Friday, November 15, 2019
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் மணல் கொள்ளை: தமிழகத்தைக் கவ்வியிருக்கும் பயங்கரவாதம் !

மணல் கொள்ளை: தமிழகத்தைக் கவ்வியிருக்கும் பயங்கரவாதம் !

-

மிழகத்தில் நடைபெற்று வரும் மணற்கொள்ளையில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இதனை முன்நின்று நடத்துவது தமிழக அரசு என்பதுதான். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலெல்லாம், மணல் குவாரி தனியாருக்குக் குத்தகைக்கு விடப்படுகிறது. தமிழகத்தில் மட்டும்தான் மாநில அரசின் பொதுப்பணித்துறையே மணல் குவாரிகளை நடத்தி வருகிறது.

மணல் மாஃபியா
புற்றீசலாய் படையெடுத்துள்ள லாரிகள்… காவிரி ஆற்றுப் படுகையில் பகிரங்கமாக, எதற்கும் துணிந்து நடக்கும் மணற்கொள்ளை!

தனியார் மணற்கொள்ளைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில், மணற்கொள்ளை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை ஆராவதற்கு வல்லுநர் குழுவொன்றை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம். பாதிப்புகளை ஆராந்த வல்லுநர் குழு, மணற்குவாரிகளை அரசே ஏற்று நடத்துவதன் மூலம்தான், சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுத்து நிறுத்த முடியும் என்று பரிந்துரைத்தது.

உடனே மணல் குவாரிகளைப் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதாக அக்டோபர் 2003-ல் அரசாணை பிறப்பித்தது ஜெ. அரசு. மணல் குவாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுவதால், ஆறுகள் நாசமாக்கப்படாமல் பாதுகாக்கப்படுமென்றும், மணல் விற்பனையின் மூலம் அரசின் வருவாய் அதிகரிக்கும் என்றும் வீடு கட்டுபவர்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்கும் என்றும் பிரமைகள் பரப்பப்பட்டன.
உண்மையில் நடந்தது வேறு. பல மணற்கொள்ளையர்களின் வேட்டைக்காடாக இருந்த தமிழக ஆறுகள், ஜெயா-சசி கும்பல் என்ற ஒரு கொள்ளைக் கும்பலின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. அதன் பின்னர் 2007-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஆளும் கட்சி என்ற முறையில் கொள்ளைக்கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அந்த வகையில் மணற்கொள்ளை அரசுடைமையாக்கப்பட்டது.

மன்னராட்சிக் காலத்தில், குடிமக்களைக் கொள்ளையடிக்கும் உரிமையைக் குறுநில மன்னர்களுக்கும் பாளையக்காரர்களுக்கும் வழங்கி விட்டு, அவர்களிடமிருந்து கப்பம் வசூலித்துக் கொண்ட சக்கரவர்த்திகளைப் போல, மணற்கொள்ளையைக் குத்தகைக்கு விட்டது ஜெ-சசி கும்பல். அரசிடம் லாரிகள் இல்லாத காரணத்தினால், லாரிகள் வைத்திருப்பவருக்கு மணல் அள்ளும் குத்தகையை வழங்குவதாகக் கேலிக்கூத்தானதொரு விளக்கம் அளித்து, ஆறுமுகசாமி என்ற நபரிடம் தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகளில் மணல் அள்ளுவதற்கான லிப்டிங் அண்டு லோடிங் காண்டிராக்டை வழங்கியது ஜெ. அரசு. திருட்டை அவுட் சோர்ஸ் செயும் இந்த ஏற்பாட்டின் மூலம், கையில் கறை படாமல் திருடமுடிவதால் தி.மு.க. ஆட்சியிலும் இந்த ஏற்பாடு தொடர்ந்தது.

மணல் மாஃபியா
சட்டபூர்வமான பதுக்கலின் மறுபெயரே மணல் யார்டு

2004 முதற்கொண்டே மணற்கொள்ளை புதிய பரிமாணத்தை அடைந்தது. மண்வெட்டிகள் இருந்த இடத்தில் பொக்லைன் எந்திரங்கள் நுழைந்தன. அள்ளப்படும் மணலைக் குவித்து வைத்து, கொள்ளை லாபம் அடிக்கத் தோதாக  ஸ்டாக் யார்டுகள் உருவாக்கப்பட்டன. யூனிட் (100 கன அடி) ஒன்றுக்கு ரூ 315 என்பது மணலுக்கு 2003-ல் பொதுப்பணித்துறை நிர்ணயித்த விலை. அன்று அதைப்போல சுமார் பத்து மடங்கு இருந்த மணலின் சந்தை விலை இன்று 100 மடங்குக்கும் மேலாக உயர்ந்து விட்டது.

