privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ஆந்திர போலீசின் நரவேட்டை - தமிழகமெங்கும் போராட்டம்

ஆந்திர போலீசின் நரவேட்டை – தமிழகமெங்கும் போராட்டம்

-

டந்த 8-ம் தேதி இரவில், செம்மரம் கடத்தியதாக சொல்லி, 20 தொழிலாளிகளை திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில், ஆந்திர போலீசு சுட்டுக் கொன்றனர்.

தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த செம்மரக்கடத்தலில் ஈடுபட்டுவரும், மாபியாக்களையும், அரசியல் வாதிகளையும் கைது செய்ய வக்கற்று, வயிற்றுப் பிழைப்பிற்காக, கூலிக்காக, இப்படி வேலைகளுக்கு வந்த தொழிலாளிகளை போலி என்கவுன்டர் கொலை நடத்தி 20 பேரைக் கொன்றுள்ளது ஆந்திர போலீசு.

இதை நாட்டுமக்கள் அனைவருக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாக கருதி உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க அனைவரும் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக போராட முன்வரவேண்டும் என அறைகூவி

  • 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலை! ஆந்திர போலீசின் பச்சைப் படுகொலை!
  • டி.ஐ.ஜி காந்தாராவ் உள்ளிட்ட கொலைகார போலீசை கொலை வழக்கில் கைது செய்!
  • நடுநிலையாளர்கள் ஜனநாயக சக்திகள் கொண்டு விசாரனை நடத்தி குற்றவாளிகளை தண்டி!

என்ற முழக்கங்களின் கீழ் புரட்சிகர அமைப்புகள் சார்பில் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

1. சென்னை

ஆந்திர போலீசின் நரவேட்டையை மூடி மறைக்கும் தமிழக போலீசு

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம்.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

முந்தைய நாள் இரவில் இருந்தே, தொடர்பு கொண்ட காவல் துறை, “நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள் எந்த பிரச்சனையும் இல்லை, மீடியாவையும் வர வைத்து விடுகிறோம்” என்று கூறினர்.

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்
“நீங்கள் ஏற்கனவே முடிவு செய்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது. நாங்கள் சொல்லும் இடத்தில் தான் நடத்த வேண்டும்”

காலை சென்றவுடன், “நீங்கள் ஏற்கனவே முடிவு செய்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது. நாங்கள் சொல்லும் இடத்தில் தான் நடத்த வேண்டும், வால்டேக்ஸ் ரோடு அருகில் 30 நிமிடங்கள் நடத்திக் கொள்ளுங்கள், மீடியாவையும் நாங்கள் அங்கேயே வரவைத்து விடுகிறோம்” என்றனர்.

“மீடியாவிற்கு பேட்டி கொடுப்பது மட்டும் எங்களுடைய நோக்கம் அல்ல, மக்களிடம் இந்த விசயத்தை கொண்டு சேர்ப்பது தான் நோக்கம், அதனால் நாங்கள் முடிவு செய்த இடத்தில் தான் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்று தோழர்கள் உறுதியாகக் கூறினார்கள்.

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்
தோழர்களை ஒவ்வொருவராக வண்டியில் வலுக்கட்டாயமாக இழுத்து தள்ளினர்.

இதனால் கடுப்பான காவல் துறை, ஆர்ப்பாட்டம் செய்ய விடக்கூடாது, என்ற முடிவிற்கு வந்துவிட்டது. தோழர்களை ஒவ்வொருவராக வண்டியில் வலுக்கட்டாயமாக இழுத்து தள்ளினர். எப்போதும் சிறிது நேரம் நாம் முழக்கம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னரே கைது செய்யும் காவல் துறை இந்தமுறை அதற்கு நேரமே கொடுக்காமல், உடனடியாக வேனில் ஏறும் படி நிர்ப்பந்தித்து உள்ளே தள்ளினர். அதற்கு அனுமதி கொடுக்காமல், இழுக்கும் போலீசிடம் தொடர்ந்து, வாக்குவாதம் செய்து,  தோழர்கள் முழக்கமிட்டனர்.

