Sunday, August 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 784

வீட்டில் தெலுங்கு, வெளியே தமிழ்…நான் யார்? எனது அடையாளம் எது?

152

கேள்வி :
நான் பிறந்தது முதல் கடந்த 27 வருடங்களாக நம் தமிழ் நாட்டில் வசித்து வருகிறேன்….குறிப்பாக வேலை காரணமாக சென்னையில் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். சமீபத்தில் நான் தங்கியிருந்த தனியார் விடுதியில் ஒரு நாள் நான் தெலுங்கில் பேசிய காரணத்திற்காக என் பக்கத்து அறையை சேர்ந்த சில அன்பர்களால் தாக்கப்பட்டேன். என்னை கொல்டி என்றும் வந்தேறி என்றும் அர்ச்சித்து என்னை அந்த இடத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள். நான் என்னை பற்றி எடுத்து சொன்னேன்…நாங்கள் எப்போதோ நாயக்கர் ஆட்சிக்காலத்தில் குடிபெயர்ந்து கடந்த சில நூற்றாண்டுகளாகவே தமிழர் பண்பாடோடு கலந்து எங்கள் வாழ்கை முறையை கொண்டுள்ளோம் என்றும்…தெலுங்கில் ஒன்றும் எழுதவோ முழுமையாக பேசவோ வாசிக்கவோ தெரியாது…..எனக்கு தமிழ் தான் எல்லாமும் என்று வாதிட்டேன். பயனாக மேலும் இரண்டு குத்துகள் மார்பில் விழுந்தன. நான் என்னை மனப்பூர்வமாக ஒரு தமிழனாகவே கருதுகிறேன். எனக்கு பல நேரங்களில் என்னைப் பற்றி தர்மசங்கடமாகவே உணர்கிறேன். நான் தமிழன்தான் என்பதை மற்றவர்கள் எப்படி உணர்வார்கள்..?என் தாய் மொழி தெலுங்கு என்ற காரணத்திற்காக நான் தமிழில் சிந்திப்பதை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது அல்லவா? என் கேள்வி இதுதான்…நான் என்னை யாராக நினைப்பது?? இதை பற்றி நியாமான பதிலுக்கு வினவை விட்டால் நாதியில்லை. ஒருவேளை இந்த கேள்வி மிகவும் மொன்னையாகவோ ஒரு சரியான புரிதலுடனோ இல்லாமலிருப்பின் மன்னிக்கவும்.

–       கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்,

உங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி குறித்து மிகவும் வருந்துகிறோம், கோபம் கொள்கிறோம், கண்டனம் தெரிவிக்கிறோம்.

உங்களை யாராக நினைப்பது என்ற கேள்விக்கு பதில், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட தமிழன் என்று தைரியமாக சொல்லுங்கள்! இதில் மூடி மறைப்பதற்கோ, தற்காப்பு நிலையில் நின்று பேசுவதோ தேவையில்லை.

தமிழக எல்லைகளில் வாழும் மக்கள் அனைவரும் இரு மொழிகளையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமிருக்கிறது. கேரள, கர்நாடக, ஆந்திர எல்லையில் இருக்கும் மக்கள் தேவை கருதி இப்படி இரு மொழி பயன்பாட்டுக்காரர்களாக இருக்கிறார்கள். சில நேரம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் எல்லைக்கு அந்தப்புறத்திலும், மற்ற மாநில மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இங்கேயும் வாழவேண்டியிருக்கலாம். எல்லை என்பது நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றே அன்றி அதுவே எல்லாமும் அல்ல.

பாக் இந்திய எல்லையில் இருக்கும் மக்களுக்கு இரண்டு நாடுகளும் ஒன்றுதான். இங்கே ஊதிவிடப்படும் தேசபக்தி காய்ச்சலோடெல்லாம் அங்கே  அவர்கள் வாழ முடியாது. அவர்களது கால்நடைகள் எல்லையைத் தாண்டி மேயும். திருமண மற்றும் இதர விசேட நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் அடிக்கடி எல்லையை தாண்ட வேண்டியிருக்கும். இருநாட்டு இராணுவங்களில் யார் தாக்கினாலும் அதன் பாதிப்பு இருநாட்டு மக்களுக்கும் உண்டு. எனவே இந்தியாவில் பாதுகாப்பாக இருந்து கொண்டு தேசபக்தி சாமியாடும் அம்பிகளின் மனநிலைக்கும் எல்லையில் வாழும் அந்த மக்களின் மனநிலைக்கும் பாரிய வேறுபாடு உண்டு.

எனவே எந்த தேசிய இன மக்கள் வாழும் நாட்டிலும் இது போன்ற வேற்று மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள். இங்கே பெரும்பான்மையாக இருக்கும் தமிழ் மொழி பேசும் மக்கள் கூட பெங்களூருவிலோ இல்லை மும்பை தாரவியிலோ, திருவனந்தபுரத்திலோ  மொழிச் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். இங்கு மற்ற மொழி மக்கள் கேலி செய்யப்படுவது போல அங்கே அவர்கள் மதராசி, பாண்டிக்காரன் என்று கேலி செய்யப்படுகிறார்கள். இதைத் தாண்டி எல்லா இடங்களிலும் உழைக்கும் மக்களிடையே மொழிவெறி என்பது கிஞ்சித்தும் கிடையாது.

மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல நாயக்கர் காலம் போல பல்வேறு வரலாற்றுக் காலங்களினூடாக தமிழகத்தில் பல்வேறு தேசிய இன மக்கள் குடியேறியிருக்கிறார்கள். அதில் மராத்தி, கன்னடம், மலையாளம், உருது,  இந்தி என்று பல மொழி பேசுபவர்கள் உண்டு. இந்தியா முழுவதுமே பல நூற்றாண்டுகளாக இந்த மொழிக் கலப்பு நடந்திருக்கிறது. இதில் தூய தேசிய ரத்தத்தைக் கொண்ட இனம் என்று எதுவும் இல்லை. எனவே வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்டவர்கள் ஒரு தேசிய இனத்தில் இருப்பது இந்தியா முழுமைக்கும் உள்ள ஒன்று. இத்தகைய கலப்பு இன்றி எந்த தேசிய இனமும், மாநிலமும் இல்லை.

நீங்கள் கேரளத்தில் கொல்லம் நகர் வரையிலும் முழுக்க தமிழ் மொழி மட்டுமே கூட பேசி வாழ முடியும். முழு கேரளத்திலும் கூட தமிழை மட்டும் வைத்துக் கொண்டு பயணம் செய்யலாம். அதே போல திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் தமிழும் முழுப் பயன்பாட்டில் உள்ளது. தெலுங்கு பேசும் மக்கள் வேலூர் வரையிலும் வந்து செல்ல முடியும். கன்னட மொழி பேசும் மக்கள் ஓசூர் வரையிலும் புழங்குகிறார்கள். இவையெல்லாம் யதார்த்தமாக மக்களிடையே தவிர்க்கவியலாமல் இருக்கின்ற மொழிக் கலப்பு அம்சங்கள்.

உங்களைப் போன்ற பின்னணி கொண்டவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே குடியேறி வீட்டில் மட்டும் அதுவும் கொச்சைத் தெலுங்கு பேசிவிட்டு, பொதுவெளியில் தமிழராக வாழ்ந்து வருபவர்கள். ஆனால் தற்போது கூட ஆந்திராவிலோ, இல்லை கேரளாவிலோ இருந்து மக்கள் இங்கு குடியேறி வாழலாம். தத்தமது தாய்மொழிகளைப் பேசும் மலையாளியாகவோ இல்லை தெலுங்கராகவோ தமிழ்நாட்டில் வாழலாம். இதை தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தமிழ்நாட்டில் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்தான் வாழ முடியும் என்பது சட்டப்படியும், தார்மீகரீதியாகவும், யதார்த்தமாகவும் சரியல்ல.

இந்தியாவில்  காலனிய ஆட்சிக் காலத்தில்தான் தேசிய இனங்கள் தத்தமது அடையாளங்களோடு தோன்றத் துவங்கியிருந்தது. அவை முழு நிறைவான வளர்ச்சி பெற்ற தேசிய இனங்களாக மாறிக் கொள்வதற்கு காலனிய ஆட்சி தடையாக இருந்தது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னர் தமிழன் என்ற உணர்வோ இல்லை நாடோ இங்கு இருந்ததில்லை. சங்ககாலம் தொட்டு தமிழனது அடையாளங்கள் பாடல்கள் மூலம் பேசப்பட்டாலும் அவை இன்றைய தமிழனது தேசிய உணர்வை கொண்டிருக்கவில்லை, கொண்டிருக்கவும் வாய்ப்பில்லை. அன்று சேர, சோழ, பாண்டிய நாடுகளாகத்தான் மக்கள் இருந்தார்கள். இன்றும் தென்கேரள மக்கள் தமிழ் மக்களை பாண்டிக்காரர்கள் என்றுதான் அழைக்கிறார்கள். இன்று நாம் பேசும் பொதுவான தமிழ்மொழி கூட அன்று இருந்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பொருளாதாரப் பரிவர்த்தனை காரணமாகவே நாம் பேசும் இன்றைய பொதுத் தமிழ் உருவாகியிருக்கிறது. இன்றும் கச்சாவான கொங்கு தமிழ், திருவிதாங்கூர் தமிழ், மலைவாழ் மக்களின் தமிழ், சென்னைத் தமிழ் , தெலுங்குத் தமிழ், கன்னடத் தமிழ், மலையாளத் தமிழ் முதலான வழக்குகளை பொதுவான தமிழர்களே புரிந்து கொள்வது கடினம்.

முன்னர் வட்டாரத் தமிழ் வழக்கு மட்டும் பேசி வந்தவர்கள் இன்று உள்ளூரில் மட்டும் அப்படிப் பேசிவிட்டு பிழைக்க வந்த இடத்தில் பொதுத் தமிழை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். இப்படித்தான் பத்திரிகைகள், சினிமா, இலக்கியம், அலுவலங்களில் பயன்படும் பொதுத் தமிழ் உருவாகியிருக்கிறது.

ஆங்கிலேயருக்கு முன்னர் தமிழ்நாட்டு மக்களிடையே ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான பொருளாதாரத் தேவையோ, சாத்தியமோ இருந்ததில்லை. ஒரு நபர் என்ன மொழியைப் பேசுகிறார் என்பது அவருடைய சமூக – பொருளாதார வாழ்க்கையே தீர்மானிக்கின்றது. நாமக்கல் லாரி டிரைவர்கள் வட இந்தியாவுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் இந்தி மொழியைக் கற்கின்றனர். பஞ்சாபிலிருந்து இங்கு வரும் சிங் டிரைவர்கள் தமிழைக் கற்கின்றனர். கன்னியாகுமாரியில் மணல், சிப்பி விற்கும் சிறுவன் ஐந்தாறு இந்திய மொழிகளைப் பேசுகிறான். சென்னை அண்ணா சமாதியில் மீன் வருவலை விற்கும் மீனவர் வங்க மொழியை சரளமாகப் பேசுகிறார். மும்பையில் வாழும் பிற தேசிய இன மக்கள் தத்தமது தாய் மொழியோடு மராத்தி, இந்தி, உருதுவை கற்றுத் தேர்கின்றனர். இன்று தமிழகத்தில் அதிகார, நிர்வாக, பொழுது போக்கு துறைகளில் ஆங்கிலம் கோலேச்சுகிறது. ஏழை எளிய மக்கள் கூட சரளமான ஆங்கில வார்த்தைகளை தமது பயன்பாட்டுக்கு பயன்படுத்துகின்றனர். இவற்றை யதார்த்தமாக புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து இயல்பாகவே இப்படி மொழிக்கலப்பு ஏற்படுவதை, ஏற்பட்டு விட்டதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. மேலும் பல்வேறு தேசிய இன மக்கள் இப்படி கலந்து வாழும் சூழலை நாம் கைதட்டி வரவேற்க வேண்டும். சாதிகளுக்குள் சாதி மறுப்பு மணம் நடக்க வேண்டும் என்று விரும்புவது போல தேசிய இனங்களுக்குள்ளும் இனமறுப்பு மணங்கள் நடக்க வேண்டும் என்கிறோம். எதிர்காலத்தில் இத்தகைய இனங்கள் கலந்து மனித இனம் ஒன்றே எனும் நிலை வருவதே தேவையானது, சாத்தியமானது, அறிவியல் பூர்வமானது, எதிர்காலத்தைக் கொண்டிருப்பது என்கிறோம். அப்பா பஞ்சாபியாகவும், அம்மா தமிழாகவும் இருந்தால் பிள்ளைகள் இரண்டு மொழிகளையும் தெரிந்து கொள்வதோடு, இரு மாநில பண்பாடுகளையும் அறிந்து கொண்டு முன்னோக்கி செல்லும். மக்களிடையே ஒற்றுமை வளரும். இப்படி தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு, மராத்தி, பீகாரி, உ.பி என எல்லா இனங்களும் கலக்க வேண்டும். நம்நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலும் இப்போது இருக்கும் இனங்கள் எதிர்காலத்தில் இப்படித்தான் கலந்து எழும். தூய இனம் என்பதற்கு வரலாற்றில் எதிர்காலமில்லை.

இப்படி மற்ற தேசிய இனமக்கள் தமிழ்நாட்டில் குடியேறினால் தமிழர் வளம் அழியும் என்று தமிழின வெறியர்கள் கூப்பாடு போடுவார்கள். இது உண்மையெனக் கொண்டால் இன்று ஈழத்தமிழர்கள் ஐரோப்பாவிலும், கனடாவிலும் இலட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். இவர்களைப் போன்ற அகதிகள் அங்கே வாழ்வதால் அந்தந்த நாடுகளின் வெள்ளையர்களுக்கு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று அங்கே புதிய நாசிசக் கட்சிகள் தோன்றி ஓரளவுக்கு செல்வாக்கோடு இருக்கின்றன. தமிழ்நாட்டில் மற்ற மொழிக்காரர்கள் இருக்க்க் கூடாது என்று பாசிசம் பேசும் தமிழினவெறியர்கள் ஐரோப்பிய பாசிஸ்ட்டுகள் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று மும்பையில் ஏழை பீகாரிகளை வெறிகொண்டு தாக்கும் சிவசேனா வெறிநாய்களை மனிதநேயம் கொண்டோர் எவரேனும் ஏற்றுக் கொள்வார்களா? தமிழ்நாட்டில் இருக்கும் அதுவும் டாடா சுமோவில் நிரப்புமளவு தொண்டர் படையுள்ள கட்சிகளைச் சேர்ந்த சில தமிழின வெறியர்கள்தான் அப்படி ராஜ்தாக்கரேவுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள். தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டு தெருக்களையும், கழிப்பறைகளையும் தெலுங்கு பேசும் அருந்ததி இன மக்கள்தான் சுத்தம் செய்கின்றனர். எங்கள் கழிவுகளை அகற்றுவதற்குத் தெலுங்கர்கள்  தேவையில்லை, இனி நாங்களே முதலியார், கவுண்டர், தேவர், கோனார் என்று முறை வைத்து சுத்தம் செய்து கொள்கிறோம் என்று சுத்த தமிழர்கள் முன்வருவார்களா? அதே போன்று இரவுக் காவல் காக்கும் நேபாளத்து கூர்காக்கள், தச்சு வேலை செய்யும் ராஜஸ்தானத்து தொழிலாளர்கள், காங்கிரீட் கலவை போடும் தெலங்கு தொழிலாளர்கள், சாலையில் குழி பறிக்கும் கன்னட தொழிலாளர்கள், உணவகங்களில் மேசையை துடைக்கும் வடகிழக்கு தொழிலாளர்கள் என்று இவர்களது வேலையை தமிழன்தான் செய்ய வேண்டும் என்று யாராவது கேட்க முன்வருவார்களா என்ன?

அதே போன்று நாமக்கல் முட்டை, கோழியை மலையாளிகளுக்கு விற்க கூடாது, கம்பத்தின் காய்கனிகளை கேரளாவுக்கு கொண்டு செல்லக்கூடாது, ஈரோட்டின் மஞ்சள் தமிழக எல்லையைத் தாண்ட முடியாது, திருப்பூரின் உள்ளாடைகள் மற்ற மாநிலங்களுக்கு விற்க கூடாது என்று தூய தமிழினவாதிகள் பிரச்சாரம் செய்தால் மக்களே நையப் புடைப்பார்கள். அதே போன்று இன்று தமிழகம் சாப்பிடும் சோறு, காய்கள், மளிகைப் பொருட்களில் கணிசமானவை அண்டை மாநிலங்களிலிருந்து வருவபைதான்.

இன்று தமிழக வளத்தை அப்படியே கொள்ளையடிப்பவர்கள் மலையாளிகளோ, தெலுங்கர்களோ அல்லர். பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும்தான் நம் வளத்தை சுருட்டிக் கொண்டு செல்கின்றனர். இவர்களுக்கெல்லாம் இன அடையாளம் ஏதுதமில்லை. ரிலையன்ஸ், ஹூண்டாய், ஃபோர்டு, செயின்ட் கோபெய்ன் முதலான நிறுவனங்களை வெளியேற்றுவதற்கு இந்த தமிழினவாதிகள் வருவார்களா? மாட்டார்கள். மாறாக டீக்கடை வைத்திருக்கும் மலையாளிகளை விரட்ட வேண்டுமென்று துள்ளிக் குதித்து வருவார்கள். இதுதான் இவர்களது தமிழ் வீரத்தின் இலட்சணம்.

இதனால் இந்தியாவில் தேசிய இன ஒடுக்குமுறை இல்லை என்று பொருளல்ல. பார்ப்பனிய இந்து தேசிய ஒடுக்கு முறையினால் தமிழ் மட்டுமல்ல பிற தேசிய இனங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால்தான் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்கிறோம். மொழி, பண்பாடு, கல்வி என்று எல்லாத் துறைகளிலும் இந்த ஒடுக்கு முறையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக நாம் மைய அரசை எதிர்த்து போர்க்குணத்தோடு போராட வேண்டும். மாறாக அதன் பொருட்டு கன்னட, மலையாள மக்களை இனவெறி கொண்டு பகைத்துக் கொள்வதில் பயனில்லை.

எனினும் இந்திய மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது பொது எதிரியை அவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதிலேயே வரும். அதை பிரிந்து கொண்டு செய்வதால் பயனில்லை. சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று சொல்வதோடு இந்தியாவின் தேசிய இன மக்கள் வர்க்க ரீதியாக ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்பதையும் சேர்த்தே சொல்கிறோம். அதே போன்று ஒவ்வொரு தேசிய இனத்தின் தனித்தன்மை என்பது அதனுடைய ஜனநாயக விழுமியங்களுக்காகவே போற்றப்படவேண்டும். அவற்றில் இருக்கும் நிலவுடமை பிற்போக்குத்தனங்களை எதிர்க்க வேண்டும்.

தமிழிசை மரபு, பார்ப்பனிய எதிர்ப்பு மரபு போன்றவைதான் தமிழின் போற்றுதலுக்குரிய மரபுகள். இதைத் தவிர தமிழில் இன்று கோலேச்சுவது சாதிய ஆதிக்கம்தான். தாழத்த்தப்பட்ட தமிழர்களை ஊருக்குள் செருப்போடு செல்லக்கூடாது என்றுதான் ஆதிக்க சாதி தமிழர்கள் நடத்துகிறார்கள். இந்நிலையில் தலித் தமிழன் எங்கனம் தமிழனென்று உணர முடியும்? இப்படி சாதியால் மட்டுமல்ல வர்க்க ரீதியாகவும் தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். டி.வி.எஸ் அய்யங்காரும், ஸ்பிக் முத்தையா செட்டியாரும், பொள்ளாச்சி மகாலிங்கமும் வேண்டுமானால் முதலாளிகள் என்ற முறையில் தமிழன் என்று பேச முடியும். ஆனால் இவர்களோடு சரிக்கு சமமாக தொழிலாளிகள், நிலமற்ற விவசாயிகள் தமிழனென்று பழக முடியுமா என்ன?

ஆகவே சாதி, மத, மொழி அடையாளங்களையெல்லாம் விட வர்க்க அடையாளமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற ஒன்றாக இருக்கிறது. கார்த்திகேயன், அதன்படி நீங்கள் உங்களை உழைக்கின்ற வர்க்கமாக நினைத்து வாழுங்கள். உழைக்கும் வர்க்கத்தில் விவசாயிகள், தொழிலாளிகள், நடுத்தர வர்க்கம் போன்றவர்களோடு இணைந்து எழும் அந்த வர்க்க உணர்வே நமது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்க்கும் வல்லமையை தரும்.

எனினும் தமிழின வெறியர்களுக்கு எதிர்காலமில்லை என்று நாம் அவரசமாக முடிவெடுத்துவிடக்கூடாது. இன்று வட மாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் தமிழகம் வந்து வேலை செய்கின்றனர். நாளை இவர்கள் இன வேறுபாடு கடந்து தமிழக தொழிலாளிகளோடு சேர்ந்து போராடும் நேரத்தில் முதலாளிகள் இதை திட்டமிட்டு பிரிக்கும் வண்ணம் தமிழின வெறியை தூண்டிவிடலாம். அப்படித்தான் மும்பை டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர் சங்கங்களை உடைப்பதற்கு முதலாளிகள் சிவசேனாவை வளர்த்து விட்டனர்.

தமிழகத்தில் அப்படி ஒரு நிலை வந்தால் நாம் இனவேறுபாடு இன்றி தொழிலாளிகளை அணிதிரட்டி முதலாளிகளையும் அவர்களது காசில் வரும் தமிழின வெறியர்களையும் வேரறுக்க வேண்டும். கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் அதை நிச்சயம் செய்வோம். மதவெறி, சாதிவெறிக்கு மட்டுமல்ல இனவெறிக்கும் தமிழகத்தில் இடமில்லை என்று காட்டுவோம்.

கார்த்திகேயன்,

இந்த பதில் உங்களது குழப்பத்தையும், துயரத்தையும் தணித்து விட்டு தலைநிமிர்ந்து வாழும் தைரியத்தை தந்திருக்கிறதா? அறிய ஆவலாயிருக்கிறோம். நன்றி

_____________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

திகாரில் கனிமொழி! ராமச்சந்திராவில் ரஜினி! திமிரில் நித்தியானந்தா!

31
திகாரில் கனிமொழி! ராமச்சந்திராவில் ரஜினி! திமிரில் நித்தியானந்தா! -

திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!!

திகாரில் கனிமொழி! ராமச்சந்திராவில் ரஜினி! திமிரில் நித்தியானந்தா! -திகார் சிறை எண் 6-இல் அடைக்கப்பட்டிருக்கும் கனிமொழிக்கு மின்விசிறி, தொலைக்காட்சி, தினசரிகள், கட்டில் போன்ற வசதிகளெல்லாம் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே சாதாரண விசாரணைக் கைதிகளென்றால் ஜட்டியுடன் நிற்கவைத்து மிரட்டி உருட்டி அனுப்புவார்கள். பிளாக்கில் நுழைந்த உடனே சீனியர் கைதிகள் என்னென்ன வேலை செய்ய வேண்டுமென்று பட்டியலிடுவார்கள். அதில் செல்லை பெருக்கி துடைப்பதும், கழிப்பறையை சுத்தம் செய்வதும் முதலில் இருக்கும்.

ஆனால் மேன்மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை. ரயிலிலோ, விமானத்திலோ, இல்லை சிறை என்றாலும் அவர்களுக்கு முதல் வகுப்புதான். முன்னர் ஒரு முறை சிக்கன நடவடிக்கை என்ற நாடகத்திற்காக அமைச்சர்களெல்லாம் விமானப் பயணத்தில் முதல் வகுப்பை தவிர்ப்பார்கள் என்று அறிவித்தது போல சிறையிலும் சிக்கன நடவடிக்கைக்காக முதல் வகுப்பு இல்லை என்று அறிவித்தால் வரும் அரசியல்வாதி, அதிகாரி, முதலாளிகளுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று புரியவைக்க முடியும்.

கனிமொழி கைதை வைத்து தி.மு.கவை எதிர்க்கும் பலரும் மிகப்பெரும் சாதனையை அடைந்து விட்டது போல துள்ளிக் குதிக்கிறார்கள். ஈழ ஆதரவாளர்கள் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக கருணாநிதியை பழிவாங்கிவிட்டதாக திருப்தி அடைகிறார்கள். இந்த சந்தோஷக்காரர்களுக்கு அரசியலின் அரிச்சுவடி கூட தெரியவில்லை என்பதோடு, அவர்கள் கொண்டிருக்கும் ஈழம், தி.மு.க எதிர்ப்பு குறித்தும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. குறிப்பிட்ட பிரச்சினையில் மக்களை அணிதிரட்டி தீர்க்க வேண்டிய பொறுமை வழிமுறைகளெல்லாம் இவர்களுக்கில்லை. ஏதாவது குறுக்கு வழியில் நடக்கும் நிகழ்வுகளை வைத்தே தீர்த்துவிடலாம் என நினைக்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் உச்சநீதிமன்ற ஆணைப்படி விசாரிக்கப்படுகிறது. பாராளுமன்ற கூட்டு விசராணைக் குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ராசா, அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவையெல்லாம் மத்திய அரசின் திட்டப்படி நடந்தவையல்ல. சில தற்செயலான நிகழ்வுகள் சேர்ந்து இந்த ஊழல் விவகாரத்தை இப்போதுள்ளபடி நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இதை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் இந்த விவாகாரத்தை தோண்ட தோண்ட அது ஊழலின் ஊற்று மூலமான முதலாளிகளை நோக்கி பாயும். அதனால் இந்த விவகாரத்தில் இத்தோடு விட்டுவிட்டு எப்படி கழண்டு கொள்ளலாம் என்பதே காங்கிரசு கும்பலின் கணக்கு.

இந்த பிரச்சினை தி.மு.கவிற்கும் தெரியும். மற்றவர்களெல்லாம் இதை வைத்து காங்கிரசு தி.மு.க பிளவு என்று சித்தரிக்க முயலும்போதெல்லாம் சில அப்பாவிகள் அப்படி நடக்குமென்று மகிழ்வுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் தி.மு.கவோ என்ன நடந்தாலும் காங்கிரசை விட்டுப் போகமாட்டோம் என்று பெவிக்கால் போல ஒட்டிக்கொண்டிருப்பதை இவர்கள் அறியவில்லை.

மன்மோகன் அரசாங்கத்தின் இரண்டாண்டு நிறைவு விருந்துக்கு கூட டி.ஆர் பாலு மரியாதையுடன் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த விருந்தில் ஊழலை ஒழிக்கப் போவதாக மன்மோகனும், சோனியாவும் பேசியது நல்ல தமாஷ். ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று காங்கிரசு கூட்டணி அரசின் ஊழல்களெல்லாம் வரிசையாக அணிவகுக்க அந்த அணிவகுப்பின் மரியாதை ஏற்பவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகிறார்களாம்.

எனவே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் இதற்குமேல் சூடு பிடிக்காமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பதே அவர்களது பிரச்சினை. அப்படித் தடுக்க முடியாவிட்டால் பல தலைகளோடு, பல அடிப்படை நிலைகளும் கேள்விக்குள்ளாக்கப்படும். ஆகவே இந்த விளையாட்டை பாதுகாப்பாக எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆனாலும் ராஜாத்தி அம்மாள் தனது மகள் சிறையில் சென்றது குறித்து கதறி அழுதாராம். கருணாநிதியும் தள்ளாத வயதில் டெல்லி சென்று சந்திக்கிறாராம். கனிமொழி கைதுக்காக டெல்லி சென்றதைக் கூட அவர் கூடவே ராசா, சரத்குமாரையும் பார்ப்பதற்காக செல்வதாக குறிப்பிட்டார். ராசா சிறைக்கு போய் இத்தனை நாளாகிறது. அப்போது தோன்றாத பாசம் இப்போது தோன்றிருப்பதாக கூறுவது நல்ல காமெடி.

கருணாநிதிக்கு இரண்டு குடும்பங்கள், எண்ணிறந்த வாரிசுகள், தி.மு.கவின் படுதோல்வி, பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்கள் இன்னபிற பிரச்சனைகளோடு கனிமொழி கைதும் சேர்ந்துவிட்டது. தயாளு அம்மாளின் வாரிசுகள் சம்பாதித்ததோடு பிடிபடவில்லை என்பதும் ராசாத்தி அம்மாளின் வாரிசு மட்டும் பிடிபட்டது என்றும் குடும்ப பூசல்கள். இதையெல்லாம் பார்த்தால் தமிழக மக்கள் அளித்திருக்கும் ஓய்வு என்பது கருணாநிதிக்கு அமைதியாக இருக்காது என்று தெரிகிறது.

