தொழில் தகராறு சட்டம், ஐ.டி. நிறுவனங்களுக்குப் பொருந்துமா? சென்னை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!
நமது நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கிய பின்னர் தொடங்கப்பட்ட கார்ப்பரேட் மென்பொருள் நிறுவனங்களில் தொழில் தகராறுகள் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்கள் எவையும் பின்பற்றப்படுவதே இல்லை. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எந்த சமயத்திலும் வேலையில் இருந்து நீக்கப்படலாம் என்கிற அச்சத்தில் தான் பணிபுரிகின்றனர். வருடாந்திர அப்ரைசல் என்கிற வெளிப்படைத்தன்மையற்ற நடைமுறையின் மூலம் ‘திறனற்றவர்கள்’ என்கிற முத்திரை குத்தப்படுகின்றனர். கடும் மன அழுத்தத்திலும், 10 மணி நேரத்துக்கும் மேலாகப் பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சங்கம் அமைக்கும் உரிமையும் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி 10-ம் தேதி டி.சி.எஸ் நுழைவாயில் முன்பு பு.ஜ.தொ.மு நடத்திய பிரச்சாரம் (கோப்புப் படம்)
“முந்நூறு பேருக்கும் அதிமான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதாக இருந்தால் அரசின் அனுமதி பெற்றாக வேண்டும்” என்ற சட்டத்தை ஐ.டி. நிறுவனங்கள் மதிப்பதேயில்லை.கொத்துக் கொத்தான வேலைநீக்கங்கள் ஐ.டி நிறுவனங்களில் சகஜமாகி விட்டன. இத்தகைய சட்டவிரோத வேலைநீக்கத்தை எதிர்ப்பவர்கள் குறித்த விபரங்கள் நாஸ்காம் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட எவருக்கும் பிற ஐ.டி நிறுவனங்களிலும் வேலை கிடைக்காது என்பதால், ஐ.டி.ஊழியர்கள் இத்தகைய சட்ட விரோத வேலைநீக்கங்களை எதிர்க்கத் துணியாமல் சகித்துக் கொள்கின்றனர்.
இந்தச் சூழலில், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் ( TATA CONSULTANCY SERVICES ) என்ற நிறுவனம் கடந்த 2014 டிசம்பர் மாத இறுதியில் 25 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவெடுத்து, அதற்கான தயாரிப்புகளை செய்யத் தொடங்கியது. 3 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் தொடர்ந்து 30 ஆண்டுகளாக இலாபத்தில்தான் இயங்கி வருகின்றது. தனது லாபத்தினை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்ட ஊழியர்களை நீக்கிவிட்டு, புதிய ஊழியர்கள் 55 ஆயிரம் பேரை மிகக்குறைந்த ஊதியத்தில் நியமிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
சோழிங்கநல்லூர் சிக்னலில் பு.ஜ.தொ.மு தொழிலாளர்களின் பிரச்சாரம் (கோப்புப் படம்)
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சுமார் 20 ஆண்டுகளாகப் போராடி வருகின்ற “புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி” ( NDLF ) தொழிற்சங்கம், டி.சி.எஸ். ஊழியர்களது வேலை நீக்கப் பிரச்சினையில் தலையிட்டுப் போராடத் தொடங்கியது. இதற்கென பு.ஜ.தொ.மு ஐ.டி.ஊழியர்கள் பிரிவு தொடங்கப்பட்டது. “சட்ட விரோதமான வேலை நீக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டுமானால் சங்ககமாகத் திரளுவதுதான் தீர்வு” என்பதை உணர்ந்த நூற்றுக்கணக்கான ஐ.டி. ஊழியர்கள் பு.ஜ.தொ.மு.வில் இணைந்து வருகின்றனர்.
டி.சி.எஸ் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சசிரேகா என்ற பெண்மணி இந்த அநீதிக்கு எதிராக தனிப்பட்ட முறையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியபோது, “தொழிற் தகராறு சட்டம் தம்மைக் கட்டுப்படுத்தாது” என்று வாதிட்டு, ஐ.டி ஊழியர்களது சட்டபூர்வ உரிமைகளை மறுத்தது, டி.சி.எஸ்.
மென்பொருள் நிறுவனங்கள் செயல்படும் தொழிற்பூங்காவின் கட்டுமானம் அனைத்தையும் அரசு தான் செய்து கொடுத்தது. அரசு செலவில் மலிவான கட்டணத்தில் மின்சாரம், குடிநீர், சாலைவசதி ஆகியவற்றை அனுபவிப்பதுடன். பல ஆயிரம் கோடிகளுக்கு வரிச்சலுகையும் பெற்றுள்ளன டி.சி.எஸ் போலவே எண்ணற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மென்பொருள் மட்டுமல்லாது ஏனைய தொழில்களிலும் ஈடுபட்டு வரும், எண்ணற்ற சலுகைகளை அனுபவிக்கும் இத்தகைய கார்ப்பரேட்கள் இங்குள்ள சட்டங்கள் எதையும் மதிப்பதே கிடையாது. சட்டங்களை மதிக்காத கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தான் சமூகத்தின் சொத்துக்களான நிலம், நீர் ஆகிய அனைத்தையும் வாரி இறைக்கிறது, அரசு.
“தொழிற் தகராறு சட்டம் தம்மைக் கட்டுப்படுத்தாது” என்று வாதிட்டு, ஐ.டி ஊழியர்களது சட்டபூர்வ உரிமைகளை மறுத்தது, டி.சி.எஸ்.
25 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கப் பிரச்சினையில் அரசு தலையிட்டு, சட்டவிரோத வேலை நீக்கத்தை தடுத்திடுமாறும், டி.சி.எஸ் ஊழியர்கள் தொழிலாளர் நலச்சட்டங்கள் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பெறுவதை உறுதி செய்யுமாறும், 25 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது “தொழில் தகராறு சட்டம் 1947” அட்டவணை V- ன்படி தொழிலாளர் விரோதப் போக்கு என அறிவிக்குமாறும், ஐ.டி. ஊழியர்களை அச்சுறுத்தும் நாஸ்காம் கருப்புப் பட்டியலைத் தடை செய்யுமாறும், டிசிஎஸ் நிர்வாகத்தால் பாதிப்படைந்த ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கிடுமாறும் “புஜதொமு- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு” சார்பில் கடந்த ஜனவரி 21 அன்று தமிழக அரசிடம் மனு கொடுக்கப்பட்டது. அம்மனு மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொழிலாளர்களது நலன்களைக் காப்பதற்காக போடப்பட்ட சட்டங்களும், அவற்றை நடைமுறைப்படுத்த தொழிலாளர் துறையும் இருந்தபோதிலும் அவர்களைப் பணி செய்ய வைப்பதற்குக் கூட நாம் நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்க வேண்டிய நிலைதான் உள்ளது.
பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு சங்கத்தின் கோரிக்கைகளை செயல்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தோம். அவ்வழக்கில் பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்புவும், வழக்கறிஞர் எஸ்.பார்த்தசாரதியும் வாதாடினர். பொது நல வழக்காக இதனைக் கருத முடியாதென முடிவு செய்த தலைமை நீதிபதியின் முதன்மை அமர்வு , “ஐ.டி. நிறுவனங்களுக்கு தொழில் தகராறு சட்டம் பொருந்துமா இல்லையா என்பதை அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளது.
பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர் பிரிவு அமைப்பாளர் கற்பகவிநாயகம்
இதனை அடுத்து கீழ்க்காணும் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவெடுக்குமாரு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
1) தமிழ் நாட்டிலுள்ள ஐ.டி. நிறுவனங்களை இந்திய தொழில் தகராறு சட்டங்கள் கட்டுப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
2) எந்த ஐ.டி. நிறுவனமும் நினைத்த நேரத்தில் லே-ஆப் செய்வதை சட்ட விரோதம் என அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3) அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் சங்கம் அமைக்கும் உரிமையைத் தடுக்கும் ஐ.டி. நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) பணி நீக்கம் செய்யப்பட்ட டி.சி.எஸ் உள்ளிட்ட அனைத்து ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கும் உரிய நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்
தொழிலாளர் நலச் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஐ.டி நிறுவனங்களை வலியுறுத்துவதற்கும், இது குறித்து , அரசுக்கு அழுத்தம் தருவதற்கும் ஐ.டி ஊழியர்கள் சங்கமாக ஒன்றுபடுவது முன் நிபந்தனையாக உள்ளது.
எனவே சட்டபூர்வ உரிமைகளை வென்றிட அனைத்து ஐ.டி.ஊழியர்களும் தங்களை எமது பு.ஜ.தொ.மு சங்கத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இது தொடர்பான பத்திரிகை செய்திகள்
[செய்திகளை பெரிதாகப் படிக்க படத்தின் மீது சொடுக்கவும்]
சு. கற்பகவிநாயகம், அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com
அமித் ஷா தலையை காக்கும் ஆர்.எஸ்.எஸ் தம்பிரான் கோசாவி
பிரதமர் மோடியின் கார்ப்பரேட் நலன் சார்ந்த செயல்பாடுகள், மத்திய அமைச்சர்களின் வெறியூட்டும் பேச்சுக்கள் மற்றும் சங் பரிவாரங்கள் துணிகரமாக ஈடுபடுகின்ற இந்துத்துவ நடவடிக்கைகள் ஓரளவுக்கு ஊடக கவனத்தை பெற்றுள்ளன. இந்து மதவெறியர்கள் கடந்த காலங்களில் இழைத்த குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் நடந்து வரும் வழக்குகளிலிருந்து தப்புவிக்க செய்யப்படுகின்ற முயற்சிகள் உரிய முக்கியத்துவமின்றி ஊடகங்களில் பகிரப்பட்டு மறக்கடிக்கப்படுகின்றன.
இந்து மதவெறியர்கள் கடந்த காலங்களில் இழைத்த குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் நடந்து வரும் வழக்குகளிலிருந்து தப்புவிக்க செய்யப்படுகின்ற முயற்சிகள் உரிய முக்கியத்துவமின்றி ஊடகங்களில் பகிரப்பட்டு மறக்கடிக்கப்படுகின்றன.
பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர் அமித் ஷா, குஜராத் மாநில உள்துறை மந்திரியாக செயல்பட்ட போது புரிந்த போலி மோதல் கொலைகள் தொடர்பான முக்கியமான ஒரு வழக்கிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார். சொராபுதீன் சேக், அவரது மனைவி கவுசர் பீ ஆகியோர் 2005-ம் வருடம் அமித் ஷாவின் ஆணையின் பேரில் கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யபட்டனர் என்பது குற்றச்சாட்டு. இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜாபதி 2006-ம் வருடம் கொல்லபட்டார்.
இந்த வழக்கு முதலில் குஜராத் மாநிலத்தில் நடந்து கொண்டிருந்தது. சொராபுதீன் ஒரு லஷ்கர் இயக்கத் தீவிரவாதி என்ற கருத்து அப்போது மக்கள் மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஜூலியஸ் சீசரை பொய்ப்பழி சுமத்தி கொன்ற புரூட்டஸ் ‘நீதி’ கேட்டது போல, மோடி பொதுக்கூட்டங்களில் மக்களை பார்த்து, ‘சொராபுதீன் போன்ற தீவிரவாதியை என்ன செய்ய சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். ‘கொல்லுங்கள், கொல்லுங்கள்’ என்று விடை பகர்ந்தனர் மக்கள். ‘மோடியை கொல்ல சூரத்திலிருந்து அகமதாபாத் பயணித்து கொண்டிருந்த ‘பயங்கரவாதி’ சொராபுதீன் சேக்கை சரணடைய கோரிய போது, மறுத்து துப்பாக்கியால் சுட்டதால், போலீசு எதிர்வினையாற்ற நேர்ந்ததில் கொல்லப்பட்டார்’ என்று வழக்கை முடித்தது குஜராத் போலீஸ்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் 2007-ம் வருடம் வந்தது. மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அமித் ஷாவை பாதுகாக்க விசாரணையின் போக்கை திசை திருப்பி நாடகமாடியது குஜராத் மோடி அரசாங்கம். ‘பேர், புகழ் மற்றும் பதவி உயர்வுக்காக குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகள் சிலரே சொராபுதீன் சேக்கை சுட்டுக் கொன்றனர்’ என்றும், ‘சொராபுதீன் சேக் லஷ்கர் தீவிரவாதியல்ல’ என்றும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்தது. ஷெர்லாக் ஹோம்ஸ் புலனாய்வு கோணத்துக்கு உகந்ததாக மூன்றாவது ஒரு தகவலும் அதில் இருந்தது. சொராபுதீன் கொல்லப்பட்ட போது ஆந்திராவிலிருந்து மகாராஷ்டிராவின் சாங்க்லிக்கு ஒரு பேருந்தில் பயணித்து கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அமித் ஷாவை பாதுகாக்க விசாரணையின் போக்கை திசை திருப்பி நாடகமாடியது குஜராத் மோடி அரசாங்கம். (மோடி – அமித் ஷா – டி.ஜி. வன்சாரா)
இந்த மூன்றாவது தகவல் உச்சநீதிமன்றத்தில் வழக்கை கண்காணித்து வந்த நீதிபதியை ஆச்சரியப்படுத்தியது. பதவிக்கும், புகழுக்கும் ஆசைபட்டு ஒருவரை கொல்ல போலீஸ் அதிகாரிகள் ஆந்திரா வரை புறப்பட்டு சென்றனர் என்ற தகவல் துணுக்குற செய்தது. இரண்டு புள்ளிகளும் இணைய மறுப்பதை கண்டனர். வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு 2010-ம் வருடம் மாற்றப்பட்டது. சொராபுதீன் மற்றும் அவரது மனைவி பயணித்த பேருந்தில் சென்ற துளசிராம் பிரஜாபதி இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தார். அவர் 2006-ம் வருடம் கொல்லப்பட்ட தகவலையும் வெளிக்கொணர்ந்தது சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து பல்வேறு தடைகளை குஜராத் அரசாங்கம் ஏற்படுத்தியது. விசாரணை காலம் முடியும் வரை அமித் ஷா குஜராத்தில் நுழைய தடை விதித்தது உச்சநீதிமன்றம். சி.பி.ஐ-ன் கோரிக்கையை ஏற்று வழக்கை 2012-ம் வருடம் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்.
இந்த வழக்கை தனியாக விசாரணை நடத்தி முடிவை பெற மகாராஷ்டிராவில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ஒன்றையும் ஏற்படுத்தியது உச்சநீதிமன்றம். அப்போது முக்கியமான ஒரு நிபந்தனையை விதித்தது. வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதி நடுவில் மாற்றப்படக்கூடாது என்று கூறியது. விசாரணை நீதிபதியாக உத்பத் என்பவர் நியமிக்கப்பட்டார். விசாரணையின் போது நேரில் ஆஜராகாத அமித் ஷா மீது கண்டிப்புடன் நடந்து கொண்டார்.
இந்த நிலையில் பிரதமராக மோடி பொறுப்பேற்றார். பல்வேறு மாநில ஆளுநர்கள் அவமானப்பட்டு வெளியேறியது போல, சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி உத்பத் ‘தானாகவே’ வெளியேறி வழி விட்டார். 2014 மே மாதம் மோடி பிரதமராக பொறுப்பேற்றார். ஜூன் மாதத்தில் உத்பத் ராஜிநாமா செய்தார். அமித் ஷாவை காப்பாற்ற மோடி எவ்வளவு துரிதகதியில் செயல்பட்டுள்ளார் என்பது இதில் தெரிகிறது.
ஹர கர மோடி, வீட்டுக்கு வீடு மோடி (மோடிக்காக அமித் ஷா நடத்திய ஒட்டுக் கேட்பு குறித்து)
உத்பத் ராஜிநாமா செய்த பிறகு இந்த பொறுப்புக்கு வந்தவர் பிரிஜ்மோகன் லோயா. மர்மமான முறையில் அவர் தங்கியிருந்த நாக்பூர் அரசு விருந்தினர் மாளிகையில் நவம்பர் மாதம் 30-ம் தேதி இறந்து கிடந்தார். மாரடைப்பு என்று சொல்லப்பட்டாலும், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது. அமித் ஷாவுக்கு அனுசரணையாக நடந்து கொள்வதை போல முதலில் தோன்றினார், பிரிஜ்மோகன் லோயா. உத்பத் மாதிரி இல்லாமல், நேரில் ஆஜராவதிலிருந்து அமித் ஷாவுக்கு விலக்கு அளித்து வந்தார். பின்னர் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் இந்தச் சலுகை ‘அமித் ஷாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை பதிவாகும் வரை மட்டுமே’ என்றார்.
அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து விடுவிக்க வேண்டும் என்பதே அமித் ஷா தரப்பின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருந்தது. சி.பி.ஐ சிறப்பு நீதிபதியின் அறிவிப்பு அமித் ஷாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதிகாரத்தின் உச்சியில் ராஜாளி பறவையின் இறுமாப்புடன் தான் வீற்றிருக்க, கூட்டுக் களவாணியான பழைய நண்பனின் துயரைக் காண சகிக்காதிருந்தார் மோடி. மேலும் ஜெயலலிதா சசிகலாவின் துணையை நாடுவது போல அமித் ஷாவின் அருகாமையை மிகவும் விரும்பினார். 52 வயதான நீதிபதி லோயா மோடியின் நன்னூலில் இடம்பெற மறுத்ததால் அதற்குரிய வெகுமானத்தை பெற்றார். லோயா அகற்றப்பட்டு அவருக்குப் பிறகு சி.பி.ஐ. சிறப்பு நீதிபதியாக கோசாவி 2014-ம் வருடம் டிசம்பர் 4-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
குஜராத் போலீசின் இரட்டைத் துப்பாக்கி – மோடி, அமித் ஷா
அமித் ஷாவின் எதிர்பார்ப்பில் எந்த குறையையும் வைக்கவில்லை, கோசாவி. தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற அமித் ஷாவின் கோரிக்கை மனுவை முதலில் எடுத்துக் கொண்டார், கோசாவி. டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வாதங்களை கேட்டறிந்து, டிசம்பர் மாதம் 30-ம் தேதி தீர்ப்பை வழங்கினார். அமித் ஷாவுக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளிருந்தும் அவரை விடுவித்து தனது ‘கடமையை’ செவ்வனே நிறைவேற்றினார். ‘அரசியல் காரணங்களுக்காக புனையப்பட்ட வழக்கு’ என்று பா.ஜ.க.வின் ஊடகப் புளுகர்கள் கூறி வந்ததையே தனது தீர்ப்பாக எழுதினார் கோசாவி. வேகமான பந்துவீச்சுக்கு சோயப் அக்தரை ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைப்பது போல, அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை அதிவேகமாக முடித்து வைத்த சி.பி.ஐ சிறப்பு நீதிபதி கோசாவியை நாம் ‘நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். எக்ஸ்பிரஸ்’ என்று தான் அழைக்க வேண்டும்.
‘இந்த வழக்கு சிக்கலான முடிச்சுகளை கொண்டது; ஆழமான சதிவலை பின்னப்பட்டது; அதிகார பலமுள்ளவர்கள் சம்பந்தப்பட்டது’ என்பதால் தான் வழக்கை தீர விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை குஜராத்துக்கு வெளியே அமைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆனால், உச்சநீதிமன்றத்தின் நோக்கத்தை நிறைவேற்றாமல், பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கையையும் புறந்தள்ளி, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற அமித் ஷாவின் கோரிக்கை மனுவை முதலில் பரிசீலனைக்கு எடுத்து அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய நீதி தேவன் கோசாவி ஒரு ஆர்.எஸ்.எஸ் தம்பிரான் என்பதில் சந்தேகம் உண்டா?
உள்துறை மந்திரியாக இருப்பவர் டி.ஜி.பி., உள்துறை செயலர் ஆகியோருடன் முறையான தொடர்பில் இருப்பதை புரிந்து கொள்ளலாம். குஜராத்தின் உள்துறை மந்திரியாக இருந்த அமித் ஷா, எஸ்.பி. மற்றும் உதவி எஸ்.பி நிலையில் இருந்த டி.ஜி. வன்சாரா மற்றும் ராஜ்குமார் பாண்டியன் ஆகியோரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். சொராபுதீன் கொல்லப்பட்ட நாளில் இவர்களுடன் மிக அதிகமாக பேசிய தொலைபேசி நேரக் கணக்கு மற்றும் தடயவியல் சோதனை அறிக்கை என்று எந்த ஆதாரத்தையும் கோசாவி கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
இது மட்டுமல்லாமல் தஸ்ரத் பட்டேல் மற்றும் ராமன் பட்டேல் ஆகிய இரு சகோதரர்களின் வாக்குமூலங்கள் முக்கியமானவை. கட்டிட ஒப்பந்ததாரர்களான இவர்களின் வாக்குமூலங்கள் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷா ஒரு பெரும் கொள்ளை கூட்டத்தின் தலைவன் என்பதை தெரிவிக்கிறது. தனது வசூல் வேட்டைக்கு சொராபுதீனின் அடியாட்களை அவர் பயன்படுத்தி வந்துள்ளார். 2004-ம் வருடம் ‘பாப்புலர் பில்டர்ஸ்’ என்ற தங்கள் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு தனது அடியாள் படையுடன் வந்த சொராபுதீன் அங்கு சிறு வன்முறையில் ஈடுபட்டுள்ளார். கூட்டத்திலிருந்து ஒருவர் துப்பாக்கியால் காற்றில் சுட்டுள்ளார். அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் சொராபுதீனுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் குஜராத் போலீஸ் எடுக்கவில்லை. காரணம், சொராபுதீன் முஸ்லிமாக இருந்தாலும், அமித் ஷாவின் பங்காளி.
பங்காளிகள் பகையாளிகளானது தான் அமித் ஷா – சொராபுதீன் கதையின் மையக்கரு எனலாம். கொள்ளையடிக்கும் பணத்தை பகிர்ந்து கொள்வதில் தோன்றிய முரண்பாடே சொராபுதீன் கொலைக்கான மூலக் காரணம். சொராபுதீன் அதிகமாக பணத்தை நிர்ப்பந்தித்து இருக்க வேண்டும் அல்லது உரிய பங்கை தரவில்லை என்றால் பங்காளிகளை அம்பலப்படுத்துவதாக மிரட்டியிருக்க வேண்டும். சில வழக்கறிஞர்கள் சந்தேகப்படுவது போல 2002-ம் வருடம் நடந்த முஸ்லிம் மக்கள் படுகொலையில் மோடிக்கு எதிராக ‘நீதிக்கான குடிமக்கள்’ ஆணையத்தில் சாட்சியமளித்த ஹரேன் பாண்டியா கொலையில் சம்பந்தபட்டவராகவும் கூட இருக்கலாம். ஆனால், இந்த உண்மையை வெளிப்படுத்த கவித்துவ நீதியின் மீது தணியாத தாகம் கொண்டவர்கள் பொறுப்புகளில் இருக்க வேண்டும்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். துளசிராம் பிரஜாபதியை கொன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குஜராத் மாநில டிஜிபி பி.சி.பாண்டேவை பிப்ரவரி 4-ம் தேதி விடுதலை செய்து உத்தரவிட்டார் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி கோசாவி. பிப்ரவரி 5-ம் தேதி கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் கொலை வழக்கிலிருந்து டி.ஜி. வன்சாரா மற்றும் இணை டி.ஜி.பி யாக இருந்த பி.பி. பாண்டே ஆகியோருக்கு பிணை கிடைத்தது. பிப்ரவரி மாதம் 18-ம் தேதி சொராபுதீன் கொலை வழக்கிலும் பிணை கிடைத்ததை அடுத்து டி.ஜி. வன்சாரா சிறை வாசத்தை முடித்து வெளி வந்துள்ளார்.
இவை ஒருபுறம் சத்தமின்றி நடந்து கொண்டிருக்க, குஜராத் 2002 முஸ்லிம் மக்கள் படுகொலையோடு தொடர்புடைய கொலை பாதகர்கள் தண்டிக்கப்பட காரணமாக இருந்த மனித உரிமை போராளி டீஸ்தா சேதல்வாத்தை கைது செய்ய முயன்று வருகிறது குஜராத் அரசாங்கம். உச்சநீதிமன்றம் டீஸ்தா சேதல்வாத் கைது செய்யப்படுவற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. குல்பர்க் சொசைட்டியில் கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவகம் அமைக்க வசூலிக்கபட்ட பணத்தை டீஸ்தா கையாடல் செய்தார் என்பது வழக்கு. இது பொய் குற்றச்சாட்டு என்பதை விளக்கும் விரிவான கட்டுரை ஏற்கனவே வினவில் வெளியானது.
சொராபுதீன் வழக்கை 2005-லிருந்து தொடர்ந்து நடத்தி வருபவர் சொராபுதீனின் தம்பி ரூபாபுதீன். தனது அண்ணனும், அண்ணியும் ஒருசேர கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டி நெடிய சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். தனது அண்ணி கவுசர் பீ களங்கமற்றவர் என்பது அவரது உறுதியான நம்பிக்கை. ருபாபுதீனுக்கு பல்வேறு போக்குகளை காட்டி விட்டு தற்போது குற்றவாளிகள் ஒன்றன் பின் ஒன்றாக விடுதலை செய்யப்படுவதை பார்த்து நிலைகுலைந்து போய் உள்ளார். அப்பாவி மக்களின் உயிரை குடித்த கொலையாளிகள் விடுதலையாவதும், நீதிக்கு போராடியவர்கள் சிறைக்கு செல்லவிருக்கும் நிலையையும் சற்று கற்பனை செய்யுங்கள். இந்துத்துவம் என்ற கொடுங்கனவில் வந்து போகும் மாய மோகினி தான் இந்திய நீதித்துறை என்பது விளங்கும்.
