Sunday, July 27, 2025
முகப்பு பதிவு பக்கம் 716

சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!

38

‘சொல்வதெல்லாம் உண்மை’ –  இந்த பெயரில் ஜீ (Zee) தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல வீடுகளில் இரவு நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கம் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே விஜய் டி.வி.யில் ‘கதையல்ல நிஜம்’ என்ற பெயரில் நடிகை லஷ்மி தொகுத்து வழங்கிய அதே அக்கப்போர்தான். அன்றாட குடும்பப் பிரச்சினைகளில், உறவுச் சிக்கல்களில் சிக்கி, மீள வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் மக்களை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து ஒளி வெள்ளத்தில் கேமராவின் முன்பு நியாயம் கேட்டு குமுற வைக்கும் அதே பழைய மசாலா. கண்ணீர், கோபம், ஆவேசம், அடிதடி எல்லாம் இதிலும் உண்டு. விஜய் தொலைக்காட்சியில் லஷ்மி செய்த வேலையை ஜீ (Zee) தமிழில் இப்போது நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் செய்து வருகிறார். (முன்பு நிர்மலா பெரியசாமி செய்தார்). தாங்க முடியாத அருவருப்பும், ஏழை மக்களின் அந்தரங்க வாழ்கையை அம்பலமேற்றி காசு பண்ணும் வக்கிரமும் நிறைந்த இந்த நிகழ்ச்சி சமூக உளவியலில் பாரதூரமான விளைவுகளை உண்டு பண்ணக்கூடியது.

சொல்வதெல்லாம் உண்மைஅடுத்தவர்களின் அந்தரங்கத்தை தெரிந்துகொள்ளத் துடிக்கும் மனித மனதின் வக்கிரத்தை வளர்த்தெடுப்பதுதான் இதன் முதல் அபாயம். அரசல் புரசலாகவும், தாங்கள் ஒரு தவறிழைக்கிறோம் என்ற குற்றவுணர்வுடனும் புரணி பேசும் மக்களை, அந்த மனத் தயக்கத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி விடுவிக்கிறது. கள்ள உறவுகள், விடலைகளின் காதல் பஞ்சாயத்துகள், குடும்ப சிக்கல்கள்… இவற்றை தொடர்ந்து பார்க்கும் மக்களின் மனம் ‘தான் மட்டும் தவறிழைக்கவில்லை; ஊரே இப்படித்தான் இருக்கிறது’ என எண்ணுகிறது.

‘வீட்டுக்கு வீடு வாசல்படி’ என இதை எடுத்துக்கொள்வது ஒரு வகை. மாறாக, தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களின் மனம் தன் கணவனை, தன் மனைவியை, உறவுகளை, சுற்றங்களை சந்தேகிக்கிறது. புதிய குடும்பச் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த இரண்டு வகைகளையும் தாண்டி, ‘எல்லாரும் செய்யுறான்.நாமளும் செய்வோம்’ என எண்ண வைத்து ஒழுக்கக்கேட்டுக்கு ஓபன் பாஸ் கொடுக்கிறது.

முதலில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வரும் பங்கேற்பாளர்கள் யார்? பார்வையாளர்கள் யார்? தங்கள் சொந்தக் குடும்பப் பிரச்னையை பொதுவில் வைத்துப் பேசத் தயங்காத உழைக்கும் வர்க்கத்து ஆண்களும், பெண்களும்தான் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். போலி கவுரவத்தை காப்பாற்றுவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் இதன் பார்வையாளர்கள். தங்கள் வீட்டின் ரகசியங்கள் வாசல் வரையிலும் கூட சென்றுவிடக்கூடாது என அப்பார்ட்மென்டின் கதவுகளை இறுக மூடிக்கொண்டு முடைநாற்றத்தை அடைத்துக்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை இரவு நேர பொழுதுபோக்காக ரசித்துப் பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தீர்ப்பு வழங்கிய; வழங்கும் லஷ்மி, நிர்மலா பெரியசாமி, லஷ்மி ராமகிருஷ்ணன் போன்றோர்… இந்த இரண்டு வர்க்கங்களை சேர்ந்தவர்களும் அல்ல. அவர்கள் அசல் மேட்டுக்குடிகள். ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை அனுபவத்தில் அல்ல… கேள்வி ஞானத்தில் கூட அறிந்துகொள்ள விரும்பாத இவர்கள்தான் ஏழைக் குடும்பங்களின் பிரச்னைகளுக்கு தீர்ப்பு எழுதுகிறார்கள். அதுவும் அலசி ஆராய்ந்து அளிக்கப்படும் அறிவார்ந்த தீர்ப்பு அல்ல. ஏற்கெனவே நிலவும் ஆணாதிக்க மதிப்பீடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலேயே பேசுகின்றனர். ஏழைகளின் பிரச்னைகளை நடுத்தர வர்க்கம் பார்த்து ரசிக்க, மேட்டுக்குடிகள் தொகுத்து வழங்க, முதலாளிகள் கல்லா கட்டும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஒரே ஒரு பணக்காரக் குடும்பம் கூட கலந்துகொண்டது இல்லை.

ஆனால் தங்கள் சொந்தப் பிரச்னைகளை கேமராவின் முன்பு மக்கள் எப்படி கூச்சமின்றிப் பேசுகின்றனர்? நீங்களும், நானும் பேசுவோமா?ஆனால் இவர்கள் பேசுகிறார்களே, எப்படி? “அவங்க காசு வாங்கியிருப்பாங்க”  என்றோ, “எல்லாம் செட்-அப்” என்றோ பார்ப்பவர்கள் நினைக்கிறார்கள். இதற்கு விடை காண ’சொல்வதெல்லாம் உண்மை’ எப்படி உருவாகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

சமாதானம், சண்டை, பேச்சுவார்த்தை, போலீஸ் புகார்… என பல வழிகளிலும் தங்கள் குடும்பச் சிக்கல்களுக்கு தீர்வு தேடி முயற்சித்து, எதிலும் தீர்வு கிடைக்காமல் உச்சக்கட்ட வெறுப்பில் இருக்கும் மக்கள்தான் இவர்களின் இலக்கு. ‘ஏதேனும் ஒரு வழியில் பிரச்னை தீராதா?’ என ஏங்கிக் கிடப்பவர்களை அணுகி, ‘உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்’ என ஆசைகாட்டி அழைத்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை திறந்து, தங்களுக்கு டி.ஆர்.பி. தரக்கூடிய செய்திகளை கண்டறிவதுதான் இவர்களின் அதிகப்பட்ச ஆய்வுப்பணி. அடுத்த கட்டமாக அந்தந்த ஊரில் இருக்கும் அவர்களின் நிருபர், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து தேன் ஒழுகப் பேசுவார். மனைவியை மடக்கிவிட்டால் போதும், கணவனை அழைத்து வருவது எளிது.

‘உங்க மனைவி எங்கள் நிகழ்ச்சிக்கு வருகிறார். அவர் உங்களை பற்றி இப்படி எல்லாம் பேசுகிறார். நீங்கள் வந்து உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவில்லை எனில் அவர் சொல்வது மட்டும்தான் வெளியே வரும். டி.வி. பார்ப்பவர்களுக்கு அதுதான் நியாயம் என்று தோன்றும்’ என்று தர்க்கப்பூர்வமாக மடக்குவார்கள். ‘எங்கள் நிகழ்ச்சியில் வந்து பேசிவிட்டால் உங்களுக்கு நீதி கிடைத்துவிடும். அதற்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று ஆசை காட்டுவார்கள். ‘படித்தவர்கள் ஏமாற்றமாட்டார்கள்’ என்று நம்பி வரும் ஏழைகளை திட்டமிட்டு உணர்ச்சிவசப்படச் செய்து, அறிவின் தந்திரத்தால் அழ வைத்து… அனைத்தையும் படம் பிடிப்பார்கள். நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இடைவேளையில், பங்கேற்பாளர்களின் நடவடிக்கை பகுப்பாய்வு செய்யப்பட்டு, நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவினரால் உளவியல் உத்திகள் வகுக்கப்படும். குறைந்த பட்சம் கண்ணீர், அதிக பட்சம் அடிதடி… எதுவும் சிக்கவில்லையா? ஒரு சென்டிமெண்ட் டிராமாவுக்கு உத்திரவாதம் கிடைத்துவிட்டால் தயாரிப்புக் குழுவுக்கு நிம்மதி. அதன்பிறகு அந்த குடும்பம் சேர்ந்ததா, பிரிந்ததா, நடுத்தெருவில் நிற்கிறதா என்பதை பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

சொல்வதெல்லாம் உண்மை
‘ சொல்வதெல்லாம் உண்மையில் ‘ கலந்து கொண்ட ஒரு பெண் ! ஜீ டி.வி.யின் விற்பனைப் பொருள்.

பொதுவாக உங்கள் வீட்டில் யாராவது அடித்துக்கொண்டால் என்ன செய்வீர்கள்? உடனே ஓடிச்சென்று விலக்குவீர்கள். அதையும் மீறி சண்டை நடந்தாலும் ‘நாலு பேருக்குத் தெரிந்தால் அவமானம்’ என்று கண்டிப்பீர்கள். இது மனிதர்களின் பொதுப் பண்பு. ஆனால் இவர்களை பொருத்தவரை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அடித்துக்கொண்டால் உற்சாகம் அடைகிறார்கள். முடிந்தவரை அதை உசுப்பேற்றி அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். ஏதேனும் ஒரு வகையில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என நம்பி வருபவர்கள் நிகழ்ச்சி முடியும்போது பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். இங்கு வருவதால் பிரச்னை தீர்வதில்லை; அதிகமாகிறது என்பதை அவர்கள் உணரும்போது நிலைமை கைமீறிச் சென்றுவிடுகிறது. கொட்டிய வார்த்தைகளும், அழுத கண்ணீரும் நாளை தொலைகாட்சியில் வரப்போகிறது என்ற எண்ணமே அவர்களை அச்சுறுத்துகிறது. தாங்கள் ஒரு சூழ்ச்சி வலையில் சிக்கியதைப் போல உணர்கிறார்கள். “சார், டி.வி.ல போட்றாதீங்க சார். பேசுன வரைக்கும் பேசுனதா இருக்கட்டும். இப்படியே விட்ருங்க சார்” என்று கெஞ்சிக் கதறினால் அதையும் படம் பிடிப்பார்களேத் தவிர நீதி கிடைக்காது. மாறாக நிகழ்ச்சிக்கு அழைத்து வரும்வரை கருணை முகம் காட்டியவர்களின் உண்மை முகம் அப்போதுதான் வெளியே வரும். இதுதான் “தி மேக்கிங் ஆஃப் சொல்வதெல்லாம் உண்மை”.

ஆனால் இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையா?

பஞ்சாயத்துக்கு வருகின்ற பிரச்சினைகள் ஒரே விதமாக இருந்தபோதும், பார்வையாளர்களைப் பார்க்க வைப்பது எப்படி என்பதே இவர்களது பிரச்சினை. எனவே, தனியே அழைத்துப் போய் உசுப்பேற்றிவிடுவதும், மோதலை உருவாக்குவதும் இத்தகைய நிகழ்ச்சிகளில் சர்வ சாதாரணமானது. இதை கேமராவுக்குப் பின்னே சென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. நிகழ்ச்சியிலேயேப் பார்க்க முடியும். சமீபத்தில் ஒரு விடலைப் பையனும், பெண்ணும் காதல் பஞ்சாயத்துக்கு வந்திருந்தனர். பெண்ணின் அம்மா எதிரே அமர்ந்திருக்கிறார். தன் அம்மா ஒரு விபச்சாரி என்று பட்டவர்த்தனமாக அந்தப் பெண் குற்றம் சாட்டுகிறார். உடனே நிகழ்ச்சியை நடத்தும் லஷ்மி ராமகிருஷ்ணன், “இந்தப் பொண்ணு சொல்றது பொய்யா இருந்தா இந்நேரத்துக்கு எழுந்து அடிச்சிருப்பீங்க” என அந்தப் பெண்ணின் அம்மாவை உசுப்பேற்றிவிடுகிறார். சற்றுநேரத்தில் அந்த அம்மா, செருப்பை கழற்றி மகளை அடிக்கிறார். அனைத்தும் ஒளிபரப்பப்படுகிறது. இனி சாகும் வரையிலும் அந்த அம்மாவும், மகளும் சேரப் போவது இல்லை.

இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், டி.வி-யில் ஒளிபரப்பான பிறகு என்னவாகிறது என்பதை யாரும் பேசுவதில்லை. என்.டி.டி.வி-யில். ’ராக்கி கா இன்சாப்’ என்ற பெயரில் இந்தி நடிகை ராக்கி சாவந்த் நடத்திய நிகழ்ச்சியில் ஒரு பெண், தன் கணவனை ஆண்மையற்றவன் என்று கூறியதால் பிறகு அவன் தற்கொலை செய்து கொண்டான். இதுபோன்ற உதாரணங்கள் ஏராளம்.

நிர்மலா பெரியசாமி
மேட்டுக்குடி நிர்மலா பெரியசாமி ஏழைகளின் கதைகளை விற்கிறார் !

இன்னொரு பக்கம் இந்த மேட்டுக்குடி பாப்பாத்திகள் நடத்தும் பஞ்சாயத்தின் மூலமாக, சாதாரண மக்கள் நெறிகெட்டவர்கள் போலவும், நாட்டாமை செய்யும் வர்க்கத்தினர் பெரிய ஒழுக்க சீலர்கள் போலவும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இதில் பார்வையாளர்கள் நீதிபதிகளாக செயல்படுகின்றனர். அதனால்தான் பல வீடுகளில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது, அதில் கலந்துகொள்ளும் மனிதர்களுடன் மக்கள் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்கின்றனர். ‘அவன் மேலதான் தப்பு’ என்றோ, ‘ஐயோ பாவம் இந்தப் பொண்ணு’ என்றோ திரையில் விரியும் காட்சிகளுக்காக உண்மையாகவே மனம் இறங்குகின்றனர்.  கற்பனைக் கதைகளே பார்வையாளர்களின் கருத்தையும், கண்ணோட்டத்தையும் பாதிக்கும் என்னும்போது ரியாலிட்டி ஷோக்கள் பற்றி சொல்லத்தேவையில்லை.

சித்தரிக்கப்பட்ட டி.வி. சீரியல் பாத்திரங்களுக்காக பாவப்படும் மக்களின் மனம், அதை விட கூடுதலாக இந்த நிகழ்ச்சிகளோடு தன்னை இணைத்துக்கொள்கிறது. காரணம், சீரியல்களில் குடும்பத்தில் சண்டை நடக்கும். இதில் குடும்பமே நேரடியாக வந்து சண்டை போடுகிறது. தன் கண்ணீரையும், இரக்கத்தையும், ரசனையையும் கோரும் ஒரு கதை, கற்பனையாய் இருப்பதை விட, உண்மையாய் இருப்பது பார்வையாளனின் ஈகோவை கூடுதலாக திருப்திப்படுத்துகிறது. சொல்வதெல்லாம் உண்மை மட்டுமல்ல, மானாட மயிலாட, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் வெற்றி பெறுவதற்கான அடிப்படை மக்களின் இந்த மனநிலைதான்.

ஆனால், உண்மையான மனிதர்கள், உண்மையான பிரச்னைகள் என்பது வரைதான் இது உண்மை. அந்த உணர்ச்சிகள் உண்மையானவை அல்ல. அது நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு தூண்டப்பட்டு மிகையாக சித்தரிக்கப்படுகிறது. அந்த வகையில் இது ஒரு போர்னோகிராபி. இதைப் பார்க்கும் ரசனையும் சாவித்துவாரம் வழியே பார்க்கும் அதே ரசனைதான்.

பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளில் அப்பாவி ஏழைகளின் அந்தரங்கம் மட்டுமே அலசப்படுவதாக தெரியலாம். ஆனால் ஊடக வியாபாரத்தில் பணக்காரர்களின் அந்தரங்கமும் தப்புவதில்லை. பத்திரிகைகளின் சினிமா கிசுகிசு, மேற்குலகின் டயானா விவகாரம் போன்றவை இத்தகையவைதான்.

விஜய் டி.வி.
விஜய் டி.வி. ஷோக்கள் !

’ராக்கியின் சுயம்வரம்’ போன்ற நிகழ்ச்சிகள் அப்பட்டமாக ஒத்திகை பார்க்கப்பட்டு, திரைக்கதை எழுதப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. பணத்துக்காக சினிமாவில் ஆடைகளை அவிழ்த்து ஆபாச நடனம் ஆடும் ராக்கி சாவந்த், தனது திருமணத் தெரிவையும் டி.வி.யில் லைவ் ஆக நடத்தினார். ‘யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்’ என்ற அறிவிப்பு பரபரப்பான செய்தியாக மாற்றப்பட்டதே தவிர அது ஒரு அப்பட்டமான விபச்சாரம் என்பதை யாரும் பேசவில்லை. சபலத்துடன் பலர் விண்ணப்பித்தார்கள். முடிவில் ராக்கி ஒரு கனடா தொழிலதிபரை தெரிவு செய்தார். திருமணம் தள்ளிப்போடப்பட்டு, கடைசியில் ‘நடிக்கக்கூடாது என்று சொன்னதால் திருமணம் ரத்து’ என்று அறிவிக்கப்பட்டது. அதற்குப்பின்னர் இது நாடகம் என்றும், இதில் பணத்துக்காக தானும், பிரபலத்துக்காக தொழிலதிபரும் நடித்ததாகவும் ராக்கி கூறினார். கோடிக் கணக்கான ரசிகர்களை ஏமாற்றிய குற்றத்துக்கு எந்த தண்டனையும் இல்லை. இதை வைத்து இவர்கள் கொள்ளையடித்த பணத்துக்கும் கணக்கில்லை.

2009-ம் ஆண்டு இந்தியத் தொலைகாட்சிகளின் மொத்த வருமானம் சுமார் 5.5 பில்லியன் டாலர். இதில் ரியாலிட்டி ஷோக்களின் வருமானம் கணிசமானது. இவர்களுக்கு 70 கோடி இந்திய செல்போன் வாடிக்கையாளர்கள்தான் முக்கிய இலக்கு.  ‘உங்கள் மனம் விரும்பிய போட்டியாளர் இவர் என்றால் … என்று டைப் செய்து இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்’ என்ற வேண்டுகோளுக்கு செவிசாய்த்து மக்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.ஸில் இருந்துதான் ரியாலிட்டி ஷோக்களின் 30 முதல் 40 சதவிகித வருமானம் வருகிறது. இந்த வருமானத்தின் அளவு குறைந்தால் ரியாலிட்டி ஷோக்களுக்காக இவர்கள் செய்யும் பித்தலாட்டங்களும் அதிகரிக்கும்.

solvethellam-2
மேற்கத்திய ரியாலிட்டி ஷோக்கள் ! உண்மையின் பெயரில் மலிவான ரசனை !!

இன்றைய நிலையில் தொழில்முறை ஆபாசப் படங்களைக் காட்டிலும் செல்போன்களில் எடுக்கப்பட்ட ‘கேண்டிட் வீடியோக்களுக்குதான்’ மவுசு அதிகம். யூ-டியூப் உள்ளிட்ட இணையதளங்களில் இத்தகைய ஒரிஜினல் 24 கேரட் வீடியோக்களுக்கான பார்வையாளர்கள் சர்வ சாதாரணமாக லட்சங்களைத் தொடுகிறார்கள். பள்ளி மாணவர்களின் செல்போன்களில் கூட இத்தகைய கேண்டிக் கேமரா காட்சிகள் இருக்கின்றன. இதற்கும் ’ரியாலிட்டி ஷோ’க்களுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

எப்போதுமே, நிலவும் டிரெண்டை பயன்படுத்தி கல்லா கட்டும் நிறுவனங்கள் ‘உண்மையை’ விரும்பும் மக்களின் மனநிலையை மட்டும் விட்டுவைக்குமா? பல தொலைக்காட்சி விளம்பரங்கள் கேண்டிட் கேமராவால் எடுக்கப்பட்டதைப் போல திட்டமிட்டு எடுக்கப்படுகின்றன. பஞ்சாராஸ் அழகு சாதனப் பொருள், இந்துலேகா எண்ணெய், ஆரோக்கியா பால் உள்பட பல விளம்பரங்கள் இப்படி ஒளிபரப்பாவதை காணலாம். இதை ‘ஒரு விளம்பர யுத்தி’ என்றோ, சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளை ‘ஒரு கிரியேட்டிவ் கான்செப்ட்’ என்றோ சிலர் சொல்லக்கூடும். ஆனால் உண்மை வேறு. டி.வி.யை நிறுத்தியதும், அதுவரை பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி தோற்றுவித்த உணர்வு மறைந்துவிடுவது இல்லை. மாறாக, அது உங்களை பயிற்றுவிக்கிறது. குரூரத்தை ரசிப்பதற்கு, வக்கிரத்தை விரும்புவதற்கு கற்றுத்தருகிறது. அது உருவாக்கும் உணர்வுதான் ஒரு போரை பொழுதுபோக்காக; போலீஸ் அராஜகத்தை ஹீரோயிசமாக புரிந்துகொள்ள இட்டுச் செல்கிறது.

இவர்கள் இத்தனை தூரம் மெனக்கெட்டு செட் போட்டு, கான்செப்ட் பிடித்து ரியாலிட்டி ஷோ நடத்தத் தேவையில்லாமல் சொல்ல வேண்டிய நடைமுறை உண்மைகள் ஏராளமாக நாட்டுக்குள் இருக்கின்றன. சாதித் தீண்டாமை முதல் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வரை ‘உண்மைகளுக்கா’ பஞ்சம்? இவற்றை சொல்வதற்கு எந்த ரியாலிட்டி ஷோவிலும் இடம் இல்லை. எனில் இவற்றை ‘ரியாலிட்டி ஷோ’ என்ற சொல்லால் அழைப்பதே தவறானது. உண்மையில் இவற்றின் ஒவ்வொரு நொடியும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு திரைக்கதை எழுதப்படுகின்றன. வட இந்திய சேனல்களில் இது இன்னும் பச்சையாக நடக்கிறது.

solvethellam-1பொதுவாக இந்த ரியாலிட்டி ஷோக்களில் சுற்றி உட்கார்ந்து கைதட்டிக்கொண்டே இருக்கிறார்களே… அவர்களை ரசிகர்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. அவர்கள் தினக்கூலி அடிப்படையில் ரசிகர்களாக நடிக்கிறார்கள். வியப்பதும், சிரிப்பதும், கை தட்டுவதும், பயப்படுவதும்தான் அவர்களின் வேலை. தமிழ் சேனல்களை பொருத்தவரை இந்த ரசிகர்களை பிடித்து வருவது அந்தந்த ரியாலிட்டி ஷோவின் புரடியூசரின் வேலை. வட இந்தியச் சேனல்களில் இத்தகைய பணி அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது. அங்கு டி.வி. நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர்களை சப்ளை செய்வதற்கு என்றே தனிப்பட்ட ஏஜென்ஸிகள் செயல்படுகின்றன.

இத்தகைய ஆடியன்ஸ் சப்ளை சர்வீஸில் ஆறு ஆண்டு கால அனுபவம் பெற்ற ராஜீ கபூர், “ரசிகர்களாக வருபவர்களுக்கு ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும்?” என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஓர் அறிவிப்பு வெளியிட்டால் கூட்டம் வரும்தான். ஆனால் ரியாலிட்டி ஷோக்களின் படப்பிடிப்பு நேரம் மிக, மிக அதிகம். சாதாரண பார்வையாளர்கள் அவ்வளவு நேரம் பொறுமையாக இருக்க மாட்டார்கள். எந்த நேரமும் எழுந்து சென்றுவிடுவார்கள். அதனால்தான் இப்படி பணம் கொடுத்து அழைத்து வருகிறோம். அது மிகக் குறைந்த தொகைதான் என்றபோதிலும், சிலிர்ப்புமிக்க ரசிகராக நடிப்பதற்கு அவர்களுக்கு அந்தத் பணம் கொடுக்கப்படுவதில் என்ன தவறு?” என்று கேட்கிறார்.

அதாவது நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் எந்த இடத்தில் அழ வேண்டும், எங்கு சிரிக்க வேண்டும், எப்போது கை தட்ட வேண்டும் என்ற அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது. ஹிட்லர் காலத்தில் அவர் உரையாற்றும்போது, கூட்டத்தில் அமர்ந்திருக்கும் அவரது ஆட்கள் குறிப்பிட்ட இடத்தில் கை தட்டுவார்களாம். அதைப் பார்த்து மற்றவர்களும்  தட்டவேண்டும்; தட்டுவார்கள். அதற்குப் பெயர் பாசிசம். இதற்குப் பெயர் கருத்து சுதந்திரமாம்!

– வளவன்
_______________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________

கொள்ளையில் கொள்ளை : ஊழலுக்குள் ஊழல் !

3

நாட்டின் மிகப்பெரிய ஊழல்கள் என்று அறியப்பட்டிருக்கும் 2 ஜி அலைக்கற்றை மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு வழக்குகளில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீளமுடியாது கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குதூகலிக்கின்றன. பெரும்பாலான செய்தி ஊடங்களும் அவ்வாறுதான் சித்தரிக்கின்றன. மீளமுடியாத கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பது ஆளும் கூட்டணி மட்டுமல்ல; நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார அமைப்பும்தான்.

சி.பி.ஐ. நாய் வால்
திருத்த முடியாத சி.பி.ஐ. (அரசு அமைப்பு)

இவ்விரு வழக்குகளிலும் பொதிந்துள்ள அடிப்படை உண்மைகள் மூடிமறைக்கப்பட்டு, பரபரப்பூட்டும் அரசியல் மற்றும் சட்டநுட்ப விவரங்கள் முன்னிறுத்தப்படுகின்றன. 2 ஜி அலைக்கற்றை மற்றும் நிலக்கரி ஒதுக்கீடுகளில் நடந்த ஊழல் முறைகேடுகளால் மூன்றரை இலட்சம் கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுவிட்டதாக இந்தியப் பொதுத் தணிக்கையாளர் கூறுகிறார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை நமது நாட்டில் புகுத்தப்பட்டபோது அரசு பொதுத்துறைத் தொழில்களும் பொதுத்துறை அடிப்படைக் கட்டமைப்புகளும்தாம் அனைத்து அரசு இழப்பீடுகள், ஊழல்கள், திறமைக் குறைவு, பின்னடைவு, தேக்க நிலை, பொருளாதார நெருக்கடிகளுக்கும் காரணம் என்று கூறப்பட்டது. இதற்குத் தீர்வாக, பலப்பல இலட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புடைய அரசு பொதுத்துறைத் தொழில்களும் பொதுத்துறை அடிப்படைக் கட்டமைப்புகளும் அடிமாட்டு விலைக்குத் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன. கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ற பெயரில் பழைய, புதிய தரகுமுதலாளிகளும் அனைத்து ஓட்டுக் கட்சி அரசியல் தலைவர்களும் அரசுப் பொதுச்சொத்துகளைச் சூறையாடினார்கள். நிலபுலன்களை வளைத்துப் போட்டு வீடு- வீட்டுமனைத் தொழில்களில் பணத்தைக் குவித்தார்கள்.

இரண்டாவது சுற்றில், காடுகள்-மலைகள், விவசாய விளைநிலங்கள், ஆறுகள்-நீர்நிலைகள், கல்-பாறை-மணல், ஆகாயம்-பூமி, இரும்பு-நிலக்கரி, செம்பு-அலுமினியம் முதலிய தாதுப்பொருட்கள், மின்சாரம்-தொலைத்தொடர்பு மற்றும் மக்கள் வாழ்வாதாரங்கள் எல்லாம் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டன. இவற்றைக் கொண்டு மக்களுக்கு வாக்களித்தபடி உற்பத்தி, வேலை வாய்ப்பைப் பெருக்கும் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, முக்கியமாக அந்நிய நாடுகளுக்கு விற்றுச் செல்வத்தைக் குவிப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது ஊழல், மோசடி, அதிகார முறைகேடுகள் வெளியே வந்து நாறுகின்றன. பொதுச்சொத்துக்களைச் சூறையாடுவதில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அரசியல் கொள்ளையர்களுக்கும் வெறிபிடித்துப்போய், ஊழல் தலைவிரித்தாடுகிறது.

இயற்கை வளங்களையும், அரசுப் பொதுச்சொத்துக்களையும் கொள்ளையடிப்பது, அவர்களுக்கிடையே கூறுபோட்டுக் கொள்வது என்பது எழுதப்படாத, அறிவிக்கப்படாத அரசுப் பொதுக்கொள்கையாக ஆகிவிட்டது. அதுவே ஊழல், கொள்ளைதான். அதை எப்படிச் செய்வது, யார்யாருக்கு என்னென்ன பங்கு என்பதில்தான் நாய்ச் சண்டை. ஆகவே, நடந்தது, நடப்பது வெறுமனே ஊழல் அல்ல, ஊழலுக்குள் ஊழல், கொள்ளையில் கொள்ளை.

எப்போதெல்லாம் மிகப் பெருமளவிலான மோசடிகள், பாரிய அதிகார முறைகேடுகள், மிகக்கொடூரமான அநீதிகள், மிக மோசமான குற்றங்கள் நடந்திருப்பதாகக் கருதப்படுகிறதோ, எப்போதெல்லாம் அதிகாரபலமும் பணபலமும் மிக்கவர்களுக்கெதிராக சாதாரணமான முறைகளினால், முயற்சிகளினால் உண்மைவெளிவராது என்று நம்பப்படுகிறதோ அப்போதெல்லாம் முறைமையான, வரிசைக்கிரமமான அதிகார அமைப்புகளின் வழக்கமான விசாரணை போதாது; சி.பி.ஐ. விசாரணை வேண்டும்; ஓய்வுபெற்ற அல்லது பதவியிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகின்றது.

இதற்குக் காரணம், வேறெல்லாக் கீழ்நிலை அதிகார அமைப்புகளிடமும் நேர்மையான, உண்மையான, சரியான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அறவே அற்றுப்போய்விட்டது. ஆனால், சி.பி.ஐ. மற்றும் உச்சநீதி மன்றம் ஆகிய இரண்டு அமைப்புகளின் மீதும் கூட அவ்வாறான நம்பிக்கை கொள்ளமுடியாது. இதற்கு ஆதாரமாக, குஜராத்தில் ஆயிரக்கணக்கான இசுலாமியர் களைப் படுகொலை செய்த இந்துமதவெறி பாசிச பயங்கரவாதி மோடியிடம் அவை காட்டும் பாசம், உ.பி., பீகார் முன்னாள் முதல்வர்கள் முலாயம், மாயாவதி, லல்லு முதலானோர் வழக்குகளில் மத்திய அரசு அரசியல் நிலைப்பாட்டிற்கேற்பவும் ஆணைக்கேற்பவும் சி.பி.ஐ. நடந்துகொள்வது, அந்நிய-உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்குச் சாதகமாவே உச்சநீதிமன்றம் தீர்ப்புகள் வழங்குவது போன்ற எடுத்துக்காட்டுக்கள் பலவும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆகவே, தமது சரிந்துகொண்டிருக்கும் நம்பகத் தன்மைக்கு முட்டுக் கொடுக்கும் முகமாக, 2 ஜி அலைக்கற்றை மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் வழக்குகளை எடுத்துக்கொண்டு, தமது நேரடி மேற்பார்வையில் கறாராகவும், நடுநிலையாகவும் நடத்துவதாகக் காட்டச் சில சவடால் நாடகங்களை அரங்கேற்றியது, உச்சநீதி மன்றம்.

சி.பி.ஐ.-யை நோக்கி அது ஏதோ தன்னதிகாரம்கொண்ட, சுயேட்சையான அமைப்பாகக் காட்டிக்கொண்டு, சி.பி.ஐ. விசாரணையில் வேறுயாரும் தலையிடக்கூடாது; விசாரணை விவரத்தை அரசிடம் கூடக்காட்டக் கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளைப் போட்டு, சாட்டையைச் சுழற்றியது. அதையெல்லாம் கால்தூசாகவே மதித்த சி.பி.ஐ., தனது விசாரணை விவரங்களை மைய அரசின் சட்ட அமைச்சர், அரசுத் தலைமை வழக்கறிஞர், நிலக்கரி அமைச்சக மற்றும் பிரதமர் அலுவலக அமைச்சக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, அவர்கள் திருத்தம் போட்ட இடைக்கால விசாரணை அறிக்கையாக, நடந்த உண்மைகளையும் மூடிமறைத்து உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்தது. சி.பி.ஐ. நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாவும், அந்நிய, அரசியல் சக்திகளின் பிடியிலிருந்து அதை விடுதலை செய்யப் போவதாகவும், சி.பி.ஐ.யின் சார்பற்ற நிலையை மீண்டும் நிறுவப்போவதாகவும் “பெருங்கூச்சல்” போட்டது, உச்சநீதி மன்றம்.

உச்சநீதி மன்றத்தின் நீதிவழுவா மாட்சிமையை வியந்த ஊடகங்கள் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு விட்டதாகவும் அரசியல் சுயநலமிகளின் பிடியிலிருந்து சி.பி.ஐ. யை மீட்டே தீரும்மென்றும் பரபரப்புக் காட்டின. என்ன நடக்குமோவென்று அரசியல் விமர்சகர்கள் திகைத்து நின்றனர். “ஆம், அப்படித்தான் செய்தேன்; அதற்கென்ன, இப்போது?” என்று சிலுப்பிக்கொண்டு நிற்கும் தறுதலைப் பிள்ளையைப்போல, சி.பி.ஐ. நிற்கிறது. “சி.பி.ஐ. தனித்து நிற்கும் அமைப்பு அல்ல; நாங்கள் ஒரு(அரசுக்) கட்டமைப்பின் அங்கம். சில சமயங்களில் (அதனுடன்) கலந்தாலோசித்து கருத்துப்பெற வேண்டும்தான். நாட்டின் சட்ட அமைச்சருக்குத் தானே காட்டினோம்; வேறு வெளியாள் யாருக்கும் காட்டவில்லையே” என்று நேரடியாக முகத்திலடித்தாற்போல சொல்லிவிட்டார், சி.பி.ஐ. இயக்குநர். அதாவது ஊழலில் முதன்மைக் குற்றவாளிகளான பிரதமர் மற்றும் அவரது அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, அவர்களின் வழிகாட்டுதலின்படிதான் வழக்கை நடத்துவோம் என்கிறது, சி.பி.ஐ. சி.பி.ஐ. க்குப் பதிலாக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நாடகத்தை உச்சநீதிமன்றம் நடத்தும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் யோக்கியதையைக் குஜராத் மதவெறிப் படுகொலைகள் விவகாரத்தில் கண்டோம்.

இனி, இதுதான் பகிரங்கமான அரசு நியதியாகிவிடும். குற்றவாளிகளே விசாரணையாளர்களாகவும் நீதிபதிகளாகவும் இருப்பார்கள். (போர்க்குற்றவாளி இராஜபக்சேவுக்கும்கூட இது பொருந்தும்) தேர்தல் ஆணையம், உச்ச, உயர் நீதிமன்றங்கள், மையக் கண்காணிப்பு ஆணையர் போன்ற அரசியல் சட்டப்படியான சுயஆட்சி அமைப்புகள் என்று இதுவரைப் பம்மாத்துக் காட்டப்பட்டவை கூட அரசுக் கட்டமைப்பின் அங்கங்கள்தாம் என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு செயல் படும். இனி, ஜனநாயகப் பம்மாத்துக்கள் எல்லாம் கலைந்து, அரசின் ஆளும் வர்க்க பாசிசம் பகிரங்கமாகவே கோலோச்சும்.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________

அற்ற குளத்தின் ஒற்றை பசும் புல்லாய் !

2

தியாகிகள்

தோழர் சீனிவாசனுக்கு கவிதாஞ்சலி  !

லவும் முகங்கள்
ஆயிரம்… ஆயிரம்…
நம் நினைவில் நிற்பவை சிலவே!
மறையினும் கூட,
செயல்கள் நிறைந்த முகங்கள்
மறுபடி… மறுபடி வருமே!

