் எடையைக் கணக்கிட்டு ஒரு கிலோவுக்கு 700 ரூபாய் வரை வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. எனினும், இந்தக் காசில் ஜவ்வாது மலைப்பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியினக் கூலித் தொழிலாளிகள் கட்டிய கோட்டைகள் எத்தனை, வாங்கிய ஆடி கார்களின் எண்ணிக்கை என்ன, சுற்றுலா சென்ற நாடுகள் எவ்வளவு என்னவென்றெல்லாம் யாரும் சொல்லவில்லை.

தமிழ் தேசிய தேங்காய் மூடி பாகவதர்கள்
தமிழ் தேசிய தேங்காய் மூடி பாகவதர்களான இவர்கள், இந்தக் கொலையை தங்களுக்குப் பிடித்தமான “வடுக வந்தேறி” சட்டகத்துக்குள் அடைக்க முற்படுகின்றனர்.

உண்மையில், விவசாயம் பொய்த்துப் போய் பிழைப்புக்கான பிற வழிவகைகள் அடைபட்டுப் போன நிலையிலேயே தங்கள் உயிர்களை சில ஆயிரங்களுக்காக பணயம் வைக்கத் துணிந்துள்ளனர். இந்த ’வேலையும்’ மாதத்தின் எல்லா நாட்களும் கிடைக்க கூடியதில்லை. ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு அல்லது மூன்று நாட்கள் மாஃபியா கும்பல் நடத்தும் ‘ஆப்பரேஷன்களுக்காக’ ஏஜெண்டுகளால் அழைத்துச் செல்லப்படுவார்கள். ஒரு முறை சென்று வந்தால் கிடைக்கும் தொகையைக் கொண்டு மறுமுறை செல்லும் வரை பட்டினியைத் தவிர்த்துக் கொள்ள முடியுமே தவிர பணக்காரர்கள் ஆகிவிட முடியாது.

அடுத்து, நடந்துள்ள போலி மோதல் கொலைகளை வைத்து வறண்டு போன தங்கள் அரசியல் வாழ்க்கையை வளமாக்க முடியுமா என்ற கோணத்தில் சில சிந்தாந்த ஓட்டாண்டிகள் சிந்திக்கின்றனர். பெயர் பலகை அமைப்புகளை நடத்தி வரும் தமிழ் தேசிய தேங்காய் மூடி பாகவதர்களான இவர்கள், இந்தக் கொலையை தங்களுக்குப் பிடித்தமான “வடுக வந்தேறி” சட்டகத்துக்குள் அடைக்க முற்படுகின்றனர்.

மேற்படி தேங்காய் மூடி தமிழினவாத கோஷ்டிகள், பரமக்குடியில் தமிழனைக் கொன்றது – நாய்க்கன்கொட்டாயில் குடிசைகளைக் கொளுத்தியது வடுகர்களா தமிழர்களா என்று தமது முந்தைய கச்சேரிகளில் சரியாக விளக்கவில்லை. பழைய பாக்கியே மீதமிருக்கும் போது தற்போதும், ஆந்திர ரெட்டிகள் தமிழகப் பகுதியில் உள்ள தமது தமிழ்ச்சாதி கூட்டாளிகளின் துணையோடு தான் கூலித் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

“வடுகர்கள்” வெட்டிய மரணக்குழிக்குள் தமிழ்ப் பிள்ளைகளைத் தள்ளிவிட்ட மற்ற ஆதிக்க சாதித் தமிழ்ப்பிள்ளைகளை என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழ்தேசிய தேங்காய்மூடிகள் விளக்க வேண்டும். வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களின் மலைப் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் உள்ளூர் பிரமுர்களில் பலர் செம்மரக் கடத்தல் கும்பல் படியளந்த இரத்தப்பணத்தை ருசித்தவர்கள் தான்.

