Thursday, July 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 684

இந்த பயந்தாரி சொன்னதுதான் சரி – செங்கொடி

3

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் 5 – செங்கொடி

திர்பார்ப்பும் யதார்த்தமும் எப்போதும் ஒன்றிணைவதே இல்லை. ஒரு பள்ளிக்கூட மாணவனின் பார்வையிலிருந்து ஆசிரியரை நோக்கினாலும், ஒரு மனிதனாக இருந்து ஆசிரியப் பணியின் விழுமியங்களை சீர்தூக்கினாலும் எதிர்பார்ப்பும் யதார்த்தமும் எப்போதும் ஒன்றிணைவதே இல்லை. ஆனாலும் எல்லா மாணவர்களின் வாழ்விலும் ஆசியர்கள் விட்டுச் செல்லும் தாக்கம் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அவ்வாறு என் மீது தாக்கம் செலுத்திய, செலுத்திக் கொண்டிருக்கும் என் பள்ளிக் காலத்து ஆசிரியர்கள் குறித்து விளம்ப வந்திருக்கிறேன்.

மாணவன்என் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்த ஆசிரியர், என் பாதையை அப்படியே 90 டிகிரிக்கு மாற்றிய ஆசிரியர் என்றெல்லாம் என்னால் யாரையும் குறிப்பிட முடியாது. எல்லா ஆசிரியர்களையும் போலவே நான் குறிப்பிடப் போகும் ஆசிரியர்களும் எளிதாக கடந்து செல்லும்படியான திறனுள்ளவர்களே. ஆனாலும் அவர்களின் யதார்த்த நடவடிக்கைகள் என்னுள் நேர்மறையான சலனங்களை நிகழ்த்தி இருக்கின்றன. வினவு தோழர்கள் தந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களை இந்த மெய்நிகர் உலகில் பதிவு செய்வது மெய்யாகவே எனக்கு மகிழ்வளிப்பதாய் இருக்கிறது.

என் பள்ளி வகுப்புகளில் (எண்பதுகளின் தொடக்கத்தில்) படிப்பில் நான் ஊட்டமான மாணவன் தான் என்றாலும் தயக்கமும் கூச்சமும் காலில் கட்டிய விலங்குடனும் மெலிந்த உடலுடனும் இருப்பேன். உடன் படித்த `மேத்தன்` சாஹுல் ஹமீது, `கானாத்தி` அப்துல் காதர் போன்றவர்கள் தடித்தடியாக துருதுருப்பாக இருப்பார்கள். இவர்களுக்கு இடையில் ரூல்தடிகளுக்கு மத்தியில் பென்சிலைப் போல உட்கார்ந்திருப்பேன். வகுப்பில் ஒரு ஆசிரியர் எப்போதும் பாடம் நடத்தி முடிந்ததும் பாடத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட எதையாவது பேசிக் கொண்டிருப்பார். அப்படித்தான் அன்று அவர் கேட்ட கேள்வி திடீரெனெ தீ பற்றி எரிந்தால் என்ன செய்வீர்கள்? என்பது. என்னுடைய முறை வரும் போது சொல்ல வேண்டும் என்று பதில்களை யோசித்து வைத்திருந்தேன். ஆனால் நான் சொல்வதற்குள் அந்தப் பதில்களை எனக்கு முன்னாலுள்ளவர்கள் சொல்லிவிட்டார்கள். என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே எனும் பதட்டத்தில் தீ பிடித்து விட்டது என்று தெருவில் நின்று கத்துவேன் என்று கூறி விட்டேன். வகுப்பறையே பெரும் சத்தத்தில் சிரித்தது.

அப்போது தான் அந்த ஆசிரியர். போன் செய்வேன் என்று சொன்ன மாணவனை எழுப்பி உனக்கு எங்கு போன் இருக்கிறது என்று தெரியுமா? எப்படி டயல் செய்ய வேண்டும் என்று தெரியுமா? நம்பர் என்ன என்று தெரியுமா? என்றெல்லாம் கேள்விகள் கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. நீங்கள் சொன்ன அத்தனை பதில்களையும்விட சிறப்பான சரியான பதில் இந்த `பயந்தாரி` (என்னுடைய பட்டப் பெயர்) சொன்னது தான். எந்தக் காரியத்திலும் தேவைப்படும் போது பிறருடைய உதவியை கேட்டுப் பெறுவது தான் அதை சரி செய்வதற்கான முதல்படி என்று பேசி அன்று என்னை நாயகனாக்கி விட்டார். அதன் பிறகு பாடத்திட்டத்திற்கு வெளியே என்ன சந்தேகம் என்றாலும் நான் தேடிப் போவது அந்த ஆசிரியரைத்தான். ஊரின் பெயர்க் காரணம் என்ன? என்பதில் தொடங்கி திருநெல்வேலி மேம்பாலத்தைப் போல அடுக்குப் பாலம் உலகில் வேறெங்கும் இல்லையாமே? என்பது வரை பல விசயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம். ஆசிரியர் மாணவர் என்பதைத் தாண்டி எங்கள் உறவு இருக்கிறது. இன்றும் கூட வாய்ப்பு கிடைக்கும் போது குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையேனும் அவரை சந்தித்து விடுவேன். அந்த ஆசிரியர் புலங்கார் ஹாஜா.

அடுத்து நான் குறிப்பிட விரும்பும் ஆசிரியர் தமிழாசிரியர் நாகூர்மீறான். அன்றைய நாட்களில் எங்கள் பள்ளியில் வியாழன் மதியமும், வெள்ளியும் தான் விடுமுறை நாட்கள். மாதத்தின் கடைசி வியாழனில் மாதிரி நாடாளுமன்றம் நடக்கும். தலைமை ஆசிரியர் தான் பிரதமர். ஆசிரியர்கள் அனைவரும் அமைச்சர்கள். அவர்களுக்கு துறைகளும் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் ஐந்து இடங்களுக்குள் வரும் மாணவர்கள் அனைவரும் உறுப்பினர்கள். ஏனைய அனைவரும் பார்வையாளர்கள். அன்று நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். பெரும்பாலும் கேட்கப்படும் கேள்விகள் உப்புச் சப்பற்றதாகவும், கூறப்படும் பதில்கள் சடங்குத் தனமாகவும் இருக்கும். ஆனால் அன்று நான் கேட்ட கேள்வி அந்த நாடாளுமன்றத்தையே கலக்கியது.

எப்போதும் தன் ஒன்றரை வயது பையனுடன் வகுப்புக்கு வருவார் ஒரு ஆசிரியர். வகுப்பறையில் அந்தச் சிறுவன் கழிக்கும் சிறுநீரை கரும்பலகை அழிக்கப் பயன்படும் டஸ்டரைக் கொண்டு துடைத்து விடுவார். இது எப்படி சரி? இதை முறைப்படுத்த வேண்டும் என்று தான் அன்று நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஆசிரியரிடம் கேள்வியாக எழுப்பினேன். இதில் வேடிக்கை என்னவென்றால் சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் தான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். கூச்ச சுபாவமுள்ள மாணவனான என்னை இப்படி தைரியமாக கேள்வி கேட்க வைத்தவர் தமிழாசிரியர் நாகூர்மீறான் தான். இரு ஆசிரியர்களும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அன்று அதை செய்ய வைத்தார். இதன் பிறகு அந்த நாடாளுமன்றம் சடங்காக இல்லாமல் ஆசிரியர்களை நோக்கி கேள்வி எழுப்பும் மன்றமாக மாறிப்போனது.

இதுமட்டுமின்றி 1,2,3 எனும் எண்கள் ஆங்கில எண்கள் என தெரிந்த போது அதைப் பயன்படுத்த மனமில்லாமல் அ, ஆ, இ என பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இதை மாற்றி தமிழ் இலக்கங்களை கற்றுத் தந்தவர். தமிழின் மீது பற்றார்வம் ஏற்படக் காரணமாக இருந்தவர் தமிழாசிரியர் நாகூர்மீறான். இன்று நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். ஒருமுறை வீட்டுக்கு சென்று சந்திக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாலும் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மூன்றாவதாக நான் குறிப்பிட விரும்புவது கலீஃபா ஹஜரத். கண்டிப்புக்கும் நேர்மைக்கும் பேர் போனவர். தவறு என்று தெரிந்து விட்டால் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளமாட்டார். கடுமையாக தண்டிப்பார். என்னையொத்த பையன்களுக்கு கலீஃபா ஹஜரத் வருகிறார் என்றாலே பயம் தான். ஓடி ஒழிந்து கொள்வோம். பள்ளி வகுப்பு ஒன்பது மணிக்கு தொடங்கும் என்றால் காலை ஆறரையிலிருந்து எட்டு மணி வரை இவர் ராஜ்ஜியம் தான். அரபி வகுப்புகள் எடுப்பார். ஒவ்வொரு மாணவனையும் அரபு மொழியில் புலமை பெற வைத்து விடவேண்டும், குரான் படி ஒழுக வைத்துவிட வேண்டும் எனும் அக்கறையில் ஒவ்வொரு மாணவன் மீதும் தனிக்கவனம் எடுத்துக் கொள்வார். ஆனால், நான் நாத்திகன் ஆன போது எங்கள் தெருவில் என்னை முதலில் அங்கீகரித்தவர் கலீஃபா ஹஜரத் தான். அவர் வீட்டுப் பாயில் எப்போதும் எனக்கு இடமிருக்கும். என்னுடைய வாதங்கள் எல்லாம் அவரிடம் சோதித்துப் பார்த்தவை தான். அவர் உயிராய் மதிக்கும் இஸ்லாத்தையும் குரானையும் நான் முதிர்ச்சியற்றும், முட்டாள்தனமாகவும் விமர்சிக்கும் போதெல்லாம் பொறுமையாக விளக்கியிருக்கிறார். எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் என்மீது பரிவைப் பொழிந்தார். என் நெருங்கிய உறவினர்களின் மரணத்தில் கூட கலங்காத நான் கடந்த ஆண்டு கலீஃபா ஹஜரத் மறைந்த செய்தி கேட்டு கலங்கிப் போனேன். என்னிடம் இன்று இருக்கும் சில நல்ல பழக்கங்களை என்னுள் விதைத்தவர் அவர் தான், அல்லது அவரின் தாக்கம் இன்னும் என்னுள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவரின் மரணச் செய்தியில் நான் இப்படி எழுதியிருந்தேன். நிச்சயமாய் அது உயர்வு நவிற்சியல்ல.

என்னை செதுக்கிய முதல் உளியே,

காதை திருகியே நேர்மையை.
செவியேற்கச் செய்த தகமையே,

ஆசான்கள் அறிமுகமாகும் முன்பே.
ஆசிரியராய்,போதகராய்
நல்லவை உண்ணத் தந்த ஆளுமையே,

நீங்கள் கிள்ளித் தருமுன் சர்க்கரையை.
அள்ளித் தின்றதற்காய்
நீங்கள் அடித்த அடி.
இன்றுவரை வலிக்கிறது கையில்.

உலகில் இனி நீங்கள் இல்லை எனும் வலி.
இனி என்றென்றும் வலிக்கும் என் மெய்யில்.

இவர்கள் தவிர என்னுள் சலனங்களை ஏற்படுத்தியவர்கள் என்றால் பழபழப்பான சோவியத்நாடு பத்திரிக்கையை தொடர்ந்து வாசிகத்தந்த பக்கத்து வீட்டு சிபிஐ அக்பர் மாமா, பொது நூலகத்தில் இரட்டை உறுப்பினராய் என்னை சேர்த்து விட்ட வாப்பாவின் நண்பரான கனி மாமா என வேறு சிலரையும் சொல்லலாம். அதேநேரம் என்னுடைய கல்விக்கே குறுக்கே நின்ற ஆசிரியர்கள் குறித்து `ஒரு மாணவனின் தோல்வி` எனும் பதிவில் லேசாக குறிப்பிட்டிருக்கிறேன்.

பள்ளியில் ஆசிரியர்கள் என்மீது செலுத்திய பரிவினால் நானும் ஒரு ஆசிரியராக வேண்டும் எனும் கனவு என்னில் இருந்ததுண்டு. ஆனால் இன்றைய தனியார்மய சூழலில் கல்வி என்பதே கடைச்சரக்காய் ஆகிவிட்ட பிறகு ஆசிரியப் பணி மட்டும் எப்படி தளிர்களை உருவாக்கும் கவனத்துடனும், கண்னியத்துடனும் இருக்கும்? ஆசிரியர்களுக்கு கொடுக்கும் மதிப்பை மாணவர்கள் கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் அந்த மதிப்பைப் பெறுவதற்கு ஆசிரியர்கள் தகுதியாக இருக்கிறார்களா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. நுகர்வுக் கலாச்சார வெறியில் சமூகப் பொறுப்பற்று திரிகிறார்கள் என்றாலும் சிறு தூண்டுதல் செய்தாலும் அதைப் பற்றிக் கொண்டு பற்றிஎரிய மாணவர்கள் என்றும் ஆயத்தமாகவே இருக்கிறார்கள். ஆனால் அந்தத் தூண்டுதலை செய்யும் சுடர்களைத்தான் தனியார்மயம் தணித்து விட்டது.

பொதுவாக கல்வி என்பது மாணவர்களுக்கு கற்கும் ஆசையை தூண்ட வேண்டும். ஆனால் மெக்காலே கல்வி முறையும், கல்வி தனியார்மயமும் சேர்ந்து மாணவர்களை ரப்பர் ஸ்டாம்புகளாக தயாரித்துத் தள்ளுகிறது என்பதோடு மட்டுமல்லாமல் கற்கும் அனுபவத்தை விட்டே வெருண்டோட வைக்கிறது. அதனால் தான் மாணவப் பருவத்திலிருந்து மனிதனாக பதவி உயர்வு பெறுவோர் தேடல் எனும் சிந்தனையே இல்லாமல் இருக்கிறார்கள். எல்லா மாணவர்களுக்குமே தேடல் அனுபவம் தூண்டப்பட வேண்டும் என்றால் அது வெறுமனே கல்வியையும் ஆசியர்களையும் மட்டுமே சார்ந்ததல்ல. சமூகச் சூழலையும் முக்கியமாக உள்ளடக்கியது. ரஷ்யக் கல்வி முறைக்கும் இந்தியக் கல்வி முறைக்கும் உள்ள வித்தியாசமாக ஒன்றைச் சுட்டிக் காட்டுவார்கள். நூலில் இருக்கும் யானையை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால் இந்தியக் குழந்தை யானை என்று சொல்லும், ரஷ்யக் குழந்தை யானையின் படம் என்று சொல்லும். இந்த நுணுக்கமான வேறுபாடு கற்பிக்கும் முறையிலிருந்து ஏற்படுவதில்லை. மாறாக சமூக அக்கரையுடன் கல்வி மாறும் போது ஏற்படுவது. அத்தகைய சமூக மாற்றத்துக்காக நாம் உழைக்க முன்வரும் போது மாணவர்களும் அந்த இலக்கை எட்டிப் பிடிப்பார்கள்.

– செங்கொடி

தில்லைக் கோயில் உரிமை, ஜெயேந்திரன் விடுதலை ஏன் – தோழர் மருதையன் உரை

0

தில்லைக் கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டுவோம்!
தமிழ் வழிபாட்டுரிமையை நிலைநாட்டுவோம்!
கொலை வழக்கில் சங்கராச்சாரிகள் விடுதலை : நடந்தது என்ன?

என்ற தலைப்பில் நவம்பர் 30, 2013 – சனிக்கிழமை அன்று சென்னை தியாகராயநகர் செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளியில் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய அரங்கக் கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் நிகழ்த்திய உரை.

எம்பி3 டவுன்லோட் – 1 (38.3 MB)
எம்பி3 டவுன்லோட் – 2 (39.5 MB)

எம்பி3 டவுன்லோட் – 19.5 MB (குறைந்த பிட்ரேட்)

தகவல் :

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

திருட்டு தீட்சிதர்கள் – தோழர் ராஜூ உரை – ஆடியோ

0

தில்லைக் கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டுவோம்!
தமிழ் வழிபாட்டுரிமையை நிலைநாட்டுவோம்!
கொலை வழக்கில் சங்கராச்சாரிகள் விடுதலை : நடந்தது என்ன?

என்ற தலைப்பில் நவம்பர் 30, 2013 – சனிக்கிழமை சென்னை தியாகராயநகர் செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளியில் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய அரங்கக் கூட்டத்தில்,  சிதம்பரம் நடராசர் கோயிலை தீட்சிதர்கள் கைப்பற்றுவதற்கு உச்சநீதிமன்ற வழக்கில் சுப்பிரமணிய சாமியும் தமிழக அரசும் செய்யும் கூட்டுச் சதியைக் குறித்து வழக்கறிஞர் சி ராஜூ நிகழ்த்திய உரை.

எம்பி3 கோப்பு டவுன்லோட் – 39.9 MB

எம்பி3 கோப்பு டவுன்லோட் – 10 MB (குறைந்த பிட்ரேட்)

சுப்புணி சொன்னதிலிருந்து பேதி நிக்கவே இல்லடா அம்பி..

64
சங்கராச்சாரி, வாஜ்பாயி
சங்கராச்சாரியும் வாஜ்பாயும்

த்தன நாள் கஷ்டத்தை கக்கத்துல வச்சுண்டு நான் பட்ட அவஸ்தை அந்த பகவானுக்கும் நேக்கும்தாண்டா தெரியும். அப்பப்பா எத்தனை ஏச்சு பேச்சு! எத்தனை அலைக்கழிப்பு! காமாட்சி விளக்கு, காஷாயம், அர்த்தஜாம பூஜைன்னு ஆன்மீக சமாச்சாரங்களோட புழங்கிண்டிருந்த என்னை காராகிரகத்துக்கு அனுப்ப இவாளுக்கு எப்படி மனசு வந்தது? மத்தில வாஜ்பாய் மாமா ஆட்சி நடக்குற தைரியத்துல அன்னைக்கு ஒரு பிரஸ்மீட்டுல நாலு வார்த்தை கூடுதலா பேசிட்டேன். அதுக்காக இந்த பொம்மனாட்டி என்னை என்ன பாடு படுத்திடுத்து பார்த்தேளா?

ஆந்திராவுல சிவனேன்னு கிடந்தவனை ஒரு போலீஸ்காரன் வரியா இல்லை கையைப் பிடிச்சு இழுத்துட்டு போகவான்னு கேக்குறான். அந்த பதட்டத்துல அவனாண்ட பூணூல் தட்டுப்படுதான்னு செக் பண்ண முடியுமா இல்ல அவன் என்ன ஜாதின்னு கேக்கத்தான் முடியுமா சொல்லுங்கோ.. மனச கல்லாக்கிகிட்டு கார்ல ஏறிட்டேன். அப்போ, இந்த தின்னுட்டு தூங்குற சின்னப்பய “நேக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னா பேஷா அழைச்சுண்டு போங்கோ”ன்னு சொல்றான். இதுக்குத்தான் வாரிசா நாம பெத்த புள்ளை இருக்கணும்குறது. அந்த சமயத்துலதான் நேக்கு இந்த பங்காரு, கல்கி சாமியாருங்க மேலேயெல்லாம் பொறாமை வந்துட்டுது.

