Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 607

கருங்காலி வழக்குரைஞர் சங்கம் TNAA-ஐ ஒழித்துக் கட்டுவோம் !

2

கருங்காலி சங்கமான TNAA-ஐ ஒழித்துக்கட்டுவோம்! வழக்குரைஞர்களின் ஒற்றுமையை காப்போம்!

அன்பார்ந்த வழக்குரைஞர்களே,

வணக்கம்.

வழக்குரைஞர் பிரபாகரன் துவங்கிய தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கத்திற்கு (TNAA) தமிழ்நாடு பார்கவுன்சில் சட்டவிரோதமாக அங்கீகாரம் அளித்துள்ளது. இது வழக்குரைஞர்களின் நலன்களை மட்டுமல்ல, சமூகத்தையே கடுமையாக பாதிக்கும் என்பதால், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான வழக்குரைஞர்கள் கொதித்துப்போய், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், நீதிமன்ற புறக்கணிப்பு என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இப்படி ஒரு சங்கம் துவங்கியதால் வரும் ஆபத்தான பின்விளைவுகளை நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்!

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் (MHAA) தோன்றியதன் பின்னணி

வழக்கறிஞர் போராட்டம்
அப்சல் குரு தூக்குக்கு எதிராக வழக்கறிஞர் போராட்டம் – மதுரையில் (கோப்புப் படம்)

19-ம் நூற்றாண்டு. பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்தின் பொழுது, வெள்ளையர்களாலும், அவர்களின் அடிவருடி மேட்டுக்குடியினராலும் எல்லாத் துறைகளும் நிரம்பி வழிந்த காலம் அது! படிப்பதற்கு உரிமை இல்லாத, தீண்டாமை பற்றியெரிந்த பின்புலத்தில், கல்விகற்று எழுந்த முதல்தலைமுறை வழக்குரைஞர்கள் தங்கள் தொழிற்பாதுகாப்புக்காகவும், சமூக பாதுகாப்புக்காகவும், அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கியது தான் MHAA.

நீதிமன்றம் – வழக்குரைஞர் தொழில் என குறுகிய வட்டத்திற்குள் இல்லாமல், MHAA சங்கம் 125 ஆண்டுகளாக பல்வேறு சமூக போராட்டங்களில் முக்கிய பங்காற்றியுள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் துவங்கி, சமீபத்திய ஈழ ஆதரவு போராட்டங்கள் வரை அனைத்தும் இதற்கான வரலாற்று சான்றுகள்!

ஆசியாவிலேயே மிகப்பெரிய வழக்குரைஞர் சங்கமாக, ஒற்றுமையோடு இருப்பதும், சமூக அக்கறையோடு செயல்படுவதும் ஆளும் வர்க்கத்திற்கும், அரசுக்கும் எப்பொழுதும் கண்ணை உருத்துகின்றன. இதன் பின்னணியில் தான், TNAAவிற்கு அங்கீகாரம் தந்த பின்னணியை பார்க்கவேண்டும்.

TNAA உருவான பின்னணி

வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம்
பா.ம.க-வின் சாதிவெறி அரசியலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

2004-ல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சுபாஷன்ரெட்டி தனது ஆண்டைத்தனத்தை காட்டும்விதமாக, “நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் கையை நீட்டி பேசக்கூடாது, சத்தமாக பேசக்கூடாது” என்பது போன்ற 25 அடிமை விதிகளை பிறப்பித்தார். MHAA-வின் அப்போதைய சங்கத்தலைவராக இருந்த பிரபாகரன் யோக்கியமானவராக இருந்திருந்தால், வழக்குரைஞர்களைத் திரட்டி போராடி இதை முறியடித்திருக்கவேண்டும்.
மாறாக, சுயமரியாதைகொண்ட வழக்குரைஞர்கள் “பொதுக்குழுவை கூட்டுங்கள்” என போராடியபொழுது போராட்டத்தை முறியடிக்கும் விதமாக தனது அடியாட்களைக் கொண்டு வன்முறையை ஏவி, வழக்குரைஞர் சமூகத்திற்கு துரோகமிழைத்தார், அவர்.

களத்தில் நின்ற வழக்குரைஞர்கள் திருப்பி அடித்ததில், பிரபாகரனும், அவரது அடியாட்களும் துண்டைக்காணோம், துணியைக் காணோம் என தலைதெறிக்க ஓடினார்கள். தற்காலிக தலைமையை தேர்ந்தெடுத்து போராட்டத்தை முன்னெடுத்து வெற்றியும் பெற்றார்கள், வழக்குரைஞர்கள். அன்றிலிருந்து பிரபாகரன் சங்கத்தலைவராக இருந்தாலும் பயத்தில் MHAA அலுவலகம் பக்கம் வருவதேயில்லை. அருகில் உள்ள மரத்தடியில்தான் தனக்கு விசுவாசமான ஆட்களைக் கொண்டு தொடர்ந்து கூட்டம் நடத்தியதால், ”மரத்தடி பிராபகரன்” என்று அழைக்கப்பட்டார்.

சென்னை - காவல்துறை, வழக்குரைஞர்கள்
2009-ம் ஆண்டு ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்த சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் மீது போலீஸ் காட்டுமிராண்டி தாக்குதல் நடத்தியது குறித்து வினவில் வெளியான படம்.

நீதிபதி சுபாஷன்ரெட்டிக்கு விசுவாசமாக செயல்பட்டதற்கு கைமாறாக பல பெரிய வழக்குகளில் வழக்குரைஞர் ஆணையராக (Advocate Commissioner) நியமிக்கப்பட்டு, நேரடியாகவும், செட்டிங் செய்து மறைமுகமாகவும் நிறைய கல்லா கட்டினார். இதற்கு பிறகு வழக்குரைஞர்களால் ’எட்டப்பன்’ என ‘அன்போடு’ அழைக்கப்பட்டார்.

2007 வரை MHAA – சங்கத் தேர்தலில் நின்று தொடர்ந்து தோல்வியுற்ற பிரபாகரன், இனி ஜெயிக்கமுடியாது என உணர்ந்து, 2008-ல் TNAA என்ற சங்கத்தை தனியாக உருவாக்கினார்.
சட்டையை மாற்றிக் கொண்டு அடுத்த பஞ்சாயத்துக்குக் கிளம்பும் வடிவேலுவைப் போல பிராபாகரன்!

நீதிமன்ற நிகழ்ச்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட நான்கு சங்க பிரதிநிதிகளை அழைப்பது போல, தனது சங்கத்தையும் அழைக்கவேண்டும் என பிரபாகரன் கோரியதை 29-04-2009 அன்று அனைத்து நீதிபதிகளின் முழுஅமர்வு நிராகரித்தது. இதற்கு பிறகு தான், TNAA-விற்கு 2715 சதுர அடியிலான தனிக்கட்டிடத்தை மூன்று நீதிபதி கொண்ட குழு இரகசியமாக ஒதுக்கியது.

உயர்நீதி மன்றம்
காவல்துறையிடம் அடிவாங்கிய பிறகும் நடவடிக்கை எடுக்க மறுத்த நீதிபதிகளைப் பற்றி வினவில் வெளியான கேலிச்சித்திரம்

தமிழ்நாடு பார்கவுன்சில் அனுமதி பெற்றுவிடவேண்டும் என்ற முயற்சியில், பார்கவுன்சில் உறுப்பினர்களில் 25 பேரில் 23 பேர் எதிராக வாக்களித்து அங்கீகாரம் தர மறுத்தார்கள். (21-10-2010)

இதற்கு இடைப்பட்ட காலத்தில், பிரபாகரன் பார்கவுன்சில் தேர்தலில் வழக்கமான சித்து விளையாட்டுகளினால் ஜெயித்து உறுப்பினராகி, அதையே தேசிய அளவில் விரிவுபடுத்தி அகில இந்திய பார்கவுன்சிலிலும் உறுப்பினரானார். இந்த வாய்ப்பையும், தனது செல்வாக்கையும் பயன்படுத்தி, தனது விசுவாசிகள் பார்கவுன்சிலில் இருந்த தைரியத்தில், மீண்டும் முயற்சி செய்த பொழுது 06-07-2013-ல் 23 பேரில் 13 பேர் எதிராக வாக்களித்து அங்கீகாரம் தர மறுத்தார்கள்.

இப்படி பலமுறை நிராகரிக்கப்பட்டும், எவ்வித அறிவிப்பும் இல்லாமல், MHAA உள்ளிட்ட எந்த சங்கத்திடமும் கருத்தும் கேட்காமல், 08-03-2015-ல் நடந்த தமிழ்நாடு பார்கவுன்சில் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இறுதியில் ஒரு செட்டப்போடு திணிக்கப்பட்டு, வேல்முருகன் எதிர்த்து வாக்களித்தும், K.K.S. ஜெயராமன், யுவராஜ் என இரண்டு உறுப்பினர்கள் வாய்மொழியாக எதிர்த்தாலும் மற்ற அனைவரும் வாக்களித்து TNAA-விற்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தல் கூத்து!

உயர்நீதிமன்றத்தில் தமிழ்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதிடும் உரிமைக்காக நடந்த வழக்குரைஞர்களின் போராட்டம் (கோப்புப் படம்)

பார்கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தல் நடந்த பொழுது, வாக்காளர்களான வழக்குரைஞர்களுக்கு நட்சத்திரவிடுதியில் சரக்கு விருந்து, சுற்றுலா, ரொக்கப்பணம், கவர்ச்சிகரமான பொருட்கள் என பல லட்சங்கள் வாரியிறைக்கப்பட்டு, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல் போலவே அத்தனை சீரழிவுகளும் பச்சையாக வெளிப்பட்டன. அந்த சமயத்தில் நமது மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC) அமைப்பு சார்பில் “குவார்ட்டர் சரக்கும், கோழிபிரியாணியும் வழக்குரைஞர்கள் உரிமையை பாதுகாக்காது” என சுவரொட்டியும், பிரசுரமும் தயாரித்து, சென்னை உயர்நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் ஒட்டினோம், விநியோகித்தோம்.

இந்தப் பின்னணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பல வகைகளிலும் கவனித்தும், சரிகட்டியும் தான் TNAA-விற்கு இப்பொழுது அங்கீகாரம் வாங்கியுள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஏற்கனவே, சமூகத்தின் போக்கில் ஜனநாயக விழுமியங்கள் அரிதாகி வரும் காலக்கட்டத்தில் TNAA உருவாக்கும் ஊழல் பண்பாடு விஷவிதை போன்றது. இதை கருவிலேயே அழிப்பது தான் சமூகத்திற்கு நல்லது!

அரசின் உறுப்புகளில் ஒன்றான நீதிமன்றமும், விதிமாறாமல், வர்க்கசார்புடனேயே எப்பொழுதும் நடந்துகொள்கிறது. சட்டக்கல்லூரியில் தரமான கல்வி மாணவர்களுக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதில் அரசு மிக கவனமாக நடந்துகொள்கிறது. இந்தச் சூழலை பிரபாகரன் போன்ற வகைமாதிரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தங்களுக்கென்று அடியாட்படையை கட்டியமைத்து கொள்கிறார்கள்.

நீதிபதிகள் நியமன விசயத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்காமல், கொலீஜியமுறையில் (அரசியல், சாதி, வாரிசு அடிப்படையில்) தேர்ந்தெடுத்து, மக்களைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காத, ஜனநாயகத்தின் வாசனை கூட அறிந்திராத அரசு சார்பாக மட்டுமே சிந்திக்கக் கூடிய பல நீதிபதிகள் பதவிக்கு வருகிறார்கள். இப்படிப்பட்ட நீதிபதிகளுக்கு கூஜா தூக்க எதிர்ப்புகளை சமாளிக்கும் திறனும், செல்வாக்கும், அடியாட்படையும் கொண்ட பிரபாகரன் போன்ற புரோக்கர்கள் கச்சிதமாக பொருந்துகிறார்கள். பிரபாகரன் கடந்த வந்த பாதையை கூர்ந்து கவனிப்பவர்கள் இதை புரிந்துகொள்ளமுடியும்.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

சுபாஷன்ரெட்டி விசயத்தில் தோற்றுப்போன பிரபாகரன் சில ஆண்டுகளுக்குள் தனக்கு கீழே ஒரு ”சாம்ராஜ்யத்தை” உருவாக்கியது இந்தப் பின்னணியில்தான்!

இந்த விஷசூழலில் பாதிக்கப்படுவது புரோக்கர் வழக்குரைஞரின் ’உதவியும், கருணையும்’ இல்லாமல் சாதாரணமாக தொழில் நடத்தும் பெரும்பான்மையான வழக்குரைஞர்கள் தான்! இந்த பாதிப்பு வழக்குரைஞர்களோடு நின்றுவிடுவதில்லை. வழக்காடிகளாக வரும் பொதுமக்களையும் கடுமையாக பாதிக்கிறது.

இந்தப் பின்னணியில், புரோக்கர் வழக்குரைஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் நமது ஒன்றிணைந்த சங்கமான MHAA-வில் சில குறைகள் இருந்தாலும், இந்தப் போராட்டத்தை துவக்கமாகக் கொண்டு தொடர்ந்து போராடி, குறைபாடுகளை சரிசெய்துவிடலாம். ஆனால், TNAA என்ற கருங்காலி சங்கத்தை இயங்க அனுமதித்தோம் என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

ஈழப்படுகொலைகளை கண்டித்து, தமிழக போராட்டங்களில் முன்னணியில் நின்ற தமிழக வழக்குரைஞர்களை ஒடுக்குவதற்காக, 2009 பிப்ரவரி 19 ல் தாக்குதல் தொடுப்பதற்கு அரசிற்கு ஏவல்நாயான காவல்துறை தேவைப்பட்டது. இனி வருங்காலத்தில் கருங்காலி சங்கமே அந்த வேலையை செய்யும். ஆளும் வர்க்கமும், அரசும், ஊழல் நீதிபதிகளும் தாம் நினைத்ததை எல்லாம் கருங்காலி சங்கத்தைக் கொண்டே கச்சிதமாக செய்துமுடிப்பார்கள்!

இப்பொழுது போராட தவறினால், வழக்குரைஞர்களின் ஒற்றுமை குலையும்! துரோகங்கள் நம்மை சூழும்! நமது உரிமைகள் பறிபோகும்! எனவே, உறுதியாய் நின்று, கருங்காலி சங்கத்தை ஒழித்துக்கட்ட இறுதிவரை போராடுவோம்!

வழக்குரைஞர் மில்ட்டன்,
செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.
தொடர்புக்கு : 9094666320

சொத்த வித்து திங்கறான் தறுதல – வெண்பாக்கம் கூட்டம்

0
குஜராத் படுகொலை முதலமைச்சர் மோடி
குஜராத் படுகொலை முதலமைச்சர் மோடி

மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங்கின் நினைவு நாளை முன்னிட்டு “மோடியின் ஆட்சி : ‘தேசிய’ப் பேரழிவு !” என்கின்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் பகுதியில் 15-03-2015 மாலை 5.30 மணியளவில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவர் தோழர் சரவணன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் சிறப்புரையாற்றினார். வெண்பாக்கம் பகுதி தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடினர். கூட்டத்தில் ஆக்ஸில்ஸ் இந்தியா கிளை மற்றும் அருகாமை பகுதி தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்திற்கு முன் தெரு முனைபிரச்சாரம் செய்யும் போது இரண்டு போலீசு வேன் பின் தொடர்ந்தது. வெண்பாக்கத்தில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளிலும் பத்து, பத்து போலீசு காவல் என தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

“தோழர் பகத்சிங் பாதையில் இளைஞர்கள் போராட முன் வர வேண்டும்” என்று அழைக்கும் “அந்த வீரன் இன்னும் சாகவில்லை” என்னும் புரட்சிகர பாடலை பகுதி பெண் தோழர்கள் பாட கூட்டம் துவங்கியது.

மோடி இரட்டை முகம்
பாசிசமும், கார்ப்பரேட் பாசமும் இணைந்த மோடி

தலைமையுரை ஆற்றிய தோழர் S. சரவணன் “வெள்ளை ஆதிக்கத்தின் கீழ் கொடுமையாக சுரண்டப்பட்ட இந்திய உழைக்கும் மக்களின் விடுதலைப்பாதை, புரட்சிகர அரசியலின் கீழ் அணிதிரள்வதே என்பதை உழைக்கும் மக்களின் எழுச்சிகரமான போராட்டங்களின் மூலம் உணர்ந்த தோழர் பகத்சிங் மக்களின் போராட்டத்தை கட்டியமைத்தார். இதற்கு மாறாக, காந்தியின் துரோகம் உணர்சிகரமான மக்களின் போராட்டங்களை வெள்ளை அரசாங்கத்திற்கு வால் பிடித்து செல்லும்படி திசை திருப்பியது.

இந்நிலையில் பெருந்திரளான மக்களை போரட்ட திசையில் அணி திரட்ட, 23 வயதில் துக்கிலேறிய தோழர் பகத்சிங்கின் லட்சிய பாதையே இந்நாளில் நமக்குத் தேவை. எனவே நாம் பகத்சிங்ன் வாரிசுகளாக செயல்பட வேண்டும்.

இன்றய மோடி அரசின் அவசரசட்டத்திருத்தம் என்பது கார்ப்பரேட் நலன்களுக்காக, கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, தொழிலாளர் நலச் சட்டத்திருத்தம் ஒபாமா இந்தியா வருகைக்கு பின் இராணுவ தளவாட தயரிப்பு, அணுசக்தி தயாரிப்பு, அணுசக்தி இழப்பீடு மசோதா நிறைவேற்றம், பொருளாதார வர்த்தக நலன் சார்ந்த ஒப்பந்தம் அனைத்தும் நடைமுறைப் படுத்தப்பட்டால் நாடு மீள முடியாத பேரழிவில் சிக்கி விடும். இதை எதிர்த்து போராட பகத்சிங் நினைவு நாளில் உறுதியேற்போம்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

அதன் பின்னர் பிரதமர் என்பவர் நாட்டுச் சொத்தை விற்கும் தறுதலை என “சொத்த வித்து திங்கறான் தறுதல” என்கின்ற பாராளுமன்ற ஆட்சியையும் அம்பலப்படுத்தும் பாடல் பாடப்பட்டது.

அமெரிக்காவுக்கு நாட்டை விற்கும் மோடி
அமெரிக்காவுக்கு நாட்டை விற்கும் மோடி

அதன்பின்னர் தோழர் முகுந்தன் உரையாற்றினார்.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத் சிங்கின் நினைவு நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் அம்பத்தூர் பகுதியில் கண்டன கூட்டமும், திருச்சியில் ஆர்ப்பாட்டமும் நடத்தவிருக்கிறோம். அதனை விளக்கும் விதத்தில் இந்த தெருமுனைக் கூட்டத்தை தோழர்கள் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.

‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்கின்ற தொழிற்சங்கம் எப்படி மோடியின் ஆட்சி : ‘தேசிய’ப் பேரழிவு ! என்கின்ற தலைப்பில் கூட்டம் நடத்தலாம். இது ஒரு தொழிற்சங்கம். போனஸ், சம்பளம், ஊதிய ஊயர்வு போன்ற சலுகைகளுக்காகத் தானே குரல் கொடுக்க வேண்டும்’ என்று சிலருக்கு சந்தேகம் வரலாம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மார்க்சிய லெனினிய அரசியலை ஏற்றுக் கொண்டு இருக்கின்ற நக்சல்பரி அமைப்பை சேர்ந்த தொழிற்சங்கம். அதாவது பாராளுமன்ற ஜனநாயகம் என்கின்ற இந்த அமைப்பின் மூலம் மக்கள் பிரச்சனைகளுக்கு விடிவோ தீர்வோ காண முடியாது. அதற்கு புரட்சிதான் வேண்டும்.

தற்போது அரசியல் கட்சிகள் எல்லாம் முதலாளிகளுக்காக ஆட்சி செய்கின்ற கட்சிகளாகத்தான் இருகின்றன. இந்த அமைப்பை தூக்கி எறிந்து உழைக்கும் மக்களுக்கான ஒரு அரசமைப்பை தொழிலாளர் தலைமையில் நிறுவ வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதோடு தொழிலாளர் உரிமைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறது. ஆகவே தான், “மோடியின் ஆட்சி : ‘தேசிய’ப் பேரழிவு !” என்கின்ற தலைப்பில் கூட்டம் நடத்தி கொண்டிருக்கின்றோம்.

ஊதிப் பெருக்கப்பட்ட மோடி பிம்பம்
ஊதிப் பெருக்கப்பட்ட மோடி பிம்பம்

மோடி ஆட்சிக்கு வந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது. “இதற்கு முன்பு இருந்த மன்மோகன் சிங்கின் ஆட்சி ஊழல் நிறைந்துள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை” என்றும், “மன்மோகன் சிங் ஆட்சி செய்ய லாயக்கு அற்றவர்” என்றும், “மோடி குஜராத்தில் தொடர்ந்து நான்கு முறை ஆட்சி செய்கிறார்” என்றும், “அவர் ஆட்சிக்கு வந்தல் மக்களுக்கு நல்லதை செய்வார்” என்றும் இந்த ஊடகங்கள் அனைத்தும் ஒளி வட்டம் போட்டன.

அந்த வேலையை புதிய தலைமுறை தொலைக்காட்சி நன்றாகவே செய்தது. ஒரு வாரத்துக்கு முன்னாடி புதிய தலைமுறை தொலைகாட்சி நிறுவனத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்தது. அதை பயங்கரவாதிகள் வைத்ததாகச் சொன்னார்கள். ஆனால் இந்து இளைஞர் சேனாவை சேர்ந்தவர்கள், “நாங்கள் தான் இதைச் செய்தோம். இந்த ஊடகம் தொடர்ந்து இந்து மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செய்திகளை பரப்பி வருகிறது. ஆகவே தான் நாங்கள் குண்டு போட்டோம். நான் திருச்சியில் கைதாகிறேன். மற்றவர்கள் ஏழு பேர் சென்னையில் இரண்டு மணி நேரத்தில் ஆஜராவார்கள்” என்று சொன்னார்.

அப்பவும் ஊடகங்கள் சமூகவிரோதிகள் தான் இதைச் செய்தார்கள் என்று செய்தி பரப்பின. இந்த ஊடகங்கள் தான் மோடிக்கு ஒளி வட்டம் போட்டன.

