702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
எண் 103, முதல் தளம், ஆர்மேனியன் தெரு, உயர்நீதிமன்றம் எதிரில், சென்னை-1
கைபேசி : 94432 60164, 9489235314, mail : hrpctn@gmail.com
வழக்கறிஞர். சி.ராஜு,நாள் : 28-11-13
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பத்திரிக்கை செய்தி
26.11.2013 அன்று இடிந்தகரை சுனாமி காலனியில்நடந்த வெடி விபத்தில் 5 பேர் இறந்துள்ளனர். இந்தவெடி விபத்துக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மீது இந்த வெடி விபத்து தொடர்பாக வழக்கு போடுவதாக முதலில் காவல்துறை அறிவித்தது. பிறகு பின்வாங்கி, வெடி விபத்தில் இறந்தவர், காயமுற்றவர்கள் மீதே வழக்கு போட்டிருக்கிறது. தனது முன்னுக்குப் பின் முரணான செயல்பாடுகளுக்கு காவல்துறை இதுவரை விளக்கம் தரவில்லை.
இடிந்தகரை வெடி விபத்து என்பது தாதுமணல் கொள்ளைப் பிரச்சனையின் தொடர்ச்சியே ஆகும். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டக் கடலோரங்களில் நடந்து வரும் தாது மணல் கொள்ளைக்கு எதிராக கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மக்கள் காட்டி வரும் தீவிர எதிர்ப்புக்கு ஒரு எதிர் விளைவாகவே கடலோர கிராமங்களில் கலவரமும், பிரச்சனையும்,வெடிகுண்டு வீச்சும் நடந்து வருகிறது.
குண்டு வெடிப்பு நடந்த சுனாமி காலனி (படம் : நன்றி thehindu.com)
குறிப்பாக நெல்லை மாவட்டம் கூத்தன்குழி கிராமம் கடந்த 4 மாதங்களாகவே கலவர கிராமமாக உள்ளது. இப்பகுதியில் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் பல ஆண்டுகளாக தாது மணல் அள்ளி வருகிறார். வைகுண்டராஜனின் சட்டவிரோத மணல் கொள்ளையால் பாதிக்கப்பட்ட கூத்தன்குழி மக்களின் ஒரு பகுதியினர் வைகுண்டராஜனுக்கு எதிராக போராடுகின்றனர். இதே கூத்தன்குழி கிராமத்தில் வைகுண்டராஜனின் மிகப்பெரிய அடியாட்கள் படையும் மிக நீண்ட நாட்களாகவே இயங்கி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தாது மணல் ஆலைக்கு வேலைக்கு போகக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப் பட்டதை எதிர்த்து, வைகுண்டராஜனின் அடியாட்கள் ஊருக்குள் கலவரத்தை உருவாக்கி தாது மணல் கொள்ளையை எதிர்த்தவர்களின் வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, தேவாலயத்தையும் அடித்து நொறுக்கி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். வைகுண்டராஜன் அடியாட்களின் வன்முறையை எதிர்கொள்ள முடியாத நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஊரைவிட்டு வெளியேறி இடிந்தகரை, கூட்டப்புளி, உவரி உள்ளிட்ட கிராமங்களில் தஞ்சம் புகுந்து அகதிகள் போல வாழ்ந்து வருகின்றனர். இக்கொடூர சம்பவத்திற்கு எதிராக கூத்தன்குழி அண்டன் உள்ளிட்ட பலர் புகார் அளித்தும் முதல் தகவல் அறிக்கை கூட பதியப் படவில்லை. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, மதுரை உயர்நீதிமன்றமும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய விபத்திற்கு அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது உடனே குற்றம் சுமத்திய காவல்துறை, நூற்றுக் கணக்கான வெடிகுண்டுகள் வீசப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவிற்குப் பின்பும் வைகுண்டராஜன் மீது வழக்கு பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் நடந்து வந்த கலவரத்திற்கும் வைகுண்டராஜன்தான் பின்னணி என மீனவ மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 23.11.2013 அன்று தூத்துக்குடியில் மணற்கொள்ளைக்கு எதிராகவும், வைகுண்டராஜனை கைது செய்யக் கோரியும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் நாங்கள் நடத்திய பொதுக்கூட்டத்திலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வைகுண்டராஜனின் அடியாட்கள் கலவரம் செய்ய முயற்சித்தனர். சீரூடையில் இருந்த போலீசார் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சிவில் உடையில் இருந்த உளவுத்துறை அதிகாரிகள், கலவரக்காரர்களை வழிநடத்திக் கொண்டிருந்தனர். குறிப்பாக வைகுண்டராசனின் நெருங்கிய உறவினரான ரவி என்பவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றுபவர். இவர்தான் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுபவர். அன்றையதினம் இவர் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக வந்திருந்து அவரின் கீழ் பணிபுரியும் அந்தோணி என்ற உளவுத்துறை காவலர் மூலம் வைகுண்டராசனின் ஆட்களுக்கு கூட்டத்தில் பிரச்சினை செய்வதற்கான வழிகாட்டுதல்களை நேரடியாக அளித்துள்ளார். மதுரையில் ஐ.ஜி.டி.ஐ.ஜி அலுவலகத்திற்கு நேரடியாக புகார் தெரிவித்த பிறகு தான் கூடுதலாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலமை சீரடைந்தது. அது வரை எங்களது தொண்டர்கள் மூலம்தான் நாங்கள் நிலைமையை சமாளிக்க வேண்டியிருந்தது. பஞ்சல் அருகே பொன்னார்குளம் பிளாண்ட், கூட்டப்புளி அருகே கனகாபுரம் பிளாண்ட், கூத்தங்குழி, நாவலடி ஆகிய இடங்களில் வி.வி.மினரல்ஸ் தாது மணல் பிளாண்ட் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. கண்டெய்னரில் மணல் போகிறது. இது அதிகாரிகளுக்கு தெரியும். பேடி குழு வந்த போது கடற்கரையில் உள்ள போர்சாதனங்களை அப்புறப்படுத்திவிட்டு, தற்போது மீண்டும் இயக்கப்படுகிறது. மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் உண்மை அறியும் குழு ஆய்வு செய்த போது உதவி செய்தவர்கள் கருத்து தெரிவித்தவர்களுக்கு வி.வி ஆட்களால் கொலை மிரட்டல் விடப்படுகிறது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டக் கடலோரங்களில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. வைகுண்டராஜனின் தனி அரசாங்கம் நடந்து வருகிறது என்பதே உண்மை. இந்த “தனி நாட்டை” தமிழக அரசும் அங்கீகரித்திருப்பதாகவே தெரிகிறது. கடலோர கிராமங்களில் அமைதி நிலவ வேண்டுமென்பது தமிழக அரசின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில், குண்டு வெடிப்புகள், வன்முறைகள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கும் தாது மணல் கொள்ளைக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். ககன்தீப்சிங் பேடி ஆய்வு குழு அறிக்கையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். தாது மணல் கொள்ளையர்களில் முதலிடம் வகிக்கும் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.
– (வழக்கறிஞர் சி.ராஜு)
பத்திரிகையாளர் சந்திப்பு படங்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
“காஞ்சியில சங்கரரு… கேரளாவில் கண்டரரு… தில்லையில தீட்சதரு… இறைவா, காப்பாத்த போவது யாரு… இறைவா ஒன்னை காப்பாத்தப் போவது யாரு” – பிப்ரவரி 24, 2007 அன்று மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய 14-வது தமிழ் மக்கள் இசை விழாவில் ம.க.இ.க மைய கலைக்குழுவினர் பாடிய பாடல்.
வெள்ளையர்களால் வீரச்சாவு அடைந்த திப்புவின் உடலைப் பார்த்து, மானம் இழந்து இனி வாழ்வோமா, அல்லா எமக்கு சாவு வராதா, துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே, அல்லா எமக்கு சாவு வராதா. மானத்தை இழந்து வாழ்வோமா அல்லா, எமக்கு சாவு வராதா என்று கதறினார்கள், திப்புவின் வீரர்கள்.
ஆனா, இன்னைக்கு நெலமை என்ன தெரியுமா, கடவுளுக்கு புரோக்கர்னு சொல்லிக்கிறவன் எல்லாம் மானங்கெட்டவனா இருக்கிறான். இந்த அய்யப்பன் கோயிலுக்குப் போறாங்களே, ஐயப்பன் கல்யாணம் ஆகாதவரு, சுத்தமான சாமி, நம்மளும் சுத்த பத்தமா போகணும்னு சொல்லி தேக பலம் தா, பாத பலம் தா, தேக பலம் தா, பாத பலம் தா. அப்படின்னு மலை ஏறி கஷ்டப்பட்டு போய் அப்புறம் பாதம் பொளந்து வர்றாங்க அது வேற விஷயம்.
இவங்க தேக பலந்தான்னு சொல்லறாங்க, அங்க மணி அடிக்கிறானே கண்டருரு மோகனரு, கண்டரரையும் பார்த்து மோகனரு. அவரு மணி அடிக்கிற நேரம் போக மிச்ச எல்லா நேரமும் லாட்ஜிலதான் கெடக்கறாரு. இவங்க தேக பலந்தான்னு சொல்லறாங்க, அவன் தேக சொகந்தாங்கறான்.
இங்க தீட்சிதர்னு தில்லையில பூணூல உருவறான், மூலஸ்தானத்திலேயே வச்சு முட்டை பிரியாணி அடிக்கிறான். கேரளாக்காரனாவது லாட்ஜை தேடி அவன் போறான். ஆனா லாட்ஜே தீட்சிதரு மூல ஸ்தானத்துக்கு வருது. ஆனா மூலஸ்தானத்துக்கு தமிழ் போகக் கூடாதுன்னு சொல்றான்
காஞ்சியில, அவங்களை சொல்லவே வேண்டாம், அவரு இருக்காரு. அப்படி மானம் கெட்டு இன்னமும் கால்ல விழுறவன் இருக்கான்.
1996-ல் மூடப்பட்ட சென்னையின் பாரம்பரியம் மிக்க பின்னி ஆலைத் தொழிலாளர்களுக்கு கடந்த அக்டோபர் 19 அன்று ஜவுளித் தொழிலாளிகள் மறுவாழ்வு நிதித் திட்டத்தின் கீழ் நபர் வாரியாக தலா ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை மறுவாழ்வுத் தொகையாக மத்திய அரசு அளித்துள்ளது. பழைய தொழிலாளிகளில் பலர் தற்போது இறந்து விட்டனர் என்றும், மீதமுள்ள பலருக்கும் வங்கியில் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க இயலாததால் அவர்களது வங்கிக் கணக்குகள் பெரும்பாலும் முடங்கி விட்டதாகவும் தெரிகிறது.
ஜவுளித் தொழிலாளர்கள் மறுவாழ்வு நிதி திட்டம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பங்கேற்ற பின்னி தொழிலாளர்களில் ஒரு பகுதி (படம் : நன்றி The Hindu).
பின்னி அண்டு கம்பெனி பாதி மூடப்பட்ட போது வேலையிழந்த 1012 தொழிலாளிகளில் 854 பேரை மாத்திரம் தற்போது தொழிற்சங்கங்கள் மூலமாக மத்திய அரசு கண்டறிந்துள்ளதாகவும், முதல் தவணையாக ரூ.3.28 கோடி தற்போது தரப்படுவதாகவும் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கே. சாம்பசிவ ராவ் கூறியுள்ளார். மொத்த தொகைக்கான காசோலையை எழும்பூரில் உள்ள ஐடிபிஐ வங்கிக் கிளையிடம் அவர் ஒப்படைத்தார். (எழுபதுகளில் ஆலை மழைநீரில் மூழ்கி நட்டமடைந்த போது ஐரோப்பியரான லார்டு இஞ்ச்கேப் நிறுவனத்தார் இந்த வங்கியிடம்தான் ஆலையை ஒப்படைத்து விட்டு சென்றார்கள்.) ஒரு மாத காலத்திற்குள் மீதமுள்ள தொகையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தரப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
”இந்த இழப்பீட்டுத் தொகை தொழிலாளர் குடும்பத்தினருக்கு ஓரளவு உதவும் என்றாலும், இதனை நீண்ட நெடும் போராட்டத்தின் மூலம்தான் சாதிக்க முடிந்தது” என்கிறார் பின்னி மில் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் என்.ஸ்ரீராமுலு. கோயம்புத்தூரில் உள்ள ஜவுளித்துறை ஆணையரின் மண்டல அலுவலகம் மூலமாக மதிப்பிடப்பட்டு வழங்கப்படும் இத்தொகையானது 20 ஆண்டுகளுக்கு முன் வேலையிழந்த போது அத்தொழிலாளர்கள் வாங்கிய அடிப்படை சம்பளத்தின் 18 மாத தொகையே ஆகும். இன்று இந்த தொகையை வைத்து ஒரு குடும்பம் மறுவாழ்வு பெற முடியுமா? என்ற எதார்த்த நிலைமையை அரசு கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. ஏற்கெனவே பெங்களூருவில் மூடப்பட்ட பின்னி ஆலைக்கும் இதே போல 2008-ல் தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை இந்தியா முழுதும் வேலையிழந்துள்ள 1 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு மறுவாழ்வு நிதியாக மத்திய அரசு ரூ.300 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நூல் ஏற்றுமதி மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு இருந்த அரசின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய 33 சதவீத நூல் விலை உயர்வு காரணமாக உள்நாட்டு நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே தனியாரிடமிருந்து அரசு ஏற்று நடத்திக் கொண்டிருந்த பின்னி ஆலையும் தொழில்ரீதியாக படுக்க ஆரம்பித்தது. 1985 ஜூனில் ராஜீவ் காந்தியால் உருவாக்கப்பட்ட புதிய ஜவுளிக் கொள்கையானது நெசவுத் துறையில் தாராளமயமாக்கலுக்கு அடிகோலியது. குறிப்பாக கைத்தறித் துறை கடுமையாகவும், நேரடியாகவும் பாதிக்கப்பட்டது.
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பெரும்பான்மை மக்கள் நேரடியாக பங்கு கொண்டிருக்கும் தொழில்துறை நெசவு தான். ஏறக்குறைய 18 சதவீதம் மக்கள் (20 முதல் 25 லட்சம் தொழிலாளர்கள் உள்ளிட்டு) 1987-88 வாக்கில் இந்தியா முழுக்க இத்துறையில் இருந்து வந்தனர். பத்து லட்சம் தொழிலாளர்கள் இத்துறை சார்ந்த துணைத்தொழில்களில் ஈடுபட்டு இருந்தனர். நெசவாளர்கள் கணக்குப்படி மொத்தத்தில் இத்துறையில் அப்போது இரண்டு கோடி பேர் ஈடுபட்டிருந்தனர். இந்த மதிப்பீட்டை சற்று மிகைப்படுத்தலாக வைத்துக் கொண்டாலும் தொழில்துறையினர் தரும் புள்ளிவிபரங்கள் பலரையும் கணக்கில் கொள்ளவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அரசின் 1985 ஜவுளிக் கொள்கையானது தொழில்நுட்பத்தில் நவீன முறைகளை கொண்டு வர வேண்டும் எனத் திட்டமிட்டு தனியார் முதலாளிகளுக்கு 6 சதவீத வட்டிக்கு ரூ.100 கோடி கடன் தந்தது. அரசு அப்போது ஏற்று நடத்தி வந்த என்.டி.சி ஆலைகளில் தொழில்நுட்பரீதியாக நவீனமயமாக்கல் நடைபெறாத காரணத்தால் தொழில் நசிவு துவங்கி வேலை இழப்பும் துவங்கின. அதே நேரத்தில் சில ஆலைகளில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்கலும் அங்கேயே வேலை இழப்பை கணிசமாக உயர்த்தியது. நாடு முழுதும் 567 தொழிற்சாலைகள் 1989க்குள் மூடப்பட்டு விட்டன. 7.27 லட்சம் தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். “உற்பத்தி பெருக்கம்” என்பதை மைய முழக்கமாக வைத்து ராஜீவ் காந்தி அமல்படுத்திய ஜவுளி கொள்கை இந்திய தொழில்துறையின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இக்கொள்கை முதன்மையாக கைத்தறித் துறையை காவு கொடுத்தாலும் துணை விளைவாக பின்னி ஆலை போன்ற பழைய பாணி விசைத்தறி ஆலைகளையும் பாதித்தது.
1980-81-ல் 41 சதவீதமாக இருந்த மில்களின் துணி தயாரிப்பு விகிதம் 1985-86-ல் 28.18 சதவீதமாகவும், 1992-93-ல் 10.5 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்தது. தொண்ணூறுகளில் ஏற்றுமதியாகும் நூல் கண்டுகளின் அதிகரிப்புக்கு நிகராக உற்பத்தியும் கணிசமாக குறைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எஸ்.என். ஹாடா என்ற அதிகாரி தலைமையில் நடந்து வந்த பின்னி ஆலையை எம்.ஜி.ஆர் 1986-ல் சாராய உடையாருக்கு தாரை வார்த்தார். உண்மையில் அப்போது அவருடன் சில ஐரோப்பிய முதலாளிகளும் ஆலையின் பங்குதாரர்களாக இருந்தனர். அப்போது சென்னையில் வளரத் துவங்கிய ரியல் எஸ்டேட் நில மதிப்பிற்காக ஆலையில் இன்னும் நட்ட கணக்கை உயர்த்தி காட்டினார் உடையார். 1990-ல் ஓராண்டு காலம் மூடப்பட்ட ஆலை 1991-ல் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டு பிறகு 1994-ல் வெள்ளம் வந்ததை காரணம் காட்டி மீண்டும் மூடப்பட்டது. ஆனால் அந்த ஆண்டு இத்துறையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய மதிப்பு கூட்டு வரியும், இரட்டிப்பு வரி விதிப்பும் கடுமையாக உள்நாட்டு சந்தையை பாதித்தது. பின்னி ஆலையில் படிப்படியாக விருப்ப ஓய்வில் தொழிலாளர்களைப் போகுமாறு கட்டாயப்படுத்திய நிர்வாகம் கடைசியில் 2001-ல் முழுதாக ஆலையை விற்று விட்டது.
ஏறக்குறைய 20 ஆயிரம் பேருக்கு வேலை தந்து கொண்டிருந்த பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் மில் (பின்னி ஆலையின் இரு பிரிவு ஆலைகள்) பகுதி இன்று சினிமா படமெடுக்கும் இடமாகவும், ஏற்றுமதிக்கான காலி கண்டெய்னர்களைப் போட்டு வைக்கும் இடமாகவும் மாறி உள்ளது. அங்குள்ள ஓய்வூதியம் பெறுபவர்கள் குடியிருப்பில் மாதம் ரூ. 400 முதல் ரூ.500 வரை வாங்கிக் கொண்டு கஷ்ட ஜீவனத்தில் இருக்கிறார்கள் அந்த முன்னாள் தொழிலாளர்கள் குடும்பங்கள்.
1876 மற்றும் 1881 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கபட்ட இந்த இரு ஆலைகளையும் நிறுவிய பின்னியின் குடும்பம் ஊதாரி கர்நாடக நவாப்புக்கு வட்டிக்கு பணம் கொடுத்த ஜான் பின்னியின் வகையறாக்கள் ஆவர். முதலில் ஏற்றுமதியில் மட்டுமே ஈடுபட்ட இவர்கள் 1850களில் பம்பாயில் நூற்பாலைகளும், நெசவாலைகளும் வரவே இங்கும் கொண்டு வர திட்டமிட்டு இரு ஆலைகளை அமைத்தனர். அப்போது துவங்கிய அமெரிக்க உள்நாட்டு யுத்தம் அங்கிருந்து பருத்தியை இங்கிலாந்துக்கு அனுப்புவதை சாத்தியமற்றதாக்கியது. எனவே இந்தியாவில் புதிதாக உருவாக்கப்படும் நிலங்களிலும், பீடபூமிகளின் மழை மறைவு பிரதேசங்களிலும் பருத்தி ஒரு பணப்பயிராக பயிரிடப்பட்டது.
1866-ல் அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. எனவே இந்திய பருத்திக்கான தேவை இங்கிலாந்தில் குறையத் துவங்கியது. இங்கு தேங்கிய பருத்தியைக் கொண்டு தமிழகம் முழுக்க பல நூற்பாலைகள் அக்காலகட்டத்தில் துவங்கப்பட்டன. ஹார்வி என்பவர் 1885-ல் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திலும், 1889-ல் தூத்துக்குடியிலும், 1892-ல் மதுரையிலும் நூற்பாலைகளை அமைத்தார். ஸ்டேன்ஸ் என்பவர் 1895-ல் கோவையில் ஆரம்பித்தார்.
அந்த காலத்தில் தான் தென்னிந்தியாவின் வறண்ட அல்லது 1863-ல் அரசு தீவிரமாக முயன்று ஜமீன்தாரிகளுக்குட்பட்ட இம்மிராசி கிராமங்களில் தரிசாக கிடந்த நிலங்களை புதிதாக விவசாய நிலமாக மாற்றிய வாரம்தார்களின் நிலங்களில் பருத்தி விவசாயம் அதிகமாக துவங்கியிருந்ததால் ஆலைக்கு தேவையான மூலப் பொருட்கள் ஓரளவு தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்தன. 1870-களுக்கு பின் பரவலாக்கப்பட்ட ரயில் போக்குவரத்து விளைவிக்கப்பட்ட பருத்தியை கொள்முதல் செய்து தேவையான இடங்களுக்கு உடனடியாக கொண்டு செல்ல உதவியது.
1876-78 தாது வருடப் பஞ்சம் உருவாக்கிய பட்டினிச் சாவினாலும், ஆங்கிலேய அரசின் வரிவசூல் கொடுங்கோன்மையினாலும், நிலபிரபுக்களின் லேவாதேவி கொடுமையாலும் பாதிக்கப்பட்ட இடைநிலை சாதியை சேர்ந்த சிறு விவசாயிகள் சிலரும், பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட மக்களும் அருகிலுள்ள நகரங்களுக்கு குடிபெயர வேண்டிய கட்டாயம் பல இடங்களில் ஏற்பட்டது. குறிப்பாக சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்களில் இப்படி குடியேறிவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது.
சென்னையில் இப்படி குடியேறியவர்கள்தான் பின்னி ஆலையின் பெரும்பான்மை தொழிலாளிகளாகவும் பின்னர் அமைந்ததில் வியப்பேதுமில்லை. அப்படி குடியேறிய காலனிகளில் அம்மக்களை விலங்கினும் கீழாக ஆங்கிலேயர்கள் நடத்தினாலும், கிராமப்புற சாதிய கொடுங்கோன்மையை விட இது சற்று மேம்பட்டதாக இருந்ததால் அதனை அவர்கள் சகித்துக் கொண்டனர். சூரிய உதயத்தை பார்க்க கூட இயலாத நிலைமையில் அவர்களது வேலை நிலைமை இருந்தது. அவர்களது குழந்தைகளின் இறப்பு விகிதம் பிற பகுதிகளை விட எட்டு மடங்கு அதிகமாக இருந்தது. காற்றோட்ட வசதியோ, மருத்துவ வசதியோ, சத்தான உணவோ அவர்களுக்கு அங்கு கிடைக்கவில்லை.
1920-ல் ஒன்றிணைக்கப்பட்ட இந்த இரு ஆலைகளிலும் தான் முதன் முதலாக தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1921 ஜூனில் மெட்ராஸ் லேபர் யூனியன் என்ற அந்த தொழிற்சங்கம் நடத்திய வேலை நிறுத்தம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆறு மாத காலம் நடந்த இந்த வேலை நிறுத்தத்தில் தொழிற்சங்கம் தோல்வி அடைந்தாலும் புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் ஏற்பட வாய்ப்பாயிற்று.
முதல் உலகப் போரிலும், பின்னர் வந்த யுத்தங்களிலும் இந்த ஆலையில் உற்பத்தியான காக்கி உடையுடன்தான் இந்திய ராணுவம் பிரிட்டிஷாருக்காக உலகெங்கிலும் சென்று போரிட்டுக் கொண்டிருந்தது. துணி ஏற்றுமதியிலும் பின்னி ஆலை சளைத்திருக்கவில்லை. ஆலை துவங்கிய காலத்தில் மெட்ராஸ் மாகாண கவர்னராக இருந்த நேப்பியர் இதனை ஒரு எச்சரிக்கையாகவே இங்கிலாந்து முதலாளிகளுக்கு தெரிவித்திருக்கிறார்.
1938-ல் சூளை பகுதியில் இயங்கி வந்த பம்பாயை தலைமையிடமாக கொண்ட நூற்பாலை மூட நேர்ந்தது. அத்தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அடுத்த ஆண்டு துவங்கிய இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து பின்னி ஆலையில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அந்த மூவாயிரம் பேரையும் வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள். அன்று ஆசியாவிலேயே பெரிய துணி உற்பத்தி தொழிற்சாலையாக விளங்கிய பின்னி ஆலை மூடப்படும் காலங்களில் கூட இந்திய அளவில் இரண்டாவது பெரிய ஆலையாகத்தான் விளங்கியது.
தொழிற்சங்க வரலாற்றில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அங்கேயே துப்பாக்கிச்சூடு நடந்து 7 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் என ஒன்று இருக்குமானால் அது பின்னி ஆலையில் தான் நடைபெற்றது. 11.3.1942-ல் அச்சம்பவம் நடைபெற்றது. அதை தொடர்ந்தும் ஒரு மாத காலம் வேலை நிறுத்தம் நடந்தது. வேலை நிறுத்த காலத்தில் தங்களுக்குள் உதவிக் கொண்ட தொழிலாளர்கள் ஒற்றுமை போற்றுதற்குரியது.
தொழிற்சங்கத்திற்கு கட்டுப்படாமல் திடீர் திடீரென வேலை நிறுத்தம் செய்ய முற்படும் 5 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய 1942 செப்டம்பர் 9 அன்று நிர்வாகம் முடிவு செய்து நோட்டீசு கொடுத்திருந்தது. இதற்கெதிராக போராட முற்படும் போது, அந்த ஐந்து தொழிலாளிகளும் ”எங்களுக்காக முப்பதாயிரம் தொழிலாளர் குடும்பங்கள் போராடி அல்லல்பட வேண்டாம்” எனக் கூறி தங்களது வேலைக்காக சங்கம் போராட வேண்டாம் என்றும், வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்கிறோம் என்றும் கூறி விட்டனர். மொத்த கூட்டமும் மெய் சிலிர்த்தாலும் இதனை வாக்குக்கு விட்டுதான் முடிவை தீர்மானித்தார்கள். அன்று இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சட்டமன்ற இடங்களுக்கும் நடக்கும் தேர்தல்களில் காங்கிரசோ அல்லது நீதிக்கட்சியோ தொழிலாளர் சங்கத்தை சாராமல் வெற்றி பெற இயலாது என்பதுதான் அன்றைய நிலைமை.
புதிய பொருளாதார கொள்கையின் துவக்க கொள்ளியாக ராஜீவ் பற்ற வைத்த 1985 புதிய ஜவுளிக் கொள்கையின் மிச்ச சாம்பலாக பின்னி ஆலைத் தொழிலாளர்களது குடியிருப்புகள் இப்போதும் வட சென்னையில் காட்சியளிக்கின்றன. தொழிலாளர்களில் பலரும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியினர் என்பதுடன், நான்கு தலைமுறைகளாக இங்கேயே ஆலையுடன் இணைந்ததாகத்தான் அவர்களது வாழ்க்கை இருந்து வந்தது. இங்கு வேலை நிலைமைகள் கடந்த நாற்பதாண்டுகளாக மாற்றம் அடைந்து வந்தன. அதன் தொடர்ச்சியாக வந்த புதிய பொருளாதார கொள்கையின் முதல் இடியை இத்தொழிற்சாலை எதிர் கொள்ள நேர்ந்தது.
தற்போது இந்த வாழ்விழந்து போன தொழிலாளர்கள் மத்தியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சியாக முன்னிறுத்தப்படும் பகுஜன் சமாஜ் கட்சியும், சிஐடியூ தொழிற்சங்கமும் வலுவான அமைப்புகளாக உள்ளன. சிபிஎம் தொழிற்சங்கத்தின் கோரிக்கை என்பது வழங்கப்படும் முப்பதாயிரம், நாற்பதாயிரம் மறுவாழ்வுத் தொகைக்கு இருபதாண்டு வட்டி கேட்பதாகத்தான் இருக்கிறது.
தலைமுறை தலைமுறையாக உழைத்து ஓடாகிப் போன தொழிலாளிகள் சென்னையில் ஒரு அடிநிலை சேரியாக வாழும் அவலத்தில் இருக்கிறார்கள். பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்திற்காக தேசமே பின்னி ஆலையாக மாற்றப்படும் சூழ்நிலையில் நாடு முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கம் தங்கள் நலனுக்காக மட்டுமல்ல, நாட்டு நலனுக்காகவும் இணைந்து போராடும் தேவை இருக்கிறது.
என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் எனும் சொற்றொடரின் பொருள், பல ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து, உளியாகச் செயல்பட்டு, என்னைப் போன்ற கணக்கிலடங்கா கற்களைச் செதுக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதாகும். கரடு முரடான கற்களைச் செதுக்கித் செதுக்கித் தேய்ந்து போகும் உளியைப் போன்ற ஆசிரியர்களின் வாழ்நாள் வேள்வியை நினைவு கூறவே இந்தக் கட்டுரை. பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நீண்டு கொண்டிருக்கும் என் பள்ளி, கல்லூரி வாழ்க்கையில், சமவெளி நிலத்தில் சீராக வளர்ந்து பூத்துக்குலுங்கும் மலர்களைக்கொண்ட தோட்டத்தைப் போன்று சீரான சமூக அமைப்பில் இருந்து வந்த ஆசிரியர்களைக் கண்டதில்லை, மாறாக கரடுமுரடான வளமற்ற கரிசல் நிலத்தில் ஆங்காங்கே விளைந்த சிறுகுடல் வரை இனிப்பை வரவழைக்கக் கூடிய கள்ளிப் பழத்தைப் போன்ற ஒருசில ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகளைக் கூறவே இந்த பதிவு.
நான் கண்ட ஆசிரியர்கள் அனைவரும், கொள்கை ரீதியாக, சித்தாந்தங்களை என்னுள் ஏற்றி, செதுக்கினார்கள் என அறுதியிட்டுக் கூறவியலாவிட்டலும், ஏட்டுக்கல்வியை சீரிய முறையில் கற்றுக் கொடுத்ததோடு மட்டுமில்லாது மகத்தான மனிதப் பண்புகளையும், வாழ்க்கைக் கல்வியையும் எனக்கு கற்றுக்கொடுத்த பெரும்பணியை செய்த ஆசிரியப் பெருமக்களை இந்தத் தருணத்தில் நினைவு கொள்வது மனநிறைவான செயலென்பதில் மறுகூற்றில்லை.. மறுகாலனியாக்கக் காலகட்டத்தில், தனியார் நிறுவனங்கள் கல்வி எனும் பெயரில் தெருவுக்குத் தெரு கடை விரித்து கூவிக் கூவி சிட்டுக்குருவி லேகியம் விற்கும் இன்றைய கல்வியுடன், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் கற்றுக்கொடுக்கப்பட்ட அன்றைய கல்வியை ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்கும் போன்ற வேறுபாட்டைப் போன்றது.
எனக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் நாங்கள் கல்விக்கட்டணம் கட்டாமல் இருந்தபோது, வகுப்பறையை விட்டு வெளியே நிற்கச் சொன்னதில்லை., ஹால் டிக்கெட்டை தரமாட்டேன் என அடாவடி பண்ணியதில்லை. டியுசன் படிக்காவிட்டால், மதிப்பெண் போட மாட்டேன் என எவரும் மிரட்டியதில்லை. பெண் மாணவர்களிடம் பேசுபவர்களை கேமரா வைத்து பிடித்து அபராதம் கட்டச் சொன்னதில்லை. கல்லூரிப் பேருந்தில்தான் வரவேண்டும் என சைக்கிள் டையரின் காற்றைப் பிடுங்கியதில்லை. ஐந்து நிமிடம், பத்து நிமிடம் தாமதாக வந்தால், ஆயிரம்,நூறு என ஏழைப் பெற்றோரின் உழைப்பை சுரண்டியதில்லை. நாய் லைசென்ஸ் போடவில்லை என கல்லூரி வாசலில் நிறுத்தியதில்லை.
அசைன்மென்ட் எழுதியதவில்லை, ரிக்கார்ட் நோட் முடிக்கவில்லை என நோட்டு, புத்தகங்களை முகத்தில் தூக்கி எறிந்தது இல்லை. காட்டில், கழனியில் இரத்தத்தையும் வேர்வையும் சிந்தி சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தையும், வயலையும் வரப்பையும் ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரர்களிடம் அடிமாட்டு விலைக்கு விற்றுக் கிடைத்த பணத்தையும் டொனேஷன் என்ற பெயரில் புடுங்கி, கல்வித் தந்தைகளை உருவாக்கும் கொள்ளை அடிக்கும் பணிக்கு உதவியதில்லை. கட்டணமாக கட்டிய கொசுறுப் பணத்திற்கு இரசிது கொடுக்காமல் இருந்ததில்லை. கல்லூரியில் போராட்டம் நடத்தினால், நன்னடத்தை சான்றிதழ் தரமாட்டேன் என வில்லத்தனம் பண்ணியதில்லை.