உழைக்கும் வர்க்கத்திற்காய்
உழைத்தவர் நினைவுகள்
மரணம் தோற்கும் இடமே…

கம்யூனிஸ்டுகளுக்கு சாவு
உடலில் இல்லை
உணர்வில் உள்ளது.
வர்க்க உணர்வை
இழக்கும் போதெல்லாம்
ஒருவன் வாழா வெட்டி! – பாட்டாளி
வர்க்கத்திற்காய் வாழ்ந்து இறப்பினும்
அவன், வர்க்கப் போரின் உயிர்ப்புச் சக்தி!

முகம் பார்க்கும் முன்பே
கருவினில் வளரும்
பிள்ளைகள் செயலை
கற்பனை செய்து
உயிர் வாழும் லட்சியம் போல,
கல்லறையில்
தோழனே… உன் முகம் புதைத்த போதும்
எம் செயல்களில் பிறக்கும்
உன் லட்சியத்தின்
முகம் பார்த்து சிலிர்க்கின்றோம்!

சீனிவாசனின் பாச முத்தம் – அவர்
பேத்தியின் கன்னத்தில் மட்டுமா?
உழைக்கும் வர்க்க அரசியலுக்காய்
ஒட்டப்படும்
ஒவ்வொரு சுவரொட்டியிலும்
அந்த.. பாசத்தின் ஈரம் சுரக்கிறது

சீனிவாசனின் இரத்தம்
உடலோடு நிற்கவில்லை
உயிரனைய நம் செங்கொடியில்
உலராத கனவோடு
பிடிவாதம் பிடிக்கிறது!

நிறைவேறாத நம் வேலைகளில்
அவரின்
கணையப் புற்றுநோய் வலி மிகும்.
நிறைவேறும் நம் லட்சியங்களில்
சீனிவாசன் புன்னகை மலரும்

மின்சார ரயில் பெட்டிகளின்
தடம் அதிரும் இரைச்சல்களில்,
பார்வையும் நுழைய முடியாத
மக்கள் கூட்டத்தின் நெருக்கடியில்,
எதிர்த்திசை காற்றைக் கிழித்து
எழும்பும்
நமது அமைப்புப் பிரச்சாரத்தில்
அதோ…
தெளிவாகக் கேட்கிறது
சீனிவாசனின் குரல்!

காலை முதல் மாலை வரை
கால்கள் ஊன்றி
அரசியல் முளைக்கும்,
அடுத்தடுத்தப் பேருந்தில்
ஏறி இறங்கும்
தோழர்கள் உடலில்
வியர்க்கிறது சீனிவாசனின் நினைவு!

தெருமுனைக் கூட்டங்களில்
வர்க்கப் பகையை எட்டி உதைத்து
வரும் போலீசு தடையை
தெருப்புழுதியாய் எத்தி நடந்து…
உழைக்கும் மக்களை
அரசியல் சூடேற்றும் உரைகளில்
துடிக்கிறது
சீனிவாசனின் உணர்ச்சி!

குறைகள், பலகீனங்களையே
குறிக்கோளாக்கி…
குறுக்கு வழியில்
திரும்ப நினைக்கும் மனநிலையை,
தடுத்து நிறுத்தி
விவரிக்கும் இடங்களிலெல்லாம்
வெளிப்படுகிறார் சீனிவாசன்!

மடல்விரித்த வாழைகளின்
உடல் சாய்த்த சூறை போல்,
மடி நிறைந்த தாய்ப்பாலை
இடி விழுந்து கருக்கியது போல்
மனம் நிறைந்த தோழர்களை
மரணத்தால் இழப்பதுவோ?!

மறுகாலனியம் எதிர்த்து நிற்கும்
இதயத்தின் இடி முழக்கில்
நாம் மறுபடியும் பிரசவிப்போம்!
அற்ற குளத்தின்
ஒற்றை பசும் புல்லாய்
வெறுமையின் தருணத்திலும்
வேர்பிடித்த நம்பிக்கையாய்
எத்தனைத் தோழர்கள்…
எத்தனை தியாகங்கள்!

கொளுத்தும் கொடிய
கோடையைப் பிளக்கும்
புரட்சி மழை
வேண்டும் சீக்கிரம்!
பொழியும் துளியில்
தோழனே நீயும் இருப்பாய்…
சீனிவாசா செயல்களில் பிறப்பாய்!

– துரை.சண்முகம்
5/5/2013

மின்கட்டண உயர்வுக்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒரு கலகம் !

7

மின்கட்டண உயர்வுக்கான கருத்துக்கணிப்பு நாடகத்தை கண்டனக் கூட்டமாக மாற்றிய ம.க.இ.க.

திருச்சியில், மின் கட்டண உயர்வுக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒன்று மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் 08.05.2013 அன்று நடத்தப்பட்டது. ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்புகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு அதன் மக்கள் விரோதத் தன்மையை அம்பலப்படுத்த தீர்மானித்தோம்.

trichy-pala-photo-1கடந்த ஆண்டு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் கருத்துக் கேட்பு கூட்டம் என்ற பெயரில் மின் வாரிய ஊழியர்கள், தொண்டு நிறுவனங்கள், நுகா்வோர் அமைப்புகள், ஓட்டுப் பொறுக்கி கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஜால்ரா கோஷ்டிகள் புடை சூழ நாடகம் நடத்தி ரூ 7784 கோடி கட்டண உயர்வு அறிவித்தது. கடந்த ஆண்டு போல நேரடியாக மக்கள் தலையில் சுமத்தாமல் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப் பொறுக்க வேண்டியிருப்பதால் விவசாயத்திற்கும், குடிசை இணைப்புகளுக்கும் மட்டும் கட்டணத்தை உயர்த்தி, அவ்வாறு உயர்த்தப்பட்ட ரூ 973 கோடி கட்டணத்தையும் அரசே மானியமாக செலுத்துவதாகவும் தீர்மானித்துள்ளார்கள். அவ்வாறு முன்கூட்டியே தீர்மானித்து விட்டு கருத்துக் கேட்டுதான் கட்டண உயார்வை அமல்படுத்தப் போகிறோம் என்று நாடகமாடினர்.

இலவச புழுத்த அரிசி வழங்குவதை நாளிதழ்களில் பத்துப் பக்கம் விளம்பரம் போடும் அரசு மக்களின் உயிராதாரமான பிரச்சனையான மின் கட்டண உயார்வு பற்றிய கூட்டத்திற்கு கண்ணுக்கே தென்படாத அளவுக்கு செய்தி வெளியிட்டிருந்தது. தலை கணக்குக்கு மின் வாரிய ஊழியர்களையே கொண்டுவந்து மண்டபத்தை நிரப்பியிருந்தார்கள். போதாக் குறைக்கு போலீஸ் வேறு. கடந்த ஆண்டைப் போல ஜால்ராக் கோஷ்டியினரும் தயாராக வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ஆரம்பத்தில் பேச அழைக்கப்பட்ட ஒருவர், ”எல்லாப் பொருட்களும் விலை உயார்ந்துவிட்டது. அதனால் மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க முடியாது. படித்த அதிகாரிகளான தாங்கள் மக்களை ரொம்ப பாதிக்காமல் மின் கட்டணத்தை உயர்த்துங்கள்”, என்று பிள்ளையார் சுழி போட்டு (மின்சார ஒழுங்கு முறை ஆண்டைகளிடம் பிச்சை கேட்டு) ஆரம்பித்துவைத்தார். அதன் பின்னர் பேசிய மின்சார வாரியத்தின் ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஒருவர்,”மின் கட்டணத்தை உயர்த்தி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்க வேண்டும் ”,என்று கேட்டுக்கொண்டார். இப்படியாக மின் கட்டண உயர்வுக்கு ஆதரவான கருத்துக் கேட்புக் கூட்டம் ஆரம்பித்தது .

அடுத்து மனித உரிமைப் பாதுகாப்பு மைய திருச்சி மாவட்ட தலைவர் காவிரிநாடன் பேச அழைக்கப்பட்டார். அவர், ” ஊழியர்கள் ரிடையர்மெண்ட் ஆகும் போதுதான் இவ்வளவு ஊழியர்கள் ஒன்றாக திரள்வார்கள். இந்த கருத்துக் கேட்பு கூட்டம் பணிநிறைவு விழாக் கூட்டம் போலத்தான் உள்ளது”, என்று நக்கலாக ஆரம்பித்தார். வந்திருந்த ஆணைய உறுப்பினர்கள் முதல் அனைவரும் சிரித்துவிட்டனர். தொடர்ந்து பேசிய காவிரிநாடன் வந்திருந்த மின்சார வாரிய ஊழியர்களைப் பார்த்து, ”2003 வரையில் நம்முடைய மின்சார வாரியம் லாபகரமாகத்தான் இயங்கி வந்தது. அதற்கு காரணம் உங்களுடைய உழைப்புதான்” என்று கூறியவுடன் அரங்கத்தில் மின்சார வாரியம் தனக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக திரட்டி வைத்திருந்த மின் வாரிய ஊழியர்களின் கைதட்டல் அடங்க நீண்ட நேரமானது. அதிகாரிகளோ சேம்சைடு கோல் காரணமாக அதிர்ந்து போயினர். பின்னர் மின்வாரியம் நட்டத்தில் இயங்குவதற்கு காரணம் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கைகளை நம் அரசுகள் அமல்படுத்தி அரசுத் துறை மின் திட்டங்களைத் தடுத்து தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஆரம்பித்த பின்னர்தான் நட்டம் ஏற்பட்டது என்று ஆதாரபூர்வமாக விளக்கினார்.

பின்னர் பேசிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருச்சிக் கிளை செயலாளர் ஆதிநாராயணமூர்த்தி, ”கடந்த ஆண்டு நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய அனைவரும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றுதான் சொன்னார்கள். ஆனால் 33 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்தினீர்கள். அதே போலத்தான் இந்த ஆண்டும் நடக்கிறது இந்த கருத்துக் கேட்பு நாடகம். இப்போதும் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று மக்கள் கருத்தாக நாங்கள் சொல்கிறோம். கேட்பீர்களா நீங்கள்? மின் கட்டணத்தை உயர்த்துவது என்று முடிவு செய்துவிட்டு இங்கு எதற்கு இந்த ஜனநாயக நாடகம்? அரசு மின்னுற்பத்தி நிலையங்களை முடமாக்கிவிட்டு தனியாரிடம் மின்சாரம் வாங்கிய பின்னர்தானே நட்டம் ஏற்பட்டது. அதனால் தானே மின்கட்டண உயர்வு. அதுவும் குடிசைகளுக்கும், விவசாயத்துக்கும் மின்கட்டண உயர்வு. நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப் பொறுக்க மின்கட்டண உயர்வை மானியம் என்ற பெயரில் அரசே ஏற்றுக் கொள்கிறது. அந்த மானியப் பணம் மட்டும் யாருடையது நம் வரிப் பணம்தானே? நம் கையை வெட்டி நமக்கே சூப்பு வைத்து தரும் கொடுமை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம். நமக்கு 16 மணிநேர மின்வெட்டு. சமச்சீர் மின்வெட்டை அமல்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அதிகாரம் உண்டுதானே, அமல்படுத்துங்கள் பார்ப்போம். தனியார்மயத்தை, உலகமயத்தை ஒழிக்காமல் இந்த கொடுமையிலிருந்து நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாது. திட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு. பவரை கையிலெடுத்தால் உடனடியாக பவர் வரும் ”என்று கூறியவுடன் அரங்கு முழுவதும் நம் கருத்தை ஆதரிக்கும் வகையில் கைத்தட்டி ஆதரித்தார்கள்.

அடுத்து பேசிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன்,”நான் இந்த மேடையில் பேசும் பொழுது ஜாக்சன் துரைக்கு எதிராக கட்டபொம்மன் பேசுவது போல உணர்கிறேன். தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கொள்முதல் விலை என்ற பெயரில் அள்ளி கொடுத்துவிட்டு எங்களுக்கு ஏன் மின்கட்டணத்தை உயர்த்துகிறீர்கள். இந்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு அல்ல. ஓட்டு பொறுக்க வீடுவீடாக வந்தவனெல்லாம் எங்கே போனார்கள். மின்கட்டண உயர்வை மாற்றி அமைப்பதற்கான இந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடப்பதே பெரும்பான்மை மக்களுக்கு தெரியாது. மக்கள் மத்தியில் இந்த கூட்டத்தை நடத்தி பார்க்கட்டும். உயிரோடு ஒருவனும் திரும்ப முடியாது”, என்று உரையாற்றினார். ஆணையர்கள் வாயடைத்து போயினர்.

தொடர்ந்து சி.பி.எம்–ஐ சேர்ந்த வயதான ஓருவர், ”இதற்கு முன்னர் கட்டபொம்மன் பேசினார். இப்பொழுது பாரதியாக நான் பேசுகிறேன்”, என்று அவரும் நம் கருத்தையே வழிமொழிந்தார்.

பெண்கள் விடுதலை முன்னணியின் திருச்சி மாவட்ட தலைவர் நிர்மலா, ”வீட்டில் கணவன், குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுத்துவிட்டு, விலைவாசி உயர்வை சமாளிக்க வேறு வழியின்றி வேலைக்கு போகும் உழைக்கும் பெண்களிடம் போய் கேளுங்கள் மின்வெட்டைப் பற்றி… கட்டண உயர்வைப் பற்றி. அவர்கள் என்ன சொல்வார்கள். அவர்கள் மின் கட்டணத்தை குறைக்க சொன்னால் குறைப்பீர்களா? விவசாயிகள் பாசன நீரும் இல்லாமல் நிலத்தடி நீரை பயன்படுத்த மோட்டாருக்கு கரண்டும் இல்லாமல் பட்டினி சாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்”, என்று நிலையை விளக்கினார்.

அடுத்து பேசிய தோழர் ஒருவர், ”சட்டமன்றத்தில் ஜெயலலிதாவைப் பார்த்து விஜயகாந்த் கேட்கிறார் மின்வெட்டை குறையுங்கள் என்று. அதற்கு பதிலளித்து பேசிய ஜெயலலிதா, மின் கட்டணத்தை உயர்த்துவது மாநில அரசு அல்ல. அந்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. மின்சார ஒழுங்கு முறை ஆணையம்தான் மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் கொண்டது. அதில் மாநில அரசு தலையிட முடியாது. இது கூட தெரியவில்லை விஜயகாந்துக்கு -என்று கிண்டலடித்தார். மாநில முதலமைச்சருக்கே கட்டுப்படாத மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எங்கள் கருத்துக்களையெல்லாம் கேட்டு அமுல் படுத்தும் என்ற நம்பிக்கை இல்லை. நாங்கள் பன்னிரண்டு மணி நேரம் வேகாத வெயிலில் உழைத்துவிட்டு இரவு வீட்டில் வந்து படுத்தால் மணிக்கு ஒருமுறை கரண்டை கட் பண்ணுறீங்க. தூங்க கூட முடியாமல் வியர்வையிலும் கொசுக்கடியிலும் நாங்க சாகிறோம். ஆனால் மின்சார ஒழுங்கு முறை ஆணைய ஆணையர்களுக்கு தலைக்கு மேலே இரண்டு ஃபேன், பக்கத்தில் இரண்டு ஃபேன், உங்களை சுற்றி ஐந்து ஏர் கூலர்கள். உங்களுக்கெல்லாம் எங்க கஷ்டம் எப்படி தெரியும்”, என்று சொன்னவுடன் நெளிய ஆரம்பித்துவிட்டார்கள். பின்னர், ”மின்சார வாரியமே கட்டணத்தை உயர்த்தவில்லையென்றாலும் மின்சார ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் உயர்த்தத்தான் போகின்றீர்கள்”, என்று சாடினார்.

இடைமறித்த ஆணைய உறுப்பினர் மட்டம் தட்டும் நோக்கில், ”மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு மின்சார கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் இல்லை”, என்று சொன்னார். மற்றொரு தோழர் குறுக்கிட்டு, ” பொய் சொல்லாதீர்கள். மின்சார ஒழுங்கு முறை ஆணைய சட்டம் 2003-ன் படி மின் கட்டணத்தை வாரியம் உயர்த்தாத போது ஒழுங்கு முறை ஆணையமே மின் கட்டணத்தை உயர்த்தலாம் என்று அதிகாரமளிக்கிறதா இல்லையா?” என்று ஆணையரின் பொய்யை கூட்டத்தினர் முன் போட்டுடைத்த பின் அமைதியானார்.

ம.உ.பா.மையத்தின் செயற் குழு உறுப்பினர் கிளர்ச்சியாளன் தனது பேச்சில் மின் வாரிய, மின்சார ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகளைக் காட்டி, ”தோழர் லெனின் அப்போதே சொன்னார். அரசு அதிகாரிகள், ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மக்களின் துயரத்தை உணரமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் எருமைத் தோல் கொண்டவர்கள்.” என்று அம்பலப்படுத்தினார். சிரிப்பலை எழுந்தது.

பெண்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த மணிமாலை, ”விவசாயிகளான எங்களுக்கு மூன்று மணி நேரம்தான் கரண்ட் வருது. அதுவும் ராத்திரியில்தான் கரண்ட் வருது. மோட்டார் போடப் போய் நாங்களெல்லாம் பாம்பு கடிச்சு சாகிறோம். நீங்க இங்க உட்கார்ந்து சவடால் பேச்சு பேசுறீங்க. மின்சாரத்தை ஒழுங்கா கொடுங்க. அப்புறம் மின் கட்டணத்தை உயர்த்துவதைப் பற்றி பேசுங்க”, என்று கூறினார்.

அடுத்து பேசிய பெண்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த பவானி மின்சார ஊழியர்களைப் பார்த்து, ”மின்சார ஒழுங்கு முறை ஆணையம் என்று அமைத்து மின்னுற்பத்தியை தனியாருக்கு தாரை வார்க்குது அரசு. மின்சார வாரியத்தை மூன்றாக பிரித்து நட்டமுன்னு சொல்லி தனியாருகிட்ட கொடுக்கப் போகிறான். அதிக விலை கொடுத்து தனியாருகிட்ட மின்சாரத்தை வாங்கி குறைந்த விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் தடையில்லாம கொடுக்கிறான். மக்களை மின்வெட்டு செஞ்சு கொல்லுறானுங்க. நீங்களும் மக்கள்தானே வாயை மூடிக்கிட்டு சும்மா உட்கார்ந்திருக்கீங்க. நீங்களும் போராட வாங்க” என்று இடித்துரைத்து போராட அழைத்தார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் அப்பு, ஓவியா இரண்டு பேரும், “ஷாப்பிங் மால்களுக்கு பட்டப்பகல் போல மின் விளக்கு அலங்காரம், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ஐ.டி நிறுவனங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கும் மின் வாரியமும், மின்சார ஒழுங்கு முறை ஆணையமும் மக்களுக்கு மின்சாரத்தை வெட்டுகிறது, மாணவர்களுக்கு இரவு நேரங்களில் படிப்பதற்கு முடியவில்லை. சின்னஞ்சிறு குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும், முதியவர்களும் தூக்கமின்றி நோயுற்றுள்ளனர். இந்த நிலை மேலும் மோசமாகும் பட்சத்தில் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை”, என்று கூறினார்கள்.

அதிகாரிகளிடம் மிகவும் மரியாதையாகவும், பணிவுடனும் பேச வேண்டும் என்று கலந்து கொண்டவர்கள் கருதியிருக்க கூடும். ஆனால் நம் தோழர்கள் மின் வாரியம் மீதும் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மீதும் அரசு மீதும் தனியார்மய, உலகமயக் கொள்கைகள் மீதும் தொடுத்த விமர்சனங்கள், தாக்குதல்கள் அந்த கருத்தை மாற்றிவிட்டது. கலந்துகொண்ட ஏனைய மக்களும் கட்சி, சங்க பிரதிநிதிகளும் மின்வாரியத்தையும், ஒழுங்குமுறை ஆணையத்தையும் அரசையும் தங்களால் இயன்ற அளவுக்கு காய்ச்சி எடுத்தனர். சிலர் மட்டுமே டிரான்ஸ்பார்மர் ரிப்பேரை சரிசெய்ய சொல்லியும், மும்முனை மின்சாரம் வழங்க சொல்லியும் கேட்டுக்கொண்டனர். மற்றபடி மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை கலைக்க வேண்டும் என்றும் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்று தான் அனைவரும் கோரினார்கள்.

மின்சார ஒழுங்கு முறை ஆணையர் நாகல்சாமி, ”இது ஒரு கோர்ட். மின் வாரியம் மின் கட்டணத்தை உயர்த்த மனு கொடுத்துள்ளது. அதில் ஏதாவது கருத்துக்கள் இருந்தால் கூறலாம். மற்றபடி யாரையும் குறை கூறுவது கூடாது” என் பலமுறை கூறியதை யாரும் ஏற்கவில்லை.

மின்சார வாரியத்தின் சார்பில் பேசிய நிதித்துறை இயக்குநர் ராஜகோபால் இந்த வருடத்திற்குள் மின் வெட்டு சரிசெய்யப்படும் என்று கூறினார். நம் தோழர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேள்வியெழுப்பினோம்.

2003ம் ஆண்டுக்கு முன்பெல்லாம் நட்டமின்றி நடந்த மின்சார வாரியம், இப்பொழுது ஏன் நட்டத்தில் இயங்குகிறது? அரசு மின் உற்பத்தி நிலையங்களை இயக்காமல் முடக்கிவிட்டு கூடுதல் விலை கொடுத்து உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் மின்னுற்பத்தி நிலையங்களிடமிருந்த பன்மடங்கு விலை அதிகமாக மின்சாரம் வாங்குவதன் மர்மம் என்ன? மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின்சார வாரியத்திற்கு ஜி.எம்.ஆர்., சாமல் பட்டி., பி.பி.என்., மதுரை ஆகிய தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கக்கூடாது என்று உத்திரவிடப்பட்டுள்ளதே, அதனை ஏன் மின்வாரியம் மீறியது? அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பிள்ளைப் பெருமாள் நல்லூரிலுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சொந்தமான தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து மின்சாரமே வாங்காமல் நாளொன்றுக்கு 1 கோடி ரூபாய் வீதம் சுமார் ஒரு வருட காலத்திற்கு நிலைக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதே, ஏன்? உள்நாட்டு மக்கள் சாகும் போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை காட்டப்படுகிறதே ஏன்? என்றெல்லாம் கேள்வி கேட்ட போது பதிலளிக்க முடியாமல் அவர் திணறினார். சில பொய்யான புள்ளிவிபரங்களை சொன்ன போது தோழர்கள் பொய் சொல்லாதீர்கள் என்று சொல்லி சரியான புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டினார்கள்

மொத்தத்தில், மின்சார ஒழுங்கு முறை ஆணைய கருத்துக் கேட்புக் கூட்டம் நம் அமைப்புகளின் பிரச்சாரக் கூட்டமாக மாறியிருந்தது. இனி வரும் கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்கு ஆணையம் பிரச்சாரம் செய்யவில்லையென்றாலும் நாம் பிரச்சாரம் செய்யலாமென தீர்மானித்துள்ளோம். மண்டப வாடகை, மைக்செட் செலவில்லாமல் பிரச்சாரம் செய்யவும் அதிகாரிகளை எதிர்க்கும் போர்க்குணத்தை மக்களிடம் பரப்பவும் வாய்ப்பாக அமையும் அல்லவா?

தகவல்: மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி.

நிலக்கரி ஊழல் : மன்மோகனின் தகிடுதத்தங்கள் !

12

நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்திவரும் மையப் புலனாய்வுத் துறை, கடந்த மார்ச் 8 அன்று அவ்விசாரணை குறித்த அறிக்கையொன்றை உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. அப்பொழுதே, “சட்ட அமைச்சரிடம் விசாரணை அறிக்கையின் வரைவு காட்டப்பட்டுத் திருத்தப்பட்டுள்ளது” என இவ்வூழல் குறித்து வழக்கு தொடர்ந்திருக்கும் பொதுநல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டன. அச்சமயத்தில் சி.பி.ஐ.-யின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், “அரசைச் சேர்ந்த யாரிடமும் வரைவு அறிக்கை காட்டப்படவில்லை” என அடித்துக் கூறினார். இக்குற்றச்சாட்டு தொடர்பாக பிரமாண பத்திரமொன்றை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.

பிரதமர் மன்மோகன் சிங் - சட்ட அமைச்சர் அஸ்வனி குமார்
அம்பை எய்த குற்றவாளிகள் : பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் .

இந்தச் சதியை மூடிமறைத்துவிட காங்கிரசு செய்த முயற்சிகள் மண்ணைக் கவ்விவிட்ட நிலையில், நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றிய விசாரணை நிலை அறிக்கையைக் கடந்த மார்ச் 8-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திடம் அளிப்பதற்கு முன்பாகவே, அந்த அறிக்கையின் வரைவை மைய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரின் விருப்பத்தின் பேரில், அவருடன் சி.பி.ஐ. பகிர்ந்து கொண்டது; “சட்ட அமைச்சர் மட்டுமின்றி, பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய நிலக்கரி அமைச்சகத்தைச் சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகளுடனும் வரைவு விசாரணை அறிக்கை அந்த அதிகாரிகளின் விருப்பத்தின் பேரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது” என வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கடந்த ஏப்ரல் 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமொன்றைத் தாக்கல் செய்தார்.

வரைவு விசாரணை அறிக்கையைச் சட்ட அமைச்சரிடமும், மற்ற இரு அதிகாரிகளிடமும் காட்டியதை ஒப்புக் கொண்டுள்ள சி.பி.ஐ., “அவர்களிடம் காட்டிய பிறகு அறிக்கையில் ஏதாவது திருத்தம் செயப்பட்டுள்ளதா?” என்பது குறித்துத் தனது பிரமாணப் பத்திரத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை. முழுக்க நனைந்த பிறகும் முக்காடு போட்டுக் கொள்ளும் சி.பி.ஐ.-யின் இந்த அசட்டுத் துணிச்சல் நம்மை விக்கித்துப் போக வைக்கிறது.

இதுவொருபுறமிருக்க, “விசாரணை அறிக்கைகளை இனி மேற்கொண்டு அரசைச் சேர்ந்த யாரிடமும் காட்டமாட்டோம்; ஏப்ரல் 26 அன்று நீதிமன்றத்திடம் அளித்துள்ள விசாரணை அறிக்கை அரசைச் சேர்ந்த யாருடனும் எந்தவிதத்திலும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை” என்றும் தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறது, சி.பி.ஐ

ஒரேயொரு அறிக்கையின் மூலம் மகாகனம் பொருந்திய கோர்ட்டார் அவர்களைக் கேலிப்பொருளாக்கிவிட்ட சி.பி.ஐ.-க்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நெற்றிக்கண்ணைத் திறக்கவும் இல்லை; சி.பி.ஐ.யின் பெயரால் தாக்கல் செய்யப்பட்ட காங்கிரசின் அறிக்கையை அவர்கள் உடனடியாகத் தள்ளுபடி செயவுமில்லை. மாறாக, மைய அரசு, சி.பி.ஐ.-க்கு எதிராக வழக்கமான கண்டனங்களைத் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளை எழுப்பி, அதற்குப் பதில் அளிக்குமாறு கூறிவிட்டு, இந்த விசாரணையை மே 6-ந் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டனர்.

சி.பி.ஐ., விசாரித்து வரும் இந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகள் அனைத்தும் 1993-க்குப் பிறகு, அதாவது தனியார்மயம்-தாராளமயத்தின் பிறகு ஆரம்பித்து 2010 வரை, தொடர்ந்து 17 ஆண்டுகளாக நடந்துள்ளன. இந்தப் பதினேழு ஆண்டுகளில், பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரித் துறை அமைச்சராகவும் இருந்த 2004-2008 காலக்கட்டத்தில்தான் முறைகேடுகள் முழு வேகத்தில் நடந்தன. கடந்த பதினேழு ஆண்டுகளில் ஒதுக்கீடு செயப்பட்ட 195 சுரங்க வயல்களுள், 160 வயல்கள் அந்த நான்கு ஆண்டுகளில்தான் ஒதுக்கப்பட்டன.

“அலைக்கற்றைகளை ஏலத்தில் விட வேண்டும் என நான் அறிவுறுத்தியதை ஆ.ராசா ஏற்றுக் கொள்ளவில்லை” எனப் புளுகி வரும் மன்மோகன் சிங், நிலக்கரி வயல்களை ஏலத்தில் விட வாய்ப்பிருந்தும் அதனைத் திட்டமிட்டே புறக்கணித்துவிட்டு, விருப்பத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் முறையை நடைமுறைப்படுத்தினார். முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட அலைக்கற்றைகளைப் பெறுவதற்கு கார்ப்பரேட் முதலாளிகள் வரிசையில் நிற்கவாவது வேண்டியிருந்தது. நிலக்கரி வயல்களைப் பெற அந்தச் சிரமம்கூட இல்லை. அமைச்சர்கள்-அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை நியமித்து, அந்தக் குழு யார்யாருக்கெல்லாம் வயல்களை ஒதுக்கலாம் என விரும்பியதோ, அவற்றுக்கெல்லாம் நிலக்கரி வயல்களை மலிவு விலையில் வாரிக் கொடுத்தார், மன்மோகன் சிங்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்நிலக்கரிச் சுரங்க வயல்களை இந்தியச் சந்தை மதிப்பின்படி ஒதுக்கீடு செய்யாததால், அரசிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 10.67 இலட்சம் கோடி ரூபாய் என்கிறது, கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை. ஏறத்தாழ 1,700 கோடி டன் கொண்ட நிலக்கரி வயல்கள் தனியாருக்குத் தரப்பட்டிருப்பதாகவும், அதன் மதிப்பு 42,50,000 கோடி ரூபாய் என சி.பி.ஐ. மதிப்பிட்டுள்ளது. இந்த ஊழலோடு ஒப்பிட்டால் அலைக்கற்றை ஊழல் சுண்டைக்காய்தான்.

2 ஜி ஊழல் வழக்கில் பலியிடுவதற்கு ஆ.ராசா கிடைத்ததைப் போல, நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மன்மோகனைக் காப்பாற்றுவதற்கு யாரும் கிடைக்காததால், விசாரணை அறிக்கையைத் தனக்குச் சாதகமாகத் திருத்தியிருக்கிறது, காங்கிரசு கும்பல். தலைமைக் கணக்கு அதிகாரி இந்த முறைகேடு தொடர்பாக கடந்த ஆண்டு பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வெளியிட்டு மாட்டிக் கொண்ட சம்பவத்தின் நினைவு மறைவதற்கு முன்னதாகவே, அடுத்த மோசடி வேலையில் கூச்சநாச்சமின்றி இறங்கி மாட்டிக் கொண்டுள்ளார், பிரதமர் மன்மோகன் சிங். அதிகாரம் கையில் இருக்கும் துணிவில், “அறிக்கையில் இருந்த இலக்கணப் பிழைகளைத்தான் சட்ட அமைச்சர் சரி செய்தார்” என மிதமிஞ்சிய கொழுப்போடு அறிவித்து, இந்தச் சதியை நியாயப்படுத்துகிறார், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல் நாத். இப்பொழுது இம்மோசடிக் குற்றச்சாட்டிலிருந்து மன்மோகனைக் காப்பாற்றுவதற்காகக் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல் முதல் களப்பலியாக்கப்பட்டுள்ளார்.

ஹரேன் ராவல் தான் பதவி விலகிய கையோடு அட்வகேட் ஜெனரல் கூலம் வாகன்வாதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தான் வாகன்வாதி சொல்லித்தான் சி.பி.ஐ.யின் அறிக்கையைப் பார்த்து அதில் திருத்தங்களைச் சொன்னதையும்; வாகன்வாதி சொல்லித்தான் உச்ச நீதிமன்றத்தில் அரசைச் சேர்ந்த யாரும் அறிக்கையைப் பார்க்கவில்ல என வாதாடியதையும்” குறிப்பிட்டிருக்கிறார். அட்வகேட் ஜெனரல் வாகன்வாதி அடுத்தவர்களை மாட்டிவிடும் வேலையைக் கூச்சமின்றிச் செயக்கூடியவர்தான் என்பது 2 ஜி ஊழல் வழக்கிலேயே அம்பலமாகியிருக்கிறது. இது மட்டுமல்ல, காங்கிரசு தலைமைக்காக அவர் எதையும் செய்யத் துணிந்தவர். மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட பொழுது, முலாயம் சிங் அவரது அரசைக் காப்பாற்றினார் என்பதற்காகவே, முலாயமுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு ஆதரவாக நடந்து கொண்டவர்தான் அட்வகேட் ஜெனரல் வாகன்வாதி.

சோனியா, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, கூலம் வாகன்வாதி ஆகியோரைக் கொண்ட ஆளும் கும்பல் நீதி, நேர்மை, நாணயம், அறம், சட்டம், மக்கள் நலன் என எந்த விழுமியங்களையும் ஒரு பொருட்டாக மதிக்காத, கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தரகு வேலை பார்ப்பதையே முழுமூச்சாகக் கொண்ட, அதற்காக எப்படிபட்ட கிரிமினல் வேலைகளிலும் இறங்கத் தயங்காதவர்கள் என்பதைத்தான் இந்த இரண்டு ஊழல் விவகாரங்களும் எடுத்துக்காட்டுகின்றன. மற்றொரு ஆளும் வர்க்கக் கட்சியான பா.ஜ.க.வும் காங்கிரசுக்குச் சற்றும் சளைத்தது அல்ல என்பதை கர்நாடகாவில் நடந்துள்ள சுரங்க ஊழல் அம்பலப்படுத்தியிருக்கிறது.

– குப்பன்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________

புதிய ஜனநாயகம் – மே 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

2

புதிய ஜனநாயகம் மே 2013

புதிய ஜனநாயகம் மே 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

தலையங்கம் : கொள்ளையில் கொள்ளை; ஊழலுக்குள் ஊழல்!

ஸ்டெர்லைட் தீர்ப்பு: நீதி கொன்ற உச்ச நீதிமன்றம்!
நிலக்கரி ஊழல்: மன்மோகனின் தகிடுதத்தங்கள்
2 ஜி ஊழல்: மன்மோகனின் சாயம் வெளுத்தது!

ஈழ அகதிகள்: தமிழகத்தின் முள்வேலி முகாம்கள்!
சிறப்பு முகாம் என்ற சிறைக்கூடம்!

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: ஆணாதிக்க வக்கிரத்தின் உச்சம்!
கொரிய தீபகற்பம்: அமெரிக்காவின் அடுத்த போர்க்களமா?

புதிய ஜனநாயகம் மே 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

காஷ்மீர்: போலீஸ் கொடுமையால் உருவாகும் போராளிகள் !

8

ப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் குமுறிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குறிப்பிட்ட சில போலீசு அதிகாரிகள் தன்னை சிக்க வைத்து விட்டனர் என்ற அப்சல் குருவின் குற்றச்சாட்டு விசாரிக்கப்படாமலேயே கள்ளத்தனமாகவும் இரகசியமாகவும் அவர் தூக்கிலிடப்பட்டு விட்டார். அப்சல் குருவின் வழக்கு நாடறிந்த கதை. ஆனால் போலீசாலும் இராணுவத்தாலும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்ட இளைஞர்களின் கதைகள் காஷ்மீரில் ஏராளம். பொய் வழக்கு, சிறை, சித்திரவதை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், தலைமறைவாவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை காஷ்மீரின் இளைஞர்களுக்கு போலீசும் இராணுவமும் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. பல இளைஞர்களை கொடுமைப்படுத்தி போராளிகளாக மாற்றுவதே அரசின் அடக்குமுறைதான் என்கிறார்கள் காஷ்மீர் மக்கள்.

காஷ்மீரின் இளைய தலைமுறை போராளிகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்ற சித்திரத்தை கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.

1. சித்திரவதையும் அவமானமும் உருவாக்கிய போராளி

பெயர் : முசாமில் அகமது தர்
வயது : 24
ஊர் : சோப்போர்
தொழில் : மருத்துவ உதவியாளர்

காஷ்மீர் கல் எறிதர்
காஷ்மீர் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை கல்லெறிய வைத்து பின்னர் போராளியாக்கி கொல்கிறார்கள்.