போலீஸ் காவலில் சங்கராச்சாரி
போலீஸ் காவலில் சங்கராச்சாரி

நான் அப்படி என்னடா தப்பு பண்ணினேன்? முருகன் சூரனை என்ன பண்ணினார்? கிருஷ்ணன் கம்சனை என்ன பண்ணினார்? சிவன் தன் மருமான் மன்மதனை என்ன பண்ணினார்? அதெல்லாம் விடுங்கோ… நீங்கல்லாம் கொசு கடிச்சா என்ன செய்வேள்? நீங்கள்ல்லாம் வதம் பண்ணினா நியாயம். எனக்கு மட்டும் இபிகோ முன்னூத்தியேழா? அதுவும் பெருமாள் கோயில்லயே மர்டரான்னு சிலர் புலம்பறதா கேள்விப்பட்டேன். ஏண்டா மாபாவிகளா.. அதுக்காக நாமக்காரவாளே கவலைப்படலை, உங்களுக்கு ஏன் மேலும் கீழும் எரியறது? ஸ்பாட்டை எல்லாம் முடிவு பண்ண நான் என்ன தெலுங்கு வில்லனா? அது அனுப்பி வச்ச அப்புவோட வசதிக்காக இருக்கலாம் இல்ல அழைச்சுண்ட பெருமாளோட விருப்பமா இருக்கலாம். இடையில என்னை ஏன் இழுக்கறேள்? சங்கர்ராமன் பையனே வெட்டினவாளுக்கு மட்டும் தண்டணை கிடைச்சா போதும்னு சொல்றான். ஆனா இந்த பக்தியில்லாத மனுஷாதான் என்னை கோத்து விடணும்ங்கறதுலேயே குறியா திரியறா. அவாள்ளாம் ஒண்ணை நினைவுல வைக்கணும், மனுநீதிக்கு அப்புறம்தான் மனுஷாளோட நீதியெல்லாம்.

மடத்தோட தொடர்பில் இருந்த பொம்மனாட்டிகளுக்கெல்லாம் செலவு பண்ணினேன்னு பத்திரிக்கையெல்லாம் எழுதினா.. நான் கேக்குறேன் மடத்து சேவை செய்யிறவாளுக்கு மடம் பணம் தராட்டா வேற யாருதான் செய்வா? நான் அவாளுக்கு மட்டுமா பண்ணினேன்? இந்த பேப்பர்காரவாளுக்கு பக்கம் பக்கமா விளம்பரம் தரல? அதை ஒரு அறிக்கையா கொடுக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆயிருக்கும்?? என்னண்ட பணம் வாங்கி தின்னுட்டு எனக்கெதிரா சாட்சி சொன்ன ரவி சுப்பிரமணியன் மாதிரிதாண்டா இந்த பத்திரிக்கைக்காரவாளும். என்ன செய்ய, நன்றி கெட்டவா சகவாசமும் நமக்கு தேவைப்படறதே!!

மனுநீதியை காப்பாத்தற என்னையே மனு போட்டு பார்க்கும்படியா வச்சுட்டா.. ஜட்ஜு போஸ்டுக்கு ஆளை ரெக்கமண்டு பண்ற என்னையே ஒரு ஜட்ஜு முன்னால கையை கட்டி நிக்க வச்சுட்டா. ஆனானப்பட்ட தொழிலதிபரெல்லாம் கால்ல விழுந்து ஆசி வாங்குற என்னையே மல்லாக்க படுத்த வாக்குல வாக்கு மூலம் தர வச்சுட்டா.. சீனாவுக்கு யாத்திரை போறச்சே கூட போர்வெல் போட்டு தண்ணி குடிச்சவன் நானு, என்னை சென்ட்ரல் ஜெயில்ல வெந்நீர் வாளி தூக்க வச்சுட்டாடா. டிவியில அருளுரை சொன்ன என்னை ஒரு சப் இன்ஸ்பெக்டர் அக்யூஸ்டுன்னு கூப்பிட்டாண்டா. என்னை பெட்டிஷனர்னு கூப்பிட வைக்கவே நம்மவாளெல்லாம் ரொம்ப சிரமப்பட்டுட்டா. அப்போவெல்லாம் நேக்கு யாருமே இல்லையான்னு அழுதேன்.

அப்போதான் பகவானா பார்த்து குருமூர்த்தி, சோ ராமசாமி, சுப்புரமணியன் சாமின்னு பலரை அனுப்பினான். மயிலாப்பூர், மாம்பலம் மாமியெல்லாம் கச்சேரியைத் தவிர வேற எதுக்காவது சேர்ந்தாப்ல வெளியே வந்து பார்த்திருப்பேளா? அவாள்ளாம்கூட எனக்காக மனித சங்கிலி அமைச்சாடா.. நேக்கே கண்ணுல தண்ணி வந்துடுத்து. முடிஞ்சா அவா எல்லாருக்கும் ஒரு தங்க சங்கிலி வாங்கித் தரணும். ஆனா அதுக்கும் இந்த பீடை ஜென்மங்கள் ஏதாச்சும் கிண்டல் பண்ணி வைக்கும்.

ஆனாலும் சமயத்துல நம்ம சப்போர்டர்ஸ் கூட ஏதாச்சும் வினையா பண்ணிடறா. நம்ம சுப்புணிய பாருங்கோ, எனக்காகவும் நம்ம மதத்துக்காகவும் எவ்வளவோ பண்ணிண்டுருக்கான். நம்ம தீர்ப்பு வந்ததும் வாய வச்சுகிட்டு சும்மாயில்லாம ஜெயலலிதா மன்னிப்பு கேக்கணும்னு சொல்றான். அதை கேட்டதுலேருந்து எனக்கு பேதி நிக்கவேயில்லை. கார்த்தாலேருந்து ரெண்டு கட்டு வாழையிலை ஆயிடுத்துடாம்பி. நான் சுப்புணிக்கு ஒன்னேயொன்னு சொல்லிக்கிறேன் “நாமல்லாம் ஊரான் குடியை கெடுக்கத்தான் பூமிக்கு வந்திருக்கோம். நம்ம காலை நாமளே வார வரலை”.

sankaracharya-courtநம்ம குருமூர்த்தியை பத்தி சொல்லலைன்னா நேக்கு போஜனம் கிடைக்காதுடா. நான் அரஸ்ட் ஆன நாள்ல இருந்து அவன் இந்தியன் எக்ஸ்பிரஸ்ல மாஞ்சு மாஞ்சு எழுதுறான்டா. தீர்ப்பு வந்த மக்கா நாளே தினமணில முக்கா பக்கத்துக்கு ஒரு கட்டுரை எழுதினான் பாரு, காவியம்டா அது. அவனுக்கு கொஞ்சம் புலமை மட்டும் இருந்ததுன்னா நமக்கு இன்னைக்கு ஒரு மாணிக்கவாசகரே கிடைச்சிருப்பார். அப்பேற்பட்ட குருமூர்த்தியே தன் கட்டுரையில உண்மை குற்றவாளிகள கண்டுபிடிக்கணும்னு போற போக்குல சொல்றாண்டா. இன்னொரு இலைக்கட்டுக்கு ஆர்டர் பண்ற மாதிரிதான் இவா பேச்செல்லாம் சமயத்துல ஆயிடறது. பத்தாத்துக்கு தீர்ப்பு வாசிக்கறச்சே ஒரு பிரம்மஹத்தி “ சாமி நீதி ஜெயிச்சுடுச்சு”ங்கறான்.. நேக்கு ஈரக் குலையெல்லாம் நடுங்கிடுத்து. நாம் ஜெயிச்சோம்னு சொன்னா ஆகாதா, வயசான காலத்துல எனக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடுத்துன்னா இந்த லோகத்த யார் காப்பாத்தறது?

அப்பப்போ கசமுச வீடியோ பார்க்குறதுக்காக இண்டர்நெட்டை பார்க்கறச்சே, பலரும் நமக்கு எதிரா பேசறது புரியறது. அதை எழுதறெதெல்லாம் சின்னப்பயலுகளா இருக்கா. நம்ம சப்போர்ட்டர்செல்லாம் சஷ்டியப்பபூர்த்தி முடிஞ்சு ஒரு மாமாங்கம் ஆன மாதிரி இருக்கறதுகள். நேக்கு இதெல்லாம் சரியா படலடா அம்பி. இண்டர்நெட் பாக்கற பழக்கம் ஆரம்பிக்கறச்சே அதை கட்டி ஆண்ட நம்மவாளெல்லாம் இப்போ எங்கே? சூத்திரால்லாம் கம்பியூட்டர் வழியா வந்து கருவறையை கைப்பற்றிடுவாளோன்னு நேக்கு பயமா இருக்கு. ஒன்னு அரசாங்கத்தை தூண்டிவிடுங்கோ இல்லை ஒரு வைரசை அனுப்பியாவது இவாளையெல்லாம் ஒடுக்குங்கோ.

என்னைப் பத்தி சொன்ன அவதூறுக்கெல்லாம் இப்போ பதில் சொல்லிடறேன். லேடீஸ் ஹாஸ்டல்ல எனக்கு ஒரு சொகுசு அறை கட்டிண்டதா அரசாங்க வக்கீல் டிவியில ஒரு முறை சொன்னார். ஆமா, அந்த பெண்டுகள்ளாம் என்னை நம்பின்னா அங்க இருக்கா.. அவாளை பத்திரமா பார்த்துகறது என் பொறுப்போல்லையோ, அதான் அங்க எங்களுக்கு ஒரு ரூம் கட்டினோம். நம்ம மோடி புள்ளாண்டான் சமாச்சாரத்தை கேட்டதுக்கு பிறகுதான் நேக்கே இந்த காரணம் உறைச்சது. ஒரு எழுத்தாளர்கிட்ட ஏடாகூடம் பண்ணினேன்தான். அவா நட்சத்திரப்படி நம்மளாண்ட ஒத்துப் போயிருக்கனும். கிரகநிலைகள் சாதகமா இல்லாததால கொஞ்சம் சிக்கலாயிடுத்து. ஒத்துக்குவான்னு நினைச்சு பண்ணிட்டேன் (தருண் தேஜ்பாலுக்கு ஒரு நமஸ்காரம்), பிராமணாளா வேற போயிட்டா அதனால மன்னிச்சுக்குங்கோ.

பால சுவாமிகளுக்கு பூக்கூடையில் வச்சு புளூ ஃப்லிம் சிடி கொடுத்ததா ஒரு கம்ப்ளெயின்ட் சொல்றா. ஆமா அதையெல்லாம் பப்ளிக்காவா எடுத்துண்டு வர முடியும்? மடம்கறது நாலுபேர் உலாவற இடம், அங்கேயெல்லாம் கொஞ்சம் லஜ்ஜையோடதான் நடந்துக்க முடியும். அதோட இல்லாம நம்ம சின்னவன் கொஞ்சம் அசமஞ்சம். கோயில் செலையெல்லாம் அவனுக்கு புரியறதில்லை. அதனால ஒரு கிளாரிஃபிகேஷனுக்காக பார்த்திருக்கலாமோல்யோ? அது மட்டுமா, ஆதிசங்கரரே சவுதர்ய லஹரி பாடினவர்தான். நம்ம அம்பியும் அப்படி ஏதாச்சும் டிரை பண்ணி இருக்கலாமோனோ?

நம்மவா எல்லோரும் ஒன்னை புரிஞ்சிக்கனும். சிவபெருமானே “பிட்டுக்காக” மண் சுமந்து பிரம்படி வாங்கியிருக்கார். அதைப்போல இதுவும் நம்ம மடத்துக்கு வந்த சோதனைன்னு நினைச்சுக்குங்கோ. ஒரு பிராமணனை கொன்னதால வந்த பிரம்மஹத்தி தோஷம் இந்த தீர்ப்போட போச்சுன்னு நினைச்சுக்கோங்கோ. பகவான் அந்த கறையெல்லாம் துடைச்சுட்டார். அதனால பக்தாளெல்லாம் மீண்டும் மடத்துக்கு அடிக்கடி வரனும். அதைவிட முக்கியம் நம்மாத்து பொம்மனாட்டிகளையும் அழைச்சுண்டு வரணும்.

ஹரஹர சங்கர..ஜெய ஜெய சங்கர.

– வில்லவன்

ஜெயேந்திரனை கூண்டிலேற்று, தில்லை கோயிலை காப்பாற்று – செய்தி, படங்கள்

10

1. புதுச்சேரி

27-11-2013 போராட்டம் – நீதிபதியை விலை பேசி கொலைகாரன் சங்கராச்சாரி விடுதலை : புதுச்சேரி புஜதொமு போராட்டம்!

னது காமலீலைகளையும், ஊழல்களையும் அம்பலப்படுத்திய சங்கரராமனை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சன்னதியில் கூலிப்படையை வைத்துப் படுகொலை செய்த சங்கராச்சாரி, விஜயேந்திரன் உள்ளிட்ட 23 பேரையும் புதுச்சேரி நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. அரசுத் தரப்பில் போதிய சாட்சிகள், ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்வதாக 27-11-2013 அன்று அறிவித்தது நீதிமன்றம்.

இத்தீர்ப்பு வெளியான ஒரு மணி நேரத்தில் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வாயிலில் கூடிய அப்பகுதி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள், நீதிமன்றம், போலிசு, அதிகார வர்க்கம் என்றுமே பார்ப்பனிய கட்டுமானத்திற்கு துணை நிற்பவர்கள் என நிரூபிக்கும் விதமாக அளிக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்தும், சாட்சிகள் அனைவரையும் விலை பேசியும், படியாதவர்களை  மிரட்டியும் பிறழ் சாட்சிகளாக மாற்றிய சங்கராச்சாரியாரை தூக்கிலிட வேண்டும் என்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் உள்ளே சென்று முழக்கமிட வேண்டும் என்பதாலும், சுமார் 200-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலிசு நீதிமன்றத்தின் உள்ளே செல்லும் அனைவரையும் சோதனை செய்து அனுப்பியதாலும், சிவப்பு செட்டை இல்லாமல் கொடியுடன் செல்வது என திட்டமிடப்பட்டு சென்ற போது நீதிமன்ற வாயிலிலேயே காவல் துறையினர் நம்மை அடையாளம் கண்டு நிறுத்தி விட்டதால் அங்கேயே முழக்கமிட ஆரம்பித்தோம்.

வழக்கை விசாரித்த நீதிபதிகளை ரேட் பேசி விலைக்கு வாங்கியவன் இன்று தீர்ப்பையும் ரேட் பேசி தனக்கு சாதகமாக வாங்கி விட்ட கொலைகாரன் சங்கராச்சாரியை தூக்கில் போட வேண்டும்.

தமிழை வேசிமொழி என்றும், தமிழர்களை வேசிமக்கள் என்றும் தீண்டாமை சேமகரமானது என்றும் பார்ப்பனிய விஷத்தைக் கக்கும் சங்கராச்சாரியை கைது செய்ய வேண்டும்.

உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி ஒற்றுமையை சீர்குலைக்கும் இது போன்ற பயங்கரவாதிகளை தூக்கில் போட்டால்தான் நாடும், மக்களும் ஒற்றுமையாக வாழ முடியும்

என்றும் விளக்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பகுதியில் பெரியார், அம்பேத்கர் பெயரைத் தாங்கி செயல்படும் எந்த அமைப்பும் எதிர்ப்பு காட்டாத நிலையில் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தங்கள் எதிர்ப்பை உடனடியாக பதிவு செய்தோம்.

ஏற்கனவே தீர்ப்பு வெளியாவதை ஒட்டி இந்தியாவின் பல டிவி சேனல்களும் அங்கே முகாமிட்டிருந்தன. நாம் எதிர்ப்பு தெரிவிக்க ஒன்று கூடிய சிறிது நேரத்திலேயே பல டிவி சேனல்கள் போராட்டத்தினை படம் பிடிக்க ஆரம்பித்தனர்.

உடனே, அங்கிருந்த போலிஸ் அதிகாரிகள், “இது நீதிமன்ற வளாகம், ஆகவே, இங்கு கோஷம் போடக் கூடாது” என்று கூறித் தடுத்தனர். “நாங்கள் வளாகத்திற்கு வெளியேதான் போராடுகிறோம்” என்று பதில் தெரிவித்தவுடன், “நீதிமன்றத்தின் அதிகாரம், வளாகத்திற்கும் அப்பாற்பட்டது” என ஒரு போலிசு அதிகாரி கூற, “அப்படியானால் நீதிமன்றத்தின் அதிகார எல்லையானது அரபிக் கடல், இந்து மாக் கடல், வங்காரள விரிகுடா என்பதாக இருக்கிறதா? மக்களுக்கு ஜனநாயகம் இல்லையா” என்று தோழர்கள் கேட்க, அது பற்றி பேச முடியாமல், “அதெல்லாம் தெரியாது, இப்போது இங்கு செய்யக் கூடாது, அனுமதி வாங்கி செய்யுங்கள், அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர்.

எனினும் சுமார் 30 நிமிடங்கள் முழக்கமிட்டு மக்கள்  மத்தியில் நமது எதிர்ப்பை பதிவு செய்தோம். உடனே போலிசு “நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவோம்” என்று மிரட்டினர். தோழர்கள் தொடர்ச்சியாக முழக்கமிட்டதால் காவல்துறை “நாங்கள், 200 பேர் உள்ளோம், உங்களை இங்கு முழக்கமிட விட்டால் எங்களை சும்மா விட மாட்டார்கள்” என்று கூறி, “தயவு செய்து முறையாக அனுமதி பெற்று நடத்துங்கள்” என்று கூறியதால் போராட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பினோம். பார்ப்பனியத்தை ஒழிக்கும் வரையில் எமது போராட்டத்தை தொடருவோம்!