வெளி மாநிலங்களுக்கு மணலைக் கடத்துவதற்கு எதிராக ஆங்காங்கே மக்கள் போராடுவதும், லாரிகளைச் சிறைப் பிடிப்பதும் நடக்கவே, மணல் கடத்தலுக்கு எதிராக ஒரு கண் துடைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், இன்றைக்கும் கேரளத்துக்கும் கர்நாடகத்துக்கும் நாள் தவறாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மணலைக் கடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. சட்டப்படி ஆற்றுமணலை பிற மாநிலங்களுக்கு அனுப்ப முடியாது என்பதால், மணலுடன் சிறிதளவு சிமெண்டைக் கலந்து “மதிப்புக்கூட்டப்பட்ட மணல்” என்ற பெயரில் சட்டப்படியே மணல் கடத்தப்படுகிறது.

வெளி மாநிலங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் மணல் கடத்தப்படுகிறது. இது கட்டுமானத் தேவைகளுக்கானது மட்டுமல்ல, விவசாயத்தையே பெயர்த்து ஏற்றுமதி செய்வது போல; காவிரி டெல்டாவின் வளமிக்க வண்டல் மண் உள்ளிட்ட தமிழகத்தின் வளமிக்க ஆற்று மணல் துபாய், மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. இவ்வாறு கடத்தப்படும் மணலின் அளவு என்ன, அதன் மதிப்பு என்ன, பயன்பாடு என்ன, சந்தை விலை என்ன என்பவையெல்லாம் யாரும் அறியாத மர்மங்கள்.

ஆகஸ்டு 2012-ல் சி.என்.என்.-ஐ.பி.என் தொலைக்காட்சி தமிழகத்தில் நடத்திய ஆய்வின்படி நாளொன்றுக்கு குறைந்தபட்சம் இரண்டு லட்சம் டன் ஆற்றுமணல், பொதுப்பணித்துறையின் கணக்கில் வராமல் கடத்தப்படுவதாகக் கூறுகிறது. தமிழகத்தில் ஓடுகின்ற சுமார் 50,000 மணல் லாரிகளில் மூன்றில் இரண்டு பங்கு லாரிகளுக்கு பர்மிட் கிடையாது என்பதும், ஒரே பர்மிட்டில் குறைந்த பட்சம் மூன்று லாரிகள் ஓடுகின்றன என்பதும் நாடறிந்த இரகசியங்கள்.

2011-21-ம் ஆண்டில் மொத்தம் 31,33,932 லாரி லோடு மணல் (ஒரு லோடுக்கு 2 யூனிட்) விற்கப்பட்டதாகவும், அதிலிருந்து அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ 188.03 கோடி என்றும் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரம் கூறுகிறது. (தி இந்து, செப் 3, 2012). இதன்படி பார்த்தால் சராசரியாக நாளொன்றுக்கு 8586 லாரி மணல் மட்டுமே அள்ளப்பட்டிருக்கிறது என்று ஆகிறது. 2012-ல் சி.என்.என். தொலைக்காட்சி நடத்தியிருக்கும் ஆய்வோ நாளொன்றுக்கு 20,000 லாரி மணல் கணக்கில் வராமல் கடத்தப்படுவதாக கூறுகிறது.

இயற்கை வளக் கொள்ளையர்
மணற் கொள்ளையன் ஆறுமுகசாமி, கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பழனிச்சாமி, இரும்பு கனிமக் கொள்ளையன் ஜனார்தன ரெட்டி.

உண்மையில் தமிழகத்தில் நடைபெற்றுவரும் மணற்கொள்ளையின் அளவு என்ன?  இது பொதுப்பணித்துறை காட்டுகின்ற கணக்கைக் காட்டிலும் நிச்சயமாகப் பத்து மடங்கு அதிகமாக இருக்கும். கார்மாங்குடியில் உள்ள வெள்ளாறு மணல் குவாரியில் நடைபெற்று வந்த மணல் கொள்ளையை ஒரு மாதிரியாக (model) வைத்துப் பார்க்கும்போது மேற்கண்ட மதிப்பீட்டுக்கு நாம் வர முடிகிறது.