2009-ம் ஆண்டு மருத்துவ உதவியாளர் பட்டம் பெற்று சோப்போர் மருத்துவமனை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார் முசாமில். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர்  ஏ.கே.47 துப்பாக்கியை காதலிக்க ஆரம்பித்திருந்தார். ’முசாமில் ஒரு தலைமறைவான லஷ்கர்-ஈ-தொய்பா போராளி’ என்று அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப சிதம்பரம் என்று அறிவித்தார். 2012-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதியன்று ஸ்ரீநகருக்கு வடக்கே 66 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சோப்போர் நகரத்தில் பாதுகாப்பு படையினருடனான என்கவுண்டரில் முசாமில் கொல்லப்பட்டார்.

இடையில் என்ன நடந்தது? நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த முசாமில் ஒரு காலத்தில் ராஜீவ்காந்தி எழுத்தறிவு இயக்கத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். அவர் கொல்லப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வெள்ளைத் தொப்பி தரித்த குறுந்தாடி வைத்த நம்பிக்கையான முகத்துடன் காட்சியளிக்கிறார். “மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து குடும்பத்தின் கடன்களை அடைக்க உழைத்துக் கொண்டிருந்தார்” என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

ஆனால், நவம்பர் 17, 2010-ல் நடந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையையே மாற்றி விட்டது. அன்று போலீசிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்த யாரோ இரண்டு பேர் ஒரு மூட்டையை முசாமில் வீட்டு தோட்டத்தில் தூக்கி எறிந்து விட்டு போனார்கள். அதைப் பார்த்து பயந்து போன அவரது அம்மா, யாருக்கும் தெரியாமல் அதை கிணற்றில் தூக்கி போட்டு விட்டார். அந்த செயலில் ஆரம்பித்த தொடர் நிகழ்வுகள் முசாமிலின் உயிரை பறிப்பதில் கொண்டு விட்டன.

விரைவிலேயே போலீசும் பாதுகாப்பு படையினரும் முசாமில் வீட்டுக்கு வந்தனர். முசாமிலின் அப்பா மொகமது அமீன் தர், முசாமில் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களையும் அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் முசாமில் சித்திரவதை செய்யப்பட்டார். அவரை ஒரு நாற்காலியில் கட்டி வைத்து சகோதரர்கள் இருவரையும் இரண்டு கால்களையும் இரண்டு பக்கம் இழுக்கும்படி செய்தனர். அவர்களது தந்தை இதைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். முசாமிலின் கதறல்களை கேட்டு போலீஸ்காரர்கள் கிண்டல் செய்தார்கள். “மிகவும் அவமானமான மறக்க முடியாத சம்பவம்” என்கிறார் மொகமது அமீன் தர்.

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு முசாமில் 10 மாதங்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இறுதியில் வழக்கு ஆதாரமற்றது என்று தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்ற ஆண்டு முசாமில் ஒரு தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட போது அவரது குடும்பத்தினரின் உலகமே இடிந்து போனது. “போலீசின் சித்திரவதையும் கொடுமைகளும் துப்பாக்கி தூக்குவதை தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் செய்து விட்டன” என்கிறார் முசாமிலின் தந்தை.

2. குறைவாக அடிப்பதற்காக போலீசுக்கு லஞ்சம் கொடுத்த சிறுவன்

பெயர் : அதீர் அகமத் தர்
வயது : 19
ஊர் : சோப்போர்
பணி : கல்லூரி முதலாமாண்டு மாணவர்

கடந்த சில ஆண்டுகளாக அதீர் அப்பாவிடமிருந்து வாரத்துக்கு ரூ 200 வாங்கிக் கொண்டு போவான். அது அவனது கைச்செலவுக்கு இல்லை, போலீஸ் நிலையத்தில்  குறைவாக அடிக்கும்படி காவலர்களுக்கு லஞ்சமாக கொடுப்பதற்கு என்பது வெகு காலத்துக்குப் பிறகுதான் அவரது குடும்பத்துக்கு தெரிய வந்தது.

சோபோரின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அதீர் ஒரு லஷ்கர் போராளியாக மாறியது, காஷ்மீர் இளைஞர்களின் கதைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

கடந்த டிசம்பர் மாதம் சோப்போரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சைத்புரா கிராம மக்கள் அதிகாலையில் துப்பாக்கிச் சத்தத்தால் எழுப்பப்பட்டனர். பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 5 பாகிஸ்தானி ஊடுருவலாளர்களும் ஒரு உள்ளூர் தீவிரவாதியும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட உள்ளூர் போராளிதான் அதீர்.

கால்பந்து ரசிகனான அதீர், கிறிஸ்டினோ ரொனால்டோவின் சிகையலங்காரத்துடன் கறுப்புக் கோடு போட்ட ஸ்வெட்டர் அணிந்திருக்கும் புகைப்படம் மட்டும்தான் அவனது குடும்பத்தின் பொக்கிஷமாக இருக்கிறது. “போலீஸ் பொய்யான வழக்குகளில் அதீர் போன்ற இளைஞர்களை சிக்க வைத்து அவர்களது குடும்பங்களையும் சேர்ந்து தண்டிக்கின்றனர்” என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

2011-ல் நடந்த ஒரு கல் எறிதல் சம்பவத்தில் அவனுக்கும் தொடர்பு உண்டு என்று ஒத்துக் கொள்ளுமாறு அதீர் போலீஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டான். நான்கு வாரங்களுக்கு இரக்கமில்லாமல் அடித்து துவைத்த பிறகு அவனை பிணையில் வெளியில் விட்டனர். அடிவயிற்றில் உதைப்பது, கம்பால் அடிப்பது, பெல்டுகளால் விளாசுவது என்று சித்திரவதை செய்யப்பட்டதாக அதீர் குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறான்.

பிணையில் வந்த பிறகும் சித்திரவதையும் கொடூரங்களும் தொடர்ந்தன. அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்துக்கும் சிறப்பு படையினர் முகாமுக்கும் அடிக்கடி அழைக்கப்பட்டு அவன் சித்திரவதை செய்யப்பட்டான். அதை போலீஸ் உயர் அதிகாரிகள் மேற்பார்வை இட்டனர்.

சென்ற ஆண்டு ஜூலை மாதம் அதீர் தலைமறைவாகி விட்டான். “விடாமல் தொடரும் கொடுமைகளிலிருந்து தப்பிக்க அவனுக்கு வேறு வழியே இருக்கவில்லை” என்கிறார் போலியாவால் பாதிக்கப்பட்டவரான அதீரின் சகோதரர் தவ்ஹீத் அகமது தர்.

அதீரின் குண்டு பாய்ந்த உடலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான போதுதான் குடும்பத்துக்கு அவனைப் பற்றிய கடைசி செய்தி வந்து சேர்ந்தது.

3. மீண்டும் போராளியாக மாறிய பையன்

பெயர் : ஆஷிக் அகமது லோன்
வயது : 22
ஊர் : ஷோப்பியன்
பணி : கல்லூரி முதலாண்டு மாணவன்

10-ம் வகுப்பில் படிக்கும் போது ஆஷிக் போராளி அமைப்பு ஒன்றில் சேர்ந்தான். ஆனால் இரண்டு மாதங்களுக்கு பிறகு அதிலிருந்து விலகி போலீசில் சரண்டைந்தான். வெளியில் வந்ததும் ஒரு மளிகைக் கடை நடத்த ஆரம்பித்ததோடு உள்ளூர் கலைக் கல்லூரியில் படிப்பதற்கும் பதிவு செய்தான்.

ஆனால், அதன் பிறகுதான் சோதனைகள் ஆரம்பித்தன. ஷோப்பியனில் உள்ள போலீஸ் முகாமுக்கு அவன் அடிக்கடி அழைக்கப்பட்டான். ஒவ்வொரு முறையும் அவன் வருவதற்கு முன்பு அவனது இரத்தம் தோய்ந்த உடலுக்கு ஒத்தடம் கொடுப்பதற்கு சுடுநீரை அவனது 45 வயதான அம்மா ஜரீபா அக்தர் தயாராக வைத்திருப்பார். “அப்போதெல்லாம் குறைந்தது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான்‘ என்கிறார் அவர். ஆனால் சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஊரை விட்டு ஓடி போய் விட்ட அவன் எப்போது வேண்டுமானாலும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்படலாம் என்ற பயத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவனது அம்மா.

ஆஷிக் சரணடைந்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக போலீஸ் குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறது. “அவனை போராளி அமைப்பில் சேர வைத்ததே இவர்கள்தான், இப்போது வேலை வாங்கித் தருவதாக பசப்புகிறார்கள்” என்று குமுறுகிறார் ஜரீபா.

********

இந்த மூன்று பேரின் குடும்பத்தினர் கூறுவதையுமே பொய் பிரச்சாரம் என்று ஒதுக்கித் தள்ளுகிறது காஷ்மீர் போலீசு.

2012ல் மட்டும் 40 சிறுவர்கள் ஹிஜ்புல் முஜாகிதினீலும், லஷ்கர்-ஈ-தொய்பாவிலும் சேர்ந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள். வசதியான குடும்பங்களை சேர்ந்தவர்கள். … அரசைப் பொருத்தவரை இது போராளிகளின் புள்ளிவிவரக் கணக்கில் ஒரு சேர்க்கையாக இருக்கலாம். ஆனால் காஷ்மீர் மக்களை பொறுத்த வரை இவர்கள், இராணுவமும் போலீசும் நிகழ்த்தும் கொடுமைகளால் உருவாக்கப்படும் தியாகிகள்.

நன்றி: தெகல்கா – 19.1.2013
தமிழாக்கம் : செழியன்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________

விளைநிலங்களை பறிக்கும் மத்திய அரசு !

0

விளைநிலங்களில் பவர்கிரிட் கம்பி வழித்தடம் அமைக்காதே!
விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்காதே!

பிரச்சார இயக்கம் – தெருமுனைப் பிரச்சாரம்!

ந்தியாவின் முதன்மையான மற்றும் அடிப்படை ஆதாரமான விவசாயத்தை திட்டமிட்டு ஆளும் வர்க்கத்தின் அழித்துக் கொண்டு வருகின்றனர். விவசாயிகளை கடன்காரர்களாக்கி விவசாயத்தை விரட்டியும் தற்கொலைக்கும் தள்ளி வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 2.5 லட்சம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் சில மாதங்களுக்கு முன்பு “விவசாயத்தை இவ்வளவு பேரை யார் செய்யச் சொன்னது” என்று திமிராக பேசியுள்ளார். பன்னாட்டு பதுக்கல் கம்பெனிகளுக்கு சாதகமாக மன்மோகன் சிங் பேசியுள்ளார். அரசே திட்டமிட்டு விவசாயத்தை அழித்து வருகிறது.

power-polesபென்னாகரம் வட்டத்தில் சின்னம்பள்ளி பகுதி ஓரளவு விவசாயம் நடக்கும் பகுதி. இப்பகுதியில் மத்திய பவர் கிரிடு நிறுவனம் தூத்துக்குடியிலிருந்து தருமபுரிக்கு 745 KV மின்கம்பி வழித்தடத்தை அமைக்க சின்னம்பள்ளி, கோம்பை, சோளி கவுண்டனூர், பூதநாயக்கன்பட்டி, பெத்தானூர், சானரப்பட்டி, பெரும்பாலை ஆகிய 8 கிராமங்களில் விவசாயிகளை மிரட்டி நிலத்தில் மின்கோபுரம் அமைக்க சர்வே செய்துள்ளனர். குழிகளையும் சில இடங்களில் இயந்திரம் வைத்து தோண்டியுள்ளனர்.

இந்த மின் கோபுரம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய மின் வழித்தடமாகும். ஒரு கோபுரம் அமையும் இடத்தில் குறைந்த பட்சம் 0.5 ஏக்கர் நிலம் பறிக்கப்படுகிறது. இதனால் இந்த எட்டு கிராமங்களில் விவசாயத்தையே நம்பி வாழும் விவசாயிகளை நாடோடிகளாக அரசு மாற்றி இருக்கிறது. அக்கிராமங்களில் மின் கோபுரம் அமையும் இடங்களில் நூற்றுக் கணக்கான மரங்களைக் கொண்ட தென்னந் தோப்புகளும், மாந்தோப்புகளும், புளியந்தோப்புகளும் பசுமையான காடுகளும், விளைநிலங்களும் அழிக்கப்பட உள்ளன.

இதற்கு எதிராக பவர் அமைக்க வரும் அதிகாரிகளிடம் முறையிட்டால், வாக்குவாதம் செய்தால் “கூடங்குளத்தில் செய்தது போல கைது செய்து சிறையில் தள்ளுவோம்” என்று மிரட்டுகிறார்கள். பாலியல் பலாத்காரம் செய்ய முற்படுபவனிடம் “என்னை விட்டுவிடு” என்று ஒரு பெண் கெஞ்சினால் எப்படி விட மாட்டானோ, அப்படித்தான் இந்த அரசு விவசாயிகளையும் பலாத்காரமாக மிரட்டி நிலத்தைப் பறித்து டவர் அமைக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

அதற்கு எதிராக பென்னாகரம் வட்ட புரட்சிகர அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி, பிரசுரம் அச்சிட்டு மின்கோபுரம் அமையவிருக்கும் 8 கிராமங்களிலும் வீடு வீடாக சென்று டவர் அமைக்க வரும் அதிகாரிகளையும், பணியாளர்களையும் நாம் தடுத்து திருப்பி அனுப்ப ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். 7 கிராமங்களில் தெருமுனை பிரச்சாரத்தையும் செய்தனர். விவசாயிகளின் பாதிப்புக்காக எந்த ஓட்டுக் கட்சியும் முன் வந்து அவர்களுக்கு உதவி செய்யாத நிலையில் உடனடியாக விவசாயிகள் விடுதலை முன்னணி தலையிட்டு கிராம மக்களிடம் போராட்ட உணர்வூட்டியதும், ஆதரவு தெரிவித்தது அவர்களுக்கு போராட உத்வேகமூட்டுவதாக இருக்கிறது.

“இது மத்திய அரசு நிறுவனம், இதனை தடுத்து நிறுத்த முடியாது” என்று நினைத்துக் கொண்டிருந்த மக்களை, 8 கிராம மக்கள் நினைத்தால் அத்திட்டத்தை மாற்றி அருகில் உள்ள மலையோரங்களில் அமைக்க செய்து விட முடியும் என்று விளக்கி அடுத்தக் கட்ட போராட்டத்திற்கு விவசாயிகள் விடுதலை முன்னணி அணி திரட்டி வருகின்றது.

தெருமுனை பிரச்சாரத்திற்கு முன்னதாக தலைப்பில் கண்ட முழக்கத்தின் அடிப்படையில் போஸ்டர் அச்சிட்டு 8 கிராமங்களிலும், மாவட்டத்தின் முக்கிய நகரப் பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளே!
பெரும்பாலை முதல் தோளூர் கோம்பை வரை எட்டு கிராமங்களில் அமைய உள்ள பவர்கிரிட் மின்கம்பி வழித்தடத்தை விளைநிலங்களில் அமைக்காதே!

உழைக்கும் மக்களே!
விளைநிலங்களில் பவர்கிரிட் கோபுரம் அமைவதை போராடி முறியடிப்போம்!
விவசாயிகளை விவசாயத்தை விட்டே விரட்டும் புதிய பொருளாதார கொள்கையை முறியடிக்க, விவசாயிகளின் வாழ்வுரிமையை பாதுகாக்க ஒன்றிணைவோம்!

விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம் வட்டம், 99433 12467

தகவல் :
செய்தியாளர், புதிய ஜனநாயகம், பென்னாகரம்,

பாமக – வை ஏத்தி விட்ட பின் நவீனத்துவ பச்சோந்திகள் !

46

(நீண்ட பதிவு)

நாயக்கன் கொட்டாயில் ஒரு கொடிய வன்கொடுமைக் குற்றத்தை அரங்கேற்றியது மட்டுமின்றி, சாதி கடந்த திருமண எதிர்ப்பு, வன்கொடுமைச் சட்ட எதிர்ப்பு என்று ஆதிக்க சாதி வெறியர்கள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். வன்னிய சாதிப் பெண்களைக் காதலித்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகின்றனர். இவையனைத்துக்கும் இன்று தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் பா.ம.க தலைவர் ராமதாசு, 90-களின் துவக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமையின் நாயகனாக காட்டப்பட்டவர்.

எண்பதுகளின் இறுதியில் வன்னியர் சங்கத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசியல் அரங்கில் இறக்கியபோதே, அதன் சாதிய பிழைப்புவாத முகத்தை புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தியது. இருப்பினும் எம்.ஜி.ஆருக்கு வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் கட்சியும் கொள்கையும் தயார் செய்து கொடுத்தது போலவே, ராமதாசுக்கு புரட்சி வேசம் கட்டி விடுவதற்கு ஏராளமான அறிஞர்களும் பேராசிரியர்களும் வரிசையில் நின்றனர்.

vanniyarsangam

“இழக்கப் போவது சாதிகளை மட்டுமே! அடையப் போவதோ பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி அதிகாரம்!” “ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே, ஒன்று சேருங்கள்! ஆளும் பாசிச கும்பல்களைத் தூக்கி எறியுங்கள்!” என்ற முழக்கங்களை பா.ம.க. மீது சுமத்தி, ராமதாசுக்கே தோன்றாத கோணங்களில் இருந்தெல்லாம் அவரது ஒவ்வொரு அசைவுக்கும் அறிவாளிகள் பொழிப்புரை போட்டனர். நிறப்பிரிகை கனவான்கள் (அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ.வேல்சாமி), ப.கல்யாணி, பழமலய், பிரபஞ்சன், பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள், பெ.மணியரசன், பழ.நெடுமாறன், தியாகு, சுப.வீ என இவர்களுடைய பட்டியல் மிக நீண்டது. இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதி, சாதி ஒழிப்பு, நாடாளுமன்ற முறை மூலம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் ஆகியவை சாத்தியம் என்ற மாயையை உருவாக்குவதில் மாஜி புரட்சியாளர்கள், மற்றும் அறிவுத்துறையினர் முன்னிலை வகித்தனர்.

சாதிய, வர்க்க ஒடுக்குமுறையை நிலைநிறுத்தும் பொருட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, ஊட்டி வளர்க்கப்படும் மேற்படி அரசு அமைப்பு, சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய அரசு அமைப்பை தாக்கித் தகர்க்கும் அரசியல் புரட்சியின்றி சமூகப் புரட்சி சாத்தியமில்லை. பழைய கட்டுமானத்தின் கீழ் ஒடுக்கப்படும் சாதியினர் சமத்துவம், ஜனநாயகத்தைப் பெற முடியாது என்ற புரட்சிகர அரசியலை நிராகரித்து, அடையாள அரசியலையும் அதன் வழி சாதிய பிழைப்புவாத அரசியலையும் இவர்கள் கொண்டாடினர். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை ராஜதுரையும் ராமதாசு, திருமாவளவன் உள்ளிட்டவர்களை நிறப்பிரிகை கும்பலும் துதிபாடினர்.

தங்களால் கொண்டாடப்பட்ட இந்த நபர்கள், காங்கிரசு, பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க என்று மாறி மாறி கூட்டணி சேர்ந்து கொண்டபோது இவர்கள் வாய் திறக்கவில்லை. தாங்கள் முன்வைத்த அரசியல் தவறு என்று ஒப்புக்கொள்ளவோ விளக்கம் கூறவோ இல்லை. தாங்கள் முன்வைத்த கருத்துகளை நம்பி, இந்தப் பிழைப்புவாதிகளின் பின்னால் சென்ற எண்ணற்ற இளைஞர்கள் சீரழிந்து போனது பற்றியும் இவர்கள் கவலைப்படவில்லை. கம்யூனிசக் கொள்கை மற்றும் புரட்சிகரக் கட்சியின் மீது இளைஞர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை புரட்சிகர இயக்கங்களில் சேரவொட்டாமல் தடுப்பதுமே இவர்களுடைய நோக்கமாக இருந்து வருகிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடனோ அல்லது உதவியில்லாமலோ இவர்கள் இந்த ஆளும்வர்க்கத் தொண்டினை நிறைவேற்றி வருகிறார்கள்.

ஓட்டுக்கட்சித் தலைவர்கள் கூட தமது அரசியல் சந்தர்ப்பவாதங்களுக்கு மக்களிடம் விளக்கமளிக்கிறார்கள். அவற்றின் விளைவாக மதிப்பிழக்கிறார்கள். ஆனால் அடையாள அரசியல் என்ற பெரில் சாதிய பிழைப்புவாதிகளையும், சாதி வெறியர்களையும் உருவாக்கி, வளர்த்து விட்ட இந்த அறிவுத்துறையினர் மட்டும், தாங்கள் தயாரித்த தீவட்டிகள் ஊரையே கொளுத்துவது தெரிந்தும், ஒரு பாசிஸ்டுக்குரிய அலட்சியத்துடன் மவுனம் சாதிக்கிறார்கள். தாங்கள் பிரச்சாரம் செய்த கருத்துகளின் சமூக விளைவுகளுக்குப் பொறுப்பேற்காமல் நழுவுகிறார்கள். பின் நவீனத்துவம், பெரியார், அம்பேத்கர், காந்தி, முகமது நபி என்று காற்றடிக்கும் பக்கமெல்லாம் பறந்து, பசையுள்ள இடங்களில் ஒட்டிக் கொள்கிறார்கள்.

நாடாளுமன்ற அரசியலின் சீரழிவு, சாதிய பிழைப்புவாதிகளை சுயேச்சையாகத் தோற்றுவிப்பதையும், அடையாள அரசியல் அத்தகைய பிழைப்புவாதங்களுக்கு கவுரவமும் அந்தஸ்தும் அளித்து, ஜனநாயகப் புரட்சி அரசியலை சீர்குலைப்பதற்கு பயன்படுவதையும் இந்நூலின் கட்டுரைகளை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள இயலும்.

– “சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்”
– இந்த ஆண்டு (2013) புதிய ஜனநாயகத்தின் வெளியீடாக வந்த நூலின் முன்னுரை

__________________________________________________-

சாதியக் கூட்டணிக்கு முற்போக்கு சாயம்!

(1991-ம் ஆண்டு மே மாதம் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரை)

மிழகத் தேர்தலில் சாதி ரீதியிலான புதிய கூட்டணியாக பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளது. பிழைப்புவாதிகளும், போலிப் புரட்சியாளர்களும் அதற்கு முற்போக்கு சாயம் பூசி, கொள்கைப்பூர்வ கூட்டணியாகச் சித்தரிக்கின்றனர்.

சாதி ரீதியான புதிய கூட்டணியாக பாட்டாளி மக்கள் கட்சியும், அதன் ‘தோழமை’க் கட்சிகளும் மூன்றாவது அணியாகத் தமிழகத் தேர்தலில் போட்டியிடுகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி (பிரகாஷ் அம்பேத்கர் பிரிவு), நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கம், அப்துல் சமதுவின் முஸ்லீம் லீக், பழனி பாபாவின் ஜிகாத் கமிட்டி, பண்ருட்டி ராமச்சந்திரன் கோஷ்டி ஆகியன கூட்டுச் சேர்ந்து இப்புதிய அணியை உருவாக்கியுள்ளன. தி.மு.க. – போலிக் கம்யூனிஸ்டுகள், அ.தி.மு.க. – காங்கிரசு கூட்டணிகளுக்கு எதிரான கொள்கைப்பூர்வமான லட்சியக் கூட்டணியாக அவர்கள் தங்களைப் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.

ஓட்டுக் கட்சிகளிடையே கூட்டணிகள் முறிவதும், புதிய கூட்டணிகள் – பேரங்கள் நடப்பதும், கட்சி மாறுவதும் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் சந்தித்து வரும் கூத்துக்கள் தான். இருப்பினும் வன்னியர் சங்கமாக இருந்து, சில தாழ்த்தப்பட்ட அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து உருவாகியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 4, 5 ஆண்டுகளில் பிரபலமாகி, கணிசமான அளவுக்கு சாதி மக்களைத் திரட்டி, செல்வாக்கும் பெற்றுள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் பல தொகுதிகளின் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கக் கூடிய அளவுக்கு இக்கட்சி பலம் பெற்றுள்ளது.

குறுகிய காலத்திலேயே இந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கு பெற்று விட்ட இக்கட்சியின் கொள்கை – இலட்சியம் என்ன? கடந்த 40 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலங்களிலும் இருந்த கட்சிகள் தாழ்த்தப்பட்ட – பிற்பட்ட மக்களின் நலன்களைப் புறக்கணித்து விட்டன. இந்தக் கட்சிகள் எல்லாம் பார்ப்பன – பனியா மற்றும் மேல்சாதிக் கட்சிகள். இவர்களின் ஆட்சியில் ஒடுக்கப்படும் மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவில்லை. “பாட்டாளி மக்கள் கட்சி சமூக உரிமையை நிலைநாட்டும். பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட மற்றும் மத – மொழிச் சிறுபான்மையினரை ஐக்கியப்படுத்தி ஆட்சியைப் பிடிப்போம்” என்று பிரகடனப்படுத்தியுள்ளார் அதன் தலைவர் ‘டாக்டர் அய்யா’ ராமதாசு.

முற்போக்கு முலாம்

அ மார்க்ஸ்
அ மார்க்ஸ்

சில மாஜிப் புரட்சியாளர்களும், அவர்களின் போதனை பெற்ற ‘புதிய இடது’ நபர்களும் பாட்டாளி மக்கள் கட்சியினுள் புகுந்து கொண்டு மார்க்சியக் கண்ணோட்டம் தர முயன்றுள்ளனர். அவர்களது முயற்சியினால், மார்க்சிய முலாம் பூசிய பிறகு கொள்கை அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். “இழக்கப் போவது சாதிகளை மட்டுமே! அடையப் போவதோ பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி அதிகாரம்!”, “ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே, ஒன்று சேருங்கள்! ஆளும் வர்க்க பாசிசக் கும்பல்களைத் தூக்கி எறியுங்கள்!” என்ற முழக்கங்களையும் சேர்த்துள்ளனர். “காரல் மார்க்சும் – எங்கெல்சும் வெளியிட்ட பொதுவுடைமை அறிக்கையைப் போல இன்று பா.ம.க.வின் கொள்கை அறிக்கை ஒன்று மட்டுமே மக்கள் முன் உள்ளது” என்று இக்கட்சியின் ஏடான “தினப்புரட்சி” பெருமைப்பட்டுக் கொள்கிறது.

“ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே! ஒன்று சேருங்கள்! என்ற முழக்கத்தைத் தலைமையேற்று நடக்கும் டாக்டர் ராமதாஸ், மார்க்ஸ் – அம்பேத்கர் – பெரியார் வழியில் வரும் தலைவர்” என்று முன்னிறுத்துகிறது, பாட்டாளி மக்கள் கட்சி. அதாவது இந்தியாவின் தனித்தன்மை வாய்ந்த சாதிய அமைப்பு முறைக்கேற்ப, மார்க்சிய – பெரியாரிய – அம்பேத்கரிய கொள்கைகளைக் கொண்ட ஒரே கட்சி என்று தன்னைக் கூறிக் கொள்கிறது.

தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோருவது, இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பது, தமிழ்வழிக் கல்வி, பூரண மதுவிலக்கு, தமிழகத்தின் தன்னாட்சி உரிமைக்காகப் போராடுவது, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிலைநாட்டுவது, தாழ்த்தப்பட்ட இனத்தவரை சுழற்சி முறையில் முதல்வராகவும், பிரதமராகவும் நியமிப்பது, காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவது, மதச் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பது, சுயநிதிக் கல்வி நிறுவனங்களை அரசுடைமையாக்குவது, தனியார் வட்டித் தொழிலை ஒழிப்பது, கலப்பு மணத்தை ஊக்குவிப்பது என்று முற்போக்குச் சாயத்துடன் அது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நான்காண்டுகளுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்ட வன்னியர் சங்கம், இப்போது பாட்டாளி மக்கள் கட்சியாக உருமாறியவுடன் தலித் எழில்மலை என்ற தாழ்த்தப்பட்ட இனத்தவரை கட்சியின் பொதுச் செயலாளராகவும், குனங்குடி அனீபா என்ற சிறுபான்மை மதத்தவரை கட்சியின் பொருளாளராகவும் நியமித்துள்ளது. “டாக்டர் அம்பேத்கர் கண்டெடுத்த யானைச் சின்னத்தை தான் பா.ம.க. தனது தேர்தல் சின்னமாகக் கொண்டுள்ளது. அம்பேத்கரின் நீல நிறக் கொடிக்குப் பெருமை சேர்ப்பது போல தனது கொடியில் நீல நிறத்தைச் சேர்த்துக் கொண்டுள்ள ஒரே கட்சி தான் பா.ம.க.” என்று தனது சாதியத் தோற்றத்தை மறைத்துக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியாக அது தன்னைக் காட்டிக் கொள்கிறது.

கொள்கைப்பூர்வக் கூட்டணியா?

குணங்குடி அனீபா
குணங்குடி அனீபா

“ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே! ஒன்று சேருங்கள்!” என்கிற முழக்கம் புதியதல்ல. பா.ம.க.வினரே கூறிக் கொள்வதைப் போல 58 ஆண்டுகளாக உள்ளது தான். உழைப்பாளர் கட்சி, பொதுநலக் கட்சி என்கிற பெயரில் ராமசாமி படையாச்சி, மாணிக்க வேலர் ஆகிய வன்னிய சாதித் தலைவர்களும், பிறகு ஆதித்தனாரும் முன்வைத்து செயல்பட்டவை தான். ராமசாமி படையாச்சியும், மாணிக்க வேலரும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ராஜாஜி – காங்கிரசுடன் சேர்ந்து மந்திரி பதவிகளைப் பெற்று, கொள்கையை மூட்டை கட்டி வைத்தனர். ஆதித்தனார் எம்.ஜி.ஆரின் தயவைப் பெற்ற பிறகு அவரது முழக்கமும் முடங்கிப் போனது.

இவ்வளவு ஆண்டு காலம் முடங்கிக் கிடந்த முழக்கம் மீண்டும் இப்போது தூக்கிப் பிடிக்கப்படுகிறது. காரணம், இன்றைய அரசியல் சூழ்நிலைமை தான். ஏற்கெனவே உள்ள ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், லஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு, பிழைப்பு வாதிகளாகச் சீரழிந்து, பரந்துபட்ட மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டன…

இந்நிலையில் நாடு முழுவதும் சாதி, மத, இன, பிராந்திய ரீதியிலான சக்திகள் தலைதூக்கி, குறுகிய வெறியைத் தூண்டிவிட்டு வளருகின்றன. நாடு தழுவிய ரீதியில் அரசியல் சீரழிவும், பின்னடைவும் தீவிரமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் சாதி – மதக் கட்சிகளின் திடீர் வளர்ச்சியே தவிர, புரட்சிகரமானதோ, கொள்கை பூர்வமானதோ எதுவும் இல்லை. வடக்கே வி.பி.சிங்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கன்ஷிராமும் செய்வதைத்தான் இங்கே தமிழகத்தில் பா.ம.க.வின் ராமதாசு செய்து கொண்டிருக்கிறார்.

மூன்றாவது அணி உருவானதெப்படி?

பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான இந்த மூன்றாவது அணி உருவானதே சுவாரசியமானது. தேர்தல் அறிவிப்பு வந்ததும் குடியரசுக் கட்சி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், இளைய பெருமாளின் மனித உரிமைக் கட்சி, திருநாவுக்கரசு தலைமையிலான அ.தி.மு.க. கோஷ்டி, பழனி பாபாவின் ஜிகாத் கமிட்டி ஆகியவற்றைக் கொண்ட மூன்றாவது அணியை அமைக்கப் போவதாக பா.ம.க. கூறி வந்தது. ஆனால் குடியரசுக் கட்சி ஜனதா தளத்துடனும், இளைய பெருமாள் கட்சி காங்கிரசுக் கூட்டணியுடனும், திருநாவுக்கரசு கோஷ்டி தி.மு.க.வுடனும் பேரங்கள் நடத்தி வந்தன. இதிலே குடியரசுக் கட்சி தவிர மற்ற இரு கட்சிகளும் பா.ம.க. கூட்டணியிலிருந்து விலகிய பிறகு மூன்றாவது அணி புஸ்வாணமாகியது. இவ்விரு கட்சிகளைப் பலமாக நம்பி கூட்டணி கட்ட முயற்சித்த பா.ம.க., அது உடைந்து போன எரிச்சலில் கருணாநிதியின் குள்ள நரித்தனம் – சதியால் மூன்றாவது அணி பிளவுபட்டுப் போனதாகச் சாடியது.

பின்னர் வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாள் நெருங்கிவிட்ட போது, காங்கிரசுக் கூட்டணியில் தமக்கு உரிய பங்கு கிடைக்காத வெறுப்பில் இருந்த அப்துல் சமதுவின் முஸ்லீம் லீக், தா.பாண்டியனின் ஐக்கிய பொதுவுடைமைக் கட்சி ஆகியவற்றுடன் பா.ம.க. பேரங்கள் நடத்தியது. ஆனால் கடைசி நேரத்தில் தா.பாண்டியனின் கட்சி மீண்டும் காங்கிரசுக் கூட்டணியில் ஒட்டிக் கொண்டது. சமதுவின் முஸ்லீம் லீக் மட்டும் பா.ம.க. கூட்டணியில் சேர்ந்தது. உடனே கொள்கைப்பூர்வ மூன்றாவது அணி உருவாகி விட்டதாக பா.ம.க. மீண்டும் அறிவிக்கத் தொடங்கி விட்டது.

ஈழத் துரோக – சாதி, மதவெறி – பிழைப்புவாதக் கூட்டணி

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்

இதிலே வெட்கக்கேடு என்னவென்றால், தமிழீழத்தை அங்கீகரிக்கச் சொல்லும் பா.ம.க., தனது கூட்டணியில் ஈழத் துரோகி பண்ருட்டி ராமச்சந்திரனை சேர்த்துக் கொண்டிருப்பது தான். எம்.ஜி.ஆர். ஆட்சியின் போதே ஈழ விவகாரத்தில் ராஜீவ் கும்பலின் விசுவாச ‘தரகராக’, ஆலோசகராகச் செயல்பட்டவர் தான் இந்த “பண்ருட்டியார்”. ஈழப் போராளிகளை தமிழகத்தில் கைது செய்து, விலங்கிட்டு சிறையில் அடைக்கவும், அவர்களைப் புகைப்படம் எடுத்து டி.ஜி.பி. மோகன்தாஸ் மூலம் சிங்கள இனவெறியர்களுக்குக் காட்டிக் கொடுத்ததிலும் முக்கியப் பங்காற்றியவர் தான் இந்த பண்ருட்டியார். காங்கிரசை எதிர்ப்பதாகக் கூறும் பா.ம.க., இன்றும் கூட காங்கிரசையும், ராஜீவையும் விசுவாசமாக ஆதரிக்கும் பண்ருட்டியாரைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருப்பது அதை விட வெட்கக்கேடு. பா.ம.க. கூட்டணியில் சேர்ந்த பிறகு, அவர் காங்கிரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசியது கிடையாது. இருந்தாலும் அவரையும் வளைத்துப் போட்டு கொள்கை பூர்வக் கூட்டணி கட்டியுள்ளது பா.ம.க. ஏனென்றால் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு வன்னியர்!

இதே போல நேற்று வரை காங்கிரசின் காலை நக்கிக் கொண்டிருந்த அப்துல் சமது இப்போது காங்கிரசை எதிர்க்கிறாரா? பா.ம.க.வின் கொள்கையைத் தான் ஏற்றுக்கொண்டாரா? அல்லது ‘பண்ருட்டியார்’ தனது ஈழத் துரோகத்தை ஒப்புக்கொண்டாரா? இல்லவே இல்லை. வேறு போக்கிடமின்றி இவர்கள் வந்து ஒட்டிக்கொண்டவுடன் கொள்கைப்பூர்வக் கூட்டணி உருவாகி விட்டதென்றால், அது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்!

