Wednesday, September 18, 2019
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி கல்விக் கொள்ளையர்களின் அம்மா !

கல்விக் கொள்ளையர்களின் அம்மா !

-

மிழக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு மைய அரசு ஒதுக்கியிருந்த 4,400 கோடி ரூபாயை – கவனியுங்கள்; ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அல்ல – பயன்படுத்தாமல், அதனைக் கரையான் தின்ன விட்டிருக்கிறது, தமிழக அரசு. டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த திட்ட ஒப்புதல் வாரியக் கூட்டத்தில் மனித வள மேம்பாட்டுத் துறையின் இடைநிலைக் கல்வித் துறை செயலர் பிருந்தா சரூப் இது குறித்து தனது கண்டனத்தைத் தமிழக அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். பா.ம.க. நிறுவனர் ராமதாசு தமிழக அரசின் இந்த அலட்சியப்போக்கைக் கண்டித்திருக்கிறார். பினாமி ஜெயா அரசோ எதற்கும் பதிலளிக்காமல் கல்லுளிமங்கனாக உட்கார்ந்திருக்கிறது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள சன்னாசிநல்லூர்
கருவேலங்காட்டுக்குள் வகுப்பறை : அரியலூர் மாவட்டத்திலுள்ள சன்னாசிநல்லூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் அவலம்.

“தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்தின்படி 2009 முதல் 2012 வரையிலான மூன்றாண்டுகளில் தமிழகத்தில் 1,096 பள்ளிகள் புதிதாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2009-10 முதல் 2015 பிப்ரவரி வரையிலான ஆறாண்டுகளில் 125 பள்ளிகள் மட்டுமே புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. 75 பள்ளிகள் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 896 பள்ளிகளைக் கட்டுவதற்கான ஆயத்த பணிகள்கூட இன்னும் தொடங்கப்படவில்லை. 2,033 பள்ளிகளைச் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்ட பிறகும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. மாணவிகளுக்கு 44 விடுதிகளைக் கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இதுவரை 18 விடுதிகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.”

“5,265 பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 920 பள்ளிகளில் மட்டுமே இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், 1,616 அறிவியல் ஆய்வகங்கள், 1,504 கணினி அறைகள், 1,873 நூலகங்கள், 1,990 கலை/கைத்தொழில் அறைகள் கட்டுவதற்கு அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதற்கான பணிகளைத் தமிழக அரசு இன்னும் தொடங்கவில்லை.”

– இவை அனைத்தும் 4,400 கோடி நிதியைப் பெற்றுவிட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகள். அதிகார வர்க்க மெத்தனம், அலட்சியம் என்ற வழக்கமான கண்டனத்திற்குள் இதனை அடக்கிவிட முடியாது. மாறாக, இது அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டும், தனியார்மயத்திற்கு ஆதரவான தீய நோக்கத்தைக் கொண்ட சதிச் செயல், கிரிமினல் குற்றம்.

  • மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள எம்.புதுப்பட்டியில் அமைந்துள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து மாணவ, மாணவியர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள வடஅகரம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் அலங்கார வளைவுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்தாம் வகுப்பு மாணவன் அகால மரணமடைந்தான்.
  • தமிழகம் முழுவதுமுள்ள 25,200 அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளில் 10,000 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் இருபதுக்கும் மேற்பட்ட பாடங்களை இந்த இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில், ஒருவர் விடுப்பு எடுத்தாலோ அல்லது மாற்றுப் பணிகளுக்குச் சென்றுவிட்டாலோ அன்று பள்ளிக்கு ஏறத்தாழ விடுமுறைதான்.
  • ஓராசிரியர் பள்ளிகளே இருக்கக் கூடாது எனத் தமிழக அரசு கூறி வந்தாலும், வத்திராயிருப்பு அருகேயுள்ள ரெங்கபாளையம் தொடக்கப்பள்ளி, பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களும், பெற்றோர்களும் தமது பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கி வருவதைக் கண்டித்துப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
  • தமிழகத்திலுள்ள 2,600 அரசு மேநிலைப் பள்ளிகளுள் 1,400 பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப் பிரிவுக்கு ஆசிரியர்கள் அறவே நியமிக்கப்படாததால் கணினி ஆய்வகங்கள் மூடிக் கிடக்கின்றன. ஜனவரி 2014-க்குள் கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
  • தமிழகமெங்குமுள்ள 300 அரசுப் பள்ளிகள் தலைமையாசிரியர்களே இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்தக் கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த பிறகும் இப்பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையைக் கருதியாவது உடனடியாகத் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் கோரியுள்ளன.

இவை அங்கொன்றும் இங்கொன்றுமான புள்ளிவிவரங்கள் அல்ல. தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளின் அவல நிலையை எடுத்துக்காட்டும் குறுக்குவெட்டுத் தோற்றமிது. கட்டிட வசதி இல்லாமல் மரத்தடியில் நடக்கும் பள்ளிக்கூடங்கள், ஆய்வுக்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாத பள்ளிக்கூடங்கள் என ஓராயிரம் பிரச்சினைகளை அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்கின்றனர்.

கல்வி தனியார்மயம்அரசுப் பேருந்துகளை ஓட்டை உடைசலாக ஓடவைத்து அதன் மூலம் தனியார், ஆம்னி பேருந்து முதலாளிகளின் கொள்ளைக்கு உதவுவதைப் போலவே, தனியார் கல்விக்கொள்ளைக்காக அரசுப்பள்ளிகள் ஒழித்துக் கட்டப்படுகின்றன. தனியார்மயத்தை மேலும் மேலும் தீவிரப்படுத்துவதற்காகவே ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைப் படிப்படியாகக் குறைப்பது மட்டுமின்றி, மைய அரசால் ஒதுக்கப்பட்ட 4,400 கோடி ரூபாயையும் திருப்பியனுப்பியிருப்பதன் மூலம், நான் கல்வி வியாபாரிகளின் கையாள்தான் என்று ஐயந்திரிபற நிரூபித்திருக்கிறது ஜெ அரசு.

முதல்வர் பதவியில் அமர்ந்தவுடனேயே பொதுப் பாடத்திட்ட முறையைப் (சமச்சீர் கல்வி) புதைகுழிக்கு அனுப்ப முயன்று தோற்றுப் போன ஜெயா கும்பல், அரசுப் பள்ளிகளை முடிந்த மட்டும் ஒழித்துக் கட்டுவதையே தனது கொள்கையாகக் கொண்டு செயல்படுகிறது.

சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான ஏழு பள்ளிகளில் காணப்படும் குறைவான மாணவர் சேர்க்கையைக் காட்டி, அவற்றின் நிர்வாகத்தைத் தனியார்வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. போதிய மாணவர்கள் சேரவில்லை என்ற காரணத்தைக் காட்டி, தமிழகமெங்கும் ஏறத்தாழ 1,000 பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. தோசையைத் திருப்பிப் போடுவது போல, மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிட்டதைக் காட்டி 1,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இடையே கற்கும் திறனில் பெருத்த வேறுபாடு இல்லை என்பதைப் பல ஆய்வுகள் மெய்ப்பித்த பிறகும், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அரசுப் பள்ளிகளைவிட அதிகரித்துக் கொண்டே போவதற்கு பெற்றோர்களின் ஆங்கில மோகம் மட்டுமின்றி, அரசு பள்ளிகளில் காணப்படும் இந்தச் சீரழிவிற்கும் முக்கிய இடமுண்டு. இச்சீரழிவை மென்மேலும் தீவிரப்படுத்துவதன் வழியாகத் தமிழக மாணவர்களை வேகவேகமாகக் கல்விக் கொள்ளையர்களிடம் தள்ளிவிடுகிறது, மக்கள் முதல்வரின் ஆட்சி.

– குப்பன்
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________

  1. லேப்டாப் குடுத்தீங்களே, சொல்லிக் குடுக்க ஆசிரியர நியமிச்சீங்களா..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க