எந்த ஒரு ஆற்றிலும் மணல் அள்ளும் அனுமதி வழங்க கீழ்க்கண்ட அளவீட்டு முறையைப் பொதுப்பணித்துறை பின்பற்றுகிறது. உலக இடங்காணல் கருவியின் (Global positioning system set) துணை கொண்டு இத்தனை டிகிரி அட்சக்கோடுக்கும் தீர்க்கக் கோட்டுக்கும் இடையில் உள்ள, இன்னின்ன கிராமங்களின் எல்லைக்குள் வருகின்ற, இன்ன சர்வே எண்ணில் உள்ள, இத்தனை ஹெக்டேர் பரப்பளவுள்ள ஆற்றுப் பகுதியில் மணல் அள்ளிக் கொள்ளலாம் என்று பொதுப்பணித்துறை தனது அனுமதியில் குறிப்பிடுகிறது. இதனைப் பரிசீலிப்பதுடன், சூழலியல் தொடர்பான கட்டுப்பாடுகளையும் விதித்தபின் மாநில சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State level Environment Impact assessment authority) ஒப்புதல் அளிப்பதாக சொல்லப்படுகிறது.

அந்தக்  குறிப்பிட்ட எல்லைக்குள், “ஆற்றுப்படுகையின் மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ள வேண்டும்; ஒரு மீட்டர் ஆழத்திலேயே தண்ணீர் ஊற்றெடுக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் மணல் அள்ளக்கூடாது. மணல் எடுக்கும் பகுதியை அடையாளம் காட்டும் விதத்தில் தூண்கள் நடப்பட்டு சிவப்புக் கொடி கட்டப்படவேண்டும். ஆற்றின் இருபுறமும் கரையிலிருந்து 50 மீட்டர் தூரம் வரையில் மணல் அள்ளக்கூடாது; மனித உழைப்பைப் பயன்படுத்தித்தான் மணலை அள்ளவேண்டும்” என்பன போன்ற விதிமுறைகளைக் குறிப்பிடுவதுடன், மொத்தம் எத்தனை கன மீட்டர் மணலை அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்பதும் அந்த உத்தரவில் குறிப்பிடப்படுகிறது.

இயற்கை வளக் கொள்ளையர்
கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்ட கனிமவளங்களைச் சூறையாடும் ‘தேசிய’க் கொள்ளையர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி.

மேற்சோன்ன விதிமுறைகளுக்கு உட்பட்டு கார்மாங்குடி கிராமத்தில் வெள்ளாற்றில், மூன்றாண்டு காலத்தில், 19.1 ஹெக்டேர் பரப்பளவில், 1,91,000 கனமீட்டர் மணலை அள்ளுவதற்கு பொதுப்பணித்துறையும், மாநில சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும் அனுமதி அளித்துள்ளன. ( Lr. No.SEIAA&TN/F.No. 1669/EC/1(a)/ 953 /2013 dated: 09.01.2014 )
தமிழகத்திலுள்ள எல்லா குவாரிகளையும் போலவே, கார்மாங்குடி குவாரியிலும் எந்தவித நிபந்தனையும் பின்பற்றப்படவில்லை என்பதுடன், அனுமதி அளிக்கப்பட்ட 19.1 ஹெக்டேர் எல்லைக்கு வெளியே வரைமுறையின்றி ஆக்கிரமிப்பு நடந்திருக்கிறது.

மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளின் பரப்பளவை ஜி.பி.எஸ். கருவியின் மூலம் அடையாளம் கண்டு அளந்திருக்கின்றனர். பல இடங்களில் 35 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டு, ஆறே ஒரு திறந்தவெளிச் சுரங்கமாகக் காட்சியளிக்கிறது. இத்தகைய பிரம்மாண்டமான பள்ளங்களின் நீள, அகலம் மற்றும் ஆழத்தையும் அளந்து உத்தேசமாக எத்தனை கன மீட்டர் மணல் அள்ளப்பட்டிருக்கிறது என்றும் கணக்கிட்டிருக்கின்றனர்.