மேலும், காங்கிரசு தனியார் மயத்திற்கு வால் பிடிக்கிறது என்று கூறிய பா.ஜ.க இன்று கார்ப்பரேட் நலன் சார்ந்த சட்ட திருத்தங்களை முன்வைத்து அவசர சட்டமாக நிறைவேற்றி வருகிறது மாணவர்கள் விவசாயிகள் கடன் பெறுவதில் கெடுபிடிகள் காட்டும் வங்கிகள் கார்ப்பரேட்டுகளுக்கு மக்கள் சேமிப்பான வங்கி பணத்தை வாரி இறைக்கின்றன.

கடந்த ஒன்பது மாதகால சட்டதிருத்தங்கள் அனைத்தும் இந்திய நாட்டை பேரழிவில் சிக்கவைக்கும். முதலாளிகளின் வாராக்கடனுடன் கடன் கொடுக்க முடியாமல் நடக்கும் விவசாயிகளின் தற்கொலைகளை ஒப்பிட்டு பார்த்தால் உழைக்கும் மக்கள் நேர்மையானவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். பதியவைத்தார். மேக் இன் இந்தியா திட்டம் என்பது எப்படி மோசடியானது என்பதை நகைச்சுவையாக விளாக்கினார். அதாவது இந்தியாவில் எந்த பொருளும் உற்பத்தி செய்யவில்லையா? என்கின்ற விதத்தில் நிறைவாக மோடி என்பவன் எட்டப்பன் மீர்ஜபார் தொண்டைமான் மொத்தமும் சேர்ந்த முழுவடிவம் என்பதை அம்பலப்படுத்தி பகத்சிங் பாதையில் போராட அறைகூவி உறையை நிறைவு செய்தார்.

ஓட்டு சீட்டு அரசியல் வாதிகளோ, அமைச்சர்களோ வந்தால் கூட, இவ்வளவு போலீசு இருந்து இருக்காது. ஐம்பது போலீசு, பத்து உளவுத்துறை போலீசு, நாலு சப் இன்ஸ்பெக்டர்ஸ், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு டி.எஸ்.பி, தெரிந்து இரண்டு வீடியோ கேமரா, தெரியாது என நினைத்து நாலு போட்டோ கேமரா, இரண்டு வீடியோ கேமரா என பந்தாவுடன் மிரட்டினார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பகுதியை சேர்ந்த பெண் தோழர்கள் “போராட்டம் வேணாமா, போலீசு வேணாமா, போனசும் சம்பளமும் தானா கைக்கு வந்திடுமா” என்கின்ற பாடலை பாடினார்கள்.

கூட்டம் முடிந்து நன்றியுரை கூறியபிறகும் மக்கள் கூட்டம் கலையாமல் இருந்தது. அந்த அளவுக்கு கூட்டத்தில் கட்டுண்ட மக்கள் நாட்டை கவ்வியுள்ள மோடி அபாயத்தை விரட்டுவார்கள் என்பது உறுதி.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்

சுண்டைக்காய் கால்பணம் ! சுமைகூலி முக்கால் பணம் !!

0

மிழ்நாடு மின்சார வாரியத்தின் நட்டம் கடந்த 2013-14-ம் நிதி ஆண்டில் ரூ 13,985.03 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதற்கு முந்தைய நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் நட்டம் ரூ 2,305 கோடி அதிகமாகும். மேலும், மின்வாரியத்தின் மொத்தக் கடன் ரூ 74,113.11 கோடியாகவும் அதிகரித்து, இது மாநிலத்தின் மொத்தக் கடன் சுமையில் சரி பாதியாக உள்ளது.

கருப்புக் கொடியை ஏற்றும் சிறுவீத உற்பத்தியாளர்.
அநியாய மின்கட்டண உயர்வைக் கண்டித்து தனது தொழிலகத்தில் கருப்புக் கொடியை ஏற்றும் சிறுவீத உற்பத்தியாளர்.

கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் ஏறத்தாழ ரூ 16,000 கோடி அளவிற்கு இரண்டுமுறை மின்கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், மின்வாரியத்தின் நட்டம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறதென்றால், மக்களிடமிருந்து கட்டணமாகக் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்குதான் கொட்டப்படுகிறது? மின்வாரியம் சந்தித்து வரும் நட்டத்திற்கு உண்மையான காரணம் என்ன?

குறிப்பிட்ட சில தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்ளை விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதுதான் மின்வாரியம் சந்தித்திருக்கும் நட்டத்திற்கான பிரதான காரணம் என்றும், மின்வாரியம் இதற்கு உரிய விளக்கமளிக்க வேண்டுமென்றும் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்கேற்று கேள்வி எழுப்பினர் ம.க.இ.க., பு.மா. இ.மு., மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர்கள்.

“கருத்துக்கேட்புக் கூட்டங்களில் மக்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லாமலேயே, மின்கட்டணத்தை உயர்த்துவது சரியான அணுகுமுறையல்ல” என்று கட்டணத்தை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமது கருத்தை அறிக்கையாகவும் சமர்ப்பித்திருந்தார், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்களுள் ஒருவரான நாகல்சாமி.

கருத்துக் கேட்புக் கூட்டங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் இதுவரை விடையில்லை. நாகல்சாமி எழுப்பிய கேள்விக்கும் பதிலில்லை.

“இன்று மொத்த மின் தேவையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மின்சாரத்தை தனியாரிடமிருந்து, அதிக விலை கொடுத்துக் கொள்முதல் செய்வதுதான் மின்வாரியம் சந்தித்து வரும் நட்டத்திற்கான காரணம்” என்கிறார், பொறியாளர் காந்தி.

மேலும், “ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்துவரும் உற்பத்தி நிலையங்களில் பராமரிப்பில் குறைபாடு, இயந்திரப் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் அதன் முழு உற்பத்தித் திறனில் பகுதியளவு உற்பத்தி முடங்கியுள்ளது. இவற்றைச் சரி செய்து, புதிய மின்உற்பத்தி நிலையங்களை அரசே தன் சொந்த பொறுப்பில் தொடங்கும் பட்சத்தில், தனியாரிடம் கொள்முதல் செய்ய வேண்டிய தேவை எழாது. நட்டத்தையும் சந்திக்கத் தேவையில்லை” என்கிறார் அவர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், 2007 முதல் 2012 வரையிலான 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 7,808 மெகாவாட் திறன்கொண்ட புதிய மின் நிலையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில், ஒரு மெகாவாட் அளவுக்குக்கூட புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படவில்லை” என்று தமிழக அரசை கண்டிக்கிறது, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை.

“மின் உற்பத்தியில் தனியாரை ஊக்குவிக்க வேண்டும்; மின்வாரியத்தைப் படிப்படியாகத் தனியார்மயமாக்க வேண்டும்” என்பது அரசின் கொள்கை முடிவாகவே இருக்கிறது. இதன்பொருட்டு, பற்றாக்குறையை தொடர்ந்து பராமரிக்கவே விரும்புகிறது அரசு. இதற்குத் தோதாக, அரசின் மின்திட்டங்கள் திட்டமிட்டே முடக்கப்படுகின்றன என்பதுதான் முகத்திலறையும் உண்மை.

தற்பொழுது, பொதுத்துறை நிறுவனங்களிடம் யூனிட் 3 ரூபாய்க்கு மின்சாரம் கிடைக்கும் நிலையில், எஸ்.டி.சி.எம்.எஸ். எலெக்ட்ரிக் நிறுவனம், அபான் பவன் நிறுவனம், பென்னா எலெக்ட்ரிக்சிட்டி ஆகிய தனியார் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.5 என்ற விலையில் கொள்முதல் செய்கிறது. ஜி.எம்.ஆர்.பவர் கார்ப்பரேஷன், சாமல்பட்டி பவர் கார்ப்பரேஷன், பிள்ளை பெருமாள் நல்லூர் பவர் கார்ப்பரேஷன், மதுரை பவர் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ 14 வரையில் மின்சாரம் வாங்கப்படுகிறது.

இந்த நான்கு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் மின்சாரம், மொத்த மின்சாரத் தேவையில் வெறும் 3.22 சதவீதம்தான். ஆனால், வெறும் 3 சத மின்சாரத்தை பெறுவதற்கு, தனது ஆண்டு வருமானத்தில் 15 சதவீதமான ரூ 4,940 கோடி ரூபாயை கொட்டுகிறது அரசு. இது, முற்றிலும் அறிவுக்குப் பொருந்தாத ஒன்று. ஆனாலும், மின்வாரியம் தொடர்ந்து இதை செய்து வருகிறது.

சென்னையில் உள்ள நவீன மால் "எக்ஸ்பிரஸ் அவென்யு"
தமிழக அரசு வழங்கும் விலை மலிவான மின்சாரத்தில் மினுக்கும் சென்னையில் உள்ள நவீன மால் “எக்ஸ்பிரஸ் அவென்யு”

மேலும், ஜி.எம்.ஆர். நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கக் கூடாதென்று, நாகல்சாமி எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், அவரது எதிர்ப்பை மீறி, யூனிட் ஒன்றுக்கு ரூ 12.19 பைசா வீதம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் எஞ்சிய இரு உறுப்பினர்கள் அனுமதியளித்திருக்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள், இவர்களின் நோக்கத்தை சந்தேகிக்கத்தக்க வகையில்தான் அமைந்துள்ளன.

இவற்றுக்கெல்லாம், “மின்வெட்டைத் தவிர்த்து, மின்பற்றாக்குறையைச் சமாளிக்கும் பொருட்டே தனியார் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலைகொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டிய இக்கட்டில் தள்ளப்பட்டிருப்பதாக” ஒற்றை வரியில் வாயடைக்க எத்தணிக்கிறது, தமிழக அரசு.

2003-04 நிதியாண்டில் 39,240 மில்லியன் யூனிட்டுகளாக இருந்த தமிழகத்தின் மொத்த மின்சாரத் தேவை தற்பொழுது 91,642 மில்லியன் யூனிட்டாக அதிகரித்திருக்கிறது. புதிய மின் இணைப்பு, மின்சாதனப் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பின் காரணமாக சாமானிய மக்களின் மின்பயன்பாடு அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், ஏறத்தாழ, இரண்டரை மடங்குக்கு மேல் மின்தேவை அதிகரித்திருப்பதற்கான காரணம் இவைமட்டுமே அல்ல! பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கும், ஐ.டி. நிறுவனங்களுக்கும் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதாக ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்; கேளிக்கை விடுதிகள், ஷாப்பிங் மால்கள், விளம்பர போர்டுகள் என மேட்டுக்குடி கும்பலின் ஆடம்பரத் தேவைகளுக்கான மின்சாரப் பயன்பாடும் அதிகரித்திருப்பதன் காரணமாகத்தான் இவ்வளவு பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழக அரசு கடுமையான மின்பற்றாக்குறையைச் சந்தித்து வரும் நிலையில், “பன்னாட்டு நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் தமக்கு தேவையான மின்சாரத்தை தாமே சொந்த முறையில் உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்” என்றோ; “உனக்குத் தேவையான மின்சாரத்தை நீயே தனியாரிடம் நேரடியாக வாங்கிக்கொள்” என்றோ அரசு கூறுவதில்லை. “எனக்கு இலாபத்தை உத்திரவாதப்படுத்த வேண்டும்; சலுகை விலையில் தடையற்ற மின்சாரம் வேண்டும்” என்று ஆணையிடுகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். அந்தக் கடமையைத் தனது சொந்தப் பொறுப்பில் எடுத்து அரசு நிறைவேற்றுகிறது. தனியார் மின்உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ 14.00 வரையில் ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்கி, அதனைச் சலுகை விலையில் இவர்களுக்கு வழங்குகிறது, அரசு.

ஒருபுறம், ஐ.டி. நிறுவனங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தடையற்ற மின்சாரத்தை வழங்கி அவர்களின் இலாபத்தை உறுதிப்படுத்தும் அதேசமயம், இதனைக் காரணம் காட்டி தனியாரிடம் கொள்ளை விலைக்கு மின்சாரத்தை வாங்குவதன் மூலம் தனியார் மின் உற்பத்தியாளர்களின் இலாபத்தையும் உத்திரவாதப்படுத்துகிறது, அரசு. இந்த இரட்டைச் சுமையையும், இதனால் ஏற்படும் நட்டத்தையும் மின்கட்டண உயர்வுகள் என்ற பெயரில் மக்களிடமிருந்து வழிப்பறி செய்கிறது, அரசு.

– இளங்கதிர்
______________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015
______________________________

டிபன் பாக்ஸ் குண்டும் நிலைய வித்வான்களும்

13

சென்ற வாரம் புதிய தலைநரை டிவி அலுவலகத்தின் மீதான டிபன் பாக்ஸ் குண்டு தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் விவாத பிரபலங்கள் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி உங்களுக்காக…

காவடி குமார்

puthiya-thalainarai-2(அகில இந்திய அம்மாவை மீண்டும் முதல்வராக்கியே தீருவோர் கழகம் – பவர்ஸ்டார் ஜனதா கட்சியின் திராவிட சேனா) :

இதுல பாத்தீங்கன்னா பட்டாச வெடிச்சதுக்கே பிரச்சினை பண்றாங்க. இந்த விவகாரத்தில் உரிய முடிவ அம்மா எடுப்பாங்க. அதுக்குப் பிறகு நாங்க அவரது வழிகாட்டலோடு உரிய நேரத்துல, உரிய வழியில கண்டிப்போம்.

சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட டிபன் பாக்ஸ் கருணாநிதி ஆட்சிகாலத்தில் செய்யப்பட்டத நீங்க பாக்கணும். இப்ப ஆட்சியில இல்லேன்னு கருணாநிதியோட குடும்ப ஆட்சி பண்ண சதிதான் இதுக்கு காரணம்.

கோனு பாம்ஸ்

(ராஷ்ட்ரீட இண்டீரியர் டிசைனிங் சங் அமைப்பின் தலைவர் மற்றும் தொண்டர், சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர், சமூக செயற்பாட்டாளர், புதிய தலைநரை நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட நடுநிலையாளர் மற்றும் அம்மா சத்தியமாக பவர்ஸ்டார் ஜனதாவின் ஆதரவாளர் அல்ல) :

இது ஒரு கொடுமையான சம்பவம். இதற்கு காரணமான இஸ்லாமிய தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

(பேட்டியாளர் குறுக்கிட்டு இந்த சம்பவத்துக்கு காரணம் இந்து “சமூக விரோதிகள்” என விளக்கியபின் சுதாரிக்கிறார்).

இந்த சம்பவத்தை இந்து அமைப்புகள் (சமூக விரோதிகள் அல்ல) செய்திருந்தாலும், அதனை அவர்களே ஒத்துக்கொண்டாலும் கோர்ட்டில் நிரூபணம் ஆகும் வரை நாம் யாரையும் இதில் குற்றம் சாட்டக்கூடாது.

தமிழ் வசை
இந்த தாக்குதலானது தாக்கியவரின் சொந்தக்கருத்து என்பதே ப.ஜ.கவின் கருத்து

தமிழ்வசை சவுண்டுராஜன் : (தமிழக தலைவர், பவர்ஸ்டார் ஜனதா கட்சி) :

நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில் அதற்கு இடையூறு செய்யும் வகையில் இத்தகைய செய்திகள் பூதாகரமாக்கப்படுகின்றன. இத்தகைய ”வெளிப்படையான” தாக்குதல்களை ப.ஜ.கவும் அதன் சகோதர அமைப்புக்களும் ஒருபோதும் செய்யாது என உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். இந்த தாக்குதலானது தாக்கியவரின் சொந்தக்கருத்து என்பதே ப.ஜ.கவின் கருத்து. அதையே என் தனிப்பட்ட கருத்து என்பதை நான் மிகத்தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

வீனிதி சானிவாசன் : ( ப.ஜ.கவின் தலைவராக இருப்பதற்கான எல்லா தகுதிகளும் கொண்ட கருத்தாளர். சவுண்டுராஜனுக்கு எதிர்கோஷ்டி)

நாட்டில் நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் ப.ஜ.கவை குற்றம் சாட்டுவது ஒரு பேஷனாகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் அதே பகுதியில் கரீம் பாய் என்பவரது வீட்டில் புதிய தலைநரை சேனல் ஓடும்போது டிவி வெடித்துவிட்டது, இது ஊடக சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் இல்லையா? அதை ஏன் இந்த போலி மதச்சார்பின்மை பேசுபவர்கள் கண்டிக்கவில்லை?? ஆகவே இந்த போலி மதச்சார்பின்மைவாதிகளை நான் கண்டிக்கிறேன்.

வம்புமணி (பாட்டாளி மைனர் கட்சி) :

அந்த குண்டு வீசியவர்கள் ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார்கள் என்பதாலும் பல்சர் வண்டியில் வந்தார்கள் என்பதாலும் அவர்கள் நாடகக் காதலர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. ஆகவே இத்தகைய குற்றங்களை தடுக்க வேண்டுமானால் இனி இளைஞர்கள் தங்கள் பெற்றோர்களிடமும், அரசிடமும், தங்கள் ஜாதிச்சங்க தலைவர்களிடமும் அனுமதி பெற்ற பிறகே காதலிக்க வேண்டும் என சட்டமியற்ற வேண்டும். மேலும் காதல் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை நாற்பதாக நிர்ணயிக்க வேண்டும்.

பொய்கோ (தலைவர், குறைவளர்ச்சி திமுக) :

பொய்கோ
ஏதென்ஸ் நகர வீதிகளிலும், ஸ்பார்ட்டகஸ் களமாடிய கப்பல்களிலும்கூட நடக்காத கொடூரம்

ஏதென்ஸ் நகர வீதிகளிலும், ஸ்பார்ட்டகஸ் களமாடிய கப்பல்களிலும்கூட நடக்காத கொடூரம் இப்போது நிகழ்ந்திருக்கிறது. கொடியவன் ராஜபக்சே வீழ்ந்த பிறகு அந்த இடத்தை நிரப்பும் ஆட்கள் இந்தியாவில் உருவாகிவிட்டார்கள். இதற்கு காரணமான பவர்ஸ்டார் அரசு விரைவில் வீழ்த்தப்படும். ஆனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இப்போது தேர்தல் வந்தாலும் ஜெயலலிதாவே ஜெயிப்பார் என்பது உறுதி.

பள்ளி செல்லும் தளிர்களுக்கு பன்னும் பக்கோடாவும் கொடுத்தனுப்பப் பயன்படும் தாயுள்ளங்களின் மனங்கவர்ந்த டிபன்பாக்ஸைப் போய் இப்படிப்பட்ட துர்கார்யங்களுக்கு பயன்படுத்தலாமா என்று அருமை தம்பி ஜெயம் பாண்டியனை அன்போடும், பண்போடும், பரிவோடும் கேட்கிறேன்.

நச்சு. கூஜா

(ப.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினர், கராத்தே, குங்ஃபூ, டேக்வாண்டோ, லொஜக் மொஜக் உள்ளிட்ட ஆரிய கலைகள் அறுபத்து நான்கையும் கற்றவர்) :

இல்லேங்கறேன் நான். டிபன் பாக்ஸ் வீசியவர்கள் ஹிந்துக்கள் என்பதால் அவர்களை சமூகவிரோதிகளாக சித்தரிக்கின்றனர் இந்த ஊடகக்காரர்கள்.

இப்படித்தான் துப்பாக்கி ஒழுங்காக வேலைசெய்கிறதா என பரிசோதனை செய்து பார்த்த கோட்சேவை தேசதுரோகியாக்கி தூக்கிலிட்டார்கள். அவனுக்கு சொந்தமான தோட்டாவை கள்ளத்தனமாக கைப்பற்றி ஜின்னாவிடம் ஒப்படைக்க முயன்ற காந்தியை தேசப்பிதாவாக்கிவிட்டார்கள். பெஸ்ட் பேக்கரியில் வெஜ் பப்ஸ் சாப்பிடச் சென்ற ஸ்வயம் சேவகர்களை கொலைகாரர்களாக்கிவிட்டனர்.

ஹிந்து இயக்கத்தை சேர்ந்தவர்கள் குஜராத், முசாபர்நகர் பாணியில் எதையும் ஜனநாயகபூர்வமாக எதிர்கொள்வார்கள். இப்படி முகத்தை மூடாமல் யாருக்கும் சேதாரம் வராதவகையில் டிபன்பாக்ஸ் வீசமாட்டார்கள்.

சீன் தமிழன் பேமான்

(தலைவர், நாமம் தமிழர் கட்சி, காரத்தமிழர் முன்னணி மடத்தின் மூத்த ஆதீனம்) :

இந்த குண்டை வீசியவரின் பெயர் பொரி உருண்டை என சொல்லப்படுகிறது. பொரிஉருண்டை தமிழனின் உணவே கிடையாது எனும்போது இது வந்தேறி திராவிடர்களின் தாக்குதல் என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லையே. தம்பி, முப்பாட்டன் முருகன் காலத்துல டிபன் பாக்சே கிடையாது.. கட்டுசாதம் மட்டும்தான். இவ்வளவு ஏன், அப்பன் ராவணன் காலத்துல வெடிகுண்டு கிடையாது. இவையெல்லாம் வடுகர்கள் வருகைக்குப் பின்னால் நிகழ்ந்த சீரழிவுகள். வேல்கம்பும் வீச்சரிவாளும்தான் தமிழனின் மீட்டெடுக்கப்படவேண்டிய தொன்மங்கள். ஆகவே டிபன் பாக்ஸ் குண்டுவீச்சு போன்ற வடுக சூழ்ச்சிக்கு தமிழ்ப் பிள்ளைகள் பலியாகிவிட வேண்டாம்னு கேட்டுக் கொள்கிறேன்.

காமகோபாலன்
அமைதியான முறையில் கேமராவை உடைத்து, செய்தியாளரை தாக்கிய எங்கள் இயக்க தேசபக்தர்கள் மீது காவல்துறை நடவடிக்கையை பொந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது

காம கோபாலன் (தலைவர், பொந்து முன்னணி) :

இது அந்த டிவிக்காரர்களே செய்த சூழ்ச்சி. அங்கே வேலை பார்க்கும் பலரும் கோமாதா மாமிசம் சாப்பிடுபவர்கள் என்பதே அது ஒரு தீவிரவாதிகள் கூடாரமாக மாறிவிட்டது என்பதற்கான முதல் சாட்சி. அந்த குண்டை வீசியதாக கைது செய்யப்பட்டவர் இதுவரை ஒருமுறைகூட அவர் வீட்டில் அவரே குண்டு வீசிக்கொள்ளவில்லை. இதுவே அவர் இந்து இயக்கத்தை சேர்ந்தவர் அல்ல என்பதற்கான நிரூபணம். அமைதியான முறையில் கேமராவை உடைத்து, செய்தியாளரை தாக்கிய எங்கள் இயக்க தேசபக்தர்கள் மீது காவல்துறை நடவடிக்கையை பொந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்க பசுவதையை உடனே தடை செய்ய வேண்டும்.

மாதவன் ( வழக்கறிஞர், ப.ஜ.க ) :

மக்கள் எங்களுக்கு பெரும்பான்மையை நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே இதுபோன்ற கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஐ.எஸ் தீவிரவாதிகள் பத்திரிக்கையாளர்களை கழுத்தறுத்து கொல்கிறார்கள் அதைப்பற்றி இந்த கம்யூனிஸ்ட்டுகள் பேசுவதில்லை. இது அவர்களது இரட்டை வேடத்தை காட்டுகிறது. ப.ஜ.க சார்பாக இத்தகைய நடவடிக்கைகளை பவர்ஸ்டாரே முன் தேதியிட்டு கண்டித்துவிட்டார் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாற.நாராயணன் (ப.ஜ.க) :

இது புதிய தலைநரை டிவியின் அராஜக மனப்பான்மையை காட்டுகிறது. சொறிமுத்துதான் எங்கள் கட்சியோடு இணைய வந்த முதல் தைரியசாலி. அவரது தயவால்தான் தேர்தல் துட்டு முதல் டிவி டிபேட்டு வரை பட்டையக் கிளப்புகிறோம். சும்மாயிருந்த எங்களை கேமரா ஆசைகாட்டி பிரபலமாக்கிவிட்டு, இப்போது அந்த டிவி விவாதத்துக்கு போகக்கூடாது என கட்சி அறிவிக்கும் நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

கடந்த சில நாட்களாக ஸ்டூடியோ வெளிச்சம் படாமல் கைகாலெல்லாம் நடுங்குகிறது. எங்களது இந்த பிரச்சினையைப் பற்றி பேச இங்கே எந்த ஊடகமும் தயாரில்லை. இதன் பின்னால் இருக்கும் அன்னிய நாட்டின் சதியை மத்திய அரசு கண்டுபிடிக்க வேண்டும்.

ரோம சுப்பிரமணியம் (கல்வியாளர், பொருளாதார ஆலோசகர், பொருளாதார வல்லுனர், வக்கீல் குமாஸ்தா, அரசியல் ஆர்வலர், லெமன் ரைஸ் நிபுணர், பவர்ஸ்டார் பரிஷத்தின் அகௌரவ ஆலோசகர், மற்றும் ப.ஜ.க.வோடு எந்த சம்பந்தமும் இல்லாதவர்) :

இதற்கு பொறுப்பு நாற்பதாண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள்தான். வளர்ச்சிக்கு எதிரான பெரியாரின் கருத்துக்கள் தமிழகத்தில் இன்னமும் இருப்பதால் ஹிந்து சேவை அமைப்புக்கள் வடமாநிலங்களைப் போல இங்கே வளர முடியவில்லை. மேலும் கடந்த சில காலமாக இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள் என்று ஒரு செய்திகூட வருவதில்லை. இப்படி இருந்தால் எப்படி அவர்களால் அரசியல் செய்ய முடியும்? ஆகவே இந்த பிரச்சினையை கொஞ்சம் மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும் என்பது என் அபிப்ராயம்.

மிஸ்.ஆர்.சேகர் ( ஆர்.பிஸ்ஸ்.பிஸ்ஸ் பிரமுகர்) :

இதனை இரண்டு விதமாக பார்க்க வேண்டும். டிபன் பாக்ஸ் வீசியது ஒரு குற்றம். அதில் இருந்த குண்டு வெடித்தது ஒரு சம்பவம். குற்றத்தை ஒரு சம்பவமாக பார்க்கலாம், ஆனால் சம்பவத்தை குற்றமாக பார்ப்பது தவறு. டிபன் பாக்சுக்குள் குண்டு வைக்கப்பட்டதா அல்லது குண்டின்மேல் டிபன் பாக்ஸ் வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. டிவி ஆஃபீசுக்கு குண்டு வைப்பதாக இருந்தால் அதனை டிபன் பாக்சில் வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே இது டிவி அலுவலகத்தின் மீதான கோபத்தில் வைக்கப்பட்ட குண்டாக இல்லாமல் டிபன் பாக்ஸ் மீதான கோபத்தில் வைக்க்கப்பட்ட குண்டாக இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இதனை தீவிரவாதத் தாக்குதல் என குறிப்பிடுவது கடுமையான கண்டனத்துக்குரியது. சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டவர்களும் சரணடந்தவர்களும் ஹிந்துக்கள் பாரிவேந்தர் டிவியும் ஹிந்துக்களுடையது என்பதால் சம்பவத்தை தீவிரவாதம் என குறிப்பிடுவது தேசதுரோகம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவத்தை ஆர்.பிஸ்ஸ்.பிஸ்ஸ் ஏன் கண்டிக்கவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள். எங்களிடம் செயல்படுவதற்கென்று ஒரு குழுவும், கண்டிப்பதெற்கென்று ஒரு குழுவும் உண்டு. அதன்படி கண்டிக்கவேண்டிய குழு இச்சம்பவத்தை கண்டித்துவிட்டது.

பாரு நிவேதிதா (எழுத்தாளர்களை கேவலமாக விமர்சிக்கும் அவராலேயே சிறந்த எழுத்தாளர் என போற்றப்படுபவர், 2(X)IST Gold Range ஜட்டிக்காகவும் Marquis de Montesquiou 1904 Vintage Armagnac பிராந்திக்காகவும் கையேந்தும் பரம ஏழை எழுத்தாளர்) :

குண்டு வெடிப்பை எதிர்த்தால் போதிய விளம்பரம் கிடைக்காது என்பதாலும், நேற்று என் கனவில் வந்த மார்க்சிஸ்ட் எழுத்தாளர்கள் என் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியதாலும் இந்த குண்டு வெடிப்பை ஆதரிக்கிறேன். சிலியின் பிரபல எழுத்தாளர் குன்ஸ் பாமுக் இப்படி டிபன் பாக்ஸ் குண்டை வீசியே தன் எதிர்ப்பை பதிவுசெய்தவர் என்பதையும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன்.

இதற்கு முன் பிரதமரானவர்களெல்லாம் டிரஸ்ஸிங் சென்சே இல்லாமல் சின்(sin)னாக உடையணிந்து இந்தியாவை பாம்பாட்டிகளின் தேசமென்று இழிவுபடுத்துவதற்கு காரணமானவர்கள். அதை மாற்றி பத்து இலட்ச ரூபாய் கோட்டு என்று இந்த பிச்சைக்காரர்களின் தேசத்தில் உலா வந்த என் ஆருயிர்த் தலைவன் மோடியை டேமேஜ் பண்ணவே இந்த டிபன் பாக்ஸ் பாம். மோடி கோட்டுக்கு ஈடாக கிளஸ்டர் பாம் போட்டிருந்தால் கூட மன்னிக்கலாம். பிச்சைக்கார ஜெயம் பாண்டி, சிவகாசியின் நமத்துப்போன ரெண்டு பட்டாசை வாங்கி வீசியிருக்கிறான், பிளடி ஃபூல்!

சரக்கு மற்றும் மெக்சிகன் முள்ளம்பன்றி ஊறுகாய் செலவே நாளுக்கு பதினைந்தாயிரம் ஆகிறது என்பதால் உங்களுக்கு என் வங்கி கணக்கு எண் கொடுப்பது தவிர்க்க முடியாததாகிறது (இந்தியன் வங்கி, மாம்பலம் கிளை 0109812763465). இது தொடர்பாக விவாதிக்க விரும்பும் இளம்பெண்கள் என்ன இன்பாக்சில் தொடர்பு கொள்ளலாம்.

15 திரி
குஜராத்தின் வளர்ச்சியை கருத்தில் கொள்கையில் அங்கு நடைபெற்ற கலவரத்தை பொருட்படுத்தத் தேவையில்லை என்பது எனது முந்தைய நிலைப்பாடு. அதேதான் இங்கேயும்

பதினைந்துதிரி சேஷாத்ரி (மரபுரீதியான அறிவுஜீவி, மற்றும் நாளொன்றுக்கு 30 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவன் ஏழை அல்ல என்பதை அறிவியல்பூர்வமாக நிறுவியவர் – இந்த பொருளாதார ஆய்வுக்காக அமர்த்தியா சென்னுக்கு அடுத்தபடியாக நோபல் பரிசு வாங்க சாத்தியமுள்ள இந்திய விஞ்ஞானி) :

இதை குண்டுவெடிப்பாக கருத முடியுமா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. தீபாவளி பட்டாசையெல்லாம் வெடிகுண்டு என்று பேசுவோமானால் இங்கே தீபாவளியையே பயங்கரவாதிகளின் பண்டிகை என்று இடதுசாரிகள் மாற்றிவிடுவார்கள்.

குஜராத்தின் வளர்ச்சியை கருத்தில் கொள்கையில் அங்கு நடைபெற்ற கலவரத்தை பொருட்படுத்தத் தேவையில்லை என்பது எனது முந்தைய நிலைப்பாடு. அதேதான் இங்கேயும், வளர்ச்சியை கருத்தில் கொள்கையில் குண்டுவெடிப்புக்களை நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்கிறேன். என்னை எப்போதும் கிழக்கு பிராண்ட் டி ஷர்ட்டுடன் அனுமதிக்கும் புதிய தலைநுரை டிவிக்கு நன்றிகள்.

நெறியாளர் தனசேகரன் :

நேயர்களே, விருந்தினர்களது கருத்துக்களை கேட்டீர்கள். இது தொடர்பாக நாம் நேயர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பை இப்போது பார்க்கலாம்.

கேள்வி : ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் முந்தைய திமுக ஆட்சியை ஒப்பிடுகையில்,

குறைந்திருக்கிறது – 22%
கணிசமாக குறைந்திருக்கிறது – 16%
அப்படியேதான் இருக்கிறது – 62%

அந்த நேயர்களுக்கு நன்றி…

– வில்லவன்

சொத்துக் குவிப்பு வழக்கு : நீதிமன்றங்களின் கள்ள ஆட்டம்

10

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள ஜெயா-சசி கும்பல், தமது சொந்த வழக்குரைஞர்களை நம்புவதைவிட, அரசு வழக்குரைஞர் பவானி சிங்கை நம்பித்தான் மேல்முறையீட்டு வழக்கை நடத்தி வருவதாகத் தெரிகிறது.  கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் நடந்துவரும் மேல்முறையீட்டு விசாரணையில் நீதிபதி குமாரசாமி கேட்கும் கேள்விகளுக்கு அரசு வக்கீல் பவானி சிங் வாயைத் திறக்க மறுப்பதைக் காணும் எவரும் எளிதாக இம்முடிவுக்கு வரமுடியும்.  ஆனாலும், கர்நாடகா உயர்நீதி மன்ற ‘நீதியரசர்களின்’ அறிவுக்கு இந்த எளிய உண்மை புலப்படவில்லை. “ஜெயா, சசி உள்ளிட்ட நால்வரும் பெங்களூரு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விசாரணையில் பவானி சிங் அரசு வக்கீலாகத் தொடருவதை ரத்து செய்து, அவருக்குப் பதிலாக வேறொருவரை நியமிக்கும்படி கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரி தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ள கர்நாடகா உயர்நீதி மன்றம், சட்டத்தின் பொந்துகளுக்குள் புகுந்துகொண்டு பவானி சிங் அரசு வக்கீலாகத் தொடருவதற்கு மட்டுமல்ல, எதிரிகளுக்குச் சாதகமாக நடந்துகொள்ளும் அவரின் கபடத்தனங்களுக்கும் நல்லாசி வழங்கிவிட்டது.

"அரசு வக்கீல்" பவானி சிங்.
குற்றவாளிகளான ஜெயா – சசி கும்பலின் கைக்கூலியாக நடந்து கொள்ளும் “அரசு வக்கீல்” பவானி சிங்.

கிரிமினல் வழக்குகள் ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்திற்கு மாற்றப்படும்பொழுது, எந்த மாநிலத்திற்கு மாற்றம் செயப்படுகிறதோ அந்த மாநில அரசுதான் அரசு வக்கீலை நியமனம் செய வேண்டும் என வரையறுக்கிறது, குற்றவியல் நடைமுறைச் சட்டம்.  ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கை நடத்திவரும் தமிழக அரசின் இலஞ்ச ஒழிப்புத் துறை இச்சட்டத்திற்கு விரோதமாக, ஜெயா-சசி கும்பல் தமக்குப் பிணை வழங்கக் கோரி கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தபொழுது, அவ்வழக்கில் ஆஜராவதற்கு பவானி சிங்கிற்கு அனுமதி அளித்தது. இந்தச் சட்டவிரோத அனுமதி உத்தரவைக் காட்டியே, சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு எதிராக ஜெயா-சசி கும்பல் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகிவருவதையும் நியாயப்படுத்தி வருகிறார், பவானி சிங்.

இப்படிச் சட்டவிரோதமான முறையில் பவானி சிங் மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராவதை எதிர்த்துதான் அன்பழகன் ஐந்து முறை அடுத்தடுத்து கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தார். அன்பழகனின் ஐந்து மனுக்களும் கர்நாடகா உயர்நீதி மன்றத்தின் வெவ்வேறு அமர்வுகளால் விசாரிக்கப்பட்டாலும், கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி வகேலா அமர்வு தவிர, பிற அமர்வுகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு, தமது மனம் போன போக்கில் உத்தரவுகளைப் பிறப்பித்து அன்பழகனின் மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளன.

அன்பழகனின் மனு, நீதிபதி அப்துல் நசீர் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது கர்நாடகா அரசின் தலைமை வக்கீல் ரவிவர்ம குமார், “பவானி சிங் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று பலமான புகார்கள் வந்துள்ளன. அரசு தரப்பில் யார் ஆஜராக வேண்டும் என்பதில் முடிவெடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்து, மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜராகி வருவது சட்டவிரோதமானது என்பதை உறுதிப்படுத்தினார்.  எனினும், அப்துல் நசீர் அமர்வு பவானி சிங் ஆஜராவதைத் தடைசெய்ய மறுத்துவிட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக நீதிபதி ஆனந்தபைராய ரெட்டி என்ற மற்றொரு அமர்வு பவானி சிங்கிற்கு ஆதரவாக அளித்த உத்தரவை எதிர்த்து அன்பழகன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் டி.எச்.வகேலா மற்றும் அசோக் பி.இஞ்சகேரி ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தபொழுது, “குற்றவியல் நடைமுறைச் சட்டம் 24(1)-ன்படி தமிழக அரசின் அனுமதியுடன் பவானி சிங் ஆஜராகிவருவது சட்டப்படி தவறானது.  உச்சநீதி மன்றம் பவானி சிங்கை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவு, கீழ் நீதிமன்றத்துக்கு மட்டும்தான்.  கர்நாடகா அரசு இந்த வழக்கில் வழக்குரைஞரை நியமிக்காதபோது, பவானி சிங் ஆஜராகி இருப்பது சட்டத்திற்குப் புறம்பானது” என்ற கருத்துக்களை தலைமை நீதிபதி டி.எச்.வகேலா முன்வைத்தார்.

கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி.
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி.

“மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 19 நாட்களாக நடைபெற்று வருகிறது.  உச்சநீதி மன்றம் மூன்று மாதங்களுக்குள் வழக்கை முடிக்கச் சொல்லியிருக்கிறது.  இந்த நிலையில் அரசு வக்கீல் பிரச்சினையை எழுப்புவது சரியல்ல” என பவானி சிங்கின் வழக்குரைஞர் வாதிட்டபொழுது, “அதற்காகச் சட்டவிதிகளை மீறிச் செயல்பட முடியுமா?” எனக் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி வகேலா அமர்வு, “பவானி சிங்கை நீக்குவதால் எழக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அறிக்கையாக அளிக்குமாறு” அன்பழகன், பவானி சிங், கர்நாடக அரசு ஆகிய முத்தரப்பிடமும் கோரியது. இந்த விசாரணையின்பொழுதே பவானி சிங்கிற்குப் பதிலாக அரசு மூத்த சிறப்பு வழக்குரைஞர் நாராயண ரெட்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்தை கர்நாடக அரசு முன்வைத்தது.

இந்த நிலையில்தான் ஆட்சேபணை மனுவொன்றைத் திடீரென தாக்கல் செய்தார், பவானி சிங்கின் வழக்குரைஞர்.  அதில், “தலைமை நீதிபதி வகேலாதான், 23.9.2013 அன்று அளித்த உத்தரவில் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த விசாரணையிலிருந்து அரசு வக்கீல் பவானி சிங்கை நீக்கினார்.  எனவே, அவர் விசாரித்தால் உரிய நியாயம் கிடைக்காது” எனக் குறிப்பிட்டிருந்ததால், வகேலா அமர்வு அன்பழகனின் மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொண்டது.

வகேலா அமர்வு விசாரணையைத் தொடங்கியபொழுதே அவர் மீது ஆட்சேபணை தெரிவிக்காத பவானி சிங் தரப்பு, வகேலா அமர்வு தீர்ப்பு வழங்கத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் ஆட்சேபணையை  எழுப்பியிருப்பதே சந்தேகத்திற்குரியதுதான். சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கிலிருந்து பவானி சிங் நீக்கப்படுவதால், அவருக்குத் தனிப்பட்ட நட்டம் எதுவும் ஏற்படப் போவதில்லை.  ஆனால், ஜெயா தரப்புக்கு பவானி சிங்கை இழப்பது என்பது தலையில் இடி இறங்குவதற்குச் சமமானது.  ஏனென்றால், சிறப்பு நீதிமன்றத்தில் தனக்கு எதிராக பவானி சிங்தான் வாதிட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் வரை சென்று வாதாடி, நீதிமன்ற வரலாற்றில் ஒரு‘புரட்சியை’ ஏற்படுத்தியவர் ஜெயா!

கர்நாடக உயர்நீதி தன்ற தலைமை நீதிபதி வகேலா.
மேல்முறையீட்டு வழக்கில் அரசு வக்கீலாக பவானி சிங் ஆஜராகி வருவதை கேள்விக்குள்ளாக்கிய கர்நாடக உயர்நீதி தன்ற தலைமை நீதிபதி வகேலா.

ஜெயாவின் இந்த நம்பிக்கைக்கு உரியவராகத்தான் அன்று முதல் இன்றுவரை நடந்துவருகிறார் பவானி சிங்.  சொத்துக்குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த போது இறுதிகட்ட வாதத்தைத் தொடங்காமல் வழக்கை இழுத்தடிக்க நானாவிதமான முட்டுக்கட்டைகளையும் போட்ட வர்தான் பவானி சிங். இதனால் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான அவர் மீது அபராதமும் விதித்தார், சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா. அவ்வழக்கில் பவானி சிங் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டதே முறைகேடானது, சட்டத்திற்குப் புறம்பானது என்பது அன்பழகன் தரப்பால் நிரூபிக்கப்பட்டு, கர்நாடகா உயர்நீதி மன்றத்தால் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதி மன்றம் சென்ற ஜெயா-சசி கும்பலுக்கு ஆதரவாக, பவானி  சிங் பதவி நீக்கப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டது நீதிபதிகள் சவுகான்-பாப்டே அமர்வு. இதே நீதிபதிகள்தான் சிதம்பரம் நடராசர் கோவில் நிர்வாகத்தைத் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதை ரத்து செய்தும், சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிரான வழக்கிலும் பார்ப்பனக் கும்பலுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தவர்கள் என்பதைச் சொத்துக்குவிப்பு வழக்கோடு இணைத்துப் பார்த்தால்தான் பவானி சிங்கிற்கு ஆதரவாகப் பெறப்பட்ட தீர்ப்பு சட்டப்படியானது அல்ல, அது இன்னொரு பார்ப்பன மனுநீதி என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயா-சசி கும்பல் கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்த வழக்கில், குற்றவாளிகளுக்குப் பிணை வழங்குவதை எதிர்ப்பதாக முதலில் கூறிய பவானி சிங், பின்னர் தீர்ப்பு வழங்கும் நேரத்தில் பிணை வழங்கலாம் என பல்டி அடித்தார்.  இதற்காக, அப்பிணை மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகராவால் பவானி சிங் நீதிமன்றத்திலேயே கண்டிக்கப்பட்டார். “தனக்குச் சம்பளம் போதவில்லை என்ற காரணத்தை முன்வைத்து பவானி சிங் பதவி விலகல் கடிதம் அளித்துவிட்டதாகவும், எனினும், அவரைக் குற்றவாளிகள் தரப்பு வழக்குரைஞர்கள் சந்தித்து சமாதானப்படுத்தியதாகவும்” சில நாட்களுக்கு முன் இந்து நாளிதழ் செய்தியொன்றை வெளியிட்டது.  அரசு வக்கீலும் குற்றவாளிகள் தரப்பும் எந்தளவிற்கு கூடிக்குலாவி வருகிறார்கள் என்பதை இந்தச் செய்தி அம்பலப்படுத்திக் காட்டியது.

உச்சநீதி மன்ற நீதிபதி (ஓய்வு) பி.எஸ்.சௌஹான்
அரசு வக்கீலாக முறைகேடாக நியமிக்கப்பட்ட பவானி சிங்கின் நியமனத்தை உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்ற நீதிபதி (ஓய்வு) பி.எஸ்.சௌஹான் (கோப்புப்படம்)

வழக்கு தொடர்பாக நீதிபதி குமாரசாமி கேட்கும் கேள்விகளுக்குப் பதிலை அளிக்க முன்வராமல் வழக்கையே சீர்குலைக்கும் சதித்தனங்களில் இறங்கியிருக்கிறார், பவானி சிங்.  அக்கேள்விகளுக்கு அன்பழகன் தரப்பு வழக்குரைஞர்கள்தான் உரிய பதிலை அளித்து வருகின்றனர். வழக்கின் நடைமுறை இவ்வாறிருக்க, கர்நாடகா உயர்நீதி மன்றமோ, “மேல்முறையீட்டு வழக்கில் தன்னை மூன்றாவது நபராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்; அரசு வக்கீலுக்கு உதவியாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்” எனக் கோரி அன்பழகன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து, “மூன்றாவது தரப்பின் உதவி சிறப்பு நீதிமன்றத்தோடு முடிந்துவிட்டது” என்ற கேலிக்கூத்தான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

பவானி சிங் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சட்டப்படியான தீர்ப்பை அளித்தவர் என்பதைத் தாண்டி நீதிபதி வகேலா மீது சந்தேகம் கொள்வதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. ஆனால், பவானி சிங் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகிவருவது சட்டத்திற்குப் புறம்பானது என்பது மட்டுமல்ல, அவர் அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்து வருகிறார் என்பதற்காக சிறப்பு நீதிமன்றத்தாலும் உயர்நீதி மன்றத்தாலும் கண்டிக்கப்பட்டிருக்கிறார்; அவரின் இக்களவாணித்தனத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. சட்டப்படியான தீர்ப்பை எழுதிய வகேலா விசாரணையிலிருந்து விலகிக்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்படுகிறார். ஆனால், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுடன் கூடிக்குலாவி வரும் பவானி சிங் அரசு வக்கீலாகத் தொடருவதை, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலுள்ள 24(8) என்ற பிரிவை வலிந்து மேற்கோள் காட்டி அனுமதித்திருக்கிறது நீதிபதிகள் என்.குமார் மற்றும் ஏ.வீரண்ணா அமர்வு. பவானி சிங்கின் ஒவ்வொரு நடவடிக்கையும் மேல்முறையீட்டு வழக்கைச் சீர்குலைக்கும் விதத்தில் இருந்துவரும் நிலையில், “மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருப்பதால் அதனைப் பாதிக்கும் எந்தவிதமான முடிவையும் எடுக்க முடியாது” என நகைக்கத்தக்க உத்தரவை பிறப்பித்துள்ளனர் அந்நீதிபதிகள்.

கடந்த டிசம்பரில் ஜெயாவின் பிணை காலத்தை நீட்டித்துத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தத்து, இந்த வழக்கை 90 நாட்களுக்குள் முடித்துக் கொடுக்கும்படி தன்னிச்சையான முறையில் ஒரு கட்டப்பஞ்சாயத்து ஏற்பாடைச் செய்து அறிவித்தார். ஆனால், இந்த 90 நாள் கெடு உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் உத்தரவாக வெளியிடப்படவில்லை என்பதால், அதன் சட்டபூர்வ தகுதியே கேள்விக்குரியது. ஆனால், பவானி சிங் அரசு வக்கீலாக ஆஜராகிவருவதைத் தடை செய்ய மறுத்துவிட்ட கர்நாடக உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகள் இந்த வழக்கை 90 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென்ற உச்சநீதி மன்றத்தின் கட்டப்பஞ்சாயத்தை, மீறமுடியாத மதக்கட்டளை போலச் சித்தரிக்கின்றனர்.

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து.
சொத்துக்குவிப்பு வழக்கை 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற வாய்வழி உத்தரவின் மூலம் கட்டப் பஞ்சாயத்து செய்துவைத்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து.

சிறப்பு நீதிமன்றத்தில் பவானி சிங் நியமிக்கப்பட்டதே வல்லுறவுக்கு இணையான ஒரு முறைகேடு. பிறகு வல்லுறவு செய்த குற்றவாளிக்கே பெண்ணை திருமணம் செய்து வைப்பதைப் போல, விசாரணை நீதிமன்றத்தில் அவர்தான் அரசு வழக்குரைஞர் என்பதால் உயர்நீதி மன்றத்திலும் அவரே நீடிக்கிறார். இந்த அநியாயத்தை கேள்வி கேட்டால், “90 நாட்களில் பிள்ளையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்” (உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்) என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருப்பதால், பவானி சிங்தான் புருசன் என்பதை இந்தக் கட்டத்தில் கேள்விக்குள்ளாக்க முடியாது என்று கூறி விட்டது கர்நாடக உயர்நீதி மன்ற அமர்வு. பின்னர் எப்போது கேட்பது? உச்சநீதி மன்ற உத்தரவுப்படி முதலில் பிள்ளையைப் பெற வேண்டுமாம். திருமணம் செல்லுமா, செல்லாதா என்பதை அப்புறம் முடிவு செய்வார்களாம். இந்த உவமானம் நகைச்சுவையோ, மிகையோ அல்ல; நடந்துகொண்டிருப்பதுதான்.

கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்திருக்கிறார், அன்பழகன். “இந்த மனுவையும், ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கையும் படித்துப் பார்த்த பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலும்” எனக் கூறி விசாரணையை மார்ச் 9-ம் தேதிக்குத் தள்ளிவைத்திருக்கிறது நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால்-பி.சி.கோஸ் அமர்வு. ஆனால், பெங்களூரு உயர்நீதி மன்ற விசாரணைக்கு இவர்கள் இடைக்காலத் தடை ஏதும் விதிக்கவில்லை. பவானி சிங் பெங்களூரு உயர்நீதி மன்றத்தில் அரசு வக்கீலாக ஆஜராகிக் கொண்டிருப்பார், உச்சநீதி மன்ற நீதிபதிகள் தமது சௌகரியப்படி விசாரணையை நடத்துவார்கள் என்பதைவிட கேலிக்கூத்தான நீதி பரிபாலன முறை வேறு இருக்க முடியுமா?  ஊழலுக்கு எதிராக உதார்விட்டு வரும் உச்ச, உயர்நீதி மன்ற நீதிபதிகள் பிரம்மஸ்ரீ கிரிமினல்கள் விடயத்தில் சட்டப்படி அல்லாமல், மனுதர்மப்படிதான் நடந்துகொள்வார்கள் என்பதற்கு இது இன்னுமொரு உதாரணமாகும்.

– செல்வம்
______________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015
______________________________

நியூட்ரினோவுக்கு ஆதரவாக போலிசு – போலிகள் கூட்டணி

8

நியுட்ரினோ திட்டத்தை விரட்டியடிப்போம்பொட்டிப்புரம் கிராம சுற்றுவட்டாரங்களில் மின்னும் நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு சுவரெழுத்துக்கள் இவை.

பொட்டிப்புரத்தை ‘போர்க்களமாக்குவோம்’ என்ற வார்த்தை ‘தீவிரவாதமாக ‘ இருக்குதாம்! இதை ஒழிப்பதற்காக எழுத்துகளை அழிக்கிறார்களாம்! அதுவும் எப்படி?

இப்படத்திலுள்ள வீட்டு உரிமையாளரிடம் சென்று, “உனக்கு பட்டா, பத்திரம் இருக்கிறதா?எடு பார்ப்போம்?” என்று மிரட்டியுள்ளது போலீசு.!

பயந்துபோன அந்த அப்பாவி விவசாயியிடம் “ஒழுங்காக மேலே உள்ள எழுத்துகளை அழித்துவிடு. இல்லையென்றால் வீட்டை காலிபண்ண வேண்டியதிருக்கும்” என்று போலீசு மிரட்டியுள்ளது.

சிரித்த முகத்துடன் நம்மை எழுத அனுமதித்த விவசாயி பீதியுடன் அதை அழித்திருக்கிறார். இப்படி மக்களை பீதியூட்டிதான் ‘தீவிரவாத’த்தை ஒழித்திருக்கிறது போலீசு!

நியுட்ரினோ திட்டத்தை விரட்டியடிப்போம்
விவிமு சுவரெழுத்து அழிக்கப்பட்ட சுவர்

ஆனால் நியுட்ரினோ பற்றி அந்த விவசாயிக்கு இருக்கும் அச்சத்தை ஒழிக்க முடியாது என்ற உண்மை, அந்த ‘அறிவாளி’ போலீசுக்கு தெரியாது!

மக்களிடம் உள்ள அந்த மனஉணர்வு தான் போராடும் எங்களின் பலம்!

வீடுவீடாக சென்று பிரசுரம் கொடுத்து கிராம மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் எங்கள் பணி தொடர்கிறது.

சமீபத்தில் போடி நகரில் ‘நியூட்ரினோ எதிர்ப்பு கூட்டியக்கம்’ தொடங்கியிருப்பது இதற்கு மேலும் வலுவூட்டியிருக்கிறது

theni-anti-neutrino-campaign-1
நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பது பயங்கரவாதமென்று சுவரெழுத்தை அழிக்கிறது போலீசு!

“நியூட்ரினோ திட்டத்தை விரட்டியடிப்போம் !” என்ற முழக்கத்துடன் விவசாயிகள் விடுதலை முன்னணியின் சுவரெழுத்து பிரச்சாரம் இவ்வட்டார கிராமங்கள் முழுவதும் நடந்து வருகிறது. தோழர்கள் கிராமங்கள் தோறும் வீடு வீடாக சென்று பிரசுரம் கொடுத்து ஆதரவு திரட்டி வருகின்றனர். போகும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆதரவு பெருகிவருகிறது.

இவ்வளவு நடந்துவிட்டால்தான் நமது போலீசுக்கு மூக்கு வியர்த்துவிடுமே. 10/03/2015 அன்று இராசிங்காபுரம் முதல் பொட்டிபுரம் வரை எழுதிய சுவரெழுத்துக்களை அந்தந்த வீட்டு உரிமையாளர்களை கூப்பிட்டு மிரட்டி அவர்களை வைத்தே அழிக்க வைத்துள்ளது போடி நகர போலிசு.

நியுட்ரினோ திட்டத்தை விரட்டியடிப்போம்இனறுவரை தமிழக அரசின் சுற்று சூழல்துறையின் அனுமதி பெறாமலே நடந்துவரும் நியூட்ரினோ திட்டத்தை பாதுகாக்கத்தான் போடிநகர் போலிசு பாடுபட்டு வருகிறது.

இன்னொரு பக்கம் போடி நகரில் அனைத்து வர்த்தகர்கள் சங்கம் மற்றும் சில அமைப்புகள் இணைந்து நாளை நியூட்ரினோவுக்கு எதிராக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இதையறிந்த சி.பி.ஐ (எம்) கட்சியினர் போடிநகர் முழுவதும் கடைகடையாக சென்று அறிவியல் இயக்கம் தயாரித்த அய்.என்.ஓ (INO) விளக்க புத்தகத்தை இலவசமாக கொடுத்து ஆதரவு திரட்டியுள்ளனர்.

அதாவது, போலீசு விட்ட வேலையை ‘தோழர்கள்’ செய்துள்ளனர்.

போலிகளும் -போலீசும் கூட்டு! நல்ல கூட்டணிதான். திரு வெங்கடேஸ்வரன் இவர்களின் கடந்த கால ‘தோழர்’ என்பதால் அந்த தோழமை உணர்வோடு ஐ.என்.ஓ.-வின் பிரச்சார காண்ட்ராக்ட் வேலையை இவர்களுக்கு வாங்கி கொடுத்து இருப்பாரோ என்று சந்தேகம் நமக்கு வருகிறது..

காண்ட்ராக்ட் என்றால் கொட்டேசன் இருக்கும்.!திட்ட மதிப்பீடும் இருக்கும்.! ஏலமும் நடந்திருக்கும்! போட்டியாளர்களை வீழ்த்த உள்குத்து வேலைகளும் நடந்திருக்கும்.

இதிலெல்லாம் நம் ‘தோழர்கள்’ அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது நமக்கும் தெரியும். நாரதர்களின் வேலை தொடரட்டும். …அப்பதான நம்ம வேலைக்கு ஒரு வீரியம் இருக்கும்!

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
கம்பம்

கடியப்பட்டணம் : கன்னியாகுமரியில் ஒரு அத்திப்பட்டு – நேரடி ரிப்போர்ட்

3

டியப்பட்டணம் மீனவர் கிராமத்தில் ஊரில் குடிக்க தண்ணீர் கேட்டால் கொஞ்சம் யோசிக்கும் நிலைதான் இருக்கிறது. நாள் முழுவதும், நாள்தோறும் கடல் பொங்கும் தண்ணீரை பார்த்துக் கொண்டு, அலைச் சத்தத்துக்கு மத்தியில் வாழும் அந்தக் கடற்கரை கிராமத்து மக்கள் நன்னீருக்குக் கொடுக்கும் விலை அதிகம்.

கடியப்பட்டணம் கடற்கரை
நாகர்கோவிலுக்கு தென் மேற்கே அரபிக் கடலோரம் அமைந்திருக்கிறது கடியப்பட்டணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு தென் மேற்கே அரபிக் கடலோரம் அமைந்திருக்கிறது கடியப்பட்டணம். மொத்தம் 2,200-க்கும் அதிகமான குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன; மக்கள் தொகை 10,000-ஐ எட்டுகிறது.

கடியப்பட்டணம்
“கீழே எல்லாம் பாறை, உடைத்து கிணறு தோண்ட முடியாது”

கடலோர கிராமமான இங்கு கிணறு தோண்டினால் நன்னீர் கிடைப்பது சாத்தியமில்லை. 3,000 ரூபாய் கட்டணத்தில் நீரூற்று எங்கு இருக்கிறது என்று பார்த்துச் சொல்லுபவர்கள், “கீழே எல்லாம் பாறை, உடைத்து கிணறு தோண்ட முடியாது” என்று சொல்லி விட்டார்கள்.

கடியபட்டணம் ஊருக்காக தனியாக போடப்பட்ட குடிநீர் திட்டத்தின் கீழ் குருந்தன்கோடு ஊராட்சியில் இருந்து குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டது. அடுத்தடுத்து தேவைக்கேற்ப பக்கத்து ஊர்களில் நிலம் வாங்கி அல்லது புறம்போக்கு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து ஊரின் நன்னீர் தேவையை நிறைவு செய்து வந்தனர்.

கடியப்பட்டணம் குடிநீர்த் திட்டம்
பயன்றறு போகும் குடிநீர்த் திட்டம்

அந்த கிணறுகள் வறண்டு விடவோ, உப்பு நீர் புகுந்து விடவோ, சேறு கலந்த நீராக மாறி விடவோ செய்ய தண்ணீர் வாரத்துக்கு ஒரு நாள்தான் வருகிறது. அதுவும், கருப்பு தேநீர் நிறத்தில வருகிறது. அதை குடிக்கவோ, சமைக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ பயன்படுத்த முடியாது.

கடியப்பட்டணம் நீர்
குடிக்கவோ, சமைக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ பயன்படுத்த முடியாது.

அந்த ஊர் மக்கள் தினமும் கடலோடு போராடித்தான் தமது வாழ்க்கையை ஈட்டிக் கொள்கிறார்கள். கட்டு மரத்தில் போய் தூண்டில் மீன் பிடிப்பவர்களும் சரி, படகில் போய் வலை வீசுபவர்களும் சரி, மீன்பாடு குறைந்து வருவதால் வெளியூர்களுக்கோ ஏன் வெளிநாடுகளுக்கோ போய் பெரிய படகுகளில் வேலை செய்பவர்களும் சரி, ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, கடலோடு போராடித்தான் சம்பாதிக்கிறார்கள். அடுத்த தலைமுறையாவது படித்து வேலைக்குப் போகட்டும் என்று லட்சங்கள் செலவழித்து பொறியியல் படிப்பு படிக்க வைத்த இளைஞர்களும் வேலை கிடைக்காமல் கடல் தொழிலுக்கே போக ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடியப்பட்டணம் மீனவர்கள்
தினமும் கடலோடு போராடித்தான் வாழ்க்கை

இந்நிலையில் தண்ணீர் வேண்டுமென்றால் வசதியைப் பொறுத்து குடிப்பதற்கு 35 ரூபாய் கொடுத்து 20 லிட்டர் பாட்டில் வாங்கிக் கொள்ளலாம். சமைக்க, குளிக்க, துவைக்க 450 ரூபாய் கொடுத்து 2,000 லிட்டர் வண்டி தண்ணீர் தருவித்து தொட்டிகளில் நிறைத்துக் கொள்ளலாம்.

கடியப்பட்டணம் வள்ளியாறு
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட ஊரை ஒட்டி கடலில் கலக்கும் வள்ளியாற்றுத் தண்ணீர் குடிநீராகவும், துணி துவைக்கவும், குளிக்கவும் பயன்பட்டது.

இந்த ஊருக்கு குறைந்தது 1,000 வருட வரலாறு உண்டு என்பதாக கிராமத்து திருச்சபை மற்றும் ஊர் மக்கள் ஒரு நூலையே வெளியிட்டிருக்கிறார்கள். “1,000 ஆண்டுகளாக விலை கொடுத்தா தண்ணீர் வாங்கிக் கொண்டு இருந்தார்கள்” என்று நீங்கள் கேட்கலாம். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட ஊரை ஒட்டி கடலில் கலக்கும் வள்ளியாற்றுத் தண்ணீர் குடிநீராகவும், துணி துவைக்கவும், குளிக்கவும் பயன்பட்டது. வேனிற்காலத்தில் கூட ஊற்றுநீரால் மக்களின் தாகம் தணித்தது.

வள்ளியாறு
நோய்களின் ஊற்றுக்கண்ணாக வள்ளியாற்று நீர்

அந்த ஆற்று நீர் சிறிது சிறிதாக மாசடைந்து இப்போது நோய்களின் ஊற்றுக்கண்ணாகி விட்டிருக்கிறது. ஆற்றின் மேல்மடை கிராமங்களின் சாக்கடை நீரை முறையாக மடை கட்டி ஆற்றில் கொண்டு விட்டிருக்கிறார்கள். மீன் சந்தைகளின் கழிவுகளை உள்ளே கொட்டுகிறார்கள். இதை செய்ய வேண்டிய பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாக அமைப்புகள் எல்லாம் எதிர்மறையில் செயல்படுகின்றன.

மணல் ஆலை கழிவுகள்
மணல் ஆலையின் கழிவு மணலை ஆற்றிற்கு அருகில் கொட்டி வைத்திருக்கிறார்கள்.

மணவாளக்குறிச்சியில் உள்ள மணல் ஆலையின் கழிவு மணலை ஆற்றிற்கு அருகில் கொட்டி வைத்திருக்கிறார்கள். “மணல் ஆலையினர் ராட்சத குழாய் ஒன்றை ஆற்றுப் படுகையில் புதைத்திருக்கின்றனர், அது தண்ணீரை உறிஞ்சுகிறதா கழிவை கொட்டுகிறதா என்று தெரியவில்லை” என்கிறார் கடியப்பட்டணத்தின் ஜார்ஜ் என்ற மீனவர்.

கடியப்பட்டணம் மீனவர்
“ஓடுற தண்ணியில முங்கிக் குளிக்க யாருக்காவது புடிக்காம இருக்குமா?”

“ஓடுற தண்ணியில முங்கிக் குளிக்க யாருக்காவது புடிக்காம இருக்குமா? ஆனா, எங்க வீட்டுக்கு பின்னால இருக்கிற ஆத்துல நான் முங்கிக் குளிச்சி 10 வருசமாச்சு” என்கிறார் அவர். வசதி குறைவான பெரும்பான்மையான மற்றவர்கள் தண்ணீர் ஓடும் நாட்களில் இந்த ஆற்றில்தான் குளிக்கவும், துணி துவைக்கவும் செய்கிறார்கள். ஆற்றுத் தண்ணீர் ஓட்டம் நின்று தேங்கி விட்டால், இரண்டே நாட்களில் துர்நாற்றம் வீச ஆரம்பிப்பதாகவும், அதில் குளிப்பது சாத்தியமில்லை என்றும் கூறுகின்றனர், மக்கள்.

ஆற்றில் குளித்தால் புற்றுநோய் உட்பட தோல் சம்பந்தமான நோய்கள் வருவதாகச் சொல்கிறார்கள் ஊர்மக்கள். அந்த ஊரில் 110 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கு 60 பேருக்கு புற்று நோய் வரும அபாயம் இருக்கிறது என்று ஒரு மருத்துவக் குழு ஆய்வு செய்து தெரிவித்திருக்கிறது.

கடியப்பட்டணம் தண்ணீர் பஞ்சம்
சுனாமியின் அழிவுகளிலிருந்து மீண்டெழுந்து வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டனர் இம்மக்கள். ஆனால், ஆளும் வர்க்க மனிதர்கள் தோற்றுவித்த நன்னீர் பஞ்சம் அவர்களை மீளமுடியாதபடி அலைக்கழிக்கிறது

2004 சுனாமியில் இதே வள்ளியாற்றில் குளித்துக் கொண்டு இருந்த 32 பேர் ஆழிப்பேரலைகளால் அடித்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். இயற்கைப் பேரழிவான சுனாமியின் அழிவுகளிலிருந்து மீண்டெழுந்து வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டனர் இம்மக்கள். ஆனால், ஆளும் வர்க்க மனிதர்கள் தோற்றுவித்த நன்னீர் பஞ்சம் அவர்களை மீளமுடியாதபடி அலைக்கழிக்கிறது.

ஜான் பாஸ்கோ
72 வயதிலும் கடலுக்கு போனால்தான் அவருக்கும், அவரது வீட்டுக்காரம்மாவுக்கும் சோறு

ஜான் பாஸ்கோ தாத்தாவுக்கு 72 வயதாகிறது. 5 பெண்கள், 1 பையன். எல்லோருக்கும் திருமணமாகி தனியே வசிக்கிறார்கள். இன்றும், இந்த வயதிலும் அவர் கடலுக்கு போனால்தான் அவருக்கும், அவரது வீட்டுக்காரம்மாவுக்கும் சோறு. வள்ளியாற்றில் தண்ணீர் ஓட்டம் நின்று விட்ட காலங்களில், அதில் குளிக்க முடியாமல் போன நாட்களில், சாப்பிட வைத்திருக்கும் பணத்தை தண்ணீருக்கு திருப்பிவிட வேண்டியிருக்கும். இல்லையென்றால், செங்குழி ஓடைக்கும், பெரியகுளம், வெள்ளிச்சந்தை பகுதிகளுக்கும் கால்நடையாகவும், பேருந்துகளிலும் குளிப்பதற்குச் செல்ல வேண்டும்.

கடியப்பட்டணம்
“மக்களுக்காக யாரும் இல்லை”

ஒரு தொலைபேசியில் அழைத்தால் 450 ரூபாய்க்கு வண்டியில் தண்ணீர் கொண்டு இறக்குவதற்கு ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். அதிகமில்லை, ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள்ளாக இருந்தே நன்னீரை பிடித்துக் கொண்டு வருகிறார்கள்.

“ஊர்மக்கள் எல்லோரும் சேர்ந்து ஏதாவது முயற்சி செய்து அங்கிருந்து நல்ல தண்ணீர் கொண்டு வர நிரந்தர ஏற்பாடு செய்யக்கூடாதா” என்று உங்களுக்குத் தோன்றலாம்.

அதையும் செய்திருக்கிறார்கள். 45 லட்ச ரூபாய் செலவழித்து, ஆற்றங்கரையின் வடக்கு பகுதியில் ஊற்று நிலம் வாங்கியிருக்கின்றனர் இவ்வூர் மக்கள். அதில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி ஊர்மக்கள் எல்லோருக்கும் நல்ல தண்ணீர் கொண்டு வருவதற்கான மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணையும் பெறப்பட்டது. ஏற்கனவே கடியபட்டணத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய் சாலை வழியாக போடப்பட்டுள்ளது. ஆனால், ஊர்மக்கள் வாங்கிப் போட்டிருக்கும் நிலத்திலிருந்து சாலைக்கு குழாய் கொண்டு வர அனுமதிக்க மறுத்து தகராறு செய்கிறார்கள், பக்கத்து ஊர் ஆண்டைகள்.

கடியப்பட்டணம் தண்ணீர் பஞ்சம்
மக்கள் வாழ்க்கையோ தண்ணீர் வியாபாரிகளின் கொடூர பிடிக்குள் சிக்கியிருக்கிறது.

“எங்க ஊருக்குத் தண்ணி இல்லாம போயிடும்” என்று சொல்லி அதை தடுத்து நிறுத்தி விடவே, இப்போது தண்ணீர் பிரச்சனை நீதிமன்ற வாய்தாக்களில் சிக்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் வாழ்க்கையோ தண்ணீர் வியாபாரிகளின் கொடூர பிடிக்குள் சிக்கியிருக்கிறது. பெப்சிக்கும், கோக்கிற்கும், பெரும் தொழில் நிறுவனங்களுக்கும், இல்லை வணிக நோக்கில் தண்ணீரை விற்கும் நாட்டில் ஒரு கிராமத்து மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதற்கு மட்டும் ஆயிரம் தடைகள்.

இதில் தலையிட்டு சரி செய்ய வேண்டிய அரசியல்வாதிகள்தான் தூண்டி விடும் வேலையைச் செய்கின்றனர். “மீனவ கிறிஸ்தவர்களுக்கு ஏன் இந்து நாடார் தண்ணீர் தர வேண்டும். அவங்க எல்லாம் நமக்கா ஓட்டு போடுவாங்க” என்று பா.ஜ.க அந்த ஊரில் அரசியல் செய்கிறது. “குடிக்கத் தண்ணி கூட தர மாட்டேன்னு சொல்ற கல் நெஞ்சு வேறு எங்கிருந்து வரும்” என்று கேட்கிறார்கள் கடியப்பட்டணம் மக்கள். அந்த கல்நெஞ்சு பாரதிய ஜனதாவுக்கு நிறையவே இருக்கிறது. அதனால்தான் பொன் இராதா கிருஷ்ணன் இங்கே எம்பியாகி மந்திரியாகவும் இருக்கிறார்.

“தஞ்சாவூர் விவசாயத்துக்கு தண்ணி விடச் சொன்னா கர்நாடகாகாரனும் இதையேதான் சொல்றான். வேற மாநிலம், வேற மொழி பேசக் கூடியவனுக்கே நியாயம் சொல்றோம் நாம. ஆனா, இங்க பக்கத்து ஊர்க்காரனுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்க மாட்டேங்கிறான்.” என்கிறார் ஜார்ஜ்.

கடியப்பட்டணம் பெண்கள்
“தஞ்சாவூர் விவசாயத்துக்கு தண்ணி விடச் சொன்னா கர்நாடகாகாரனும் இதையேதான் சொல்றான். வேற மாநிலம், வேற மொழி பேசக் கூடியவனுக்கே நியாயம் சொல்றோம் நாம. ஆனா, இங்க பக்கத்து ஊர்க்காரனுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்க மாட்டேங்கிறான்.”

மாவட்ட நிர்வாகம் நினைத்தால் ஒரே இரவில் தனது ஆணையை அமல்படுத்தி, இந்த பிரச்சனையை சரி செய்து விடலாம். ஆனால், ஊருக்கு வந்து மனுக்கள் வாங்கிச் செல்வதோடு அதிகாரிகளின் பணி முடிந்து விடுகிறது. கேரளாவுக்குள் அணை கட்டி தண்ணியைத் திருப்பி தமிழ்நாட்டு விவசாயத்துக்கு உதவும்படி நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. “அந்த வகையில கேரளாக்காரங்கள கோயில் கட்டி கும்பிடணும். இங்க சாதி, மதம்னு பேசிகிட்டு அரசியல் பண்றானுங்க. அதிகாரிங்க ஏ.சி ரூமுக்குள்ள உக்காந்து கிட்டு சம்பளம் வாங்கிட்டு போறானுங்க. மக்களுக்காக யாரும் இல்ல” என்கிறார் ஜார்ஜ்.

கடியப்பட்டணம் மக்கள்
“அதிகாரிங்க ஏ.சி ரூமுக்குள்ள உக்காந்து கிட்டு சம்பளம் வாங்கிட்டு போறானுங்க.”

ஊருக்கு பொதுவாக தண்ணீர் திட்டம் நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டை போடும் பா.ஜ.கவினர். 450 ரூபாய்க்கு ஒரு வண்டி என்று தண்ணீரை விலைக்கு விற்பதை எதிர்ப்பதில்லை.

போராட்டமே வழி
பா.ஜ.கவை தனிமைப்படுத்தி, மாவட்ட நிர்வாகத்தை உதைத்து எழுப்பும் வகையில் போராடுவதுதான் ஒரே வழி.

தங்களது அடிப்படை தேவையான குடிநீரை பெறுவதற்கு கடியப்பட்டணம் மக்கள் அனைவரும் இணைந்து, மற்ற மக்களிடம் நியாயத்தை எடுத்துச் சொல்லி பா.ஜ.கவை தனிமைப்படுத்தி, மாவட்ட நிர்வாகத்தை உதைத்து எழுப்பும் வகையில் போராடுவதுதான் ஒரே வழி.

வினவு செய்தியாளர்,
புகைப்படங்கள் மற்றும் கள ஆய்வில் உதவி: ஜவஹர்ஜி,
நன்றி: கடியப்பட்டணம் மக்கள்.

தெருக்களில் இந்து பயங்கரவாதிகள் ! பதவிகளில் அரசு பயங்கரவாதிகள் !!

2

ரேந்திர மோடியின் கையாளும், பா.ஜ.க.-வின் தேசியத் தலைவருமான அமித்ஷா, சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கிலிருந்து, விசாரணை தொடங்கும் முன்பே விடுவிக்கப்பட்டுள்ளார். இப்போலி மோதல்கொலை வழக்கை விசாரித்து வரும் மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி கொசாவி, “அரசியல் காரணங்களுக்காக அமித்ஷா இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ள முடியாததாக, பொது அறிவுக்கு எதிரானதாக உள்ளதாகவும்” கூறி அவரை விடுவித்துள்ளார். இப்போலி மோதல்கொலை வழக்கு குறித்து இதுகாறும் மோடி-அமித்ஷா கும்பல் என்ன கூறி வந்ததோ, அதனையே தீர்ப்பாக வாந்தியெடுத்திருக்கிறது, சி.பி.ஐ. நீதிமன்றம்.

அமித் ஷாவின் அரசியல் ஆதரவு, பக்கபலத்தோடு குஜராத் மற்றும் இராசஸ்தான் மாநிலங்களில் கட்டப்பஞ்சாயத்து, தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பது மற்றும் அமித் ஷா கும்பல் இடும் வேலைகளைச் செய்துமுடிப்பது என குட்டி தாதாவாக சொராபுதீன், வலம் வந்துகொண்டிருந்தான். குஜராத்தைச் சேர்ந்த பாப்புலர் பில்டர்ஸ் என்ற கட்டிட ஒப்பந்த நிறுவனத்தின் அகமதாபாத் அலுவலகத்தை, சொராபுதீன் தலைமையில் ஒரு கும்பல் அடித்து நொறுக்கியதுடன், துப்பாக்கியால் சுட்டும் தாக்கியதாக வழக்கு ஒன்றும் பதிவாகியிருக்கிறது. இந்த மிரட்டல் வேலையை அமித்ஷாவின் ஆணையின் பேரில்தான் சொராபுதீன் செய்தான் என்பதற்கான சாட்சியங்கள் உள்ளன.

04-sorabudeen-kausan-bi
குஜராத் போலீசால் போலி மோதலில் கொல்லப்பட்ட சொராபுதீன் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சொராபுதீனின் மனைவி கவுசர் பீ.

மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை இணை அமைச்சராக இருந்து, பின்னர் மோடியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகப் பதவி விலகிய ஹரேன் பாண்டியா, 2003-ம் ஆண்டில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். குஜராத் முசுலீம் படுகொலையை விசாரித்த சிட்டிசன் டிரிபியூனலில் ஹரேன் பாண்டியா சாட்சியம் அளித்த பிறகுதான் இப்படுகொலை நடந்தது. இப்படுகொலையை முசுலீம் தீவிரவாதிகள் நடத்தியதாகப் பழி போட்ட மோடி அரசு, சில முசுலீம் இளைஞர்களைக் கைது செய்தது. ஆனால், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முசுலீம்கள் குஜராத் உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

ஹரேன் பாண்டியா கொலையில் சொராபுதீன் கும்பலுக்குத் தொடர்பிருக்கலாம் என்ற வலுவான சந்தேகங்கள் எழுந்த நிலையில்தான், சொராபுதீன் ஷேக் கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு போலி மோதலில் அகமதாபாத் நகர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சொராபுதீன் ஒரு லஷ்கர்-இ-தொபா தீவிரவாதி என்றும் அன்றைய குஜராத் முதல்வரான மோடியைக் கொலை செய்யும் திட்டத்துடன் வந்த அவரை போலீசார் மோதலில் சுட்டுக் கொன்றதாகவும் கூறியது குஜராத் போலீசு.

ஆனால் சொராபுதீனின் சகோதரர் ரூபாபுதின், தனது சகோதரர் தீவிரவாதி என்பதை மறுத்ததுடன், அன்றைய குஜராத் உள்துறை இணை அமைச்சரான அமித் ஷாவின் இரகசிய உத்தரவின் பேரிலேயே சொராபுதீன் படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சுமத்தி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், சொராபுதீனுடன் இருந்த அவரது மனைவியைக் காணவில்லை என்றும் அவரையும் போலீசார் கொலை செய்திருக்க வேண்டும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது, உச்சநீதி மன்றம். அவ்விசாரணை நடந்துகொண்டிருந்த போதே, சொராபுதீன் தீவிரவாதி அல்லவென்றும் “பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்ட போலீசார் அவரைக் கடத்திச் சென்று கொலை செய்ததாக” நீதிமன்றத்தில் தெரிவித்தது, குஜராத் போலீசு. சொராபுதீன் படுகொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது மனைவி கவுசர் பி கொலை செய்யப்பட்டதையும் குஜராத் போலீசே ஒத்துக்கொண்டது.

போலி மோதல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சொராபுதீன், அவரது மனைவி மற்றும் சொராபுதீனின் கூட்டாளியான துளசிராம் பிரஜாபதி ஆகியோர் ஆந்திர மாநிலத்தில் ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அப்பேருந்தை மறித்த போலீசார் அவர்களை குஜராத்திற்குக் கடத்தி வந்துள்ளனர். அங்கு சொராபுதீனும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளை நேரில் பார்த்த சாட்சியான பிரஜாபதி மற்றொரு போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த உண்மைகள் அம்பலமாகிவிட்ட நிலையில், “இது பணம், பதவிக்காக நடந்த கொலை” என்ற குஜராத் போலீசின் வாதத்தை உச்சநீதி மன்றம் ஏற்க மறுத்து, விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.

04-amit-sha-cleanupசி.பி.ஐ விசாரணையைத் தொடங்கிய பின்னர் உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன. குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருடன் அமித் ஷாவும் கைது செய்யப்பட்டார். மூன்று மாதங்கள் கழித்து அமித் ஷா பிணையில் வெளியே வந்துவிட்டாலும், அவர் குஜராத்திற்குச் செல்லக்கூடாது என நீதிமன்றம் தடைவிதித்தது. இதற்கிடையே குஜராத் மாநில அரசு, தங்களது விசாரணையில் தலையிடுவதாகவும், அதிகாரிகளை அச்சுறுத்துவதாகவும் சி.பி.ஐ. முறையிட்டதால் வழக்கு விசாரணை மும்பைக்கு மாற்றப்பட்டது.

ஆனால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு வழக்கை சீர்குலைக்கும் சதி வேலைகள் மேலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்டன. வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்த அமித் ஷாவைக் கடுமையாகக் கண்டித்து, “அடுத்த அமர்வில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதி உத்பத் அடுத்த நாளே பூனேவிற்குத் தூக்கியடிக்கப்பட்டார். அதன் பிறகு நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிரிஜ்மோகன் லோயா, தான் தங்கியிருந்த நாக்பூர் அரசு விருந்தினர் மாளிகையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அதற்குப் பிறகு வந்த நீதிபதி கொசாவி ஆரம்பம் முதலே இந்து மதவெறிக் கும்பலின் தலையாட்டி பொம்மையாகச் செயல்படத் தொடங்கினார்.

வழக்கு விசாரணையைத் தொடங்காமல் அதனை நிறுத்திவைத்துவிட்டு, வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரும் அமித் ஷாவின் மனுவை முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார், அவர். இரண்டே நாட்களில் அம்மனு மீதான விசாரணையை முடித்து, இரண்டு வாரங்களில் தீர்ப்பெழுதி அமித்ஷாவை வழக்கிலிருந்து விடுவித்தும் உத்தரவு பிறப்பித்துவிட்டார்.

சி.பி.ஐ. தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தையும் அவர் பொதுபுத்திக்கு எதிரானது என புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டார். “சொராபுதீன் கொலை செய்யப்பட்ட அன்று, உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசுவதை விட்டு, கீழ்நிலை அதிகாரிகளாக இருந்த, கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது ஏன்” என்று சி.பி.ஐ. எழுப்பிய கேள்விக்கு, “தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துவரும் காலகட்டத்தில், திறமையான அமைச்சர் கீழ்நிலை அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது தவறல்ல” என்று அமித் ஷா தரப்பிலிருந்து நீதிபதியே பதிலளிக்கிறார்.

அமித் ஷாவுக்கும் சொராபுதீனுக்கும் தொடர்பிருப்பதை நிரூபிக்கும் தஸ்ரத் பட்டேல் மற்றும் ராமன் பட்டேல் சகோதரர்களின் வாக்குமூலங்களையும் நீதிபதி ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விட்டார்.

அமித் ஷா, மோடியின் வலது கரம் என்பதற்காக மட்டும் விடுவிக்கப்படவில்லை. அமித் ஷாவின் விடுதலை என்பது மோடி தன்னைத்தானே விடுவித்துக் கொள்வதற்கு ஒப்பானது. 2002-ம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றதிலிருந்து அம்மாநிலத்தில் நடந்த அனைத்து மோதல் படுகொலைகளிலும் மோடி-அமித் ஷா கூட்டணி சூத்திரதாரியாகச் செயல்பட்டுள்ளது. சொராபுதீன், துளசிராம் பிரஜாபதி, இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட போலி மோதல் படுகொலைகள் அனைத்தும் மோடியை முசுலீம் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் அச்சமற்ற தேசியத் தலைவராகக் காட்டும் அரசியல் நோக்கத்தோடு நடத்தப்பட்டவைதான். குஜராத் போலீசு மோடிக்காக ஒரு இளம் பெண்ணை வேவு பார்த்ததுகூட அமித் ஷா உத்தரவிட்டு நடந்ததுதான். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அமித் ஷாவை உ.பி.மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக மோடி நியமித்தார். அமித்ஷா, தன் பங்குக்கு முசாஃபர் நகர் கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தி, ஜாட் வாக்குவங்கியை பா.ஜ.க.வை நோக்கித் திருப்பி விட்டார்.

குஜராத் முசுலீம் படுகொலை வழக்கிலிருந்து மோடியை ஏற்கெனவே கழற்றிவிட்டுவிட்டது, பார்ப்பன ராகவன் கும்பல். மோடி, தன்னைச் சம்பந்தப்படுத்தும் போலிமோதல் படுகொலை வழக்குகளிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால், ஒன்று தனது கூட்டாளிகளை அவர் போட்டுத் தள்ள வேண்டும்; அல்லது வழக்கிலிருந்து அவர்களை விடுவிப்பதோடு, வழக்குகளையும் ஊத்தி மூட வேண்டும். கார்ப்பரேட் கும்பலால் பிரதமர் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டுள்ள மோடி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டாவது வழியைக் கையில் எடுத்திருக்கிறார். சொராபுதீன் கொலையிலிருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டிருப்பதும், மற்ற போலிமோதல் கொலை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் வன்சாரா, பாண்டே, ராஜ்குமார் பாண்டியன் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டு, அதிகாரமிக்க பதவிகளில் மீண்டும் அமர வைக்கப்பட்டிருப்பதும் இதனை உறுதி செய்கின்றன. தமது அதிகாரம் மற்றும் சுயநலனுக்காக எத்தகைய கிரிமினல் குற்றத்தையும் செய்யத் தயங்காத மோடி-அமித் ஷா-வன்சாரா என்ற கிரிமினல் கும்பலிடம் நாடு சிக்கியிருப்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.

– அழகு
______________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015
______________________________

சிறீரங்கம் : தமிழகத்தின் அவமானச் சின்னம்

2

டந்து முடிந்த சிறீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் குத்தாட்ட ரிக்கார்டு டான்ஸ், சாராயம், பிரியாணி, கறிவிருந்து, ரொக்கப்பணம் என்று உழைக்கும் மக்களைச் சீரழிப்பதில் கிரிமினல் ஜெ. கும்பல், புதியதொரு ‘புரட்சி’யைச் சாதித்திருக்கிறது. சதியால் தான் தண்டிக்கப்பட்டதாகப் புளுகிய ஜெ. தன்னைத் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற மாபெரும் ‘மக்கள் முதல்வர்’ என்று காட்டுவதற்காக நன்கு திட்டமிட்டு, தனது பணபலம், அதிகாரபலத்தைக் கொண்டு மக்களைப் பகிரங்கமாக விலைபேசியும், அரசு அதிகார அமைப்புகளை ஊழல்மயப்படுத்தி சரணடைய வைத்தும், கடந்த முறை அ.தி.மு.க. வென்ற வித்தியாசத்தை விட அதிகமான வாக்குகளைப் பெற்று இந்த வெற்றியை “வாங்கியுள்ளது.”

தி.மு.க.வை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்ற வெறியோடு தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாகவே மீறி, தேர்தல் அதிகாரிகள் முன்னிலையே உழைக்கும் மக்களைப் பணத்தாலும் பரிசுப் பொருட்களாலும் விலைபேசி, “இப்படித்தான் செய்வேன், நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்” என்ற ஆணவத்தோடு கொக்கரித்தது, கிரிமினல் ஜெ. கும்பல். ஏற்கெனவே ‘குடியரசு’ தின அணிவகுப்பில் ‘மக்கள் முதல்வர்’ படத்தோடு அலங்கார ஊர்வலம் நடத்தி எல்லா அரசு அமைப்புகளும் இக்கிரிமினல் கும்பலின் முன் வாய்பொத்தி சரணடைந்த நிலையில், இப்போது அப்பட்டமாகவே ஜெ. கும்பலின் அதிகாரத் திமிரின் முன்னே அடிபணிந்து கிடந்தன.

05-srirangam-voting-captionஊழல் குற்றச்சாட்டின் கீழ் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி பதவியிழக்கும் முதலாவது முதல்வர் என்ற சிறப்புத் தகுதியை அடைந்ததன் விளைவாக இந்த இடைத்தேர்தல் நடந்தது என்றாலும், இந்த தேர்தலை உரிய காலத்தில் நடத்த விடாமல் கிரிமினல் ஜெ. கும்பல் நடத்திய சூழ்ச்சிகளுக்கு தேர்தல் ஆணையமே உடந்தையாக நின்றது. பின்னர், வேறு வழியின்றி இந்த இடைத்தேர்தலை நடத்தியபோதிலும், அது ஜெ. கும்பலின் அடியாளாகவே நின்றது.

இத்தொகுதியில் கடந்த 2011-ல் இருந்த வாக்காளர்களைவிட தற்போது 9 ஆயிரம் வாக்காளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி போலி வாக்காளர்களை நீக்கக் கோரியும், ஆர்.டி.ஓ. மனோகரன், தாசில்தார் பஷீர் அகமது மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் ஆளும் கட்சியின் அடியாட்களாக உள்ளதையும், பணப்பட்டுவாடாக்களையும் விருந்துகளையும் புகைப்பட ஆதாரங்களுடன் தி.மு.க.வினர் கொடுத்து முறையிட்டபோதிலும், கிரிமினல் ஜெ. கும்பலிடம் சரணடைந்துவிட்ட தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. சிறீரங்கம் தொகுதிக்கான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்திருந்த போதிலும், அதைச் செயல்படுத்தவில்லை.

பின்னர், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆனந்த், தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சியின் அடியாட்களாக உள்ளதையும், உரிய திருத்தங்களுடன் வாக்காளர் பட்டியலை வெளியிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வானது, ஏன் புதிய பட்டியலை வெளியிடவில்லை என்று கண்டிப்பு காட்டுவதாக நாடகமாடிவிட்டு, புதிய பட்டியலைத் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் உபதேசித்துவிட்டு நழுவிக் கொண்டது. “அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துறை சார்ந்த சிறப்புப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், இத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று கூறி, ஜெ. கும்பலின் அராஜக ஆட்டத்துக்குப் பக்கமேளம் வாசித்தது.