அரியர் வைத்து இருந்தாலோ, சில பாடங்களில் பெயிலாகி இருந்தாலோ, நூறு சதவித் தேர்ச்சி அடைய முடியாது என்ற காரணத்திற்காக டீ.சி கொடுத்து அனுப்பியதில்லை. அந்த சட்டை போடாதே, இந்தச் சட்டை போடாதே என ஆடை அலங்கார கலாச்சார வகுப்புகள் எடுத்ததில்லை. எவ்வாறு செதுக்கினார்கள் என கட்டுரையின் தலைப்பை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்யவில்லை என அடுக்கிக் கொண்டிருக்கிறானே என அயர்வு அடைய வேண்டாம்.
சமூகப் புரட்சி புரிந்த பகுதத்தறிவுப் பகலவன் சமுகப்போராளி தந்தைப் பெரியார், ஓட்டரசியளில் இருந்தாலும் அரசியலே பண்ணாத அரசியல்வாதி, கல்விப் புரட்சி புரிந்த காமராஜர், உலகிலுள்ள அனைத்துப் புத்தகங்களையும் ஒன்றுவிடாமல் தெளிவுறக் கற்று , அறிவுப் புரட்சி செய்த அண்ணல் அம்பேத்கார் போன்ற மாபெரும் தியாகச் செம்மல்களுடன், இன்றைய லோக்பால் வீரன் ஊழல் ஒழிப்பு “சமுகப்போராளி” அக்மார்க் அண்ணா ஹசாரே, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைகளை உருவாக்கித் தர தனியாருக்கு கல்விக்கூடங்களின் வாசல்களைத் திறந்துவிட்ட “அரசியல் தெரியாத” அரசியல்வாதி மன்மோகன்சிங், ஏழை மக்களின் வேர்வைப் பணத்தில் உருவாக்கப்பட்ட ஐஐடிகளில் படித்து, தாய்நாட்டு மக்களின் கோமணத்தைக் கூட உருவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சேவை செய்யும் அறிவாளிகள் எனும் “கல்விக் கோமான்கள்” போன்ற கழிசடைப் பின்னவர்களை, காலம்போற்றும் முன்னவர்களுடன் ஒப்பிடும்போதுதான் உண்மை நிலவரம் தெரியும் என்பதால் எதிர்மறையான அறிமுகம் செய்ய நேரிட்டது.
அகர முதல எழுத்தே தாய்த்தமிழுக்கு தொடக்கம், சிலேட்டும், குச்சியும் பிடித்து, ஆனா, ஆவன்னா என ஒன்னாப்பு, ரெண்டாப்பு ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களே விஜயபாஸ்கர் எனும் தமிழனுக்கு வாழ்க்கைத் தொடக்கம். சாக்கடைகளிலும், கண்மாய்களிலும், புழுதியிலும் உருண்டு பிறண்டு நாற்றத்துடன் பள்ளிக்கு வரும் எங்களைக் கண்டு முகம் சுளிக்காது, நாற்றம் தாங்க முடியாத சில வேளைகளில் மட்டுமே தன் அழகிய நீண்ட கூந்தலால் மூக்கை மூடும் செல்வி எனும் ஆரம்பபள்ளி ஆசிரியரின் புன்னகை முகமே எனக்கு அழகான முகம்.
எனக்குத் தனிப்பட்ட முறையில் விலை மதிக்கமுடியாத உதவியையும் , அளவில்லா அன்பையும், மறக்கமுடியாத பாசத்தையும் பகிர்ந்தளித்த ஆசிரியப் பெருமக்கள் இராஜாராம் சார், அன்பின் மறுவடிவமான அன்னைத் தமிழம்மா, பேராசிரியர்கள் பாலு, முனைவர் தியாகராஜன் போன்றோரின் உதவியும்,அவர்களுடன் நான் கழித்த நாட்களும் என் நினைவில் இருந்து நீங்காத வரலாற்றுச் சுவடுகள்.
பள்ளிச் சீருடை என்ற பெயரில் பச்சைக் குழந்தைகளிடம் கூட ஆயிரக்கணக்கில் வசூல் செய்யும் கல்வி நிறுவனங்களின் ஆட்சி கோலோச்சும் நாட்டில், கிழிந்த சட்டை போட்டுவந்த எனக்கு நல்ல சட்டையும்,டவுசரும் கொடுத்துதவிய தமிழம்மா எவ்வாறு பணிபுரிந்தார் என்பது பதிலில்லா கேள்வி. ஆடை என்ற பெயரில் கூட ஏழைக்குழந்தைகளை ஒதுக்கி நவீனத் தீண்டாமையை அரங்கேற்றும் பெருமை மிகுந்த தாய்த் தமிழ்நாட்டில், தமிழம்மா மட்டும் வாழ்ந்தது விதிவிலக்கா?.
1929 முதல் கல்கத்தாவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த தெரசா, 1946இல் ஓய்வுக்காக டார்ஜிலிங் சென்றபோதுதான் அவரில் அந்த ‘அற்புதம்’ (அதாவது இயேசு கிறிஸ்து, தெரசாவின் கண்முன் தோன்றி ஆசிரியப் பணியை விடுத்து, பரிசுத்த ஆவியின் புகழைப் பாடும் ஆன்மிகப் பணியை ஏற்கக் கூறுதல்) நிகழ்ந்ததால், மீதி வாழ்நாள் முழுவதும் நிர்வாகம், நன்கொடை, நோபல்கள், பாரத ரத்னாக்கள், கடவுச்சீட்டு இல்லாத விமானப்பயணங்கள், உலகளாவிய விருதுகள், பாராட்டிப் புகழ்ந்திடும் பளிச் பளிச் தொலைக்காட்சிக் காமெராக்கள், பிரமுகர்களுடனான சந்திப்புகள் என விரிந்ததைப் பாதுக்காக்க, இயல்பாக கலந்த பொய்மை, இரட்டை வேடம், நேர்மையின்மை, அநீதியை அரவணைத்தல் என எல்லாத் தீமைகளும் ஒருங்கே சேர வாழ்ந்த அன்னை தெரசா மேலானவரா அல்லது அதே பரிசுத்த ஆவியை வழிபட்டாலும், புகழும் விருதுகளும் கிடைக்காத உண்மையான ஆசிரியப் பணியை வாழ்நாள் முழுவதும் செய்த தமிழம்மா மேன்மையானவரா என கண்டுபிடிக்கும் அளவிற்கு எனக்கு தத்துவ ஞானமும் இல்லை.
பரிசுத்த ஆவியும் இந்த முட்டாள் விஜயபாஸ்கரின் மீது இறங்கவில்லை அல்லது மோகன் சி.லாசரஸோ, திருட்டு பால் தினகரனோ என்னுள் ஏசுவை இறங்க வைக்கும் அற்புதத்தை செய்யவுமில்லை.. மூன்று வருடங்கள் அவரிடம் படித்தும், அவர் பெயர் எனக்குத் (அனைத்து மாணவர்களுக்கும்) தெரியாது. பின்னர் அந்த நல்லாசிரியருக்கு பார்ப்பன மேன்மை பேசுவதையே தொழிலாக கொண்ட ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது கொடுக்கப்பட்டதின் மூலம் அவ்விருது தன்மீதான களங்கத்தைப் போக்கிக் கொண்டதா அல்லது அனைவரிடமும் அன்பு மட்டுமே செலுத்தி, ஒருங்கே அணைத்துக்கொண்ட, முகத்தில் எந்நேரமும் புன்னகை மட்டுமே ததும்பும் தமிழம்மாவின் களங்கமில்லா கன்னக்குழி சிரிப்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தியதா?. உண்மையைக் கண்டவர்கள் எனக்கு பதில் கடிதம் எழுதுங்கள்.
சக மாணவர்களின் வீடுகளில் நிகழ்ந்த துக்க நிகழ்விற்காக வகுப்பு மாணவர்கள் சென்றதற்காக அனைவருக்கும் வருகைப் பதிவேடு மறுக்கப்பட்டதாக வினவில் வந்த ஒரு கட்டுரையில் எப்போதோ படித்ததை மனதில் வரும்போது, சக விடுதி மாணவன் காலச் சிக்கலினால் மாண்டபோது, அக்குடும்பத்தாரின் துக்கத்தில் பங்கெடுக்கச் சென்ற எங்களனைவருக்கும் வருகையை பதிவு செய்த பேராசிரியப் பெருமக்களின் நினைவு மனதில் எழும்பாமல் இல்லை. எங்களுடன் ஒரு ஆசிரியர் கூட வந்தார் என்று எதோ ஒரு நினைவு சொல்கிறது. சாஷ்டாங்கமாக காலில் விழுவதை மட்டுமே வேள்வியாக செய்யும் ஆட்சிப் பணியை செய்யும் நாட்டை ஆளும் அமைச்சர் (பெயரைக் கூட சொல்லவியலாத) பெருமக்கள் வாழும், அன்பு உள்ளம் படைத்த அம்மாவின் தமிழ்நாட்டில் தான், தங்களது வீட்டு நல்ல நிகழ்வுகளுக்கு மாணவர்கள் அனைவரையும் பேரன்புடன் அழைத்து, அனைவரிடமும் “என் மாணாக்கர்கள்” என பெருமையுடன் அனைவரிடமும் அறிமுகப்படுத்திய பேராசிரியர்கள் முனைவர் தியாகராஜன் மற்றும் முனைவர் மாதவன் ஆசிரியர்களாக பணி புரிந்தனர்.
இண்டஸ்ரியல் டூர்,கல்வி சுற்றுலா என ஏமாற்று மோசடி வித்தை காட்டி, பண வேட்டை நடத்தும் இந்நாட்டில்தான், (ஒவ்வொரு முறையும்) கல்விச் சுற்றுலாவின் போது தனக்கு ஏற்படும் செலவுகளுக்கு தன் சொந்தக்காசை செலவளித்தது மட்டுமில்லாமல், உணவு, உறைவிடம் என கைக்காசை கரியாக்கி அனைத்து மாணவர்களுக்காக இறைத்த விரிவுரையாளர் பாலு இளிச்சவாயனாகத்தான் தற்போது தெரிவார். கல்லூரிப் பேருந்தில் வராவிட்டால், வாகனத்தின் காற்றை புடுங்கும் கல்லூரிகள் புற்றிசல்கள் போல் நிரம்பியிருக்கும் இம்மாநிலத்தில் தான், அவரது சொந்த சைக்கிளை எனக்குத் தந்த இலகும் உள்ளம் கொண்ட மனிதர் பாலு. ஒருமுறை கட்டுரைப் போட்டிக்காக என்னுடன் இருவர் இணைந்து மூவர் கூட்டம் மும்பை செல்ல நேரிட்டபோது, நாங்கள் கேட்காமலே பயணச் சீட்டுக்கான பணம், மற்றும் வழிச் செலவுக்கும் பணம் தந்து உதவிய வாழும் மனித தெய்வதமான அவரை இந்த வேளையில் நினையாது போனால், தவறிழைத்தவனாகிவிடுவேன்.
சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் டவுசர் உருவும் வேலையைச் செய்யும் கல்வி வள்ளல்கள் வாழும் நாட்டில், தோலை உரிக்குமளவிற்கு அக்கினி வெயில் அடிக்கும் கோடை விடுமுறையில் கூட வீட்டோடு இருந்து ஓய்வெடுக்காமல், மேல்நிலைப் பள்ளி இறுதி ஆண்டில் எங்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்திய மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சவுந்திர பாண்டியன் (கணித ஆசிரியர்), அய்யாத்துரை(இயற்பியல் ஆசிரியர்), ஜெகஜோதி(வேதியியல் ஆசிரியை) போன்றோரை ஒப்பிடாமல் இருக்கமுடிவதில்லை. இவர்களின் சிறப்பு வகுப்புகளுக்கு தட்சிணை என்பது அடையாளக் கட்டணமாக வாங்கப்பட்ட 175 ரூபாய் தான்.
தினமும் குறைந்தது நான்கு மணி நேரம் பயணம் செய்து சிறப்பு வகுப்பு எடுத்த கணித ஆசிரியர் சவுந்திர பாண்டியனின் பேருந்துக் கட்டணத்திற்கு கூட அந்த 175 ரூபாய் காணாது. அதைக்கூட கூட கட்ட இயலாத என்னிடம் அப்பணத்தை இம்மூவரும் பெறவில்லை. அதற்காக எனக்கு செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களைக் குறைக்கவும் இல்லை.
சுய சாதி அபிமானத்தை வெறுத்து, ஆதிக்க சாதிகளின் அட்டகாசத்தை எதிர்த்த காரணத்திற்காக மட்டுமே பள்ளித் தலைமை ஆசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் வர இயலாத அந்த தியாக உள்ளங்களின் பெயர்களை அவசியம் கருதி இங்கே வெளியிடாமல் தவிர்க்கிறேன். “புதுசா எவனும் அரிவாள் செய்யக்கூடாதாம் ஆனால் ஏற்கனவே அரிவாள் செய்து வைத்து கொண்டு இருப்பவனிடம் காசு கொடுத்து வாங்கணும்”, இதுதான் CTBT ஒப்பந்தம் பற்றிய ஏகாதிபத்தியங்களின் வல்லாதிக்கத்தை எங்களுக்கு புரியும்படி சொல்லிக்கொடுத்ததோடு மட்டுமில்லாமல், சாதிய ஏகாதிபத்தியம் நிறைந்த பள்ளிக்கூடத்தில் சுயசாதி அபிமானத்தை எதிர்த்து, சாதிவெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்தும் காட்டினார் வரலாற்றாசிரியர்.
தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட,சிறுபான்மை மக்களின் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்து இரண்டு MLA, ஒரு MP க்காக, கடைசியில் அம்மாவின் காலடியிலும் ஐயாவின் புகழோதும் மேடைகளிலும் வீழ்ந்து, பிழைப்பு நடத்தும் அரசியல் வியாபாரிகள் வாழும் இந்நாட்டில்தான், கல்லூரியில் ஏற்பட்ட சாதிய மோதலால் சண்டை வந்த போது, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதிக்கசாதி வல்லூறுகளிடமிருந்து ஆபத்து நேர்ந்தபோது சிக்கலைத் தவிர பயனேதும் எதிர்பாராது அரவணைத்து ஆதரவளித்த ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த வீரத்தமிழ் பேராசிரியர்களும் இருக்கிறார்கள்.
பாவ யோனியில் பிறந்த சூத்திரன் என்ற காரணத்திற்காக, கண்காணாத தூரத்தில் இருந்து வில்வித்தை கற்றான் என்பதால் ஏகலைவர்களின் கட்டை விரலை குருதட்சிணையாக வாங்கிய, நெத்தியில் பிறந்த புண்ணியப்பார்ப்பனத் துரோணர், சொந்தச் சாதியா, எந்தசாதியா என்று வேறுபடுத்தாமல், ஊர்க்கம்மாயில் பிடித்த “அயிரை மீன் வச்சு குழம்பு வச்சு இருக்கோம், வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போப்பா” என என்னை அன்போடு அழைத்து மாணவனுக்கு சிஷ்யதட்சிணை கொடுத்த ராஜாராம் ஆசிரியர், அவருக்கு நான் என்ன உற்றாரா,,உறவினரா,மச்சானா,மாப்பிள்ளையா?.
துரோணர், இராஜாராம் சார், இவர்களில் யார் உண்மையான குரு?. அவரிடம் பள்ளிப்படிப்பை முடித்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும், அவருடைய வகுப்பிற்கு என் ஊரைச் சார்ந்த மாணவர்கள் இன்று போய் சேர்ந்தாலும் மறவாது “விஜயபாஸ்கர் நல்லா இருக்கானாப்பா?” என தந்தையைப் போல் விசாரிக்கும் அவரே தலைசிறந்த குரு என நான் உறுதியாக அறுதியிட்டுச் சொல்லுகிறேன். சுய சாதி கெளரவத்திற்காக சொந்த மகளையே கொலை செய்யும் சாதி வெறியர்கள் வாழும் இந்த மண்ணில், ஆசிரியர்-மாணவர் என்ற உறவை வீடு வரை எடுத்துச் சென்ற ஆசிரியர்களை நினைக்கும் போது வியப்பாகத்தான் இருக்கிறது.
பை நிறைய சம்பளம் வாங்கி தொந்தி நிறைத்து, மிச்ச சொச்சம் கொண்டு வாங்கிய டாடா சுமோவில் பள்ளி வேலைநாட்களில் கூட ஊரைச் சுற்றும் ஆசிரியர்கள் நிறைந்த இந்த சூழலில், சைக்கிளில் எளிமையாக வந்து அருமையான முறையில் பாடம் நடத்தியதோடு மட்டுமில்லாமல், கொஞ்சம கிடைக்கும் ஓய்வு நாட்களைக் கூட எனக்காக செலவழித்து வகுப்புகள் எடுத்து செவிக்கும் மூளைக்கும் உணவிட்டு, வயிற்றுக்கும் உணவிட்ட அருமைப் பேராசிரியர் தியாகராஜன் இருந்தார் என்பது நகைமுரண்.
வாழும் விடிவெள்ளி, இராணுவத்தை அனுப்பி ஒரே நாளில் ஈழத்தை வாங்கிக் கொடுத்த இதய தெய்வத்தின் காலில் விழும்போது 180 டிகிரிக்கு ஒரு டிகிரி கூட குறைந்துவிட்டாலே, தங்களுடைய பதவி இருக்கிறதா இல்லையா என்பதை அடுத்த நாள் செய்தித்தாளில் தெரிந்துகொள்ளும் நாட்டை ஆள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிமை அமைச்சர் பெருமக்கள் வாழும் சுதந்திரத் திருநாட்டில் தான், வடிவேலு என கோமாளிப்பட்டம் கொடுத்தாலும், அரட்டாத மிரட்டாத வரலாற்று ஆசிரியர் இராமச்சந்திரன், ,கீச்சுக்குரல் கொண்ட ஒரே காரணத்திற்காக நகைச்சுவை எனும் பெயரில் அனுதினமும் பேமாளியாக்க முயற்சி செய்யும் மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வில் மதிப்பெண்ணை வெட்டிவிடுவேன் என ரௌடியிசம் பேசாத கள்ளங்கபடமற்ற பெராசிரியனாகத் திகழ்ந்த முனைவர் செல்வராஜ், போன்றோர்களும் இருந்தார்கள் என்பது நாளைய வரலாற்றில் எழுதப்படாமல் இருக்கக்கூடாது.
சீதையின் அல்குல் முதற்கொண்டு வர்ணித்த ஆபாசக் “கம்பனும்”, பொய்,புரட்டு,அறிவுக்கு புறம்பான கதைகளையும் கற்பனைகளையும் மட்டுமே கொண்ட பெரியபுராண சேக்கிழாரும் இணைந்து சைவத் தமிழ் வளர்த்த தமிழ்நாட்டில், தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில், இடுப்பு உயரம் கூட இல்லாத மாணவன் உட்பட பாரபட்சம் இல்லாமல் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான தமிழ்வழிப் பள்ளியில் ஆங்கிலப் பாடம் எடுத்த (கெஞ்சிக் கூத்தாடி) ஆசிரியர் சத்திய மூர்த்தி, பாரபட்சமின்றி தன்னை எள்ளி நகையாடும் மாணவர்களையும் தேர்வு பெறச் செய்வதற்கு செய்யாத ஒரே காரியம் திருப்பதிக்கு மொட்டையும், பழனிக்கு காவடியும், சபரிமலைக்கு இருமுடியும்தான்.
தன்னைப் பற்றிய கேலிச்சித்திரத்தை இணையத்தில் பகிர்ந்து கொண்ட காரணத்துக்காக ஜாதாப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரை கைது செய்த மேற்குவங்க திதி மம்தா வாழும் நாட்டின் தென்கோடி முனையில் உள்ள ஒரு பள்ளியில், மூக்கு பெரிதாக இருந்த காரணத்திற்காக மூக்கன் என கொடூர நகைச்சுவை சேவை புரிந்த மாணவர்களைக் கூட ஆங்கிலம்,தமிழ் என இருமொழிப் புலமையால் இலாவகமாகச் சமாளிக்கும் பாலசுப்பிரமணியம் என்றொருவர் பணிபுரிந்தார் என்பது எதிர்முரண்.
டொனேசன் என்ற போர்வையில், ஜேப்படிக் கொள்ளை அடிக்கும் ‘சேவை’ புரிந்து அதற்குரிய சன்மானம், சொத்துக்களைப் பெற்று சாராய ரவுடி எனும் பட்டத்தோடு கல்வி வள்ளல் எனும் விருதினைப் பெற்றிருக்கும் ஜேப்பியார், கடவுள் பிசினசை விட கல்வி பிசினஸ் பல மடங்கு காணிக்கைகளை கொடுப்பதால் தமது ஆன்மீக செல்வாக்கை வைத்து நடுத்தர வர்க்கத்திடம் பக்தி சுரண்டலோடு சேர்த்து கல்வி சுரண்டலையும் 1970கள் முதல் மேல்மருவத்தூரில் நடத்தும் பங்காரு அடிகளார், சாதாரண பள்ளி ஆசிரியராக இருந்து, தனது குடும்ப உறுப்பினர்களை அறங்காவலர்களாக கொண்ட அறக்கட்டளை மூலம் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமாக 5 வளாகங்களில் செயல்படும் 21 கல்லூரிகளையும், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி பத்திரிகைகளையும், புதிய தலைமுறை தொலைக்காட்சியையும், வேந்தர் மூவீஸ் திரைப்பட நிறுவனத்தையும் சொந்தமாக்கிக் கொண்டிருக்கும் கல்வித தந்தை பச்சமுத்து போன்றோர் பணவேட்டை நடத்தும் இந்த புண்ணிய பூமியில்தான், தான் விரும்பாவிட்டாலும், சிற்சில தவறுகளுக்காக, 50 காசு, ஒரு ரூபாய் என, குருவி சேர்த்த கூட்டைப் போன்று சிறு தொகையாய் அபராதம் வாங்கிய காசை ஐந்து பைசாகூட குறையாமல் கணக்கு வைத்திருந்து, ஆண்டு இறுதியில் கைக்காசையும் போட்டு வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வாங்கிக் கொடுத்த வணிகவியல் ஆசிரியர் ஒருவர் வாழ்ந்தார் என்பது வியப்பை மட்டுமே தரக்கூடும்.
ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் வாங்கினாலும், ஆயிரக்கணக்கான கோடி வரிப்பணத்தை வாரி இறைத்து வளர்ப்பு மகனின் திருமணத்தை நடத்தும் அம்மாக்களும், ஊர்ப்பணத்தை கொள்ளையடித்து வாங்கிய எண்ணிடலங்கா செருப்புகளையும், எடையிலடங்கா தங்க ஆபரணங்களையும் அணிவித்து மன்னார் குடி கும்பலின் உடன்பிறவா சகோதரியை அழகு பார்க்கும் அக்காக்களும் இருக்கும் நாட்டில், ஆஸ்துமா நோயில் தான் கடுமையாகப் பாதிக்கபட்டாலும், அதன் சுவடு கூட மாணவர்களுக்குத் தெரிய விடாமல், எளிமையான முறையில் இயற்பியல் பாடத்தை நடத்திய அய்யாத் துரை போன்ற ஆசிரியர்கள் இருந்தார்கள் என்பதை என் குழந்தை கூட நம்பாது.
நூறு சதவித தேர்ச்சி எனும் கவர்ச்சிக்காக, 500 க்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களை மட்டுமே சேர்த்து பிராய்லர் கறிக்கோழிகளாக மாற்றும் இருள் சூழ்ந்த பள்ளிகளை நடத்தும் பள்ளித்தாளாளர்கள்,ஆசிரியர்கள் மத்தியில், பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வாய்ப்பு குறைவாக உள்ள மாணவர்களை பள்ளி முடிந்தபின்னர், பள்ளிக்கே வரவழைத்து படிக்கச் செய்த ஆசிரியர்களை நான் கண்ணுற்றுள்ளேன். அனைவரும் வரவேண்டும் எனக் கட்டாயம் ஏதும் இல்லை. சுயவிருப்பம் இருந்தால் மட்டுமே வந்து படித்துப் பயன் பெறுங்கள் என அழைத்து, பள்ளி அறைகளை திறந்து விட்டு படிக்கச் சொல்லும் வேளையில், சந்தேகங்கள் வந்தால் தெளிவுபடுத்த மாணவர்களோடு இருந்த ஆசிரியர்களைப் பார்க்கும் வீடு பேரு நிலையை நான் அடைந்துள்ளேன்.
வீட்டில் இருந்து படிக்க நல்ல சூழல் இல்லாத மாணவர்கள் பலர் இதில் பயன் பெற்றதை நான் அறிவேன். சாப்பிட விருப்பமில்லாது இருக்கும் குழந்தைகூட ஆர்வத்தில் அள்ளிச் சாப்பிடும் கூட்டாஞ்சோறு போல், பள்ளிப்பாடங்கள் வேப்பங்காயாக கசந்தாலும், பலர் ஒன்று கூடுவதால் மட்டுமே கூட்டாம்படிப்பு என்ற ஒரே காரணத்திற்காக புத்தகத்தை திறந்ததால் மட்டுமே தேர்ச்சி பெற்ற என் சக நண்பர்களை நான் அறிவேன்.
மேற்கண்ட ஆசிரியர்கள் எல்லாம் சீர்கெட்ட சமுகத்திலிருந்து வந்திருந்தாலும், அரசு மற்றும் அரசு நிதி பெறும் பள்ளி, கல்லூரிச் சூழல்தான் அவர்கள் சீர்கெடாமல் வாழ வழிவகுத்தது என்றால் மிகையாகாது. கல்விக்கொள்ளை அடிக்கும் புற்றிசல் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்திருப்பார்களேயானால், கந்துவட்டி வசூலிப்பவர்களாகவும், பிராய்லர் கோழிகளை வளர்க்கும் கோழிப்பண்ணை ஊழியர்களாகவும, குறுநிலமன்னர்களான கல்வித்தந்தைகளின் கைக்கூலிகளாகவும் தான் இருந்திருப்பார்கள், அங்கொன்றும், இங்கொன்றுமாக நான் கண்ட ஆசிரியர்களை, எங்கும் நீக்கமற நிறைக்கச் செய்ய ஒரே வழி கல்வியை அரசு மயமாக்குதலேயாகும்.
”போதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தரப்பு தவறியதால் சந்தேகத்தின் பலன்களை குற்றவாளிகளுக்கு அளித்து குற்றம்சாட்டப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் உள்ளிட்ட 23 பேரையும் விடுதலை செய்கிறேன்” என புதுச்சேரி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. முருகன் நவம்பர் 27 அன்று வழங்கிய சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்பில் கூறியுள்ளார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சங்கரராமன் கொலைவழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிறழ் சாட்சியங்களும், நீதிபதிகளை விலைக்கு வாங்கும் முயற்சிகளும், போலீசின் ஒத்துழைப்பு என பல்வேறு சட்டவிரோத வழிமுறைகளை சங்கராச்சாரி தரப்பு பின்பற்றி தப்ப முயன்றது அப்பட்டமாகவே தெரிந்த பிறகு அவற்றின் தொடர்ச்சியாக நீதிமன்றம் அவரை நிரபராதி என அறிவித்து விடுதலை செய்துள்ளது.
ஜெயேந்திரன் – விஜயேந்திரன்
சின்னக் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோவிலின் மேலாளராகப் பணியாற்றி வந்த சங்கரராமன், ஒரு பார்ப்பனர். கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி கோவிலின் வசந்த மண்டபத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார். கோவில் கணக்கர் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் விஷ்ணு காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. வழக்கை திசைதிருப்பும் நோக்கில் ஆறுமுகம், தில்பாண்டியன், சதீஷ், தேவராஜ், அருண் ஆகிய 5 பேர் தாங்களாகவே நீதிமன்றத்தில் ஆஜராகி சங்கரராமனைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
அன்று மாவட்ட எஸ்.பியாக இருந்த பிரேம்குமார் (தற்போது இறந்து விட்டார்) இந்த விசாரணைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பிறகு, நவம்பர் மாதம் 12-ம் (அன்று தீபாவளியும் கூட) தேதி ஆந்திர மாநிலம் மெகபூப் நகருக்கு சென்று அங்கு ஒரு பெரிய பூசையில் இருந்த சங்கராச்சாரியை கைது செய்தார். 2005 ஆம் ஆண்டு ஜனவரி பத்தாம் தேதி சின்ன சங்கராச்சாரியும் கைதானார்.
அப்போது தமிழகத்தில் முந்தைய ஜெயாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அகில இந்திய அளவில் பிஜேபி, விஎச்பி உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் ஜெயாவுக்கு எதிராக அறிக்கைகளை விட ஆரம்பித்தன. முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட சங்கரமட பக்தர்கள் அதிகார மையங்களுடன் பேசி அவரை விடுவிக்க முயன்றார்கள். ஜெயா கும்பலோ ஏதோ நிதி மற்றும் ஈகோ பிரச்சினைகள் காரணமாக ஜெயேந்தரன் கும்பலை கட்டும் கட்டுவது என்று இருந்தது.
அடுத்தடுத்து ரவுடிகள் அப்பு, கதிரவன், ஆடிட்டர் ரவி சுப்ரமணியம், மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 25 பேர் வரை கைது செய்யப்பட்டனர். பலர் ஒப்புதல் வாக்குமூலங்களும் கொடுத்தனர். உச்சநீதி மன்றம் வரை சென்ற பிறகுதான் ஜனவரி 10 அன்று பெரிய சங்கராச்சாரிக்கு ஜாமீன் கிடைத்தது. பிறகு சின்னவருக்கும் கிடைத்தது. எழுத்தாளர் அனுராதா ரமணன் சங்கராச்சாரியின் பாலியல் மோசடி பற்றியும், 1992ல் மடத்தில் தனக்கு கிடைத்த மோசமான பாலியல் சீண்டல்களைப் பற்றியும் எழுதி அம்பலப்படுத்தினார். சங்கராச்சாரியை தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விடுத்து அவரது சல்லாபக்கதைகளை கிசுகிசுவாக்கி ஊடகங்கள் கல்லா கட்டின.
712 ஆவணங்களுடன் 1873 பக்க குற்றப்பத்திரிக்கையை காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். தாக்கல் செய்வதற்கு முன் வரதராசப் பெருமாள் சன்னதியில் மூலவர் சிலையின் பாதங்களில் வைத்து வணங்கப்பட்ட பிறகுதான் அந்த குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக சீனெல்லாம் போட்டார்கள். அதன்படி பார்த்தால் பெருமாளையே ஜெயேந்திரன் விலைக்கு வாங்கி விட்டார் என்று தெரிகிறது. அதன் பிறகு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் 2005 அக்டோபரில் உச்சநீதி மன்றத்தை அணுகிய சங்கராச்சாரி தரப்பு தமிழகத்தில் வழக்கு விசாரணை நடந்தால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்றும், எனவே புதுச்சேரிக்கு அதனை மாற்று மாறும் கோரி மனுத்தாக்கல் செய்தது. அதனை ஏற்று வழக்கை புதுவை மாவட்ட செசன்சு நீதிமன்றத்துக்கு மாற்றினார்கள் நீதிபதிகள். தமிழக அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞரும் நியமிக்கப்பட்டனர். இவையெல்லாம் கூட நீதியை விலைக்கு வாங்க சங்கர மட கும்பலுக்கு ஏதுவாக இருந்தன.
எனினும் முறையான வழக்கு விசாரணை 2009-ல் தான் துவங்கியது. ஏற்கெனவே ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறியிருந்தார். ஆறாவது எதிரியாக இருக்கும் கதிவனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கே.கே நகரில் சிலர் வெட்டிக் கொன்றனர். அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. போலீசு தரப்பில் ரவுடிகளின் உட்பகை என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.
சங்கரராமனின் மகன் ஆனந்த் சர்மா சாட்சிகளை பதிவு செய்த சிடி காப்பி ஒன்று தனக்கு வேண்டும் எனக் கேட்டு நீதிமன்றத்தை அணுகினார். அதுவரைக்கும் விசாரணையை முடிக்க கூடாது என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார். ஆனால் அப்படி பதிவுசெய்யப்பட்ட சாட்சிகளின் பேச்சு அடங்கிய சிடியை அவருக்கு தரக்கூடாது என கதிரவன் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில்தான் அவரை ரவுடிகள் வெட்டிக் கொன்றனர். எதற்காக கொன்றார்கள் என்பது பற்றி விசாரணையில் இதுவரை எதுவும் தெரிய வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லாம் பெரியவா சமாச்சாரம் என்பதால் ஊடகங்கள் முதல் போலிசு வரை வாய் மூடின.
முதலில் காவல்துறையினர் சேர்த்த 371 சாட்சிகளில் 187 பேரிடம் மட்டும்தான் அரசு வழக்கறிஞர் தேவராஜ் குறுக்கு விசாரணை நடத்தினார். இவர்களில் 83 பேர் பிறழ் சாட்சியங்களாக மாறிப் போயினர். பிறழ் சாட்சியங்களில் முக்கியமானவர் பத்மா, செத்துப்போன சங்கரராமனின் மனைவி. கொலையாளிகளை போலீசு காட்டிய புகைப்படத்தை பார்த்த பிறகுதான் தெரிந்து கொண்டோம் என்று நீதிமன்றத்தில் சாட்சி சொன்னார். இன்னொருவர் அவரது மகள் உமா. அவரால் சாட்சிகளை அடையாளம் காட்ட முடியாமல் போய் விட்டதாம். இதற்கு பின்னால் ஏராளமான பணமும், அதீத மிரட்டல்களும் இருந்திருக்கிறது. அப்போதே சங்கர மட கும்பல் கிட்டத்தட்ட விடுதலை ஆனது மாதிரிதான்.
