privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்நோக்கியா தொழிலாளிகளுக்காக களமிறங்கிய பு.ஜ.தொ.மு

நோக்கியா தொழிலாளிகளுக்காக களமிறங்கிய பு.ஜ.தொ.மு

-

நோக்கியாவின் சட்டவிரோத ஆலை மூடலை முறியடிப்போம்!
வேலை பெற போராடும் தொழிலாளர்களுக்கு தோள் கொடுப்போம்!!

என்ற முழக்கங்களின் கீழ் மார்ச் 13, 2015 அன்று மாலை 5 மணிக்கு திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் நோக்கிய இந்தியா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நோக்கியாவின் சட்டவிரோத ஆலை மூடலை முறியடிப்போம்

மத்திய மாநில அரசுகளே

  • VRS வாங்க மறுத்த வேலைக்காக போராடும் 104 தொழிலாளர்களின் வேலையை உத்தரவாதப்படுத்து
  • VRS என்ற பெயரில் விரட்டி வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்க உத்தரவிடு

தொழிலாளர்களே

  • வளர்ச்சி முன்னேற்றம் என்ற முகமூடியிட்டு தொழிலாளர்களின் உரிமை பறிப்பிற்கு காரணமான தாராளமயக் கொள்ளைக்கெதிராக கிளர்ந்தெழுவோம்
  • ஆலை வேறுபாடுகளை கடந்து தொழிலாளர் கூட்டமைப்பை கட்டியமைக்க ஒன்றுபடுவோம்

nokia-india-posterஅன்பார்ந்த தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே!

செல்போன் என்றாலே, அது நோக்கியாதான் என எல்லோரின் நினைவிலும் வலம் வந்த நோக்கியாவை தாங்கிப் பிடித்தும் அதன் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாய் இருந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை இன்று புயல் காற்றில் சிக்கிய படகைப் போல தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமென்ன?

நோக்கியா ஆலை மூடப்படுவதற்கு முன்பு சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் நோக்கியா இந்தியா தொழிலாளர்கள் சங்கம் தயாரித்து வெளியிட்ட ஆவணப்படம்.

நோக்கியா தொழிலாளர்களின் கடும் உழைப்பையும், வாழ்க்கை நிலைமைகளையும், எதிர்கால நம்பிக்கைகளையும், ஆலை மூடப்பட்டு விடுமோ என்ற பயத்தையும் வெளிப்படுத்துகிறது இந்த ஆவணப்படம். இப்போது நோக்கிய இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தின் கௌரவதத் தலைவராக இருந்து, பின்னர் தொழிலாளர்களை கைவிட்டு விட்ட  சி.ஐ.டி.யு.வின் சவுந்தர் ராஜனும் இதில் பேசுகிறார். 

தொழிலாளர்களின் உயிரைப் பறித்தும், உரிமைகளை மறுத்தும் பல லட்சம் கோடிகளை லாபமாக சுருட்டியது நிர்வாகம். பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுக் கொள்வான் என்பதற்கிணங்க, வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிக் கொண்ட நோக்கியா மத்திய-மாநில அரசுகளை ரூ 25,000 கோடி அளவு ஏமாற்றியுள்ளது.

இந்நிலையில் உலகெங்கும் உள்ள நோக்கியா கிளைகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தியது. ஆனால், இந்தியாவில் வரி ஏய்ப்பு வழக்கு நிலுவையில் இருப்பதால் மைக்ரோசாஃப்ட்டுக்கு கைமாற்ற முடியவில்லை. (கைமாற்றாமல் நம் நாட்டை ஏமாற்றின நோக்கியா, மைக்ரோசாப்ட் நிறுவனங்கள்).

வழக்கிலிருந்து தப்பிக்க வி.ஆர்.எஸ் என்ற பெயரில் 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மிரட்டி கட்டாயப்படுத்தி வெளியேற்றியது நோக்கியா. வி.ஆர்.எஸ் போகாமல் மீதம் இருந்த 850 தொழிலாளர்களை, சங்க நிர்வாகிகளாயிருந்த கைக்கூலிகள் நிர்வாகத்துடன் துரோக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வேலைக்கு வேட்டு வைத்தனர்.