நாம் முழக்கமிட்டு முடித்தவுடன் நீதிமன்றத்தின் உள்ளே இருந்த விசிக வழக்கறிஞர்கள் 10 பேர் தங்களின் எதிர்ப்பைக் காட்டும் விதமாக முழக்கமிட ஆரம்பித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

30-11-2013 ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி பு.ஜ.தொ.மு, விழுப்புரம் மாவட்டம் பு.மா.இ.மு, வி.வி.மு மற்றும் கடலூர் மாவட்டம் பு.மா.இ.மு ஆகிய தோழமை அமைப்புகளும் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி பு.ஜ.தொ.மு அலுவலக செயலாளர் தோழர் லோகநாதன் தலைமை ஏற்று நடத்தினார். கண்டன உரை நிகழ்த்திய விழுப்புரம் மாவட்டம் பு.மா.இ.மு செயலாளர் தோழர் செல்வகுமார் பார்ப்பன பயங்கரவாதி சங்கராச்சாரியார் இந்த கொலையை எப்படி திட்டமிட்டு நடத்தினான், அவ்வழக்கில் இருந்து தப்பிக்க சங்கராச்சாரியார் என்னென்ன ப்ராடு வேலை செய்தான், நீதி மன்றங்களை எப்படி விலை பேசினான். சாட்சிகளை மிரட்டியது மற்றும் கொலை செய்தது என பார்ப்பனிய பூநூல் அதிகாரத்தையும் அதன் திமிரையும் அம்பலப்படுத்தி பேசினார்.

இறுதியாக பேசிய புதுச்சேரி பு.ஜ.தொ.மு பொதுச்செயலாளர் தோழர் கலை பார்ப்பன பயங்கரவாதத்தையும், அது எவ்வாறு கொடூரமான முறையில், ஈவிரக்கமற்ற முறையில், மனித நேயமற்ற முறையில் சர்வாதிகாரம் கொண்டு கேட்பாரற்று இந்த நாட்டின் மக்களை ஒடுக்குகிறது என்பதையும், “அதனால்தான் 2000 இஸ்லாமியர்களை கொன்றுவிட்டு தண்டிக்கபட முடியாமல் அடுத்த பிரதமர் நான்தான் என்று ”மோடி” யால் நாடு முழுவதும் உலாவர முடிகிறது. தான் கொலை செய்துவிட்டு இல்லையென சங்கராச்சாரியார் ஜந்து வெளியில் திரிய முடிகிறது. விஞ்ஞானம் செழிப்பாக வளர்ந்துவரும் இந்த 21-ம் நூற்றாண்டில் கூட புராண கட்டுக்கதைகளை சொல்லி தில்லை கோயில் தனக்கு சொந்தம் என்றும், ராமர் பாலம் என்றும் மக்களை வலுக்காட்டாயமாக நம்ப வைக்க முடிகிறது. தான் செய்த படுபாதக கொலைகளையும், மனித உரிமை மீறல்களையும், சாதிவெறி கொடுமைகளையும் செய்துவிட்டு இந்த அரசையும் நீதி துறையையும் தனது அதிகார மன்றங்களாக மாற்ற முடிகிறது. இதுதான் பார்ப்பன பயங்கரவாதம். இந்த பார்ப்பன பயங்கரவாதத்தை முறியடிக்க பாட்டாளி வர்க்க தலைமையில் அணிதிரண்டு போராடுவதன் மூலம்தான் சாதிக்க முடியும் ” என்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி மக்களிடம் பெற்ற கருத்துக்கள் :

  • கண்டன ஆர்ப்பாட்டம் வரவேற்கத் தக்கது. அநீதியான தீர்ப்பு. சங்கராச்சாரியார் தண்டிக்கப்பட வேண்டும்.
  • ஜனநாயகத்திற்கு எதிரான தீர்ப்பு, மேல் முறையீடு செய்ய வேண்டும் –   ( 7 பேர் )
  • நீதி விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
  • நீதி மன்றத்தின் தீர்ப்பு 90% தவறு. பிராமணர்கள் செய்யக்கூடிய தவறுக்கு அரசு உடந்தையாக இருக்கு. இதை விடக்கூடாது.
  • இந்த அநியாயத்திற்கு மக்கள் எழுச்சி தேவை. நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன்.
  • கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் சரியானது.
  • தீர்ப்பு தவறானது, கடுமையாக எதிர்க்க வேண்டும்.
  • விசாரணை போலியானது, இதற்கு அனைத்துக் கட்சிகளும் உடந்தை.
  • இந்த கேடுகெட்ட தீர்ப்புக்கு மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
  • நீதி மன்றத்தைவிட கட்டப் பஞ்சாயத்து தேவலாம்.
  • வசதி படைத்தவனுக்கு ஒரு தீர்ப்பு, இல்லாதவனுக்கு ஒரு தீர்ப்பா?
  • இந்த தீர்ப்பு தவறானது. சங்கராச்சாரியார் குற்றவாளி இல்லை என்றால் கொலைகாரன் யார்? அவனுக்கு தண்டனை வழங்கு? ( 5 பேர் )
  • இந்த போலிசும், அரசும் மற்றும் அதிகாரிகளும் சரியாக செயல்படவில்லை என்பதே உண்மை.
  • தீர்ப்பு தவறானது, பணம் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தவறான தீர்ப்பை வழங்கியுள்ளது.( 2 பேர் )
  • சாட்சியங்களை விலைக்கொடுத்து வாங்கிவிட்டார்கள்.
  • பாதிக்கப்பட்டவருக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும்.
  •  சங்கராச்சாரியாரை தூக்கில் போட வேண்டும். வழக்கு நிதியாக 10 லட்சம் தருகிறேன்.
  • பார்ப்பான் பார்ப்பான் என்று எல்லோரையும் பேசாதே, நானும் பார்ப்பாந்தான், சம்பந்தப்பட்டவரை பேசு, இல்லையேல் பேசுவதை நிறுத்து.
  • சார் நீங்க சரியா பேசுரிங்க, வேறு எந்த கட்சிகளும் இப்படி பேசுவதில்லை, பெரியாருக்கு பிறகு உங்களைத்தான் பார்க்கிறேன்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
பு.ஜ.தொ.மு, புதுச்சேரி

2. கிருஷ்ணகிரி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியின் சார்பாக, சங்கர்ராமன் கொலை வழக்கில், குற்றவாளி ஜெயேந்திரன் உள்பட 24 பேர் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும், உச்சிக் குடுமி மன்றத்தின் அநீதியான தீர்ப்பை முறியடிப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி, அனுமதி மறுக்கப்பட்டதால் தடையை மீறி கிருஷ்ணகிரி ரிஜிஸ்டர் அலுவலகம் முன்பிருந்து ஊர்வலமாக சென்று ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெண்களும் சிறுவர்களும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் ஆம்பள்ளி முனிராஜ் தலைமை தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் இரா. சங்கர், புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி தோழர் ராஜா, விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் முத்துக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது தோழர்கள் வழிநெடுகிலும் விண்ணதிர முழக்கமிட்டே சென்றனர். இதனை ஏராளமான பொதுமக்கள் கடை வியாபாரிகள் என திரண்டு நின்று கவனித்துச் சென்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:

புதிய ஜனநாயகம் செய்தியாளர்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

3. கோவை

சங்கரராமன்  கொலை வழக்கு – குற்றவாளி  ஜெயேந்திரன்  உள்பட 24 பேர்  விடுதலை!
உச்சிக்குடுமி  மன்றத்தின்  அநீதியான தீர்ப்பை  முறியடிப்போம்!

என்கின்ற தலைப்பை   மையமாக வைத்து   கோவை  மாவட்டத்தின்   செஞ்சிலுவை முன்பாக   பு.ஜ.தொ.மு. மற்றும் ம.க.இ.க  சார்பாக 30.11.2013 (சனி கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த     காவல் துறையிடம்     அனுமதி   கோரினோம்    காவல்துறை அனுமதி  மறுத்து விட்டது.

திட்டமிட்ட  தேதியில்   சனி கிழமை   மாலை 5.00  மணிக்கு   கோவை  நீதி மன்ற  வாளகத்தில் இருந்து  கோவை  ம.க.இ.க.  செயலாளர் தோழர்  மணிவண்ணன்  தலைமயில்  கோவை  பு.ஜ.தொ.மு   செயலாளர்  தோழர்   விளவை  ராமசாமி, H.R.P.C   செயலாளர்  தோழர்  அபுதாகிர்  அவர்களுடன்  சாலையில்   இடி முழக்கங்களு​டன்  400 மீட்டர்   தொலைவில்  உள்ள செஞ்சிலுவை  சங்கத்தை  நோக்கி  ஊர்வலமாக சென்றோம்.

தயாராக இருந்த 20 -க்கும்  மேற்பட்ட  காவல்துறையினர்    தடுத்தனர்.  அங்கேயே  5 நிமிடம்  தமிழக  அரசை  கண்டித்து

தமிழக  அரசே,

  • தீர்ப்பை  எதிர்த்து  மேல்  முறையீடு  செய்து  கொலைகாரன்  சங்கராச்சாரி கும்பலுக்கு தண்டனை வழங்க  நடவடிக்கை எடு!
  • உச்சிக் குடுமி  மன்றத்தில்  தில்லைக்  கோவிலை  தீட்சதர் கும்பலுக்கு  தாரைவார்க்க சதிசெயும்   சுப்பரமணிசாமி பார்ப்பன கும்பலை விரட்டியடிப்போம்!
  • சாதி தீண்டாமையை   உயர்திபிடிக்கும்  பார்ப்பனியத்திற்கு பாடைகட்டுவோம்!
  • சங்கரமடத்திற்கு  சமாதிகட்டுவோம்!

என்று இடி  முழக்கம் போட்டு  கொண்டிருந்தவர்களை   காவல் துறை  கைது செய்தனர். இந்த  ஆர்ப்பாட்டத்தில்  நிலமாலை, திருப்பூர், உடுமலை தோழர்களும்  பங்கேற்றனர். கோவையில் இருந்து  என்.டி.சி , எஸ்.ஆர்,ஐ , சி.ஆர்.ஐ , டூ
​கெ​தர், பெரோலிங்க்ஸ் போன்ற ஆலை  தொழிலாளர்களும்  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

செய்தி :
கோபிநாத்

4. திருச்சி

ங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான சங்கராசாரிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யக் கோரியும் தில்லைக்கோயிலை மீண்டும் தீட்சிதர்களிடம் ஒப்படைக்க ஜெயலலிதா அரசும் சுப்பிரமணியசாமியும் நடத்தும் சதிதிட்டங்களை எதிர்த்தும் திருச்சியில் 30.11.2013 காலை 10.30 மணியளவில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக, திருச்சி ஜங்சன் எதிரே காதிகிராஃப்ட் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தந்த காவல் துறையினர் கடைசி நேரத்தில் அனுமதியை மறுத்தனர். எனவே, தடையை மீறி மத்திய பேருந்து நிலைய பெரியார் சிலை முன்பு சாலை மறியலாக நடத்தப்பட்டது.

இதில் தஞ்சை, கரூர், திருச்சியைச் சேர்ந்த தோழர்கள்பெண்கள் உட்பட கலந்து கொண்டு கைதாயினர். இந்த மறியல் போராட்டத்திற்கு பு.மா.இ.மு – வின் மாவட்ட செயலர் தோழர் செழியன் தலைமை தாங்கினார். ம.க.இ.க-வின் மாநில இணைப்பொதுச் செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார். பெருந்திரளாக மக்கள் கூடி நின்று ஆதரவளித்தனர். மக்களிடையே ஆயிரக்கணக்கான பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது.

முழக்கங்கள்

trichy-posterதமிழக அரசே, ஜெயா அரசே,
தப்ப விடாதே, தப்ப விடாதே
கொலை கார சங்கராச்சாரிகளை
தப்ப விடாதே, தப்ப விடாதே
உடனடியாக மேல்முறையீடு செய்!

கொலை காரன் சங்கராச்சாரி
நிரபராதி என்றானால்
சங்கர ராமன கொன்று போட்டது
யாருன்னுசொல்லு, உண்மையச் சொல்லு!

தமிழக அரசே, ஜெயா அரசே,
தில்லைக் கோயிலைக் காப்பாற்று !
தீட்சிதர் கும்பல் கைப்பற்ற
இடம்தராமல் வழக்கை நடத்து!

உழைக்கும் மக்களே, தமிழர்களே,
நந்தனை எரித்த தீட்சிதர்கள்
தில்லைக் கோயிலைக் கைப்பற்ற

அனுமதியோம்! அனுமதியோம்!
தில்லைக் கோயிலும் தமிழ் வழிபாடும்
நமது உரிமை, தமிழனின் உரிமை!

உச்ச நீதி மன்றமா?
உச்சிக்குடுமி மன்றமா?
ஜெயா அரசும் பார்ப்பன கும்பலும்
சு.சாமியும் தீட்சித கும்பலும்
தில்லைக் கோயிலை மீட்கத் துடிக்கும்
கூட்டுச் சதியை முறியடிப்போம்!
தில்லைக் கோயிலை கைப்பற்ற முயலும்
தீட்சித கும்பலை விரட்டியடிப்போம்!

கொலை காரன் சங்கராச்சாரி
காமவெறியன் ஆசாராம் பாபு
குடும்பத்தையே கொலை செய்து
சொத்தைப் பறித்த சோதிடர் கண்ணன்!
நம்பாதீங்க, நம்பாதீங்க!
சாமியார்களை நம்பாதீங்க!
தமிழர்கள் நாம் ஒன்றிணைவோம்!
சாமியார் கூட்டத்தை விரட்டிடுவோம்!
காவிக் கும்பலை விரட்டியடிப்போம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:
ம.க.இ.க., திருச்சி.

5. மதுரை

ஜெயேந்திரனை கூண்டிலேற்று ! தில்லை கோயிலை காப்பாற்று ! – ஆர்ப்பாட்டம்

காலை 10.30 மணியளவில் மதுரை தலைமை தபால் நிலையம் முன்பாக விண்ணதிரும் முழக்கஙளுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.

புதுச்சேரி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சங்கராச்சாரி ஜெயேந்திரன் ஒரு கொலைகாரன் மட்டுமல்ல,

  • தமிழ் வழிபாட்டுக்கு உகந்த மொழி அல்ல என்றும் , தமிழ் நீச பாஷை என்றும், தமிழில் வழிபடுவது தீட்டு என்றும் கூறியவன்.
  • சாதி – தீண்டாமையை தொடர்ந்தும் விடாதும் கடைபிடிப்பவன். அதனை சரி என்று நியாயப்படுத்துபவன்.
  • பெண்களை இழிவாக கருதியும் பேசியும் வருபவன்.
  • தமிழகத்தை பார்ப்பன நாடாக்க முயலும் பாசிச ஜெயா, துக்ளக் சோ, சுப்பிரமணிய சாமி, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. இந்து முன்னணி கும்பலின் தலைவன்.

மொத்தத்தில் ஜெயேந்திரன் ஒரு பார்ப்பன பயங்கரவாதி  என்பதையும்….

தில்லைக் கோயிலை கைப்பற்ற திட்சித பார்ப்பன கும்பலுடன் கை கோர்த்து நிற்கும் சுனா சாமி, சோ.ராமசாமி, ஜெயா மாமி, மற்றும் உச்சிக் குடுமி மன்றத்தின் கூட்டு சதிகளை அம்பலப்படுத்தியும்….

தோழர்.குருசாமி (வட்ட செயலாளர், வி.வி.மு.,உசிலை), தோழர்.நாகராசன் (அமைப்பாளர், பு.ஜ.தொ.மு. சிவகங்கை மாவட்டம்), தோழர்.லயனல் அந்தோணி ராஜ் (செயலாளர்,மதுரை மாவட்டக் கிளை, ம.உ.பா.மையம்), தோழர்.கதிரவன் (மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க.) ஆகியோர் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.மருது (மகஇக மதுரை ) தலைமை தாங்கினார்.

பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:

ம.க.இ.க
மதுரை

6. சிதம்பரம்

தில்லைக் கோயிலை தீட்சிதர் சொத்தாக மாற்ற உச்ச நீதிமன்ற வழக்கில்
ஜெ அரசு
– சு.சாமி பார்ப்பனக் கும்பல் கூட்டுச் சதி!

தில்லைக்கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலை நாட்டுவோம்!
தமிழ் வழிபாட்டுரிமையை நிலை நாட்டுவோம்
!

என்ற முழக்கங்களுடன்

சிவனடியார் ஆறுமுகசாமியின் உண்ணாநிலை போராட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகில் 30 -11-13 சனிக்கிழமை, காலை  9-00 மணி முதல் மாலை 6-00 மணி வரை நடைபெற்றது.

தகவல் :

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சிதம்பரம்.

ஜாக்கிரதை! பெரியவா வர்ரா…

11

குருவி ரவி
தில் பாண்டியன்
மாட்டு பாஸ்கர்
காஞ்சி ஜெயேந்திரன்
மூஞ்சி விஜயேந்திரன்…
மொத்தமாய் விடுதலை.

சங்கர்ராமன் கொலை - ஜெயேந்திரன்வாணவேடிக்கை, பட்டாசு
கற்பூர ஆரத்தி, சிறப்பு பூசை…
சுவீட் எடு கொண்டாடு… என
கொண்டாட்டங்களின்
அருவருப்பு தாளாமல்
ஒருக்கழிக்கிறான் வரதராசப் பெருமாள்
கண்ணை மூடிக் கொள்கிறாள்
காஞ்சி காமாட்சி!

நீதியையே உடைத்த பிறகு
எதற்கு தனியாய்
நீதி தேவதைக்கு தேங்காய் உடைத்து?

குற்றங்களை கொண்டாடுவதுதான்
பார்ப்பனப் பண்டிகை!
இதையும் பண்டிகையாக்கி
தைரியமாய் கொண்டாடுங்கள் அம்பிகளே!
மயிர் நீத்தால் உயிர் நீப்பது
கவரி மான்கள்தான்.
பன்றிகளல்ல…
தைரியமாய் நீங்கள் கொண்டாடுங்கள்!

வேண்டாதவனுக்கு
வில்லாய் வளையும் இந்து தர்மம்
பெரியவாளுக்கு
காலில் புல்லாய் வளைந்தது,

சங்கர்ராமனுக்கு தர்ப்பணம்
சங்கராச்சாரிக்கு அர்ப்பணம்
என்னே! இந்து மதத்தின் அற்புதம்!

வெற்றிக் களிப்புக்கு முகம்காட்ட
ராமகோபாலன்,
ஏதோ இழந்தது போல மகிழ்ச்சியை மறைத்து
”இன்னும் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்
என்று முன்னேறி அடிக்க
முகம் காட்டும் ஆடிட்டர் குருமூர்த்தி,
என்னே! இந்துத்வாவின் பன்முகம்!

அடடா!
இந்து மதத்துக்குத்தான்
என்ன ஒரு சகிப்புத் தன்மை!

கூலிக்கு கொலையன்றி
வேறேதும் அறியாத தில்லும், குருவியும்
ஜாலிக்காக சகலமும் மேயும்
சங்கராச்சாரியோடு தம்மையும் சமமாக்கியதை
சகித்துத்தான் கொள்கிறார்கள்.

இருந்தாலும்
மாட்டு பாஸ்கருக்கு
மனதில் ஒரு நடுக்கம்,
குறைந்தபட்சம் ‘குவார்ட்டர்’ இல்லாமல்
குற்றக் குறி மறைக்கத் தெரியாது
தம்மால்,
எல்லாமும் செய்துவிட்டு
எதுவுமே நடக்காத மாதிரி
முகத்தை காட்டுகிறார்களே அவாள்?!

