privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசிறீரங்கம் : தமிழகத்தின் அவமானச் சின்னம்

சிறீரங்கம் : தமிழகத்தின் அவமானச் சின்னம்

-

டந்து முடிந்த சிறீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் குத்தாட்ட ரிக்கார்டு டான்ஸ், சாராயம், பிரியாணி, கறிவிருந்து, ரொக்கப்பணம் என்று உழைக்கும் மக்களைச் சீரழிப்பதில் கிரிமினல் ஜெ. கும்பல், புதியதொரு ‘புரட்சி’யைச் சாதித்திருக்கிறது. சதியால் தான் தண்டிக்கப்பட்டதாகப் புளுகிய ஜெ. தன்னைத் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற மாபெரும் ‘மக்கள் முதல்வர்’ என்று காட்டுவதற்காக நன்கு திட்டமிட்டு, தனது பணபலம், அதிகாரபலத்தைக் கொண்டு மக்களைப் பகிரங்கமாக விலைபேசியும், அரசு அதிகார அமைப்புகளை ஊழல்மயப்படுத்தி சரணடைய வைத்தும், கடந்த முறை அ.தி.மு.க. வென்ற வித்தியாசத்தை விட அதிகமான வாக்குகளைப் பெற்று இந்த வெற்றியை “வாங்கியுள்ளது.”

தி.மு.க.வை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்ற வெறியோடு தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாகவே மீறி, தேர்தல் அதிகாரிகள் முன்னிலையே உழைக்கும் மக்களைப் பணத்தாலும் பரிசுப் பொருட்களாலும் விலைபேசி, “இப்படித்தான் செய்வேன், நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்” என்ற ஆணவத்தோடு கொக்கரித்தது, கிரிமினல் ஜெ. கும்பல். ஏற்கெனவே ‘குடியரசு’ தின அணிவகுப்பில் ‘மக்கள் முதல்வர்’ படத்தோடு அலங்கார ஊர்வலம் நடத்தி எல்லா அரசு அமைப்புகளும் இக்கிரிமினல் கும்பலின் முன் வாய்பொத்தி சரணடைந்த நிலையில், இப்போது அப்பட்டமாகவே ஜெ. கும்பலின் அதிகாரத் திமிரின் முன்னே அடிபணிந்து கிடந்தன.

05-srirangam-voting-captionஊழல் குற்றச்சாட்டின் கீழ் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி பதவியிழக்கும் முதலாவது முதல்வர் என்ற சிறப்புத் தகுதியை அடைந்ததன் விளைவாக இந்த இடைத்தேர்தல் நடந்தது என்றாலும், இந்த தேர்தலை உரிய காலத்தில் நடத்த விடாமல் கிரிமினல் ஜெ. கும்பல் நடத்திய சூழ்ச்சிகளுக்கு தேர்தல் ஆணையமே உடந்தையாக நின்றது. பின்னர், வேறு வழியின்றி இந்த இடைத்தேர்தலை நடத்தியபோதிலும், அது ஜெ. கும்பலின் அடியாளாகவே நின்றது.

இத்தொகுதியில் கடந்த 2011-ல் இருந்த வாக்காளர்களைவிட தற்போது 9 ஆயிரம் வாக்காளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி போலி வாக்காளர்களை நீக்கக் கோரியும், ஆர்.டி.ஓ. மனோகரன், தாசில்தார் பஷீர் அகமது மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் ஆளும் கட்சியின் அடியாட்களாக உள்ளதையும், பணப்பட்டுவாடாக்களையும் விருந்துகளையும் புகைப்பட ஆதாரங்களுடன் தி.மு.க.வினர் கொடுத்து முறையிட்டபோதிலும், கிரிமினல் ஜெ. கும்பலிடம் சரணடைந்துவிட்ட தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. சிறீரங்கம் தொகுதிக்கான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்திருந்த போதிலும், அதைச் செயல்படுத்தவில்லை.

பின்னர், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆனந்த், தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சியின் அடியாட்களாக உள்ளதையும், உரிய திருத்தங்களுடன் வாக்காளர் பட்டியலை வெளியிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வானது, ஏன் புதிய பட்டியலை வெளியிடவில்லை என்று கண்டிப்பு காட்டுவதாக நாடகமாடிவிட்டு, புதிய பட்டியலைத் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் உபதேசித்துவிட்டு நழுவிக் கொண்டது. “அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துறை சார்ந்த சிறப்புப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், இத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று கூறி, ஜெ. கும்பலின் அராஜக ஆட்டத்துக்குப் பக்கமேளம் வாசித்தது.

பிழைப்புவாத வைகோ, ராமதாஸ், விஜயகாந்து வகையறாக்கள் ஒரு அரசியல்வாதி என்ற முறையில்கூட, கிரிமினல் ஜெ கும்பலை எதிர்த்து தேர்தலில் நிற்கத் துணியவில்லை. தேர்தலில் பங்கேற்காவிட்டாலும், ஒரு ஓட்டுக்கூட விழாவிட்டாலும் இக் கிரிமினல் கும்பலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யக்கூட முன்வராமல் முடங்கிப் போயினர். ஊடகங்களோ, ஜெயா கும்பலின் கிரிமினல் – பொறுக்கி அரசியலுக்கும் அதன் கொட்டத்துக்கும் உடந்தையாகவே நின்றன. திராவிடக் கட்சிகள் என்றாலே ஊழல்தான் என்று நியாயவான்களைப் போல பேசும் சிறீரங்க பார்ப்பனர்களோ, என்ன இருந்தாலும் நம்மவா என்ற பார்ப்பன பாசத்துடன் இக்கிரிமினல் கும்பலுக்குவெட்கமின்றி ஓட்டுப் போட்டனர்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 18 ஆண்டுகளாக ஜெ. கும்பலால் இழுத்தடிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி டி குன்ஹா நன்கு ஆராய்ந்து எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் துணிவுடன் இக்கிரிமினல் கும்பலைத் தண்டித்து தீர்ப்பளித்தார். ஆனால் சிறீரங்கம் வாக்காளர்களோ, இத்தேர்தலைப் புறக்கணித்தோ அல்லது இக்கிரிமினல்கும்பலுக்கு எதிராக வாக்களித்தோ ஜெ.கும்பலின் முகத்தில் கரியைப் பூச ஒரு வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும், எவ்வித அறநெறியுமின்றி பணத்துக்கு விலை போயினர். ரூ 5,000-க்கும் ரூ 2000-க்கும் விலைபேசப்பட்டு, தன்மான உணர்வின்றி தரம் தாழ்ந்து போயினர். ஓட்டுக்குப் பணம் என்பது தேர்தல் வெற்றியையும் தாண்டி, இக்கிரிமினல் கும்பலின் கொள்ளைக்கு வழங்கப்படும் அங்கீகாரமாக மாறி நிற்கிறது. தமிழ்ச் சமுதாயத்தை அடிமைகளாகவும், தன்மானற்ற இழிபிறவிகளாகவும், கையேந்திகளாகவும் சீரழித்துள்ள ஜெ. கும்பலின் வெற்றியானது, இதுவரையில் இல்லாத மிகவும் ஆபத்தானதொரு எதிர்காலம் தமிழகத்தைச் சூழ்ந்திருப்பதையே எச்சரிக்கையாக நமக்கு உணர்த்துகிறது.

– தனபால்
______________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015
______________________________