சட்ட விரோத ஆலை மூடல்

நோக்கியா நிர்வாகமும் – சங்க நிர்வாகிகளும் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு தொழிலாளர்களுக்கு துரோகம் செய்வதை புரிந்து கொண்ட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 18(1) ஒப்பந்தத்தை ஏற்காமல் வேலை கேட்டு நோக்கியாவின் மெயின் வாயிலுக்கு சென்ற போது, நவம்பர் 1 முதல் ஆலையை மூடி விட்டதாக மனித வளத்துறை அதிகாரி சவுந்தர்ராஜன் கூறியிருக்கிறார்.

அவரிடம், “100 பேருக்கு மேல் வேலை செய்யும் ஆலையை மூட அரசிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா? அதை காண்பியுங்கள்” என்று கேட்டதற்கு “அரசிடம் அனுமதி வாங்க அவசியம் இல்லை. எந்த சட்டமும் எங்களை எதுவும் செய்ய முடியாது” என திமிராக பதிலளித்திருக்கிறார்.

அடுத்த நாள் நிறுவன வாயிலுக்குச் சென்ற போது போலீசு பட்டாளத்தையே குவித்திருந்தனர். “இனிமேல் இங்கேயெல்லாம் வரக்கூடாது. மீறி வந்தால், கூட்டம் கூடினால் தடியடி நடத்துவோம்” என காவல்துறை உயர் அதிகாரிகள் மிரட்டியிருக்கின்றனர்.

உளவுத்துறை போலீசோ இதற்கு ஒருபடி மேலே போய் நோக்கியா தொழிலாளர்கள் யாருக்கும் கூட்டம் நடத்த அனுமதி தரக்கூடாது என திருப்பெரும்புதூர் முதல் காஞ்சிபுரம் வரையிலான அனைத்து திருமண மண்டபங்களிலும் மிரட்டி வைத்திருந்தது. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் இவர்கள் அப்பட்டமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடியாள் வேலை செய்கிறார்கள். அரசுக்குக் கட்ட வேண்டிய வரியையும் கட்டாமல், காரணமும் சொல்லாமல் ஆலையை சட்டவிரோதமாக மூடியது நோக்கியா நிர்வாகம். ஆனால், இதைத் தட்டிக் கேட்க இவர்கள் யாருக்கும் துப்பில்லை.

104 தொழிலாளர்களின் தொடர் போராட்டம்.

போராட வேண்டிய நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் தொழிலாளர்களை அநாதையாக விட்டு விட்டு வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்று விட்டதால் தொழிலாளர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தொழிலாளர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் தொலைபேசி மிரட்டி வேலையை ராஜினாமா செய்ய வைத்தது நோக்கியா நிர்வாகம்.

இருக்கின்ற தொழிலாளர்கள் பொதுக்குழுவைக் கூட்டி புதிய நிர்வாகக் குழுவை தேர்ந்தெடுத்து நோக்கியா நிறுவனத்தின் சட்ட விரோத ஆலை மூடலை எதிர்த்தும், வேலைக்காக தொடர்ந்து போராடவும் முடிவு செய்தோம். சங்கத்தின் கௌரவத் தலைவராக செயல்பட்டு வந்த சி.ஐ.டி.யு-வின் மாநிலத் தலைவர் அ. சவுந்தர்ராஜனிடம் (சட்டமன்ற உறுப்பினர்) ஆதரவு கேட்ட போது, அவர் “100 பேருக்கெல்லாம் போராட முடியாது” என்றும், “நிர்வாகம் நல்ல செட்டில்மென்ட் தொகைதான் தருகிறார்கள். பேசாமல் வாங்கிக் கொள்ளுங்கள்” எனக் கூறி துரோகத்திற்கு புதிய விளக்கமளித்தார்.

உலகின் பல நாட்டு அரசுகளை விலை பேசுகின்ற நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், நமது நாட்டிலும் ஆலையை மூடுவதற்கான எவ்வித அனுமதியையும் அரசிடம் பெறவில்லை என்றும் நாட்டையும், தொழிலாளர்களையும் ஏமாற்றும் நோக்கியா நிர்வாகத்தை எதிர்த்து போராடுவதற்கு எண்ணிக்கை முக்கியமில்லை, நாட்டின் மீதும் தொழிலாளர் மீதும் பற்றுள்ள எத்தனை பேர் வந்தாலும், அவர்களுடன் இணைந்து போராட நாங்கள் வருகிறோம் எனக் கூறி போராட வழிகாட்டியது “புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி”யின் மாநிலத் தலைமை. நிராதரவாகத் தனித்து விடப்பட்ட எங்களுக்கு வர்க்க உணர்வும், நாட்டுப்பற்றும் ஊட்டப்பட்டதால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.