தேங்காய் மூடி பாகவதர்கள் பெரிதும் பொருட்படுத்தத் தக்கவர்கள் இல்லையென்றாலும், எழவு வீட்டிலும் பொறுக்கித்தின்ன முயலும் அவர்களது அரசியல் கழிசடைத்தனம் காறித் துப்பத் தகுந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இயற்கை வளத்தைச் சூறையாட அரசியல் குற்ற கும்பல்களுக்கு இடையே நடக்கும் போட்டியின் விளைவே இப்படுகொலைகள். தமிழகத்தின் ஆறுகளுக்கும் ஆற்று மணலுக்கும் கிரானைட் மலைகளுக்கும் மத்திய இந்தியாவின் தாது மலைகளுக்கும் நேர்ந்தது என்னவோ அதுவே சேஷாச்சலம் காட்டிற்கும் நடக்கிறது.

இங்கே மணற் கொள்ளையர்களும், வைகுண்டராசனும், பி.ஆர்.பி.யும் எப்படி தமிழகத்தை காயடித்து கோடிகள் பலவற்றை சுருட்டி அதிகாரத்துடன் உலா வருகிறார்களோ அது போலவே ஆந்திரத்து கம்மா, ரெட்டி முதலாளிகள் உலா வருகின்றனர். இவர்கள் போட்டிக்கு தமிழக தொழிலாளிகள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த இறப்புகள் ஏற்படுத்தியிருக்கும் மனிதாபிமானத்தின் ஆயுசு சொற்பமானது – நாம் இதன் பின் உள்ள அரசியலைப் புரிந்து கொள்வதோடு இச்சாவுகளுக்கான ஆணிவேரைப் பிடுங்கியெறிய வேண்டும். மக்களைக் காப்பாற்றுவதைத் தனது கடமையாகச் சொல்லிக் கொள்ளும் காவல் துறை தனக்கென விதிக்கப்பட்ட கடமையை ஆற்றாததோடு மாஃபியா கும்பலின் அங்கமாக மாறி மக்களைக் கொல்லும் கொலைக் கருவியாக சீரழிந்துள்ளது.

கடத்தலைத் தடுத்திருக்க வேண்டிய அரசின் ஒவ்வொரு துறையும் கடத்தல் கும்பலின் விசுவாசமான பிரிவுகளாக மாறிவிட்டிருக்கின்றன. மக்களைக் கொல்லும் இந்த அரசு கட்டுமானத்தை இனியும் நம்பிப் பலனில்லை. மக்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதோடு மக்கள் விரோதிகளைத் தாங்களே கணக்குத் தீர்ப்பது ஒன்றே இது போன்ற படுகொலைகள் இனிமேலும் நடக்காமல் தடுக்கும்.

அப்போது மட்டுமே நமது தொழிலாளிகள் மட்டுமல்ல, நாட்டின் இயற்கை வளத்தையும் காப்பாற்ற முடியும்.

–    தமிழரசன்.

மேலும் படிக்க:

CRP தொழிலாளர் போராட்டம் – பு.ஜ.தொ.மு தீவிரவாத சங்கமா ?

1

டந்த மார்ச் மாதம் 12-ம் தேதி முதலாக நடந்து கொண்டிருக்கும் CRP தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் 07-04-2015 அன்று மாலை 5.30 மணியளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் தலைமையில் கண்டனக்கூட்டம் நடத்தப்பட்டது. இணைப்பு, கிளைச் சங்கத் தொழிலாளிகள் மற்றும் உழைக்கும் மக்கள் கலந்து கொண்டனர்.