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்
போலீசிடம் தொடர்ந்து, வாக்குவாதம் செய்து, முழக்கமிட்டுக் கொண்டே சென்றோம்.

ஆரம்பித்த உடனே பத்திரிகையாளர்கள் வந்து விட்டனர். அவர்களிடம் பேசக் கூட விடாமல், தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருந்தனர். தோழர்களைச் சுற்றி வளைப்பதும், கயிறு போட்டு மடக்கிப் பிடிப்பதும், வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றுவதும் என பயங்கரமான பீதியூட்டல்கள் நடைபெற்றது.

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்
அப்பாவிகளை துரத்தித் துரத்திப் பிடிப்பதும், இழுத்து வந்து வேனில் ஏற்றுவதும், என அப்பாவிகளை அச்சுறுத்தும் புஜபலபராக்கிரமசாலி என்பதைக் காட்டிக் கொண்டது போலிசு.

ஒரு பயணி, “தான் ஆர்ப்பாட்டத்துக்கு வரவில்லை, பேருந்துக்காகத்தான் காத்திருந்தேன்” என்று கூறி அழுத போதும், அவரை அப்படியே தூக்கிக்கொண்டு வந்து வேனில் ஏற்றியது போலிசு. இதுபோல அங்கே நின்று கொண்டிருக்கும் அப்பாவிகளை துரத்தித் துரத்திப் பிடிப்பதும், இழுத்து வந்து வேனில் ஏற்றுவதும், என அப்பாவிகளை அச்சுறுத்தியது போலிசு.

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்
தோழர்களைச் சுற்றி வளைப்பதும், கயிறு போட்டு மடக்கிப் பிடிப்பதும், வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றுவதும் என பயங்கரமான பீதியூட்டல்கள் .

“டேய் போய் பிடிங்கடா, மாடு மாதிரி நிக்கிறீங்களே, போங்கடா, போங்கடா” என்று ஒருமையில் பேசியதோடு, ஒரு கீழ் நிலை போலிசை கன்னத்தில் பளார் என அறைந்தார் மேற்கு மண்டல இணை ஆணையர் சண்முகவேல். போலீசையே அடிப்பவர்கள் மக்களை என்கவுண்டர் செய்ய மாட்டார்களா என்ன?

செம்மரக் கடத்தலை தொடர்ந்து நடத்தி வரும் கிரிமினல் முதலாளிகளையும், மாஃபியாக்களையும் கைது செய்ய வக்கற்ற காவல் துறை, அதை எதிர்த்து போராடுபவர்களை, தங்களுடைய எதிர்ப்பினை கூட தெரிவிக்க விடாமல் கைது செய்ததில் இருந்து காவல்துறையின் வர்க்க பாசம் எந்த அளவில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்
காவல்துறையின் வர்க்க பாசம் எந்த அளவில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

செம்மரம் சென்னை ஆர்ப்பாட்டம்

அவரின் வயிற்றில் மேலும் ஒரு கிலோ புளி கரைக்கும் விதமாக வந்தனர் ஒரு செஞ்சட்டை அணிந்த குழுவினர்.

அடுத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் தலைமையில் வந்த தோழர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சந்திரபாபு நாயுடுவின் சொந்த சகோதரர்களைப் போல தோழர்களை பேட்டியளிக்கவும் விடாமல் சுற்றி வளைத்து கைது செய்து வேனில் ஏற்றியது போலிசு.

கைது செய்த தோழர்களை வழக்கம் போல், ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

மண்டபத்தின் உள்ளே சென்றவுடனேயே, பெண் போலீசு, “ஒருவர், கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல், அழைத்து வந்து இருக்கீங்களே” என்றார். அவரிடம், “அங்கே சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களிலும் அப்படி தான் இருப்பார்கள், அவர்களை உங்கள் போலீசு தான் கொன்றது” என்றதும் போய் விட்டார்.