என்ன இருந்தாலும், சாமி ‘ஃபுல்லுக்கே’ ஒரு சவால்!
பார்த்து நடுங்குது பாவி மனம்.
கேட்டுத் தொலைக்கலாம் எனில்
சாமியோ மவுனவிரதம்!

வாயைத் திறந்து
உளறிக் கொட்டினால்
பிரம்ம ராட்சசியிடமிருந்து
பிடிவாரண்ட் வரும்,
என்ற தேவ ரகசியத்திற்காக
தேவரீர் சமூகம்
‘ஹோம் ஒர்க’ செய்த பூஜா பலன்
கூலிப்படை அறியுமா?
இல்லை,
காவிப்படைக்கு முன்தான்
கூலிப்படை மிஞ்சுமா?

பிறழ்சாட்சிகள்…
நீதியை விலைக்கு வாங்கும்
குரல் சாட்சிகள்…
வழக்கிடையே கொலைக் காட்சிகள்…
அத்தனை யாகத்திலும்
தூள்கிளப்பி… ஆள் கிளப்பி
விடுதலைக்கு நாள் கிளப்பிய
ஜகத்குருவின் ஜகஜால பிரதாபம் பார்த்து
சகல கேடிகளுக்கும்
உடல் வியர்க்குது!
அடப் பாவிகளா?
அவன் வெளியே… நான் உள்ளே
என்ன நீதியடா
என அசாராம் பாபுவுக்கே
ஆவி புழுங்குது!

பிரம்ம ரகசியத்தை
அறியப்போன நசிகேதனின்
தலை சுக்கு நூறானதோ இல்லையோ,
காஞ்சி பிர்லா மாளிகையின்
ரகசியத்தை அறிந்த
சங்கர்ராமனின் தலை
சுக்கு நூறானது!

அவாளின் அகராதிப்படி
செத்தவர்
‘சாட்சாத் பிராமணன்’
இருந்தாலென்ன?
கொன்றவன்
பர பிரம்மமாயிற்றே!

அனுராதா ரமணன் சொன்னாலென்ன
யார் சொன்னாலென்ன
பிரம்மத்திற்கு எதிராக
கேள்வி கேட்டால்
சங்கர்ராமனுக்கு நேர்ந்த கதி
சகலருக்கும் நேரும்…

ஜாக்கிரதை…
அதோ
பெரியவாள் வருகிறார்!
ஜெய! ஜெய! சங்கர!
ஜெயாவுக்கும்… சங்கர!

– துரை.சண்முகம்

ஜெயேந்திரனை கூண்டிலேற்று ! தில்லைக் கோயிலை காப்பாற்று ! ஆர்ப்பாட்டம்

1

சங்கர்ராமன் கொலைவழக்கு : சங்கராச்சாரி உட்பட 24 பேர் விடுதலை..!

தமிழக அரசே!

  • சங்கர்ராமன் கொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து கொலைகாரர்களுக்கு உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடு..!

உழைக்கும் மக்களே !

  • நீதி மன்றம், போலீசு, அதிகார வர்க்கமென்லாம் சங்கராச்சாரி கையில் –
  • பிறழ்சாட்சி என்பதெல்லாம் சங்கராச்சாரியின் திருவிளையாடலே.
  • சாதித் தீண்டாமையை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனீயத்துக்கு பாடை கட்டுவோம்…! சங்கர மடத்திற்கு சமாதி கட்டுவோம்..!
  • நந்தனை எரித்துக் கொன்ற தீட்சிதர்கள் தில்லைக் கோயிலைக் கைப்பற்ற அனுமதியோம்!
  • பாரதிய ஜனதா – சுப்பிரமணியசாமி கும்பலின் சதிகளை முறியடிப்போம்!
  • ஜெயலலிதா அரசின் பார்ப்பனிய மீட்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவோம்!
  • பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பன பாசிசம் தலையெடுக்க அனுமதியோம்!

இந்த முழக்கங்களை முன்வைத்து மதுரை திருச்சி புதுச்சேரி கிருஷ்ணகிரி கோவை ஆகிய ஆறு மண்டலங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (30/11/2013) நடைபெறுகிறது.

கண்டன ஆர்ப்பாட்டம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய ஐந்து அமைப்புகள் சார்பாக நடைபெறுகிறது.

திராவிட இயக்கக் கொள்கைகளில் பற்று கொண்டவர்களும், கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக்கக் கூடாது என்ற அக்கறை கொண்டவர்களையும், ஆலயத் தீண்டாமையை எதிர்ப்பவர்களையும், தமிழ் வழிபாட்டை ஆதரிப்பவர்களையும் ஜெயலலிதா அரசின் பார்ப்பனீய மீட்பு நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க அழைக்கிறோம்

_________________________________________________________________________

தில்லைக் கோவில் தொடர்பாக துவக்கம் முதல் போராடி வரும் மனித உரிமைப்பாதுகாப்பு மையம் நடத்தும் கருத்தரங்கத்தின் செய்தியும், அது தொடர்பான துண்டறிக்கையும் கீழே இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் சங்கராச்சாரி விடுதலையானது ஏன் என்ற தலைப்பில் மூத்த வழக்குறைஞர் திருமலைராசன் பேச உள்ளார். அனைவரும் வருக!

அரங்கக் கூட்டம்

ன்பார்ந்த தமிழ் மக்களே,

வணக்கம்

சிதம்பரம் நடராசர் கோயில் 2009 ஆம் ஆண்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீட்சிதர்கள் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டனர். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தனர்.

இவ்வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக இணைந்து கொண்ட சுப்பிரமணியசாமி, உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார். “சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் வசம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுவதை தடை செய்ய வேண்டும். எல்லா கோயில்களிலிருந்தும் அறநிலையத்துறை அதிகாரிகளை அகற்றவேண்டும்” என்பதே சுப்பிரமணியசாமி தாக்கல் செய்திருக்கும் மனுவின் சாரம்.

தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் தமிழ் பாடுவதற்கான போராட்டத்தை முன்நின்று நடத்திய நாங்கள், சிவனடியார் ஆறுமுகசாமியை மனுதாரராக கொண்டு 2008 இலேயே இந்த வழக்கில் உயர்நீதி மன்றத்தில் இணைந்து கொண்டோம். பல ஆண்டுகளாக உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருந்த இந்த வழக்கைத் தட்டியெழுப்பி விசாரணைக்கு கொண்டு வந்தோம். இந்த வழக்கில் நாங்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகத்தான் கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது சாத்தியமாயிற்று. இது மிகையல்ல. உண்மை.

உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து உண்டியலே இல்லாத தில்லைக் கோயிலில் உண்டியலை வைத்ததுடன், நிர்வாக அதிகாரியையும் நியமித்தது திமுக அரசு. ஆத்திரம் கொண்ட தீட்சிதர்கள் உண்டியலில் எண்ணையை ஊற்றுவது உள்ளிட்ட எல்லா வகையான கீழ்த்தரமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள். கோயிலின் நகைகள் உள்ளிட்ட சொத்துக்களை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க இந்தக் கணம் வரை மறுத்து வருகிறார்கள். இருந்த போதிலும் தீட்சிதர்கள் மீது வழக்கு எதையும் பதிவு செய்யாமல் தமிழக அரசு மென்மையாகவே நடந்து வருகிறது.

அறநிலையத் துறை கோயிலை எடுத்த பின்னர் ஆண்டுக்கு சுமார் 30,000 ரூபாய்தான் கோயிலின் வருமானம் என்று தீட்சிதர்கள் காட்டி வந்த கணக்கு பொய்க்கணக்கு என்பது அம்பலமானது. உண்டியல் காணிக்கை சுமார் ஒன்றரை கோடிக்கு மேல் வசூலாகியிருக்கிறது. இவையன்றி தங்க, வெள்ளி நகைகள் போன்றவையும் காணிக்கையாக குவிந்திருக்கின்றன. பராமரிப்பின்றி பாழடைந்திருந்த கோயிலில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. திருவிழா நாட்களில் கூடும் லட்சக்கணக்கான மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் ஏற்பாடுகள் அறநிலையத்துறையால் செய்யப்பட்டிருக்கின்றன.

கோயில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்தபோது எத்தனை மோசமாகப் பராமரிக்கப் பட்டது என்பதையும், தங்களை தீட்சிதர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதையும் பக்தர்கள் அறிவார்கள். நடராசன் சந்நிதிக்கு எதிரான சிற்றம்பல மேடை தீட்சிதர்களின் டோல்கேட்டாக இருந்தது. பக்தர்களிடம் இவ்வாறு காசு பிடுங்குவதை எதிர்த்த ஆறுமுகசாமி போன்ற சிவனடியார்கள் தாக்கப்பட்டார்கள். அங்கே தேவாரம் பாடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இத்தகைய கொடுமைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல கோயிலுக்குள்ளேயே கொலைகள் நடந்தன. கணக்கு கேட்ட நேர்மையான தீட்சிதர் கொல்லப்பட்டு குளத்தில் வீசப்பட்டார். சந்தேக மரணம் என்று கொலை வழக்கு கோப்புகள் மூடப்பட்டன. இரவில் மது, மாமிசம், விபச்சாரம் உள்ளிட்ட பஞ்சமா பாதகங்களும் கேட்பாரின்றி அரங்கேறுவது குறித்த செய்திகள் புகைப்படங்களுடன் வெளிவந்து பத்திரிகைகளில் சந்தி சிரித்தன. இவை மட்டுமின்றி, “நடராசப் பெருமான்” பெயரில் எழுதி வைக்கப்பட்ட நிலங்கள், வீட்டு மனைகள் போன்றவற்றை நடராசன் என்ற பெயர் கொண்ட தீட்சிதர்கள் தங்கள் நிலமென்று சொல்லி ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு விற்று லட்சக்கணக்கில் சம்பாதித்தார்கள். நகை திருட்டு முதல் சைக்கிள் திருட்டு வரையிலான திருட்டுக் குற்றங்கள், போலீசு அதிகாரியைத் தாக்கிய குற்றம் முதல் கொலைக் குற்றம் வரையிலான கிரிமினல் குற்றங்கள் தீட்சிதர்களின் மேல் நிலுவையில் இருக்கின்றன. அவர்களுடைய அரசியல் செல்வாக்கு காரணமாக இவை எதுவும் விசாரிக்கப்படவில்லை.

மேற்கண்ட பல குற்றச்சாட்டுகள் நாம் கூறுபவையல்ல. அவை தீட்சிதர்களிடையேயான பங்கு பிரிக்கும் மோதலில் வெளி வந்தவையே. 1890-லேயே இவர்களுக்கு இடையிலான மோதல்கள் வெளிவரத் தொடங்கி விட்டன. இருப்பினும் அப்போதைய அரசுகளைக் கையில் போட்டுக் கொண்டும், கோயில் சொத்துக்களை அரசியல்வாதிகளுடன் இணைந்து கூட்டுக் கொள்ளை செய்தும், தந்திரமான பார்ப்பன வக்கீல்கள் மூலம் வழக்குகளையே நடக்க விடாமல் தடுத்தும் எல்லா வகையான குற்றங்களிலிருந்தும் தீட்சிதர்கள் தப்பித்து வந்தார்கள்.

சிதம்பரம் கோயில்
தமிழ் பாடும் உரிமையைப் பெற்றதுடன், கோயிலையும் பிடுங்கி அரசின் கையில் ஒப்படைக்க நாங்கள் போராடினோம்.

மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு உரிமையாளர்கள் தாங்கள்தான் என்று சாதித்தும் வந்தார்கள். இந்தக் கோயில் தங்களுடைய உடைமை என்று கூறிக் கொள்வதற்கு எந்த ஆதாரமும் இவர்களிடம் கிடையாது. 1890 முதல் பல தீர்ப்புகள் “ இது மக்களுக்கு சொந்தமான பொதுக் கோயில்” என்று உறுதிபடக் கூறியிருக்கின்றன. ஆனால் கிரிமினல்தனமாக சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, இத்தனை காலமும் கோயிலை தம் கட்டுப்பாட்டில் இவர்கள் வைத்திருந்தார்கள். கோயில் இவர்களது கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தினால்தான் சிற்றம்பல மேடையில் பக்தர்கள் தேவாரம் பாடினால் தீட்டு என்று தடுத்து வந்தார்கள். தமிழ் பாடும் உரிமையைப் பெற்றதுடன், கோயிலையும் பிடுங்கி அரசின் கையில் ஒப்படைக்க நாங்கள் போராடினோம்.

நாங்கள் மக்களைத் திரட்டிப் போராடி, தடியடி பெற்று, சிறை சென்று, வழக்கு நடத்தி பெற்ற வெற்றிக்கு இன்று ஆபத்து வந்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் “கோயிலை அரசு எடுத்தது குற்றம்” என்று கூறும் தீட்சிதர்களுடனும் சுப்பிரமணிய சாமியுடனும் ஜெயலலிதாவின் அரசு கள்ளத்தனமாக கூட்டு சேர்ந்து கொண்டு விட்டது. தமிழ் மக்களுக்கு சொந்தமான பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கோயிலை தீட்சிதர்களின் தனிச் சொத்தாக மாற்றும் சதித்திட்டம், இன்று உச்ச நீதிமன்றத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

28.11.2013 அன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் தீட்சிதர் தரப்பு வக்கீல்கள் பேசவேயில்லை. தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்த சுப்பிரமணியசாமி, தீட்சிதர்கள் அனைவரும் சோத்துக்கில்லாமல் பிச்சை எடுப்பதைப் போலவும், திமுக அரசு கோயிலை இடித்துத் தள்ள சதித் திட்டம் தீட்டியது போலவும் ஒரு பொய்ச் சித்திரத்தை உருவாக்கினார். நடராசப் பெருமானே ஒரு பார்ப்பன தீட்சிதர்தான் என்று இந்துக்கள் நம்புவதாகவும், அதன் காரணமாக கோயிலை தீட்சிதர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று வாதிட்டார்.

இவ்வளவு முக்கியமான வழக்கில் தமிழக அரசின் தரப்பில் தலைமை வழக்குரைஞர்களோ, அறநிலையத்துறை அதிகாரிகளோ யாரும் உச்சநீதிமன்றத்திற்கு வரவில்லை. வழக்கில் தோற்பதற்காகவே, யோகேஷ் கன்னா என்ற வட இந்திய வழக்குரைஞரை ஒப்புக்கு அமர்த்தியிருந்தனர். அவருக்கு வழக்கை பற்றி எதுவும் தெரியவில்லை.

எமது தரப்பில் வாதாடிய வழக்குரைஞர் “தீட்சிதர்களின் நிதிக் கையாடல் காரணமாகத்தான் அரசு கோயிலை மேற்கொள்ள நேர்ந்தது” என்று பேசத்தொடங்கியவுடனே, உடனே சவுகான், பாப்டே ஆகிய இரு நீதிபதிகளும் அவர் மீது பாய்ந்தனர். “கோயில் சொத்தை அபகரிக்க நினைக்கிறீர்களா? நிர்வாக அதிகாரிக்கு கோயிலுக்குள் என்ன வேலை? முதலில் கோயிலை விட்டு வெளியேறுங்கள்” என்று கீழ்த்தரமான முறையில் பேசிக் குறுக்கிட்டனர். “கோயிலை தீட்சிதர்களிடம் ஒப்படைத்து விடுமாறு தமிழக அரசுக்கு சட்ட ஆலோசனை கூறுங்கள்” என்று தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞரை தனியே அழைத்துச் சென்று அறிவுரை கூறினார் சுப்பிரமணியசாமி.

உண்மை விவரங்கள், சட்டம், தீர்ப்புகள் என்ற எதைப்பற்றியும் கவலையில்லாமல், திமிர் பிடித்த ஒரு பார்ப்பன சாதிப் பஞ்சாயத்தாகவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடந்து கொண்டனர். இது சிதம்பரம் கோயில் பிரச்சினை மட்டுமல்ல. தமிழகத்தின் எல்லாக் கோயில்கள் தொடர்பான பிரச்சினை. சுப்பிரமணிய சாமி, முன்வைக்கும் கோரிக்கைகள் இந்து முன்னணியின் கோரிக்கைகள் ஆகும். தமிழ்நாடு அறநிலையத்துறைச் சட்டத்தின் பிரிவு எண் 45 அகற்றப்படுமானால், சிதம்பரம் கோயில் மட்டுமின்றி, எல்லாக் கோயில்களிலும் நிர்வாக அதிகாரிகள் அகற்றப்பட்டு கோயில்கள் அனைத்தும் மீண்டும் கொள்ளைக் கூடாரங்களாக மாற்றப்பட்டு விடும்.

ஏற்கெனவே ஜெயலலிதா அரசு இந்த திசையில்தான் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் நாத்திகர்களின் உரிமையை ரத்து செய்வது, அறநிலையத்துறையின் பணி நியமனத்தில் நாத்திகர்களை அகற்றுவது, கோயில் பிரசாதங்கள் தயாரிக்கும் பணிகளுக்கு “பார்ப்பனர் மட்டும்” என்று பகிரங்கமாக விளம்பரம் கொடுப்பது- என்பன போன்ற அரசியல் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் தமிழக அரசால் கேட்பாரின்றி மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தையும் நீதிமன்றத்தில் காவு கொடுத்து, அதன் அடிப்படையில் பயிற்சி பெற்ற மாணவர்களை பெருங்கோயில்களில் நியமனம் செய்யாமல் வெளியேற்றும் சதியிலும் ஜெ அரசு ஈடுபட்டிருக்கிறது.

சிதம்பரம் வழக்கில் நாங்கள் ஒரு மனுதாரராக இணைந்து கொண்டிருப்பதால், எமது வழக்குரைஞர்களை டெல்லிக்கு அனுப்பி வழக்கு தொடர்பான பணிகளை கவனித்து வருகிறோம். மூத்த வழக்குரைஞர்களையும் அமர்த்தியிருக்கிறோம். திராவிட இயக்கக் கொள்கைகளில் பற்று கொண்டவர்களும், கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாகக் கூடாது என்ற அக்கறை கொண்டவர்களும், ஆலயத் தீண்டாமையை எதிர்ப்பவர்களும், தமிழ் வழிபாட்டை ஆதரிப்பவர்களும் ஜெயலலிதா அரசின் இந்தப் போக்கிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி என்ற அரசியல் தரகனும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்களும் தமிழகத்தின் சுயமரியாதைப் பாரம்பரியத்தையும், கோடிக்கணக்கான மக்களின் தமிழ் உணர்வையும் தோற்கடிக்க நாம் அனுமதிக்கக் கூடாது.