இதில் கனிமொழி இரண்டு கோடி ரூபாய் கொடுத்து கலைஞர் டி.வியில் வலியுறுத்தி சேர்த்தது நான்தான் என்று வேறு உடன்பிறப்புக்கு கடிதம் எழுதுகிறார். ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டவன் என்று நிரூபணம் ஆகிய நிலையிலும் தன்னையும், தன் குடும்பத்தாரையும் எளிமை, அர்ப்பணிப்பு, தியாகம் நிறைந்த ஒழுக்கசீலர்களாக வெட்கம் கெட்டு சித்தரிப்பதற்கு அவர் கூச்சமே படவில்லை. தி.மு.கவின் இன்றைய பிழைப்புவாதத்தில் இத்தகைய அற உணர்ச்சிகளை எதிர்பார்ப்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போலத்தான்.

கருணாநிதியும், அவரது கட்சியும் கார்ப்பரேட் நலன் விரும்பும் சக்திகள் என்றாகிவிட்ட நிலையிலும் வட இந்திய ஊடகங்கள் தமது தமிழின விரோத வெறுப்பை கைவிடவில்லை. கனிமொழியின் கைதை காட்டிய, விவாதித்த வட இந்திய ஊடகங்கள் எல்லாம் அதை ஜன்மவிரோதத்தோடு சித்தரித்தன. தற்போது இலங்கையின் கஸ்டடியில் இருக்கும் கே.பியை வைத்து தி.மு.வின் பிராமண எதிர்ப்பு கொள்கையே ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு காரணம் என்ற காமடியையெல்லாம் ஒளிபரப்புகின்றன. கருணாநிதியே தான் பழை ஆள் இல்லை என்று கதறி அழுதாலும் இவர்கள் மன்னிப்பதாக இல்லை. திராவிட இயக்கத்தின் மீதான வன்மத்தை அவர்கள் எப்போதும் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________

ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை!

திகாரில் கனிமொழி! ராமச்சந்திராவில் ரஜினி! திமிரில் நித்தியானந்தா! -ராணா படத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஜினிக்கு உடல்நலமில்லை. முதலில் இசபெல்லாவிலும், தற்போது ராமச்சந்திராவிலும் சிகிச்சை பெறுகிறார். இந்தியாவில் பலருக்கும் குறிப்பாக பாமரருக்கு வரும் நிமோனியா காய்ச்சல் அவருக்கு ஒரு விபத்துப் போல வந்திருக்கிறது.

அவ்வளவுதான். ஊடகங்களில் எத்தனை எத்தனை செய்திகள், பிரேக்கிங் நியூஸ்கள், வதந்திகள், கிசுகிசுக்கள்…..? இந்த பியூஸ் போன நபருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

இசபெல்லாவில் இரகசியத்தை பாதுகாக்க முடியவில்லை என்று ராமச்சந்திராவில் ஒப்பந்தம் போட்டு சேர்த்தார்களாம். இரட்டை இலைக்கே ஓட்டுப்போட்டிருந்தாலும், தள்ளாத வயதில் எதிர்கால அரசியல் நலன்கருதி பார்க்க வந்த கருணாநிதியை ரஜினி மகள் பேசி அனுப்பிவிட்டாராம். மோடியையும், சந்திரபாபு நாயுடுவையும் சந்தித்த ரஜினி தன்னை ஏன் சந்திக்கவில்லை என்று கருணாநிதிக்கு கடுப்பாம்.

நாட்டில் காலரா, மலேரியா முதலான தொற்று நோய்கள் வந்து மருந்து மாத்திரைகள் கூட இல்லாமல் சாகும் மக்களைக் கொண்ட நாட்டில் ஒரு நட்சத்திர நடிகனுக்கு அபரிதமான முக்கியத்துவம். ரஜினி இட்டிலி சாப்பிட்டதையும், வாழைத்தண்டு இரசம் குடித்ததையும் தமிழக ஊடகங்கள் கூச்சமே இல்லாமல் பிரைம் டைம் செய்திகளாக்குகின்றன. ரசிகர்கள் யாகம் வளர்த்ததையும், அலகு குத்துவதையும் சொல்லி உசுப்பி விடுகின்றன.

பாபா படத்தின் போது கழுத்தில் போடும் டாலரைக்கூட டிசைன் செய்து அதற்கும் விலை வைத்து, மொத்தமாக சுருட்டலாம் என்று பிளான் போட்ட அக்மார்க் அவாள் மாமி லதா தினசரி வந்து ரஜினி நன்றாக நலமாக இருப்பதால் தமிழகம் எரிமலை போன்று வெடிக்க வேண்டியதில்லை என்று கூறுவதையெல்லாம் எப்படி சகிப்பது?

ரஜினி சற்று குணமான நிலையில் அமெரிக்காவிற்கு மேல்சிகிச்சைக்காக பயணம் செய்யப் போவதாக ஜூனியர் விகடன் குறிப்பிடுகிறது. ரஜினி சுத்தமான தேசபக்தர் என்பதால் இந்திய மருத்துவமனையின் சிகிச்சைகளை உதறிவிட்டு அமெரிக்காவிற்கு செல்வதை யாரும் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் ஒரு நிமோனியாக காய்ச்சலுக்கே அமெரிக்கா என்றால் யூரின் டிரபிள் என்றால் சிங்கப்பூர் செல்வார்களோ?

ரஜினி உடல்நிலை குறித்த வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை அதாவது இட்லி, வடை சாப்பிட்டது, ரசம் குடித்தது, குடும்பத்தோடு அரட்டை அடித்தது, ஐ.பி.எல் கிரிக்கெட் பார்த்தது எல்லாம் ஊடகங்களில் வரவேண்டுமென்று எந்த தமிழன் அழுதான்? இவை வரவில்லை என்றால் யார் குடியும் முழுகாது என்று தெரிந்தும் ஊடகங்கள் திட்டமிட்டே இதை காயத்ரி மந்திரம் போல வேளா வேளைக்கு ஒதுகின்றன.

தமிழகத்தில் செய்தி ஊடகங்களின் தரம் என்ன என்பதற்கு இந்த ரஜினி அக்கப்போரே சான்று. எனில் மக்களின் வாழ்வாதாரமான செய்திகள் என்றுமே இவற்றில் வரப்போவதில்லை என்பதற்கும் இதுவே ஆதாரம்.

________________________________________________________

அடங்கமாட்டியா நித்தியானந்தா? பார்ட் 2!!

திகாரில் கனிமொழி! ராமச்சந்திராவில் ரஜினி! திமிரில் நித்தியானந்தா! -தே தலைப்பில் முன்னரே எழுயிருந்தோம். இன்னும் எத்தனை தடவை அப்படியே எழுதுவது?

தி.மு.கவின் தோல்வியை தங்களது வெற்றியாக கொண்டாடும் பட்டியலில் பொறுக்கி நித்தியானந்தாவும் சேர்ந்திருக்கிறார். இவரது சாபத்தால்தான் தி.மு.க படுதோல்வி அடைந்திருக்கிறதாம். இந்த உண்மையை தனது பொற்கால ஆட்சிக்காக ஏங்கித்தான் தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று பேசும் புரட்சித் தலைவியின் காதில் யாராவது போட்டு வைத்தால்  அம்பிக்கு சட்னி நிச்சயம்.

திருவண்ணாமலையில் தரிசனம் கொடுத்த இந்த பொறுக்கி இன்னமும் தெனாவெட்டாக பேசியிருக்கிறார். ரஞ்சிதாவுடன் அவர் செய்த நடவடிக்கைகள் எல்லாம் மாஃபிங் செய்யப்பட்டதாம். வீடியோ படத்தில் இருப்பது அவரில்லையாம். அப்படியே இருந்தாலும் அதை கேட்க வேண்டியது நீதிமன்றம்தானாம். இப்படி ஃபுல் மப்பில் பேசக்கூடிய கருத்துக்களை இந்த சாமியார் நிதானமாகவே உதிர்த்திருக்கிறார்.

இத்தனை அம்பலப்பட்ட பிறகும் ஒரு மோசடிக்காரன் தனது காவி சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் எந்தப் பழுதுமில்லாமல் கட்ட முடிகிறது என்பதுதான் நாம் கவலைப்படத்தக்க ஒன்று. நித்தியானந்தாவின் பொறுக்கித்தனத்தை அடக்கப்பட்ட இளைஞனின் காமம் என்று அனுதாபப் பா வாசித்த நமது அண்ணன் சா.தமிழ்ச்செல்வன் இப்போது என்ன பா பாடுவார் என்பது தெரியவில்லை.

ஒரு சதுர இன்ச் கொண்ட பொருளை சக்தியாக்கி 2500 கி.மீட்டர் தொலைவுக்கு அனுப்பும் சாதனையை வரும் ஜூலை 15இல் இந்த அம்பி நடத்தப் போகிறாராம். இப்படி சக்தி உள்ள இந்த அம்பி அந்த பலான வீடியோவை அதுவும் படுக்கை அறைக்குள் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த காமராவை கண்டுபிடிக்க முடியவில்லையே? ஆய் போய்விட்டு கழுவத் தெரியாதவன் சூரியனுக்கு பேன் பார்த்த கதைதான். ஆனாலும் இந்த பொறுக்கி சாமியாருக்கு பணக்கார முட்டாள் பக்தர்கள் இருக்கும் வரையிலும் எந்தக் குறையுமில்லை.

கோயம்பேட்டில் மூட்டை தூக்கினால்தான் மூன்று வேளை சோறு என்று இந்த ஜன்மத்தை விட்டிருந்தால் கொஞ்சமாவது திருந்தியிருக்கும். அதை விடுத்து இன்னமும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாலாட்டு பாடும்போது நித்தியின் திமிர் புடைத்துக் கொண்டுதான் இருக்கும்.

_____________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சின்னக்குத்தூசி: தி.மு.க விற்குத் தேவைப்படாத சுயமரியாதை மறைந்தது!

35

சின்னக்குத்தூசி: தி.மு.விற்குத் தேவைப்படாத சுயமரியாதை மறைந்தது!
சின்ன குத்தூசி 1934-2011

சின்னக்குத்தூசி எனும் புனைபெயரில் தமிழக அரசியல் – பத்திரிகை உலகில் பிரபலமாக அறியப்பட்ட இரா.தியாகராஜன் 22.05.2011 அன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.

1934ஆம் ஆண்டு திருவாரில் பிறந்த சின்னக்குத்தூசி மாணவப் பருவத்தில் திராவிட இயக்கத்தின் வீச்சில் கவரப்படுகிறார். பின்னர் பள்ளி ஆசிரியராகவும், அதன் பின்னர் பல பத்திரிகைகளிலும் பணியாற்றிருக்கிறார். பல ஆண்டுகள் முரசொலியிலும் தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறார். ஜூனியர் விகடனிலும், நக்கீரனிலும் தொடர்களை எழுதியிருக்கிறார். கடந்த ஓராண்டாக பில்ராத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்த காலங்களிலும் எழுத்துப் பணியையோ நண்பர்களோடு உரையாடுவதையோ அவர் நிறுத்தவில்லை.

2000ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் திருவல்லிக்கேணி மேன்ஷனில் அவர் தங்கியிருந்த போது அடிக்கடி அவரைச் சந்தித்திருக்கிறேன். அப்போது பல அரசியல் கட்சியைச் சேர்ந்தோர், முன்னாள் இந்நாள் பத்திரிகையாளர்கள், அனவரும் நாள், கிழமை, நேரம் முறை வைத்து அவரை சந்திக்க வருவார்கள்.

பகல், மாலை, இரவு என எந்நேரமும் பலரோடு அவர் விவாதங்களில் ஈடுபடுவதைக் கண்ட நான் அவர் எப்போது படிக்கிறார், எழுதுகிறார் என்பதை ஆர்வத்துடன் கேட்டிருக்கிறேன். காலை நான்கு மணிக்கு எழுபவர் ஒன்பது மணிக்குள் படிப்பு, எழுத்து வேலைகளை முடித்து விடுவார். அவர் அறை முழுவதும் பத்திரிகைகளும், நூல்களும், கோப்புகளும் நிறைந்து இருக்கும். தினசரியில் வரும் செய்திகளை தலைப்புக்கேற்றவாறு கிழித்து அந்தந்த உறையில் போட்டு விடுவார். அதில் சர்வதேச அரசியல் முதல் மணிப்பூர், அசாம் என வடகிழக்கு மாநில அரசியல் வரை அனைத்தும் இருக்கும்.

இதுபோக அவர் நினைவாற்றலே ஒரு பெரும் நூலகம்தான். தமிழகத்தின் அறுபது ஆண்டுகால அரசியல் விவரங்களை எப்போது கேட்டாலும் சரளமாகச் சொல்வார். தனது செய்திக் கோப்புகளையும், மிகுந்த விட்ட நூல்களையும் பரமாரிப்பதற்கு அவர் என்றுமே அலுத்துக் கொண்டதில்லை. எழுத்துப்பணி, பொதுவாழ்க்கைக்காக திருமணமே செய்யாமல் வாழ்ந்த அவரது இறுதிக் காலத்தை நக்கீரன் கோபால் சிறப்பாகவே பார்த்துக் கொண்டார். இப்போது இறந்த பிறகும் கூட அவருக்கென்று உறவினர்கள் யாருமில்லை. அவரது உடல் கூட நக்கீரன் அலுவலகத்தில்தான் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலத்திற்கு சென்றது.

நான் அவரைப் பார்த்த காலத்தில் தி.மு.கதான் ஆளும் கட்சி. முற்பகலில் முரசொலி அலுவலகத்துக்கு சென்றுவிட்டு பிற்பகலில்தான் அறைக்குத் திரும்புவார். கருணாநிதியை அடிக்கடி சந்திக்க கூடியவர். எனினும் அந்த செல்வாக்கை தனது சொந்த நலனுக்கென்று பயன்படுத்திக் கொள்ளாதவர்.

90களின் துவக்கத்தில் ம.க.இ.க நடத்திய திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் குறித்து தொடர்ச்சியான அக்கறையை அவர் வெளிப்படுத்தினார். அப்போது தமிழகத்தில் ஜெயா ஆட்சி. பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து பார்ப்பன இந்து மதவெறி தலைவிரித்தாடிய காலம். அரங்கநாதன் கருவறைக்குள் பெரியார், அம்பேத்கரின் படங்களுடன் தோழர்கள் நிற்கும் புகைப்படத்தை சுவரொட்டியாக அச்சிடுவதற்கு அச்சக உரிமையாளர்கள் அஞ்சினர். இதைச் சொன்னவுடன், தானாக முன்வந்து உதவினார். அவர் காட்டிய ஈடுபாட்டின் காரணமாக, கருவறை நுழைவுப் போராட்டம் பற்றி  முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகள், தலையங்கங்கள் வந்தன. ஓராண்டுக்குப் பின் அந்த போராட்டத்தை நினைவு கூர்ந்து முரசொலியில் எழுதினார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து கருவறை நுழைவுப் போராட்ட வழக்கில் தீர்ப்பு வந்தபோது அதையும் முரசொலியில் பதிவு செய்தார். அதே போல ம.க.இ.க வின் தமிழ் மக்கள் இசைவிழாவை ஒட்டி, தமிழிசை மரபு பற்றியும் நக்கீரனில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

இவை எதுவும் “எழுதுங்கள்” என்று கேட்டுக் கொண்டதற்காக எழுதப்பட்டவை அல்ல, அவர் தானாகவே சொந்த ஈடுபாட்டின் பேரில் எழுதியவை. பார்ப்பனிய எதிர்ப்பை தி.மு.கவே கைவிட்ட நிலையில், ஒரு நக்சல் இயக்கம் அதனை மக்கள் திரள் இயக்கமாக கொண்டு செல்வது குறித்து அவருக்கு உண்மையிலேயே மகிழ்ச்சிதான். புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களையும் தொகுப்பாக்கி வைத்திருந்தார். ம.க.இ.கவின் பாடல் ஒலிப்பேழைகளை பலமுறை அவருக்கு அளித்திருக்கிறேன். அதை வாங்கி பலருக்கும் உற்சாகத்துடன் அறிமுகம் செய்தார். ஒவ்வொரு முறையும் அதற்கான பணத்தை வேண்டாமென்றாலும் “இலவசமாவா கட்சி நடத்துரீங்க” என்று வற்புறுத்தி அளிப்பார். பத்திரிகைகளையும் சில பிரதிகள் வாங்கிக் கொண்டு மறவாமல் காசு கொடுப்பார்.

அவரைப் பார்க்க பிரபலங்கள் வரும் போது,  நான் சற்றுத் தயக்கத்துடன் விடைபெறுவதாக சொன்னாலும், “பரவாயில்லை இருங்கள்” என்று அமர்த்துவார், அறிமுகப் படுத்துவார். ம.க.இ.க என்று சொன்னவுடன், கொஞ்சம் கோபமாகவும், கொஞ்சம் அசட்டுத்தனமாகவும் அவர்கள் ஏதாவது பேசினால், உடனே முன்னெச்செரிக்கையாக தலையிட்டு நிறுத்துவார். பொதுவுடமை கொள்கையில் தீவிரம் கொண்ட அதே நேரம் துடுக்காகப் பேசுகின்ற அவசரக்கார இளைஞனாகவே என்னை அவர் கருதியிருந்தார்.

சிலநேரம் அவர் பேசும் விசயங்கள் மூலம் நான் வாழ்ந்திராத திராவிட இயக்கத்தின் நாட்களை அனுபவித்திருக்கிறேன். அவற்றையெல்லாம் குறிப்புகளாகக் கூட எழுதி வைக்கவில்லையே என்று இப்போது வருந்துகிறேன். அந்தக்கால பாய்ஸ் கம்பெனி நாடகங்களின் திரைச்சீலைக்காக இந்து மத தெய்வங்கள் உருவங்களாக வரையப்பட்டு பின்னர் அவை சிவகாசி காலெண்டராக மாறி, பின்னர் நாம் காணும் இந்து மத தெய்வங்களாக கண்ணாடி பிரேமுக்குள் நுழைந்த கதையை அவர் விவரித்தது நினைவுக்கு வருகிறது. அவர் பேச ஆரம்பித்தால் அப்படியே நாம் அவரது நினைவுகளைப் பின்தொடர்ந்து திராவிட இயக்கத்தின் வரலாற்றுக் காலத்துக்குள் சென்று விடுவோம்.

பிறப்பால் அவர் ஒரு பார்ப்பனர் என்பது கூட பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் அதன் சுவடு கூட தெரியாமல் உண்மையாக வாழ்ந்த சுயமரியாதை இயக்கத்தின் அறிவாளி அவர். அவரது எழுத்துக்களை நக்கீரன் பதிப்பகம் பல நூல்களாக வெளியிட்டிருக்கிறது. அவரது தொடர் நக்கீரனில் வாரம் இருமுறை வருவது நின்று போய் ஒரு முறை என்று ஆனது. ஏனென்று கேட்ட போது படிப்பவர்களின் வரவேற்பு இன்மை என்று அவர் மிகவும் எதார்த்தமாக குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

சின்னக்குத்தூசியை பார்க்க வருபவர்கள் அனைவரும் “முன்னொரு காலத்தில் நல்ல அரசியல் இருந்தது” என்பன போன்ற மலரும் நினைவுகளையே பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் நான் அவருடன் தீவிரமாக விவாதம் செய்திருக்கிறேன். பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தது வரையிலான பல விசயங்களில் தி.மு.க சந்தர்ப்பவாத, பிழைப்புவாதக் கட்சியாக சீரழிந்ததை அவருடன் பேசியிருக்கிறேன். பேசி பலனில்லை என்றபோது நிறுத்தியிருக்கிறேன்.

அந்த விவாதங்களில் சின்னக்குத்தூசி தெரிவித்த இறுதிக் கருத்து என்னவென்றால், ” தி.மு.க போன்ற கட்சிகள் மக்கள் திரள் அரசியலில்(தேர்தல்) இருப்பதால் எந்த விசயத்தையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரம் கருதியோ, தூய கொள்கை காரணமாகவோ பேசிவிட முடியாது. மக்களுக்கு பொறுப்பான கட்சி என்பதால் சில விசயங்களில் நீக்கு போக்காகத்தான் இருக்க முடியும். அதே நேரம் ம.க.இ.க போன்ற இயக்கங்கள் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா, இல்லையா என்று கவலைப்படுவதில்லை (தேர்தல் புறக்கணிப்பு). எனவே சமரசமில்லாமல் தங்களது கொள்கைகளை பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாஸ் பொலிட்டிக்ஸ் என்று போனால் தி.மு.க  மாதிரி  தான் இயங்க முடியும்.” இதுதான் அவர் கருத்து.

இந்தக் கருத்து சின்னக்குத்தூசியின் கருத்து மட்டுமல்ல, போலிக் கம்யூனிஸ்டுகள், தலித் இயக்கத் தலைவர்கள் பலரும் தெரிவிக்கும் ஒன்றுதான். முக்கியமாக சந்தர்ப்பவாத அரசியல் அனைத்தும் இத்தகைய ‘கொள்கை’ விளக்கத்தில் முடிவதை பலமுறை பார்த்திருக்கிறேன்.

சின்னக்குத்தூசியிடம் இந்த கருத்தை குறிப்பாகவே விவாதித்திருக்கிறேன். “இந்துமதவெறி என்ற பதத்தைக்கூட தி.மு.க பயன்படுத்தாதற்கு காரணம் தேர்தலில் ‘இந்துக்கள்’ ஓட்டு போய்விடும் என்பது மட்டுமல்ல, இந்து வெறி தேவர் வெறி என்று மதம் சாதியின் பெயர் குறிப்பிட்டு பேசினால் திமுகவுக்கு உள்ளேயே பிரச்சினை ஏற்படும். மக்கள் மத்தியில் பிரச்சினையாகும் என்பது அடுத்த விசயம்தான். இந்துமதவெறி பாசிசம் குறித்த ம.க.இ.க வின் பிரச்சாரம் ‘இந்துக்களிடம்’ தான் செய்யப்படுகிறது. அதற்கு ‘இந்துக்கள்’ தான் ஆதரவும் நிதியும் அளிக்கின்றனர். மாஸ் பாலிடிக்ஸ் என்ற பெயரில் தமது சொந்த சந்தர்ப்பவாதத்துக்கு மக்களைப் பொறுப்பாக்க கூடாது” என்று விவாதித்திருக்கிறேன்.

சின்னக்குத்தூசி இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாதவரல்ல. ஆனால் அப்படிப் புரிந்து கொள்ள விடாமல் திமுக பாசத்தையும் விஞ்சிய ஒரு கலைஞர் பாசம் அவர் கண்ணை மறைத்தது. தி.மு.கவின் சந்தர்ப்பவாதங்களுக்கெல்லாம் தான் சப்பைக்கட்டுவது, நடுநிலையாளர்களிடம் கூட வெறுப்புணர்வை தோற்றுவிக்கிறது என்று தெரிந்த போதிலும், அவரால் அதிலிருந்து விடுபட முடியவில்லை.

திராவிட இயக்கத்திலும் சரி கம்யூனிஸ்டு  இயக்கத்திலும் சரி, இலட்சியத்தின் பால் மதிப்பு கொண்ட முதியவர்கள் சிலர் இருக்கின்றார்கள். தம்மளவில் நேர்மையாக வாழக்கூடிய அவர்கள்,  “கல்லானாலும் புல்லானாலும் இந்தக் கட்சிதான்” என்று ஒரு வகை கற்பு நிலையைப் பேணுகிறார்கள். தமது இலட்சியத்தில் கொண்டிருக்கும் பற்றுறுதி குறித்த மனநிறைவு மட்டுமே இவர்களது வாழ்க்கைக்கு ஒரு வகையில் அர்த்தம் தருகிறது. தனது கட்சியும் அதன் தலைவரும் கண் முன்னே சீரழியும் காட்சி அந்த அர்த்தத்தை அரித்துத் தின்கிறது.

திமுக வின் சமீபத்திய தேர்தல் தோல்வி கருணாநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல, சின்னக்குத்தூசிக்கும் அது ஒரு தனிப்பட்ட துயரமாகவே இருந்திருக்கும். கருணாநிதி குடும்பத்தினரின் துயரத்திற்கு  “பொருளாயத” அடிப்படை உண்டு. சின்னக்குத்தூசியின் துயரத்துக்கு கருத்தியலைத் தவிர வேறு எந்த அடிப்படையும் கிடையாது.

சின்னக்குத்தூசியின் மறைவு நம்மிடம் ஏற்படுத்தும் துயரமும் அத்தகையதுதான். பார்ப்பனிய எதிர்ப்பு, சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவு என்பன போன்ற நேர்மறை அம்சங்கள் திராவிட இயக்கத்திடமிருந்து ஏற்கெனவே விடைபெற்று விட்ட நிலையில், சின்னக்குத்தூசியும் விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.

அவரை இழந்ததால் வாடுவதற்கு அவருக்கு ஒரு குடும்பம் இல்லை. அவரது இழப்புக்காக வாடும் நிலையில் திமுகவும் இல்லை. நாம் வாடுகிறோம். அவ்வாறு உண்மையில் வாடுபவர்களுடன் நமது துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மே 18 – ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி ஆர்பாட்டம்

ன அழிப்பு போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்கவும், இனப்படுகொலைக்கு துணைநின்ற மன்மோகன் அரசை திரைகிழிக்கவும், ஈழமக்களது சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும் மே 18 அன்று ஆர்பாட்டம் நடத்தினர்.

படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

சென்னை

சென்னையில் சைதை பனகல் மாளிகை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளும், கூடவே சிறுவர்களும், பெண்களும் ஏராளமாகப் பங்குபற்றினர்.

மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம்மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம்மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம்மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம்மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம்

திருச்சி

திருச்சியில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சார்பாக கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய ஆர்ப்பாட்டம் புத்தூர் நாலு ரோடு பகுதியில் நடைபெற்றது.

மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம்மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம்மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம்மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம்மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம்

கோவை

கோவையில் புஜதொமு தோழர் விளவை ராமசாமி தலைமையில் ம.க.இ.க தோழர் மணிவண்ணன் உரையாற்ற மே 18 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போரை நடத்திய உலக நாடுகளைப் பற்றியும், ராஜீவ் சாகாவிடினும் தரகுமுதலாளிகளுக்காக இந்தப் போர் நடைபெற்றே தீரும் என்பதை விளக்கியும், உள்நாட்டில் இந்தியா தன் மக்கள் மீதே முதலாளிகளுக்கு ஆதரவாக தொடுத்திருக்கும் போர்கள் பற்றியும் விளக்கி தோழர்கள் உரையாற்றினர்.

மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி

மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி தர்ம்புரியில் ஆர்ப்பாட்டம்மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி தர்ம்புரியில் ஆர்ப்பாட்டம்மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி தர்ம்புரியில் ஆர்ப்பாட்டம்

தருமபுரியில் விவிமு தோழர்கள் காலை 11 மணிக்கு ராஜகோபால் பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை

போர்க்குற்றவாளியான ராஜபக்ஷே மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைத் தண்டிக்கக் கோரும் ஆர்ப்பாட்டம் மே 18 அன்று சிவகங்கை அரண்மனை வாயிலின் முன் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் இரண்டாமாண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் ம.க.இ.க வைச் சார்ந்த தோழர் மயில்வாகனன் உரையாற்றினார். புஜதொமு தோழர் ஆனந்த் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

தஞ்சை

மே 18 - ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

சி.பி.ஐ : சிரிப்புப் போலீஸ் ஆப் இந்தியா !

29

சி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. ஊர் நாட்டில் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் வீட்டிலிருந்து காணாமல் போன ஜிம்மியில்  ஆரம்பித்து லோக்கல் போலீசால் ‘கண்டு’ பிடிக்க முடியாத கோழி களவாணி வரை துப்புத் துலக்கிக் கண்டு பிடிக்கும் சூராதி சூரர்களாக இவர்களை ஊடகங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். கருணாநிதி வீட்டில் சி.பி.ஐ விசாரணை ரெய்டு என்றும் ஏதோ இந்த சூரப்புலிகளைப் பார்த்து கருணாநிதி குடும்பமே நடுநடுங்கி வீட்டின் மூலையில் குந்த வைத்து உட்கார்ந்திருப்பது போல தினமலர் அடிக்கடி குதூகலிப்பதையும் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

தமிழ்த் திரையுலகின் தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் சூப்பர் கமாண்டோவான கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் டில்லி சி.பி.ஐ அதிகாரியாகத் தோன்றி பாகிஸ்தான் தீவிரவாதியிடம் தங்கத் தமிழில் லெச்சர் அடித்தே டயர்டாக்கி மடக்கிப் பிடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். மலையாளத் திரைப்படங்களிலும் கூட மம்மூட்டி மோகன்லால் வகையறாக்கள் சி.பி.ஐ அதிகாரிகளாகத் தோன்றி உள்ளூர் போலீசால் கண்டே பிடிக்கமுடியாத பல்வேறு சிக்கலான வழக்குகளைத் தீர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஏதோ கோழியோ ஆடோ களவு போன மேட்டரில் சி.பி.ஐ விசாரணை கோரி தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் “அட விடுங்கப்பா… இவங்க எத்தனை ஊர் பஞ்சாயத்தைத் தான் தீர்க்க முடியும்” என்று சி.பி.ஐயின் மேல் கருணையோடு ஒரு நீதிபதி தீர்ப்பு கூட வழங்கியிருந்தார்.