இக்கூட்டணியில் சேர்ந்துள்ள ஜிகாத் கமிட்டி, அப்பட்டமாக மதவெறியைக் கக்கும் அமைப்பு. அதன் தலைவரான பழனி பாபா முன்பு கருணாநிதியிடமும், பின்னர் எம்.ஜி.ஆரிடமும் கூடிக் குலாவி, அதிகாரத் தரகராக செயல்பட்ட பிழைப்புவாதி. இப்போது அவர் பா.ம.க. கூட்டணியில் சேர்ந்ததும் சிறுபான்மை இன மக்களின் தலைவராகக் கௌரவிக்கப்படுகிறார்.

ஜான் பாண்டியன்
ஜான் பாண்டியன்

இதே போல பா.ம. கட்சியில் அங்கம் வகிக்கும் ஜான் பாண்டியன், தாழ்த்தப்பட்ட மக்களைத் தன் பின்னே திரட்டி வைத்துக் கொண்டு, பிழைப்பு நடத்தும் சாதி வெறியர். போடி, மீனாட்சிபுரம் சாதிய கலவரங்களுக்குக் காரணமாக இருந்தவர். இப்போது அவர் பா.ம.க.வின் இளைஞரணித் தலைவராகி, சட்டமன்ற வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ளார்.

கட்சி மாறிகளைத் தமது அரசியல் ஆதாயத்துக்காக அரவணைத்துக் கொள்வதென்பது ஓட்டுக் கட்சிகளின் அரசியல் கலாச்சாரம். ‘கொள்கை பூர்வ’ கட்சியான பா.ம.க. இதற்கு விதிவிலக்கு அல்ல. நேற்றுவரை தி.மு.க.விலிருந்த முக்கியப் பிரமுகரான நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, தனக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்காத ஆத்திரத்தில் பா.ம.க.வில் வந்து சேர்ந்து கொண்டு விழுப்புரத்தில் போட்டியிடுகிறார். பண்ருட்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான நந்தகோபால கிருஷ்ணன் கட்சி மாறி வந்ததும் அவரைப் பா.ம.க. அரவணைத்துக் கொண்டது. பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிவதானமணி நேற்று வரை இளைய பெருமாளின் கட்சியிலிருந்தார். இப்போது அவர் கட்சி மாறியதும் பா.ம.க. வேட்பாளராகி விட்டார். இதே போல வரகூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பெருமாள், ஏற்கெனவே இரு முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன் காரணமாக, இப்போது அவர் கட்சி மாறி பா.ம.க.வில் சேர்ந்ததும் அதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த லட்சணத்தில் சந்திரசேகர் கட்சியைத் தமது கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்கிறது பா.ம.க. தமக்கும், சந்திரசேகர் கட்சிக்கும் ஏதோ கொள்கைப்பூர்வ வேறுபாடு இருப்பதைப் போல காட்டிக் கொள்கிறது.

கொச்சையான வசவு கொள்கையாகுமா?

தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகள் தமது கொள்கையை விளக்கிப் பேசுவதை விடுத்து, தனிநபர் விமர்சனம் செய்வதாகவும், கீழ்த்தரமான வசவுகளில் இறங்கி விட்டதாகவும் பா.ம.க. தலைவர் குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் பா.ம.க.வின் கொள்கைப்பூர்வ நாளேடான “தினப்புரட்சி” ஜெயலலிதாவை வசந்தசேனை, குச்சுக்காரி, ஐயங்கார் மாமி, பால்கனிப் பாவை, கூத்தாடி மகள் என்று வசைபாடுகிறது. “16 வயதினிலே 17 பிள்ளைகள் பெறும் ரகசியத்தை இளம் பெண்கள் தெரிந்து கொண்டால் நாடு தாங்குமா?” என்று சினிமாப் பாடலை வைத்து ஜெயலலிதாவை ஆபாசமாகச் சாடுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் “குறும்பா” என்ற பெயரில் “கோமாளியின் கூத்தியாராய் இருந்தாள்; கொடுப்பவர்கள் எவரெனினும் பறந்தாள்; ஏமாளிகள் அரசியலில் இறக்கி விட எச்சிலை மாமாக்களின் மடியினிலே சிறந்தாள்!” என்று வக்கிரமான வசவுக் கவிதை எழுதி, ஆபாச கேலிச்சித்திரமும் போட்டுள்ளது. இதே போல கருணாநிதியை “தவில் இனத் தலைவர்” என்று கொச்சையாக சாதிவெறியுடன் சாடுகிறது.

பா.ம.க. தலைவர் ராமதாசு கூட அதே பாணியில் தான் எதிர்க்கட்சிகளைச் சாடுகிறார். கடந்த ஜனவரி 7-ஆம் தேதியன்று சென்னையில் நடந்த காசி ஆனந்தன் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் வாழ்த்துரை ஆற்றிய ராமதாசு, “… போராட்டங்களைப் புறக்கணித்து விட்டு, போராளிகளை மறந்து விட்டு சீலை இழைகளைச் சீர் பிரித்துக் காட்டுவார்கள்!” என்று தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்களைச் சாடுகிறார். நக்கீரன் வார ஏட்டில் “அக்னி அம்புகள்” என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வரும் ராமதாசு, 11.5.1991 தேதியிட்ட இதழில் நல்லொழுக்கமில்லாத தலைவர்களைப் பற்றி எழுதிய கட்டுரை முழுக்கவும் இந்துநேசன் பாணியிலானது. புராணங்களில் காணப்படும் ஆபாசங்களைச் சுவையாகப் பேசி நாத்திகப் பிரச்சாரம் செய்யும் தி.க.வினரைப் போலத்தான் ராமதாசும் நல்லொழுக்க உபதேசம் செய்துள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ்

எதிர்க்கட்சியினரை தனிநபர் ரீதியில் ஆபாசமாக வசைபாடும் அதே சமயம், தமது பெயரை அடைமொழிகளுடன் பட்டம் சூட்டிக்கொள்வதென்பது தமிழக ஓட்டுக்கட்சிகளின் மரபாகி விட்டது. கருணாநிதி டாக்டர் கலைஞராகவும், ஜெயலலிதா புரட்சித் தலைவியாகவும், தி.க.வின் வீரமணி தமிழினத் தளபதியாகவும் பட்டம் சூட்டிக் கொண்டதைப் போல ராமதாசும் “டாக்டர் அய்யா’’, “இனமானக் காவலர்” என்றெல்லாம் பட்டம் சூட்டிக் கொண்டுள்ளார். அதை விட காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் படங்களுடன் சேர்த்து தனது மூஞ்சியையும் சேர்த்துப் போட்டுக் கொண்டு அம்மாபெரும் தலைவர்களின் வரிசையில் வந்துள்ள தலைவராக கொஞ்சமும் கூச்சமின்றி சுய இன்பம் தேடுகிறார்.

பிற்பட்ட – தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் ஒற்றுமைக்கும், உரிமைக்கும் போராடும் தலைவராகக் காட்டிக்கொள்ளும் ராமதாசு, தனது வன்னிய சாதிச் சங்க நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தான் பிரதானமாகக் கொண்டுள்ளார். அவரது தினப்புரட்சி நாளேட்டில், டாக்டர் அய்யா அவர்களின் ஆசியோடு அவரது தலைமையில் நடைபெறும் வன்னிய சாதித் திருமண விளம்பரங்களும், வன்னியர் சங்கத்தின் வாழ்த்துக்களும் தான் அதிகமாக வருகின்றன. அக்னிக் குண்டம் சின்னம் பொறித்த வன்னியர் சங்கக் கொடிகள், பனியனுடன் அச்சாதி இளைஞர்கள்தான் பா.ம.க. என்ற பெயரில் தேர்தல் வேலை செய்கின்றனர். அக்னி விழா, தீப்பந்த ஊர்வலம், பிரகாஷ் அம்பேத்கருக்கு வரவேற்பு என்று ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இது வெளிப்படையாகவே நடந்துள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, அரூர் அருகிலுள்ள நாச்சிக்குளம்பட்டியில் ஒரு பெண் குழந்தைக்கு ராமதாசு சூட்டிய பெயர்: வன்னிய மலர்.

வன்னியர்கள் ஆண்ட பரம்பரை, பல்லவ பரம்பரை என்று தமது சாதியின் பூர்வீகத்தைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்கிறார் ராமதாசு. ஒரு புறம் சத்திரிய குல மன்னர் பரம்பரையினர் என்று தமது சாதியைப் பற்றிப் பெருமையாகப் பேசும் அவர், மறுபுறம் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தாங்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட சூத்திரர்கள் என்கிறார். இவற்றையெல்லாம் எதிர்த்த பெரியார், அம்பேத்கர் படங்களைப் போட்டுக் கொண்டு, கூச்சமின்றி புரட்சி வியாபாரம் செய்யக் கிளம்பியுள்ளது பா.ம.க.

போதாக்குறைக்கு மார்க்சிய-லெனினியக் கட்சித் திட்டத்திலிருந்து சில அம்சங்களை எடுத்து தனது கொள்கை அறிக்கையிலும் சேர்த்துக் கொண்டுள்ளது. மா-லெ புரட்சியாளர்கள் இப்போது நிலவும் அரசு எந்திரத்தை ஒரு புரட்சியின் மூலம் வீழ்த்தி விட்டு, மக்கள் புரட்சிக் கமிட்டி, மக்கள் நீதிமன்றம் ஆகியவற்றை நிறுவி, மக்கள் கரங்களில் அதிகாரத்தைக் குவிக்கும் திட்டத்தை வைத்துள்ளனர். இதையே காப்பியடித்து, ‘இப்போதைய அரசு எந்திரத்தைத் தூக்கியெறியாமலேயே மா-லெ புரட்சியாளர்கள் மற்றும் பெரியாரிய, அம்பேத்கரிய கொள்கைகளில் ஈடுபாடுடையவர்களையும், அனைத்து சமூகப் பிரதிநிதிகளையும் கொண்ட மக்கள் கமிட்டி, மக்கள் நீதிமன்றம் முதலானவற்றை நிறுவி, மக்களுக்குத் தொண்டு செய்வோம்’ என்று பித்தலாட்டம் செய்கிறது பா.ம.க.

பெருஞ்சித்திரனார்
பெருஞ்சித்திரனார்

சாதியக் கூட்டணிக்கு புரட்சிச் சாயம்

இப்படி வெளிப்படையாகவே சாதிய – மதவெறி சக்திகளின், பிழைப்புவாதிகளின் கூட்டணியாக இம்மூன்றாவது அணி அம்பலப்பட்டுள்ள போதிலும், புரட்சி பேசும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அதற்கு முற்போக்கு சாயம் பூசி, வெட்கமின்றி நியாயப்படுத்துகிறது. நெடுமாறன் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள மாஜிப் புரட்சியாளர் புலவர் கலியபெருமாள் இக்கூட்டணிக்கு புரட்சி முலாம் பூசி ஆதரிக்கிறார். தனித்தமிழ் இயக்கத் தலைவர் பெருஞ்சித்திரனார் இதனை லட்சியக் கூட்டாகப் புகழ்ந்து பாடுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால், இட ஒதுக்கீடு மூலம் அரசு எந்திரத்தில் பங்கேற்று பிற்பட்ட சாதிகள் சலுகைகளை அனுபவிக்க உருவாக்கப்பட்ட இன்னொரு சாதியக் கூட்டணி தான் இம்மூன்றாவது அணி. எந்த அரசு எந்திரத்தில் இடம் பெற இச்சாதிகள் முயற்சிக்கிறதோ, அதே போலீசும், அதிகார வர்க்கமும் கொண்ட அரசு எந்திரம் தான் அவர்களையும், இதர உழைக்கும் மக்களையும் ஒடுக்குவதற்குப் பயன்படுகிறது. இந்த ஒடுக்குமுறை அரசு எந்திரத்தைத் தூக்கியெறியாமல், சட்டமன்ற-நாடாளுமன்ற ஆட்சிகளை மேலிருந்து கைப்பற்றுவதன் மூலம், சாதிய நோய் பீடித்த இச்சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்களை, அதாவது அரசியல்-பொருளாதாரப் புரட்சியை ஒருக்காலும் சாதிக்க முடியாது. மாறாக, “சாதிகளே கூடாது! உழுபவருக்கே நிலம்! உழைப்பவருக்கே அதிகாரம்” என்ற முழக்கத்துடன் இன்றைய ஒடுக்குமுறை அரசு எந்திரத்தைத் தூக்கியெறியும் புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் விடுதலைக்கும், உரிமைக்கும் வழி வகுக்கும்.

(புதிய ஜனநாயகம், 16-31 மே 1991)

_______________________________________

சாதிவெறி ராமதாஸை புரட்சி நாயகனாக மாற்ற முயற்சிக்கும் நிறப்பிரிகை !

 பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் தலைவரின் யோக்கியதை என்ன என்பதை இந் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளைப் படித்துப் புரிந்து கொண்ட வாசகர்கள், நிறப்பிரிகை ஆசிரியர் குழுவினர் ‘டாக்டர் அய்யா’விடம் எடுத்திருக்கும் இந்தப் பேட்டியைப் படித்துப் பாருங்கள். முன்பு விகடனில் கமலஹாசனை பேட்டி எடுக்கும் மதன், “எப்படி இரண்டு கால்களால் நடக்கிறீர்கள்?” என்று விழிகள் விரிய வியப்புடன் கமலைக் கேட்பார். “என்ன செய்வது, கடுமையான பயிற்சிதான்” என்று தன்னடக்கமாக பதில் சொல்வார் கமல். இவர்களோ மதனை விஞ்சி விட்டார்கள்.

பின் நவீனத்துவம்
பின் நவீனத்துவம்

பொதுவாக பேட்டி எடுக்கும் பத்திரிகையாளர்கள், பேட்டி கொடுக்கும் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்துவதைத்தான் பார்த்திருக்கிறோம். நிறப்பிரிகை ஆசிரியர் குழுவினர் மரபுகளைக் கவிழ்த்துப் போடும் கலகக்காரர்கள் என்பதால், இந்தப் பேட்டியின் மூலம் தங்கள் டவுசரைத் தாங்களே கழட்டிக் கொள்கிறார்கள்.

அறிமுகத்தைக் கவனியுங்கள். டாக்டரா இருந்து கொண்டு, மருந்து சீட்டில் கூட அவருடைய பெயரை அச்சிடவில்லையாம். அவ்வளவு தன்னடக்கமாம். “பா.ம.க வை வன்னியர் சங்கத்துடன் இணைத்து பார்ப்பனப் பத்திரிகைகள் எழுதுகிறார்களே, இந்த அபாண்டமான பொய்யை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார்கள் அறிஞர்கள். “இந்தப் பொய்யை முறியடிக்கத்தான் 50 வன்னியர்கள் பணம் போட்டு தினப்புரட்சி நாளேடு ஆரம்பித்திருக்கிறோம்” என்று ‘உண்மை’யைச் சோல்கிறார் அய்யா.

“தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பா.ம.க. மீது நம்பிக்கை இல்லையே என்ன செய்யப்போகிறீர்கள்” என்று கவலைப்படுகிறார்கள் அறிஞர்கள். “பாமக அம்பேத்கர் கொள்கையைப் பின்பற்றும் கட்சி” என்று சொல்லி சமாளித்து விடலாம் என்கிறார் அய்யா. “தாழ்த்தப்பட்டோரின் பண்பாட்டு அடையாளம் எதையாவது பொதுக்குறியீடாக மாற்றலாமே” என்று மக்களை ஏமாற்றுவதற்கு ஐடியா கொடுக்கிறார்கள் அறிஞர்கள். உடனே ‘நீலக்கலரு ஜிங்குச்சா’ என்கிறார் மருத்துவர்.

“தீண்டாமைக் கொடுமையை எப்படி ஒழிக்கப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். “மற்ற கட்சிகளில் தாழ்த்தப்பட்டவர் அணி என்று வைத்துதான் பொறுப்பு தருவார்கள். நாங்கள் செயலர் பொறுப்பையே தந்திருக்கிறோம்” என்கிறார் மருத்துவர். “தீண்டாமை ஒழிப்புக்கு தனி அணி வைத்து அதற்கு தாழ்த்தப்பட்டவரை தலைவராகப் போடலாமே” என்கிறார் கல்யாணி. “அருமையான கருத்து உடனே நிறைவேற்றுவோம்” என்று கூறி, தான் ஏற்கெனவே சொன்ன பதிலை உடனே ரத்து செய்கிறார் டாக்டர்.

“உட்கட்சி தேர்தல் ஏன் நடத்தவில்லை” என்று நேரடியாகக் கேட்க நிறப்பிரிகை கலகக்காரர்களுக்கு தைரியம் இல்லை. “உரிமைகளுக்காகப் போராடுவதற்கு முன் ‘நமது’ அமைப்புக்களை ‘நாம்’ சனநாயகப்படுத்த வேண்டும்” என்று ஜாக்கிரதையாக அய்யா தலையில் வெண்ணெய் வைக்கிறார்கள். “தேர்தல் தானே, இன்னும் இரண்டு மாதத்தில் ஜமாய்த்து விடுவோம்” என்கிறார் அய்யா.

வசனத்தை மறந்து விட்ட மேடை நாடக நடிகர்களுக்கு திரை மறைவில் நின்றபடி, அடியெடுத்துக் கொடுப்பவரைப் போல, கேள்விகளையே பதிலுக்கு ஏற்ப வடிவமைத்திருக்கிறார்கள். பா.ம.க என்ற சாதிய பிழைப்புவாதக் கட்சிக்கு கதை வசனம் எழுதிக் கொடுத்து, மக்களை வஞ்சிப்பதற்கு வழியமைத்துக் கொடுத்தவர்கள் இந்த அறிஞர்கள்தான் என்பதை இப்பேட்டியைப் படிக்கின்ற எவரும் புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் இன்று அய்யாவின் சாதிவெறி எவ்வளவுதான் அம்பலப்பட்டாலும், இந்த அறிஞர்கள் மட்டும் முடிந்தவரைக்கும் அடக்கி வாசிக்கிறார்கள்.

இனி பேட்டியை படியுங்கள்.

பா.ம.க. ராமதாசிடம் நிறப்பிரிகை நேர்காணல்

(1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறப்பிரிகை இதழில் வெளிவந்தது)

நாள் : 15.11.1991 வெள்ளி மாலை 6 மணி.
இடம் : டாக்டர் ராமதாஸ் அவர்களின் மருத்துவமனை, திண்டிவனம்.
பங்கேற்பு : நிறப்பிரிகை ஆசிரியர் குழு(அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ.வேல்சாமி)வைத் தவிர தோழர் பா.கல்யாணி.

குறித்த நேரத்திற்கு டாக்டர் ராமதாஸ் காத்திருந்தார். நாங்கள் ஏற்கெனவே கொடுத்திருந்த நிறப்பிரிகை இதழ்களைப் படித்திருந்தது பேச்சில் வெளிப்பட்டது. கத்தர், காகர்லிட்ஸ்கி பேட்டிகளும், சாதி ஒழிப்புக் கட்டுரையும் அவரைக் கவர்ந்திருந்தன. சுமார் ஒன்றரை மணி நேரம் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அரசியல்வாதிகளுக்குரிய குயுக்தி, தந்திரம், சாதுரியம் ஏதுமின்றி மிகவும் எளிமையாகப் பதில்கள் வந்தன. இடையில் இரண்டு நோயாளிகள் வந்தனர். பெயரச்சிடப்படாத வெள்ளைத் தாள்களில் மருந்துகள் எழுதினார். ஒரு சிறுவன் மருந்துச் சீட்டைக் கொடுத்து – அம்மாவுக்கு குணமாகவில்லை வேறு மருந்து வேண்டுமென்றான். சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு – ஒரு தடவை மட்டும் சாப்பிட்டிருப்பாங்க, இன்னும் இரண்டு வேளை சாப்பிட்டு விட்டு வரச் சொல் – என்றார். பேட்டி தொடங்கியது.

கேள்வி:
ஓட்டுக் கட்சிகளில் பா.ம.க. மட்டுமே பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாத கட்சி என அறிகிறோம். இன்று தமிழகத்தில் ‘பார்ப்பன மறுமலர்ச்சி’ என்று சொல்லத்தக்க நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. ஒரு கோடி ரூபாய் செலவில் வேதாகமக் கல்லூரி தொடங்கப்பட இருக்கிறது. இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இருபது சத இட ஒதுக்கீட்டிற்காக வன்மையான போராட்டம் நடத்தியது போல இப்போதும் நடத்துகிற திட்டம் ஏதுமுண்டா?

பதில்:
பார்ப்பனர்களை நாங்கள் கட்சியில் சேர்ப்பதில்லை. வருணாசிரமம் அவர்களால்தான் உருவாக்கப்பட்டு கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. இதுவே இன்றைய சாதீய உறவுகளுக்குக் காரணமாக இருப்பதால் தான் இந்த முடிவு.

வேதாகமக் கல்லூரி, கோயில்களுக்கு நிதி திரட்டுவது முதலியன பார்ப்பனியத்தை வளர்க்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள். பாரதீய ஜனதா கட்சியின் புரிதலுடன் ஜெயலலிதா செயல்படுகிறார். சங்கர மடத்தின் அறிவுரைகளும் பின்னணியில் உள்ளன. தேர்தல் அறிக்கையில் சொன்ன விசயங்கள், மக்களைப் பாதிக்கிற எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்திருப்பதை பாரதீய ஜனதா, காங்கிரஸ், பார்ப்பனர்கள் தவிர மற்ற எல்லோருமே எதிர்க்கிறார்கள். ஓட்டுப் பொறுக்கும் கட்சிகளுக்குள் நாங்கள் வித்தியாசமான கொள்கையுடையவர்கள். இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். இதன் ஆபத்துக்களை விளக்கி அறிக்கைகள் முதலியவற்றை பா.ம.க. இளைஞர்களுக்கு வினியோகிக்கிறோம். மாவட்ட அளவில் இளைஞர் அணி, மாதர் அணி போன்றவற்றைக் கூட்டி விளக்குகிறோம். ஒட்டுமொத்தமான ஒரு போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னால் இந்தப் பிரச்சார வேலையில் இறங்கியுள்ளோம்.

பஸ் கட்டண உயர்வு மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது. விவசாயிகள் பிரச்சினை, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்களுக்குத் தொடர்ந்து பல பிரச்சினைகள். எதற்கு உடனடி முக்கியத்துவமளிப்பது என்பதைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. போராட்டம் ஒரு மாதத்தில் முடிகிற காரியமல்ல. போராட்டம், பின் விளைவுகள், பாதிப்புகள் எல்லாவற்றையும் கணக்கிலெடுக்க வேண்டும். பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளோம். பின்னர் வேதாகமக் கல்லூரி ஆரம்பிக்கும்போது பெரிய போராட்டம் ஒன்றைத் தொடங்குவோம்.

கேள்வி:
தி.மு.க. மேற்கொண்டிருக்கும் ‘திராவிட மறுமலர்ச்சி’ நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்:
திராவிட மறுமலர்ச்சி என்கிற பெயரில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர் எனப் பேசி லாபமடைந்தவர்கள் ஒரு சில சாதியினர் தான். ஒட்டுமொத்தமான திராவிட சமுதாயமல்ல. பார்ப்பனரல்லாதவர் எனப் பார்க்கும்போது தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்தப் பலனும் அடையவில்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பொருளாதார நிலையிலும், சமுதாய நிலையிலும் முன்னேறியிருந்த ஒரு சில சாதியினர் தான் பலன் பெற்றுள்ளனர். இட ஒதுக்கீடு, கல்வி, அரசு வேலை எதுவாக இருந்தாலும் அவர்கள் தான். எனவே இன்று திராவிட மறுமலர்ச்சி என்று அவர்கள் பேசும்போது ஓட்டுப் பொறுக்குவதற்காகத்தான் இந்த வழிமுறைகளைக் கையாள்கிறார்கள் என்கிற எண்ணம் ஏற்படுகிறது.

இது பற்றிய வெளிப்படையான விவாதத்திற்கு அவர்கள் தயாராக இருந்ததில்லை. பல முறை நான் இதனைப் பகிரங்கமாகப் பேசி இருக்கிறேன். தி.க. மாநாடுகளிலே கூடப் பேசி இருக்கின்றேன். அப்போதெல்லாம் பதில் சோல்லி என்னைப் பெரிய மனிதனாக்க வேண்டாம் என்றெல்லாம் கேலி பேசினார்கள். சில வருடங்களுக்கு என்னை அவர்கள் மாநாடுகளுக்கு கூப்பிடாமல் கூட இருந்தார்கள்.

கேள்வி:
இன்றைய தேர்தல் அரசியலில் மக்கள் தொடர்புச் சாதனங்களின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாடே ஆதரவாக இருந்தது. இன்று ஈழத் தமிழர்களுக்கெதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கெதிராக மக்கள் எழுச்சி ஏற்படாததில் பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவற்றின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. மக்கள் தொடர்புச் சாதனங்கள் முழுமையாக பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது இதற்கொரு காரணமாக இருக்கிறது. பா.ம.க. பற்றி எழுதும்போது கூட ஒவ்வொரு முறையும் “An outfit of Vanniyar Sangam” என்று எழுதத் தயங்குவதில்லை. இவற்றை நீங்கள் கணக்கிலெடுத்துக் கொண்டதுண்டா? இதனை எதிர்கொள்ள என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

பதில்:
பத்திரிகைகள் பார்ப்பனர்கள் கையிலிருக்கிறது. மேலும் சில பத்திரிகைகள் பிற்படுத்தப்பட்ட – நாடார்களின் கையில் இருந்தாலும் அவையும் வியாபார நோக்கில் மக்களுக்கு எதிராக இருக்கிறது. இவர்கள் ஈழ மக்களுக்கெதிராக, புலிகளுக்கெதிராக, தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். இதற்குத் தீர்வாக நாங்கள் – பல குறைகள் இருந்தாலும் கடந்த – மூன்றாண்டு காலமாக தினசரி ரூ.2,000/- நஷ்டத்தில் தினப்புரட்சி” நடத்துகிறோம். ஆட்சியாளர்கள்-ஜெயலலிதா, கருணாநிதி, ராஜீவ் என யாராக இருந்தாலும் கடுமையாக விமர்சனம் செய்கிறோம். இதனால் எங்களுக்கு அரசு விளம்பரங்கள் கிடையாது. ஒரு ஐம்பது வன்னியர்கள் ஆளுக்கு பதினைந்தாயிரம் ரூபாய் போட்டுத் தொடங்கிய நிறுவனம் இது. இதில் முழுக்க ஒரு பண்பாட்டுப் புரட்சியை, சமூக மாற்றத்தை உள்ளடக்கும் நோக்கில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அறிவு ஜீவிகள், அறிஞர்கள் இதனை ஒரு சாதிப் பத்திரிகையாகத்தான் பார்க்கிறார்கள். அவர்கள் இதனைத் தங்களது பத்திரிகையாக ஆக்கிக் கொள்ளலாம். எந்த விமர்சனமும் செய்யலாம். குறைகளை நீக்க வழி செய்வோம். வியாபார-பார்ப்பனப் பத்திரிகைகளுக்கெதிராக வெகுமக்கள் பத்திரிகையாக இதனை ஆக்கிக் கொள்ளலாம். அல்லது இந்த நோக்கில் வேறு யாரேனும் பத்திரிகை தொடங்கினால் அதையும் வரவேற்கிறோம். தேவையான ஒத்துழைப்புத் தரத் தயாராக இருக்கிறோம். தமிழ் மக்களின் எதிரியே இந்த பார்ப்பன-வியாபாரப் பத்திரிகைகள்தான். நம் முன்னர் இருக்கும் உடனடிப் பிரச்சினை இதுதான். டி.வி., ரேடியோவும் வெகு மக்களுக்கு எதிரானதுதான் என்றாலும், அரசதிகாரத்தைக் கைப்பற்றாமல் அதை நாம் உடனடியாக மாற்ற முடியாது.

ரவிக்குமார்
ரவிக்குமார்

கேள்வி:
மாற்றுப் பத்திரிகை என்பது ஒரு தீர்வுதான். இந்தச் சூழலிலேயே மக்களுக்கெதிராக அவதூறுகள் பரப்புகிற பத்திரிகைகளில் தலையிடுவதும் ஒரு தீர்வாக அமையலாமே. இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது இப்படி நடந்ததே. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டவுடன் நிலைமை சற்று மாற்றமடைந்ததே! அருண்சோரி போன்றோர் நீக்கப்பட்டதற்குக் கூட இது ஒரு காரணமில்லையா?

பதில்:
உண்மைதான். இவ்வாறு அவதூறுகள் பரப்பப்படும்போது டி.வி., ரேடியோ, பத்திரிகைகள் முன் உடனடியாகக் கூடிப் போராடலாம். ஓட்டுப் பொறுக்காத கட்சிகள் தனித்தனியாகவும், சேர்ந்தும் குரல் கொடுக்கலாம். என்னுடைய தனிப்பட்ட கருத்து: ஒரு சிறிய அளவிலாவது வன்முறையுடன் கூடிய பாடம் கற்பித்தாலொழிய – பாதிப்புகளை உருவாக்கினாலொழிய இது சரியாகாது. பார்ப்பனர்களே முழுக்க முழுக்கத் தொலைக்காட்சி-ரேடியோவை ஆக்கிரமித்துள்ள நிலை மாறி தாழ்த்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்டோர் பெரிய அளவில் பங்குபெறும் போது அங்கும் நிலைமை ஓரளவு சீரடையலாம். “தினமலர்” போன்ற மக்கள் விரோதப் பத்திரிகைகளை வாங்கக் கூடாது என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செவதும் பயனளிக்கும்.

கேள்வி:
பொதுவான மக்கள் மத்தியிலும் கூட பா.ம.க. என்பது வன்னியர் கட்சி என்கிற எண்ணமே நிலவுகிறது. புவியியல் ரீதியாகவும் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பா.ம.க. இருக்கிறது. இந்நிலை மாற என்ன செய்கிறீர்கள்? பொதுவான தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் கட்சியாக இதனை உருவாக்குவது எப்படி?

பதில்:
இந்த நிலைமை இப்போது மாறி வருகிறது. சமீபத்திய பஸ் மறியல் போராட்டத்தில் பாளையங்கோட்டைச் சிறையில் 400 பேரும், மதுரையில் 1200 பேரும் அடைபட்டிருந்தனர். கோவை, குமரி மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. நாங்கள் வளரக் கூடாது என அரசு எந்திரமும், ஊழல் பத்திரிகைகளும் திட்டமிட்டு எங்களை வன்னியர் கட்சி, படையாச்சி கட்சி எனப் பிரச்சாரம் செய்கிறார்கள். நல்ல முற்போக்குச் சிந்தனையுடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு கட்சி வளரக் கூடாது என்கிற கருத்து இந்தச் சக்திகளிடம் உள்ளது. இதை விட நல்ல சிந்தனையுள்ள ஒரு கட்சி இருந்தால் நான் அதில் சேர்ந்து விடத் தயார். தனி நபர் வழிபாடு உருவாகாமல் தடுக்கவும் முயற்சிக்கிறோம்.

போஸ்டரில் என் படம் பெரிதாய்ப் போடுவதைக் குறைக்கச் சொல்கிறோம். தினப்புரட்சியில் என் படம் தலைப்பில் போட வேண்டும் எனச் சொன்ன போது, கடுமையாகப் போராடி அதனை மாற்றி மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் படம் போட வைத்தோம். தனி நபர் வழிபாட்டைக் குறைக்க தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறோம். பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம். சமுதாயம் தெளிவு பெற்றால் இந்நிலைமை மாறும். கட்சி கார்டில் கூட என் படம் இல்லை.

கட்சியின் கொள்கையில் ஓட்டு வாங்குவது கடைசிக் குறிக்கோள் தான். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து சமுதாய மாற்றத்தை உருவாக்குவதே நோக்கம். தேர்தல் சமயத்தில் கூட இதனால்தான் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராமல் விலகி நின்றோம்.

கேள்வி:
“தாழ்த்தப்பட்டவரை முதல்வராக்குவோம்” என அறிவித்த ஒரே கட்சியாக இருந்த போதிலும் கூட, தமிழகமெங்கிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பா.ம.க. மீது ஒரு ஐயம் இருக்கவே செய்கிறது. இதனை எவ்வாறு போக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறப் போகிறீர்கள்?

பொ வேலுச்சாமி
பொ வேலுச்சாமி

பதில்:
முன்பு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் எங்கள் போஸ்டர் ஒட்டினால் கிழிப்பார்கள். இப்போது நிலைமை மாறி வருகிறது. அண்ணல் அம்பேத்கரின் கொள்கையிலான கட்சியாக பா.ம.க.வை முன் வைக்கிறோம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், உழைக்கும் மக்கள் இவர்களுக்குள் மோதல் கூடாது. இம்மக்களுள் அரசு ஊழியர்கள், படித்த இளைஞர்கள் போன்றோர் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். ஓட்டு வாங்கத்தான் இப்படிச் சோல்கிறோம் என்கிற பயம் தேர்தல் நேரத்தில் இருந்திருக்கலாம். திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலமே முழுமையான நம்பிக்கையைப் பெற வேண்டும். ஷெட்யூல்டு இன மக்களைப் பொறுத்தமட்டில் தமிழகத்தில் சுய நலமில்லாத அரசியல் ரீதியான தலைவர்கள் யாருமே இல்லை. இப்போதுள்ள தலைவர்களின் பிடியிலிருந்து என்றைக்கு விடுபடுகிறார்களோ சமூக மாற்றமும், அரசியல் மாற்றமும் அப்போதுதான் பிறக்க வழி ஏற்படும். இந்த அரசியல் தலைவர்களின் பிடியிலிருந்து விடுபட்டால் வெகு சீக்கிரமே பா.ம.க. அம்மக்களைப் புரிய வைத்து ஒரு பெரிய வலுவான அரசியல் இயக்கமாக ஆக முடியும். விரைவில் பா.ம.க.வை நம்பி ஷெட்யூல்டு இன மக்கள் நிச்சயம் வருவார்கள்.

தாழ்த்தப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக பா.ம.க. சில திட்டங்களை அறிவித்துள்ளது. பறையடித்தல், பிணம் சுடுதல், செத்த மாடு புதைத்தல் போன்றவற்றை அவரவர்களே செய்து கொள்ள வேண்டும் எனவும், பொதுக்குளம், பொதுக்கிணறு ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும், மறைமுகமான தீண்டாமைக் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அறிவித்து செயல்படுத்துகிறோம். பா.ம.க.வால் மட்டுமே தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க முடியும். வெகு மக்களாக உள்ள ஷெட்யூல்டு இன, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்தச் சமூக மாற்றத்தை விரும்பி ஏற்கும்போது வேறு எந்தச் சக்தியும் குறுக்கே வந்து நிற்க முடியாது.

பா.ம.க. என்றால் வன்னியர் கட்சி எனத் தாழ்த்தப்பட்ட மக்கள் நினைப்பது ஒரு புறம். இன்னொரு பக்கம் இந்தப் பிரச்சினை குறித்து சமூகப் பிரக்ஞையுள்ள கம்யூனிஸ்ட், தி.க. கட்சிகள் போதிய அக்கறை காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கே வன்னியர்/ஆதி திராவிடர், தெற்கே முக்குலத்தோர்/பள்ளர், கோவையில் கொங்கு வேளாளர்/அருந்ததியர் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் ஓட்டுப் பொறுக்காத பொதுவான அமைப்புகள் கருத்தரங்கம், மாநாடு நடத்தினால் அங்கெல்லாம் பா.ம.க. துணை நிற்கும்.

கேள்வி:
இம்முடிவுகளை அணிகள் மத்தியில் கொண்டுபோகும் போது உங்கள் அனுபவம் எப்படி? தாழ்த்தப்பட்டவர்களைப் பொறுத்தமட்டில் தீண்டாமைக் கொடுமையே தலையான பிரச்சினை. இதற்கெதிரான போராட்டங்கள் ஏதும் எடுத்துள்ளீர்களா? பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட அணியினர் மத்தியில் இருக்கும் உயர்சாதி மனப்பான் மையைத் துடைத்தெறிய என்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளீர்கள்?