  • நந்தனை எரித்துக் கொன்ற தீட்சிதர்கள் தில்லைக் கோயிலைக் கைப்பற்ற அனுமதியோம்!
  • பாரதிய ஜனதா – சுப்பிரமணியசாமி கும்பலின் சதிகளை முறியடிப்போம்!
  • ஜெயலலிதா அரசின் பார்ப்பனிய மீட்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவோம்!
  • பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பன பாசிசம் தலையெடுக்க அனுமதியோம்!

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
தமிழ்நாடு

பேரறிவாளன் தூக்கு – சிபிஐயின் பொய் பித்தலாட்டம் அம்பலம் !

6

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் ஆரம்ப கட்ட விசாரணையின் போது கொடுத்த வாக்குமூலத்தின் சில பகுதிகளை தான் வேண்டுமென்றே பதிவு செய்யாமல் விட்டு விட்டதாகவும், முழுமையாக பதிவு செய்திருந்தால் வழக்கின் போக்கே மாறி இருக்கும் என்றும் இந்த வழக்கு விசாரணையில் பணியாற்றிய சி.பி.ஐ எஸ்.பி தியாகராஜன் தற்போது தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை வைத்து தான் பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

உயிர்வலி என்ற ஆவணப்படத்திலும் அதன் பின் பல்வேறு பத்திரிகைகளுக்கும் பேட்டியளித்துள்ள தியாகராஜன், பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தில் “தான் சிவராசனுக்கு பாட்டரி வாங்கித் தந்ததாகவும், ஆனால் அந்த பாட்டரிகளை எதற்காக வாங்கி வரச் சொன்னார் என்று தனக்குத் தெரியாது” என்று தெரிவித்ததாக கூறுகிறார். பேரறிவாளனின் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்தால் அது ஒப்புதல் வாக்குமூலமாக இல்லாமல் பேரறிவாளின் விடுதலை வாக்குமூலமாக அமைந்துவிடும் என்பதால் “எதற்காக வாங்கி வரச் சொன்னார் என்று தெரியாது” என்ற வாசகத்தை நீக்கிவிட்டதாக அந்த பேட்டிகளில் கூறுகிறார்.

வாக்குமூலத்தை ஆய்வு செய்து அதை ‘சரியானதாக’ மாற்றி அமைப்பது காவல் துறையின் தர்மம் என்று அவர் வாதாடுகிறார். குற்றவாளிகள் சொல்வதை வார்த்தைக்கு வார்த்தை வாக்குமூலமாக பதிவு செய்வது காவல்துறையின் வேலை அல்ல என்றும் கூறுகிறார். தாங்கள் கண்டறிந்த ‘உண்மையான’ முடிவை பலப்படுத்தும் வகையில் வாக்குமூலத்தை மாற்றியமைப்பது என்ற வழமையான நடவடிக்கையின் அடிப்படையில் பேரறிவாளனின் வாக்குமூலத்தை மாற்றி பதிவு செய்கிறார், பின்னர் ஆறு மாதங்களுக்குப் பின்னர் குற்றப் பத்திரிகை தாக்குதல் செய்யபட்ட  பிறகு சிவராசனின் வயர்லெஸ் கைப்பற்றப்படுகிறது, அதில் இந்தக் கொலை குறித்து யாருக்கும் தெரியாது என்று அவர் பேசியது பதிவானதை கேட்ட பிறகுதான் பேரறிவாளன் கூறியது உண்மை என்று தெரிய வந்ததாக கூறுகிறார். அதனால் தான் தெரிந்தே தவறு செய்யவில்லை என்கிறார்.

தான் சரியாக பதிவு செய்திருந்தால் இது ஒப்புதல் வாக்குமூலமாக இருந்திருக்காது என்றும் எனவே அது நீதிபதிக்கு அனுப்பப்பட்டிருக்காது என்றும் அதன் அடிப்படையில் இவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த மரண தண்டனை வழங்கப்பட்டிருக்க வாய்பில்லை என்றும் தெரிவிக்கிறார். மேலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்கள் பேரறிவாளன் பாட்டரி வாங்கிய காரணத்தை அறிவார் என்பதாக தவறாக மொழி பெயர்த்து விட்டார்கள் என்றும் கூறுகிறார். இவர்களது மொழி விளையாட்டிற்கு ஒரு உயிர் பலியாகப் போகிறது என்ற குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இந்த போலீசு கூட்டத்திற்கு இல்லை என்பது தெளிவு.

தியாகராஜன்
வாக்குமூலத்தை மாற்றி எழுதிய தியாகராஜன்.

தற்போதும் கூட பேரறிவாளனது வாக்குமூலத்தை வைத்து மட்டும் மரணதண்டனை வழங்கப்படவில்லை. மற்ற சாட்சிகள், நிரூபிக்கப்பட்ட‘சதித் திட்டங்கள், காரணமாகவும்தான் தூக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்று கார்த்திகேயன் உள்ளிட்ட பல அரசு தரப்பு ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எனில் பேரறிவாளனது வாக்குமூலத்தை பொய்யாக தயார் செய்ய வேண்டிய அவசியம் என்ன? மற்ற சாட்சிகள் வலுவாக இருக்கும் பட்சத்தில் இந்த அழுகுணி ஆட்டம் ஏன்? இதிலிருந்தே இவர்களது வழக்கு முழுமையும் பொய்கள், சதிகளால் அரசால் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது என்பதையும், விசாரணை என்பதே எவ்வளவு மோசடியானது என்பதை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

இந்த வழக்கு தடா சட்டத்ததின் கீழ் விசாரிக்கப்பட்டு,  தடா சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனையும் 19 பேருக்கு கடுங்காவல் தண்டனையும் கொடுத்தது. தடா சட்டத்தின் கீழ் எஸ்.பி அந்தஸ்து உடைய போலீசு அதிகாரி முன்பு அளிக்க்ப்படும் ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்ற ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும். தடா வழக்கு விசாரணை அதிகாரிகள் எத்தகைய முறைகளை கையண்டு இந்த வாக்குமூலங்களை பெற்றார்கள் என்பது ஏற்கனவே அம்பலமாகி இருக்கிறது.

குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பதில் தன் கையில் கிடைத்தவனை சித்திரவதை செய்து குற்றவாளி என ஒப்புக்கொள்ள வைப்பதுதான் காவல் துறையின் ‘அறம்’. அதன்படி பலர் குற்றத்தை ஒப்புக் கொள்ள வைக்கப்பட்டன்ர். ராஜீவ் கொலையில் சம்பந்தமுள்ளவர்கள் எனக் கோர்ட்டில் நிறுத்தப்பட்டவர்கள் தவிர பலர் சி.பி.ஐ.யின் ‘மல்லிகை’ மாளிகையில் வைத்து சித்திரவதை செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தடா போன்ற கொடிய அடக்குமுறை சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு அவர்கள் ஆடிய ஆட்டத்தை அவர்களின் அதிகாரத் திமிரை அன்றைய புதிய ஜனநாயகம் பின்வருமாறு பதிவுசெய்திருக்கிறது.

“அவர்களது அடையாள அட்டையை மூக்கு நுனியிலே முட்டுமாறு நீட்டும் போது எவரானாலும் காலோடு மூத்திரம் பெய்துவிட வேண்டும் என்கிற அதிகாரத் திமிரோடு அலைவதைக் கண்டோம்.”

ராஜீவ் கொலைக்குப் பிறகு அதைக் காட்டி ஆட்சிக்கு வந்த ஜெயா-வாழப்பாடி-பார்ப்பன கும்பல் அடக்குமுறையை தீவிரமாக நடத்தியது. சிவராசன் -சுபா சாவுக்கு பழி தீர்க்க புலிகள் வந்துள்ளார்கள், குண்டு வைக்கப் போகிறார்கள் என்று பத்திரிகைகள் பீதியூட்டின. இன்றைய ஈழத்தாய் அன்று  ஈழ அகதிகளை நாடுகடத்தினார். இதை எதிர்த்தவர்கள் மீது கொடிய அடக்குமுறை சட்டங்கள் பாய்ச்சப்பட்டன. ஈழ ஆதரவு என்று பேசியவர்கள் மீது அடக்குமுறை பாய்ந்தது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

சுவரொட்டி, தெருமுனைக் கூட்டம் உள்ளிட்டவை கூட தண்டனைக்கு உரிய குற்றமாகின. மக்கள் கலை இலக்கிய கழக தோழர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், தடா உள்ளிட்ட அடக்குமுறை சட்டங்கள் பாய்ந்தன. ஈழவிடுதலை பாடலை டேப்ரிக்கார்டரில் ஒலிபரப்பியதாக திருச்சியில் ம.க.இ.க வினர் கைது செய்யப்பட்டனர். போஸ்டர் ஒட்டியது, பிரச்சரம் செய்தது என்ற வகையில் பல் தோழர்கள் சிறை வைக்கப்பட்டனர். “இவர்கள் ராஜீவுக்காக அழ மாட்டார்கள்“,”ராஜீவ் கொலை பழிக்குப்பழிதான்“, “ஒண்டவந்த பிடாரியே ஈழத்தமிழரை விரட்டாதே” என்று பகிரங்கமாக எழுதிய புதிய ஜனநாயம், புதிய கலாச்சாரம் பத்திரிகைகளின் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. அச்சகத்தாரை மிரட்டி பு.ஜ வெளிவருவதை தடுக்க்க முயன்றது அரசு. ஒரு மாதம் மட்டுமே பு.ஜ வெளிவராமல் தடுக்க முடிந்தது.

ஈழ ஆதரவு சக்திகள் மீதே இவ்வளவு அடக்கு முறை என்றால் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது செலுத்தப்பட்ட அடக்குமுறை பயங்கரமானது. அவர்கள் மல்லிகை மாளிகையில் வைத்து கொடிய சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு  வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இந்த வாக்குமூலங்களை ஆதாரமாக கொண்டே அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் இவர்கள் தடா சட்டத்தின் கீழ் எவ்வித குற்றமும் புரியவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. ராஜீவ் கொலை பயங்கரவாதத்தை நோக்கமாக கொண்டிருக்கவில்லை என்பதால் தடா பொருந்தாது என்று தீர்ப்பு கூறியது. (இருப்பினும், இன்று வரை ராஜீவ் இறந்த நாளை பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கிறது அரசு) ஆயினும் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு  நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நளினியின் மரண தண்டனை தமிழ்நாடு ஆளுநரால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுவை அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் 2011-ம் ஆண்டு நிராகரித்தார். அதைத் தொடர்ந்து மூவர் தூக்குக்கு எதிராக தமிழ்நாட்டில் பெருமளவிலான மக்கள் போராட்டங்கள் நடந்தன. ‘கருணை மனுவின் மீது முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதாலும், ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்து விட்டதாலும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்’ என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்தது. இதே மாதிரியான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதால் மூவர் தூக்கு தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு நடைபெறுகிறது.

இந்த பின்னணியில் சிபிஐ எஸ்.பி தியாகராஜனின் இந்த வாக்குமூலம் முக்கியத்துவம் பெறுகிறது. ராஜீவ் கொலைக்கு பழி வாங்கும் நோக்கத்தோடு கையில் கிடைத்தவர்களை எல்லாம் குதறிய வேட்டை நாயாக சி.பி.ஐ யின் சிறப்பு புலனாய்வுக் குழு செயல்பட்டதும் அதன் விசாரணையின் யோக்கியதையும் மேலும் ஒரு முறை அம்பலமாகி இருக்கிறது.

மேலும் ‘தூக்குத் தண்டனை கூடாது’ என்று அரசியலற்ற முழக்கம் பின்னுக்குத் தள்ளப்பட வேண்டியதன் தேவையும் “பேரறிவாளனுக்கு இழைக்கப்பட்டது அநீதி, அதற்கு நியாயம் வேண்டும்” என்ற கோரிக்கையின் அவசியமும் முன்னுக்கு வந்துள்ளது. அப்படியானால், ‘சுபாவும், தனுவும், சிவராசனும் பயங்கரவாதிகளா? அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் தூக்கில் போடலாமா?’ என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. உண்மையில் அவர்களும் தண்டிக்கப் படவேண்டியவர்கள் இல்லை. தற்போது தூக்கு மேடையில் நிற்கும் மூவரும் நிரபராதிகள் என்பதோடு ராஜீவ் கொலைக்கான அரசியல் நியாயத்தையும் மக்கள் மத்தியில் பேச வேண்டியிருக்கிறது. இந்திய-இலங்கை ‘அமைதி’ ஒப்பந்தம், அதைத் தொடர்ந்து இந்திய அமைதிப் படை இழைத்த போர்க் குற்றம் குறித்தும் பேச வேண்டிய தேவை இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் முடித்துப் புதைக்கும் வரையில் இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு துணை நின்றது. இன்னமும் நிற்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் இத்தகைய உண்மைகள் பேசப்பட வேண்டும், வழக்காக விசாரணை செய்யப்பட வேண்டும். ஆகவே இந்த வழக்கு வெறுமனே கிரிமினல் வழக்காக இல்லாமல் அரசியல் வழக்காக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்தால் இந்த வழக்கில் தற்போது தண்டிக்கப்பட்டவர்கள் யாரும் தண்டிக்கப்பட முடியாது. மாறாக இந்திய அரசு, காங்கிரசு கட்சி, இராணுவம், முதலானோர் கூண்டில் ஏறவேண்டியிருக்கும். அதை மறைக்கத்தான் அப்பாவிகளை தூக்கிலேற்ற அரசு துடிக்கிறது.

தற்போதும் தியாகராஜனது ஒப்புதல் வாக்கு மூலத்தை ஏற்று தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்யும் என்று சொல்ல முடியாது.  அதற்கும் சட்ட ரீதியாக ஏதாவது ஜால்சாப்பு சொல்வார்கள். நீதி தவறிய சட்டத்தையும், அநீதி செய்யும் அரசையும் வழிக்கு கொண்டுவரும் மக்கள் போராட்டங்கள் தான் தூக்குத் தண்டனையிலிருந்து இந்த மூவரையும் காக்க வல்லது.

சிதம்பரம் வழக்கு : சுப்ரீம் கோர்ட்டா சுப்பிரமணிய சாமி கோர்ட்டா?

13

சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத்துறை கையகப் படுத்தியதற்கு எதிராக தீட்சிதர்கள் தொடுத்திருந்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் சுருக்கத்தை கீழே தருகிறோம்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் யோக்கியதையை இதனைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

    என்ன வேலையா? ஏற்கனவே செய்யற வேலைய தொடர்ந்து செய்யுங்கோ, போதும்!
என்ன வேலையா? ஏற்கனவே செய்யற வேலைய தொடர்ந்து செய்யுங்கோ, போதும்!

சுப்பிரமணிய சாமி என்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனத் தரகனின் ஆட்சிதான் உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

கோயிலை மீண்டும் தீட்சிதர்கள் வசமே ஒப்படைப்பதற்கு தோதாக, அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர்களைக் கூட நியமிக்காமல் வழக்கை அநாதையாக விட்டிருக்கின்ற ஜெ அரசின் சதியைப் புரிந்து கொள்ள முடியும்.

சுப்பிரமணிய சாமியுடனும் பாரதிய ஜனதாவுடனும் ஜெயலலிதா அரசு வைத்திருக்கும் கள்ளக்கூட்டைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த வழக்கில் நாம் தோற்றால்,

பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கோயிலின் பொதுச்சொத்துக்கள் தீட்சிதர்கள் எனும் திருட்டுப் பார்ப்பனக்கும்பலின் சொத்தாக மாறும்.

திருச்சிற்றம்பல மேடையில் பக்தர்கள் இனி தேவாரம் பாட முடியாது.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து இந்துக் கோயில்களை விடுவித்து தாங்கள் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற இந்து முன்னிணியின் கோரிக்கை வெற்றி பெற்றுவிடும்.

டிசம்பர் 3-ம் தேதி செவ்வாய்க்கிழமை அடுத்த விசாரணை தொடங்குகிறது.

தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்!

நூற்றாண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமைகள் பறிபோகப் போகின்றன!

பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதிக்கு எதிராகப் போராடுவோம்!

இவண்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு.

சிதம்பரம் வழக்கு :
கோயிலை மீண்டும் தீட்சித பார்ப்பனர்களிடமே ஒப்படைக்க ஜெயலலிதா அரசு – சுப்பிரமணிய சாமி கூட்டு சதி
நேற்று
(28.11.2013) உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதம் குறித்த சுருக்கமான குறிப்புகள்.

சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத் துறை 2009-ம் ஆண்டில் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தோற்ற தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கின்றனர். அவர்களுடன், அவர்களுக்கு ஆதரவாக, சுப்பிரமணிய சாமி இந்த வழக்கில் இணைந்துள்ளார். கோயிலை அறநிலையத்துறை மேற்கொண்டதற்கு ஆதரவாக ஆறுமுக சாமி (சிவனடியார்), வி.எம்.சவுந்தரபாண்டியன் (சிதம்பரம்) ஆகியோர் வழியாக மனித உரிமை பாதுகாப்பு மையமும் கூடுதலாக சத்தியவேல் முருகனாரும் இவ்வழக்கில் தலையிட்டு(implead)ள்ளனர். இவ்வழக்கு சௌகான், பாப்டே ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்களான தீட்சிதர்கள் சார்பில் யாரும் வாதிடவில்லை. மாறாக, சுப்பிரமணிய சாமி வாதத்தை துவக்கி வைத்தார். சுப்பிரமணிய சாமியுடைய வாதங்களின் சுருக்கம் கீழ் வருமாறு : 

“பிராமணர்கள் எனப்படுவோர் பிறப்பினால் தோன்றுபவர்களல்ல. குணம்தான் ஒருவர் பிராமணரா என்பதைத் தீர்மானிக்கிறது என்று கீதை கூறுகிறது. அதனால்தான் பிறப்பால் பிராமணர் அல்லாத விசுவாமித்திரர் உள்ளிட்டோர் பிராமணர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். தில்லை தீட்சிதர்கள் சிவன் வழி வந்த பிராமணர்கள். அவர்கள் கன்னட-துளு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இந்து அறநிலையத் துறை சட்டத்தின் பிரிவு 45 என்பது குறிப்பிட்ட வகையறாக்களை சேராதவர்களின் கோயில்களுக்கு (non-denominational temples) மட்டுமே பொருந்தும். பிரிவு 107 denominational கோயில்களில் அறநிலையத் துறை தலையிடுவதை தடை செய்கிறது.

denomination என்றால் என்ன என்பதை அரசியல் சட்டம் விளக்கவில்லை. அதற்கான விளக்கம் உச்சநீதிமன்ற தீர்ப்புகளில்தான் உள்ளது. தீட்சிதர்களைப் பொறுத்த வரை அவர்கள் 3000 பேர். அந்த 3000 பேரில் ஒருவர்தான் தில்லை நடராசன். இவர்கள் அனைவரும் கைலாசத்திலிருந்து வந்தவர்கள் என்பது நம்பிக்கை. இது தீட்சிதர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, பக்தர்களின் மத நம்பிக்கையும் அதுவே.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிடக் கட்சிகள், குறிப்பாக நாத்திக வாதிகளான கருணாநிதி போன்றோரும் பிற திராவிட இயக்கத்தினரும் கோயிலை பீரங்கி வைத்து பிளக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர்கள். 1989, 2006, 2008, ஆகிய ஆண்டுகளில் இத்தகைய பிராமண எதிர்ப்பு நாத்திக பிரச்சாரத்தை கருணாநிதி செய்திருக்கிறார். இதன் காரணமாகத்தான் இந்த வழக்கில் தலையிடுவது என்ற முடிவு செய்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். அப்போதுதான் புலிகள் ஆதரவாளர்கள் என்னை அங்கே தாக்கினார்கள். ஆனால், தற்போதைய மாநில அரசு அப்படியல்ல. இதனை நட்புரீதியான அரசாகவே நான் பார்க்கிறேன்.”