குவாரி இயங்கத் தொடங்கி பத்து மாதங்களாகின்றன. மூன்றாண்டு காலத்தில் மண்வெட்டியின் துணை கொண்டு மனித உழைப்பை பயன்படுத்தி எடுக்கப்படவேண்டிய மொத்த மணலையும், அதாவது அனுமதிக்கப்பட்ட 1,91,000 கனமீட்டர் மணலையும், பொக்லைன் எந்திரங்களைப் பயன்படுத்தி முதல் மாதத்திலேயே அள்ளி முடித்து விட்டனர்.

அதன் பிறகு, அடுத்த 9 மாத காலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைப் போல பத்து மடங்கு மணல் அள்ளப்பட்டிருக்கிறது. இதேநிலையில் மூன்றாண்டு காலம் முழுவதும் இந்தக் குவாரி இயங்க அனுமதிக்கப்பட்டால், அனுமதிக்கப்பட்டதைப் போல 36 மடங்கிற்கு மேல் மணல் அள்ளப்பட்டுவிடும். இருந்தபோதிலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே மணல் எடுக்கப்பட்டதாகத்தான் பொதுப்பணித்துறை கணக்கு காட்டும். 2012-ம் ஆண்டு முழுவதும் 31,33,932 லாரி மணல்தான் அள்ளப்பட்டிருக்கிறது என்று பொதுப்பணித்துறை கொடுக்கும் கணக்கு இத்தகையதுதான்.

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குவாரியிலும் அனுமதிக்கப்பட்ட அளவைப் போல 10 மடங்கிற்கும் மேல் மணல் அள்ளப்படுகிறது. பொதுப்பணித்துறை நிர்ணயித்துள்ள விலையைப் போல 100 மடங்கு விலைக்கு சந்தையில் விற்கப்படுகிறது. இந்தக் கணக்கின் படி 2004 முதல் இன்றுவரை தமிழகத்தில் நடந்துள்ள மணல் கொள்ளையின் பண மதிப்பு பல இலட்சம் கோடி ரூபாய்களாக இருக்கும்.

இரும்பு, நிலக்கரி, பாக்சைட், கனிம மணல், கிரானைட் உள்ளிட்ட கனிமச் சுரங்கங்கள் எல்லாவற்றிலும் இந்த வழிமுறையைக் கையாண்டுதான் கொள்ளை நடத்தப்படுகிறது. பத்து ஏக்கருக்கு அரசாங்க உரிமத்தை வாங்கிக் கொண்டு நூறு ஏக்கரை சூறையாடுவது என்ற இந்த உத்தியைத்தான் ஆறுமுகசாமி, படிக்காசு, வைகுந்தராசன், பி.ஆர்.பி, ரெட்டி சகோதரர்கள் உள்ளிட்ட கொள்ளையர்கள் மட்டுமின்றி, டாடா, ஜின்டால், அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளும் பின்பற்றுகிறார்கள்.

நிலக்கரி, இரும்பு, கிரானைட் கொள்ளைகளைக் காட்டிலும் மணற்கொள்ளை தோற்றுவிக்கும் இந்தப் பேரழிவு கொடியது. மணல் திருடப்படுகிறது என்று இதனைப் புரிந்து கொள்வதை விட, ஆறுகளே திருடப்படுகின்றன என்று புரிந்து கொள்வதே சரியானது. இதனைத் திருட்டு என்றோ கொள்ளை என்றோ என்று புரிந்து கொள்வதை விட, குடிநீரையும், விவசாயத்தையும், உயிரினச் சூழலையும், சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் நிரந்தரமாக அழிக்கின்ற பயங்கரவாத நடவடிக்கை என்று புரிந்து கொள்வதே சரியானது. இது சமூகத்துக்கு எதிரான ஒரு பயங்கரவாத நடவடிக்கை. ஆனால், இதுதான் வளர்ச்சி என்றும் முன்னேற்றம் என்றும் சித்தரிக்கப்படுகிறது. அரசாங்கக் கொள்கையாக அமல்படுத்தப்படுகிறது.
பயங்கரவாதிகள் தமது நடவடிக்கையை இலாபகரமான தொழிலாக நடத்துவதில்லை. பேரழிவை ஏற்படுத்தும் தமது பயங்கரவாத நடவடிக்கை மூலம் பல இலட்சம் கோடி இலாபமும் ஈட்டுகிறார்கள் மணற்கொள்ளையர்கள்.

– தொரட்டி
________________________________________
புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க