பதில்:
கிராம அளவில் இப்பிரச்சினைகள் பேசப்படும் அளவிற்குப் பதிய வைத்துள்ளோம். கூட்டங்களில் நானே மாடு புதைப்பேன் எனப் பேசியது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் பறை அடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களே தங்களது வருமானம் பாதிக்கப்படுகிறது எனத் தானாகவே முன்வரும்போதுதான் ஏதும் செய முடிவதில்லை. இழிவு என்பதனால் அதைச் செய்யவே வேண்டாம் எனச் சொல்கிறோம். செயல் வடிவத்தில் முழுமையாக வரா விட்டாலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். தாழ்த்தப்படவர்களுக்குக் குடியிருப்பு ஊர் நடுவில் கட்ட வேண்டுமென்கிறது எங்கள் தேர்தல் அறிக்கை. ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்தக் கருத்தைத் திரித்து எல்லா இடங்களிலும் பேசித் திரிந்தது தி.க., தி.மு.க.வினர்தான். “டாக்டர் பாரு, பறையனையெல்லாம் நடுவில் வைக்க வேண்டுமென்கிறார்” என ஒவ்வொரு ஊரிலும் தி.மு.க.வினர் பேசினர். இதன் விளைவாக ஒரு அரை சதவீதம் ஓட்டுக்கள் எங்களுக்குக் குறைந்தது என்றாலும், இது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. கட்சிப் பொறுப்புகளில் கூட எங்கெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் முன் வருகிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறோம். பிற கட்சிகளில் இந்நிலைமை இல்லை. தாழ்த்தப்பட்டவர் அணி எனத் தனியாக வைத்து அதில் பொறுப்புத் தருவார்களே யொழிய பொதுப் பொறுப்புகளைத் தருவதில்லை. எங்கள் கட்சியில் பொதுச் செயலாளரே தாழ்த்தப்பட்டவர். செங்கை மாவட்டத்தில் தலைவர், தஞ்சையில் தலைவர், நாகை மாவட்டத்தில் செயலாளர் இவர்களெல்லாம் ஆதி திராவிடர்கள்தான். எங்கள் கட்சியின் மூதறிஞர் அணித் தலைவர் மணியரசு நாராயணசாமி அவர்களும் ஒரு ஆதி திராவிடர்தான்.

கேள்வி:
தீண்டாமைக் கொடுமை என்பது கலாச்சார ரீதியாக வெளிப்படுவது. இதனை எதிர்த்த நடவடிக்கைகள் கலாச்சாரத் தளத்திலும் நடைபெற வேண்டும். அத்தகைய திட்டங்கள் ஏதும் உண்டா? மஞ்சள் துண்டணிவது, அக்னித் திருவிழாக்கள் நடத்துவதென்பதெல்லாம் பா.ம.க.வினரால் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றின் பொருளென்ன? தாழ்த்தப்பட்டோரின் பண்பாட்டு அடையாளம் எதையும் பொதுக் குறியீடாக மாற்றும் திட்டமுண்டா?

பதில்:
குறிப்பிட்ட வடிவம் ஏதும் கிடைத்தால் செய்வதில் தடையில்லை. கட்சிக் கொடியில் மஞ்சள் சிவப்புடன் நீலமும் இருக்க வேண்டும் என்கிற கருத்து வந்தபோது உடனடியாக ஏற்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் சில ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி ‘டீ க்ளாஸ்’ வைக்கும் பழக்கம் உள்ளதைக் கேள்விப்பட்டு அதனைக் கடுமையாக எதிர்த்துப் பேசினேன். மீன் சுருட்டியில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து டீ குடித்து அந்தப் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோம். தனி டீ கிளாஸ் பழக்கம் எங்காவது இருந்தால் அங்கு நானே வந்து போராடுவேன் எனப் பேசியதைத் தொடர்ந்து பல ஊர்களில் இப்பழக்கம் ஒழிக்கப்பட்டது. கூட்டங்களுக்கு பேசுவதற்கு அழைக்கும் போது கூட பொதுக்கிணற்றில் நீர் எடுப்பது, கோயில்களில் சம மரியாதை போன்ற செயல் திட்டங்களுடன் இணைந்த கூட்டங்களுக்கே முன்னுரிமை கொடுத்துப் போறேன்.

பேராசிரியர் கல்யாணி
பேராசிரியர் கல்யாணி (பிரபா கல்விமணி)

அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டை தமிழக அரசு சரியாகக் கொண்டாடவில்லை. நாங்கள் சிறப்பாகக் கொண்டாடினோம். சுமார் பத்து இடங்களில் அம்பேத்கருக்குச் சிலைகள் திறந்துள்ளோம். இது இளைஞர்கள் மத்தியில் மனமாற்றத்தை உண்டு பண்ணியுள்ளது. வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர்களில் பதட்டம் குறைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட பையன்கள் வன்னியப் பெண்களைக் காதலிப்பது போன்ற விஷயங்கள் இப்போது அதிகம் பெரிதுபடுத்தப்படுவதில்லை. பெரும் தண்டனைகள் கொடுக்கப்படுவதில்லை. இவைகளெல்லாம் நல்ல மாற்றங்களானாலும் இதுவரை செய்யப்பட்டுள்ளவை ரொம்பக் குறைவுதான். இன்னும் செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது. பா.ம.க. ஒரு அரசியல் கட்சியாகவும் இருப்பதால் இத்தகைய பிரச்சினைகளில் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியவில்லை. மக்களைப் பாதிக்கிற இதர பிரச்சினைகளும் வந்து விடுகின்றன. இதில் வருத்தப்பட வேண்டியது என்னவென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் தரப்பு இயக்கங்கள் எதுவும் இப்படியான பிரச்சினைகளைத் தீர்க்கும் போராட்டங்களுக்காக எங்களை அணுகியதில்லை.

கேள்வி: (கல்யாணி குறுக்கிடுகிறார்)
கட்சியில் பல்வேறு வெகுஜன அணிகள் வைத்திருக்கிறீர்கள். தீண்டாமை ஒழிப்பு அணி என்று ஒன்று தனியாக அமைக்கலாம். தாழ்த்தப்பட்டவர்கள் தலைமையில் அது இயங்கலாம். தீண்டாமைப் பிரச்சினைகளை மட்டுமே அது கவனத்தில் எடுத்துச் செயல்படலாம்.

பதில்:
ரொம்ப அருமையான கருத்து. இதுவரை யாரும் சொன்னதில்லை. இதை உடனடியாக நிறைவேற்றுவோம். சாதி ஒழிப்புக் கூட்டு விவாதத்தில் உங்கள் வீட்டில் மாட்டுக்கறி விருந்தளித்ததாகப் பார்த்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. நாங்களும் இப்படிச் செய்வோம். நான் கூட கூட்டங்களில் பேசுவதுண்டு – உங்களில் பாதிப் பேர் பன்றிக் கறி சாப்பிடுகிறீர்கள். பன்றியாவது மலம் தின்கிறது. ஆட்டுக்கும் மாட்டுக்கும் என்ன வித்தியாசம்? மாட்டுக்கறி சாப்பிடுங்கள் – என்பேன்.

கேள்வி:
அரசில் குறுக்கிட்டு ஸ்தம்பிக்கச் செய்வது என்கிற போராட்ட வடிவத்தை எங்கிருந்து முன்மாதிரியாகப் பெற்றீர்கள்?

பதில்:
முன்மாதிரி என்று எதையும் பார்க்கவில்லை. அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். ரொம்பவும் நியாயமான கோரிக்கை என்பதால் மக்கள் பெருமளவில் முன்வந்தார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் நாங்கள் பங்கு கோருகிறோம் என்கிற தவறான பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக தாழ்த்தப்பட்டவர்களுக்கு 22 சதம் வன்னியர்களுக்கு 20 சதம் எனப் போராடினோம்.

கேள்வி:
ஈழ மக்களுக்கெதிராக தமிழக அரசு சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கெதிராக ஓட்டுக் கட்சிகளில் ஓரளவு குரல் கொடுத்தது பா.ம.க.தான். இன்னும் வன்மையாக நீங்கள் குரல் கொடுத்திருக்க முடியும். அதன் மூலம் திராவிட இயக்கங்களைத் தோலுரித்து ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்திருக்க முடியும். அந்த வாய்ப்பை இழந்து விட்டீர்கள் என்றே கருதுகிறோம்.

பதில்:
ஈழ மக்களுக்கும், புலிகளுக்கும் எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசினேன். ஆதரவாக நின்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்தபோது அதனையும் கண்டித்தோம். ராமகிருஷ்ணன் முதலியோரை சிறையில் சென்று பார்த்தேன். இதர சிறிய அமைப்புகளுடன் சேர்ந்து சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். தொடர்ந்து இதனைச் செய்வோம். இதில் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். கட்சியைத் தடை செய்தாலும் சரி.

கேள்வி:
தாராளவாதம் என்கிற பெயரில் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு இந்தியா அடிமையாகி வருகிறது. இவற்றின் விளைவாக கல்வி, மருத்துவம் என்பதெல்லாம் கூட இன்று வணிகமயமாகி வருகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களே. பா.ம.க. இவை பற்றி எல்லாம் பேசுவதாகத் தெரியவில்லையே?

பதில்:
மன்மோகன் சிங் வந்த பிறகு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இது குறித்தும் சர்வதேச நிலைமைகள் குறித்தும் நிர்வாகக் குழுவில் பேசுகிறோம். மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.

கேள்வி:
மக்களே Local Power, அதிகாரங்களைக் கையில் எடுத்துக் கொள்வது என்பது இன்று அண்டை மாநிலங்களிலெல்லாம் நடைமுறையாகி வருகிறது. உங்கள் கருத்தென்ன?

பதில்:
Local Power – ஐ மக்களே கையிலெடுத்துக் கொள்வதுதான் சரியான தீர்வு என்பதே என் தனிப்பட்ட கருத்து. மக்கள் கண்காணிப்பு அணிகளை ஆங்காங்கு உருவாக்கிச் செயல்படுத்துவது அவசியம்.

கேள்வி:
சனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு முன் நமது அமைப்புக்களை நாம் சனநாயகப்படுத்த வேண்டும். பா.ம.க.வில் அத்தகைய திட்டம் ஏதும் உண்டா?

பதில்:
இன்னும் இரண்டு மாதங்களில் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை தேர்தல்கள் நடத்த இருக்கிறோம். சில மாவட்டங்களில் அமைப்பு கட்ட வேண்டியுள்ளதும், சிவில் தேர்தல்கள் இடையில் அறிவிக்கப்பட்டதும் தான் தாமதத்திற்குக் காரணம்.

கேள்வி:
கல்விப் பிரச்சினைகளில் நீங்கள் தனிப்பட்ட முறையில் மிகுந்த ஆர்வமுடையவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பா.மக.வின் கல்விக் கொள்கை என்ன?

பதில்:
கல்வியைப் பொறுத்த மட்டில் இதோ இருக்கிறாரே (கல்யாணியைச் சுட்டிக்காட்டி) இவர் சொல்வதுதான். மக்கள் கல்வி இயக்கத்தின் கொள்கையை முழுவதுமாக ஏற்கிறோம். இன்றைய கல்வி முறை கிராமப்புற மக்களைப் பொறுத்தமட்டில் ஆடு, மாடு மேய்க்கத்தான் பயன்படும். தமிழ்வழிக் கல்வி முதலியவற்றுக்காகப் போராடுவதற்கு முன்னுரிமை அளிப்போம்.

கேள்வி: (கல்யாணி குறுக்கிடுகிறார்)
புதிய தீவிர வடிவங்கள் தேவை என்பது ஒரு புறம். இப்போது இருக்கும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு இயல்பாயுள்ள போர்க்குணத்தை – Militancyயையும் அல்லவா குறைத்து விடுகின்றன. நிறப்பிரிகை 600 பிரதிகளே அச்சிடப்பட்டாலும் சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடியவர்கள் மத்தியில் செல்லும் ஒரு இதழ். இதன் மூலம் நீங்கள் எதையேனும் சொல்லலாம்.

பதில்:
பா.ம.க. பற்றிய குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். விமர்சனங்களை எந்த நிலையிலிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். திருத்திக்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறோம். தினப்புரட்சி நமது பத்திரிகை. அதில் எல்லோரும் எழுதலாம். நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

(நிறப்பிரிகை, பிப்ரவரி 4, 1992)

* அ.மார்க்சு, ரவிக்குமார், பொ.வேல்சாமி மூவரும் நிறப்பிரிகை ஆசிரியர் குழுவின் உறுப்பினர்கள். பின்னாளில் ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரானார். பா.கல்யாணி, தற்போது பிரபா கல்விமணி என்று அறியப்படுபவர்.
_____________________________________________
athika-arasiyal

“சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்”

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வெளியீடு, விலை ரூ. 60.00

புத்தகம் கிடைக்கும் இடங்கள்

  1. முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
    கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு,
    எல்லீசு சாலை, சென்னை – 2
    தொலைபேசி – 044-2841 2367
  2. புதிய கலாச்சாரம்
    16, முல்லைநகர் வணிக வளாகம்,
    2-வது நிழற்சாலை, அசோக்நகர்,
    சென்னை – 600083
    தொலைபேசி – 044 – 2371 8706, 99411 75876

வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் vinavu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேற்குலகிற்காக கொல்லப்படும் வங்கதேச தொழிலாளர்கள் !

10

டந்த ஏப்ரல் 24-ம் தேதி புதன் கிழமையன்று வங்கதேசம் தாக்காவின் சாவர் புறநகர் பகுதியில் ராணா பிளாசா என்ற வணிக வளாகம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 700-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்; 2500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்; நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

rana-plazaராணா பிளாசாவின் 8 மாடி வளாகத்தில் ஐந்து ஆயத்த ஆடை தொழிலகங்கள் இயங்கி வந்துள்ளன. அவற்றில் 3,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பெரும்பாலானோர் பெண்கள் வேலை செய்து வந்துள்ளனர். விபத்தில் சிக்கி உயிரிழந்தோர், காயமுற்றோர் அனைவரும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள்; கீழ்த்தளங்களில் இயங்கிய வங்கி மற்றும் கடைகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்ததால், அவற்றின் ஊழியர்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளவில்லை.

விபத்து நடந்ததற்கு முதல் நாள் (செவ்வாயன்று) கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து தளங்களிலிருந்தும் தொழிலாளர்கள், மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வங்கதேச ஏற்றுமதி ஆடை உற்பத்தியாளர் சங்கம் மறு உத்தரவு வரும் வரை, ஆலைகளை இயக்கவேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தது.

இந்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாத தொழிலக உரிமையாளர்கள், விபத்துக்கு முதல் நாள் மட்டும் விடுப்பு வழங்கிவிட்டு மறுநாள் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்திருக்கின்றனர். ‘கட்டிடம் ஆய்வு செய்யப்பட்டதில் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று பொய் சொல்லி பணிக்கு வந்தே தீர வேண்டும் என்று தொழிலாளர்களை கட்டாயப்படுத்தியிருக்கின்றனர். தமது மேற்கத்திய வாடிக்கையாளர்களுக்கு ஆடைகளை அனுப்பி வைக்க வேண்டிய கால அவசரத்திற்காக தொழிற்சாலை மேலாளர்கள் இதைச் செய்திருக்கின்றனர்.

தேடப்படும் தொழிலாளர்கள்
தேடப்படும் தொழிலாளர்கள்

விபத்தில் உயிர் தப்பிய திலரா பேகம் என்ற தொழிலாளர் “பாதுகாப்பற்ற கட்டிடத்தில் வேலைக்குச் செல்ல நாங்கள் விரும்பவில்லை, ஆனால் வேலைக்கு திரும்பவில்லையெனில் ஊதியத்தை பிடித்துக்கொள்வதாக மேலாளர்கள் அச்சுறுத்தினர்” என்கிறார். விபத்தன்று வேலைக்குச் சென்ற தொழிலாளர்களில் ஒருவரான அப்துல் ரஹீம், “கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசலினால் பாதிப்பு ஏதுமில்லை என்று மேனேஜர் அளித்த வாக்குறுதியை நம்பி ஐந்தாவது மாடியிலுள்ள தொழிலகத்துக்கு நாங்கள் வேலைக்கு சென்றோம். ஒரு மணி நேரத்திற்குள் கட்டிடம் குலுங்கி, திடீரென இடிந்து விழுந்தது, விழுந்த பின் நடந்தது எதுவும் எனக்கு நினைவில் இல்லை” என்கிறார். அவர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இராணுவம் மற்றும் தன்னார்வ குழுக்களின் உதவியுடனும் மீட்புப் பணிகள் நடைபெற்றன. இயந்திரங்களை பயன்படுத்தினால் கான்கிரீட் இடிபாடுகள் அதிர்ந்து சிக்கியிருப்பவர்களின் உயிருக்கு ஆபத்தாக அமையும் என்பதால் கைகள், மண் வெட்டிகள், கம்பிகளை வெட்டி எடுக்கும் சாதனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இடிபாடுகளிலிருந்து இதுவரை 2,437தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 400-க்கும் அதிகமான சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 149 பேரின் நிலை என்னவென்றே தெரியாமலே உள்ளது.

ஆலை உரிமையாளர்கள் மஹ்பூபுர் ரஹ்மான் தபஸ், பல்சுல் சமத் அத்னான், கட்டிடத்தை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய நகராட்சி என்ஜினியர்கள், கட்டிட உரிமையாளர் முஹமத் சொஹைல் ராணா உட்பட 12 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ராணா பிளாசாவில் அனுமதிக்கப்படிருந்த ஐந்து தளங்களுக்கு மேல் கட்டுமான விதிமுறைகளை மீறி எட்டு தளங்கள் கட்டப்பட்டிருந்தன. அது இந்த இந்த கோர விபத்துக்கு காரணமாக இருந்திருக்கிறது.

இடிந்த கட்டிடம்
இடிந்த கட்டிடம்

குறைந்த கூலியில் வேலை செய்யும் தொழிலாளர் கூட்டத்தை தேடி இடம் பெயரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான ஆடை உற்பத்தி வளையத்தில் வங்கதேசம் இப்போது முக்கியமான மையமாக உள்ளது. ஆடை ஏற்றுமதியில் சீனா, இத்தாலிக்கு பிறகு மூன்றாம் இடத்தில் இருந்த வங்கதேசம் இப்போது இரண்டாம் இடத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை தொழில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 77 சதவீதமாகவும், ஆண்டுக்கு $24 பில்லியன் வருவாயை ஈட்டுவதாகவும் இருக்கிறது.

இதற்கான அடிப்படை காரணத்தை தேடி அலைய வேண்டியதில்லை. பல்வேறு நாடுகளில் ஆடைத் தொழிலாளர்களின் மாத சம்பள வீதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் போதும்:

சீனா  – $154 to $230 (சுமார் ரூ 8,000 முதல் ரூ 12,000 வரை)

கம்போடியா – $80 (சுமார் ரூ 4,400)

வங்கதேசம் – $38 (சுமார் ரூ 2,090)

சீன நிறுவனங்கள் கூட குறைந்த கூலி உற்பத்தியை தேடி வங்க தேசத்துக்கு இடம் பெயர்ந்துள்ளன.

செர்ரி பாடி பேஷன்ஸ் என்ற பெண்கள் உள்ளாடை மற்றும் நீச்சலுடை தயாரித்து விற்பனை செய்யும் ஹாங்காங் கம்பெனி, 10 வருடங்களுக்கு முன் சீனாவில் 3,500 தொழிலாளர்களை கொண்டு தனது விற்பனைக்கான ஆடைகளை உற்பத்தி செய்து வந்தது. இப்போது அந்த நிறுவனம், சீனாவில் வெறும் 200 தொழிலாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு, வங்க தேசத்தில் 2,500 தொழிலாளர்கள் மூலம் உற்பத்தி செய்து வருகிறது.

ஒரு நாளுக்கு 2 டாலருக்கும் குறைவான கூலிக்கு, ஆபத்தான சூழ்நிலையில் ஏற்றுமதி ஆடைகளை தயாரிக்கும் இந்த அப்பாவித் தொழிலாளிகளின் கடினமான உழைப்பும், மோசமான வாழ்க்கை நிலைமைகளும் தான், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் ஆடைகளை விற்கும் வால் மார்ட், டார்கேட், H&M, லொப்லாவ் போன்ற பிராண்டுகளின் பின்னணியில் உள்ளன. இத்தொழிலகங்கள் 15 மணி நேர மிகை உழைப்பு, மிகக் குறைந்த கூலி, பாதுகாப்பு வசதிகள் இல்லாத கட்டிடங்கள், பாதுகாப்பற்ற பணிச்சூழல் என்று வியர்வைக் கூடங்களாக இருக்கின்றன.

தாக்காவின் ஆயத்த ஆடை தொழிலகங்களில் வேலை செய்யும் 35 லட்சம் தொழிலாளர்கள், புறநகர்ப் பகுதிகளின் அசுத்தமான தெருக்களில் காற்றோட்டத்திற்கு ஜன்னல் கூட இல்லாத ஒற்றை அறையில், இன்னொரு குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளும் சமையல் அறை, கழிப்பறை கொண்ட வீடுகளில் வாழ்கிறார்கள். குடும்பமே வேலைக்குப் போனால்தான் குடியிருக்க அத்தகைய வீடும், ஒரு வேளை சோறும் கிடைக்கும் என்பதுதான் அவர்களது பொருளாதார நிலை. மூன்று பேர் வேலை பார்க்கும் ஒரு குடும்பத்தின் மாத வருமானம் $90 ஆக இருந்தால்தான், அதில் பாதியை வாடகைக்கு கொடுத்து வீடு எடுக்க முடியும்.

இறந்து போன தொழிலாளர்கள்
இறந்து போன தொழிலாளர்கள்

ராணா பிளாசா விபத்தில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட பல தொழிலாளர்களின் முறையீடு அவர்களது மோசமான பொருளாதார நிலையை காட்டுகிறது.

கான்கிரீட் கற்பலகைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட முஹமத் அல்டாப், “அண்ணா, எங்களை காப்பாற்றுங்கள்! உங்களை மன்றாடி கேட்கிறேன், எனக்கு வாழ வேண்டும்! எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்” என்று கதறியுள்ளார்.

இடிபாடுகளில் சிக்கி இறந்த இளம் பெண் ஒருவர், தன் பெற்றோர்களுக்கு தூண்டு காகித சீட்டில் எழுதிய கடிதம் உயிரற்ற அவளின் கைகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் “அம்மா, அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் இனிமேல் உங்களுக்கு மருந்து வாங்கி தர முடியாது. தம்பி! அப்பாவையும் அம்மாவையும் பார்த்து கொள்வாயா?” என்று அவர் எழுதியிருக்கிறார்.

இந்தத் தொழிற்சாலைகளின் பணிச்சூழலையும், தொழிலாளர் நலன்களையும் ஒழுங்குபடுத்தும் அதிகாரம் பெயரளவில் தான் வங்க தேச அரசிடம் இருக்கிறது. அரசையும் விஞ்சிய அதிகாரம் கொண்ட மேற்கத்திய பிராண்ட்களும் சில்லறை வர்த்தக பகாசுர கம்பெனிகளும் தமக்கு விற்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் ’வியர்வைக் கூடங்கள்’ எனப்படும் இது போன்று கிடங்குகளில் அடைக்கப்பட்டு மிருகங்களைப் போல வேலை வாங்கப்படுவதை கண்டு கொள்வதில்லை. அதன் மூலம் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி பெருமளவு லாபம் சம்பாதிப்பதை உறுதி செய்து கொள்கின்றன.

வங்க தேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10% பேர் ஆடை தொழிலகங்களை நடத்தும் முதலாளிகளாக இருக்கின்றனர். 50%க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஏதாவது ஒரு வகையில் ஆடைத் துறையுடன் தொடர்பு வைத்துள்ளனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தரகு வேலை பார்க்கும் அவர்கள் தம் சொந்த நாட்டு உழைக்கும் மக்களை சுரண்டி பன்னாட்டு நிறுவனங்கள் கொழுப்பதற்கு வழி செய்து கொடுக்கின்றனர். தொழிலாளர்களின் நலனை கண்காணிக்கும் துறையில் ஆடை ஆலைகளை ஆய்வு செய்வதற்கு வெறும் 18 இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ராணா பிளாசாவின் உரிமையாளர் முகமது சகேல் ராணா, ஆளும் அவாமி லீக் கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கிறார்.

பிரிமார்க்
வங்க தேசத்தில் ஆடைகள் வாங்கும் இங்கிலாந்தின் பிரிமார்க் கடை

30 ஆண்டுகளாக ஏற்றுமதி ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள முஹமத் ஆசிம் என்ற முதலாளி 26,000 தொழிலாளர்களைக் கொண்டு வங்கதேசத்தில் பல ஆயத்த ஆடை தொழிற்சாலைகளை இயக்கிவருகிறார். நாடாளுமன்ற உறுப்பினரான இவர் இந்த ஆலைகளின் மூலம் ஆண்டுக்கு $200 மில்லியன் வருமானம் ஈட்டுகிறார். தாக்காவில் நீச்சல் குளத்துடன் கூடிய ஆடம்பர வீட்டில் வசிக்கும் அவர் “உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தும் மேற்கத்திய பிராண்ட்கள், விலையை அதிகரித்து தருவதில்லை. அதன் மூலம் வங்க தேச முதலாளிகளின் லாபம் குறைகிறது” என்று முறையிடுகிறார்.

அதிக அளவில் ஆர்டர்கள் பிடிப்பதற்காக தொழிற்சாலைகள் மத்தியில் நிலவும் போட்டியை பயன்படுத்திக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் விலை சம்பந்தமாக பேரம் பேசக் கூட மறுக்கின்றனர். அவர்கள் சொல்லும் அடிமாட்டு விலை எதுவாக இருப்பினும், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்ற நிலைக்கு தொழிற்சாலைகள் தள்ளப்படுகின்றன.

மேற்கத்திய பிராண்டுகள் கொள்முதல் விலையை ஒவ்வொரு வருடமும் குறைத்துக் கொண்டே வருவதாக வங்க தேச முதலாளிகள் கூறுகின்றனர். “2011-ல் ஒரு உருப்படிக்கு $5 விலை கொடுத்து வாங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் 2012-ல் ஒரு உருப்படிக்கு $4.50 மட்டுமே விலையாக தருகிறார்கள். கடந்த 2 வருடங்களாக ஏற்றுமதியாகும் ஆடைகளின் விலைகள் சுமார் 40% குறைந்துள்ளன” என்கின்றனர்.

“மேற்கத்திய பிராண்டுகள் வங்க தேச முதலாளிகளுக்கு பிச்சை போடுவது போல குறைந்த விலையை கொடுத்து, ஒரு அரசனை போல் உயர்வான தரத்தை எதிர்பார்க்கிறார்கள்” என்கிறார் முன்னாள் ஜவுளித் துறை அமைச்சர் அப்துல் மன்னன். இவர் தான் ஏற்றுமதி ஆடை உற்பத்தி தொழிலை வங்கதேசத்தில் துவங்குவதற்கு பெரும் உதவியாக இருந்தவர். இன்று உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் 2 டஜன் ஆலைகளுக்கு உரிமையாளராகவும் உள்ளார்.

துயரம்
கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உறவினர் துயரம்

பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்டையும், வங்க தேச முதலாளிகளின் கங்காணித்தனமும் அந்நாட்டு மக்களை கொத்தடிமைகளாக பலி வாங்கி வருகின்றன. இதற்கு முன்னர் 2005 ஏப்ரலில் ஸ்பெக்ட்ரம் தொழிற்சாலை இடிந்து 73 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்; 2006-ம் ஆண்டு ஆடை தொழிற்சாலை ஒன்றின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர்; 2010-ல் நடந்த கட்டிட இடிவில் 25 பேர் உயிரிழந்தனர்; 2012 நவம்பரில் தஸ்ரின் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 112-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்; கடந்த பத்தாண்டுகளில் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் நடந்த பேரழிவுகளில் 700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

சாம் மேகர் என்று ஆர்வலர், “தொடர்ச்சியாக நிகழும் இது போன்ற பெரு விபத்துகள் கார்ப்பரேட்டுகள் பின்பற்றும் கண்காணிப்பு முறைகள் எந்த அளவுக்கு மோசடியானவை என்பதை காட்டுகின்றன. 2005-ல் ஸ்பெக்ட்ரம் தொழிற்சாலை இடிந்து 64-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பின் உறுதியளிக்கப்பட்ட நடவடிக்கைகள் இன்று வரை நடைமுறைப் படுத்தப்படவில்லை” என்கிறார்.

ராணா பிளாசாவில் இயங்கி வந்த பேன்டம் அப்பேரல்ஸ் (Phantom Apparels), பேன்டம் டேக் (Phantom Tac), ஈதர் டெக்ஸ் (Ether Tex), நியூ வேவ் ஸ்டைல் (New wave Style), நியூ வேவ் பாட்டம்ஸ் (New Wave Bottoms) ஆகிய 5 நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சட்டைகள், பேண்ட்கள் மற்றும் இதர ஆடைகளை உற்பத்தி செய்கின்றன.

விபத்து நடந்த பிறகு ராணா பிளாசாவை ஆய்வு செய்த தொழிற்சங்க அமைப்புகள் அங்கு இருந்த ஆவணங்கள் மற்றும் ஆடை முத்திரைகளைக் கொண்டு வால்மார்ட் (Walmart), ப்ரிமார்க் (Primark), மதலன் (Matalan), சீயர்ஸ் (Sears), கேப் (Gap), டாமி கில்பிகர் (Tommy Hilfiger), பெனட்டன் (Benetton) உள்ளிட்ட பிரபல சில்லறை வர்த்தகக் கடைகள், பிரபலமான ஆடை பிராண்டுகளுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டதை அம்பலப்படுத்தியுள்ளனர். இந்த நிறுவனங்கள் பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஸ்பெயின் போன்ற நாடுகளைச் சேர்ந்தவை.

ஏழை நாடுகளைச் சேர்ந்த கொத்தடிமைக் கூடங்களில் இருந்து பொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி மேற்கத்திய சந்தையில் பெரும் லாபத்துக்கு விற்கும் பன்னாட்டுக் கார்ப்பரேட் கம்பெனிகள், இது போன்ற பேரவலங்கள் நிகழும் போது அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கைகழுவி விடுகின்றன. விபத்து நடந்த கம்பெனிகளில் தாங்கள் பொருட்கள் வாங்குவதில்லை என்று உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியிட்டு தங்கள் பிராண்டு இமேஜை காப்பாற்றிக் கொள்வதில் தான் அக்கறை செலுத்துகிறார்கள். பிரிட்டனின் ப்ரிமார்க் (Primark) தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் இங்கு தமது பிராண்ட் ஆடைகள் விபத்து நடந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படவில்லை என்று மறுத்துள்ளன.

மீட்புப் பணி
மீட்புப் பணி

ராணா பிளாசாவில் செயல்படும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சங்கமாக திரண்டிருந்தால், பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்ய மறுத்து தமது உயிர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால், பன்னாட்டு முதலாளிகளை திருப்திப்படுத்தி, நாட்டின் பொருளாதார உயிர்நாடியாக உருவாகக்கப்பட்டிருக்கும் ஏற்றுமதி ஆடை தயாரிப்பு தொழில் துறையை தக்கவைத்து கொள்ள, வங்கதேசத்தின் அனைத்து தொழிலாளர்கள் இயக்கங்களும் அரசால் நசுக்கப்படுகின்றன. ஊதியத்தையும் பணிச் சூழலையும் மேம்படுத்துவதற்கு சங்கமாக திரண்டு போராட முனையும் தொழிலாளர்கள் மீது அரசால் கடும் அடக்குமுறை அவிழ்த்து விடப் படுகிறது. 2010-ல் வெடித்த தொழிலாளர் போராட்டங்களைத் தொடர்ந்து தொழிலாளர் போராட்டங்களை உளவு பார்த்து வேரோடு அழிப்பதற்காக 2,990 பேரைக் கொண்ட தொழில்துறை போலீஸ் படையை வங்க தேச அரசு உருவாக்கியிருக்கிறது.

கடந்த ஆண்டு அமினுல் இஸ்லாம் (Aminul Islam) என்ற தொழிற்சங்க அமைப்பாளர் போலீசாரால் சித்திரவதை செய்து மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இன்றும் விசாரணை நடந்து கொண்டிருக்கும் இக்கொலைக்கு, சந்தேகத்தின் பெயரில் கூட யாரும் கைது செய்யபடவில்லை.

நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா பேகம், “உலகில் எந்த மூலையிலும் விபத்து நடக்கலாம், அவற்றை யாரும் யூகிக்க முடியாது” என்று தனது அடிமைத்தனத்தை பறைசாற்றியிருக்கிறார். “இந்த விபத்தினால் வங்கதேசத்துக்கு வரும் தொழில் வாய்ப்புகள் குறையப்போவது இல்லை, ஏனென்றால், இங்குதான் குறைவான கூலி கொடுத்து தரமான ஏற்றுமதி ஆடைகளை தயாரிக்க முடியும்” என்று உலக முதலாளிகளுக்கு அழைப்பு விடுக்கிறார். விபத்து தொடர்பான தனது நாடாளுமன்ற உரையில், “தொழிலாளர்கள் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு, ஆலையில் உற்பத்தி நடக்க ஒத்துழைக்க வேண்டும், இல்லையெனில் பலர் வேலை இழக்க நேரிடும்” என்று முதலாளிகளின் மொழியில் பேசியிருக்கிறார்.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட மே தினப் போராட்டங்களும் பேரணியும் தாக்காவில் நடைபெற்றன. திரளாக போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்ககோரியும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். கொல்லப்பட்ட தங்கள் சகோதர சகோதரிகளுக்கு நீதி வேண்டுமென்றும், அவர்கள் சிந்திய ரத்தம் வீணாகிவிடாது என்றும் முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மொங்கிதுல் ராணா என்ற 18 வயது இளம் தொழிலாளி “கட்டிட உரிமையாளருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான ஊதியமும் பாதுகாப்பான பணிச்சூழலும் வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விற்கப்படும் ஒரு சட்டையின் விலைதான் அதைத் தயாரிக்கும் வங்க தேச ஆலைத் தொழிலாளிக்கு மாதச் சம்பளமாக தரப்படுகிறது. அழுகிய உடல்களின் துர்நாற்றத்தினால் சூழப்பட்டு இருக்கும் சாவர் பகுதியில் இயங்கும் ஆலைகள், இன்றைய மறுகாலனியாக்க உலகத்தில் தொழிலாளியின் உயிர் கூட அவர்களுக்கு சொந்தமில்லை என்ற உண்மையை நம் கண்முன் நிறுத்துகின்றன!

மேற்கத்திய நாடுகளின் நுகர்வு வெறிக்குத் தீனி போடுவதன் மூலம் லாபத்தை வாரிக் குவிக்கும் வெறியோடு பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளின் மீது பாய்ந்து குதறுகின்றன. இந்த கொள்ளையை அந்த நாடுகளுக்கு உதவி, வளர்ச்சிக்கான ஊக்குவிப்பு, ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு என்று கலர் கலராக பெயர் சூட்டி கௌரவித்தாலும் அது ஏழை மக்களின் வாழ்க்கை நிலைமைகளை வேரோடு அழித்து, முதலாளிகளின் ஆளுமையின் கீழ் நிறுத்திவைக்கும் காலனி அடக்குமுறையே அன்றி வேறொன்றுமில்லை.

பொருட்கள் மலிவாய்க் கிடைக்கின்றன என்பதற்காக ரிலையன்ஸ், வால்மார்ட் உள்ளிட்ட தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் வணிக நிறுவனங்களின் முன் மண்டியிடும் ‘நுகர்வோர்’ இதன் இன்னொரு பக்கத்தைக் காண மறுக்கிறார்கள். தங்களது நுகர்வு வெறிக்குத் தீனியாக வரும் இந்தப் பொருட்களின் உற்பத்தியின் பின்னே ரத்தமும் சதையுமான மக்களின் வாழ்க்கை இருக்கிறது என்பதைக் காணத் தவறுகிறார்கள். மலிவாய்க் கிடைக்கும் பொருள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு தொழிலாளியின் கண்ணீரும் வியர்வையும் கலந்திருக்கிறது.