இப்படியாக சி.பி.ஐ பற்றிய ஒரு பயங்கரமான இமேஜும், அவர்களின் விசாரணையின் மேல் மக்களிடையே ஒரு நம்பிக்கையையும் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதுக்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இப்படி ஊடகங்களாலும் சினிமா உலகத்தாலும் ஷெர்லக் ஹோம்சுக்கு இணையான துப்பறிவாளர்களாக ஜாக்கி வைத்து தூக்கிப் பிடிக்கப்பட்ட சி.பி.ஐ, சமீப நாட்களாக மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் அல்லாமல் எதார்த்தத்தில் சீரியஸான காமெடி பீஸ்களாகத் தான் இருக்கிறார்கள் என்கிற உண்மை இப்போது அம்பலமாகியிருக்கிறது.

ஹால் டிக்கட்டை மறந்து விட்டு பரீட்சைக்குப் போன கதை!

கிம் டேவி, புரூலியா, பீட்டர் ப்ளீச், ஆனந்த மார்க்கம் போன்ற பெயர்களை நீங்கள் மறந்திருக்கலாம்; எனவே ஒரு சிறிய நினைவூட்டல். 1995-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மேற்குவங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் திடீர் என்று ஒரு மர்ம விமானத்தில் வந்த சிலர் ஆயுத மூட்டைகளைப் போட்டனர். அப்போது அது தேசிய அளவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சமயத்தில் அம்மாநிலத்தில் அதிகாரத்திலிருந்த சி.பி.எம் கட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஆனந்த மார்க்கம் என்கிற தீவிரவாத சாமியார் கும்பலுக்குத் தான் இந்த ஆயுத மூட்டைகள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் ஆயுதத்தைப் போட்ட விமானம் திரும்பும் வழியில் மடக்கிய சி.பி.ஐ அதிகாரிகள், அதில் பயணம் செய்த விமானக் குழுவினரையும் ஆயுத வியாபாரி பீட்டர் ப்லீச் மற்றும் ஆயுதக் கடத்தலின் சூத்ரதாரியான நீல்ஸ் க்ரிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம் டேவியையும் கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்களில் கிம் டேவி ‘மர்மமான’ முறையில் தப்பியோடி விட்டான் என்று சொன்ன சி.பி.ஐ, அவனைத் தேடி உலகெல்லாம் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தது. சரி. அடுத்து கையிலிருக்கும் பீட்டர் ப்ளீச்சையாவது விசாரித்து தண்டித்திருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம் – மன்னிக்கவும். அவருக்கு ஜனாதிபதியின் மன்னிப்பை வாங்கிக் கொடுத்து பத்திரமாக வழியனுப்பி வைத்தது.

இதற்கிடையே இப்போது திடீர் ஞானோதயம் பெற்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ‘தலைமறைவாக’ இருக்கும் கிம் டேவியைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உதார் காட்ட ஆரம்பித்தது சி.பி.ஐ. இதைக் கேள்விப்பட்ட கிம் டேவி, கடந்த மாதம் இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் தோன்றி, தான் மறைந்து வாழவில்லையென்றும், பல ஆண்டுகளாக கோபன்ஹேகனில் தான் வாழ்ந்து வருவதாகவும், அங்கே பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டும் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கொண்டும் வெளிப்படையாகவே செயல்பட்டுக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தான் கோபன் ஹேகனில் இருப்பது சி.பி.ஐக்குத் தெரியும் என்றும் அப்படியிருந்தும், சி.பி.ஐ அதிகாரிகள் இந்திய மக்களின் வரிப்பணத்தில் தன்னைத் ‘தேடி’ இத்தனை ஆண்டுகளாக உலகச் சுற்றுலா போய்க் கொண்டிருந்தாரத்கள் என்று இந்திய துப்பறியும் புலிகளின் டவுசரைக் கிழித்தார்.

இன்னும் ஒரு படி மேலே போய், தான் ஒன்றும் தப்பிக்கவில்லையென்றும், தன்னை பாதுகாப்பாக நேபாள எல்லைக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்ததே சி.பி.ஐ தான் என்றும் உண்மையை போட்டு உடைத்தார். ஏனெனில் அப்போது மத்தியிலிருந்த காங்கிரசு அரசு மேற்கு வங்கத்திலிருக்கும் சி.பி.எம் அரசைக் கலைப்பதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்று, திட்டமிட்டே இந்த ஆயுதக் கடத்தலை நடத்தியதாகவும், அவர்கள் எதிர்பார்த்தது போல் நடவாமல் மொத்த திட்டமும் சொதப்பலாகி விட்டதால், தன்னை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க பயந்து கொண்டு தான் தன்னை பாதுகாப்பாக தப்ப விட்டனர் என்றும் சொல்கிறார்.

இதற்கு மேல் இவனை விட்டால் மிஞ்சியிருக்கும் கோவணத்தையும் உருவி விடுவான் என்று முடிவு கட்டிய சி.பி.ஐ, உடனடியாக கிம் டேவியை டென்மார்க்கிலிருந்து கைது செய்து அழைத்து வர ஒரு குழுவை அனுப்புகிறது. உடனே உங்களுக்கு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாதியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வரும் விஜயகாந்த் நினைவுக்கு வரலாம் – முதலில் அந்தக் கற்பனைகளை எல்லாம் ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இங்கேயிருந்து விமானம் ஏறி இன்னொரு நாட்டுக்கு பயங்கரமான தீவிரவாதியைப் பிடித்து வரப் போன சூரப்புலிகள் போகும் போது அதற்குத் தேவையான வாரன்டை எடுத்துப் போக ‘மறந்து’  விட்டார்களாம். ஏதோ ஹால் டிக்கட்டை மறந்து விட்டு பரீட்சைக்குப் போன அப்பாவி மாணவன் போல அங்கே  டென்மார்க் அதிகாரிகள் முன் பல்லைக் காட்டிக் கொண்டும் பின் மண்டையைச் சொறிந்து கொண்டும் இப்போது நின்று கொண்டிருக்கிறார்கள்.

இதுக்குப் பேசாமல் விஜயகாந்தையே அனுப்பியிருக்கலாம். டென்மார்க் காவல் துறையினரிடம் தமிழில் வாதாடி தீவிரவாதியை மட்டுமல்ல எக்ஸ்ட்ரா பிட்டிங்காக அந்த நாட்டு பிரதமரையே கூட தூக்கி வந்திருப்பார். இப்ப பாருங்க வட போச்சு.

ஊரெல்லாம் தேடிவிட்டு தன் தொப்பைக்குக் கீழே குனிந்து பார்க்க மறந்த கதை

சமீபத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட உடன், பாகிஸ்தானில் தான் உலகத்துத் தீவிரவாதிகளெல்லாம் இருப்பது போலவும் ஒரு சீன் போட்டது இந்திய வெளியுறவுத்துறை. இதற்காக பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் ‘அதிபயங்கரமான ஐம்பது தீவிரவாதிகள்’ பட்டியல் ஒன்றைத் தயாரித்த உள்துறை அமைச்சகம், அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து இவர்களைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து களத்திலிறங்கிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள், தமது பஜனையை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் வாஜுல் காமர் கான் என்பவர், மும்பையின் அருகே உள்ள தானேவில் தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை ஊடகங்களில் அம்பலமானது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் செட்டிநாட்டுச் சிதம்பரம், இது ஏதோ சின்னத் தவறு தான் என்றும், தெரியாமல் நடந்து விட்ட இத்தவறைப் பற்றி தீவிரமாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதாகவும், நடந்ததற்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.

அவர் சொல்லி வாய் மூடவில்லை. அதற்குள் அதே பட்டியலில் இருக்கும் இன்னொரு தீவிரவாதியான பெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில் தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமாகிறது. முதல் நபராவது ஒளிந்து வாழும் நபர். இரண்டாவது நபரோ ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்.

ஏற்கனவே கைதான பெரோஸ் கான் மீது சர்வதேச போலீஸில் சொல்லி ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது சி.பி.ஐ. அது மட்டுமல்லாமல், இந்தியச் சிறையிலிருக்கும் இந்த நபர் பாகிஸ்தானில் ‘ஒளிந்து’ கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தான் அரசு இந்தத் தீவிரவாதியைப் பிடிக்க ஒத்துழைக்கவில்லை என்றும் எனவே பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்றும் தீவிரமாக பிரச்சாரமும் செய்து வந்தது.

தேடப்படுவது யார் பிடிபட்டது யார் என்கிற சாதாரண விவரத்தைக் கூட சரிபார்க்கத் துப்பில்லாத இந்த விசாரணை அமைப்பு தான் ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேடுகளை விசாரித்து வருகிறது என்பதை வாசர்களுக்கு நினைவூட்டுகிறோம். தீவிரமான போலீஸ் பயிற்சி, ஒற்றறிவதிலும், உளவுத் தகவல்களைச் சேகரிப்பதிலும், விசாரணை முறைகளிலும் உலகத்தரமான பயிற்சி, என்று சகல வகைகளிலும் தேர்ச்சி பெற்ற தொழில் முறை நிறுவனமே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, அண்ணா ஹசாரே உருவாக்க நினைக்கும் ஜன் லோக்பால் விசாரணை அமைப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

சி.பி.ஐ, ஐ.பி, என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளும் உளவுப் பிரிவும் உண்மையில் குற்றத்தடுப்பு, உண்மையைக் கண்டறிதல் என்கிற மக்கள் நல நோக்குக்காக இல்லாமல் வெறும் ஆளும் வர்க்க சேவைக்கென்றே வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதன் விளைவு தான் இப்போதைய இந்த அவமானங்களுக்குக் காரணம். ஃபோபார்ஸ் முதல் ரிலையன்சு வரை பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளிகளையும், முதலாளிகளையும் காப்பாற்றிய நிறுவனம்தான் இந்த சி.பி.ஐ.

ஆட்சிக்கு எதிரானவர்களைக் கண்காணிப்பது, மிரட்டுவது என்பதற்காகவே பயன்படுத்தப்படும் இந்தக் கருவிகள், என்ன தான் பயிற்சியளிக்கப்பட்டாலும் கடைசியில் இப்படி காமெடிப் பீஸுகளாக சீரழிந்து போவது தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம். லோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்!

80
வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்! – திரைவிமரிசனம்

 வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்! – திரைவிமரிசனம்

மகால தமிழ் சினிமாவின் முன்னுரிமை என்பது வெகுமக்கள் ‘ரசனையை’ அடிப்படையாகக் கொண்டது. ’மக்கள் எதை விரும்புறாங்களோ, அதைத்தான் நாங்க சினிமாவில் காட்டுறோம்’ என்பது சினிமாக்காரர்களின் டெம்ப்ளேட் ஸ்டேட்மெண்ட். ’சமூகத்தின் விருப்ப ரசனையை நாங்கள் காட்சிப் படுத்துகிறோம்’ எனச் சொல்லும் இவர்கள், அதில் எந்த அளவுக்கு நேர்மையோடு இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம். அன்றாடம் நாம் காணும் புறவயமான உண்மைகளை, சமூக யதார்த்தங்களை திரையில் கொண்டு வருகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை. தற்போது வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் ’வானம்’ திரைப்படம், மேற்கண்ட புள்ளிகளில் இருந்து விலகி, சமகால இந்தியாவை அதன் அசல் முகங்களோடு அணுகுகிறது.

ஐந்து வகை இந்தியா… ’வானம்’ கதையை இப்படி சுருக்கமாக மதிப்பிடலாம். ஆந்திரா, பெங்களூரூ, கோவை, தூத்துக்குடி, சென்னையின் சேரி என அசலான ஐந்து வகை இந்தியாவிலிருந்து பல்வேறு பிரச்சினைகளுக்காக ஐந்து வகையான பாத்திரங்கள் சென்னையை நோக்கி வருகிறார்கள். விபச்சாரி, யுப்பி வகை மேல்தட்டு இளைஞன், குப்பத்து ஏழை இளைஞன், வறுமையில் வாடும் நெசவாளி, நேர்மையாக வாழும் நடுத்தர வரக்க முசுலீம் என்று அந்த ஐந்து பாத்திரங்களும் சமகால இந்தியாவின் கதைகளை விவரிக்கின்றன.ஒரு திரைக்கதைக்குள் ஐந்து கதைகளைத் தனித்தனியே விவரித்து, அதன் இயல்பில் எதிர்பாராப் புள்ளி ஒன்றில் ஐந்தையும் சந்திக்க வைத்திருக்கும் இந்த திரைக்கதை யுத்தி வடிவத்தில் மட்டுமல்ல, அது எடுத்துக் கொண்ட பேசு பொருளுக்காகவும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. தெலுங்கில் ‘வேதம்’ என்னும் பெயரில் வெளியான இந்த படத்தை இயக்கிய க்ரிஷ் என்பவரே தமிழிலும் இயக்கியிருக்கிறார்.

நகர்ப்புற குப்பத்து இளைஞனாக வரும் சிம்புவின் பாத்திரப் படைப்பு ஒரு துல்லியமான சித்திரம். குப்பத்தில் பிறந்தாலும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் சிம்புவுக்கு கோடீஸ்வர பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. அவள், புத்தாண்டில் ஒரு  பார்ட்டிக்கு அழைத்துப் போகச் சொல்கிறாள். பார்ட்டிக்குச் செல்வதற்கு ஒரு இரவுக்கு 40 ஆயிரம் கட்டணம். இந்தப் பணத்தை ஏதேனும் ஒரு வழியில் சம்பாதிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் இருந்து செயின் அறுப்பது, திருடுவது என எந்த எல்லைக்கும் போகிறார் சிம்பு.

இன்றைய நகர்ப்புறத்து இளைஞர்களின் வாழ்க்கை அவர்கள் ஏழைகளாகவே இருந்தாலும், நுகர்வு கலாசாரத்துடன் பின்னி பிணைந்திருக்கிறது. அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும், வாழ விரும்பும் வாழ்க்கைக்குமான தொலைவு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த மனப்போராட்டத்தில் தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களை போக்கும் வழிமுறைகளை ஆராயாமல், எதை செய்தேனும் நவீன வாழ்வின் இன்பங்களை சுகிக்க வேண்டும் எனும் வேட்கை இளைஞர்களின் மனங்களில் விதைக்கப்படுகிறது. அதற்காக அவர்கள் எந்த எல்லைக்குச் செல்லவும் தயங்குவதில்லை.

இதை, செயின் அறுக்கும் சிம்புவின் பாத்திரத்தோடு நேரடியாக பொருத்திப் புரிந்துகொள்வது ஒரு பக்கம்.. மறுவளமாக பார்த்தால் உழைப்பு, மேலும் உழைப்பு, மேலும் மேலும் உழைப்பு என தன்னைத்தானே வருத்திக்கொண்டு உழைத்து, தான் ஆசைப்பட்ட சுகவாழ்வை அடைவது இன்னொரு பக்கம். தனது உழைப்புக்கும், சம்பளத்துக்குமான இடைவெளி அதிகமாய் இருப்பதைப் பற்றியும், தான் சுரண்டப்படுவது பற்றியும் இவர்கள் யோசிப்பதில்லை. மாறாக, மேற்கொண்டு ஓவர்டைம் செய்து கூடுதலாக சில ஆயிரம் சம்பாதித்துவிட முடியாதா என்றுதான் தேடித் திரிகின்றனர். இப்படி நுகர்வுக் கலாசாரம் தின்று துப்பிய சக்கைகளாய் மாற்றப்பட்டிருக்கும் இன்றைய நகர்ப்புறத்து அடித்தட்டு இளைஞர்களின் பிரதிநிதிதான் சிம்பு.

பொதுவாக தமிழ் சினிமாவில் குப்பத்து இளைஞர்கள் என்றால் அவர்களை அரசியல்வாதிகளின் அடியாட்களாக மட்டுமே சித்தரிக்கும் போக்கில் இருந்தும் இப்படம் விலகி நிற்கிறது. உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் விட்டேத்தியான இளைஞர்களாக சிம்புவும், சந்தானமும் வருகிறார்கள். இவர்கள்தான் இன்றைய சேரிகளின் யதார்த்தம் என்பதை யதார்த்தமாகவே காட்டியிருக்கிறார்கள். அவர்கள் பேசும் பல வசனங்கள் மிக கூர்மையாகவும், இயல்போடும் இருக்கின்றன. ‘சாவு நல்லாயிருக்கனும்னாக் கூட பணம் வேணும் போலருக்குதே’ என்பதில் தொடங்கி, ‘பணக்காரன்னா சிரிக்க மாட்டான், கை தட்ட மாட்டான், விசில் அடிக்க மாட்டான்’ என்பது போன்ற பல இடங்கள் குறிப்பிடத்தக்கவை.

சிம்புவுக்கும் பணக்காரப் பெண்ணுக்குமான காதல் என்பதும் வழக்கமான தமிழ் சினிமாவின் தன்மையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதே. காதலுக்காக எதையும் செய்யலாம் என புனிதப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், ஒரு ஏழை இளைஞனின் கோணத்தில் இருந்து பணக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என கணக்குப் போடுவதும், கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் அந்தப் பெண் பார்ட்டிக்கு பாஸ் வாங்கும் 40 ஆயிரம் பணத்துக்கு சிம்புவைவே முழுக்க டார்ச்சர் செய்வதும்… காதல் என்பது காரியவாதமாக மாறிவிட்டிருப்பதையே நினைவூட்டுகிறது. தமிழ் சினிமா சித்தரிக்கும் ‘புனிதக்’ காதலில் இருந்து இந்தக் காதல் நிச்சயம் மாறுபட்டிருக்கிறது.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் சொந்த ரசனையை மட்டுமே பெரிதெனப் பேசித் திரியும் பரத் பாத்திரம் மேல்தட்டு இளைஞர்களின் அசல் பிம்பம். பல பணக்கார நண்பர்கள் தங்களின் மிகப்பெரிய சோகமாக சொல்லும் விஷயங்களைக் கேட்டால் நமக்கு சிரிப்பு வரும். ‘நான் நாலு வருஷம் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அப்போ நானே துணி துவைப்பேன். நல்ல ஹோட்டலைக் கண்டுபிடிச்சு சாப்பிடுறதே பெரிய டார்ச்சரா இருக்கும். ஆனால், நான் அவ்வளவு கஷ்டப்பட்டது எங்க வீட்டுக்குக் கொஞ்சம் கூடத் தெரியாது.’ என்று சொன்னார் பணக்கார பிரபலம் ஒருவர். துணி உடுத்துவதும், உணவு உண்ணுவதுமே கனவாக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் அந்த வசதிகளை அனுபவிப்பதில் ஏற்படும் சிறிய வசதிக் குறைபாடுதான் அவர்கள் வாழ்வின் மிகப்பெரிய சோகம் என்றால்… என்ன சொல்வது?

பரத் அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர். இறந்து விட்ட தந்தையைப் போல இராணுவத்தில் சேருவதற்கு தாய் வற்புறுத்துவதை அவர் மறுக்கிறார். இசைதான் தனது எதிர்காலம் என்று கூறுகிறார். ஓர் இசை நிகழ்ச்சிக்காக பெங்களூரில் இருந்து தன் குழுவுடன் சென்னையை நோக்கி காரில் வரும் பரத், லாரி டிரைவர் சிங் ஒருவரை ஓவர்டேக் செய்யும் முயற்சியில் ஒரு விபத்தை ஏற்படுத்துகிறார். பலர் அடிபட்டு சாலையில் விழ, அதைப்பற்றி கவலையேப்படாமல் காரை ஓட்டிக் கடந்துபோகிறார். ’காப்பாற்ற வேண்டாமா?’ என்கிறாள் கூடவே வரும் தோழி ‘அதுக்கெல்லாம் ஆள் இருப்பாங்க. பார்த்துப்பாங்க’ என்கிறார் பரத்.

தன்னால்தான் அந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்ற குற்ற உணர்வு கூட இல்லாமல், அடிபட்ட மனிதர்களை காப்பாற்ற வேண்டும் என்பதையே அலட்சியமாக கருதும் அவரது நடத்தைதான் பணக்கார இந்திய இளைஞர்களின் பொதுப் பண்பு. மும்பையிலோ, டெல்லியிலோ அதிநவீன பி.எம்.டபிள்யூ காரில் குடி போதையில் அதி வேகத்துடன் ஓட்டி பாதசாரிகளைக் கொல்லும் இளைஞர்களெல்லாம் வேறு எப்படி இருப்பார்கள்? ஜெசிகாலால் எனும் மது பரிமாறும் பெண்ணைக் கொன்ற மனுசர்மா எனும் அதிகார வர்க்கத்து இளைஞன் மிகச்சாதாரண விசயத்துக்காக கோபம் கொண்டு துப்பாக்கி எடுத்தவன். பரத்தின் இந்த சுபாவம் கண்டு அவனது தோழி வருத்தம் கொள்கிறாள்.

அதையே அவனிடமும் தெரிவிக்கிறாள். அவனிடம் ஏதோ கொஞ்சம் மியூசிக் சென்ஸ் இருக்கிறது என்றாலும் அவன் பாடும் போது உணர்ச்சியில் தோய்ந்து பாடுவதில்லை என்று கூறுகிறாள். அந்த உணர்ச்சியற்ற பாவனைக்கும், சக மனிதர்களது துக்கத்தை உணர்ச்சியற்று பாராமுகமாக இருப்பதற்கும் தொடர்பு இருப்பதை அந்த அழகான காட்சி கவித்துவமாக உணர்த்துகிறது.

எந்த சிங் டிரைவரை முந்திச் சென்று பரத் விபத்தை ஏற்படுத்துகிறாரோ, அதே சிங்-தான் பிற்பாடு பரத்துக்கு காவி காலிகளால் பிரச்னை ஏற்படும்போது தைரியத்துடன் இறங்கி நின்று அவர்களை அடித்து விரட்டி பரத்தின் உயிரை காப்பாற்றுகிறார். இதில் குறிப்பாக பரத் – வேகா இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ’ஃப்ரெண்ட்ஸா இருந்தா ராக்கி கட்டு. காதலர்கள்னா தாலியைக் கட்டு’ என பிரச்னை செய்கிறது இந்துத்துவ ரவுடிக் கும்பல். ’என்ன பாஸ் இதெல்லாம்?’ என அதிர்ச்சியாகும் பரத்தும், வேகாவும் முதல் முறையாக இப்படிப்பட்ட இந்துத்வ வன்முறையை எதிர் கொள்கின்றனர். இந்த அடாவடித்தனத்தை நிஜமாகவே வருடா வருடம் செய்யும் ஸ்ரீராம் சேனா, இந்து முன்னணி காலிகள் நம் நினைவுக்கு வருகிறார்கள். கர்நாடக எல்லையில் நடக்கும் அந்த சம்பவம் திரைக்கதையில் உண்மையென நம்புமளவு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த காவி ரவுடிகளின் வன்முறையை எதிர்த்துத் தாக்கி பரத்தையும் அவரது காதலியையும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிங் காப்பாற்றுகிறார். அதன்மூலம் பரத்தின் சுயநலப் பண்பு கடும் குற்ற உணர்ச்சி கொள்கிறது. அதற்கு பின் ஒரு சில நிமிடங்களே வரும் பாடலில் முதன்முறையாக பரத் உணர்ச்சி பாவத்துடன் பாடுகிறார். பாடல் வரிகளோ சக மனிதன் துன்பம் கண்டு ஒரு துளி கண்ணீரையாவது சிந்தும் மனிதாபிமானத்தை குறிக்கிறது. பெங்களூரூ நட்சத்திர விடுதிகளில் ராக், பாப் டான்சில் படுவேகமாக கிதாரை மீட்டி கடுமையான முகபாவனையோடு பாடும் இல்லை கத்தும் பரத் இங்கே மென்மையான அசைவில் பாடல் வரிகளோடு தோய்ந்து பாடுகிறார். படத்தில் இது ஒரு கவித்துவமான காட்சி.

பாலியல் தொழிலாளியாக வரும் அனுஷ்காவின் பாத்திரமும், ஊரும் தமிழ்ச் சூழலுக்கு அந்நியமாக இருந்தாலும் காவல்துறையினருடன் அவர் பேசும் பல வசனங்கள், குறிப்பாக… ‘நாங்க டிரஸ்ஸை அவுத்துட்டு செய்யுறதை நீங்க டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டு செய்யுறீங்க’ போன்றவை கூர்மையானவை. ஆந்திரா எல்லையில் ஒரு விபச்சார கும்பலில் மாட்டிக் கொண்ட அனுஷ்காவும், அவரது தோழியான திருநங்கையும் அந்த கும்பலிடமிருந்து தப்பி சென்னையில் தனியாக தொழில் நடத்த ரயிலேறுகிறார்கள். திருநங்கை ஒருவருக்கு ஹீரோயின் முத்தம் இடும் காட்சி அநேகமாக தமிழ் சினிமாவில் இது முதல்முறையாக இருக்கக்கூடும். இறுதிக் காட்சியில் இந்த தொழிலை விட்டுவிட்டு ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று அவர்கள் மறைகிறார்கள்.

கிராமப்புறங்களில் வாழ வழியற்று கந்துவட்டிக்கு பணம் வாங்கி, அந்தக் கடனை அடைப்பதற்கு மகனை அடகு வைத்து, அவனை மீட்பதற்கு கிட்னியை விற்று… என விவரிக்கப்பட்டிருக்கும் சரண்யாவின் பாத்திரத்தைப் பார்த்து, ‘இப்படியெல்லாமா நடக்குது?’ என்று பலர் நினைக்கக்கூடும். இந்தக் கதையிலாவது சரண்யா, தனக்குத் தெரிந்து தன் கிட்னியை விற்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையின் புகழ்பெற்ற மருத்துவமனைகள், பல அப்பாவி ஏழைகளிடம் அவர்களுக்கேத் தெரியாமல் கிட்னித் திருடிய கதைகளை நாம் படித்திருக்கிறோம். ’இந்தியா முன்னேறுகிறது, தொழில்வாய்ப்புகள் பெருகிக்கிடக்கின்றன’ என பிரசாரம் செய்யப்படும் இதே இந்தியாவில்தான் விவசாயம் பொய்த்துப்போய் வறுமையில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கிறது. சரண்யாவும் அவரது வயதான மாமனாரும் சென்னை வந்து கிட்னி விற்க முனையும் காட்சிகள் யதார்த்தமாகவும், ஏழ்மையில் அவலத்தை கூர்மையாகவும் காட்டுகின்றன.

‘வானம்’ படத்தின் மற்றொரு முக்கியமானதும், சிக்கலானதுமான பாத்திரம் பிரகாஷ்ராஜினுடையது. ’இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் உருவாதவதற்கான காரணமாக இருப்பது இந்துத் தீவிரவாதமே’ என்ற கருத்து முதல்முறையாக தமிழ்த் திரையில் மிக வெளிப்படையாகப் பேசப்படுகிறது. ஒரு சராசரி இஸ்லாமிய நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இந்து தீவிரவாதத்தின் வேர்களையும், அது இஸ்லாமிய தீவிரவாதத்துக்கான காரண சக்தியாக எப்படி விளங்குகிறது என்பதையும் ஓர் எளிய கதையோட்டத்தில் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் க்ரிஷ்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கும் தெரு வழியே கர்ப்பிணி மனைவியுடன் டூ-வீலரில் போகிறார் பிரகாஷ்ராஜ். இந்துத்துவ காலிகள் பிரகாஷ்ராஜின் மனைவியை வம்புக்கு இழுத்து அனைவரையும் அடித்து நொறுக்குகின்றனர். அவரது மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை கலைந்துவிடுகிறது. இதில் தானும் அடிவாங்கி தன்னால் எதையும் செய்ய முடியாத பிரகாஷ்ராஜின் தம்பி, இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் ஒன்றில் சேர்கிறார்.. என்பதாகப் போகிறது பிரகாஷ்ராஜ் அத்தியாயத்தின் கதை.

3 வருடம் கழித்து தனது தம்பியைத்தேடி பிரகாஷ்ராஜூம் அவரது மனைவியும் சென்னை வருகிறார்கள். கோவையில் அவரை அடித்து நொறுக்கும் இந்துத்வ ஆதரவாளரான போலீஸ் ஒருவன் சென்னையில் அவரை தீவிரவாதியாக்கி கைது செய்கிறான். அப்பாவி முசுலீம்கள் அதிகார வர்க்கத்தால் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை பிரகாஷ்ராஜின் பாத்திரச் சித்தரிப்பு நேர்மையாக உணர்த்துகிறது.