போலீசாரும் தங்கள் பங்குக்கு இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களை டம்மியாக உருவாக்கியிருந்தனர். கொலையாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை கூட அடையாளம் காட்ட அரசு தரப்பு சாட்சிகளால் முடியவில்லை என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்த பொருட்களையும், ஆதாரங்களையும் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க காவல்துறையினர் தவறி விட்டனர் என்றும் நீதிபதி விமர்சித்துள்ளார். தலைமை விசாரணை அதிகாரியான எஸ்.பி. சக்திவேல் மீது நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும் முதலில் விசாரணை அதிகாரியாக இருந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை ஆணையாளர் பிரேம்குமாருக்கு இந்த வழக்கில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருந்ததாகவும், சங்கராச்சாரிக்கு உச்சநீதி மன்றம் பிணை வழங்கிய போது அவர் வெளியிட்டிருந்த கருத்துக்களில் அது வெளிப்படுவதாகவும் நீதிபதி முருகன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். (பிரேம்குமார் 2010 ல் மரணமடைந்து விட்டார்)
உண்மையில் நடந்தது என்ன? ஜெயா கும்பலுக்கும், சங்கர மட கும்பலுக்கும் இருந்த நிதி, ஈகோ பிரச்சினைகள் வெயிட்டாக பஞ்சாயத்து செய்யப்பட்டதா என்பது தேவ ரகசியம்.
குற்றப்பத்திரிக்கையில் சங்கர மடத்தின் ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் கொலை நடந்த பிறகு எடுக்கப்பட்ட பணக் கட்டுகளில் இருந்த நோட்டுக்களின் வரிசை எண்களும், பின்னர் கொலையாளியிடம் கைப்பற்ற பணக் கட்டுகளில் இருந்த வரிசை எண்களும் ஒன்றாகவே இருந்தது என்பதும் ஒரு ஆதாரமாக குறிப்பிடப்பட்டிருந்தது. மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யரின் செல்பேசியை வழக்கமாக சங்கராச்சாரிதான் பயன்படுத்துவார் என்றும், அந்த எண்ணில் இருந்து கொலையாளிக்கு பேசப்பட்ட அழைப்புகள் பற்றிய ஆதாரங்களும் இணைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கிடையிலான சில கடிதங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கில் நீதிபதிகளிடம் பேரம் பேசும் வேலையையும் காஞ்சி சங்கராச்சாரி தரப்பு செய்தது. இப்போது தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி நான்காவதாக நியமிக்கப்பட்டுள்ளவர். மூன்றாவதாக இருந்தவர் பெயர் நீதிபதி ராமசாமி.
2011-ல் ஆகஸ்டு மாதம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சுந்தரராஜன் புதுவையில் நடைபெறும் சங்கர்ராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் ஆதாரத்திற்காக ஒரு சிடியையும் இணைத்திருந்தார். அதில் நீதிபதி ராமசாமி, காஞ்சி சங்கராச்சாரி மற்றும் கௌரியம்மாள் என்றொரு பார்ப்பன சீமாட்டி ஆகியோர் உரையாடும் ஆடியோ பதிவு இருந்தது. நீதிபதியின் பணத்தேவை, பெரியவாள் பணம் தர முன்வருவது, அடுத்து ஆக வேண்டியதை பார்க்க சொல்வது என எல்லாம் வெட்ட வெளிச்சமாகவே 8 வாரத்திற்குள் இம்மோசடியை விசாரித்து அறிக்கை தரச் சொன்னார்கள் நீதிபதிகள். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் நீதிபதி ராமசாமி நீக்கப்பட்டு முருகன் நீதிபதியாக வந்து அமர்ந்தார். 2012 பிப்ரவரியிலும் இப்படி நீதிபதிகளிடம் பேரம் பேசும் வேலை வெளியாகவே அப்போதும் வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தற்காலிகமாக தடை விதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தங்களது குற்றப் பத்திரிகையில் கொலை செய்யும் நோக்கில் சதித்திட்டம் தீட்டிதான் சங்கர ராமன் கொலை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்திருந்தனர். தற்போது சதித்திட்டம் தீட்டியதை போலீசு தரப்பு நிரூபிக்க தவறி விட்டதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஏற்கெனவே சோமசுந்தர கனபாடிகள் என்ற பெயரில் சங்கர மடத்தில் நடைபெறும் நிதி முறைகேடுகள் மற்றும் பாலியல் முறைகேடுகளை அம்பலப்படுத்துவேன் என சங்கராச்சாரிக்கு அடிக்கடி கடிதம் எழுதி வந்தார் என்றும், ஒரு கட்டத்தில் இதனை பொறுக்க முடியாத இந்துக்களின் புனித குருவான சங்கராச்சாரி ரவுடி அப்பு தலைமையில் ஒரு கூலிப்படையை ஏவி கோவில் சன்னிதியில் வைத்தே சங்கரராமனை போட்டுத்தள்ள திட்டமிட்டு செயல்படுத்தினார் என்பது தான் போலீசின் குற்றப் பத்திரிக்கை சொல்வது. ஆனால் ஆதாரங்களை தருவதில் மோசடி செய்து சங்கராச்சாரியை விடுவித்திருக்கிறார்கள்.
நீதிமன்றத்தில் சாட்சிகளின் சிடி பதிவுகள் வேண்டும் என முன்னர் கேட்டிருந்த சங்கர ராமனின் மகன் ஆன்ந்த் சர்மா, பிறகு தனக்கும் தன் குடும்பத்தினருக்கு போலீசு பாதுகாப்பு வேண்டும் என்றும், அரசு வழக்குரைஞரை மாற்ற வேண்டும் என்றும் கோரி நீதிமன்றத்தை நாடினார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, கடந்த 5-ம் தேதி புதுவை நீதிமன்றத்துக்கு வந்த ஆனந்த சர்மா தனது மனுவை திரும்ப பெறுவதாகவும், விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்குவதில் தனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் கூறி விட்டார். கடைசியில் சங்கராச்சாரி சாட்சிக்காரன் காலில் விழுவதை சண்டைக்காரனின் பையன் காலில் விழுவதே மேல் என்பதை புரிந்து கொண்டு, பணத்தாலும், ஆள் படை பலத்தாலும் சங்கர்ராமன் மகனை ‘விலைக்கு’ வாங்கி விட்டார் என்பது அப்போதே அப்பட்டமாக வெளிப்பட்டு விட்டது.
இன்று நீதிமன்றத்துக்கு வந்த அப்ரூவரான ஆடிட்டர் ரவிசுப்பிரமணியம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வந்திருந்தார். தீர்ப்பு வெளியான பிறகு அரசு வழக்கறிஞர் தேவராஜ் கூறுகையில் ”தமிழக அரசுடன் கலந்தாலோசித்து பின் மேல்முறையீடு செய்வோம். சங்கரராமன் குடும்பத்தினரின் பிறழ்சாட்சியம் காரணமாகத்தான் 23 பேரும் விடுதலையானார்கள்” என்றார்.
சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா கூறுகையில் ”அதிர்ச்சியாக உள்ளது. எனது தந்தை தனாகவே தன்னை கொலை செய்து கொள்ளவில்லை. சிலர் வந்துதான் வெட்டி கொலை செய்துள்ளனர். அப்படியிருக்க, ஒரு சிலருக்காவது தண்டனை கிடைத்திருந்தால் இந்த தீர்ப்பை நம்பியிருக்க முடியும். அடுத்து என்ன செய்வது என்பது பற்றி குடும்பத்தினருடன் பேசிய பிறகுதான் முடிவு செய்வோம்” என்று சொல்லியிருக்கிறார்.
போலீசு, நீதித்துறை போன்ற அரசுத் துறைகள் மட்டுமின்றி, சங்கரராமன் குடும்பத்தினரையும் விலைக்கு வாங்கியோ மிரட்டியோ ‘நீதி’யை நிலைநாட்டி உள்ளார் லோககுரு சங்கராச்சாரி. தங்களுக்குள் உள்ள பணபேரம், நிலபேரம், மருத்துவமனை பேரம், அதிகார பேரம் என எல்லாவற்றையும் ஜெயா தரப்பும், சங்கராச்சாரி தரப்பும் இடைப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் ஏறக்குறைய செட்டில் பண்ணி விட்டனர். எனவே அரசு தரப்பில் மேல்முறையீடு செய்தாலும் அது ஒரு பேருக்குதான் இருக்குமே தவிர குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்காது.
நீதி கேட்டு கொலையுண்ட சங்கரராமன் குடும்பம் எதாவது வம்பு செய்யாமல் இருக்க பணத்தால் அடித்திருக்கிறார்கள், முடியாதபோது மிரட்டல். அதற்கு பயந்துதான் ஆனந்த் சர்மா முதலில் போலீசு பாதுகாப்பு கேட்கிறார். மிரட்ட மாட்டோம் என சங்கராச்சாரி தரப்பு உறுதிசெய்த பிறகு புகாரை வாபஸ் வாங்குகிறார். தீர்ப்பு வெளியான பிறகு ”நேரடியாக கொலையில் ஈடுபட்டவர்களையாவது தண்டித்திருக்கலாம்” என்று இப்போது கூறுகின்றார். அதாவது அவரே சங்கராச்சாரி விடுவிக்கப்படுவதை எதிர்க்க விரும்பவில்லை. இவர் எப்படி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முன்வருவார்? கடைசியில் நிரபராதியாகி விட்டான் நாடறிந்த ஒரு கொலைகார சங்கராச்சாரி.
”தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்பதை முன்னரே நாங்கள் எதிர்பார்த்தோம்” என சங்கராச்சாரி தரப்பு வழக்கறிஞர் திமிராக கூறியுள்ளார். தீர்ப்பை கேட்ட பிறகு காரில் திருச்செந்தூருக்கு கிளம்பியுள்ளார் சங்கராச்சாரி. தன் வைர வேலையும், அறநிலையத்துறையின் உதவி ஆணையர் சுப்பிரமணிய பிள்ளையின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளையும் முப்பது ஆண்டுகள் முடிந்த பிறகும் கண்டறிய முடியாத முருகனை வணங்க, தன் காலடியில் வைத்த குற்றப் பத்திரிக்கையை நிரூபிக்க வக்கில்லாத வரதராச பெருமாளின் சன்னிதியில் இருந்து ஒரு ஏ-1 அக்யூஸ்டு போகிறான். திருச்செந்தூர் முருகனுக்கு தான் இருக்கும் கடற்கரையை மணற்பரப்பையே மொத்தமாக ஸ்வாகா பண்ணும் வைகுண்டராசனை தட்டிக் கேட்க துப்பில்லாத போது பாவம் காஞ்சிபுரம் வந்து அவரால் எப்படி புலன்விசாரணை செய்து சங்கரராமனுக்கு நீதி வழங்க முடியும்.
தீர்ப்பை வரவேற்ற சு.சாமி, ”இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் சங்கராச்சாரியை கைது செய்த ஜெயா அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் வழக்கு தொடருவேன்” என்று கூறியிருக்கிறார். தர்மம் வெற்றி பெற்றிருப்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார். இப்படி பார்ப்பன கும்பலும், ஆர்.எஸ்.எஸ் வானரங்களும் ஜெயேந்திரன் விடுதலை குறித்து கும்மாளம் போடுகின்றன. இறுதியில் இது ‘இந்து’ தேசம்தான் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்ற பார்ப்பனத் திமிர் கரை புரண்டு ஓடுகிறது.
நேற்று சென்னை சேத்துப்பட்டு சங்கர மடக் கிளையில் சங்கராச்சாரியின் விடுதலைக்காக 300 பேர் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்களாம். எந்த தெய்வத்திடம் என்றுதான் தெரியவில்லை. குற்றவாளியை அநீதியாக காப்பாற்றிய அந்த தெய்வத்தின் பெயர் ஜெயலலிதவா என்று தெரியவில்லை.
சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பது குதிரைக் கொம்புதான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு நீதி மறுக்கப்படுவதுதான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சங்கர ராமன் பார்ப்பனராகவே இருந்தாலும், எதிர்த்தது ஒரு ஒரு மடாதிபதியை என்பதால் அவருக்கும் நீதி மறுக்கப்படும் என்பதுதான் ‘இந்து’ தேச நீதித்துறையின் சார்புநிலை. பணமும், அதிகார பலமும், பார்ப்பனிய கட்டுமானங்களும் தான் நீதிபதிகளின் மனச்சாட்சியையும் ஆள்கிறது என்பதும் நிரூபணமாகி உள்ளது.
தருண் தேஜ்பால், என்னுடைய முதல் நாவலான “தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்” நூலைவெளியிட்ட “இந்தியா இங்க்” நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர். அவர் தொடர்பான சமீப நிகழ்வுகளைக் குறித்த என் எதிர்வினையை பல பத்திரிகையாளர்கள் கேட்டிருந்தார்கள். நடந்து கொண்டிருந்த ஆரவாரமான ஊடக கும்மியடிப்புகளுக்கு நடுவே என் கருத்து எதையும் வெளியிட நான் தயங்கினேன். கீழே விழுந்து விட்ட ஒரு மனிதனை மிதிப்பது அற்பமானதாக தோன்றியது. குறிப்பாக, தான் செய்த செயலின் விளைவுகளிலிருந்து அவர் எளிதில் தப்பி விட முடியாது என்றும் அவரது தவறுக்கான தண்டனை வந்து கொண்டிருக்கிறது என்றும் தோன்றிய போது அவரை மேலும் தாக்குவதை தவிர்க்க நினைத்தேன். ஆனால், இப்போது அது அவ்வளவு நிச்சயமின்றி போயிருக்கிறது. வக்கீல்கள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள், பெரிய அரசியல் சக்கரங்கள் சுழல ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு மேலும் நான் மௌனமாக இருந்தால் அதற்கு பல விதமான அர்த்தங்கள் கற்பிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
அருந்ததி ராய்
தருண் எனது நீண்ட கால நண்பர்களில் ஒருவர். என்னைப் பொறுத்த வரையில் அவர் எப்போதுமே தாராளமாகவும், புரிதலுடனும் நடந்து கொண்டார். குறிப்பிட்ட பிரச்சனைகளின் அடிப்படையில் என்றாலும் நான் தெகல்காவை பெரிதும் மதித்தேன். 2002 குஜராத் படுகொலைகளை நடத்தியவர்கள் சிலரை சிக்க வைத்த ஆஷிஷ் கேத்தானின் பொறி வைத்தல் நடவடிக்கை, சிமி விசாரணை குறித்து அஜித் சாஹி செய்த வேலைகள் ஆகியவை என்னைப் பொறுத்த வரை தெகல்காவின் மிகச் சிறந்த சாதனைகள். இருப்பினும், நானும் தருணும் அரசியல் ரீதியாகவும் சரி, இலக்கிய ரீதியாகவும் சரி வெவ்வேறு உலகங்களில் வாழ்ந்து வந்தோம். எங்கள் கருத்துக்கள் எங்களை இணைப்பதற்கு பதிலாக விலகிச் செல்ல வைத்தன. இப்போது நடந்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை, ஆனால் மனது உடையச் செய்திருக்கிறது.
கோவாவில் தருண் நடத்தும் “திங்க்ஃபெஸ்ட்” ‘அறிவுஜீவி’ திருவிழாவில் அவர் தனது சக ஊழியரான இளம் பெண் மீது அச்சுற்றுத்தும் பாலியல் தாக்குதல் நடத்தியிருப்பதை அவருக்கு எதிரான சாட்சியங்கள் உணர்த்துகின்றன. மலையளவு முறைகேடுகள் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சுரங்கத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட கூட்டமைப்பு இந்த திங்க்ஃபெஸ்டுக்கு நிதி அளித்து ஆதரித்திருக்கிறது. நாட்டின் பிற பகுதிகளில் பெருமளவிலான பழங்குடி பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, கொலை செய்த, ஆயிரக் கணக்கான மக்களை சிறைக்கு அனுப்பி, கொலை செய்த பெருமைக்குரியவை இந்த நிறுவனங்கள். தருணின் பாலியல் தாக்குதல், புதிய சட்டத்தின்படி பாலியல் வன்முறைக்கு நிகரானது என்று பல வழக்கறிஞர்கள் சொல்லியிருக்கின்றனர். தாக்கிய பெண்ணுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சல்களிலும், குறுஞ்செய்திகளிலும் தருணே தன்னுடைய குற்றத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார்.
முதலாளி என்ற கேள்விக்குட்படுத்த முடியாத அதிகார நிலையிலிருந்து அவர் பெரிய மனிதத் தனத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். மோசடி என்று சொல்லும்படியாக, தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு “துன்புறுத்திக்” கொள்வதற்காக 6 மாதம் விலகி இருக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். இது போலீஸ் விவகாரமாக ஆன பிறகு பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய பெரும் பெருச்சாளிகளான வக்கீல்களின் ஆலோசனைப் படி, பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பல ஆண்கள் வழக்கமாக செய்வதையே தருண் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அதாவது, தான் வேட்டையாடிய பெண்ணை குற்றவாளி கூண்டில் நிறுத்தி, அவரை பொய்யர் என்று முத்திரை குத்த முயல்கிறார்.
வலது சாரி இந்துத்துவா கும்பலால் அரசியல் காரணங்களுக்காக தருண் பழி வாங்கப்படுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது, சமீப காலம் வரை தான் வேலைக்கு அமர்த்தியிருந்த ஊழியர் ஒழுக்கமற்ற பெண் மட்டுமில்லை, பாசிச சக்திகளின் ஆளும் கூட என்கிறார் தருண். இதுதான் இரண்டாவது ‘கற்பழிப்பு’ :
தெகல்கா பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் அரசியலையும், அறங்களையும் வல்லுறவு செய்வதுதான் இது. அங்கு பணி புரிபவர்களுக்கும், கடந்த காலத்தில் தெகல்காவை ஆதரித்தவர்களுக்கும் விழுந்த ஒரு இடி. கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் அரசியல் மற்றும் தனிப்பட்ட நேர்மையை வெற்றுக் கூடாக மாற்றுவது
சுதந்திரமான, நியாயமான, பயமற்ற என்று தெகல்கா தன்னைத் தானே வரையறுத்துக் கொண்டது. இப்போது தைரியம் எங்கே போனது?
– அருந்ததி ராய்
தமிழாக்கம் : செழியன்
நன்றி : அவுட்லுக்
கருக்கருவா, வாங்கருவா, களவெட்டு, ஒலவாரம், வரிகயிரு, தாம்புகயிரு, வடகயிரு, பூட்டாத்தல, மோத்தடி, மட்டப்பலக, பரம்புசெட்டு, தாருகுச்சி, கடமலக்குச்சி, இந்த வார்த்தையெல்லாம் மொழி தெரியாத சோசியக்காரன் சொல்றாப் போல ஒரே கொழப்பமா இருக்கா. இதெல்லாம் விவசாயத்துக்கு பயன்படுத்துற தளவாட சாமன்களோட பேருதானுங்க. (சில இடங்கள்ள இந்த பேரு வேற மாதிரியும் இருக்கும்.) இப்ப எந்த சாமானும் பயன்பாட்டுல இல்ல. புழக்கத்துல இந்த வார்த்தைகளும் இல்ல. இப்படி விவசாயிகள் மறந்து போன பொருட்கள்ள ஒண்ணுதானுங்க குதிரு.
குதிர்
குதிருங்கறது கிராமங்கள்ள விவசாயிகள் தானியங்களை சேர்த்து வைச்சுக்க பயன்படுத்துற ஒரு கூடு அல்லது சாதனம். வசதிக்கு தகுந்தாப் போல பணக்காரங்க, ஏழைங்க, கூலிக்காரங்கன்னு தானியங்கள சேமிச்சு வச்சுக்க குதிரு போலவே கூன், பத்தாயம், சேருன்னு பயன்படுத்துனாங்க. முன்னே எல்லாம் கிராமத்துல குதிர் இல்லாத வீடே இருக்காது. இப்ப வலைவீசி வீடு வீடா தேடுனாலும் பார்வைக்கு ஒண்ணு கூட கிடைக்காது.
குதிர் : இது களிமண்ணு, வரகு வைக்கோல் ரெண்டையும் சேர்த்து பண்ணணும். ஆறடி வரைக்கும் குதிர் செய்யலாம். ஒரு அடி அளவுக்கு உயரம் கொண்ட உருளையா செஞ்சு ஒண்ணு மேல ஒண்ணா அடுக்கி வைக்கணும். மேலே கடைசியா வைக்கும் உருளையின் அகலம் கொஞ்சம் குறைவா கோபுர வடிவம் போல குறுகி இருக்கும். மேல் மட்டத்தை மூடுவதற்கு தட்டு போல வட்டமா மண்ணால செய்து மூடணும். மேல் மட்ட வழியாதான் நெல் கொட்டணும். குதிரின் அடியில் ஒரு சின்ன துவாரம் இருக்கும். இது வழியாதான் தேவையான நெல்ல எடுக்கக்கிட்டு தேங்கா செரட்டையும் மண்ணும் வைச்சு மூடிடணும்.
கூனும், குதிர் போலவேதான் இருக்கும். செய்யற முறைதான் வேற. குதிரு பெரும்பாலும் சிறு விவசாயிக்கிட்ட தான் இருக்குமுங்க.
பத்தாயம் : மாம்பலகை, பலாப்பலகையில செய்றது. இது செவ்வகம், சதுரம் என ரெண்டு வடிவிலையும் இருக்கும். தனித்தனி பெட்டிகளா செய்து ஒண்ணுமேல ஒண்ணா அடுக்கணும். மேல் மட்டத்துல மூடி தொறக்குற மாதிரி கதவு போல இருக்கும். இதன் வழியா நெல்லைக் கொட்டணும், அடிப்பகுதில சின்னதா ஒரு துவாரம் இருக்கும். அதன் வழியா எடுக்கணும். ரெண்டு வழியிலேயும் பூட்டுப் போட்டு பூட்டிக் கொள்ளும் வசதி இருக்கும். தேவைக்கு ஏத்தாப்போல ஒன்னுக்கு மேற்பட்டது வச்சுருப்பாங்க. விதை நெல்லு வச்சுக்கவே சில வீடுகள்ள சின்னதா பத்தாயந்தான் பயன்படுத்துவாங்க. இது பெரும்பாலும் பணக்கார விவசாயிகளிடம் இருக்குமுங்க.
சேரு : இது வைக்கோலையும், வைக்கோலால் ஆன பிரியாலையும் (கயிறு) செய்றது. இதை வீட்டுக்குள்ள வைக்க முடியாது, தெருவுலதான் வச்சுக்கணும். நெல்லை மட்டும் கசக்கி எடுத்த வைக்கோலை நீட்ட நீட்டமா வட்டமான வடிவத்துல வச்சு, பிரியை அதன் மேல தேவையான உயரம் வரும்வரை சுத்தணும். மாடு திண்ணுடாம இருக்க சாணியால மொழுகணும். மேல் மட்டத்த மூடறதுக்கு பனைமட்டையால குடைபோல செஞ்சு அதாலதான் மூடணும். அடி பாகத்துல கதுமையா வைக்கோலை போட்டு அதன் மேல நெல் கொட்டணும். பனைக் குடையை கீழே இறக்கி வச்சுட்டுத்தான் நெல்லு எடுக்கனும். சேரு பெரும்பாலும் தலித்துக்கள் வீட்லதான் இருக்குமுங்க.
தலித்துகள் சின்ன கூரை வீட்டுலதான் இருப்பாங்க. வீட்டுக்குள்ள நாலு பிள்ளை குட்டியோட முண்டி மொழங்கி படுக்கக் கூட முடியாது, குதிரு எப்படி வச்சுக்க முடியும். அதனால தற்காலிகமா தெருவுலதான் சேரு கட்டிக்குவாங்க. அறுவடைக் காலத்துல அவங்க அறுப்புக்கு போயி கூலியா வாங்கிய நெல்ல இதுல சேமிச்சு வச்சுக்குவாங்க. ஆத்திர அவசரத்துக்கு உதவும், பஞ்சம் பட்டினி வந்தாலும் கைகொடுக்குமுங்க.
சில பணக்காற வீடுகள்ளையும் இந்த சேறு இருக்கும். அதிகமா வெளைச்சல் கண்டு பத்தாயமெல்லாம் நெறைஞ்சு போச்சுன்னா தற்காலிகமா இத கட்டிக்குவாங்க. அறுவடை சீசனெல்லம் முடிஞ்சு கோடை காலத்துல நெல்லு வரத்து கொறஞ்சு போகும் சமயம் பாத்து நெல்லு தரகர்கள் கிட்ட வித்துடுவாங்க. அறுவடை சீசன்ல விக்குற விலைய விட கூடுதல் விலை கெடைக்கும்.
ஒரு குடும்பத்துல அறுவடை முடிச்சதும் நடவு தசுகூலி செலவுக்கு வாங்கிய கடன் எவ்வளவோ அதுக்கு தேவையான நெல்ல மட்டும் வித்துட்டு மத்த நெல்ல சேமிச்சு வச்சுக்குவாங்க. சாப்பாட்டுக்கு தேவையான நெல்ல அப்பப்ப அவிச்சு அரிசியாக்குவாங்க. குடும்பத்துல அவசர தேவைக்கு அப்பா கவலையே படாம குதிரை தொறந்துருவாரு. தெருவுல வர்ற சேலைக் காரர்கிட்ட அம்மா, அப்பாவுக்கு தெரியாம எடுக்கும் சேலைக்கு குதிர தொறந்து நெல்லெடுத்துட்டு, எடுத்த தடம் அப்பாவுக்கு தெரியாம மூடிடுவாங்க. அப்பாவும், அம்மாவும் நெல்ல கடையில விக்கிறதுக்கு இடையில அதுலேர்ந்து பிள்ளைங்கக் கொஞ்ச நெல்லெடுத்து பத்திரப்படுத்திக்கும். ஆளில்லாத நேரத்துல தெருவுல வர்ர ஐஸ்க்காரர்ட முன் முதலீடாக் கொடுத்துட்டு தவணையில பள்ளிக்கூடத்துல ஐஸ் வாங்கிக்குவாங்க. குதிர் குடும்பத்துல உள்ள அனைவர் தேவையையும் அப்பப்ப இப்படி சுவாரஸ்யமாத் தீத்து வச்சுருமுங்க.
சேர்
வசதி வாய்ப்புல எந்த மட்டத்துல உள்ளவங்களா இருந்தாலும் நெல்லு சேமிப்புங்கறப் பழக்கத்த வச்சுருந்தாங்க. மொத வருசம் அறுக்குற நெல்ல மறுவருசம் வரைக்கும் வச்சுக்குவாங்க. வானம் பெஞ்சோ காஞ்சோ விவசாயத்துல மண்ணள்ளி போட்டாலும், வயித்துப் பசிலேர்ந்து கொஞ்சம் தப்பிச்சுக்கலாம். திடீர்ன்னு வர்ர எந்த நல்லது, கெட்டதுக்கும் கலங்கத் தேவையில்ல குதிர்ல இருக்க நெல்லு தைரியத்தக் கொடுக்குமுங்க.
நல்ல நாள்ள, வளர்பிறையில, ராசி பாத்து தன் பிள்ளைகள் கையால நெல்ல குதிரில் போட்டா சீக்கிரம் நெல்லு கொறையாதுன்னு சொல்லுவாங்க. நெல்லு எடுக்கும் போதும் அதே மாதிரி ஐதீகம் பாப்பாங்க. பொங்கல், சித்திரை திருநாள், நல்லேறு கட்றது இப்படி நல்ல நாள்ளயெல்லாம் குதிருக்கு மஞ்சள் பூசி, பொட்டு வச்சு பூஜை பண்ணுவாங்க. இப்படி நெல்ல பாதுகாத்த விவசாய குடும்பத்துல இப்ப ஒரு படி நெல்லு கூட வச்சுக்கறதில்லிங்க.
காலப்போக்குல ஒரு போகமா இருந்த நெல்லு வெள்ளாமை இரண்டு போகம், பிறகு பம்புசெட்டு அதிகம் வர ஆரம்பிச்சதும் மூணு போகம்னு நெல்லு போட ஆரம்பிச்சாங்க. பம்புசெட்டு பெரு விவசாயிகிட்ட தான் இருக்கும். சிறு விவசாயிக அவங்கக்கிட்ட தண்ணி காசுக்கு வாங்கி அடுத்த போகமும் நடவு செஞ்சாங்க. ரெண்டு போகம், மூணு போகமுன்னு விவசாயம் செய்ய முடியாதவங்க, மத்தவங்களுக்கு கூலிக்கு கதிரறுக்க போவாங்க. இப்படி மூணு போகமும் விவசாயம் செஞ்சதால சேமிச்சு வைய்க்கிற பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சு போச்சுங்க.
ஒவ்வொரு வீடுலயும் நெல்லே இல்லாம சும்மாவே இருந்துச்சு குதிரு. காலப்போக்குல நெல்லு இல்லாத குதிரு எதுக்கு வீட்ட அடைச்சுகிட்டு இருக்குன்னு இடிச்சுட்டாங்க. இப்ப குதிரு இருந்த இடத்துல மிக்சின்னும், கிரைண்டருன்னும் பத்தாயம் இருந்த இடத்துல டீவின்னும், ஃபிரிசுன்னும் மாறிப்போச்சு. வாங்குற கூலிய சேரு செஞ்சு சேமிச்சு வச்சவங்க இப்ப பணமா கூலி வாங்குறாங்க. இந்த பத்து பதினஞ்சு வருசத்துல குதிருங்கறதே வீடுகள்ள இல்லாம போச்சுங்க.
இப்படி நெல்ல சேமிப்ப அழிச்சதுல முக்கிய பங்கு கிராமத்துல தனியார் பள்ளிக்கூடம் நடத்துறவனுக்கு உண்டுங்க. ஊருக்கூரு பெட்டிக்கடை மாதிரி ஆங்கிலப் பள்ளிக்கூடத்த தொறந்து வச்சுருக்கானுவ. காலையில எத்திருச்சா ஏழு மணிக்கெல்லாம் நாய் புடிக்கிறவய்ங்க மாதிரி பத்து பள்ளிக் கூடத்துல இருந்து பத்து வேனு வருதுங்க. கூலிக்கு வேலை செய்றவங்களக் கூட விட்டு வைக்கிறது இல்லீங்க. ஒட்டக் கறந்தர்ரானுக. மக்களும் வயித்தக் கட்டி வாயக் கட்டி விவசாயம் பண்ணி, நம்மளால முடிஞ்சதுன்னு சொல்லி அஞ்சாவது, பத்தாவது வரைக்கும் ஆங்கிலக் கல்வி படிக்க வைக்கிறாங்க.
பத்தாயம் (புகைப்படம் நன்றி : வினவு வாசகர்)
கூலிக்கு வேலைக்குப் போயி மொத்த நெல்லையும் வித்துட்டு தனியார் பள்ளிக்குத் தான் கொட்டிக் குடுக்குறாங்க. கூலி விவசாயி கூட எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வரைக்குமாவது படிக்க வைக்கிறாங்க. நாமதான் இப்படி கஷ்டப்படுறோம் நம்ம பிள்ளைகளாவது நல்லா இருக்கட்டும், அப்படிங்கறாங்க.
விவசாயம் செஞ்சு ஒண்ணும் முன்னேற முடியாது. நம்ம பட்ட பாடு நம்மளோடவே போகட்டும் நம்ம பிள்ளைகளாவது நல்லா இருக்கட்டும் என்ற எண்ணத்தோடு பிள்ளைகளை காசை கொட்டி கல்லூரியில படிக்க வைக்கிறாங்க. நம்ம சத்துக்கு இவ்வளவுதான் தாக்குப் பிடிக்கும் என்றில்லாமல் அதிக வட்டிக்கு வாங்கி போட்டி போட்டுக் கொண்டு படிப்பு வராத பிள்ளைகளைக் கூட தொழில் கல்விப் படிக்க வைக்கிறார்கள். அதற்கு அறுவடை முடிந்ததும் மொத்த உழைப்பையும் வியர்வையையும் காசாக்கி கல்லூரிகளுக்கு கொட்டுகிறார்கள். பொருளாதாரத்தை தேடி போட்டிப் போட்டு மற்றவர்களை முந்திக் கொண்டு ஓட வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருக்காங்க.
விவசாயிகள் தன் சொந்த தேவைக்கு விவசாயம் பண்ணி தன்னோட தேவைகளை பூர்த்திப் பண்ணிகிட்டாங்க. சொந்த வெள்ளாமையில இருந்தே விதை நெல்லு எடுத்துகிட்டாங்க. விவசாயத்துக்கு தேவையான சாமான்களும் அவர்களே வச்சிருந்தாங்க. விவசாயத்துக்கு அடுத்தவங்கள சார்ந்து இல்லாமல் சொந்த உழைப்பையே நம்பியிருந்தவங்க காலப்போக்கில் விதை நெல்லு, பூச்சி மருந்துன்னு ஆரம்பிச்சு, விவசாயத்துக்கு ஆலோசனை வரைக்கும் எல்லா தேவைகளுக்கும் மத்தவங்கள சார்ந்து இருக்க வேண்டிய நிலைமைக்கு மாறிட்டாங்க.
