privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமுத்துக்குமாரசாமி தற்கொலை: ஏ-1 யார்? அம்மாவா? அக்ரியா?

முத்துக்குமாரசாமி தற்கொலை: ஏ-1 யார்? அம்மாவா? அக்ரியா?

-

விபச்சாரக் கும்பலிடம் சிக்கிய பெண்ணின் நிலையில் இருக்கிறது தமிழகம். தம்மளவில் நேர்மையாக வாழ விரும்புகிறவர்களுக்குக்கூட, அதற்கான வாய்ப்போ, உரிமையோ கிடையாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. திருநெல்வேலி கோட்டத்தில் வேளாண்மைத் துறையில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றிவந்த முத்துக்குமாரசாமி, தச்சநல்லூர் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கோரச் சம்பவம் இதைத்தான் காட்டுகிறது. முத்துக்குமாரசாமி ஊழலைத் தடுக்க முயற்சிக்கவில்லை, ஊழல் பேர்வழிகளைத் தண்டிக்க முயற்சிக்கவில்லை, வாங்கும் சம்பளத்துக்கு யோக்கியமாக நடந்து கொள்ள முயற்சித்தார். அதற்கு அவர் கொடுத்த விலை மரணம்.

ஏ-1 யார்? அம்மாவா? அக்ரியா?வேளாண் துறையில் தற்காலிக ஓட்டுநர் பணியிடம் ஒன்றுக்கு மக்கள் முதல்வர்’ ஜெ.வின் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நிர்ணயித்திருக்கும் விலை ரூ 3 லட்சம். 7 பணியிடங்களை ரூ 21 லட்சத்துக்கு விற்றுவிட்டு, தான் சோன்ன ஆட்களை நியமனம் செய்யுமாறு முத்துக்குமாரசாமியை அக்ரியின் கையாட்கள் நிர்ப்பந்தித்துள்ளனர். அவரோ அரசு விதிப்படி, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 7 பேரை நியமனம் செய்திருக்கிறார். அப்படியானால் 21 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடு, இல்லையேல் ஊழல் வழக்கில் உள்ளே தள்ளுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள் அமைச்சர் அக்ரியின் ஆட்கள். வாழ்க்கை முழுவதும் நேர்மையாக வாழ்ந்துவிட்டு இறுதியில் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்று மானமிழந்து சாவதைவிடத் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்று ரயில் முன் பாந்திருக்கிறார் முத்துக்குமாரசாமி.

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பெயர் அம்பலமாகிவிட்டதால், முதலில் அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக நாடகம் நடந்தது. பிறகு வேறுவழியின்றி அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இருப்பினும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அலுவலக பி.ஏ. என்று சொல்லிக் கொள்ளும் பூவையாவிடம், முத்துக்குமாரசாமியை மிரட்டியது நான்தான், அமைச்சருக்கோ மற்றவர்களுக்கோ இதில் தொடர்பில்லை என்று வாக்குமூலம் பெற்று அக்ரியைத் தப்புவிக்கும் நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருகின்றன.

முத்துக்குமாரசாமி
நேர்மையாக வாழ்ந்துவிட்டு, இறுதியில் ஊழல் வழக்கில் சிக்கி மானமிழப்பதைவிட சாவதே மேல் என்று தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரசாமி.

அமைச்சரின் பி.ஏ. என்பவர், எல்லா விதமான திருட்டுத்தனங்களையும் சட்டவிரோத முறைகேடுகளையும் செய்து கொடுக்கும் நம்பகமான கையாள் என்பது நாடறிந்த ரகசியம். அக்ரியின் பி.ஏ. பூவய்யா என்றால், அமைச்சராவதற்கு முன்புவரை அம்மாவின் பி.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்பதும், அந்த விசுவாசமான அடிமைச் சேவகத்துக்குக் கிடைத்த பரிசுதான் அமைச்சர் பதவி என்பதும் அனைவரும் அறிந்த ரகசியம்.

பழைய தமிழ் வார இதழ்களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள். போயஸ் தோட்டத்தின் கேட் கீப்பரும், அம்மாவின் கணக்குப்பிள்ளையும், கங்காணியும் அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் என்பது தெரியும். ஒவ்வொரு துறை அமைச்சரும், உயர் அதிகாரிகளும் என்னென்ன வழிகளில் எப்படி எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்று கண்காணித்து, அவர்கள் முழுக்கொள்ளைக்கும் அம்மாவிடம் நேர்மையாக கணக்கையும் பணத்தையும் ஒப்படைக்கிறார்களா, அல்லது அம்மாவையே ஏமாற்றுகிறார்களா என்று உளவுத்துறையை வைத்து மோப்பம் பிடிப்பது, அம்மாவிடம் போட்டுக்கொடுப்பது – ஆகியவைதான் அக்ரி ஆற்றிவந்த பணிகள்.