அழிவிடைதாங்கி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி பு.மா.இ.மு தொடர்ந்து பிரச்சாரம்!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் அழிவிடைதாங்கி கிராமத்தில் பள்ளிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சுற்றுவட்டார மக்கள் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களின் போராட்டத்தால் நொறுங்கியது டாஸ்மாக். அதனைத் தொடர்ந்து பிரம்மதேசம் போலீசார் பு.மா.இ.மு தோழர்கள் 9 பேர், குத்தனூர் பகுதி பொதுமக்களில் ஒரு பெண்மணி என மொத்தம் 10 பேரை கைது செய்து பொய் வழக்கு ஜோடித்து சிறையிலடைத்தது; இதைக்காட்டி அழிவிடைதாங்கி சுற்றுவட்டார கிராம மக்களை பீதியூட்ட முயன்றது.
அடித்து நொறுக்கப்பட்ட அழிவிடைதாங்கி டாஸ்மாக் கடை (கோப்புப் படம்)
இதனை அம்பலப்படுத்தியும், அக்கிராம மக்களை திரட்டி அழிவிடைதாங்கியிலுள்ள சாராயக்கடையை நிரந்தரமாக மூடக்கோரியும் பு.மா.இ.மு தொடர்ந்து கிராமப் பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறது.
மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்!
சாராயக் கடைகளை ஒழித்துக்கட்டுவோம்!
சாராயம் விற்பது சமூக விரோத செயல். அதாவது கிரிமினல் குற்றம். இதைச் செய்வதோ தமிழக அரசு. இந்த சமூகவிரோத செயலால் பாதிக்கப்பட்ட மக்களோ, உள்ளுக்குள் குமுறும் எரிமலையை போலக் கொதித்துக் கொண்டிருந்தார்கள். அதிலிருந்து வெடித்த ஒரு தீப்பொறிதான் அழிவிடைதாங்கி சுற்றுவட்டார கிராமத்து மக்கள் நடத்திய டாஸ்மாக் சாராயக் கடை இழுத்து மூடும் போராட்டம்.
சாரயம் விற்பது சமூக விரோத செயலா? அரசின் சட்டபூர்வத் தொழிலா?
முன்பெல்லாம், ஊருக்கு ஒதுக்குப்புறமாக சாரயம் காய்ச்சி, விற்பவனை சமூக விரோதியென, குடிகெடுப்பவன் என ஊரே காறித்துப்பும். சட்டவிரோதமென்று போலீசும் ஓடி, ஓடிப் பிடிப்பதாக சீன்போடும். ஆனால் இன்று என்ன நடக்கிறது? சாராயம் காய்ச்சுவதை மந்திரிகளின் பினாமிகளும், கடைபோட்டு விற்பதை அரசாங்கமும் செய்கின்றனர். போலீசோ பந்தோபஸ்து கொடுக்கிறது. மக்களுக்கு ஊத்திக்கொடுத்து உயிரைக்குடித்து பணம் பறிப்பது வழிப்பறி இல்லையா? சமூக விரோதச் செயல் இல்லையா? இதுதான் அரசின் தொழிலா?
தாலியறுக்கும் தமிழக அரசு
முள்ளுத்தோப்பில் சாராயம் விற்கப்பட்ட போது கூட, ஊருக்கு நாலுபேர் தான் குடித்தார்கள். இப்போதோ, பள்ளிக்கூடம் செல்லும் மாணவன் முதல், வயதான கிழவன் வரை வயது, சாதி வித்தியாசம் இல்லாமல் குடித்துச் சீரழிகிறார்கள். போதை தலைக்கேறி, அம்மணமாக நடுத்தெருவில் தாறுமாறாகக் கிடக்கிறார்கள். இவர்கள் யார்? நம்முடைய கணவராக, சகோதரனாக, மகனாகத்தான் இருப்பார்கள்.
முன்பு சாராயம் விற்றவனைக் காறித்துப்பியவர்கள், இன்று நம் அண்ணன் – தம்பிகளையே காறித்துப்பும் கேவலமான நிலைமைக்கு தள்ளியது யார்? அரசு சாராயம்.
குடித்துக் குடித்தே குடல் வெந்து செத்தவர்கள், அதனால் அழிந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை!
இப்படி சிறுவயது பிள்ளைகள் சீரழிவதைக் கண்கொண்டு பார்க்க முடியாமல் கொதித்துக் கொண்டிருந்தார்கள், அழிவிடைதாங்கி சுற்றுவட்டார மக்கள்.
போராடிக் களைத்த மக்களுடன் பு.மா.இ.மு
மனு கொடுப்பது தொடங்கி எல்லா சட்டப்பூர்வ வழிகளிலும் போராடி ஓய்ந்து நின்றனர் மக்கள். தேங்கிய குட்டையில் படுத்துப் புரளும் எருமையைப் போன்ற சொரணையற்ற அரசோ எதற்கும் அசையவில்லை. மனம் வெறுத்துப்போய் நிர்க்கதியாய் நின்ற மக்களுக்குத் தோள்கொடுத்தனர் பகத்சிங்கின் வாரிசுகளான பு.மா.இ.மு. தோழர்கள்.
“மனு கொடுப்பதாலோ, மனதுக்குள் புலம்புவதாலோ சாரயக்கடையை மூட முடியாது; அரசும் இதைச் செய்யாது. நம்வீட்டு ஆண்கள் குடல் வெந்து சாவதைத் தடுக்கவும் முடியாது” என்பதையும் உணர்த்தினர். இத்தனை நாட்களாக, குடும்பம் குடும்பமாக காவுவாங்கிய கடையைக் கண்ட மக்களின் கோபம் எல்லைமீறியது. சமூகவிரோத கிரிமினல் அரசின் சாரயக்கடையோ உடைந்து நொறுங்கியது. கடையைப் பாதுகாத்து நின்ற போலீசோ, சட்ட ஒழுங்கை மீறியதாகப் போராடியவர்களைக் கைது செய்தது.
சட்டத்தை மீறுவது அரசா? மக்களா?
“மது நாட்டுக்கு,வீட்டுக்கு, உயிருக்குக் கேடு” என சாரய பாட்டிலிலேயே அச்சடித்து வைத்து விற்பது யார்?
கள்ளச்சாராயம் விற்பது தவறு, சட்ட விரோதம் என்றால், அந்த வேலையை சட்டப்பூர்வமாகவே செய்வது யார்? தமிழக அரசுதானே!
தான் சொல்லும் சட்டத்தைத் தானே காலில் போட்டு மிதிப்பதும், “சட்டப்படி நட, சாரயக்கடையை மூடு” என்று மனுகொடுத்த மக்களை மிதிப்பதும் யார்? தமிழக அரசுதானே!
இந்தக் கேடுகெட்ட அரசுதான், போராடிய மக்கள் மீதும், தோழர்கள் மீதும் 11 பிரிவுகளின் கீழ் பொய்வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்திருக்கிறது.
அரசாங்கச் சொத்தை நாசம் செய்து விட்டார்கள் என்பதுதான் முக்கியமான குற்றச்சாட்டு. சாராயக்கடையை அரசாங்கச் சொத்து என்று சொல்லும் கேவலத்தை இதுவரை எங்காவது கண்டிருக்கிறோமா?
இபோது சொல்லுங்கள், சட்டவிரோதமாக நடப்பது யார்? சாராயம் விற்பது சட்டவிரோதம் என்று சொல்லிக்கொண்டே சாராயம் விற்கும் அரசாங்கமா? சாராயம் விற்காதே எனறு போராடும் மக்களா?
நம்மைத் தண்டிக்கும் தகுதி அரசுக்கு உண்டா?
தோழர்கள் மீதும், மக்கள் மீதும் போடப்பட்ட பொய்வழக்குகளைக் கண்டு நாம் பயப்படவும் இல்லை, சிறைக்கும், சித்திரவதைக்கும், கைதுக்கும் அஞ்சவும் இல்லை. வெட்கப்படவும் இல்லை.
நாம் என்ன ஊர்ச்சொத்தைக் கொள்ளையடித்தோமா? இல்லை. ஊழல் செய்தோமா?
மக்களைக் காப்பற்ற, சாராயக்கடையை மூடு என்று போராடினோம். நல்ல விசயம் செய்தோம் என்று மகிழ்ச்சியாக இருப்போம்.
ஆனால், நம்மீது பொய்வழக்கு போடவும், தண்டனை கொடுக்கவும் போலீசுக்கும், நீதிமன்றத்துக்கும் அருகதை உண்டா? என்பதுதான் நமது கேள்வி?
இவர்கள் செய்ய மறுத்த வேலையைத்தான், மக்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு செய்தார்கள், சட்ட ஒழுங்கை நிலைநாட்டினார்கள் இது தவறா? இவர்கள் சொல்லும் சட்டப்படியே கூட இவர்களால் நடக்க முடியாதபோது, இவர்கள் சொன்ன சட்டப்படி நடந்த நமக்கு தண்டனை கொடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் சட்டப்படி தண்டனை கொடுத்தார் நீதிபதி குன்ஹா. ஆனால், அதே உச்சநீதிமன்றம், தான்கொடுத்த தீர்ப்புகளுக்கு எதிராக, ஜெயாவுக்கு ஜாமீன் கொடுத்ததோடு, “சீக்கிரம் கேசை முடி” என உத்தரவும் போடுகிறது. இப்போது சொல்லுங்கள், இந்த நீதிமன்றங்களுக்கு போராடும் மக்களைத் தண்டிக்க என்ன தகுதி இருக்கிறது?
அழிவிடைதாங்கி சுற்றுவட்டார மக்கள் நடத்திய சாராயக்கடை மூடும் போராட்டத்தை வாழ்த்துவோம்! பின்பற்றுவோம்!
திருடன் கையில் சாவியைக் கொடுப்பது எந்தளவுக்கு முட்டாள்தனமோ, அதைப் போன்றதுதான் சாராயம் விற்கும் அரசிடமே, “கடையை மூடு” என மனுகொடுப்பதும், மன்றாடுவதும். இனியும் இதனால் தீர்வில்லை என்பதை உணர்ந்தனர் அழிவிடைதாங்கி சுற்று வட்டார மக்கள். அவர்களுடன் இணைந்தனர் பு.மா.இ.மு தோழர்கள். இழுத்து மூடினர் டாஸ்மாக் சாராயக் கடையை. தமிழ் நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்து சாதித்து வழிகாட்டிய அழிவிடைதாங்கி சுற்று வட்டார மக்களையும் – பு.மா.இ.மு தோழர்களையும் வாழ்த்தி வரவேற்போம். அவர்கள் வழிநடப்போம்.
உழைக்கும் மக்களே, உங்களை மரணக்குழியில் தள்ளும் சாராயக்கடைகளை அகற்ற முன்வாருங்கள். அதற்கு உங்களோடு சேர்ந்து போராடவும், தோள்கொடுக்கவும் நாங்கள் தயார். இணைந்து போராடுவோம். மக்களின் உயிரைக்குடிக்கும் டாஸ்மாக் சாராயக்கடைகளை இழுத்து மூடுவோம்.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சென்னை – காஞ்சிபுரம்
வைகுண்டராஜனை திட்டமிட்டுக் காப்பாற்றும் தமிழக அரசு!
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கனிமவள முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை உடனே வெளியிடு!
தோரியம் கடத்தல் வழக்கில் வைகுண்டராஜனை உடனே கைது செய்!
19.02.2015 அன்று தமிழக சட்டப் பேரவையில் தாதுமணல் கொள்ளை தொடர்பான ஆய்வுக்குழு அறிக்கை வெளியிடப்படாதது குறித்து தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியபோது
தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அவ்வழக்கில் விதிக்கப்பட்ட தடை காரணமாக வருவாய்த் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான ஆய்வை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இதனால்தான் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுக்க இயலாதது போலவும்
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் இக்கூற்று முழுப் பூசணிக்காயை சோத்தில் மறைப்பதற்கு ஒப்பானது.
தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை கைது செய்யக் கோரும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சுவரொட்டி . (கோப்புப் படம்)
தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய தென் தமிழக கடற்கரைப் பகுதியில் அரிய வகைக் கனிமங்களை கடந்த 20 ஆண்டுகளாக வரைமுறையின்றி கொள்ளை அடித்து கடற்கரையையே சிதைத்தவர்களில் பிரதானமானவர் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன்.
கடந்த ஆகஸ்ட், 2013-ல் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஆசிஷ் குமார் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், வைப்பாறு- வேம்பார் மற்றும் பெரியசாமிபுரம் அருகேயுள்ள கடலோர கிராமங்களில் ஆய்வு செய்து வி.வி.மினரல்ஸ் நிறுவனம் அனுமதியின்றி 3 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை மணலையும் 2,39,712 மெட்ரிக் டன் அளவில் கனிமங்களையும் சட்டவிரோதமாக அள்ளி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார். இச்செய்தி வெளியான 24 மணி நேரத்தில் அவர் மாற்றப்பட்டார்.
மக்களின் தொடர் போராட்டம் காரணமாக தமிழக அரசு தாது மணல் அள்ளத் தடை விதித்தது. அதன்பின் வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழு அமைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு நடத்தச் சொல்லியது. அந்த ஆய்வும் கடந்த செப்டம்பர், 2013-ல் முடிக்கப்பட்டு செப்டம்பர் 17, 2013 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கனிமவள முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை, பெங்களூரு நீதிமன்றத்தால் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்றுவரை அவ்வறிக்கை வெளியிடப்படவில்லை.
அதன்பின் திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் சிறப்புக்குழு ஆய்வுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு கடந்த நவம்பர், 2013-லிலேயே ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பும் தமிழக அரசு பேடி குழுவை அழைத்து ஆய்வறிக்கையை கோரிப் பெறவில்லை.
வைகுண்டராஜனை கைது செய்ய வலியுறுத்தி மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
தாது மணல் கொள்ளைக்கு சி.பி.ஐ விசாரணை கோரிய வழக்கில் கடந்த 12-12-2013 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச் சந்திரன் மற்றும் வேணுகோபால் அடங்கிய சிறப்பு அமர்வு “15 நாட்களுக்குள் தாதுமணல் கொள்ளை தொடபாக புகார் செய்பவர்கள் அனைவரும் பேடி குழுவிடம் மனுக்கள் அளிக்கலாம், அதன் பின் அவற்றை ஆராய்ந்து மிக விரைவில் அரசிடம் அறிக்கையை பேடி குழு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
அதன்பின் 29-05-2014 அன்று “ஒரு மாதத்தில் பேடி குழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கருப்பையா அவர்கள் உத்தரவிட்டார். அதன்பின்பும் அறிக்கை வெளியிடப்படவில்லை.
இவ்வறிக்கையை வெளியிடக் கோரி மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த 11-04-2014 அன்றே பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. தற்போதுவரை நிலுவையில் உள்ள இவ்வழக்கில் தமிழக அரசு இன்று வரை பதில் மனுத் தாக்கல் செய்யாமல் வாய்தா வாங்கியே அலைக்கழித்து வருகிறது. மக்களும், ஏராளமான அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரியும் தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட ஆய்வறிக்கையை வெளியிட மறுத்து விட்டது.
வைகுண்டராஜனை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
இதற்கிடையில் வைகுண்டராஜன் தாக்கல் செய்த வழக்குகளில் கடந்த 23-07-2014-அன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ராஜேந்திரன் “ககன்தீப் சிங் பேடி குழு ஆய்வில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். இதைத்தான் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நீதிமன்ற உத்தரவெனக் குறிப்பிடுகிறார். இவ்வுத்தரவு திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை மாவட்ட ஆய்வுக்குத்தான் பொருந்தும். மேற்படி வழக்கு தாக்கல் செய்யும் முன் கடந்த செப்டம்பர், 2013-ல் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்குப் பொருந்தாது. தூத்துக்குடி மாவட்ட ஆய்வறிக்கையை வெளியிட இன்றுவரை நீதிமன்றத்தடை ஏதும் இல்லை. ஒரு வேளை மக்களின் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டதால் அதைக் கோரிப் பெறுவதற்கு ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்குத் தடை இருக்கலாம்.
மேலும் கடந்த 12-12-2013-ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பேடி குழு அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில், அதன்பின் ஒரு நீதிபதி அடங்கிய அமர்வு அதற்க்கெதிராகத் தீர்ப்பளிக்க முடியாது என்பதே சட்டநிலை. தமிழக அரசும் இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பின்படி செயல்படுவதே சட்டப்படி சரி.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் (கோப்புப் படம்)
வைகுண்டராஜனின் தாதுமணல் நிறுவனங்கள் தென்மாவட்டங்களில் செயல்படும் நிலையில் மேற்கண்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டத்தை வளைப்பதில் வித்தகரான வைகுண்டராஜன் குறுக்கு வழியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து உத்தரவு பெற்றுள்ளார். இவ்வுத்தரவு பெறுவதை கடுமையாக எதிர்க்க வேண்டிய தமிழக அரசு வைகுண்டராஜன் உத்தரவு பெற ஆதரவாகவே இருந்துள்ளது. இதே பேடி குழு அறிக்கை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை வேண்டுமென்றே நீதிமன்றத்தில் மறைத்துள்ளது. இவ்வாறு வைகுண்டராஜனின் சட்டவிரோதச் செயல்கள் முழுக்க தமிழக அரசின் ஆசியோடுதான் நடந்து வருகிறது.
வி.வி.மினரல்ஸ் நிறுவன வைகுண்டராஜன், ஜெயா தொலைக்காட்சியில் பங்குதாரராக இருந்து, கடந்த தி.மு.க ஆட்சியில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது ஊடகங்களில் பதிவாகியுள்ளது. ஆகவே அ.தி.மு.க. அரசுக்கும் – வைகுண்டராஜனுக்கும் நெருக்கமான உறவிருப்பது மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மையை பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்காவும் உறுதி செய்துள்ளார்.
இதற்கு கூடுதல் உதாரணமாக, கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு தாது மணல் அள்ளத் தடை விதித்த பிறகு நடந்தவற்றை குறிப்பிடலாம். அன்றிலிருந்து இன்றுவரை சுமார் 7 லட்சம் டன் தாது மணல் தூத்துக்குடி துறைமுகம் வழியாக சட்டவிரோதமாக வைகுண்டராஜன் உள்ளிட்ட தாது மணல் கொள்ளையர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மணல் லாரிகளை தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை மக்கள் மடக்கிப் பிடித்து பத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்துள்ளது. தடை இருந்தாலும் வைகுண்டராஜனின் தாது மணல் நிறுவனங்கள் செயல்பட்டே வருகின்றன. ‘இரண்டு முதல்வர்கள், இரண்டு தலைமைச் செயலர்கள், இரண்டு டி.ஜி.பி.க்கள் உள்ள தமிழக அரசு இதை அறியாதா?’ என்பதே மக்களின் கேள்வி. தமிழக முதல்வர் பதிலளிக்க வேண்டும்.
தாது மணல் கொள்ளைக்கு எதிராக 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மைய கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி (கோப்புப் படம்)
இதோடு மாத்திரமல்லாமல் அணு உலை மற்றும் அணு ஆயுதத் தயாரிப்பிற்கு பயன்படும் தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் வைகுண்டராஜன் உள்ளிட்ட தாதுமணல் கொள்ளையர்களால் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் டன் மோனோசைட் எடுக்கப்பட்டதில் 1,95,300 டன் தோரியம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் சர்வதேசச் சந்தை மதிப்பு தோரியம், யுரேனியத்துக்கு மாற்று என்ற நிலையில் பல லட்சம் கோடியாகும். இதனால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு என்பதோடு வைகுண்டராஜனின் இக்குற்றம் மாபெரும் தேசத்துரோகமாகும். இது குறித்து கேரள காவல்துறை கூட வைகுண்டராஜன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் போராடும் கூடங்குளம் மக்கள் மீது தேசத் துரோக வழக்கு போடும் தமிழக அரசு வைகுண்டராஜன் மீது இன்றுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக தமிழக அரசின் துணை இருக்கின்ற தைரியத்திலேதான் வைகுண்டராஜனின் இயற்கை வளச் சூறையாடல் கேட்பாரின்றி தொடர்கிறது.
கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தாது மணல் கொள்ளையில் அரசியல்வாதிகள், மாநில அரசின் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை, பத்திரப்பதிவுத்துறை, வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் முதல் அணு சக்தித் துறை, கனிமங்கள் மற்றும் சுங்கத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து ஆதாயம் அடைந்துள்ளனர். ஆகவே விசாரணை முறையாக நடந்தால் இக்கொள்ளையில் ஆட்சியாளர்களின் பங்கு வெளிவரும் என்பதாலே முழுப்பூசணிக்காயை சோத்தில் மறைத்து வைகுண்டராஜனை காப்பாற்ற முயல்கிறார் தமிழக முதல்வர்.
ஆகவே, பாதிக்கப்பட்ட மக்கள் தாதுமணல் கொள்ளையர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது என்பதை உணர்ந்து தாங்களே போராடி இயற்கை வளங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.
சே.வாஞ்சிநாதன் வழக்கறிஞர்-உயர்நீதிமன்றம் – மதுரை.
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு
மெட்ரிக்குலேசன் – மழலையர் பள்ளிகள் மெக்காலேயின் உண்மையான வாரிசுகள் – 2
(தமிழ்நாட்டை பீடித்திருக்கும் ஆங்கில வழி மெட்ரிகுலேசன் பள்ளிகள் குறித்து 1997-ம் ஆண்டு ஜூலை புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை. (மே இதழில் வெளியான முதல் பகுதி)
மெட்ரிகுலேசன் பள்ளிகள் கொண்டு வரும் கலாச்சார சீரழிவு, கல்வித் தரம் சீர் குலைவு, மாணவர்களின் அறிவுத் திறன் வீழ்ச்சி இவற்றை அம்பலப்படுத்தும் இந்தக் கட்டுரை, இப்பள்ளிகளை நடத்துவது ஆளும், எதிர்க்கட்சி பிரமுகர்களும் அவர்களைச் சார்ந்த பணக்காரர்களும்தான் என்பதை விளக்குகிறது.)
பல மெட்ரிகுலேசன் பள்ளிகள் சீரழிந்த திரைப்பட ஆபாச பாடல்களுக்கான கூத்துகளையே ஆண்டு விழா – கலை விழா என்ற பெயரில் நடத்துகின்றன; மிக மோசமான ஏகாதிபத்திய ஆபாச கலாச்சார நாயகர்களான மைக்கேல் சாக்சன், தமிழக மைக்கேல் சாக்சனின் காட்டு கூச்சல், அரைகுறை ஆடை நடனம் இல்லாமல் இருக்காது.
மம்மி,டாடி பண்பாட்டால் மடியும் தமிழ்ப் பண்பாடு
இவர்கள் தான் தாய்மொழி, சொந்த பண்பாடு, உடை போன்றவற்றை அநாகரிகமாக பார்க்கக் கூடிய பார்வையை ஊட்டி வளர்க்கிறார்கள். ஒரு மெட்ரிகுலேசன் மாணவி தன் தந்தையிடம் “அப்பா இனி எங்க ஸ்கூலுக்கு வரும் போது வேட்டியில் வராதீங்கப்பா, புள்ளைங்களும், ஆசிரியர்களும், ஏன் தலைமை ஆசிரியருமே ஒரு மாதிரியா பாப்பாங்கப்பா.” என்கிற அளவிற்கு நமது பாரம்பரிய உடை பற்றிய சீரழிந்த பார்வை விதைக்கப்பட்டிருக்கிறது.
மம்மி,டாடி பண்பாட்டால் மடியும் தமிழ்ப் பண்பாடு
தமிழில் பேசினால் தண்டனை, அபராதம், ஒரு நாள் முழுவதும் முட்டி போடவைப்பது போன்ற கண்மூடித்தனமான போக்கு சர்வசாதாரணமாகி விட்டது. இல்லையேல் இடம் கிடையாது. லண்டனிலா பள்ளி இருக்குன்னு கேட்காதீங்க; அங்கு கூட இத்தகைய போக்கு இல்லை. தமிழகத்தில் உள்ள சில தமிங்கிலனத்தின் அருவருக்கத் தக்க மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் தான் இந்த நிலை.
மொழியில் மட்டுமல்ல, ஆங்கிலேயனைப் போன்ற நடை- உடை-பாவனை தான் அறிவுத்தனமானது; நாகரிகம் என்ற பார்வை பல மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் நிலவுகிறது. உதாரணமாக, தமிழகத்திலேயே மிக வறட்சியான பகுதிகளிலுள்ள பள்ளிகளில் கூட கோடை வெயிலிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் அவசியம் டைகட்டி, ஷீ,போட்டு இன் பண்ணி வரவேண்டுமென்று கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் மார்ச் மாதம் அவசரமாக டைகட்டி வரத் தவறிவிட்டார், அவரை அழைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிறார் “டை” பிரியரான முதல்வர்.
