Friday, November 15, 2019
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் தோல் தொழிற்சாலை பயங்கரங்கள் - அல் ஜசீரா வீடியோ

தோல் தொழிற்சாலை பயங்கரங்கள் – அல் ஜசீரா வீடியோ

-

Take a Sweatshop, Add Toxic Chemicals, And You Get This

ராணிப்பேட்டை சிப்காட் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், கடந்த 30-ம் தேதி நள்ளிரவு இரசாயனச் சேறு நிரப்பி வைத்திருந்த தொட்டி உடைந்து சுனாமி போல சேறு வெளியானதில் அருகில் இருந்த ஆர்.கே தோல் தொழிற்சாலையில் தூங்கிக் கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பான விபரங்களை வினவில் வெளியிட்டிருந்தோம்.

கந்தக அமிலம், ஃபார்மிக் அமிலம், சுண்ணாம்பு போன்ற அமில, கார வேதிப் பொருட்கள், சாதாரண உப்பு (சோடியம் குளோரைடு), சோடியம் சல்ஃபைடு போன்ற நிலத்தை நிரந்தரமாக மலடாக்கி விடும் உப்புகள், , குரோமியம் உப்புகள், சாயப் பொருட்கள், கொழுப்பு வேதிப் பொருட்கள் என நீரை நச்சாக்கும் வேதிப் பொருட்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வேதிப் பொருட்கள் தோல் பதனிடுதலில் பயன்படுத்தப்படுகின்றன. பயன்படுத்தப்படும் இரசாயனங்களில் சுமார் 20% மட்டுமே இறுதியாக பயன்படும் தோலில் சேர்கிறது; 80% கழிவு நீரில் வெளியேற்றப்படுகிறது.

வங்கதேச தொழிலாளர்கள்எளிதில் அழுகிவிடும் தோல்களையும், அரிக்கக் கூடிய நச்சுத் தன்மையுடைய இரசாயனங்களையும் பயன்படுத்தும் தோல் தொழிற்சாலைகளுக்குள் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமை ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் அனைத்திலும் ஒரே போலத்தான் உள்ளது. அந்த வகையில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் ஹசாரிபாக் பகுதியில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள் பற்றிய இந்த வீடியோ நம் நாட்டில் ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கொல்கத்தா, கான்பூர், போன்ற பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளின் நிலைமைகளுக்கு ஒரு வகைமாதிரியாக உள்ளது.

வங்கதேச தொழிலாளர்கள்மேலும், ராணிப்பேட்டை தொழிற்சாலைகளில் வடமாநிலத் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தி, தொழிற்சாலைகளிலேயே தங்க வைத்து வேலை வாங்குவதன் மூலம் அவர்கள் மீதான பாதிப்பு பல மடங்கு அதிகமாக உள்ளது.

நிலம், நீர், காற்று உள்ளிட்ட சுற்றுச் சூழல் மாசுபடுதலைப் பொறுத்த வரை, ஹசாரி பாக் பகுதி இப்போது எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை 1990-களில் இந்திய தோல் துறை சந்தித்தது. அவற்றுக்குத் தீர்வாக உள்நாட்டு, வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியுடனும் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தனி அல்லது பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன; அடுத்தடுத்த கட்டங்களாக ஒரு சொட்டு நீரைக் கூட வெளி விடாத சுத்திகரிப்பு நுட்பம் (எதிர் சவ்வூடுபரவல் நுட்பம்), திடக் கழிவு மேலாண்மை, இரசாயனக் கழிவுச் சேற்றை கையாளுதல் என செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வங்கதேச தொழிலாளர்கள்ஆனால், ராணிப்பேட்டை சிப்காட் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய விபத்து அம்பலப்படுத்தியது போல, தோல் கழிவுகளை முறையாக கையாள்வது, அதன் மூலம் நிலம், நீர் பாதிக்கப்படாமல் பாதுகாப்பது என்பது எட்டாக்கனவாகவே உள்ளது. சுற்றுப் புற பகுதிகளில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு நிலத்தடி நீர் குடிக்க முடியாத அளவுக்கு நஞ்சாகியிருப்பது, விவசாயம் செய்ய முடியாமல் நிலம் பாழாவது, காற்று மாசுபடுதல் என்று சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடாகவே இந்த தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதைக் கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முதலான அரசு உறுப்புகளோ தமது கடமையை நிறைவேற்றாமல், பெயரளவு கண்காணிப்பு அதிகாரத்தை லஞ்சம் சம்பாதிக்கும் வாய்ப்பாக பயன்படுத்தி, இந்த பேரழிவுக்கு உடந்தையாக இருக்கின்றன.

இத்தகைய அழுக்கான, சுற்றுச் சூழலுக்கும், மக்கள் நலனுக்கும் கேடான தொழில்களை மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டி விட்ட ஐரோப்பிய, அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களோ, தமது சொந்த நாட்டு மக்களின் (நுகர்வோரின்) எதிர்ப்புகளுக்கும், மூன்றாம் உலக நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டங்களையும் சமாளிப்பதற்கு பல்வேறு சீர்திருத்தங்களை முன் வைக்கின்றன. ஐ.எஸ்.ஓ 14000 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சான்றிதழ், தொழிலாளர் நல ஆய்வு, பாதுகாப்பு முறைகளை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் பிரச்சனைக்கு திரை போட்டு மூட முயற்சிக்கின்றன.

வங்கதேச தொழிலாளர்கள்

ஆனால், குறைந்த விலைக்கு பொருட்களை செய்து வாங்கிக் கொள்ளும் அவர்களது நோக்கத்துக்கு தொழிலாளர் உரிமைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு இவற்றை உறுதி செய்வது எதிராக உள்ளது.

இந்த நிலையில், இந்த வீடியோ படம் பிடித்து காட்டும் அவலத்தையும், எதிர்கால பிரச்சனைகளையும் எதிர் கொள்ள அதற்காக நியமிக்கப்பட்ட அரசு உறுப்புகள் செயலிழந்து, சீரழிந்து போயிருக்கும் நிலையில் தோல் துறை தொழிலாளர்களும், பகுதி மக்களும் அமைப்பாகத் திரண்டு இவற்றை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை தாமே கையில் எடுப்பதுதான் தீர்வாக இருக்க முடியும்.

வங்கதேச தொழிலாளர்கள்வீடியோ, படங்கள் : நன்றி அல் ஜசீரா

இது தொடர்பான செய்தி

Ranipet-Thiruvannamalai-Hrpc-Poster

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க