நீங்கள் அணிந்திருக்கும் ஆயத்த ஆடையின் பின்னே உறைந்து போன ரத்தத்துளிகள் இருக்கலாம் என்பதை அறிந்திருக்கிறீர்களா?

-ஜென்னி, பாணன்

மேலும் படிக்க

தோழர் சீனிவாசன் : போராட்டமும் மகிழ்ச்சியும் !

6

chennai-srinivasan-10

மே 5-ம் தேதி தியாகராய நகர் செ.தெ.நாயகம் பள்ளியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் தோழர் சீனிவாசனின் மறைவுக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஒருங்கிணைத்தார்.

தியாகிகளுக்கு வீரவணக்கம்

“கோடானு கோடி மக்களுக்காக குருதி சிந்திய தோழர்களே….” என்ற தியாகிகளுக்கு வீர வணக்க பாடலுடன் கூட்டம் தொடங்கியது.

தோழர் சீனிவாசனின் மகள் தோழர் பொற்கொடி, மக்கள் கலை இலக்கியக் கழத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன், விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் ஏழுமலை, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் கார்த்திகேயன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் சுப தங்கராசு, பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் அஜிதா, மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

இறுதியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் தோழர் சீனிவாசன் போன்ற தியாகிகளின் நினைவேந்தலின் முக்கியத்துவத்தை விளக்கி உரையாற்றினார்.

தோழர் வெங்கடேசன், தலைமை உரை

தோழர் வெங்கடேசன்ஒரு கம்யூனிஸ்டாக நாம் கடந்த காலத்தைப் பற்றி பரிசீலனை செய்கிறோம். தற்போது நடப்பவற்றைப் பற்றி ஆய்வு செய்கிறோம். நாளை வரும் காலத்தை எதிர் கொள்ள திட்டமிடுகிறோம். இவற்றின் மூலம் மக்கள் விடுதலைக்காக ஆளும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கிறோம்.

அந்த வகையில் தன் வாழ்நாளை மக்கள் பணிக்காக அர்ப்பணித்து மறைந்த தோழர் சீனிவாசனின் போராட்டங்களை நினைவு கூர்ந்து அவரது சிறந்த பண்புகளை கற்றுக் கொள்ளுதலை இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கமாக கருதலாம்.

தோழர் சீனிவாசன் கட்சி வேலைகளை எந்த நேரத்திலும் எந்த சுணக்கமும் இல்லாமல் மேற்கொள்பவராக இருந்தார். அவரது சிறந்த பண்புகளை வெறுமனே போற்றுவது போதாது, அவரைப் போல வாழ்வதுதான் அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலி.

போலி கம்யூனிஸ்ட் கட்சியான சிபிஎம்.மில் பகத்சிங் புகழை போற்றுகிறார்கள். ஆனால், பகத்சிங் போல வாழ வேண்டும் என்று கட்சியின் இளைஞர்களுக்கு கற்பிப்பதில்லை. ஆனால், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் பகத்சிங் போல வாழ வேண்டும் என்று போராடுகின்றனர்.

நாம் அனைவரும் தோழர் சீனிவாசனைப் போல வாழ்ந்து காட்ட வேண்டும்.

தோழர் கார்த்திகேயன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

நான் 2000-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கல்லூரிக்கு வந்து மாணவர்களை ஒன்று சேர்த்து அமைப்பாக்கியதில் தோழர் சீனிவாசனின் பங்கு முக்கியமானது. புமாஇமுவில் அன்று அதிகம் பேர் இல்லை.

தோழர் கார்த்திகேயன்2004-ல் பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மாணவர்களின் கல்வி உதவித் தொகையை தனது கணக்கில் போட்டு வட்டி சம்பாதித்து வந்ததை வந்ததை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. கல்லூரிக்குள் மாணவர் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கல்லூரிக்குள் போய் மாணவர்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்தும் போது கல்லூரி நிர்வாகம் எங்களை பிடித்து, அடித்து ஆடைகளை களைந்து போலீசில் ஒப்படைத்து விட்டார்கள். தோழர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தோழர் சீனிவாசனுடன் போலீஸ் அனுமதி பெறப் போயிருந்தோம். போலீஸ் அதிகாரி, “என்ன ஒரு 6-7 பேர் வருவீங்களா, வள்ளுவர் கோட்டத்தில் நடத்துறீங்களா? கலெக்டர் ஆபிஸ் முன்னே நடத்துங்க” என்று ஏளனமாக பேசிக் கொண்டிருந்தார்.

தோழர் சீனிவாசன், “இன்றைக்கு உங்களிடம் அனுமதி கேட்க வந்திருக்கிறோம். எதிர்காலத்தில் லட்சக் கணக்கான மக்கள் அணி திரளும் போது நாங்கள் அனுமதி கேட்க வர மாட்டோம். நீயாகவே வந்து எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியிருக்கும்” என்று பதிலளித்தார்.

அதை கடந்த மாதங்களில் ஈழத் தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் சார்பில் நடந்த போராட்டங்களில் மெய்ப்பித்து காட்டியிருக்கிறோம். சென்னையில் 800 மாணவர்களைத் திரட்டி பேரணி நடத்தினோம். போலீஸ் அனுமதி வாங்கவில்லை. அவர்களாக வந்து பாதுகாப்பு அளித்தார்கள்.

சின்ன தீப்பொறி பெரும் நெருப்பாக பரவுவது போன்ற இதுதான் நக்சல்பாரி அரசியல் என்று நடைமுறையில் கற்பித்தார் தோழர் சீனிவாசன். தோழரின் உறுதிதான் எங்களை வலுப்படுத்தியது.

இன்னொரு முறை போஸ்டர் ஒட்டும் போது பிடித்துச் சென்று விட்டார்கள். போலீஸ் ஸ்டேஷனின் உதவி ஆணையர், “நக்சலைட்டுக்கும் நக்சல்பாரிக்கும் என்ன வித்தியாசம்னு சொல்லு, உங்கள உடனே ரிலீஸ் பண்ணிர்றேன்” என்று மாணவர்களை கிண்டல் செய்தார். அப்போது தோழர், “அவங்க கிட்ட ஏன் கேக்கறே, நான்தான் தலைவர், என் கிட்ட கேளு ” என்று முன் வந்தார். “நக்சலைட்டுக்கும் நக்சல்பாரிக்கும் என்ன வித்தியாசம்னு உங்கிட்ட நான் ஏன் சொல்லணும், சொல்ல முடியாது” என்று பதில் சொன்னார். உறுதியாக அதிகார வர்க்கத்தை எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தை அவரிடம் கற்றுக் கொண்டோம்.

சமச்சீர் கல்விக்கான போராட்டத்தின் போது அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், சந்தோஷ் நகரில் கூட்டம் நடந்த போது தானும் வருவதாக கிளம்பி விட்டார். நான் போட்ட விதைகள் முளைத்திருக்கின்றன என்று சந்தோஷப்பட்டார்.

விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் ஏழுமலை

“நக்சல்பாரிதான் நக்சலைட்டு, அதைப் பத்தியெல்லாம் உன்கிட்ட விளக்க வேண்டியதில்லை” என்று தோழர் சீனிவாசன் சொன்னதாக கேட்டதும் எனக்கு தோழர் ரங்கநாதனின் நினைவு வந்தது.

தோழர் ஏழுமலை1970-களில் கடுமையான அடக்குமுறை நிலவியது. நான்கு பேர் ஒண்ணா கூடி நின்று பேச முடியாது. அந்த சூழலில் தோழர்கள் நான்கு நாட்கள் பட்டினியாக வேலை செய்வார்கள். அப்போ சோறு எல்லாம் கிடையாது, எங்காவது அலைந்து திரிந்து கூழ் கொண்டு வந்து கொடுப்போம்.

அன்றைய சாகச அரசியலை கேள்வி கேட்டு மக்கள் திரள் அரசியலை முன் வைத்தார் தோழர் ரங்கநாதன். கழைக்கூத்தாடி கம்பத்தில் ஆடினாலும், காசு வாங்குவதற்கு கீழே இறங்கி மக்கள் மத்தியிலதான் வரணும். கழைக்கூத்தாடி போல அரசியல் செய்தால் பலனில்லை. மக்கள் மத்தியில வேலை செஞ்சு மக்களுக்கு அரசியல் கத்துக் கொடுங்க என்று போராடினார் தோழர் ரங்கநாதன். அவர் இறந்த பிறகும் சி.பி.எம். போலி கம்யூனிஸ்டுகள் அவருக்கு வஞ்சம் செய்தாங்க, அவர் நினைவாக நிழற்குடை கட்டறதைக் கூட எதிர்த்தாங்க.

1983க்குப் பிறகு விவசாயிகள் விடுதலை முன்னணியோடு தொடர்பு ஏற்பட்டது. 1991 முதல் கருவறை நுழைவு போராட்டம், இறால் பண்ணை அழிப்பு போராட்டம் என்று பல போராட்டங்களில் தோழர் சீனிவாசனோடு சேர்ந்து பணியாற்றியிருக்கிறோம். 1986-ல் வட்டார மாநாடு நடத்தினோம். கம்யூனிச இயக்கத்தை மக்கள் திரள் அரசியல் வழியில் செலுத்துவதற்கான பணியில் அரும்பாடு பட்ட தோழர்களில் தோழர் சீனிவாசனும் ஒருவர். விவசாயி வரப்பை வெட்டி பயிருக்கு தண்ணீர் கொண்டு வருவது போல கம்யூனிச அரசியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அவர் வெற்றி கண்டார்.

அந்த போராட்டங்களின் விளைவுதான் இன்று இவ்வளவு பேர் அவரது நினைவேந்தல் நிகழ்வுக்கு கூடியிருப்பது. தோழர் ரங்கநாதன் நிலப்பிரபுக்களை ஒழிக்க வேலை செய்தார். அவர்கள் ஒழிந்து விட்டார்கள். அதன் பிறகு மக்களுக்கு சொத்து, படிப்பு வைத்துக் கொள்ள உரிமை வந்தது, ஆனா எதுவுமே நிரந்தரம் இல்லை என்று மாற்றியிருக்கிறார்கள். இந்த சூழலில் மக்கள் திரள் அரசியலுக்காக வேலை செய்தவர் தோழர் சீனிவாசன்.

தோழர் சீனிவாசன் மாற்றுக் கருத்து உடையவர்களையும் நட்புடன் அணுகுபவர். எங்கள் வீட்டுக்கு தோழர் வரும் போது குடும்பத்தினர் சரியாக பேசக் கூட மாட்டார்கள். ஆனால் ஒவ்வொரு தடவையும் அவர்களைப் பற்றி தவறாமல் விசாரிப்பார். எங்கள் ஊரிலிருந்து கோவைக்கு அனுப்பிய இளம் பெண் தோழர்களை சிறப்பான தோழர்களாக வளர்ப்பதில் அவர் பங்களித்தார்.

இன்றைக்கு அமைப்பின் சார்பாக தொடர்ச்சியான வெளியீடுகள் வருகின்றன. எங்க ஊரில் அதிமுக காரன் அதை எல்லாம் படிச்சிட்டு, “என்ன தோழரே, நானும் உங்க அமைப்புக்கு உதவி செய்றேன். 2000 ரூபாய் தருகிறேன்” என்கிறான். இதுதான் நம் அரசியலின் வெற்றி.

இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று புதிய ஜனநாயக புரட்சியை நடதுதவோம் என்று உறுதி பூணுவோம்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன்

தோழர் சீனிவாசன் சுமார் 35 ஆண்டுகாலம் புரட்சிகர அரசியலை பின்பற்றியவர். அவரது இறுதி ஊர்வலக் காட்சிகள் இன்னும் மனதை விட்டு அகலாத நிலையில் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அவருடன் இணைந்து 25 ஆண்டுகள் நான் அமைப்பு பணி செய்தேன்.

தோழர் காளியப்பன்அவர் எந்த வேலையையும் முன் நின்று செய்வார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவர் வேலை செய்வதை ஒரு போதும் சுமையாக எண்ணியதில்லை. வேண்டா வெறுப்பாக வேலை செய்ததில்லை. அமைப்பு வேலைகளை பெருமிதத்துடன் செய்வார்.

அவர் சென்னையை விட தஞ்சையில் பெரிதும் அறியப்பட்டவர். ஆண்டு தோறும் நடக்கும் தமிழ் மக்கள் இசைவிழாவில் ஒருங்கிணைப்பு வேலைகளை செய்தார். அந்த விழாவுடன் தொடர்புடைய ஒவ்வொருவருடனும் நெருங்கி பழகுவார்.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்

என்ற குறளுக்கு ஏற்ப அயராது வேலை செய்யும் இயல்புடையவர்.

அமைப்பு வேலை என்று பேச ஆரம்பித்தாலே அதை செய்வதற்கான திட்டங்களை மனதில் போட ஆரம்பித்து விடுவார். ஒரு போராட்டத்தை செய்யலாம் என்று ஆலோசனை நடத்தும் போதே நிறைவேற்றும் மனநிலைக்கு வந்து விடுவார். அதனால் பல முறை விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்.

எந்த வேலையையும் மறுத்ததே கிடையாது. யோசிக்காமலேயே ஒத்துக் கொள்வார். பெரிய வேலை, சின்ன வேலை என்று தோழர் சீனிவாசன் பாகுபாடு பார்த்ததே கிடையாது. “எவ்வளவு சிறிய வேலை செய்யவும் தயங்கக் கூடாது. சிறிய வேலைகள்தான் பெரிய மாற்றங்களின் ஆதாரங்கள்” என்று லெனின் கூறியிருக்கிறார். அதை முழுமையாக நம்பி பின்பற்றியவர் அவர்.

தோழர் அசாத்திய தைரியசாலி, யாருக்கும் பயப்பட மாட்டார் என்று எல்லோருக்கும் தெரியும். யாரிடம் பேசினாலும் தைரியமாக பேசுவார். ஒரு கலெக்டரிடம் பேசும் போது அதிகாரம் படைத்தவரிடம் பேசுகிறோம் என்ற எண்ணமே அவரிடம் இருக்காது.

அரிதான நோய் கணைய புற்று நோய் வந்து இன்னும் 2-3 மாதங்கள்தான் உயிரோடு இருக்க முடியும் என்று மருத்துவர்கள் கெடு வைத்த பிறகும் அந்த மன உறுதியோடுதான் 1 ஆண்டு காலம் ஆயுளை நீடித்திருந்தார்.

“காலா உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன்” எனற பாரதியின் வரிகளைப் போல நெஞ்சுறுதியுடன் மரணத்தை எதிர் கொண்டார்.

அவரது வாழ்க்கை தோழர்களுக்கு சிறந்த முன்னுதாரணமான ஒன்று.

தோழர் சுப தங்கராசு, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர்

தோழர் சுப தங்கராசுதோழர் சீனிவாசன் ஒரு கம்யூனிஸ்ட் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தார். கம்யூனிஸ்ட் எளிமையாக வாழ வேண்டும் என்றால் அவர் எளிமையாக வாழ்ந்தார், ஒரு கம்யூனிஸ்ட் துணிச்சலாக செயல்பட வேண்டும் என்றால் அவர் துணிச்சலாக செயல்பட்டார். ஒரு கம்யூனிஸ்ட் பாசமாக இருக்க வேண்டும்; மக்களையும் தோழர்களையும் அமைப்பையும் மதிப்புடன் நடத்த வேண்டும் என்றால் அதைச் செயதார். கடினமான வேலைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கடினமான வேலைகளை ஏற்றுக் கொண்டார்.

கோட்பாட்டளவில் இவற்றை ஏற்றுக் கொள்வது எளிது. ஓரிரு ஆண்டுகள் செயல்படுவதும் எளிது. வாழ்நாள் முழுவதும் செயல்படுவது அரிது. அதை செய்து காட்டியவர் தோழர் சீனிவாசன்.

இன்று நமது போராட்டங்கள் லட்சக்கணக்கான மக்களை சென்றடைகின்றன. தோழர் சீனிவாசன் வேலை செய்ய ஆரம்பித்த காலங்களில் அமைப்பில் ஒரு சிலர்தான் இருந்தார்கள். ஒரு முறை பத்திரிகை விற்பனையில், எம்.ஜி.ஆரை கிண்டலாக சித்தரித்த அட்டைப் பட கார்ட்டூனுக்காக அதிமுக காரர்கள் தகராறு செய்து அவரை அடித்து சட்டையை கிழித்து விட்டனர். சட்டை இல்லாமலேயே பூந்தமல்லியிலிருந்து வீட்டுக்கு வந்தார்.

அவர் கனவு கண்ட லட்சியத்தை முடிக்க நாம் உறுதியேற்க வேண்டும். புரட்சியை சாதிக்கும் வரை அவரது பணியை தொடர வேண்டும்.

பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் அஜிதா

என்னை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்தவர்களில் முக்கியமானவர் தோழர் சீனிவாசன். கம்யூனிச அரசியலை ஆசான்களின் நூல்களிலிருந்து கற்றுக் கொண்டதை விட மூத்த தோழர்களிடமிருந்து நடைமுறையில் நிறைய கற்றுக் கொண்டேன்.

தோழர் அஜிதாவினோதகன் மருத்துவமனை போராட்டம், கோக்கோ கோலா போராட்டம், திருவையாறு தமிழிசை போராட்டம் என்று பல போராட்டங்களில் தோழரின் தலைமையில் கலந்து கொண்டிருக்கிறேன். போராட்டத்தை மகிழ்ச்சியுடன் எதிர் கொள்வது எப்படி என்று அவரைப் பார்த்து கற்றுக் கொண்டேன். கடும் வெயிலில் வேலை செய்ய வேண்டியிருக்கும், நீண்ட தூரம் நடந்து போக வேண்டியிருக்கும். அவற்றை எல்லாம் மன உறுதியுடன் சமாளிப்பது எப்படி என்பதை தோழர் சீனிவாசனிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

தனது ஒரு செயல் மூலம் போராட்டத்தின் மொத்த சூழலையே மாற்றி விடுவார். அவரது அணுகுமுறைக்கு ஒரு எடுத்துக் காட்டு:

திருவையாறு தமிழிசை போராட்டத்தில் தோழர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழிசைக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினோம். அனைவரையும் பிடித்து, ஆண் தோழர்களை ஆடைகளை களையச் செய்து ஜட்டியோடு நிற்க வைத்து அடித்தது போலீஸ். தோழர்கள் போலீஸ் அடிக்கும் போது அவர்களுடன் வாக்குவாதம் புரிந்தார் தோழர் சீனிவாசன்.

பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகளும் Q பிரிவு அதிகாரிகளும் வந்து டிரெஸ் போட்டுக் கொள்ளும்படி சொன்னார்கள். அந்த சூழ்நிலையிலும் போராட்டத்தை விட்டுக் கொடுக்கவில்லை தோழர் சீனிவாசன். “நீதானே கழட்டினாய், நீயே எடுத்துக் கொடு” என்று கடைசி வரை தனது வேட்டியை எடுத்துக் கொள்ளவேவில்லை.

தோழர் சீனிவாசனிடம் பேசுவதற்கு தயக்கமே இருந்ததில்லை. மனப்பூர்வமாக சொல்வதை எல்லாம் கேட்டுக் கொள்வார். அவரை விமர்சனம் செய்தாலும் ஏற்றுக் கொள்வார்.

அவர் நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் அவரை பார்க்க மருத்துவமனைக்கு போயிருந்தோம். ஒரு கம்பீரமான தோழர் நோயால் மெலிந்து தளர்ந்திருப்பதை பார்த்து கண் கலங்கினேன். அப்போது, “ஏன் அழுறீங்க, நான் கம்யூனிஸ்டா வாழ்ந்தேன், கம்யூனிஸ்டா சாகப்போறேன். அதை நினைச்சு சந்தோஷப்படுங்க” என்று சொன்னார்.

இந்த நேரத்தில் தோழரின் வாரிசுகளாக அவரது பணியை முன்னெடுத்துச் செல்வோம் என்று உறுதி ஏற்கிறேன்.

தோழர் பார்த்தசாரதி, மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

பொதுவாக ஒரு துறையில் முன்னோடியாக, அந்த துறையில் முன்னர் பணியாற்றியவர்களைப் பற்றிச் சொல்வது வழக்கம். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் போராட்டங்களுக்கு முன் உதாரணமாக சொல்வது தோழர் சீனிவாசனைத்தான். அவரை சந்திப்பதற்கு முன்பே அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன்.

தோழர் பார்த்தசாரதிசங்கராச்சாரி கைதின் போது இந்து முன்னணி காலிகளோடு மோதல் ஏற்பட்டது. அப்போது வழக்கறிஞர்களை திரட்டி அவர்களை எதிர் கொண்டார்.

ஒரு முறை ஒரு பிரச்சனைக்காக இரவு 1 மணி வரை போலீஸ் ஸ்டேஷனில் காத்திருந்து விட்டு 1.30 மணிக்கு அவரது வீட்டுக்கு போனோம். நானும் அங்கேயே தூங்கி விட்டேன். காலையில் எழுந்து பார்த்தால் தோழரை காணவில்லை. “அவர் அதிகாலை 4 மணிக்கே எழுந்து வேறு வேலையாக போய் விட்டார்” என்றார்கள்.

“நாம் மற்ற வேலைகளை எல்லாம் விட்டு விட்டு நள்ளிரவு வரை போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறோம்” என்று ஒரு மிதப்பு என்னிடம் இருந்தது. ஆனால், தோழர் சீனிவாசன் அதை ஒரு கடமையாக எடுத்துக் கொண்டு அடுத்த நாள் அடுத்த வேலையை செய்ய புறப்பட்டு விட்டிருந்தார். அது எனக்கு நிறைய கற்பித்தது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதற்கு அவர்களின் வலிகளை உணர வேண்டும். சட்டக் கல்லூரியில் தேவர் சாதி – தாழ்த்தப்பட்ட சாதி மோதல் நடந்த போது, புதிய ஜனநாயகம் அட்டையில் ஆதிக்க சாதி வெறிக்குப் பதிலடி என்று ஒரு மாணவன் அடிப்பதை போட்டிருந்தார்கள். இதை எப்படி மாணவர்களிடையே கொண்டு போவது என்று நாங்கள் தயங்கினோம். தோழர் சீனிவாசன், “ஆமா அப்படித்தான் அடிப்போம். எங்களை ஒடுக்குபவர்களை அப்படித்தான் அடிப்போம்” என்று பேசச் சொன்னார்.

அதே வழியில் இன்று ராமதாசை குண்டர் சட்டத்தில் போடுவதைத் தவிர வேறு என்ன செய்யச் சொல்றீங்க என்று கேட்கும் அரசியலை அது எங்களுக்கு கற்றுத் தந்தது.

அவர் நாம் பேசுவதை கவனமாக கேட்டுக் கொள்வார். விமர்சனங்களை ஏற்றுக் கொள்வார். எனது திருமணம் புரட்சிகர திருமணம் என்று அறிந்தவுடன் அது தனது சொந்த வேலை போல ஈடுபாடு காட்டினார். உடல் நிலை சரியில்லாமல் இருந்த போதும், “ஒரு கார் மட்டும் அனுப்பி விடு நான் வந்து விடுகிறேன்” என்று சொன்னார். திருமணம் முடிந்த பிறகு அவரை பார்க்க மனைவியுடன் போயிருந்த போது, மனைவியிடம், “திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அமைப்பை அணுகலாம். அமைப்பில் உள்ள தோழர்கள், வெளியில் உள்ளவர்கள் என்று பாரபட்சம் பார்க்க மாட்டோம். அதே போல தோழரின் அமைப்பு வேலைகளுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுபாஷ் ரெட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது “எல்லோரும் போலீஸ் வேனில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள், நீ என்ன செய்கிறாய், நீயும் போ” என்று தனது மகள் பொற்கொடியையும் கைதாக அனுப்பினார்.

அவரைப் பற்றி பேசுவதற்கு கூட நமக்கு தகுதி இருக்கிறதா என்ற தயக்கத்துடன்தான் பேசுகிறேன்.

தோழர் சீனிவாசனின் மகள் தோழர் பொற்கொடி, மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

தோழர் சீனிவாசன் என்னுடைய அப்பா, அவர் மாதத்தில் 10 நாட்கள்தான் வீட்டில் இருப்பார், 20 நாட்கள் வெளியில் போய் விடுவார். வீட்டில் இருக்கும் நாட்களில் ஜாலியாக இருப்பார், எங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார். இப்போதும் அவர் இறக்கவில்லை, எங்கோ வெளியூர் போயிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. அவரிடம் பேசுவதில் தயக்கமோ பயமோ எப்போதும் இருந்ததிலை. அவரை திட்டிக் கூட பேசலாம்.

தோழர் சீனிவாசன் குடும்பத்தினர்
தோழர் சீனிவாசன் குடும்பத்தினர்

தோழர் சீனிவாசனின் தந்தை தோழருக்கு 15 வயதாகும் போது இறந்து விட்டார். என் பாட்டி, தோழரின் தாய் 10, 8 வயது தம்பிகளுடன் எங்காவது போய் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சொன்னபோது, “நீங்க வேணும்னா போய் சாவுங்க, நான் வாழ வேண்டும்” என்று சொன்னார் என்று என் பாட்டி அடிக்கடி சொல்லுவார். 15 வயதில் வாழ்க்கையை எதிர் கொள்ள முன் வந்த அதே மன உறுதி 59-வது வயதில் நோயுடன் போராடும் போதும் அவரிடம் இருந்தது. மருத்துவர்கள் 6 மாதக் கெடு விதித்தார்கள். மருத்துவர்களுடனும் தோழர்களுடனும் கலந்தாலோசித்து கீமோதெரப்பி வேண்டாம் என்று முடிவு செய்தார். ஒரு ஆண்டு உயிர் வாழ்ந்தார்.

மருத்துவர் சிவராமன் ஒரு அறுவை சிகிச்சை செய்தால் நல்லது என்று சொன்ன போது, தோழர்களும் வற்புறுத்திய போது “அறுவை சிகிச்சை மூலம் நான் மீண்டும் பழையபடி செயல்பட முடியுமா? குடும்பத்தின் பண நிலவரம் எனக்குத் தெரியும். ம.க.இ.க.வின் பொருளாளர் என்ற வகையில் அமைப்பின் பொருளாதார நிலையும் எனக்குத் தெரியும். பணத்தை விரயம் செய்ய வேண்டாம்” என்று எழுதிக் கொடுத்து விட்டார்.

2012-ம் ஆண்டு ஜனவரியில் மிட் இந்தியா மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்யா விட்டால் 3 நாட்களில் இறந்து விடுவீர்கள் என்று கெடு விதித்ததும் குடும்பத்தினர், தோழர்கள் யாரிடமும் கலந்தாலோசிக்காமலேயே டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லி விட்டார். செய்தித் தாள் படிப்பது, தொலைக்காட்சி செய்தி பார்ப்பது என்று அடுத்த 3 மாதங்களை செலவழித்தார்.

இளம் வயதில் உறுதியாக தைரியமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் வயதான காலத்திலும் அதே உறுதியை அவருக்கு கொடுத்தது அவர் சார்ந்திருந்த அரசியலும் அவர் இணைந்து பணியாற்றிய தோழர்களும்.

சுபாஷ் என் ரெட்டி என்ற நீதிபதி 24 கட்டளைகள் போட்டு வழக்கறிஞர்களை ஒடுக்க முயற்சித்தார். அதற்கு எதிரான போராட்டத்தின் போது அப்போதுதான் பி.எல். முடித்து என் அப்பாவுடன் நான் அங்கு வந்திருந்தேன். போலீஸ் வேனில் என்னையும் ஏறச் சொன்னார். அதன் பிறகு தோழர் சீனிவாசன் கொடுத்த பேட்டிதான் அந்த போராட்டத்தை பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது.

இந்த தருணத்தில் என் தாய் தோழர் பானுமதியையும் குறிப்பிட வேண்டும். தோழர் சீனிவாசனின் பணிகளுக்கு இடையூறு செய்யாமல் ஆதரவு அளித்தார். “வீட்டில் இருப்பது இல்லை, குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதில்லை” என்றுதான் புகார் செய்வார்.

தோழர் பொற்கொடிசேத்துப்பட்டு ரவுடி தங்கையாவை எதிர்த்து ம.க.இ.க. போராட்டம் நடத்திய போது ரவுடிகளின் ஆட்கள் வீட்டுக்கு வந்து வீட்டின் உரிமையாளரை மிரட்டினார்கள். அந்த அம்மா வந்து, “நீங்க இந்த ஏரியாவிலேயே இருக்காதீங்க” என்று அறிவுரை சொன்னதும், “உங்களுக்கு கஷ்டம் இல்லாம வீட்டை காலி பண்ணிர்றேன், ஆனா இந்த ஏரியாவில இருக்கணுமான்னு நான்தான் முடிவு செய்வேன்” என்று சொன்னார் தோழர் சீனிவாசன்.

இது போன்ற இடையூறுகளை தனது பணிக்கான வெகுமதியாக கருதினார் அவர். இவர்கள் செய்யும் இடையூறுகள்தான் நான் சரியான பணியை செய்து வருகிறேன் என்பதை நிரூபிக்கிறது என்று பெருமைப்படுவார்.

அவரை ம.க.இ.க.விலிருந்து பிரிக்க முடியாது. ஜனவரி 2012-ல் மிட் இந்தியா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்த பிறகு வீட்டையே ஐ.சி.யு வாக மாற்றினார்கள் தோழர்கள். மருத்துவர் சிவராமன் ராம்-சீத்தா என்ற மூலிகைக்கு குணப்படுத்தும் பண்பு இருக்கிறது என்று சொன்னதும் ஒரு சென்னை தோழர் எங்கிருந்தோ ராம்-சீத்தாவுடன் வந்தார்.

1992-ல் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டார். மின்வாரியத்தில் வேலை செய்து வந்தார். நான் 6-ம் வகுப்பு படித்து வந்தேன். எனது தம்பி 1-ம் வகுப்பு படித்து வந்தான். குடும்பத்தில் எல்லோரும் திட்டினார்கள். நானும் அவரிடம் கேட்டேன்.

“நான் வேலையை விட்டதால நீ படிக்காமலோ, சாப்பிடாமலோ இருக்கப் போறதில்லை. நான் இப்போ செய்தது சரிதான்னு உனக்கு இப்போ புரியாது. எதிர்காலத்தில் தெரியும் என்றார்”

அது சரி என்று நிரூபிக்கப்பட்டதற்கு அவர் எழுதிய ஒரு குறிப்பை வாசிக்கிறேன்:

கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராயப்பேட்டை மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சை பிரிவில் உள்ளேன். இன்னொரு படுக்கையில் முன்னாள் ஓய்வு பெற்ற கலெக்டர் ஒருவர் உள்ளார். அவரை பார்த்துக் கொள்ள யாரும் வரவில்லை. அவரை ஐசியு அழைத்து சென்று வருவதற்கு காசு கொடுத்து ஆள் கூப்பிட வேண்டியிருந்தது. அதிகாரத்தில் இருந்த போது தன்னைச் சூழ்ந்து நின்றவர்கள் இன்று இல்லாமல் போய் விட்டதை நினைத்து அவர் கண்ணீர் வடிக்கிறார்.

அதுதான் ஆளும் வர்க்க அதிகார அமைப்புக்கு வேலை செய்தவர்களின் நிலை.

கம்யூனிஸ்டாக வாழ்ந்த எனக்கு தோழர்கள் உறுதுணையாக உள்ளார்கள். உழைக்கும் மக்களுக்கு சேவை செய்தால் ஆடம்பரம் இல்லை, ஆனால் ஆதரவு உண்டு. ஆட்சி அதிகாரத்தில் கொடி கட்டிப் பறந்த கலெக்டர் என்ன நிலையில் இருக்கிறார். அரசு உத்தியோகத்தை உதறி எறிந்தது உன்னதமானது என்று முழுமையாக உணர்கிறேன்” என்று எழுதியிருக்கிறார்.

கடைசி நேரத்திலும் மகிழ்ச்சியாகவே இருந்தார். அவரது ஒரே கவலை, தான் உழைத்த சமூக மாற்றம், புரட்சி நிகழ்வதற்கு முன்பே இறக்கிறோமே, புரட்சிக்கான வேலைகளை செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும்தான் அவருக்கு இருந்தது.

புரட்சியை எப்படி நடத்துவது என்று அவர் கற்றுக் கொடுத்திருக்கிறார். தோழர் சீனிவாசனைப் போல தோழர்களின் துணையோடு அவர் பாதையில் தொடர்வதற்கு உறுதி ஏற்கிறேன்.

இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் உரையாற்றினார். கூட்டத்தின் தலைவர் வெங்கடேசன் நன்றியுரை ஆற்றிய பிறகு சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி முடிந்தது.

(தோழர் மருதையனின் உரையை தனிக் கட்டுரையாக விரைவில் வெளியிடுகிறோம்.)

– வினவு செய்தியாளர்

அக்னியில் பிறந்தவர்கள் வெயிலுக்கு பயப்படுவது ஏன் ?

43

கூடங்குளம் வழக்கு, மதுரை ரஜினி ரசிகர்களை தாக்கிய வழக்கு உட்பட பழைய வழக்குகளெல்லாம் தூசி தட்டப்பட்டு ராமதாஸ் மீது போடப்படுவது, விழுப்புரம் நீதிமன்றம் வழங்கிய பிணையை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றம் சென்றது குறித்தெல்லம் பலருக்கும் பல கேள்விகள் இருக்கின்றன. பாமக கும்பல் கூடிய சீக்கிரத்தில் வெளியே வரக்கூடாது என்று ஜெயலலிதா இவ்வளவு தீவிரமாக இருப்பதற்கு காரணம் என்ன?

மாமல்லபுரம் வன்னியர் சங்க கூட்டத்தில் நடந்த நாடகமொன்றில் ஜெயா, சசிகலா வேடமிட்டவர்கள் பேசிய பேச்சுதான் ஜெயாவின் கோபத்திற்கு முக்கிய காரணம் என்று சில ஊடகங்கள் எழுதுகின்றன. அப்படி கோபப்படும்படி அந்த நாடகத்தில் ஏதுமில்லை என்பதே உண்மை. அரசியலிலும், அறிக்கையிலும் கூட ஜெயலலிதாவை நேரடியாக கண்டிக்க முடியாதவர்கள் நாடகத்தில் மட்டும் விசுவரூபமெடுப்பார்களா என்ன? எனில் வேறு என்ன காரணம்?

ஜெயலலிதாவின் ஈகோவை யாராவது சீண்டிவிட்டால் அவரது கோபத்தை யாரும் அது அவாளாகவோ இல்லை ‘ஆண்டவ’னாவாகவோ இருந்தால் கூட தடுக்க முடியாது. அதுவும் அவர் முதலமைச்சராக இருப்பதாலும், போலீஸ், நீதிமன்றம், அதிகார வர்க்கம் என்று பல்வேறு அதிகார அமைப்புகள் அவருக்கு சேவை செய்யக் காத்திருக்கும் போது அந்த கோபத்தின் அளவையும், வீச்சையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

2016-இல் ஆட்சியைப் பிடிப்போம், சின்னைய்யாதான் முதலமைச்சர் என்று பல்வேறு ‘அனாமதேயங்கள்’ மாமல்லபுரத்தில் முழங்கிய ஒன்று போதாதா, ஜெயாவின் ஈகோவை கிண்டி விட? சவால் விடும் அரசியல் ஆண்களை ஜெயலலிதாவுக்கு சுத்தமாக பிடிக்காது. அதுவும் போயஸ் தோட்டத்தில் ஐந்து, பத்து சீட்டுகளுக்காக தவம் கிடந்தவர்கள் வீரம் பேசினால் அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.