பிரகாஷ்ராஜின் ஊர் கோயம்புத்தூர் என்பதில் தொடங்கும் அரசியல் மொத்த படத்திலும் தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இந்த பாத்திரத்தின் மீது விமர்சனங்களை வைக்கும் சிலர், “இந்துக்கள் தங்களது ஊர்வலத்தின் இடையில் புகுந்த இஸ்லாமியர்களை மதவெறியோடு அடித்தார்கள். ஆனால், அதற்கு பழிவாங்கும் முஸ்லீம்களோ பல ஆயிரம் அப்பாவி மக்கள் ஒன்றுகூடும் மருத்துவமனையில் குண்டு வைக்கிறார்கள் என்று நிறுவுவதுதான் இந்த கதையின் அபாயகரமான அரசியல். அதாவது இந்துக்களுடையது மதவெறி ; இஸ்லாமியர்களுடையது தீவிரவாதம் என்றுதான் படம் சொல்கிறது” என்கிறார்கள்.

இதை நாம் ஒரு பகுதி அளவில் பரிசீலிக்க வேண்டும் என்றாலும் ஒட்டுமொத்த படத்தையும் பார்க்கும்போது இயக்குநருக்கு இப்படி நிறுவுவதற்கான அடிப்படைகள் இருப்பதாக தோன்றவில்லை. அதுபோலவே, பிரகாஷ்ராஜ் குடும்பம் மீது நிகழ்த்தப்படும் வன்முறையையும், இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் எதிர்வன்முறையையும் இணை வைத்துப் பார்க்கத் தேவையில்லை என்றே கருதுகிறோம். ஏனெனில் கதையில் சொல்லப்பட்டிருக்கும் அம்சங்களின்படி, இந்துக்களின் தீவிரவாதம், ஒரு சமூக வன்முறையாகவும், முஸ்லீம்களின் எதிர்வன்முறை தனிப்பட்ட தீவிரவாதக் குழுக்களுடையதாகவுமே சித்தரிக்கப்படுகிறது. எனினும் இறுதிக்காட்சியில் சில தீவிர இசுலாமிய இளைஞர்கள் மருத்துவமனையில் இருக்கும் பொதுமக்களை காக்காய் குருவி போல சுட்டுக் கொல்வது பொருத்தமாக இல்லை. இயக்குநர் அதை மும்பை தாக்குதலிருந்து எடுத்திருக்கலாம் என்றாலும் அந்தக் களம் வேறு. கோவையிலிருந்து வரும் ஒரு முசுலீம் இளைஞனது பார்வையில் இப்படி நடந்ததாக காட்டுவது பொருத்தமாகவும் இல்லை, சரியாகவும் இல்லை.

’வானம்’ படத்தின் மிக முக்கிய அரசியலாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, போலீஸின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தி இருப்பதைத்தான். பிரகாஷ்ராஜின் கதையில் இந்திய இந்து மனநிலையின் கூட்டுவன்முறை மட்டும் சொல்லப்படவில்லை… அதற்கு இசைவான வகையில், இந்துத்துவத்தின் மொத்த அஜண்டாவையும் நிறைவேற்றித் தரும் கூலிப்படையாக இந்தியக் காவல்துறை எப்படி செயல்படுகிறது என்பதும் தெளிவாக விவரிக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டராக வரும் நபர் அப்படியே ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து நேரடியாக கிளம்பி வந்தது போலவே இருக்கிறார். அதைப்போலவே அனுஷ்காவிடம் பணம் பிடுங்கும் இன்ஸ்பெக்டர் ராதாரவியின் பாத்திரம், அதே ராதாரவி பாத்திரம் சிம்புவிடம் பணம் பிடுங்குவது, மாமியிடம் போனில் பம்முவது…  என அனைத்தும் நுணுக்கமான பதிவுகள்.

சில கதைக்களங்களின் அந்நியத்தன்மை, அவசியம் இல்லாத, ரசிக்கவும் முடியாத பாடல்கள், இழுத்தடிக்கப்படும் இறுதி மருத்துவமனைக் காட்சிகள் போன்றவற்றை விட, படத்தின் அபாயகரமான அம்சம் அதன் இறுதிக் காட்சிகள்தான். ஐந்து வகை இந்தியாவின் பிரச்னைகளை ஐந்து கதைகளாக சொல்லிக்கொண்டு வரும் இயக்குநர் கடைசியில் ஐந்தையும் ஒரு அரசியலற்ற வெறும் மனிதாபிமான செண்டிமெண்டில் இணைக்கிறார். ஐந்துக்குமான தீர்வாக செண்டிமெண்டையே முன் வைக்கிறார்.

அப்பாவியான தன்னை தீவிரவாதி போல சித்தரித்து கொடுமைபடுத்தும் இந்துத்வ இன்ஸ்பெக்டரை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிறார் பிரகாஷ்ராஜ். இதைப்பார்த்து மட்டும் அந்த ஆர்.எஸ்.எஸ் இன்ஸ்பெக்டர் திருந்துகிறார் என்றால் பொருள் என்ன? அப்பாவி முசுலீம்கள் அனைவரும் இப்படித்தான் இந்துமதவெறியர்களை திருத்த வேண்டுமென்றால் ஒவ்வொரு திருந்தலுக்கும் ஒரு சில முசுலீம்கள் சாகவேண்டுமோ? இந்து மதவெறி வெறும் மனிதாபிமானத்தால் மட்டும் திருத்தப்படும் ஒன்றல்ல. அது உழைக்கும் மக்களை அணிதிரட்டி வன்முறை மூலம் ஒழிக்கப்பட வேண்டிய கிருமி.

இதைத்தவிர இந்தப்படம் சமகாலத் தமிழ்ப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் யதார்த்தமான கதைக் களங்களிலிருந்து பயணிக்கிறது. ஐந்து வகை இந்தியாவையும் காட்சிப்படுத்தியதிலிருந்து, கதையை கொண்டு போன விதத்திலும் சரி நாம் அசலான இந்தியாவைப் பார்க்கிறோம். அரசியல் களங்களை கதையாகக் கொண்டு அதை சுவராசியமான கதை சொல்லல்  காட்சிகளின் மூலம் படமாக்கியிருக்கும் இயக்குநர் க்ரிஷ் உண்மையிலேயே ஆச்சரியமான இயக்குநர்தான். அவருக்கும், படக்குழுவினருக்கும் நமது வாழ்த்துக்கள்!

________________________________________________________________

– வெற்றிவேல்
_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஏகாதிபத்தியங்களின் நெருக்கடியை தீர்க்க அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு போர்கள்!

2

எண்ணை யுத்தத்தின் பின்னணியில்… (பகுதி 1)

பிரித்தானியாவில் உழைக்கும் மக்கள் போராடிப்பெற்ற சமூகப் பாதுகாப்பு மற்றும் உதவித் திட்டங்களை அந்த நாட்டின் கூட்டரசாங்கம், ஒவ்வொன்றாக அழித்து வருவதற்கு எதிராக ஒவ்வொரு நாளும் எங்காவது ஒரு மூலையில் மக்கள் போராடுகிறார்கள். சுகாதார சேவை தனியார் மயமாக்கப்படு, மக்களின் உயிர் பொருளாதார நெருக்கடிக்குள் ஊசலாடுகிறது. உயர்கல்வி கற்றுக்கொள்ள இனிமேல் பணம்படைத்தவர்களால் தான் இயலும் என கூட்டரசாங்கம் கூச்சமின்றி ஒத்துக்கொள்கிறது.

பிரஞ்சு நாடு முதலாளித்துவப் புரட்சிக்கும், முதலாளித்துவ ஜனநாயக உருவாக்கத்திற்கும் முன்னுதாரணமாக  முன்வைக்கப்படுகின்ற அரசு. வீரஞ்செறிந்த மக்கள் திரள் அமைப்புக்களின் போராட்டங்கள் அவர்களின் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தும் உரிமைகளை வென்றெடுக்க வழி செய்திருக்கின்றது. சீர்திருத்தப் போராட்டங்களாக முடிந்து போன இப்போராட்டங்கள், புரட்சியை நோக்கி வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதும், அதற்கான முன்நகர்வைத் தடுப்பதற்கு ஏகபோக அரசுகள் அழித்தொழித்த மனித உயிர்கள் ஆயிரமாயிரம் எனபதும் வேறானவை.

இன்று மக்கள் வென்றெடுத்த அடிப்படை உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. சார்க்கோசியின்(பிரான்ஸ் அதிபர்) கோரப்பிடியில் மக்கள் இழந்துகொண்டிருப்பது அவர்களின் உழைப்பும் எதிர்காலமும்.

ஸ்பெயினில் அரச ஊழியர்களுக்கு இனிமேல் ஊதிய உயர்வு கிடையாது என அரசு அறிவித்திருக்கிறது. வேலையற்றோருக்கான உதவித் தொகை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

கிரேக்கம், அயர்லாந்து போன்ற நாடுகளைத் தொடர்ந்து  போர்ச்சுக்கல் அரசு மீள முடியாத கடன் நெருக்கடிக்கு உள்ளானது. உடனடித் தேவையாக 80 பில்லியன் யூரோக்கள் வழங்கப்படாவிட்டால் போர்ச்சுக்கல் நாடு நிலைகொள்ள முடியாது உருக்குலைந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதாவது அதன் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு அழிவின் விழிம்பிற்குள் தள்ளப்பட்டுவிடும்.

இதற்காக ஐரோப்பிய நாடுகளும் உலக நிதி நிறுவனமும் தமது உதவிக்கரங்களை போர்ச்சுக்கல்லுக்கு விரித்துள்ளன. அதாவது ஐரோப்பிய உழைக்கும் மக்களின் வரிப்பணமும், அவர்கள் வென்றெடுத்த வாழ்வாதரங்களும், மூன்றாமுலக நாடுகளில் வெளியக வியாபரம் என்ற பெயரில் சுரண்டப்படும் பணமும், உலகின் வளங்களை மனித உரிமையின் பெயரால் சுரண்டிச் சேகரிக்கும் பணமும் போர்ச்சுக்கல்லுக்கு வழங்கப்படும் 80 மில்லியன் யூரோக்களில் சோகமாய் மறைந்து கிடக்கிறது.

உலகின் பெரும்பகுதியான மக்கள் ஒரு நேர உணவிற்காக கையேந்தும் நிலை காணப்படும் நிலையில், அமெரிக்கத் தனியாதிக்கத்தால் சுரண்டப்படும் ஒரு பகுதியான 700 பில்லியன் டாலர்களை அமெரிக்க வங்கிகளையும் தனியார் உற்பத்தி நிறுவனங்களையும் காப்பாற்றுவதற்காகவும், சுரண்டல் அமைப்பை மறுசீரமைப்புச் செய்வதற்காகவும் அமரிக்க அரசு வழங்கியிருந்தது. “சட்ட ரீதியான” இதே பகற்கொள்ளை பிரித்தானியாவிலும், ஏனைய சில ஐரோப்பிய நாடுகளிலும் நடத்தி முடிக்கப்பட்டு இரண்டு வருட எல்லைக்குள் போர்ச்சுக்கல்லிற்கு மக்கள் பணம் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது.

மில்லியன்களை பதுக்கி வைத்திருக்கும் பெரு முதலாளிகளின் எந்த வகையான பங்களிப்பும் இவ்வாறு தாரைவார்க்கப்படும் பணத்தில் வழங்க்கப்பட்டதில்லை. இலாபத்தை அதிகரிப்பதே (profit maximising) முதலாளித்துவத்தின் இருப்பிற்கு அடிப்படையானது என்பதால் பெரு முதலாளிகளின் இலாபம் குறைக்கப்படுமானால் முதலாளித்துவத்தின் இயக்கம் நிறுத்தப்படும். ஆக, உழைக்கும் மக்களிடம் ஒட்டச் சுரண்டுவதைத் தவிர வேறு வழிகள் அதிகார வர்க்கத்திற்கு கிடையாது.

எவ்வளவு நாட்களுக்கு இவ்வாறு மில்லியன்களை நாடுகளுக்கும் வங்கிகளுக்கும் வழங்கிக்கொண்டிருப்பது? போராட்ட மரபுடைய முன்னேறிய ஐரோப்பிய உழைக்கும் வர்க்கம் முழு முனைப்புடன் தெருவிற்கு வருமானால் ஐரோப்பிய ஏகாதிபத்தியப் பொருளாதாரம் தனது சாவிற்கான நாட்களை விரல்விட்டு எண்ணிக்கொள்ளாலாம்.

இந்தப் பின்னணியில் தான் எரி பொருளுக்கான யுத்தத்தை அமரிக்க ஐரோப்பிய யுத்தப் பிரபுக்கள் மத்திய கிழக்கில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அழிவின் எல்லைக்குள் நகர்த்தப்பட்டிருக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தை மீட்க இப்போது போரைத் தவிர ஏகாதிபத்தியங்களுக்கு மாற்று வழி அற்றுப் போயிருக்கும் நிலையில் உலகின் பணம் செழிக்கும் மத்திய கிழக்கைக் குறிவத்து அப்பாவிகளின் தலையில் குண்டுமழை பொழிகிறார்கள்.

இதில் கேவலம் என்னவென்றால் யுத்தத்தை நடத்தும் பணத்தைக் கூட மேற்கு ஏகபோகங்கள் செலவிடவில்லை. லிபிய அரசின் பணமாக பல பில்லியன் டாலர்களை அமரிக்க அரசு முடக்கியுள்ளது. சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்ட கடாபியின் பணம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக  துனிசிய அதிபர் பென் அலியின் வைப்புப் பணமான சில பில்லியன்களை சுவிஸ் வங்கி முடக்கியிருந்தது.

எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக்கின் பணம், அவரின் பினாமிகள் ஆதரவாளர்களின் பணம், கடாபியினதும் பினாமிகளதும் தனிப்பட்ட சொத்துக்கள் என்று பல நூறு பில்லியன்கள் போர்ச் செலவிற்கு மேலதிகமாகவே அமரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களிடம் முடங்கிப் போகலாம் என கணிப்பீடுகள் கூறுகின்றன. லிபிய அரசிற்குச் சொந்தமான 30 பில்லியன் டாலர்கள் ஏற்கனவே அமரிக்காவால் முடக்கப்படுள்ளது. அவுஸ்திரிய மத்திய வங்கி லிபிய அரசின் 1.6 பில்லியன்களை முடக்கியுள்ளது. பிரித்தானியா அபகரித்துக் கொண்ட பணம் 3.3 பில்லியன் டாலர்கள். இவை தவிர பினாமிகளின் பணம் இதற்கும் அதிகாமாகலாம் என கூறப்படுகின்றது.

யுத்த முனைப்பிற்கும், அதன் பின்னான காலனிய நிர்வாகத்தைக் கட்டமைப்பதற்கும், புதிய சுரண்டல் பொறிமுறையை உருவாக்குவதற்கும் மத்திய கிழக்குச் சர்வாதிகாரிகளிடமிருந்தும், அரசுகளிடமிருந்தும் அபகரிக்கப்பட்ட பணம் பயன்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதற்கு அவர்கள் “மனிதாபிமான உதவி”  எனப் பெயரிட்டுக் கொள்வார்கள்.

– தொடரும்

_____________________________________________

சபா.நாவலன், இனியொரு
______________________________________________

ஐ.எம்.எஃப் ஸ்ட்ரௌஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம்!

9
ஐ.எம்.எஃப் ஸ்ட்ரௌஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம்!
டொமினிக் ஸ்ட்ரௌஸ் கான்

மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களுக்கு இப்போது புதிதாய் ஒரு அவல் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக வாய் வலிக்க அந்த அவலை மென்று குதப்பி வருகிறார்கள். அவர்களின் இளைய பங்காளிகளான இந்திய முதலாளித்துவ ஊடகங்களும் ‘உலகச் செய்திகளில்’ தமது மேற்கத்திய சகபாடிகள் குதப்பித் துப்பிய அதே அவலை மீண்டும் ஒரு முறை மென்று, இந்திய வண்ணத்தில் கடைபரப்புகிறார்கள். ஒசாமா கொல்லப்பட்ட பின் தற்காலிகமாக ஏற்பட்டிருந்த ‘உலக’ செய்திப் பிரிவின் பஞ்சத்தை இப்படியாக இந்த ‘அவல்’ நிரப்பியுள்ளது.

சரி சரி விஷயத்திற்கு வருகிறோம். அந்த ‘அவலின்’ பெயர் டொமினிக் ஸ்ட்ரௌஸ் கா(ஹ்)ன். பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் சார்பாக அடுத்த அதிபர் தேர்தலில் இப்போதைய அதிபர் சார்கோஸியை எதிர்த்துப் போட்டியிடப் போகிறவர் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுபவர் தான் ஸ்ட்ரௌஸ் கான். ஒரு விஷயம். ‘சோசலிஸ்ட்’ கட்சி என்ற பெயரைப் பார்த்தவுடன் ‘சோசலிஸ்டு – கம்யூனிஸ்ட்டு – மார்க்ஸ் – ஏங்கெல்ஸ்’ என்றெல்லாம் உங்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விடாமல் ஒரு ஓரமாகக் கட்டிப் போட்டு வையுங்கள். ஏனெனில், இதற்கும் அதற்கும் மயிரளவிற்கும் கூட சம்பந்தம் கிடையாது.

இப்போது விவகாரம் என்னவென்றால், மேற்படி ஸ்ட்ரௌஸ் கான் கடந்த பல ஆண்டுகளாக ஒரு நவீன கால ஸ்ரீ கிருஷ்ணனாக வலம் வந்திருக்கிறார் – அதாவது ஒரு ஸ்த்ரீ லோலனாக – அதாவது ஒரு பொம்பளைப் பொறுக்கியாக. இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நட்சத்திர ஹோட்டலின் பெண் ஊழியர் ஒருவரை இந்த நபர் தனது எண்ணற்ற கோபியரில் ஒருவராக நினைத்து அணுக அதாவது பாலியல் வன்முறை செய்ய முயன்று, அது வெடித்து பிரச்சினையாகியுள்ளது. இப்போதைக்கு விசாரணை என்கிற பெயரில் உள்ளே தள்ளியிருக்கிறார்கள்.

இதில் ஸ்ட்ரௌஸ் கான் வெறுமனே ப்ரெஞ்சு அரசியல்வாதி என்பதைக் கடந்து ஐ.எம்.எஃப் எனப்படும் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (International Monetary Fund) தலைவராகவும் இருப்பதால் விவகாரம் உலக அளவிலான ஊடகங்களில் வெளியாகி நாறிக் கொண்டிருக்கிறது. அவர்களைப் பொறுத்தளவில் ஒரு உலகளவிலான அமைப்பின் தலைவராயிருக்கும் ஒருவர் தனிமனித ஒழுக்கமற்று பொறுக்கித் திரிந்ததை ஒரு மாபெரும் குற்றம் போல எழுதுகிறார்கள். ஆம் – அவர் குற்றவாளி என்று தான் நாமும் சொல்கிறோம்.

இப்போது அவர் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படலாம் – அல்லது நிரூபிக்கப்படாமலே போகலாம். ஆனாலும், நாம் அவரைக் குற்றவாளியென்றே கருதுகிறோம். நமது கருத்து ஸ்ட்ரௌஸ் கான் தனிப்பட்ட முறையில் சில பெண்களை வல்லுறவிற்குக் கட்டாயப்படுத்தினார் என்று வந்துள்ள செய்திகளின் அடிப்படையிலிருந்து மட்டும் எழுவதல்ல – அது ஒரு காரணம் தானென்றாலும் அதையும் கடந்து உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பல லட்சம் பெண்கள் தாலியறுத்ததற்கும் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டதற்கும் இதே ஸ்ட்ரௌஸ் காரணமாக இருந்தார் என்கிற எதார்த்த உண்மையின் அடிப்படையிலானது.

உலகளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தைக் குலைத்து அந்நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இசைவான அராஜகக் கும்பல்கள் மக்களை நேரிடையாக கொன்று குவித்ததற்கும் ஸ்ட்ரௌஸின் தலைமையில் இயங்கும் பன்னாட்டு நிதி நிறுவனமே காரணமாக இருந்துள்ளது. மத்திய கால கத்தோலிக்கச் சர்ச்சைப் போல எவ்வகையிலும் ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படாத – சாமானிய மக்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லாத இவ்வமைப்பே உலகின் பல்வேறு நாடுகளில் அரங்கேறிய சதிப்புரட்சிகளுக்கு சூத்ரதாரியாக செயல்பட்டுள்ளது.

2009-ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாத வாக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மானுவேல் ஸெலாயாவைத் துப்பாக்கி முனையில் (ஜூனில்) நாடு கடத்தி விட்டு அதிகாரத்திற்கு வந்த ஹோன்டுராஸின் சதிப் புரட்சி கும்பலுக்கு 150.1 மில்லியன் டாலர்களை உதவித் தொகையாக வழங்கியுள்ளது ஐ.எம்.எஃப். அந்த சமயத்தில் பெரும்பாலான உலக நாடுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஹோன்டுராஸின் அந்த அரசாங்கத்தை அங்கீகரித்திருக்கவில்லை. மிக மோசமான மனித உரிமை மீறல்களால் அம்பலப்பட்டு நாறிக் கொண்டிருந்த அக்கும்பலின் கரத்தை வலுப்படுத்தும் விதமாகவே ஐ.எம்.எஃப் வழங்கிய நிதி அமைந்தது.

ஹோண்டுராஸில் மட்டுமல்லாமல், 2002-ல் மக்களால் ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுவேலாவின் சாவேஸ் திடீர் இராணுவப் புரட்சியினால் அதிகாரத்தை இழந்திருந்த சமயத்திலும் இராணுவ சதிகாரர்களுக்கு ஐ.எம்.எஃப் தனது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்து உதவியும் செய்துள்ளது.

வட மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் எண்ணை வளத்தை உறிஞ்சிக் கொள்ள தடையாக இருந்த பல்வேறு அரசாங்கங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் இதே போன்ற சதிப் புரட்சிகளின் மூலம் தூக்கியெறிந்த போதும் கூட புதிதாக அமையும் அராஜகவாதிகளின் அரசாங்கங்களுக்கு ஐ.எம்.எஃப் நிதியுதவியளித்துள்ளது. ஐவரி கோஸ்ட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கொபாக்போவை எதிர்த்த அமெரிக்க கைபொம்மையான ஒட்டாராவை ஆதரித்ததும் இதே ஐ.எம்.எஃப் தான்.

நேரடியான சதிப்புரட்சிகளைக் கடந்து,  தமக்கு இணக்கமான அரசுகளைக் கூட மேலும் மேலும் அடிமையாக்குவதற்காக கடன் வலையில் சிக்க வைக்க அமெரிக்காவின் கைத்தடியாகவே ஐ.எம்.எஃப் செயலாற்றியுள்ளது. அந்த வகையில், நைஜீரியா, சியாரா லியோன், கென்யா, ஜிம்பாவே, சோமாலியா, ருவாண்டா உள்ளிட்ட பல்வேறு ஆப்ரிக்க நாடுகளை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்து மொத்த நாட்டையே ஓட்டாண்டியாக்கிச் சுரண்ட ஒரு பொருளாதாரப் பேரழிவு ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்தியது ஐ.எம்.எஃபைத் தான்.

எண்ணை உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கைப்பற்ற பல்வேறு ஆப்ரிக்க இனக்குழுக்களைச் சேர்ந்த உள்ளூர் யுத்த பிரபுக்களுக்கு ஆயுத உதவி, நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து, அதனால் விளையும் உள்நாட்டுக் குழப்பத்தில் யாருடைய கை மேலோங்கியுள்ளதோ அந்த குழுவை ஒரு ‘அரசாக’ அங்கீகரித்து அவர்களுக்கு வெளிப்படையாகவே நிதியுதவி செய்ய அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கருவி தான் ஐ.எம்.எஃப். அந்த வகையில், கணக்கற்ற பெண்கள் வன்முறை கும்பலால் கொல்லப்பட்டும் வல்லுறவிற்கு ஆளாக்கப்பட்டும் உள்ளனர்.

இது போன்ற ஐ.எம்.எஃபின் நடவடிக்கைகளை அவ்வமைப்பிலேயே ஒரு பொருளாதார அடியாளாகப் பணியாற்றி பல நாடுகளை சீரழித்த ஜான் பெர்கின்ஸ் என்பவர் பின்னர் தனது அனுபவங்களை விரிவாகப் பதிவு செய்து “ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்” (விடியல் பதிப்பகத்தில் கிடைக்கிறது) என்கிற பெயரில் ஒரு நூலே எழுதியுள்ளார்.

இதுவும் போக, தற்போது உலகையே ஒரு மாபெரும் கருமேகம் போலப் பீடித்து ஆட்டிப்படைத்து வரும் சர்வதேசப் பெருமந்தத்திற்கும் ஐ.எம்.எஃப் ஒரு காரணமாக இருந்துள்ளது. இதை அவர்களே நடத்திய சுயேச்சையான ஆய்வின் முடிவில் ஒப்புக் கொண்டும் உள்ளனர்.

ஆக, உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் தாலியறுத்தற்கும் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டதற்கும் காரணமான ஒரு அமைப்பின் தலைவரை அவரது சொந்த வாழ்க்கையின் தவறுகளுடைய ஒளியில் வைத்து மட்டும் குற்றவாளியென்றோ குற்றவாளியில்லையென்றோ பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது.

இப்போதே ப்ரெஞ்சு எதிர்கட்சிகள் ஸ்ட்ரௌஸின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக ‘இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா’ என்று சொல்லத் துவங்கி விட்டனர். தனிமனித பாலியல் ஒழுக்கம் மட்டும் தான் ஒரு மனிதனை அளவிடுவதற்கான அளவுகோல் என்றால் நீங்கள் நரேந்திர மோடியை யோக்கியவான் என்று ஒப்புக் கொள்ள நேரிடும். மோடியோ இல்லை பிற ஆர்.எஸ்.எஸ் டவுசர்களோ தனிப்பட்ட வகையில் ஒருவேளை யோக்கியர்களாகக் கூட இருக்கலாம். பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத தவசீலர்களாகக் (ஆனாலும் அது உண்மையல்ல) கூட இருக்கலாம். ஆனால், இந்த ஒழுக்க சீலர்கள் சமூகத்தோடு கொண்டுள்ள உறவு – அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்னவென்பதிலிருந்து தான் முழுமையான ஒரு மதிப்பீட்டிற்கு வரமுடியும்.

தினமும் குளித்து, நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு ஒழுங்காக ஷாகா போய் முறையாக உடற்பயிற்சியும் யோகாசனமும் செய்யும் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் தான் கலவரம் என்று வந்து விட்டால் அப்பாவி முசுலீம் பெண்கள் மேல் பாய்ந்து குதறுகிறார்கள். தனிப்பட்ட முறையில் பீடி சிகரெட் தண்ணி என்று எந்த பழக்கமும் இல்லாத இவர்களை நீங்கள் நல்லவன் என்று சொல்வீர்களா இல்லை சமூக ரீதியில் மத பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதால் அயோக்கியன் என்று சொல்வீர்களா?

ஸ்ட்ரௌஸ் கானின் தனிப்பட்ட யோக்கிய / அயோக்கிய நடவடிக்கைகள் அல்ல நமது கவனத்திற்குரியது – அவராலும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பினாலும் உலகளவில் மக்கள் மேல் ஏவிவிடப்பட்டுள்ள பொருளாதார பயங்கரவாதமுமே நமது கவனத்திற்குரியது. அதுவே நாம் எதிர்த்து வீழ்த்த வேண்டிய மோசமான அபாயம்.

மேலும் உலகம் முழுவதும் உள்ள ஏழைநாடுகளுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் கடன் கொடுக்கும் ஒரு கந்து வட்டிக்காரன், ஊரைக் கொள்ளையடித்து தனது உலையை நடத்துபவன், தனிப்பட்ட வாழ்வில் பொறுக்கியாக இல்லாமல் எப்படி இருப்பான்?

யார் தமிழன்? எவை தமிழர் உணவு? பொதுவுடமை வளர்கிறதா?

34

கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்?

– குரு

அன்புள்ள குரு,

முதலில் தமிழன் என்ற வார்த்தைக்கு இறுக்கமான இலக்கணத்தை வரையறுக்க இயலுமா தெரியவில்லை. பொதுவில் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழை பேசக்கூடியவர்கள்தான் தமிழரென்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் இன்று தமிழன் என்ற பெயரில் அவன் அறியப்படுவதில்லை. தமிழோடு பல பெயர்கள் சூழலுக்கேற்றவாறு ஒட்டிக் கொண்டுள்ளன.