விவசாயத்துல நவீன முன்னேற்றம் நல்ல விசயமா முறையா இருந்தாலும், கிராமத்துல நகரத்து ஆடம்பரத்த கொண்டு வந்துருச்சு. சேமிப்பு பழக்கத்த ஒழிச்சு, போட்டிப போடும் ஆடம்பர கலாச்சாரத்தை, கௌரவத்துக்காக செய்ய வச்சுருச்சு. இதனால விவசாயிகளுக்கு மிஞ்சுனது அவங்க பாடுபட்டு உழைச்ச வெள்ளாமையை கூட சாப்புட முடியாம போனதுதானுங்க.
என்னால் இதுவரை இந்த தலைப்பின் கீழ் ஒரு ஆசிரியரைக் கூட இனம் காண முடியவில்லை. நானும் முயற்சி செய்யாமலில்லை ஆனால் என் முயற்சிகளும் பயனளிக்கவில்லை. என் அம்மாவும் ஒரு ஆசிரியர் எனும் பட்சத்திலும் என்னால் இந்த தலைப்பிற்கு கீழ் அவர்களை எழுத என் மனம் முன் வரவில்லை. காரணம் ஒரு வறுமையான குடும்பத்தில் இருந்து தன் குடும்பத்தின் துன்பங்களுக்கு விடை காண வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும்,குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்,தனக்கு வரும் கணவனுக்கு ஒரு வேலைக்கு போகும் வரனாக அமைய வேண்டும் எனும் பெரும்பான்மையோரின் நோக்கங்களைக் கொண்டே அவரும் இயங்கினார் என்பதே காரணம்.
ஆசிரியர்கள் எல்லோரும் மாணவர்களைக் காட்டிலும் அறிவில் பின் தங்கியவர்களாக, இன்னும் பல படிகள் மேலேற வேண்டியவர்களாக, நடைமுறை அறியாதவர்களாக எனக்கு தோன்றுகிறார்கள்
என்னைப் பொருத்த வரை என் வாழ்நாளில் இதுவரை நான் பார்த்த ஆசிரியர்கள் எல்லோரும் மாணவர்களைக் காட்டிலும் அறிவில் பின் தங்கியவர்களாக, இன்னும் பல படிகள் மேலேற வேண்டியவர்களாக, நடைமுறை அறியாதவர்களாக எனக்கு தோன்றுகிறார்கள். காரணம் அவர்கள்தான் மாணவர்களை விட அதிகமாக பாடபுத்தகங்களோடு, பாட புத்தகங்களை மட்டுமே நம்பி பொழுதைக் கழிக்கிறார்கள். ஒரு சாதாரண விளக்கங்களுக்கு கூட தவறியும் நடைமுறை எடுத்துக் காட்டுகளை எடுத்துக் கொள்வதில்லை. இவர்கள் தவறியும் கற்பித்தலை விட்டு இறங்காதவர்களாக, கற்றல் எனும் திறனை வளர்த்துக் கொள்ள தேவை இல்லாதவர்களாக தங்களை உருவகபடுத்திக் கொள்வதில் தவறுவதும் இல்லை.
நான் எல்லா ஆசிரியர்களையும் பொதுமைப்படுத்தவில்லை. நான் இதுவரை அப்படிப்பட்ட யாரையும் சந்திக்கவில்லை.ஆசிரியர்கள் முதலில் படிக்க வேண்டும்.மாற்று சிந்தனைகளுக்கான எந்த ஒரு புத்தகத்தையும் தீண்டுவதே இல்லை. உதாரணமாக அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று கூட அவர்கள் மாணவர்களுக்கு சொல்லித்தருவதில்லை.அதை திட்டமிட்டு செய்வது ஒரு புறம் இருந்தாலும், அதை அறியாதவர்களாகவே நிறைய ஆசிரியர்கள் காலத்தை ஓட்டுகிறார்கள். கலிலியோ அவர்தான் தொலை நோக்கியை கண்டுபிடித்தார் அதைத் தவிர இவர்கள் அவரைப் பற்றி வேறெதுவும் வாய் கூட திறப்பதில்லை. அதன் பின் ஒளிந்திருக்கும் மதத்தின் பித்தலாட்டங்கள் பற்றியோ,அவருக்கு இழைத்த அநீதியைப் பற்றியோ வாய் திறப்பதில்லை. ஏனென்றால் இவர்களே இன்னும் சகுனம் பார்த்துதான் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.
இந்தக் கல்வி முறை மாணவர்களை ஒரு புறம் சுரண்டுகிறது என்றால் அதை கற்றுத் தருகிறோம் என்று ஆசிரியர்களும் மாணவர்களின் அறிவை சுரண்டுகிறார்கள். அதுவும் இன்றைய நிலையில் ஆசிரியர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், தன் திறமையை நிறுவனத்திற்கு நிரூபித்து அதன் வழியாக அவர்களின் வருமானத்தையோ,அல்லது பதிவியையோ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. இதனால் மாணவர்களின் தேவையும், அவர்களின் நடைமுறை சிக்கல்களும் புரிந்து கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது. இந்த முதலாளித்துவ நிறுவனங்கள் இலாபத்தை மட்டுமே எதிர் நோக்கி தங்கள் தொழிலை நடத்துகின்றன.அந்த இலாபத்தின் பங்குதாரர்களாக இங்கு ஆசிரியர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதனை தட்டிக் கேட்க வேண்டிய நடுத்தர ஏழை மக்களிடம் நுகர்வு கலாச்சாரம் நஞ்சாக கலந்து கிடக்கிறது.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைமுறை வாழ்க்கையில் புதுவிதமான, மிகவும் உபயோகமான கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது. அதில் வரும் பெரும்பாலான கண்டுபிடிப்பாளர்கள் மெத்தப் படிக்காதவர்கள், கல்வியை தொடர முடியாதவர்கள், ஏழ்மையானவர்கள்தான். பிச்சையெடுத்து டெல்லிக்குசென்று சனாதிபதி விருது வாங்கியவர்களும் அதில் உண்டு. இப்படி தேவையானவற்றை புறந்தள்ளி விட்டு மாணவர்களை இந்த நடைமுறையிலிருந்து விலக்கி,அவர்களின் கண்களைக் கட்டி நகர்த்திக் கொண்டு போகும் முதலாளித்துவ கல்வி நிறுவனங்களும் அதன் அடியாட்களாய் ஆசிரியர்களும் மாறிவருவது மிகவும் வேதனைக்குரியது. அரசு ஆசிரியர்கள் வட்டிக்கு விடுவதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்வதும், இதர வருமானத்திற்கான பகுதி நேர வேலை தேடவும், சொந்த காரியங்களை கவனிக்கவும், குடும்ப பிரச்சனைகளை தீர்க்கவுமே பொழுது கழிகிறது. இதில் நான் பார்த்த ஆசிரியர்கள் ஆம்வே போன்ற பொருட்களை விற்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
குறிப்பாக ஆசிரியர்கள் தங்கள் அறிவுத் தேடலை துரிதப்படுத்த வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பவர்களாக இருப்பதைக் காட்டிலும் வழி நடத்துபவர்களாக இருக்க வேண்டும். இந்த தலைப்பின் கீழ் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாவதே ஒவ்வொறு ஆசிரியரின் வெற்றி. ஆனால் அதற்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இது அவர்களை மட்டுமே தனிமைப்படுத்தும் நோக்கம் அல்ல அவர்களின் இன்றைய நிலைக்கு காரணமான முதலாளித்துவ கல்விமுறையை ஒழிக்கவும் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
மணல் கொள்ளையை எதிர்த்து கேள்வி கேட்டாலே, பரலோகம்தான் என்பது மணல் கொள்ளையர்களின் எழுதாத சட்டம். அதிலும் தாது மணல் கொள்ளை மேலும் பயங்கரமானது. இந்த சம்பவங்களை செய்திகளாக படித்து, படித்து இயற்கை கொள்ளையை தடுக்க ஆள் இல்லையே என்று மனம் ஏங்கும். பல நாள் ஏக்கப் பெருமூச்சுக்கு வெளிச்சம் கிடைத்ததுப் போல், கையில் பிரசுரம் கிடைத்தது.
….தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை, தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!
பல லட்சம் கோடி அடித்த வைகுண்டராஜனின் சொத்துக்களை பறிமுதல் செய்! பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கீடு!
23.11.13 தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்.
பொதுக் கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேணும் என்று முடிவு செய்தேன். சென்னையிலிருந்து 12 மணி நேர பயணம். முன் நாளே அதற்கு தயாராகி எழும்பூர் ரயில் நிலையம் சென்றேன். மாலை 5.30-க்கு இரயில். அங்கு என்னைப் போன்ற பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பல பெண் தோழர்கள், குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள் என்று குடும்பம், குடும்பமாக வந்திருந்தனர். அனைவரின் முகத்திலும், குடும்ப நிகழ்ச்சிக்குப் போகும் பரவசம்!
வந்திருந்த அனைவரும் சாதாரண உழைக்கும் மக்கள். படுக்கும் வசதியுடன் கூடியப் பெட்டியில் பயணம் செய்ய வசதியில்லை. சாதா பெட்டியில்தான் பயணம். எந்த வசதிகளும் இல்லை, பெட்டி முழுவதும் நாற்றம் வீசியது. குழந்தைகளின் பயணக் கனவு அங்கேயே காணாமல் போனது.
அப்போது ஒருவர், “தினமும் செல்பவர்களுக்கு பிரச்சனை இல்லை” என்று கூறினார். நானும், “பரவாயில்லேயே! அவர்களுக்கு வேறு ஏதாவது ஏற்பாடு இருக்கா” என்றேன். “இல்லை இல்லை! நாற்றம் பழகி விடும்” என்றார். சில நிமிடங்களிலேயே, தோழர் ஒருவருக்கு உடல் முழுவதும் வீக்கம். என்ன? என்று, நாங்கள் பார்க்கும்முன் எதிரில் பயணித்த வள்ளியூர் பாட்டி, “பூச்சிக்கடி அலர்ஜி” என்று கூறி, டாக்டரானார். அலர்ஜிக்கான மருந்து இல்லை.
எங்களைப் போன்றே கஷ்டப்பட்ட மற்ற பயணிகளுடனும் ஐக்கியமானோம். அனைவரும் ஒருவருக்கொருவர் வீட்டு விஷயங்களைப் பேசினோம். அதில், வள்ளியூர் பாட்டி கதை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ……சோகத்தை போக்க, அடுத்த பயணி, சிலோன் பெண்மணி பாட்டுப்பாடி குஷிப்படுத்தினார். இவர் தன் சிறுவயதிலேயே மதுரையில் குடியேறியுள்ளார். படித்த வசதியான குடும்பம். அவருக்கு, சிலோன் பிரச்சனைகளை பேச ஆர்வமில்லை.
…..தொடர்ந்து, அமைப்புப் பாடல்களைப் பாட, பெட்டியே அமைதியானது. பின் பெட்டியில் இருப்பவர்களும், பெண் போலிசும், கைதட்டி ரசித்தனர். பாட்டு தொடர்ந்தது, வழி நெடுக கூட்டம் நெருக்கித் தள்ளியது, கீழே உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் தவித்தோம். பாத்ரூம் நாற்றம், ”குப் குப்” என்று வீசியது. பூச்சிக் கடியால், அலர்ஜியான தோழருக்கு காய்ச்சல். இடையே, பால், காபி, டீ.
பெண் பயணி ஒருவர், எங்கள் பெட்டியில் எட்டிப் பார்த்து, “பாட்டெல்லாம் ரொம்ப நல்லாயிருந்தது, எல்லாப் பிரச்சனைகளை பத்தியும் பாடினீங்க” என்று கூறிச் சென்றார். பயணிக்கும் போது, தண்ணீரும் குடிக்க பயம்! காரணம் உங்களுக்கு புரியும். பாத்ரூமில் உள்ளே போகவே முடியாத நாற்றம், இருந்தும், பாத்ரூமின் பக்கத்தில் குழந்தைகளை கிடத்தி, உட்கார்ந்திருந்தனர் கூலி வேலை செய்யும் பெண்கள். அவர்கள், கவலை மறந்து எங்களுடன் இன்முகத்துடன் பேசினர்.
கொஞ்ச நேரத்தில் பக்கத்து பெட்டியில் ஒரே கூச்சல்! எட்டிப் பார்த்தால், இட பிரச்சனைக்காக ஒருவர் வயதுப் பெண்ணை அடித்து விட்டார். அந்தப் பெட்டியில் இருக்கும் பெண்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இங்கு பெட்டியிலிருந்த தோழர்கள் இருவரையும் சமாதானப் படுத்தி சகஜ நிலைக்கு திருப்பினர். அடுத்து, மதுரை மாமி எடுத்து வந்த ஆப்பிள் அனைவருக்கும் அமிர்தமானது. குழந்தைகளும் கொசுக்கடியில் தூங்கினர். பெட்டியில் ஃபேனும் சரியாக சுத்தல, லைட்டும் எரியல. இருட்டில் கைப்பேசி ஒலித்தது. அதில் வந்த செய்தி, அடுத்து இறங்க வேண்டுமாம்!
தூத்துக்குடி வந்து விட்டதா? என்று சந்தேகம்.
அடுத்த, இரயிலில் வரும் தோழர்களுடன் இணைந்து செல்வது திட்டம். அந்த வண்டி, செங்கல்பட்டில் 3 மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் மாட்டிக் கொண்டது. எனவே, கோவில்பட்டியில் இறங்கினோம். அவர்கள் வரும் வரை, சிறிது நேரம் ஸ்டேஷனில் தூங்கி, காலைக் கடனை முடித்து, உணவு உண்டு தயாரானோம். பின், வண்டியில் வந்தவர்களுடன் இணைந்து, தூத்துக்குடி அடைந்தோம்.
இரயில் நிலையத்திலிருந்து, 2 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக நடந்து, தங்கும் இடத்தை அடைந்தோம். பறை இசை வரவேற்றது. அனைவரும் ஆர்வத்துடன் உள்ளே சென்றால், மையக் கலைக் குழு, ”தனியார் மயமே கொள்ளை!” ”தனி, தனியா என்னத் சொல்ல” என்று பயிற்சியில் இருந்தனர். வயிற்றுப் பசியும் மறந்து, அமைதியாய் கண்டு களித்தோம். பூச்சிக் கடி அலர்ஜியால், காய்ச்சலுடன் இருந்தவரை தோழர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மதிய உணவுக்குப் பிறகு 5 மணி பொதுக் கூட்டத்திற்கு தயாரானோம். கூட்டம், கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமானது. உழைத்து வியர்த்த மணம் மாறாமல், அலை, அலையாய் வந்தனர் உள்ளூர் மீனவ மக்கள்.
தலைமை தோழர் வாஞ்சி நாதன், “தாது மணல் கொள்ளையன் வைகுண்ட ராஜனின் ஆரம்ப வரலாற்றை விளக்கினார். தொடர்ந்து, ஊர் கமிட்டி தலைவர்களின் பேச்சில், துணிவு, போராட்ட குணம், மணல் கொள்ளைக்கு எதிராக மக்களை தயார்படுத்துவது பற்றி துணிவுடன் விளக்கினர்.
தோழர் ராஜூவின் உரையில், வைகுண்டராஜன் மீது மக்களுக்கான பயம் எப்படி உருவாக்கப்பட்டது? அதை எப்படி உடைப்பது, என்பதை விளக்கினார்.
தோழர் மருதையனின் உரையில், மணல் கொள்ளை மட்டும் அல்ல, மற்ற இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்கும் கும்பல்களை அம்பலப்படுத்தினார். வைகுண்டராஜன்களின் ஆதிக்க திமிரையும், ஆளும் வர்க்கத்தின் கையாலாகாத்தனத்தையும் புரியும் வகையில் எடுத்துரைத்தார்.
மையக் கலைக் குழுவின் “திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜனின் அரசாங்கம்..” மக்களை சிந்திக்க வைத்தது. தொடர்ச்சியாக, கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுத்திய, கொள்ளையன் வி.வி. யின் அடியாட்கள் வாலை சுருட்டிக் கொண்டனர். இரவு 10 மணிக்கு கூட்டம் முடிந்தது.
இரவு உணவாக மீனவ மக்களின் வீட்டு உலையில் கொதித்த சோறு சுவையூட்டியது. தோழர்கள், எச்சரிக்கை உணர்வுடன் பெண்கள், குழந்தைகளை பாதுகாத்து மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். காலை 5 மணிக்கு தூத்துக்குடி இரயில் நிலையம். தோழர்கள் அனைவரும் ஒன்றானோம். ஒரேப் பெட்டியில் பயணப்பட்டோம். தோழர்களின் அனுபவங்களும், பாடல்களும் பயணத்தை நிறைவாக்கியது.
இந்த பொதுக் கூட்டத்துக்கு திட்டமிட்டு, 10 நாட்களுக்கு முன், தம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தை விட்டு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண் தோழர்கள் தங்களின் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டனர்.
பிரச்சாரத்திற்கு சென்ற பெண் தோழர்களை, கிராம மக்கள் தன் வீட்டு பெண் பிள்ளைகளைப் போல் பாவித்து, பாதுகாத்தது பற்றி கேட்டபோது எங்களுக்கு மெய் சிலிர்த்தது. தங்களை நம்பி வந்த பெண்களை, தோழர்களை உச்சி முகர்ந்து மெச்சினர் மீனவ மக்கள். மீன்வடை, மீன் அவியல், குண்டு அரிசிச் சோறு என்று உபசரித்தனர். “மக்கா, எங்களை நம்பி வந்துட்டீங்க, உங்களை பத்திரமா நாங்க பாத்துக்கணும்” என்று பொறுப்பேற்று , இரவில் தங்க பாதுகாப்பான இடம் என்று முடிவு செய்து கிறித்துவ ஆலயத்தில் தங்க வைத்துள்ளனர். இவர்களின் அன்புக்கு ஈடு ஏது! அவர்கள் வீட்டு பிள்ளைகளும், “அக்கா, அக்கா” என்று சுற்றி, சுற்றி வருவதும், பள்ளி முடிந்ததும், பிரச்சாரத்தில் பெண் தோழர்கள், எங்கு இருந்தாலும், அங்கு ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும் பிஞ்சுகளின் செயலை மறக்கமுடியுமா? என்றனர்.
மக்களின் பிரச்சனைகளை, மக்களோடு ஐக்கியமாகி முன்னெடுத்துச் செல்லும் தோழர்களின் தொய்வில்லாத
தொடர்ச்சியான போராட்டம் வீண் போகாது! என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சியானது.
செப்டம்பர் மாதம் திருச்சியில் நடந்த பாஜக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, “மத்திய அரசு பலவீனமாக இருப்பதால்தான், நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று பேசினார். மோடி பிரதமர் ஆனால், குடிமக்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என்பதற்கான ஆதாரங்கள் மோடியின் ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலத்திலிருந்து வெளியாகியிருக்கின்றன.
இஷ்ரத் ஜகான் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜி எல் சிங்கால் என்ற ஐபிஎஸ் அதிகாரி, சி.பி.ஐ-யிடம் கொடுத்த பென் டிரைவில் அடங்கிய தொலைபேசி உரையாடல்களில் இது அடங்கியிருக்கிறது.
குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, 2009 ஆகஸ்ட் மாதம் ஒரு பெண்ணை பின் தொடர்ந்து கண்காணிக்கும்படி சிங்காலுக்கு உத்தரவிடுகிறார். 2003 முதல் 2010 வரை மோடியின் நம்பிக்கைக்குரிய அமைச்சராக, மோடியின் மூன்று தேர்தல் பிரச்சாரங்களை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த அமித் ஷா, இப்போது சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு, குஜராத்துக்குள் போகக் கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் வெளியில் இருக்கிறார். கொலைக் குற்றம் சாட்டப்பட்டதால், குஜராத்துக்குள்தானே போக முடியாது, குஜராத்தில் செய்த வேலைகளை வேறு இடத்தில் தொடருங்கள் என்று அவரை உத்தர பிரதேசத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக அனுப்பியிருக்கிறது பாஜக.
சிங்கால்-அமித் ஷா தொலைபேசி உரையாடலை வெளியிட்ட கோப்ரா போஸ்ட்- குலேல் ஆகிய செய்தி இணைய தளங்கள் குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட அந்த ‘பயங்கரமான’ பெண் யார் என்ற விபரத்தை முதலில் வெளியிடவில்லை.
“எங்க அப்பன் குதிருக்குள் இல்லை” என்று சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தையின் அறிக்கையை மோடியின் சார்பில் பாஜக வெளியிட்டது. “என் பெண்ணின் பாதுகாப்புக்காக, நான்தான் முதலமைச்சர் மோடியிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதை ஒட்டித்தான், என் மகளை பின் தொடர்வதற்கு மோடி ஏற்பாடு செய்தார்” என்கிறார் பிராண்லால் சோனி என்ற அந்த தந்தை. அதாவது, அமித்ஷா – சிங்கால் உரையாடலில் குறிப்பிடப்படும் பெண் பிராண்லால் சோனியின் மகள், அந்த கண்காணிப்புக்கு உத்தரவிட்டது நரேந்திர மோடி என்பதை பாஜக உறுதி செய்தது.
சோனி குடும்பம்
மோடியோ இதை மறுக்கவில்லை, “இது மாதிரி விஷயங்களை கிளப்பி ஆதாயம் தேட முயற்சிக்காதீர்கள். வளர்ச்சியின் அடிப்படையில் போட்டி போட வாருங்கள்” என்று மட்டும் காங்கிரசுக்கு சவால் விடுத்தார். பாஜகவோ, “எங்கள் விவகாரங்களை இது போல வெளியில் விட்டால், காங்கிரஸ் கட்சியின் இது போன்ற நிழல் உள் விவகாரங்களை நாங்கள் அம்பலப்படுத்த நேரிடும், பார்த்து நடந்து கொள்ளுங்கள்” என்று காங்கிரசை எச்சரித்தது. “நாம இரண்டு பேருமே அயோக்கியனுங்கதான்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். என் கோல்மால்கள நீ வெளியில சொல்லாதே, நான் ஒன்னைப் பத்தின விஷயங்களை அடக்கி வாசிக்கிறேன்” என்று உடன்பாடுதான் அது.
பிராண்லால் சோனியின் மகள் கட்டிடக் கலை வடிவமைப்பாளர், பெங்களூருவில் வசிப்பவர். 2005-ம் ஆண்டு குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நடந்த குஜராத் அரசின் வருடாந்திர குளிர்கால திருவிழாவுக்கு அவர் அழைக்கப்பட்டிருக்கிறார். மாநில அரசுடன் எந்த அதிகாரபூர்வ உறவும் இல்லாத அவரது பெட்ரோல் செலவும், மொபைல் கட்டணமும் அரசு கணக்கில் எழுதப்பட்டிருக்கின்றன. அப்போது கட்ச் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா, ‘இந்த பெண்ணுக்கும் மோடிக்கும் இடையேயான தொடர்பு பற்றி தனக்கு தெரிந்திருந்ததால்ழி வாங்ககபடுவதாக’ இன்னொரு வழக்கில் குற்றம் சாட்டியிருக்கிறார்.
2010-ம் ஆண்டு காந்தி நகரில் உள்ள மாநில தலைமை செயலகத்தில் ஸ்மார்ட் கிரிட் திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்தம் இந்நிறுவனத்திற்கு கிடைக்கிறது. தலைமைச் செயலகத்தை நிர்வகிக்கும் பொது நிர்வாகத் துறை மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பைத் தொடர்ந்து பல முன்னணி கார்ப்பரேட்டுகளுடன் ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டது ஈகோபிலிரியம். 2012-13ம் ஆண்டில் அதன் மொத்த வருமானம் ரூ 1.36 கோடி, லாபம் ரூ 80 லட்சம். கடந்த மே மாதம் இன்ஃப்யூஸ் கேபிடல் மற்றும் உலக வங்கியின் பிரிவான இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவை $1.5 மில்லியன் (சுமார் ரூ 9 கோடி) ஈகோபிலிரியம் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றன.
இந்தப் பின்னணியில்தான் 2009-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் இயக்குநரான பெங்களூரை சேர்ந்த பெண்ணை மோடி பின் தொடர்ந்து உளவு பார்த்ததை பார்க்க வேண்டும். இது தொடர்பாக கோப்ராபோஸ்ட் மற்றும் குலேல் இணைய தளங்கள் வெளியிட்டிருக்கும் கட்டுரையின் மொழிபெயர்ப்பை கீழே தருகிறோம்.
தன்னை குஜராத் அரசு பின் தொடர்ந்ததைப் பற்றி விசாரணை நடத்த வேண்டாம் என்று தன் மகள் விரும்புவதாக பிராண்லால் சோனி தேசிய பெண்கள் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ‘சம்பந்தப்பட்ட ஆட்களே விட்டு விடச் சொல்லிட்டாங்க, இத்தோடு மேட்டரை முடித்துக் கொள்ளலாம்’ என்று மோடியும், பாஜகவும், அவரது ரசிகர் பட்டாளங்களும் கெஞ்சுகின்றன.
தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்திய ஆட்சிப்பணி அதிகாரி பிரதீப் ஷர்மா, நரேந்திர மோடி மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
மோடி பிரதமரானால் 100 கோடி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க எத்தனை கோடி உளவுத் துறை போலீசாரை நியமிப்பார் என்பதுதான் குழப்பமாக இருக்கிறது.
எளியவர்களையும் பலகீனமானவர்களையும் ஓட்டுச் சீட்டுகளின் மூலம் அதிகாரத்தைப் பிடித்தவர்கள் காக்க வேண்டும் என்பது ஜனநாயக அமைப்பில் முக்கிய நியதி. எனவே தான் இந்த அமைப்பு ஒரு நிர்பயாவைக் காக்கத் தவறும் போதோ, ஒரு ஜெஸ்ஸிகாவுக்கு அநீதி இழைக்கப்படும் போதோ, நித்தாரியின் குழந்தைகள் காப்பாற்றப்படாமலிருக்கும் போதோ நம்மிடையே இருக்க கூடிய கடும் சமரசவாதி கூட தெருவிலிறங்கிப் போராடுகிறார். அதனால் தான் தில்லி கூட்டு வல்லுறவைத் தொடர்ந்து பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களையும் உடனடி தண்டனைகளையும் கோருகிறோம். எனினும், இந்தக் கதையானது இவ்வமைப்பின் போதாமை குறித்ததோ அல்லது பாராமுகம் குறித்ததோ அல்ல. இது ஒரு மாநில அமைச்சர் தனது மாநில காவல்துறையின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை பின் தொடர்ந்து அவரைத் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தது பற்றிய கதை.
பின் தொடர்பவர்கள்
இஷ்ராத் ஜஹான் போலி மோதல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்திருக்கும் குஜராத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஜி.எல் சிங்கால் தன்னிடமிருந்த நூற்றுக்கணக்கான பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை சி.பி.ஐயிடம் ஒப்படைத்துள்ளார். இந்த உரையாடற் பதிவுகள் குஜராத் காவல் துறையின் மூன்று முக்கியமான பிரிவுகளான மாநில உளவுத் துறை, தீவிரவாத தடுப்ப்புப் பிரிவு மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவு ஆகியவை தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி திருமணமாகாத இளம் பெண் ஒருவரை பின் தொடர்ந்துள்ள விவரங்களை வெளிப்படுத்துகிறது. பெங்களூரைச் சேர்ந்த அப்பெண்ணின் பெற்றோர் குஜராத்தில் வசிக்கிறார்கள்.
குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் ‘சாஹிப்’ என்றழைக்கப்பட்ட அவரது எஜமானருக்காக இந்தக் கண்காணிப்பு மற்றும் தொலைபேசி ஒட்டுக்கேட்டல் நடவடிக்கைகள் மொத்தமும் 2009ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எந்தவிதமான சட்டப்பூர்வ அங்கீகாரமும் இன்றி வெறும் வாய்மொழி உத்தரவுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சட்டவிரோத உளவுபார்க்கும் வேலை அமித்ஷாவின் உத்தரவின் பேரில் 2009 ஆகஸ்டு மாதம் துவங்கி பல வாரங்கள் நடந்ததாக அதில் முக்கியமாக ஈடுபட்டிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சிங்கால் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள 267 ஒலிப்பதிவுகளில் அமித்ஷாவுக்கும் அந்த சமயத்தில் தீவிரவாத தடுப்புப் பிரிவின் எஸ்.பியாக பொறுப்பு வகித்து வந்த சிங்காலுக்கும் இடையிலான உரையாடல்களே பிரதானமாக இடம் பெற்றுள்ளன. அரை டஜனுக்கும் மேலான உரையாடல்களில் அமித்ஷா தனது ‘சாஹிப்புக்கு’ அந்தப் பெண்ணின் மேல் விசேஷ அக்கறை இருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார். அந்தப் பெண்ணைப் பற்றிய உளவுத் தகவல்களை நிமிடத்திற்கு நிமிடம் அமித் ஷா தனது சாஹிப்புக்கு தெரிவித்து வந்திருக்கிறார் என்பதை அந்த உரையாடல்களை அவதானித்தால் புரிந்து கொள்ள முடிகிறது. நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரியவரான அமித்ஷா, குஜராத்தின் உள்துறை அமைச்சராக 2003-லிருந்து 2010 வரை பொறுப்பு வகித்துள்ளார். அமித்ஷாவுக்கு முன் தனது முதலமைச்சர் பொறுப்போடு சேர்த்து உள் துறையை மோடியே 2001-ம் ஆண்டிலிருந்து கவனித்து வந்திருக்கிறார். 2010-ம் ஆண்டு சோராபுத்தீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அமித்ஷா, தற்போது பிணையில் வெளியே வந்து பாரதிய ஜனதாவின் உ.பி மாநில தேர்தல் பொறுப்பாளராக பதவி வகிக்கிறார்.
புலனாய்வுச் செய்தித் தளமான குலேல் மற்றும் கோப்ராபோஸ்ட்டிடம் ஒட்டு மொத்த உரையாடல் பதிவுகளும் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு சி.பி.ஐயிடம் கடந்த ஏப்ரலில் இருந்து ஜூன் மாதம் வரையில் சிங்கால் அளித்துள்ள மூன்று வாக்குமூலங்களின் நகல்களும் கிடைத்துள்ளன. சிங்காலிடமிருந்து தொலைபேசி உரையாடல் பதிவுகளைப் பெற்றுக் கொண்ட சி.பி.ஐ, அதன் பின் தயாரித்துள்ள 10 பக்க விசாரணை அறிக்கையும் எமக்குக் கிடைத்துள்ளன. அனைத்து உரையாடல்களும் அமித்ஷாவுக்கு அந்த சமயத்தில் நெருக்கமாக இருந்த சிங்காலால் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், இஷ்ரத் ஜகான் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட பின்னரே அமித்ஷா இதைப் பற்றி வாய் திறந்து சி.பி.ஐயிடம் ஒத்துழைக்கத் துவங்கியிருக்கிறார்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு நாங்கள் அவரது பெயரையோ தற்போதைய வெளிப்படுத்தப் போவதில்லை. எனினும், இந்தச் சம்பவங்களை விவரிப்பதன் பொருட்டு அவரது பெயரை நாம் ‘மாதுரி’ என்று வைத்துக் கொள்வோம்.
மாதுரியுடன் குஜராத்தைச் சேர்ந்த பிரதீப் ஷர்மா என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சட்டவிரோத கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
”2009ம் ஆண்டின் இறுதியில், நான் தீவிரவாத தடுப்புப் பிரிவின் எஸ்.பியாக நியமிக்கப்பட்டிருந்த போது, திரு அமித்ஷா என்னிடம் பவ்நகர் முனிசிபல் கமிஷனராக இருந்த பிரதீப் ஷர்மாவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்குமாறு பலமுறை உத்தரவிட்டிருக்கிறார். மேலும், மாதுரி என்கிற இளம் பெண்ணின் மேலும் ஒரு கண் வைத்திருக்குமாறு கேட்டிருந்தார். அமித்ஷா கேட்டுக் கொண்டபடி குற்றப்பிரிவு போலீசார் சிலரை (அப்போது தீவிரவாத தடுப்புப் பிரிவில் ஆள் பற்றாக்குறை நிலவியது) அந்தப் பணியில் ஈடுபடுத்தினேன்” சி.பி.ஐயிடம் 2013ம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று சிங்கால் அளித்திருக்கும் வாக்குமூலத்திலிருந்த சில வரிகள் இவை. இதன் நகல் ஒன்று நம்மிடம் கிடைத்துள்ளது. 2013 மே மாத இறுதி வாரத்தில் சிங்கால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2013 ஜூன் மாதம் 9ம் தேதி தன் வசமிருந்த தொலைபேசி உரையாடல் பதிவுகளை சிங்கால் சி.பி.ஐயிடம் ஒப்படைத்துள்ளார். “17.4.2013 அன்று நான் அளித்திருந்த வாக்குமூலத்தின் தொடர்ச்சியாக, நான் இன்று பின்வருவனவற்றை உங்களிடம் ஒப்படைத்துள்ளதாக அறிவிக்கிறேன் : 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் (04.08.2009 துவங்கி 10.09.2009 முடிய) எனக்கும் திரு அமித்ஷாவுக்கும் இடையேயான உரையாடல்களைப் பிரதானமாகவும் மற்றும் எனக்கும் திரு ஏ.கே ஷர்மாவுக்குமிடையிலான உரையாடல்கள் சிலவும் மேலும் எனக்கும் திரு வைஷ்ணவ் (டெபுடி எஸ்.பி சி.ஐ.டி உளவுப்பிரிவு) அவர்களுக்குமிடையேயான உரையாடல்கள் சிலவும் மேலும் எனக்கும் திரு ராஜேந்திர அசாரி (பாவ்நகர் எஸ்.பி) அவர்களுக்கிடையிலான உரையாடல்கள் சிலவும் கொண்ட, மொத்தம் 267 உரையாடல் பதிவுகள் சேமிக்கப்பட்ட பென் டிரைவை ஒப்படைக்கிறேன். இந்த உரையாடல்கள் மாதுரி என்கிற இளம் பெண்ணையும் திரு பிரதீப் ஷர்மாவையும் வேவு பார்த்தல் தொடர்பானது”
ஜூலை 9 2013ல், சி.பி.ஐ தயாரித்துள்ள விசாரணை அறிக்கையின் 8-ம் பக்கத்தின் இறுதிப் பத்தியில் காணப்படுவது : “மேற்கண்ட கோப்புகளில் தனக்கும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த திரு அமித்ஷாவுக்கும் இடையே 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் அநீதியான முறையில் சட்ட்த்திற்கப்பாற்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நடந்த உரையாடல் பதிவுகள் இடம் பெற்றுள்ளதாக திரு ஜி.எல். சிங்கால் தெரிவித்துள்ளார்” சிங்காலின் வாக்குமூலங்களும் தொலை பேசி உரையாடல் பதிவுகளும் தற்போது இஷ்ராத் ஜஹான் போலி மோதல் கொலை வழக்கின் ஆவணங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட அந்த ஒலிப்பதிவுகள் சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேல் குஜராத் மாநில போலீசார் தமது வரம்பற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மாதுரியின் ஒவ்வொரு தனிப்பட்ட அசைவுகளையும், ஒவ்வொரு தனிப்பட்ட உரையாடல்களையும் தினசரி நடமாட்டங்களையும் வேவு பார்த்துள்ளதை உறுதி செய்கின்றன. இந்த உளவு நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்றும் வாய்மொழி உத்தரவுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன என்றும் சிங்கால் சி.பி.ஐயிடம் தெரிவித்துள்ளார். ஷாப்பிங் மால்கள், உணவு விடுதிகள், ஐஸ்க்ரீம் பார்லர், உடற்பயிற்சிக் கூடம், திரையரங்கம், ஓட்டல்கள், விமான நிலையம் என்று மாதுரி சென்ற அனைத்து இடங்களிலும் விடாமல் பின் தொடரப்பட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரைச் சந்திக்கச் சென்ற போதும் கூட வேவு பார்க்கப்பட்டுள்ளார். அவர் அகமதாபாதிலிருந்து விமானப் பயணம் மேற்கொண்ட சந்தர்ப்பங்களில் கூட அவரது நடவடிக்கைகளை நெருக்கமாக கண்காணிக்க விமானத்திலேயே போலீசு ஒற்றர்களை அனுப்பியுள்ளனர். அவரைத் தனிப்பட்ட முறையில் சந்திப்பவர்களின் விவரங்களைத் தோண்டித் துருவியிருக்கிறார்கள்.
மாதுரி சந்திக்கும் ஆண்கள் பற்றிய தகவல்களை அமித்ஷா அக்கறையுடன் விசாரித்ததோடு, அந்த நபருடன் அகமதாபாத் ஓட்டலில் அவர் தனியே தங்கியிருக்கிறாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். மாதுரியின் தொலைபேசி மட்டுமின்றி அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தகவலும் நேரலையாக அமித்ஷாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது; தான் அதே தகவல்களை தனது ‘சாஹிபுக்கு’ தெரியப்படுத்திக் கொண்டிருப்ப்பதாக அமித்ஷா தெரிவிக்கிறார். இந்த உரையாடல்களைக் கேட்கும் போது அமித்ஷா குறிப்பிடும் ‘சாஹிப்’ யார் என்பதைக் குறித்து நமக்கு எந்த சந்தேகமும் எழவில்லை.
குஜராத் மாநில காவல்துறையின் உயரதிகாரிகள் பலரையும் தனிப்பட்ட முறையில் ஈடுபத்தும் அளவுக்கு ஒரு பெண்ணின் தனிப்பட்ட அசைவுகளை வேவு பார்க்கும் இந்த உளவு வேலை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. தீவிரவாத தடுப்புப் பிரிவின் எஸ்.பியாக இருந்த சிங்கால் தவிர்த்து, உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த ஏ.கே ஷர்மா, சி.ஐ.டியின் துணை எஸ்.பியான டி.பி வைஷ்ணவ் மற்றும் குற்றப் பிரிவின் துணை கமிஷனர் அபய் சுதாசாமா உள்ளிட்ட முக்கியமான உயரதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசின் இணை கமிஷனராக ஷர்மா பொறுப்பில் இருக்கிறார். சோராபுத்தீன் போலி மோதல் கொலை வழக்கில் சுதாசாமா கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்; வைஷ்ணவ் ஓய்வு பெற்றுள்ளார்.
உளவு பர்க்கும் அமித் ஷா
சி.பிஐ வசமுள்ள தொலைபேசி உரையாடல் பதிவுகளில் சிங்காலுக்கும் அமித்ஷாவுக்குமான உரையாடல்களே பிரதானமாக இடம்பெற்றுள்ளன. ஒரு சில உரையாடல்கள் சிங்காலுக்கும் மற்ற போலீஸ் உயரதிகாரிகளான ஷர்மா, வைஷ்ணவ் மற்றும் அப்போதைய பாவ்நகர் எஸ்.பி ராஜேந்திரா அஸாரிக்கும் இடையில் நடைபெற்றுள்ளன. இவையனைத்தும் ஆகஸ்ட் 4, 2009 மற்றும் செப்டம்பர் 6, 2009-க்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்காலால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த உரையாடலின் பல இடங்களில், சிங்காலின் ஆட்கள் சரியாக வேலை பார்க்கவில்லையென்றும், ‘சாஹேப்’ தனது சொந்த முறையில் நியமித்துள்ள தனியார் உளவாளிகளிடமிருந்து சீக்கிரமாக தகவல்கள் சென்று விடுகின்றன என்றும், அவரது தனியார் உளவு மற்றும் தகவல் வலைப்பின்னல் போலீசை விட வேகமாக இருப்பதாகவும் அமித்ஷா சிங்காலிடம் கடிந்து கொள்கிறார்.
உதாரணமாக, ஆகஸ்டு 9 அன்று அமித்ஷா அலறிப் புடைத்துக் கொண்டு சிங்காலை அழைக்கிறார், “ நான் சாஹிப்பிடம் பேசினேன்; அவர்கள் இரண்டு முறை வெளியே சென்றிருக்கிறார்கள் என்ற தகவல் எவர் மூலமாகவோ அவருக்குக் கிடைத்திருக்கிறது. நமது ஆட்கள் சரியாக கண்காணிக்கவில்லை என்று நினைக்கிறேன். இவர்கள் இன்னும் அங்கேயே இருக்கிறார்கள். அவர்கள் ஷாப்பிங் போய் விட்டு அவளைப் பார்க்க வந்த பையனுடன் வெளியே போயிருக்கிறார்கள்”
சிறிது நேரத்தில் ஷா மீண்டும் சிங்காலை அழைக்கிறார், “இன்று அவர்கள் ஒரு ஓட்டலுக்கு சாப்பிடப் போகிறார்கள். சாஹிப்புக்கு இது பற்றி ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவள் வெளியாருடன் செல்வதால் கவனமாக கண்காணிக்கணும். அந்தப் பையன் தான் இவளைப் பார்க்க வருகிறான். கவனமா இருங்க. விஷயம் என்னன்னா, சாஹிப்புக்கு எல்லா தகவலும் வந்திடுது. நாம் எங்காவது ஓட்டை விட்டோம்னா அவர்ட்ட மாட்டிக்குவோம்”
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் ஷர்மாவின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு அவர் மாதுரியைச் சந்திக்கிறாரா என்பதையும் கண்காணிக்கச் சொல்லி அமித்ஷா உத்தரவிட்டுள்ளதை தொலைபேசி உரையாடல்கள் உணர்த்துகின்றன – இதை சி.பி.ஐயிடம் சிங்கால் ஒப்புக் கொண்டிருக்கிறார். இவ்வாறான உரையாடல் பதிவுகள் இருப்பதை அறியாத பிரதீப் ஷர்மா, மே 2011-ல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சுயேச்சையான ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். குஜராத் அரசு தன்னை போலியான ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்க வைத்துள்ளதாகவும் அதற்கு ஒரு இளம்பெண்ணோடு முதலமைச்சர் மோடிக்கு இருக்கும் தொடர்பு தான் காரணமென்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அமித்ஷாவின் உத்தரவின் பேரில் சிங்காலின் ஆட்களால் கண்காணிக்கப்பட்ட பெண்ணின் பெயரும் ஷர்மாவின் உச்சநீதிமன்ற மனுவில் சொல்லப்பட்டுள்ள பெண்ணின் பெயரும் ஒன்று தான் என்பது தற்போது கிடைத்துள்ள உரையாடல் பதிவுகளின் மூலம் உறுதிப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் உரையாடலின் பல இடங்களில் அமித்ஷாவும் சிங்காலும் அந்தப் பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர்.
உளவு பார்க்கும் மோடி
இந்தப் பெயர்களின் ஒற்றுமை தற்செயல்தானா அல்லது நாம் காண்பதற்கும் அப்பால் வேறு ஏதேனும் உள்ளதா?
மாதுரியைச் சந்திக்கும் நபரை சிறையில் தள்ளுமாறு சிங்காலிடம் அமித்ஷா உத்தரவிடுவது குறிப்பிட்ட உரையாடல் பதிவொன்றில் இடம் பெற்றுள்ளது. ஷா அந்த மனிதரைச் சிறையில் வைக்கச் சொல்லும் கால அளவு தற்போது போலி மோதல் கொலைகளுக்காக 2007-ல் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.ஐ.ஜி வன்சாரா சிறையில் கழித்த காலத்தை விட அதிகமானது. ஷாவுக்கும் சிங்காலுக்கும் இந்த உரையாடல் நடந்த கால கட்ட்த்திலேயே வன்சாரா இரண்டு வருடங்களைச் சிறையில் கழித்திருந்தார். இதில் குறிப்பிடத் தக்க்கது என்னவென்றால், இந்த உளவு நடவடிக்கைகள் நடந்ததற்கு மூன்று மாதங்களுக்குள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் 2010-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியின் அகால நேரத்தில் ப்ரதீப் ஷர்மா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தற்போது அம்பலமாகியிருக்கும் சிங்கால்-ஷா உரையாடல் பதிவுகள் பல அசௌகரியமான கேள்விகளை எழுப்புகின்றன. மாதுரியைக் கண்காணிக்க வேண்டிய தேவை யாருக்கு இருந்தது, ஏன் இருந்தது? ஏன் மாதுரியும் ஷர்மாவும் ஒரே நேரத்தில் வேவு பார்க்கப்பட்டார்கள்? இந்த உளவு நடவடிக்கைகள் நடந்து மூன்றே மாதங்களில் பிரதீப் ஷர்மா ஊழல் புகாரின் கீழ் கைது செய்யப்பட்டது வெறும் தற்செயல் தானா?
மக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க வேண்டிய தீவிரவாத தடுப்பு பிரிவு, உளவுப் பிரிவு மற்றும் குற்றப் பிரிவு போலீசார், சட்டம் ஒழுங்கிற்கு எந்த குந்தகமும் விளைவிக்காத – எந்த வழக்கிலும் தேடப்படாத இளம் பெண் ஒருவரை வேவு பார்க்க வேண்டிய காரணம் என்ன? தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் சட்ட விரோதமான முறையில் அத்துமீறி நுழையும் நடவடிக்கையை அதில் ஈடுபட்ட அதிகாரிகள் ஒருவரும் ஆட்சேபிக்கவில்லை. ஒட்டு மொத்த உளவு நடவடிக்கையும் சட்ட விரோதமானது தான் என்று சிங்கால் சி.பி.ஐயிடம் ஒப்புக் கொண்டிருப்பது கவனத்திற்குரியது. ஷாவின் ’சாஹேப்’ பற்றிய விளக்கங்களே சிங்கால் போன்ற உயரதிகாரிகள் மந்தைகளைப் போல் பின் தொடரப் போதுமானது. எனில், யார் அந்த சாஹேப்? அவரது உள்நோக்கம் என்னவென்பதே கேள்வி.
பல்வேறு முக்கியமான வழக்குகளில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்கள் அத்துமீறப்பட்டிருப்பதை இந்த ஒலிப் பதிவுகள் உணர்த்துகின்றன. எந்த விதமான சட்டப்பூர்வ உத்தரவுகளோ எழுத்துப்பூர்வ வேண்டுகோளோ இன்றி குஜராத் போலீசுக்கு உதவியிருக்கும் தொலைபேசி நிறுவனங்களும் சந்தேக வளையத்தில் வருகிறார்கள்.
தனது அறிக்கையில், ஷாவைப் போன்ற அரசியல்வாதிகளைக் குற்றம் சாட்டும் சிங்கால், தனது குற்றங்களையும் ஒப்புக் கொள்கிறார். இஷ்ராத் ஜகான் மற்றும் மூவரிடம் ஆயுதங்கள் இருப்பதற்கு ஏற்பாடு செய்ததில் தனக்குள்ள பங்கை ஒப்புக் கொள்கிறார். இஷ்ராத் ஜகான் கொலையில் தமது பங்கு மறைக்கப்படும் என்கிற உறுதியை “சஃபேதும்” ”காலியும்” வழங்கியுள்ளதாக வன்சாரா தன்னிடம் தெரிவித்ததாக சொல்கிறார் சிங்கால். சஃபேது மற்றும் காலி என்கிற புனைப்பெயர்கள் முறையே மோடி மற்றும் அமித்ஷாவைக் குறிப்பதற்காக வன்சாரா பயன்படுத்தியுள்ளார் என்கிற குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட வேண்டியதாகும்.
சுமார் 70 நிமிடங்களுக்கு ஓடக்கூடிய உரையாடல் ஒலிப்பதிவு ஒன்றையும் சி.பி.ஐயிடம் கையளித்துள்ளார் சிங்கால். குஜராத் மாநில அட்வகேட் ஜெனரல் கமல் திரிவேதியும் மோடியின் அமைச்சரவையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களான ப்ரதாப்சிங் ஜடேஜா(சட்டத்துறை அமைச்சர்) மற்றும் பிரஃபுல் பட்டேல் (உள்துறை) ஆகியோர் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னால் கேபினெட் அமைச்சர் பூபேந்தர் சுதாசாமாவும் கலந்து கொண்ட்டிருக்கிறார். மேற்படி கூட்டத்தில் இஷ்ராத் ஜஹான் வழக்கில் மாட்டிக் கொண்டிருக்கும் சிங்காலையும் அவரது சகாக்களையும் தப்புவிக்க மாநில அரசின் சார்பில் எல்லாவித சட்ட ரீதியிலான உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், குஜராத் மாநில உயரதிகாரிகளான ஜி.சி முர்மு (முதல்வரின் செயலாளர்), பி.பி பாண்டே (இஷ்ராத் வழக்கில் முக்கிய அக்யூஸ்டான இவர் போலீசின் துணை டைரக்டர் ஜெனரலாக பதவி வகித்தவர்), ஏ.கே ஷர்மா (அகமதாபாத் இணை கமிஷனர்) மற்றும் சிங்கால் ஆகியோருக்கு விலையுயர்ந்த என்க்ரிப்டட் செல்பேசிகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான இந்த தொலைபேசி லைனில் பல்வேறு என்கவுண்டர் வழக்குகளைக் கையாள்வது பற்றிய விவாதங்கள் நடந்துள்ளன.
சோராப்புத்தீன் போலி மோதல் கொலை வழக்கில் ஷாவுக்கு எதிரான சாட்சிகள் இருவரை மிரட்ட தான் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்தும் சிங்கால் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகரும் முன்னால் அமைச்சருமான பூபேந்தர்சிங் சுதாசாமாவின் முன்னிலையிலேயே அவ்விரு சாட்சிகளும் மிரட்டப்பட்டுள்ளனர். “திரு பூபேந்தர்சிங் சுதாசாமா அவர்கள் முதல்வர் உங்கள் இருவரையும் பிறழ் சாட்சிகளாக மாற வேண்டுமென்றும் அதற்கு பதிலாக தேவைப்படும் பாதுகாப்பை தானே தருவதாகவும் சொல்லியிருக்கிறார்” என்று சி.பி.ஐயிடம் 2013ம் ஆண்டு ஏப்ரல் 13ம் நாள் சிங்கால் அளித்த வாக்குமூலத்தில் பதிவாகியுள்ளது.
ஷா மற்றும் சுதாசாமா போன்றோர் தொடர்ச்சியாக தங்களது செயல்களுக்கு மோடியின் ஆசீர்வாதம் உண்டு என்பதை திரும்பத் திரும்ப உறுயளித்ததன் விளைவாக சிங்கால் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். ”நான் சட்டத்தின் நடவடிக்கைகளை பாதிக்கக் கூடிய சில நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வற்புறுத்தப்பட்டேன் என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன். சட்டவிரோதமான, அறமற்ற இந்த செயல்களைச் செய்ய நான் மறுக்கவில்லை. ஏனென்றால் இந்த விவகாரத்தில் நான் கடும் அழுத்தத்தில் இருந்தேன். மேலும் நான் மற்றும் எனது சக அதிகாரிகள், எமது செயல்களின் விளைவுகளில் இருந்து அமித்ஷாவாலும் முதல்வராலும் காப்பாற்றப்படுவோம் என்று அமித்ஷாவால் உறுதியாக நம்ப வைக்கப்பட்டோம்” என்று சி.பி.ஐயிடம் குறிப்பிட்டுள்ளார் சிங்கால். இந்த சமயத்தில் குலேல் மற்றும் கோப்ராபோஸ்டிடம் இந்த குற்றச்சாட்டுகளை சுயேச்சையான முறையில் உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இல்லை.
சிங்காலின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் நிற்குமோ நிற்காதோ – என்றாலும் இவை மோடி அரசின் குலைநடுங்க வைக்கும் செயல்பாட்டு முறைகளை வெளிப்படுத்துகிறது. மோடியின் பெயரால் அமித்ஷா இடும் கட்டளைகளை நிறைவேற்றவும் எல்லா வித சட்டவிரோதச் செயல்களைச் செய்யவும் சிங்கால் போன்ற அதிகாரிகள் தயாராகவே இருக்கிறார்கள். இவையெல்லாம் மோடிக்குத் தெரியாமலா நடந்திருக்கும்? மாதுரி மட்டும் தான் சட்டவிரோத இரகசியக் கண்காணிப்புக்கு உள்ளானவரா? இன்னும் அரசியல் எதிரிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சாட்சிகள், காவல்துறை அதிகாரிகள் என்று எத்தனை பேர் இது போன்ற கண்காணிப்புக்கு உட்பட்டிருந்தனர்? ஷாவுடனான உரையாடலை ஒருமாத காலத்திற்கு மட்டும் சிங்கால் பதிவு செய்திருப்பது ஏன்? அந்தப் பெண்ணைப் பற்றிக் கிடைத்த தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன?
இது உள்வட்டங்களில் இருந்து தான் வெளிப்பட்டாக வேண்டும். சிங்கால் அதை ஒரு சிறிதளவுக்கு உடைத்திருக்கிறார். ஒருவேளை பல ஆண்டுகளாக குஜராத்தில் நடந்து வரும் சட்டவிரோத உளவு நடவடிக்கைகள் முழுவதுமாக வெளிப்படாமலே கூட போகலாம்.
எனக்கு தமிழை எழுதப் படிக்கக் கற்றுத் தந்த பூரணம் டீச்சரை என்னால் மறக்க முடியாது. எப்போதுமே அவரது வகுப்பில் தூங்கி வழிந்த காரணத்தால் என்னால் ஆனா ஆவன்னா எழுதுவதில் ஏ என்ற எழுத்தைக் கூட தாண்ட முடியவில்லை. எங்கள் கிராமத்தில் துவக்கப்பள்ளி மட்டும்தான் இருந்தது.
கணக்கை முறைப்படி செய்யவும், விரும்பும்படியும் செய்தவர் எனது 2-ம் மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கு ஆசிரியராக வந்த கள்ளவாண்டன் ஆசிரியர். அப்போதுதான் அவருக்கு அரசு வேலை கிடைத்திருந்தது. மிகுந்த வறுமையான குடும்ப சூழல், சாதிரீதியாக ஆதரவற்ற கிராமப்புறம் என்ற நிலைமையில் வேலைக்கு வந்த அவருக்கு எங்கள் கிராமத்திலேயே ஒரு பெண்ணும் அமைந்து குடும்பமாகி இப்போது ஓய்வும் பெற்று எங்களூர்க்காரராகவே வாழ்ந்து வருகிறார். கணித வகுப்பு அப்போது என்னை மிகவும் அவமானப்படுத்துவது போல தோன்றினாலும், எப்படி என்னை அதன் ரசனைக்குள் அவர் இழுத்துச் சென்றார் என்பதுதான் என்னால் இப்போது யோசித்துப் பார்த்தாலும் சொல்லவே முடியவில்லை. ஊரில் யாரையும் மதிக்காத எனக்கு இப்போதும் அவரைப் பார்த்தால் மட்டும்தான் மரியாதை செலுத்த தோன்றுகிறது. மற்ற ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்விக்காக பிற தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகையில் அவரோ தான் வேலை பார்த்த அரசு உதவிபெறும் பள்ளியிலேயே தனது பிள்ளைகளை படிக்க வைத்தார்.
பூரணம் டீச்சர் எனக்கு தமிழை கற்றத்தர முடியாத போதிலும் எண்களை நூறு வரை எழுத கற்றுத் தந்திருந்தார். அவர்கள் அப்போதே ஐம்பது வயதை கடந்திருந்தார்கள். ஊரில் பல மாணவர்களின் தந்தை, தாய்மார்களும் கூட அவரிடம் படித்தவர்கள்தான். எதாவது மாணவனை ஆசிரியர்கள் அடித்து விட்டால் அவனது தந்தையும் தாயும் பள்ளிக்கு குறிப்பாக அடித்த ஆசிரியருக்கு எதிராக சண்டைக்கு வந்து விடுவார்கள். எல்லா வகுப்புகளும் ஸ்தம்பித்து விடும். அது போன்ற தருணங்களில் அந்த ஆசிரியர்கள் நாடுவது பூரணம் டீச்சரைத்தான். பூரணம் டீச்சர் வந்தவுடன் குடிகார தந்தைகள் கூட பெட்டிப் பாம்பாக பம்முவார்கள். ‘’நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும் டீச்சர். அந்த டீச்சருக்கு தான் பேசத் தெரியல’’ என்று முணுமுணுத்தபடி பூரணம் டீச்சர் சொல்லும் எதனையும் கேட்டுக் கொண்டு அவர்கள் செல்வதை பார்க்கையில், அதுவும் ஊரறிந்த சண்டியர்கள் தலை கவிழ்ந்து போவதைப் பார்க்கையில் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில் அவர்கள் இந்த வகுப்பறை முறை எவ்வளவு துன்பமாக இருந்து அவர்களை பள்ளியில் இருந்து துரத்தி இருந்தாலும் ஒன்றாம் வகுப்புக்கு வந்து இவரிடம் தானே படித்திருப்பார்கள். அப்போதெல்லாம் படித்து முடித்த பிறகு ராணுவத்தில் சேர விரும்புவதாக சொல்லிக் கொண்டிருந்த எனக்கு ஒன்றாம் வகுப்புக்கு ஆசிரியராக வேண்டும் என்ற ஆசை இதுபோன்ற தருணங்களில் தான் தோன்றியது.
அடுத்து பள்ளி தாளாளரின் மகனை திருமணம் செய்து கொண்டு எங்கள் பள்ளிக்கு 3-5 வகுப்புகளை எடுக்க வந்தவர் ஜாய்ஸ் டீச்சர். வரும் ஏப்ரலில்தான் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். ஆங்கிலத்தை படிக்க கற்றுத் தந்தார் என்பதுடன் படிப்புக்கு வெளியே நடனம், பாட்டு, நாடகம் என்ற உலகத்தை எங்களுக்கு திறந்து விட்டவர் என்ற முறையில் நான் இவர்களை மறக்க முடியாது. அப்போதே மாதம் பத்து ரூபாய் கட்டி டியூசனுக்காக அவரது வீட்டுக்கு செல்வோம். அங்கு போயும் கதை சொல்வது, நடனம் ஆடுவது என்று பொழுது போக்குவோம். அவர் இங்கு வேலைக்கு வருவதற்கு முன்னர் வரை தாளாளர் வீட்டு எடுபிடி வேலைகளை மாணவர்கள் தான் செய்து வந்தார்கள். ஜாய்ஸ் டீச்சர் வந்த பிறகுதான் அந்த நடைமுறை மாறியது. இதையெல்லாம் கேள்விப்பட்ட எங்களது முந்தைய தலைமுறை ஆச்சரியமாக வாய்பிளந்து ‘கலி முத்திருச்சி’ என்று தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். ஜாய்ஸ் டீச்சர் யாரையும் அடிக்க மாட்டார்கள். திட்டக் கூட மாட்டார்கள்.
ஜாய்ஸ் டீச்சர் பல நல்ல படிக்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்தார் என்பதுதான் அவர்களுடைய ஆகச் சிறந்த பணி எனக் கருதுகிறேன். அதுவரை மக்கு, முட்டாள் என எல்லோரும் நம்பிக் கொண்டிருந்த பலரையும், ‘அவனுக்கு மேத்ஸ் வரும், இங்கிலீஷ் வராது’ அல்லது ‘நல்லா பாடுவான், படிப்பில ஆவரேஜ்’ என்றளவுக்கு அனைவரையும் பேசுமாறு மாற்றினார். கடைசி பெஞ்ச் மாணவர்களை கூட வகுப்பறைக்கு விரும்பி வர வைப்பதற்காக மதிய உணவுக்குப் பிறகு கலைநிகழ்ச்சிகளை நடத்துவார். அதற்கு நல்ல பலன் இருந்தது.
அடுத்து ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அருகில் உள்ள நகரத்தில் இருக்கும் மிகப்பழைய ஆனால் பாரம்பரிய புகழ்பெற்ற பள்ளிக்கு படிக்க சென்றேன். என்னை கதை சொல்ல பழக்கிய ஆல்பிரட் வாத்தியார், வரலாற்றில் மிகுந்த ஈடுபாட்டை உருவாக்கிய விளாத்திகுளம் செல்வராஜ் வாத்தியார், வரலாற்று பாடத்தை எடுக்கும்போது நெப்போலியனாகவே நடித்து, பேசிக் காட்டி பாடம் நடத்திய சிசல்ராஜ் வாத்தியார் போன்றவர்களை இங்குதான் சந்தித்தேன். சிசல்ராஜ் எனக்கு காந்தியின் சிந்தனைகளை படிப்புக்கு வெளியே அறிமுகம் செய்து வைத்ததுடன், டால்ஸ்டாயை அறிமுகம் செய்து வைத்தார். வரலாற்றுத் துறையில் நான் சிசல்ராஜின் மாணவன் என்று சொல்வதற்காக உண்மையில் பெருமைப்படுகிறேன்.
என்னை தனியாக முன்னேற்ற முயற்சித்தவர்கள் சில ஆசிரியர்களும் இங்கு உண்டு. அவர்களில் ஒருவர் முருகன், இன்னொருவர் பெயர் ஞாபகம் இல்லை, ஆனால் இருவர் முகமும் எனக்கு நன்றாக ஞாபகத்தில் உள்ளது (இதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்). இவர்கள் அப்போது சி.பி.எம் சார்பு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் துளிர் பத்திரிக்கை மூலமாக அறிமுகம் ஆகி, கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் என பல விசயங்களுக்கு என்னை தயார்படுத்தினார்கள். தயார்படுத்துவது என்றால் வழிகாட்டுவதும், ஊக்கப்படுத்துவதும் தான். இருவருமே தமிழாசிரியர்கள்.
அடுத்து பத்தாம் வகுப்பில் கணக்கு பாடம் எடுத்த குலையன்கரிசல் செல்வராஜ் வாத்தியார். எல்லோரையும் திட்டும் போதும் அவரது வாயிலிருந்து கெட்ட கெட்ட வார்த்தையாக வரும். ஆனால் பிரம்பையே தொடாத கணக்காசிரியர். கரும்பலகையைத் தொடாமல் ஆண்டு முழுக்க எங்களுக்கு கணக்கு நடத்தியவர். வகுப்பில் நன்றாக படிக்கும் அல்லது சுமாராக படிக்கும் மாணவர்களை கரும்பலகைக்கு போகச் சொல்லி விட்டு, பின் பெஞ்சுக்கும் பின்னால் நின்று கொண்டு டிக்டேட் செய்வார். பல சமயங்களில் கணக்கை சொல்லி விட்டு மாணவனையே வழிமுறைகளை நடத்துமாறு சொல்லி, தவறு செய்யும் இடத்தில், கையில் இருக்கும் ஒடிக்கப்பட்ட சாக்பீசால் குறி தவறாமல் கையில் எறிந்து திருத்தி எழுத வைப்பார். யாராவது வகுப்பைக் கவனிக்காமல் இருந்தால் அவனது தலைக்கும் இந்த சாக்பீஸ் துண்டுகள் பறந்து போகும். அதெல்லாம் வலிக்காது. ஆனால் கொஞ்ச நாட்களில் எல்லா மாணவர்களுமே கணித பாடத்தில் மட்டும் நல்ல மதிப்பெண்களை எடுக்க ஆரம்பித்தார்கள். கரும்பலகைக்கு சென்றவர்கள் சுயமாகவே கணக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தோம், மேடை பயம் சுத்தமாக விலகியது, வேறுவேறு முறைகளில் கணக்குகளுக்கு தீர்வு காண எங்களை மீண்டும் தூண்டுவார். மொத்த பள்ளியும் பத்தாம் வகுப்புக்கு கணித தனிப்பயிற்சி வைத்திருக்கும் வேளையில் அவரது வகுப்பில் இருக்கும் யாரும் துளியும் அப்பாடம் குறித்து பயமில்லாமல் பொதுத்தேர்வுக்கு சென்றோம்.
இவர்களில் முக்கியமானவர் ஒருவரை சொல்லாமல் கதை நிறைவுபெறாது. பிறப்பால் அவர் ஒரு பார்ப்பனர். ஏழாம் வகுப்பில் எனக்கு அவர்தான் வகுப்பாசிரியர். அந்த ஆண்டு ஓய்வு பெற இருந்தார். எனக்கு தெரிய வகுப்பில் மாணவர்களிடம் சாதி பேதம் எதுவும் பார்க்க மாட்டார். ஆனால் காலையில் கோவில் ஒன்றில் பூசை செய்து விட்டுதான் பள்ளிக்கு வருவார். எனது வகுப்பில் கை ஊனமான ஒரு மாணவனைத்தான் மானிட்டராக நியமித்தார். பிரம்பு வாங்கி வந்தால் அதனை எல்லாம் ஒரு அடி நீளத்திற்கு ஒடித்து விடுவார். யாரையும் அடிக்கும் போது அந்த பிரம்பின் மத்தியில் பிடித்துக் கொண்டுதான் அடிப்பார். அதாவது ஒவ்வொரு மாணவன் மீது விழும் அடியும் அவரது கையின் பின்புறத்திலும் விழும். எப்போதாவது மாணவர்களில் யாரிடமாவது சேட்டை அதிகமாகி அதனால் கோபமடைந்து மர ஸ்கேலை எடுத்து அடித்து விடுவார்.
எந்த பையனாவது அழுதுவிட்டால் அவரும் அழுது விடுவார். அப்புறம் சொல்லுவார் ‘நீ சேட்டை பண்ணாமல் இருந்திருக்கலாம் இல்லையா? தெரியாமல் அடித்து விட்டேன்டா’’ என ஒரு வயதான பாட்டியம்மாவின் வாஞ்சையோடு மன்னிப்பை கேட்பார். பள்ளி முடிந்த பிறகு தன் வகுப்பிலிருந்து யாரையும் தனிப்பயிற்சிகளுக்கு செல்வதை தடுப்பதற்காக அந்த நேரத்தில் கூடுதல் வகுப்புகளை வைத்து அவர்களைப் படிக்க வைப்பார். அப்படி படிக்கும் மாணவர்களை வகுப்பறைக்குள் உட்கார விடாமல் கூட்டமாக மரத்தடிகளில் உட்கார வைத்து அவர்களுடன் அவரும் அமர்ந்து கொள்வார். மிகவும் எளிய மனிதர். அவரது பேண்டுகளின் கீழ்புறங்களில் கையால் தைத்திருப்பது நன்கு வெளியே தெரியும். அப்படியான நிலைமையிலும் பசியோடு இருக்கும் மாணவர்களுக்கு பிஸ்கெட்டுகளை தாராளமாக வாங்கித் தருவார்.
பிரிட்டிஷார் நம்மை ஆண்ட இறுதிக் காலங்களில் படித்து வேலைக்கு வந்தவர். அந்த காலங்களை சொல்லும்போது தனது வகுப்புகள் அந்த ஆசிரியர்களின் கற்பித்தல் தரத்தில் இல்லை என்பதை அவராகவே முன்வந்து மாணவர்களிடம் சொல்லுவார். ஆனாலும் பிற வகுப்புகளை விட எங்கள் வகுப்பில் அவரது கற்பித்தல் முறை மிகவும் உயர்வானதாகத்தான் இருக்கும். தனது வேலையை கடைசி வரை சரிப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு சிலரால்தான் இது சாத்தியம் என நினைக்கிறேன். மிகுந்த வறுமையான குடும்ப பின்னணியில் இருந்து படித்த வந்த முதல் தலைமுறை என்பது அவரிடம் எப்போதும் தெரிந்தது. மூன்று ஊர்களைத் தாண்டி மதிய வெயிலில் வந்து தயிர் விற்றுப் போகும் ஒரு மூதாட்டியை அவர் சிறுவயதில் பார்த்து உழைப்பை கண்டு வியந்ததை எப்போதும் எங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவரது பெயர் வைத்தியநாத ஐயர். இப்போது அவர் உயிரோடு இருந்தால் கட்டாயம் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. ஆனால் அவர் ஒரு முற்போக்குவாதி எல்லாம் கிடையாது.