மேலும் ஒரு காரணமாக இருப்பதற்கு தகுதி இல்லாத ஒரு சிறு விசயம் கூட ஜெயாவின் நடவடிக்கைக்கு அடிப்படையாக இருக்கலாம். மாமல்லபுரத்தில் ஜெயாவாக நடித்தவர் அழகாக இல்லை என்ற ஒரு விசயம் கூட அம்மாவின் சீற்றத்தை தூண்டி விட போதும். எனவே இறைந்திருக்கும் இத்தகைய காரண முத்துக்களை நாம் என்னதான் கோர்த்துப் பார்த்தாலும் அது அவரது ஈகோவே சீண்டி விட்டதன் விளைவே என்பது மட்டும் உண்மை.

ராமதாஸ் அரசியல்
ராமதாஸ் எத்தனை ராமதாஸடி!

அதனால்தான் ஜெயலலிதா தனது நடவடிக்கை ஏற்படுத்தும் விளைவுகளைக் கூட கவலைப்படாமல் உறுதியாக இருக்கிறார். ராமதாஸ் விசயத்திலும் அதுவே உண்மை. கருணாநிதியாகி இருந்தால் இந்தப் பிரச்சினை பூசி மெழுகி நீர்த்துப் போயிருக்கும். அதனால் ராமதாஸின் வெற்று சவுடால் நாடகத்தின் கிளைமேக்சாக கூட வரும். ஆனால் இங்கே அந்த வாய்ப்பு ராமதாஸுக்கு இல்லை.

ஆட்சியைப் பிடிப்போம் என்று சபதம் விட்டு சவுண்டு விட்டவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருந்தால் ஒளிரும் விளக்குகளுக்கு விரைவிலேயே ஃபீஸ் போய்விடும் என்பது ஜெயாவுக்கு மட்டுமல்ல, பலருக்கும் தெரிந்த உண்மைதான்.

ஏற்கனவே வினவு கட்டுரையில் சொன்னது போல இந்த பிரச்சினையில் ராமதாஸின் மீது வன்கொடுமை, இதர கடுமையான பிரிவுகளில் வழக்குப் போடாமல் சாதாரணமான போண்டா பிரிவுகளிலேயே வழக்கு போடப்பட்டுள்ளதால் இது ஜெயாவின் நாடகம் என்பதுதான் உண்மை. அதாவது ராமதாஸை வழிக்கு கொண்டு வரவேண்டும் என்பதைத் தாண்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்மம் கக்கிய அவரை தண்டிக்க வேண்டுமென்பதல்ல. அதனால் இது ஒரு வகை அரசியலற்ற பழிவாங்கல்தான்.

நடவடிக்கையில் அரசியல் இல்லை என்பதால் விளைவுகளிலும் இல்லை என்பதல்ல. தற்போது வடதமிழக தலித் வாக்குகள் அனைத்தும் அதிமுகவிற்குத்தான் என்பது ராமதாஸ் கைதினால் விளைந்த உடனடிப் பயன் எனலாம். எனவே விடுதலைச் சிறுத்தைகள் கூட இந்த விளைவை புரிந்து கொண்டால்தான் அடுத்த தேர்தலில் ஏதோ கொஞ்சம் பிழைப்பைப் பார்க்கலாம். இல்லையெனில் அவர்களுக்கு எதுவும் தேறாது.

பொதுவான நடுத்தர வர்க்கம், மற்ற சாதி மக்களைப் பொறுத்த வரை ராமதாஸ் கைதை வரவேற்கவே செய்கிறார்கள். பேருந்துகளை தொடர்ந்து தாக்கிய பாமகவின் அடாவடியை அவர்கள் விரும்பவில்லை. வன்னியர்களைப் பொறுத்தவரையிலும் கூட ராமதாஸ் கைது எந்த வகையான அணிதிரட்சியையும் ஏற்படுத்தவில்லை, முடியாது. பாமகவிற்கு இதற்கு முன்பும் சரி, இனிமேலும் சரி வன்னியர்களின் மொத்த ஒட்டு மட்டுமல்ல, பத்து சதவீத வாக்குகள் கூட கிடைப்பது கடினம்.

பாமகவின் பிழைப்பு வாத அரசியல், கூட்டணி மாறும் பச்சோந்தித்தனம், ராமதாஸின் குடும்ப அரசியல், என்று வன்னியர்கள் கடந்த காலத்திலேயே பாமகவிலிருந்து பிரித்து விட்டார்கள். இருப்பவர்களும் கட்டைப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டெட், சுயநிதிக் கல்லூரி, வட்டித் தொழில் என்று கட்சி அடையாளத்தை வைத்து தொழில் செய்பவர்கள்தான். இவர்களது காசில்தான் மாமல்லபுரத்திற்கு கூட்டம் கூட்டிவரப்பட்டது. ஆகவே ஜெயாவின் நடவடிக்கையால் வன்னியர்கள் அணிதிரண்டு ராமதாஸின் பின்னால் செல்வார்கள் என்பது கனவிலும் சாத்தியமில்லை. அதனால் ஜெயாவுக்கும், அதிமுகவிற்கும் வன்னியர் வாக்குகள் கிடைக்காது என்று யாரும் கூறமுடியாது. இது ஜெயாவுக்கும் தெரியுமென்பதால்தான் அவர் ராமதாஸை சிறையில் முடக்க நினைக்கிறார்.

எனவேதான் இந்த கைது நடவடிக்கைகளால் மொத்த பாமக கும்பலும் மிரண்டு போய் இருக்கிறது. 90-களில் ராமதாஸின் சிறை வாசத்தில் இருந்து விடுதலை கோரி மனைவி சரஸ்வதி மனமுருகி, முழு அடிமைத்தனத்தோடு ஜெயாவுக்கு எழுதிய கடிதத்தை அம்மா அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார். ஆக பாமக இன்று என்றில்லை அன்றிலிருந்தே முழு கோழைத்தனத்தில் குடியிருந்த ஒரு பிழைப்புவாத கும்பல்தான். ராமதாஸ் மட்டுமல்ல, ஆதிக்க சாதிவெறியால் ஆதாயம் அடைய நினைக்கும் பல்வேறு சாதி சங்கங்களின் கதியும் இதுதான். அந்த வகையில் தமிழகத்தின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் இத்தகைய சாதிவெறியர்களுக்கு பெரிய அங்கீகாரம் கொடுத்ததில்லை.

மேட்டுக்குடி அன்புமணி
சிறைக்கு செல்லும் போதும் உதவியாளர் தேவைப்படும் ‘சின்னய்ய்யா’ !

மாமல்லபுரம் கூட்டத்தில் பேசிய காடுவெட்டி குரு, “நாங்கள் அக்னியில் பிறந்தவர்கள், யாராவது மறுக்க முடியுமா?” என்று சவால் விட்டு பேசினார். இறுதியில் இதை யார் மறுத்தார்கள்? அவர்களே மறுத்துக் கொண்டார்கள். திருச்சி எனும் கந்தக பூமியில் போட்டு உச்சி வெயிலில் வாட்டி எடுக்கிறார்கள் என்று பிலாக்கணம் வைத்து அழுவது யார்? நாமா இல்லை அவர்களா?

ராமதாஸ் கைது குறித்த பத்திரிகைச் செய்திகளைப் படித்தாலே பாமகவின் யோக்கியதையைப் புரிந்து கொள்ளலாம். ராமதாஸ் கைது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த சின்னைய்யா ரொம்ப பணிவாகத்தான் அதாவது அம்மாவை சீண்டாமல் வி.சி கட்சியை திட்டித்தான் பேசினார். ஆனால் அம்மா மாமல்லபுரத்தில் சின்னதின் வீர முழக்கத்தை பார்த்திருப்பார் போல, தூக்கு சின்னைய்யாவை என்றிருக்கிறார். இதுவரை சிறை என்றால் என்ன என்று கூட தெரியாத ஒரு மேட்டுக்குடி நபர் முதன்முறையாக புழலுக்கு சென்றிருக்கிறார்.

அதுவும் இரண்டு சூட்கேசில் துணிமணிகள், இரண்டு பைகளில் பழங்கள், பிஸ்கெட்டு மற்றும் ஒரு உதவியாளருடன் கைதாகியிருக்கிறார் சின்னைய்யா. உலகிலேயே உதவியாளருடன் கைது செய்யப்பட்ட முதல் தமிழக அரசியல்வாதி அன்புமணியாகத்தான் இருக்கும். அன்புமணியின் காங்கிரசு மாமனார் கிருஷ்ணசாமியை சிறையில் அனுமதிக்கவில்லை என்று மக்கள் டி.வி சோக கீதம் வாசித்தது. இப்படி ராஜ உபசாரத்துடன்தான் சிறைவாசம் செல்ல முடியும் எனும் போது இவர்களை எந்த முட்டாள் கொள்கை பூர்வமாக ஆதரிப்பான்?

விழுப்புரம் மண்டபத்தில் ராமதாஸ் இருக்கும் போது அவருக்கு தைலாபுரம் தோட்டத்தில் விளைந்த ஆர்கானிக் காய்கறியுடன் சாப்பாடு காரில் வந்ததாம். அவரும், தன்ராஜும் மண்டபத்தின் மணமகன் அறைக்கு சென்று பூட்டிக் கொண்டு சாப்பிட்டிருக்கின்றனர். ஏனைய தொண்டர்கள் வெளியே போலீஸ் கொடுத்த சாம்பார் சாதத்தோடு ஏப்பம் விட்டனர். தொண்டன் சாப்பிடும் உணவைக் கூட சாப்பிட முடியாத இவரெல்லாம் எப்படி மக்கள் தலைவராக இருக்க முடியும்? அதுவும் வீட்டுச் சாப்பாட்டை திருட்டுத்தனமாக சாப்பிடும் அளவுக்குத்தான் இங்கே வெளிப்படையான கொள்கை இருக்கிறது.

தலைவர் எவ்வழியோ அவ்வழிதான் தொண்டர்கள் என்பதால் விழுப்புரம் மண்டபத்தில் மதிய நேரவாக்கில் அனைவரும் ரிமாண்ட் செய்யப்படுவார்கள் என்ற செய்தி பரவியிருக்கிறது. ராமாதஸின் முகம் இருண்டுவிட்டது. தலைவர் முகம் இருண்டதின் காரணத்தை தொண்டர்கள் கேட்டறிய கிட்டத்தட்ட 400 தொண்டர்கள் சுவரேறிக் குதித்து ஓடிவிட்டார்கள். மீதி 300-த்தி சொச்சம்பேர்தான் தலைவருடன் சிறைக்குச் சென்றார்கள். ஆக சிறைவாசத்தை அனுபவிப்பதற்கு தலைவனும் தயாரில்லை, தொண்டனும் தயாரில்லை. உண்மையில் பாமகவில் தொண்டர்கள் யாருமில்லை என்பது வேறு விசயம்.

ஒரு அரசியல் போராட்டத்தில் கைது செய்யப்படுவதும், சிறை வைக்கப்படுவதும் சாதாரண நிகழ்வு என்றாலும் அதைக்கூட சந்திக்க வக்கில்லாத கும்பலாகத்தான் ராமதாஸ் கட்சி இருக்கிறது. அடுத்து தமிழகத்தின் கந்தக பூமியான திருச்சியில் கடும் வெயிலில் ராமதாஸை அடைத்திருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள். இது உண்மையில் திருச்சி மக்களையும், திருச்சி சிறையில் இருக்கும் மற்ற சிறையாளர்களையும் இழிவுபடுத்துவதாகும். மேலும் சிறையில் மின்விசிறியில்லை, மின்சாரமில்லை என்பதெல்லாம் ராமதாஸை துன்புறுத்தும் விசயம் என்று பாமகவின் இணைய அடிமைகள் பட்டியலிடுகிறார்கள்.

சொகுசு ராமதாஸ்
அன்று திருகுவலிக்காக கடிதம் எழுதிய சரஸ்வதி அம்மாள் இன்று என்ன எழுதுவார்?

ஆக இதிலிருந்து தெரிவது என்ன? தைலாபுரம் தோட்ட மாளிகையில் ஜெனரேட்டர், ஏசியோடு வாழ்ந்தவருக்கு திருச்சி சிறை சென்ற பிறகுதான் தமிழ்நாட்டில் மின்வெட்டு அமலில் இருப்பதும், அதனால் மக்கள் படும் துன்பமும் கொஞ்சமாக தெரிய வந்திருக்கிறது. அதைக்கூட தனது கஷ்டங்கள் வழியாகத்தான் புரிந்து கொள்கிறார் என்றால் இவர் எவ்வ்வளவு பெரிய தியாகி?

விழுப்புரத்திலிருந்து மற்ற ‘தொண்டர்களெல்லாம்’ குலுக்கல் அதிகமுள்ள டப்பா போலிஸ் வண்டிகளில் பயணிக்கும் போது ராமதாஸுக்கு மட்டும் முதுகுவலி காரணமாக நீதிபதி அம்மா அவர்கள் சொந்தக் காரில் போக அனுமதித்தார்கள். தைலாபுரத்திலிருந்து வந்த அந்த சொந்த கார் எது தெரியுமா? பென்ஸ் கார். பென்ஸ் காரின் குறைந்த பட்ச விலை என்ன என்பது ஏழை வன்னியர்களுக்கு மட்டுமல்ல, நடுத்தர வர்க்க வன்னியர்களுக்கு கூட தெரியாது.

ஆனால் பல இலட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரிலிருந்து இன்ன பிற சொத்து பத்துக்களெல்லாம் ராமதாஸ் ஐயா எப்படி ‘சம்பாதித்தார்’ என்பது நமக்கு தெரிகிறதோ இல்லையோ வன்னிய மக்கள் அனைவருக்கும் தெரியும்.

சிறையில் வெஸ்டர்ன் டாய்லட் இல்லை என்பதால் இந்தியன் டாய்லட்டில் போகமாட்டேன் என்று தமிழர் ராமதாஸ் மறுத்த உடனேயே சிறை அதிகாரிகள் அதிகாலையிலேயே பஜாருக்குச் சென்று பூட்டிய கடையை திறக்க வைத்து மொபைல் டாய்லெட்டெல்லாம் வாங்கி வந்திருக்கிறார்கள். அவருக்கு பிடிக்கும் விதமாக சப்பாத்தி, இட்லி என்று நன்றாகவே கவனிக்கிறார்கள். திருக்கழுங்குன்றம் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் செல்ல முடியாது என்று அறிவித்த உடனேயே நீதிபதியே அங்கிருந்து திருச்சி சென்று வழக்கை பதிவு செய்து ரிமாண்ட் செய்திருக்கிறார். இப்படி ஒரு கைதி இருக்கும் சிறைக்கு எந்த வெளியூரிலிருந்து நீதிபதி வந்து வேலை செய்வார்? தற்போது ராமதாஸுக்கு முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆக இவையெல்லாம் கூறுவது என்ன? ஒரு பத்து நாள் சிறையில் அடைத்தாலே போதும், பாமகவின் அலட்டல் முடிவுக்கு வரும். இதனால்தான் அம்மாவின் கைது நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாமல் பாமக அழுது புலம்புகிறது. சிறைக்குள்ளே மட்டுமல்ல சிறைக்கு வெளியேயும் அவர்கள் போராட பயப்படுகிறார்கள்.

பேருந்துகளை அடிப்பது என்பது ஓரிருவர் செய்யும் இரவுப்பணி என்பதால் ஆரம்பத்தில் அதிகம் செய்தனர். தற்போது அவர்களையும் தேடிப்பிடித்து போலிஸ் கைது செய்து சிறையில் அடைப்பதால் அந்த ஒளிந்து செய்யும் வீரம் குறைந்திருக்கிறது. மட்டுமல்ல ஆரம்பம் முதலே இந்த வன்முறைகளெல்லாம் நாங்கள் செய்யவில்லை என்று பாமகவின் தலை முதல் வால் வரை மக்கள் தொலைக்காட்சியில் அழாத குறையாக சத்தியம் செய்கிறார்கள். தற்போது விடுதலைச் சிறுத்தைகள்தான் பேருந்துகளை அடித்து எரித்தார்கள் என்று கரடியாக கத்தி வருகிறார்கள்.

இதைத் தவிர்த்த அறப்போராட்டங்களின் கதி என்ன? கைது என்பதால் யாரும் வர மறுக்கிறார்கள். பல மாவட்டங்களில் ஆஃப்ட்டரால் உண்ணாவிரதத்திற்கு கூட ஆளில்லை. உண்ணாவிரதம் நடக்கும் அன்று காலையில் போலீஸ்தான் பெரும் எண்ணிக்கையில் காவல் காக்கிறதே அன்றி பல இடங்களில் ஒரு காக்காய் கூட வரவில்லை. சில இடங்களில் மாவட்டச் செயலாளர் மட்டும் உண்ணாவிரதம் இருந்து கைதாகியிருக்கிறார். இறுதியில் வீடுகளில் கருப்புக் கொடியாவது ஏற்றுங்கள் என்றார்கள். அப்படிக் கருப்புக் கொடி ஏற்றியவர்கள், பிளக்ஸ் பேனர் வைத்தவர்கள் கூட கைது செய்யப்படும் அபாயம் இருப்பதால் தற்போது அதற்கும் யாரும் தயாரில்லை. பிளக்ஸ் பேனர் வைத்து வன்னிய வீரம் முழங்கியவர்களெல்லாம் அதை இரவோடு இரவாக கழட்டி அடையாளம் தெரியாமல் எரித்திருக்கிறார்கள்.

இப்படியாக பாமக எனும் கோமாளிக் கூட்டத்தின் பாசிசக் கனவு காமடி அவலத்தில் முடிந்திருக்கிறது.

இந்நிலையில் நாம் ஜெயா அரசின் கைது நடவடிக்கைகள் ஒரு பழிவாங்கல் நாடகம் என்பதை அம்பலப்படுத்துவதோடு பிசிஆர் சட்டப்படி பாமக, வன்னியர் சங்கம், இன்ன பிற ஆதிக்க சாதி வெறி சங்க தலைவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கும் படி போராட வேண்டும். பொதுவான அரசியல் கட்சிகள், தமிழினவாத இயக்கங்கள் எல்லாம் ராமதாஸை விடுதலை செய்யும்படி கோருகின்றனவே அன்றி ஆதிக்க சாதிவெறிக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரவில்லை. இது ஒரு வகையில் தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியிடம் மண்டியிடும் போக்கே அன்றி வேறல்ல. ஆனால் ஆதிக்க சாதிவெறி என்பது எல்லா வகை சாதி மக்களுக்கும் எதிரானது என்பதே உண்மை.

உழைக்கும் வன்னிய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பாமக மற்றும் வன்னியர் சாதி சங்க கும்பல்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்ற வேண்டும். சாதிவெறியை தூண்டி விட்டு இவர்கள் செய்யும் பிழைப்புவாத அரசியல் தலித் மக்களுக்கு மட்டுமல்ல, வன்னிய மக்களுக்கும் சேர்த்தே தீங்கிழைக்கிறது. ஆதலால் பிறப்பினால் வன்னியராக உள்ள நண்பர்கள் பொதுவெளியில் ராமதாஸைக் கண்டிப்பதற்கு முன் வரவேண்டும்.

பல்வேறு சமூக, அரசியல், பொருளாதார பிரச்சினைகளுக்கு போராட வேண்டிய நேரத்தில் நமது ஆற்றலெல்லாம் இத்தகைய சாதிவெறியர்களை அம்பலப்படுத்துவதற்கு சென்று விடுகிறது. ஆகவே சாதி அரசியல் நம்மை மேலும் புதைகுழிக்குள் கொண்டு விடும் என்ற உண்மையை புரிந்து கொள்வதோடு அதை நிறுத்துவதற்கும் நாம் பாடுபட முன்வரவேண்டும்.

கருப்பாயி !

20

நான் கண்ட பெண்களில் மிகவும் அழகானவள் இந்த ஆயி. பார்த்த உடன் பிடித்துப் போகுமளவு இலட்சணமாக இருப்பாள்.

பெண்

உழைத்துப் பிழைக்கும் ஒரு சிறு விவசாயி குடும்பத்தில் பிறந்தவள் இந்த ஆயி. (எங்க ஊரில் பெண் பிள்ளையை ஆயி என்று செல்லமாக அழைப்பார்கள்). ஆயியை சின்ன வயதிலிருந்தே எனக்கு தெரியும். மிகவும் கொழு கொழு குழந்தையாக, துறு துறுவென்று இருப்பாள். கருப்பா இருந்தாலும் களையாக இருக்கிறாள் என்று கிராமத்தில் ஆயியை தூக்கி கொஞ்சாதவர்கள் கிடையாது. ஆயியை கடந்து செல்லும் யாருக்கும், ஒரு நிமிசமாவது எடுத்து அணைக்கத் தூண்டும் வசீகரம் அவளிடம் இருக்கும்.

அவள் பழகுவதற்கு மிகவும் எளிமையானவள். ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு தட்டாமல் செய்வாள். அக்கம் பக்கத்து குழந்தைகளை பெற்றோர் இல்லாத நேரத்தில் மணிக்கணக்கில் பார்த்துக் கொள்வாள். தெருவோரத்தில் இருக்கும் வயதான பாட்டிக்கு குளிக்க கொள்ள தண்ணி எடுத்து கொடுப்பாள். தன் கூட பழகும் தோழிகளுக்கு கஷ்டம் என்றால் தான் வைத்திருக்கும் நகையை அம்மாவுக்குத் தெரியாமல் அடகு வைக்க கொடுப்பாள். தெருவில் நடமாடும் குழந்தைகளோ, பெரியவர்களோ பசியோடு இருக்கிறார்கள் என்று தெரிந்தால் சாப்பாடு போடாமல் விடமாட்டாள்.

ஒரு கிராமத்துப் பெண் என்ற முறையில் இந்த பண்புகளை எல்லாம் அங்கே பல பெண்களிடம் பார்க்கலாம் என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லுமளவு ஆயியிடம் இந்த நேசம் அழகாக குடி கொண்டிருந்தது.

இருந்தாலும் இவையெல்லாம் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். தான் கருப்பாக இருக்கிறோம் என்ற உண்மை அவ்வப்போது அவளை கொஞ்சம் கலங்கடிக்கும். இல்லை அவளது ஆழ்மனதில் அது மாறாத வடுவாக இருக்கிறது என்றும் சொல்லலாம். அதுவும் மிகவும் சிறிய வயதிலேயே இந்தக் கவலை அவளிடம் இருந்தது.

இனி அவளது கதையை பேச்சு மொழியிலேயே சொல்கிறேன். அதுதான் எனக்கு இயல்பாக வரும்.

அவள் வீட்டருகில் மனிதர்கள் குளிக்காத, ஆட்டு, மாட்டுக்கு பயன்படுத்துற ஒரு குளம் இருந்துச்சு. அஞ்சு வயசுல எந்த நேரம் பார்த்தாலும் அந்த கொளத்துல தான் குளிச்சுகிட்டே இருப்பா. பார்க்கறவங்க எல்லாரும் அழச்சுட்டு வந்து வீட்டில விட்டு திட்டுவாங்க. தவறி விழுந்தா என்னாவது, பாத்துக்கங்க என்பார்கள். அவங்க விட்டுட்டு போன மறு நிமிசமே சோப்பையும், லோட்டாவையும் (சொம்பு) தூக்கிட்டு ஓடிருவா.

“ஒரு நாளைக்கு எத்தன தடவடி குளிப்ப” என்றதற்க்கு, “நான் செவப்பாகர வர குளிப்பேன்” என்று அஞ்சு வயசுல அவள் சொன்னது இன்னும் என் காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு. இப்போது அவ வளந்து பெரியவளாயி கல்யாணமும் முடிஞ்சிருச்சு. இப்பயும் அப்படிதான் தன் கருப்பு கலருக்காக உள்ளுக்குள் வேதனையை வைச்சுக்கிட்டு வெளியில வேடிக்கையா பேசுவா.

திருமணத்துக்கு பிறகு ஊருக்கு வந்தவ என்னை பார்க்க வந்திருந்தாள். மத்தியான நேரம் இருக்கும். “என்ன செய்றக்கா” என்றபடி வந்தா. “வா, வா,” என்றபடியே, “பாப்பாவ குளிப்பாட்ட கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, பாசிப்பயறு, கடலப் பருப்பு, எல்லாத்தையும் சேத்து அரைச்சத சலிச்சுட்டு இருக்கேன்” என்றேன்.

“ஏன் ஒரு மாதிரியா இருக்க முகமெல்லாம் கருத்து போய் இருக்கு” என்றேன்.

“நீ வேற என் வேதனைய அதிகமாக்காத” என்றாள்.

“ஏன் என்ன ஆச்சு” என்றேன்.

“எங்கம்மா இப்படியெல்லாம் அரச்சு குளிப்பாட்டியிருந்தா நான் நல்ல கலரா வந்துருப்பேன்லே”அப்டின்னா.

“உனக்கு எப்பவும் விளயாட்டுதான். யாரு எப்படி கிண்டலடிச்சாலும் சிரிச்சுகிட்டே போற. எந்த நேரமும் உன் கலர பத்தி நீயே பேசி தானாகவே கிண்டலடிக்கிற. மத்தவங்க உண்னை கிண்டல் செஞ்சாலும அத இருக்கிறத்தான சொல்றாங்கன்னு சகஜமாக எடுத்துட்டு போற, ஆனா உள்ளுக்குள்ள கவலையும் படற. நல்ல பொண்ணுடி நீ” என்றேன்.

முகம்

“யார் சொன்னா நான் கவலைப்படலேன்னு. அதெல்லாம் மறக்கற மாதிரியா சொல்றாங்க, நான் என்ன நினைப்பேன், எப்படி வலிக்கும் என்பதெல்லாம் அவங்களுக்கு முக்கியமில்லை. நா சின்னப் புள்ளையா இருந்தப்ப கிண்டல் செய்யறதா நெனைச்சு சொன்னாங்க. நீ இந்த அளவு கருப்பா இருந்தா எவன்டி ஒன்ன கட்டிக்குவான்னு, இன்னைக்கு வரையும் சொல்லிட்டுதான் இருக்காங்க. கிண்டல் பண்றதா நெனச்சு மனசுல ஆணி தச்சா மாதிரி சொல்றாங்க. என்னோட கலர நெனச்சு வருத்தபடாத நாளே கெடையாது. கருப்பா இருப்பவங்க வாழவே தகுதி இல்லங்கர அளவுக்கு மனுசங்க படுத்தி வக்கிறாங்க.

கருப்பா இருக்குறேன்னு கவலப்படாத, அப்படின்னு ஆறுதல் சொல்றது போல என் கலர ஞாபகப்படுத்தி கிட்டேதான் இருப்பாங்க.

கருப்பா இருந்தாலும் களையா இருக்கா, கருப்பா இருந்தாலும் காலேஜ்ஜெல்லாம் படிச்சுல்ல இருக்கா, நீ கருப்பா இருந்தாலும் உன் வீட்டுக்காரரு நல்ல சிகப்பா இருக்காரு, பிள்ள ஒன்னப் போல கருப்பா பெத்துக்காம உன் வீட்டுக்காரர் போல செகப்பா பெத்துக்க.

இப்படி யார் எது சொன்னாலும் என் கலரோட சேத்துதான் சொல்றாங்க. என் வாழ்நாள் பூராவும் கலரப்பத்தி கவலப்பட வைச்சுகிட்டேதா இருப்பாங்க” என்றாள்.

“தெனதெனம் இத சந்திச்சுகிட்டுதானே இருக்கேன். நாந்தா உங்கிட்ட சொல்லியிருக்கேனே யாரெல்லாம் எப்படியெல்லாம் சொன்னாங்கன்னு” என்றாள்.

 

மா, ஆயி அப்பப்ப என்கிட்ட சொல்லியவற்றில் சிலதைத்தான் உங்ககிட்ட சொல்றேன். இனி வருவது ஆயி நேரடியாக பேசியவை:

“பள்ளியில் என் பேருல ஒரு பொண்ணு இருந்துச்சு. அந்த பொண்ணு செவப்பா இருக்கும். கூட படிக்குற பிள்ளைங்க, என் பேரோட சேத்து கருப்பையும், அவ பேரோட சேத்து சிவப்பையும் சொல்லுவாங்க, வாத்தியாரு மொதக் கொண்டு என்ன கருப்பாயின்னுதான் கூப்பிடுவாறு. ஏன்னு கேட்டா ” நீ நம்ம சாதிடி, எனக்கில்லாத உரிமையான்னு” சொல்லுவாறு.

“ஒருத்தர் கேட்டாரு நீ யாரோட பொண்ணு, உங்க அப்பா பேரு என்னா. நானும் சொன்னேன். அப்படியா நம்பவே முடியல, பறத்தெருல கொண்டு விட்டா நீ எங்க பிள்ளன்னு சத்தியம் செஞ்சுதான் அழச்சுட்டு வரணும் அப்டின்னாரு”. (கருப்புங்கரது கலரைத் தாண்டி தாழ்த்தப்பட்ட சாதியாவும் பாக்கப்படுது.)

”நானும் என் கூட்டாளியும் கல்லூரிக்கு போயிட்டு இருந்தோம். என் கூட்டாளி நல்ல சிகப்பா இருப்பா. நாலு பசங்க ஒக்காந்து அரட்டையடிச்சுட்டு இருந்தாங்க. நாங்க அவங்களை கடந்து போய்ட்டோம். உஸ்…. உஸ்…-இன்னு சத்தம் கொடுத்தானுங்க திரும்பி பாத்தேன். சைகையிலேயே உன்ன இல்லா அந்த பெண்ண கூப்பிடுன்னான். எனக்கு அவனுங்க அப்படி பெண்கள அசிங்க படுத்துறானுங்களேங்கர கோபம் வராம, கருப்புங்கரதால நம்மள வேண்டான்னுட்டு அவள கூப்பிட சொல்றானேன்னு கோபமும் சிரிப்பும் வந்தது”.

“பள்ளிக்கு, கல்லூரிக்கு போகும் போது எங்க மாமா வீட்ட கடந்துதான் போவேன். என்ன பாத்து, மாமா அவங்க பிள்ளைககிட்ட பூச்சாண்டி வருது பாரு என்பாரு. என்ன எங்க பாத்தாலும் மாமா பசங்க பூச்சாண்டின்னுதான் கூப்பிடுங்க. என் பேர் அவங்களுக்குத் தெரியாது. என் கல்யாணத்துக்கு வந்தப்ப கூட பூச்சாண்டி கல்யாணத்துக்கு நானும் வருவேன்னு அடம் பிடிச்சு வந்ததா சொல்லி எங்கிட்ட சந்தோச பட்டுக்குறாங்க.”

“ஒரு உறவினர் அவங்ளோட நாலு வயசு பையனையும் கூட்டிட்டு வீட்டுக்கு வந்திருந்தாங்க. முதலில் ஒதுங்கியே இருந்த அந்த பையன் பிறகு என் கூட விளையாடினான். வீட்டுக்கு போகும் போது அந்த அக்காவுக்கு முத்தம் கொடுத்துட்டு வா போவோம் என்றார்கள். நான் அந்த அக்காவுக்கு முத்தம் கொடுக்க மாட்டேன் அந்த அக்கா கருப்பா அசிங்கமா இருக்காங்க என்றான். மற்றவர்கள் கொல்லுன்னு சிரிச்சாங்க. நானும் சிரிச்சேன். ஆன என் கண்ணுல கண்ணீர் வந்ததை யாரும் பாக்கல.”

“ஒரு நாள் சுடிதார் எடுத்துட்டு வந்தேன். எங்க அம்மா சொல்லுது இது என்ன ஓங்கலருலேயே எடுத்துருக்க வேற கலரே கெடைக்கலயா”

முகம்

“வீட்டுல எல்லாரும் சாப்பிட்டுகிட்டு இருந்தோம். என் கல்யாண பேச்சு பத்தி பேசுணாங்க. ரெண்டு மூணு எடத்துல கேக்குறாங்க, நமக்கு சரிப்பட்டு வர்ற மாதிரியான எடத்துல குடுப்போம் அப்படின்னாங்க அம்மா. சாப்பிட்டுட்டு இருந்த அண்ணனுக்கு என்ன தோணுச்சோ. செவப்பா வர்றதுக்குன்னே என்னென்னமோ விக்கிறாய்ங்களே எதையாவது வாங்கி தடவி செவப்பா மாறு என்றான். சொன்னதோடு மட்டும் இல்லாம ஊட்டியிலேருந்து ஏதோ எண்ணையை வரவழச்சும் கொடுத்தான்.”

“நான் ஒருத்தர காதலிக்கிறேன்னு வீட்டுல சொன்னே. முதலில் மற்றவர்களை போலத்தான் ஒத்துக்கல. பிறகு அந்த பையன பாக்கணும்ன்னு சொன்னாங்க. பாத்துட்டு வந்து என் அக்கா சொன்னா அந்த பையன் செவப்பா அழகா இருக்கான். நீ கருப்பா அசிங்கமா இருக்க, இதல்லாம் நடக்காது. எங்களுக்கு நம்பிக்கை இல்ல. அவங்க வீட்டுலயும் ஒத்துக்க மாட்டாங்க. அவ்வளவு செவப்பா இருக்குற பையனுக்கு எப்படி ஒன்ன கட்டுவாங்க.”

“மாப்பிள்ள வீட்டுலேருந்து பொண்ணு பாக்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. வீடு கலகலப்பா இருந்துச்சு. என் தோழி ஒருத்தி வந்திருந்தா. என்னை கேலி செய்தா. தனுஷின் படிக்காதவன் படத்துல வர்ர ஆர்த்தியை பெண் பார்க்கும் சீனை வைத்து என்ன ஆர்த்தி கேரக்டரில் பொருத்தி நையாண்டி செய்தாள். (நான் சிரிச்சு சிரிச்சு பேசிட்டே இருப்பனா, அம்மாவும், அப்பாவும் ரசிச்சு ரசிச்சு கேட்டுட்டே இருப்பாங்க) இதை சொல்லிட்டு அவ விழுந்து விழுந்து சிரிச்சா. நானும் சிரிச்சுக்கிட்டே யோசிச்சேன். இந்த காமெடியில கருப்புங்குறது அசிங்கம்ணு எவ்வளவு கேவலமா சொல்லி இருக்காணுங்க.”

“கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு வந்திருந்த சொந்தக்காரங்க எல்லாருமே, மாப்பிள்ள இவ்வளவு அழகா கலரா இருக்காரே பொண்ணு இப்படி கருப்பா இருக்கே எப்படி இந்த கல்யாணம் நடக்குது. வரதட்சண எதுவும் நெறைய செஞ்சாங்களா. இல்ல மாப்பிளய கட்டாய படுத்துனாய்ங்களான்னு பொலம்பி தீத்துட்டாங்க. மேல காலேஜ் தோழி பற்றி சொல்லியிருந்தேனே அவளும் கல்யாணத்துக்கு வந்திருந்தா. போட்டோ எடுத்திருந்தோம். அதை பார்த்த பக்கத்து வீட்டு அக்கா என் மொகத்த மறச்சு என் தோழியையும் அவரையும் பார்த்து நல்ல சோடி செவப்பா அழகா இருக்காங்க என்றாள்.”

“மறுவீட்டுக்கு வந்திருந்தோம். என் அப்பா வயல் வேலை முடிச்சுட்டு வந்தார். வந்தவர் பின்பக்கமாக வந்தார். என்னப்பா இப்படி வர்றீங்கன்னு கேட்டேன். ரொம்ப கருப்பா தெரியிரேன், அதனால குளிச்சுட்டு வாறேன் என்றார். என்னடா நம் வியாதி அப்பாவுக்கும் தொத்திகிச்சான்னு விழுந்து விழுந்து சிரிச்சேன்.”