சி.ஆர்.பி வேலைநிறுத்தம்

கூட்டத்தில் CRP தொழிலாளிகளின் உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்து, SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் ஆறுமுகம் உரையிலிருந்து :

“CRP தொழிலாளிகள் செய்த ஒரே தவறு என்னவெனில், சட்டத்தை நம்பி நீதிமன்றம், கோர்ட், தொழிலாளர் துறை என்று சென்றதுதான். இந்த கோர்ட் நீதிமன்றம், போலிசு அனைத்துமே முதலாளிகளுக்கு சேவை செய்பவைதான். நாங்கள் எங்கள் சங்க கோரிக்கைகளுக்காக04-09-2008-ல் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தை, வீரியமிக்கதாகவும், பலதரப்பட்ட உழைக்கும் மக்களை சென்று சேரும் வகையிலும் கட்டியமைத்தோம். இது  போன்ற போராட்டங்களை செய்வதன் மூலமாகத்தான் முதலாளித்துவ அடக்குமுறைகளை வெல்ல முடியும்”

கெமின் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் ராஜேஷ் பேச்சிலிருந்து

“இரண்டு வருடத்துக்கு முன்னால் எங்களது ஆலை நிர்வாகத்தை எதிர்த்து நாங்கள் பு.ஜ.தொ.மு தலைமையில் போராடிய போது இத்தனைப் பெரிய கூட்டத்தை கூட்டமுடியவில்லை. ஆனால் இரு வருடம் கழித்து ஒரு தொழிற்சங்க போராட்டத்துக்காக 300 தொழிலாளர்களை கூட்டி கூட்டம் நடத்த முடியுமென்பது, பு.ஜ.தொ.மு வின் போராட்டப் பாதை சரியானது என்பதையும், முதலாளித்துவ அடக்குமுறைக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவதே சரியானது என்பதையே காட்டுகிறது.”

CRP தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் வினோத் உரையில் :

“அண்ணா தொழிலாளர் சங்கம் என்கிற கைக்கூலி சங்கத்தில்தான் இருக்க வேண்டுமென நிர்வாகம் கூறுகிறது. அது தொழிலாளிகளுக்கு ஏற்புடையதல்ல என்பதால் நாங்கள் தனிச் சங்கம் துவங்கி பு.ஜ.தொ.மு-வில் எங்களை இணைத்துக் கொண்டோம். அது தீவிரவாத சங்கமா துரோக சங்கமா, தொழிலாளிகளுக்கு நல்லது செய்யுமா செய்யாதா என்பதை குறித்து முடிவு செய்ய வேண்டியது நாங்கள் தான்.

நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்திவிட்டோம். வருவாய் துறையின் அனைத்து கதவுகளையும் தட்டிவிட்டோம். ஆனால் இதுவரை யாருமே எங்கள் கோரிக்கைக்கு செவிமடுக்கவோ, பேசித் தீர்க்கவோ முன்வரவில்லை. ஜனநாயக முறைப்படியான அனைத்து போராட்டமும் நடத்தப்பட்டாகி விட்டது. இனி என்ன செய்ய வேண்டுமென முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான்”.

கிரீவ்ஸ் காட்டன் (GREAVES COTTON) தொழிலாளர் சங்க செயலாளர் தோழர் ஆறுமுகச் செல்வன் பேச்சிலிருந்து

“நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து நாங்கள் என்ன போராட்ட வடிவங்களை கையாண்டோமோ அதையே தான் இன்று CRP தொழிலாளர்களின் செய்து வருகின்றனர். முதலாளித்துவ அடக்குமுறை என்பது காலந்தோறும் தீவிரமாகி வருகிறது. இதற்கெதிராக அனைத்து தொழிலாளர்களும் போராட வேண்டும். CRP தொழிலாளர்களின் போராட்டத்துக்கு எமது சங்கம் தற்போது ஆதரவளிப்பதைப் போலவே தொடர்ந்து ஆதரவளிக்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்”.

லைட்விண்ட் ஸ்ரீராம் (LITEWIND SHRIRAM) சங்க செயலாளர் தோழர் மீன் பகதூர்  உரையில் :

“நாங்கள் தற்போது தான் புதிதாக பு.ஜ.தொ.மு சங்கத்தில் இணைந்தோம். நாங்கள் சங்கம் துவக்கிய அடுத்த 10 நாட்களில் நிர்வாகம் INTUC சங்கத்தை துவங்கியுள்ளது. என்ன கோரிக்கை என்று கூட கேட்காமல் நிர்வாகம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஒரு போராட்டத்தில் இறங்கி விட்டால் துணிந்து செய்ய வேண்டும். போராட்டத்தில் இறங்குமுன் பல முறை சிந்திக்கலாம். ஆனால் இறங்கியபின் வீரியமாக போராடி ஜெயிக்க வேண்டும். அந்த வகையில் போராடும் CRP தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்”.