தமிழில் என்னை செதுக்கியவர் காந்திமதிநாத பிள்ளை. மடக்கி விடப்பட்ட முழுக்கைச் சட்டை, வெள்ளை வேட்டி, வழுக்கைத் தலை என வகுப்பறைக்குள் நுழையும் அவரது முதல் வேலையே செய்யுளை பாடத் துவங்குவார். ஆசிரியப்பாவுக்கு அகவலோசை உண்டு எனப் படித்த எனக்கு கவிமணியிடமிருந்து உதாரணங்களைப் பாடிக் காண்பிப்பார். நளவெண்பாவுக்கு செப்பலோசை இருப்பதை அவரைப் பார்த்துதான் அறிந்து கொண்டேன். சீர்பிரித்தல் துவங்கி, விருத்தங்களை விரும்பியவாறெல்லாம் புனைய வைத்து கம்பனை எனக்கு காப்பியடிக்கலாம் என தைரியமூட்டியவரும் கூட அவர்தான்.
அடுத்து மேல்நிலை வகுப்புகளுக்கு அருகில் உள்ள பெரிய கிராமம் ஒன்றுக்கு போக வேண்டியதாயிற்று.
அடுத்த எங்களது இயற்பியல் மிஸ் கலைச்செல்வி மேடம். இயற்பியலை எனக்கு பிடித்த பாடமாக மாறுமளவுக்கு நடத்தினார்கள். செமினார் வகுப்புகளை எடுக்க ஊக்குவித்தார்கள். தனது வகுப்பை அன்று மட்டும் கூட கவனிக்கும் கடைசி பெஞ்சு மாணவனைக் கூட எளிதில் அடையாளம் கண்டு கொண்டு கடைசியில் புரிந்ததா எனக் கேட்டு உறுதிப்படுத்துவார்கள். வகுப்பையும் பாடத்தையும் பேலன்ஸ் செய்து நடத்திக் கொண்டு செல்லும் திறமை அவரிடம் நிரம்பவே உண்டு. நேரடியாக பதில் சொல்லாமல் கேள்விகள் மூலமாக நம்மை பதில்களை நோக்கி வரவைப்பதிலும் அவர் கில்லாடி. இவரை முன்மாதிரியாகக் கொண்டுதான் கல்லூரியிலும் இயற்பியலை தேர்வு செய்தேன்.
அது நகரின் சிறிய கல்லூரி. என்னை மிகவும் கவர்ந்தவர் பேராசிரியர் செக்காரக்குடி கந்தசாமி (எஸ்.எஸ்.கே). எப்போதும் வெற்றிலையை மென்று கொண்டிருக்கும் அவருக்கு மாணவர்கள் வைத்த பெயர் வெற்றிலைப் பொட்டி. ஓய்வுபெறும் வயதில் இருந்தார். கிராமப்புற மாணவர்கள் பலரும் ஆங்கிலத்தை சரிவர பள்ளியில் கற்றிடாமல் கல்லூரிக்கு வந்து ஆங்கிலவழிக் கல்வி முறையில் கற்க இருந்தோம். பேராசிரியர் முதலில் தமிழ் மற்றும் ஆங்கில டெக்னிக்கல் வார்த்தைகளுடன் பாடம் நடத்துவார். ஏறக்குறைய நடுவாந்திரமானவர்களுக்கு கூட அது புரிந்து விடும். அடுத்த தூய தமிழில் நடத்துவார். கடைநிலை மாணவர்களுக்கும் மனதில் பதியும் விதமாக அது இருக்கும், மற்றவர்களுக்கோ நடத்தியது நன்கு உள்வாங்கப்படும். கடைசியில் ஆங்கிலத்தில் நடத்துவார். அதாவது படித்து விட்டு தேர்வுக்கு போக வேண்டிய கட்டாயம் எவருக்குமே இனி இருக்காது.
பாடத்தில் பெரும்பாலும் மூன்றில் ஒரு பங்குதான் முடித்திருப்பார். ஆனால் எல்லோரும் தேர்வாகி விடுவதுடன் பாடத்தை மறக்கவும் மாட்டார்கள். அவர் எடுத்த ஸ்பெசல் ரிலேட்டிவிட்டி தியரி வகுப்பை நினைத்தாலே புல்லரிக்கும். வேறு எதோ வீட்டுப் பிரச்சினையால் சுத்தமாக வகுப்பில் கவனமில்லாமல் இருந்த என்னை கவனிக்க வைத்த பாடவேளை அது.
எனது முதுகலை படிப்பிற்காக அவரே முன்வந்து பிற கல்லூரிகளுக்கு சிபாரிசு செய்வதாக சொன்னார். நான் தொழில்நுட்ப படிப்பை தவிர்த்து தூய அறிவியலை முதுகலைக்கு எடுப்பதில் விருப்பத்துடன் இருப்பதை தெரிந்தபோது மிகவும் மகிழ்ந்தார். அவர் நல்லதொரு இசை ரசிகர் மற்றும் விமர்சகரும் கூட. போராட்டங்களை நேரடியாக ஆதரிக்காத போதும் போராடும் மாணவர்களை பாதுகாக்க வேண்டும் எனக் கருதி செயல்படுபவர். ஆசிரியர் சங்கங்களில் இருக்கும் பலரும் கூட நிர்வாகத்துக்கு அடிபணியும் சூழலில் இவர் அவர்களிடமிருந்து தனித்து நின்றார்.
அடுத்து எங்களது வேதியியல் துறைக்கான ஆசிரியை செல்வராணி மேடம். நன்றாக பாடம் நடத்தினார்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் மாணவர்களின் நண்பராக இருந்தார். நாங்கள் கூறும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றிக் கொள்வார். பார்த்த வேலை நிரந்தரமான ஒன்றல்ல என்ற போதிலும் எங்களுக்காக மிகவும் சிரமப்பட்டு பாடம் நடத்தினார். அவரது குரலில் உள்ள குறைபாடு ஒன்றை எப்போதும் பழித்துக் காண்பிக்கும் நான் தான் வகுப்பில் அவரது சிறந்த நண்பன். ஏறக்குறைய மாணவ மாணவிகளுக்கு ஒரு அக்கா போலதான் செல்வராணி மேடம் இருந்தார்கள்.
கணித துறையில் பணியாற்றிய பாஸ்கரன் சார், தமிழ்துறையின் அருள்மணி சார் ஆகியோரும் மறக்க முடியாதவர்கள். எதிர்மறையாக இலக்கியம் பேசுவதை, சமூக அவலங்களை சுட்டிக்காட்டி பேசுவதை படைப்புகளாக்க வேண்டும் என்பதில் மாணவர்களை ஊக்கப்படுத்தியவர்கள். இப்போது அவர்கள் ஓய்வு பெற்று விட்டார்கள். நான் பேச்சுப்போட்டியின் தலைப்பே தவறு எனப் பேசிய ஒரு போட்டியில் எனக்கு முதல் பரிசு தர நடுவராக வந்த பாஸ்கரன் சார் பரிந்துரைத்திருந்தார். அதுதான் பாஸ்கரன் சார்.
அடுத்து முதுகலைக்கு வேறு சிறுநகரத்திற்கு சென்றேன். வியாபாரத்திற்கு பெயர்போன ஊர் அது. இங்கு எல்லா ஆசிரியர்களுமே என் நலன் விரும்பிகளாகத்தான் இருந்தார்கள்.
நான் மிகவும் மதிக்கும் எலக்ட்ரானிக்ஸ் வாத்தியார் லட்சுமி நாராயணன் (பி.எல்.என்) இங்குதான் எனக்கு கிடைத்தார். தியரியையும், எக்ஸ்பிரிமெண்டையும் இணைப்பதை எளிய முறையில் பலமுறை எனக்கு லேப்பில் விளக்கியவர் இவர். அவரது வகுப்பு என்பதே இரண்டரை மணி நேரம் கதவு, ஜன்னல்களை அடைத்து விட்டுதான் நடக்கும். வகுப்பில் நான் மட்டும்தான் மாணவன். அதனாலேயே கவனிக்க வேண்டியதாயிருக்கும். அவரது வேகத்தை பிடிக்க தவறினால் எதுவுமே புரியாது. மிகப்பெரிய யூனிட்டுகளை எல்லாம் சில வகுப்புக்களிலேயே எடுத்து முடித்து விடுவார். சந்தேகங்களை கேட்க பத்து நிமிடம் கடைசியில் நேரம் ஒதுக்குவார். நாங்கள் யாரும் கேட்டதாக இதுவரை எனக்கு ஞாபகம் இல்லை. டி.டி.எல் சர்க்கியூட், பூலியன் கேட்ஸ் போன்றவற்றை நடத்தும்போது அப்படியே கணித உலகையும், மின்னணு உலகையும் அவர் இணைக்கும் பாங்கே தனி.
அடுத்து கிளாசிக்கல் மெக்கானிக்சையும், எலக்ட்ரோ மேக்னடிக் தியரியையும் எடுத்த டி.சி என்று அறியப்படும் சந்திரசேகரன். எளிய தமிழில் முதுகலை இயற்பியலை விளக்கும் திறமை உடையவர். அவரது நோட்ஸ் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரு மடையனுக்கும் புரியும் விதமாக அவரது நோட்ஸ் இருக்கும். அதாவது வகுப்புகளுக்கு வர முடியாமல் போனவர்கள் அதனைப் பார்த்தே புரிந்து கொள்ள முடியும். செமினார் வகுப்பில் பாடத்திற்கு வெளியே கேள்வி கேட்பதில் வல்லவர். அதுவும் நன்றாக உள்வாங்கினால்தான் பதில் சொல்ல முயற்சி செய்யவே முடியும். இவர்கள் இருவரும் கடந்த பத்தாண்டுகளின் இடைவெளியில் ஓய்வுபெற்றவர்கள்.
முதுகலை படிக்கும்போதெல்லாம் எனக்கு பிடித்த ஆசிரியர் வேலைக்கு அடுத்த சில ஆண்டுகளில் சென்று விடுவோம் என்று நினைத்திருந்தேன். இதுவரை அது கைகூடவில்லை. ஆனால் நான் மாணவனாகவே இப்போதும் தொடர்கிறேன். நல்ல மாணவர்கள் யாரும் இப்போது ஆசிரியர்களாக வருவதில்லை என எனக்கு நானே இந்தப் பழம் புளிக்கும் எனச் சொல்லிக் கொள்கிறேன்.
அழகிய முகமும், அருமையான குணமும் கொண்ட பொற்கொடி தீயில் கருகிப் போய் அழுகிப் போன பிணமாகக் கிடந்தாள். அவள் முகம் மட்டும் எப்போதும் போலவே அன்று பூத்தப் பூவாக சிரித்த வண்ணமாய் இருந்தது. மூன்று வயது மகனை விட்டு விட்டு தீக்குளித்து விட்டாள் பொற்கொடி. துக்கத்துக்கு வருபவர்களெல்லாம் பரிதாபப்பட்டு வாங்கிக் கொடுக்கும் பிஸ்கெட் பாக்கெட்டை தின்றவாறு எதுவும் புரியாத நிலையில் இருந்தான் அந்தக் குழந்தை. நிலை தடுமாறும் அளவுக்குக் குடித்துவிட்டு துக்கம் தாங்காதவராக கிடந்தார் அவள் கணவன். மரத்தடியில் சுருண்டு கிடந்தார் அப்பா. சொல்லி அழ ஜீவனற்று குரல் மட்டும் தொண்டைக்கும் நெஞ்சுக்குமாக இழுக்கும் நிலையில் அம்மா. பொற்கொடியின் குடும்பத்தில், வாழ்க்கையில் நடந்து முடிந்ததையும், இனி நடக்கப் போவதையும் சொல்லி, குலை நடுங்கும் நெடுங்குரலில் அழுது கொண்டிருந்தாள் வள்ளி.
பொற்கொடியின் தங்கைதான் வள்ளி. அவள் அக்கா பொற்கொடிக்கே மூத்தவளான நான் அவள் அக்காவுக்குத் தான் கூட்டாளி. ஒரே ஊர், அக்காவின் கூட்டாளி என்றுதான் அவளுக்கும், எனக்குமான பழக்கம்.
பொற்கொடி இறந்த பிறகு என்னிடம் மிகவும் நெருக்கமாக பழகினாள் வள்ளி. அவள் அக்காவோடே என்னை அதிகம் நேரம் பார்த்ததால், பொற்கொடியின் ஞாபகம் மிகவும் வேதனை தரும் நேரத்துல என்னை பார்த்தால் அக்காவைப் பார்த்தது போல் இருக்கும் என்பாள். அவளுக்குத் திருமணமாகி குழந்தை பிறந்த போது என்னைத்தான் பேர் வைக்கச் சொன்னாள். அந்தப் பேரை அவள் அக்கா வைத்ததாக நினைத்து சந்தோசப் பட்டுக்குவா. என்னிடம் மனம் விட்டுப் பேசுவாள். என்னிடம் பேசும் போது அவள் அக்காவிடம் பேசுவது போல் ஒரு மன நிறைவைத் தருது என்பாள் வள்ளி. நாளடைவில் அனபு வளர்ந்ததனால், தோழி பொற்கொடியை விட ஒருபடி மேலே போய் தோழியின் தங்கை என் தங்கையானாள். இந்த வள்ளியின் வலி மிகுந்த வாழ்க்கையை வேதனையோடு உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
வள்ளியை கடந்து செல்லும் யாருக்கும் ஒரு நிமிடமாவது திரும்பிப் பார்க்கத் தூண்டும் அளவுக்கு நல்ல அழகு. மகன் வைத்திருக்கும் எந்த அம்மாவும் வள்ளியை பார்த்தால் நமக்கு வரப்போற மருமக இந்த பொண்ணப் போல இருக்கணும் என்று நினைக்கும் அளவுக்கு லட்சணம். அனைவரும் வள்ளியைப் போலத்தான் வேணும் என்று நினைப்பார்களே தவிர வள்ளிதான் வேணும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் பொண்ணோடு பொருளையும் எதிர்ப் பார்ப்பவர்கள். வள்ளியோ ஏழ்மைப்பட்டக் குடும்பத்து பெண்.
பொற்கொடி, வள்ளி, அம்மா, அப்பா இவர்கள் நால்வர் அடங்கியதுதான் குடும்பம். வள்ளிக்கும், பொற்கொடிக்கும் ஆறு வயசு வித்தியாசம். வள்ளியின் அம்மாவுக்கு இவர்கள் மூன்று பேரைத் தவிர ஒரு உலகம் கிடையாது. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிய பிறகும் கூட குழந்தையா நெனச்சு கிட்டு தலை சீவறதுலேர்ந்து, சாப்புடறது, நிக்கிறது, நடக்குறது, தூங்கறதுன்னு அனைத்தையும் ரசிப்பாங்க. பஸ்ல ஏர்ற வரைக்கும் பொண்ணுங்களுக்கு ஊட்டி கிட்டே வருவாங்க. பொண்ணுங்கள பார்த்து பார்த்து வளர்த்தாங்க. வள்ளியின் அப்பா பொறுப்பில்லாத குடும்பஸ்தர். ஆனால் பொறுப்பான குடிகாரர். அவர் சம்பாத்தியம் குடிக்க மட்டும்தான் போதுமானதா இருக்கும். போதாக் குறைக்கு இருந்த ஒரு ஏக்கர் நிலத்த்தையும் வித்துட்டார். ஒரு பால் மாடும், வள்ளியின் அம்மா கூலி வேலையும் தான் அன்றாட குடும்ப செலவை தீர்த்தது.
இருந்த அரை ஏக்கர் நிலத்தை வித்து பொற்கொடிக்கு 17 வயசுலயே சொந்தக்கார மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்து வைத்தனர். அப்பா மொடாக் குடிகாரன்னா, புருசன் படாக் குடிகாரனா இருந்தான். ஒரு ஆம்புள புள்ளையும் பொறந்துச்சு. காதுல மூக்குல இருக்குற நகைகள வாங்கி வித்து குடிச்சது போக வீட்டுல உள்ள பாத்திரத்த வித்து குடிக்கிற அளவுக்கு நெலைம போய்ட்டே இருந்துச்சு. எந்த வகையிலயும் திருத்த முடியல.
தன் வீட்டுத் தேவைகளுக்காக வேலைக்கு போக ஆரம்பித்த வள்ளி, அக்கா குடும்பத்துக்கும் சேர்த்து உழைக்க வேண்டியிருந்தது. வாரத்துக்கு ஒருமுறை வள்ளியைப் பார்த்து தனக்கும், குழந்தைக்கும் தேவையான அனைத்தையும் கேட்டு வாங்கி வருவாள் பொற்கொடி. தன் பங்குக்கு வள்ளி வேலை பார்க்கும் கடைக்குச் சென்று குடிக்க காசு கேட்பதும், இல்லை என்றால் அசிங்கமாக திட்டுவதும், கூட வேலை பார்ப்பவர்கள் கேலியாக பேசுவதுமாக வள்ளிக்கு அவமானத்தை ஏற்படுத்தினான் அக்கா கணவன்.
ஒரு நாள் பிள்ளைக்குத் தேவையானதை வாங்கக் கொடுத்தக் காசில் குடித்து விட்டு வந்தானென்று ஆத்திரம் அடைந்தப் பொற்கொடி, அவனை உதறி விட்டு தன் வாழ்க்கையைப் பார்த்துக்க நினைக்காமல், மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டாள். 28 நாள் ராப்பகலாக வள்ளிதான் பொற்கொடியைக் கவனித்தாள். அவர் அம்மா ஒரு பரதேசி போல ஒரு மூலையில் சுருண்டு கிடந்தார். ஆறுதல் சொல்லக் கூட ஒரு நல்ல மனிதரில்லை. “சாக வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்யவில்லை. பயமுறுத்தி வைக்கத்தான் செய்தேன். இப்ப என் பிள்ளைகளை விட்டுட்டு போயிடுவேனோ என்று பயமா இருக்கு” என்று வள்ளியையும் உள்ளடக்கி நிலை தடுமாறிய மனநிலையில் பொற்கொடி கூறியதும், வள்ளி செய்வதறியாது நின்றதும் இன்றளவும் என் மனதை வதைக்கும் ஒரு நிஜம்.
பொற்கொடி சாவதற்கு முன் வள்ளிக்கு திருமணம் நிச்சயம் செய்து ஒரு மாதம் முடிந்திருந்தது. வரும் மாதத்தில் திருமணம் முடிவு செய்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில் துக்கத்துக்கு வந்த அனைவர் மனதிலும் ஓடிய எண்ணமும், பேசிய வார்த்தையும், “இரண்டாம் தாரமாக வள்ளியையே கட்டி வச்சுட்டா நல்லா இருக்கும். பிள்ளைக்கு அம்மா வேணும், வேற யாரையாவது கல்யாணம் பண்ணினா பிள்ளையை சரியா பாத்துக்க மாட்டாங்க” என்று நியாயம் பேசினார்கள். நடந்த தவறைப் பற்றிய கோபமே இல்லாமல் மீண்டும் ஒரு தவறு செய்வதை சரி என்று பேசினார்கள்.
மனைவி செத்து ஒரு வாரத்துக்குள், “பிள்ளைக்காகவாவது என்னை கல்யாணம் பண்ணிக்க” என்றான் குடிகாரன். காறி மூஞ்சிலேயே துப்பினாள் வள்ளி. “உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை எப்டிப்பட்டவரோ, பாக்கவும் அவ்வளவா பொருத்தமா இருக்க மாட்டாரு, அதுக்கு அக்கா புருசணையே கல்யாணம் பண்ணிகிட்டா ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கலாம்” என்றார்கள் சொந்தக்காரர்கள். “தெரிந்தே குழிக்குள்ள விழறதுக்கு தெரியாம விழறது மேல்” என்று பிடிவாதமாகக் கூறி விட்டாள் வள்ளி.
வள்ளிக்கு பார்த்த மாப்பிள்ளை அவளை விட 20 வயசு அதிகம். வயசுலயும், தோற்றத்திலயும் பொருந்தாத உருவம். இவளின் ஏழ்மை நிலைக்கு இந்த அளவுக்குத்தான் மாப்பிள்ளை கிடைக்கும் சமூகத்தில். குடிக்காதவரா, மூணு வேலையும் சாப்பாடு போடுபவரா இருந்தா போதும் என்ற அடிப்படையிலும் சரியென்று நினைக்க வைத்தது சூழ்நிலை.
அக்கா கணவனுக்கு கட்டி வைத்து விடுவார்கள் என்ற பயத்திலே மாப்பிள்ளை வீட்டார் பத்தே நாட்களில் திருமணத்தை முடித்தார்கள். வள்ளி கணவன் வீட்டில் இருந்தாள். அக்கா குழந்தை, அம்மாவிடம் இருந்தது. திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து ஒரு வாரமாக பையனைப் பார்க்க அந்த ஆள் வரவே இல்லையே என்று தேட ஆரம்பித்த போதுதான் தெரிய வந்தது இறந்து விட்டார் என்று. பஸ்ஸில் போய்க் கொண்டிருந்த போது குடிபோதையில் வம்பு செய்ததனால், பாதி வழியில் இறக்கி விடவும், குடிபோதையில் ஆத்துக் கரையில் அமைந்த ரோட்டில் ஆத்தில் தவறி விழுந்து ஒரு வாரத்துக்குப் பிறகு ஆத்து மதகில் சிக்கிக் கொண்ட பிணத்தைக் கண்டு பிடித்தார்கள்.
அப்பா வழியில் அந்தப் பையனை வளர்க்க யாரும் முன்வரவில்லை. வள்ளி அம்மாதான் வளர்த்தார். அக்கா பையனைத் தன்னோடு வைத்துக் கொள்ள கணவனின் கூட்டுக் குடும்பச் சூழ்நிலையில் முடியவில்லை. அக்கா பையனை நினைத்து வேதனைப்பட்டாள், வள்ளி. தேவையானதை வாங்கிக் கொடுத்து வேதனையை குறைத்துக் கொள்ள நினைத்தாலும் வருமானம் போதாதக் குறையால் செய்வதறியாது தாய் வீட்டுக்கும், கணவன் வீட்டுக்குமாக அலைந்தாள் வள்ளி. இரண்டு வருடம் கழித்து அவளுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தனக்கு ஆண் குழந்தை வேண்டாம், அக்கா பையன் போதும் என்ற முடிவுடன் இருந்தாள் வள்ளி.
குழந்தை பிறந்து ஒரு வருசம் கழிச்சுப் பிழைப்பு தேடி கணவன் மனைவி இருவரும் குழந்தையுடன் சென்னைக்கு வந்தனர். ஒரு பணக்கார குடும்பத்துக்கு வீட்டோடு தங்கி இருவருமே வேலை செய்துவந்தார்கள். சென்னைக்கு பொழைப்புத் தேடி வந்து நாலு வருசமாச்சு. இதற்கிடையில் வள்ளியின் அம்மா, பொண்ணு செத்தக் கவலையில தன் நிலை மறந்து மனநோயாளியா ஆயிட்டாங்க. கண்டதையும் பேசிக்கிட்டு, துணியொரு கோலமா அலைய ஆரம்பிச்சுட்டாங்க. அம்மாவ பாத்துக்குறதே அப்பாவுக்கு பெரிய வேல அக்கா பையனையும் எப்படி சமாளிப்பாரு, தன்னோட வச்சுக்கலாம்னா மொதலாளி ஒத்துக்க மாட்டாரு, மனச கல்லாக்கிட்டு தாய் தகப்பன் இல்லாத அனாதையின்னு சொல்லி ஒரு ஆசிரமப் பள்ளியில சேத்து விட்டுட்டா. அப்பப்ப போய் பாத்துக்குவா, தேவையானத வாங்கிக் கொடுப்பா. ஒரு வருசம் கடந்து ஒரு நாள் அம்மாவும் இறந்துட்டாங்க.
அம்மா இறந்த பிறகு, அக்கா பையன் திருச்சி ஆஸ்டலிலும், இவள் சென்னையிலுமாக இரண்டு வருசம் வாழ்க்கை ஓடி விட்டது. சமீபத்தில் ஒரு நாள் அவளை பார்க்கப் போயிருந்தேன். இவ்வளவு வலி மிகுந்த வாழ்க்கைக்கிடையிலும் சிரித்த முகத்துடனும் உற்சாகத்துடனும் என்னிடம் பேசினாள்
“இந்த வீட்லதான் வேல பாக்குறியா? இவ்ளோ பெரிய வீடா இருக்கு, நீ தங்குற எடமோ மாடியில இருக்கு. எப்புடி ஒவ்வொரு வேலைக்கும் ரெண்டு மாடி ஏறி ஏறி எறங்குவ. என்னன்ன வேலையெல்லாம் பார்ப்பே’’ என்றேன்.
வள்ளி வேலையை ஒரு பட்டியலாவே சொன்னா. சமையலுக்குக் காய் நறுக்கிக் கொடுப்பது, பாத்திரம் கழுவுவது, வீடு துடைப்பது, எல்லா படுக்கை விரிப்பையும் சரி செய்வது, கையால துணி துவைப்பது, வீடு கூட்டி பெருக்குவது, பூஜைக்காக 5 மணி நேரத்துக்கு மேல பூ கட்டுவது, விடியக் காலை எழுந்து எல்லா வாசலுக்கும் கோலம் போடுவது என்று நீண்டு கொண்டே போனது.
வள்ளியின் கணவரின் வேலை ஆபீஸ், கார், கார் பார்க்கிங், வீட்டு வளாகம், தோட்டக் கொல்லை, விலை உயர்ந்த நாய்கள், இதெல்லாம் சுத்தம் செய்வது, பராமரிப்பது. இது போக, வீட்டோடு சேர்ந்தாப் போல இருக்கும் அலுவலக ஊழியர்கள், கார் ஓட்டுனர்கள், என்று பத்து பேருக்கு சமைத்துப் போடுவது.
இருவரும் சேர்ந்து பொதிமாடு போல மாங்கு மாங்குன்னு உழைச்சாலும், எங்க முதலாளி கொடுக்கும் சம்பளமோ இருவருக்கும் சேர்ந்து வெறும் ரூ 6,000 மட்டும்தான்.
“மனசுல இவ்வளவு வலியையும், கவலையையும் வச்சுகிட்டு எப்படீடி ஒன்னால இப்படி பேசி சிரித்த முகத்துடன் இருக்க முடியுது?” என்றேன்.
“அப்புடி பாத்தா நாட்டுல முக்காவாசிப் பேருக்கும் மேல சிரிக்கவே முடியாது. எங்க அக்கா சொல்லுவா. ‘இவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்றதுக்கு செத்தர்லாம்னு தோணும். ஆனா என் ப்ரண்டு பட்ற வேதனைய பாத்தா நாம மேலுன்னு மனச தேத்திக்குவேன்னுவா’. சாவறப்ப படுக்கையில கூட இதையேதான் சொன்னா. எனக்கு வாழ்க்கை மேல ஒரு சலிப்புத் தோணுனப்ப, அக்கா சொல்லிட்டு இருந்தாளேன்னு, அக்கா ஃப்ரண்டு வீட்டுக்கு கிளம்பி போனேன். ஒரு பகலும் இரவும் சேந்தாப் போல இருந்தேன். அறுபது வயதில் வாழவேண்டிய வாழ்க்கையை இருவத்தி அஞ்சு வயசுல வாழ்ந்துட்டு இருந்தா அந்த அக்கா. அக்கா சொன்னது உண்மைதாங்கறத புரிஞ்சுகிட்டேன்.
எல்லாருமே நம்மள போலத்தான் கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம அரைகுறை அவல வாழ்க்கைதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஏழையா பொறந்துட்டா ஊர் ஒலகத்துல இந்த நிலைதான் விதிக்கப்பட்டதா இருக்கு. என்ன செய்யறது. மத்தவங்க படற கஷ்டத்துக்கு நாம எவ்வளவோ மேலுன்னு நெனச்சுகிட்டு ஒருத்தர ஒருத்தர் பாத்து மனச தேத்திக்கிட்டு வாழ வேண்டியதுதான். இப்படித்தான் பல பேரோட பொழப்பு இருக்கு. இந்த மாதிரி கஷ்டமெல்லாம் நம்மள போல சாதாரண மக்களுக்கு இருக்குங்கறதும், அதோடு போராடிதான் வாழ்றாங்கங்கறது தான் உண்மை.
கைக்கொழந்தைய வச்சிருந்ததால ஒரு வீட்டோட தங்கி வேலை பாக்க வேண்டியதாப் போச்சு. அக்கா பையனையும் கூட வச்சுப் பாத்துக்க முடியாம இருந்துச்சு. இப்ப எம்பொண்ணுக்கு 5 வயசாச்சு கொஞ்சம் புரிஞ்சுக்குவா. அக்கா பையனையும் அழைச்சுட்டு வந்துட்டா ஒண்ணுக்கொண்ணு தொணையா இருக்கும். எங்க போனாலும் நம்ம கைய ஊணித்தான் கர்ணம் போடணும்ங்கறதுதான் நெலைமென்னு முடிவாகிப் போச்சு. இனிமே ஒருத்தருக்கு அடிமையா வேலை செய்றத விட்டு ஒரு ரோட்டோர கடை வச்சுகிட்டு அக்கா பையனையும் அழைச்சுகிட்டு வந்தரலாம்ன் இருக்கேன்” என்றாள்.
உன்கிட்ட பேசிக்கிட்டே போன் பண்ண மறந்துட்டேன்னு சொல்லிக் கொண்டு அக்கா பையனிடம் பேசுவதற்காக ஆசிரியருக்குப் போன் போட்டு அவனிடம் பேசினாள்.
***
நல்லா இருக்கியாடா முத்து?
நல்லாருக்கேன் சித்தி.
ஏண்டா சரியா சாப்புட மாட்டேங்கிறியா?
புடிக்கல சித்தி.
என்னடா பண்ணுது?
ஒண்ணும் பண்ணல சித்தி.
ஏண்டா வயிறு பசிக்கலயா?
சாப்புட புடிக்கல சித்தி.
கறி, மீனு ஏதும் வேணுமா?
அதெல்லாம் வேண்டாம் சித்தி.
வேறதாச்சும் வேணுமா?
(அழுது கொண்டே), நீ வந்துரு சித்தி. என்னை கூட்டிட்டுப் போ சித்தி.
***
அவள் போனில் மேலும் பேசிக் கொண்டே இருந்தாள். நான், அதற்கு மேல் பொறுக்க முடியாதவளாய் அழுது கொண்டிருந்தேன்.
– வேணி
(உண்மைச் சம்பவம் – பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)
வடிவமைப்பிற்காக எடுக்கப்பட்ட ஓவியங்கள் : நன்றி A L Raja
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை அம்பலப்படுத்தும் போஸ்டர்கள் தூத்துகுடி நகரத்தின் சுவர்களெங்கும் முற்றுகையிட்டிருந்தன. “தாதுமணல் கொள்ளையன் V.V.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்!” – என்கிற முழக்கங்களோடு கடந்த சில வாரங்களாய் தோழர்கள் தூத்துகுடி மற்றும் கடலோரப் பகுதிகளில் செய்திருந்த வீச்சான பிரச்சாரங்களின் அடையாளங்களை நகரெங்கும் நம்மால் காண முடிந்தது.
நாம் சரியாக 5:00 மணி அளவில் பொதுக்கூட்டம் நடக்கவிருந்த அண்ணா நகர் பகுதிக்குச் சென்று விட்டோம். வி.வியை எதிர்த்து வி.வியின் கோட்டையான தூத்துக்குடியில் ஒரு பொதுக்கூட்டம் என்பதை மக்கள் வியப்போடு பேசிக் கொண்டார்கள். பொதுக்கூட்ட மேடையின் பக்கவாட்டுப் பகுதியிலும் பின்புறமும் வைகுண்டராசனின் கொள்ளைகளை விளக்கியும் பொதுக்கூட்ட முழக்கங்களைத் தாங்கியும் பெரிய ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. எழுச்சியான பறை முழக்கங்களின் இடையே நிகழ்ச்சி அமைப்பாளர்களின் அறிவிப்பு வெளியானது; கடலோர கிராம மக்கள் நீண்ட தொலைவிலிருந்து பொதுக் கூட்டத்தைக் காண வந்து கொண்டிருப்பதால், அவர்களின் வசதி கருதி கூட்டம் 5:30 மணிக்குத் துவங்கும் என்றது அறிவிப்பு. சரியாக 5:30 மணிக்கு கூட்டம் துவங்கியது.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர் வாஞ்சிநாதன் தலைமையுரை நிகழ்த்தினார். உண்மையறியும் குழுவாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கடற்கரையோர கிராமங்களுக்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்ற போது சந்தித்த சவால்களையும், தோழர்கள் மக்களின் ஆதரவோடு களத்தில் சவால்களை எதிர்கொண்ட விதம் குறித்தும் விளக்கினார். பெரியதாழையில் மக்கள் பத்து பேருடன் வழக்கறிஞர்கள் 6 பேர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த போது வைகுண்டராசனின் கூலிப்படையைச் சேர்ந்த 150 பேர் சுற்றி வளைத்துக் கொண்டதையும், ஊர் மக்களின் ஆதரவைக் கண்டு அந்த கூலிக் கும்பல் பின் வாங்கிச் சென்றதையும் விவரித்தார். வி.வி மினரல்ஸ் அமைப்பை எதிர்ப்பது இதே தொழிலில் இருக்கும் வேறு முதலாளிகளுக்கு சாதகமாகச் செல்லாது என்றும் நம்முடைய கோரிக்கையே வி.வி மணல் அள்ளக்கூடாது என்பது மட்டுமின்றி வேறு யாரும் தாதுமணல் அள்ளத் தடைவிதிக்க வேண்டும் என்பது தான் என்றும் விளக்கினார்.
தொடர்ந்து பேசிய தோழர் வாஞ்சிநாதன், முதலில் இந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை தடை விதித்ததையும் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை நாடியே ம.உ.பா மையம் கூட்டத்திற்கு அனுமதி பெற்றதையும் குறிப்பிட்டு விட்டு, பிரச்சாரத்திற்கான கால அளவை அதிகரித்தும் இரண்டு முறை வைகுண்டராசனின் முகத்திரையை மக்கள் முன் கிழித்துப் போட வாய்ப்பளித்தும் உதவிய காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தோழர் வாஞ்சிநாதனைத் தொடர்ந்து கடற்கரையோரங்களைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களின் ஊர்கமிட்டித் தலைவர்களும் திருநெல்வேலி மாவட்ட மீனவர் கூட்டமைப்பின் தலைவரான எஸ்.ஏ ஜோசப் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும் கருத்துரை வழங்கினர். உவரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வி அந்தோனி அவர்கள் பேசும் போது தான் வாழ பிறரைக் கெடுக்கும் மனநிலை கொண்ட வி.வி கம்பெனியின் அணுகு முறையை விமர்சித்தார். மேலும், ஆபத்தான கணிமங்களைக் கொண்ட மணலை அள்ளுவதும், பாதுகாப்பற்ற சூழலில் அதைப் பிரித்தெடுப்பதும் தங்கள் பகுதியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை விவரித்தார். தனது குடும்பத்திலேயே தனது அண்ணன், அண்ணி மற்றும் அவர்களது மகள் ஆகியோர் புற்றுநோய்க்கு பலி கொடுத்திருப்பதை உருக்கமாக விவரித்தார்.
பொதுக்கூட்ட மேடையின் முன் திரளான மக்கள் அமர்ந்திருந்தனர். இது போக, மேடையின் பக்கவாட்டிலும், மேடையின் பின்புறமும், கூட்டத்தின் இரு பக்கத்திலும் அடைசலாக பலர் நின்று கொண்டு கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஊர்கமிட்டித் தலைவர்கள் பேசத் துவங்கியிருந்த சமயத்தில் மேடையின் பின்புறமிருந்து வலது பக்கவாட்டுப் பகுதிக்கு சிலர் சாராய நெடியோடு நுழையத் துவங்கினர். அதே நேரத்தில் கூட்டத்தின் பின்பக்கமாக 10-20 பேர் நாற்காலிகளை ஆக்கிரமித்து அமர்ந்தனர்.
சில நிமிடங்களில் நான்கைந்து பேர் கூட்டத்தின் பின்பக்கமாக வந்து தாங்கள் ஏற்கனவே உள்ளே அனுப்பிய நபர்களை வெளியே வருமாறு அழைத்து ஒவ்வொருவர் கையிலும் ஐநூறு நூறு ரூபாய்த் தாள்களைத் திணித்தனர். காசை வாங்கியவர்கள் புதிதாக வந்தவர்களோடு சேர்ந்து கொண்டு ‘வேலை வாய்ப்புத் தந்த வள்ளல் வைகுண்டராசன் வாழ்க’ என்று கூச்சலிடத் துவங்கினர். ஏற்கனவே வைகுண்டராசன் அனுப்பியவர்களைத் தவிர கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் யாரும் இவர்களை சட்டையே செய்யவில்லை. பாதுகாப்புக்கு நின்றிருந்த செஞ்சட்டைத் தோழர்களும் ம.உ.பா மைய வழக்கறிஞர்களும் இந்த கும்பலை நோக்கி விரைந்து வரவே பின்வாங்கினர்.
கூட்டத்தின் பின்பக்கத்தில் தாங்கள் ஏற்பாடு செய்திருந்த ‘கலவரம்’ பிக்கப் ஆகவில்லை என்று தெரிந்ததும் மேடையின் வலது பக்கவாட்டில் ’சாராய’ நெடியோடு ஊடுருவிய கும்பல் தங்களது முயற்சியைத் துவக்கியது. ‘யாருலெ எங்க சாதி ஆள கொள்ளையன்னு சொல்லுதா’ என்று கூட்டத்தோடு கூட்டமாக பொதுவாக கொளுத்திப் போடப் பார்த்தனர். மக்கள் கண்டு கொள்ளவில்லை. ப்ரவுன் நிற சிலுக்கு சட்டை போட்டிருந்த 48 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் (இவர் ஈழத் தமிழர்களுக்காக காமென்வெல்த் மாநாடை எதிர்த்து கடையடைப்பு செய்ய மாட்டோம் என்று அறிவித்த போட்டி வணிகர் சங்கத்தின் தலைவர் விக்கிரமராசாவின் சகோதரர் என்றனர்) மேடையை நோக்கி பக்கவாட்டிலிருந்து முன்னேறினார். நடையில் கொஞ்சம் தள்ளாட்டம் இருந்தது.
“தொழிலதிபர் வைகுண்டராசனை கொள்ளையன் என்று எப்படி சொல்லலாம்?” என்று குரல் எழுப்பியது சிலுக்கு சட்டை. கூட்டத்தோடு ஊடுருவியிருந்த மற்ற அல்லக்கைகள் எப்படித் துவங்குவது என்று குழம்பி நின்று கொண்டிருக்க, இரண்டு பேர் மட்டும் ‘எங்க சாதிய எப்படிலே தப்பா பேசுறிய?’ என்று குரல் உயர்த்தி அவரோடு சேர்ந்து கொண்டனர். இதற்குள் பாதுகாப்பு அணியிலிருந்த தோழர்கள் இவர்கள் மூவரையும் சுற்றி வளைத்து அப்புறப்படுதத் துவங்கினர். நிகழ்ச்சியை பொறுப்பாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த உளவுப் பிரிவைச் சேர்ந்த போலீசு ஒருவரும் இவர்களை வெளியேறச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தார். பாதுகாப்புப் பிரிவு தோழர்கள் கையில் நீண்ட லாட்டிக் கம்புகளோடு விரைந்து வருவதை கவனித்துக் கொண்டிருந்த அவருக்கு தாமதித்தால் என்னவாகும் என்று தெரியாதா – சமயோஜிதமாக செயல்பட்டார்.
மேடையின் பின்புறம் இருந்து சட்டம் ஒழுங்கு போலீசாரும் விரைந்து வந்து இம்மூவரையும் அப்புறப்படுத்தினர். இவர்களோடு ஒரு பத்து இருபது அல்லக்கைகளும் மேடையின் பின்னே சேர்ந்து கொண்டனர். செஞ்சீருடையில் இருந்த பாதுகாப்பு அணியைச் தோழர்கள் மேடையின் பின்னே இரண்டடுக்குகளாக அரண் அமைத்து நின்றனர். அவர்களுக்கு முன் போலீசார் எதிர்புறமாகத் திரும்பி வைகுண்டராசனின் ’சாராய அணியை’ தடுத்து பாதுகாத்துக் கொண்டனர். போலீசார் எதிர்புறமாக அவர்களை நெட்டித் தள்ளி அருகிலிருந்த இருட்டுச் சந்துக்குள் கொண்டு சென்று விட்டனர். அங்கிருந்து கொண்டு விசிலடித்துக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் இருந்தனர்.
இதற்குள் பேசிக் கொண்டிருந்த ஊர்கமிட்டியைச் சேர்ந்தவரிடமிருந்து மைக்கை வாங்கிய தோழர் வாஞ்சிநாதன், போலீசார் இந்த சமூகவிரோத கும்பலை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென்று எச்சரித்தார். மேலும் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் தோழர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும், மக்கள் யாரும் கூட்டத்தை விட்டு விலகத் தேவையில்லை என்றும் அறிவித்தார். விசில் சத்தம் அதிகரிக்கவே கலைக்குழு தோழர்கள் அழைக்கப்பட்டனர். உற்சாகமான பறையொலியும் போர்க்குண மிக்க பாடலும் துவங்கின – விசில் சத்தங்களும் கூச்சல்களும் கீழ் அழுந்தின; மக்களின் கவனம் மேடையை நோக்கிக் குவிந்தது.
நாங்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்த கும்பலை நோக்கிச் சென்றோம். எப்படி கோஷம் போடுவது, என்ன கோஷம் போடுவது என்று திட்டமிடாமல் வந்திருந்தனர். ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் கத்தித் தீர்த்தனர். சிலர் வைகுண்டராசன் வாழ்க என்றனர், சிலர் நாடார்களைப் பற்றிப் பேசாதே என்றனர், மொத்தம் 40 பேர் வரை இருக்கலாம். தினத்தந்தியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பொறுப்பாக வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் – புரிந்து கொள்ள முடிந்தது. அந்த கும்பலில் நின்று ஆவேசமாக கத்திக் கொண்டிருந்த ஒருவரை ஏட்டு ஒருவர் விளித்தார்,
“யேல நீ இங்கெ என்னலெ செய்தா?”
“அண்ணாச்சி நீங்களா, நல்லா இருக்கியளா” என்று அவரை நெருங்கியவன், தன் கையிலிருந்த செல்போனில் எதையோ காட்டி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். பின் மீண்டும் கூட்டத்தோடு சேர்ந்து ஆவேச முகம் காட்டத் துவங்கினான். தொழில்முறை நெருக்கமாக இருக்கலாம்; நமக்குத் தெரியவில்லை. மீண்டும் மேடையை நோக்கித் திரும்பினேன். மேடைக்கு வலது பக்கவாட்டில் சிறு கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர், “இன்னிக்கு நல்லா வசமா மாட்டுவானுவனில்லா பாத்தேன், ஓடிட்டானுவளே” என்ற தேனீர் கடைக்காரரிடம் மளிகைக் கடைக்காரர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தோழர்களை சுட்டிக்காட்டினார், “அந்தா பாருவே கைல எந்தாம் பெரிய கம்பு வச்சிருக்காவன்னி… அந்த தெள்ளவாரிப் பயலுவ மாட்டியிருந்தா பல்லைக் களத்தி கையில குடுத்து அனுப்பியிருப்பாவ” என்று சிரிக்கத் துவங்கினார். பக்கத்திலிருந்த பலரும் அதை ஆமோதித்து சிரித்துக் கொண்டனர். மேடையில் வெவ்வேறு கடற்கரை ஊர்களைச் சேர்ந்த கமிட்டி பிரதிநிதிகளும் தலைவர்களும் உரையாற்றத் துவங்கியிருந்தனர்.
வைகுண்டராசன் தங்கள் ஊரிலேயே காசு கொடுத்து உதிரியான நபர்களை வளைத்து வைத்திருப்பதையும், கடற்கரையோர கிராமங்களில் பிளவு ஏற்படுத்தி வைத்திருப்பதையும் வேதனையோடு விளக்கினர். தனக்கு இணங்காதவர்களை நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குவது, எதிர்ப்பவர்களைக் கொல்வது என்று ஒழுங்கமைக்கப்பட்ட மாஃபியா கும்பலைப் போல் வைகுண்டராசன் செயல்பட்டு வரும் விதத்தை ஆற்றாமையோடு விவரித்தனர். தாது மணல் அள்ளுவதால் ஏற்படும் கதிர் வீச்சு அபாயங்களையும் அதனால் ஏற்படும் புற்றுநோய் தாக்குதலையும் அவர்கள் விவரித்து, இது மீனவர்களின் பிரச்சினை மட்டுமல்ல – எல்லா மக்களுக்குமான பிரச்சினை என்பதையும் கடலும் கடல்சார்ந்த வளங்களும் மீனவர்களுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே சொந்தம் என்பதையும் எடுத்துரைத்தனர்.
ஊர்கமிட்டி தலைவர்களின் கருத்துரைகளைத் தொடர்ந்து ம.உ.பா மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ சிறப்புரை ஆற்றினார். மணல் கொள்ளையன் வைகுண்டராசனுக்கு எதிரான இந்த பொதுக் கூட்டத்திற்கு முதலில் தடைவிதித்த ’அம்மாவின்’ அதே போலீசு தான் இப்போது அனுமதியளித்துள்ளது என்றும், மணல் அள்ள முன்னர் அனுமதியளித்த அதே ‘அம்மா’ தான் இப்போது தற்காலிக தடை விதித்துள்ளார் என்பதையும் சொல்லி விட்டு, வைகுண்டராசனுக்கு எதிராக பேச அனுமதித்த ‘அம்மாவின்’ விருப்பத்திற்கு வைகுண்டராசனின் ஆட்கள் தடையாக இருக்கிறார்கள் என்றும், அப்படி ’அம்மாவின்’ விருப்பத்திற்கு தடையாக இருந்தால் என்ன கதியாகும் தெரியுமா என்றும் லேசாக ஒரு பிட்டைப் போட்டார். அது வரை மேடையின் பின்புறமிருந்து விசிலடித்துக் கொண்டிருந்தவர்கள் மொத்தமாக அடங்கிப் போய் விட்டனர். வடமாவட்ட அக்கினிச் சட்டி சூரியகுல ”சத்திரியர்கள்” தான் அப்படியென்றால் தென்மாவட்ட வலங்கை உய்யகொண்ட ரவிகுல “சத்திரியர்களும்” இப்படித்தான் – ’அம்மா’ என்றால் சப்தநாடிகளையும் ஒடுக்கிக் கொண்டு வாலை தொடையிடுக்கில் சொருகிக் கொள்வது தான் “சத்திரிய தர்மம்” என்பதை செயல்முறையாக விளக்கிக் காட்டினார் தோழர் ராஜூ.
தொடர்ந்து பேசிய தோழர் ராஜூ, மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் முந்தைய போராட்ட அனுபவங்களை விவரித்து போராட்டங்களில் பொய் வழக்குகளையும், சிறைத் தண்டனைகளையும் எதிர்கொள்ளாமல் குறுக்கு வழியில் வெற்றி பெரும் வாய்ப்புகள் இல்லை என்பதை விளக்கினார். மணல் கொள்ளைக்கெதிரான போராட்டம் இந்தப் பொதுக்கூட்டத்தோடு நின்று விடுவதல்ல என்றும் தொடர்ச்சியான போராட்டங்களின் தேவையையும் விளக்கிப் பேசினார்.
தோழர் ராஜூவைத் தொடர்ந்து இறுதியாக சிறப்புரையாற்ற வந்தார் மக்கள் கலை இலக்கியக் கழக மாநில செயலாளர் தோழர் மருதையன். சந்தன மரங்களை வெட்டிய வீரப்பனைக் கொள்ளையன் என்றால் மணலைத் திருடி விற்கும் வைகுண்டராசனை எப்படி தொழிலதிபர் என்பது என்று கேள்வியெழுப்பினார். மேலும் இன்று காசுக்கும் குவார்ட்டருக்கும் கூச்சலிட வந்திருக்கும் இதே கும்பல், சில்லறை வணிகத்தை அபகரிக்க அந்நிய நிறுவனங்களும் ரிலையன்ஸ் போன்ற பகாசுர கார்ப்பரேட்டுகளும் முயன்ற போது எங்கே போயிருந்தார்கள் என்று கேள்வியெழுப்பினார். பெருவாரியான நாடார் உழைப்பாளிகள் ஈடுபட்டிருந்த சில்லறை வணிகத்தைக் காப்பாற்ற புரட்சிகர அமைப்புகள் முன்னெடுத்த இயக்கங்களை விவரித்த தோழர் மருதையன், தினசரி காலை மூன்று மணி துவங்கி நள்ளிரவு 11 மணி வரை ஓயாமல் உழைக்கும் நாடார்களுக்கு கொள்ளையன் ஒருவனைப் பிரதிநிதி என்று சொல்வது அந்த மக்களை இழிவு படுத்துவதாகும் என்று இடித்துரைத்தார்.
தொடர்ந்து, தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராசன், ஆற்றுமணல் கொள்ளையன் ஆறுமுகசாமி மற்றும் கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பழனிசாமி ஆகியோரை இணைக்கு மையச்சரடு தனியார்மயம் என்பதை புள்ளிவிவரங்களோடு விளக்கினார். இயற்கை வளங்களைத் தனியார்கள் சூரையாடுவதற்கு வழிசெய்யும் விதமாக காட் ஒப்பந்தத்திற்குப் பிறகு சட்டங்களும் விதிமுறைகளும் மாற்றியமைக்கப்பட்டதை விளக்கிப் பேசினார். எனவே இதைத் தனித்தனியான பிரச்சினையாகப் பார்க்காமல் ஒரே கொள்ளைத் திட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் இதை எதிர்த்த போராட்டங்களும் ஒருமுகமான தாக்குதலாக இருக்க வேண்டுமென்பதையும் விவரித்தார்.
தாதுமணல் கொள்ளை பற்றிய பல்வேறு புள்ளிவிவரங்களை சுவையாகவும் எளிமையாகவும் விவரித்த தோழர் மருதையன், இந்தக் கொள்கையும் கூடங்குளம் அணுமின் நிலைய அனுமதியும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார். அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதன் பின்னே நடந்த மறைமுக பேரமாக தோரியம் உள்ள தாதுமணலை ஏற்றுமதி செய்ய இருந்த விதிகள் தளர்த்தப்பட்டன என்பதை அம்பலப்படுத்தினார். எழுச்சிகரமாக இருந்த அந்த உரையின் இறுதியில் எதிரியின் ஆற்றலைப் பார்த்து நாம் அஞ்சத் தேவையில்லை என்றும், அதற்காக ஓட்டுக்கட்சிகளை நம்பி அவர்களின் பின்னே செல்வது தோல்விக்கு வழிவகுத்து விடும் என்றும் சொன்னார். பிரம்மாண்டமான எதிரிகளான போஸ்கோ, டாடா போன்றவர்களை கலிங்காநகர், சிங்கூர், லால்கர் போன்ற பகுதிகளில் நடந்த மக்கள் போராட்டங்களே விரட்டியடித்தன என்பதை விளக்கி மக்கள் போராட்டங்களின் மேல் நம்பிக்கையூட்டினார்.
தோழரின் உரையைத் தொடர்ந்து புரட்சிகர கலைநிகழ்ச்சி நடந்தது. ”திருச்செந்தூரின் கடலோரத்தில்..” என்ற பக்திப்பாடலை பின் வருமாறு ரீமிக்ஸ் செய்திருந்தனர் – “திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராசன் அரசாங்கம்… தேடிக் காலில் விழுவோர்க்கெல்லாம்…” மக்களின் உற்சாகம் கரைபுரண்டோடியது. தொடர்ந்த கலைக்குழுவின் நிகழ்ச்சிகளை இரசித்த மக்கள் பொதுக் கூட்டத்தின் இறுதி வரை கட்டுப்பாட்டோடு இருந்தனர்.
பேனர்
மேடை
பார்வையாளர்
கலைக் குழு
கலைக் குழு
கலைக் குழு
தோழர் வாஞ்சிநாதன்
தோழர் ராஜூ பத்திரிகையாளர் பேட்டி
தோழர் ராஜூ பத்திரிகையாளர் பேட்டி
கலைக்குழு
தோழர் ராஜூ உரை
தோழர் மருதையன்
கலை நிகழ்ச்சி
கலை நிகழ்ச்சி
கலை நிகழ்ச்சி
கலை நிகழ்ச்சி
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
அந்தத் துறையிலிருந்து ஓய்வு பெற்று சென்ற பேராசிரியர் துறைத் தலைவரை சந்திக்க வந்திருக்கிறார். அறைக்குள் வரும் ஒரு சக பெண் ஊழியர், “சார், ரிட்டையர்மென்ட் வாழ்க்கை உங்களுக்கு நல்லா ஒத்து வருது சார், பார்க்க மிடுக்காகிட்டீங்க” என்று உபச்சாரமாக சொல்கிறார்.
“அப்படியாம்மா, ஹிஹி. இது மாதிரி ஏற்கனவே 2 பேரு எங்கிட்ட சொல்லிட்டாங்க. அப்படி சொன்னவங்க எல்லாருமே பொண்ணுங்கதான். இதுக்கு அர்த்தம் என்ன?” ஹெ ஹெ என்று சிரிக்கிறார்.
அந்த பெண் ஊழியர், தர்ம சங்கடத்தோடு துறைத் தலைவரின் அறையை விட்டு அவசர அவசரமாக வெளியேறுகிறார்.
‘குடும்பம், கணவன்–மனைவி உறவு, பாலியல் ஒழுக்கம் எல்லாம் பத்தாம் பசலித்தனம். அதை எல்லாம் கட்டுடைக்க வேண்டும். பின் நவீனத்துவ சகாப்தத்தில் யார் யாருடனும் உறவு வைத்துக் கொள்ளலாம். இருவரும் சம்மதித்தால் அதில் தலையிட வேறு யாருக்கு உரிமையிருக்கிறது.’
இப்படி ஒரு தத்துவத்தை முன் வைத்து கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை தூக்கிப் பிடிப்பதுதான் இன்றைய கார்ப்பரேட் மற்றும் இலக்கிய மேட்டுக்குடியினரின் ஒழுக்கத்திற்கெதிரான கலகமாம்.
இதில், ‘பெண்கள் தமது விருப்பத்தை முதலில் சொல்ல மாட்டார்களாம். ஆண்தான் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும்’ என்றும் அவர்களாகவே அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.
பெண் மறுத்தாலும், மேலும் மேலும் வற்புறுத்துவது தமது பாலியல் உரிமை, தனது மட்டுமல்ல, அந்தப் பெண்ணின் பாலியல் உரிமை என்று பெண்ணுரிமையையும் தூக்கிப் பிடிக்கிறார்கள். இந்த கேவலமான தத்துவத்துடன் அதிகாரமும் சேரும் போது ஆண்களின் கையில் அது ஒரு பயங்கரமான ஆயுதமாக மாறி விடுகிறது.
தன் மீது கொண்ட அக்கறையாகவும், அரை நகைச்சுவையாகவும் அதிகாரத்தில் உள்ளவர்கள் வைக்கும் சொல்லாடல்களை கார்ப்பரேட் உலகில் எதிர் கொள்ளும் பெண் என்ன செய்ய வேண்டும்?
1999-ம் ஆண்டு அவுட்லுக் பத்திரிகையில் வேலை செய்த ஒரு பெண் பத்திரிகையாளரின் இடுப்பு தெரியும் கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றை அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் சுற்றுக்கு விடுகிறார் சக ஊழியர் ஒருவர். அது குறித்து நிர்வாகத்துக்கு பாலியல் துன்புறுத்தல் புகார் அனுப்புகிறார் பாதிக்கப்பட்ட பெண். பொறுப்பில் இருந்த ஷோமா சவுத்ரி, ‘இப்படிப்பட்ட புகார்களை நிர்வாகம் விரும்புவதில்லை, சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து மன்னிப்பு பெற்றுக் கொண்டு விஷயத்தை முடித்துக் கொள்’ என்று அறிவுறுத்துகிறார். பாதிக்கப்பட்ட பெண் வேறு வழியில்லாமல் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறார்.
ஆனால் 3 மாதங்களுக்குள் குற்றம் செய்த நபருக்கு பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது. வெறுத்துப் போய் தன் வேலையையும், பத்திரிகைத் துறையையும் விட்டு விலகினார் அந்த பத்திரிகையாளர். ரகேஜா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமாக வினோத் மேத்தாவை ஆசிரியராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அவுட்லுக் பத்திரிகையின் அப்போதைய நிர்வாக ஆசிரியராக இருந்தவர் தருண் தேஜ்பால்.
அதிகாரம் எப்படி வேலை செய்கிறது, அதிகாரத்துக்கு கீழ் வருபவர்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறித்த ஆழமான அறிவு பெற வாய்ப்பிருக்கும் சூழலில் வளர்ந்தவர் தருண் தேஜ்பால். அவரது தந்தை இராணுவ அதிகாரியாக பணியாற்றிய பெங்களூரு, பரேலி, ஜோர்ஹத், மும்பை என்று இராணுவக் குடியிருப்புகளில் வளர்ந்தார். பஞ்சாபில் படித்து சண்டிகரிலும் தில்லியிலும் இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே, பைனான்சியல் எக்ஸ்பிரஸ், கடைசியாக அவுட்லுக் பத்திரிகைகளில் வேலை செய்யும் போது இலக்கிய வட்டங்களிலும், பத்திரிகையாளர் வட்டங்களிலும் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.
தெகல்கா ஆரம்பித்த பிறகு துணிச்சலான புலன் விசாரணை அறிக்கைகளுக்கான பணிகளைச் செய்த அனிருத்தா பகால், ஆஷிஷ் கேத்தான் போன்ற பத்திரிகையாளர்களுடன் இந்த கால கட்டத்தில் தொடர்பு கொண்டார். 2000-ம் ஆண்டு தெகல்கா இணைய தளத்தை ஆரம்பித்தார்.
2000-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஹன்சி குரோன்யே கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட விபரங்கள் வெளியானதை அடுத்து, அப்போதைய இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரை வைத்து கிரிக்கெட் அதிகாரிகள், விளையாட்டு வீரர்களுடனான உரையாடல்களை பதிவு செய்து முகமது அசாருதீன், அஜய் ஜடேஜா, அஜய் ஷர்மா போன்ற வீரர்களின் சூதாட்ட தொடர்புகளை அம்பலப்படுத்தியது தெகல்கா.
2001-ம் ஆண்டு வெஸ்ட் கேட் என்ற பாதுகாப்புத் துறை உபகரணங்களை விற்கும் லண்டன் நிறுவனமாக நடித்து பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அப்போதைய பாஜகவின் தேசியத் தலைவர் பங்காரு லட்சுமணன் போன்றவர்களை லஞ்ச குற்றச்சாட்டில் சிக்க வைத்து பதவி விலகச் செய்தது தெகல்காவின் புலன் விசாரணை. அப்போதிருந்தே பாஜகவுக்கு தெகல்கா மீது வஞ்சம் வந்து விட்டது. தெகல்கா காங்கிரஸ் கட்சியின் கைக்கூலி பத்திரிகை என்று குற்றம் சாட்டி வந்தார்கள்.
2007-ம் ஆண்டு குஜராத் நரோடா பாட்டியா கலவரங்களில் தாம் நடத்திய கொலை வெறிச் செயல்களை விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் ஊழியர்களை சொல்ல வைத்து அந்த வீடியோக்களை வெளியிட்டது தெகல்கா. அந்த ஆண்டு தெகல்கா பத்திரிகையாக வெளி வர ஆரம்பித்தது. 2009-ம் ஆண்டு ஏர்செல்-மேக்சிஸ் வணிக ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தயாநிதி மாறன் லஞ்சம் வாங்கியதை அம்பலப்படுத்தியது.
ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களுக்காக, கொள்ளையடிக்கும் கார்ப்பெரேட்டுகளுக்கு எதிராக தெகல்கா செயல்பட்டது. அதில் ஆஷிஷ் கேத்தான், அனிருத்தா பகால் போன்ற பத்திரிகையாளர் முன்னணி வீரர்களாக இந்த ரகசிய நடவடிக்கைகளை செய்து அரசியல் வாதிகள் மற்றும் கார்ப்பொரேட்டுகளின் மக்கள் விரோத, ஊழல் செயல்பாடுகளை அம்பலப்படுத்தினார்கள்.
தெகல்கா பத்திரிகையாளர்களின் தீரமிக்க புலனாய்வு பணிகள் அனைத்தும் தருண் தேஜ்பாலின் காலடியில் வைக்கப்பட்டு அவற்றின் புகழ் அவருக்கு மகுடமாக சூட்டப்பட்டது. 2007-ம் ஆண்டு தி கார்டியன் – அவரை இந்தியாவில் செல்வாக்கு வாய்ந்த நபர்களின் பட்டியலில் சேர்த்திருந்தது. 2009-ம் ஆண்டு பிசினஸ் வீக் பத்திரிகையின் “சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில்” ரத்தன் டாடாவுக்கு அடுத்து, சச்சின் டெண்டுல்கரை முந்தி 47-ம் இடத்தைப் பிடித்திருந்தார்.
தெகல்கா தூக்கிப் பிடித்த சமூக அறச் சீற்றங்களையும், தனக்கு நிதி தருபவர்களின் சமூக விரோதச் செயல்களையும் பிரித்துப் பார்ப்பதில் தருண் தேஜ்பால் சமர்த்தராக இருந்தார்.
கோவா கிராண்ட் ஹையத்
ராமன் கிர்பால் எழுதிய கோவாவின் இரும்புத் தாது மாபியா குறித்த கட்டுரையை வெளியிடாமல் தெகல்கா இருட்டடிப்பு செய்தது. கோவா மாநிலத்தின் பொதுக் கணக்குக் குழுவின் மதிப்பீட்டின்படி மாநில அரசுக்கு ரூ 3,000 கோடி இழப்பை ஏற்படுத்திய ஊழல் அது. ராமன் கிர்பால் தெகல்காவை விட்டு வெளியேறி பர்ஸ்ட் போஸ்டு இணைய இதழுக்கு மாறிய பிறகு அந்த கட்டுரை வெளியிடப்பட்டது.
வேதாந்தாவின் பத்திரிகை செய்தியை லாஞ்சிகர் மற்றும் நியமகிரியில் அதன் நிறுவன சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் பற்றிய கட்டுரையாக தெகல்கா வெளியிட்டது. அதை எழுதியதாக குறிப்பிட்டிருந்த நிருபர், பின்னர் “தான் அதை எழுதவில்லை” என்று வெளிப்படையாக அறிவித்தார்.
2011-ம் ஆண்டு தெகல்காவின் சார்பில் திங்க் (சிந்தனை) என்ற நிகழ்வு கோவாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. தெகல்காவின் திங்க் 2011 திருவிழாவுக்காக தெகல்காவின் பதிப்பாளரும் தருண் தேஜ்பாலின் சகோதரியுமான நீனா தேஜ்பால் கோவா முதல்வர் திகம்பர் காமத்தை சந்தித்தார். கோவாவின் பம்போலின் கடற்கரையில் உள்ள கிராண்ட் ஹையத் ஹோட்டலில் திங்க் நிகழ்வு நடத்தப்பட்டது. ராமன் கிர்பாலின் கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்ட சுரங்கத் தொழில் முதலாளிகளும் அந்த ஹோட்டலின் பங்குதாரர்களாக இருந்தனர். அந்த ஹோட்டல் கடற்கரையில் கட்டிடங்கள் கட்டுவதற்கான விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது.
திங்க் 2011 நிகழ்வின் புரவலர்களாக எஸ்ஸார் குழுமம், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. நீனா தேஜ்பால் “எஸ்ஸாருக்கும் தெகல்காவுக்கும் ஒரே அறங்கள்தான்” என்று கூறினார். நியமகிரியிலும், ஒடிசாவிலும் பழங்குடி மக்களின் நிலங்களை பறிப்பது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், தொலைதொடர்புத் துறை ஊழல் என்று உச்சி வரை ஊழல் சேற்றில் மூழ்கியிருந்த அந்த கார்ப்பரேட்டுகளின் நிதியில் தெகல்கா தனது ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை தொடர முடிவு செய்திருந்தது.
குஜராத்தின் அதானி குழுமம், யுனைட்டட் பாஸ்பேட், கோகோ கோலா போன்ற கார்ப்பரேட்டுகளும் தெகல்காவின் புரவலர்கள் பட்டியலில் இருந்தனர்.
தெகல்கா – கார்ப்பரேட் உறவு
கர்நாடகா சுரங்க ஊழலில் அரசுக்கு ரூ 890 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிஏஜி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட, எடியூரப்பாவின் மகனுக்கு ரூ 20 கோடி நன்கொடை செலுத்திய ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் தெகல்காவின் புரவலர் பட்டியலில் இருந்தது. மேதா பாட்கர், பியான்கா ஜேக்கர், முன்னாள் மாவோயிஸ்ட் புரட்சியாளர் ஆகியோர் பங்கேற்ற நிகழ்வை வழங்கியது இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு போர்க் கப்பல்களை வழங்குவதற்கான ரூ 920 கோடி ஒப்பந்தம் போட்டிருந்த பிபாவவ் என்ற ஆயுத தரகு நிறுவனம்.
திங்க் நிகழ்வில் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தவர்களில் ஒடிசாவின் சுரங்க மற்றும் கேபிள் டிவி அதிபர் மற்றும் பிஜேடி நாடாளுமன்ற உறுப்பினர் பாய்ஜெயந்த் ஜெய் பாண்டா, மேவரிக் மொகல் என்று வர்ணிக்கப்பட்டு ‘திப்புசுல்தானின் வாளை கொண்டு வந்தவர், மகாத்மா காந்தியின் கண்ணாடியை மீட்டு வந்தவர், ஆண்டு தோறும் கவர்ச்சிகரமான மாடல்களை வைத்து காலண்டர் வெளியிடுபவர்’ என்று போற்றப்பட்ட விஜய் மல்லையா ஆகியோர் அடங்குவர்.
லீனா மணிமேகலை டாடாவின் பணத்தை வாங்கிக் கொண்டு ஏழை பெண்களின் கதையை சொன்னது போல ‘இது எல்லாம் ஏழைகளின் கதைகளை சொல்வதற்குத்தான்’ என்று நியாயப்படுத்தினார், தெகல்காவின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரி.
இந்த ஆண்டு நவம்பர் 8 முதல் 10ம் தேதி வரை நடந்த மூன்றாவது திங்க் நிகழ்வில்தான் தருண் தேஜ்பால் தனது கார்ப்பரேட் அதிகார, ஆண் உரிமையை பயன்படுத்திக் கொண்டு உடன் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் மீது பாலியல் தாக்குதல்கள் நடத்தியிருக்கிறார். தெகல்கா கார்ப்பரேட்டுகளின் தயவோடு நிலை நின்ற பிறகு தருண் தேஜ்பாலிடமும் அத்தகைய கயவாளித்தனம் வெளிவருகிறது.
திங்க் விழாவின் ஆரம்ப விழா இரவில் முதல் தாக்குதல் நடந்திருக்கிறது. ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோவையும் அவரது மகளையும் வழி நடத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்த அந்த பெண் பத்திரிகையாளர் நவம்பர் 7-ம் தேதி முழுவதும் அவர்கள் கோவாவை சுற்றிப் பார்க்கும் போது உடன் இருந்திருக்கிறார். இரவில் அவர்களை ஹோட்டல் அறையில் விடுவதற்கு தேஜ்பாலும் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரும் சென்றிருக்கின்றனர்.
அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையிலிருந்து கீழே மின் தூக்கியில் இறங்கும் போது தேஜ்பால் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கியிருக்கிறார். அதை எதிர்த்து தடுத்த பாதிக்கப்பட்ட பெண், தான் தேஜ்பாலின் மகளின் நெருங்கிய தோழி என்பதையும் தமது குடும்பங்களின் நெருங்கிய நட்பையும் சிறு குழந்தையாகவே தன்னை தேஜ்பாலுக்கு தெரியும் என்பதையும் நினைவூட்டியிருக்கிறார். எதுவும் தேஜ்பாலின் காதில் விழவில்லை. லிஃப்ட் தரைத்தளத்துக்கு வந்த பிறகு பாதிக்கப்பட்ட பெண் அவசர அவசரமாக தப்பி ஓடியிருக்கிறார்.
விஜய் மல்லையா
தன்னை விட்டு ஓடிப் போய்க் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து தேஜ்பால் “இதுதான், உன் வேலையை தக்க வைத்துக் கொள்ள மிக எளிதான வழி” என்று மிரட்டியிருக்கிறார். ஒரு டாக்சி பிடித்து தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பிய பாதிக்கப்பட்ட பெண் தன் நண்பர்களிடம் நடந்ததை சொல்லியிருக்கிறார். லிஃப்டுக்குள் தேஜ்பால் தன்னை கைகளால் அத்து மீறியதாக அந்தப் பெண் தன் தோழிகளிடம் பின்னர் கூறியிருக்கிறார். நள்ளிரவுக்குப் பிறகு தேஜ்பால், லிஃப்டில் நடந்த தாக்குதலை நினைவூட்டி “விரல் நுனிகள்” என்ற வார்த்தைகளுடன் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.
அடுத்த நாள் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த பணிகளை தொடர்ந்திருக்கிறார். டி நீரோ, அவரது மகள், சர் வி எஸ் நாய்பால் மற்றும் சீமாட்டி நாய்பால் மற்றும் தேஜ்பாலின் மனைவியுடன் கோவா ஆளுனர் வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்றிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் தேஜ்பாலின் மனைவியிடம் நடந்ததை சொல்லவில்லை.
நீரோவையும், அவரது மகளையும் அமிதாப் பச்சனின் நிகழ்வுக்கு அழைத்துச் செல்லும்படி தேஜ்பால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சொல்லியிருக்கிறார். அவர்களை அமிதாப் பச்சனின் நிகழ்வு நடந்த அரங்கில் விட்டு விட்டு தனது ஹோட்டலுக்கு திரும்பிய பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேஜ்பால் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். இன்னொரு தெகல்கா ஊழியரின் எண்ணிலிருந்து தொலைபேசியில் அழைத்து உடனடியாக மைய நிகழ்வு நடக்கும் ஹோட்டலுக்கு வரச் சொல்லியிருக்கிறார்.
நீரோ தனது அறையிலிருந்து எதையோ எடுத்து வரச் சொன்னதாகக் கூறி அவரது அறைக்கு போக பாதிக்கப்பட்ட பெண்ணை தன்னுடன் வரச் சொல்லியிருக்கிறார் தேஜ்பால். தேஜ்பாலுடன் லிஃப்டில் நுழைய மறுத்த அவரை தேஜ்பால் வலுக்கட்டாயமாக லிஃப்டுக்குள் செலுத்தி, அவரது மறுப்புகளுக்கு நடுவே மீண்டும் பாலியல் ரீதியாக தாக்கியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் தேஜ்பாலிடமிருந்து விடுவித்துக் கொண்டு மின் தூக்கியிலிருந்து வெளியேறி தனது தோழி ஒருத்தியிடம் நடந்ததை சொல்லியிருக்கிறார்.
பாதிக்கப்பட்டப் பெண் அவரது தோழியான தேஜ்பாலின் மகளை சந்தித்து நடந்ததை சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து தேஜ்பாலின் மகள், தேஜ்பாலை திட்டியிருக்கிறார். டி நீரோ பற்றிய செய்தி ஒன்றை சொல்லப் போன பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தேஜ்பால், “நீ என் மகளிடம் நடந்ததை சொன்னது தவறு” என்று கூறியிருக்கிறார்.
தனது நண்பர்களிடம், தாயிடமும் நடந்ததை சொன்ன பாதிக்கப்பட்ட பெண் தனக்கு எப்படியும் வேலை போய் விடும் என்று கூறியிருக்கிறார். அடுத்த நாளும் தனக்கு இடப்பட்டிருந்த டி நீரோ, மற்றும் அவர் மகளுடன் உடன் செல்லும் பணியை தொடர்ந்திருக்கிறார். அப்போது தேஜ்பாலிடமிருந்து வரிசையாக குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன.
தருண் தேஜ்பால்
தன் மகளிடம், இருவருக்கிடையே “நடந்தது வெறும் குடிகார கலாட்டாதான்” என்று சொல்லி விடுமாறு ஒரு குறுஞ்செய்தி, “வெறும் கலாட்டாவைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்று சொல்லுமாறு அடுத்த குறுஞ்செய்தி, “இது போன்ற ஒரு அற்பமான விஷயத்தைப் போய் என் மகளிடம் சொல்வாய் என்று நம்பவே முடியவில்லை. தந்தை-மகள் உறவைப் பற்றி உனக்கு எந்த புரிதலும் இல்லை” என்று குறுஞ்செய்திகள் அணிவகுத்தன.
நவம்பர் 9-ம் தேதி தேஜ்பாலுடன் டி நீரோவின் திட்டங்களைப் பற்றி தொலைபேசியில் பேசினாலும், பொதுவாக அவரிடமிருந்து விலகியே இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் தனது நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். நவம்பர் 9-ம் தேதி டி நீரோவையும், அவரது பெண்ணையும் விமான நிலையத்தில் அனுப்பிய பிறகு தேஜ்பாலுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் நவம்பர் 16-ம் தேதி மீண்டும் குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தன என்றும் தனது நண்பர்களிடம் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார்.
முதலில் தன் மகளிடம் அவர் பேசி விட்டாரா, அவர் சமாதானமாகி விட்டாரா என்று விசாரிக்கும் குறுஞ்செய்தி.
“தனது நெருங்கிய தோழியை தனது தந்தை பாலியல் ரீதியாக தாக்கியது குறித்து அவர் எப்படி சமாதானமாக முடியும்”.
“ஏன் இப்படி எல்லாம் கடுமையாக பேசுகிறாய்?”
“எனக்கு இதற்கு மேல் எந்த செய்திகளும் அனுப்பாதீர்கள். நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியும்”
“அப்படியா? உன்னை எப்போதும் என்னுடைய மிகச் சிறந்த ஊழியர்களில் ஒருவராகத்தான் நடத்தி வந்தேன். ஒரு குடி போதை கலாட்டாவை வைத்துக் கொண்டு நீ இவ்வளவு கடுமையான வார்த்தைகளை பேசுகிறாய்”.
“ஒரு தடவை இல்லை, இரண்டு தடவை நடந்தது தருண். அது நிச்சயம் குடிபோதை கலாட்டா இல்லை. நீங்கள் எனக்கு செய்தவை கொடூரமானவை. நான் எந்த போதையிலும் இருக்கவில்லை. உங்களை நிறுத்தும்படி பல முறை சொன்னேன்”.
தெகல்கா நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரி
இது தொடர்பாக ஷோமா சவுத்ரிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் தேஜ்பால் அவரை இரண்டு முறை பாலியல் ரீதியாக தாக்கியதாக புகார் தெரிவித்துள்ளார். தன்னை தாக்கியது தான் பல ஆண்டுகளாக பெருமளவு மதித்த, வியந்த தருண் என்பதை ஜீரணித்துக் கொண்டு புகார் சொல்வதற்கு நேரம் பிடித்ததாகவும் அவர் தனது மின்னஞ்சலில் தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து தருண் தேஜ்பால் மன்னிப்பு கடிதம் அனுப்பியிருக்கிறார். தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி, தனது சக பத்திரிகையாளரின் மகளாகவும், பின்னர் சக பத்திரிகையாளராகவும் அறிந்த பெண்ணின் நம்பிக்கையை உடைத்ததற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். தன்னுடைய எடை போடும் திறனில் ஏற்பட்ட பிறழ்வுக்காக வருந்துவதாக சொல்கிறார். இந்த பிறழ்வுக்கு பரிகாரமாக காந்தி போல, ஆறு மாதங்கள் தெகல்கா ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி இருப்பதாகவும் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டிருக்கிறார்.
நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக கருத்து சொல்லும் போது, பிரதமர் மன்மோகன் சிங், “நிலக்கரி வயல்களை தனியார் மயமாக்குவது என்ற கொள்கையில் எந்த தவறும் இல்லை. ஓரிரு விண்ணப்பங்கள் தொடர்பாக முடிவு எடுப்பதில் சில தவறுகள் நடந்திருக்கலாம்” என்று சொன்னது போல, ‘தனது நடத்தை, கருத்து எதிலும் தவறு இல்லை, பெண்களுடனான தனது நடத்தையில் பிரச்சனை இல்லை. இந்த முறை முடிவு எடுப்பதில் தவறு நேர்ந்து விட்டது’ என்று வருந்துகிறார் தருண் தேஜ்பால்.
இந்தத் தகவலை ஷோமா சவுத்ரி தெகல்கா ஊழியர்கள் அனைவருக்கும் அனுப்புகிறார். தேஜ்பால் மற்றும் சோமாவின் நடத்தையை எதிர்த்து ரேவதி லவுல் என்ற பெண் பத்திரிகையாளர் தெகல்காவிலிருந்து பதவி விலகியிருக்கிறார். பல தெகல்கா ஊழியர்கள் தேஜ்பால் மற்றும் ஷோமா சவுத்ரியின் அயோக்கியத்தனத்தை சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.
தேஜ்பால் நடத்திய தெகல்கா பத்திரிகையில் பணியாற்றிய பத்திரிகையாளர்களால் தமது ஊழல், கொலைகார, முகமூடிகளை கழற்றப்பட்டதால் கொலை வெறியில் இருந்த இந்துத்துவ பரிவாரங்கள் இப்போது தருண் தேஜ்பாலோடு சேர்த்து மொத்த தெகல்காவையும் வில்லனாக்க முயற்சிக்கின்றனர்.
தருண் தேஜ்பாலின் ‘முடிவு எடுப்பதில் பிறளல்’ அவர் மீது பாஜகவுக்கு இருக்கும் கடுப்பினால் நாடு தழுவிய செய்தியாகியிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான பெண்கள் பணியிடங்களில், இது போன்ற இரு பொருள் நகைச்சுவை, வார்த்தை சீண்டல்கள், பணி வாழ்வில் முன்னேற கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரை, வெளிப்படையான மிரட்டல் இவற்றுக்கு நடுவில் வாழ்கிறார்கள். எந்த கட்டத்தில் முறித்துக் கொள்வது, முறித்துக் கொள்வதால் ஏற்படும் பொருளாதார விளைவுகள், அல்லது பிரச்சனையை அம்பலப்படுத்துவது, அதனால் ஏற்படும் சமூக விளைவுகள் என்று இருதலைக் கொள்ளி எறும்புகளாக திகைக்கிறார்கள். இந்த நிலையை பயன்படுத்திக் கொள்ளும் அந்த மனித மிருகங்கள் தமது வேட்டையை தினம் தினம் நடத்தி வருகின்றன.
குற்றவியல் பிரிவு 376 (வல்லுறவு), 372(2)- தனது அதிகார பாதுகாப்பில் உள்ள பெண்ணின் மீது வல்லுறவு, 354 – பெண்ணின் மதிப்பை களங்கப்படுத்துவது ஆகிய பிரிவுகளில் தேஜ்பால் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. 50 வயதாகும் அவர் இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைக்கு அனுப்பப்படலாம்.
ஆனால், தேஜ்பால் வசம் இருக்கும் பண பலமும், தொடர்புகளின் பலமும் அவருக்கு எதிரான சட்ட போராட்டத்தில் தனக்கு நீதி கிடைப்பதை சாத்தியமற்றதாக்கி விடும் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார். வெள்ளிக் கிழமை தேஜ்பாலின் குடும்பத்திலிருந்து ஒருவர் தாக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குப் போய், அவரது அம்மாவிடம் தேஜ்பாலை பாதுகாக்கும்படி சொல்லியிருக்கிறார். ‘அந்தப் பெண்ணுக்கு என்னதான் வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார். ‘யாரிடமிருந்து சட்ட உதவி பெறுகிறார்’ என்றும் அவர் விசாரித்திருக்கிறார். இது தம்மை அச்சுறுத்தியிருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதனால் தெகல்கா அம்பலப்படுத்திய ஊழல்களும், இந்துமதவெறியர்களின் இரத்த வெறி சாட்சியங்களும் இல்லை என்று ஆகிவிடாது. ஆனால் அத்தகைய நேர்மையின் தீவிரத்தை தருண் தேஜ்பாலின் வக்கிரம் அரிப்பதும் உண்மைதான்.மோடியின் நரவேட்டையை ஆவணமாக்கிய தெகல்கா பத்திரிகை மீது இந்துமதவெறியர்கள் கொண்டிருக்கும் ஜன்மப் பகை அனைவரும் அறிந்த ஒன்றுதான். மற்றபடி பாலியல் வக்கிரங்களை மதங்களிலும், புராணத்திலும், கட்சியிலும் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் தருண் தேஜ்பாலை கண்டிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை.
தெகல்கா காங்கிரசை ஆதரித்தது, காங்கிரசு தெகல்காவை ஆதரித்தது என்ற கூற்றின் உண்மை என்ன? தெகல்கா ஆவணமாக்கிய குஜராத் படுகொலைகளை மிகப்பெரும் ஆயுதமாக்கி இந்துமதவெறியர்களை ஒடுக்குவதற்கு காங்கிரசு முன்வரவில்லை. மாறாக இசுலாமிய மக்களிடம் ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டுமே அதை பயன்படுத்திக் கொண்டது.
தெகல்கா பத்திரிகை கார்ப்பரேட் நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படுவதில் இருக்கும் வீழ்ச்சியும் தருண் தேஜ்பாலின் வீழ்ச்சியும் வேறு வேறு அல்ல. குற்றமிழைத்தது ஒரு தவறு என்றால் அந்த குற்றத்தை “முடிவு கணிப்பதில் ஏற்படும் தவறு” என்று நியாயப்படுத்தவது மாபெரும் தவறு. கார்ப்பரேட் பலம் கொண்ட மனிதர்கள் செய்யும் எந்த கொடுமைக்கும் இத்தகைய வியாக்கியானம் கொடுக்க முடியும்.
கார்ப்பரேட் பத்திரிகைளில் வேலை பார்த்துக் கொண்டே இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியும் என்று மனப்பால்குடிக்கும் பத்திரிகையாளர்கள் தருண் தேஜ்பாலின் வீழ்ச்சியிலிருந்து மட்டுமல்ல, தெகல்காவின் கார்ப்பரேட் அடிமைத்தனத்திலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
தருண் தேஜ்பாலாவாது இத்தகைய பகிரங்கமான கண்டனத்திற்கும், விமரிசனங்களுக்கும் ஆளாகி உள்ளார். ஆனால் சன் டிவியில் அகிலாவை துன்புறுத்திய ராஜாவைக் கண்டிப்பதற்கு தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் பயந்து ஒடுங்கினார்கள். குறைந்த பட்சம் இத்தகைய பாலியல் கொடுமைகளை அதிகாரத்தின் ஆணவத்துடன் செய்யும் நபர்களையும் அவர்களுக்கு வக்காலாத்து வாங்கும் நிறுவனங்களையும் கண்டிப்பதற்காவது பத்திரிகையாளர்கள் முன்வரவேண்டும். அதை விடுத்து தருண் தேஜ்பால் வடக்கே உள்ள ஆபத்தில்லாத ஆசிரியர் என்பதால் கண்டிக்கும் தைரியம் எந்த முன்னேற்றத்தையும் வழங்கி விடாது.
தனது சொந்த வாழ்க்கையின் சொகுசுகளை ஒரு துளிகூட காய்ந்துவிடாமல் ருசிப்பவர்களும், தனது எதிர் காலத்திற்கும் தனது பெண்டு பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் கான்கிரீட் அடித்தளம் அமைத்து உறுதி செய்து கொண்டவர்களும் “என்ன செய்தார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்?” என்ற கேள்வியை ரொம்பவும் ஆக்ரோசமாகக் கேட்கிறார்கள்.
தாதா அமீர் ஐதர் கான்
ஆனால் தாங்கள் கொண்டிருந்த லட்சியத்திற்காக, மக்கள் விடுதலைக்காகத் தனது சொந்த வாழ்வையும், உயிரையும் இழக்கத் தயாராகவிருந்த தொண்டர்கள் எந்த இயக்கத்தில் நிறைந்திருந்தார்கள் என்ற கேள்வியுடன் நவீன கால வரலாற்றைப் புரட்டினால், உலகெங்கும் அது கம்யூனிஸ்டுகளின் தியாக வரலாறாக, போராட்ட வரலாறாகவே இருக்கக் காணலாம். இந்தியாவிலும் இது அப்படித்தான்.
ஆரம்பகால இந்தியப் பொதுவுடைமை இயக்கம் பின்னாளில் நாடாளுமன்ற இயக்கமாகச் சீரழிந்து விட்டாலும், துவக்க காலப் பொதுவுடைமை இயக்கப் போராளிகளின் வரலாறு, தியாகத்திற்கும் போர்க்குணத்திற்கும் சான்று பகர்கிறது.
தோழர் அமீர் ஐதர் கானின் ‘’தென்னிந்தியாவைக் கண்டேன்’’ எனும் தன் வரலாற்று நூல் அத்தகையதோர் வரலாற்றுச் சான்று.
பஞ்சாபில் முஸ்லீம் மதக் குடும்பத்தில் பிறந்து, தென்னிந்தியாவுக்கு வந்து கம்யூனிஸ்ட் கட்சி கட்டிய தாதா அமீர் ஐதர் கான்.
எளிய பஞ்சாபி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவரான கான், சர்வதேச கம்யூனிஸ்டு அகிலத்தின் பிரதிநிதியாக ரசியாவில் சில காலம் செயல்பட்ட பின் இந்தியா திரும்பினார். தென்னிந்தியாவில் கட்சியை உருவாக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னைக்குக் கிளம்பினார் கான்.
மீரட் சதி வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்ததால் தமிழகத்திலும் தலைமறைவாகத்தான் இவர் வாழ வேண்டியிருந்தது. புனை பெயரோ சங்கர். தமிழோ அறவே தெரியாது.
பஞ்சாபி முஸ்லீமாகப் பிறந்து புனைபெயரை இந்துப் பெயராக வைத்துக் கொண்டு, தமிழகத்தில் இந்து சாதிய சம்பிராதயங்களைப் பற்றி ஏதும் தெரியாமல் மொழியும் தெரியாமல் சென்னையில் வந்து இறங்கினார். அறிமுகத்திற்காக சொல்லப்பட்ட ஒரேயொரு நபரும் எதுவும் செய்ய இயலாதெனக் கைவிரித்து விட்டார். சென்னை இப்படித்தான் அவரை வரவேற்றது.
அறிமுகத்துக்கு நண்பர்கள், கைச்செலவுக்கு போதிய பணம், அவசரத் தொடர்புக்குத் தொலைபேசி வசதி, இன்னும் பல முன்னேற்பாடுகளுடன் வெளியூர்ப் பயணம் மேற்கொள்பவர்களின் கணக்கின்படி அடுத்த நாளே கான் பஞ்சாபிற்கு மீண்டும் ரயிலேறியிருக்க வேண்டும்.
ஆனால் தன்னந் தனியானாய் விடப்பட்ட போதும், இந்த முகம் தெரியாத ஊரில், மாத்யூஸ் என்ற ரயில்வேத் தொழிலாளியிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு தனது பணியைத் தொடங்குகிறார் கான்.
இத்தகையதோர் நிலைமையில், தான் பட்ட துன்பங்கள் சந்தித்த இடர்ப்பாடுகள் ஆகியவை குறித்தும், தான் வாழ நேர்ந்த சூழல் குறித்தும் விலாவாரியாக சுவைபட எழுதுவார் என்று நாம் எதிர்பார்த்தால் ஏமாறத்தான் செய்வோம். வாழ்ந்த போது மட்டுமல்ல, பின்னாளில் வரலாறு எழுதும்போதும் தனது சொந்த சூழ்நிலைகளைக் காட்டிலும், அன்று நிலவிய அரசியல் சூழ்நிலைகளே அவருக்கு முக்கியத்துவம் நிறைந்ததாகத் தோன்றுகின்றது. எனவே அதை விவரிக்கிறார்.
‘’காந்தி – இர்வின் ஒப்பந்த காலம் அது. ஒப்பந்தம் என்னுள்ளத்தில் கசப்புணர்ச்சியை ஏற்படுத்திற்று. காந்திஜியை விமரிசிப்பதில் நான் தயவு தாட்சண்யம் காட்டவில்லை. காந்திஜி உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடல் நீரைக் காய்ச்சிய மக்கள் நாளடைவில் சலிப்படைந்தார்கள். சிலர் கள் இறக்கும் பனை, தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்கள். சிலர் சட்டத்தை மீறி நடக்கலானார்கள். பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. ஷோலாப்பூரில் மக்கள் நகரை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். காந்தி – இர்வின் ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை மக்கள் இயக்கம் ஏற்படுத்தியது.’’
‘’கல்லூரிகளையும், பள்ளிகளையும் விட்டு வெளியேறிய மாணவ – மாணவியரும் போராட்டக் காலத்தில் கைது செய்யப்பட்டு ஒப்பந்தத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் சிலருக்கு இனி என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வில்லை. இந்த ஒப்பந்தம் தேசீய விடுதலைப் போராட்டத்துக்குத் துரோகம் செய்வதாகும் என்று பேசியவர், எழுதியவர் சிலரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள் நம் தோழர்கள்…
ஒப்பந்தத்தின் சாரத்துக்கு நான் தந்த விளக்கமும், விளக்க முறையும் அரசியல் அறிந்த தென்னிந்தியர் பலருக்குப் புதியவையாகத் தோன்றின. நம் இளம் தோழர்களை ஊக்குவித்தன.
அமீர் ஐதர் கானின் ஆங்கில சுயசரிதை (செயின்ஸ் டு லூஸ்).
1930-32 மாணவர்களிடம் கம்யூனிச அரசியல் தீப்போல பற்றிக் கொண்டகாலம். கான் இதற்கு முக்கியக் காரணகர்த்தா. அவர்களை நகருக்கு வெளியே இருந்த பி அண்டு சி பஞ்சாலைக்கு அழைத்துப் போனார் கான். தொழிலாளர்களுடன் அவர்கள் மொழியில் அவர்கள் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவது எவ்வாறு என்று சொல்லிக் கொடுத்தேன். இத்தகைய செயல்முறைப் பயிற்சியால் அவர்கள் மார்க்சியக் கொள்கையை அறியலானார்கள்.
மத்திய தர வர்க்கத்துக்குள் கீழ்த்தட்டைச் சார்ந்த மாணவர்களுக்கு அந்த நாள்களில் நாள்தோறும் சிற்றுண்டிக்காக ஆறணா தரப்படுவது வழக்கம். இளம் தோழிலாளர் சங்கத்துக்கு அந்தத் தொகையை வழங்கி விடுவார்கள். இந்த உதவியினால் சிறு வெளியீடுகளையும் பத்திரிக்கையும் கொண்டு வர முடிந்தது…’’
சென்னை தீவுத்திடல் மைதானத்தில் தற்செயலாக ராஜவடிவேலு(முதலியார்)வைச் சந்தித்தார் கான். ‘’அவர் நீதிக்கட்சியின் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர். நீதிக் கட்சி சென்னை மாகாண அமைச்சரவை அமைந்த பிறகு அவர் எதிர் பார்த்தது போல் சாதி அமைப்பு, ஏற்றத் தாழ்வுகள், சமூகத்திமை இழிவுகள் அறவே ஒழிய வில்லை; மாறாக, பிரிட்டிஷாரோடு செர்ந்து கொண்டு அவர்கள் சுரண்டல் வர்க்க நலன்களுக்கு ஆதரவாக மாறி விட்டார்கள்.
இதனால் அவர் நீதிக் கட்சி நபர்களுக்கு எதிராக எழுதத் துவங்கினார்; நீதிக்கட்சி ஆசிரியர் பதவியிலிருந்து அவரை விலக்கியது. அவரும் ‘ஜனமித்திரன்’ என்றொரு ஏடு தொடங்கி தானே அச்சிட்டு பறையர், துப்புரவு செய்வோர் சேரிக்கு எடுத்துச் சென்று விற்றார்.’’
“ராஜ வடிவேலுவை மூன்று நாட்களாகப் பல மணி நேரம் வாழ்க்கை, நாட்டு அரசியல் நிலைமை ஆகியவை பற்றிக் கேள்விகள் கேட்டுக் குடைந்தெடுத்தேன். தென்னிந்தியச் சாதி அமைப்பு, குறிப்பாகப் பார்ப்பன ஆதிக்கம் உள்ளிட்ட எல்லா அநீதிகளையும் எதிர்த்து எழும் அஞ்சாநெஞ்சம் படைத்த போராளி – ஆனால் ஒரு பிரச்சனையைப் பற்றியோ, அல்லது அநீதி என்று அவருக்குத் தோன்றியதை எதிர்த்துப் போராடும் வழிமுறை பற்றியோ காரண காரணிகளைக் கண்டறிந்து செயல்படுவது என்பது அவருடைய இயல்பில்லை என்பதைக் கண்டேன்.
தம் திறமையை பற்றி உணர்வு இல்லாது அமைப்பில் திரளாமல் இருக்கும் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு வாடும் மக்களை அமைப்பு முறையில் திரட்டுவது வர்க்க உணர்வு பெற்றோர் அனைவரது கடமை…’’
ராஜவடிவேலு கானின் தர்க்கத்தை ஒப்புக் கொண்ட கணத்திலேயே ‘ஜனமித்திரன்’ ‘முன்னேற்றம்’ என்ற பெயரோடு இரு வார ஏடாகப் புதிய வடிவெடுத்தது. அவரே ஆசிரியர், அச்சிடுபவர், வெளியீட்டாளர் எல்லாம். கானோடு ராஜவடிவேலு, கம்மம்பாடி சத்திய நாராயணா இருவர் முழுநேர ஊழியர்களாக இருந்து 30 பேர் கொண்ட ‘இளைய தொழிலாளர் சங்கம்’ அமைத்தார்கள். இது கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டதால் செய்து கொள்ளப்பட்ட புது ஏற்பாடு. ‘முன்னேற்றம்’ பத்திரிக்கை கைகளால் 500 படிகள் அச்சிடப்பட்டது. பணவசதி இல்லை; அனைத்துமே தொழிலாளர் – மாணவர் உழைப்பில் தான் நிறைவேறியது.
‘’நரம்புகளைக் கொடுமையான சோதனைக்குள்ளாக்கும் இக்கடும் பணியில் எப்பொழுதாவது நான் தோழர் இராஜவடிவேலுக்கு உதவி செய்வேன்! வேலை முடிந்து இருவரும் சேர்ந்து சாப்பிடுவோம். இன்முகத்துடன் அவர் மனைவி உணவு பிரமாறுவார்.
இவ்வாறு கடும் உழைப்பின் பின் வெளிவரும் இதழ்களை விநியோகிக்க ‘இளைய தொழிலாளர் சங்க’ உறுப்பினர் ஒவ்வருவரும் முயன்று உழைக்க வேண்டி இருந்தது. ஒவ்வொருவரும் விற்பனைக்காகப் பங்கு பிரித்துக் கொள்வோம். தொழிலாளர்களை அவரவர் இல்லங்களில் சந்திப்போம்; ஒவ்வொரு கட்டுரையும் சொல்வதென்ன, கொண்ட கருத்தென்ன என்பது பற்றித் தெளிவாக விளக்குவோம். விவாதிப்போம். சுருக்கமாக ’31-32 ஆம் ஆண்டுகளில் போர்க்குணம் மிக்க தொழிலாளி வர்க்கத்துக்குள் பிரச்சார ஏடாக ‘முன்னேற்றம்’ செயல்பட்டது’’என்று கம்மம்பாடி சத்தியநாராயணா கூறும் குறிப்பு அவர்களது கடுமையான உழைப்பை விளக்குகிறது.
அமீர்கான் சென்னை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட சம்பவம் அவரது அளவற்ற துணிச்சலைக் காட்டுகிறது. ‘’சென்னை மாகாண மேஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்டிரேட்டுக்கு மட்டும் இருபுறமும் மின்விசிறிகள்.. அது கோடை. உள்ளே புழுங்கிற்று. நாங்கள் இருந்த பக்கம் விசிறிகள் ஓடவில்லை. ‘எங்களைத் துன்புறுத்திப் பொருளாதாரச் சிக்கனம் செய்வது தவறு, விசிறி வேண்டும்’ என்று உரக்கக் கத்தினேன்.
அச்சமயத்தில் அரசு தரப்பில் எவரோ ஒருவர் ‘உமது வழக்குரைஞர்தான் உமக்கு விசிறி வைக்க வேண்டும்’ என்றார். உடனே கோபாவேசத்தில் அவர்கள் மேல் எறிய நாற்காலியைத் தூக்கினேன்… அரசுக் குற்றச் சாட்டைக் கண்டு நான் அஞ்சவும் இல்லை, நீதி மன்றத்தின் கண்ணியம் பற்றிக் கவலைப்படவுமில்லை என்று காட்டவே இவ்வாறு செய்தேன்…’’
சிறைவாசம் 2 ஆண்டுகள். சென்னை, சேலம், கோவை, ராஜமகேந்திரபுரம் என்று 4 இடங்களில் மாற்றி மாற்றி அடைக்கப்பட்டார் கான். சிறையிலும் அவரது போராட்டம் நிற்கவில்லை.
இராஜமகேந்திரபுரம் சிறை மேலாளர் இச்சென்(HICHEN)கானைப் பணியவைக்க தந்திரம் ஒன்று தீட்டினார். இயக்கத்துக்குத் தலைமுழுகி விட்டுச் சென்னை மாகாணத்தை விட்டு வெளியேறி விடுவதாக உறுதிமொழி அளித்தால் விடுதலை செய்து விடுவதாக ஆசை காட்டினார்.
‘’வாழ்க்கை வெளியில் வாழ்வதற்காகவே. சிறையிலன்று. சிறைவாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?’’ என்றார். நான் அவரை வெளியே போய்விடச் சொன்னேன். ஒரு நாளில் இவ்வாறு எழுதினேன்: ‘’பல்லாயிரம் மைல்கள் கடந்து இங்கு வந்து ஆளுவதற்குப் பிரிட்டிஷ்காரர்களுக்கு உரிமை உள்ளதென்றால் எனக்கு இந்த நாட்டில் வாழ்வதற்காகவாவது உரிமை உண்டு… ஆகவே, என் உயிருள்ள வரை சிறையில் வைத்திருக்கலாம். எந்த நிபந்தனையையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்…’’
47-க்குப்பின் அவரது சொந்த ஊரான ராவல்பிண்டி (பாகிஸ்தான்) சென்றார் கான்; தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்ட கானுக்கு ‘சுதந்திர’ பாகிஸ்தான் கொடுத்த பரிசு 14 ஆண்டு சிறைவாசம்.
கட்சி கட்டுவதைப் பற்றி கான் சொன்ன வார்த்தைகள். ஆழமான பொருள் உள்ளவை:
‘’இதயங்களைக் கனிவித்தலும் கனிவித்த இதயங்களைக் காத்தலும் மனிதத் திறமையில் பயன் மிகுந்தவை’’.
– புதூர். இராசவேல்
_______________________________________ புதிய கலாச்சாரம் நவம்பர் 1997
_______________________________________