“தி.மு.க அரசு தீட்சிதர்களுடன் அறநிலையத் துறையும் இணைந்த கூட்டு நிர்வாகம் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், நிர்வாக அதிகாரி நேரடியாக கோயிலை கையகப்படுத்தியுள்ளார். ஆகையினால், தீட்சிதர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. எனவே, இந்த அரசாணையே ரத்து செய்யப்பட வேண்டும்.”

“1951-ல் இக்கோயில் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அப்போதைய அரசு ஏற்றுக் கொண்டு தனது வழக்கை திரும்பப் பெற்றிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த முன்தீர்ப்பை கணக்கில் கொள்ளாமல் (resjudicata) தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தீட்சிதர்களுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த அரசாணை தீய உள்நோக்கத்துடன் கருணாநிதி அரசால் கொண்டு வரப்பட்டதாகும்”

என்று கூறி விட்டு, “தமிழக அரசின் வழக்கறிஞர் பேசிய பின்னர். நான் மீண்டும் பேசுகிறேன்” என்று கூறி சுப்பிரமணிய சுவாமி அமர்ந்தார்.

தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர்களோ தலைமை வழக்குரைஞரோ இந்து அறநிலையத்துறையின் உயர்அதிகாரிகளோ சட்ட அதிகாரிகளோ யாரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. தமிழக அரசின் சார்பில் யோகேஷ் கன்னா என்ற ஒரு இளம் (கீழ்நிலை) வழக்குரைஞர் மட்டுமே வந்திருந்தார். அவர் எதுவும் பேசவில்லை.

ஆறுமுகச் சாமி
சிவனடியார் ஆறுமுகச் சாமி

இந்நிலையில் ஆறுமுக சாமியின் (சிவனடியார்) வழக்குரைஞரான கோவிலன் பூங்குன்றன் தனது தரப்பை முன் வைக்கத் தொடங்கினார். “இந்தக் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல, இது இந்துக்கள் அனைவருக்கும் சொந்தமான பொதுக் கோயில்” என்று 1890-லேயே நீதிபதிகள் முத்துசாமி அய்யர், ஷெஃப்பர்ட் ஆகிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பை அவர் சுட்டிக் காட்டினார். “இத்தகைய ஒரு பொதுக்கோயிலின் நிதி நிர்வாகத்தில் பல முறைகேடுகளும், நிதிக் கையாடல்களும் நடைபெற்ற காரணத்தினால்தான் இதில் அரசு தலையிட வேண்டிய வந்தது” என்று அதற்கான விவரங்களை அவர் கூற முற்படும் போதே இடை மறித்த நீதிபதிகள், “resjudicata (அதாவது முன்தீர்ப்பு) பற்றி பதில் சொல்லுங்கள்” என்று கேட்டனர். “அதனை பின்னர் விளக்குகிறேன். தற்போது, இதை எடுப்பதற்கான முகாந்திரங்களை விளக்குகிறேன்” என்று தீட்சிதர்களின் நிதிக்கையாடல்கள், நகைக் களவுகள் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

உடனே, நீதிபதி பாப்டே, “நீங்கள் யாருடைய வழக்குரைஞர்” என்று கேட்டார். “நான் ஆறுமுகசாமி என்ற சிவனடியாரின் வழக்குரைஞர், தமிழ் பாடி வழிபடுவதற்கு உரிமை மறுக்கப்பட்டு அதற்காக போராடி வெற்றி பெற்றவர் என்னுடைய கட்சிக்காரர்” என்று கூறி விட்டு, தன்னுடைய வாதத்தைத் தொடர்ந்தார். மீண்டும், குறுக்கிட்ட நீதிபதி பாப்டே, “நிதிக் கையாடல் பற்றி பேசுகிறீர்களே, பூரி ஜெகன்னாதர் கோயிலுக்கு போயிருக்கிறீர்களா, அங்கே மடியிலிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டுதான் சாமியை பார்க்க விடுவான்” என்று சொல்லி எள்ளலாக சிரித்தார். அடுத்து, நீதிபதி சௌகான் (இரண்டு நீதிபதிகளில் இவர்தான் சீனியர்), “மீண்டும் மீண்டும் நிதிக் கையாடல் பற்றி பேசுகிறீர்கள், உங்களுக்கு தனிப்பட்ட சொத்துத் தகராறு ஏதும் இருக்கிறதா. அந்த கோயில் சொத்தை அபகரிக்க நினைக்கிறீர்களா” என்று குதர்க்கமாகவும் ஆத்திரமூட்டும் வகையிலும் கேள்வி கேட்டு அவரை பேச விடாமல் தடுத்து விட்டார்.

இதற்குப் பிறகு தமிழக அரசின் வழக்குரைஞரான யோகேஷ் கன்னா பேசத் தொடங்கினார். உயர் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து சில பகுதிகளை படித்துக் காட்டி நிர்வாக முறைகேடுதான் கோயிலை எடுப்பதற்கு காரணம் என்றும் தீட்சிதர்கள் ஒரு தனி வகையறாவா என்பது பற்றி தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். உடனே, அரசு வழக்குரைஞரிடம் வழக்கை ஒழுங்காக படித்து விட்டு வருமாறு நீதிபதிகள் கூறி விட்டு உணவுக்காக ஒத்தி வைத்தனர்.

உணவு இடைவேளைக்குப் பின் மூத்த வழக்குரைஞர் துருவ் மேத்தா கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்தியதை ஆதரித்து வாதிடத் தொடங்கினார். அவருடைய வாதத்தின் சாரம் கீழ் வருமாறு :

“தாங்கள் ஒரு தனி வகையறா என்பதை தீட்சிதர்கள்தான் நிலைநாட்ட வேண்டும். அவ்வாறு இது வரை அவர்கள் எங்கேயும் நிறுவியதில்லை. கோயிலை தாங்கள் கட்டவில்லை என்றும், மன்னர்கள்தான் கட்டினார்கள் என்றும் தமது மனுவிலேயே தீட்சிதர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இந்தக் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமான கோயில் அல்ல. இவர்கள் வகையறாவிலும் வர மாட்டார்கள். எனவே, கோயிலை நிர்வாகம் செய்ய இவர்களை அனுமதிக்க முடியாது.”

“தங்களை பரம்பரை அறங்காவலர்கள் என்றும் தீட்சிதர்கள் கூறிக் கொள்கிறார்கள். அவ்வாறு பரம்பரை அறங்காவலர்களாக இருப்பவர்கள் நிர்வாக முறைகேட்டில் ஈடுபட்டால் அதில் தலையிடுவதற்கு அரசுக்கு உரிமை உண்டு என்பது ஏற்கனவே சட்ட ரீதியாக நிறுவப்பட்ட விஷயம்” என்று கூறினார்.

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள்
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் (உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் தரிசனம்).

இப்போது நீதிபதி சௌகான் குறுக்கிட்டார். “சுப்பிரமணிய சாமியின் வாதங்களில் நாங்கள் முற்று முழுதாக திருப்தி அடைந்திருக்கிறோம். மற்றவை பற்றி பேச வேண்டாம். resjudicata (முன்தீர்ப்பு) அதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்” என்று துருவ் மேத்தாவிடம் நீதிபதி சௌகான் கூறினார்.

துருவ் மேத்தா பேசத் தொடங்குவதற்கு முன்னரே வேகமாக குறுக்கிட்ட சுப்பிரமணிய சாமி, “இந்தக் கேள்விக்கு துருவ் மேத்தா பதில் சொல்லக் கூடாது. அரசாங்கத்தின் வழக்குரைஞர்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

உடனே, நீதிபதி அரசு வக்கீலை பதில் சொல்லப் பணித்தார்.

எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் நிர்வாக அதிகாரியின் அதிகாரங்கள், அவர் கோயிலில் என்ன செய்கிறார் என்பது பற்றி அவர் ஏதேதோ படித்துக் காட்டத் தொடங்கினார். அவர் படித்த வரிகளில், வங்கிக் கணக்கை கையாள்வது, கால்நடைகளை கையாள்வது போன்றவை தொடர்பான விஷயங்கள் இடம் பெற்றன.

உடனே, நீதிபதி சௌகான், “நீங்கள் என்ன எல்லாம் வல்ல அரசா, எல்லாவற்றையும் நீங்களே எடுத்துக் கொண்டால், தீட்சிதர்கள் எப்படி வாழ்க்கை நடத்துவார்கள், நீங்கள் சம்பளம் கொடுக்கிறீர்களா” என்று கேள்வி எழுப்பினார்.

“கோயில் நிர்வாகத்தையே தீட்சிதர்களிடமிருந்து இன்னமும் நாங்கள் எடுக்க முடியவில்லை. அப்புறம் எப்படி சம்பளம் தருவது” என்று பதிலளித்தார் அரசின் வழக்குரைஞர்.

மறுபடியும், நீதிபதி குறுக்கிட்டார், “கோயிலுக்கு உள்ளே நிர்வாக அதிகாரியின் அலுவலகம் வைத்திருக்கிறீர்களாமே. கோயிலுக்குள் உங்களுக்கு என்ன வேலை. முதலில் கோயிலை விட்டு வெளியில் வாருங்கள்.” என்று கூறி விட்டு, “நான் சீக்கிரமே ஓய்வு பெறப் போகிறேன். ஏதாவது செய்து விட்டு ஓய்வு பெற விரும்புகிறேன்” என்று கூறினார் நீதிபதி சௌகான்.

இத்துடன், நேற்றைய வாதங்கள் முடிவுற்றன. வழக்கின் அடுத்த விசாரணை செவ்வாய்க் கிழமை டிசம்பர் 3-ம் தேதி தொடர இருக்கிறது.

விசாரணை முடிந்த பின் எதிர் தரப்பான தமிழக அரசின் வழக்குரைஞருடைய தோளில் கை போட்ட படியே, சுப்பிரமணிய சாமி வெளியில் வந்தார். “உங்கள் அரசாங்கம் எனக்கு நட்பான அரசாங்கம்தான். கருணாநிதி ஆட்சி என்பதால்தான் நான் இந்த வழக்கில் தலையிட்டேன். நீங்கள் கருணாநிதி போட்ட அரசாணையை வாபஸ் வாங்குவதுதான் நல்லது என்று ஆலோசனை கூறுங்கள்” என்று யோகேஷ் கன்னாவிடம் பேசியபடியே நடந்து சென்றார் சுப்பிரமணிய சாமி.

அண்ட சராசரம் கண்டு நடுங்கிட இந்து தினமணி ஜிஞ்சக்க.. ஜிஞ்சா.. – பாடல்

20

ச்சம் வரிஞ்சு கட்டி… உச்சிக் குடுமி தட்டி… அக்கிரகாரம் வந்ததே…! ஏ ஜெய ஜெய சங்கர அவதாரம் போட்டு வந்ததே…! – 1992-ம் ஆண்டு வெளியான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இருண்ட காலம் ஒலிப்பேழையில் இடம் பெற்ற பாடல்.

மிழ்நாட்டில் எப்பேற்பட்ட ஆட்சி நடக்கிறது தெரியுமா? புரட்சி தலைவியின் பொற்கால ஆட்சி. குப்தர் காலம் பொற்காலம், பல்லவர் காலம் பெற்காலம், சோழர் காலம் பொற்காலம், இப்போ அம்மா காலமும் பொற்காலம்.

பொற்காலம் என்றால்?

உழைக்காமல் உட்கார்ந்து தின்கிறவர்களின் காலம் பொற்காலம். கஞ்சிக்கிலாத ஏழைகளை கசக்கி பிழிகிற ‘கருணா மூர்த்திகளின்’ காலம் பொற்காலம். நாலு வர்ணம், நாலாயிரம் சாதி, நான் உசந்தவன், நீ தாழ்ந்தவன், நான் பாப்பான், நீ பறையன் இப்படி ‘சகோதர பாசத்தோடு’ வாழ்ந்த சனாதனிகளின் காலம் தான் பொற்காலம். இந்த அம்மாவின் காலமும் அப்பேற்பட்ட பொற்காலம் தான். பச்சையாக சொன்னால் இது பார்ப்பன கும்பலுக்கும் பணக்கார கும்பலுக்கும் பொற்காலம். பாட்டாளி மக்களுக்கோ இருண்டகாலம்.

தொகையறா

திராவிட தமிழ் நாட்டிலே…
மாறுவேடம் பூண்டு வந்து..
ஆட்சியை அபகரித்த பாஞ்சாலி… ஆமா..!
அக்கிரகாரம்..
ஆடுகின்ற ஆட்டமதை காண்க..! காண்க..

பல்லவி

கச்சம் வரிஞ்சு கட்டி
உச்சி குடுமி தட்டி
அக்கிரகாரம் வந்ததே!
ஏ! ஜெய ஜெய சங்கர..
அக்கிரகாரம் வந்ததே!
ஏ! ஜெய ஜெய சங்கர..
அவதாரம் போட்டு வந்ததே!
ஏ ஹரஹர சங்கர!

அண்ட சராசரம்
கண்டு நடுங்கிட
இந்து தினமணி
ஜிங்சக்க ஜிஞ்சா
அவதாரம் போட்டு வந்ததே!
ஏ! ஜெய ஜெய சங்கர!
அவதாரம் போட்டு வந்ததே!

ஏ! அரகர சங்கர!

வசனம்

அங்க வங்க சுங்க கலிங்காதி சக்கரவர்த்திகளும்
கேகய, கோசல, மகத விஜயாதி ராஜாக்களும்
சேர சோழ பாண்டிய மன்னர்களும்
படை கட்டி ஆண்ட காலத்திலே / லே
கொடி கட்டி ஆண்ட அவாள் / அவாள்
சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலே / லே
கொடியிழந்து, படையிழந்து, முடியிழந்து / முடியிழந்து
கப்பம் கட்டி வாழ்ந்த காலத்திலே
டர்பன் கட்டி ஆண்ட அவாள்…

ஈவெரா பெரியாரும், அம்பேத்காரும், பூலேயும்
பிடித்த பிடியிலே பிதுங்கி அடித்த அடியிலே அரண்டு
ஒழிந்து மறைந்து அடக்கி வாசித்த அவாள்…

இன்று…

கச்சம் வரிஞ்சு கட்டி
உச்சி குடுமி தட்டி
அக்கிரகாரம் வந்ததே!
ஏ! ஜெய ஜெய சங்கர..

சரணம்

காஞ்சிதான் தலைநகரம்
காலடியில் காவல் தெய்வம்
ஓய்ந்திருந்த காலம் போனதே!
ஏ! ஜெய ஜெய சங்கர!
பாஞ்சிடுதே பார்ப்பன கூட்டம்!
ஏ! அரகர சங்கர!

அண்ட சராசரம் கண்டு நடுங்கிட
இந்து தினமணி ஜிஞ்சக்க.. ஜிஞ்சா..
அவதாரம் போட்டு வந்ததே! (2)

ஏ! அரகர சங்கர!
(கச்சம் வரிஞ்சி)

ஆறு கோடி தமிழர் கூட்டம்
ஆலாய் பறக்கையிலே
காஞ்சி மடத்து ஆண்டிக்கு!
ஏ! ஜெய ஜெய சங்கர
ஆசிரமம் அஞ்சு கோடிக்கு (2)
ஏ! அரகர சங்கர

(கோரஸ்)
(அண்டசராசரம்)
(கச்சம் வரிஞ்சி)

கோவில் பூசை ஆறு காலம்
தமிழனுக்கு நாச காலம் (2)
கல்லுக்கும் வாழ்வு வந்ததே!
ஏ! ஜெய ஜெய சங்கர! – ஏழை
கஞ்சிக்கும் கேடு வந்ததே!
ஏ! அரகர சங்கர! (2)

(அண்டசராசரம்)

பெரியாரின் கொள்கை – சுய
மரியாதை பாசறையை (2)
காப்பாத்த வந்தேனென்றாளே!
ஏ! ஜெய ஜெய சங்கர!
பாப்பாத்தி வந்தேனென்றாளே!
ஏ! அரகர சங்கர!
பாப்பாத்தி வந்தேனென்றாளே!

(கோரஸ்)
(அண்டசராசரம்)
(கச்சம் வரிஞ்சி)

டெல்லியிலே அத்துவானி!
சென்னையிலே அல்லிராணி! (2)
ஆர்.எஸ்.எஸ் ஆட்டம் போடுதே!
ஏ! ஜெய ஜெய சங்கர!
போயசு தூபம் போடுதே! (2)
ஏ! அரகர சங்கர!

(கோரஸ்)
(அண்டசராசரம்)
(கச்சம் வரிஞ்சி)

அரகர சங்கர! ஜெய ஜெய சங்கர!
அரகர சங்கர! ஜெய ஜெய சங்கர!
அரகர சங்கர! ஜெய ஜெய சங்கர!

சொர்ணவல்லி மிஸ் – அமிர்தா

6

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் 4 – அமிர்தா

டந்த இரண்டு நாட்களில், சொர்ணவல்லி மிஸ் பற்றிய நினைவுகளில் சில வருடங்களை எளிதாய் பின்னோக்கி போய்விட்டேன். பள்ளி முடிந்து நானும், என் தோழி காயத்ரியும் சொர்ணவல்லி மிஸ்ஸிற்காக வழக்கமாய் காத்திருப்போம். அவர் வந்ததும் அவருடன் உற்சாகமாய் கிளம்புவோம். பள்ளியிலிருந்து வீட்டிற்குமான இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை மிஸ்ஸை கேள்விகளால் துளைத்தெடுப்போம். கொஞ்சம் கூட சளைக்காமல் எங்களுக்கு பதிலளித்துக்கொண்டே வருவார். தெரியாத கேள்விகளுக்கு தெரியாது என்று சொல்லிவிடுவார். அந்த கேள்வியை நாங்களே அப்பொழுதே மறந்து போயிருப்போம். ஆனால், மிஸ்ஸோ அது குறித்து தேடிப் படித்து, அடுத்து வரும் நாட்களில் கேள்வியை நினைவுபடுத்தி, பதிலும் சொல்வார்.

ஆசிரியை
“பள்ளிகளில் ஒவ்வொரு மாணவியைப் பற்றிய குடும்ப சூழ்நிலை, தனித்திறன் குறித்தும் அறிந்து வைத்திருப்பார்.”

அவரை வீட்டில் விட்டு விட்டு, நேரே எங்கள் வீட்டுக்குப் போய் தலையை காட்டி விட்டு, நேரே புத்தகப் பையுடன் மிஸ் வீட்டிற்கே டியூஷனுக்காக போய் விடுவோம். எங்களுடன் 10 பேராவது அவர் வீட்டில் படிப்பார்கள். அதற்காக கட்டணம் எதுவும் கேட்க மாட்டார். ஏன் எனக் கேட்டால், பிள்ளைகள் வசதியில்லாமல் சிரமப்படக் கூடியவர்கள். அவர்களிடம் பணம் வாங்க மனம் வருவதில்லை என்பார். பாடத்தில் சந்தேகம் இருப்பவர்கள் யார் வேண்டுமென்றாலும் வீட்டிற்கு வந்து படிக்கலாம் என்பார். படிக்கிற பிள்ளைகள் எல்லோருக்கும் மணக்க மணக்க அருமையான காபி தருவார்.

இதில் குறிப்பிடத்தக்க முக்கிய விசயம் சொர்ணவல்லி மிஸ் எங்களுக்கு வகுப்பாசிரியர் கிடையாது. அதில் எங்களுக்கெல்லாம் மிகப் பெரிய வருத்தம். பள்ளியில் செஞ்சிலுவை சங்க வகுப்பு ஆசிரியர் அவர். பிடித்த ஆசிரியர் சொல்லித் தருவதால் என்னவோ, சில மனதில் ஆழமாய் பதிந்துவிடுகிறது. இன்றைக்கும் போகிற போக்கில் குப்பையை எங்கும் என்னால் போடமுடியாது. உரிய இடத்தில் தான் போடுகிறேன்.

அது பெண்கள் பள்ளி. பள்ளிகளில் ஒவ்வொரு மாணவியைப் பற்றிய குடும்ப சூழ்நிலை, தனித்திறன் குறித்தும் அறிந்து வைத்திருப்பார். பள்ளியிலும், சுற்று வட்டார பள்ளிகளிலும் பேச்சுப்போட்டி, நடனப்போட்டி, யோகாசனப் போட்டி, ஓவியப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி என எங்கு நடந்தாலும், மாணவிகளை சேரச்சொல்லி உற்சாகப்படுத்தி, கலந்து கொள்ள வைப்பார். இப்படி தொடர்ச்சியாய் கலந்துகொண்டு பல மாணவிகள் ஜெயித்து, பள்ளியும் பிரபலமானது. என்னிடம் உள்ள நிறைய சான்றிதழ்கள் எல்லாம் சொர்ணவல்லி மிஸ்ஸை தான் நினைவுப்படுத்துகின்றன.

ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து மாணவிகளை சுற்றுலா அழைத்துபோவதில் சில நடைமுறைச் சிக்கல்களை, சிரமங்களை பெரிய பாரமாய் நினைத்துக்கொண்டு எங்கும் அழைத்துப்போவதேயில்லை. சொர்ணவல்லி மிஸ் சுற்றுலாவின் முக்கியத்துவம் உணர்ந்து முன்முயற்சியுடன் ஏற்பாடு செய்தார். அப்படி ஜாலியாய் சென்று வந்த சுற்றுலாக்கள் இன்றைக்கு நினைத்தாலும் மறக்க முடியாதவை.

சொர்ணவல்லி மிஸ் யாரையும் அடிக்க மாட்டார். கோவித்துக் கொள்ள மாட்டார். கொஞ்சம் டல்லாய் இருக்கும் மாணவர்களிடம் கூடுதல் அக்கறை எடுத்து படிக்க வைப்பார். சொர்ணவல்லி மிஸ் என்றாலே மாணவர்களுக்கு அவ்வளவு பிடிக்கும். ஆசிரியர்கள் ஓய்வறையில் சொர்ணவல்லி மிஸ்ஸிடம் மட்டும் சந்தேகம் கேட்க என எப்பொழுதும் 5 அல்லது 6 பேர் அவரை சுற்றி இருந்து கொண்டே இருப்பார்கள்.

ஆசிரியர் என்றாலே படிப்பதை நிறுத்தியவர்களாகத் தான் பலரும் இருக்கிறார்கள். சொர்ணவல்லி மிஸ் நாங்கள் இருந்த பகுதியில் உள்ள எல்லா நூலகங்களிலும் உறுப்பினர். நான்கு நாட்களுக்கு ஒருமுறை நூலகங்களுக்கு புத்தகம் எடுத்து வருவார். எனது வாசிப்பு பழக்கம் கூட அவரிடமிருந்து துவங்கியது தான்.

அந்த பள்ளி அந்த பகுதியிலேயே முதலில் துவங்கிய உயர்நிலைப் பள்ளி. அரசு உதவி பெறும் பள்ளி. பெரும்பாலான ஆசிரியர்கள் வயதானவர்கள். சிடுமூஞ்சி ஆசிரியர்கள், கடனுக்கு வகுப்பு எடுப்பவர்கள் என பலரும் இருக்கிற வழக்கமான பள்ளிகளில் ஒன்றாக தான் பல காலம் இயங்கி வந்தது. சொர்ணவல்லி மிஸ்சும், சித்ரா மிஸ்சும் தான் இளவயது ஆசிரியர்கள். அதனால் நெருக்கமாக இருப்பார்கள். தலைமை ஆசிரியர் பள்ளியில் ஆண்டு விழாவோ, வேறு எந்த வேலை என்றாலும் சொர்ணவல்லி மிஸ்சை அழைத்துதான் செய்யச் சொல்வார். சொர்ணவல்லி மிஸ்ஸிற்கு மாணவர்களிடம், தலைமை ஆசிரியரிடம் இருக்கும் செல்வாக்கை பார்த்து, பல ஆசிரியர்கள் பொறாமையில் புறம் பேசினார்கள். சில இடைஞ்சல்களைக் கூட செய்தார்கள். இதையெல்லாம் தெரிந்தே அவர்களிடம் சிநேகமாகவும், பல உதவிகள் செய்யக் கூடியவராகவும் இருந்தார். நாளடைவில் அவர்களையும் கவர்ந்திருந்தார். சித்ரா மிஸ்சும் கூட வழக்கமான சிடுமூஞ்சி ஆசிரியராகத் தான் துவக்கத்தில் இருந்தார். சொர்ணவல்லி மிஸ்ஸிடம் இருந்த நட்பால், அவரும் ஒரு நல்ல ஆசிரியராக மாறத் துவங்கியிருந்தார்.

மாணவியர்
ஆசிரியர்கள் ஓய்வறையில் சொர்ணவல்லி மிஸ்ஸிடம் மட்டும் சந்தேகம் கேட்க என எப்பொழுதும் 5 அல்லது 6 பேர் அவரை சுற்றி இருந்து கொண்டே இருப்பார்கள்.

மாணவர்களிடம் அவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டும் விதமே தனி. தேர்வுத் தாளை அடித்தல் திருத்தலோடு எழுதும் என்னிடம், ஒரு அடித்தல், திருத்தல் இல்லாமல், குண்டு குண்டாக எழுதும் ஒரு பெண்ணின் தாளை காட்டி “இது நல்லா இருக்குல்ல!” என்பார். ‘இது மாதிரி நீயும் எழுது” என்று கூட சொல்ல மாட்டார். குப்பைகளை கண்ட இடத்தில் போடாதே என அறிவுரை எல்லாம் சொல்ல மாட்டார். அவரே இயல்பாக செய்வார். எந்த காரியம் செய்தாலும் திருத்தமாக செய்வார். அவர் தான் மாணவிகளாகிய எங்களுக்கு முன்மாதிரி.

எங்கள் குடும்பத்தில் ஒருவராக சில மாதங்களில் மாறியிருந்தார். பெண் பிள்ளை என்பதால் எங்கள் வீட்டில் எங்கேயும் வெளியே விட மாட்டார்கள். சொர்ணவல்லி மிஸ் வீட்டிற்கு என்றால் எந்த மறுப்பும் சொல்ல மாட்டார்கள். வெளியூருக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருந்தால், அவர் வந்து நான் பார்த்துக் கொள்கிறேன் அனுப்பி வையுங்கள் என்றால், உடனே ஏற்றுக் கொள்வார்கள். அவர் மீது அவ்வளவு மரியாதை. அந்த வயதில் அழகு பற்றிய கருத்து ஆக்கிரமித்த பொழுது, மனிதர்களை நேசிப்பது; உதவுவது தான் அழகு என சொன்னது இன்றைக்கு வரைக்கும் நினைவில் நிற்கிறது.

தன்னிடம் படித்த மாணவிக்கு திருமணம் என்றால், தன்னை மதித்து திருமண பத்திரிக்கை தந்தால் தான் போக வேண்டும் என்ற ஈகோ இல்லாமல் யார் மூலமாக கேள்விப்பட்டாலே திருமணத்தில் கலந்துகொள்வார். கேட்டால், யாராவது தரக் கூடாது என நினைப்பார்களா! அதிகமான வேலைகளில் மறந்திருப்பார்கள் என்பார். என்னுடைய அக்கா திருமணம் சென்னையிலிருந்து 500 கிமீ தள்ளி ஒரு ஊரில் நடந்த பொழுதும், தவறாமல் கலந்து கொண்டார்.

இடைக்காலத்தில் ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக ஓர் ஆண்டு வேலை செய்தேன். ஆசிரியராக வேலை செய்த பொழுது, என் நடவடிக்கைகளை இப்பொழுது அசை போடும் பொழுது, சொர்ணவல்லி மிஸ்ஸை போல தான் நடக்க முயன்றிருக்கிறேன் என்பதை உணரமுடிகிறது. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. சொர்ணவல்லி மிஸ் எவ்வளவு கடுமையாக உழைத்திருப்பார் என்பதையும் உணரமுடிந்தது. அவர் ஆசிரியர் பணியை மிகவும் விரும்பி செய்ததை இப்பொழுது உணர்கிறேன்.

பள்ளி துவங்கி, முதுநிலை படிப்பு வரை பல ஆசிரியர்களை கடந்து வந்திருந்தாலும், சொர்ணவல்லி மிஸ் தான் இன்றைக்கும் நினைவில் நிற்கிறார். இப்பொழுதும் தூங்குவதற்கு முன்பு, மாதத்தில் இருமுறையாவது சொர்ணவல்லி மிஸ்ஸைப் பற்றி என் பிள்ளைக்கு நினைவுபடுத்துகிறேன்.

வழமையான பள்ளியாக, கெட்டித்தட்டிப் போன ஒரு பள்ளியின் அகத்தையும், புறத்தையும் சில ஆண்டுகளில் மாற்றியமைத்தார். ’சாட்டை’ படம் பார்க்கும் பொழுது தயாளன் ஆசிரியர் சொர்ணவல்லி மிஸ்ஸாக தான் எனக்கு தெரிந்தார். ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியராலேயே இவ்வளவு செய்யமுடியும் என்றால், நாடு முழுவதும் பள்ளிகளில் சொர்ணவல்லி மிஸ் போல பரவியிருந்தார்கள் என்றால் எவ்வளவு அருமையான சமுதாயமாக மலரும் என நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது.

சொர்ணவல்லி மிஸ் துவங்கி வைத்த தேடுதலில் தான், தொடர்ச்சியாக பயணித்து சமூக மாற்றத்திற்கான பணியில் பெண்கள் விடுதலை முன்னணியை கண்டடைந்து வேலை செய்கிறேன். இந்த வயதில் நிதானித்து தொகுத்து பார்க்கும் பொழுது, சொர்ணவல்லி மிஸ் என் வாழ்வில் அகத்திலும், புறத்திலும் நிறைய நல்ல தாக்கத்தை ஆழமாய் என்னுள் பதிந்திருக்கிறார் என உணர்கிறேன்.. சொர்ணவல்லி மிஸ்ஸிற்கு எந்த காலத்திலும் இதுவரை நன்றி சொன்னதாக நினைவு இல்லை. இப்பொழுது அவருக்கு இந்த நாளில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தோழமையுடன்,

அமிர்தா,
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.

சிதம்பரம் நடராசர் கோயிலை மீண்டும் கைப்பற்ற தீட்சிதர்கள் முயற்சி !

31

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
702/5 ஜங்சன் ரோடு,விருத்தாசலம்,கடலூர் மாவட்டம்.
94432 60164, hrpctn@gmail.com

103,ஆர்மேனியன் தெரு,பாரிமுனை,சென்னை. 9489235314.
வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்

சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு எதிராக, தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து பிப்ரவரி 2009-ல் உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து உண்டியலே இல்லாத அந்தக் கோயிலில் முதன் முறையாக இந்து அறநிலையத்துறை உண்டியலை வைத்தது. கோயிலை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சிதம்பரம் கோயில்
சிதம்பரம் நடராசர் கோயில்

இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்திலேயே தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டில் தீட்சிதர்களுடன் சுப்பிரமணிய சாமியும் ஒரு மனுதாரராக இணைந்து கொண்டார். இவர்களது மேல்முறையீட்டையும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்து தீர்ப்பளித்தது.  அதன் பின்னர் தீட்சிதர்களும் சுப்பிரமணிய சாமியும் இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு வழக்கு 25.11.2013 அன்று விசாரணை தொடங்கியது. இன்றும் வாதம் தொடர இருக்கிறது.

தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் தமிழ் பாடுவதற்கான போராட்டத்தை முன்நின்று நடத்திய நாங்கள், சிவனடியார் ஆறுமுகசாமியை மனுதாரராக கொண்டு 2008 இலேயே இந்த வழக்கில் உயர்நீதி மன்றத்தில் இணைந்து கொண்டோம். பல ஆண்டுகளாக மீளா உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருந்த இந்த வழக்கைத் தட்டியெழுப்பி விசாரணைக்கு கொண்டு வந்து, வெற்றியும் ஈட்டினோம். இதன் தொடர்ச்சியாக தீட்சிதர்களின் மேல் முறையீட்டுக்கு எதிராகத் தற்போது உச்ச நீதிமன்றத்திலும் நாங்கள் தலையிட்டிருக்கிறோம்.

கோயிலை இந்து அறநிலையத்துறையிடமிருந்து பிடுங்கி மீண்டும் தங்கள் வசமே ஒப்படைக்க வேண்டும் என்பது தீட்சிதர்களின் கோரிக்கை. கோயில் தங்கள் வகையறாவின் தனிச்சொத்து என்பது அவர்களது வாதம். ஆனால் கோயிலின் மீது அவர்களுடைய உரிமையை நிருபிப்பதற்கான ஒரு சிறிய சான்று கூட அவர்களிடம் கிடையாது என்ற வரலாற்று உண்மையை 1890-ல் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் முத்துசாமி அய்யர்,செப்பேர்டு ஆகியோர் தீர்ப்பாக கூறியுள்ளனர்.

தில்லைக்கோயில் மக்களுடைய பணத்தில் பல மன்னர்களால் கட்டப்பட்டது. எனவே கோயிலும் அதன் நகைகள் மற்றும் நிலங்களும் பொதுச்சொத்துகள். தீட்சிதர்கள் எனப்படுபவர்கள் அக்கோயிலின் அர்ச்சகர்கள் மட்டுமே என்பது எங்களது வாதம். இந்து அறநிலையத்துறையின் வாதமும் அதுதான்.

இந்த வழக்கில் தலையிட்டுள்ள சுப்பிரமணிய சாமி மூன்று வாதங்களை முன்வைத்திருக்கிறார்.

கோயிலை மீண்டும் தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.

சிற்றம்பல மேடையில் பக்தர்கள் தேவாரம் பாடுவது, இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துவதாகும் என்பதால், தமிழ் பாடுவதை தடை செய்யவேண்டும்.

தமிழ்நாடு அறநிலையத்துறைச் சட்டத்தின் பிரிவு எண் 45 இன் படி இந்துக் கோயில்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகளை நியமிப்பது, இந்துக்களின் மத உரிமையில் தலையிடுவதாகும் என்பதால் அந்தப் பிரிவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அதை ரத்து செய்ய வேண்டும்

சுப்பிரமணிய சாமி, தீட்சிதர்களுடன் இணைந்து முன்வைக்கும் இந்தக் கோரிக்கைகள் சங்க பரிவாரத்தின் கோரிக்கைகள் ஆகும். இந்து அறநிலையத் துறையைக் கலைத்து விட்டு எல்லாக் கோயில்களையும் பரம்பரை அறங்காவலர்களின் தனிச் சொத்தாக்க வேண்டும் என்ற அவர்களுடைய கோரிக்கைதான் இவ்வழக்கில் எழுப்பப் படுகிறது.

ஜெயா - தீட்சிதர்கள்
2009-ம் ஆண்டு ஜெயலலிதாவைச் சந்தித்த சிதம்பரம் தீட்சிதர்கள்.

தமிழ்நாடு அறநிலையத்துறைச் சட்டத்தின் பிரிவு எண் 45 அகற்றப்படுமானால், சிதம்பரம் கோயில் மட்டுமின்றி, எல்லாக் கோயில்களிலும் நிர்வாக அதிகாரிகள் அகற்றப்பட்டு கோயில்கள் அனைத்தும் மீண்டும் கொள்ளைக் கூடாரங்களாக மாற்றப்பட்டு விடும்.

ஏற்கெனவே தமிழக அரசு இந்த திசையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் நாத்திகர்களின் உரிமையை ரத்து செய்வது, அறநிலையத்துறையின் பணி நியமனத்தில் நாத்திகர்களை அகற்றுவது, கோயில் பிரசாதங்கள் தயாரிக்கும் பணிகளுக்கு “பார்ப்பனர் மட்டும்” என்று விளம்பரம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப் படுகின்றன.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு திமுக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு மதுரை கோயில் சிவாச்சாரியார்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான பார்ப்பனரல்லாத அர்ச்சக மாணவர்கள் ஆலயத் தீண்டாமையின் காரணமாக வெளியில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். 2006-ம் ஆண்டு முதல் அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உறங்குகிறது. தமிழக அரசு அந்த வழக்கை முடித்து அர்ச்சக மாணவர்களை நியமிக்க வழி காணாமல், வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் 2009-ல் போடப்பட்ட தீட்சிதர்களின் மேல் முறையீடு உடனே விசாரணைக்கு வந்திருக்கிறது.