கூட்டத்தில் உரையாற்றியவர்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி சுதேஷ் குமார் பேச்சிலிருந்து:

“புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தீவிரவாத சங்கமென்றும், வன்முறையை தூண்டுகிறதென்றும் பேசி வருகிறார்கள். ஆனால் நியாயமான உரிமைக்காக போராடிவரும் CRP தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமையை மறுத்து, தொழிலாளர்களைப் பழிவாங்கி தினம் தினம் அவர்களின் மீது அடக்குமுறையை ஏவி வரும் நிர்வாகம் செய்வது வன்முறையில்லையா?” என்ற கேள்வியோடு துவங்கி, “நிர்வாகம், பால்வளத்துறை அமைச்சரிடம் சென்று தங்களது குறையை மண்டியிட்டு அழுது, மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் ஆட்களை பிடித்து வேலைக்கு அழைத்து வருவதாக எங்களுக்கு செய்தி கிடைத்துள்ளது. ஒருவேளை அந்த செய்தி உண்மையாக இருந்தால் ‘அக்ரி‘ கிருஷ்ணமூர்த்திக்கு என்ன நிலைமை உண்டானதோ அதே நிலை உண்டாகக்கூடும். பு.ஜ.தொ.மு-வை பற்றி அமைச்சருக்கும் தெரியும், அவரிடம் சென்று அழுது முறையிட்ட நிர்வாகத்துக்கும் தெரியும்.”

“இந்த கும்மிடிப்பூண்டியில் இது வரை எத்தணையோ கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடி முதலாளிக்கு எதிராகப் போராடுங்கள் என்று தைரியமூட்டி நிதியளித்த ஒரு கூட்டத்தை பார்த்திருக்கிரீர்களா? அது தான் பு.ஜ.தொ.முவுக்கும் மற்ற ஓட்டு கட்சிகளுக்கும் இருக்கின்ற வித்தியாசம்.

சி.ஆர்.பி வேலைநிறுத்தம்ஆலைக்குள் மட்டுமல்ல, ஆலைக்கு வெளியிலும் நிர்வாகத்துக்கு ஆதரவாக இருக்கும் அரசை எதிர்த்து நாம் போராட வேண்டியுள்ளது.

போராட்டம் தாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு. ஆசான் மார்க்ஸிடம் அவரது மகள் எலியனார் மார்க்ஸ் ஒரு முறை, “மகிழ்ச்சி என்றால் என்ன?” என்று கேட்ட போது, “போராட்டம் தான் மகிழ்ச்சி” என்றார் மார்க்ஸ். உதாரணத்துக்கு SRF உள்ளிருப்புப் போராட்டத்தை எடுத்துக்கொண்டாலும் கூட, வெறும் 23 தொழிலாளிகளைக் கொண்டு துவங்கிய போராட்டம் அடுத்த 10 நிமிடத்தில் 200 பேர் கலந்து கொண்ட போராட்டமானது.

தொழிற்சங்க பிரச்சனைகளுக்காக மட்டும் போராட்டம் நடப்பதில்லை. இன்றைய தேதியில் மேகதாது அணைக்கெதிரான போராட்டம், மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம், நாம் கண்டனக்கூட்டம் நடத்தும் இந்த இடத்திலும் கட்டிடங்கள் இடிக்கப்பட்டதற்காக வியாபாரிகள் போராடினார்கள். ஆக போராட்டமென்பது மனித வாழ்வில் பிரிக்க முடியாதது.