அந்த வகையில் அக்ரி வசூலித்திருக்கும் ஒவ்வொரு காசும் அம்மாவுக்குப் போச்சேரும் பணம்தான். ஆகவே அக்ரியை விட்டுவிட்டு அவருடைய பி.ஏ. பூவய்யாவைப் குற்றவாளியாக்குவதா என்பதல்ல கேள்வி. அம்மாவை விட்டுவிட்டு அவருடைய பி.ஏ. அக்ரியைக் குற்றவாளியாக்குவதா என்பதுதான் கேள்வி.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி
போயஸ் தோட்டத்து கேட் கீப்பரும், அம்மாவின் கணக்குப்பிள்ளையும், கங்காணியுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

அக்ரி மீது நடவடிக்கை என்பதற்கு சாட்டையைச் சுழற்றுகிறார் ஜெயலலிதா என்று தலைப்பிடுகின்றனர். ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒரு கிரிமினலை நீதி தேவதையாகச் சித்தரிக்கும் இழிநிலையை வேறெங்கு காண முடியும்? ஜெயலலிதா ஏதோ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, விதிவசத்தால் தண்டனை பெற்று முடங்கிக் கிடப்பதைப் போலவும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஊழல் அதிகாரிகளும் அமைச்சர்களும் பகற்கொள்ளையில் ஈடுபடுவது கண்டு மனம் புழுங்கித் தவிப்பது போலவும், சொத்துக் குவிப்பு வழக்கை அப்பீலில் முறியடித்து, மீண்டும் பதவியில் அமர்ந்து நல்லாட்சியைத் தருவது எப்படி என்று ஜெயலலிதா துடித்துக் கொண்டிருப்பது போலவும் ஒரு தோற்றத்தைக் கூச்சமே இல்லாமல் பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன.

1991-96 காலத்திலும் இதையேதான் செய்தார்கள். சசிகலா கும்பல் போயஸ் தோட்டத்தில் ஊடுருவி, ஜெ.வுக்குத் தெரியாமல் கொள்ளயடித்து வருவது போலவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களின் உண்மைச் சொரூபம் தெரியாமல் ஜெயலலிதா ஏமாந்து விட்டதைப் போலவும் கதையளந்தார்கள். ஆனால், இந்தப் பித்தலாட்டங்கள், அனைத்துக்கும் ஆப்பறைந்து, முதல் சதிகாரி, முதல் குற்றவாளி, அதாவது அக்யூஸ்டு நம்பர் 1 ஜெயலலிதாதான் என்று சட்டபூர்வமாகவே நிலைநாட்டியது குன்ஹாவின் தீர்ப்பு.

ஜெயலலிதா தலைமையிலான கும்பல் ஒரு அரசாங்கம் என்று அழைக்கப்படுவதற்கு அணுவளவும் தகுதியற்றது. அது ஒரு கொள்ளைக்கூட்டம். பதவியைப் பயன்படுத்திக் கொண்டு சாத்தியமான அத்தனை வழிகளிலும் நாட்டைக் கொள்ளையிடுவது, எந்தத் திட்டத்தில் எவ்வளவு கொள்ளையடிக்க முடியும் என்பதைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் திட்டங்களை வகுப்பது, அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ.க்கள் வரையிலான அனைவரும் தங்களது கொள்ளைப் பணத்தில் உரிய கப்பத்தைக் கட்டுகிறார்களா என்று சோதித்தறிவது, ஏமாற்றுபவர்களை அடிப்பது, பதவியைப் பறிப்பது, உள்ளே வைப்பது என்பதுதான் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா நடத்தி வந்த நிர்வாகம்.

எந்தெந்தத் துறைகளில் எத்தனை கோடி தேறும் என்று கணக்கு போட்டுக் கொடுப்பதுதான் அம்மாவின் அருள் பெற்ற ஆலோசகர்களின் வேலை. அதை முறைப்படி வசூலித்து கொடுப்பதுதான் அமைச்சர்களின் கடமை. அவர்கள் இட்ட பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பதுதான் ஊழல் அதிகாரிகளின் அன்றாடப் பணி. ஜெ கும்பலால் நிர்வகிக்கப்படும் ஆட்சியானது, தாவூத் இப்ராகீம் மாஃபியாவைப் போல, ஒரு கொள்ளைக் கம்பெனியாகத்தான் இயங்கி வருகிறது.

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
முத்துக்குமாரசாரியைத் தற்கொலைக்குத் தள்ளிய குற்றவாளிகளைக் கைது செய்ய சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம்.

காசில்லாதவன் கடவுளேயானாலும் கதவைச் சாத்தடி என்பதுதான் போயஸ் தோட்டத்தின் கொள்கை. மலையாள மாந்திரீகர்களையும், சூனியக்காரர்களையும் தவிர, வேறு யாரும் சூட்கேசு இல்லாமல் போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்ததில்லை. அம்மாவுக்குரிய கப்பத்தைக் கட்டாதவன் அடி வாங்காமல் வெளியேறியதும் இல்லை. வளர்ப்பு மகன் மீதான கஞ்சா கேசாகட்டும், நடராசன் மீதான வழக்குகளாகட்டும், மன்னார்குடி குடும்பமே சிறை வைக்கப்பட்ட கதையாகட்டும், சசிகலாவின் வெளியேற்றமாகட்டும் அனைத்தும் இதற்கான ஆதாரங்கள்.

ஒரு ஓட்டுனர் பதவியின் விலை என்ன என்பது போயஸ் தோட்டத்துக்குத் தெரியும். அதில் தோட்டத்துக்குச் சேர வேண்டிய தொகை சேரவில்லையென்றால் நடக்கக்கூடிய விபரீதம் என்னவென்பது மற்றெல்லோரையும் விட முன்னாள் கணக்குப்பிள்ளை அக்ரிக்கு நன்றாகத் தெரியும். அதன் விளைவுதான் முத்துக்குமாரசாமியின் மரணம்.

தென் மாவட்டங்களில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்துவிட்டு, மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்றிட வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது. கடந்த 2013-14-ம் கல்வியாண்டில் இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட 62 ஆசிரியர்களுக்கு பல மாதங்களாகியும் ஒப்புதல் வழங்கப்படாததோடு, சம்பளமும் தரப்படாமல் உள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஒவ்வொருவரும் ரூ 3.5 லட்சம் வீதம் முழுத் தொகையையும் ஒரே தவணையில் கப்பம் கட்டினால்தான் ஒப்புதல் வழங்கப்படும் என்று மாவட்டக் கல்வி அலுவலர்கள் அமைச்சரின் புரோக்கர்களாகச் செயல்படுகின்றனர். கப்பம் கேட்டு இந்த அதிகாரிகள் பலரோடு பேசிய உரையாடல்கள் இப்போது “வாட்ஸ் அப்” மூலம் ஊடகங்களில் சந்தி சிரிக்கிறது. ஜெ கும்பலின் ஆட்சியில் ஆசிரியர் பணியிட மாற்றம் என்பது ஆண்டுதோறும் நடக்கும் மிகப்பெரிய ‘லஞ்சமேளா’வாகிவிட்டது. இதில் முதல் குற்றவாளி யார்? வீரமணியா, ஜெயலலிதாவா?

ஆவின் பால் கலப்படக் கொள்ளையன் வைத்தி.
உச்சநீதிமன்றம் வரை சென்று பிணை வாங்கிக் கொடுத்து ஜெ. கும்பலால் தப்பிக்க வைக்கப்பட்டுள்ள ஆவின் பால் கலப்படக் கொள்ளையன் வைத்தி.

ஆவின் பால் கலப்பட கொள்ளை அம்பலமானதும், -பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்து ஜெ கும்பல் அவரைப் பாதுகாத்தது. ஜெ கும்பலுக்கு முறையாகக் கப்பம் கட்டிவந்த மாதவரம் மூர்த்தியின் பினாமியாகச் செயல்பட்ட ஆவின் பால் கலப்படக் கொள்ளையன் வைத்திக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று அவனுக்குப் பிணை வாங்கிக் கொடுத்து தப்பிக்க வைத்திருக்கிறாரே ஜெயலலிதா, ஆவின் கொள்ளையில் முதல் குற்றவாளி வைத்தியா? ஜெயாவா?

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், டிரைவர், கண்டக்டர், எழுத்தர், இளநிலைப் பொறியாளர், உதவியாளர் பணி நியமனங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு ரேட் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் எடுபிடிகள், ஆம்னி பஸ்ஸுக்கு டிக்கெட் ஏற்றும் புரோக்கர்கள் போலக் கூவிக்கூவிக் கூப்பிடுவதை பத்திரிகைகள் நாறடிக்கின்றனவே, இது ஜெ.வுக்குத் தெரியாமல் நடக்கும் கொள்ளையா?

திட்டத்தில் ஊழல் என்பது அம்மாவின் ஆட்சியில் கிடையாது. வருமானம் எவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்ட பின்னர்தான், திட்டமோ டெண்டரோ அறிவிக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படும். முட்டையின் வெளிச்சந்தை விலை ரூ 3.18 ஆக இருக்கும்போது, அதனை ரூ 4.50 வீதம் கொள்முதல் செய்ய, கோழிப்பண்ணையே வைத்திராத ஒரு நிறுவனத்துடன் ஜெ.அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதே, இதனைக் கொள்ளைக் கூட்டத் தலைவி ஜெயாவின் துணிச்சல் என்பீர்களா, அமைச்சர் வளர்மதியின் துணிச்சல் என்பீர்களா?

கடுமையான மின்வெட்டு நிலவும் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் மின்நிறுவனங்களிடம் அடாத விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்து, அதில் காசு பார்த்ததை அறிவீர்கள். ஆனால், தமிழக மின்வாரியமும் மைய அரசு நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனமும் இணைந்து துவங்கவிருந்த உடன்குடி திட்டத்தை நிறுத்தியது ஏன், அதனை ஒரு சீன நிறுவனத்துக்குத் தரப்போவதாக கூறியது ஏன், அதன் பின்னர் கடந்த 6 மாதங்களாக ஒப்பந்தத்தை இறுதியாக்காமல் இழுத்தடித்து, இப்போது இன்னொரு தரகு முதலாளி கூடுதல் ரேட்டு பேசியவுடன் புதிதாக ஒப்பந்தம் போடத் துடிக்கிறதே ஜெ அரசு, இவ்வளவு கேடுகெட்ட களவாணிக் கும்பலை ஒரு அரசாங்கம் என்று அழைப்பது அயோக்கியத்தனமில்லையா?

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக ரேசன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடு நிலவுவதற்குக் காரணமே, கடந்த ஜனவரி முதலாக பருப்பு கொள்முதலுக்கான ஒப்பந்தப் புள்ளி இறுதியாக்கப்படாததுதான். கோடிக்கணக்கிலான பேரம் படியாததால் அம்மாவின் ஆணைப்படி தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்னமும் இதை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் என்ற விவகாரம் சந்தி சிரிக்கிறதே, இதில் குற்றவாளி யார்? அமைச்சர் காமராஜா?

அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சராக இருந்தபோது, ‘நலிந்தோர் நல நிதி’ என்ற பெயரில் விவசாய அதிகாரிகளுக்கு ஒரு ரேட், டெபுடி டைரக்டர்களுக்கு ஒரு ரேட் என்று வசூல் வேட்டை நடத்தப்பட்டதும், கொடுக்க மறுத்த அதிகாரிகளுக்கு டிரான்ஸ்ஃபர் மிரட்டல் கொடுக்கப்பட்டதும் சந்தி சிரித்தன.

கனிமவளக் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, சவுடு மணல் கொள்ளை என்று எங்கு திரும்பினாலும் கொள்ளை நடக்கிறது. மக்கள் போராட்டங்களை விலைபேசியோ, கொலை செய்தோ இந்தக் கொள்ளைகளை நடத்தும் துணிச்சல் யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்குத்தான் போயஸ் தோட்டத்தின் கதவுகள் திறக்கின்றன.

பெங்களூரு நீதிமன்றத்தில் வாதாடும் வக்கீல்களின் சாப்பாடு, தங்குமிடத்துக்கு மணல் கொள்ளையன் படிக்காசு பொறுப்பு, வக்கீல் செலவுக்கு இன்னொரு கொள்ளையன், கோயில்களில் பரிகாரங்களைச் செய்வதற்கு ஒரு கொள்ளைக்கூட்டம், இந்தக் கொள்ளைக்கு ஆலோசனையும் பாதுகாப்பும் அளிக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி நீட்டிப்பு – என்பவையெல்லாம் நாடே அறிந்த உண்மைகள். அவ்வாறிருக்க, ஜெயலலிதாவைத் தவிர வேறொருவரை முதல் குற்றவாளி என்று கூறினால், அதைவிடப் பெரிய பொய் வேறொன்று இருக்க முடியுமா?

– சூரியன்
_____________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
_____________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க