அரசின் இத்தகைய நடவடிக்கைகள் தான், அரசின் உண்மை முகத்தை மக்களுக்கு காட்டுவதாகவும், புரட்சிகர அமைப்புகளின் செல்வாக்கை உயர்த்துவதாகவும் அமைகிறது என்பதை ஆளும் வர்க்கத்தின் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்வதாக அமைந்தது இந்த ஆர்ப்பாட்டம்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை

2. ஓசூர்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

செம்மரம் ஒசூர் ஆர்ப்பாட்டம்இவ்வார்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த பாகலூர் பகுதி பொறுப்பாளர் தலைமைத்தாங்கினார். இவ்வமைப்பின் மாநில துணைத்தலைவர் தோழர் சு. பரசுராமன் கண்டன உரையாற்றினர்.

செம்மரம் ஒசூர் ஆர்ப்பாட்டம்“தாதுமணல் கொள்ளை , கிராணைட் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை போன்று இயற்கை வளங்களை சூறையாடும் தாதாக்களை மக்களே தங்களை அமைப்பாக்கி திரண்டுவந்து தண்டித்து அதிகாரங்களை பறித்தெடுப்பதன் மூலம் மட்டுமே இதுபோன்ற அநியாயமான பச்சைப்படுகொலைகளை தடுத்துநிறுத்தவும், இயற்கைவளங்களைப் பாதுகாக்கவும் முடியும்” என்று பேசினார்.

செம்மரம் ஒசூர் ஆர்ப்பாட்டம்இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினார்.

செம்மரம் ஒசூர் ஆர்ப்பாட்டம்தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர்

3. கோவை

கோவை மேட்டுபாளையம் ரோட்டில் துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் 11.04.2015 அன்று மாலை 5 மணி அளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆந்திரா போலிசார் நடத்திய போலி மோதல் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

செம்மரம் கோவை ஆர்ப்பாட்டம்புஜதொமு கோவை மாவட்ட தலைவர் தோழர் பொ. ராஜன் தலைமை தாங்கினார் . நூற்றுக்கணக்கான SRI ,CRI தொழிலாளர்கள் அணி திரண்டனர் . நாங்களும் கலந்து கொள்வோம் என்று மழைமேகங்கள் வானத்தில் திரண்டு அளவாகப் பொழிந்து ஆர்ப்பாட்டத்திற்கு வசதியாக வானத்தில் அணி வகுத்து தோழர்கள் முழக்க மெழுப்பியவுடன் மின்னலாகவும் இடியாகவும் வழிமொழிந்தன . சில்லென்ற காற்றை அனுப்பி தோழர்களை உற்சாகப்படுத்தின .

கோவை மாவட்ட இயக்க பொறுப்பாளர் தோழர் கோபிநாத் தனது கண்டன உரையில் போலி மோதல் படுகொலையை திரை கிழித்து பேசி வர்க்க உணர்வை நிலை நாட்டினார்.

CRI கிளை செயலாளர் தோழர் K .G குமாரவேல் தனது கண்டன உரையில் ஆந்திராவில் நடப்பதும் , கோவை CRI கம்பெனியில் நடப்பதையும் இணைத்து இரண்டுமே முதலாளித்துவ பயங்கரவாதம் என விளக்கிப் பேசினார்.

இறுதியாக மாநிலத்துணைத்தலைவர் விளவை. இராமசாமி தனது கண்டன உரையில் செம்மரம் என்பது எத்தகைய வெப்பத்தையும் தனக்குள்ளே இழுத்து குளிர்ச்சியாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது . அது போல பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தின் கொடூரத்தை உள்ளிழுத்து வர்க்க வீரமாக வெளிப்படுத்தவேண்டும். போலி மோதல் படுகொலையை எதிர்த்து பேசுவதற்கு எந்த ஓட்டுக் கட்சிக்கும் அருகதை கிடையாது. ஏனெனில் போலி மோதல்களை தங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நடத்தாத கட்சியே கிடையாது .

நம்முடைய கோபம் போலிசு, வனத்துறை, சுங்கச்சாவடி அதிகாரிகள், மாவட்ட ஆட்சிதலைவர் உள்ளிட்ட வருவாய்த்துறை கொள்ளையர்கள், ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகள் என அனைவர் மீதும் திரும்பவேண்டும் .

கூலிக்காக போனவர்களை கொன்றவர்களே ? அனுப்பிய கொள்ளைக்காரனை என்ன செய்தீர்கள் . வேறு வேலைக்கு போகவேண்டியதுதானே என எகத்தாளம் பேசுபவர்களே முத்துகுமாரசாமி தற்கொலைக்கு பிறகும் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலைக்கும் போகமுடியாது என்பது தெரிந்த பிறகும் இது போல பேசுவது மோசடியில் முதல்தரமான மோசடி .

மாட்டைக் கொல்வது குற்றம் என்று பேசும் கூட்டமே மனிதர்களை கொள்வது குற்றம் என்று ஏன் பேசவில்லை. சந்திரபாபு நாயுடு உங்கள் கூட்டணிக் கட்சிக்காரன் என்பதினால் தானே பேசவில்லை .

தாலியின் புனிதம் காக்க சோத்து டப்பாவில் பட்டாசு கொளுத்தியவர்களே 20 இந்து பெண்கள் தாலி பறி போய்விட்டதே ஏன் ஒரு கொள்ளு பட்டாசு கூட கொளுத்தவில்லை .

செம்மரக் கடத்தல்காரன் ஆந்திராவில் மட்டுமா , தமிழகத்தில் கரகாட்டக்காரி மோகனா, அணைக் கட்டு திமுக ஒன்றிய செயலாளர் பாபு , காங்கிரஸ் சீத்தாராமன் போன்றவர்களை உருவாக்கிய தமிழகத்தின் ஓட்டுக் கட்சி கூட்டத்தையும் எதிர்த்து போராட வேண்டும் .

ஆந்திராவில் நடந்தது அப்பட்டமான முதலாளித்துவ பயங்கரவாதம் . இதனை மொழி எனப் பேசுவதன் மூலமாகவோ, இனம் எனப் பேசுவதன் மூலமாகவோ , வேறு எப்படி பேசினாலும் தீர்க்கமுடியாது . வர்க்கம் என்ற அடிப்படையில் நக்சல்பாரிகள் எனும் அடையாளத்தில் அணிதிரள்வதின் மூலமே தடுக்க முடியும் . ஓட்டுப்போடுவதால் மாற்றம் வராது. மக்களை அணி திரட்டி மாற்று அதிகார அமைப்பாக போதுதான் வெல்லமுடியும்”

CRI கிளைத்தலைவர் தோழர் மூர்த்தி நன்றியுரையாற்றினார்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

4. கோத்தகிரி

நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக – கோத்தகிரி மார்க்கெட், ஜீப் நிலையத்தில் – 11.03.2015 (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு – ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து – கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு தோழர் ஆனந்தராஜ் தலைமையேற்றார். தோழர் பாலன் (மாவட்ட செயலாளர்) கண்டன உரையாற்றினார்.

செம்மரம் கோத்தகிரி ஆர்ப்பாட்டம்இறுதியாக தோழர் ராஜா நன்றி கூறினார்.

தகவல்

இரா.ஆனந்தராஜ் – தலைவர்,
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்,
கோத்தகிரி, நீலகிரி மாவட்டம்.
தொடர்பு எண். 9787556161.

5. பென்னாகரம்

20 தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை ஆந்திர போலீசின் பச்சை படுகொலை

ருமபுரி மாவட்டம் கடும் வறட்சியும், வறுமையும் எப்போதும் நிறைந்திருக்கின்ற பகுதி. பெரும்பான்மையான மக்கள் இந்த மாவட்டத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கு சென்றும் வருகின்றனர். எங்கு சென்றாலும் வறுமையின் பிடியில் இருந்து மீளமுடியாத மக்கள் மாவட்டம் முழுவதும் பெருகிக்கொண்டே இருக்கின்றர். கூலி அதிகம் என்று கூறி செம்மரம் வெட்ட அழைத்து செல்லப்படுகின்றனர். குறிப்பாக, தருமபுரியின் மலைவாழ் மக்கள் இருக்கின்ற கிராமங்களிலும் அதிகமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.

அரூர் வட்டம் சித்தேரி மலைகிராமங்களில் அரசநத்தம், கருக்கம்பட்டி, ஆலமரத்து வலவு ஆகிய மலை கிராமங்களை சேர்ந்த 7 பேரை பேருந்தில் சென்ற போது பாதிவழியில் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, கை கால் கட்டி கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்தது ஆந்திர போலீசு.

இவ்வாறு செய்த பச்சைப் படுகொலையை, நியாயப்படுத்தி இயற்கை வளத்தை பாதுகாக்க செய்தது சரிதான் என்று திமிராகவே பேட்டி கொடுக்கின்றனர். துளியும் குற்ற உணர்ச்சியின்றி இந்த பொய்களையே கூறி வருகிறது ஆந்திர அரசு.

செம்மரம் வெட்டுவதும், இதனை கடத்துவதும், ஆந்திர வனத்துறையும், தமிழ்நாடு வனத்துறையும், ஆந்திர போலீசும், தமிழ்நாடு போலீசும் கூட்டுத்துவத்தோடுதான் நடக்கிறது. ஆந்திர செக்போஸ்டிலிருந்து பாதுகாப்பாக செம்மரங்களை அனுப்பி வைக்கின்றனர். அங்கிருந்து பாதுகாப்பாக துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் வேலையை செய்வர்கள் தமிழ்நாட்டு போலீசும், வனத்துறை மற்றும் அதிகாரிகளும்தான். இவ்வாறு மாபியா கும்பலின் அடியாட்கள்தான் போலீசு.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக பென்னாகரம் வட்டத்தில் செம்மரம் வெட்ட சென்றதில் கிடைத்த கூலி தொகையை கொண்டு வரும்போது மடக்கியது பென்னாகரம் போலீசு கும்பல். இதில்  பென்னாகரம் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் விஜயசங்கர் தலைமையில் 5 போலீசார் சேர்ந்து 5 லட்சத்தை வழிபறி செய்தனர். இதற்கு பென்னாகரம் டி.எஸ்.பி அண்ணாமலையும் உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

எப்போதும் திருடி வயிறு வளர்க்கும் போலீசு கும்பல்தான் இன்று கூலி ஏழைத்தொழிலாளர்களை சுட்டுப்படுகொலை செய்து இயற்கை வளத்தை பாதுகாக்க இருப்பதாக கதை அளந்தவிடுகின்றனர்.

இந்த பச்சைப்படுகொலையை கண்டித்து தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் தோழர் மாரியப்பன் வட்டக்குழு உறுப்பினர் தலைமைதாங்கினர். மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலர் தோழர் ஜானகிராமன், பு.மா.இ.மு தருமபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் ராஜா, வி.வி.மு வட்டார செயலர் தோழர் கோபிநாத் உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரையாற்றினர். தோழர்கள் நகரத்தில் பேருந்து பிரச்சாரமும் செய்தனர்.

செம்மரம் பென்னாகரம் ஆர்ப்பாட்டம்
தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி – 9943312467

6. திருவாரூர்

திருவாரூரில் மாற்றத்திற்கான மக்கள் களம் சார்பில் 20 கூலித் தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற ஆந்திர அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தனர். திருவாரூர் மாவட்ட (RSYF) புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணித் தோழர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

செம்மரம் திருவாரூர் ஆர்ப்பாட்டம்

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருவாரூர்

7. திருச்சி

திருச்சியில் உள்ள உறையூர் குறத்தெரு பகுதியில் 11-04-2015 அன்று மாலை 5.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செம்மரம் திருச்சி ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டத்தை பாய்லர் ப்ளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர் சுந்தராஜ் தலைமை ஏற்று நடத்தினார். தலைமையுரையில், “மனித உயிர்களை மயிருக்கு சமமாக கூட மதிக்காத தன்மையில் ஆந்திர போலீசு என்கவுண்டர் என்ற பெயரில் சாதாரண கூலித் தொழிலாளர்களை சுட்டுக் கொன்றது. மரம் வெட்ட சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த இந்த கதிதான், சாதாரண மக்களுக்கும் ஏற்பட நேரிடும். அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இந்திய ஜனநாயகம் என்பது பித்தலாட்டம்” என்று பேசினார்.

பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர் பவானி கண்டன உரையாற்றினார். தோழர் பேசுகையில், “செம்மரம் என்பது விலை உயர்ந்த மரம். ஆந்திரத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட செம்மரம் சென்னை வழியாக அரபு நாடுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு வந்து விவசாயம் அழிந்து போனதால் தான் வேலை தேடி ஆந்திர மாநிலத்திற்கு போகிறோம். ஆனால், போலீசு அப்படி செல்லும் மக்களை கொன்றிருக்கிறது. மக்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு மக்களுக்கே துரோகம் செய்வது தான் போலீசு” என்று போலீசின் யோக்கியதையை தோலுரித்துக் காட்டும் வகையில் உரையாற்றினார்.

செம்மரம் திருச்சி ஆர்ப்பாட்டம்
“மக்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு மக்களுக்கே துரோகம் செய்வது தான் போலீசு”

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர் வசந்த் கண்டன உரையாற்றினார். இவர் பேசுகையில், “ஆந்திராவில் நடந்த செம்மரக் கடத்தல் விவகாரம் என்பது ஒரு இயற்கை கனிம வள சூறையாடல். எப்போது தனியார்மய கொள்கைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கொடுத்தார்களோ அப்போதில் இருந்து தான் இது போன்ற கனிம வள சூறையாடல் என்பது நடந்து கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் ஏராளமான மாபியா கும்பல்கள் உள்ளனர். பி.ஆர்.பி, வைகுண்டராஜன், ரெட்டி சகோதர்கள் இன்னும் பலர் உள்ளனர். அவர்களை எல்லாம் தண்டிக்க வக்கில்லாதது தான் இந்த அரசாங்கம். ஏனென்றால் இந்த சட்டம் என்பது முதலாளிகளுக்கு சாதகமாக தான் செயல்படுகிறது. ஆதலால் இந்த சட்டத்தைக் கொண்டு இவர்களை தண்டிக்க முடியாது. போலீசு, ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து அதிகாரங்களை பிடிங்கி மக்கள் கையில் கொடுத்தால் மட்டுமே இது போன்ற இயற்கை கனிம வள சூறையாடலை தடுத்து நிறுத்த முடியும். உழைக்கும் மக்களுக்கான விடுதலையைப் பெற முடியும்” என்று பேசினார்.

செம்மரம் திருச்சி ஆர்ப்பாட்டம்
“போலீசு, ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து அதிகாரங்களை பிடிங்கி மக்கள் கையில் கொடுத்தால் மட்டுமே இது போன்ற இயற்கை கனிம வள சூறையாடலை தடுத்து நிறுத்த முடியும்”

ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் தர்மராஜ்  சிறப்புரையாற்றினார். இவர் பேசுகையில், “சட்டத்தை இந்த ஆட்சியாளர்கள், அதிகாரிகள் யாரும் மதிக்க மாட்டார்கள். இவர்கள் அனைவரும் ஊழல் செய்து விட்டு வெளிப்படையாக வலம்வருவார்கள். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தேர்தல் பாதையை நம்புவது அல்ல. மாறி மாறி ஓட்டுப் போட்டால் பிரச்சனை தீர்ந்து விடாது. இந்திய ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்லக்கூடிய துறைகள் அனைத்தும் மக்களுக்கு எதிராக தான் செயல்படுகின்றன. இதன் மூலம் மக்களுக்கு தீர்வு கிடைக்காது. இவர்களை தண்டிக்க வேண்டுமானால் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். சாதி, மதம், இனம் கடந்து போராட்டம் நடத்த வேண்டும். மக்கள் கையில் அதிகாரம் இருக்க வேண்டும். அப்போது தான் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்” என்று பேசினார்.

செம்மரம் திருச்சி ஆர்ப்பாட்டம்ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் கோபி நன்றியுரை தெரிவித்தார். பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர்கள் புரட்சிகர பாடல்களை பாடினர்.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
99431 76246
திருச்சி.

8. குடந்தை

20 தமிழக கூலி தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து குடந்தை தலைமை தபால் நிலையம் அருகில் ஏப்ரல் 11 மாலை 5 மணிக்கு  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

செம்மரம் குடந்தை ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் குடந்தை பகுதி அமைப்பாளர் வழக்குரைஞர் தமிழ். ஜெயபாண்டியன் தலைமை வகித்து நடத்தினார். தனது தலைமை உரையில் “இந்த என்கவுண்டர் ஆளும் அதிகாரவர்க்க கும்பலின் கிரிமினல் குற்றங்களை மறைப்பதற்காக நடத்தப்பட்டது” என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

செம்மரம் குடந்தை ஆர்ப்பாட்டம்க.மா. இரணியன் தனது கண்டன உரையில் ஆந்திர அரசின் பயங்கரவாத செயலை கண்டித்து பேசினார்.

வழக்குரைஞர் சி. குருமூர்த்தி, “20 கூலித் தொழிலாளர்களை ஆந்திராவில் சுட்டுக் கொன்றதை போல நாம் தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடினால் தமிழக அரசும் சுட்டுத் தள்ளும். ஆகையால் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு இதை கண்டித்து போராட வேண்டும்” என்று விளக்கி பேசினார்.

வழக்குரைஞர் கோ. ராஜ்குமார், “மனித உரிமை ஆணையம் அதிகார வர்க்க குற்றக் கும்பலின் கிரிமினல் குற்றங்களை மறைக்கவும், போராடுகிற மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்கவும் செய்கின்றதே தவிர இதுவரை எந்த மனித உரிமை மீறலையும் தண்டிக்கவில்லை” என்று விளக்கி பேசினார்.

செம்மரம் குடந்தை ஆர்ப்பாட்டம்மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த ம. சங்கத்தமிழன் தனது கண்டன உரையில், “இந்த படுகொலை குற்றக் கும்பல்களுக்கு இடையிலான போட்டியில் நடத்தப்பட்டது. ஆளும் வர்க்கத்துக்கும், மாஃபியா கும்பலுக்கும் சேவை செய்வதே இந்த அரசியல் அமைப்பின் பணியாக உள்ளது. மக்கள் அதிகாரத்தை தங்கள் கையில் எடுப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு” என்பதை வலியுறுத்தி பேசினார்.

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
குடந்தை

9. விருத்தாச்சலம்

10.04.2015 அன்று விருத்தாசலம் பாலக்கரையில், செம்மரம் கடத்தியதில் ஈடுபட்டதாக கூறி 20-தமிழக தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீசார் போலி என்கவுண்டர் நடத்தியதை கண்டித்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

செம்மரக் கடத்தல் படுகொலைகள் விருத்தாச்சலம் ஆர்ப்பாட்டம்கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம். கூலிப்படையாக செயல்பட்ட ஆந்திரா போலிசை கண்டிக்கிறோம்” என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் R. புஷ்பதேவன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜு, மாவட்ட துணை செயலாளர் சிதம்பரம் வழக்கறிஞர் செந்தில், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க கடலூர் மாவட்ட தலைவர் வை.வெங்கடேசன், துணைத் தலைவர் அன்பழகன், சேத்தியதோப்பு கிளைத் தலைவர் தமிழரசன், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பஞ்சமூர்த்தி, அறிவரசன், திருக்குறள் திருவள்ளுவர் கழகத்தின் சார்பாக சிறு தொண்ட நாயனார், அசோக், PRPC செயற்குழு உறுப்பினர் செல்வக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

செம்மரக் கடத்தல் படுகொலைகள் விருத்தாச்சலம் ஆர்ப்பாட்டம்மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் மற்றும் மாணவர்களின் கல்விஉரிமைக்கான பெற்றோர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். நகரம் முழுவதும் நோட்டீஸ்கள் வினியோகிக்கப்பட்டன. போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

செம்மரக் கடத்தல் படுகொலைகள் விருத்தாச்சலம் ஆர்ப்பாட்டம்தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்

10. புதுச்சேரி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி