கேலிச்சித்திரம் – ஓவியர் முகிலன்
மூடு டாஸ்மாக்கை….. மூடு – ம.க.இ.க-வின் புதிய பாடல்
மூடு டாஸ்மாக்கை மூடு – பாடல் வரிகள்….
வசனம்:
மூடு டாஸ்மாக்கை,
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும்
கெடு விதிப்போம் ஆகஸ்டு 31
பாடல்:
மூடு டாஸ்மாக்கை மூடு
நீ….
மூடு டஸ்மாக்கை மூடு
நீ
ஓட்டுப் போட்டு மூடுவான்னு
காத்திருப்பது கேடு..
மூடு டாஸ்மாக்கை மூடு..நீ……
மூடு டாஸ்மாக்கை மூடு
இன்னும் எத்தனை பிள்ளைகள் குடிச்சு சாகணும்
எத்தன தாலி அறுந்து விழணும்..
எத்தனை தாலி அறுந்து விழணும் (கோரஸ்)
எத்தன கட்சிகள் கொள்ளையடிக்கணும்
எத்தன தேர்தல் வந்து போகணும்
எத்தன தேர்தல் வந்து போகணும் (கோரஸ்)
இது தப்புன்னு நல்லா தெரிஞ்ச பின்னும்
இப்பவே மூடு ஏன் தயங்கணும்
மூடு டாஸ்மாக்கை மூடு..
மூடு டாஸ்மாக்கை மூடு… (கோரஸ்)
கூட்டம் சேக்க சாராயம்
ஓட்டு வாங்க சாராயம்
ஓட்டு வாங்க சாராயம் (கோரஸ்)
கோஷம் போட சாராயம்
கொடி பிடிக்க சாராயம்
கொடி பிடிக்க சாராயம் (கோரஸ்)
சாராய ஊறலில்தான் கட்சி வளருது
உன்ன ஊறுகாயா தொட்டுக்கத்தான் தேர்தல் நடக்குது
உன்ன ஊறுகாயா தொட்டுக்கத்தான் தேர்தல் நடக்குது (கோரஸ்)
அட கடைய மூட எதுக்கு ஓட்டு
போடு கனமா ஒரு திண்டுக்கல் பூட்டு
மூடு டாஸ்மாக்கை மூடு..
மூடு டாஸ்மாக்கை மூடு.. (கோரஸ்)
அப்பனும் மகனும் கடையிலே
ஆளிருந்தும் துணையில்லே
ஆளிருந்தும் துணையில்லே (கோரஸ்)
சுத்தி சுத்தி இன்னும் கடன வாங்கி
மானம் போகுது தெருவிலே
மானம் போகுது தெருவிலே (கோரஸ்)
விலையில்லா பொருளால
வாழ்க்கை விலை போனது கடையிலே
வாழ்க்கை விலை போனது கடையிலே (கோரஸ்)
விளக்கு அணைஞ்சு போச்சு வீட்டிலே….
விளங்குமா இந்த பொம்பள
மூடு டாஸ்மாக்கை மூடு..
மூடு டாஸ்மாக்கை மூடு (கோரஸ்)
கெட்ட குடி நம்ம குடி
அறுந்த தாலி நம்ம தாலி
அறுந்த தாலி நம்ம தாலி (கோரஸ்)
பத்தியெறியது எங்க வயிறு
குடிய பாக்கு வெச்சு அழச்சதாரு
பாக்கு வெச்சு அழச்சதாரு (கோரஸ்)
அட வேணான் இது எங்க ஊரு
அதிகாரம் பண்ண கலெக்டர் யாரு?
மூடு டாஸ்மாக்கை மூடு…
மூடு டாஸ்மாக்கை மூடு (கோரஸ்)
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே
அடிக்க வரும் போலிசுக்கு அஞ்சாதே
மூடு கடையை – அட
எவன் வருவான் பாப்போம்
நம்ம ஊரில் இனி டாஸ்மாக்கு கிடையாது
அடிச்சு தூக்கு………………..
___________________________________
பாடல்: மையக் கலைக்குழு, மக்கள் கலை இலக்கியக் கழகம்
வெளியிடுவோர்: மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
தொடர்புக்கு… 99623 66321
______________________________________________________
பால் விவசாயிகளைக் கொல்லும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!

தமிழகத்தில் ஆவின் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி 2011-ல் ஜெயா அரசு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனே அதிரடியாக பால் விலையை உயர்த்தியது. இதைத் தொடர்ந்து ஆரோக்கியா, ஹட்சன், ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் பால் நிறுவனங்களும் பல மடங்கு விலையை உயர்த்தி கொள்ளை இலாபமடித்தனர். ஆனால், பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2 மட்டுமே உயர்த்தி கொடுத்தனர். அந்த பாலை பயன்படுத்தும் பொதுமக்கள் மீது ரூ.6.25 விலை உயர்வு திணிக்கப்பட்டது.
பால் உற்பத்தியாளர்களைக் காப்பாற்ற தமிழக அரசு அறிவித்தபடி 1 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்திருக்க வேண்டும். ஆனால், அதை கைவிட்டு 25% பால் மட்டுமே கொள்முதல் செய்து வருகிறது. மீதி 75% பாலை கார்ப்பரேட் பால் நிறுவனங்கள் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன.
இந்த கார்ப்பரேட் பால் உற்பத்தி நிறுவனங்கள், திடீரென பாலை வாங்க மறுப்பது, குறைந்த விலைக்கு கேட்பது, வாரத்திற்கு 1, 2 நாள் விடுமுறை என்று பால் உற்பத்தியாளர்களை அலைய விடுவது, என்று பால் உற்பத்தியாளர்களை கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கி வருகின்றனர்.
கிரானைட், மணல், தண்ணீர், கல்வி என எல்லாத் துறைகளிலும் தனியார்மயத்தைப் புகுத்தி, கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க அனுமதித்தது போல, பாலிலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஜெயா அரசு துடித்து வருகிறது. அதனால், தற்போது அரசு கொள்முதல் செய்துவரும் ஆவின் பாலையும் (அதாவது 25 லட்சம் லிட்டரையும்) நிறுத்திவிடத் துடிக்கிறது. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசும் சேர்ந்து பால் உற்பத்தியாளர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

பால் உற்பத்தியை முற்றிலும் ஒழித்துக் கட்டும் அரசின் முயற்சிக்கும் உணவுத் தற்சார்பை ஒழித்து முற்றிலும் கார்ப்பரேட் ஆதிக்கத்தை உருவாக்குவதோடு, குறைந்தப் பட்ச சத்துணவான பாலையும் பறிக்கும் வகையில் அரசு நடவடிக்கைகள் அமைந்துள்ளது. பால் கொள்முதல் விலை குறைப்பு, பால் வாங்க மறுப்பு, பால் வாங்குவதற்கு விடுமுறை ……இவற்றினை எதிர்த்து தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பென்னாகரம் விவசாயிகள் சிலரின் அனுபவம்:
பென்னாகரத்தில் உள்ள தாசம்பட்டி கிராமம், ஒரு காலத்தில் பார்ப்பதற்கு பசுமையாக தோற்றமளித்த இந்த பகுதி பருவ மழையின்மையால் விவசாயம் பொய்த்து போய் இன்று களையிழந்து இருக்கிறது. இதனால், விவாசாயத்தை விட்டு விட்டு கர்நாடகா, கோவை என கட்டிட வேலைக்கு சென்று எப்படியாவது குடும்பத்தை நடத்தி விடலாம் என்று போனால் அங்கேயும் 10,15 நாள் மட்டுமே வேலை இருக்கிறது, அதன் பிறகு வேலை கிடைப்பதில்லை. இந்நிலையில் தான் பால் மாடு வாங்கியாவது, வளர்த்தால் குடும்பத்தை ஓட்டிவிடலாம் என்று வளர்த்து வந்தவர்களின் எண்ணத்தில் இடியாய் இறக்குயிருக்கிறது இந்த பால் கொள்முதல் விலை குறைப்பு.
தனலட்சுமி கூறும் போது, காலையில் 4 மணிக்கு எழுந்து 6 மணிக்குள் குடும்ப வேலைகளை முடித்து, பிறகு 7 மணிக்குள் பாலை கறந்து சொசைட்டிக்கு போய் ஊற்றிய பிறகு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அதன் பிறகு, மாட்டுக்கு புல் அறுத்து வரவேண்டும், தீவனம் வைக்க வேண்டும், வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி, அடுத்தடுத்து இரவு 10 மணி வரைக்கும் உழைத்து அன்றாடம் பாலை ஆரோக்கியாவுக்கு ஊற்றி வரும் தனலட்சுமி, அவருடைய ஆரோக்கியத்தை இழந்து நிற்கிறார்.

மேலும் அவர் கூறும் போது, பாலுக்கு ஏற்ற விலை இல்லை, 4 வகையான தீவனம் இருக்கிறது. இதில் மாங்காய் தீவனம் போட்டால் தான் பால் கெட்டியாக, கொழுப்பும் கிடைக்கிறது. இந்த தீவணத்தை ரூ.1400க்கு வாங்கி போடுகிறேன். இதுவும் 1 மாதம் கூட வருவதில்லை. என்ன செய்வது, வேற வழியில்லாமல் இந்தத் தொழிலை செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஏதாவது வாரச் செலவு, கடனுக்கு சரிகட்ட முடியும் என்றுதான் வளர்த்து வருகிறேன். இதிலும் மண்ணை அள்ளி போட்டுட்டாங்க.
வறட்சியின் பிடியால் நீரில்லாமல் விவசாயம் செய்ய முடியால் நகரத்திற்கு ஓடுவது, அங்கேயும் வேலை இல்லாமல் போனதால் பால் மாட்டை வாங்கியாவது பிழைப்பை நடத்தலாம் என்று நினைத்தாலும் போதிய தீவனம் இல்லை. முதலாளித்துவ நிறுவனங்கள் தீவனங்களின் விலையை, பல மடங்கு உயர்த்தி விட்டதால் அநியாய விலைக்கு வாங்கி மாடுகளை பாராமரிக்க வசதியில்லை, தீவனத்தை குறைத்தால் பாலும் குறைகிறது. ஏற்கனவே கடன் சுமையால் திக்குமுக்காடும் விவசாயிகள் ரூ.40,000க்கு வாங்கிய மாட்டை தற்போதுரூ.10,000, 8,000 என நஷ்டத்துக்கு விற்று விட்டு, கல்லுமலைக்கும், மீண்டும் நகரத்தை நோக்கி ஓடுவது என்ற நிலையில், இனி வாழவே முடியாது என்கிற நிலைமையை உருவாக்கி ஒட்டு மொத்தமாக விவசாயிகளையே, நாடோடிகளாக மாற்றி விட்டார்கள்.
பால்கோவா உற்பத்தியாளரின் அவலம்!
பென்னாகரத்தை ஒட்டி பால்கோவா தயாரிக்கும் கம்பெனிகள் இரண்டு செயல்பட்டுகின்றன. இதில் கே.எம்.எம். பால்கோவா தொழில் செய்பவர் கூறும் போது, “நாங்கள் 35 ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வருகிறோம். ஆனால் இந்த ஓர் ஆண்டில் மட்டும் நிறைய நஷ்டங்களை சந்தித்து விட்டோம். குறிப்பாக 20 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுயிருக்கிறது. 2, 3 வருடத்திற்கு முன்பு 15 பேர் வேலைக்கு அமர்த்தி, வேலை செய்தோம். பால் கோவாவும் நிறைய ஆர்டர் கிடைக்கும். இங்கு இருக்கும் சுற்று வட்டார மக்கள் எங்களிடம் தான் பால் எடுத்து வருவார்கள், எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.

என்றைக்கு ஆரோக்கியாவும், ஹட்சனும் வந்ததோ அன்றையிலிருந்து பால் உற்பத்தியாளர்கள் அங்கு போக ஆரம்பித்து விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் விலையை உயர்த்தி கொடுக்கிறார்கள். அதனால் இங்கு பால் எடுத்து வந்தவர்களும் அங்கு போய்விட்டார்கள். இதனால் எங்களிடம் ஏற்கனவே பழக்கமானவர்கள் தான் பால் ஊற்றி வருகிறார்கள். இந்நிலையில் ஆரோக்கியாவும், ஹட்சனும், பால் கொள்முதல் செய்ய மறுத்தாலும், குறைந்த விலைக்கு கேட்பதாலும், அதிக விலைக்கு தீவனம் போட்டு குறைந்த விலைக்கு பால்கொள்முதல் செய்வதால் அவர்களிலும் பல பேர் கட்டுபடியாகமல் மாட்டையே விற்றுவிட்டு வேற வேலைக்கு சென்று விட்டதாக கூறினார்.
அதிக விலை கொடுத்து பால் வாங்கி பால்கோவா செய்தாலும், குறைந்த விலைக்கே கேட்கிறார்கள். இதனால் தயாரித்த பால்கோவா வை ஐசிலே வைத்து பாதுகாத்து கொஞ்சம், கொஞ்சமாக விற்று வருகிறோம். என்ன செய்யறது, இவ்வளவு நாளா செய்து வந்துட்டோம். அதனால விடவும் முடியாமல், தொழிலை செய்யவும் முடியாமல், தவிக்கிறோம் என்று வேதனையோடு கூறினார்.
ஒட்டுமொத்தமாக பால்கோவா செய்பவர்களுக்கு தொழில் இனிப்பாக இல்லை, பாலை உற்பத்தி செய்பவர்கள் ஆரோக்கியமாக இல்லை. சொந்த மக்களையே நாடோடிகளாக்கி அலைய விடும் இந்த அரசமைப்பை மாற்றி மக்கள் அதிகாரத்தை கையிலெடுக்கும் வரை மக்கள் தமது நிம்மதியை பெற முடியாது.
- புஜ செய்தியாளர், பென்னாகரம்.
கையில் வீணை வாயில் கீதை நெஞ்சில் அணுகுண்டு…
அழுது முடித்த கண்களுக்கு..!
இறப்பின் துயரம்
புரிந்து கொள்ளக் கூடியதுதான்,
ஆனால்
சாவின் விளம்பரம்
சகிக்க முடியவில்லை.
கண்களை பிழிந்தெடுத்தன
காட்சி ஊடகங்கள்
காதுகளில்
சோகத்தை காய்ச்சி ஊற்றின
பண்பலைகள்
சீரியலுக்காக
செதுக்கப்பட்ட காட்சிகளாய்
ஒரு மரணத்தை மாற்றமுடியும்
என்று
சாதித்துக் காட்டினார்கள்
ஊடக முதலாளிகள்.
அறிவியல் எம்.ஜி. ஆரின்
இருப்பை மட்டுமல்ல
இறப்பை வழங்கும் நிகழ்ச்சியின்
இலாபமும்
உடைய வர்க்கத்துக்கே உரித்தானது.
கேள்விக்கிடமின்றி
எல்லோரும் இடறப்படும்போது
மொத்த சிந்தனையும்
கலாம் போதையால்
நிரப்பப்படும் போது
மத்த போதை எதற்கு?
மதுக்கடைகளை ஒரு நாள்
துணிந்து மூடியது அரசு.
சோகத்தின் இலக்கை
அடுத்த நாள் எட்டலாம்,
குடிப்பவன் உடம்பு ( பாடி )
(முன்னாள் ) குடியரசு தலைவருக்காக
ஒரு நாள் தாங்காதா என்ன?
சாதாரண இழப்பா இது!
அம்பானிக்கும், அதானிக்கும்
அம்பானியால் சிறுவணிகம் இழந்த
இராமேசுவரம் மளிகைக் கடைக்காரருக்கும்
அதானியால் நிலத்தை இழந்த
குஜராத் விவசாயிக்கும்,
எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்!
அமித்ஷாவுக்கும், மோடிக்கும்
ஆர்.எஸ். எஸ். கொலைவெறி மோகன்பகவத்துக்கும்
திரிசூலத்தால் குதறப்பட்ட
அப்பாவி முஸ்லீம்களுக்கும்
எல்லோருக்கும் நல்லவர்
இறந்து விட்டார்!
மலைக்கள்வர்களுக்கும்
மணல் கொள்ளையர்க்கும்
ஏரிகளை விழுங்கிய
ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கும்
இவர்களால் வாழ்வாதாரம் இழந்து
மண்ணை விட்டு விரட்டப்படும் மக்களுக்கும்
எல்லோருக்கும் நல்லவர்
இறந்து விட்டார்!
கண்ட கனவில்
கல்லா பிதுங்கும்
கல்விக் கொள்ளையர்க்கும்
கல்விக் கண்ணை
காசுக்கு விற்றுவிட்டு
கனவும் கானும் மாணவர்களுக்கும்
எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்!
பெருந்தகையின் கனவை உள்வாங்கி
பெருந்தொகையில் முன்னேறிய
ஜெயலலிதாவும், தளபதியும்
ஜி.கே. வாசனும், விஜயகாந்தும்
அன்புமனியும், எடியூரப்பாவும்
ஏக்கத்தில் துவள
எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்!
மதங்களைக் கடந்த மாமனிதர்
கையில் வீணை
வாயில் கீதை
நெஞ்சில் அணுகுண்டு…
என
பக்காவான
பார்ப்பன வல்லரசு கனவு நாயகனாகி
ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியே
பாராட்டுமளவுக்கு
அப்துல்கலாம் மெய்யாலுமே
மதங்களைக் கடந்த மாமனிதர்தான்!
செத்தவரெல்லாம்
உத்தமரென்றால் – அவர்
செய்தது என்ன
கேட்கலாம் தானே?
அப்துல்கலாமின் பங்களிப்பு
நாட்டைக் காப்பற்ற
அணுகுண்டு சோதனை
அடுத்தடுத்து ஏவுகணை! – என
அடுத்தவனை மிரட்டும் அறிவியலில்
அடைந்தது என்ன நாடு?
மீனவரைக் காப்பாற்ற
ஒரு ‘மிசைல்’ உண்டா?
மாணவரின் கழுத்தறுக்கும்
‘அட்மிசன்’ கொள்ளையைய் தகர்க்க
ஒரு அணுகுண்டு உண்டா?
பழங்குடிகளின் காடுகளைப் பிடுங்கும்
வேதாந்தாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
ஒரு ஏவுகனை உண்டா?
‘அப்ரைசல்’ எறிகனைக்கு எதிராக
கனவு கானும்
ஐ.டி. ஊழியர்களை காப்பாற்ற
கலாமிடம் ஒரு கருவி உண்டா?
நிலங்களையும், வயல்களையும்
பிடுங்கும்
கார்ப்பரேட் எதிரிகளைத் தாக்க
ஏதேனும் உண்டா கலாமின் கண்டுபிடிப்புகளில்!
இயற்கை வளங்களை கண்டறியும்
செயற்கை கோள்களை தயாரித்து
சுரண்டும் முதலாளிக்கு வழங்கும்
நாட்டை அழிக்கும் வேலைக்கு எதிராக
நடையைக் கட்டியதுண்டா கலாமின் எளிமை!
பச்சை பிள்ளைகளிடம் போய்
மதிப்பீடுகள் பேசிய மாமனிதர்
பாராளுமன்ற உறுப்பினர்களை
கூட்டிவைத்து
‘லஞ்சம் வாங்க மாட்டோம்’ என்று
உறுதிமொழி ஏற்க வைத்ததுண்டா?
விண்ணுக்கு ஏவுகணை வீசிய
வெற்றி வீரர்
கண்ணுக்கு எதிரே இருக்கும்
ஜெயலலிதாவிடம்
கள்ளுண்ணாமை பற்றி பேசி
டாஸ்மாக்கை வீசச் சொன்ன
பேச்சு உண்டா!
தனியார் பள்ளி
மாணவர்களிடம்
உழைப்பு, நேர்மை என
வகுப்பெடுத்த அணுவாளர்
தாளாளரிடம் போய்
கட்டணக் கொள்ளைக்கு எதிராக
கொதித்தெழுந்த காலம் உண்டா!
ஏழ்மையில் பிறந்து
தமிழ்வழி பயின்று
அரசுப்பள்ளியில் படித்துவந்த
அப்துல் கலாம்,
எங்கெனும்
தாய்மொழியில் அரசுப்பள்ளி திறக்கச்சொல்லி
தப்பித்தவறி பேசியதுண்டா?
ஏழையாய் பிறந்தார்
தமிழராய் இறந்தார்
என்பதற்காய் மட்டும்
ஆளும் வர்க்க சேவை நாயகனை
ஏழை வர்க்கத்தினர் முன்னுதாரணமாக
ஏற்க முடியாது,
அவர் என்னவாய் இருந்தார்
யாருக்காய் உழைத்தார்!
என்பதிலிருந்தே அறிதல் வேண்டும்!
இருபத்தியோரு உழைப்பாளிகள்
ஆந்திரக்காட்டில் கரிக்கட்டயாய் கிடந்தபோது
ஓடி வராத கூட்டமெல்லாம்
கலாம் உடலை தேடி வந்த
வர்க்கத்திலிருந்தே
இவர் யாருக்காக வாழ்ந்தார்! புரியவேண்டும்!
உப்புக்காற்றில் பிறந்தவர்
கார்ப்பரேட் கப்புக் காற்றில் கரைந்தார்…
மீன்தோல் தழுவிய நாவினார்
பார்ப்பன பூணுலின்
மான்தோலாக மாறினார்…
ஈழப்படுகொலை, குஜராத் படுகொலை,தலித்துகள் படுகொலை,
எதர்க்கும் வாய் திறவாமல் நாறினார்
ஒடுக்கும் ஆளும் வர்க்க வீணைநரம்பின் சுரமாய் ஏறினார்!
பளிச்சென தெரியும்
முதலாளி வர்க்க எதிரிகளை விடவும்,
ஆபத்தானவர்கள்
அவர்களை மூடி மறைக்கும்
அப்துல் கலாம்கள்!
புரிந்து கொள் உழைக்கும் வர்க்கமே!
எதர்க்காக உழைக்க வேண்டும்
என்பது மட்டுமல்ல
எதற்க்காக அழ வேண்டும்
என்பதும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்
கண்ணீர்
அன்பின் ஈரமாக
சுரக்க வேண்டுமே ஒழிய,
அறியாமையின்
கோரமாக வழியக் கூடாது!
– துரை.சண்முகம்
கணபதியின் தேநீர் இனி கிடைக்காதா ?
நீங்கள் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை காலை, மதியம், இரவு என ஏதேனும் ஒருவேளையில் கூட குறுக்கும் நெடுக்குமாக சாலையை கடந்து, சைக்கிளில் தேநீர் கொண்டு செல்லும் கணபதியை காணலாம்! பல தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு சுடச்சுட தேநீர் தருவது தான் கணபதியின் வேலை.
வேலைச்சுமையாலும், நிதிச்சுமையாலும் வாழ்க்கை கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகளுக்கு கண நேரமாவது கணபதியின் தேநீர் ஆசுவாசமளிக்கும்.
எங்கள் அலுவலகத்திற்கும் கடந்த ஆறு வருடங்களாக கணபதி தான் தேநீர் தருகிறார். மெலிந்த தேகம், ஐந்தே கால் அடி உயரம், நல்ல களையான முகம். ஜீன்ஸ் பேண்டை வெட்டி தைத்து முக்கால் காலுக்கு போட்டிருப்பார். நானும் பல வருடங்களாக கவனித்து வருகிறேன். கணபதிக்கு வயது ஏறுவதேயில்லை.
எனக்கு பால் என்றால் அலர்ஜி. அதனால் பால் கலந்த தேநீர் சாப்பிடுவதில்லை. ஆனால், கணபதி தரும் தேநீர் குடித்தால் பிரச்சனையேயில்லை. அதில் பால் பெயரளவுக்கு தான் இருக்கும்! பால் விலை கூடினால் உங்களுக்கு பிரச்சனையே கிடையாதுல்ல! என கிண்டல் செய்வேன். ஒரு புன்னகையுடன் கடந்து போய்விடுவார். ஆனால் அவரது தேநீரில் கலந்திருந்த பாலின் பின்னே ஒரு சோகம் இருந்தது எனக்குத் தெரியாது.
ஒருமுறை வார கணக்கை முடிக்கும் பொழுது, வேறு அலுவலகங்களின் கணக்கு அட்டையை அவர் கையில் வைத்திருந்ததை வாங்கிப் பார்த்தேன். ஒரு நிறுவனத்திற்கு தேநீர் விலை 5.50, ஒரு நிறுவனத்திற்கு ரூ. 5.45 என வெவ்வேறு விலைகளில் இருந்தது. கணபதி கொண்டு வருவது ஒரே தரமான தேநீர் தான். விலை மட்டும் எப்படி வேறுபடுகிறது என குழம்பி போனேன்.
அதற்கு கணபதி ” எந்த முதலாளி சார் நல்ல விலை கொடுத்து, தங்கள் தொழிலாளிக்கு நல்ல தேநீர் வாங்கித் தர தயாரா இருக்காங்க. தேநீர் எந்த தரத்துல இருந்தாலும் விலையை மட்டும் குறைக்கணும்னு தரை ரேட்டுக்கு இறங்கி பேரம் பேசுறாங்க. ஒப்புக்கு வாங்கி கொடுக்கிறாங்க சார்! பால், டீத்தூள், சர்க்கரை எல்லாம் அப்பப்ப விலை கூடிட்டே இருக்கு. நானும் முடிஞ்ச வரைக்கும் நல்ல தேநீரை கொடுக்க அல்லாடுறேன் சார்’ என்றார்.
கணபதியை பற்றி பேச்சு வரும்பொழுதெல்லாம் பல ஊழியர்கள், தொழிலாளிகள், “எனக்கு அவரை 8 வருசமா தெரியும், 12 வருசமா தெரியும்” என்பார்கள். ஒருநாள் கணபதியை நிறுத்தி, எத்தனை வருசமா தேநீர் விற்கிறீர்கள் என்றேன். “டவுசர் போட்ட காலத்திலிருந்தே விற்கிறேன். 17 வருசமா ஓடிட்டு இருக்கேன்!” என்றார். ’இப்ப என்ன வயசு’ என்றேன். ’இருபத்தொன்பது’ என்றார்.
ஞாயிறன்று வேலை இருந்தால் கூட கணபதி தேநீர் தருவார். ஏழுநாளும் ஓய்வில்லாத வேலை! அப்பொழுதிலிருந்து கணபதியின் கடும் உழைப்பில் உருவாகும் தேநீரில் அவரது செந்நீரும் கலந்திருப்பதாக தோன்றும்.
அப்பப்ப எங்க எம்.டியிடம் எங்கேயாவது ஒரு சின்ன இடம் இருந்தா சொல்லுங்க சார்! என சொல்லிக்கொண்டிருந்தார். ’கணபதி நிறைய பணம் சேர்த்திட்டீங்க போல! இடமெல்லாம் வாங்கி போடுறீங்க!’ என்றேன். ”எத்தனை வருசம் ராவும் பகலும் ஓடிட்டே இருக்கிறது? ஒரு நல்ல கூட்டம் கூடுற இடத்தில தேநீர் கடை ஒன்னு சொந்தமா போடணும். கையில உள்ள பணம் பத்தல! பல வருசம் உழைச்சு, சிறுக சிறுக சேர்த்தது! கையில வைச்சிருந்தா, ஏதாவது செலவு வந்துருது! ஒரு சின்ன இடத்தை வாங்கி போட்டுட்டு, பின்னாடி வித்து கடை போடலாம்னு ஒரு யோசனை” என்றார். ”விரைவில் சொந்த கடை போட வாழ்த்துக்கள்” என்றேன். முகம் மலர ’நன்றி’ என்றார்.
இன்னும் சில தொழிற்சாலைகள் கூடுதலாக கிடைக்க, வேகமாக கொண்டு செல்ல, சைக்கிளிலிருந்து டிவிஎஸ் 50க்கு மாறினார். கணபதிக்கு திருமணம் முடிந்ததை கேள்விப்பட்டு, ’ஏன் சொல்லல கணபதி? என்றேன். கொஞ்சம் தடுமாறி, சமாளித்தார். அவருக்கு தெரிஞ்சவுங்கள கூப்புட்டா முழு அம்பத்தூரும் கல்யாணத்துக்கு போக வேண்டியிருக்கும்.
பிறகு நான் அந்த அலுவலகத்தில் வேலையிலிருந்து நின்றுவிட்டேன். 9 மாதம் கழித்து அங்கு சென்ற பொழுது, வேறு ஒருவர் தேநீர் கொண்டு வந்து தந்தார். ” என்ன ஆச்சு? கணபதியை மாத்திட்டீங்களா? என்றேன்.
“இரண்டு மாதங்களுக்கு முன்பு மதியம் 3 மணியளவில் சாலையை கடக்கும் பொழுது, ஒரு வேன் மோதி, தலையில் அடிப்பட்டு ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டார், கணபதி அண்ணன்” என்றார் தம்பி. அதிர்ச்சியில் உறைந்து போனேன். கணபதிக்கு 6 மாத கைக்குழந்தை ஒன்று அம்மாவுடன் இனி ஆதரவின்றி காலம் தள்ள வேண்டும்.
இறந்த நாள் கூட ஒரு ஞாயிற்றுக்கிழமை தானாம்! உடல்நலம், உறவினர் திருமணம், சுற்றுலா, சொந்த ஊர் பயணமென்று நாம் அடிக்கடி விடுமுறை எடுக்கிறோம். கணபதியோ அதை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. தேநீர் கொண்டு வரத் தவறினால் அவரையே தவிர்த்து விடுவார்கள். என்றாலும் அவர் விடுமுறையின்றி தேநீர் தருவதை சலிப்புடன் செய்து பார்த்ததில்லை.
பல அலுவலக ஊழியர்கள், தொழிலாளிகள் தேநீரைக் குடித்து விட்டு அவருடன் பேசுவார்கள். தான் தேநீர் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் இன்று குடிக்க முடியாதே என்று பொறுப்புணர்வோடும் அன்போடும் செய்தபடியால்தான் கணபதி அப்படி கடுமுழைப்பு செய்து வாழ முடிந்தது.
ஆனாலும் கணபதியை நினைத்துப் பார்க்காமல் அம்பத்தூர் தனது வழமையான வேலைகளுக்கு திரும்பி விட்டது. கணபதியை நினைத்துப் பார்க்க அவரொன்றும் அப்துல் கலாமில்லை.
“பிறப்பு சம்பவமாக இருக்கலாம், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்று உலகமெங்கும் பல்வேறு பன்ஞ் முழக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நைந்து போன வாக்கியம்தான் அப்துல் கலாம் நினைவஞ்சலி பேனரில் இடம்பெற்ற இந்த சம்பவம், சரித்திர வகையறா.
அப்துல் கலாமுக்கு அம்பத்தூர் அஞ்சலி செலுத்துவதை ஆடம்பரத்துடன் செய்து முடித்தது. விடுமுறை என்ன, மெழுகுவர்த்தி என்ன, படங்கள் என்ன, சுவரொட்டிகள் என்ன என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் பலருக்கு அப்துல் கலாம் யார் என்றே தெரியாது. ஏதோ மற்றவங்க மதிக்கிறாங்க நாமும் மதிச்சு வைப்போமே என்ற போலச் செய்தல்தான்.
ஆனால் தினசரி வாழ்க்கையில் கணபதியைப் போன்றோர் வெறும் சம்பவமாகத்தான் மறைந்து போகிறார்கள். இவர்களின்றி இந்த உலகத்தின் இயக்கம் இல்லை. சாதாரண மனிதர்களின், தொழிலாளிகளின் காலம் ஒன்று வரும் போது கணபதிகள் ஹீரோக்களாக போற்றப்படுவார்கள். அந்த வரலாற்று திருப்பத்திற்காகவேணும் கணபதியை நான் நினைத்துக் கொள்கிறேன்.
கடும் உழைப்பாளியான கணபதிக்கு எனது அஞ்சலிகள்!
– சாக்ரடீஸ்
டாஸ்மாக்கை நொறுக்குவது வன்முறையா – கலந்துரையாடல் வீடியோ
மதுவிலக்கு கோரும் மாணவரின் போராட்டம் குறித்து ஒரு கலந்துரையாடல்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயலர் தோழர் மருதையன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் பங்கேற்கும் நிகழ்வு.
மது விலக்கு, போராட்டம், வன்முறை குறித்து விரிவான அலசல்கள். பாருங்கள், பரப்புங்கள்!
எல்லா அயோக்கியரையும் விஞ்சினார் தினமணி வைத்தி

வரலாறு கண்ட அயோக்கியர்களை விஞ்சிவிட்டார் தினமணி வைத்தி. கொன்றவனுக்கு தீபாராதனைக் காட்டிவிட்டு செத்தவர் மீதே கத்தியைச் செருகும் ஆளைப் பார்த்ததுண்டா? பார்க்காதவர்கள் ( 03-08-15 ) தினமணி தலையங்கத்தில் பார்க்கலாம். ” தன்னை காந்தியவாதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் செல்லிடைப்பேசி கோபுரத்தில் ஏறி அதன் உச்சிக்கு சென்று அமர்ந்ததும் , தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தியதும் எப்படி சரி? சசிபெருமாள்… நடத்திய போராட்டம் அறப்போராட்டமும் அல்ல, காந்திய வழிமுறையும் அல்ல.. சசிபெருமாள் வன்முறையாளராக மாறிவிட்டது மிகப்பெரிய சோகம்..” குன்ஹாவின் தீர்ப்புக்குப் பிறகு ‘அகிம்சை வழியில்’ போராடிய அம்மாவின் வழிமுறையில் அமைந்த அரசு விளம்பரங்களை வாங்கிக்கொள்ளும் அப்பாடக்கர் ‘காந்தியவாதி’ வைத்தியின் வேத வாக்கியம் இது.
‘வாழும் காந்தி ‘ அம்மா இருக்கட்டும், வைத்தி வறண்டும் காந்தியே கூட அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக “இரட்டை வாக்குரிமை ” கோரிக்கையை முன்னெடுத்த போது எரவாடா சிறையில் ‘சாகும் வரை உண்ணாவிரத’மிருக்க சம்மணம் போட்டவர்தானே ! இப்படி பல ‘சாகும் வரைகளால்… ‘ பிரிட்டிஷ் அரசை வாழவைத்தவர் காந்தி. சசிபெருமாள் கையாண்ட நடைமுறை தன்னை வருத்திக்கொள்வது.
என்ன ! காந்தி உச்சியில் ஏற பிர்லாவின் உதவி கிடைத்தது, பரிதாபம்! சசிபெருமாளுக்கு ஒரே ஒரு செல்லிடப்பேசி கோபுரம்தான் கிடைத்தது. காந்தி தற்கொலைப் பாதைக்கு மிரட்டினால் அகிம்சை ! சசிபெருமாள் உயிரை பணயம் வைத்து தன்னை வருத்திக் கொண்டால் வன்முறையா? தள்ளாடும் தமிழகத்தை தூக்கி நிறுத்த தன்னுயிர்பாராது களம் புகுந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்கிச் சிதைக்கும் போலீசின் அத்துமீறலை அனைத்து பத்திரிகைகளும் படத்தோடு போட்டு முகத்திரையை கிழிக்கையில் ‘வன்முறை எதிர்ப்பாளர்’ வைத்தி மட்டும் செய்தியை வேண்டா வெறுப்பாய் ‘உள்’ குத்து விட்டு, காக்கிகள் செய்த கொடுமையையும் தனது அகிம்சை அடிக்கட்டில் அமுக்கி விட்டார்.

சசிபெருமாள் கோபுரத்தில் ஏறியதையே சகிக்க முடியாத வன்முறையாக வரையறுக்கும் இந்த வாய்ப்பாட்டுக்காரர், போராடும் மாணவக் கழுத்தில் ஏறும் போலீசின் பூட்சை மட்டும் கண்டு கொள்ளாமல் ஒன்பது துவாரங்களிலும் ஊமையாகிக் கிடக்கிறார்.
தமிழகத்தை சாகடிக்கும் மதுவை ஒழிக்கும் கருவியாக சசிபெருமாளின் உடலைப் பயன்படுத்தும் போராட்டக்காரர்களை பார்த்து மட்டும் கச்சம் வரிந்து கட்டி கருவுகிறார், “உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள், இப்படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராட்டம் என்ற பெயரில் தற்கொலை, தீக்குளிப்பது என்று எல்லோரும் தொடங்கி விட்டால் சட்டம்- ஒழுங்கு என்னவாகும்? நிர்வாகம் எப்படி நடைபெறும் ? ” ( தினமணி- தலையங்கம் ) வைத்தியின் வயித்தெரிச்சல் இது ! உலகமே குடிகார அரசுக்கு எதிராக காறித் துப்பும் வேளையில், அரசின் கருத்துக்கு ஒளியூட்ட ஜெயா டி. வி. க்கு தேடினாலும் கிடைக்காத ஒரே கொள்ளிக்கட்டை இந்தத் தலையங்கம்.
கைது செய்யப்பட்ட மாணவர்களின் சட்டையைக் கிழிப்பதும், கட்டையில் அடிப்பதும்தான் சட்டம்-ஒழுங்கா? வைத்தி அளந்து கொட்டும் சட்டப்படியே, கைது செய்ய பிடித்தவர்களை அடிப்பதும், ஆபாசமாய் பேசுவதும் , கல்லால் அடிப்பதும், கழுத்தை நெறிப்பதும் அகிம்சையின் அடையாளங்களா? மயக்கமடைந்த ஒரு மாணவிக்கு உதவி செய்யும் மாணவிகளையும் தடுத்து, அடித்து இழுப்பதுதான் நிர்வாக நடைமுறையா? இந்த பயங்கரவாத நிர்வாகத்துக்காகத்தான் வைத்தியின் வன்மனம் துடிக்கிறதே ஒழியே, தன்னை விட யோக்கியமாய், சமுகப் பொறுப்பாய் செயல்பட்ட மாணவர்கள் வதைபட்டற்காக ஒரு வருத்தமும் இல்லை. இப்பொழுதுதான் தெரிகிறது போலீசின் கைகளில் இருந்த முழுக்கல் ‘அகிம்சாமூர்த்தி ‘ வைத்தியின் மூளை!
மதுவை ஒழிக்க பாடுபடுவர்களிடம் வந்து ஒரு ‘நூல்’ பிசகாமல் “நீ அகிம்சாவாதியா? ” என்று அளவு பார்க்கும் இந்த யோக்கியர் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, ” அசோகர் போரை வெறுத்தது தவறு, அர்ச்சுனனுக்கு போர் உபதேசம் செய்த கிருஷ்ணனை போல வாய்ப்பில்லாமல் போயிற்று, அணுகுண்டு வேண்டும்! என்று வல்லரசு வன்முறைக்கு மனதை பிசையும் கட்டுரையை கட்டம் கட்டி பிரசுரிப்பது ஏன்? அமித்ஷாவுக்கும், மோடிக்கும் இந்த பூணூல் அளவு பொருந்துமா? அடிபட்டவனிடம் வந்து அகிம்சை உபதேசம்! அடிப்பவனிடம் போய் கீதா உபதேசம்! இதுதான் அவாளின் ‘தர்மம்’! மாக்யவல்லி, காந்தி , ராஜாஜி என்று சுற்றி வளைப்பதை விட பேசாமல் டாஸ்மாக் கடைக்கு போலீசோடு போய் காவலுக்கு உட்காரலாம் வைத்தி. பின்னே! நிர்வாகத்தை எப்படி நடத்துவது?!

போராடும் மக்களிடம் வந்து வன்முறை கூடாது என்று நிபந்தனை விதிக்கும் இந்த நியாயவான், சமூக வன்முறையான மதுவை இறக்கிவிடும் அரசுக்கு மட்டும் எந்த நிபந்தனையும் இல்லாமல் வழங்கும் ஆலோசனை என்ன தெரியுமா? ” இலவசத்துக்கு விடுதலை தரவேண்டும், கல்லூரி, பள்ளி, வழிபாட்டுத்தலங்கள் அருகிலிருக்கும் மதுக்கடைகளை அகற்றி மெல்ல, மெல்ல ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்துக்கு கடைகளை கொண்டு செல்ல வேண்டும்…”.
ஊருக்கு உள்ளே, வெளியே எங்குமே மதுக்கடைகள் வேண்டாம் என்று தமிழகம் வீறு கொண்டு போராடும் தருணத்தில், நத்தம் விசுவநாதன் பதவிக்கே ஆபத்து வரும் வகையில் அம்மாவுக்கு உடனடி ஆலோசனை வழங்குகிறார் வைத்தி.
” ஊருக்கு வெளியே.. ஒதுக்குபுறத்தில்” முன்பு தாழ்த்தப்பட்டவர்களை வைத்த வர்ண கொடூரம் இப்போது பாட்டிலை மட்டும் வைத்தால் போதும் என்கிறது. “செத்தாலும் விட மாட்டான் புரோகிதன்” என்று பெரியார் எவ்வளவு சரியாகச் சொல்லி இருக்கிறார். சசிபெருமாள் மரணத்தின் அரசியலை எல்லோரும் மக்களுக்காக விரிவுபடுத்தும் வேளையில், இந்தச் சந்தர்ப்பத்திலும் ‘ ஊருக்கு வெளியே.. ஒதுக்குப்புறத்தில்’ என்பது மீண்டும் உழைக்கும் மக்கள் , தாழ்த்தப்பட்டவர்கள் தலையில் போதையை ஏற்றுவதைத் தவிர வேறென்ன?
உங்களுக்கு மயிலாப்பூர் ஊர் என்றால், எங்களுக்கு மாங்கொல்லை குடிசைகள்தான் ஊர், உங்களுக்கு திருவல்லிக்கேணி ஊர் என்றால், அயோத்திகுப்பம்தான் எங்கள் ஊர்… உங்களுக்கு புரசைவாக்கம் ஊர் என்றால், எங்களுக்கு புளியந்தோப்பு ஊர்.. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒதுக்குப்புறத்தில், ஊருக்கு வெளியே உழைக்கும் மக்களின் வசிப்பிடங்கள்.. இதில் எந்த ஊருக்கு வெளியே வைப்பது?
கடை கூடவே கூடாது என்று மக்கள் களம் காணும் இந்தநேரத்தில் .. இப்போதைக்கு இப்படி ‘கடையை வைத்துக்கொள்ளலாம்’ என்று அம்மாவுக்கே யோசனை வழங்குவதை விட ஒரு கொடிய வன்முறை இருக்க முடியுமா? கொள்கைகள் வேறாக இருக்கலாம், ஒரு குடிகாரனின் காலைத்தொட்டு குடிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்ட அறுபது வயது சசிபொருமாளையே வன்முறையாளர் என்று வாய்கூசாமல் கூறும் வைத்தியை விட ஒரு வன்முறையாளன் உலகில் உண்டா?
- துரை.சண்முகம்
மக்கள் அதிகாரம்: போலிசை விரட்டியடித்த கோவை மக்கள்!
கோவை மாநகரில் சாய்பாபா காலனி மிகவும் பரபரப்பான பகுதிகளுள் ஒன்று. அதில் காலனி ரோட்டை தாண்டி சற்றே இடது புறத்தில் தான் கருணாநிதி நகர் இருக்கிறது. இஸ்லாமிய மக்களும் ஒடுக்கப்பட்ட சமூகமான அருந்ததிய சமூக மக்களும் கணிசமான அளவில் நெருங்கிய நட்போடு வாழும் பகுதிகளுள் இதுவும் ஒன்று.
இந்து மதவெறி இயக்கங்களின் முக்கியப் பகுதியாக ஒரு காலத்தில் இருந்த பகுதி. எஸ்டிபிஐ போன்ற இயக்கங்களும் ஆங்காங்கே அலுவலகங்கள் திறந்துள்ளன. எனினும் இப்பகுதி மக்களின் வாழ்நிலை என்னவோ தினக்கூலிகளின் சிரமமான நிலையிலேயே இருக்கின்றது.
இந்த மக்களது அதிகாரம் தான் நிறுவப் பட வேண்டும் என்ற நியாயமான ஆசையுடன் தான் கருணாநிதி நகருக்குள் மக்கள் அதிகாரம் சார்பில் “மூடு டாஸ்மாக்கை” பிரச்சாரத்திற்கு சென்றோம்.
பகுதிக்குள் நுழைந்த இருபதாவது நிமிடம் மூன்று உளவுத் துறை போலீசார் வந்து நம்மை மறித்தனர்.
யார் நீங்க…? (தெரியாத மாதிரியே..!)
சார், நாங்க மக்கள் அதிகாரம் என்கிற அமைப்பிலிருந்து வந்திருக்கிறோம். டாஸ்மாக்கை மூட வேண்டும் என மக்களிடம் பிரச்சார இயக்கம் செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த மாதிரி கொட்டு (பறை) அடிக்காரதுக்கெல்லாம் அனுமதி வாங்கணும். இது போல பிரச்சாரம் செய்வதற்கும் அனுமதி வாங்கணும், கிளம்புங்க.
சார் பிரச்சாரம் செய்வதற்கெல்லாம் அனுமதி வாங்க வேண்டியதில்லை. நாங்க தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம்.
இப்போ இங்க பிரச்சாரத்துக்கு வந்துருக்கீங்கள்ல, இங்க பொறுப்பாளர் யாருன்னு சொல்லுங்க அவர் போன் நம்பர் சொல்லுங்க
‘ஏன் சார், மைக்கு வெச்சு பேசறதுக்கு தானே அனுமதி வாங்கணும் பறைக்கு வாங்க வேண்டியதில்லையே’ என ஒரு தோழர் கேட்க, ‘இல்ல தம்பி அதுக்கும் வாங்கணும் சட்டத்தில் அனுமதி இருக்கு’, ‘இது மாதிரி கேள்வியெல்லாம் கேட்க கூடாது, சரியா’
‘சரி சார் நாங்க பறை அடிக்கல’ ‘ஆனா, பிரச்சாரம் செய்வோம் அது எங்க உரிமை என்ன செய்ய முடியுமோ பண்ணிக்கங்க’
எனக் கூறிவிட்டு வாங்க தோழர் போலாம் என மீண்டும் பகுதிக்குள் நமது வேலையை தொடர்ந்தோம்.
அடுத்து என்ன சொல்லி நம்மை மடக்குவது எனப் புரியாமல் குழம்பியவாறு நின்று கொண்டிருந்தனர். சற்றே பணிந்தால் ஏறி மிரட்டலாம், இவனுக என்ன பேசுனாலும் எதிர்த்துப் பேசுறாங்களே என்று ரத்தினபுரி ஸ்டேசனுக்கு போன் பண்ணிவிட்டார்கள்.
நாம் அடுத்தடுத்து ஒரு நான்கைந்து வீடுகளை தாண்டுவதற்குள் அந்த குறுகலான சந்தில் பேட்ரோல் வண்டி டாடா சுமோ ஒன்றை கொண்டு வந்து நிறுத்தி நம்மைப் பின் தொடர்ந்தவாறே அங்கு பெருத்த நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டிருந்தார்கள். ஆனால் நம்மிடம் வந்து மேற்கொண்டு பேசுவதற்கு அவர்கள் யாரும் தயாரில்லை.
அடுத்து, நாம் மக்களிடம் பேசும் போது அருகில் ஒரு போலீஸ் வந்து நிற்பதும் நின்று கொண்டு நம்மையே உற்றுப் பார்ப்பதுமாக நடந்து கொண்டனர். பொது மக்கள் தர்ம சங்கடமான சூழ்நிலைக்குள்ளாக, நாம் பதிலுக்கு பொது மக்களிடம்,
‘பாருங்கம்மா, சாரு வந்து போலீஸ்காரரு. நாங்க டாஸ்மாக்கை மூடச் சொல்லி மக்கள் கிட்ட பிரச்சாரம் செய்யறோம். ஆனா, போலீஸ் வந்து எங்களை மிரட்டுது. இப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு சொல்றாங்க,’ என ஆரம்பிக்க,
அடுத்த வீட்டிலிருந்து மறுபடியும் வண்டிக்கு சென்று விட்டனர்.
அடுத்து செல்லும் வீடுகளுக்கெல்லாம் இடையே இப்படியே பிரச்சாரம் செய்தோம். அடுத்து இன்னொரு ரோந்து வண்டி வந்தது. அதில் தான் யாரோ பெரிய அதிகார வரப்போகிறார் எனப் பார்த்தால், அதிலிருந்து ஒரு எஸ்ஐ இறங்கி வந்தார்.
அது போக இதர உளவுப் பிரிவினர் இந்த வாக்குவாதத்தை வீடியோ எடுப்பதில் முனைந்தனர். இந்த மொத்தக் கும்பலும் எங்களை சுற்றி நின்று கொண்டு வாக்கு வாதத்தை துவங்கினர்.
நீங்க மக்களை தூண்டுறீங்க, கேன்வாஸ் பண்ணுறீங்க வன்முறைய தூண்டுறீங்க – டாஸ்மாக் முன்னாடி குழி வெட்டு ஒண்ணுக்கு அடின்னு எல்லாம் போட்ருக்கீங்க
இதுல என்ன சார் வன்முறை…?
தம்பி, இது கவர்மெண்டு கொள்கை. அதனால நீங்க அங்க போயி கேளுங்க.
சார் நூறு மனுக் கொடுத்தாச்சு. நூறு போராட்டம் பண்ணியாச்சு. உயர் நீதி மன்றமே இது அரசாங்கத்தோட கொள்கை முடிவுன்னு சொல்லிருச்சு. இனி எங்க போக சொல்றீங்க…
இல்ல, நீங்க சட்டவிரோதமாக கூடியிருக்கீங்க.
எது சட்டவிரோதம்?
இவர்களிடம் எவ்வளவு நேரம் பேசுவதென்று மக்களிடம் பதில் சொல்லத் துவங்கினோம். போலிசார் நம்மிடம் இது சட்ட விரோதமான கூட்டம் எனக் கூறினால், நாம் மக்களைப் பார்த்து நீங்களே சொல்லுங்க டாஸ்மாக்கை மூடச் சொல்லுறது சட்ட விரோதமா…? சொல்லுங்க என பேச வீடுகளுக்குள் இருந்த மக்கள் அனைவரும் வெளியே வந்து இதனை வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டனர். தெருவே திரண்டுவிட்டது. தோழர்களின் பேச்சுக்கள் மக்களுக்கு காவல் துறையின் இயல்பை புரிய வைத்தது. காவல் துறை காமெடி துறை ஆனதை பொறுக்காது உடனே நடவடிக்கையில் இறங்கினர்.
எல்லாம் ஸ்டேசனுக்கு நடங்க, நாங்க உங்களை அரெஸ்ட் பண்றோம்.
‘எதுக்கு அரெஸ்ட் பண்றீங்க, நாங்க என்ன தப்பு பண்ணினோம் நாங்க அரெஸ்ட் ஆக முடியாது’ என்று எதிர்த்து நின்றோம்.
உடனே, நம்மை வலுக்கட்டாயமாக இழுத்து ஜீப்பில் ஏற்ற முயன்றனர். நமது தோழர்கள் உடனே கைகளைக் கோர்த்துக் கொண்டு கைதாக மாட்டோம் என நிற்க, அதே சமயம் சுற்றி நின்றிருந்த மக்களில் சிலர்
‘அந்த பசங்க என்ன தப்பா சொல்லிட்டாங்கன்னு இப்பிடி போட்டு இழுக்கறீங்க…? அவங்க சரியாதான் சொல்றாங்க இங்க டாஸ்மாக்னால நாங்க படுற கஷ்டம் உங்களுக்கென்ன தெரியும்’ எனப் பேசத் துவங்க ஒரு உளவுப் போலிசு உடனே அந்த பெண்ணிடம் சென்று, ‘ஏம்மா, உனக்கு என்னமா தெரியும் போம்மா உள்ள’ என மிரட்டத் துவங்கினார்.
அடுத்தடுத்து சில பெண்களும் நமக்கு ஆதரவாக பேசத் துவங்க, தோழர்கள் மீதிருந்து கையை எடுத்து விட்டு எஸ்ஐ உயரதிகாரிக்கு போன் பண்ணப் போய் விட்டார்.
பொது மக்களில் நமக்கு ஆதரவாக பேசிய சிலரிடம் சென்று, ‘அவங்க மாவோயிஸ்டு’ ‘தீவிரவாதி’ என உளவுப் போலிசு கூற நம் தோழர் சத்தமாக ‘பாருங்கம்மா, நாங்க டாஸ்மாக்கை மூடச் சொல்லி பிரச்சாரம் பண்றோம் இவரு ஏதோ சம்பந்தமில்லாம மாவோயிஸ்டுனு சொல்லிகிட்டு இருக்காரு’ எனக் கூற மக்களும் ஆமோதித்தனர்.
இளவயது தோழர் ஒருவரிடம் உளவுப் பிரிவு, ஏன் தம்பி படிக்கிற வயசில உனக்கு எதுக்கு இதெல்லாம் என கேட்க, நம் தோழர், ’சார், நான் சின்ன வயசுனாலும் சரி எது தப்பு எதுன்னு பகுத்துப் பார்க்க தெரியும். நான் எல்லாம் தெரிஞ்சு தான் பண்றேன். உங்க வேலை என்னவோ அதை பாருங்க’ எனக் கூறிவிட்டார். “கால் வெக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி வெக்கிராணுகளே” என நினைத்து விட்டார் போலும் அந்த உளவுப் பிரிவு தனது பழைய வேலையான வீடியோ எடுக்கும் வேலைக்கே திரும்பி விட்டார்.
தேமே வென வேடிக்கை பார்க்கும் 10 போலீசார் வளைச்சு வளைச்சு வீடியோ எடுக்கும் 5 உளவுப் பிரிவு போலீசார் 2 பேட்ரோல் வண்டிகள் இன்னும் இரண்டு இருசக்கர பேட்ரோல் வண்டிகள் முன்னிலையில் அந்த தெருவே திரண்டு நின்று வேடிக்கை பார்க்க அந்தச் சின்ன தெருவில் நாம் மக்களை நோக்கிப் பிரச்சாரத்தை சத்தமாக செய்து கொண்டிருக்கிறோம். இடையில் எஸ்ஐ அருகே ஓடி வந்து,
‘இந்தாங்க இந்தாங்க ஏசி சார் பேசுராரு’ என செல்போனை நீட்டினார்.
ஏசி கிட்ட நீங்க பேசுங்க சார், நாங்க எதுக்கு பேசணும்..?, எனக் கேட்க மீண்டும் அவர் போய் விட்டார். அடுத்து, நமது பெண் தோழரை கைது செய்ய இன்னொரு பெண் போலீசை வரவழைத்தனர்.
அந்த பெண் போலீஸ், நம் தோழரையும் இந்த சம்பவங்களையெல்லாம் படம்பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியில் வசிக்கும் தினசரி நாளிதழ் பெண் நிருபரையும் துணியை பிடித்து இழுத்து மூர்க்கத்தனமாக இழுக்க ஆரம்பித்தார்.
வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் தங்கள் காம்பவுண்டுக்குள் இழுத்துக் கொண்டு, ‘ஏம்மா, இப்பிடி புடிச்சு இழுக்கறியே, உனக்கெல்லாம் அறிவில்ல நீயும் ஒரு பொம்பள தானா…’ எனக் கேட்க அந்த பெண் போலீஸ் அமைதியாக போய் ஜீப்பருகே நின்று கொண்டார்.
இறுதியாக, மூன்றாவது பேட்ரோல் வண்டியில் வந்த ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சூழலின் மனநிலை என்னவென அவதானிக்காமலே கூட்டமாக இருப்பதைப் பார்த்துவிட்டு வேனுக்குள் இருந்தவாறே மைக்கில்
‘இந்த இடத்தில் சட்டவிரோதமாக கூடியிருக்கிறீர்கள், எல்லோரும் உடனே கலைந்து போங்க’ என அறிவித்தார்.
நம் தோழர்கள் மீண்டும் ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டே சத்தமாக, ‘பாருங்கம்மா, பாருங்கையா இத்தனை நாளா நீங்க நின்னுக்கிட்டும் பேசிக்கிட்டும் இருந்த உங்க வீட்டு வாசலிலே நீங்க நிற்பது சட்ட விரோதம்னு போலீஸ் சொல்லுது, ஏன் அப்பிடி சொல்லுது ஏன்னா, டாஸ்மாக்கை மூடணும்னு சொல்றது நாம தானே, அப்ப போலீஸ் யாருக்கு சப்போர்ட்டு டாஸ்மாக்குக்கா மக்களுக்கா’ எனப் பேசத் துவங்க இன்ஸ்பெக்டர் உடனே வண்டியில் இருந்து இறங்கி வந்துவிட்டார்.
‘நீங்க அனுமதி வாங்கிட்டு தான் இது போலச் செய்யனும் அனுமதி வாங்காமா செய்யுறீங்க‘
‘எங்க கிட்ட அனுமதி வாங்கிட்டா டாஸ்மாக் வெச்சிங்க..? இவ்வளவு நேரம் இங்க என்ன நடந்துதுன்னே தெரியாம மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கறீங்க’
‘இல்லைங்க, நீங்க எழுதிக் குடுங்க., நானே கூட இருந்து உங்களுக்கு அனுமதி வாங்கித் தரேன்’ சொல்லுங்க நாளைக்கு காலைல எப்பவாறீங்க சொல்லுங்க உங்க கூடயே ஸ்டேசனுக்கு நானும் வரேன் உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லி நானே வாங்கித் தாரேன் சரியா தோழர்’ என பேசிக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்.
அதற்குள் பகுதிப் பெண்கள் சிலர் இன்ஸ்பெக்டரிடம், ‘உங்க கூட இருந்த பொம்பள போலீசு அந்த பெண்ணைப் போட்டு அப்பிடி இழுக்குது, துணியெல்லாம் வெளிய தெரிய போட்டு வெரு வெருன்னு இழுக்குது இதுக்கு அந்த பெண் போலீசு மன்னிப்பு கேட்கணும்’ எனக் கோரிக்கை வைத்தனர்.
‘எல்லார் சார்பிலேயும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்’ எனக் கூறி பிரச்சினையை எப்படியாவது காவல் துறைக்கு சாதகமாக மாற்ற இன்ஸ்பெக்டர் சாந்தமான முறையில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
இறுதியில் ‘பறையெல்லாம் அடிக்க வேண்டாம் சும்மாவே பேசுங்க’ என அவர் கூற, கண்டுகொள்ளாமல் பறையை முழங்க விட்டு, சத்தமாக அறிவித்தோம். பிரச்சாரம் ஆரம்பித்தது முதல் இப்போது வரை காவல் துறை எப்படியெல்லாம் அணுகியது காவல் துறை யாருக்கு சாதகமாக இருக்கிறது என்றும் மீண்டும் டாஸ்மாக்கை மூடும் வரை பிரச்சாரம் செய்வோம் என்றும் அறிவித்து விட்டு கலைந்தோம்.
அந்த தெரு முழுவதும் இருக்கும் மக்கள் அனைவரும் வெளியே நின்று நம்மை வழியனுப்பினர். ‘மீண்டும் கட்டாயம் வாங்க, நாளைக்கு வரும்போது பகலிலே வராதீங்க, நாங்கல்லாம் வேலைக்கு போயிருவோம். சாயங்காலமா வாங்க..!’ என மக்கள் கூறினார்கள். பகுதியில் இருந்த பல்வேறு கட்சியினரும் தோழர்களை வாழ்த்தினர்.
டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது மட்டுமல்ல, டாஸ்மாக் எதிர்ப்பு பிரச்சாரத்தை தடுப்பதும் போலிசின் கடமை போலிருக்கிறது. ஆனாலும் என்ன? அடுத்த நாள் காலையில் கோவை சாய்பாபா காலனி டாஸ்மாக் கடை மக்கள் அதிகாரம் தோழர்களால் நொறுக்கி மூடப்பட்டது. இந்த முறை கடை நொறுக்கும் போது போலிசு இல்லை. ஆனால் போலிசு வரும் வரை தோழர்கள் இருந்தார்கள் – கைது செய்யப்படுவதற்கு!
இன்று பிரச்சாரத்தை முடக்க நினைத்த போலீசின் அடக்குமுறையை முறியடித்த மக்கள் இறுதியில் அதிகாரத்தையும் கையில் எடுப்பார்கள்.

போலீசின் உடம்பில் ஓடுவது சாராயம் !
மக்கள் அதிகாரமே வெல்லும்!
போராடும் மாணவரை
ஒரு புழுவைப் போல் மிதிப்பதா?
தீராத புழுக்கத்தை தீர்க்க
வாராது வந்த மாணவக் காற்றை
வன் குருதியிலே நனைப்பதா!
போலீசின் அராஜகத்தை
பொது மக்கள் சகிப்பதா?
மாணவர் மேல் விழுந்த அடி
இந்த மாநிலம் மேல் விழுந்த அடி!
காவியங்கள் முடிவதில்லை…
கண்ணகி மதுரையை எரித்தது
சிலபதிகாரம் – எங்கள்
கண்மணிகள் மதுக்கடையை எரிப்பது
மக்கள் அதிகாரம்!
போராடும் தமிழகமே
நம் உதிரக்கொடியை உயர்த்திப்பிடி!
குடிமக்கள் சொல்கிறோம்
குடி வேண்டாமென்று!
எதற்குத் திறக்கிறாய்
மதுக்கடையை?
மக்களின் கருத்தை
மதிக்காதற்குப் பெயர் மக்களாட்சியா!
பச்சையப்பன் கல்லூரி
மாணவர் உடம்பில் வழியும் ரத்தம்
உலகுக்கே உணர்த்துகிறது
இது குடியாட்சி அல்ல
பச்சையான தடியாட்சி!
ஊருக்கே தெரிந்துவிட்டது
போராடுவனின்
உடம்பில் ஓடுவது ரத்தம்.
போலீசின் உடம்பில் ஓடுவது
சாராயம்.
படிக்கும் மாணவரைப் பிடித்து
சட்டையைக் கிழிப்பதும்
துடிக்கும் இளம் மாணவனின்
குரல் வளையை நெறிப்பதும்,
கிடக்கும் மாணவியரை
பூட்ஸ் காலால் உதைப்பதும்,
வளைத்து இளம் தளிரை
முகத்தில் குத்துவதும்,
இந்த வெறியாட்டத்திற்குப் பெயர்தான்
சட்டம் – ஒழுங்கு!
எம் செல்வங்கள்
செய்த தவறென்ன?
உயிர் குடிக்கும் பாட்டிலை
உடைப்பது வன்முறை என்றால்,
மக்கள் உயிர்காக்கும் மாணவரை
கல்லால் அடிப்பதும்
பாட்டிலால் அடிப்பதும்
பயங்கரவாதம் இல்லையா?
மயங்கி விழுந்த மாணவிக்கு
தண்ணீர் கொடுக்கும்
மாணவிகளையும் தடுத்து
அடித்து இழுப்பது
போலீசின்
மனிதாபிமான பயிற்சிக்கு
ஒரு மாதிரி!
மதுவை எதிர்க்கும்
மாணவ – இளைஞர்களை
கொலைவெறியோடு தாக்கும்
சீருடை அணிந்த சாராய ரவுடிகள்
செம்மரம் கடத்திய
டி.எஸ். பி. மீது
இவ்வளவு மும்முரம் காட்ட வில்லையே!
குற்றக் கும்பலுக்கு பாதுகாப்பு
குடியை எதிப்பவனுக்கு தடியடி….
இதுதாண்டா போலீசு – என
எடுத்துக் காட்டுகிறது அரசு!
இங்கே மட்டுமல்ல,
குடிதண்ணிர் கேட்டால் தடியடி…
மணல் கொள்ளை தடுத்தால் தடியடி…
கல்விக் கொள்ளை தடுத்தால் தடியடி….
போலீசு ஆளும் வர்க்கத்தின் மிதியடி
புரிந்து கொள்வோம்
மக்கள் அதிகாரம் ஒன்றே பதிலடி!
– துரை. சண்முகம்.
கிளிசரின் வெட்கப்படுகிறது !
அழகின் உயிர்ப்பு கண் என்றால்
உணர்ச்சியின் துடிப்பு கண்ணீர்…
கண்ணீர் எனப்படுவது
இரண்டு வகைப்படும்.
செந்நீரை பறிகொடுத்தும்
கண்ணீரை பரிதவித்தும்
சோகத்தில் குடியிருக்கும் மாந்தருக்கு
காலந்தோறும் உடனோடும் ஜீவநதி
கண்ணீர்…
வேடிக்கை பார்ப்போர்
அழுதாலொழிய
வேஷம் கட்டியோருக்கு
வயிறு நிரம்பாது!
அந்தக் கூத்தாடிகள்
பிதுக்கும் கண்ணீர்
ஒரு நடிப்புக் கலை!
சினிமாவில்
கண்ணீர் அருவியை
திறக்கும்
மந்திரப் பொருள்
கிளிசரின்.
பிகினி காலத்து
மாடல் பொம்மைகளுக்கு
கிளிசரின்கள்
டன் கணக்கில் தேவைப்படும்.
கிளிசிரினுக்கு
செலவு வைக்காமல்
கண்ணை குழாயென
திறந்து விடும்
பீம்சிங் காலத்து
கதை மாந்தர்களும்
ஒரு காலத்தில் இருந்தார்கள்.
ஆனால் நண்பா,
சோகத்தோடு சங்கிலி போட்ட
உழைக்கும் மக்களின் கண்ணீரோ
வேடத்திற்காக மை போட்ட
நடிகர்களின் மேக்கப் கண்ணீரோ
மட்டும் கண்ணீர் அல்ல!
புரட்சிக்கு புது ரூட்டு போட்டு
தலைவன் ஆண்ட
தலைவி ஆளும்
மண்ணில்
மற்றுமொரு கண்ணீர் உண்டு.
இவர்கள் ஏழைகளில்லை.
ஆனால் ஏழைகள்தான் இவர்களது மூலதனம்.
இவர்கள் நடிகர்களில்லை.
ஆனால் நடிப்புதான் இவர்களது சுபாவம்.
கிளிசரின் வாங்காமலே
கூத்துப் பட்டறை பயிற்சி இல்லாமலே
கேமரா கோணம் அறியாமலே
அழுகிறார்கள்…..அழுகிறார்கள்…..அழுகிறார்கள்….
எப்படிச் சாத்தியமிது?
புரட்சித் தலைவி
வரும் பாதையில்
கட்டவுட்கள் வைத்தார்கள்.
அவை காலாவதியாகி
பிளக்ஸ் பேனர்கள் வந்தன.
பிறகு தொலைக்காட்சி விளம்பரங்கள்….
துட்டை இறைத்து
காக்காய்களை காட்சிப்படுத்தும்
இந்த ஜோடனைகளெல்லாம்
அம்மாவின் அருளை
பெற்றுத் தர போதுமானதா?
இது குறித்து அவர்களுக்கு
யாரும் பாடம் எடுக்கவில்லை.
குனிந்தார்கள், வளைந்தார்கள்,
தொழுதார்கள், வாய் மூடீனார்கள்,
ஆயினும்,
ஊழல் திருட்டுக்காக
தலைவி சிறை சென்ற போது
முதன் முறையாக
அவர்கள் அதிகம் பயன்படுத்தியிராத
அழுகைக்கு வேலை வந்தது.
கவனியுங்கள் நண்பர்களே,
குறுகிய காலத்தில்
எங்கு அழ வேண்டும்?
எப்பொழுது அழ வேண்டும்?
எத்தனை லிட்டர் அழ வேண்டும்?
அழுதார்கள்,
அழுது காட்டினார்கள்.
சேக்ஸ்பியர் நாடக மைந்தர்களோ
செவாலியர் விருதுக் கலைஞர்களோ
ஒரு போதும்
நிகழ்த்த முடியாத அழுகை இது.
இந்த அழுகையின்
இரகசியம் அடிமைத்தனம்!
இந்த அழுகையின்
வெகுமானம் அமைச்சர் பதவி!
இந்த அழுகையின்
காப்புரிமை புரட்சித் தலைவி!
– காளமேகம் அண்ணாச்சி
கருப்பாயிருப்பவர் காரோட்டினால் மரண தண்டனை
அமெரிக்காவில் “கருப்பாக இருப்பவர் கார் ஓட்டினால்” என்ன நடக்கும்? அவரை சந்தேக கேஸ் என்று போலீஸ் தடுத்து நிறுத்தும். அப்படி தடுத்து நிறுத்தப்பட்ட பிறகு அவரிடம் சந்தேகத்துக்குரிய வஸ்துகள் உள்ளனவா என்று தேடிப் பார்க்கப்படுவார். போலீசுக்கு போதுமான பணிவையும், அடிபணிதலையும் காட்டா விட்டால், அவர் கைது செய்யப்படுவார். சிறையில் சில நாட்கள் அடைக்கப்பட்டு உயிரிழப்பார்.
சாந்த்ரா பிளாண்டுக்கு “கருப்பாக இருப்பவர் கார் ஓட்டினால்” என்ன நடக்கும் என்று நன்றாக தெரியும். அவர் கருப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக தொடர்ந்து இணையத்தில் எழுதி வந்தவர். “கருப்பர்களின் உயிருக்கும் மதிப்புண்டு” என்ற இயக்கத்தில் செயல்பட்டு வந்தவர்.
சிக்காகோவைச் சேர்ந்த சாந்த்ரா, ஜூலை 10-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரெய்ரீ வியூ பல்கலைக் கழகத்தில் வேலை நேர்முகத்துக்காக போயிருக்கிறார். கருப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், வெறுப்பு உணர்வும் வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று டெக்சாஸ்.
காரில் போய்க் கொண்டிருக்கும் போது, அவரைப் பின்தொடர்ந்து வேகமாக ஒரு போலீஸ் கார் வருவதை கவனித்திருக்கிறார் சாந்த்ரா. அந்தக் காருக்கு வழி விட்டு ஒதுங்குவோம் என்று தான் சென்ற பாதையை விட்டு விலகியிருக்கிறார். உடனே, துரத்தி வந்த போலீஸ் காரில் இருந்த பிரையன் என்சினியா என்ற காவலர், சாந்த்ராவின் காரை நிறுத்தியிருக்கிறார்.

சாலையில் பாதை மாறும் போது இன்டிகேட்டர் போடவில்லை என்பதற்காக குற்றப் பதிவு செய்யப் போவதாக சாந்த்ராவிடம் கூறுகிறார் பிரையன்.
இது போன்று போக்குவரத்து காவலர்களால் தேவையின்றி நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படுவது சாந்த்ராவுக்கு முதல்முறை அல்ல. போக வேண்டிய இடத்துக்கு தாமதமாகும் எரிச்சலுடன் அவர் பிரையன் தனது வேலையை முடிக்க காத்திருந்திருக்கிறார்.
பிரையனுக்கு அது வேடிக்கையாக இருந்திருக்கிறது. “என்ன ரொம்ப எரிச்சலா இருக்கறாப்ல” என்று கேட்டிருக்கிறார்.
“ஆமா, நான் உங்களுக்கு வழி விட்டு ஒதுங்கினா, அதில சிக்னல் பண்ணலன்னு நிறுத்தி வெச்சிருக்கீங்க. எப்ப என்ன போக விடுவீங்க. எவ்வளவு நேரம் நிக்கணும். அதான் எரிச்சல்” என்று விளக்கியிருக்கிறார் சாந்த்ரா.
தன்னை எதிர்த்து ஒரு கருப்பினப் பெண் பேசுவது பிரையனுக்கு கடுப்பேற்றியிருக்கிறது. சாந்த்ரா பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை அணைக்கும்படி சொல்கிறார்.
“என் காரில் நான் சிகரெட் பிடிக்கிறேன். ஏன் அணைக்கணும்” என்று கேட்கிறார் சாந்த்ரா.
“அப்படீன்னா, காரை விட்டு கீழே இறங்கு” என்று உத்தரவிட ஆரம்பித்திருக்கிறார், பிரையன்
“என்ன? லேன் மாறுவதற்கு சிக்னல் காட்டலைன்னுதானே என் தப்பு. அதுக்கான சீட்டை எழுதிக் கொடுங்க. அதுக்கு எதுக்கு நான் காரை விட்டு கீழ இறங்கணும். அப்படிச் சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை” என்று மறுத்திருக்கிறார், சாந்த்ரா.
“எனக்கு எல்லா அதிகாரமும் இருக்கு. நீயா இறங்குறியா, நான் வெளியே இழுத்து போடவா” என்று காருக்குள் கையை விட்டிருக்கிறார், பிரையன்.
“என்னைத் தொட்டா நடக்கிறதே வேற.” என்று சீறியிருக்கிறார் சாந்த்ரா.
“மரியாதையா கீழே இறங்கிரு” என்று ஸ்டன் துப்பாக்கியை நீட்டியிருக்கிறார் பிரையன்.
தன்னை என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை என்று தெரிந்த சாந்த்ரா, காரிலிருந்து கீழே இறங்குகிறார்.
“அந்தா அங்க போய் நில்லு. ஃபோனை ஆஃப் பண்ணு” என்று உத்தரவிடுகிறார் பிரையன்.
“நான் ஃபோன்ல பேச ஒண்ணும் செய்யல, இங்க நடக்கிறத பதிவு செய்றேன். அதுக்கு எனக்கு உரிமை இருக்கு” என்று கூறிய சாந்த்ராவுக்கு மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சாந்த்ரா செல்பேசியை காரின் மேல் அடித்து வைக்கிறார்.
“என்னை ஏன் கைது செய்றீங்க, அதுக்கு காரணம் என்ன” என்று கேட்கிறார் சாந்த்ரா.
அதற்கு பதில் சொல்லாமல், “நீ அந்தப் பக்கமா நில்லு, தள்ளி நில்லு” என்று அங்குமிங்கும் அலைக்கழிக்கிறார் பிரையன்.
இதுவரை நடந்தவை பிரையனது போலிஸ் காரில் இருந்த காமராவில் பதிவாகியிருக்கின்றன. அதன் பிறகு பிரையன் சாந்த்ராவை காமராவின் பார்வைக்கு வெளியே பக்கவாட்டு நடைபாதைக்கு தள்ளிச் செல்கிறார்.
“என்னை கீழே தள்ளிட்டீங்க, என் தலையை தரையில மோதுகிறீர்கள். எனக்கு தலை சுத்துது” என்று கதறுகிறார் சாந்த்ரா.
“நான் சொன்னதை கேக்கலேன்னா இப்படித்தான், மரியாதையை மண்டியிட்டு உட்காரு, கையை பின்னால கட்டு” என்று போலீஸ் அடாவடி செய்கிறார் பிரையன்.
அதைத் தொடர்ந்து இன்னொரு பெண் காவலரை ரேடியோவில் அழைக்கிறார், பிரையன். அவர் வந்த பிறகு, கைது செய்வதை தடுக்க முயற்சித்ததால்தான் சாந்த்ராவை கைது செய்ய வேண்டி வந்தது என்கிறார் பிரையன். அதாவது, கைது செய்வதை எதிர்த்த காரணத்தால் கைது செய்கிறாராம்.
சாந்த்ராவை போலீஸ் காரில் ஏற்றி விட்டு என்ன நடந்தது என்று தனது மேலதிகாரிக்கு சொல்கிறார், பிரையன். போக்குவரத்து விதியை மீறியதால் காரை நிறுத்தியதாகவும், வாக்குவாதம் ஆரம்பிக்கவே இறங்கச் சொன்னதாகவும், கைது செய்வதை தடுக்க முயற்சித்ததால், தாக்கியதாகவும், தன்னை அடிக்கவில்லை, ஆனால், தரையில் அழுத்திப் பிடித்த போது கையையும் காலையும் உதறினார் என்றும் விளக்குகிறார். இந்தக் குற்றங்களுக்காக சாந்த்ராவை கைது செய்வது என்று முடிவு செய்கிறது காவல்துறை.
டெக்சாஸ் மாநில போலீஸ் துறை சாந்த்ராவை ஜெயிலில் அடைக்க முடிவு செய்கிறது. அவரை விடுவிக்க $5,000 பிணைத் தொகை விதித்திருக்கிறது அந்த நாட்டு நீதிமன்றம். சிறையில் அடைக்கப்பட்ட சாந்த்ரா மூன்றாவது நாள் காலையில் ஒரு பிளாஸ்டிக் பையால் கழுத்து இறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.
சாந்த்ரா தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க நீதித்துறை முடிவு செய்திருக்கிறது. இது தற்கொலை அல்ல, ஒரு நிறவெறி படுகொலை என்று கொதிக்கின்றனர் கருப்பின மக்கள்.
ஆனால், அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு இருக்கும் ஜனநாயகம் இதுதான். அமெரிக்காவில் கருப்பின மக்கள் போக்குவரத்து காவலர்களால் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அப்படி நிறுத்தப்பட்ட பிறகு சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் பிற போதை மருந்துகள் இருக்கிறதா என்று தேடப்படுவதும் அந்த சாக்கில் தாக்கப்படுவதும் அதிகம்.
அமெரிக்காவின் காவல்துறை அதிகாரிகள் அதிவேக காரில் கிரிமினல்களை துரத்திக் கொண்டு செல்லும் அதிரடிக் காட்சிகள் தொடராகவே தொலைக்காட்சியில் காட்டப்படுகின்றன. ஆனால் கருப்பின மக்களைப் பொறுத்த வரை இதில் திகிலோ, சாகசமோ எதுவும் இல்லை, இது வெள்ளை நிறவெறித்திமிரின் ஆயுதம்.
அமெரிக்காவில் சிக்னல் மாறிச்செல்லும் கருப்பின மக்களுக்கு மரண தண்டனை சாந்த்ராவின் சோக முடிவு உலகுக்கு அறிவித்திருக்கிறது.
தொடர்புடைய செய்தி
விழுப்புரம் சாராய ரவுடிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – படங்கள், செய்தி
- விழுப்புரம் வி.மருதூர்- நரசிங்கபுரம் சாராய ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவோம்!
- கள்ளச்சாராய விற்பனைக்கு முடிவு கட்டுவோம்!
என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 28-07-2015 அன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வை சூறையாடுவதற்கு அரசே டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. மற்றொரு புறம் ஊர்தோறும் கள்ளச்சாராய விற்பனையும் போலிசின் ஆசியோடு படுஜோராக நடந்த கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் கடந்த மாதம் 29-ம் தேதி அன்று வி.மருதூரில் கள்ளச்சாராயம் விற்று கொண்டிருந்த ரவுடி கும்பலை அப்பகுதி இளைஞர்கள் எதிர்த்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி கும்பல் அப்பகுதி இளைஞர்களை தாக்கியதோடு இதனை தட்டிகேட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களையும் தாக்கினார்கள். அதோடு மட்டுமில்லாமல் அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். தொடர்ந்து தோழர் வீடு மற்றும் பகுதி இளைஞர்களின் வீட்டையும் அடித்து நொறுக்கி எரித்தும் விட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வந்தனர்.
இச்சூழலில் இப்பகுதி மக்களின் பயத்தை போக்குவதற்கும், ரவுடி கும்பலை ஒழித்துக் கட்ட, அவர்களின் அராஜகத்திற்கு முடிவு கட்ட 22-07-2015 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என திட்டமிட்டு 16-07-2015 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையிடம் விண்ணப்பித்தோம்.
அப்பொழுது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மணி, “DSP கிட்ட கேட்டு தாங்க சொல்ல முடியும் நீங்க 3 மணிக்கு வாங்க” என்று கூறினார். மீண்டும் 3 மணிக்கு சென்றோம்.
அப்பொழுது காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர் மட்டும் தான் பணியில் இருந்தார். அவரிடம் கேட்டதற்கு, “SI சார் இப்ப தான் DSP- யை பார்க்க சென்றிருக்கிறார். உங்களை 5 மணிக்கு வரச் சொன்னார்” என்று கூறினார்.
தோழர்கள் மீண்டும் 5 மணிக்கு சென்றனர். தோழர்களை பார்த்த SI மணி, “உங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என்றார்.
“ஏன், அதற்கான காரணத்தை ரிட்டனாக எழுதி கொடுங்கள்” என்று கேட்டதற்கு
“அதெல்லாம் எழுதி தர முடியாது நீங்கள் ஹையர் ஆபிசரை கூட பார்த்துக்கொள்ளுங்கள்” என்று திமிராக கூறி சென்று விட்டார்.
பிறகு DSP –யிடம் அனுமதி கேட்கலாம் என்று DSP பீமராஜை சந்தித்தோம். அவரோ தனது வண்டியில் இருந்தபடியே, “உங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கிறோம்” என்று கூறினார்.
ஏன் என்று கேட்டதற்கு “இந்து – முஸ்லீம் கலவரம் நடக்கிறது இந்தச் சூழலில் தர முடியாது என்று கலவரத்திற்கும் நமது ஆர்ப்பாட்டத்திற்கும் சம்பந்தமே இல்லாத பதிலை கூறினார்.
“அப்படி என்றால் நீங்கள் ரிட்டனாக எழுதி கொடுங்கள்” என்று கேட்டதற்கு
“நான் ஒரு கண்காணிப்பு அதிகாரி மட்டும் தான். நீங்க என்னையே எழுதி தர சொல்லுறிங்களா? அதெல்லாம் தர முடியாது” என்று அதிகார போதையில் பேசிவிட்டு வண்டியை எடுத்து கொண்டு ஓடி விட்டார்.
அப்பொழுதே தெரிந்து விட்டது DSP பீமராஜ் கள்ளச்ச்சாராய கூட்டுக் களவாணி, இவர்களிடம் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று. நகர காவல் நிலையத்திற்கு பதிவுத் தபாலில் மனு அனுப்பினோம். 18-ம் தேதி நம்மை அழைத்து DSP மறுப்பு கடிதம் கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு மனு போட்டோம். திட்டமிட்ட தேதியில் ஆர்ப்பாட்டம் என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம். சுதாரித்துக் கொண்ட காவல் துறை 22–ம் தேதி நம்மை அழைத்து “ ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தருகிறோம் வேறு இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றனர்.
நாமும் பரிசீலித்து 28-07-2015 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்தோம்.
ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை திரட்டுவதற்காக அப்பகுதி மக்களிடம் பெருந்திரளான தோழர்கள் 26, 27 –ம் தேதிகளில் வி.மருதூர் மற்றும் நரசிங்கபுரம் ஒட்டியுள்ள அனைத்து பகுதியிலும் செங்கொடி ஏந்தி வீடு வீடாக பிரச்சாரம் செய்தனர்.
திட்டமிட்டவாறு 28-07-2015 செவ்வாய் அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் செயலர் தோழர் மோகன்ராஜ், “கள்ளச்சாராயத்தால் மாணவ இளைஞர்கள், பெண்கள், குடும்பங்கள் என சகலமும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் கள்ளச்சாராயத்தையும், கள்ளச்சாராய ரவுடிகளையும் பாதுகாப்பது காவல்துறை தான்” என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.
அடுத்ததாக கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணி விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர், “கள்ளச்சாராய ரவுடிகள் தாக்கப்பட்டதற்கும் தோழர் செல்வக்குமார் குடும்பத்தினருக்கும் சம்பந்தமே இல்லை. ரவுடிகள் தாக்கப்பட்ட இடத்தில் தோழர் செல்வக்குமார் இல்லவே இல்லை. அப்படி இருக்கும் பொழுது செல்வக்குமார் தான் அடித்தார் என ரவுடிகள் சொல்வதற்கு காரணமென்னவென்றால், காவல்துறைக்கும், கள்ளச்சாராய ரவுடிகளுக்கும் தோழர் மீதுள்ள காழ்ப்புணர்வு வெறி தான் காரணம்.

தொடர்ந்து மாணவர், இளைஞர்களை கல்வி உரிமைக்காகவும், அநீதிக்கெதிராகவும் போராட மாணவர்களை நல்வழிப்படுத்துவது காவல்துறைக்கு பிடிக்கவில்லை. அந்தப் பகுதியில் கள்ளச்சாராய விறபனையை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இது தான் தோழர் மீதும், வீட்டின் மீதான கொலைத் வெறித்தாக்குதலுக்கு அடிப்படை. இவ்வாறு தாக்கினால் அமைப்பையும் தோழர்களையும் சிதைத்து விடலாம் என்று கோட்டை கட்டுகின்றனர். அது மட்டும் முடியாது.
1997-ல் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் இயக்கம் எடுத்து ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினோம். நாங்கள் யாருக்கும் பயந்தவர்கள் அல்ல. வெள்ளையனை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்கின் வாரிசுகள். கீழ்வெண்மணி படுகொலைக்கு காரணமான கோபாலகிருஷ்ணுக்கு தண்டனை வழங்கிய நக்சல்பாரிகளின் வாரிசு நாங்கள்” என்று கூறி முடித்தார்.
இறுதியாக கண்டன உரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.தோழர் ராஜு பேசுகையில், “அம்மா டாஸ்மாக்கிற்கு நிகராக விழுப்புரத்திலே கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு நாளைக்கு 30 கேஸ் நீதிமன்றத்திற்கு வருகிறது. இருப்பினும் கள்ளச்சாராய விற்பனை குறையவில்லை என்றால் காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது.

ஒரு கள்ளச்சாராய ரவுடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு சென்றால், பாதிக்கப்பட்டவர்கள் மீதே, காவல் துறை வழக்கு பதிகிறது. DSP பீமராஜ் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலைய எல்லையில் தான் கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது அதனை ஒழிக்க துப்பில்லை. ஆனால் தோழர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்.
இப்பொழுது நேர்மையானவர்கள் காவல் நிலையத்திற்கு தனியாக செல்ல பயப்படுகிறார்கள். ஆனால்,ரவுடி, கிரிமினல் எல்லாம் சர்வ சாதாரணமாக போலிஸ் ஸ்டேசனுக்கு செல்கிறார்கள். ரவுடிகளை பாதுகாக்கக் கூடிய இடமாக மாறிவிட்டது காவல் நிலையம். செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட கிரிமினல் DSP யை பாதுகாப்போடு மாஜிஸ்ரேட்டிடம் கொண்டு சென்றது காவல்துறை.
நாடு முழுவதும் நடக்கும் கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை என அனைத்தும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிந்து தானே நடக்கிறது. பொதுப்பணித்துறையில் இருந்து அனைத்து துறைகளும் மணல் கொள்ளைக்கு ஆதரவாக தானே செயல்படுகிறார்கள். இதனை தடுக்க முடிந்ததா காவல் துறையால் என்றால் இல்லை. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டால் மட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மறுக்கிறதே யாரை ஏமாற்றுவதற்கு?
வெள்ளாற்றிலே மணல் கொள்ளைக்கு எதிராக மக்களை திரட்டி நாங்கள் போராடும் பொழுது நூற்றுக்கணக்கிலே போலிசை குவித்து மக்களை மிரட்டுகிறார்கள். மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணி துறையும் சட்டப்படி தான் மணல் அள்ளுகிறார்கள் என்கிறது. சட்டவிரோத மணல் கொள்ளைக்கு அதிகாரிகள் அத்துணை பேரும் துணை போகிறார்கள். இருப்பினும் மக்களின் துணையோடு அந்த மணல் குவாரியை நிரந்தரமாக நாங்கள் மூடினோம். அரசோ,காவல் துறையோ மூடவில்லை.
மத்திய பிரதேசத்திலே “வியாபம்” ஊழல், தமிழகத்திலே 43 DSP நியமனத்தில் ஊழல் என்று அரசு நிர்வாகமே ஊழலில் நாறுகிறது. நீதிபதிகள் முதல் தலையாரிகள் வரை மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். இந்த அரசுக் கட்டமைப்பு எனும் இந்த வீடே சிதைந்து போய் விட்டது. இதனை இடித்து விட்டு புதிய வீடு கட்ட வேண்டும். அதுபோல் நமக்கான அரசை நாமே உருவாக்க வேண்டும்” என்று கூறி முடித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெண்கள், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், மாற்றுக்கட்சியினர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், டூ வீலர் பழுது பார்ப்போர் சங்கம் என பலரும் கலந்து கொண்டனர்.
மொத்தத்தில் இந்த ஆர்ப்பாட்டம் கள்ளச்சாராயம், டாஸ்மாக் கடைகளை ஒழித்துக் கட்டும் விதமாகவும், மக்களுக்கு உதவாத வெற்று சதைப்பிண்டமான இந்த அரசுக் கட்டமைப்பை தகர்த்தெறியும் விதமாகவும் மக்கள் மத்தியில் ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்
