சன்.டி.வி மெகா சீரியல் பார்க்கும் குடும்பத் தமிழன், கலைஞர் டி.வியின் மானாட மயிலாடவில் லயிக்கும் குதூகலத் தமிழன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல்லில் இரசிக்கும் லோக்கல் தமிழன், டெண்டுல்கர் சதமடித்தால் ஆர்ப்பரிக்கும் இந்தியத் தமிழன், ராணா படத்துக்காக நா தொ போட்டு காத்திருக்கும் இரசிகத் தமிழன், கமலின் அடுத்த கெட்டப்புக்காக தவம் இருக்கும் உலக சினிமாத் தமிழன், தினமலரின் ஜோசியப் பக்கத்தை காசு கொடுத்து நம்பும் மூடநம்பிக்கைத் தமிழன், சாய்பாபாவுக்காக கண்ணீர் விட்டு அழும் பக்தித் தமிழன், நித்தியானந்தாவுக்கு படம் போட்டு பிரச்சாரம் செய்யும் எழுத்தாளத் தமிழன், பால் தினகரனுக்காக பாக்கெட் மணி அனுப்பும் பரதேசித் தமிழன்,  விசா இல்லாமல் மலேசியா சென்று சிறையில் வாடும் கனவுத் தமிழன், விசாவோடு வளைகுடாவில் முடங்கிப் போன நனவுத் தமிழன், பச்சை அட்டையோடு அமெரிக்காவில் செட்டிலான பணக்காரத் தமிழன், தீக்குச்சி அடுக்கி பீடி சுருட்டும் ஏழை இளையத் தமிழன், பங்குச் சந்தையில் சூதாடி பணம் சேர்த்து முன்னேறும் காரியவாதத் தமிழன், பிசா – பர்கர்- கென்டகி சிக்கனோடு வாழும் சிட்டித் தமிழன், முறுக்கு சட்டியோடு ஆந்திராவுக்கு பிழைக்க போயிருக்கும் வில்லேஜ் தமிழன், தேயிலைத் தோட்டங்களில் பனியால் கருகும் தோட்டத் தமிழன், ஆர்கானிக் டீயைச் சுவைத்தவாறே நட்சத்திர விடுதியில் பிசினஸ் பேசும் முதலாளித் தமிழன், கரும்பலகை இல்லாத பள்ளிக்கூடத்தில் பயிலும் கிராமத்து தமிழன், கணினி – செல்பேசியோடு பள்ளிக்கு செல்லும் பட்டணத்து தமிழன், இலங்கை கப்பற்படையிடம் சிக்காமல் கடலில் தொழில் செய்ய பாடுபடும் மீனவத் தமிழன், ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடக்கும் மறத் தமிழன், கருணாநிதி குடும்ப அரசியல் தொழிலை ஏற்றுக் கொள்ளும் உடன்பிறப்புத் தமிழன், சோனியாவிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கும் வேட்டிக் கிழிப்புத் தமிழன்,

இறுதியாக பதிவுலகில் ‘வட போச்சே’ என்று பின்னூட்டமிடும் வெட்டித் தமிழன், போதுமா?

நன்றி

____________________________________________________________

கேள்வி: நம் நாட்டைப் பொருத்தவரையில் பொதுவுடைமைக் கொள்கை என்பது வளரத் துவங்கியிருக்கிறதா? வளர்ந்து கொண்டிருக்கிறதா? அல்லது வளருமா? ஏனென்றால் பொதுவுடைமைப் பற்றிய போதிய சிந்தனை பொதுமக்களிடம் சென்றடையவில்லை என்பதும் உண்மைதானே?

– இனியவன்

அன்புள்ள இனியவன்,

நம் நாட்டில் பொதுவுடைமைக் கொள்கையின் வளர்ச்சி என்பது பொதுவுடமைக் கட்சிகளின் வளர்ச்சி, தேய்வோடு சம்பந்தப்பட்டது. இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் சகதியில் விழுந்து புரண்டு சரணடைந்து விட்டார்கள். 1925 முதல் 1960கள் வரை இவர்களே பொதுவுடைமைக் கட்சியென அறியப்பட்டார்கள். முக்கியமாக இந்தியாவின் விசேட சமூக நிலைமைகளை ஆய்வு செய்து எவ்வாறு புரட்சி செய்யப் போகிறோம் என்பதில் சோடை போனார்கள். 47க்கு முன்பிருந்தே காங்கிரசு, காந்தியின் வாலாகவும் செயல்பட்டார்கள். தமது சொந்தக் கொள்கையின் மூலம் மக்களைத் திரட்டமுடியும் என்ற நம்பிக்கை இல்லாது இருந்தார்கள்.

இவர்களுக்கு மாற்றாக இவர்களிடமிருந்தே கிளம்பி இவர்களது திரிபுவாதத்தை தகர்த்தெறிந்து 1960களின் பிற்பகுதியில் எழுந்த நக்சல்பாரிக் கட்சி ஆரம்பத்தில் இழைத்த இடது தீவிரத் தவறுகள் காரணமாக பின்னடைவு கண்டது. பிறகு சில மாநிலங்களில் தவறுகளை திருத்திக் கொண்டு தீவிரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

1990களில் உலக அளவில் சோவியத் யூனியன் என்ற பெயரில் இருந்த போலி கம்யூனிசம் விழுந்த போது ஒரு அதிர்ச்சி இருந்தது. பின்னர் அடுத்த பத்தாண்டுகளில் முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது மேற்குலகின் மக்கள் பொதுவுடமை கொள்கைகளை தேடிப் படிப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இந்தியாவிலும் இடதுசாரி முகாமைச் சேர்ந்த அறிவு ஜீவிகளே ஊடகங்களில் காத்திரமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதுகிறார்கள். மறுகாலனியாக்கத்தின் கேடுகளை எதிர்த்து இடதுசாரி கட்சிகளே தொடர்ந்து போராடுகின்றன. தமிழகத்தில் என்.சி.பி.எச், பாரதி புத்தகலாயம், கீழைக்காற்று கடைகளில் மார்க்சிய நூல்கள் அதிகம் விற்கின்றன. விற்றுத் தீர்ந்த பல நூல்கள் இப்போது கிடைப்பதில்லை.

எனினும் போலிக் கம்யூனிஸ்டுகளின் கெட்ட பெயர் உருவாக்கியிருக்கும் சூழல் எங்களையும் அடிக்கிறது. வினவில் கூட பல புதியவர்கள் சீனா, மே.வங்கத்தை வைத்து எங்கள் விமரிசிப்பது இன்னமும் நடக்கிறது. போயஸ் தோட்டத்தில் சென்று அம்மா காலில் விழாத குறையாக செஞ்சட்டை தலைவர்கள் நடத்தும் பூஜை குறித்து நாங்கள் எவ்வளவுதான் விமரிசித்தாலும் மக்களுக்கு மனம் ஒப்புவதில்லை. இருப்பினும் பொதுவில் போலிக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களையும் உள்ளிட்டு கம்யூனிஸ்டுகள் என்றாலே எளிமையானவர்கள், ஊழல் செய்யாதவர்கள், மக்களுக்காக போராடுபவர்கள் என்று மக்கள் சந்தேகமின்றி கருதுகிறார்கள். கூடவே இவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் செல்லமாகவும் கடிந்து கொள்வார்கள்.

எங்களைப் பொறுத்த வரை  தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் பேருந்துகள், இரயில்கள், குடியிருப்புகள், ஆலைகள் என எல்லா இடங்களிலும் பல இலட்சக்கணக்கான மக்களை எங்கள் தோழர்கள் சந்தித்து பிரச்சாரம் செய்கிறார்கள். இதற்கு மேலும் பொதுவுடமைக் கொள்கை வளர்கிறது என்பதற்கு வினவின் சிறு வெற்றியையும் சொல்லலாமே?

மற்ற கொள்கைகளெல்லாம் அநீதியான இந்த உலகோடு ஒட்ட ஒழுகும் தன்மையைக் கொண்டிருப்பதால் அவைகள் மக்களிடம் பரப்புவது சுலபம். ஆனால் பொதுவுடைமை கொள்கை என்பது ஒட்டு மொத்த சமூகத்தையும் அடியோடு மாற்றவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருப்பதால் மக்களிடம் பரப்புவது சிரமம். ஆனால் பிரச்சினைகளோடு ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் பொதுவுடைமைக் கொள்கைகள் மட்டுமே மக்களோடு இணைவதற்கான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது.

என்ன சொல்கிறீர்கள்?

நன்றி.

_________________________________________________________________

கேள்வி: ஆங்கிலத்தில் மூன்று வேளை உண்ணுவதற்கும் பிரேக்பாஸ்ட், லஞ்ச், டின்னர் என்று பெயர்கள் உள்ளன. அது போன்று தமிழில் உண்டா?

– சுதா செந்தில்

அன்புள்ள சுதா செந்தில்,

மூன்று வேளை சாப்பாடு ஆங்கிலப் பெயர்களுக்கு இணையாக தமிழில் உண்டா என்று தமிழிறிஞர்களைத்தான் கேட்க வேண்டும். எங்களுக்குத் தெரிந்து இல்லை என்றுதான் நினைக்கிறோம். ஒருவேளை தமிழ் மொழியில் அப்படிப் பெயர்கள் இருந்தாலும் தமிழ் மக்களிடம் இத்தகைய மும்முறை சாப்பாட்டுப் பெயர்கள் வழக்கத்தில் இல்லை என்பதை நிச்சயமாகக் கூறலாம். ஏனெனில் இன்றும் கூட பெரும்பான்மைத் தமிழ் மக்களின் வீடுகளில் மூன்று முறை சமையலோ, சாப்பாடோ கிடையாது. அதிக பட்சம் ஒரு முறைதான் சமையலே! இதுதான் யதார்த்தம் எனும் போது மூன்று பெயர்களுக்கான தேவையே எழவில்லையே?

“தி கிட்” எனும் சார்லி சாப்ளினது திரைப்படத்தில் அவர் ஒரு அனாதைச் சிறுவனை வளர்ப்பார். அவரது குடிசையில் ஓட்டை ஒடிசலுடன் இருக்கும் ஒரு மேசைதான் டைனிங் டேபிள். சாப்பிட இருந்தாலும், இல்லாவிட்டாலும் டேபிள் மேனர்சோடு சிறுவனை சாப்பிடுமாறு சாப்ளின் பயிற்சி அளிப்பார். வயிற்றுக்கில்லையென்றாலும் நாகரீகத்தை விட முடியாதல்லவா என்று சாப்ளின் கேலி செய்வது இங்கு நினைவுக்கு வருகிறது.

தமிழக உணவு வகைகள், வட்டார உணவு ருசிகள் என்று இப்போது நகர்ப்புறத்து நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து நடத்தப்படும் உணவு மேளாக்கள் எல்லாம் வட்டார ஆதிக்க சாதியினரின் உணவு பழக்கங்களைத்தான் வைத்திருக்கின்றன. ஆனால் நிலமற்ற கூலி விவசாயிகளும் சரி, இல்லை சிறு விவசாயிகளும் சரி, இல்லை கொஞ்சம் வசதியான விவசாயிகளாக இருந்தாலும் சரி இத்தகைய தினுசு தினுசான உணவு வகைகளெல்லாம் அவர்களது வாழ்வில் இல்லை.

காலையில் நீராகாரம், மதியம் வற மிளகாய் அல்லது பச்சைமிளகாயோடு பழையது, இரவு சுடு சோறு என்பதே பெரும்பாலான கிராமத்து மக்களது உணவு. இதுவும் கூட முன்னர் தினை வகைகளோடு கம்பு, கேழ்வரகு, சோளம் முதலியவற்றை வைத்து களி, கூழ், ரொட்டி என்று இருந்தது. இன்றும் கூட பல கிராமங்களில் தீபாவளி, பொங்கல் முதலான பண்டிகைகளின் போதுதான் இட்லி, தோசையை செய்கிறார்கள். தருமபுரியில் களி உருண்டையை சாப்பிடும் திறனை வைத்து சித்தாள், பெரியாள் ஊதியத்தை முடிவு செய்வார்கள். இந்தக் களியை நீங்கள் மென்று சுவைக்க முடியாது. அப்படியே விழுங்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் நீர் அதிகம் உள்ள பருப்புக் குழம்பு, தஞ்சையிலோ, ஈரோட்டிலோ இருக்கும் விவசாயிகளிடம் புளி கரைத்த நீர்க்குழம்பு இவைதான் அன்றாட குழம்பு வகைகள். அந்த குழம்பில் அன்று என்ன காய் போடுகிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு விசேசம். சென்னையின் சேரிகளில் வாழும் மக்கள் அனைவரும் இரவுதான் முறையான சமையல் செய்து சாப்பிடுகிறார்கள். பகலில் தேநீர், பன் என்று ஏதோ ஓட்டுகிறார்கள். இவர்களது அசைவ சமையல் கூட கோழி, மீன்களின் கழிவாக கருதப்படும் பகுதிகளை வைத்தே இருக்கும். அதாவது கோழிக் குழம்பு என்றால் கோழிகளின் தலை இருக்கும்.

அறுசுவைகளுக்கும் பெயர் பெற்ற செட்டிநாட்டு சமையல், பார்ப்பனர் சமையல், சைவ வேளாளர் சமையல், கொங்கு சமையல் போன்றவையெல்லாம் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வில் இல்லை. ஆனால் பத்திரிகைகளெல்லாம் இவற்றைத்தான் தமிழரது உணவு வகைகள் என்று போற்றுகின்றன. நிலவுடமை சமூகத்தின் சுரண்டலில் தலைமை இடம் வகிக்கும் இத்தகைய சாதிகளது வாழ்க்கை முறையில்தான் இத்தகைய விருந்துகள் இருக்க முடியும். ஆனால் இவற்றை மட்டும் தமிழர் உணவு என்று சொல்வது முழுத் தமிழகத்தையும் பிரதிபலிப்பதாக ஆகாது.

சான்றாக ஆம்பூர் பிரியாணி, மாட்டுக்கறி வறுவலை தமிழர் உணவாக இவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆனால் இன்று நகர்ப்புறங்களின் கடுமுழைப்பு தொழிலாளிகள் தங்களது புரதத் தேவைக்காக கையேந்தி பவன்களில் மலிவான மாட்டுக்கறி உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். டிகாஷன் காபியை விரும்பி அருந்துபவர்கள் அநேகம் பேர் பார்ப்பன ‘மேல்’ சாதியதினர்தான். ஆனால் தேநீர் என்பது தொழிலாளிகளின் பானமாக இருக்கிறது. சென்னை புள்ளாபுரத்தில் அருந்ததியினர் வாழும் பகுதியில் மாட்டுக்கறி உப்புக்கண்டத்தில் செய்யப்படும் சிப்ஸ் மிகவும் பிரபலம்.

ஆக தமிழர்களது உணவு முறைகள் அனைத்தும் வர்க்க வாழ்நிலைக்கேற்ப பிரிந்து இருக்கிறது. சாரத்தில் மூன்று வேளை சாப்பிடும் பழக்கமோ, வசதியோ அற்ற மக்கள் கணிசமாக வாழும் நாட்டில் நாம் ஆங்கில முறையில் மூன்று வேளை உண்ணுவதற்கான பெயர்களுக்கு எங்கே போவது?

மதுரையைச் சேர்ந்த மாவட்டங்களில் என்னதான் விருந்து சாப்பிட்டாலும் மக்கள் “கஞ்சி குடிச்சாச்சா” என்றுதான் கேட்பார்கள். அதையே நாமும் தமிழக உணவு முறைப் பெயராக கொள்ளலாமே? என்ன சொல்கிறீர்கள்?

நன்றி.

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

மேற்கு வங்கத்தில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி ஏன்?

42
உருகுது போலிக் கம்யூனிசம்! மருகுது சமூகப் பாசிசம்!!

மிழகத் தேர்தல் முடிவுகளைப் போல் அல்லாமல் மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் ஊடகங்களுக்கும் அதை நெருக்கமாக கவனித்து வந்த மக்களுக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. என்.டி.டிவி போன்ற ஒரு சில முதலாளித்துவ ஊடகங்களில் இது கம்யூனிசத்துக்கு நேர்ந்த தோல்வியா என்று அலசப்பட்டது. ஆனால் சி.பி.எம் தோழர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அங்கே கம்யூனிசம் இருந்தால் தானே தோற்பதற்கு? அது மற்றவர்களை விட அவர்களுக்குத் தானே தெளிவாகத் தெரியும்? எனவே, மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினார்கள் என்றும் அதனால் தான் தோற்று விட்டோமென தலைவர்கள் சொல்லி வருகிறார்கள்.

இனி இத்தோல்வியை ஆராய்வதற்கென்று சி.பி.எம் கட்சி ஒரு கமிட்டியை அமைக்கும். அவர்களும் கண்களைக் கட்டிக் கொண்டு தோல்வியெனும் இந்தக் கருப்பு யானையைத் தடவித் தடவி விதவிதமாக ஆய்வு முடிவுகளை வெளியிடுவார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், நாம் சி.பி.எம் கட்சி பெற்றிருக்கும் இந்தத் தோல்வியை அதன் முழுமையான பொருளில் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அதற்கும் முன், சி.பி.எம்மின் 34 ஆண்டு கால ‘வெற்றியின்’ மெய்யான அர்த்தம் என்னவென்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தியப் போலி ஜனநாயக அமைப்பில் தொடர்ச்சியாக 34 ஆண்டுகளாக ஒரு மாநிலத்தின் ஆளும் கட்சியாக நீடிக்க முடிந்திருப்பதன் காரணத்தை விளங்கிக் கொள்வதிலிருந்து தான் அவர்களின் இன்றைய தோல்வியையும் புரிந்து கொள்ள முடியும்.

சில முதலாளித்துவ அறிவுஜீவிகள், சி.பி.எம் கட்சி மக்களிடமிருந்து வெகுதூரம் விலகிப் போய் விட்டது என்று சொல்கிறார்கள். இத்தனை நாட்களாக சி.பி.எம் கட்சியின் பிரதானமான பலமாக இருந்த ஊரகப் பகுதியின் ஓட்டு வங்கி சிங்கூரிலும் நந்திகிராமிலும் சி.பி.எமின் வெறியாட்டத்தின் விளைவாய் தகர்ந்துள்ளது என்கிறார்கள். மேலும் மக்கள் ஒரே கட்சிக்குத் தொடர்ந்து வாக்களித்து சோர்ந்து போயிருந்தார்கள் என்றும் இப்போது தான் மம்தா பானர்ஜியின் வடிவில் ஒரு மாற்றத்தைக் கண்டடைந்துள்ளார்கள் என்றும் சொல்கிறார்கள். இதில் முழுமையும் உண்மையில்லை என்றாலும் முழுமையாகப் பொய்யும் இல்லை.

சி.பி.எம் கட்சியின் 34 ஆண்டு ‘வெற்றிக்’ கதை

சி.பி.எம் கட்சியினர் தங்களது மேற்கு வங்கச் சாதனையாக அடிக்கடி சுட்டிக் காட்டுவது அங்கே இவர்கள் செய்ததாக பெருமைபட்டுக் கொள்ளும் நிலச் சீர்திருத்தம். இந்த நிலச்சீர்திருத்தம் தான் சி.பி.எம் கட்சிக்கு மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு வலுவான வாக்கு வங்கியை உண்டாக்கித் தந்தது என்று அவர்களே சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆனால், இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக நிலச் சீர்திருத்தம் செய்துள்ள முதல் மாநிலமான மேற்கு வங்கம் தான் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலையில் ஆறாம் இடத்தில் இருக்கிறது. ஆக, இவர்கள் சொல்லும் நிலச் சீர்திருத்தம் உண்டாக்கிய உண்மையான விளைவு என்ன என்கிற இரகசியம் இதற்குள் தான் அடங்கியிருக்கிறது.

எங்கே செல்லும் இந்தப் பாதை...??

மேற்கு வங்கத்தில் எழுபதுகளில் ஆட்சிக்கு வரும் இடது முன்னணி பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது ஓரளவுக்குச் சிறப்பான நிலச்சீர்திருத்தத்தை செய்திருந்தது. ஆனால், நிலச்சீர்திருத்ததின் விளைவாக நிலம் பெற்ற விவசாயிகள்  அதிலிருந்து உண்மையான பலன்களை அறுவடை செய்தார்களா? அப்படிச் செய்திருந்தால் ஏன் எழுபதுகளில் 33 லட்சமாக இருந்த நிலமற்ற விவசாகளின் எண்ணிக்கை இன்று இரட்டிப்பாகியுள்ளது? ஏன் பரவலாக விவசாயிகளின் தற்கொலைகள் நிகழ்கிறது? இதையும் மீறி, எப்படி இத்தனை ஆண்டுகளாக ஊரகப் பகுதிகளில் சி.பி.எம் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்டிருந்தது?

இந்தக் கேள்விகள் தனித்தனியாகத் தெரிந்தாலும், இவற்றுக்கான விடை என்பது ஒரு தொகுப்பாகத் தான் பார்க்க முடியும். அதன் அடிப்படையிலிருந்தே சி.பி.எம்மின் வாங்கு வங்கியில் விழுந்த பெரிய ஓட்டையையும் அதன் தொடர் விளைவாய் இன்று அவர்கள் சந்தித்திருக்கும் தோல்வியையும் புரிந்து கொள்ள முடியும்.

நிலச் சீர்திருத்தம் என்றவுடன் நீங்கள் நினைப்பது போல் நிலமற்ற விவசாயிகளுக்கு அப்படியே நிலத்தின் உரிமையை எந்த கேள்வியும் இன்றி மாற்றிக் கொடுத்து விட்டார்கள் என்று பொருள் இல்லை. நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கான பட்டாக்களை விவசாயிகளின் கைகளில் கொடுக்காமல், அவற்றை அந்தந்த பகுதி கட்சி அலுவலகத்திலேயே வைத்துப் பராமரித்துள்ளனர். உண்மையில், அந்தக் கால ஜமீன்தார்களின் இடத்தை வட்டார கட்சித் தலைவர்களைக் கொண்டு மாற்றீடு செய்தது தான் மேற்குவங்கத்தில் ‘தோழர்கள்’ செய்த நிலச்சீர்திருத்தத்தின் மிக முக்கியமான அடிப்படை. ஒருபக்கம் விவசாயிகளுக்கு நிலத்தின் மேலிருந்த உரிமையை உறுதிப்படுத்தியிருந்தாலும், இன்னொரு பக்கம் அதையே தனது வாக்கு வங்கியை உறுதிப் படுத்திக் கொள்ளும் நேரடியான ஒரு பேரப் பொருளாகவும் வைத்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தை வழங்கியிருப்பதாகச் சொல்லும் அதே சி.பி.எம் அரசு தான், இன்னொரு பக்கம் விவசாயப் பொருட்களைச் சந்தைப் படுத்துவதற்கான ஒரு சட்டத்தை (Agricultural products marketing commitee act) நிறைவேற்றி, பன்னாட்டு நிறுவனங்கள் கான்டிராக்ட் விவசாயத்தில் ஈடுபடவும், தனியார் விவசாயக் கிடங்குகளை நிறுவவும் அனுமதியளித்தது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் விவசாயத்தைக் காட்டிக் கொடுத்து விவசாயிகளைக் கருவறுக்கும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை எப்படி பிற ‘முதாலாளித்துவக்’ கட்சிகளின் அரசுகள் நடைமுறைப்படுத்தியதோ அப்படியே மேற்கு வங்கத்தின் ‘பாட்டாளி’ வர்க்கக் கட்சியும் நடைமுறைப்படுத்தியது. இப்படி, வெறுமனே நில உரிமையை மட்டும் விவசாயிகளிடம் கொடுத்து விட்டு விவசாயத்தின் மீது அவர்களுக்கு இருந்த உரிமையைப் பறிக்கும் பொருளாதாரக் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள்.

இதன் அடிப்படையில் தான் அரசு தானியக் கிடங்குகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு விவசாயிகள் நிர்க்கதியாக விடப்பட்டனர். கடந்த டிசம்பர் – ஜனவரி மாத வாக்கில் இந்தியாவெங்கும் காய்கறிகளின் விலை உயர்ந்து மக்களின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்த சமயத்தில் மேற்கு வங்க விவசாயிகளிடமிருந்து ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டிருந்த 42 லட்சம் டன் உருளைக் கிழங்குகள் முறையான சேமிப்புக் கிடங்கு இல்லாமல் அழுகி நாறிக் கிடந்தது. ஆதாரம் – http://indiatoday.intoday.in/site/video/42-lakh-tonnes-of-potatoes-rot-in-west-begal/1/126469.html

‘பாட்டாளி வர்க்க’ அரசின் சேமிப்புக் கிடங்குகளில் முதலாளித்துவ பெப்சியின் லேய்ஸ் சிப்ஸ் தயாரிப்புக்காக கொள்முதல் செய்யப்பட்ட உருளைக் கிழங்குகளைச் சேமிப்பதற்காக மட்டும் பெரும்பாலான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க ‘பாட்டாளித்’ தோழர்களின் இந்த துரோகத்தனத்தை எதிர்த்து சமீபத்தில் ஹூக்ளி மாவட்ட உருளை விவசாயிகள் போராடியுள்ளனர்.

சுமார் 6 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை பகிர்ந்து கொடுத்திருப்பதாகச் சொல்லும் சி.பி.எம், அதில், சுமார் 1.20 லட்சம் விளை நிலங்களை பன்னாட்டு ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளது. சுமார் 4 லட்சம் விவசாயிகள், தங்கள் நிலங்களை வசதியான விவசாயிகளுக்கு விற்று விட்டு விவசாயத்தை விட்டே விலகிச் சென்றுள்ளனர்.

நிலச் சீர்திருத்தம் என்கிற பெயரில் நிலங்களை வழங்கி விட்டு,  கீழ்மட்டத்திலிருந்து விவசாயத்தைக் கருவறுக்கும் வேலையையும் மேலிருந்து தொழில் வளர்ச்சி எனும் பெயரில் விவசாயப் புறக்கணிப்பையும் செய்தது தான் சி.பி.எமின் சாதனை. இது மட்டுமில்லாமல், ஒவ்வொரு துறையிலும் சில பொருளாதாரவாதக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது – அடுத்து அந்தப் பொருளாதாரமே நிலைத்து நிற்பதற்கான அஸ்திவாரத்தை உடைப்பது எனும் அளவில் தான் கடந்த 34 ஆண்டுகால சி.பி.எம்மின் மேற்குவங்க ஆட்சி நடந்துள்ளது.

சிபிஎம் மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயத்திற்கு செய்த துரோகத்தனங்களின் விளைவாக ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் பரந்துபட்ட மக்களிடம் ஒரு வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருந்த நிலையில் தான் சிங்கூரும் நந்திகிராமும் வருகிறது. ஏதுமில்லாவிட்டாலும் நிலமாவது இருக்கிறதே என்கிற குறைந்தபட்ச நம்பிக்கையிலிருந்த மக்களின் ஆத்திரத்தை இவ்விரு விவகாரங்களும் கிளப்பி விட்டதன் உடனடி விளைவு தான் இன்றைய தோல்வி. ஆனால்,  இது நொறுங்கி விழக் காத்திருந்த சீட்டுக் கட்டு மாளிகையின் மேல் கொசு அமர்ந்ததைப் போன்ற ஒரு விளைவு தான்.

சிங்கூர் நந்திகிராம் பிரச்சினைகளின் போது சி.பி.எம்மின் அராஜகத்தை எதிர்த்துப் போராடிய மக்களோடு மக்களாக மம்தா பானர்ஜி நின்றது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் மாற்றாகத் தோற்றமளித்துள்ளது. வேறு வழியின்றி தொடர்ந்து ‘இடது’ முன்னணிக்குத் தொடர்ந்து வாக்களித்து வந்த மக்களுக்கு ஒரு மாற்று தோன்றி விட்டதாக நம்பியதன் விளைவு தான் சி.பி.எம்மின் பாரம்பரிய வாக்கு வங்கியில் விழுந்த பலமான அடிக்கு மிக முக்கியமான காரணம். அதே நேரம் முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனித்து நின்று வாக்குகளைப் பிரித்தது போல் அல்லாமல் இந்த முறை மம்தா போட்டதைப் பொறுக்கிக் கொண்டு சென்றதும் சி.பி.எம்மிற்கு எதிரான வாக்குகள் சிதறாமல் செய்து விட்டது.

சி.பி.எம்மின் சாதனை மைல்கற்கள்!

