Wednesday, November 13, 2019
முகப்பு மறுகாலனியாக்கம் மக்கள்நலன் – மருத்துவம் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை தண்டிக்கப்படுமா ?

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை தண்டிக்கப்படுமா ?

-

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் 2008-ம் வருடம் விழுப்புரம் மாவட்டத்தில் இலவச கண்மருத்துவ சிகி்ச்சை மூலம் நடத்திய கண்புரை அறுவை சிகிச்சையால் 66 பேருக்கு நிரந்தரமாக பார்வை பறி போனது. மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் (அப்போது மனித உரிமை பாதுகாப்பு மையம்) தாக்கல் செய்த பொது நல வழக்கில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் என ரூ 66 லட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்ப்பானது.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை
22-4-15 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்ற நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்திரவிடப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டது.  இவ்வழக்கில், திருச்சி தலைமை நீதித்துறை நடுவர் திரு. ஸ்ரீதர் முன்னிலையில் 10-04-2015 அன்று வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. வரும் 22-04-2015 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்ற நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை நிர்வாகி டாக்டர் நெல்சன் ஜேசுதாசன் A1, டாக்டர் அவ்வை A2, கிறிஸ்டோபர் தாமஸ் A3, டாக்டர்  பி.அசோக் A4, டாக்டர் எம்.சௌஜன்யா A5, டாக்டர் தென்றல் பொன்னுதுரை A6, டி.ஆன்ரோஸ் A7 ஆகியோர் குற்றவாளிகளாக விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் முதன் முறையாக தவறான சிகிச்சைக்காக மருத்துவர்கள் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருப்பது இதுதான் முதன் முறை. அதனால் வழங்க இருக்கும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை அனைவரின் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை தண்டிக்கப்பட்டால் குறிப்பாக ஆங்கில மருத்துவர்கள், இதை உச்சநீதிமன்றம் அல்ல உலக நீதிமன்றம் வரை எடுத்துச் செல்வார்கள். கண் பார்வை பறி போன ஏழைகளுக்கு நீதி என்பதை காட்டிலும், மருத்துவர்கள் தண்டிக்கப்படுவது சரியா? தவறா? என்பதில் விவாதம் அனல் பறக்கும்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை
கண் பார்வை பறி போன ஏழைகளுக்கு நீதி என்பதை காட்டிலும், மருத்துவர்கள் தண்டிக்கப்படுவது சரியா? தவறா? என்பதில் விவாதம் அனல் பறக்கும்.

மருத்துவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்ரா சம்பத் அவர்கள் வாதிட்டார் “சொட்டு மருந்து கெட்டு விட்டது. மருந்து கம்பெனிதான் பொறுப்பு நாங்கள் சரியாகதான் சிகிச்சை அளித்தோம். பார்வை பறிபோனதற்கு மருத்துவர்கள்தான் காரணம் என்பதை அரசுத் தரப்பு முழுமையாக நிருபிக்கவில்லை” என்று வாதிட்டதுடன் அறுவை அரங்கம், கண்புரை சிகிச்சை, பயன்படுத்தப்படும் மருந்துகள் என மருத்துவ மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போல் நீதிமன்றத்தில் பாடம் நடத்தினார்கள்.

சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் வாதத்தில் “விழுப்புரத்தில் நடத்திய கண் சிகிச்சை முகாமிற்கு

1. இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும். வாங்கவில்லை.

2. அறுவை சிகிச்சைக்கு முன்பாக நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய இரத்த அழுத்தம், சிறு நீர், சர்க்கரை, இதய துடிப்பு போன்ற பரிசோதனைகள் எதுவும் செய்யவில்லை.

3. முகாமிற்கு வேடிக்கை பாரக்க வந்தவர்களைக்கூட வலுக்கட்டாயமாக அழைத்து வந்துள்ளனர்.

4. அறுவை சிகிச்சை செய்ய மயக்கமருந்து கொடுத்தவர் அதற்கான தகுதி பெற்ற மருத்துவர் அல்ல. ஊழியர்தான் அனைவருக்கும் மயக்கம் மருந்து ஊசி போட்டுள்ளார்.

5. 65 பேருக்கும் கண்ணில் சூடோமோனோ என்ற நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பார்வை பறி போனதுடன் சீழ்பிடித்து கடுமையான வலி, வாந்தி எற்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளின் உறவினர்களுக்கு தகவல் சொல்லவில்லை. அரசுக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். ஏன் என்றால் ஒரு கண்ணுக்கு ரூ 750 அரசிடமிருந்து பெறுகிறார்கள், ஆனால், தெரிவிக்கவில்லை. நோயாளிகளுக்கும் தெரிவிக்கவில்லை. 20 நாட்கள் கழித்து 22-8-2008 அன்று பாதிக்கபட்டவர்கள் உறவினர்களுடன் சாலை மறியல் செய்த பிறகுதான் செய்தி வெளி உலகுக்கு தெரியும்.

6. மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கம் ஸ்டெரில் செய்யப்படவி்ல்லை. ஒரே அறுவை அரங்கம்தான் அதில் 66 பேருக்கும் இடைவேளை இல்லாமல் தொடர்ந்து கண் புரை அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். ஒருவருக்கு ஏற்பட்ட நோய்த் தொற்று மற்றவருக்கும் பரவும்.

7. ஒவ்வொரு ஆப்ரேசனுக்கு பிறகும் கையுறை மாற்ற வேண்டும். 2 மருத்துவர்கள், ஒரு அசிஸ்டெண்ட், ஒரு செவிலியர் மொத்தம் 4 பேர் 66×4 266 கையுறை வேண்டும். இருப்புப் பதிவேட்டில் அவ்வாறு இல்லை.

8. அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளிக்கு ஏதேனும் சிக்கல் எற்பட்டால் அதை சமாளிக்க தேவையான எந்த முன்னேற்பாடுகளும் இல்லை.

9. அனைவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டவுடன் அவர்களை திருச்சி மருத்துவமனைக்கு மாற்றி உரிய நடவடிக்கை எடுக்காமல் ஒரே அறையில் அனைவரையும் வைத்தது அதன் வீரியத்தை அதிகப்படுத்தியுள்ளது.

10. 66 பேருக்கும் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்த ஆறுவை சிகிச்சை மதியம் 2-00 மணிக்கு முடித்து விட்டார்கள். அவ்வளவு வேகமாக நெருக்கடியாகவும் ஏன் செய்ய வேண்டும்?

11. சிகிச்சையின் போது பயன்படுத்திய ரிங்கர் லேக்டேட் என்ற திரவம் ஸ்டெரில் செய்யப்படவில்லை. ஒரு முறை பயன் படுத்தியதை மீண்டும் பயன் படுத்தக் கூடாது.

12. ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு ஒரு அறுவை அரங்கத்தில் சிகிச்சை செய்யும் போது நோய்த்தொற்று ஏற்படும். ஒவ்வொரு முறையும் மருந்துகள் அடங்கிய அனைத்து உபகரணங்களும் ஸ்டெரிலைஸ் செய்யப்பட வேண்டும்.

13. ராமு என்பவருக்கு கண்ணில் பொருத்தப்பட்ட லென்சு கீழே விழுந்து விட்டது. அந்த அளவிற்கு லூசாக பொருத்தியுள்ளார்கள்.

14. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மருத்துவர்கள் நோயாளிகளின் நலத்தை பார்ப்பதில்லை.

15. மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ம.உ.பா.மையம் தொடுத்த இதே வழக்கில் தலா ஒரு லட்சம் இழப்பீடு கொடுத்துள்ளார்கள். ஆனால் இங்கு குற்றம் சாட்டபட்ட இவர்கள் நாங்கள் கொடுக்கவில்லை என உண்மைக்கு மாறாக சொல்கிறார்கள்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை
எந்த கேள்வியும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கேட்க முடியாது. கிரிமினல் வழக்கு தொடுக்க முடியாது என்ற நிலைதான் உள்ளது.

மேற்கண்ட நடைமுறைகளை தினம் தோறும் ஆயிரக்கணக்கில் மருத்துவமனை மருத்துவர்கள் ஏதேனும் ஒரு வடிவத்தில் அரங்கேற்றி வருகிறார்கள். எந்த கேள்வியும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கேட்க முடியாது. கிரிமினல் வழக்கு தொடுக்க முடியாது என்ற நிலைதான் உள்ளது.

இந்த வழக்கில் நமது நெடிய போராட்டம் என்ன சாதித்தது என்றால்,  ‘கவனக்குறைவாக டி.வி.எஸ் 50 வண்டியில் இடித்தால் 2 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம்’ என்ற இ.த.ச பிரிவு 338 படி மட்டுமே இந்த மருத்துவர்களை தண்டிக்க முடியும். அது கூட நடக்கிறதா? உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் அதை அனுமதிக்குமா? நாம் அது வரை பல லட்சங்கள் செலவு செய்து தொடர்ந்து வழக்கு நடத்த முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

‘ஏழைகள் என்றால் எதையும் செய்யலாம் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்’ என்ற மருத்துவத் துறையின் திமிரை நாம் கேள்வி கேட்டிருக்கிறோம்.

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
கடலூர், திருச்சி மாவட்டம்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க