தமிழகத்தில் தொழிலாளர்களின் அவலநிலை

வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் யாவும், மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்துவிட்டு, சலுகைகளை அனுபவித்தும், தொழிலாளர் உழைப்பை உறிஞ்சியும் கொள்ளையடித்த லாபத்தை மூட்டைக் கட்டிக் கொண்டுஅடுத்த நாட்டிற்கு கொள்ளையடிக்க பறந்து விடுகின்றனர்.

தொழிலாளர் நலச் சட்டங்கள் அமுலில் இருக்கும் போதே நோக்கியா, ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி என ஆரம்பித்து ஐ.டி நிறுவனமான டி.சி.எஸ் வரை, தமது நிறுவனத்திற்காக பாடுபட்ட தொழிலாளர்களின் வாழ்வையே அழித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் (4,00,000) அதிகமான தொழிலாளர்கள் வேலையிலிருந்து துரத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், நமது பிரதமர் மோடியோ, “மேக் இன் இந்தியா” திட்டத்திற்காக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று தொழில் துவங்க முதலாளிகளை கூவிக் கூவி அழைக்கிறார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்தபோது கூட நம் நாட்டுத் தொழிலாளர்கள் சங்கமாக சேர்ந்து போராடி உரிமைகளை பெற்றனர். ஆனால், இன்றோ நாம் சங்கமாக சேர்வதற்கே போராட வேண்டிய அவலநிலையில் உள்ளோம். இதற்கு என்ன காரணம்?

தொழிலாளர் – மக்களின் உரிமை பறிப்பையும், மானிய வெட்டையும், வளர்ச்சி-முன்னேற்றம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் தாராளமயமாக்கல் என்ற நாசகாரக் கொள்கையே இதற்கு அடிப்படையாக உள்ளது. இதன் விளைவே அரசிடம் அனுமதி எதுவும் பெறாமலேயே தொழிலாளர்களை வெளியேற்றி ஆலையை மூடுகிறது நிர்வாகம்.

நோக்கியா நிறுவனத்திற்கு சொந்தமானது எந்திரங்களும், கட்டிடமும் மட்டுமே. நிலம் மற்றும் பிற எல்லாம் அரசுக்கு சொந்தமானது. எனவே, வேறொரு நிறுவனத்திற்கு ஆலையை குத்தகைக்கு விட்டோ, அல்லது அரசே ஆலையில் உற்பத்தியை துவங்கியோ 104 தொழிலாளர்களுக்கும் நிரந்த வேலை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மாநில அமைச்சர், பிரதமர் ஆகியோர் நோக்கியா ஆலை விரைவில் திறக்கப்படும் என அறிவிக்கின்றனர். அரசின் அங்கமான தொழிலாளர்துறையும், மாவட்ட நிர்வாகமும் வேலைகேட்டு தொழிலாளர்கள் கொடுத்துள்ள மனுவின்மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். ஆனால், நாட்டை ஏமாற்றும் முதலாளிகளை பாதுகாப்பதே அரசின் கொள்கையாக உள்ளது. தொழிலாளர் சட்டங்களும், அதை அமுல்படுத்தும் அதிகாரிகளும் தொழிலாளர்களை பாதுகாப்பதில்லை. தொழிலாளர்களின் போராட்டமே உரிமைகளை மீட்டெடுக்கின்றது.

நோக்கியா நிர்வாகம் அறிவித்த வி.ஆர்.எஸ் மற்றும் பிற சலுகைகளை புறக்கணித்து, வேலைக்காக போராடி வரும் 104 தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்டவும், வி.ஆர்.எஸ் என்ற பெயரில் வேலையிழந்த ஏனைய தொழிலாளர்களின் வேலையை மீட்கவும் தொழிலாளர்கள் கூட்டமைப்பை கட்டியமைத்து போராடுவோம்.

தகவல்
நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கம்,
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம் – 8807532859

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க