பிழைப்புவாத வைகோ, ராமதாஸ், விஜயகாந்து வகையறாக்கள் ஒரு அரசியல்வாதி என்ற முறையில்கூட, கிரிமினல் ஜெ கும்பலை எதிர்த்து தேர்தலில் நிற்கத் துணியவில்லை. தேர்தலில் பங்கேற்காவிட்டாலும், ஒரு ஓட்டுக்கூட விழாவிட்டாலும் இக் கிரிமினல் கும்பலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யக்கூட முன்வராமல் முடங்கிப் போயினர். ஊடகங்களோ, ஜெயா கும்பலின் கிரிமினல் – பொறுக்கி அரசியலுக்கும் அதன் கொட்டத்துக்கும் உடந்தையாகவே நின்றன. திராவிடக் கட்சிகள் என்றாலே ஊழல்தான் என்று நியாயவான்களைப் போல பேசும் சிறீரங்க பார்ப்பனர்களோ, என்ன இருந்தாலும் நம்மவா என்ற பார்ப்பன பாசத்துடன் இக்கிரிமினல் கும்பலுக்குவெட்கமின்றி ஓட்டுப் போட்டனர்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 18 ஆண்டுகளாக ஜெ. கும்பலால் இழுத்தடிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி டி குன்ஹா நன்கு ஆராய்ந்து எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் துணிவுடன் இக்கிரிமினல் கும்பலைத் தண்டித்து தீர்ப்பளித்தார். ஆனால் சிறீரங்கம் வாக்காளர்களோ, இத்தேர்தலைப் புறக்கணித்தோ அல்லது இக்கிரிமினல்கும்பலுக்கு எதிராக வாக்களித்தோ ஜெ.கும்பலின் முகத்தில் கரியைப் பூச ஒரு வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும், எவ்வித அறநெறியுமின்றி பணத்துக்கு விலை போயினர். ரூ 5,000-க்கும் ரூ 2000-க்கும் விலைபேசப்பட்டு, தன்மான உணர்வின்றி தரம் தாழ்ந்து போயினர். ஓட்டுக்குப் பணம் என்பது தேர்தல் வெற்றியையும் தாண்டி, இக்கிரிமினல் கும்பலின் கொள்ளைக்கு வழங்கப்படும் அங்கீகாரமாக மாறி நிற்கிறது. தமிழ்ச் சமுதாயத்தை அடிமைகளாகவும், தன்மானற்ற இழிபிறவிகளாகவும், கையேந்திகளாகவும் சீரழித்துள்ள ஜெ. கும்பலின் வெற்றியானது, இதுவரையில் இல்லாத மிகவும் ஆபத்தானதொரு எதிர்காலம் தமிழகத்தைச் சூழ்ந்திருப்பதையே எச்சரிக்கையாக நமக்கு உணர்த்துகிறது.

– தனபால்
______________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015
______________________________

அரசு பேருந்து வர வேண்டுமா ? வழிகாட்டும் ஓலையூர்

9

உங்கள் ஊருக்கு பஸ் வேண்டுமா? ஓலையூர் மாணவர்களின் போராட்டத்தை முன்னெடுப்போம்!

ரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள ஓலையூர் விருத்தாசலம், ஜெயங்கொண்டம் போகும் வழியில் 5 கி.மீ தொலைவில் உள்ள கிராமம்.

இங்கு 1800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இம்மக்கள் விவசாயம் தொடர்பான தேவைகளுக்கும், கொத்தனார், சித்தாள் வேலை, கடை வேலை என பிற வேலைகளுக்கும் விருத்தாசலம் நகரத்தை நோக்கிதான் வருகிறார்கள்.

பேருந்து மறியல் போராட்டம்
மக்கள் விவசாயம் தொடர்பான தேவைகளுக்கும், கொத்தனார், சித்தாள் வேலை, கடை வேலை என பிற வேலைகளுக்கும் விருத்தாசலம் நகரத்தை நோக்கிதான் வருகிறார்கள்

அரியலூர் மாவட்டத்தில் ஓலையூர் கிராமம் இருந்தாலும் விருத்தாசலம் தான் பிழைப்புக்கு இடம். அதே போன்று பள்ளி, கல்லூரிகளுக்குக் கூட விருத்தாசலம் தான் வரவேண்டும் என்ற நிலை.

அப்படியிருக்கையில் ஓலையூர் மட்டுமல்லாமல் வண்ணாகுடிகாடு, அழகாபுரம், சிலுவைச்சேரி, ஆகிய கிராமங்களின் வழியாக ஆண்டிமடம் செல்லும் பேருந்துகளை நிறுத்திவிட்டு தடம் எண் 37 பேருந்தை மட்டும் இயக்குகிறார்கள். அதனால், பள்ளி, கல்லூரிகளுக்கும், செல்லும் மாணவர்கள் சரியான நேரத்திற்கு போகமுடியவில்லை. மேலும், உயிரை பணயம் வைத்து சாகசம் செய்யும் விதமாக, கூட்ட நெரிசலுடன் பேருந்து பயணம் இருக்கிறது. இதனாலே பல மாணவிகள் மேல் படிப்பை படிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அதே போன்று, பிழைப்பு தேடி வெளியூர் செல்லுபவர்களும் காலை நேரத்தில் வேலைக்கு போவது கடினமாக உள்ளது. வேலை முடிந்து மாலை வீட்டுக்குப் போக 5 மணிக்கு பேருந்தை விட்டுவிட்டால் இரவு 10.30-க்கு தான் வீடு திரும்ப முடியும் என்ற நிலை.

பேருந்து மறியல் போராட்டம்
பல மாணவிகள் மேல் படிப்பை படிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அதே போன்று, பிழைப்பு தேடி வெளியூர் செல்லுபவர்களும் காலை நேரத்தில் வேலைக்கு போவது கடினமாக உள்ளது.

தெருத்தெருவாக ஓட்டுக்கேட்டு ஜெயித்த பிறகு இனோவா காரில் பறக்கிறார்கள் ஓட்டுக்கட்சிக்காரர்கள் , ஜெயிக்க வைத்தவர்கள் இந்த அவல நிலையில் இருக்கிறார்கள்.

ஆனால் ‘அரசு மக்களுக்காக இருக்கிறது’, ‘நாடு வளர்ச்சி பாதையை நோக்கி போகிறது’ என்கிறார்கள். கிராமங்களின் உள்ள மக்களின் வாழ்க்கையை பற்றி தெரியாத இன்னும் சிலர், ‘நம் நாடு வல்லரசு ஆயிட்டோம்’ என்று பிதற்றுகிறார்கள்.

படிக்க பள்ளிக்கூடம் இல்லாமலும் , மருத்துவ தேவைக்கு போவதற்குக் கூட அவசரத்திற்கு பேருந்து இல்லாமலும் நிலை.

பேருந்து மறியல் போராட்டம்
கிராமங்களின் உள்ள மக்களின் வாழ்க்கையை பற்றி தெரியாத இன்னும் சிலர், ‘நம் நாடு வல்லரசு ஆயிட்டோம்’ என்று பிதற்றுகிறார்கள்.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக, “கூடுதலாக பேருந்து விட்டால், பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்” என மக்கள் கூறுகிறார்கள். அதனால், “மனுகொடுத்து பேருந்து வரவழைக்கலாம்” என்று மக்களிடம் வீடுவீடாக கையொப்பம் வாங்கி ஓலையூர் கிராமத்து மாணவர்களும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும் இணைந்து 16 – 02 – 2015 அன்று விருத்தாசலம் கோட்டாச்சியரிடம் மனுகொடுத்தோம்.மனுவை வாங்கி எங்கள் முன்னாகவே, “உடனடியாக பேருந்து இயக்குவதற்கு முயற்சி செய்கிறேன்” என்று கூறி கொண்டு கையெழுத்து போட்டார்.

ஒரு வாரம் கழித்து, மீண்டும் கோட்டாசியரை சந்தித்து பேருந்து விடுவது குறித்து கேட்டபோது. “நீங்கள் கொடுத்த மனுவை மேலே அனுப்பிவிட்டோம். இன்னொரு மனு கொடுங்கள்” என்று கேட்டார். உடனே நகல் எடுத்து கொடுத்தோம்.

பேருந்து மறியல் போராட்டம்
“நீங்கள் கொடுத்த மனுவை மேலே அனுப்பிவிட்டோம். இன்னொரு மனு கொடுங்கள்”

மீண்டும் 2 வாரம் கழித்து கேட்டபோது, “ஐயையோ! ஓலையூர் அரியலூர் மாவட்டம். நீங்க அங்கேதான் மனுகொடுக்க வேண்டும்” என முடித்துக் கொண்டார்.

“முதலில் மனுகொடுக்கும் போதே அரியலூர் மாவட்டம் என்று தெரியும். விருத்தாசலம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தான் எங்கள் ஊருக்கு பேருந்து வருகிறது. அதனால் நீங்கள் முயற்சி செய்து முன்பு வந்து கொண்டிருந்த பேருந்துகளை இயக்கினால் போதும்” என்று பேசியிருந்தோம்.

ஆனால் அவர் ”உங்கள் ஊருக்கு பேருந்து இயக்கினால் லாபம் இல்லை” என்ற வக்கிரமான காரணத்தை கூறி தன் வர்க்க புத்தியை காட்டினார்.

இந்த அரசு மக்களுக்கானது இல்லை என்பதை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள கோட்டாசியரிடம் மனுகொடுத்து பேசும்போது மேலும் தெளிவானது. “உங்கள் ஊருக்கு விருத்தாசலம் பணிமனையில் இருந்துதான் பேருந்து விட வேண்டும். அதனால் நீங்கள் விருத்தாசலம் கோட்டாசியரிடம் சொல்லுங்கள்” என்று முடித்துக்கொண்டார்.

பேருந்து மறியல் போராட்டம்
பேருந்து கோரும் மாணவர் இளைஞர்களை அரியலூர் – விருத்தாசலம் என்று அலையவிட்டு இது நாள் வரைக்கும் பேருந்தை இயக்காமல் இருந்து வருகிறார்கள்.

பேருந்து கோரும் மாணவர் இளைஞர்களை அரியலூர் – விருத்தாசலம் என்று அலையவிட்டு இது நாள் வரைக்கும் பேருந்தை இயக்காமல் இருந்து வருகிறார்கள். மேலும், வரக்கூடிய தடம் எண் 37 கூட “ஓட்டுனர் இல்லை”, “நடத்துனர் இல்லை” எனக்கூறி அடிக்கடி நிறுத்திவிடுகிறார்கள்.

அப்படி 09 –03 – 2015 அன்று மாலை 5 மணிக்கு வரவேண்டிய பேருந்து வராததால் ஓலையூர் கிராமத்து பள்ளி மாணவர்களும், பு.மா.இ.மு தோழர்களும் பேருந்துகளை பேருந்து நிலையத்தில் இருந்து போகவிடாமல் மறித்து போராட்டம் நடத்தினார்கள்.

திமிராக பேசிய அதிகாரிகள் கண்டித்தும், மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த அரசையும் கண்டித்து முழுக்கமிட்டார்கள். காவல்துறையினர் வந்து நைச்சியமாக பேசி, “பேருந்தை போகவிடுங்கள். உங்கள் ஊருக்கு பேருந்தைவிடச் சொல்கிறோம்” என்று கூறினார்கள்.

பேருந்து மறியல் போராட்டம்
“இது போன்றுதான் நாமும் நமது ஊர் பேருந்துக்காக போராட வேண்டும்”

20 நிமிடம் பேருந்தை மறித்தது “இது போன்றுதான் நாமும் நமது ஊர் பேருந்துக்காக போராட வேண்டும்” என்ற உணர்வை உழைக்கும் மக்கள் மத்தியில் விதைத்தது. உடனே பேருந்தும் வந்தது.

போக்குவரத்து அதிகாரிகள் தோழர்களிடம் வந்து, “பேருந்தை நிறுத்தி விட்டார்கள் உங்கள் ஊருக்கு எப்படி பேருந்து வரும்” என்று பார்க்கிறோம் எனப் பேசினார்கள். உடனே ஓலையூர் மக்கள் அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த இடத்தைவிட்டு ஓடினார் அதிகாரி.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மக்களுடைய வரிப் பணத்தில் சம்பளம் வாங்கக் கூடிய அதிகாரிகள் உழைக்கும் மக்களுக்கு எதிராக நடந்து கொள்கின்றனர் என்பதை ஓலையூர் மாணவர்கள் இளைஞர்கள் புரிந்துகொண்டார்கள். இதை எதிர்த்து எந்த ஓட்டுக்கட்சிகளும் கேட்பதுமில்லை, போராடுவதுமில்லை.

பேருந்து கேட்டு மனுகொடுப்பதால் எந்த பயனும் இல்லை அதிகாரத்தை நாம் கையில் எடுத்தால்தான் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை நடைமுறையில் உணர்ந்து  ஓலையூர் மாணவர்களும் புமாஇமு தோழர்களும் பேருந்துக்கான போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாசலம்

சினம் கொள்ளும் சீர்காழி – விவசாயிகள் போராட்டம்

0

முட்டுச்சந்தில் விவசாயம்! மரணத்தின் விளிம்பில் விவசாயிகள்!!

சீர்காழி வட்டம், பழையபாளையம், கொடக்காரமூலை கிராமம் நஞ்சை முப்போகமும், புஞ்சை இரண்டு போகமும் விளைந்த பகுதியாகும். மற்றும் மா, முந்திரி போன்ற தோட்டப் பயிர்களுக்கும் குறைவில்லை. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு அதிக வருமானம் ஈட்டித் தந்த பகுதி; அறுவடை காலங்களில் வெளியூரிலிருந்து இங்கு வந்து பஞ்சம் பிழைத்தனர். குள்ளக்காரு நெல் விவசாயத்தின் மூலம் இப்பகுதி விவசாயிகளுக்கு பொக்கிஷம் போல வருமானம் கிடைத்தது.

வளமான இக்கிராமங்கள் இன்று விவசாயம் பாதிக்கப்பட்டும், விவசாயம் என்றாலே வெறுப்பை ஏற்படுத்துவதாக மனம் நொந்து கூறுகின்றனர் விவசாயிகள். பெரும்பாலும், இப்பகுதியில் உள்ள கூலி விவசாயிகள், சிறுவிவசாயிகள், பஞ்சம் பிழைக்க கேரளா, சேலம், பாண்டி போன்ற இடங்களுக்கு செங்கல் சூளைகளில் வேலைசெய்ய குடும்பத்துடன் செல்கின்றனர்.

முட்டுச்சந்தில் விவசாயம்! மரணத்தின் விளிம்பில் விவசாயிகள்!!காவிரிநீர் கடைமடை பகுதிக்கு முறையாக வராததாலும், அப்படி வந்தாலும் இறால் குட்டைகளில் உப்புநீர் ஏற்றுவதால் சதுப்பு நிலமாக மாறிவிடுவதாலும் விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது அரசின் மக்கள் விரோத திட்டமான மீத்தேன் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி-ன் துரப்பண வேலைகளால் மிகப் பெரும் அபாயம் ஏற்பட்டு நிலத்தடி நீர் மற்றும் நிலம் மாற்றம் அடைந்து நஞ்சாகி வருகிறது. இந்த ஆண்டு ஒரு போகம் சாகுபடி செய்தும், கொடக்கார மூலை விவசாயிகள் ஒருபடி நெல் கூட அறுவடை செய்ய முடியாமல் மழை வெள்ளத்தால் அழிந்து போய் விட்டது.

முட்டுச்சந்தில் விவசாயம்! மரணத்தின் விளிம்பில் விவசாயிகள்!!பழையபாளையம் விவசாயிகள் 4.5 வீதம்தான் கண்டுமுதல் செய்துள்ளனர். வங்கிகளிலும், கந்துவட்டிக்கும், நகைக்கடன் பெற்றும், விவசாயம் செய்த விவசாயிகள் கடனை எப்படி அடைப்பது எனவும், சிலர் மானங்கெட்ட தொழிலை செய்வதை விட குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றும் மனம் நொந்து கூறுவது நெஞ்சை வலிக்கிறது.

  • இப்பகுதி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றால் அரசு இந்த பருவத்தில் விவசாயம் செய்து பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களை சிறப்புக் குழு அமைத்து பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
  • வெள்ளக் காலங்களில் வெள்ளம் புகாமல் தடுக்க நல்லூர் உப்பனாற்றின் கரையை உயர்த்தி பலப்படுத்தி தடுப்பணையும், கடல் உப்புநீர் விளைநிலங்களில் புகாமல் தடுக்க வெள்ளமேடு என்ற இடத்தில் நீர் ஒழுங்கிகள் (தடுப்பணை) கட்ட வேண்டும்.
  • இப்பகுதிகளில் இறால் குட்டைகள் வைப்பதை தடை செய்து விவசாயிகளையும், விவசாய விளைநிலங்களையும் பாதுகாக்க வேண்டும்.
  • இப்பகுதி விவசாயம் குள்ளக்காரு நெல் சாகுபடிக்கு மார்ச் மாதம் முடிய கீழணையிலிருந்து ராஜன் வாய்க்கால் மூலம் ஊசி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு குள்ளக்காரு சாகுபடியைக் காப்பாற்ற வேண்டும்.

முட்டுச்சந்தில் விவசாயம்! மரணத்தின் விளிம்பில் விவசாயிகள்!!

தமிழக அரசே! இந்திய அரசே!

  • நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பப் பெறு!
  • கொடக்கார மூலையில் நீரின்றி கருகும் நிலையில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு சிறப்புக் குழு அமைத்து பார்வையிட்டு உடனடியாக நிவாரணம் வழங்கு!
  • நல்லூர் உப்பணாற்றில் வெள்ளமேடு என்ற இடத்தில் தடுப்படை (நீர் ஒழுங்கிகள்) அமைத்து கடல்நீர் உள்ளே புகுவதை தடுத்து நிறுத்து!
  • கொடக்கார மூலை, பழைய பாளையம் கிராமங்களில் குடிநீரையும், விவசாய விளைநிலங்களையும் நஞ்சாக்கி அழிக்கும் இறால் பண்ணைகளையும், மீத்தேன் எரிவாயு எடுக்குத் திட்டத்தையும் தடைசெய்!
  • கொடக்காரமூலை, பழையபாளையம் கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிக மகசூல் செய்துள்ளதாக பொய்க் கணக்கு அனுப்பிய புள்ளியல் துறை அதிகாரி மீது விசாரணை செய்து நடவடிக்கை எடு!

விவசாயிகளே

  • காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் தி கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேஷனையும், ஓ.என்.ஜி.சியையும் தடுத்து நிறுத்தப் போராடுவோம்
  • காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைகட்டும் கர்நாடகாவின் அராஜகத்தையும் துணைபோகும் மோடி அரசின் சதிச்செயலையும் தடுத்து நிறுத்த போராடுவோம்.

என்ற முழக்கங்களுடன் 05-03-2015 வியாழன் காலை 10 மணிக்கு சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

vivimu-posterஆர்ப்பாட்டத்துக்கு தோழர் த. இரவி, வட்டச் செயலர், விவசாயிகள் விடுதலை முன்னணி தலைமை தாங்கினார்.

திரு சிவப்பிரகாசம், தலைவர், விவசாயிகள் சங்கம்
திரு S. இமயவரம்பன், தலைவர், கரும்பு விவசாயிகள் சங்கம்
திரு விஸ்வநாதன், செயலர், விவசாயிகள் சங்கம்
திரு V. மனோகர், முன்னோடி விவசாயி
திரு T. மோகன், தலைவர், கொடக்காரை மூலை, சிறுவிவசாயிகள் நீர்ப்பாசனதாரர்கள் சங்கம்.
திரு G. கிருஷ்ணமூர்த்தி, செயலர், கொடக்காரை மூலை, சிறுவிவசாயிகள் நீர்ப்பாசனதாரர்கள் சங்கம்
திரு பாஸ்கரன், பொருளாளர், விவசாயிகள் சங்கம்.
தோழர் வீரசோழன்
தோழர் ந. அம்பிகாபதி, நாகை மாவட்ட அமைப்பாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி.

ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினார்கள்.

இவண்

கொடக்காரமூலை சிறுவிவசாயிகள் நீர்ப்பாசனதாரர்கள் சங்கம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்.
தொடர்புக்கு – 9843480587

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி : மாற்றா ? ஏமாற்றா ?

2

குஜராத்தில் தயாரிக்கப்பட்ட மோடி ஹோலோகிராம் டில்லியில் பொசுக்கென்று மறைந்து விட்டது. தனது சொந்த முகத்தையே முகமூடியாக அணிந்து கொள்ள விரும்பும் சுயமோகியும், உடல் முழுவதும் தனது பெயரையே எழுதி மினுக்கிக் கொண்டிருந்த மனநோயாளியுமான மோடிக்கு, தனது பத்து லட்சம் ரூபாய் கோட்டையும் அதன் மீது நெளிகின்ற ‘நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’ என்ற பெயரையும் சேர்த்து ஏலம் விட்டால்தான், “பெயரை”க் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.

அரவிந்த் கேஜ்ரிவால்
ஆம்-ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்

“எனக்குப் பயந்து ஆட்சி செய்பவர்களைத் தேர்ந்தெடுங்கள்” என்று டில்லி தேர்தல் பிரச்சாரத்தில் திமிர்ப்பேச்சு பேசிய மோடி, ‘தனக்குப் பயந்து’ தானே ஒளிய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இவ்வாறு மோடியின் சட்டையைக் கழற்றிய ஒரு காரணத்துக்காகவாவது டில்லி மக்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் 46.63% ஆக இருந்த பா.ஜ.க.-வின் வாக்குகள், 32.2% க்கு வீழ்ந்து விட்டன. “அராஜகவாதி, ஆளத்தெரியாதவன், ஓடுகாலி, நகர்ப்புற நக்சல், குடியரசு தினத்தை அவமதித்தவன்” என்று மோடியும் அமித் ஷாவும் பலவாறாக கேஜ்ரிவாலை அர்ச்சித்துப் பார்த்தனர். இவை அனைத்தையும் கேஜ்ரிவாலுக்கு சூட்டப்பட்ட புகழாரங்களாக மக்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று இந்த மூடர்கள் எதிர்பார்க்கவில்லை.

“தேசியப் பெருமிதம், வளர்ச்சி, ஒழுங்கு” என்பன போன்ற சொற்களின் மீது தான் ஏற்றியிருந்த சாம்பிராணி நெடியை, தனது 8 மாத கால ஆட்சியே இறக்கி விட்டது என்பதையோ, தன்னுடைய பஞ்ச் டயலாக்குகள் நொந்த மாட்டைக் கொத்துவது போல, மக்களைக் கொத்தி அவர்களது ஆத்திரத்தைக் கிளறி விடுகின்றன என்பதையோ மோடி புரிந்திருக்கவில்லை.

‘56 அங்குல மார்பு கொண்ட ஆம்பிளை’ என்ற திமிரில், “ஜோ தேஷ் கா மூட் ஹை, வஹி தில்லி கா மூட் ஹை” (தேசத்தின் மனநிலை எதுவோ அதுதான் தில்லியின் மனநிலை) என்று தேர்தல் பிரச்சாரத்தில் பஞ்ச் டயலாக்கை எடுத்து விட்டார் மோடி. “தில்லியின் மனநிலை எதுவோ அதுதான் தேசத்தின் மனநிலை” என்று அதே தோசை திருப்பிப் போடப்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது என்றோ, வெற்றிக்குக் காரணம் நான்தான் என்று காட்ட முயன்றால், தோல்விக்கான பொறுப்பிலிருந்தும் தப்ப முடியாது என்றோ மோடி யோசிக்கவில்லை. பஞ்ச் டயலாக்குகள் மூளைக்குள் மின்னலாக வெட்டும் தருணங்களில், மூளையின் மற்ற பகுதிகள் அனைத்தும் செயலிழந்து விடும் போலும்!

மோடி - அமித் ஷா கூட்டணி
ஆணவமும் செருக்கும் கொண்ட மோடி – அமித் ஷா கூட்டணி தில்லியில் செருப்படி பட்டு மண்ணைக் கவ்வியது.

சொற்களைக் கண்டு மயங்கி ஏமாறும் மக்கள், “சொற்களை வைத்து சோறு பொங்க முடியாது” என்பதையும் ஒரு கட்டத்தில் புரிந்து கொள்ளத்தானே செகிறார்கள். 2013 தேர்தலில், டில்லி எல்லைக்குட்பட்ட 14 கிராமப்புற தொகுதிகளில் 13-ஐ பா.ஜ.க. வென்றது. இப்போது 14-லும் ஆம் ஆத்மி வென்று விட்டது. காரணம், விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எழுதி வைக்கும் மோடியின் நிலப்பறி அவசரச் சட்டம்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக மோடி பெற்ற வாக்குகளை, மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கத்துக்கு எதிரான மக்களின் தீர்ப்பு என்று வியாக்கியானம் செய்தன ஆளும் வர்க்கங்கள். “குஜராத்தில் இலவசமே கிடையாது” என்று பெருமை பொங்க பிரச்சாரம் செய்தார் மோடி. ஆம் ஆத்மி கட்சியின் 49 நாள் ஆட்சியில் குறைக்கப்பட்ட தண்ணீர், மின்சாரக் கட்டணங்களை பா.ஜ.க. வின் கட்டுப்பாட்டிலிருந்த டில்லியின் கவர்னர் ஆட்சி பழையபடி உயர்த்தியது. விளைவு, மாத வருவாய் ரூ.13,500 க்கு கீழ் உள்ள டில்லியின் 60% வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர்.

டில்லியின் 40 சதவீத மக்கள் குடிசைப் பகுதிகளில் வாழ்கிறார்கள். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் போது கணிசமான குடிசைப் பகுதிகளை நகரை விட்டு அகற்றிய பின்னரும் இதுதான் நிலைமை. இந்த குடிசை வாழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த கிரண் பேடி, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடிசைப் பகுதிகளை ஒழிப்போம். மோடி அனைவருக்கும் வீடு தருவார்” என்று பேசினார்.

அவர் பேசிய இரண்டு வாக்கியங்களில் முதல் வாக்கியம் மட்டும்தான் மக்களின் காதில் விழுந்திருக்கிறது. இரண்டாவது வாக்கியம் பொய் என்பது அவர்களுக்குத் தெரியும். “பா.ஜ.க. முதலாளிகளின் கட்சி” என்று டில்லி மக்கள் பேசுவதைப் பரவலாகக் கேட்க முடிந்தது என்கின்றன பத்திரிகைகள். இது மக்கள் தமது சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்த கொண்ட உண்மை. நாடாளுமன்றத் தேர்தலின்போது எந்த ஆடம்பரத்துக்கு மக்கள் மயங்கினார்களோ, அது சில மாதங்களிலேயே அருவருக்கத்தக்கதாகி விட்டது. மோடிக்கு எதிராகக் குமுறிக் கொண்டிருந்த மக்களின் வர்க்கக் கோபத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஒரு வாகனமாகியிருக்கிறது.

விளக்கமாத்துக்குத்தான் நல்லகாலம் !

தூய்மை இந்தியா விளம்பரங்களைக் காட்டி, “மோடியின் ஆட்சியில் விளக்கமாத்துக்குத்தான் நல்லகாலம் பிறந்திருக்கிறது” என்று கேலி செய்தார் நிதிஷ் குமார். தற்போது டில்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வேறொரு பொருளில் விளக்கமாத்துக்கு நல்லகாலம் பிறந்திருப்பதைக் காட்டுகின்றன.

தாங்கள் பா.ஜ.க.வைப் போல எதிர்மறையாகப் பிரச்சாரம் செய்யாமல், மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி நேர்மறையாகவும் நாகரிகமாகவும் பிரச்சாரம் செய்ததாகவும், அதற்குக் கிடைத்த பலன்தான் இந்த வெற்றி என்றும் ஆம் ஆத்மி கூறிக்கொள்கிறது. உண்மை அதுவல்ல; காங்கிரசு கட்சி பத்தாண்டு காலம் உழைத்து மோடியின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தது. மோடியோ, ஆம் ஆத்மியின் அமோக வெற்றியை எட்டே மாதங்களில் சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறார்.

"அமித்து, கோட் ஆர்டர் கேன்சல்"
“அமித்து, கோட் ஆர்டர் கேன்சல்”

இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியிருப்பது, மோடியின் 8 மாத ஆட்சியின்மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு மட்டுமல்ல; காங்கிரசு உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகள் மீதும் போலீசு-அதிகார வர்க்கம்-நீதித்துறை உள்ளிட்ட இந்த அரசமைப்பின் மீதும் மக்கள் கொண்டிருக்கும் அவநம்பிக்கையும் வெறுப்பும் டில்லி தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கின்றன. இது, தோற்றுப்போன இந்த அரசமைப்பு அளித்திருக்கும் வெற்றி என்றும் கூறலாம். நம்பிக்கை இழந்த மக்களின் நம்பிக்கைதான் ஆம் ஆத்மி பெற்றிருக்கும் வெற்றி. அதனால்தான் வெற்றியின் இந்தப் பரிமாணம் தன்னை அச்சுறுத்துவதாகக் கூறுகிறார் கேஜ்ரிவால்.

ஒரு தேர்தல் வெற்றி என்ற முறையில் பார்த்தால், கேரளம், மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில், துவக்க காலத்தில் கம்யூனிஸ்டுகள் பெற்ற வெற்றியோடு கூட ஒப்பிடும் அளவு இது ‘சாதனை’ அல்ல. இந்திய நாடாளுமன்ற அரசியலின் இளமைக்காலத்தில், ஜனநாயக அரசமைப்பு குறித்த பிரமைகள் தகர்ந்து விடாத காலத்தில், விடுதலைப் போராட்டத்தின் மரபுரிமையாக காங்கிரசு கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில், பெறப்பட்ட வெற்றிகள் அவை.

இருந்த போதிலும், மோடி – அமித் ஷா கும்பல் தங்களைப் பற்றி உருவாக்கியிருக்கும் ‘வெல்லப்பட முடியாதவர்கள்’ என்ற பிம்பத்தை இது தகர்த்திருப்பதால், இந்த வெற்றியின் பரிமாணம் பெரிதாகத் தெரிகிறது. 70 க்கு 67 என்பது எண்ணிக்கை அளவில் நிச்சயமாகப் பெரிய வெற்றிதான் என்ற போதிலும், வெற்றியின் அரசியல் உள்ளடக்கத்தை எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை.

நம்பிக்கை நட்சத்திரமா ஆம் ஆத்மி?

பார்ப்பன பாசிசத்தின் தாக்குதல் காரணமாக நிலைகுலைந்தவர்களுக்கும், இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு மேற்பட்ட ஒரு அரசியல் இலட்சியத்தை அடைய இயலும் என்ற நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், ஆம் ஆத்மி கட்சி புதிய நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறது.

“இந்த அரசமைப்பை அதன் கோட்பாடுகளுக்கு ஏற்ப இயங்க வைக்க தீவிரமாக முயற்சிப்பதன் மூலம், அதன் அதிகபட்ச சாத்தியங்களை கறந்து எடுப்பதுடன், அதன் முரண்பாடுகளையும் ஆம் ஆத்மி கட்சி அம்பலப்படுத்துகிறது.”

“தண்ணீர், மின்சாரம், சாலை, மருத்துவம், கல்வி போன்ற மக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கின்ற விசயங்கள் குறித்து முன்னெப்போதும் கண்டிராத வகையில் மக்களுக்கு அரசியல் கல்வி அளிக்கிறது.”

– இவை ஆம் ஆத்மி எனும் நம்பிக்கை நட்சத்திரத்தை விதந்து அறிவுத்துறையினர் தெரிவித்து வரும் கருத்துகளில் சில. நம்பிக்கையிழந்தவர்களின் நம்பிக்கையாகத்தான், ஆம் ஆத்மியைப் போன்ற கட்சிகள் ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்றன. ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் என்.ஜி.ஓ. க்கள் என்பதையும், கேஜ்ரிவால் முன்வைக்கின்ற அரசியல் ‘மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப்பட்டது’ என்பதையும் ஏற்கெனவே பு.ஜ.வில் எழுதியிருக்கிறோம். (பார்க்க: பெட்டிச் செய்தி)

ஆம் ஆத்மி – அவதார ரகசியம்!

அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு இயக்கமாக இருக்கட்டும், அதிலிருந்து கிளைத்து எழுந்த ஆம் ஆத்மி கட்சியாக இருக்கட்டும். இவை சுயேச்சையாகவோ தற்செயலாகவோ பிறப்பெடுத்தவை அல்ல.

தனது உலகப் போர்த்தந்திரத்துக்குத் தேவைப்படும் நாடுகளில் தலையீடுகள் செய்வதற்கும், அரசியல் எழுச்சிகளையும் வண்ணப் புரட்சிகளையும் உருவாக்கி ஆட்சிக் கவிழ்ப்பு செவதற்கும், ’80-கள் முதற்கொண்டே குடிமைச் சமூகங்களைத் தனது அரசியல் – அமைப்புக் கருவியாக அமெரிக்கா பயன்படுத்தி வந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 25 ஆண்டுகளாகத் திணிக்கப்பட்டுவரும் கட்டுமான மறுசீரமைப்புக் கொள்கைகளின்படி, இந்தியா உள்ளிட்ட பின்தங்கிய நாடுகளின் அரசியல், பொருளாதார, சமூகத்துறைகளின் சட்ட திட்டங்கள், அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அரசுசாரா நிறுவனங்களும் குடிமைச் சமூக அமைப்புகளும் அரசு அதிகாரத்தின் அங்கமாகியிருக்கின்றன.

கேஜ்ரிவால், அன்னா ஹசாரா, கிரண் பேடி
ஆர்.எஸ்.எஸ்.-ன் பின்புலத்தோடு, கார்ப்பரேட் ஊடகங்களால் தயாரித்து வழங்கப்பட்ட “ஊழலுக்கு எதிரான இந்தியா” இயக்கம் டெல்லி – ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டத்தில் கிரண் பேடி, கேஜ்ரிவால் மற்றும் அன்னா ஹசாரே (கோப்புப் படம்)

முறைசார்ந்த அமைப்புகளான கட்சிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் இலஞ்ச-ஊழல், கிரிமினல் நடவடிக்கைகள் காரணமாக அவற்றின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வேர்மட்ட ஜனநாயகம் (grassroot democracy) மக்களுக்கு அதிகாரத்தைக் கொண்டு சேர்த்தல் (Empowerment of people) என்ற பெயர்களில் குடிமைச் சமூக அமைப்புகள் இதனை நியாயப்படுத்திக் கொள்கின்றன. கேஜ்ரிவால் முன்வைக்கும் ஜன் லோக்பால் முதல் மொகல்லா சபாக்கள் வரையிலான “ஜனநாயக” அமைப்புகள் இந்த அடிப்படையிலானவைதான்.

கடந்த 25 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கை, நமது நாட்டின் அரசியல் – பொருளாதார – சமூகச் சிக்கல்களை மேலும் கடுமையாக்கி முற்றச் செய்திருக்கின்றன. அரசியல் – பொருளாதார – சமூக கட்டமைப்பு அசாதாரணமான நெருக்கடியில் சிக்கி அதன் உறுப்புகள் அனைத்தும் அவற் றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாமல் எதிர்நிலை சக்திகளாக மாறிவிட்டன. இந்தக் கட்டமைப்பை நியாயப்படுத்தி வந்த ஆளும் வர்க்க சித்தாந்தங்களும் நெறிமுறைகளும் தோற்றுப்போய் அரசு மற்றும் ஆளும் வர்க்கங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டன. இத்தகைய சூழ்நிலையில் வெடித்தெழும் மக்கள் போராட்டங்களை நிறுவனமயப்படுத்துவதற்கும், இந்த அரசமைப்பின் மீது நம்பிக்கை இழந்துவிட்ட மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கும் என்.ஜி.ஓ. க்கள் எடுத்திருக்கும் அரசியல் அவதாரம்தான் ஆம் ஆத்மி கட்சி.

புனித முதலாளித்துவம்?

ஆம் ஆத்மியின் அரசியல் இதனைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. “வர்க்கப் போராட்டம் இல்லாத வர்க்க அரசியல். இது சித்தாந்தங்கள் முடிவடைந்துவிட்ட காலம். நாங்கள் வலதும் இல்லை, இடதும் இல்லை. தனியார்மய எதிர்ப்பு, உலக வர்த்தக கழக எதிர்ப்பு தேவையில்லை. காரியம் நடப்பதற்கு எது பொருத்தமோ அதைச் செய்வோம்”. இவையெல்லாம் ஆம் ஆத்மியின் ‘நிலைப்பாடுகள்’.

இந்நிலைப்பாடுகளிலிருந்து மட்டும் அல்லாமல், டில்லி தேர்தல் வெற்றியை ஆம் ஆத்மி கட்சி எப்படி சாதித்தது என்பதை அவர்களுடைய நடைமுறையின் ஊடாகவே நாம் பரிசீலித்துப் பார்க்கலாம்.

தேர்தல் கட்சிகள் கையாளுகின்ற வழமையான சாதி, மத அரசியலை நிராகரித்து, குடிநீர், மின்சாரம், கல்வி, சுகாதாரம், போலீசு – அதிகார வர்க்கத் தொல்லைகள், குடிசைகளை அப்புறப்படுத்துதல் போன்ற மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி, “வர்க்கம்” என்ற முறையில் மக்களை அணுகியதாகவும் அதற்குக் கிடைத்த வெற்றிதான் இது என்றும் ஆம் ஆத்மி கூறிக்கொள்கிறது.

கேஜ்ரிவாலுக்கு இந்த ‘வர்க்க அரசியல்’ ஞானோதயம் வந்த கதை என்ன? ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற உலக வங்கியின் நிகழ்ச்சி நிரலை அன்னா ஹசாரேவின் போராட்டமாக வடிவமைத்த கேஜ்ரிவால், அரசியலை சாக்கடை என்று கூறிவந்தவர். அந்த “சாக்கடை”யில் இறங்குவது என்று முடிவு செய்ததும், ஊழலை மட்டும் சொல்லி ஓட்டு வாங்க முடியாது என்பதால், மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடத் தொடங்கினார்.

மின் கட்டண உயர்வு, தண்ணீர் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிய கேஜ்ரிவால், அதற்கு அடிப்படைக் காரணமான தனியார்மயத்தை எதிர்த்துப் பேசவில்லை. “மின்சாரத்துக்கு அநியாய விலை வைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை சி.ஏ.ஜி. யின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும், வாட்டர் மாஃபியாவின் பிடியிலிருந்து தண்ணீர் விநியோகத்தை விடுவிக்க வேண்டும்” என்று கூறி இப்பிரச்சினைகளை “ஊழல்-முறைகேடுகளை அகற்றுதல் – வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டுதல்” என்று உலக வங்கி வடிவமைத்திருக்கும் சட்டகத்துக்குள் நிறுத்தினார்.

கேஜ்ரிவால் மின் கட்டணம்
மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் போனதால் துண்டிக்கப்பட்ட இணைப்பை, மீண்டும் ‘சட்டத்தை மீறி’க் கொடுக்கும் கேஜ்ரிவாலின் ‘கலக’ நடவடிக்கை (கோப்புப் படம்)

இருப்பினும், தனது 49 நாள் ஆட்சியில், கார்ப்பரேட் நிறுவனங்கள் தணிக்கைக்கு உட்பட மறுத்தால் உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்தது, மின் கட்டணக் குறைப்பு ஆகிய கேஜ்ரிவாலின் நடவடிக்கைகள் தனியார்மய எதிர்ப்பாளர் போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தின. ஆனால் தனது “கலக” நடவடிக்கைகளின் ஊடாக மின் உற்பத்தி, விநியோகம், பயன்பாடு, கட்டண நிர்ணயம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் அடிப்படைகளையோ, ஒழுங்குமுறை ஆணையத்தையோ, கட்டுமான மறுசீரமைப்பு கொள்கையையோ அவர் ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கியதில்லை.

இவற்றை மக்களுக்குப் புரிய வைப்பதன் ஊடாகவும் போராடுவதன் ஊடாகவும்தான் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். அத்தகைய புரிதலின் வழியாகத்தான் மக்கள் அதிகாரம் என்பதன் அவசியத்தையும் உணர்ந்து கொள்கிறார்கள். ஆனால், தனியார்மயம் என்ற பிரச்சினையையே பேசாமல் தவிர்ப்பதன் மூலம், ஆம் ஆத்மி கட்சி, தனியார்மயக் கொள்கையை இயல்பானதாக்குகிறது. கட்டணக் குறைப்பைத் தனது சாதனையாகக் காட்டி, மக்களைச் செயலற்ற பார்வையாளர்களாக இருத்தி வைக்கிறது.

லோக்பாலை உருவாக்குவதன் மூலம் ஊழலை ஒழித்து அரசமைப்பைத் தூய்மைப்படுத்த முடியும் என்ற பிரமையை உருவாக்கியதைப் போலவே, சமூக நலனுக்கும் விதிகளுக்கும் கட்டுப்பட்டு, இயங்கும் “புனித முதலாளித்துவத்தை” உருவாக்க முடியும் என்ற பொய்மையையும் பரப்புகிறது ஆம் ஆத்மி. தோற்றுப்போய் நிலைகுலைந்து மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கும் இந்த அரசமைப்பைச் சீராக்க முடியும் என்ற பிரமையையும் தோற்றுவிக்கிறது.

02-caption-1ஆகவே, “ஆம் ஆத்மி மோடியை வெற்றி கொண்டு விட்டது” என்று மட்டும் இத்தேர்தல் முடிவை மதிப்பிடுவது தவறு. காங்கிரசு உள்ளிட்ட எல்லா ஓட்டுக் கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்து, மோடியின் மீதும் வெறுப்புற்றிருந்த பெரும்பான்மையான மக்களின் மனதில், தேர்தல் அரசியல் மீதும், இந்த அரசமைப்பின் மீதுமான நம்பிக்கையைப் புதுப்பிப்பதில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது என்பதே நம் கவனத்துக்குரியது.

இந்த அரசமைப்பை அம்பலப்படுத்துகிறதா, பலப்படுத்துகிறதா?

வேறொரு கோணத்திலிருந்தும் இதனைப் பார்க்கலாம். பிப்ரவரி 2014-ல், “ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றுவதை காங்கிரசும் பா.ஜ.க.வும் தடுத்த காரணத்தினால் பதவி விலகுவதாக”க் கூறினார் கேஜ்ரிவால். “49 நாட்களில் பதவியை ராஜினாமா செய்த ஓடுகாலி” என்று பாரதிய ஜனதா சாடியது. மக்களிடம் இந்த விமரிசனம் எடுபட்டதென்னவோ உண்மைதான். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் டில்லியில் ஆம் ஆத்மி தோற்றது.

சற்று யோசித்துப் பாருங்கள். ஜன் லோக்பால் சட்டத்தை முறியடிக்க பா.ஜ.க.வும் காங்கிரசும் கூட்டு சேர்ந்தன. கட்டணக் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் உற்பத்தி நிறுவனங்கள் டில்லியை இருளில் அமிழ்த்தின. கீழ்நிலை போலீசாரே ஆம் ஆத்மி அரசை மிரட்டினார்கள் – இந்த அனுபவங்களிலிருந்தெல்லாம் தனது ராஜினாமா முடிவின் நியாயத்தை அவர் மக்களுக்கு விளக்கியிருக்கலாம். நாடாளுமன்ற அரசியலின் வரம்பை புரிய வைத்திருக்கலாம்.

மாறாக, “இனி ஒரு போதும் ராஜினாமா செய்ய மாட்டேன்” என்று தெருத்தெருவாகச் சென்று மன்னிப்பு கேட்டதன் பொருள் என்ன? “மக்களிடம் பணிவாக மன்னிப்பு கேட்டார்” என்று கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கையைப் புகழ்ந்தன ஊடகங்கள்.

உண்மையில் அந்த மன்னிப்பு மக்களிடம் கேட்கப்பட்டதல்ல. ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு வந்து விட்டு, ஒழுங்காக அதன் வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடக்காமல், ‘வரம்பு மீறி பாலிடிக்ஸ் பண்ணிய குற்றத்துக்காக’ அவர் ஆளும் வர்க்கத்திடம் மன்னிப்புக் கேட்டார் என்பதே உண்மை.
தற்போது தேர்தல் வெற்றிக்குப் பிறகு, “நாங்கள் அகங்காரம் கொள்ள மாட்டோம்; பணிவாக நடந்து கொள்வோம்” என்று கேஜ்ரிவால் பேசியிருப்பதும் மக்களுக்குத் தெரிவிக்கும் செய்தி போலத் தோன்றினாலும், உண்மையில் அது ஆளும் வர்க்கத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் அவர் மறைமுகமாக முன்வைக்கும் விஞ்ஞாபனம்.

மக்கள் என்ற முகமூடி!

தனது சந்தர்ப்பவாதத்தை மறைக்கும் முகமூடியாகவும் மக்களைப் பயன்படுத்திக் கொள்கிறார் கேஜ்ரிவால். 2014 ஜனவரி மாதம், காங்கிரசு ஆதரவு பெற்று ஆட்சி அமைப்பதற்கு முன்னர், கேஜ்ரிவால், “மக்களைக் கலந்தாலோசித்தார்”. அதாவது மக்கள் கொள்கை வழி நடப்பதை விரும்புகிறார்களா, காங்கிரசு ஆதரவுடன் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பவாதத்தை விரும்புகிறார்களா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப முடிவெடுத்தார். 2014 பிப்ரவரியில் ராஜினாமா செய்வதற்கு முன்னரும் அதேபோல “மக்களைக் கலந்தாலோசிக்கத் தவறி விட்டேன்” என்பதுதான் கேஜ்ரிவாலின் சுய விமரிசனம்.

02-caption-1இந்த போலி ஜனநாயகத்தின் மீதான பிரமை, தேசவெறி, தேச முன்னேற்றம் குறித்த தப்பெண்ணங்கள், சாதி-மதவெறி, ஆணாதிக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆளும் வர்க்கக் கருத்துகளால் மக்கள் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களை அவற்றிலிருந்து விடுவிப்பதே ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு கட்சியின் கடமை. ஆனால், மக்களிடம் பணிவாக நடந்து கொள்ளும் தோரணையில், “மக்களின் சொல்படி” ஆளும் வர்க்கக் கருத்துகளை வழிமொழிகிறது ஆம் ஆத்மி கட்சி.

நேரடியாகச் சொல்வதென்றால், மக்களின் பெரும்பான்மையினர் இந்து மதவாதத்துக்கு ஆட்பட்டிருந்தால், சாதி ஆதிக்கத்தை விரும்பினால், தேசவெறிக்கு ஆட்பட்டிருந்தால் அவற்றைக் கேள்விக்குள்ளாக்குவது ஆம் ஆத்மியின் அரசியல் அல்ல. முசாபர்பூர் குறித்து கேஜ்ரிவால் மவுனம் சாதித்தார். “மோடியை மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்” என்றார். “காப் பஞ்சாயத்துகளை நமது பாரம்பரிய கலாச்சார அமைப்புகள்” என்றார். காஷ்மீரில் நடக்கும் இராணுவ அடக்குமுறையை நியாயப்படுத்தினார்.

எது வர்க்க அரசியல்?

வர்க்க அரசியல், மக்கள் அதிகாரம், அமைப்பு முறையை (system) கேள்விக்குள்ளாக்குதல் என்பன போன்ற கம்யூனிச அரசியல் சொற்றொடர்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக, பயங்கரமானதொரு யுத்தத்தை தொடங்கவிருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டே, இந்த அரசமைப்புக்கு சலாம் வரிசை எடுத்துக் கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசு கட்சிகளின் ஆளும் வர்க்க அரசியல் கருத்துகளை வழி மொழிந்து கொண்டே, சாதி-மதம் என்ற சட்டகத்திற்குள் சுழன்று கொண்டிருக்கும் தேர்தல் அரசியலை, அதிலிருந்து நகர்த்திச் சென்று, தண்ணீர், மின்சாரம், சுகாதாரம் என்று மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை நோக்கித் திருப்பி சாதனை புரிந்திருப்பதாகவும், இதுதான் வர்க்க அரசியல் என்றும் ஆம் ஆத்மி சித்தரித்துக் கொள்கிறது.

உழைக்கும் வர்க்கத்தின் அன்றாடப் பிரச்சினைகளைப் பேசுவதும் அவற்றில் சிலவற்றை தீர்த்துக் கொடுப்பதுமே வர்க்க அரசியல் அல்ல. (இதை ஆம் ஆத்மியை விட பலநூறு மடங்கு அதிகமாக போலி கம்யூனிஸ்டு கட்சியினர் செய்திருக்கிறார்கள்.) இந்த அரசமைப்பு ஆளும் வர்க்கத்தின் நலனுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்கு எதிராகவும் எந்தெந்த கட்சிகள், கொள்கைகள், நிறுவனங்கள் வழியாக எப்படியெல்லாம் செயல்படுகிறது என்ற புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தி, தனது வர்க்கத்தின் நலனுக்காகப் போராடும் ஓர்மையை மக்களுக்கு ஏற்படுத்துவதே வர்க்க அரசியல். சாதி ஒழிப்பு, இந்து மதவெறி எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, தேசிய இன, மொழி உரிமைகளை நிலைநாட்டுதல் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியதுதான் வர்க்க அரசியல்.

தனது வர்க்க நலன் எது என்பதைப் புரிந்து கொள்ளாத, தனது எதிரிகள் யார் என்பதை அடையாளம் காணவியலாத, அதற்கான போராட்டத்தில் ஈடுபடாத மக்களின் கையில் அதிகாரம் கிடைக்குமாயினும், அது ஏற்கெனவே உள்ள சமூக ஆதிக்க சக்திகளின் நலனுக்குத்தான் பணிவிடை செயும். ஆம் ஆத்மி முன்வைக்கும் ‘மக்கள் அதிகாரம்’ எனப்படுவதும் மொகல்லா சபாக்களும் அத்தகைய போராட்டத்தின் ஊடாக உருவானவை அல்ல, அப்படிப் போராடுவதும் அவற்றின் நோக்கமல்ல.

மாறாக, அவை இந்த அரசமைப்புக்கு எதிரான போராட்டம் எழும்பாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு வால்வுகள். மக்களிடம் மதிப்பிழந்து போன இந்த அரசமைப்பைப் பாதுகாப்பதற்காகவும், பஞ்சாயத்து மட்டம் வரை தங்களது நேரடித் தலையீட்டை உத்திரவாதப் படுத்திக் கொள்வதற்காகவும், வேர்மட்ட ஜனநாயகம் என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிறுவனங்கள்.

இந்திய அரசியல் சட்டத்தின் 73 மற்றும் 74-வது சட்ட திருத்தங்கள் கூறுகின்ற “அதிகாரப் பரவலாக்கம்” என்ற இட்லி மாவைத்தான் கேஜ்ரிவால் “ஸ்வராஜ்” “மொகல்லா சபா” என்ற பெயர்களில் ஊத்தப்பமாகவும், தோசையாகவும் ஊற்றியிருக்கிறார் என்றும், இதற்காக கேஜ்ரிவாலை “நகர்ப்புற நக்சல்” என்றெல்லாம் சித்தரிப்பது அபாண்டமானதென்றும் மோடி ஆதரவு அதிதீவிர வலதுசாரிப் பத்திரிகையான ஸ்வராஜ்யா சுட்டிக் காட்டுகிறது.

பழைய மீட்பரின் கோட்டும்,புதிய மீட்பரின் மப்ளரும்!

இவையெல்லாம், ஆம் ஆத்மியின் அதிசயிக்கத்தக்க வெற்றி கண்டு மனக்கிளர்ச்சி கொண்ட அறிஞர் பெருமக்கள் அறியாத உண்மைகளல்ல. எனினும், திடீர் சாம்பார் மீதும் உடனடி லாட்டரி மீதும் அறிவாளிகள் மையல் கொள்வதொன்றும் புதிய விடயமில்லையே! எட்டு மாதங்களுக்கு முன் மோடியை மீட்பனாகக் கருதிய டில்லி மக்கள் இன்று கேஜ்ரிவாலை மீட்பனாக கருதியிருக்கிறார்கள். கேஜ்ரிவால் தங்களை எப்படி மீட்கப்போகிறார் என்று புரிந்து அவர்கள் வாக்களிக்கவில்லை. மீட்பார் என்ற நம்பிக்கையில் வாக்களித்திருக்கிறார்கள். மோடி என்ற மீட்பரை நம்பியதைப் போலத்தான்!

ஆம் ஆத்மி, கொள்கை தேவையில்லையென்று கூறும் கட்சி. உட்கட்சித் தேர்தலோ ஜனநாயகமோ இதுவரை இல்லை. தனது உறுப்பினர்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிராத ஒரு தலைவர், மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்ட ஒரு ஆட்சியை தான் வழங்கப்போவதாகக் கூறுகிறார். கொள்கைக்கும் ஜனநாயகத்துக்கும் மாற்றாக கேஜ்ரிவாலின் நேர்மை முன்நிறுத்தப்படுகிறது. மோடியும் கூட இப்படித்தானே முன்நிறுத்தப்பட்டார்.

ஆடம்பர ஆத்மியின் கோட்டுக்கும் ஆம் ஆத்மியின் மப்ளருக்கும் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. மோடியின் கோட்டை டில்லி மக்கள் கழற்றினார்கள். கேஜ்ரிவாலின் மப்ளரை அக்கட்சியின் முரண்பாடுகளே கழற்றிவிடும்.

– மருதையன்
______________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015
______________________________

விவசாயிகளை அழிக்க பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டு சதி – கார்ட்டூன்

3

விவசாய நிலங்களை எடுத்து
முதலாளிகளுக்கு போட்டுவிட்டு
ஒரு ரூபாய் அரிசியை வாங்கிக் கொள்ளும் முட்டாள்
உன்னைப் போல் உலகில் உண்டா?

landbill-by-admk-bjp-allianceகுடிநீரையும், இயற்கை வளங்களையும்
குடிமக்களின் உழைப்பையும்
தனியார்மயத்துக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு
“ஐய்! மடிக் கணிணி கிடைக்கப்போகிறது” என்று
ஓட்டுப்போட்டு ஏமாறும்
உன்னைப் போல் ஒரு நாயுண்டா? புழு உண்டா?

தட்டைக் காட்டி போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும்
ஓட்டைக் காட்டி தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும் வாழ்வு ஒன்றுதான்!
நீயாக எதையும் கேட்க முடியாது…

(உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் – தோழர் -துரை. சண்முகம்)

jeya-suppors-land-billபடம் : ஓவியர் முகிலன்

jj-supports-land-billபடம் : ஓவியர் முகிலன்

நோக்கியா தொழிலாளிகளுக்காக களமிறங்கிய பு.ஜ.தொ.மு

0

நோக்கியாவின் சட்டவிரோத ஆலை மூடலை முறியடிப்போம்!
வேலை பெற போராடும் தொழிலாளர்களுக்கு தோள் கொடுப்போம்!!

என்ற முழக்கங்களின் கீழ் மார்ச் 13, 2015 அன்று மாலை 5 மணிக்கு திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் நோக்கிய இந்தியா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நோக்கியாவின் சட்டவிரோத ஆலை மூடலை முறியடிப்போம்

மத்திய மாநில அரசுகளே

  • VRS வாங்க மறுத்த வேலைக்காக போராடும் 104 தொழிலாளர்களின் வேலையை உத்தரவாதப்படுத்து
  • VRS என்ற பெயரில் விரட்டி வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்க உத்தரவிடு

தொழிலாளர்களே

  • வளர்ச்சி முன்னேற்றம் என்ற முகமூடியிட்டு தொழிலாளர்களின் உரிமை பறிப்பிற்கு காரணமான தாராளமயக் கொள்ளைக்கெதிராக கிளர்ந்தெழுவோம்
  • ஆலை வேறுபாடுகளை கடந்து தொழிலாளர் கூட்டமைப்பை கட்டியமைக்க ஒன்றுபடுவோம்

nokia-india-posterஅன்பார்ந்த தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே!

செல்போன் என்றாலே, அது நோக்கியாதான் என எல்லோரின் நினைவிலும் வலம் வந்த நோக்கியாவை தாங்கிப் பிடித்தும் அதன் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாய் இருந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை இன்று புயல் காற்றில் சிக்கிய படகைப் போல தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமென்ன?

நோக்கியா ஆலை மூடப்படுவதற்கு முன்பு சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் நோக்கியா இந்தியா தொழிலாளர்கள் சங்கம் தயாரித்து வெளியிட்ட ஆவணப்படம்.

நோக்கியா தொழிலாளர்களின் கடும் உழைப்பையும், வாழ்க்கை நிலைமைகளையும், எதிர்கால நம்பிக்கைகளையும், ஆலை மூடப்பட்டு விடுமோ என்ற பயத்தையும் வெளிப்படுத்துகிறது இந்த ஆவணப்படம். இப்போது நோக்கிய இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தின் கௌரவதத் தலைவராக இருந்து, பின்னர் தொழிலாளர்களை கைவிட்டு விட்ட  சி.ஐ.டி.யு.வின் சவுந்தர் ராஜனும் இதில் பேசுகிறார். 

தொழிலாளர்களின் உயிரைப் பறித்தும், உரிமைகளை மறுத்தும் பல லட்சம் கோடிகளை லாபமாக சுருட்டியது நிர்வாகம். பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுக் கொள்வான் என்பதற்கிணங்க, வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிக் கொண்ட நோக்கியா மத்திய-மாநில அரசுகளை ரூ 25,000 கோடி அளவு ஏமாற்றியுள்ளது.

இந்நிலையில் உலகெங்கும் உள்ள நோக்கியா கிளைகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தியது. ஆனால், இந்தியாவில் வரி ஏய்ப்பு வழக்கு நிலுவையில் இருப்பதால் மைக்ரோசாஃப்ட்டுக்கு கைமாற்ற முடியவில்லை. (கைமாற்றாமல் நம் நாட்டை ஏமாற்றின நோக்கியா, மைக்ரோசாப்ட் நிறுவனங்கள்).

வழக்கிலிருந்து தப்பிக்க வி.ஆர்.எஸ் என்ற பெயரில் 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மிரட்டி கட்டாயப்படுத்தி வெளியேற்றியது நோக்கியா. வி.ஆர்.எஸ் போகாமல் மீதம் இருந்த 850 தொழிலாளர்களை, சங்க நிர்வாகிகளாயிருந்த கைக்கூலிகள் நிர்வாகத்துடன் துரோக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வேலைக்கு வேட்டு வைத்தனர்.

சட்ட விரோத ஆலை மூடல்

நோக்கியா நிர்வாகமும் – சங்க நிர்வாகிகளும் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு தொழிலாளர்களுக்கு துரோகம் செய்வதை புரிந்து கொண்ட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 18(1) ஒப்பந்தத்தை ஏற்காமல் வேலை கேட்டு நோக்கியாவின் மெயின் வாயிலுக்கு சென்ற போது, நவம்பர் 1 முதல் ஆலையை மூடி விட்டதாக மனித வளத்துறை அதிகாரி சவுந்தர்ராஜன் கூறியிருக்கிறார்.

அவரிடம், “100 பேருக்கு மேல் வேலை செய்யும் ஆலையை மூட அரசிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா? அதை காண்பியுங்கள்” என்று கேட்டதற்கு “அரசிடம் அனுமதி வாங்க அவசியம் இல்லை. எந்த சட்டமும் எங்களை எதுவும் செய்ய முடியாது” என திமிராக பதிலளித்திருக்கிறார்.

அடுத்த நாள் நிறுவன வாயிலுக்குச் சென்ற போது போலீசு பட்டாளத்தையே குவித்திருந்தனர். “இனிமேல் இங்கேயெல்லாம் வரக்கூடாது. மீறி வந்தால், கூட்டம் கூடினால் தடியடி நடத்துவோம்” என காவல்துறை உயர் அதிகாரிகள் மிரட்டியிருக்கின்றனர்.

உளவுத்துறை போலீசோ இதற்கு ஒருபடி மேலே போய் நோக்கியா தொழிலாளர்கள் யாருக்கும் கூட்டம் நடத்த அனுமதி தரக்கூடாது என திருப்பெரும்புதூர் முதல் காஞ்சிபுரம் வரையிலான அனைத்து திருமண மண்டபங்களிலும் மிரட்டி வைத்திருந்தது. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் இவர்கள் அப்பட்டமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடியாள் வேலை செய்கிறார்கள். அரசுக்குக் கட்ட வேண்டிய வரியையும் கட்டாமல், காரணமும் சொல்லாமல் ஆலையை சட்டவிரோதமாக மூடியது நோக்கியா நிர்வாகம். ஆனால், இதைத் தட்டிக் கேட்க இவர்கள் யாருக்கும் துப்பில்லை.

104 தொழிலாளர்களின் தொடர் போராட்டம்.

போராட வேண்டிய நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் தொழிலாளர்களை அநாதையாக விட்டு விட்டு வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்று விட்டதால் தொழிலாளர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தொழிலாளர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் தொலைபேசி மிரட்டி வேலையை ராஜினாமா செய்ய வைத்தது நோக்கியா நிர்வாகம்.

இருக்கின்ற தொழிலாளர்கள் பொதுக்குழுவைக் கூட்டி புதிய நிர்வாகக் குழுவை தேர்ந்தெடுத்து நோக்கியா நிறுவனத்தின் சட்ட விரோத ஆலை மூடலை எதிர்த்தும், வேலைக்காக தொடர்ந்து போராடவும் முடிவு செய்தோம். சங்கத்தின் கௌரவத் தலைவராக செயல்பட்டு வந்த சி.ஐ.டி.யு-வின் மாநிலத் தலைவர் அ. சவுந்தர்ராஜனிடம் (சட்டமன்ற உறுப்பினர்) ஆதரவு கேட்ட போது, அவர் “100 பேருக்கெல்லாம் போராட முடியாது” என்றும், “நிர்வாகம் நல்ல செட்டில்மென்ட் தொகைதான் தருகிறார்கள். பேசாமல் வாங்கிக் கொள்ளுங்கள்” எனக் கூறி துரோகத்திற்கு புதிய விளக்கமளித்தார்.

உலகின் பல நாட்டு அரசுகளை விலை பேசுகின்ற நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், நமது நாட்டிலும் ஆலையை மூடுவதற்கான எவ்வித அனுமதியையும் அரசிடம் பெறவில்லை என்றும் நாட்டையும், தொழிலாளர்களையும் ஏமாற்றும் நோக்கியா நிர்வாகத்தை எதிர்த்து போராடுவதற்கு எண்ணிக்கை முக்கியமில்லை, நாட்டின் மீதும் தொழிலாளர் மீதும் பற்றுள்ள எத்தனை பேர் வந்தாலும், அவர்களுடன் இணைந்து போராட நாங்கள் வருகிறோம் எனக் கூறி போராட வழிகாட்டியது “புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி”யின் மாநிலத் தலைமை. நிராதரவாகத் தனித்து விடப்பட்ட எங்களுக்கு வர்க்க உணர்வும், நாட்டுப்பற்றும் ஊட்டப்பட்டதால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.

தமிழகத்தில் தொழிலாளர்களின் அவலநிலை

வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் யாவும், மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்துவிட்டு, சலுகைகளை அனுபவித்தும், தொழிலாளர் உழைப்பை உறிஞ்சியும் கொள்ளையடித்த லாபத்தை மூட்டைக் கட்டிக் கொண்டுஅடுத்த நாட்டிற்கு கொள்ளையடிக்க பறந்து விடுகின்றனர்.

தொழிலாளர் நலச் சட்டங்கள் அமுலில் இருக்கும் போதே நோக்கியா, ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி என ஆரம்பித்து ஐ.டி நிறுவனமான டி.சி.எஸ் வரை, தமது நிறுவனத்திற்காக பாடுபட்ட தொழிலாளர்களின் வாழ்வையே அழித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் (4,00,000) அதிகமான தொழிலாளர்கள் வேலையிலிருந்து துரத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், நமது பிரதமர் மோடியோ, “மேக் இன் இந்தியா” திட்டத்திற்காக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று தொழில் துவங்க முதலாளிகளை கூவிக் கூவி அழைக்கிறார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்தபோது கூட நம் நாட்டுத் தொழிலாளர்கள் சங்கமாக சேர்ந்து போராடி உரிமைகளை பெற்றனர். ஆனால், இன்றோ நாம் சங்கமாக சேர்வதற்கே போராட வேண்டிய அவலநிலையில் உள்ளோம். இதற்கு என்ன காரணம்?

தொழிலாளர் – மக்களின் உரிமை பறிப்பையும், மானிய வெட்டையும், வளர்ச்சி-முன்னேற்றம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் தாராளமயமாக்கல் என்ற நாசகாரக் கொள்கையே இதற்கு அடிப்படையாக உள்ளது. இதன் விளைவே அரசிடம் அனுமதி எதுவும் பெறாமலேயே தொழிலாளர்களை வெளியேற்றி ஆலையை மூடுகிறது நிர்வாகம்.

நோக்கியா நிறுவனத்திற்கு சொந்தமானது எந்திரங்களும், கட்டிடமும் மட்டுமே. நிலம் மற்றும் பிற எல்லாம் அரசுக்கு சொந்தமானது. எனவே, வேறொரு நிறுவனத்திற்கு ஆலையை குத்தகைக்கு விட்டோ, அல்லது அரசே ஆலையில் உற்பத்தியை துவங்கியோ 104 தொழிலாளர்களுக்கும் நிரந்த வேலை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மாநில அமைச்சர், பிரதமர் ஆகியோர் நோக்கியா ஆலை விரைவில் திறக்கப்படும் என அறிவிக்கின்றனர். அரசின் அங்கமான தொழிலாளர்துறையும், மாவட்ட நிர்வாகமும் வேலைகேட்டு தொழிலாளர்கள் கொடுத்துள்ள மனுவின்மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். ஆனால், நாட்டை ஏமாற்றும் முதலாளிகளை பாதுகாப்பதே அரசின் கொள்கையாக உள்ளது. தொழிலாளர் சட்டங்களும், அதை அமுல்படுத்தும் அதிகாரிகளும் தொழிலாளர்களை பாதுகாப்பதில்லை. தொழிலாளர்களின் போராட்டமே உரிமைகளை மீட்டெடுக்கின்றது.

நோக்கியா நிர்வாகம் அறிவித்த வி.ஆர்.எஸ் மற்றும் பிற சலுகைகளை புறக்கணித்து, வேலைக்காக போராடி வரும் 104 தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்டவும், வி.ஆர்.எஸ் என்ற பெயரில் வேலையிழந்த ஏனைய தொழிலாளர்களின் வேலையை மீட்கவும் தொழிலாளர்கள் கூட்டமைப்பை கட்டியமைத்து போராடுவோம்.

தகவல்
நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கம்,
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம் – 8807532859