இதைவிட கொடுமை, ஒரு பள்ளியில் பெரும்பாலோர் ஒரே நகரத்தை சார்ந்த மாணவர்கள், ஏறத்தாழ ஒரே சமூகத்தையும் சார்ந்தவர்கள். அப்பள்ளியிலும், வீட்டிலும், தெருவில் விளையாடும் போதும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டுமென்று உத்தரவு இருக்கிறது.
எத்தனை பெற்றோர்கள் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள்? வெவ்வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள், வெவ்வேறு தாய்மொழியாக உள்ள மைய விடுதி பள்ளிகளில்தான் மாணவர்கள் எல்லா நேரங்களிலும் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஒரே ஊர், ஒரே தாய்மொழி எனில் அதற்கான அவசியம் இல்லை. அவர்களிடமும் ஆங்கிலத்திலேயே அவசியம் பேச வேண்டும் என்பது கண்மூடித்தனமான ஒன்று.
இது தான் “ஆங்கிலமொழி தரமான மேற்கத்திய பாணி கல்வி முறை” காசு கட்டிப் படிக்கும் பெரிய இடத்துக் கல்வி.
பெற்றோர்களிடத்திலும், சக மாணவர்களிடமும் தன்னெழுச்சியான உணர்வுகளை ஒருவர் அவரது தாய்மொழியில்தான் வெளிப்படுத்துவார். அதை ஆங்கிலத்தில் செய் என்பது, அவர்களை செயற்கையாக சிந்திக்கச் செய்து, செயற்கையாக பேசி, விளையாட வைப்பதே. இதன் மூலம் மாணவன் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாவன் என்பதே அறிவியலாளரின் கருத்து.
ஒரே தாய்மொழி, ஒரே ஊர்க்கார மாணவர்கள் அதிகம் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் அவசியமே இல்லாதபோது பள்ளி வளாகத்திற்குள் தப்பித் தவறி தமிழில் பேசி விட்டால் மறுநாள் காலை மாணவர் பேரவையில் (அசெம்பிளியில்) பலர் முன் ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்க வைப்பது:
“இனிநான் தமிழில் பேச மாட்டேன், மன்னிக்கவும்; எப்போதும் ஆங்கிலத்தில் தான் பேசுவேன் என்று உறுதி கூறுகிறேன்.”
என்று தமிழில் பேசிய மாணவன் ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர்களிடையே மாணவ ஒற்றர்களை அமர்த்தி தமிழில் பேசுபவர்களை கண்டறிந்து அதற்கான தனி பதிவேடில் பதிவு செய்து ஒரு முறைக்கு மேல் எனில் ரூபாய் ஒன்று முதல் ஐந்து வரை அபராதம் வசூல் செய்கிற பள்ளிகளெல்லாம் தமிழகத்தில் இருக்கிறது.
இரண்டு எட்டாம் வகுப்பு மாணவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாக சென்ற ஆசிரியரிடம் “Sir, I toId him many time, but he is not asking sir” “அப்படி செய்யாதடான்னு பல முறை சொன்னேன்; ஆனா அவன் கேட்க மாட்டேன்ங்கிறான் சார்’’ என்பதைத்தான் அப்படியே மொழி மாற்றம் செய்து அவனின் இயல்பான உணர்ச்சி வெளிப்பாடு சிதைக்கப்படுகிறது. இதுபோன்று எத்தனையோ கொடுமைகள் பட்டியல் கூறமுடியாத அளவிற்கு உள்ளது.
தின்றதை வாந்தியெடுக்க வைக்கும் தேர்வுமுறை
சிதம்பரம் காமராஜ் பள்ளி தாளாளர் லெட்சுமி காந்தனை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய போராட்டம் (கோப்புப் படம்)
தேர்வு நோக்கத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாண்டு மாதிரி வினாத்தாளைக் கொண்டு படித்து எழுதி எழுதி பார்க்க பயிற்சித் தரப்படுகிறது. கற்றுத் தருவதை விட (coaching) பயிற்சிதான் பிரதானம் என்பதுதான் இன்றைய நவீன கல்வி என்று மெட்ரிக்குலேசன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் பலரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். அதையே பின்பற்ற வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
சிந்திப்பது, சுயமாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, புரிந்து கொள்வது, ஒப்பிடுவது, காரண காரியங்களை ஆராய்வது என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே தேவையில்லை. கண்ணை மூடிக்கிட்டு திங்கிறது. தின்னதை தேர்வு என்ற பெயரில் வாந்தி எடுப்பது. அதற்குத்தான் சிறந்த பயிற்சி தருகிறார்கள்.
“கற்றுத் தருவதை விட (coaching) பயிற்சிதான் பிரதானம் என்பதுதான் இன்றைய நவீன கல்வி”
மெட்ரிக்குலேசன் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு எப்படி நடைபெறுகிறது? பெளதிகம், வேதியியல், உயிரியல், தாவரவியல் இந்த நான்கிலும் எவ்வளவு மோசமானவனும் நூற்றுக்கு நூறு எடுத்துவிட்டால் அவன் தேர்ச்சி பெற்றவனாகி விடுவான். முன்னூறுக்கு தேர்ச்சிக்குரிய மதிப்பெண் 105, செய்முறையில் நூறு எடுத்திடுறான், இதுக்கு பேரு “மேற்கத்திய பாணி, ஆங்கில வழி தரமான கல்வி” என்கிறார்கள். தேர்வுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பே மாணவனுக்குத் தெரிந்துவிடும்; கட்டாயம் அறிவியலில் அனைவரும் தேறிவிடுவோம் என்று . பிறகு எப்படி அவன் பொறுப்போடு படிப்பான், பணிந்து கடினமாக உழைப்பான் என்று எதிர்பார்க்க முடியும்?
செய்முறை, எழுத்துத் தேர்வு நடத்தும் தேர்வாளராகப் போகும் ஆசிரியர்களுக்கு என்ன சம்பளம் தருகிறார்கள்? மூன்று மணி நேர தேர்வாளராகப் போகும் கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ 25 முதல் ரூ 50 சம்பளம்; அது தவிர பயணப்படி வேறு. ஆனால் மெட்ரிக்குலேசன் தேர்வாளர்களுக்குச் சம்பளம் ரூ 6 நிர்ணயிக்கப்படாத பயணப்படி; அதுவும் ஆறு மாதம் ஓராண்டு கழித்துத்தான் கிடைக்கும். பெரும்பாலும் ஆசிரியர்கள் இப்பணிக்குப் போக விரும்புவதில்லை. ஆனால் பள்ளி நிர்வாகமோ ‘அரசு நடத்தும் தேர்வு; பள்ளிகளுக்கு அரசின் தயவு தேவையுள்ளது. இதைப் புறக்கணிக்கக் கூடாது’ என்று மிரட்டி ஆசிரியர்களைத் தேர்வுப் பணியை மேற்கொள்ள நிர்பந்திக்கிறது. இதே நிலைமை தான் விடைத்தாள் மதிப்பிடுவதற்கும். மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் 30,000 ஆசிரியர்களுக்கு, சங்கமோ, தலைவரோ எவரும் கிடையாது. இந்தப் படித்த பட்டதாரிக் கொத்தடிமைகள் நிர்வாகம் பணித்த எந்த பணிகளையும் செய்தே ஆக வேண்டும். மறுத்தால் வேலை அவ்வளவுதான்.
விபரீதமான விடைத்தாள் மதிப்பீடு
மெட்ரிக்குலேசன் விடைத்தாள் மதிப்பீடு எப்படி நடைபெறுகிறது? மெட்ரிக்குலேசன் ஆசிரியர் யார் வேண்டுமானாலும், எந்த விடைத்தாளையும் மதிப்பிடலாம். இரசாயன பட்டதாரி கணிதம் கற்பித்தால், அவர் கணித விடைத்தாள் திருத்தலாம்; போதிய ஆசிரியர்கள் இல்லையெனில் அறிவியல் பட்டதாரி எவரும் திருத்தலாம். புவியியலை, புவியியல் எடுத்துவரும் ஆசிரியர் மட்டுமின்றி கணிதம், இரசாயனம், பெளதிகம், வரலாறு, ஆங்கில இலக்கியம் படித்த எவரும் திருத்தலாம்.
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் 2013-ம் ஆண்டு கடலூரில் நடத்திய கல்வி உரிமைக்கான மாநாடு (கோப்புப் படம்)
+2 விடைத்தாள் திருத்த ஒரு தாளுக்கு ரூ 2.50 –எனில், மெட்ரிக்குலேசன் விடைத்தாளுக்கு ரூ 1.25 அதுவும் தமிழகம் முழுவதும் இரண்டே மையங்களில். வடக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று. தோராயமான பயணப்படி தரப்படும். உள்ளூர் ஆசிரியரைத் தவிர வெளியூர் ஆசிரியர்களுக்கு இது செலவானதாகவும் சிரமம் மிகுந்ததாகவும் இருக்கும். சிரமமாக இருந்தாலும் ஆசிரியர்கள் மறுக்க இயலாது. காரணம் தனியார் பள்ளி, சுயநிதி என்ற நிர்ப்பந்தம்.
ஒரு விடைத்தாள் திருத்த சாதாரணமாக அரைமணி எடுத்துக் கொள்ளக் கூடியதற்குப் பதிலாக, இங்கே காலை பத்து முதல் மாலை 3.30 க்குள் நாற்பது முதல் ஜம்பதைத் திருத்தி விட்டு வெளியூர்காரர்கள் பேருந்தை பிடிக்க அவசர அவசரமாக ஒடி ஊர் போய்ச் சேர வேண்டும்.
மெட்ரிக்குலேசன் மாணவர்கள் பணம் கட்டிப் படிக்கும் பெரும் புள்ளிகளின் பிள்ளைகள்; ஆசிரியர்களோ சுயநிதி நிறுவனத்தின் அடிமைகள். எனவே தேர்ச்சி விழுக்காடு அதிகம் காட்ட வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு பெரும்பாலும் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும். குறைந்த நேரத்தில் அதிகப்படியான விடைத்தாளை திருத்திவிட்டு ஊருக்கு பேருந்து பிடிக்க வேண்டிய அவசரம் வேறு. விளைவு என்னவாகும்? சராசரி மாணவனும், திறன் மிகுந்த மாணவனும் ஏறத்தாழ சம மதிப்பெண் எடுப்பார்கள். எதுவுமே எழுதாதவனும் மதிப்பெண் போடவே இடமில்லா வெற்று விடைத்தாளைச் சமர்ப்பித்தவனுமே தோல்வியுற நேரிடும். இது தான் “ஆங்கிலமொழி தரமான மேற்கத்திய பாணி கல்வி முறை” காசு கட்டிப் படிக்கும் பெரிய இடத்துக் கல்வி.
மெட்ரிக்குலேசன் முறை உள்ள மேனிலைப் பள்ளிகளிலும், இதர மேனிலைப் பள்ளிகளிலும், +2 வில் இரண்டு மொழிப்பாடங்களில், தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களும், அதிக மதிப்பெண் கிடைக்கிறது என்பதால், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிப் பாடங்களை எடுத்து கொண்டு தமிழைப் புறக்கணிக்கிற போக்கு அதிகரித்து வருகிறது.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு (கோப்புப் படம்)
+2 அளவில் உள்ள பிரெஞ்சு எட்டாம் வகுப்பிற்குரிய தரத்தில் இருப்பதாலும், தாராளமாகத் திருத்துவதால் தமிழைவிட அதிகமாக மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளதாலும் மொத்த மதிப்பெண் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்பது ஒரு காரணம். +2 தரத்திற்குத் திருத்தும் முறைகளில் நன்றாகப் படிப்பவனும் பத்து முதல் பதினைந்து மதிப்பெண் இழக்க வாய்ப்புள்ளது போன்ற காரணங்களினால் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய மெட்ரிக்குலேசன் பள்ளிகளை என்ன அந்நியனா, வெள்ளைக்காரனா வச்சு நடத்துகிறான், அல்லது வைத்து நடத்த வேண்டுமென்று இலண்டனிலிருந்து உத்தரவு போடுகிறானா?
தமிழகத்தில், தமிழனாய்ப் பிறந்தவர்கள்தான், சமூக, அரசியல் பொருளாதாரம் காரணங்களால் தமிங்கிலனாய் மாறி தமிழினத்தின் மொழி, அரசியல், பண்பாடு, பொருளாதாரம் போன்ற சகல துறைகளிலும் எதிராய் நிற்கிறான்.
1947- க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்துக் கட்சிகளும், எதிர்கட்சிப் பிரமுகர்களும் அவர்களின் நெருங்கிய ஜமீன்கள், தொழில், வணிக கூட்டாளிகள்தான் இந்த ஆங்கில வழி, மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்குப் பின்னால் நின்று இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை
தேசிய இன, மொழி, அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடுதலைக்குக் குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலமே, இந்த இழிநிலையை அடியோடு நம் மண்ணிலிருந்து துடைத்தெறிய முடியும்.
அமெரிக்க சிலிக்கான் வேலி”யின் ஐ.டி. ஊழியர்களை “சிலிகான் பள்ளத்தாக்கின் தோட்டத் தொழிலாளிகள்” என்று கூறுவதுண்டு. தோட்டத்தொழிலாளிகள் கூட சங்கம் வைக்கும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் ஐ.டி. துறையில் இல்லை. காரணம், புதிய தாராளவாதக் கொள்கையின் கீழ் முதலாளி வர்க்கம் பராமரிக்க விரும்பும் தொழிலுறவுக் கொள்கைக்கு இந்தத் துறை ஒரு முன்மாதிரி. ஊழியர்களின் சிந்தனை முறையை ஊழல்படுத்துவது, அச்சுறுத்தல் ஆகிய இரண்டு வழிமுறைகளின் மூலமும் ஐ.டி. நிர்வாகங்கள் இதனைச் சாதித்திருக்கின்றன.
குறிப்பிட்ட தகுதியிலான ஊழியர்களின் ஊதியத்திலேயே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதன் மூலம் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கையை நிராகரிப்பது, ஊதியத்தில் கணிசமான பகுதியை பணித்திறன் அடிப்படையில் (performance based) மாதந்தோறும் தீர்மானிப்பது, ஊதியம் மற்றும் பதவி உயர்வை பணி மூப்பின் அடிப்படையில் அல்லாமல் அப்ரைசல் மூலம் தீர்மானிப்பது. இதன் மூலம் அடிமைச் சிந்தனைக்கு அனைவரையும் பயிற்றுவிப்பது – என்பன போன்ற வழிமுறைகளின் மூலம் “நாம்” என்ற உணர்வே எழவொட்டாமல் தடுத்து “நான்” என்ற சிந்தனையும், கழுத்தறுப்புப் போட்டியும் ஊழியர்களுக்கிடையே திட்டமிட்டே ஊக்குவிக்கப்படுகிறது.
“உன்னுடைய அப்ரைசல் ரேட்டிங்கை சக ஊழியனிடம் சொல்லாதே, எல்லா இடங்களிலும் உன்னை முன்நிலைப்படுத்தக் கற்றுக்கொள், குழு உறுப்பினர்களோடு நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளாதே, கருத்து வேறுபாடு குறித்து வாதம் செய்து சூழலை மாசுபடுத்தாதே” – என்பன போன்ற நடத்தை விதிகள் மூலம் ஊழியர்கள் கோழைகளாகவும், சுயநலமிகளாகவும் வனைந்து உருவாக்கப்படுகின்றனர். அதனால்தான் அநியாயமாக வெளியேற்றப்படும் ஊழியர்கூட எச்.ஆரிடம் குரலை உயர்த்திப் பேசுவதில்லை.
“நான் நல்ல ரேட்டிங் வாங்கியிருக்கிறேனே, வாடிக்கையாளரின் பாராட்டைப் பெற்றிருக்கிறேனே, என்னை ஏன் வெளியேற்றுகிறீர்கள்?” என்று ஈனச்சுரத்தில் முறையிட மட்டுமே செய்கிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்பது திறமைசாலிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று சிந்திக்கும்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆட்குறைப்பினால் வேலை இழப்பவர்களுக்கு இணையப் பத்திரிகைகளும், உளவியல் ஆலோசகர்கள் எனப்படுவோரும் கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்குகின்றனர்:
“லே-ஆஃப் என்பது வாழ்க்கையில் ஒரு நிகழ்வு. அதுவே வாழ்க்கையல்ல. நம்பிக்கை இழக்காதீர்கள். எந்தக் கம்பெனியும் வாழ்நாள் பூராவும் வேலை தர முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏமாற்றமும் ஆத்திரமும் ஏற்பட்டிருக்கும். ஆனால் ஒரு புரபஷனல் போல சிந்திக்கப் பழகுங்கள். இந்த வேலை போனால் என்ன ஆகும் என்று வேலையில் இருக்கும்போதே சிந்தித்துப் பழகுங்கள். இடையறாமல் புதுப்புது திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.”
முதலாளித்துவ அடிமைத்தனத்தை இயற்கை நியதியாகக் கருதிச் சரணடைவதற்கு ஊழியர்கள் எப்படிப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.
நாஸ்காம் என்ற ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பு, நிர்வாகத்தை எதிர்ப்பது போலக் கனவு கூடக் காணமுடியாமல் ஐ.டி. ஊழியர்களை அச்சுறுத்தி வைப்பதற்கு ஒரு ஏற்பாட்டை வைத்திருக்கிறது. ஐ.டி. துறையில் வேலை தேடுபவர் தேசிய திறனாளிகள் களஞ்சியத்தில் (National Skills Repository) பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். நிறுவனங்கள் திறமையாளர்களை அடையாளம் காண்பதற்கும், திறமையாளர்கள் தங்களை எளிதில் சந்தைப்படுத்திக் கொள்வதற்குமான ஏற்பாடுதான் என்று கூறப்பட்டாலும், இது உருவாக்கப்பட்டதன் நோக்கம் வேறு.
இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்குத் தமது பணிகளை அவுட்சோர்ஸ் செய்யும் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்கு, தங்களது தரவுகளைக் கையாளும் இந்திய ஊழியர்கள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால், ஊழியர்களின் ரேகை முதல் கருவிழி உள்ளிட்ட அனைத்து தரவுகளும் திரட்டப்படவேண்டும் என்று கோரியதன் அடிப்படையில்தான் ஜனவரி, 2006-ல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒரு ஊழியர் எத்தனை நிறுவனங்களுக்கு மாறினாலும், அவரைப் பற்றிய எல்லாத் தரவுகளும் இதில் தொகுக்கப்படும் என்பதால், ஒரு ஊழியர் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நிர்வாகத்தை எதிர்க்கும் பட்சத்தில் அவரது பெயர் கறுப்புப் பட்டியலில் ஏற்றப்பட்டு, அவர் வேறு எங்குமே வேலை தேட முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர் ஐ.டி. முதலாளிகள். தொழிற்சங்கம் இல்லாத காரணத்தினால், சட்டவிரோதமான இந்தக் கிரிமினல் நடவடிக்கையை அம்பலமாக்கவோ, தடுக்கவோ ஊழியர்களால் இயலவில்லை.
ஐ.டி. நிறுவனங்களுக்கு தொழிற்தகராறு சட்டம் பொருந்துமா?
டி.சி.எஸ். நிறுவனத்திலிருந்து ஆட்குறைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்ட ஒரு பெண் ஊழியர், தான் கருவுற்றிருக்கும் நிலையில் வேலைநீக்கம் செய்யப்படுவதாகவும், தன்னை வேலைநீக்கம் செய்வது தொழிற்தகராறு சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதற்குப் பதிலளித்த டி.சி.எஸ். நிர்வாகம், தான் கருவுற்றிருக்கும் தகவலை அந்தப் பெண் ஊழியர் நிர்வாகத்துக்குத் தெரிவிக்கவில்லை என்றும், கருவுற்றிருக்கும் பெண்களைப் பணி நீக்கம் செய்வது தங்களது விதிமுறைகளுக்கே எதிரானது என்பதால் அந்தப் பெண்ணை மீண்டும் பணியமர்த்துவதாகவும், மற்றபடி தொழிற்தகராறு சட்டமெல்லாம் தங்கள் நிறுவனத்துக்குப் பொருந்தாது என்றும் கூறியது. அதாவது “எங்கள் சட்டத்துக்குத்தான் நாங்கள் கட்டுப்படுவோமேயன்றி, உங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட முடியாது” என்பதுதான் டி.சி.எஸ். நிறுவனத்தின் வாதம்.
கர்நாடகாவில் தொழில் நிறுவனங்கள் நிலையாணைச் சட்டம், 1946-ன்படி, ஐம்பது பேருக்கு மேல் பணியாற்றுகின்ற ஒவ்வொரு நிறுவனமும், தொழிற்தகராறு சட்டத்தின் அடிப்படையிலான ஒரு நிலையாணையை வகுத்து அமல்படுத்த வேண்டும். ஐ.டி. முதலாளிகளை மகிழ்விக்கும் பொருட்டு அப்படியொரு நிலையாணையைக் காகிதத்தில்கூட வகுத்து வைத்துக் கொள்ளத்தேவையில்லை என்று கடந்த 18 ஆண்டுகளாக ஐ.டி. நிறுவனங்களுக்கு விலக்களித்திருக்கிறது கர்நாடக அரசு. தமிழகத்திலோ தாங்கள் “ஷாப்ஸ் அண்டு எஸ்டாப்ளிஷ்மென்ட்ஸ் ஆக்ட்” – இன் கீழ் வருவதாகப் பித்தலாட்டம் செய்து வருகின்றன ஐ.டி. நிறுவனங்கள்.
எல்லா ஐ.டி. நிறுவனங்களும் தொழில் தகராறு சட்டத்தின் கீழ்தான் வரும் என்பதை நிலைநாட்டுவதன் வாயிலாகத்தான் பணிப்பாதுகாப்பை உத்திரவாதம் செய்து கொள்ள முடியும். இதனை நிலைநாட்டுவதற்கே கூட ஊழியர்கள் தொழிற்சங்கமாகத் திரள்வது அவசியம்.
உதயமானது ஐ.டி.துறை ஊழியர் சங்கம்!
டி.சி.எஸ். ஆட்குறைப்பு குறித்த செய்தியை வினவு இணைய தளம் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, ஆட்குறைப்புக்கு எதிரான பிரச்சாரத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் ஈடுபட்டனர். சங்கம் வைக்கும் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதுதான் ஆட்குறைப்புக்கு எதிரான போராட்டத்தின் முதல் படி என்ற அடிப்படையில் பு.ஜ.தொ.மு.வின் ஐ.டி. ஊழியர் பிரிவு தொடங்கப்பட்டது. படூரில் ஜனவரி 10-ம் தேதி மாலை நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் – பெரும்பான்மையினர் பல மாநிலங்களையும் சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள்; மற்றவர்கள் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள்.
பு.ஜ.தொ.மு. வின் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் ஒருங்கிணைத்து நடத்திய இக்கூட்டத்தில், உரையாற்றிய ஐ.டி. பிரிவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம், தனது 17 ஆண்டு கால ஐ.டி. பணி அனுபவத்திலிருந்து சங்கம் அமைப்பதன் தேவையை வலியுறுத்தினார். ஊழியர்களுடைய வாழ்க்கைப் பின்புலமும், ஐ.டி. துறை பணிச்சூழலும் ஊழியர்களின் மனநலப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைவதை விளக்கிய மனநல மருத்துவர் ருத்ரன், சங்கமாகச் சேர்வது அவர்களை இப்பிரச்சினைகளிலிருந்து விடுவிக்க எங்ஙனம் உதவும் என்பதை விளக்கினார்.
ஐ.டி. ஊழியர்களுக்குச் சங்கம் அமைக்கும் உரிமை சட்டப்படியே இல்லையா, சங்கத்தில் சேர்ந்தால் வேலை போகுமா, இந்த ஆட்குறைப்பை முறியடிக்க முடியுமா – என்பன போன்ற ஊழியர்களின் கேள்விகளுக்குத் தனது உரையில் விடையளித்தார் வழக்குரைஞர் பாலன் ஹரிதாஸ். நீதிமன்றங்கள் மூலம் நிவாரணம் பெற முயற்சிக்கின்ற அதேநேரத்தில், ஊழியர்கள் சங்கமாகத் திரண்டு போராடுவதுதான் அவர்களது வேலையையும் உரிமைகளையும் பாதுகாக்கப் பயன்படும் என்று விளக்கிப் பேசினார்கள், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள்.
தாங்கள் சங்கத்தில் சேருவதாக அங்கேயே இரண்டு ஊழியர்கள் அறிவித்திருப்பதும், ஐ.டி. துறை ஆட்குறைப்புக்கு எதிராக வினவு இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ பதிவுகளை ஆயிரக்கணக்கானோர் பார்த்திருப்பதும், கட்டுரைகளை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படித்திருப்பதும் ஐ.டி. ஊழியர்களிடையே போராட்டச் சிந்தனை அரும்பத் தொடங்கியிருப்பதைக் காட்டுகின்றன.
_________________________________ புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
_________________________________
இன்றைய போலி ஜனநாயகத்தில் ஓட்டுப் பொறுக்கும் கட்சிகள் யாருக்கும் கொள்கைகள் இல்லை. எப்படி அதிகாரத்துக்கு வருவது, என்ன தரகு வேலை பார்ப்பது, எவ்வளவு சம்பாதிப்பது என்ற கணக்குகள் மட்டுமே கூட்டணிகளை தீர்மானிக்கின்றன. இப்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு காஷ்மீரின் சுயாட்சிக்கு போராடுவதாக சொல்லிக் கொள்ளும் மக்கள் ஜனநாயகக் கட்சி காஷ்மீர் மக்களின் போராட்டத்தையே அங்கீகரிக்க மறுக்கும் பா.ஜ.கவுடன் பேரம் பேசி வருகிறது.
இத்தகைய அப்பட்டமான, பிழைப்புவாத கூட்டணிகளின் முன்னோடிகளில் ஒன்று பா.ஜ.க – அகாலி தளம் கூட்டணி. 1997-ம் ஆண்டு ‘கொள்கை’ ரீதியில் எதிரெதிரான பா.ஜ.கவும் பஞ்சாபின் அகாலி தளமும் அமைத்த கூட்டணி அந்த ஆண்டு நடந்த மாநில சட்ட மன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. அது குறித்து புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை இது.
இப்போதும் இந்த இரு கட்சிகளும் தமது சுயநல அரசியல் நோக்கங்களை முன் வைத்து அம்மாநில மக்களின் நலன்களை பலி கொடுப்பதை இந்த மாதம் (பிப்ரவரி 2015) புதிய ஜனநாயகத்தில் வெளியான கட்டுரை அம்பலப்படுத்தியிருக்கிறது.
பஞ்சாபில் மதவெறி பயங்கரவாதத்தைக் கிளறிவிட்டதில் காங்கிரசின் பங்கு முதன்மையானது. இதை வசதியாக மறைத்துவிட்டு, அமைதியின் காவலர்களாக, சமாதானத் தூதர்களாக ஓட்டுப் பொறுக்கப் பார்த்தது காங்கிரசு. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மக்கள் காங்கிரசுக்கு மரண அடி கொடுத்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி, அகாலி தள் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் அவரது மகன் சுக்பீர் சிங் பாதல்
எதிர்முகாமான அகாலித்ளம் – பா.ஜ.க கூட்டணி 5-ல் 4 பங்கு தொகுதிகளைக் கைப்பற்றி, மிருக மெஜாரிட்டியுடன் கூட்டணி ஆட்சியமைத்துள்ளது. இந்து சீக்கிய ஒற்றுமையை முதன்மையாக்கிப் பிரச்சாரம் செய்து வெற்றியும் பெற்றுவிட்டனர்.
ஆனால் இக்கூட்டணி முழுக்க முழுக்க சந்தர்ப்பவாதமானது என்பதற்கு இவர்களின் பத்திரிகைப் பேட்டிகளே சாட்சி. கொள்கை அடிப்படையில் எதிர் எதிர் துருவங்களான இரு கட்சி கூட்டணி பற்றி அகாலிதளம் தலைவர் பாதலிடம் பத்திரிகையாளர் கேட்டபோது “மத்தியில் 13 கட்சி கூட்டணி உள்ளது. இனிமேல் கூட்டணி ஆட்சிக்குதான் எதிர்காலம்” என்றார். பா.ஜ.க.வோ “மத்தியில் எதிர் எதிர் கொள்கைகள் கொண்ட கூட்டணி ஆட்சி நீடிக்காது” என்கிறது. பின்னர் பஞ்சாபில் மட்டும் நீடிக்கும் என்பது அக்கட்சிக்கே வெளிச்சம்.
இந்தக் கூட்டணியிலுள்ள இரு கட்சிகளும் அனைத்திலும் வேறுபடுகின்றனர். அகாலிகளின் அடிப்படையான ‘அனந்தபூர்’ சாகிப் தீர்மானத்தை பா.ஜ.க. ஏற்கவில்லை. பா.ஜ.க.வின் இந்தி –இந்து- இந்துஸ்தானை அகாலிதளம் நிராகரிக்கிறது.
1984 சீக்கியர் படுகொலையை வாஜ்பாய் கண்டித்தார். ஆனால் அதற்குக் காரணமான ‘நீல நட்சத்திர நடவடிக்கை’யை முழுமையாக ஆதரித்தவர்தான் வாஜ்பாய்.
1987 -ல் மதவாத அடிப்படையில் சீக்கியர்கள் ஒன்று கூடும் ‘சர்பட்கல்சா’ நிகழ்ச்சியில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை ஆதரித்தவர் பிரகாஷ்சிங் பாதல். அதற்கு சற்று முன்புதான் இந்திய அரசியல் சட்டத்தின் சில பக்கங்களைக் கிழித்தெறிந்தார்.
இவற்றைக் கடுமையாக எதிர்க்கும் பா.ஜ.க. இன்று பாதலின் அகாலி கட்சியின் கூட்டாளி.
இக்கூட்டணி போலிசாரின் நரவேட்டையாடல் மீது விசாரணைக் கமிசன் வைக்கும் என வாக்குறுதியளித்துள்ளது. ஆனால் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான எம்.எல்.ஏ. லட்சுமிகாந்த சாவ்லா கொலை வெறியன் கே.பி.எஸ்.கில்லுக்குப் புகழாரம் சூட்டிகிறார்.
தவிர நதிநீர்ப் பங்கீடு, சண்டிகர் உட்பட பஞ்சாபி பேசும் பகுதிகளை பஞ்சாபுடன் இணைப்பது போன்ற பிரச்சினைகளிலும் இவ்விரு கட்சிகளும் முரண்படுகின்றன.
இதற்கு முந்தைய 1969 அகாலி ஜனசங்கம் பேசும் பகுதிகளை பஞ்சாபுடன் இணைப்பது போன்ற பிரச்சினைகளிலும் இவ்விரு கட்சிகளும் முரண்படுகின்றன.
சுக்பீர் சிங் பாதலுடன் பேரம் பேச வந்திருக்கும் மகாராஷ்டிர புரோக்கர் பா.ஜ.க.வின் நிதின் கட்காரி
இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணி நீடிப்பதென்பது பஞ்சாப் மக்களின் உரிமைகள் குழி தோண்டிப் புதைக்கப்படுவதன் மீது தான் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சியும், எஸ்.எஸ்.மானின் அகாலி கட்சியும் இன்னொரு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்தன. இவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கின்றிப் புறக்கணிக்கப்பட்டு, மொத்தமே 2 இடங்களைக் கைப்பற்றினர்.
இந்த பஞ்சாப் தேர்தலில், சி.பி.ஜ, சி.பி.எம். கட்சிகளின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது. பஞ்சாபில் பல தொண்டர்களைப் பலி கொடுத்து, ‘தேச’ ஒற்றுமைக்குப் போராடியதாக மார்தட்டிய இந்த இருபோலி கம்யூனிஸ்டுகளிடையே ஒத்த கருத்தின்றிப் படுதோல்வியடைந்துள்ளனர்.
கன்ஷிராமுடன் கூட்டணி முறிந்ததும் இந்த இரு கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணிக்கு முயன்றது காங்கிரசு. சி.பி.ஐ. யின் மாநிலத் தலைமை மத அடிப்படைவாதத்தை முறியடிக்க காங்கிரசுடன் கூட்டு எனக் கொள்கை முலாமிட்டது. மத்தியத் தலைமை இதை நிராகரித்தது. ஜனதா தளம், முலாயமின் சமாஜ்வாதி கட்சி, சி.பி.ஐ, சி.பி.எம். என மூன்றாவது முன்னணி கண்டது. ஆனால் சி.பி.ஐ.யின் மாநிலத் தலைமையோ காங்கிரசுடன் மறைமுக உடன்படிக்கை கண்டு, காங்கிரசின் வெற்றிக்கு உழைத்தது. தற்போது சி.பி.ஐ இரு தொகுதிகளில் வெற்றி பெற, பிற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை.
தனது முழுத் தோல்விக்கும் சி.பி.ஐயே காரணம் எனப் பழியை சி.பி.ஐ மீது சுமத்துகிறது சி.பி.எம் கட்சி.
மதவெறி பயங்கரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசு பயங்கரவாதத்தை வரிந்து கட்டி ஆதரித்ததாலேயே மக்கள் இப்போலி கம்யூனிஸ்டுகளைப் புறக்கணித்துள்ளனர்.
அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நம்பி அகாலி தளம் கட்சிக்கு ஓட்டளித்துள்ளனர். தவிர காங்கிரசுக்குள்ளேயிருந்த போட்டியும், குழிபறிப்பும் அகாலி –பா.ஜ.க.கூட்டணி வெற்றி பெற முக்கிய காரணங்கள்.
டி.சி.எஸ் நிறுவன ஆட்குறைப்பு : சுதந்திர சந்தையின் தேர்க்காலில் பலியான கனவுகள்!
“நான் ஒரு சீனியர் மானேஜர். நான் சொல்கிறேன். ஊழியர்களை வெளியேற்ற டி.சி.எஸ். உயரதிகாரிகள் பின்பற்றும் நடைமுறை மிகவும் நியாயமற்றது. தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுபவரும், வாடிக்கையாளர்களின் பாராட்டைப் பெற்றவருமான ஒரு மூத்த ஊழியரை வெளியேற்றுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இப்போது நிர்வாகம் என்னை மிரட்டுகிறது. அவர்களுடைய அடுத்த குறி நானோ என்று பயமாக இருக்கிறது. பல பேரை வேலையை விட்டுத் தூக்கும் வேலையைச் செய்து செய்து என் மன நிம்மதியே போ விட்டது.”
“உங்கள் துன்பம் எனக்கு புரிகிறது. அனுதாபப்படுகிறேன். ஆனால் சகோதரா, இதுதான் சுதந்திரச் சந்தையின் விதி. இந்த எதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். யாரும் இதை மாற்ற முடியாது.”
– இவை சமீபத்தில் இணைய நாளிதழ் ஒன்றில் வெளியான வாசகர் கடித விவாதங்கள். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அறிவித்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கான எதிர்வினைகள்.
“பணித்திறன் குறைந்தவர்கள்” என்று மதிப்பீடு செய்யப்படும் ஊழியர்கள் வெளியேற்றப்படுவதும், ராஜினாமா செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதும் ஐ.டி. ஊழியர்கள் அனுபவித்திராத புதிய விடயங்கள் அல்ல. ஒரு வகையில் அது அவர்களுக்குப் பழகியிருக்கும் நியதி. ஆனால், திறமைசாலிகள் என்று பாராட்டப்பட்டவர்களும், பத்து ஆண்டுகளுக்கு மேல் விசுவாசமாக உழைத்து இடைநிலை நிர்வாகப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்களும் கொத்துக் கொத்தாகத் தூக்கியெறியப்படுவது அவர்களிடையே அதிர்ச்சியைத் தோற்றுவித்திருக்கிறது.
சுமார் 3.13 இலட்சம் பேர் பணியாற்றும் டி.சி.எஸ். நிறுவனத்திலிருந்து 25,000 பேர் ஆட்குறைப்பு செய்யப்படவிருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து, வெளியேற்றப்படுவோரின் எண்ணிக்கையை டி.சி.எஸ். மறுத்தது. “எங்களைப் போன்ற திறனை முன்னிறுத்தும் நிறுவனங்களில் தரமேம்பாட்டுக்காக ஊழியர் எண்ணிக்கை குறைக்கப்படுவதில் அதிசயமில்லை” என்றும் கருத்து சொல்லும் அளவுக்கு இது முக்கிய விசயமில்லை” என்றும் மிகத் திமிராகவும் பதிலளித்தது.
“வேலை நீக்கம் என்ற முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்க, ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்கள் சங்கமாக அணிதிரள வேண்டும்” என்ற பதாகைகளுடன் சென்னை – சோழிங்கநல்லூர் சந்திப்பில் அணிதிரண்டிருந்த பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர்கள்
சர்வதேச அளவில் 4 இலட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள ஐ.பி.எம். நிறுவனம், அவர்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் ஆட்குறைப்பு செய்யவிருக்கிறதென்று ஜன-26 அன்று போர்ப்ஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. “வதந்திகளுக்கெல்லாம் நாங்கள் பதிலளிக்க முடியாது” என்று மட்டுமே ஐ.பி.எம். இதற்குப் பதிலளித்திருக்கிறது.
விப்ரோ நிறுவனத்தின் சி.இ.ஓ. சி.டி.குரியன் “நாங்களும் டி.சி.எஸ். செய்வதையே செய்ய விரும்புகிறோம்” என்று அறிவித்திருக்கிறார். 1.4 இலட்சம் ஊழியர்களை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஒரு இலட்சமாக குறைக்கவிருக்கிறது விப்ரோ. யாகூ, எச்.பி., எச்.சி.எல், டெல், சிஸ்கோ, ஆல்டிசோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பை நடத்தி வருகின்றன.
கிரிசில் (CRISIL) என்ற தரநிர்ணய நிறுவனத்தின் ஆவின்படி, இந்தியாவில் ஐ.டி. துறையில் பணியாற்றுவோர் சுமார் 31 இலட்சம் பேர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள் புதிதாக வேலைவாய்ப்பு சந்தைக்குள் வருகிறார்கள். 2013-14 இல் பொறியாளர் உள்ளிட்டு மொத்தமாக வேலை கிடைக்கப் பெற்றவர்கள் 1.05 இலட்சம். 2017-ம் ஆண்டிற்குள் ஐ.டி. வேலைவாய்ப்பு ஆண்டுக்கு 55,000 – ஆக குறைந்து விடும் என்று கூறுகிறது கிரிசில். அதாவது 12 பொறியாளரில் ஒருவருக்குக்கூட வேலை கிடைப்பது அரிது என்பதே இதன் பொருள்.
சென்னை – சிறுசேரியில் அமைந்துள்ள டி.சி.எஸ் அலுவலகத்தின் நுழைவாயிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பு.ஜ.தொ.மு மற்றும் தோழமை அமைப்பினர்.
“கத்தி எடுத்தவனுக்குக் கத்தியால்தான் சாவு!”
நடைபெற்று வரும் இந்த ஆட்குறைப்பு, வேலையில் இருக்கும் இளைஞர்களையும் அச்சத்துக்குள்ளாக்குகிறது. இந்த அச்சம், அவர்களை மேலும் கசக்கிப் பிழிவதற்கான வாய்ப்பை நிர்வாகத்துக்கு வழங்குகிறது. கல்விக் கடன் வாங்கி பொறியியல் பட்டம் பெற்று, ஐ.டி. துறை என்ற பொன்னுலகத்துக்குள் நுழைந்துவிட வேண்டுமென்றும், அப்படியே ஆன்சைட் வாய்ப்பைப் பெற்று ஒரு முறையாவது அமெரிக்காவைத் தரிசித்துவிட வேண்டுமென்றும் கனவு கண்டு கொண்டிருக்கும் மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோரையும் ஆட்குறைப்பு குறித்த செய்திகள் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன.
வேலைநீக்க நடவடிக்கைகளை இரக்கமின்றி நியாயப்படுத்திய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் மோகன்தாஸ் பய்.
தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் மூலம் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் பெருகி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற நம்பிக்கையை, நடுத்தர வர்க்கத்தினரின் மத நம்பிக்கையாகவே உருவாக்குவதிலும், அவர்கள் வழியாக சமூகம் முழுவதற்கும் இக்கருத்தைப் பரப்புவதிலும் ஐ.டி. துறை வேலைவாய்ப்பு பெரும்பங்கு வகித்து வந்திருக்கிறது. மலையை அறுத்து கிரானைட்டாக ஏற்றுமதி செவதையும், ஆற்றைச் சூறையாடி பலமாடி கட்டிடம் கட்டுவதையும், நிலத்தடி நீரை பாட்டிலில் அடைத்து விற்பதையும் கிராமப்புற மக்கள் சோற்றுக்காக நகரம் நோக்கி ஓடுவதையும் “முன்னேற்றம்” என்று கூசாமல் பேசுகின்ற துணிச்சலை நடுத்தர வர்க்கத்துக்கு வழங்குவதில், ஐ.டி. சம்பள மயக்கமும், அமெரிக்க மோகமும் ஆற்றியிருக்கும் பங்கு மகத்தானது.
ஓய்வு பெறும் வயதில் தான் எட்டிப்பிடித்த சம்பளத்தை, தன்னுடைய மகன் 25 வயதிலேயே பெற்றுவிட்டதை எண்ணிப் பெருமிதம் கொண்டிருந்தவர்கள், அந்தப் பிள்ளை 35 வயதில் கட்டாய ஓய்வளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவதைப் பார்க்கிறார்கள். இளைய தலைமுறையின் முன்னோடிகளாக நடுத்தர வர்க்கத்தால் போற்றப்படும் நாராயணமூர்த்தி போன்றோர் இதற்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறார்கள்? இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களில் ஒருவரான மோகன்தாஸ் பய், தற்போது நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பற்றி தெரிவித்திருக்கும் கருத்தைப் பார்ப்போம்:
“இன்று வேலைநீக்கம் பற்றிப் புகார் செபவர்களுக்கு நவீன போட்டிப் பொருளாதாரம் பற்றித் தெரிவதில்லை; திறமைகளை இடையறாமல் மறுசீரமைப்பு செய்தால்தான் வளர்ச்சி என்பது சாத்தியம்… தொழில் நன்றாக இருந்த நாட்களில் இவர்கள் தகுதிக்கு அதிகமாக ஊதியம் வாங்கினார்களல்லவா? கத்தியெடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு. அதற்குத் தயாராக இல்லையென்றால் எப்படி? ஐ.டி. துறையிலிருந்து கொஞ்சம் ரத்தத்தை வெளியேற்றுவதுதான் இந்த துறைக்கு நன்மை பயக்கும்.” (நியூஸ் மினிட், ஜன 3, 2015)
“முதலாளித்துவம்”, “சுரண்டல்” என்பன போன்ற சோற்களைப் பொதுவாக ஐ.டி. துறை சார்ந்த புதிய நடுத்தர வர்க்கத்தினர் விரும்புவதில்லை. அவை தங்களைப் போன்ற திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேறியிருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சல் பேர்வழிகளின் புலம்பல் என்றே அவர்களில் பலர் கருதிக் கொள்கின்றனர். அவர்களுக்கு முதலாளித்துவத்தின் உண்மைச் சொரூபத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பய். மனிதவளம் என்று அழைக்கப்பட்ட ஐ.டி. ஊழியர்கள், இன்று வெளியேற்றப்படவேண்டிய கெட்ட ரத்தம் என்றும், குறைக்கப்பட வேண்டிய சதை (flab) என்றும் கரித்துக் கொட்டப்படுவது ஏன்?
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர் பிரிவு தொடங்கப்பட்டதையொட்டி, சென்னை – சோழிங்கநல்லூர் அருகிலுள்ள படூரில் சனவரி – 10 அன்று நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் உரையாற்றிய மூத்த வழக்குரைஞர் பாலன் ஹரிதாஸ்.
அநீதியான இந்த ஆட்குறைப்பை எதிர்த்துப் போராட வேண்டும், சங்கம் அமைத்து உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற அதே நேரத்தில், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையின் பின்புலத்தையும், இதற்கு வழிவகுக்கும் இந்தத் தொழிலின் தன்மையையும் இப்பிரச்சினைக்கு வெளியில் நின்று பார்ப்பதும் புரிந்து கொள்வதும் அவசியம்.
30 வயதில் ரிட்டையர்மென்டா?
இன்று ஆட்குறைப்பு செய்யப்படுவோரில் பலர் 6 முதல் 12 ஆண்டுகள் பணியாற்றிய இடைநிலை மேலாளர்கள். முன்னொரு காலத்தில் காம்பஸ் இன்டர்வியூவில் தெரிவு செய்யப்பட்டவர்கள். வெளியேற்றப்பட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தினாலேயே தீவிரமாக முயன்று தங்களது நிறுவனத்தின் கூம்பு வடிவ நிர்வாகக் கட்டமைவில் மேலே ஏறியவர்கள். பொறியாளர்களுக்கு வேலைகளை ஒதுக்கித் தருவது, மென்பொருளின் தரத்தைப் பரிசோதிப்பது, புதியவர்களைப் பயிற்றுவிப்பது போன்ற இவர்கள் செய்து வரும் பணிகளில் பல இப்போது தானியங்கிமயமாகி (automated) வருகின்றன. மேலும் இவர்கள் செய்து வரும் பணிகளை இவர்களை விடக் குறைவான ஊதியத்தில் செய்வதற்குத் தயாராக ஒரு பெரிய வேலையற்றோர் பட்டாளம் வெளியில் காத்திருக்கிறது. எனவே இவர்கள் வேண்டாத சதைப்பிண்டமாகிவிட்டார்கள்.
“இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களின் சராசரி வயது 2007-08 இல் 25.5 ஆக இருந்தது, 2012-13 இல் 27.5 ஆக உயர்ந்து விட்டது. இதன் காரணமாக ஒரு சராசரியாக ஒரு ஊழியரின் ஊதியத்தின் அளவும் அதிகரித்து விட்டது” என்று தனது ஆய்வில் கவலை தெரிவித்திருந்தது பர்க்லேஸ் என்ற முதலீட்டு ஆலோசனை நிறுவனம். 1981-ல் தொடங்கப்பட்டு, 1999-ல் நாஸ்டாக்கில் பட்டியலிடப்படும் அளவுக்குப் பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்ட இன்ஃபோசிஸ் நிறுவனத்தில், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 2012-ல், “ஊழியரின் சராசரி வயது 27 ஆக இருப்பது அந்த நிறுவனத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல” என்று மதிப்பிடப்படுகிறதென்றால், ஐ.டி. நிறுவனங்களின் சராசரி ஓய்வு பெறும் வயது 30 என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும்.
பு.ஜ.தொ.மு.வின் ஐ.டி ஊழியர் பிரிவு நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் மற்றும் ஐ.டி நிறுவன ஊழியர்கள்.
நாஸ்காம் தருகின்ற ஒரு புள்ளி விவரத்தைப் பார்ப்போம். நூறு கோடி டாலர் வருவாய் ஈட்டுவதற்கு இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு 2012-13 ஆம் ஆண்டில் 26,500 ஊழியர்கள் தேவைப்பட்டார்கள். 2013-14 ஆம் ஆண்டில் வெறும் 13,000 ஊழியர்களைக் கொண்டு அதே நூறு கோடி டாலர் ஈட்டியிருக்கின்றன ஐ.டி. நிறுவனங்கள் (NDTV, அக்-13). இது மட்டுமல்ல, இந்தியாவின் ஐ.டி. துறையில் புதிய ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தின் உண்மை மதிப்பு கடந்த 15 ஆண்டுகளில் இப்போதுதான் மிகவும் குறைவாக இருக்கிறது என்று மதிப்பிட்டிருக்கிறது கிரெடிட் சுயிஸ் என்ற முதலீட்டு நிறுவனம். ஆட்குறைப்பு, உழைப்புச் சுரண்டல் அதிகரிப்பு, ஊதிய வெட்டு ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் ஊழியர்கள் மீது ஏவப்படுவதை மேற்கூறிய தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
இலாபவெறி, தானியங்கிமயம் என்ற கிடுக்கிப்பிடி!
“மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஊழியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளாமை, இலாப விகிதத்தின் வீழ்ச்சி” போன்ற நிர்ப்பந்தங்களின் காரணமாக வேறு வழியில்லாமல்தான் ஆட்குறைப்பு செய்யப்படுவது போன்ற ஒரு சித்திரத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் உருவாக்குகின்றன. அது உண்மையல்ல. டி.சி.எஸ். மிகையாக இலாபம் ஈட்டியிருக்கும் இந்தஆண்டில்தான் ஆட்குறைப்பும் கூடியிருக்கிறது. ஊழியர்களுடைய உழைப்பின் உற்பத்தித்திறன் அதிகரித்து வருவதுதான் ஆட்குறைப்புக்கும் வழிவகுத்திருக்கிறது.
தானியங்கிமயம் (automation) மனித எந்திரமயம் (robotisation) செய்யற்கை நுண்ணறிவு (artificial
intelligence) என ஐ.டி. துறையே புதிய சட்டகத்துக்குள் நுழைந்து விட்டதாகவும் இதற்குரிய திறமைகளை வளர்த்துக் கொள்ளாதவர்கள் தேவையற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவியலாது என்றும் கூறுகிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். உண்மையில் கீழிருந்து மேல் வரை பல்வேறு பணிகளுக்குமான நிரல்களை (programmes) அன்றாடம் எழுதுகின்ற பல்துறைப் பொறியாளர்கள், தம் பணியின் ஊடாக, தம்மைத்தாமே தேவையற்றவர்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். இந்த நிகழ்ச்சிப்போக்கு மற்ற உற்பத்தி துறைகளில் நடப்பதைக் காட்டிலும் விரைவாக ஐ.டி. துறையில் நடந்தேறுவதைத்தான் நாம் காண்கிறோம். பொதுவாக எந்த தொழிலானாலும், அதில் தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவேண்டும். ஆனால், இந்த முன்னேற்றத்தின் ஆதாயத்தை முதலாளித்துவம் அறுவடை செய்து கொள்வதால், தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு முன்னிலும் அதிகமாக பணிச்சுமையைத்தான் கூட்டுகிறது. ஏராளமானோரை வேலையில்லாதவர்களாக்கி வெளியேற்றுகிறது.
“அமெரிக்க மூளையைவிட இந்திய மூளை மலிவு – இந்திய மூளையைவிட எந்திர மூளை மலிவு” என்ற முதலாளித்துவ இலாப-நட்டக் கணக்குதான் “தொழில்நுட்ப முன்னேற்றம்” என்று பெயரில் மோகன்தாஸ் பய் போன்றோரால் நியாயப்படுத்தப்படுகிறது. எல்.கே.ஜி. முதல் பொறியியல் பட்டம் வரை சுமார் 20 ஆண்டுகாலம் “படி, படியென்று படித்து”, வேலையில் அமர்ந்த 7,8 ஆண்டுகளிலேயே “லாயக்கில்லை” என்று துரத்தப்படும் ஒரு மனிதனின் வாழ்க்கையை முதலாளித்துவத்தின் இந்த இலாப – நட்டக் கணக்கு பொருட்படுத்துவதில்லை.
வேலையிலிருந்து துரத்துவது மட்டுமல்ல, பத்தாண்டுகள் உழைத்தவனுக்கு எந்தவித செட்டில்மென்டும் தராமல் வெளியேற்றுவதற்காகத்தான், பணித்திறன் குறைந்தவர் என்று முத்திரை, கட்டாய ராஜினாமா போன்ற வழிமுறைகள். மறுப்பவர்கள் நாஸ்காம் கருப்புப் பட்டியலைக் காட்டிப் பணிய வைக்கப்படுகின்றனர். இலாபத்தைத் தவிர வேறெந்த மதிப்பீடும் (value) இவர்களுக்கு கிடையாது என்பதே இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
மன்மோகன் சிங்குக்கே இதுதான் கதி!
இதனைப் புரிந்து கொள்ளாமல், ஹையர் அன்டு ஃபயர் (Hire and Fire) என்ற முதலாளித்துவத்தின் விதியை ஒப்புக்கொண்டு, “பணித்திறனற்றவர் (under performer) என்று முத்திரை குத்தாமல் வெளியேற்றினாலாவது, இன்னொரு நிறுவனத்தில் நாங்கள் வேலை தேடிக்கொள்ள முடியுமே” என்ற கோணத்தில் சிலர் அசட்டுத்தனமாக இறைஞ்சுகிறார்கள். தாங்கள் விரும்பிய வேகத்தில் புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்தாமல் தடுமாறிய குற்றத்துக்காக, ஆனானப்பட்ட மன்மோகன் சிங்கையே “அண்டர் பெர்ஃபார்மர்” என முத்திரை குத்தித்தான் வெளியேற்றியது, “நன்றி கெட்ட” கார்ப்பரேட் முதலாளி வர்க்கம். அவ்வாறிருக்க, ஐ.டி. ஊழியர்கள் எம்மாத்திரம்?
இன்னொரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கை வைப்பதற்குக்கூட அறிவு பூர்வமாக ஒரு அடித்தளம் இருக்க வேண்டும். டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐ.டி. நிறுவனங்களின் 80% வருவாய் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சார்ந்தே இருக்கிறது. தங்கள் நாட்டைக் காட்டிலும் மிகவும் குறைவான ஊதியத்தில் இந்தியாவில் ஊழியர்கள் கிடைக்கின்ற காரணத்தினால்தான், அமெரிக்க, ஐரோப்பிய தொழில் நிறுவனங்கள் இந்திய ஐ.டி. நிறுவனங்களிடம் பணிகளை அவுட் சோர்ஸ் செய்கின்றன.
நாராயணமூர்த்தி, டாடா, அசிம் பிரேம்ஜி ஆகியோருக்கும் கட்டிட வேலைக்கு ஆள் சப்ளை செய்யும் காண்டிராக்டர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தமது வாடிக்கையாளர்கள் அவுட்சோர்ஸ் செய்யும் வேலைகளுக்கு, “நேரம், பொருட்செலவு, ஊழியர்களுக்கான ஊதியம்” ஆகியவற்றைக் கணக்கிட்டு இன்வாய்ஸ் போட்டு அமெரிக்க-ஐரோப்பிய கம்பெனிகளுக்கு அனுப்பி வைத்து, அந்தப் பணத்தில் பாதிக்குப் பாதி கமிசன் அடிப்பதுதான் இவர்கள் செய்து வரும் தொழில்.
இந்த முறையிலான ஒப்பந்தத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, இவர்களுடைய இலாபமடிக்கும் தொகையும் அதிகரிக்கும். இதுநாள்வரை ஏராளமாக ஊழியர்களைப் பணியமர்த்தியதற்குக் காரணம் இதுதான். மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 15 முதல் 20 சதவீதம் பேரை வேலையேதும் இல்லாமல் “பெஞ்சில்” அமரவைத்து, அவர்கள் பெயரிலும் கணக்கெழுதி பணம் வசூலித்து வந்தார்கள் இந்த நவீன இந்தியாவின் சிற்பிகள்.
நீலக்காலராக மாற்றப்படும் வெள்ளைக்காலர்கள்!
பு.ஜ.தொ.மு. – ஐ.டி ஊழியர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம்.
இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு வேலை கொடுக்கும் அமெரிக்க- ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்த நிலைமையிலிருந்து மீள முடியாத காரணத்தினால், அவை தமது இலாபத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, மேற்கூறிய ஒப்பந்த முறையை மாற்றுகின்றனர். “எத்தனை ஊழியர்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை; குறிப்பிட்ட வேலையை முடித்து தருவதற்கு இவ்வளவு தொகை” (outcome based pricing model) என்று ஒப்பந்தம் போடுகின்றனர். ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் தனது இலாப விகிதத்தை அதிகரித்துக் கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும் திட்டமிடும் ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் தானியங்கிமயமாதல் நடவடிக்கையிலும் இறங்குகின்றன.
இதுமட்டுமின்றி, முதலாளித்துவ உற்பத்தியின் தன்மை காரணமாக, வங்கிச் சேவை, காப்பீடு, கடன் வசூல், பயண முன்பதிவு என்பன போன்ற சேவைகள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் முறைகள் ஒவ்வொன்றும் ஒருபடித்தானவையாக (commoditization) மாறி வருகின்றன. ரவா, மைதா போன்றவை பல பிராண்டுகளில் சந்தைப்படுத்தப்பட்டாலும், அவற்றின் பயன்பாடு ஒன்றுதான் என்பதைப்போலவே, கிரிண்ட்லேஸ், ஸ்டான்சார்ட் என்று வங்கிகள் வேறாக இருப்பினும் அவை வழங்கும் சேவையும் அவற்றை நிர்வகிக்கும் முறையும் அநேகமாக ஒன்றுதான் என்பதால், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். போன்ற எந்த நிறுவனம் அந்தப் பணியைக் குத்தகைக்கு எடுத்து செய்தாலும், “வேலையின் தரத்திலோ செய்யும் முறையிலோ பாரிய வேறுபாடு இல்லை. விலையில்தான் வேறுபாடு” என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எனவே, அடக்கவிலையைக் குறைப்பதொன்றுதான் (cost cutting) இலாபத்தை அதிகரிப்பதற்கான வழி என்பதால், தானியங்கிமயமாதல் தீவிரப்படுத்தப்படுகின்றது.
இனி, வழமையான ஆளெடுப்பு முறைகளைக் கைவிட்டு, “ஜஸ்ட் இன் டைம்” (Just in time) என்ற முறைக்கு, அதாவது எந்தக் கணத்தில் தேவையோ அந்தக்கணத்தில் தேவைப்படும் ஆட்களை மட்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டால் போதுமானது என்று ஐ.டி. நிறுவனங்கள் கருதுகின்றன. தனித்திறன் வாய்ந்த சிலரை மட்டும் முறையாக பணியமர்த்திக் கொள்வது, எஞ்சியுள்ள ஆகப்பெரும்பான்மையான ஊழியர்களைப் பொருத்தவரை, “எக்ஸ்போர்ட் ஆர்டர் இல்லையென்றால் வேலை இல்லை” என்று கைவிரிக்கும் திருப்பூர் கம்பெனிகளின் வழிமுறைக்கு மாறத் திட்டமிடுகின்றன ஐ.டி. நிறுவனங்கள்.
நீலக்காலருக்கும் வெள்ளைக் காலருக்கும் இடையிலான வண்ண வேறுபாட்டை முதலாளி வர்க்கம் அகற்றி வருகிறது. காலைப்பொழுதில் நகர முச்சந்திகளில் கையில் தூக்குவாளியும், கண்களில் ஏக்கமுமாக வேலை தேடிக் காத்திருக்கும் கட்டிடத் தொழிலாளிகளையும் பொறியியல், நிர்வாகவியல் பட்டதாரிகளையும் பிரிக்கும் எல்லைக்கோடு மங்கி வருகிறது.
பணத்தை எண்ணுவதையும், பங்குச் சந்தையில் சூதாடி இலாபமீட்டுவதையும் தவிர வேறு வேலை தெரியாத முதலாளி வர்க்கம், தன்னுடைய இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, ஆகப்பெரும்பான்மையான உழைப்பாளிகளைத் தேவையற்றவர்கள் என்றும் திறமையற்றவர்கள் என்றும் முத்திரை குத்திக் கழித்துக் கட்டுகிறது. உடலுழைப்பாளிகளோ, மூளை உழைப்பாளிகளோ அனைவருக்கும் நேர்ந்து வருவது இதுதான். உண்மையில் இந்த சமூகத்துக்கு எந்த விதத்திலும் தேவைப்படாதவர்கள், முதலீட்டாளர்கள் என்று கவுரவமாக அழைக்கப்படும் முதலாளி வர்க்கச் சூதாடிகள்தான்.
பன்னாட்டு நிறுவன வேலை, அதிக ஊதியம், அமெரிக்கச் சார்பு, தமது தகுதி-திறமை குறித்த மயக்கம், சக ஊழியனைப் போட்டியாளனாகக் கருதும் மனோபாவம் ஆகியவற்றுக்கு ஆட்பட்டிருக்கும் ஐ.டி. துறையினரும், காம்பஸ் இன்டர்வியூவில் தெரிவு செய்யப்படுவதற்காகத் தவமிருக்கும் மாணவர்களும் உண்மையைக் கண் திறந்து பார்ப்பதற்கான வாய்ப்பை தற்போதைய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.
நாராயணமூர்த்தியும் பில் கேட்சும் இலட்சிய நாயகர்களாகக் கருதப்படும் சமூகத்தில் நாம் தேவையற்றவர்களாவதைத் தவிர்க்க முடியாது. அவர்களையும் அவர்களுடைய வர்க்கத்தையும் தேவையற்றவர்களாக்கும் ஒரு சமூக அமைப்பைப் பற்றி உடனே சிந்திக்குமாறு அவர்கள் நம்மை நிர்ப்பந்திக்கிறார்கள்.
தமிழகத்தின் நீர்வளமும், பாசன கட்டமைப்பும் அரசின் புறக்கணிப்பாலும், அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடக்கும் மணல் கொள்ளையாலும், நீதிமன்றங்களின் பாராமுகத்தாலும் எப்படி அழிக்கப்பட்டு வருகின்றது என்றும் இது குறித்து நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் விளக்கும் கட்டுரைத் தொடரின் முதல் பகுதி.
மணல் கொள்ளையும் ஏரிகளின் அழிவும்
ஆற்று மணல் முறையற்ற வழிகளில் தோண்டி எடுக்கப்படுவதால் தமிழ் நாட்டின் ஏரிகளுக்கு ஏற்படும் பாதிப்பை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
ஆற்றின் மட்டத்தை சரியாக வைத்திருப்பது மணல்
மணல் என்பது புவியியல் மாறுபாட்டின் ஒரு பகுதியாக பாறைகள் சிதைந்து உருவாகும் ஒரு கனிமம் என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். அது உருவாக இயற்கை ஏராளமான ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். இன்று நாம் பயன்படுத்தும் ஆற்று மணல் உருவாவதை எக்காரணம் கொண்டும் விரைவாக்க முடியாது. எனவே, நாம் ஆற்றிலிருந்து எடுக்கும் மணலும், இயற்கையில் உருவாகும் மணலும் ஒரே விகிதத்தில் இருந்தால் மட்டுமே சமநிலையைப் பேண முடியும். மணலை ஆழமாகத் தோண்டி எடுப்பதன் மூலம் ஆறுகளைப் பள்ளமாக்கி அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் எதிர் விளைவுகள் குளங்கள் வறண்டு போய் தமிழ் நாட்டின் நீர்வளம் குன்றி விடும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நாம் இந்த தொடர் மூலம் விளக்க இருக்கிறோம்.
குளங்கள் இல்லாத ஊர்களைத் தமிழ்நாட்டில் காண்பது அரிதினும் அரிது. இந்தக் குளங்கள் ஆங்காங்கு பெய்யும் மழை நீரை மட்டும் சேமிப்பது இல்லை. பல மைல் தொலைவில் உள்ள ஆற்றில் இருந்து பெரும் நீரையும் பெற்று சேமிக்கின்றன. இப்படி சிறுதும் பெரிதுமான நீர்நிலைகள் அனைத்தும் பல கோடிக்கணக்கான மைல்கள் நீளமுடைய கால்வாய்களால் ஆறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொன்னால், இந்தக் கால்வாய்கள் அனைத்தும் ஆற்றில் தொடங்கி குளங்களில் இணைந்து, பின்னர் மீண்டும் ஆற்றில் வந்து முடிகின்றன. வெகு சொற்பமான அளவு தண்ணீரே கடலுக்கு சென்று சேர்கிறது. எனவே, ஆறுகள் சீருடன் இருந்தால் மட்டுமே தமிழ் நாட்டில் உள்ள குளங்கள் சீருடன் இருக்கும்.
மதுரை மாவட்டத்தில் குளங்கள், கால்வாய்கள், கிராமங்களைக் காட்டும் வரைபடத்தின் ஒரு பகுதி (படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது சொடுக்கவும்)
இங்கே இணைக்கப்பட்ட படத்தை பார்க்கவும். சுமார் 140 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குட்பட்ட ஒரு சிறிய பகுதியில் 40 ஏரிகளை நீங்கள் பார்க்கலாம். வைகை ஆறு வட பகுதியில் ஓடுவதை பார்ப்பீர்கள். எண்ணற்ற சிற்றோடைகள் மலைகளில் தொடங்கி ஏரிகளில் முடிவதையும் அவை மீண்டும் இணைந்து பெரிய ஓடைகளாகி பின்னர் மீண்டும் ஆற்றில் இணைகின்றன. இவை அனைத்தும் பல நூறு ஆண்டு கால மனித உழைப்பு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்தச் சிற்றோடைகளை நம்பியே ஏரிகள் இருக்கின்றன. இந்த ஓடைகள் அனைத்திலும் அடியில் தேங்கும் மணலை அள்ளிவிட்டால் இந்தக் குளங்களின் நிலை என்னவாகும். ஓடைகளிலிருந்து வரும் தண்ணீர் குளங்களுக்கு செல்லாமல் வீணாகி எங்கோ சென்று சேரும். இது தவிர்த்து ஆற்றுடன் நேரடியாக இணைக்கப்பட்ட குளங்களை கீழ் வைகைப் பகுதியின் வரைபடத்தில் பார்க்கலாம்.
மனித உழைப்பின் மாண்புறு படைப்புகளில் மகத்தானது அவன் உருவாக்கிய ஏரிகளும் குளங்களும். அதனினும் மகத்தானது அவன் இயற்கையை மனிதநேயமாக்கியது. செயற்கையான குளங்களை இயற்கையான ஆறுகளுடன், இணைத்த நல்வினைப் பயன்தான் இன்று நாம் பயன்படுத்தும் நீர். பல நூறு ஆண்டுகளாகப் பெற்ற அறிவின் பலன் இது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் நாற்பது ஆயிரம் பாசனக் குளங்கள் இருப்பதாகவும், இதைப்போல ஐந்து மடங்கு எண்ணிக்கையிலான சிறிய குளங்கள், ஊரணிகள், குட்டைகள் இருக்கின்றனவென்றும் புள்ளிவிபரங்களும் மதிப்பீடுகளும் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள மிகப் பெரும் ஏரிகள் காலத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, 3 மில்லியன் கன மீட்டருக்கு மேல் கொள்ளளவு கொண்ட ஏரிகள் மொத்தம் 116. இவற்றில் 6 ஏரிகள் மட்டுமே கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் கட்டப்பட்டவை. மீதியுள்ள 110 ஏரிகள் அதற்கும் வெகு காலத்திற்கும் முன்பே கட்டப்பட்டவை.
ஆற்றின் தரை மட்டத்தை அளவிட்டு அந்த அளவினை நம்பியே ஏரிகளுக்கு நீரை இட்டுச்செல்லும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றில் மணல் அள்ளும்பொழுது அதன் ஆழம் அதிகரித்து விடுவதால் ஆற்றில் வரும் நீர் மேல் ஏறி கால்வாய்கள் வழியாக குளங்களுக்குச் செல்லாது. ஒரு பேச்சுக்காக கால்வாய்களையும் சேர்த்து ஆழமாகத் தோண்டினாலும் குளங்களின் தரை மட்டத்தை தாழ்த்த முடியாது. ஒரு வேளை குளங்களைத் தோண்டி ஆழமாக்கினாலும் பாசனம் பெறும் நிலங்களை ஆழமாக்கிட முடியாது. இதனால் ஆற்றில் நீர் வந்தாலும் குளங்கள் நிரம்பாமல் வீணாகி கடலுக்குச் சென்று சேரும். பன்னெடுங்காலம் நீர் வழங்கி நம் சமூகத்தைக் காத்து வந்த இந்தக் குளங்கள் பாழ்பட்டு அழிந்து படுவதில் இந்த மணல் கொள்ளையர்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஏரிகளைக் காப்பது முதல் பணி
ஆற்றில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் சேமிக்க வழியில்லாமல் போய் விடும் என்பதைப் பற்றிப் பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், அதை விட மிக முக்கியமானது ஆறுகளை நம்பி இருக்கும் ஏரிகள், குளங்கள் நாசமாவது தான். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பெரும்பகுதி கடினப் பாறைகளால் ஆனது. இந்தப் பாறைகளில் தண்ணீர் சுலபமாக இறங்கி சென்று சேராது. அது ஒரு நீண்ட செயல். இயற்கையாகவே, தமிழகத்தின் புவியியல் அமைப்பின்படி நிலத்தடியில் நீர் இருப்பது மிகவும் குறைவு. இப்போது நாம் உறிஞ்சும் நிலத்தடி நீர் பல ஆயிரம் ஆண்டுகாலத்தில் உள்ளிறங்கி பாறைகளின் இடுக்குகளில் தேங்கியது. ஆறுகளில் ஓடும் நீரால் மட்டுமே நிலத்தடி நீர் பெரும் அளவில் சேமிக்கப் படுவதில்லை. ஆற்றின் ஓரங்களில் உள்ள ஊர்களில் மட்டும் கிணற்றைக் கொண்டுள்ள விவசாயிகள் இதுபற்றி கவலை கொண்டிருப்பது உண்மை தான். ஆனால், தமிழ் நாட்டின் பெரும் பகுதி கிராமங்கள் ஆற்றிலிருந்து வெகு தொலைவில்தான் உள்ளன. அவர்கள் வைகை போன்ற ஆறுகள் நாசமாவதை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாமல் குமுறி வருகின்றனர். அத்தகைய கிராம மக்கள் பெருகி வரும் மணல் கொள்ளையினால் ஆற்றில் இருந்து தொலைவில் உள்ள தமது குளங்களுக்கு நீர் வருவதில்லை என்பது பற்றிய கவலையில் ஆண்டு தோறும் மூழ்கி வருகிறார்கள். எனவே, ஆற்று மணல் கொள்ளையிடப்படுவதன் முதல் சேதம் ஏரிகளுக்கும் கால்வாய்களுக்கும்தான். அதிலும் பெரும் ஏரிகளுக்கு ஏற்படும் சேதம் மிகவும் தீவிரமானது. பல நூறு ஆண்டுகள் பணி செய்த இத்தகைய ஏரிகளை அழிக்கும் மணல் கொள்ளையை நிறுத்துவது மட்டுமே எதிர் வரும் பேரிழப்பை தடுக்கும்.
வைகை ஆறும் குளங்களும்
தமிழ் நாட்டின் முக்கியமான ஆறுகளில் வைகையும் ஒன்று. தமிழ் நாட்டில் குறைவான மழை பெறும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம்பியிருந்த இந்த வைகை ஆறுதான் தமிழ்நாட்டில் முதன் முதலில் சீரழிக்கப்பட்டது. ஆற்று மணல் அள்ளப்படுவதால் அதனை அண்டியிருக்கும் குளங்கள் அடையும் சேதத்தை வைகைப் பாசனப் பகுதி முழுவதும் காணலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மதுரை நாட்டு அரசிதழ் நூல் (Mathura Country Manual) வைகையை நம்பி சுமார் மூவாயிரத்திற்கும் மேலான ஏரிகள் இருந்ததாக குறிப்பிடுகிறது.
கீழ்வைகை என்று அழைக்கப்படும் மதுரைக்கு கிழக்கே உள்ள பகுதியில் மட்டும் சுமார் 96 கால்வாய்கள் நானூறு ஏரிகளுக்கு நேரடியாகவும் சுமார் ஆயிரம் ஏரிகளுக்கு அதன் நீட்சியாகவும் தண்ணீரை இட்டுச் செல்கின்றன. கீழ் வைகையின் ஒரு சிறிய பகுதியில் அமைந்துள்ள ஆற்றுடன் கூடிய கால்வாய் கட்டமைப்பை இப்படத்தில் காண்க.
கீழைவைகையின் ஒரு சிறிய பகுதியில் ஆற்றுடன் கூடிய கால்வாய் கட்டமைப்பு
கீழ் வைகைப் பகுதிகளில், மட்டும் இவ்வாறு ஆற்று நீரை கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்குப் பெற்று பயன் அடையும் மொத்தப் பாசனப் பரப்பு சுமார் இரண்டு லட்சம் ஏக்கர். இந்த நிலங்கள் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருக்கின்றன. இப்படி காலத்தால் பழமையான பாசன முறைகளை கொண்டது வைகை. தமிழ் நாட்டில் கடலில் கலக்காத ஆறு என்ற புகழைப் பெற்ற பெரும் ஆறு வைகை. வைகை கடைசியாக ராமநாதபுரம் பெரிய ஏரியில் சென்று கலக்கிறது. சொட்டுத் தண்ணீர் கூட வீணாக்காமல் பயன்படுத்தி வாழ்ந்த ஒரு சமூகம் இன்றோ சீரழிந்து சின்னாபின்னமாகி கிடக்கிறது. இங்கு குறிப்பிடும் ஏரிகளுக்கும் பெரியாறு பாசனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதை வேறொரு சமயம் விளக்கலாம்.
பிரடெரிக் காட்டன் என்ற பொறியாளர் ஒரு சிறப்புரையில் வைகையைப் பற்றி 1901 ம் ஆண்டு எழுதினார், “நீர்பாசனத்தை பெருக்குவதென்றால் வைகையைப் போல செய்திட வேண்டும்”. ஆண்டுக்கு இருபது நாட்களுக்கும் குறைவாக மட்டுமே நீர் ஓடும் வறண்ட வைகையில் அப்படியென்ன சிறப்பான முறையிருந்திருக்க முடியும்?
அவர் இவ்வாறு எழுதினார்,
“எனது நினைவு சரியாக இருக்குமானால், இந்திய தீபகற்பத்தின் கடைகோடியில் ஓடும் வைகை ஆற்றின் நீர் எப்போதோ ஒருமுறை மட்டுமே கடலில் சென்று சேர்கிறது; நாம் வியப்புறும் வண்ணம் அந்த ஆற்று நீரின் ஒவ்வொரு சொட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளம் ஓடும் பொழுது ஆற்றின் குறுக்கே அங்கும் இங்குமாக அணைகள் போடப்பட்டு, தண்ணீர் திருப்பி விடப்பட்டு பயிர்க் காலம் முழுதுக்குமான தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் குளங்களில் ஆங்காங்கு சேமிக்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, இதுதான், மிகப் பெரும் ஆறுகளை நாம் நடத்தும் நெறி முறையாக இருக்க வேண்டும். தற்காலத்தில் மிகப் பெரும் நீர்த்தேக்கங்களை உருவாக்குவதற்கான இடங்களைத் தேடியலைவது என்பது பெருமைக்குரிய விசயமாக கருதப்படுகிறது. நீர்த்தேக்கங்களின் அளவு பெரிதாக ஆக அதை நிர்மாணிக்கும் செலவுகள் குறையக் கூடும் என்பது உண்மையே. ஆனாலும், தண்ணீரின் உண்மையான மதிப்பை அறிய வேண்டுமானால், அதற்காகும் செலவுகள் முதன்மையான காரணமாக இருக்கக் கூடாது மாறாக, அது எங்கே எப்படி தேக்கப்படுகிறது என்பதே முக்கியமானதாகும்.