தமிழ்நாடு என்பது திராவிடர்களும் நாத்திகர்களும் ஆளும் காடு என்பதைப் போலவும், இங்க பக்தர்களும் பார்ப்பன சமூகத்தினரும் சொல்லொணாக் கொடுங்கோன்மைக்கு ஆளாக்கப்பட்டு வருவதைப் போலவும் ஒரு சித்திரத்தை தனது வாதங்களின் மூலம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணிய சாமி. தீட்சிதர்களின் தரப்பில் பல மூத்த வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

நாங்கள் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக இணைந்து கொண்டிருப்பதால், மூத்த வழக்கறிஞர் ஒருவரை அமர்த்தியிருப்பதுடன், எமது வழக்குரைஞர்களை டெல்லிக்கு அனுப்பி வழக்கு தொடர்பான பணிகளை கவனித்து வருகிறோம்.

இந்த வழக்கின் முதல் எதிர் மனுதாரரான தமிழக அரசோ வழக்கை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறது. 2009-ல் திமுக ஆட்சியில், உயர்நீதிமன்ற உத்தரவின் படி  சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொண்டபோது, போயஸ் தோட்டத்துக்கே சென்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை சந்தித்தவர்கள் தீட்சிதர்கள். தற்போது இந்த வழக்கில் தமிழக அரசு காட்டி வரும் அலட்சியம் உள்நோக்கம் கொண்டது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
திராவிட இயக்க கொள்கைகளில் பற்று கொண்டவர்களும், கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாகக் கூடாது என்ற அக்கறை கொண்டவர்களும், ஆலயத்தீண்டாமையை எதிர்ப்பவர்களும், தமிழ் வழிபாட்டை ஆதரிப்பவர்களும் தமிழக அரசின் இந்தப் போக்கிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தின் சுயமரியாதைப் பாரம்பரியத்தையும், தமிழ் உணர்வையும் எதிர்த்து பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி என்ற அரசியல் தரகனும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்களும் வெற்றி பெறுவதை நாம் அனுமதிக்க கூடாது.

இப்படிக்கு
உண்மையுடன்

(சி.ராஜு)
நாள் 28-11-13

காஞ்சி, சிருங்கேரி, பூரி சப்பாத்தி – ம.க.இ.க பாடல்

17

க்கள் கலை இலக்கியக் கழகம் 1993-ம் ஆண்டு வெளியிட்ட “அசுர கானம்” பாடல் ஒலிப்பேழையில் இடம் பெற்ற “சின்னவாளு, பெரியவாளு” பாடல்.

புராண இதிகாசங்கள் படியும் மனுதர்ம சாத்திரங்கள் படியும் ஆட்சி நடக்கிறதா என்று கவனிப்பதற்கு என்றே கையில் தடிக்கம்போடு ஒருவர் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கிறார். அவர் பெயர் ஜகத்குரு. சாதாரண குரு அல்ல ஜெகத்த்து குரு.

“உன்னால ஜகத்துக்கு என்னடா பிரயோஜனம்”னு கேட்டா “லோக சேமத்துக்கு தவம் பண்ணுறேன்” என்கிறான். “அட மண்டல் கமிஷனுக்கு என்ன சொல்றேன்”னு கேட்டா,  “இது பகவானுக்கே அடுக்காது” என்கிறான்.

“அட அயோத்தியில் உங்க ஆளு மசூதியை இடிச்சுட்டானே இது அடுக்குமா” என்று கேட்டா “நன்னா இடிக்கட்டும்” என்கிறான். “மசூதி என்ன மசூதி அயோத்தி பூராவுமே எங்க ஸ்ரீராமனுக்கு சொந்தம்” என்கிரான்.

“சாமி நீரே சர்வ மானியம், இந்துவுக்கெல்லாம் நீ என்னாடா நாட்டாமை?”

பல்லவி

சின்னவாளு பெரியவாளு நடுவாளு கொடுவாளு
எத்தன வாளானாலும் அத்தனையும் அவாளு
காஞ்சி, சிருங்கேரி, பூரி சப்பாத்தி
எங்கடா எங்க ஆளு – அட
எங்கடா எங்க ஆளு – அட

எல்லாம் இந்துங்கறது ரீலு – போடா
எல்லாமே …. பூ…ணூலு
எல்லாமே …. பூ…ணூலு

சரணம்

புத்தரிருந்தார்… சித்தருமிருந்தார்
பட்டினத்தார் கீர தண்டாட்டம் மெலிஞ்சார்..
அவலு பொரிதாங் ஆகாரமிங்குற…..நீ
அவலு பொரிதாங் ஆகாரமிங்குற..
ஆளப்பாரு பொலி காள… அவன்
ஆளப்பாரு பொலி காள
நீ வந்திடடா விடி கால..- ஏருக்கு
கொறையுது ஒரு காள (சின்னவாளு)

சந்து சந்தா சாராயம் விக்கிறாங்..
சனங்க தாலிய சொல்லி அறுக்குறாங்..
சகத்துக்குருங்கிற……இதுக்கும் இளிக்குற
மகத்துச் சாவுக்கு மழுப்புற ,மொழுவுற… நீ
மகத்துச் சாவுக்கு மழுப்புற மொழுவுற
அதுக்கொரு அருள் வாக்கு..
நீ அம்முக்கு ஆ…….த…..ர….வூ
அப்படி என்னதாண்டா ஒறவு..? (சின்னவாளு)

கோடி கோடி சொத்து பல கோடி
காமகோடிய வந்ததே…. தேடி…
நாடும் மக்களும் ஆனதே போண்டி
மடத்துக்கு பலமாடி..ஆண்டி
மடத்துக்கு பலமாடி
நீ திருவோடு எடுக்காட்டி….உன்ன
பொரட்டிடுவோம்… பொரட்டி (சின்னவாளு)

எதுக்குடா துறவிக்கு அரசியலுங்குற..
இடிச்சுட்டான் மசூதிய இதுக்கென்ன சொல்லு
நடந்தது போகட்டும் எதுக்கத கெளரனும்
திமிருல பதில் சொல்லுற… – நீ
திமிருல பதில் சொல்லுற… – உன்ன
இறுக்குறேன் செருப்புலடா…- அட
அதையும் மறந்திடடா….. (சின்னவாளு)

தகிடுதத்தம் டாடாவும் வாறான்
அரையிருட்டுல அம்பானி வாறான்
நாட்டையே வித்த ராவுஜி வாறான்
நடக்க முடியாம
நடக்க முடியாம சர்மாவும் வாறான்
என்னடா அங்க வேல… -அட
என்னடா அங்க வேல..
சம்போ… சங்கர மகா தே….வா- உன்

கும்பலே சதிதாண்டா
கும்பலே சதிதாண்டா

இடிந்தகரை சுனாமி காலனி வெடிவிபத்து – HRPC பத்திரிகை செய்தி

0

மனித உரிமை பாதுகாப்பு மையம்தமிழ்நாடு

702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
எண் 103, முதல் தளம், ஆர்மேனியன் தெரு, உயர்நீதிமன்றம் எதிரில், சென்னை-1
கைபேசி : 94432 60164, 9489235314,        mail : hrpctn@gmail.com


வழக்கறிஞர். சி.ராஜு,                                                                                                          நாள் :  28-11-13
மாநில ஒருங்கிணைப்பாளர்,

பத்திரிக்கை செய்தி

26.11.2013 அன்று இடிந்தகரை சுனாமி காலனியில்நடந்த வெடி விபத்தில் 5 பேர் இறந்துள்ளனர். இந்தவெடி விபத்துக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மீது இந்த வெடி விபத்து தொடர்பாக வழக்கு போடுவதாக முதலில் காவல்துறை அறிவித்தது. பிறகு பின்வாங்கி, வெடி விபத்தில் இறந்தவர், காயமுற்றவர்கள் மீதே வழக்கு போட்டிருக்கிறது. தனது முன்னுக்குப் பின் முரணான செயல்பாடுகளுக்கு காவல்துறை இதுவரை விளக்கம் தரவில்லை.

இடிந்தகரை  வெடி விபத்து என்பது தாதுமணல் கொள்ளைப் பிரச்சனையின் தொடர்ச்சியே ஆகும். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டக் கடலோரங்களில் நடந்து வரும் தாது மணல் கொள்ளைக்கு எதிராக கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மக்கள் காட்டி வரும் தீவிர எதிர்ப்புக்கு ஒரு எதிர் விளைவாகவே கடலோர கிராமங்களில் கலவரமும், பிரச்சனையும்,வெடிகுண்டு வீச்சும் நடந்து வருகிறது.

சுனாமி காலனி
குண்டு வெடிப்பு நடந்த சுனாமி காலனி (படம் : நன்றி thehindu.com)

குறிப்பாக நெல்லை மாவட்டம் கூத்தன்குழி கிராமம் கடந்த 4 மாதங்களாகவே கலவர கிராமமாக உள்ளது. இப்பகுதியில் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் பல ஆண்டுகளாக தாது மணல் அள்ளி வருகிறார். வைகுண்டராஜனின் சட்டவிரோத மணல் கொள்ளையால் பாதிக்கப்பட்ட கூத்தன்குழி மக்களின் ஒரு பகுதியினர்  வைகுண்டராஜனுக்கு எதிராக போராடுகின்றனர். இதே கூத்தன்குழி கிராமத்தில் வைகுண்டராஜனின் மிகப்பெரிய அடியாட்கள் படையும் மிக நீண்ட நாட்களாகவே இயங்கி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தாது மணல் ஆலைக்கு வேலைக்கு போகக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப் பட்டதை எதிர்த்து, வைகுண்டராஜனின் அடியாட்கள் ஊருக்குள் கலவரத்தை உருவாக்கி தாது மணல் கொள்ளையை எதிர்த்தவர்களின் வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, தேவாலயத்தையும் அடித்து நொறுக்கி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். வைகுண்டராஜன் அடியாட்களின் வன்முறையை எதிர்கொள்ள முடியாத நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஊரைவிட்டு வெளியேறி இடிந்தகரை, கூட்டப்புளி, உவரி உள்ளிட்ட கிராமங்களில் தஞ்சம் புகுந்து அகதிகள் போல வாழ்ந்து வருகின்றனர். இக்கொடூர சம்பவத்திற்கு எதிராக கூத்தன்குழி அண்டன் உள்ளிட்ட பலர் புகார் அளித்தும் முதல் தகவல் அறிக்கை கூட பதியப் படவில்லை. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, மதுரை உயர்நீதிமன்றமும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய  விபத்திற்கு அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது உடனே குற்றம் சுமத்திய காவல்துறை, நூற்றுக் கணக்கான வெடிகுண்டுகள் வீசப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவிற்குப் பின்பும் வைகுண்டராஜன் மீது வழக்கு பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் நடந்து வந்த கலவரத்திற்கும் வைகுண்டராஜன்தான் பின்னணி என மீனவ மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 23.11.2013 அன்று தூத்துக்குடியில் மணற்கொள்ளைக்கு எதிராகவும், வைகுண்டராஜனை கைது செய்யக் கோரியும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் நாங்கள் நடத்திய பொதுக்கூட்டத்திலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வைகுண்டராஜனின் அடியாட்கள் கலவரம் செய்ய முயற்சித்தனர். சீரூடையில் இருந்த போலீசார் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சிவில் உடையில் இருந்த உளவுத்துறை அதிகாரிகள், கலவரக்காரர்களை வழிநடத்திக் கொண்டிருந்தனர். குறிப்பாக வைகுண்டராசனின் நெருங்கிய உறவினரான ரவி என்பவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றுபவர். இவர்தான் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுபவர். அன்றையதினம் இவர் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக வந்திருந்து அவரின் கீழ் பணிபுரியும் அந்தோணி என்ற உளவுத்துறை காவலர் மூலம் வைகுண்டராசனின் ஆட்களுக்கு கூட்டத்தில் பிரச்சினை செய்வதற்கான வழிகாட்டுதல்களை நேரடியாக அளித்துள்ளார். மதுரையில் ஐ.ஜி.டி.ஐ.ஜி அலுவலகத்திற்கு நேரடியாக புகார் தெரிவித்த பிறகு தான் கூடுதலாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலமை சீரடைந்தது. அது வரை எங்களது தொண்டர்கள் மூலம்தான் நாங்கள் நிலைமையை சமாளிக்க வேண்டியிருந்தது. பஞ்சல் அருகே பொன்னார்குளம் பிளாண்ட், கூட்டப்புளி அருகே கனகாபுரம் பிளாண்ட், கூத்தங்குழி, நாவலடி ஆகிய இடங்களில் வி.வி.மினரல்ஸ் தாது மணல் பிளாண்ட் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. கண்டெய்னரில் மணல் போகிறது. இது அதிகாரிகளுக்கு தெரியும். பேடி குழு வந்த போது கடற்கரையில் உள்ள போர்சாதனங்களை அப்புறப்படுத்திவிட்டு, தற்போது மீண்டும் இயக்கப்படுகிறது. மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் உண்மை அறியும் குழு ஆய்வு செய்த போது உதவி செய்தவர்கள் கருத்து தெரிவித்தவர்களுக்கு வி.வி ஆட்களால் கொலை மிரட்டல் விடப்படுகிறது.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டக் கடலோரங்களில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. வைகுண்டராஜனின் தனி அரசாங்கம் நடந்து வருகிறது என்பதே உண்மை. இந்த “தனி நாட்டை” தமிழக அரசும் அங்கீகரித்திருப்பதாகவே தெரிகிறது. கடலோர கிராமங்களில் அமைதி நிலவ வேண்டுமென்பது தமிழக அரசின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில், குண்டு வெடிப்புகள், வன்முறைகள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கும் தாது மணல் கொள்ளைக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். ககன்தீப்சிங் பேடி ஆய்வு குழு அறிக்கையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். தாது மணல் கொள்ளையர்களில் முதலிடம் வகிக்கும் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.

– (வழக்கறிஞர் சி.ராஜு)

பத்திரிகையாளர் சந்திப்பு படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

காஞ்சியில சங்கரரு… கேரளாவில கண்டரரு… தில்லையில தீட்சதரு…

7

“காஞ்சியில சங்கரரு… கேரளாவில் கண்டரரு… தில்லையில தீட்சதரு… இறைவா, காப்பாத்த போவது யாரு… இறைவா ஒன்னை காப்பாத்தப் போவது யாரு” – பிப்ரவரி 24, 2007 அன்று மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய 14-வது தமிழ் மக்கள் இசை விழாவில் ம.க.இ.க மைய கலைக்குழுவினர் பாடிய பாடல்.

வெள்ளையர்களால் வீரச்சாவு அடைந்த திப்புவின் உடலைப் பார்த்து, மானம் இழந்து இனி வாழ்வோமா, அல்லா எமக்கு சாவு வராதா, துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே, அல்லா எமக்கு சாவு வராதா. மானத்தை இழந்து வாழ்வோமா அல்லா, எமக்கு சாவு வராதா என்று கதறினார்கள், திப்புவின் வீரர்கள்.

ஆனா, இன்னைக்கு நெலமை என்ன தெரியுமா, கடவுளுக்கு புரோக்கர்னு சொல்லிக்கிறவன் எல்லாம் மானங்கெட்டவனா இருக்கிறான். இந்த அய்யப்பன் கோயிலுக்குப் போறாங்களே, ஐயப்பன் கல்யாணம் ஆகாதவரு, சுத்தமான சாமி, நம்மளும் சுத்த பத்தமா போகணும்னு சொல்லி தேக பலம் தா, பாத பலம் தா, தேக பலம் தா, பாத பலம் தா. அப்படின்னு மலை ஏறி கஷ்டப்பட்டு போய் அப்புறம் பாதம் பொளந்து வர்றாங்க அது வேற விஷயம்.

இவங்க தேக பலந்தான்னு சொல்லறாங்க, அங்க மணி அடிக்கிறானே கண்டருரு மோகனரு, கண்டரரையும் பார்த்து மோகனரு. அவரு மணி அடிக்கிற நேரம் போக மிச்ச எல்லா நேரமும் லாட்ஜிலதான் கெடக்கறாரு. இவங்க தேக பலந்தான்னு சொல்லறாங்க, அவன் தேக சொகந்தாங்கறான்.

இங்க தீட்சிதர்னு தில்லையில பூணூல உருவறான், மூலஸ்தானத்திலேயே வச்சு முட்டை பிரியாணி அடிக்கிறான். கேரளாக்காரனாவது லாட்ஜை தேடி அவன் போறான். ஆனா லாட்ஜே தீட்சிதரு மூல ஸ்தானத்துக்கு வருது. ஆனா மூலஸ்தானத்துக்கு தமிழ் போகக் கூடாதுன்னு சொல்றான்

காஞ்சியில, அவங்களை சொல்லவே வேண்டாம், அவரு இருக்காரு. அப்படி மானம் கெட்டு இன்னமும் கால்ல விழுறவன் இருக்கான்.

—————-
காஞ்சியில சங்கரரு, கேரளாவில் கண்டரரு, தில்லையில தீட்சதரு,
இறைவா, காப்பாத்தப் போவது யாரு
உன்னை காப்பாத்தப் போவது யாரு

கோரஸ்:
காஞ்சியில சங்கரரு, கேரளாவில் கண்டரரு, தில்லையில தீட்சதரு,
இறைவா, காப்பாத்தப் போவது யாரு
உன்னை காப்பாத்தப் போவது யாரு

பகலில திருநீறு இறைவாஆஆ…
பகலில திருநீறு, ராத்திரியில் ஈகிள் பீரு,
கோரஸ் : பகலில திருநீறு ராத்திரியில் ஈகிள் பீரு,
அது கோயிலில்ல, டாஸ்மாக் பாரு
டவுட்டுன்னா ஏட்டையாவ கேட்டுப் பாரு.
கோரஸ் : டவுட்டுன்னா ஏட்டையாவ கேட்டுப் பாரு.

கோரஸ் :
காஞ்சியில சங்கரரு, கேரளாவில் கண்டரரு, தில்லையில தீட்சதரு,
இறைவா, காப்பாத்தப் போவது யாரு
ஒன்னை காப்பாத்தப் போவது யாரு

மோகனரு தீட்சதரு
மோகனரு தீட்சதரு
மோகனரு… தீட்சத…ரு
மோகனரு தீட்சதரு
முட்டையில ரெட்டை கரு

கோரஸ் :
மோகனரு தீட்சத…ரு
முட்டையில ரெட்டை கரு

யாரதுக்கு மூலவரு
இவிங்களுக்கு யாரிதுக்கு மூலவரு
நம்ம கா காஞ்சனா…. கா கழுதையா
காஞ்சி ஜெகத்து குரு, நம்ம காஞ்சி ஜெகத்து குரு

கோரஸ் :
காஞ்சியில சங்கரரு, கேரளாவில் கண்டரரு, தில்லையில தீட்சதரு,
இறைவா, காப்பாத்த போவது யாரு
உன்னை காப்பாத்த போவது யாரு

யாரு காப்பாத்த போவது.