முதலாளிகளுக்கு எதாவது பிரச்சனை என்றால் நமது பிரதமர் மோடியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஊர் ஊராக நாடு நாடாக ஓடி, குறைந்த பணத்துக்கு தொழிலாளிகள் கிடைபார்கள் எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என்று கூவி கூவி அழைத்தாலும் ஒருவனும் வருவதாக இல்லை. ஒபாமாவை அழைத்து வந்து விருந்தளித்து, அவரது மனைவிக்கு புடைவை பரிசளித்து என்னென்னவோ செய்து பார்த்து விட்டார் மோடி. ஆனால் என்றும் நடக்கவில்லை.

விவசாய நண்பன் என்று கூறிக்கொண்டு, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது, உரத்துக்கான மானியத்தை தர மறுப்பது, இவர் ஆட்சிக்கு வந்த பின் தான் மணலி உரத் தொழிற்சாலை மூடப்பட்டது. “நான் இங்கு நிலத்துடன் இருக்கிறேன். நீ அங்கு நிலத்துடன் இருக்கிறாயா” என்று விவசாயிகள் தங்களுக்குள் கடிதமெழுதிக்கொள்ளும் அளவுக்கு விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மட்டுமல்ல, இந்நாட்டில் உள்ள அனைத்து பிரிவினரும் பாதிக்கப்படுகின்றனர். வணிகர்களுக்கு வால்மார்ட், மாணவர்களுக்கு கல்வி மறுப்பு, சாதி மத ரீதியான ஒடுக்குமுறை என அனைத்து தளங்களிலும் உழைக்கும் மக்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தீவிரப்படுத்தப்படும் தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தினுடைய விளைவு இது. ஊழல், லஞ்சம், முறைகேடு என அனைத்து துறைகளிலும் இந்த அரசு ஆளத் தகுதியிழந்து சீரழிந்துள்ளது.

இந்தப் பின்னணியிலிருந்து தான் CRP தொழிலாளிகளின் போராட்டத்தை நாம் பார்க்க வேண்டுமே ஒழிய தனித்து பார்க்கக் கூடாது. இனியும் கோரிக்கை மனுக்களைக் கொடுப்பது, அடையாள ஆர்ப்பட்டம் நடத்துவது என்பதெல்லாம் காலாவதியாகி விட்டது. நமக்கான அதிகாரத்தை நாமே கையிலெடுத்துக் கொள்வது தான் தீர்வு.”

போலீஸ் கண்காணிப்பு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கிளை இணைப்பு சங்க தோழர்கள் தத்தமது சங்கங்களின் சார்பாக நிதியளித்தும், போராட்டம் முழுமைக்கும் துணை நிற்போம் என்று உறுதியளித்தும் சென்றனர். CRP நிர்வாகத்தையும், அரசையும் திரைகிழித்த இந்த கண்டன ஆர்ப்பாட்டம், பகுதி தொழிலாளிகளிடையே புது நம்பிக்கையை விதைத்துள்ளது.

சி.ஆர்.பி வேலைநிறுத்தம்
கிளை இணைப்பு சங்கங்களின் ஆதரவு

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்.

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

3

puthiya-jananayagam-postபுதிய ஜனநாயகம் ஏப்ரல் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. கல்விக் கொள்ளையர்களின் அம்மா!
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த மைய அரசு ஒதுக்கிய 4,400 கோடி ரூபாய் நிதியைப் பயன்படுத்தாமல் கரையான் தின்னவிட்டிருக்கிறது, அ.தி.மு.க. அரசு.

2. அரசு அதிகார் டி.கே.ரவி மர்மச் சாவு : இந்த வளர்ச்சிப் பாதையில் நேர்மைக்கு இடமில்லை!

3. சகாயம் : அதிகார வர்க்க சட்டவாதப் போலி போர்வீரன்!
கிரானைட் கொள்ளைகளுக்கு உடந்தையாக நிற்கும், பாதுகாக்கும் அரசு அதிகார அமைப்புக்குள்ளேயே நின்று கொண்டு அதனை வைத்தே குற்றவாளிகளைத் தண்டித்து விட முடியும், அதிகார வர்க்க சட்டமுறைப்படி நடந்துகொண்டால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று சகாயம் நம்புகிறார்.

4. முத்துக்குமாரசாமி தற்கொலை: ஏ-1 யார்? அம்மாவா? அக்ரியா?
அக்ரி கிருஷ்ணமூர்த்தி வசூலித்திருக்கும் ஒவ்வொரு காசும் அம்மாவுக்குப் போய்ச் சேரும் பணம் என்பதால் அம்மாவை விட்டுவிட்டு அவருடைய விசுவாச பி.ஏ. அக்ரியை மட்டும் குற்றவாளியாக்குவது சரியா?

5. மாட்டுக்கறி தடைச் சட்டம் : வலக்கரத்தில் கோமியம், இடக்கரத்தில் ஹாம்பர்கர்!
மாட்டிறைச்சியை முசுலீம்களுக்கு எதிரான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்-இன் நோக்கம். எனினும், இச்சட்டம் முசுலீம்களைக் காட்டிலும் விவசாயிகளையும், ஏழைகளையும், தாழ்த்தப்பட்டோரையும்தான் அதிகம் பாதிக்கிறது.

6. உ.பி. மாநிலம் : பார்ப்பன – பனியா அக்கிரகாரம்!
உ.பி. மக்கள்  தொகையில் 21% மட்டுமே உள்ள ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள் 75% அரசு மற்றும் தனியார்துறை பதவிகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.

7. ஆர்.எஸ்.எஸ்-இன் சோதனைக் கூடமாகிறதா தமிழகம்?

8. ஹாசிம்புரா படுகொலை தீர்ப்பு : முதுகில் குத்திய துரோகம்!
அப்பாவி முசுலீம்களைக் கடத்தி சென்று, படுகொலை செய்த இந்து மதவெறி போலீசு கிரிமினல்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடே வழக்கு நடத்தப்பட்டு, தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

9. “சர்வதேச மகளிர் தினத்தைக் கொச்சைப்படுத்தாதே!” – பெண்கள் விடுதலை முன்னணியின் அறைகூவல்

10. பட்ஜெட் : இந்தியாவைக் கொள்ளையடிப்போம்!
அடிக்கட்டுமான வளர்ச்சி என்ற போர்வையில் வரிப்பணத்தையும், மக்களின் சேமிப்புகளையும், நாட்டின் வளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகளின் காலில் கொட்டுகிறார், மோடி.

11. மோடி – அருண் ஜெட்லி : திருடர்கள் ஜாக்கிரதை!
“மக்களிடமிருந்து தினுசு தினுசாக எப்படிக் கொள்ளையடிக்கலாம் என ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ” – எனக் கேட்குமளவிற்கு இந்த பட்ஜெட்டில் மக்கள் மீது சுமைகள் ஏற்றப்பட்டுள்ளன.

12. கார்ப்பரேட் ‘சமூக’ப் பாதுகாப்புத் திட்டங்கள்
மோடி அரசு அறிவித்துள்ள மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எனப்படுபவையும் கூட, கார்ப்பரேட் முதலாளிகளுக்கான பாதுகாப்புத் திட்டங்கள்தான்.

13. தனியார்மயம், கார்ப்பரேட் மயம் – மருத்துவத் துறையைச் சீரழித்து வரும் நோய்கள்!
நோயினால் சாவு என்ற நிலை மாறி, நோய்க்குச் செய்த செலவால் சாவு என்ற நிலையைத்தான் மருத்துவத் துறையில் புகுத்தப்பட்டுள்ள தனியார்மயம் ஏற்படுத்தியிருக்கிறது.

14. வளர்ச்சியா, பேரழிவா?

15. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைப் பூஜைப் பொருளாக்க அனுமதியோம்!

16. காக்கி விசப்பூச்சிகள்

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.