நீர்தேக்கங்கள் அமைக்க புதிய இடங்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என விரும்பும் மாணவர்கள் தீபகற்ப இந்தியாவின் புவியியல் வரைபடங்களை முதலில் தெளிவாக ஆராயவேண்டும். அங்கே தான், ஒவ்வொரும் பள்ளமும் மேடும் ஒரு ஏரியாக உருப்பெற்றிருப்பதைக் காண முடியும். ஏரிகள் என்று அழைக்கப்படும் இந்த நீர்த்தேக்கங்கள் பெரும் பஞ்ச காலத்தில் பேருதவியாக இல்லாவிட்டாலும் வறண்ட காலங்களில் மதிப்பிட முடியாத தண்ணீரை தேக்கி வைக்கும். கூடவே, இந்த ஏரிகளை அருகில் இருக்கும் பெரிய ஓடைகள் அல்லது வற்றாத ஆற்றுடன் இணைத்துவிட்டால் பஞ்ச காலத்திலும் கூட தண்ணீரை ஆங்காங்கே தேக்கி வைத்துக் கொள்ள முடியும். நமது மாபெரும் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன் (Sir Arthur Cotton) இப்படி வற்றாத ஆறுகளை இணைத்து ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள பழமையான ஏரிகளுக்கு நீரை வழங்க ஒரு திட்டம் தீட்டியுள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனாலும், நான் உங்களனைவரையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால் பல பள்ளத்தாக்குகளைக் கொண்டிருக்கும் இந்தியா முழுவதும், வைகையில் அமைக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு பாசன கட்டமைப்பை ஏன் ஏற்படுத்தக் கூடாது என்பதுதான்.”
என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவரே சொன்னார்.
கீழ் வைகை பகுதியின் குளங்கள்
நீரை மிகவும் சிக்கனமாகவும் சீரிய முறையிலும் தேக்கி வைக்கும் வழிமுறைகளுக்கு ஒரு மிகப் பெரிய சான்று உண்டென்றால் அது இங்கே தான். உயர்ந்த அதிகாரத்தையும் அறிவாற்றலையும் கொண்டிருக்கும் நாம் காலத்தால் பழமையான இந்த முறையை பின்பற்ற வெட்கப்பட வேண்டியதில்லை.
பிரெடெரிக் காட்டன் 1901 -ம் ஆண்டு எழுதிய “இந்தியாவின் மாபெரும் ஆறுகளை பற்றிய ஒரு கடிதமும் இரண்டு கட்டுரைகளும்: நாட்டை வளமாக்கவும் பெரும் பஞ்சங்களை தடுக்கவும் செய்யத்தகுந்தது என்ன ? எனது எழுபது ஆண்டு கால ஆய்வுப் பணிக்குப் பின் எழுதியது” என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்.
பிரெடெரிக் காட்டன், ஒரு ஆங்கிலேயர், ஏகாதிபத்திய மனப் பாங்குடையவர். இந்தக் கட்டுரையை அவர் எழுதிய போது அவர் வயது தொண்ணூற்று நான்கு. எழுபது ஆண்டுகள் பொறியியல் பணியும் ஆய்வும் செய்த அனுபவம் மிக்கவர். இந்தியா மட்டுமின்றி பல நாடுகளைச் சுற்றியவர். இங்கிலாந்து நாட்டின் பிரபலமான ஒரு பொறியியல் கல்லூரியில் பயிற்சி முடிந்து செல்லும் இளம் பொறியாளர்களுக்கு என அவர் இதனை எழுதினார். வைகையின் பாசனத்தைப்பற்றி தலை சிறந்த பொறியாளர்கள் மட்டுமின்றி கிறித்தவப் பாதிரிகள், வரலாற்று ஆய்வாளர்கள், ஆங்கிலேய அதிகாரிகள், நிலவியல் வல்லுனர்கள் என்று பலரும் வியந்து எழுதியுள்ளனர். ஆறுகளையும் குளங்களையும் வன்முறையின்றி ஒரு சேர இணைக்கும் இந்த தொழில் நுட்பத்தை வைகையில் கண்டவர்கள் பலர்.
வைகை ஆற்றின் நீர் சுமார் ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று சேரும் வண்ணம் ஒரு வலைப் பின்னல் போன்ற கால்வாய்களும் ஏரிகளும் அடங்கிய ஒரு கட்டமைப்பை பழந்தமிழர்கள் பல நூறு ஆண்டுகளாக செய்து வைத்திருந்தனர். ஆனால், வைகையின் இன்றைய நிலை என்ன?
இதோ, தமிழ்நாட்டு அரசின் வைகை குறித்த 2004-ம் ஆண்டு வெளியான மிக விரிவான ஒரு சுற்றுப்புற சூழல் அறிக்கை, விரகனூர் அருகில் உள்ள கீழ் வைகைக் கால்வாய்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறது:
“இந்த இடத்தில், மிக ஆழமாக மணல் அள்ளப்பட்டுள்ளது. மணல் தோண்டப்பட்டதாலும், அதனை அடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் கால்வாய்கள் எதுவும் செயல்படவில்லை. கட்டனூர் கால்வாய் இருந்த இடம் தெரியாமலே போய்விட்டது. இது தவிர்த்த இரண்டு கால்வாய்கள் அவை தொடங்கும் இடத்திலேயே காணவில்லை, சிறிது தூரம் சென்ற பின்னர் மட்டுமே தென்படுகின்றன. ஆனாலும் கூட, வைகை ஆற்றிலிருந்து இந்தக் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை”.
இதே அறிக்கை, வைகையாற்றின் பாசனம் பெறும் பகுதி நெடுகிலும் என்னென்ன சூழல் மாசுகள் உள்ளன, அதனால் ஆறும், பாசனக் குளங்களும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்று தெரிவிக்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகப் பெரும் பொறியாளர்கள் வியக்கும் வண்ணம் செயல் பட்டு வந்த ஆறும் கால்வாயும் இன்று எப்படி அழிந்து ஒழிந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆறு பள்ளமானால் கால்வாய் மேடிட்டுப் போகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஒரு எடுத்துக் காட்டாக, மதுரை நகரத்திற்கு மேற்கிலும் கிழக்கிலும் ஒரு பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எட்டுக் கால்வாய்களின் நிலையை கீழ்க்கண்ட அட்டவணையில் காணலாம்.
ஆற்றுக் கால்வாய்களின் நிலைமை
அட்டவணை-1 மதுரை நகருக்கு அருகில் உள்ள கால்வாய்களின் நிலை
வரிசை எண்
கால்வாயின் பெயர்
கால்வாய்க்கும் ஆற்றுக்கும் இடையே தோண்டப்பட்ட மணல் பள்ளம் (அடிகளில்)
கால்வாயின் நிலைமை
1
மாடக்குளம் கால்வாய்
20
பாசனப் பரப்பு 3400 ஏக்கரில் இருந்து 400 ஏக்கர் ஆக குறைந்து விட்டது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே வேறு ஒரு பகுதியில் இருந்து நீர் வழங்கப் பட்டு வருகிறது.
2
கீழமாத்தூர் வரத்துக் கால்வாய்
15
பயன்பாட்டில் இல்லை.
3
துவரிமான் வரத்துக் கால்வாய்
15
பயன்பாட்டில் இல்லை. சுமார் 440 ஏக்கரில் பாசனம் இல்லை
4
கோச்சடை கால்வாய்
30
பயன்பாட்டில் இல்லை. சுமார் 500 ஏக்கரில் பாசனம் இல்லை.
5
அச்சம்பத்து ஊற்றுக் கால்வாய்
25
பயன்பாட்டில் இல்லை
6
அவனியாபுரம் வரத்துக் கால்வாய்
40
பயன்பாட்டில் இல்லை. 1250 ஏக்கரில் பாசனம் இல்லை. மதுரை நகரின் சாக்கடை நீர் தேக்கப் படுகிறது.
7
சிந்தாமணி கால்வாய்
15
பயன்பாட்டில் இல்லை. 482 ஏக்கரில் பாசனம் இல்லை.
8
அனுப்பானடி வரத்துக் கால்வாய்
10
பயன்பாட்டில் இல்லை. 996 ஏக்கரில் பாசனம் இல்லை
இந்தக் கால்வாய்கள் அனைத்தும் மிகவும் புராதனமானவை என்பதை மீண்டும் சொல்லவேண்டியதில்லை. கி.பி. எட்டு முதல் பனிரெண்டாம் நூற்றாண்டு வரையிலான பல கல்வெட்டுகள் வைகையில் வெட்டப்பட்ட கால்வாய்கள் குறித்த ஏராளமான தகவல்களைக் கொண்டிருக்கின்றன. மேலே கண்ட குளங்கள் அனைத்தும் குறைந்தது பத்து நூற்றாண்டுளுக்கும் முந்தியவை. அவற்றில் சில சங்க காலத்தில் இருந்தே இருப்பதாகவும் சில அறிஞர்கள் கூறி வருகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலே பணி செய்து வந்த இந்தக் கட்டுமானங்கள் இன்று செயலில் இல்லை.
தண்ணீர் வராத இந்தக் குளங்களில் பல அழியும் நிலையில் இருக்கின்றன. மதுரை நகரைப் பற்றிய ஒரு இடைக்காலக் கல்வெட்டு “மாடக்குளக் கீழ் மதுரை” என்று அழைக்கிறது. இதன் பொருள் மாடக்குளத்தினால் பயன் பெற்ற மதுரை நகரம் என்பது. மதுரைக்கு முகவரி தந்த இந்தக் குளம் இன்று அழியும் நிலையில் இருக்கிறது. ஆண்டு தோறும் வைகையில் இருந்து தண்ணீர் பெற மிகுந்த சிரமம் அடைகிறது. பல நூறு ஆண்டுகள் செயல் பட்ட இந்தக் கால்வாய் கடந்த நாற்பது ஆண்டுகளுக்குள் செயல் படாமல் போய் தற்சமயம் வேறு ஒரு இடத்தில் ஆற்றை மடக்கி, நீரைத் தேக்கி, மடைமாற்றி சுற்றி வளைத்து தண்ணீரை கொண்டு வருகிறார்கள் பொதுப் பணித்துறையினர். வெகு விரைவில் இதுவும் சாத்தியமில்லாமல் போகும்.
ஆற்றிலே மணலைத் தோண்டி, தமிழ்நாட்டின் வரலாற்றுக்கும் புவியியலுக்கும் மணல் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற அடையாளம் இது தான்.
வைகை ஆற்றுக்கும் ஏரிகளுக்குமான நீண்ட நெடிய தொடர்பை இன்னமும் விரிவாக இனி வரும் கட்டுரையில் பார்க்கலாம்.
மெட்ரிக்குலேஷன் – மழலையர் பள்ளிகள் மெக்காலேயின் உண்மையான வாரிசுகள்
(தமிழ்நாட்டை பீடித்திருக்கும் ஆங்கில வழி மெட்ரிகுலேசன் பள்ளிகள் குறித்து 1997-ம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை. கடந்த 18 ஆண்டுகளில் பள்ளிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, கட்டணம் ஒவ்வொன்றும் பல மடங்கு அதிகரித்து இந்த தனியார் கல்விக் கொள்ளையர்களின் சுரண்டல் விரிவடைந்திருக்கிறது. மறுபக்கம், அரசுப் பள்ளிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றன.
மக்களின் அடிப்படை உரிமையான கல்வித் துறையில் தனியார் சுரண்டலை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் கட்டுரை.)
ஒரு தேசிய இனத்தை முற்றாக அழிக்க வேண்டுமெனில் ‘’அவர்களின் மொழியை முதலில் அழி’’ என்பது தேசிய இன ஒடுக்குமுறையாளர்களின் பாதை.
“சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!” என்ற வரிகளின் பொருள் என்னவாகி விட்டது? சொந்த மண்ணில் பிழைக்க வழி இல்லை, பிழைப்பு தேடி எட்டுத்திக்கும் ஓடி பிறந்த மண் பக்கம் திரும்பிக்கூட பார்க்க வேண்டாம் என்கிற நிலைதானே நிலவுகிறது!
தமிழன் பிறப்பால் மட்டும் தமிழனாக இருந்து கொண்டு சமூகத்தின் அனைத்து அடையாளங்களையும் இழந்து வருகிறான்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மா.பொ.சி.அவர்களும், சி.சுப்பிரமணியம் அவர்களும் “தமிழால் முடியும்” “தமிழால் முடியாதது?” எது என்று தமிழின் வலிமையை உணர்த்திடும் வகையில் எடுத்துக் கூறினர். மறைமலையடிகள், பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ் மொழிப் போராட்ட தியாகிகள் சாகும்வரை தமிழை ஆட்சி மொழி, பயிற்றுமொழி, வழிபாட்டு மொழி என சகல துறைகளிலும் தமிழை அரியணை ஏற்றிட அரும்பாடுபட்டனர். திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் சமஸ்கிருதமயமான பார்ப்பனத் தமிழும், ஆங்கில மோகமும் கொஞ்சம் மறைந்து தூய தமிழ் வளரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் இவ்வளர்ச்சி தேக்கமடைந்ததோடு நில்லாமல் ‘’மெல்லத் தமிழினிச் சாகும்; அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஒங்கும்!’’ என்ற நிலையை இன்று கண்கூடாகக் கண்டு வருகிறோம். தமிழ்மொழியோடு தமிழ் இனமும் அழிந்து அதன் சொந்த அடையாளங்களை மெல்லமெல்ல இழந்து வருகிறது. அதற்கு இந்த மெட்ரிக்குலேசன் வணிக நிறுவனங்கள் பிரதான பங்காற்றி வருகின்றன.
கலை, இலக்கியம், தொலைக்காட்சி, திரைப்படம், வழக்குமொழி, விளையாட்டு, பயிற்று மொழி, பொழுது போக்கு என்று எல்லாத் துறைகளிலும் தமிழ் ‘’தமிங்கிலமாக’’ (தமிழும் ஆங்கிலமும் கலந்ததாக) மாறி அழிவை நோக்கிக் சென்று கொண்டிருக்கிறது. தமிழன் பிறப்பால் மட்டும் தமிழனாக இருந்து கொண்டு, பேச்சு, நடை உடை, பண்பாடு, வாழ்க்கை முறை, சிந்தனை போன்ற ஒரு சமூகத்தின் அனைத்து அடையாளங்களையும் இழந்து வருகிறான்.
நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு பேராசிரியர் தமிழ்க் குடிமகன், பேராசியர் அன்பழகன் போன்றோரின் விடாமுயற்சியால் தி.மு.க அரசு மருத்துவம், பொறியியல் கல்வியை இந்தக் கல்வி ஆண்டு 1996-97 முதல் தமிழில் கொண்டு வந்திருக்கிறது.
பட்டிதொட்டி தோறும் பால்மணம் மாறாத பிஞ்சுகளுக்கு ஆடுகளுக்கு மாட்டியிருக்கிற வேலித்தடுப்பு போன்று ஒரு டை, காலணி, (ஷூ).
ஆனால் தமிழினத்தின் தனித்தன்மையை சகல துறைகளிலும அழிக்க, குழி தோண்டி புதைக்க தமிங்கில இனப் பிரிவினர் முயற்சி எடுத்து வருகின்றனர். கடந்த ஐம்பதாண்டுகளில் கடின உழைப்பால் பெற்ற பலனை ஒரு சில நொடிகளில் அழித்துவிடக் கூடிய அசுர வேகத்தில் இந்த மெட்ரிக்குலேசன், மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
கல்வித் துறையில் இந்த மழலையர் பள்ளிகளும், மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் தமிழினத்தின் அடையாளங்கூடத் தெரியாத அளவிற்கு, எதிர்கால தலைமுறையினரை உருத்தெரியாமல் சிதைக்கும் ஒரு பெரிய இன விரோத யுத்தத்தை மிக அமைதியாக நடத்தி வருகின்றன.
புற்றீசலாகப் பெருகிவரும் மழலையர் – மெட்ரிக் பள்ளிகள்
கடந்த சில ஆண்டுகளில் மழலையர் பள்ளிகள் புற்றீசலாகப் பெருகி எண்பத்தி ஐந்தாயிரத்தை எட்டிவிட்டது. பட்டிதொட்டி தோறும் பால்மணம் மாறாத பிஞ்சுகளுக்கு ஆடுகளுக்கு மாட்டியிருக்கிற வேலித்தடுப்பு போன்று ஒரு டை, காலணி,(ஷூ). நடை உடையில் மட்டுமல்ல, சிந்தனையை இழக்கச் செய்யும் மிகக்கொடிய, அறிவுபூர்வமற்ற, இயற்கைக்கு விரோத அமைதித் தாக்குதல் ஏறத்தாழ ஒரு கோடி சிறார்கள் மீது தொடுக்கப்பட்டு வருகிறது.
இளம் தலைமுறையினர் தமிழே தெரியாமல் ஆங்கிலம், இந்தியில் கல்வியூட்டி வளர்க்கப்படுகிறார்கள்.
இந்த மம்மி,டாடி கலாச்சாரம் சிறுவயதிலேயே எதிர்காலத் தலைமுறையினரை பிறந்த மண்ணிலேயே தாய் மொழி, தமிழ் பண்பாடு, சொந்த அடையாளங்களை இழக்கச் செய்து தமிழினத்திற்கு எதிராக உருவாக்கும் விசச் செயலாகும். வேறு வழி இல்லை என்று விபரம் அறியாத பெற்றோர்களும், படித்த மக்களில் ஒரு பிரிவினரும் இதை ஏற்கவேண்டிய நிலை உருவாகி விட்டது.
தமிழகத்தில் ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் உள்ளன. 1980-க்கு பிறகு எண்ணிக்கை பதினைந்து மடங்காக அதிகரித்து இருக்கிறது. இந்த 1500 மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் குறைந்தது ஐநூறு மாணவர்கள் எனில், ஏழரை லட்சம் இளம் தலைமுறையினர் தமிழே தெரியாமல் ஆங்கிலம், இந்தியில் கல்வியூட்டி வளர்க்கப்படுகிறார்கள்.
மதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்பதால் பயிற்று மொழி ஆங்கிலம். அதோடு மொழிப் பாடப் பிரிவு ஒன்று மற்றும் இரண்டில் ஆங்கிலம் மற்றும் இந்திக்கே அதிக முக்கியத்துவம் தர்ப்படுகிறது. பெயரளவில் பத்தாம் வகுப்பு அரசு தேர்வுக்காக தமிழ் ஒரு பாடமாக இருந்து வருகிறது.
இத்தகைய மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் தமிழ் மட்டுமல்ல, தமிழாசிரியர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள். கல்வித் தகுதியும், இருபதாண்டுகள் ஆசிரியர் அனுபவமும் அதே பள்ளியில் பத்தாண்டுகள் துணை முதல்வர் என்ற அனுபவமும் இருந்த போதிலும் தமிழாசிரியரை ஆங்கில வழிப் பள்ளிக்குத் தலைமையாசிரியராக போடுவது எப்படி என்று புறக்கணிக்கிறார்கள்.
கேட்டால் ‘’இது என்ன அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளியா, அரசு விதிகளை ஏற்க? மெட்ரிகுலேசன் பள்ளிகள் சுயநிதிப் பள்ளிகள். அரசு ஒரு நயா பைசாகூட தருவதில்லை. இதில் அரசு தலையிட என்ன இருக்கிறது’’ என்கிறது மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் நிர்வாகம்.
மெட்ரிக் பள்ளிகளின் சுரண்டல் கொள்ளை
சுயநிதியைக் கொண்டு கல்விக்காக செய்துவரும் சேவை என்று சொல்லிக் கொண்டு, லட்சம் லட்சமாக பணம் சம்பாதிக்க மிகவும் லாபகரமான தொழில் வணிக நிறுவனமாக தமிழக மெட்ரிக்குலேசன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மெட்ரிக்குலேசன் வணிக நிறுவனங்கள் ஆங்கில மோகம் கொண்ட, நல்ல வருவாய்கொண்ட நடுத்தர பிரிவினரின் பிள்ளைகளுக்காகவே பள்ளியை நடத்தி வருகின்றன. சுயநிதியைக் கொண்டு கல்விக்காக செய்துவரும் சேவை என்று சொல்லிக் கொண்டு, லட்சம் லட்சமாக பணம் சம்பாதிக்க மிகவும் லாபகரமான தொழில் வணிக நிறுவனமாக தமிழக மெட்ரிக்குலேசன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
நடுத்தர மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒரு பையனுக்கு ஆண்டுக்கு பத்து முதல் பதினைந்தாயிரத்தை கறந்து விடுகின்றன. இப்பள்ளிகளை கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மக்கள் திரும்பிக்கூடப் பார்க்க இயலாது.
மிக உயர் வருவாய் பிரிவினருக்கு ஊட்டி, கொடைக்கானல், டூன் போன்ற இடங்களில் சி.பி.எஸ்.சி பள்ளிகள். நடுத்தர வருவாய் பிரிவினருக்கு இந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகள். ஏழை எளிய மக்களுக்கு அரசு மற்றும் கார்ப்பரேஷன் பள்ளிகள்.
திட்டமிட்டே மிக உயர் வருவாய் பிரிவினருக்கு ஊட்டி, கொடைக்கானல், டூன் போன்ற இடங்களில் சி.பி.எஸ்.சி பள்ளிகள். நடுத்தர வருவாய் பிரிவினருக்கு இந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகள். ஏழை எளிய மக்களுக்கு அரசு மற்றும் கார்ப்பரேஷன் பள்ளிகள் என்ற நிலை எழுதப்படாத விதியாகி விட்டது.
இத்தகைய மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் கலை, அறிவியலைப் படித்த வேலையற்ற பட்டதாரிகள், பெண்கள் மிகக் கீழ்த்தரமான முறையில், எந்தவித விதிமுறைகளும் இன்றி மிகக் குறைந்த சம்பளத்திற்கு மூளை உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். ஏறத்தாழ தமிழகத்தில் இருபது முதல் முப்பதாயிரம் பட்டதாரிகள் இத்தகைய பள்ளிகளில் கொத்தடிமைப் பட்டதாரி ஆசிரியர்ளாக இருந்து வருகின்றனர்.
+2 முடித்துவிட்டு இரண்டாண்டுகள் பட்டய (டிப்ளமோ) ஆசிரியர் கல்வி படித்தவர்கள் அரசு பள்ளிகளில் வேலைக்குச் சேர்ந்த இரண்டாண்டுகளில் நாலாயிரத்து ஐநூறு ஊதியமாகப் பெறுகிறார்கள். ஆனால் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில், எம்.ஏ, எம்.எஸ்.சி, பி.எட், எம்.எட், எம்.பில் என்று ஒரு மைல் நீளத்திற்குப் படித்தவருகளும் பத்தாண்டுகள் பணிபுரிந்தாலும் பெரும்பான்மையான பள்ளிகளில், ஆயிரம் அல்லது இரண்டாயிரம் மட்டுமே ஊதியமாகப் பெறுகிறார்கள்.
எந்தவித படிப்புமே இல்லாமல் ஒரு ஆசாரி, ஒரு கொத்தனார், ஒரு மெக்கானிக் மாதம் மூவாயிரம் –ஐந்தாயிரம் சம்பாதிக்கும்போது, இந்த பட்டதாரிகள் கூட்டம் மட்டும் கோட், சூட், டை என்று வேடமிட்டும், சம்பளமோ ஆயிரம் இரண்டாயிரத்தை தாண்டாத நிலை நிலவுகிறது.
அரசு தொடக்கப்பள்ளி ஒன்றின் அவலம். இதில் பயிலும் சிறுவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை.
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒரு மாணவனிடம் ஓராண்டுக்கு பத்து முதல் பதினைந்தாயிரத்தை வசூல் செய்கிறது. ஆசிரியர் மாணவர் விகிதமோ ஒன்றுக்கு நாற்பது, ஐம்பது என்ற அளவில் உள்ளது. குறைந்தது ஐநூறு மாணவர்கள் எனில் நிறுவன வருவாயோ ஐம்பது லட்சம், ஆசிரியர்களுக்கான ஊதியமோ 750 -1500 வரைதான். பத்து, பதினைந்து ஆசிரியர்கள் என்றாலும் ஊதியச் செலவு ஒன்றரை முதல் இரண்டரை லட்சம்தான். இதர செலவு பத்து லட்சம் என்றாலும் நிறுவனத்திற்கு முப்பது லட்சத்திற்குக் குறையாமல் லாபம் கொட்டுகிறது.
இந்த லாபத்தைக் கொண்டு ஆண்டுக்காண்டு புதிய கிளைகள், பேருந்துகள், கட்டிடங்கள், வேன்கள், நிலம் ரியல் எஸ்டேட் வீடு என்று சொத்து சேர்த்து பகற் கொள்ளையடிக்கிறார்கள்.
ஆனால் இந்த லாபத்திற்கான பிரதான உழைப்பாளர்களான ஆசிரியர்களுக்கு எந்தவித வேலை உத்திரவாதமோ, உரிய ஊதியமோ, அரசு ஊழியரைப் போன்ற சலுகையோ எதுவுமின்றி முப்பதாயிரம் ஆசிரியர்கள் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
வேலை உத்திரவாதம், ஊதியம், இதர சலுகைகள் என்ற பிரச்சனை வரும் என்பதால் பல மெட்ரிக்குலேசன் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஆசிரியர்களை எடுப்பார்கள். இறுதியில் போகச் சொல்லி வடுவார்கள். கோடை விடுப்புகால ஊதியம் கிடையாது. மீறிப் பேச,கேட்க அவர்களுக்கான சங்கமோ, அமைப்போ கிடையாது. அப்படி அவர்கள் யோசித்தாலே வேலை கிடையாது என்ற கொடுமை நிலவுகிறது, இந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகளில்.
சில மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் வேலைக்கான புது உத்தரவும், மே மாதத்தில் வேலையிலிருந்து விடுவித்ததற்கான கடிதமும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பூர்த்தி செய்யப்படாத ஊதிய கணக்கு நோட்டில் கையெழுத்து வாங்கி விடுவர். கையிலோ குறைந்த ஊதியம் கொடுக்கப்படும். கணக்கில் வேறொன்று இருக்கும். சில ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெற்ற வேலைக்கான கடிதங்கள் பத்து, பதினைந்து வைத்திருக்கிறார்கள்.
மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படித்த வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பாகப் பெண்கள், அதே ஊரைச்சார்ந்தவர்கள், அழகான, திறமையும் அனுபவமும் திறமையும் கொண்டவர்களை அதிகமாக ஆசிரியர்களாக அமர்த்தி கொள்கிறார்கள். காரணம், பெண்கள் சொன்னபடி செய்வார்கள். எதிர்த்து ஏன், எதற்கு என்று கேட்க மாட்டார்கள். கொடுக்கிற சம்பளத்தைப் பெற்றுக் கொள்வார்கள். உரிமை, போராட்டம் சங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மீறி யாரேனும் பேசினால் அவர்களின் நடத்தை சரியில்லை என்று எளிதில் வெளியேற்றி விடலாம். மேலும் பாலியல் அயோக்கியத்தனத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கருதுகிற மோசமான நிறுவனங்களும் நிறைய இருக்கின்றன.
திருச்செங்கோடு பெண்களை இழிவுபடுத்துவது எது? மாதொருபாகன் கூறும் மரபா? ஆணாதிக்க – கவுண்டர் சாதிப் பண்பாடா?
மாதொருபாகன் நாவலுக்கு எதிராக கொங்கு வேளாளக் கவுண்டர் சங்கத்தினரும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் இணைந்து அரங்கேற்றிய காலித்தனங்களும், சாதி, மத வெறியர்களுடன் கைகோர்த்து நின்று மக்கள் முதல்வர் அம்மாவின் அரசு, பெருமாள்முருகனுக்கு எதிராக நடத்திய கட்டைப் பஞ்சாயத்தும் அப்பட்டமான பாசிச நடவடிக்கைகள் என்பதை விளக்கத் தேவையில்லை. கொங்கு வேளாளக் கவுண்டர் சாதி உணர்விலிருந்து பிறந்து, ஆர்.எஸ்.எஸ். துணையுடன் திருச்செங்கோடு இந்துக்களின் உணர்வாக மாற்றப்பட்ட இந்த ‘மானப்பிரச்சினையில்’ திருச்செங்கோடு பகுதியில் நடத்தப்பட்ட கடையடைப்பும், ‘போராட்டங்களும்’ தவிர்க்க இயலாமல் நமக்கு வடிவேலுவின் பிரபல நகைச்சுவைக் காட்சியொன்றைத்தான் நினைவூட்டுகின்றன.
மாதொருபாகன் நாவலை எழுதிய எழுத்தாளர் பெருமாள்முருகன்
“கடவுளைக் காட்டுகிறேன்” என்று வசூல் வேட்டை நடத்திய வடிவேலுவிடம் பணத்தைக் கொடுத்த மக்கள், “கடவுளைக் காட்டு” என்று கேட்க, “யாருடைய பெண்டாட்டியெல்லாம் பத்தினியோ, அவிங்க கண்ணுக்கு மட்டும்தான் கடவுள் தெரிவார்” என்று சொல்லிவிட்டு, பக்திப் பரவசத்துடன் இறைவா என்று கூவியபடியே வானத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வார் வடிவேலு. உடனே மானத்துக்கு அஞ்சி எல்லோரும் வானத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வார்களே, அந்த நகைச்சுவைக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது. அந்தப் படத்தின் பெயர் பண்ணாரி அம்மன் என்று நினைவு! இதே கொங்கு வட்டாரத்தின் தெய்வம்தான்!
“நம்ம பெண்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்று பெருமாள்முருகன் எழுதிவிட்டான், கடையை அடைக்கிறாயா, இல்லையா?” என்று சாதிச் சங்கத்துக்காரன் கேட்கும்போது, பொண்டாட்டி பத்தினியாக இருக்கும்பட்சத்தில் யாரொருவனும் கோவப்பட்டு கடையை அடைத்துத்தானே ஆகவேண்டும். இல்லையென்றால் பெண்டாட்டியின் கற்பைச் சங்கத்துக்காரன் அல்லவா சந்திக்கு இழுப்பான்! நாவலுக்கு எதிராக திருச்செங்கோட்டில் உருவாக்கப்பட்ட பொதுக்கருத்து என்பது இப்படித்தான் உருவாகியிருக்கிறது, அல்லது உருவாக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்திய தொலைக்காட்சி விவாதமொன்றில் கவுண்டர் சங்கத்துக்காரர் (எழுச்சி பெற்ற இந்துவாகவும் இருக்கலாம்) ஒருவர் இப்படி பேசினார். “நாலு வருசமாக கொழந்தை இல்லாத தம்பதி. பொண்ணுக்கு திருச்செங்கோடு. திருவிழாவுக்குப் போய்ட்டு வந்ததும் கர்ப்பமாயிருக்கு. புருசன் சந்தேகப்படுறான். இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்” என்று கோபாவேசமாக கேட்டார். ஒரு கதையைப் படித்துவிட்டு 4 வருசம் குடும்பம் நடத்திய மனைவியின் நடத்தையை சந்தேகப்படுகிறான் கணவன் எனும்போது, அவன் மீதுதான் கோபப்பட வேண்டும் என்று அந்த எழுச்சி பெற்ற இந்துவுக்குத் தோன்றவில்லை. கர்ப்பிணி சீதையைச் சந்தேகப்பட்டு காட்டுக்குத் துரத்திய ராமனைத் தேசிய நாயகனாகக் கொண்டாடும் கூட்டமல்லவா?
ஒருமுறை நாகப்பட்டினத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டின் போது பெரியாரை அவமானப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, “நாகம்மை தேவடியாள்” என்று ஊர் முழுவதும் சுவரில் எழுதியிருந்தார்களாம் ஆஸ்திக மெய்யன்பர்கள். இதைக் கண்டு கொதித்துப்போன தொண்டர்களை அடக்கிய பெரியார், “நாகம்மை பத்தினி என்று கூறக் கேட்டால் மகிழ்ச்சி அடைபவனாக இருந்தால்தானே, அவரைத் தேவடியாள் என்று சொல்வதைக் கேட்டு நான் கோபப்படுவதற்கு? போய் வேலையைப் பாருங்கள்!” என்றாராம். அப்படிப்பட்ட பெரியார் பணியாற்றிய மண்ணில்தான் இன்று இத்தகைய சாதி, மதவெறிச் சக்திகள் ஆட்டம் போடுவதைப் பார்க்கிறோம். நடைபெற்ற செய்திகள் வாசகர்களுக்குத் தெரியுமாதலால் விசயத்துக்கு வருவோம்.
சாதி, மதவெறியர்களுடன் கைகோர்த்துக் கொண்டு மக்கள் முதல்வர் அம்மாவின் அரசு, எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்திய கட்டப் பஞ்சாயத்து.
சாதிய சமூகத்தில் குழந்தைப் பேறின்றித் தவிக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் துயரத்தைப் பேசுகிறது மாதொருபாகன் கதை. சாதிய, ஆணாதிக்க சமூக அமைப்பில் குழந்தையில்லாத பெண்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் நாம் அறியாததல்ல. மலட்டுத்தன்மை ஆணுக்கா, பெண்ணுக்கா என்று அறிய முடியாத சவுகரியத்தால், சமீப காலம் வரையில் பெண்தான் மலடி எனத் தூற்றப்பட்டாள். கணவன் இரண்டாம் தாரம் கட்டி விடுவானோ என்று பெண் அஞ்சவேண்டியிருந்தது. ஆணோ, தான் ஆண்மை உள்ளவன் என்று நிரூபிக்கவேண்டியிருந்தது. இந்தப் பின்புலத்தில் பெண்ணினத்துக்கு இழைக்கப்படும் அநீதிகள் எண்ணிலடங்காதவை. கேட்கக் கூசுபவை.
மேற்கூறிய கதையிலும்கூட பொன்னாள் என்ற அந்தப் பெண் மலடி என்ற துயரத்துக்கு ஒரு தீர்வு தேடித்தான் திருவிழாவுக்குப் போகிறாளேயன்றி, காமக் கிளர்ச்சிக்கு ஆட்பட்டுச் செல்லவில்லை. அதுவும் அவளாகச் செல்லவில்லை. குடும்பத்தால் அனுப்பப்படுகிறாள். கதையின்படி திருவிழாவுக்கு வருகின்ற இளைஞர்கள்தான், பெண்களைக் குறி வைத்து வருகிறார்கள். பொறுக்க வருகிறார்கள் என்றும் சொல்லலாம்.
சொல்லப்போனால், “எங்க ஊர் (அல்லது சாதி) ஆண்களை பெருமாள்முருகன் பொம்பள பொறுக்கிகளாக எப்படிச் சித்தரிக்கலாம்?” என்றுதான் ஈசுவரன் கட்சிக்காரர்கள் கோபப்பட்டிருக்க வேண்டும். அப்படி ஒரு ஆள் கூடக் கோபப்படவில்லை என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விசயம். ஒரு ஆம்பிளை தனது ஆம்பிளைத்தனத்துக்காகப் பெருமைப்படத்தனே முடியும்? ஒருவேளை, “நாவல் கூறும் காலத்தில் நாம் வாழாமல் போனோமே” என்று ஏங்கியும் இருக்கலாம்.
மறைந்த ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்த குரு கோல்வால்கர்
இவர்களுடைய கவலை தங்கள் தூய்மை பற்றியதோ, தங்கள் குலப் பெண்டிரின் தூய்மை பற்றியதோ அல்ல. தங்கள் சாதியின் தூய்மை பற்றியது.
“தன்னுடைய மனைவி யாரேனும் ஒரு தீண்டாச் சாதிக்காரனுடன் சேர்ந்து விட்டால் என்ன செய்வது?” என்பதுதான் நாவலில் அந்தப் பெண்ணுடைய கணவன் வெளிப்படுத்தும் கவலை. ஈசுவரன் கட்சிக்காரர்களுடைய கவலையும் அதுதான். அதனால்தான் ஆதாரம் கேட்கிறார்கள். திருவிழாவில் அப்படி ஒரு மரபு இருந்தது என்று நிரூபிக்கச் சொல்வதன் மூலம் சாதித்தூய்மை குறித்து தாங்கள் பரப்பி வரும் பொமைகளை உண்மையெனக் காட்ட முயற்சிக்கிறார்கள்.
“திருச்செங்கோட்டில் அப்படி ஒரு மரபு இருந்ததற்கு என்ன ஆதாரம்?” என்று கேட்டு கொந்தளிப்பவர்கள், தங்களது சாதியின் வரலாற்றை, சாதித் தூய்மைக்கான ஆதாரத்தை மரபணுச் சோதனை மூலம் நிரூபித்துக் காட்டுவார்களா? நிரூபிக்க முடியாது. ஆகவே, சாதியின் தூய்மையை எங்கே, எப்படித் தொலைத்தார்கள் என்பதற்கு அவர்கள்தான் விளக்கமளிக்க வேண்டும்.
தமிழகத்திலும் இந்தியாவிலும் உள்ள இத்தனை ஆயிரம் சாதிகளில், ஒவ்வொரு சாதியும் எப்படி, எந்த தேதியில் உருவாகின? அவற்றின் வரலாறு என்ன? யாராவது சொல்ல முடியுமா? ஆரிய – திராவிட இனக்கலப்பு ஏற்பட்டே நூற்றாண்டுகள் பல கடந்து விட்டன. வரலாறு முழுவதும் பல்வேறு போர்களில் கவர்ந்து கொண்டு செல்லப்பட்ட பெண்கள், பஞ்ச காலங்களில் இடம்பெயரும்போது ஏற்பட்ட சாதிக்கலப்புகள், சாதிய சமூகத்தின் ஜனநாயக மறுப்பின் காரணமாக இன்றைக்கும் கிராமப்புறங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் கள்ள உறவுகள்… என சாதித்தூய்மை என்ற பித்தலாட்டத்தை நிராகரிப்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. அவ்வளவு ஏன், வெள்ளைக்காரன் நம் நாட்டை ஆண்ட ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள்ளேயே கலப்பு ஏற்பட்டு, ஆங்கிலோ இந்தியர்கள் என்றொரு புதிய பிரிவினர் நாடு முழுவதும் உருவாகிவிட்டார்கள் எனும்போது, இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் நடந்திருக்க கூடிய சாதிக்கலப்பு, இனக்கலப்பு பற்றிச் சொல்லவா வேண்டும்?
சாதித்தூய்மை கிடையாது என்பதும் அதை நிலைநாட்ட முடியாது என்பதும் அவர்களுக்கும் தெரியும். அதனால்தான் பிளேட்டைத் திருப்பிப் போட்டு தமது பெண்களின் கற்புக்காகக் குமுறிக் கொந்தளிக்கிறார்கள். கற்பின் பின்னால் ஒளிந்து கொண்டு இல்லாத சாதித்தூய்மை குறித்து தம் சாதிக்காரர்களுக்கு வெறியூட்டுகிறார்கள். வேறு எந்த வழியிலும் சொந்த சாதி உழைக்கும் மக்களின் மதிப்பையோ நம்பிக்கையையோ பெற முடியாத இந்த சாதிச் சங்கத் தலைமைகள், தமது சாதியினர் மீது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ளப் பயன்படுத்தும் தந்திரம் இது. இவர்களுடைய கவலை கற்போ, தூய்மையோ அல்ல. ஆதிக்கம்!
எம்.எஸ். சுப்புலட்சுமி கதையை எடுத்துக் கொள்வோம். அவர் இசைவேளாளர் சமூகத்துப் பெண் என்பதற்காக துவக்க காலத்தில் அவரை மட்டம் தட்டிய பார்ப்பனர்கள், பிற்காலத்தில் அவர் ஒரு பார்ப்பனரை மணந்து, பார்ப்பனியத்துக்குத் துதி பாடி, மன்னனைவிடப் பெரிய ராஜவிசுவாசியாகத் தன்னை நிரூபித்துக் கொண்டதால், அவருக்கும் மடிசார் கட்டிவிட்டு, மாமி கணக்கில் சேர்த்து விட்டார்கள்.
வன்னிய சாதியில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த திவ்யாவைப் போன்றவர்களுக்கு சாதி நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகத் தெரிகிறது. ஆனால் வன்னியர், கவுண்டர், தேவர் உள்ளிட்ட ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த கல்வி வள்ளல்கள், கந்து வட்டிக்காரர்கள், காண்டிராக்டர்கள், அதிகார வர்க்கத்தினர், நீதிபதிகள், அறிவுஜீவிகள் ஆகியோருக்கு தங்களுடைய சமூக, பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள சாதி தேவைப்படுகிறது. அதனால்தான் மாதொருபாகன் நாவல் தமிழில் வெளிவந்த போது எழும்பாத பிரச்சினை, ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தவுடன் வந்திருக்கிறது. எங்கேயாவது சிலிக்கான் வேலியில் செட்டில் ஆகியிருக்கும் சின்னக் கவுண்டர்களின் மனம் புண்பட்டிருக்கும்.
நத்தம் காலனியைக் கொளுத்திய கையோடு, சாதிக் கட்சிகளின் கூட்டணியை உருவாக்கி திராவிட இயக்கத்தை ஒழிக்கப்போவதாக ராமதாசு அறிவித்தபோது, அதற்கு முந்திக்கொண்டு ஆதரவு கொடுத்தது கொங்கு வேளாளக் கவுண்டர்களின் கட்சி. அ.தி.மு.க.-வின் ஓட்டு வங்கியும், ஆர்.எஸ்.எஸ்.-ன் செல்வாக்குப் பகுதியும், தமிழகத்திலேயே அதிக கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிக்குவளை வைத்திருப்பதும் கொங்கு மண்டலம்தான். அதே நேரத்தில் “வன்கொடுமைச் சட்டத்தால் தாங்கள் அநியாயமாகப் பாதிக்கப்படுவதால், அந்த சட்டத்தையே நீக்க வேண்டும்” என்று மூர்க்கமாக குரல் கொடுப்பதும் இக்குறிப்பிட்ட சாதியினர்தான். திருச்செங்கோட்டில் பெருமாள்முருகனுக்கு எதிராக அரசே முன்நின்று நடத்திய கட்டப் பஞ்சாயத்தையும், கடையடைப்பு போன்ற நடவடிக்கைகளையும் இந்தப் பின்புலத்திலும் புரிந்து கொள்ளவேண்டும்.
மீண்டும் மாதொருபாகன் கதைக்கு வருவோம். கடந்த 20 ஆண்டுகளாக நம் நாட்டின் மீது திணிக்கப்பட்டு வரும் “தொழில் வளர்ச்சியும்” அது தோற்றுவித்திருக்கும் வாழ்க்கையும், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரிடையே குழந்தைப் பேறின்மையை அதிகரித்திருக்கிறது. கருத்தரிப்பதற்காக மாதொருபாகன் நாயகியைக் காட்டிலும் கொடிய துன்பங்களுக்குப் பெண்கள் ஆளாக்கப்படுகிறார்கள். கருத்தரிப்பதற்காக திருவிழாவுக்குப் போன பொன்னாள் அனுபவிக்கும் பதற்றத்தை விடவும் அதிகமான பதற்றத்தை, தங்கள் சொந்தப் படுக்கையறையிலேயே அனுபவிக்கிறார்கள் பெண்கள்.
குழந்தைப் பேறின்மைக்கு ஆண் மலட்டுத்தன்மையும் குறிப்பிடத்தக்க காரணமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்வது? அறிவியல் முன்னேறிவிட்டதால் திருச்செங்கோடு திருவிழாவுக்குப் பதிலாக விந்து வங்கிகள் வந்து விட்டன. இந்த வங்கிகளில் தமது விந்துவை காசுக்கு விற்பவர்கள் பெரும்பாலும் மாணவர்கள், இளைஞர்கள். விந்துவை வாங்க வருபவர்கள் (அதாவது பெண்ணின் கணவன் மற்றும் குடும்பத்தினர்) விந்துவுக்குரிய இளைஞனின் நிறம், உயரம், ஆரோக்கியம், கல்வித் தகுதி ஆகியவற்றை மட்டுமல்ல சாதியையும் கேட்கிறார்கள். தன்னுடைய சாதிக்காரனின் விந்துவாக இருக்கவேண்டும் என்பதை உத்திரவாதம் செய்து கொள்கிறார்கள் என்கிறார், பாட்னா நகரில் ஃபுரோசன் செல் (Frozen cell) என்ற விந்து வங்கியை நடத்தும் டாக்டர் சவுரவ் குமார். “இனிமேல் பிராமின், பூமிகார், யாதவ், ராஜ்புத் என்று சோதனைக் குழாகளில் எழுதி ஒட்ட வேண்டியதுதான் பாக்கி. அந்த அளவுக்கு பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்” என்கிறார் இன்னொரு மகப்பேறு மருத்துவர். (செய்தி-பிறப்பதற்கு முன்னரே தொடங்குகின்றன சாதிப்பிரிவுகள், நியூயார்க் டைம்ஸ், ஜுலை 12, 2012)
இந்தக் கேவலத்தைக் காட்டிலும், மாதொருபாகன் கூறும் அந்தத் திருவிழா மரபு மிகவும் நாகரிகமான வழிமுறையாகத் தெரியவில்லையா? “இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ?” என்று நவீன அறிவியல் வளராத அந்தக் காலத்தில் கேட்டார் சிவவாக்கிய சித்தர். அறிவியலின் துணை கொண்டு சாதியை நிலைநாட்டிக் கொள்ள விரும்பும் வெறியர்கள், “இலக்கமிடு” என்று சமூகத்தை மிரட்டுகிறார்கள். சாதி வாரியாக கல்லூரி தொடங்கியிருக்கும் இந்த வர்க்கம், விந்து வங்கிகளையும் சாதிவாரியாகத் தொடங்க வாய்ப்பிருக்கிறது.
இப்பிரச்சினையில் கொங்கு வேளாளக் கவுண்டர் சங்கத்துடன் இராம. கோபாலனும் கைகோர்த்துக் களத்தில் நிற்பதால், மேற்படி பிரச்சினை குறித்து, ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தத் தலைவரான கோல்வால்கர் முன்வைத்திருக்கும் அரிய கருத்தினைக் கூறி இக்கட்டுரையை நிறைவு செய்வோம். குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறை மாணவர்கள் மத்தியில், தனது ஆரிய இனவெறிக் கோட்பாட்டை முன்வைத்து டிசம்பர் 17, 1960 அன்று கோல்வால்கர் ஆற்றிய உரையின் பகுதி இது.
“இன்று கலப்பினங்களை உருவாக்கும் சோதனைகள் விலங்குகளின் மீதுதான் செய்யப்படுகின்றன. அத்தகைய சோதனைகளை மனிதர்கள் மீது செய்து பார்க்கும் தைரியம், நவீன விஞ்ஞானிகள் என்கிறார்களே, அவர்களுக்குக்கூட இல்லை. இன்று மனிதர்களிடையே கலப்பினத்தை நாம் காண்கிறோம் என்றால், அது அறிவியல் சோதனையின் விளைவல்ல, கீழ்த்தரமான காமத்தின் விளைவு. இந்த விசயத்தில் நமது முன்னோர்கள் செய்திருக்கும் சோதனைகளை நாம் பார்ப்போம். கலப்பினச் சேர்க்கை மூலம் மனித இனத்தை மேம்படுத்தும் பொருட்டு, வடநாட்டைச் சேர்ந்த நம்பூதிரி பிராமணர்கள் கேரளத்தில் குடியமர்த்தப்பட்டனர். நம்பூதிரி குடும்பத்தின் முதல் மகன் வைசிய, சத்திரிய அல்லது சூத்திரப் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்ற விதி அன்று உருவாக்கப்பட்டது. இதைவிடத் தைரியமான இன்னொரு விதி என்னவென்றால், எந்த வர்க்கத்தைச் (சாதியையும் மொ-ர்) சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும். அதற்குப் பின்னர்தான் அவளுடைய கணவனின் மூலம் அவள் மற்ற பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. இன்றைக்கு இந்தப் பரிசோதனையை ஒழுக்கக்கேடு என்று கூறுவார்கள். இந்த விதி முதல் குழந்தைக்கு மட்டும்தான் என்பதால் அதனை ஒழுக்கக்கேடு என்று கூற முடியாது. (எம்.எஸ்.கோல்வால்கர், ஆர்கனைசர், ஜனவரி-2, 1961, பக்கம்-5)”
(2004 ஆம் ஆண்டில் கோல்வால்கரின் எழுத்துகளை 12 தொகுதிகளாக வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்., 5-வது தொகுதியில் 28-32 பக்கங்களில் இடம்பெற்றுள்ள இந்த உரையிலிருந்து மேற்கண்ட வரிகளை சத்தம் போடாமல் நீக்கிவிட்டது. ஆனால் என்ன செய்வது, நூலகங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-ன் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் பத்திரிகையை இதுவரை நீக்க முடியவில்லை)
கோல்வால்கர் குறிப்பிடும் இழி மரபை ஒழிக்கத்தான் பெரியார் போராடினார். பெரியாரையும் திராவிட இயக்க மரபுகளையும் ஒழிக்கவேண்டும் என்பதைத் தமது கொள்கையாக கொண்டிருக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் சங்கத்தினரும் பிற சாதி சங்கத்தினரும், பா.ஜ.க.-வுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். வெறும் கூட்டணி போதுமா? கோல்வால்கர் கூறும் நமது பெருமைமிகு ஹிந்து பாரம்பரியத்தையும், மோடியால் விதந்தோதப்படும் ஹிந்து ஞானமரபையும் பின்பற்ற வேண்டாமா?
மற்றெல்லா வகையிலும் பார்ப்பனமயமாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் இவர்கள், கோல்வால்கர் சொல்லும் இந்த வழியைக் கடைப்பிடிப்பதற்கு மட்டும் கூச்சப்படத் தேவையில்லை. கோல்வால்கரின் மேற்கண்ட உரையை ஆயிரக்கணக்கில் அச்சடித்து, திருச்செங்கோடு மக்களிடையே வழங்கட்டும். எந்த மரபு தங்களை இழிவு செய்கிறது என்பதை அம்மக்கள் அதற்குப் பின்னர் தீர்மானிக்கட்டும்.
– மருதையன்
கருத்துரிமையும் கருத்து கூறாமலிருக்கும் உரிமையும்
பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்த பல இலக்கியவாதிகள், சாதிய, இந்துவெறி அமைப்புகளின் வன்முறை குறித்து மிகவும் மேலோட்டமான கண்டனத்தையே தெரிவித்திருந்தனர். சாதித் தூய்மை என்ற கருத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் சாதிவெறியையும், இந்து மதவெறியையும் நேருக்கு நேர் தாக்கி அம்பலப்படுத்தாமல் ஒளிந்து கொள்ள விரும்பியவர்களுக்கு கருத்துரிமை என்பது பாதுகாப்பான கவசமாகப் பயன்பட்டது. அதாவது, பெருமாள்முருகனின் கருத்துரிமைக்காக குரல் கொடுத்த அதே நேரத்தில், தங்களுடைய கருத்து கூறாமல் இருக்கும் உரிமையை அவர்கள் பாதுகாத்துக் கொண்டார்கள் என்றே கூறவேண்டும்.
இலக்கியத்தளத்துக்கு வெளியே அரசியல்ரீதியில் சாதி ஒழிப்பு, பொதுவுடைமைக் கருத்தியலில் இயங்குபவர்கள்தான், மாதொருபாகன் என்ற இலக்கியம் தோற்றுவித்த சமூக எதிர்விளைவுக்கு முகம் கொடுத்தார்கள். தங்களுக்கு எதிரான எந்த உண்மையையும் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சாதி, மதவெறியர்கள் ஆர்ப்பரிக்கும் சூழலிலும், இலக்கியவாதிகளுக்கு அரசியல் கூடாது எனப் பேசுவது, அவர்களுக்கு வழங்கும் மறைமுக ஆதரவு என்பதைப் படைப்பாளிகள் புரிந்து கொள்ளவேண்டும்.
கடந்த மே, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மோடியின் பா.ஜ.க ‘வரலாறு காணாத’ ‘மகத்தான’ வெற்றியை சாதித்ததாக ஊடகங்கள் வியந்தன. இப்போது நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஊடகங்களின் வியப்பு ஆம் ஆத்மிக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. கூடவே பா.ஜ.க மற்றும் மோடியை கழுவி ஊற்றாதவர்கள் பாக்கி இல்லை.
மும்பையில் ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்
“ஆம் ஆத்மி கட்சிதான் வெற்றிபெறும்” என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும், தேர்தலன்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளும் தெரிவித்தன. ஆனால் மொத்தமுள்ள 70 இடங்களில் 67-ல் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதும், பதிவான வாக்குகளில் 54.3% அக்கட்சிக்கு விழுந்ததையும் யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் வெறுத்தனர். முதலாளிகளோ சிங்கின் வேகம் பத்தாது என்பதோடு அவர் மக்களிடம் பெயரிழந்துவிட்டார் என்று மோடியை அழைத்து வந்தனர். சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பதிவான வாக்குகளில் 46.63%-ஐ பெற்று டெல்லியின் 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது பா.ஜ.க. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் வாக்குவீதம் 14.4 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 32.20% ஆகக் குறைந்திருக்கிறது. 2014 தேர்தலுக்காக கட்டியமைக்கப்பட்ட மோடி அலை என்ற பிம்பம் புஸ்வாணமானதை இந்த டெல்லி தேர்தல் முடிவுகள் இன்னும் தெளிவாக காட்டுகின்றன.
சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பதிவான வாக்குகளில் 46.63%-ஐ பெற்று டெல்லியின் 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது பா.ஜ.க. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் வாக்குவீதம் 14.4 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 32.20% ஆக குறைந்திருக்கிறது.
தலைநகர் டெல்லியில் வசிக்கும் மக்கள் நாட்டை ஆளும் வர்க்கங்களின் அதிகாரக் கூத்துகளை அணுக்கமாக பார்ப்பவர்கள் என்ற முறையிலும், பெருநகர வாழ்க்கையில், கவனத்தை திசை திருப்பும் சாதி, மத அரசியலுக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன என்ற முறையிலும் மன்மோகன் சிங்கின் அடியொற்றி கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் மோடியின் பொருளாதார கொள்கைகளுக்கான முதல் அடி டெல்லியில் விழுந்திருப்பதில் வியப்பில்லை.
ஏழை உழைக்கும் மக்களுக்கான அரசுப் பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும் புறக்கணிக்கப்பட்டு சீர்குலைந்து, நொறுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவற்றுக்கு அருகிலேயே கண்ணாடியாலும், உலோகத்தாலும் பளபளக்கும் தனியார் பள்ளிகளும் மருத்துவமனைகளும் பணம் படைத்த வர்க்கத்தினருக்கு சேவை செய்து கொண்டிருந்தன.
மேட்டுக்குடி அதிகாரவர்க்கத்தினர் வசிக்கும் புது டெல்லியின் தெருக்கள் மாசு மருவற்று ஜொலிக்கும் போது, பழைய டெல்லியின் குடியிருப்புப் பகுதிகள் குப்பைக் கிடங்குகளாக மாற்றப்பட்டு வந்தன. மின்சாரம் மற்றும் தண்ணீர் வினியோகம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்பதற்கு ரூ 10 லட்சம் விலையில் தனது பெயர் பொறித்த சூட்டை தைத்து போட்டுக் கொண்ட மோடியின் அற்பத்தனம் டெல்லி மக்களின் பொறுமையை முறித்த கடைசி ஊசி என்று வைத்துக் கொள்ளலாம். ரூ 13,500-க்கும் குறைவான மாத வருமானத்தில் காலந்தள்ளும் டெல்லியின் 60% மக்களைப் பொறுத்தவரை மோடியின் 10 லட்ச ரூபாய் சூட்டின் மதிப்பு, போராட்டம் நிரம்பிய அவர்களது 6 வருட உழைப்புக்கு நிகர்.
ரூ 13,500-க்கும் குறைவான மாத வருமானத்தில் காலந்தள்ளும் டெல்லியின் 60% மக்களைப் பொறுத்தவரை மோடியின் 10 லட்ச ரூபாய் சூட்டின் மதிப்பு, போராட்டம் நிரம்பிய அவர்களது 6 வருட உழைப்புக்கு நிகர்.
தனியார்மய, தாராள மய பொருளாதாரக் கொள்கைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏகாதிபத்திய சிந்தனை குழாம்கள் வகுத்துக் கொடுத்த கையேட்டின்படி வேலை செய்து அவர்களது எதிர்ப்பை திரட்டியது ஆம் ஆத்மி கட்சி.
இந்தத் தேர்தல் முடிவு தொடர்பான அலசல்களில் ஆம் ஆத்மியின் வெற்றியின் அடிப்படை டெல்லியின் ஏழை உழைக்கும் மக்கள் என்பதும் பா.ஜ.க மேட்டுக்குடி, ஆதிக்கசாதியினரின் வாக்குகளை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பதும் தெளிவாகின்றன. அடுத்தடுத்து 3 முறை தேர்தல்களில் வெற்றி பெற்று, டெல்லியை 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் இந்தத் தேர்தலில் 8%-க்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது; நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகு வைத்த காங்கிரஸ் டெல்லியிலிருந்தும் துடைத்து எறியப்படுவது உறுதியாகியிருக்கிறது.
மேலும், மோடி பரிவாரத்தின் இந்துமதவெறி அமைப்புகள் சிறுபான்மையினர் மீது தொடுத்த தாக்குதல்கள் பா.ஜ.கவை தோற்கடித்தே தீர வேண்டும் என்ற நிலைக்கு சிறுபான்மை மக்களை தள்ளின. வெற்றி பெறும் குதிரையாக உருவாகி வந்த ஆம் ஆத்மி கட்சிக்கு அந்த வாக்குகள் இயல்பாகவே திரும்பியிருந்தன.
காப் பஞ்சாயத்துகள், லவ் ஜிகாத் மூலம் சாதி, மதவெறி தாக்குதல்கள், கர் வாபசி என்ற பெயரில் சிறுபான்மையினரை கட்டாய மதமாற்றம் செய்யும் நாடகங்கள், சமஸ்கிருதத் திணிப்பு, தேவாலயங்கள் மீது தாக்குதல், ராமனை நம்பாதவர்கள் விபச்சாரிகளுக்கு பிறந்தவர்கள் என்று மத்திய அமைச்சரின் திருவாக்கு, இந்தியா இந்து ராஷ்டிரம் என்று அமைச்சர்கள் அறிவிப்பது என்று அடுத்தடுத்த இந்துத்துவ அரசியல் சவடால்கள் கணிசமான நடுத்தர வர்க்க மக்களை பா.ஜ.கவிடமிருந்து தனிமைப்படுத்தின.
மோடியின் ஆடை அணிகலன்கள் குறித்து நக்கல் அடித்த கையோடு, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் இந்துத்துவ திருவிளையாடல்கள் குறித்தும் அமெரிக்க அதிபர் ஒபாமா வெளிப்படையாகவே எச்சரித்தார். நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் “மோடியின் அபாயகரமான மௌனம்” என்று தலையங்கம் எழுதி மோடி மீதான அமெரிக்காவின் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அமெரிக்க அணு உலைகளை இந்தியாவின் தலையில் கட்ட ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது நிறைவேறிவிட்டது. ஆனால் உலகமயமாக்கத்தின் நடைமுறை வேகத்திற்கு இந்துத்துவத் தாக்குதல்கள் பின்னடைவு ஏற்படுத்தும் என்ற வகையிலும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு மோடியை செல்லமாகக் கண்டிக்கிறது. அதன் பின்னணியில்தான் ஆம் ஆத்மியின் இருப்பு முன்வைக்கப்படுகிறது.
ஆம் ஆத்மி பதவி ஏற்பு விழாவில் ரூ 15-க்கு மலிவு விலை AAP கோலா.
ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலும் மன்மோகன் சிங் பின்பற்றிய, மோடி பின்பற்றும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்களை எதிர்க்கப் போவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கின்றனர்.
மின்சார, குடிநீர் கட்டண கட்டண உயர்வுகள் “தனியார்மயத்தின் விளைவு” என்று அம்பலப்படுத்தாமல், “ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டின் விளைவு” என்று சித்தரித்து, ஒரு குடும்பத்துக்கு மாதம் 20,000 லிட்டர் வரை தண்ணீருக்குக் கட்டணம் இல்லை, மின் கட்டணத்தை பாதியாகக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்றிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.
அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்ற அன்று 20,000 பாட்டில்கள் AAP கோலா இலவசமாக வினியோகிக்கப்பட்டன. “குடிசையில் வசிக்கும் ஒரு டெல்லி குடிமகன் ரூ 35 கொடுத்து கோலா குடிக்க முடியாத நிலை இருக்கிறது. எனவே சாதாரண மக்களுக்கு சேவை செய்ய ரூ 15-க்கு 400 மிலி கோலா என்ற விலையில் AAP கோலாவை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்” என்கிறார் AAP கோலா நிறுவன முதலாளி ஜிதேந்தர் கேஸ்வானி.
ஆம் ஆத்மி கட்சி முன் வைக்கும் பொருளாதார தீர்வுகளும் கேஸ்வானி அளிக்கும் ரூ 15-க்கான AAP கோலா போன்றவைதான்.
AAP கோலாவின் விளம்பர வாசகம், “குடித்து விட்டு உங்கள் உரிமைக்காக போராடுங்கள்” என்பது. ஆம் ஆத்மி கட்சி முன் வைக்கும் பொருளாதாரத் தீர்வுகளும் கேஸ்வானி அளிக்கும் ரூ 15-க்கான AAP கோலா போன்றவைதான்.
அரவிந்த் கேஜ்ரிவால் வழங்கும் மாதம் ஒரு குடும்பத்துக்கு 20,000 லிட்டர் வரை இலவசம் என்ற AAP தண்ணீர், குழாய் இணைப்பு இல்லாத சுமார் டெல்லியின் 3-ல் 1 பங்கு ஏழைக் குடும்பங்களுக்குக் கிடைக்காது. AAP தண்ணீர் திட்டத்திற்கு தகுதி உடைய குடும்பங்களும் 20,000 லிட்டருக்கு ஒரு சொட்டு அதிகமாக பயன்படுத்தினாலும் முழுக் கட்டணத்தையும் கட்ட வேண்டியிருக்கும். தண்ணீருக்கு விலை வைத்து விற்று தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதை கேள்விக்குள்ளாக்காமல், அதற்குள் இலவசத் திட்டம் அறிவிப்பது என்ற “அம்மா” பாணி அரசியலை பார்க்கும் தமிழகத்துக்கு அரவிந்த் கேஜ்ரிவால் புதுசில்லைதான்.
மின்கட்டணத்தை 50% குறைக்க வேண்டும் என்ற அரவிந்த் கேஜ்ரிவால் அரசின் உத்தரவை டெல்லியின் மின்வினியோக நிறுவனங்களான டாடா பவர் மற்றும் அனில் அம்பானிக்குச் சொந்தமான பி.இ.சி.எஸ் யமுனா, பி.இ.சி.எஸ் ராஜ்தானி ஆகியவை எதிர்த்திருக்கின்றன. 2002-ம் ஆண்டிலிருந்து மின் கட்டணங்கள் 70 சதவீதம் அதிகரித்திருக்கும் அதே வேளையில், மின் உற்பத்தியாளரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி வினியோகிக்கும் செலவு 300 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் அதை ஈடுகட்ட மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தாங்கள் கோருவதாக கூறியிருக்கின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலும் மன்மோகன் சிங் பின்பற்றிய, மோடி பின்பற்றும் மறுகாலனியாக்க பொருளாதார கொள்கைகளை எதிர்க்கவில்லை.
கேஜ்ரிவால் அரசு அளிக்கவிருக்கும் மின் கட்டண சலுகைக்கான செலவை அரசே தங்களிடம் கொடுத்து விடும்படி கோருகின்றனர். அதாவது, கேஜ்ரிவால் அறிவித்துள்ள மின்கட்டணக் குறைப்பு என்பதன் பொருள் மக்களின் வரிப்பணத்தை மக்கள் நலன் எனும் பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுப்பதாகும். டெல்லி அரசு, இந்த செலவுகளை சேவை வரி, விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் மக்களிடமிருந்தே வசூலித்துக் கொள்ளும். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மக்கள் பணத்தை பிடுங்கி, அதிலிருந்து இலவசப் பொருட்களை வாரி வழங்குவதைப் போல மக்கள் விரலை வெட்டி மக்களுக்கு சூப்பு வைத்துக் கொடுக்கும் வித்தையைத்தான் அரவிந்த் கேஜ்ரிவால் செய்யவிருக்கிறார்.
உதாரணமாக, பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்தி செலவு 2 ரூபாய்க்கும் குறைவு என்றால் தனியார் அனல் மின் நிலையங்கள் யூனிட்டுக்கு ரூ 6.50 முதல் ரூ 18 வரை விலை வைத்து விற்கின்றன. கேஜ்ரிவால் கூறும் தீர்வு தனியார் மின்சாரம் ரூ 12-க்கு விற்கப்படுவதை பேச்சுவார்த்தை நடத்தி யூனிட்டுக்கு ரூ 10 ஆக குறைப்போம் என்றும் யூனிட்டுக்கு ரூ 10-ஐ அரசே தனியார் நிறுவனத்திடம் கொடுத்து விடும் என்பதும்தான்.
திறன் குறைந்த, கொள்ளை விலை வைத்து வசூலிக்கும் தனியார் மயத்தை ஒழித்துக் கட்டி பொதுத்துறை மின் உற்பத்தியை தொடங்கினால்தான் மின் கட்டணத்தை குறைக்க முடியும். அதைச் செய்ய அரவிந்த் கேஜ்ரிவால் தயாராக இல்லை என்பதோடு அப்படி செய்யவும் முடியாது.
“நாங்கள் எந்த சித்தாந்தத்துக்கும் தாலி கட்டிக் கொள்ளவில்லை.”
“நாங்கள் எந்த சித்தாந்தத்துக்கும் தாலி கட்டிக் கொள்ளவில்லை. தொழில்துறையில் அரசாங்கத்துக்கு வேலை இல்லை. கார்ப்பரேட் துறை நாட்டில் மிகப்பெரும் பாத்திரத்தை ஆற்ற வேண்டும். சில பேரைத் தவிர, பெரும்பாலான தொழிலதிபர்கள் ஊழலுக்குப் பலியானவர்கள்தான். அவர்கள் ஊழலை ஊக்குவிப்பவர்கள் அல்ல” என்று ஆம் ஆத்மி கட்சியின் சித்தாந்ததை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறார் அரவிந்த கேஜ்ரிவால்.
எந்தத் தனியார்மயக் கொள்கைகள் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தண்ணீர் கட்டணம் மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட எல்லா வகையான கொள்ளைகளுக்கும் வழிவகுத்திருக்கிறதோ, அந்தத் தனியார்மயம் எளிய மனிதனின் நலனைக் காக்க முடியும் என்கிறது ஆம் ஆத்மி கட்சி.
இதைத்தான் “மின் உற்பத்தியே செய்யாத டெல்லி எப்படி மின் கட்டணத்தை குறைக்க முடியும்” என்று நரேந்திர மோடி, கேஜ்ரிவாலை குத்திக் காட்டியிருகிறார்.
“பாரத் மாதா கீ ஜெய்” என்று முழங்குவதிலும், வாரணாசி தேர்தலின் போது கங்கையில் முழுக்கு போட்டு இந்துக்களின் மனம் கவர் கள்வனாக மாற முயற்சித்ததும், காங்கிரஸ் பாணியிலான மிதவாத இந்துத்துவம்தான் அரவிந்த் கேஜ்ரிவாலின் மதச்சார்பின்மை என்பதைக் காட்டுகின்றன. அரவிந்த் கேஜ்ரிவால் பதவி ஏற்கும் போது கடவுளின் ஆசீர்வாதத்தை வேண்டியதோடு மேலே இருப்பவனுக்கு நன்றியும் சொன்னது, அப்படி கடவுளை நம்பும் பெரும்பான்மை மக்களுக்கு தன்னை ஏற்புடையதாகக செய்யும் முயற்சிதான் என்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளரான ஆதித்ய நிகம்.
கடவுளை நம்பும் கோடிக்கணக்கான மக்களை மத நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும்படி சொல்ல வேண்டுமானால், தான் கடவுளை நம்புவதாக காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார் அவர். அதே அடிப்படையில்தான் டெல்லி திரிலோக்புரியில் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துத்துவ கும்பல் நடத்திய வன்முறையின் போது அந்தப் பகுதியின் ஆம் ஆத்மி கட்சி சட்ட மன்ற உறுப்பினரோ, கட்சித் தொண்டர்களோ சிறுபான்மை மக்களின் பக்கம் நிற்பதாக காட்டிக் கொள்ள முடியாத நிலை இருந்தது. அப்படிக் காட்டிக் கொண்டால் பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவை இழந்து விடுவோம் என்ற பயம்தான் ஆம் ஆத்மியின் இந்துத்துவ எதிர்ப்பின் நிலைமை. அரவிந்த் கேஜ்ரிவாலின் கொள்கையற்ற அரசியலின் ஒரு பகுதியாக சாதி அடிப்படையிலான காப் பஞ்சாயத்துகளின் அதிகாரத்தை அங்கீகரிக்கிறார்.
காஷ்மீர் மக்களின் போராட்ட உரிமையை அங்கீகரிக்காமல் இந்திய அரசை ஆதரித்து, இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பை வெளிப்படையாகவே ஆதரித்தவர் கேஜ்ரிவால். தலித் மக்கள் மீதான அடக்குமுறை, இந்து மதவெறி, பாக். எதிர்ப்பு அரசியல் என்பன போன்று, ஒரு கொள்கை நிலை எடுத்துத் தெளிவாகப் பேசவேண்டிய பிரச்சினைகளில் கருத்தே கூறாமல் மவுனம் சாதிப்பது அல்லது நெருக்கிக் கேட்டால் இந்துத்துவத்தின் செல்வாக்கை கணக்கில் கொண்டு பேசுவதுதான் ஆம் ஆத்மியின் உத்தி.
ஆம் ஆத்மியின் அரசியல் வர்க்கப் போராட்டம் இல்லாத வர்க்க அரசியல் என்கிறார் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ்.
டெல்லி சோட்டா நகர் பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு வழங்குவதற்காக குடிசைகளை இடித்து தரைமட்டமாக்கி, பெண்களையும் குழந்தைகளையும் போலீசார் தாக்கினர். ஆம் ஆத்மி கட்சியினரும், போலீசார் நடவடிக்கைக்கு ஒத்துழைத்திருக்கின்றனர். “அரசுக்கு சொந்தமான நிலம், வேறு ஒரு பணிக்காக தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு சிலர் குடிசைகளை அமைக்க முயற்சித்தபோது, அந்த நிறுவனத்துக்கு சொந்தமானவர்கள் அவற்றை அகற்றினர். பாதுகாப்பு பணிக்காக மட்டுமே போலீசார் சென்றனர்.” என்று கூறியிருக்கிறது, ஆம் ஆத்மி கட்சி. தனியார் நிறுவனத்துக்காக தமது குடிசைகள் இடிக்கப்பட்டால், போராடக் கூடாது என்பதுதான் யோகேந்திர யாதவின் வர்க்கப் போராட்டம் அற்ற வர்க்க அரசியல். டெல்லியில் வீடுகளை இடிப்பதை தற்காலிகமாக தடை செய்துள்ள கேஜ்ரிவால் அரசு, நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்படப் போகும் வீடுகளுக்கு இந்தத் தடை பொருந்தாது என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.
“ஆம் ஆத்மிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிய இலவச குடிநீர் பிரச்சாரம் செல்லாது” என்று தீர்ப்பு எழுதுகின்றனர் முன்னாள் உலக வங்கி இயக்குனர்கள்.
உண்மையில் அர்னாப் கோஸ்வாமியின் டைம்ஸ் நவ் அல்லது முகேஷ் அம்பானியின் சி.என்.என் ஐ.பி.என் போன்ற ஊடகங்கள் கட்சி ஆரம்பித்து ஆட்சி நடத்தினால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட கட்சிதான் ஆம் ஆத்மி கட்சி. “நீங்கள் தேசத்துக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்” என்று அர்னாப் தினசரி எட்டுகட்டையில் முழங்குவதுதான் ஆம் ஆத்மியின் முழக்கமும் கூட. இதில் லஞ்ச எதிர்ப்பு மட்டும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.
ஜெயலலிதா போன்று அரசு திட்டங்களை தனியார் மயமாக்கிக் கொண்டே ஒரு பக்கம் ஏழைகளுக்கு பிச்சையாக இலவசங்களை அறிவிக்கும் வேலையையோ அல்லது அதை விட புதுமையான திட்டங்களையோ ஆம் ஆத்மி செயல்படுத்தலாம். ஆனால், அதைக் கூட செய்வதற்கு அவர்களின் மேற்கத்திய நிதி உதவியாளர்கள் அனுமதிக்கப் போவதில்லை. உலக வங்கியின் முன்னாள் இயக்குனர்கள் ஜே சிவகுமார் மற்றும் இந்தர் சூத் ஆகியோர் ஹிந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில், “தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை எல்லாம் மறந்து விட்டு ‘நடைமுறை’ அரசியலை உணர்ந்து ஆம் ஆத்மி கட்சி செயல்பட வேண்டும்” என்றும் “டெல்லியில் ஏழைகளுக்கு இலவச குடிநீர் தேவையில்லை, கட்டுப்படியாகும் விலையிலான குடிநீர்தான் தேவை” என்று டெல்லியில் வாக்களித்த மக்களின் சார்பாக சிந்தித்து அவர்களது தேவையை கணித்து கூறியிருக்கின்றனர்.
மொத்தத்தில், “இந்தியாவை ஒளிர”ச் செய்த 7 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு வாஜ்பாயி குப்பைக் கூடைக்கு அனுப்பபட்டார். அடுத்த 10 ஆண்டுகள் அன்னிய முதலீட்டின் உதவியால் இந்தியாவை வல்லரசாக்க முயற்சித்த மன்மோகன் சிங் வெறுக்கத்தக்க கோமாளியாக விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார். “வளர்ச்சி நாயகனாக” முன் நிறுத்தப்பட்ட மோடி இப்போது மக்களின் கோபமான கிண்டலுக்கும் பரிகாசத்துக்கும் நாயகனாகியிருக்கிறார்.
அவர்களின் இடத்தில் இப்போது நிறுத்தப்பட்டிருப்பவர் அரவிந்த் கேஜ்ரிவால். அதனால்தான் மேற்கத்திய ஊடகங்கள் ஆம் ஆத்மியின் வெற்றியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கின்றன. இந்தியாவிலும் மோடியின் வெற்றிக்கு சியர்ஸ் சொன்ன கைகள் இன்று ஆம்ஆத்மிக்கு ஜே சொல்கின்றன.
அன்றாடம் பெருகிவரும் வாழ்க்கைப் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, கல்வி வணிகமயம், மருத்துவம் மக்களுக்கு கிடைக்காமல் போவது என்று மறுகாலனியாக்கத்தின் நெரிப்பில் மூச்சுத் திணறும் மக்களின் கோபம்தான் மோடிக்கு கிடைத்த செருப்படி. அதனால் வெற்றிபெற்ற கேஜ்ரிவால் தனியார் மயம் எனும் ஊழலை ஆதரித்துக் கொண்டே கலெக்டர் ஆபிஸ் சிப்பந்தியின் லஞ்சத்தை முறியடிக்க முழங்குகிறார்.
மாறி மாறி ஓட்டுப் போட்டு, இருக்கும் சனியன்களில் ஏதோ ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் எனும் மூடநம்பிக்கையின் படிதான் ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருக்கிறது. மாறி வரும் காலத்தில் இந்த மூடநம்பிக்கை நிரந்தரம் இல்லை.