“கல்யாணத்துக்கு மேக்கப் போட ஆள் வேண்டாம் அசிங்கமா தெரியும் என்றார்கள். நான் கேட்கவே இல்ல. எப்படியாவது கொஞ்சமாச்சும் கலரா தெரிய மாட்டோமா அப்டின்னு ஒரு ஆசையில 7000 ரூபாய் கொடுத்து பியூட்டி பார்லர்லேர்ந்து ஆள் வரவச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டேன். அதப் பாத்து அனைவரும் சொன்னது கரகாட்டகாரி மாதிரி இருந்துச்சுன்னுதான். கரகம் ஆடுற பெண்களும் நம்மள மாதிரி கருப்பா இருந்து மேக்கப் போடுறவங்களோன்னு நினைச்சேன். எண்ண வழிய, வழிய, முன்ன இருந்தத விட ரொம்ப கருப்பா இருந்துச்சு என்றார்கள். நாம கருப்பா பயங்கரமா இருக்கோன்னு நெனச்சேன், ஆனா மேக்கப் போட்டதுக்கு பிறகு பயங்கரமா கருப்பா இருப்போம் போல, சரி விடுங்க.”

“ஒரு நாள் நானும் என் கணவரும் வெளிய போயிட்டு வந்தோம். என் மாமியார் என் கணவனுக்கு மட்டும் திருஷ்டி சுத்தி போட்டாங்க. ஏன் அவருக்கு மட்டும் சுத்துறீங்க எனக்கு கெடயாதான்னேன். கருப்பா இருக்குறவங்களுக்கு திருஷ்டி விழாதுன்னாங்க. இன்னொரு நாள் சொன்னாங்க போற எடத்துலயெல்லாம் கேக்கறாங்க, கருப்பா இருக்குற அந்த பொண்ண எப்படி ஒம்மவனுக்கு கட்டுனேன்னு. நீங்க என்னா சொன்னிங்க என்றேன். அவன் தலையெழுத்து அப்டின்னு சொன்னே வேற என்ன சொல்ல என்று என் மாமியார் கூறியதும் என் உடல் கூசியது”.

“தோழர் ஒருத்தர சந்திச்சேன். அவர் சொன்னார் ஆயி நீங்க கருப்பா இருப்பதை அசிங்கமா நெனைக்கிறிங்க. அதுதான் நம்மோட திராவிட நிறம். செவப்புங்கறது எல்லாம் பின்னாடி கலந்து உருவானது. கருப்புதான் நம்ம ஒரிஜினல் கலரு, அதுதான் ஆரோக்கியம். எந்த வெய்யில்லயும் ஒண்ணும் செய்யாது. அதுவும் இல்லாம நீங்க ஒரு விவசாயி பொண்ணு, நீங்க இப்படிதான் இருப்பீங்க, அதுதான் பெருமையுங் கூட. திருமணத்துக்காக பியூட்டி பார்லர் போய் முகத்த பேசியல் பண்ணப் போறதா சொல்றீங்க அதெல்லாம் தேவையில்ல. கருப்புதான் உங்களுக்கு அழகு. ஒரு மனிதனுக்கு புற அழகு முக்கியமில்லை. அக அழகுதான் முக்கியம். அது உங்களுக்கு நிறைய இருக்கு. அழகுங்கிறது வயது ஆக ஆக அழிந்து போகும். நாம் செய்யும் நல்ல செயல் தான் நிலைத்து நிக்கும். நீங்க இப்படி கருப்பா இருப்பதுதான் உங்கள் அழகு என்று சொன்னவர் சொல்லிய சில மணி நேரத்துக்கெல்லாம் அவர் குழந்தையை பார்த்து மனைவியிடம் சொல்கிறார். வரவர பாப்பா ஆயி கலருக்கு வந்துரும் போலருக்கே என்றார். என்னதான் பேசினாலும் உங்களுக்குள்ளும் கலரப்பத்தின நெனப்பு இருப்பது தான் உண்மை. தனக்கு தனக்குன்னு வந்தா நெஞ்சு படக்கு படக்குன்னு அடிச்சுக்குன்னு சொல்வாங்க அது இதுதான் போலருக்குன்னு அவருகிட்ட சொன்னேன். அவரு சும்மா விளையாட்டுக்குன்னு மழுப்புனாரு.”

ஆயி சொன்ன கதைகளில் ஒரு சிலவற்றைத்தான் மேலே கூறினேன். சொல்லாத கதைகள் அதிகம் என்றாலும் கருப்பு பிரச்சினைகளை புரிந்து கொள்ள மேற்கண்ட கதைகளே போதுமானதுன்னு நினைக்கிறேன்.

ஆயி அப்பப்ப சொல்லி வருத்தப்பட்ட நினைவிலிருந்து வெளியே வந்த நான், “கவலைப்படாதே அவர்களெல்லாம் அறிவு கெட்டவர்கள், மற்றவர் மனம் புண்படாமல் பேச தெரியாதவர்கள். ஒங்கிட்ட இருக்குற நல்ல கொணந்தான் முக்கியம். மத்தவங்களுக்கு நீ செய்ற உதவிதான் ஒசந்தது. நீ நெனக்கிற மாதிரி கலருக்கு மதிப்பு கெடையாது. இதையெல்லாம் மனசுல போட்டு கொழப்பிக்காம வேலைய பாரு. கலரா நமக்கு சோறு போட போவுது” என்றேன்.

“நீ நெனைக்கிறா மாதிரி என்னோட கலர கிண்டல் பண்றவங்க மட்டும் காரணம் இல்ல. ஒன்னப்போல என்ன கிண்டல் பண்ணாதவங்களும், நான் வருத்தப்பட்றதுக்கு ஒரு காரணம். கலரு ஒரு மேட்டறே இல்லன்னு சொல்ற நீயே ஒம்பிள்ளைக்கு அமெரிக்க பௌடரு, அமெரிக்க சோப்பு  (ஜான்சன் அண்ட் ஜான்சன்), உள்ளூரு கஸ்தூரி மஞ்சள், பூலாங்கெழங்கு, பச்சபயிரு…-ன்னு போயிட்டே இருக்கியே நீ கலர பாக்கலயா? இல்ல இந்த சமூகம்தான் கலரை பாக்காம இருக்கா?” என்றாள் ஆயி.

என்னிடம் பதில் இல்லை.

 – வேணி.

ஈழ அகதிகளுக்கு உரிமை கோரி திருச்சியில் பிரச்சாரம் !

1

சிறப்பு அகதிமுகாம் எனும் முள்வேலிக்குள் சிறைவைக்கப் பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!

எனும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் திருச்சி நகர் முழுவதும் ஏப்ரல் 27ம் தேதி 12 இடங்களில் பெண்கள் விடுதலை முன்னணி, சார்பாக நடத்தப்பட்டது.

பெண் தோழர்கள் 20 பேர் அளவில் குழந்தைகளுடன் வேன் மூலம் பிரச்சாரம் செய்தனர், ஒவ்வொரு இடத்திலும் பெண் தோழரின் பறை முழக்கம், அரசியல் முழக்கம், பாடல்கள், பேச்சு என செய்யப்பட்டது.

மக்கள் ஒவ்வொரு இடத்திலும் 50 , 100 பேர் எனும் அளவில் கூடி நின்று ஆதரவளித்தனர், நிதியும் கொடுத்து உதவினர், மக்களில் சிலர் நம்மையே சாகடிக்கிற அரசியல் வாதிகள், ஈழத் தமிழர்களுக்கு என்ன கிழிக்க போறங்க என ஆதங்கப்பட்டனர், மே 1 போராட்ட அறை கூவலுடன் பெண் தோழர்கள் பேசினர். ஈழத்தில் லட்சக்கணக்கில் அழிக்கப்பட்ட தமிழ் மக்கள், இன்று உயிருடன் கொல்லப்படும் அவலம், முகாம்களில் அவர்கள் படும் வேதனை, தனிச்சிறைகளில் குடும்பம், பிள்ளையை விட்டு தனிமைப் பட்டிருக்கும் கொடுமை, இதையெல்லாம் சரி செய்ய வக்கில்லாத இந்திய அரசையும் தமிழக அரசையும் கண்டித்தும் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை கோரியும், கௌரவமான வேலைவாய்ப்பு, இருப்பிடம் போன்றவை அமைத்துக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் கூறி பேசினர்.

வேனின் முன்பும் பின்பும் முழக்கங்கள் அடங்கிய பேனர்கள் கட்டப் பட்டிருந்தது மக்கள் மத்தியில் கூடுதலாக பிரச்சாரம் ஆனது, தெருமுனைப் பிரச்சாரத்தின் விளம்பரமாக அந்தந்த பகுதிகளில் சுவரொட்டிகள் விரிவாக ஒட்டப்பட்டது.


(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)
தகவல் : பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.

உலகப் போலீசின் உள்ளத்தை வெளிப்படுத்தும் 3 திரைப்படங்கள்!

6
லிங்கன்

2012-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் கடந்த மாதம் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பதினைந்து திரைப்படங்கள் இருபத்து நான்கு பிரிவுகளின் கீழான விருதுகளுக்குப் போட்டியிட்டன. இவற்றில் ஆர்கோ, ஜீரோ டார்க் தர்டி மற்றும் லிங்கன் ஆகிய திரைப்படங்கள் நமது கவனத்துக்குரியவை.

ஆர்கோ சிறந்த திரைப்படத்திற்காகவும் மற்றும் வேறு இரண்டு பிரிவுகளின் கீழும், ஜீரோ டார்க் தர்டி சிறந்த ஒலிப்பதிவுக்காகவும், லிங்கன் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக இரண்டு விருதுகளையும் வென்றுள்ளன.

இந்த மூன்று திரைப்படங்களும் அமெரிக்காவின் இன்றைய உலக மேலாதிக்கத் திட்டத்துக்குப் பொருத்தமான பிரச்சாரத்தை ஒத்திசைவான முறையில் மேற்கொண்டிருக்கின்றன.

ஆர்கோஆர்கோ: 1979 இல் நடந்த இரானியப் புரட்சியின் பின்புலத்தில் சித்தரிக்கப்படும் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள கொஞ்சம் வரலாற்றை தெரிந்து கொள்ளவேண்டும். 1951 இல் இரானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொகமத் மொசாதே, அன்று பிரிட்டனுக்கு சொந்தமாக இருந்த எண்ணெய் நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கினார். நிலச்சீர்திருத்தம், குத்தகை உச்சவரம்பு, மக்கள் நலத்திட்டங்கள் போன்றவற்றை அடுக்கடுக்காக அமலாக்கினார். இதனால் உள்நாட்டு நிலவுடமை சக்திகள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் கூட்டணி ஆத்திரம் கொண்டது.

1953 இல் சி.ஐ.ஏ – பிரிட்டன் கூட்டுச் சதியின் மூலம் ஒரு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப்பட்டு, மொசாதே சிறை வைக்கப்பட்டார். அதிகாரம் அமெரிக்க கைப்பாவையான மன்னர் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 1953 முதல் 1979 வரை நீடித்த ஷாவின் கொடுங்கோல் ஆட்சி, சித்திரவதைக்கு உலகப் புகழ் பெற்றது. 1979 புரட்சி ஷாவின் இந்தக் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கி எறிந்தது. ஷா வுக்கு அமெரிக்கா அடைக்கலம் தந்தது. மக்கள் விரோதியான ஷாவை விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டுமென்றும், அவனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரினார்கள் இரான் மக்கள். அமெரிக்கா மறுத்தது. ஏற்கெனவே அமெரிக்காவுக்கு எதிராக குமுறிக்கொண்டிருந்த மக்களின் ஆத்திரம் வெடித்தது.

தலைநகர் டெஹ்ரானில் இருந்த அமெரிக்கத்  தூதரகத்தை 1979-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி இரான் போராட்டக்காரர்கள் முற்றுகையிடுகிறார்கள்; பின் கைப்பற்றுகிறார்கள். இந்த நடவடிக்கையில் சுமார் 52 அமெரிக்கர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆறு அமெரிக்கர்கள் போராட்டக்காரர்களிடம் சிக்காமல் தப்பித்து, கனடா நாட்டு தூதரகத்தில் மறைந்து கொள்கிறார்கள். இந்த ஆறு அமெரிக்க அதிகாரிகளையும் விடுவிக்க அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ எடுத்த நடவடிக்கை தான் ஆர்கோவின் கதை. உண்மையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே ஆர்கோவின் கதை பின்னப்பட்டிருக்கிறது.

மீட்புப் பணிக்குப் பொறுப்பேற்கும் சி.ஐ.ஏ அதிகாரி டோனி மென்டஸ்,  கனடாவைச் சேர்ந்த நிறுவனம்  ஹாலிவுட் திரைப்படம் ஒன்றைத் தயாரிப்பது போலவும், அதற்கான வெளிப்புறப் படப்பிடிப்பு நடத்த ஈரானில் இடம் தேட வருவது போன்றும் நாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறார். ஹாலிவுட்டின் நம்பத்தக்க திரைப்பட தயாரிப்பு நிறுவனம், இயக்குநர்கள் போன்றோர் சி.ஐ.ஏ வின் இந்த நாடகத்துக்கு  ஒத்துழைக்கிறார்கள். போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொண்டு கனடா நாட்டுக்காரரைப் போல இரானுக்குள் சட்டப்பூர்வமாக ஊடுருவுகிறார் டோனி. பின் கத்தியின்றி ரத்தமின்றி ஈரானிய அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி ஆறு அமெரிக்க அதிகாரிகளையும் டோனி எப்படி மீட்கிறார் என்பதே ஆர்கோவின் கதை.

ஜீரோ டார்க் தர்டிஜீரோ டார்க் தர்டி  என்ற படத்தின் கதை பின்லாடன் வேட்டை. பின்லேடனை உயிருடனோ பிணமாகவோ பிடிக்கும் பணி மாயா எனும் சி.ஐ.ஏ பெண் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. சுமார் பத்தாண்டுகள் இந்தக் கதை பயணிக்கிறது. பல்வேறு நாடுகளில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படும் முசுலீம் இளைஞர்களை, வெவ்வேறு நாடுகளின் சித்திரவதைக் கூடங்களில் துன்புறுத்தி, சேகரித்த சின்னச் சின்ன தகவல்களை ஒரு வரிசையில் கோர்க்கும் மாயா, பின் லாடன் ஆப்கான் குகையில் இல்லை, ஏதோ நகரத்தில்தான் இருக்கிறார் என்று ஊகிக்கிறார்.  இதனடிப்படையில் பின்லேடனின் வெளியுலகத் தொடர்பாக செயல்பட்டு வந்த தூதுவர் அபு அஹமத்தை அடையாளம் காண்கிறார்.

அபு அஹமத்தைப் பின்தொடந்து பின்லேடன் பாகிஸ்தானின் அப்போதாபாத் நகரில் ரகசியமாகத் தங்கியிருக்கும் பங்களாவைக் கண்டு பிடிக்கிறார்கள். ஆனால் அங்கே தான் பின்லேடன் தங்கியிருக்கிறார் என்பதற்கு உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில் மாயாவின் மேலதிகாரிகள் நேரடி நடவடிக்கையில் இறங்க தயங்குகிறார்கள். மாயாவோ அங்கே தான் பின்லேடன் பதுங்கியிருப்பதாக உறுதியாக நம்புகிறார். மேலதிகாரிகளிடம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்துகிறார்.  மாயாவின் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர்தான் நேரடி நடவடிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கிறது. பின்லேடன் கொல்லப்படுகிறார் – கதை முடிகிறது.

மொழி தெரியாத ஒரு நாட்டில், வேறுபாடான ஒரு கலாச்சார, அரசியல், சமூக சூழலில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகப் பழிவாங்க ஜீரோ டார்க் தர்டியில் களமிறங்கும் சிஐஏ அதிகாரிகள். முப்பதாண்டுகளுக்கு முந்தைய கதையான ஆர்கோவிலும் அதே போன்றதொரு சூழலில் ‘அப்பாவி’ அமெரிக்கர்களை விடுவிக்க தங்கள் உயிரையே பணயமாக வைக்கும் சி.ஐ.ஏ அதிகாரி. களத்தில் நிற்கும் சி.ஐ.ஏ  அதிகாரிகள் நாட்டைக் காக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கும் போது அவர்களது மேலதிகாரிகளோ ஊசலாட்டமான மனநிலையில் இருக்கிறார்கள். ஜீரோ டார்க் தர்டி கதையின் நாயகி இரண்டு முறை மரணத்திற்கு நெருக்கமாகச் சென்று திரும்புகிறாள். ஆர்கோ பட நாயகன் டோனியோ ஈரானிய அதிகாரிகளின் சந்தேகப் பார்வையின் கீழேயே இயங்குகிறான்.

இரண்டு திரைப்படங்களும் அமெரிக்கா நியாயத்தின் பக்கம் நிற்பதாகவே சித்தரிக்கின்றன. இரானில்  1953 இல் அமெரிக்கா நடத்திய ஆட்சிக்கவிழ்ப்பு,  அரை நிமிடத்திற்கும் குறைவான சுருக்கமான விவரிப்பாக ஆர்கோவில் வந்து செல்கிறது. எனினும், ஷா என்ற கிரிமினலைப் பாதுகாப்பதற்காக,  தனது தூதரக அதிகாரிகளைப் பலி கொடுக்கவும் தயாராக இருக்கும் அமெரிக்க அரசைப்பற்றி, சிக்கிக்கொண்ட பிணையக் கைதிகள் கூட விமரிசிப்பதில்லை. மாறாக, படம் நெடுக கைது செய்யப்பட்டவர்களின் நிர்க்கதியான நிலையும், அவர்களின் கண்ணீரும், ஏக்கங்களும் முன்நிலைப்படுத்தப்பட்டு, அமெரிக்கர்கள் மீது ஒரு பரிதாப உணர்ச்சி உருவாக்கப்படுகிறது.

ஈரானின் போராடும் மக்களோ மூர்க்கமான வெறியர்களாக காட்டப்படுகிறார்கள். டோனி ஈரானுக்குள் நுழையும் போது சாலையோரங்களில் வெள்ளையர்கள் பகிரங்கமாக தூக்கிலிட்டுக் கொல்லப்படும் காட்சிகள் கடந்து செல்கிறான். பதுங்கியிருக்கும் ஆறு பேரின் பயபீதி கொண்ட முகங்கள் திரையையும் திரைக்கும் முன் அமர்ந்திருக்கும் ரசிகனின் கண்களையும் ஆக்கிரமிக்கின்றன. ஒட்டுமொத்த திரைக்கதையும் அமெரிக்க பிணைக்கைதிகளின் பார்வையிலேயே நகர்வதால், ஷாவின் இவிரக்கமற்ற கொடூரமான ஆட்சியும், அதில் பாதிக்கப்பட்ட லட்சோபலட்ச ஈரானியர்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கைக்கும் படத்தில் இடமே இல்லை. சிஐஏ அதிகாரிகள் மனிதாபிமானமிக்க நாயகர்களாகவும், மக்கள் கொலைவெறி கொண்ட கும்பலாகவுமே சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஆனால், ஜீரோ டார்க் தர்டியின் திரைக்கதைக்கு ‘கொன்றான் – கொல்கிறோம்’ என்கிற எளிய சூத்திரமே போதுமானதாக இருக்கிறது. படத்தின் துவக்க காட்சிகளில் இரட்டை கோபுரங்கள் தகர்வதன் பின்னணியில் மரண ஓலங்கள் கேட்கின்றன – சில நொடிகளுக்குத் தான். அடுத்த காட்சியில் பாகிஸ்தானின் சித்திரவதைக் கூடமொன்றில் குற்றுயிரும் குலை உயிருமாக கட்டிப் போடப்பட்டிருக்கும் முசுலீம் கைதியை விசாரிக்கும் சிஐஏ அதிகாரி டேனியல், “இங்கே நான் தான் உனது எஜமானன்” என்கிறான்.

கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் முசுலீம் கைதியிடம் “மூவாயிரம் அப்பாவிகளைக் அநியாயமாய்க் கொன்று விட்டீர்களே” என்று டேனியல் கத்தும் போது சி.ஐ.ஏ அதிகாரி மாயா உணர்சிகளற்ற முகத்தோடு, கைதியிடமிருந்து கிடைக்கப் போகும் தகவலுக்காய் காத்து நிற்கிறாள். முப்பதாண்டுகளுக்கு முன் நடக்கும் ஆர்கோ கதையின் நாயகன் டோனிக்கு இந்த சுதந்திரம் இல்லை. முறைத்துப் பார்க்கும் ஈரானிய அதிகாரிகளின் முகங்களை நேருக்கு நேராய்ப் பார்ப்பதைத் தவிர்த்து தலை கவிழ்ந்து செல்கிறான் டோனி. ஆறு அமெரிக்கர்களை வேனில் அழைத்துச் செல்லும் போது எதிர்ப்படும் ஈரானிய மக்களின் அமெரிக்க எதிர்ப்புப் போராட்ட ஊர்வலத்தைக் கண்டதும் டோனி பதைத்துப் போகிறான். சிக்கினால் மரணம் நிச்சயம் எனும் நிலையில் அந்த அறுவரின் முகங்களில் மரணபீதி தாண்டவமாடுகிறது.

இரண்டு படங்களிலும் நல்ல முசுலீம் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆர்கோ படத்தில் அமெரிக்கர்களைக் காப்பாற்றும் ஈரானிய வேலைக்காரி தனது சொந்த தீர்மானத்தின் பேரில் அவ்வாறு செய்கிறாள். முப்பதாண்டுகள் கழித்து நடக்கும் ஜீரொ டார்க் தர்டி கதையிலோ முசுலீம்களின் தேர்வு செய்யும் உரிமையை அமெரிக்கர்களே கட்டுப்படுத்துகிறார்கள். “சொல்கிறாயா, இசுரேலில் இருக்கும் சித்திரவதைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கவா?” என்று கைதியை மிரட்டுகிறாள் மாயா.

சி.ஐ.ஏ உலகெங்கும் நிறுவியிருக்கும் ரகசிய சித்திரவதைக் கூடங்களையும் சித்திரவதைகளையும் ஜீரோ டார்க் தர்டி  இயல்பாக காட்டிச் செல்கிறது.  டேனியல் தன்னிடம் சிக்கிக் கொண்டுள்ள கைதியைத் தூங்க விடாமல் செய்கிறான்; தன் சக பெண் அதிகாரியின் முன்னிலையில் நிர்வாணப்படுத்துகிறான், பட்டினி போடுகிறான்; கழுத்தில் நாய்ப் பட்டியைக் கட்டி சங்கிலியால் பிணைத்து இழுத்துச் செல்கிறான். இதே போன்ற வழிமுறைகள் பாகிஸ்தான் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சித்திரவதைக் கூடங்களிலும் பின்பற்றப்படுவதாக காட்சிகள் வருகின்றன. ஆனால், அதை விட நாம் கவனம் கொள்ள வேண்டியது இவையெல்லாம் எங்கே யாரால் ஏன் நடத்தப்படுகின்றன  என்பது பற்றித் தான்.

எனக்குத் தேவைப்படும் நீதியை உலகின் எந்த மூலைக்கும் சென்று நிலைநாட்டும் உரிமை எனக்கு உள்ளது என்பது தான் அமெரிக்கா ஜீரோ டார்க் தர்டியின் மூலம் சொல்லும் செய்தி. டேனியல் தனது கைதியைப் பார்த்து “எனக்குத் தேவையான தகவல்களைத் தராவிட்டால், உன்னைக் காயப்படுத்துவேன்” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருக்கிறான். அவை உண்மையில் நம்மைப் பார்த்து – நமக்காகச் சொல்லப்படும் வார்த்தைகள். “நீ எங்களோடு இல்லாவிட்டால் எமது எதிரியாவாய்” எனும் புஷ்ஷின் வார்த்தைகள் அவை.

முப்பதாண்டுகளுக்கு முன் அமெரிக்காவால் இப்படிப்  பச்சையாகப் பேச முடியவில்லை.  இன்று அடாவடியாக செய்யும் எல்லா நடவடிக்கைகளையும் அன்று கள்ளத்தனமாகவே அமெரிக்கா செய்யவேண்டியிருந்தது. எனவே தான் ஆர்கோவில் சி.ஐ.ஏ அதிகாரிகள் அடக்கிவாசிக்கிறார்கள்.  உண்மையில் இந்த ஆறு அமெரிக்கர்களும் டோனியின் முயற்சியால் தப்பித்த பின் எஞ்சிய 52 பேரை இரானுடன் பேச்சு வார்த்தை நடத்தி 444 நாட்கள் கழித்தே அமெரிக்கா விடுவித்தது. இதே நிலை இன்று அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்  என்பதை நாம் ஜீரோ டார்க் தர்டியிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆர்கோ கதை நடக்கும் காலப்பகுதியில் நிலவிய உலக அரசியல் சூழலில் அமெரிக்காவுக்கு எதிர்த் தரப்பு என்கிற ஒன்று பெயரளவிற்காவது இருந்தது. இன்றைக்கு இருப்பதைப் போன்ற ஒற்றைத் துருவ மேலாதிக்கம் அன்று இல்லை. தேச எல்லைகளைக் கடந்து, பல்வேறு நாடுகளின் இறையாண்மையை ஊடுருவிச் சென்று தான் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் பூமிப் பந்தின் எந்த மூலையிலும் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அமெரிக்காவுக்கு இன்றைக்கு இருக்கும் அரசியல் மற்றும் ராணுவ ரீதியிலான ‘சுதந்திரம்’ அன்றைக்கு இல்லை. ரசியா தலைமையிலான எதிர் முகாம் ஒன்று இருந்தது.

இன்றோ ரசிய முகாம் சிதைந்து விட்டது. பிற மேற்குலக வல்லரசுகளின் நலன்களும் அமெரிக்காவின் பொருளாதார இராணுவ நலன்களோடு பிரிக்க முடியாதபடிக்கு இணைந்துள்ளன. பிற நாடுகளின் பொருளாதாரங்கள் அனைத்தும் அமெரிக்க நுகர்வை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால், மொத்த உலகின் பொருளாதார இயக்கமும் அமெரிக்கா என்கிற ஒற்றை எஞ்சினோடு பிணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மரணம் பிற நாடுகளையும் புதைகுழிக்குள் இழுத்து விடும் என்பதே இன்றைய உலகப் பொருளாதாரக் கட்டமைப்பின் எதார்த்தமாக இருக்கிறது.

எனவே தான் இன்று இரண்டாயிரங்களில் கதை நகரும் ஜீரோ டார்க் தர்டியில் பின்லேடனை பாகிஸ்தானுக்குள் புகுந்து எந்தக் கேள்வி முறையுமின்றி வேட்டையாடும் அமெரிக்காவால் அன்று எந்த இரானியன் மேலும் சுண்டு விரலைக் கூட வைக்க முடியவில்லை.

தற்போது இந்தப் படங்கள் வெளிவந்துள்ள காலம் கவனத்திற்குரியது. இன்று உலகப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் மீதும் ஆசிய நாடுகள் மீதும் பொருளாதார நெருக்கடி  எனும் இருள் கவிந்து வருகிறது. இந்த நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கும், இதனைச் சாக்காக வைத்து தனது உலக மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கும் அமெரிக்கா முயற்சிக்கிறது.  பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் உலக நாடுகளின் பொருளாதாரங்களையும் பொதுச்சொத்துக்களையும்  இயற்கை வளங்களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. அதற்குத் தடையாக நிற்கும் நாடுகளின் மேல் நேரடியாகவே அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் தலையிடுகிறது.

ஆப்கானில் நுழைந்ததை பழிவாங்கல் எனும் பெயரில் நியாயப்படுத்தியாகி விட்டது; ஈராக்கை கபளீகரம் செய்ததற்கு ‘பேரழிவு ஆயுதங்களைக்’ காரணம் காட்டியாகி விட்டது;  லிபியாவைக் கைப்பற்றியாகி விட்டது. பாடம் புகட்டப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில், ஈரான், சிரியா, வெனிசுவேலா மட்டுமின்றி பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளும், வட கொரியாவும் கூட உண்டு.

தனது தலையீட்டுக்கு அமெரிக்கா கூறிய காரணங்கள் பொய் என்று பின்னர் பலமுறை நிரூபிக்கப்பட்டாலும், தனது பொய்ப் பிரச்சாரத்தை அமெரிக்கா நிறுத்தி விடவில்லை. ஆக்கிரமிப்புகளையும் மேலாதிக்கத்தையும் நிறுத்தி விட்டு அமெரிக்கா உயிர் வாழ முடியாது என்ற காரணத்தினால், பொய்ப்பிரச்சார நிறுவனங்கள் மற்றும் ஐந்தாம்படைகள் என்பவை அமெரிக்க மேலாதிக்கத்தின் கட்டுமானத்தில் நிரந்தரமாக அங்கம் வகிக்கின்றன. புதிய முறைகளில், புதிய வடிவங்களில், புதிய நிறுவனங்கள் மூலம் தனது பொய்யைப் பரப்ப அவை இடையறாது சிந்தித்து செயல்படுகின்றன.

ஜார்ஜியாவிலும், செக்கோஸ்லோவாகியாவிலும், மத்திய ஆசிய நாடுகளிலும் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்புகள் மற்றும் வண்ணப்புரட்சிகளையும், தற்போது சிரியாவில் ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்றும் நோக்கத்துடன் நடந்துவரும் கலகங்களையும் கருத்தியல் தளத்தில் பின் நின்று இயக்கியது  அமெரிக்க என்.ஜி.ஓவான ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை மற்றும்  ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற அமைப்புகள்தான்.

தனது அரசியல் இராணுவக் காய் நகர்த்தல்களுக்கு ஏற்ற முறையில் இயங்கும் கருவிகளாக ஊடகங்களையும், என்.ஜி.ஓக்களையும் பொருத்தமான முறையில் அமெரிக்கா பயன்படுத்துகிறது. சுகாதாரம், கல்வி, மருத்துவம், சுய தொழில், பெண்கள் உரிமை, விளிம்பு நிலை மக்களின் உரிமை, கான்சர், எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு என்று சகல தளங்களிலும் புகுந்து புறப்படும் என்.ஜி.ஓக்களின் ஒவ்வொரு சமூக அக்கறைக்கும் பின்னால் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் நலனோ , அல்லது அமெரிக்க ஐரோப்பிய அரசுகளின் மேலாதிக்க நோக்கமோ இருக்கின்றன.

நேர்மறையான பிரச்சினைகள் சிலவற்றை எடுப்பதன் மூலம் தமது செயல்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் ஊடகங்களும் தொண்டு நிறுவனங்களும், மக்களிடம் பெற்றிருக்கும் அந்த அங்கீகாரத்தை  உரிய நேரத்தில், உரிய முறையில் அமெரிக்காவின் நோக்கத்துக்குப் பயன் படுத்துகின்றன. நீயா நானா நிகழ்ச்சியில் கருத்து சுதந்திரம், அறம் ஆகியவை பற்றியெல்லாம் பொளந்து கட்டும் விஜய் டிவியின் உரிமையாளரான ரூபர்ட் முர்டோச்சின் ஸ்டார் நெட்வொர்க்தான், இராக்கில் பேரழிவு ஆயுதங்களை சதாம் மறைத்து வைத்திருப்பதாக உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்து ஆக்கிரமிப்பு போருக்கு கொம்பு ஊதியது.

1953 இல் மொசாதேயின் ஆட்சியைக் கவிழ்த்து ஷா வின் ஆட்சியை இரானில் நிலைநிறுத்திய அமெரிக்கா, 1979 இல் ஷா  தூக்கியெறியப்பட்ட பின் தானும் இரான் மக்களிடமிருந்து தனிமைப்பட நேர்ந்த து. அந்த காலகட்டத்தின் தவறுகளிலிருந்து அமெரிக்கா பாடம் படித்துக் கொண்டு விட்டது. சர்வாதிகாரிகளை ஸ்பான்சர் செய்கின்ற அதே நேரத்தில், சர்வாதிகாரிகளுக்கு எதிரான மக்கள் புரட்சியையும் தானே ஸ்பான்சர் செய்வதன் மூலம் தனது மேலாதிக்கத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்  என்ற அனுபவத்தை அமெரிக்காவும் பிற ஏகாதிபத்தியஙகளும் கற்றிருக்கின்றன. எனவே, சர்வாதிகாரிகளுக்கு எதிரான மக்கள் எழுச்சிகளையும் கூட என்ஜிஓ க்களே கொம்பு ஊதி தொடங்கி வைக்கின்றன.  அனைவரையும் முந்திக் கொண்டு அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தையும் என்ஜிஓக்களே முன்கை எடுத்து நடத்துகின்றன.

2009 முள்ளிவாய்க்கால் படுகொலை வரையில் ராஜபக்சே அரசுக்குத் துணை நின்ற அமெரிக்காவின் உள்ளத்தில் கடந்த   இரண்டு ஆண்டுகளாக மனிதாபிமானம் சுரப்பதும், போர்க்குற்ற ஆதாரங்கள் தவணை முறையில் வெளியிடப்படுவதும், தமிழ்ப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது குறித்த உண்மையை கண்டுபிடித்து ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு இப்போது வெளியிடுவதும் இதற்கு எடுத்துக் காட்டுகள்.

அரசியல் – இராணுவ தலையீடுகள், ஊடகப் பிரச்சாரம், என்.ஜி.ஓக்களின் களச் செயல்பாடுகள் எனும் வரிசையில் தான் ஹாலிவுட் திரைப்படங்களும் வருகின்றன. கம்யூனிச எதிர்ப்பு –  ஜனநாயகம் என்பதற்கு பதிலாக, பயங்கரவாத எதிர்ப்பு – ஜனநாயகம் என்ற முழக்கத்தை முன்தள்ளும் அமெரிக்கா, எந்த நாடுகளிலெல்லாம் தலையிட விரும்புகிறதோ அவை ஜனநயாக விரோதமானவை என்றோ பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவை என்றோ ரவுடி அரசுகள் என்றோ முத்திரை குத்துகிறது.

லிங்கன்இரானின் மீது தாக்குதல் தொடுக்கத் துடிக்கும் அமெரிக்கா, அதற்கு எதிரான புதிய புரட்டுகளை உருவாக்குவதற்கு முன்னர், பழைய நினைவுகளைக் கிளறி விடுகிறது.  ஆர்கோவில் மூர்க்கத்தனமான இரானியர்களிடமிருந்து  பரிதாபத்துக்குரிய அமெரிக்கர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். ஜீரோ டார்க் தர்டியில், தமது கடமையை நிறைவேற்றுவது ஒன்றைத்தவிர வேறு எந்தப் பற்றோ எதிர்பார்ப்போ இல்லாத மாயாவைப் போன்ற அமெரிக்க அதிகாரிகள், பயங்கரவாத ஒழிப்பு பணிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலைக்  காட்டுவதன் மூலம் கூட அமெரிக்கர்களைப் பாதிக்கப்பட்ட சமூகமாக சித்தரித்து நம்பவைக்க முடியாது என்பதனால், 1979 இன் இரானியப் புரட்சியை துணைக்கழைக்கிறது ஹாலிவுட். விவகாரம் அதோடு முடியவில்லை.  தனது ஆக்கிரமிப்புகளின் நோக்கம் உலகம் முழுவதும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதுதான் என்பதை எப்படி நம்ப வைப்பது?  அதற்கு புஷ்ஷும் ஒபாமாவும் பயன்படமாட்டார்கள் என்பதனால், அமெரிக்க ஜனநாயகத்தின் மேன்மையையும் தூய்மையையும் நிரூபிக்க ஆபிரகாம் லிங்கன் வரவழைக்கப்படுகிறார். அடிமை முறையை ஒழிக்க அபிரகாம் லிங்கன் நடத்திய போராட்டத்தை யாரேனும் மறுக்க முடியுமா என்ன?

ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கும் இந்த மூன்று படங்களையும் ஒரே திட்டத்தின் கீழ் யோசித்து தயாரித்திருப்பார்கள் என்பது அதீதமான கற்பனை என்று சிலருக்குத் தோன்றலாம். அவ்வாறுதான் நடந்திருக்க வேண்டும் என்று நாமும் கூறவில்லை. உடுக்கை இழந்தவன் கை போல, எந்த திசையை நோக்கி நகர வேண்டுமோ அந்தத் திசையை நோக்கி ஹாலிவுட்டின் கரங்கள் – அதாவது மூளைகள் – யாருடைய தூண்டுதலும் இன்றி, அனிச்சையாக நகர்கின்றன என்பதில்தான்  அமெரிக்க வல்லரசுடைய வெற்றியின் இரகசியம் அடங்கியிருக்கிறது.

– நாசர்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________