கடந்த தேர்தல்களில் சி.பி.எம்மின் வலுவான வாக்கு வங்கியாக கிராமப்புற வாக்கு வங்கியே இருந்து வந்தது. நகர்ப்புறங்களில் பரவலாக வாக்குகள் குறைந்தாலும் கூட கிராமப்புறங்களில் கிடைக்கும் வாக்குகளைக் கொண்டே சமாளித்து வந்தது. ஊரகப் பகுதிகளில் தான் கொண்டிருக்கும் வலுவான வலைப்பின்னலைக் கொண்டு மக்களை அச்சுறுத்தியும் மிரட்டியும் தான் இந்த வாக்கு வங்கியைச் சிதறாமல் பார்த்துக் கொண்டது. இத்தனை ஆண்டுகளாக சி.பி.எம்மின் இந்த அடாவடிகளுக்குச் சவால் விடும் ஒரு மாற்று அமையாமல் போனது தான் தொடர்ந்து அந்த மக்கள் வேறு வழியின்றி அதற்கு வாக்களிக்கும் ஒரு நிர்பந்தத்தை உண்டாக்கியிருந்தது. தெருச் சண்டைக்காரி என்று ஊடகங்களால் குறிப்பிடப்படும் மம்தா பானர்ஜி சி.பி.எம்மின் ஆயுதத்தையே எடுத்து அதன் கண்களையே குத்திக் குடைந்ததைப் பார்த்த மக்களுக்கு அவர் ஒரு இயல்பான மாற்றாகத் தோற்றமளித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஏற்கனவே பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவான அரசு சுகாதார நிலையங்களைக் கொண்டிருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில், அரசு பொறுப்பில் இருக்கும் மருத்துவமனைகளும் கூட பன்றித் தொழுவம் போல் நாறிக் கிடக்கும் நிலையில், ஓரளவு பெரிய அரசு மருத்துவமனைகளை சத்தமில்லாமல் தனியார்மயமாக்கும் வேலையைச் செய்து வருகிறது. இந்த வகையில் தான், தெற்கு கொல்கத்தாவில் இருக்கும் அரசு காச நோய் மருத்துவமனையைத் தனியாருக்குத் தாரை வார்த்துள்ளது.

ஒரு புறம் தனக்கு அடிப்படையான பலத்தை வழங்கியிருந்த விவசாயிகளின் கோபத்தை சம்பாதித்திருந்த சிபிஎம், இன்னொரு புறம் தனது கணிசமான வாக்கு வங்கியாக இருந்த இசுலாமிய சமூகத்தின் வெறுப்பையும் ரிஸ்வானூர் ரஹ்மான் விவகாரத்தில் இழந்தது. இதுவும் கூட ரிஸ்வானூர் ரஹ்மான் என்கிற ஒரு தனிநபருக்காக தோன்றிய ஒட்டுமொத்த சமூகக் கோபம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. சமூக வளர்ச்சிக் குறியீடு, கல்வி, மருத்துவ வசதி என்று அனைத்து அலகுகளிலும் அரசுத் துறை புறக்கணிக்கப்பட்டதால் பின்தங்கியிருக்கும் ஒரு மாநிலத்தில் இயல்பாக உருவாகக் கூடிய ஆட்சிக்கு எதிரான மனநிலை ஏற்கனவே மக்களை சி.பி.எம்மிடம் இருந்து விலக்கியிருந்தது.

ஜோதிபாசுவிற்குப் பின் அதிகாரத்திற்கு வரும் புத்ததேவ் பட்டாச்சார்யாவோ, மக்களோடு எந்தவிதத்திலும் நெருங்கிய தொடர்பு கொண்டவரல்ல. அதற்கு முன் ஒரு வாய் வார்த்தையாகவாவது மக்கள் நலம், விவசாய வளர்ச்சி என்றெல்லாம் சொல்லப்பட்டு ஏற்படுத்தி வைத்திருந்த மாயத் திரையை எல்லாம் புத்ததேவ் வந்து கிழித்தெறிந்து கட்சியை மக்கள் முன் நிர்வாணமாக நிறுத்தினார். முந்தைய தலைவர்களைப் போல் அல்லாமல், எந்த வித மேல் பூச்சும் இன்றி மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளை மிருகத்தனமாகத் திணித்தார் புத்ததேவ்.

கொல்கத்தாவில் கை ரிக்சாக்களை ஒழித்த போது மனிதர்களை வைத்து மனிதர்களே இழுத்துச் செல்வது கொல்கொத்தாவுக்கு வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் நம்மைப் பற்றி  அசிங்கமாக நினைத்துக் கொள்ள வைத்து விடும் என்றார். தமிழகத்தில் கை ரிக்சா ஒழிக்கப்பட்ட போது கூட அது மனிதனின் சுயமரியாதைக்கு எதிரானது என்கிற ஒரு விளக்கம் சொல்லப்பட்டது ஆனால், பாட்டாளித் ‘தோழர்களோ’ கை ரிக்சாக்களை வெளிநாட்டுக்காரர்கள் ரசிக்கமாட்டார்கள் என்கிறது. குஜராத் ‘வளர்ச்சி’ பற்றி மோடி  உண்டாக்கியுள்ள ஊடக மயக்கங்களைப் போலவே மேற்கு வங்க வளர்ச்சி பற்றியும் முதலாளித்துவ ஊடகங்கள் வாயிலாகப் பிரச்சாரங்களை புத்ததேவ் முன்னெடுத்தார். இதற்காகவே, மேற்கு வங்கத்தின் பிராண்டு அம்பாசிடராக வேல்லி ஓவன் என்பவரையும் நியமித்தார்.

தொழில் வளர்ச்சி எனும் பெயரில் நிலங்களைப் பறித்ததை எதிர்த்துப் போராடிய மக்களையெல்லாம் அரக்கத்தனமாக ஒடுக்கியதோடு அதை வெளிப்படையாக நியாயப்படுத்தவும் செய்தார். நிலப்பறிப்புக்கு எதிராகப் போராடும் விவசாயிகள், புத்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த போது, ‘யார் இவர்கள், இவர்களோடு பேசுவதெல்லாம் என் தகுதிக்கே இழுக்கானது’ என்று தெரிவித்தார். இது ஏற்கனவே கட்சியை விட்டு விலகிப் போயிருந்த மக்களை முற்றிலும் விரோதமான ஒரு நிலைக்குத் தள்ளுகிறது.

இந்நிலையில் தான் உழைக்கும் மக்களின் தோழன் என்று சொல்லிக் கொள்ளும் கட்சி நேரடியான மக்கள் விரோதியாகவும், முதலாளித்துவக் கட்சியிலிருந்து பிரிந்து வந்து நகர்ப்புற லும்பன்களைத் தனது அடிப்படை பலமாகக் கொண்டிருந்த கட்சி ,மக்களின் நண்பனாகவும் தோற்றமளிக்கும் ஒரு வரலாற்று விநோதமும் நடந்தது.

முதலாளித்துவ எதிர்ப்பையோ மக்கள் விடுதலையையோ தனது திட்டத்திலேயே கொண்டிராத மம்தா பானர்ஜிக்கு பரந்துபட்ட மக்கள் ஆதரவை சி.பி.எம்மே ஏற்படுத்திக் கொடுக்கிறது. லால்கரில் போராடிய மக்களை வன்முறையுடன் அடக்கி ஒடுக்க, ஆயுதம் தாங்கிய தனது கட்சியின் ரவுடிகளை அனுப்பிய புத்ததேவ், அது பழிக்குப் பழிவாங்கும் செயல் என்று கூசாமல் சொல்கிறார் – இன்று முதலாளிகள் சங்கத்தின் தலைவரைத் தனது வேட்பாளராக களமிறக்கிய மம்தா பானர்ஜி, அன்று லால்கரில் போராடிக் கொண்டிருந்த மக்களின் தோளோடு தோள் நிற்கிறார்.

சி.பி.எம் இன்றைக்கு வந்தடைந்திருக்கும் பாசிச வடிவம் என்பது அவர்கள் இத்தனை ஆண்டுகளாக செயல்படுத்தி வந்த பொருளாதாரவாத செயல்திட்டங்களினின்று முரண்பட்ட ஒன்றல்ல. சி.பி.எம்மின் பொருளாதாரவாதத்தின் ஒரு எதார்த்தமான நீட்சி தான் இன்று அவர்களை ஒரு சமூக பாசிஸ்டுகளாக சீரழித்துள்ளது. சிபிஎம் கட்சியின் மிக முக்கியமான பலமாக விளங்கியது அவர்களின் தொழிற்சங்கங்கள். கீழ் மட்ட அளவில் ஒவ்வொரு தொழிற் பிரிவிலும் வலுவான தொழிற்சங்கங்களை நிறுவி அந்தந்தப் பிரிவின் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டும் போராடியோ பேரம் பேசியோ வாங்கித் தருவது – மேலிருந்து ஒட்டு மொத்தமாக உள்நாட்டு தேசியத் தொழில்களின் நசிவைக் கோரும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொள்வது என்கிற இந்த வினோதமான நிலை உண்மையில் ஒரு முரண்பாடே அல்ல.

மேற்கு வங்கத்தின் நீரோ யாரு?

விவசாயத்தின் நசிவிற்கும், உள்நாட்டுத் தொழில்களின் நசிவிற்குமான அடிப்படையான காரணம் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கையாக இருக்கும் போது, அந்தந்தப் பிரிவுக் கோரிக்கைகளுக்கு மட்டும் முகம் கொடுத்து விட்டு ஒட்டுமொத்தமான காரணத்திற்கு முகம் திருப்பிக் கொள்வதன் நீட்சி தான் சி.பி.எம் கட்சி வந்தடைந்திருக்கும் ஒரு குழப்பமான நிலைக்குக் காரணம். அதனால் தான் முதலீடுகளைப் பற்றியும், போராட்டங்களைப் பற்றியும் புத்ததேவ் தெரிவிக்கும் கருத்துக்கள் மோடியின் கருத்துக்களோடும், மன்மோகன் – மான்டேக் சிங் கும்பலின் கருத்துக்களோடும் அசப்பில் அப்படியே ஒத்துப் போகிறது. அதனால் தான் எந்தவிதக் கூச்சநாச்சமும் இன்றி கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்டிய மலேசிய சலீம் குழுமத்தோடு ஒட்டி உறவாடவும் முடிகிறது.

இப்போது அதிகாரத்திற்கு வந்துள்ள மம்தா பானர்ஜியும் சி.பி.எம்மின் கொள்கைகளில் இருந்து சாராம்சத்தில் வேறுபட்டவரல்ல. இப்போதே ஊடக விவாதங்களில் தமது கட்சி மேற்கு வங்கத்  தொழில் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்காது என்கிற உறுதிமொழிகளை அளிக்கத் துவங்கி விட்டார். இப்போது வேறுபாடு என்பது மறுகாலனியாக்க வளர்ச்சியை வலிந்து திணிப்பதா அல்லது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏமாற்றிக் கொடுப்பதா  என்பதில் மட்டும் தான். மேல் மட்ட அளவிலான பொருளாதரக் கொள்கைகளில் மாற்றம் ஏதும் கிடையாது என்பதை அறிவித்துள்ள அதே நேரத்தில் கீழ் மட்ட அளவிலும் சி.பி.எம்மின் அதே போக்குகளையே திரினமூல் காங்கிரசும் பின்பற்றத் தொடங்கியுள்ளது.

சி.பி.எம் மாநில அளவில் கீழ்மட்ட அளவில் நிர்வகித்து வந்த வலைப் பின்னலை இப்போது மம்தா கைப்பற்றியுள்ளார். இன்னும் சொல்லப்போனால், கீழ் மட்ட அளவில் சி.பி.எம் உண்டாக்கி வைத்திருந்த கட்சி ரீதியான அதிகாரத்துவ ரவுடிகளும் அந்த அமைப்பும் இப்போது சி.பி.எம் லேபிளைக் கழட்டியெறிந்து விட்டு திரிணாமூல் காங்கிரசின் லேபிளை ஒட்டிக் கொண்டுள்ளது.

உதாரணமாக, கொல்கத்தா நகரில் ஆட்டோ ஓட்டுனர்களை நிர்வகித்துக் கட்டுப்படுத்தும் ஆட்டோ யூனியன்களும் அதன் வட்டாரத் தலைவர்களும் இப்போதே திரிணாமூல் காங்கிரசுக்கு பரவலாக மாறி வருவதாக செய்திகள் வருகிறது. இதையே ஊரகப் பகுதிகளுக்கும் விரித்துச் செல்வதைக் கடந்து மம்தா பானர்ஜிக்கு வேறு வாய்ப்புகள் இருக்காது. மக்களை அரசியல் படுத்தாமல் வெறும் பொருளாதாரவாதக் கோரிக்கைகளுக்கு மட்டும் போராடப் பழக்கப்படுத்தி அதன் மேல் தனது வாக்கு வங்கியைக் கட்டமைக்கும் சி.பி.எம்மின் உத்தி இப்போது அவர்களையே பூமராங் போலத் திருப்பித் தாக்குகிறது.

ஆக, மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசும் சி.பி.எம்மிலிருந்து சாராம்சத்தில் வேறுபட்டவரல்ல. அந்த வகையில் ஐந்து ஆண்டுகள் கழித்து சி.பி.எம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு கூட இருக்கிறது. ஆனால், அப்போது சி.பி.எம்மிற்கு வேறெந்த ஒப்பனையும் தேவையாக இருக்காது. தி.மு.கவும் அ.திமு.கவும் மாறி மாறி வருவது போல் இவர்களும் செத்து செத்து விளையாடிக் கொண்டிருக்கலாம்.

தனது திட்டத்திலும், நடைமுறையிலும் புரட்சியை ஒழித்துக் கட்டியிருக்கும் சி.பி.எம் கட்சி இனிமேலும் தனது போலி கம்யூனிச அடையாளங்களைக் கூட பின்பற்ற முடியாது என்ற நிலையைத்தான் மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. முப்பத்தி நான்கு ஆண்டுகள் பொருளாதாரவாதம், பாசிச நடைமுறை, கட்சி கும்பலின் சர்வாதிகாரம், தொழிலாளிகள்-விவசாயிகள் மீதான அடக்குமுறை என்று சமூக பாசிஸ்டுகளாக மாறிவிட்ட கட்சி இனிமேலும் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்ளாமல் இருந்தால் பொருத்தமாக இருக்கும். ‘தோழர்கள்’ தயைகூர்ந்து இதைப் பரிசீலித்து அமல்படுத்த வேண்டும்.

நாங்களும் போலிக்கம்யூனிஸடுகள் யார், ஏன் என்று விளக்கமளித்து விளக்கமளித்து சலித்துப் போயிருக்கிறோம்.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை!

35

பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை !

ந்தத் தேர்தலில் கொங்குவேளாளர், தேவர், நாடார், நாயுடு முதலான ஆதிக்க சாதி சங்கங்கள் – கட்சிகள் எந்தெந்தக் கூட்டணியை ஆதரித்தார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தமிழ்நாடு பிராமணர் சங்கம் அ.தி.மு.கவையும், ஜெயலலிதாவையும் ஆதரித்த்து எத்தனை பேருக்குத் தெரியும்? தேர்தல் முடிவு குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் அங்கத்தினர்கள் வீட்டில் வடை பாயாசத்தோடு கொண்டாடி வருவது குறித்து அறிவீர்களா? ஆதாரம் வேண்டுவோர் அந்தக் கொண்டாட்டத்தை தினுசு தினுசாக நடத்தி வரும் தினமலர் பத்திரிகையை புரட்டினாலே போதும்!

இந்துத்வாவின் இந்திய நாயகன் மோடி, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் முதலானோர் ஜெயா பதவி ஏற்பு விழாவில் முக்கிய நாயகர்கள். தமிழகத்தில் பா.ஜ.க தனியாக போட்டியிட்டதெல்லாம் சும்மா ஒரு கண்துடைப்பு. “இதுவரை தமிழகம் கண்ட முதல்வர்களிலே ஒரே இந்து முதல்வர் புரட்சித் தலைவிதான்” என்று பார்ப்பன இந்து முன்னணி இராமகோபாலன் வாயால் பாராட்டப்பட்டிருக்கும் போது தமிழகத்தில் பா.ஜ.க என்று ஒரு அரசியல் கட்சியே தேவையில்லையே?

அப்படித்தான் தினமலரும் ‘அம்மா’வின் அறிவிக்கப்படாத கோயாபல்சாக எழுதி வருகிறது. தினமலரை அதன் விரிவான செய்தி கவரேஜூக்காக வாசகர்கள் பார்க்கிறார்கள் என்றால் வருபவர்களை கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக போயஸ்தோட்டம் உள்ளிட்ட அக்ரகாரங்களுக்கு அழைத்துச்செல்வதை தினமலர் ஒரு கடமையாகவே செய்கிறது.

ஜெய கும்பலின் வெற்றியை புதிது புதிதாக எழுதி வரும் தினமலர் அதில் ஒன்றாய் இந்த பெரிய கோவில் சமாச்சாரத்தை வெளியிட்டிருக்கிறது. பெரியகோவிலுக்கு செல்லும் பிரபலங்கள் தமது பதவியையோ இல்லை உயிரையோ இழப்பார்கள் என்பது ஐதீகமாம். ஏற்கனவே இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர், சங்கர்தயாள் சர்மா போன்றவர்களுக்கு அப்படி நடந்திருக்கிறதாம். அவர்கள் உயிரை இழந்தார்களா, இல்லை பதவியை இழந்தார்களா, இல்லை இரண்டையும் இழந்தார்களா என்பதை மட்டும் தினமலர் குறிப்பிடவில்லை.

சென்ற ஆண்டு பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரமாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சை வந்த கருணாநிதியும் அந்த சென்டிமெண்டை மனதில் கொண்டு முன்வாசல் வழியாக வராமல் பின்வாசல் வழியாக கோவிலுக்கு சென்றாராம். அந்த விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா இப்போது திகார் சிறையில் இருக்க கருணாநிதியோ பதவியை இழந்திருக்கிறாராம்.

இதன்படி பார்த்தால் கருணாநிதி இறப்பதற்கு கூட இதுதான் காரணமென்று இப்போதே தினமலர் அறிவித்திருக்கிறது. இருக்கட்டும், ராசா பேசிய அதே விழாவில் நாட்டிய பிரபலம் பத்மா சுப்பிரமணியம் ஆயிரம் நடனக் கலைஞர்களோடு பெரிய கோவிலில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தினாரே அவரும் பிரபலம்தானே? தினமலர் ஆய்வு முடிவுப்படி அவரும் இதற்கு முன்போ இல்லை கூடிய சீக்கிரமோ மண்டையைப் போடவேண்டுமே? ஒரு வேளை இந்த உயிர் துறக்கும் பெரியகோவில் சாஸ்திரம் தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு மட்டும் கிடையாதோ?

எப்படியெல்லாம் மூடநம்பிக்கையை வெட்கமற்று அயோக்கியத்தனமான முறையில் பரப்புகிறார்கள் பாருங்கள்! தனது கோவிலுக்கு வரும் பிரபலங்களை ஒரு ஆண்டவன் கொல்கிறான் என்றால் அவன் கடவுளா இல்லை டிராகுலாவா? இதற்கு முன் இப்படி பல பிரபங்களை அந்த பெருவுடையார் கொன்றிருக்கிறான் என்றால் அவன் மீது கொலை வழக்கு பதிவு செய்து குற்றத்தை நிரூபித்து தூக்கில் போடுவதுதானே சரியாக இருக்கும்?

பெரியகோவில் குடமுழுக்கின் போது தீவிபத்து ஏற்பட்டு ஐம்பது பேர் செத்துப் போனார்களே அதற்கு என்ன காரணம்? அதை வைத்து தினமலர் பாணியில் ஒரு செய்தி வெளியிடுவதாக இருந்தால், “தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடக்கும் போது கண்டிப்பாக ஐம்பது பேர்கள் இறப்பார்கள்” என்றல்லவா இருக்கும்?

சபரிமலையில் ஆண்டுதோறும் நெரிசல் ஏற்பட்டு பல ஐயப்ப்ப சாமிகள் பரிதாபமாக சாகிறார்கள். இன்று கூட திருப்பதிக்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி ஐம்பது பக்தர்கள் காயம்பட்டிருக்கிறார்கள். இது போக அமர்நாத், காசி, மதுரா என்று எல்லா  பக்தி சுற்றுலாக்களின் போதும் விபத்து நடந்து பலர் சாகிறார்கள். இதையும் தினமலர் பாணியில் “புண்ணிய ஷேத்தரங்களுக்கு சென்றால் மரணம் நிச்சயம்” என்று வெளியிடலாமே? பார்ப்பன தினமலர் அப்படி வெளியிட்டால் பெரியகோவில் சென்டிமெண்டையும் நாம் மன்னித்து விடலாம்.

கொலைகார சங்கரச்சாரி ஜெயேந்திரனை கைது செய்ததால்தான் சுனாமி வந்து ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து போனார்கள் என்று அக்மார்க் பார்ப்பனர்கள் பேசிய நாடல்லவா இது. அதன் நீட்சிதான் தினமலரின் இந்த வக்கிரமான செய்தி.

தினமலரின் இளவல் அந்துமணி என்ற இரமேஷ் தனது அலுவலகத்தில் ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்தார் என்ற செய்தி பல பத்திரிகைகளில் வந்து நாறியதே, அதன்படி தினமலரில் புனைபெயரில் எழுதும் அத்தனைபெரும் பொறுக்கிகள் என்று ஒரு சென்டிமெண்டை நாம் ஏன் ஆரம்பித்துவைக்கக் கூடாது?

கால்வாசி நாட்கள் போயஸ்தோட்டத்திலும், முக்கால்வாசி நாட்கள் கொடநாட்டிலும் ஓய்வு அரசியல் நடத்தும் ஜெயலலிதாவே தொட்டதுக்கெல்லாம் ஜோசியம், பில்லிசூன்யம், யாகம், பரிகாரம் என்று வாழ்கிறவர்தான். முந்தைய ஆட்சிக்காலத்தில் ஊட்டியில் நடந்த கஜமுக யாகத்தை நினைவிருக்கிறதா? தமிழகக் கோவிலில் உள்ள யானைகளையெல்லாம் சித்ரவதை செய்து லாரிகளில் ஏற்றி அலைக்கழித்து ஊட்டி கொண்டு சென்று எப்படியெல்லாம் வதைசெய்து ஆடினார்கள்?

கண்ணகி சிலையை லாரி வைத்து இடித்தது, புதிய சட்டமன்றம் வாஸ்துபடி சரியாக இல்லை என்று கோட்டைக்கு திரும்பியது என்று ஜெயலலிதாவின் பார்ப்பன நம்பிக்கைகளுக்காக மக்கள் பணம் எப்படி விரயமாக்கப்படுகிறது என்பதை அறிவோம். அதற்கு சற்றும் குறைவில்லாத படி தினமலரும் தனது பார்ப்பன முட்டாள்தனங்களை கக்கி வருகிறது. இன்னும் ஐந்தாண்டு காலத்தில் இந்தக்கூட்டம் என்னவெல்லாம் ஆடப்போகிறதோ தெரியவில்லை.

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். எடுப்போம்.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லுக்கோதா உபநிடதத்தின் படி பெயரில் வெற்றியை தாங்கியிருக்கும் பெண் ஆட்சியாளரை புகழ்ந்து பாடும் புலவர்கள் (தற்போது பத்திரிகைகள்- அதன் முதலாளிகள், ஆசிரியர்கள்) அனைவரும் சரியாக ஒன்பது மாதங்கள், ஒன்பது வாரங்கள், ஒன்பது நாட்கள், ஒன்பது மணிகள், ஒன்பது நிமிடங்கள், ஒன்பது விநாடியில் ரத்தம் கக்கி சாவார்கள் என்று போட்டிருப்பது நிச்சயம் பலிக்குமாம். ஏனெனில் ஒன்பது என்ற எண் அந்த அல்லிராணியின் ராசியான எண்ணாம்.

இதிலிருந்து தப்ப வேண்டுமென்றால் ஒன்று அந்த அல்லிராணி ஒன்பது மாதங்களுக்குள் ஆட்சியை இழக்கவேண்டும். இல்லையென்றால் அந்தப் புலவர்கள் தங்கள் வாழ்க்கையில் இனி ஒருபோதும் பாட்டு எழுதாமல் இருக்க வேண்டுமாம். ஆக புலவர்கள் பாட்டை நிறுத்தப் போகிறார்களா இல்லை ரத்தம் கக்கி சாகப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

ஜெயலலிதாவுக்கு…. ஹிந்து – தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா!

43

கேள்வி 1:
இது அ.இ.அ.தி.மு.க வின் அபார வெற்றியா!
இல்லை தி.மு.க வின் பயங்கர தோல்வியா???

கேள்வி 2:
என்ன காரணம்?

கேள்வி 3:
இந்த வெற்றியில் விஜய்க்கு பங்கு எந்த அளவு?

– மஹாதீர் முஹம்து

_____________________________________________________________________

அன்புள்ள மஹாதீர் முஹம்து

ந்தத் தேர்தல் முடிவில் இளைய தளபதிக்கு எந்தப் பங்கும் இல்லை. எனினும் ஆத்தா வெற்றி பெற்றதும் நெஞ்சிரைக்க ஓடி வந்து வாழ்த்து தெரிவித்து விட்டு இந்த தேர்தலுக்கு வேலைசெய்த தனது இரசிகக் குஞ்சுகளுக்கு அவர் வலிந்து நன்றியை தெரிவித்தார். எல்லாம் ஜெயிக்கிற குதிரையில் பணம் கட்டும் காரியவாதம்தான். இத்தனைக்கும் அவர் தேர்தலில் வெளிப்படையாக பிரச்சாரமோ, டி.வியில் தோன்றி வேண்டுகோளோ கூட தெரிவிக்கவில்லை. எல்லாம் மழுப்பலான அறிக்கைகளோடு முடித்துக் கொண்டார். ஒரு வேளை தி.மு.க மீண்டும் வெற்றி பெற்றால் என்ன நடக்குமோ என்ற சுயநல பயம்தான்.

இதையே சில அரசியலற்ற காரியவாதிகள் “இதற்கு மேல் விஜய் என்ன செய்ய முடியும்” என்று ‘தத்துவ’ விளக்கமும் கொடுப்பார்கள். ஒரு வேளை விஜய் வெளிப்படையாக பிரச்சாரம் செய்திருந்தாலும் அவருக்காக மட்டும் மக்கள் வாக்குகள் சிலிர்ப்புடன் அணிவகுத்திருக்காது. தமிழ்நாட்டில் நட்சத்திரங்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நிலை எம்.ஜி.ஆரோடு முடிந்து விட்டது. ஆனானப்பட்ட ரஜினயே ப்யூஸ் போன நிலையில், விஜயகாந்தெல்லாம் கூட்டணி தயவில் குப்பை கொட்ட வேண்டிய காலத்தில் விஜயெல்லாம் எம்மாத்திரம்? ஆனால் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒரு தேர்ந்த காரியவாதியாக தனது மகன் பிற்காலத்தில் முதலமைச்சராக வருவான் என்று கனவு காண்கிறார். அது தமிழ்சினிமா கதைமாந்தர்கள் சைக்கிளை மிதித்து ஒரு வட்டத்தில் முதலமைச்சராக எழுவதான ரீல் போன்றது.

இந்த வெத்து வேட்டு ஹீரோக்களை விட ஆனது ஆகட்டும் என்று களத்தில் இறங்கிய காமெடியன் வடிவேலு எவ்வளவோ மேல். இதற்கு மேல் விஜய்க்கு முக்கியத்துவம் கொடுப்பதோ, விளக்கம் அளிப்பதோ தமிழுக்கும், வினவு வாசகருக்கும் இழைக்கப்படும் அநீதி. இந்த பதில் கூட மஹாதீர் முஹம்து போன்ற நல்லவர்கள் கேட்டு விட்டதினாலே எழுதியதுதான். ________________________________________________

இனி முக்கிய கேள்விக்கு வருவோம். இந்த தேர்தல் வெற்றியை எப்படி பார்ப்பது? இது குறித்து வினவில் முன்னர் வந்த இடுகைகளில் சில விசயங்களை கோடிட்டு காண்பித்திருக்கிறோம். இங்கு சற்று விரிவாக…..

_________________________________________________

அ.தி.மு.கவின் மாபெரும் வெற்றி, தி.மு.வின் மரண அடி தோல்வி இரண்டையும் வாக்குப்பதிவு, ஊழல், குடும்ப ஆட்சி, மக்களின் மௌனப் புரட்சி, தேர்தல் கமிஷன்தான் ரியல் ஹீரோ என்று ஒரு பொதுவான  ஃபார்முலாவில் மட்டும் வைத்து விட்டு ஊடகங்களும் அறிஞர் பெருமக்களும் எளிமையாக முடித்து விடுகின்றனர். இவையெல்லாம் உண்மையல்ல என்று சொல்ல முடியாது. அதே நேரம் முழு உண்மைதான் என்று கொள்ளவும் இயலாது.

தி.மு.க பிடிக்கவில்லை என்றால் அ.தி.மு.க, அ.தி.மு.க பிடிக்கவில்லையென்றால் தி.மு.க இதைத் தாண்டி தமிழக மக்கள் அதி புரட்சிகரமாக யோசிப்பதற்கு வழி ஏதும் இருக்கிறதா? இதுவும் உண்மையல்ல என்று சொல்ல முடியாது. இதையே ஒரு ஃபார்முலாவாகக் கொண்டால் மாத்திப் போடு, மாத்தி யோசி, அது இல்லையினா இது என்றும் கூட இந்த தேர்தல் முடிவுகளை சொல்லலாமே?

இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவு வாக்குப்பதிவு அதிகம் இருந்தது உண்மைதான். அதனால் ஆளும் கட்சி மீது மக்கள் கடும் சினத்தோடு இருந்திருக்கிறார்கள் என்று ஒரு ஃபார்முலாவையும் இவர்கள் கூறுகிறார்கள். இந்த அதிக வாக்குப்பதிவுக்கும் அந்தக் கடுஞ்சினத்திற்கும் என்ன தொடர்பு? ஏன்? தொடர்பு இல்லையென்றால் வேறு என்ன காரணம்?

நண்பர்களே, தேர்தலையும், அரசியலையும் ஒரு சில கணக்கு விவரங்கள், நல்லது கெட்டது, ஊழல் நேர்மை, என்று சில வாய்ப்பாடுகளோடு மட்டும் சிந்திப்பதற்கு பழக்கப்படுத்தப் பட்டுள்ளோம்.  தேர்தல் அரசியலோடு தொடர்புடைய சமூக இயக்கம், மக்கள் மனவோட்டம் என்ன விதிமுறைகளோடு இயங்குகிறது, என்ன விசைகளால் உந்திச் செல்லப்படுகிறது என்பனவற்றை ஆய்வு செய்து கண்டுபிடித்தால் மட்டுமே இந்த தேர்தலில் வெற்றியின் தரத்தையும், தோல்வியின் மகிமையையும் நாம் கொஞ்சமாவது அறிந்து கொள்வோம்.

இந்த தேர்தல் முடிவினை வைத்து தினமணி பத்திரிகை, “”தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!” என்கிற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை “”தினமணி” பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது!” என்று மெய்சிலிர்க்கிறது. தமிழக மக்கள் பயங்கரமாக ஆர்த்தெழுந்து ஊழல், குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒரு ருத்ரதாண்டவமே ஆடியிருக்கிறார்கள் என்று வார்த்தைகளே வெட்கப்படுமளவு உச்சிமோருகிறது தினமணி.

அதிலும் பணம் கொடுத்து வாக்களிப்பவர்கள் என்ற அவப்பெயரை துடைத்தெறிந்து இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மாறி நாட்டையே காப்பாற்றிவிட்டார்களாம், தமிழக மக்கள்! இந்த வரலாறு காணாத தோல்விக்கு காரணமென்று தி.மு.கவின் குற்றப் பட்டியல்களை பட்டியலிடும் தினமணி, இந்த வெற்றிக்கு அருகதையானவர்தானா என்று ஜெயலலிதாவைப் பற்றி மறந்தும் கூட எழுதவில்லை. மட்டுமல்ல, சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் இருந்தாலும் பரவாயில்லை என்று தமிழக மக்கள் ஜெயா கும்பலை வெற்றிபெற வைத்துவிட்டார்களாம். இந்த ‘பரவாயில்லை’ என்பதன் அரசியல் தரத்தை பரிசீலித்துப் பார்க்கும் போது அந்த இமாலாய சாதனையின் அரசியல் வீழ்ச்சியை புரிந்து கொள்ள முடியாதா என்ன?

தி.மு.க படுதோல்வி, அ.தி.மு.க மாபெரும் வெற்றி என்பதை மற்றுமொரு தேர்தல் முடிவாக எடுத்துக் கொண்டு போனால் கூட பிரச்சினை இல்லை. அதை ஜாக்கி வைத்து வானத்துக்கு தூக்குவதையும், தங்களது பல்வேறு அபிலாஷைகளை  ஏற்றி அழகு பார்ப்பதையும் பார்த்தால் இவர்கள் அ.தி.மு.கவிற்கு மட்டுமல்ல, தி.மு.கவிற்கும் கருணாநிதியே நினைத்திராத ஆழமான பெருமைகளையெல்லாம் வழங்கி விடுகிறார்கள். தங்களது சொந்த முயற்சியில் எதையும் செய்ய முனையாத, விரும்பாத நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகள் பாமரர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு மட்டும் பொழிப்புரை, விளக்கம் கொடுத்து தன்னை சூப்பர்மேனாக கருதிக்கொள்ளும் அபத்தத்தைத்தான் சகிக்க முடியவில்லை.

தினமணியின் வானாளாவிய பாராட்டின் விளக்கம் ஜெயலலிதாவின் அணுகுமுறையில் பெறும் ஒளிதான் என்ன? மே 13 வாக்கு எண்ணிக்கை துவங்கி முன்னணி நிலவரம் உறுதியான நிலையில் மதியம் ஊடகங்களை சந்தித்த ஜெயலலிதா என்ன கூறினார்? தி.மு.க ஆட்சி மாநிலத்தை குட்டி சுவராக்கிவிட்டதாம், கஜானா காலியாம், சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லையாம் என்றெல்லாம் சொல்லிவிட்டு அடுத்து அவர் சொன்னதுதான் முக்கியமானது.

தி.மு.க ஆட்சி முடிந்து தான் ஆட்சிக்கு வந்த 91, 2001, 2011 ஆகிய மூன்று முறையும் இப்படித்தான் மாநிலத்தை மீட்டு வளம் கொழிக்க வைத்தாராம். 91 இல் ஆட்சிக்கு வந்து மாநிலத்தை மேம்படுத்தி அடுத்த தேர்தலில் தோல்வியுற்று 96-இல் ஆட்சி தி.மு.கவிற்கு போனதும் மாநிலம் சீர்கேடு அடைந்ததாம்.

கவனியுங்கள் நண்பர்களே, 91-96 ஆட்சிக்காலத்தில் ஜெயா-சசி கும்பல் ஆட்டம் போட்டதும், முழுத் தமிழகத்தை மொட்டை போட்டதும், பின்னர் வந்த தேர்தலில் அமைச்சர்கள் செருப்படி பட்டதும்தான் வரலாறு. இன்று ஜெயா அதை பொற்காலம் என்கிறார். எனில் பாசிச ஜெயா ஒரு துரும்பளவு கூட மாறவில்லை முன்னிலும் திமிராக பேசுகிறார் என்பதைக்கூடவா தினமணி அம்பிகள் புரிந்து கொள்ள முடியாது?

தினமணி தமிழ் அம்பிகளின் கதை இதுவென்றால் ஹிந்து இங்கிலீஷ் அம்பிகளின் கதையைப் பாருங்கள்! சனிக்கிழமை அன்று ஹிந்து பத்திரிகை தலையங்கத்தில் தினமணியின் கருத்தையே ரொம்பவும் பணிவான மொழியில், பிரச்சினையில்லாமல் எழுதியிருந்தார்கள். அதன் சாரமென்னவென்றால் இந்த ஆட்சி மாற்றம் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலைதான் என்பதே. கான்வென்டு வர்க்கத்தின் தலைவியான ஜெயலலிதாவுக்கு ஹிந்து பத்திரிகைதான் மிகவும் முக்கியமானது. மற்றவர்கள் பேசினால் கூட கவலையில்லை, ஹிந்து பத்திரிகை இப்படி பேசுகிறார்கள் என்றதும் ஜெயலலிதா ஊடகங்களிடம் பகிரங்கமாக அறிவிக்கிறார்,

“இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிரான அலையால் நான் வெற்றி பெறவில்லை. 2001-2006இல் எனது பொற்கால ஆட்சியை மக்கள் நினைவு கூர்ந்து அந்த ஆட்சி வேண்டுமென்றுதான் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார். அடுத்த நாள் இந்த நாலுவரிச் செய்தி ஹிந்து பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வெளிவருகிறது. இடையில் என்ன நடந்திருக்கும்?

ஏற்கனவே மாலினி பார்த்தசாரதியை எப்படியும் கைது செய்ய வேண்டுமென்று மிரட்டிய ஜெயாவின் தர்பாரை மவுண்ரோடு மகாவிஷ்ணு மறந்திருக்கமாட்டார். அதே போன்று தலையங்கத்தில் இந்த முடிவு எதிர்ப்பு அலை என்று எழுதியது அம்மா காதுக்கு போய் மிரட்டல் வந்திருக்கலாம். அல்லது குடும்ப சண்டையில் மூழ்கியிருக்கும் ராம் தலையங்கத்தின் வரிகளை பார்த்து விட்டு அடுத்த நாளே இதை தணிக்கும் வகையில் இந்த செய்தியை திட்டமிட்டு வெளியிட்டிருக்கலாம். ஏனெனில் இந்த தலைப்புச் செய்தி வேறு எந்த ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக வெளிவரவில்லை.

ஆக இந்த தேர்தல் முடிவுகள் தனது பொற்கால ஆட்சிக்கு ஏங்கிய மக்களின் விருப்பம் என்று பேசும் ஜெயலலிதாவை , வைத்தியநாதனின் தினமணி மேம்போக்காவாவது கண்டிக்குமா?

சரி, 2001லிருந்து ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி பொற்காலமா, இல்லை அடக்குமுறைக் காலமா? மதமாற்றத் தடை சட்டம், ஆடு-கோழி பலி தடுப்புச் சட்டம், இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பதவி நீக்கம் என்று பார்ப்பனிய பாசிசம் ஆட்டம் போட்டது இந்தக் காலம்தான். இதனாலேயே 2004 தேர்தலில் 39 பாராளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. அதன் பின்னரே ஜெயலலிதா மேற்கண்ட அடக்குமுறைச் சட்டங்களை திரும்பப் பெறுகிறார். வரலாறு இப்படியிருக்க இதுதான் பொற்காலமென்று மக்கள் விரும்புகிறார்கள் என்று ஜெயலலிதா பேசுகிறார் என்றால் யார் மீது உள்ள நம்பிக்கையில்?

எல்லாம் தினமலர், தினமணி, ஹிந்து அடிமை அம்பிகள் மேல் உள்ள நம்பிக்கையில்தான். இல்லையென்றால் இன்று தலையங்கம் எழுதியிருக்கும் தினமணி, ஜெயலலிதாவுக்கு சில பல ஆலோசனைகளை மிக மிகப் பணிவாக எடுத்து வைத்து, இதெல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரியாதது அல்ல என்று காலில் விழுகிறது. ஏ துப்பு கெட்ட தினமணியே, ” 91இல் ஊழல் செய்தாய், 2001இல் அடக்குமுறை செய்தாய், இந்த முறையாவது ஒழுங்காக ஆளுகின்ற வழியைப் பார்” என்று கூட சொல்வதற்கு உங்களுக்கு தைரியமில்லையா? பிறகு என்ன நீங்கள் தேர்தல் முடிவு குறித்து தமிழனுக்கு வீரப்பட்டம் கொடுக்கிறீர்கள்?

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி பேரத்தில் காங்கிரசு, தி.மு.க முரண்பாடு வந்து அமைச்சர்கள் ராஜினாமா என்ற நாடகத்தை தினமலர் என்ன எழுதியது தெரியுமா? இது அத்தனையும் ஜெயலலிதாவின் மாஸ்டர் பிளானாம். இது இன்று நேற்றல்ல, ஜெயா கும்பல் ஆட்சியைப் பிடித்தது முதல் இப்படித்தான் பேசுகிறார்கள். ஜெயா ஒரு தைரியமான நபராம். முழு கட்சியும் அவரது காலில் விழுந்து கிடப்பதுதான் அதன் அடையாளமாம். பாசிசத்தையே இப்படி தைரியமென்று வியந்தோதும் அம்பிகள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் உலகம் காறித் துப்பும்.

கருணாநிதியை எதிர்ப்பதில்தான் கொஞ்சம் அரசியல் இருக்கிறதேயன்றி, ஜெயாவை ஆதரிப்பதில் கொஞ்சம் கூட அரசியல் இல்லை. இதுதான் இந்த தேர்தல் முடிவின் யோக்கியதை. அந்த வகையில் அ.தி.மு.கவின் வெற்றி என்பது ஒரு விபத்துதானே ஒழிய அது நேர்மறையில் நடந்ததல்ல.

ஒப்பீட்டளவில் 96-2001 தி.மு.க ஆட்சி என்பது பெரிய ஊழல்கள், ஏகபோகம், குடும்ப ஆட்சியோ இல்லாமல் இருந்தது. எனினும் 2001 தேர்தலில் தி.மு.க தோற்றது. அதை ஒட்டி தலையங்கம் எழுதிய தினமணி ” இது அதிர்ச்சியூட்டும் தீர்ப்பு, எனினும் ஜனநாயகத்தின் அழகே தனிதான்” என்றது. ஆக தினமணியே ஒத்துக்கொள்ளும் விதத்தில் இருந்த தி.மு.க ஆட்சி தோற்றதற்கு என்ன காரணம்?

பொதுவில் எம்.ஜி.ஆர், அ.தி.மு.க ஆட்சி குறித்து பாமர மக்களிடையே சில மூடநம்பிக்கைகள் உண்டு. ” இவர்கள் ஆட்சிக்காலத்தில்தான் மழை பெய்யும், விலைவாசி குறையும், பணப்புழக்கம் இருக்கும்”. இப்போது கூட ஜெயா டி.வியில் பேசிய ஒரு கட்சிக்காரர் இவற்றையே காரணங்களாக கூறுகிறார். அதாவது எந்த அரசியல் விழுமியங்களுமற்ற ஒரு லும்பன் சிந்தனையைக் கொண்டிருக்கும் பாமரர் கூட்டம் அ.தி.மு.கவின் வாக்கு வங்கியாக எப்போதும் இருக்கிறது. இந்த தேர்தலில் படித்த லும்பன் கூட்டமும் இதில் சேர்ந்திருக்கிறது.

அதனால்தான் இவர்கள் எல்லாரும் கருணாநிதியை திட்டுகிறார்களே தவிர, நேர்மறையில் அம்மா தகுதியானவர் என்று சொல்வதற்கு தயாரில்லை. ஆனால் ஊடகங்கள் அந்த வேலையை பெரும் ஜால்ரா சத்தத்துடன் செய்து வருகின்றன.

சாராமாகக் கூறில் கருணாநிதி தோற்கடிக்கப்பட்டதில் இருக்கும் அரசியல் ஜெயலலிதாவின் வெற்றியில் இல்லை. இவையெல்லாம் வேறுவழியின்றி போடப்பட்ட வாக்குகளால் மட்டும் வரவில்லை. அரசியலற்ற காரியவாதத்தின் செல்வாக்கு காரணமாகவே இது நடந்திருக்கிறது.

ஜெயாவை முசுலீம்களின் காவல் தெய்வமாக அங்கீகரித்த த.மு.மு.கவின் முகத்தில் கரி பூசும் விதமாக இந்த பதவியேற்பு விழாவில் கொலைகார மோடி கலந்து கொள்கிறார். இப்படி இன்னும் ஒரு சில நாட்களில் பழைய ஜெயலலிதாவை நாம் அப்படியே பார்க்கலாம். ஆனாலும் அதற்கும் கூட நமது ஜால்ரா ஊடகங்கள் புதுப்புது விளக்கங்கள் அளிக்கும். ‘அம்மா’ ஆதரவு காரியவாத மக்கள் கூட்டமும் அதை திக்கெட்டும் புகழாய்ப் பரப்பும்.

இந்த தேர்தல் பரப்புரையில் ஜெயா என்ன பேசினார்? ஆசியாவிலேயே முதல் பெரும் பணக்காரக் குடும்பமாக கருணாநிதி குடும்பம் மாறிவிட்டது, ஊழல் செய்வதில் புது சாதனை படைத்து விட்டது என்றெல்லாம் பேசினார் அல்லவா? இப்போது அதன் பொருட்டு என்ன செய்யப் போகிறார்? கருணாநிதி குடும்பத்திலிருந்து அந்த சொத்துக்களை திரும்ப பறிக்கப் போகிறாரா? அது நடக்க வேண்டுமென்றால் ஜெயாவுக்கு எதிராக கருணாநிதி போட்ட வழக்குகளிலேயே நடந்திருக்க வேண்டுமல்லவா? அத்தனையும் ஊத்தி மூடப்பட்ட நிலையில் இப்போது கருணாநிதிக்கு மட்டும் என்ன நடக்கும்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக மிடாசின் சரக்கு கருணாநிதி அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்ட உண்மையை பார்க்கும் போது சன்.டிவியிலிருந்து மாதந்தோறும் ஒரு கப்பம் போகாமாலா இருக்கும்? ஆக தமிழக மக்கள் இவ்வளவு ஆர்த்தெழுந்து வாக்கு போட்டு விரட்டியடித்த கருணாநிதிக்கு என்ன தண்டனை? கருணாநிதியே சொன்னது போல மக்கள் அவருக்கு ஒய்வு கொடுத்ததுதான். ஊழலுக்கு தண்டனை பதவி கிடையாது என்றால் அதன் பெயர் தண்டனையா?

இந்த ‘தண்டனை’யை வாங்கிக் கொடுத்த தமிழக மக்களைப் போய் அவர்களே வெட்கப்படுமளவு பாராட்டினால் தகுமா?

________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”

32

ஜெயலலிதாமே 13-ம் தேதி காலை 10 மணி… தமிழகத் தேர்தல் நிலவரங்கள் தொலைகாட்சிகளில் பரபரப்புடன் ஒளிபரப்பாகத் தொடங்கின. சன், கலைஞர், ராஜ், பொதிகை தொலைகாட்சிகள் தத்தமது ஸ்டுடியோக்களில் அரசியல் கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்து வந்து நேரடி ஒளிபரப்பு செய்தன. பல்வேறு தொகுதிகளில் இருந்தும் வரும் தேர்தல் முன்னணி நிலவரங்களை சொல்லிக்கொண்டே விருந்தினர்களுடன் தேர்தல் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அந்த சமயத்தில் ஜெயா டி.வி-க்கு ரிமோட்டை மாற்றினால்… அங்கு, நான்கு ஜோதிடர்களை அழைத்து வந்து ஸ்டுடியோவுக்குள் அமர வைத்து கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ‘91-ல் ஜெயலலிதா ஆட்சி, 2001-ல் ஜெயலலிதா ஆட்சி. 2011-ல் கண்டிப்பா அம்மா ஆட்சிதான்’ என்று அவர்களும் பின்னி எடுத்தனர். எதிர்வரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்!

மக்களை நம்பாமல், சொந்தக் கட்சிக்காரர்களை நம்பாமல், கூட்டணிக் கட்சியினரை நம்பாமல், கருணாநிதி குடும்பத்தின் அராஜகத்தை மட்டுமே நம்பி தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை சுரண்டும் அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு கை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அ.தி.மு.க. சுவைத்திருக்கும் இந்த மாபெரும் வெற்றியின் ருசி அவர்களே எதிர்பாராதது! ஆனால் நமது ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும், ஜெயலலிதாவின் வெற்றிக்கு பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்களையும் ‘கண்டுபிடித்து’ சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ‘இது ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தின் அறுவடை’ என்பதை ஜெயலலிதாவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டார்.

இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை. இருவரின் ஊழல் விகிதத்தைக் கூட நாம் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாம். குறைந்தப்பட்சம் ஓர் ஓட்டரசியல் கட்சிக்கு உண்டான உழைப்பைக் கூட ஜெயலலிதா வழங்கவில்லை. கொடநாட்டில் ஓய்வு, அவ்வப்போது அறிக்கைகள், இன்பச் சுற்றுலா போல எப்போதாவது ஒரு போராட்டம் என கடந்த 5 ஆண்டுகள் அவர் எதற்கும் உழைத்தது இல்லை.

’ஜெயலலிதா ரொம்ப தைரியமானவங்க. எதையும் போல்டா செய்வாங்க’ என்கிறார்கள் பலரும். இந்த சித்திரத்தின் ஊற்றுகண் எங்கிருந்து வருகிறது? ஒரு சொட்டு மையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பினார். சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்குப் போராடினால் கூட போலீஸ் படையை ஏவிவிட்டு அடித்து நொறுக்கினார். தன் அமைச்சரவையில் அமைச்சர்களை ஒரு மாதத்துக்கு ஒரு தடவை மாற்றிக்கொண்டே இருந்தார். கூட்டணிக்கு வர சொல்லிவிட்டு தன் போக்குக்குத் தொகுதிகளை அறிவித்தார். வைகோ போன்ற தலைவர்களை கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டார். ஜெயலலிதாவின் இத்தகைய தடாலடி நடவடிக்கைகளைதான் ‘தைரியம்’ என வரையறுக்கிறார்கள். இதற்குப் பெயர் தைரியம் அல்ல, அரசியல் ரவுடித்தனம். உங்கள் வீட்டில், உங்கள் தெருவில் இத்தகைய நடவடிக்கையோடு ஒருவர் இருந்தால் அதை தைரியம் என்றா சொல்வீர்கள்?

ஸ்பெக்ட்ரம் எனும் பகல்கொள்ளை நடந்தது. கார்பொரேட் முதலாளிகளும், தி.மு.க. பிரைவேட் லிமிட்டெட்டும் சேர்ந்து பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை கேட்டுக் கேள்வி இல்லாமல் கொள்ளை அடித்தனர். பிரதான எதிர்கட்சியாக ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்த ஜெயலலிதா எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? எதுவும் இல்லை. போகிற போக்கில் நான்கு அறிக்கைகள் வெளியிட்டதோடு சரி. ஏன் ஜெயலலிதா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்தவில்லை என்பதை ஆராய்வோமேயானால், அதன் பதில் தெரிந்த ஒன்றுதான். அது வெறுமனே தி.மு.க.வுக்கும், கருணாநிதிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது முதலாளிகளுக்கு எதிரானது. அதனால்தான் ஸ்பெக்ட்ரத்துக்கு எதிரான பிரசாரம் ஓட்டரசியலுக்கு உதவும் எனத் தெரிந்தும் ஜெயலலிதா அதைப்பற்றிப் பேசவில்லை. இரண்டாவது பாய்ண்ட், என்ன இருந்தாலும் ஊழலுக்கு எதிராக ஓவர் ஆவேசத்துடன் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கும் கொஞ்சம் கூச்சமாக இருக்கும்தானே?!

இப்போது கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் சட்டசபையை நடத்தாமல் பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே பதவி ஏற்பதற்கான வேலைகள் நடக்கின்றன. இதே அளவுகோளின் படி, கருணாநிதி சென்னையைச் சுற்றி, கொண்டுவந்திருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை திருப்பி அனுப்பவோ, அவற்றுக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகளைத் திரும்பப் பெறவோ முன்வருவாரா ஜெயலலிதா? மாட்டார். ஏனெனில் அவை முதலாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள். காஞ்சிபுரத்தில் சசிக்கலா கும்பல் Midas Golden Distilleries Limited  என்ற பெயரில் சாராய கம்பெனி நடத்துகிறது. அதே காஞ்சிபுரத்தில் தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன் SNJ  DISTILLERIES(P) LTD என் ற பெயரில் சாராயக் கம்பெனி நடத்துகிறார். கடந்த தி.மு.க. ஆட்சியில் எப்படி Midas நிறுவனத்துக்கு எந்த பிரச்னையும் வரவில்லையோ, அதுபோல இப்போது ஜெகத்ரட்சகன் கம்பெனிக்கு எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை. இங்கு மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் கல்விக்கொள்ளை முதல் மணல் கொள்ளை வரையிலான சகலக் கூட்டுக் கொள்ளைகளிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கை கோத்துதான் நிற்கிறது. இதற்கு ஏதேனும் பாதிப்பு வரும் என நினைக்கிறீர்களா?

இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தவே அனுமதி மறுக்கப்பட்டது. ஓர் அரங்கக்கூட்டம் கூட நடத்த முடியவில்லை. துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க முடியவில்லை. அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை அமுல்படுத்தியிருந்தார் கருணாநிதி. உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமியின் முகத்தில் படிந்த முட்டைக் கரையை வழக்கறிஞர்களின் ரத்தத்தால் துடைத்துவிட்டார். இப்போது வரை அடித்த போலீஸுக்கு சிறு தண்டனையும் கிடைக்கவில்லை. தலித்களின் சம்பந்தியாக தன்னை அறிவித்துக்கொண்டவர், உத்தபுரம் தீண்டாமைச் சுவரை இடிப்பதற்கு எதையும் செய்யவில்லை. இவற்றுக்கு எல்லாம் ஜெயலலிதா மாற்றாக இருப்பார் என நீங்கள் நம்புகிறீர்களா?

சந்தேகம் இல்லாமல் இது ஊழலுக்கு எதிரான மக்கள் மனநிலையின் வெளிப்பாடுதான். ஆனால் ஊழல் மட்டுமே இங்கு பிரச்னை இல்லை. நடந்து முடிந்த தேர்தல், ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் போல நடத்தப்பட்டிருக்கிறது. போலி ஜனநாயகம்தான் என்றாலும் இதுவரை பெயரளவுக்கேனும் மக்கள் பங்கேற்பு இருந்தது. ஆனால், கடந்த தேர்தலில் திட்டமிட்ட வகையில் மக்கள் தேர்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ’பணத்தை வாங்குனியா, ஓட்டைப் போட்டியா… போயிட்டே இரு’ என்பதே டீலிங். இதைப்பற்றி வெகுமக்கள் மனநிலை கேள்வி எழுப்பவில்லை. ‘மக்களையே பங்கேற்கவிடாமல் அப்புறம் என்ன மக்களாட்சி?’ எனக் கேட்கும் தார்மீக மனநிலையை பலரும் இழந்துவிட்டனர். சொல்லப்போனால், மக்கள் பங்கேற்பு இல்லாத இந்த ‘அமைதியான’ தேர்தல் மத்தியதர வர்க்க மனநிலையால் வரவேற்கவும் படுகிறது.

ஜெயலலிதாவின் வெற்றியை ஊழலுக்கு எதிரான எழுச்சியாக சித்தரிக்கும் யாரும், தேர்தல் சமயத்தில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் எதிர்க்கவில்லை. மாறாக, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் பணம்’ என பேரம் பேசுவதற்கான உபாயத்தையே சொல்லித் தந்தனர். அண்ணாச்சிக் கடையில் ஹமாம் சோப்பு வாங்கிவிட்டு, ’ஷாம்பு ஆஃபர் இருக்கா?’ எனக் கேட்பதைப் போல… ’ஊழல் காசில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குங்கள்’ என்கிறார்கள். இது யோக்கியமான பேச்சா? இப்போதும் கூட பலர் ‘பணத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு மக்கள் தி.மு.க.வுக்கு வெச்சாங்கல்ல ஆப்பு. பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சவுக்கடி’ என ஷங்கர் படத்தின் க்ளைமேக்ஸ் மக்கள் கருத்து போல பேசுகின்றனர். ’பணத்தை வாங்கினாலும் அந்த தாசில்தார் கரெக்டா வேலையை முடிச்சுக் கொடுத்துட்டாருப்பா’ என்பதற்கும், இதற்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?

’கருணாநிதி அயோக்கியர்தான். ஆனால் ஜெயலலிதா அதற்கு மாற்று இல்லை’ இதை ஏற்றுக்கொள்ளும் பலரும், ‘ஆனாலும் வேற வழி இல்லையே…’ என்ற இடத்தில் வந்து  நிறுத்துகின்றனர். ’வேறு வழி இல்லை’ என்ற வாதத்தை முன் வைக்கும் இவர்கள்தான் அரசியல் கட்சிகளின்; முதலாளிகளின் ஊழல்களைப் பற்றிப் பேசும்போது, ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என்கிறார்கள். 1. ‘வேறு வழியில்லை, 2. எதுவும் புதுசில்லை… என்ற இந்த இரு வசனங்களும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பு கொண்டவை. இந்த டுபாக்கூர் ஜனநாயகத்தின் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பது இந்த இரு புள்ளிகளுக்கு இடையில்தான்.

போலி ஜனநாயகம் மட்டுமல்ல… அநீதியான சாதி, ஊழல் என அனைத்தையும் சமரசப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தும் வாதமும் ‘எதுவும் புதுசில்லை’ என்பதுதான். ஸ்பெக்ட்ரம் பகல்கொள்ளையில், புரோக்கர் வேலைப் பார்த்த ஊடகவியலாளர் பர்கா தத், தன் முகம் அம்பலப்பட்டதும், ‘மீடியாக்காரர்கள் மீடியேட்டராக செயல்படுவது ஒன்றும் புதுசு இல்லையே’ என்றார். ’இவ்வளவு காலமாக அனுமதித்தீர்கள். இப்போதும் கண்டுகொள்ளாமல் இருப்பதில் உங்களுக்கு என்னப் பிரச்னை?’ என்பது பர்க்கா தத்தின் அறச் சீற்றத்தின் அடிப்படை.

நாம் மறுபடியும் ஜெயலலிதாவுக்கு வருவோம். கடந்த ஐந்து ஆண்டுகால குடும்பக் கொள்ளை கருணாநிதியை அதிகாரத்தில் இருந்து அகற்றியிருக்கிறது. இதுவே ஜெயலலிதாவை அதிகாரத்தில் அமர வைத்துமிருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் ஜெயலலிதாவும் இதைத்தான் செய்வார் என்பதில் சந்தேகம் தேவை இல்லை. அதனால் இதில் ஒருவரை காட்டி ஒருவரை நியாயப்படுத்தவோ, சமாதானம் அடையவோ எதுவும் இல்லை.

நமது சொந்த மனதின் உணர்ச்சிப்பூர்வமான தர்க்கங்களால் உற்பத்தியாகும் சொற்களுக்கு மெய்யுலகில் மதிப்பும் இல்லை, பொருளும் இல்லை. மெய்யுலகம் வேறு. அது முதலாளிகளால் இயக்கப்படுகிறது. அதன் புரோக்கர்களால் கண்காணிக்கப்படுகிறது. அதன் அடியாட்களால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. அதனால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்ற உடனேயே, ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முன்னுரிமைத் தரப்படும்’ என முந்திக்கொண்டு அறிவித்திருக்கிறார். போலீஸ் படை இன்னும் ஐந்தாண்டு காலத்துக்கு ஆட்டம் போடுவதற்கான மனநிலையை இப்போதே பெற்றுவிட்டது. இனிவரும் அடக்குமுறைகளை ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என சகித்துக்கொண்டுப் போவதா, அல்லது புதிதாக ஒன்றை நோக்கி போராடுவதா? நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!

தொடர்புடைய பதிவுகள்:

அ.தி.மு.கவின் அசுர வெற்றியும், தி.மு.கவின் நாக் அவுட் தோல்வியும்!

114
அ.தி.மு.கவின் அசுர வெற்றியும், தி.மு.கவின் நாக் அவுட் தோல்வியும்!
பிசாசு ஆட்சி போய் பேயாட்சி வந்திருக்கிறது!

ந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. அஸ்ஸாமில் காங்கிரசே எதிர்பார்க்காத வெற்றி கிடைத்திருக்கிறது. மே. வங்கத்தில் எல்லாரும் எதிர்பார்த்தது போல மம்தா பானர்ஜிக்கு மூன்றில் இரண்டு பங்கு வெற்றி கிடைத்திருக்கிறது. புதுவையில் ரங்கசாமி – அ.தி.மு.க கூட்டணி மயிரிழை வெற்றியும், கேரளத்தில் காங்கிரசு கூட்டணி இரண்டு தொகுதிகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இதில் மேற்கு வங்கம் குறித்து தனிச்சிறப்பான கட்டுரை விரைவில் வெளியிடுகிறோம். இங்கு தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து மட்டும் பார்க்கலாம்.

மிழகத்தில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று கணித்த எக்சிட் போல் கணிப்புகள் கூட இந்த பிரம்மாண்ட வெற்றியை கணிக்க முடியவில்லை. இதுவரை எங்கள் கணிப்புதான் தமிழக தேர்தல் முடிவுகளோடு ஒத்துப் போனது என்று மார்தட்டிய நக்கீரன் பத்திரிகை இப்போது மூக்குடைபட்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழக மக்களின் முடிவுகளை துல்லியமாக எவராலும் கணிக்க முடியவில்லை. ஆனால் பொதுவில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்பதை பொதுமக்கள் முதல் பத்திரிகையாளர்கள், சில பதிவர்கள் வரை பேசி வந்தனர். அவர்களும் கூட இந்த அளவு வெற்றியை கணித்திருக்கவில்லை.

இதில் என்.டி.டி.வி ஹிண்டு நிருபர் ஒருவர் டெல்லியில் நடந்த அண்ணா ஹாசாரே போராட்டம் தமிழக வாக்காளர்களின் ஜனநாயக கடமையை எழுப்பி விட்டிருக்கும் என்று கூறினார். இனி இது போன்ற அபத்தங்கள் பல முனைகளிலிருந்தும் வரும். ஜெயலலிதாவின் வெற்றியை சிலாகித்து புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் குவியலாம்.

தமிழகத்தில் நடந்த அதிக வாக்குப்பதிவு, முதல் முறை வாக்களிப்பவர்கள், விலைவாசி உயர்வு, மின்தடை என்று பல காரணங்களால், அ.தி.மு.க இந்த பெரு வெற்றியை பெற்றிருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் பலரும் கருணாநிதி குடும்ப ஆட்சி கொள்ளையை மட்டும் முக்கிய பிரச்சினையாக பார்த்திருந்தனர். ஆனால் உள்ளூர் அளவில் பல அமைச்சர்களும், தலைவர்களும், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் முழு வீச்சில் கொள்ளையடித்தது, ஐந்தாண்டுகளுக்குள் ஏகப்பட்ட பினாமி தொழில்கள், கல்வி நிறுவனங்களை உருவாக்கியது என்று முழு தமிழகத்திலும் தி.மு.க கும்பல் மக்களிடையே மிகுந்த கெட்ட பெயரை சம்பாதித்திருந்தது.

இலவசங்கள், காப்பீட்டு திட்டம் போன்ற சலுகைகளை விட விலைவாசி உயர்வு மக்களை வெகுவாக அச்சுறுத்தி வந்தது. வருமானம் உயர்ந்திருப்பதால் விலைவாசியெல்லாம் பிரச்சினையில்லை என்று தி.மு.க அமைச்சர்கள் திமிராக பேசிவந்தனர். அதே போல கல்வி கட்டண உயர்வு, சுயநிதிக் கல்லூரி கட்டணக் கொள்ளை போன்றவை காரணமாக நடுத்தர வர்க்கமும் இந்த ஆட்சி மீது வெறுப்புற்றிருந்தது. சன்.டி.வி, கலைஞர் டி.வி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி இவர்களது ஏகபோகத்தால் சிறைபட்டிருந்த சினிமா உலகிலும் கடும் எதிர்ப்பு இருந்தது.

இத்தகைய கடும் மக்கள் விரோத அரசாங்கத்தை தூக்கியெறிய வைக்குமளவுக்கு இங்கே அ.தி.மு.க எந்த போர்க்குணமிக்க போராட்டத்தையும் நடத்தவில்லை. சில அடையாள போராட்டங்களை நடத்தி விட்டு, அம்மா தரும் அறிக்கைகளை வைத்தே அந்தக் கட்சி செயல்பட்டு வந்தது. இதில் முக்கால்வாசி நாட்கள் கொடநாட்டில் ஓய்விலிருந்த ஜெயலலிதாவின் ‘திறமை, அர்ப்பணிப்பு’ காரணமாக இந்த வெற்றி கிடைக்க வில்லை என்பதை இங்கே வலியுறுத்தி சொல்கிறோம்.

தி.மு.கவின் மீது மக்களுக்கு இருந்த அளவு கடந்த கோபமே இப்படி வெளிப்பட்டிருக்கிறது. ஒரு வேளை இந்தத் தேர்தலில் ஜெயா தோற்று தி.மு.க வெற்றி பெற்றிருந்தால், முழு தமிழகத்தையும் மொட்டையடித்திருப்பார்கள். அதையெல்லாம் மக்கள் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். ஆக மொத்தம் அ.தி.மு.கவின் வெற்றி என்பது எதிர்மறையில் கிடைத்த ஒன்றாகும். அதில் அவர்களது சொந்த பங்கு எதுவும் இருக்கவில்லை.

சொல்லப்போனால் வைகோவை வெளியேற்றியது, கூட்டணியினரை அவமதிக்கும் வண்ணம் வேட்பாளர் பட்டியலை முந்தி வெளியிட்டது போன்றவற்றால் கெட்ட பெயரைத்தான் அக்கட்சி சம்பாதித்திருந்தது. இருப்பினும் மக்களுக்கு வேறு வழியில்லை என்ற அவலத்தில் ‘புரட்சித் தலைவி’ மீண்டும் ஆட்சி அமைக்க வருகிறார்.

தி.மு.க கூட்டணியில் காங்கிரசின் தோல்வி அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், பா.ம.க, வி.சி அனைவரும் மண்ணைக் கவ்வியிருக்கிருக்கிறார்கள். இந்த காரியவாதிகள் தோற்றார்கள் என்று மகிழ்ச்சியடைய முடியாதபடி தே.மு.தி.க எனும் காரியவாதிக் கட்சி பெருவெற்றி பெற்றிருக்கிறது. அதாவது இதுதான் எதிர்க்கட்சியாம்.                                அந்த வகையில் தி.மு.கவை எதிர்க்கட்சி என்ற தகுதியில் வைப்பதற்கு கூட மக்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது.

இந்தத் தோல்வி அப்பாவி உடன்பிறப்புகளுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்குமே அன்றி அதே அளவு அதிர்ச்சி தி.மு.க தலைவர்களுக்கு இருக்காது என்றுதான் தோன்றுகிறது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் உள்ளூர் அளவில் அனைத்து தொழில், காண்ட்ராக்டுகளும் அ.தி.மு.கவினருக்கும் கொடுக்கப்பட்டு நடந்தது போல இந்த ஆட்சியிலும் உள்ளூர் தி.மு.க தலைவர்களை அ.தி.மு.கவினர் கவனிப்பார்கள். அந்த வகையில் தி.மு.க தலைவர்களது தொழில்கள் செவ்வனே நடைபெறும். தி.மு.க அமைச்சர்களெல்லாம் தேவையான கப்பத்தை ஜெயா கும்பலுக்கு கட்டி விட்டு தொழிலை தொடர்ந்து நடத்துவார்கள்.

அசுர பலத்தில் வந்திருக்கும் அ.தி.மு.க ஆட்சி எப்படியிருக்கும் என்பதையும் விளக்கத் தேவையில்லை. ஏற்கனவே ஜெயாவின் இரண்டு இருண்ட காலத்தை தமிழகம் பார்த்திருக்கிறது. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தனது தொண்டர்கள் வீட்டின் முன்பு, தெருவில் மக்களோடு மக்களாக கலந்து வெற்றியை பகிர்ந்து கொள்கிறார். ஜெயலலிதாவோ தூங்கிக் களைத்த முகத்தோடு பால்கனியில் மேலிருந்தவாறு கீழே குதிக்கும் தொண்டர்களை பார்த்து இரண்டு விநாடி, இரட்டை விரல்களைக் காட்டிவிட்டு சென்று விடுகிறார். அதன்படி வரும் ஆட்சி இப்படித்தான் இருக்குமென்பதற்கு இந்த படிமமே ஒரு நல்ல விளக்கம்.

கருணாநிதி குடும்பத்தின் ஏகபோக தொழில்களை ஓரளவுக்கு கப்பம் வாங்கி அனுமதித்துவிட்டு ஜெயா சசி கும்பலின் ஏகபோகம் ஆரம்பிக்கும். மறுகாலனியாக்கத்தின் கொள்ளையில் பொறுக்கி தின்பதற்கு தற்போது வாய்ப்பு அதிகமென்பதால் இவர்கள் சட்டபூர்வமாகவும், சட்ட விரோதமாகவம் வெகுவேகமாக கல்லா கட்டுவார்கள். ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலில்லாத வறட்சியை ஐந்து மாதங்களில் கூட தீர்த்துக் கொள்வார்கள்.

மீண்டும் போலீசின் நேரடி அதிகார ஆட்சி வரும். ஜனநாயகம், பத்திரிகை சுதந்திரம், ஈழ ஆதரவு முதலியவையெல்லாம் மிரட்டல் கண்காணிப்பில் வைக்கப்படும். இதற்கு மேல் ஜெயலலிதா, சசிகலா என்ன விரும்புகிறார்கள், எப்போது என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அந்த திகில் நிறைந்த அடக்குமுறைகளுக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

அரசு ஊழியர், தொழிலாளர்கள், மாணவர்கள் அனைவரும் தங்களது நலனுக்காக போராடுவது குதிரைக் கொம்பாக மாற்றப்படும். மீறி போராடினால் கடும் அடக்குமுறையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆண்டுகள் மாறினாலும் ஜெயலலிதா மாறமாட்டார். இது போக துக்ளக் சோ போன்ற குருநாதர்கள் என்ன திட்டமெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பார்ப்பனியத்தின் வேலைத்திட்டங்களெல்லாம் மறைமுகமாகவோ,நேரடியாகவோ கொண்டு வருவதற்கும் வாய்ப்புகள் பல உண்டு.

மொத்தத்தில் பிசாசு ஆட்சி அகன்று, பேயாட்சி வந்திருக்கிறது. அதையும் தமிழக மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

நோய்டா: விவசாயிகள் போராட்டமும், ராகுல் காந்தியின் நாடகமும்!

14

த்திரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி மாவட்டங்கள் கொதிநிலையில் உள்ளன. ஜெயபிரகாஷ் கௌர் என்கிற தரகு முதலாளிக்குச் சொந்தமான ஒரு கட்டுமானக் கம்பெனி, நோய்டாவில் சுமார் 2,500 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வளைத்து, ‘ஜே.பி க்ரீன் விளையாட்டு நகரம்’ எனும் பெயரில்  மேட்டுக்குடி சீமான்களுக்கான கேளிக்கை மையம் ஒன்றை அமைத்து வருகிறது. இதில், சுமார் 875 ஏக்கர் பரப்பளவில் பார்முலா ஒன் கார் ரேஸ் மைதானம் ஒன்றையும் அமைத்து வருகிறது. இதன் பணிகளை வரும் ஜூன் மாதத்துக்குள் முடித்து, அக்டோபர் மாதம் முதல் சர்வதேச போட்டியை நடத்துவதில் முனைப்பாக உள்ளது.

இதற்கிடையே, நோய்டாவையும் ஆக்ராவையும் இணைக்கும் விதமாக சுமார் 165 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆறு வழி அதி விரைவுச் சாலை ஒன்றையும் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதே ஜே.பி குழுமம் அமைத்து வருகிறது. இந்த திட்டத்திற்காக 334 கிராமங்களைச் சேர்ந்த  கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான விலை குறைவாக இருந்ததால், கடந்த சில வருடங்களாகவே விவசாயிகள் உரிய விலை கேட்டு போராடிக் கொண்டிருந்தார்கள்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், ஜே.பி குழுமத்திற்கு ஆதரவான தீர்ப்பை கடந்த செப்டம்பர் மாதத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்திருந்தது. தீர்ப்பளித்த நீதிபதி சிர்ப்பூர்கர், ‘பொதுநலனுக்கான இந்தச் சாலை அமைவதற்காக சில தனிநபர்கள் தியாகம் செய்வது தவிர்க்க முடியாதது’ என்று ஒரு தத்துவ முத்தையும் உதிர்த்திருக்கிறார்.

இந்நிலையில் பொறுமையாக இருந்த விவசாயிகள், கடந்த 7-ம் தேதி வேறுவழியின்றி களத்திலிறங்கினார்கள். உ.பி அரசின் நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளைத் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கத்தில் சிறைபிடிக்கிறார்கள். உடனே பாய்ந்து வரும் போலீசு பட்டாளம், போராடும் விவசாயிகளைத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு விவசாயி இறந்துள்ளார். ஆத்திரமுற்ற விவசாயிகள், தமது பாதுகாப்புக்காக போலீசின் மேல் எதிர்த்தாக்குதல் தொடுத்ததில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து போராட்டத்தின் குவிமைய்யமாக இருக்கும் பட்டா பர்சௌல் கிராமத்தைப் பெரும் படையுடன் சுற்றி வளைக்கும் போலீசு, நூற்றுக்கணக்கான விவசாயிகளையும் அப்பாவி கிராமத்து மக்களையும் கைது செய்து சித்திரவதை செய்துள்ளது. வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த போலீசு குண்டர்கள் பெண்களைத் தாக்கிக்கியுள்ளனர். போலீசின் இந்த வெறியாட்டத்தையடுத்து, நோய்டாவில் மையம் கொண்டிருந்த போராட்டப் புயல் அதையும் கடந்து ஆக்ரா, அலிகார் என்று உ.பியின் வடக்குப் பகுதி மாவட்டங்களெங்கும் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

தற்போது போராட்டத்திலிறங்கியிருக்கும் விவசாயிகள், தங்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியுள்ள நிலங்களுக்கான நியாயமான விலையும், கையகப்படுத்தியுள்ள நிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் வேலைகளில் 25 சதவீத இடஒதுக்கீடு மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு 120 சதுர மீட்டர் நிலமும், இழந்த ஒவ்வொரு ஏக்கருக்கும் ஐந்து லட்ச ரூபாய் நட்ட ஈடும் கோருகிறார்கள். உ.பி மாநில அரசோ, மக்களுக்காகத் தான் உட்கட்டமைப்பு வசதிகளை உண்டாக்கி வருவதாகவும் விவசாயிகளும் மக்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி வருகிறது – இதையே தான் வேறு வார்த்தைகளில் அலகபாத் உயர்நீதிமன்ற நீதிபதியும் தெரிவித்திருந்தார்.

நாம் இந்த விவகாரத்தின் வெளிப்பாடுகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு முன் இதற்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் ‘யமுனை அதிவிரைவுச் சாலை’ என்கிற இந்தத் திட்டத்தையும், அது உண்மையிலேயே மக்களுக்குப் பயன்தரக்கூடிய திட்டம் தானா என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.  அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டத்தின் பின் இருக்கும் நியாயமும் இந்தத் திட்டத்தை ஆதரிப்பவர்களின் அயோக்கியத்தனமும் தெளிவாகப் புரியும்.

தரகு முதலாளிகளின் நவீன காமதேனு – யமுனை அதிவிரைவுச் சாலைத் திட்டம்.

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகட்டும் உள்நாட்டிலேயே பிற பகுதிகளில் இருந்து வட இந்தியாவுக்கு சுற்றுலா செல்வோராக இருக்கட்டும், இவர்கள் தவற விடாமல் தரிசிக்க வேண்டும் என்று நினைப்பது தாஜ் மகால்.  தற்போது உள்ள நெடுஞ்சாலை வழியே தில்லியிருந்து ஆக்ராவிலிருக்கும் தாஜ் மகாலுக்குச் செல்ல வேண்டுமென்றால் 210 கிலோ மீட்டர்கள் தரை வழியே பயணிக்க வேண்டும். இந்நிலையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் அதிவிரைவுச் சாலை அந்த தொலைவை 160 கிலோ மீட்டர்களாகச் குறைக்கிறது. இதனால் தில்லியிருந்து வெறும் 100 நிமிடங்களில் தாஜ் மகால் செல்ல முடியும்.

அதிவிரைவுச் சாலையென்பதை சாதாரண மக்கள் பயன்பாட்டுக்காக இருக்கும் சாலைகளோடு ஒப்பிட முடியாது. இதில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்த பட்ச வேகம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். சாமானிய மக்கள் சைக்கிளிலோ, ஆட்டோவிலோ, இரு சக்கர வாகனங்களிலோ செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும். இப்போது தில்லியிலிருந்து குர்காவ்ன் செல்லும் பாதையில் கூட, சாதாரண மக்கள் செல்லும் சைக்கிளோ, விவசாயிகள் பயன்படுத்தும் மாட்டு வண்டி, டிராக்ட்டர் போன்ற வாகனங்களுக்கோ அனுமதியளிக்கப்படவில்லை.

இது ஒருபுறம் இருக்க, தில்லிப் பெருநகரம் என்பது ஏற்கனவே போதுமான அளவிற்கு பெருத்து விட்டது. ரியல் எஸ்டேட் சூதாடிகள் போதுமான அளவிற்கு தில்லியைச் சுற்றி நோய்டா, காஸியாபாத், குர்காவ்ன் என்று சாடிலைட் சொர்க்க நகரங்களை உருவாக்கிக் கறந்து தள்ளி விட்டார்கள். எனவே, தற்போது தில்லி – ஆக்ரா பாதையை யமுனை எக்ஸ்ப்ரஸ் ஹைவே எனும் பெயரில் குறிவைத்து கிளம்பியுள்ளனர்.

தாஜ் தொழில் மேம்பாட்டுக் கழகம் (Taj Industrial Developement Association) என்கிற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் கீழ் தான் யமுனை அதிவிரைவுச் சாலை, எஃப்1 ரேஸ் மைதானம் போன்ற திட்டங்களை ஜே.பி குழுமத்திற்கு ஒதுக்கியுள்ளனர். இது போக, இந்த அதிவிரைவு சாலை நெடுக அமையவிருக்கும் விளையாட்டு நகரங்கள், சாடிலைட் நகரங்கள், ஐ.டி பூங்காக்கள் என்று பல்வேறு கட்டுமானத் திட்டங்களை டி.எல்.எஃப், யுனிடெக் (ஸ்பெக்ட்ரம் புகழ்) போன்ற கம்பெனிகள் தங்கள் பங்காகப் பெற்றுள்ளனர்.

தற்போது அமையவிருக்கும் அதிவிரைவுச் சாலையை ஒட்டி, தீம்பார்க்குகள், அடுக்குமாடி அப்பார்ட்மென்ட்டுகள், விளையாட்டு நகரங்கள், கோல்ப் மைதானங்கள், ஐ.டி கம்பெனிகள் என்று சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்குமான உலகத்தை நிர்ணயிப்பது தான் இவர்களின் திட்டம். இதுவும் போக தரகுமுதலாளிகளுக்காக சிறப்பு ஏற்றுமதி மண்டலங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று நாட்டின் வளங்களை திருடிச் செல்வதற்கான ஒரு திறந்த வாசலாக இப்பிராந்தியத்தை மாற்றியமைக்கும் திட்டத்தின் ஒரு சிறிய அங்கம் தான் இந்த அதிவிரைவுச் சாலை.

அதற்குக் குறிப்பாக இந்த வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்தற்கான காரணங்களாக, இது மக்கள் அடர்த்தி குறைவான பகுதியென்றும், இங்கேயிருந்து மக்களை விரட்டியடிப்பது மிகச் சுலபமானது என்றும் காரணங்களை அவர்களே சொல்கிறார்கள். இவையெல்லாம் தான் தமது  நோக்கங்கள் என்றும், இன்னின்ன காரணங்களுக்காகத் தான் இந்த வழித்தடம் தேர்ந்தெடுக்கபப்ட்டது என்றும் இதற்கான அதிகாரப்பூர்வமான தளத்திலேயே மிகத் தெளிவாகக் குறிப்பிட்டும் உள்ளனர். http://yamunaexpresswayauthority.com/content/opportunities-area

ஆக, விவசாயிகளிடமிருந்து அநியாயமாக மிகக் குறைந்த விலைக்குப் பறிக்கப்பட்டிருக்கும் இந்நிலங்கள், பன்னாட்டு முதலாளிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் ஒரு ரியல் எஸ்டேட் தங்கச் சுரங்கமாக இருக்கப் போகிறது. சாலையின் பயன்பாடு மட்டுமல்ல, சாலை அமைப்பதற்காகவும், பிற திட்டங்களுக்காக அந்நிலத்தை ஒட்டியும் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் செயல்படுத்தப் போகும் திட்டங்களில் அம்மண்ணின் மைந்தர்களுக்கு இடமில்லை என்று சொல்வது தான் விவசாயிகளை ஆத்திரமூட்டியுள்ளது.  கொடுத்த விலையும் குறைவு, அதில் வேலையும் கிடையாது என்கிற அரசின் அயோக்கியத்தனமான பொருளாதாரக் கொள்கை தான் இன்று மேற்கு உ.பியின் விவசாயிகளும் உழைக்கும் மக்களும் போர்க்கோலம் பூண்டு களத்தில் இறங்கியிருப்பதற்கான அடிப்படை காரணம்.

இதற்கிடையே விவசாயிகளின் போராட்டம் பரந்துபட்ட மக்களிடையே ஒரு வலுவான ஆதரவுத் தளத்தை உண்டாக்கியிருப்பதைக் காணும் பிற ஓட்டுக் கட்சித் தலைவர்கள், வாயில் எச்சில் வடிய பட்டா பர்சௌலுக்குப் படையெடுத்துள்ளனர். பட்டா பர்சௌலுக்குச் சென்றுள்ள காங்கிரசு கட்சியின் அமுல் பேபியான ராகுல் காந்தி, விவசாயிகளின் துயரங்களைத் தாம் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், விவாயிகளுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரைத் தாம் இந்தப் பிரச்சினையில் இருந்து விலகப்போவதில்லை என்றும் சூளுரைத்திருக்கிறார். உச்சகட்டமாக, விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பார்த்த பின் தன்னை ஒரு இந்தியர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருப்பதாகவும் சொல்லுகிறார்.

இப்படிச் சொல்லும் ராகுலின் காங்கிரசு தான் நிலப்பறிப்பை சட்டப்பூர்வமாக்கும் வகையில் ஒரு சட்ட மசோதாவைத் தயாரிப்பதில் இப்போது மும்முரமாக இருக்கிறது. கூடியவிரைவில் அதை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றும் முனைப்பிலும் இருக்கிறது. இது போக, கோவா, மகாராஷ்ட்டிரா என்று காங்கிரசு ஆளும் பல்வேறு மாநிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டங்களுக்காகச் செய்யப்படும் நிலப்பறிப்பை எதிர்த்து போராடி வரும் மக்கள் மீது போலீசு குண்டர்களை ஏவி மிருகத்தனமாக ஒடுக்கி வருவதும் இதே காங்கிரசு தான்.

இன்றைக்கு வரை பன்னாட்டுக் கம்பெனியான போஸ்கோ, வேதாந்தா போன்ற கம்பெனிகளை தமது நிலத்தைக் கபளீகரம் செய்ய அண்டவிடாமல் தடுத்துப் போராடிக் கொண்டிருக்கும் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களின் மேல் இராணுவத்தை ஏவி நூற்றுக்கணக்கான கிராமங்களை எரித்து சாம்பலாக்கியிருப்பதும் இதே காங்கிரசு தான். மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை ஒரு பக்கத்திலிருந்து மக்களின் மேல் ஏவி ஈரத் துணி போட்டு அவர்கள் கழுத்தை அறுத்துக் கொண்டே இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து நீலிக் கண்ணீர் வடிக்கும் இந்த வக்கிர புத்தியின் அயோக்கியத்தனத்தை என்ன்வென்று அழைப்பது?

பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டு மனம் நொந்து போயிருப்பதாகவும் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுவதாகவும் முதலைக் கண்ணீர் வடிக்கும் ராகுல் காந்தி, இதே காங்கிரசு ஆளும் மகாராஷ்ட்ராவின் விதர்பா பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்து செத்துப் போனதற்கு இது வரை என்ன செய்துள்ளார்? இந்த மோசடியொன்றும் இவருக்குப் புதிதல்ல. ஒருபக்கம் நிலப்பறிப்பை எதிர்த்துப் போராடும் மக்களைக் கொல்ல இராணுவத்தை மத்திய இந்தியாவிலும் ஒரிசாவிலும் குவித்து விட்டு இன்னொரு பக்கம் ஒரிசாவின் பழங்குடி மக்களை ஒன்றுமே தெரியாத அப்பாவிக் குழந்தை போல் சந்திக்கும் பச்சை அயோக்கியத்தனத்தை இவர் ஏற்கனவே செய்திருப்பவர் தான்.

ராகுல் காந்தி மட்டுமல்ல, உ.பி விவசாயிகளின் போராட்டத்தில் மஞ்சக் குளிக்க கிளம்பி வந்து பட்டா பர்சௌல் கிராமத்தை வட்டமடிக்கும் பிற ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளுக்கும் இந்த விவகாரத்தின் மூல காரணமாய் இருக்கும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளின் மேல் எந்தக் கேள்விகளும் கிடையாது. மாயாவதி ஆட்சியிலிருக்கிறார் – இவர்கள் ஆட்சியில் இல்லை என்பதைக் கடந்து இவர்களுக்குள் எந்த வித்தியாசமும் கிடையாது என்பதே உண்மை. எனவே தான் நிலப்பறிப்பு மசோதாவை இவர்கள் தீவிரமாக வலியுறுத்துகிறார்கள். நிலப்பறிப்பு நடவடிக்கைகள் சட்டபூர்வமாக நடந்து அரசியல் சட்டப்படி மக்களுக்கு பட்டை நாமம் சாற்றப் படுவது தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று இவர்கள் கோருகிறார்கள்.

ஆக, போராடும் மக்கள் இவர்களின் கள்ளத்தனத்தைப் புரிந்து கொள்வதோடு, தமது போராட்டங்களை யமுனை அதிவிரைவுச் சாலை என்பதோடு குறுக்கிக் கொள்ளாமல் அதற்குக் காரணமான பொருளாதாரக் கொள்கைகளையும் அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த ஓட்டுக் கட்சித் தரகர்களையும் எதிர்த்துப் போராடி வீழ்த்துவதே இந்த மறுகாலனியாகச் சுருக்குக் கண்ணியிலிருந்து மீள்வதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

போர்க்குணமிக்க விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்!

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: