விடுதலை வேட்கை பற்றியெரியும் காஷ்மீரில் மக்கள் போராட்டத்தைக் எதிர்கொள்ள முடியாத இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை மீறித் தெருவில் நடமாடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளது. மன்மோகன் சிங் தலைமையில் கூடிய உயர்மட்டக் குழு கூட்டத்திற்குப் பிறகு இந்த உத்திரவு வந்துள்ளது. மேலும் இரண்டாயிரம் துணை இராணுவப் படையினர் காஷ்மீருக்கு அனுப்பப்பட விருக்கிறார்கள். காஷ்மீரின் ஒவ்வொரு வீதியிலும் இந்த உத்தரவை ஒலிப் பெருக்கியில் கூறி மக்களை மிரட்டி வருகிறது இந்திய இராணுவம். ஆனால், “இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கம் இராணுவத்தின் மிரட்டலையும் விஞ்சி, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் எதிரொலிக்கிறது.
மூன்று மாதங்களில் நூறுக்கும் மேற்பட்டவர்களைத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலிகொடுத்தும் அம்மக்களின் போராட்டம் ஓயவில்லை. கடந்த வாரத்தில் மட்டும் 27 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர், நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ சதி, பிரிவினைவாதிகள் சதி எனப் பத்திரிக்கைகள் காஷ்மீர் மக்களின் இந்தப் போராட்டத்தைக் கொச்சைபடுத்தி எழுதி வருகின்றன. “நம்காலத்து ஜெனரல் டையர்” மன்மோகனோ ஊரடங்கை மீறுபவர்கள் அப்பாவிகள் அல்ல தீவிரவாதிகள், அவர்களைச் சுட்டுக் கொல்வதில் தப்பில்லை என கொலை வெறியுடன் உத்தரவிடுகிறார். கல்லூரி மாணவர்கள், பள்ளிச் சிறுவர்கள், குடும்பத் தலைவிகள், என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தங்களது சுதந்திரத்திற்காகப் போராடி வரும்போது, இதனை தீவிரவாதிகள் சதி என்ற ஒரே வார்த்தையில் ஒதுக்கித் தள்ளிவிடத் துடிக்குது இந்திய அரசு.
இந்திய இராணுவத்தின் பெரும் பகுதியை காஷ்மீரில் நிறுத்தி, கடந்த 30 வருடங்களாக துப்பாக்கி முனையில் ஆட்சி செய்து வருகிறது இந்தியா. துப்பாக்கியின் நிழலில் வாழும் கொடுமையைத் தாங்க முடியாத காஷ்மீர் மக்கள் தெருவில் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளனர். தங்களது இளைஞர்கள் தீவிரவாதி என முத்திரை குத்திக் கொல்லப்படுவதையும், தங்கள் வீட்டுப் பெண்கள் இராணுவத்தால் சூறையாடப்படுவதையும் இனியும் காசுமீரிகளால் சகித்துக்கொள்ள இயலாது. அவர்கள் களத்தில் இறங்கி விட்டனர். ஆதிக்க வெறியாட்டம் போடும் இந்திய இராணுவத்தையும், அரசையும் காஷ்மீரிலிருது வெளியேற்றாமல் அவர்கள் ஓயப்போவதில்லை.
ஆனால் இந்திய அரசின் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது. இந்திய அரசுக்கு, தனிநாடு கேட்கும் போராளி இயக்கத்தை எப்படிச் சிதைக்க வேண்டும் என்பது தெரியும். அப்பாவிகளை பிடித்து தீவிரவாதி என போலி மோதலில் சுட்டுக் கொல்லத் தெரியும், ஆனால் அவர்களுக்குத் தெரியாதது, விடுதலை உணர்வு பெற்றுப் போராடும் மக்களின் போராட்டத்தை எப்படி அடக்குவது என்பதுதான். தீயைப் பொட்டலம் கட்ட யாருக்குத்தான் தெரியும்.
அதனால் தான் இவ்வாறு உத்தரவுகளைப் பிறப்பித்து மக்களை மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த வெத்துச் சவடாலுக்கும், மிரட்டலுக்கும் மக்கள் அஞ்சப் போவது இல்லை. இதோ ஆயிரக்கணக்காண காஷ்மீரத்து ஆண்களும் பெண்களும் தெருவிலிறங்கி இந்திய இராணுவத்தை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். அவன் துப்பாக்கியால் சுடுவான் எனத் தெரிந்தும் சிப்பாய்கள் மீது கல்லெறிகிறார்கள். ஊரடங்கு உத்தரவைக் காலில் போட்டு மிதித்து ஊர்வலமாகச் சென்று முழங்குகிறார்கள். 30 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிரான அவர்களது விடுதலை வேட்கையைத் தோட்டாக்களாலும், பீரங்கிக் குண்டுகளாலும் தடுக்க இயலாது. இந்திய அரசையும் இராணுவத்தையும் அவர்கள் நிச்சயம் முறியடிப்பார்கள், சுய நிர்ணயத்துக்காண அவர்களது போராட்டம் நிச்சயம் வெல்லும்.
இலக்கிய அறிமுகம் – 4 பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht)
நவீன ஐரோப்பிய நாடக உலகில் ஹென்றிக் இப்ஸன், ஆகஸ்ற் ஸ்ற்றிட்போர்க் என்போருக்கு அடுத்தபடியாக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பிரெக்ட். முற்போக்கான சிந்தனையுடையவரான பிரெக்ட்டின் உலக நோக்கு 1920களின் நடுப்பகுதியில் மார்க்ஸியத்தின் வழிப்படலாயிற்று. அக்காலப்பகுதியில் வெளியான சாளி சாப்ளினின் “கோல்ட் ரஷ்” ஸெர்கெய் ஐஸென்ஸ்ற்றைனின் “போடெம்கின் போர்க்கப்பல்” எனும் திரைப்படங்கள் நாடகம் பற்றியும் சமூகம் பற்றியும் பிரெக்ட்டின் பார்வை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்று கூறப்படுகிறது.
பிரெக்ட்டின் நாடகங்கள் எந்த அளவுக்கு மக்களை கவர்ந்தனவோ அந்த அளவுக்கு அவை ஜெர்மன் ஃபாசிசவாதிகளான நாஜிகளின் வெறுப்பை சம்பாதித்தன. எனவே ஃபாசிசம் அதிகாரத்திற்கு வந்த பின்பு பிரெக்ட்டால் ஜெர்மனியில் வாழ முடியவில்லை. ஐரோப்பியாவினுள் புலம் பெயர்ந்து சுவீடனில் வாழ்ந்த பிரெக்ட் அதன் இறுதியில் ஜெர்மனி வட ஐரோப்பாவை கைப்பற்றிய கையோடு அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார்.
ஐம்பத்து மூன்று நாடகத்தை எழுதிய பிரெக்ட்டின் மிகச்சிறந்த நாடகங்கள் உலகப்போர் காலத்திலேயே எழுதப்பட்டன. கலிலியோவின் வாழ்க்கை, தைரியத்தாய் (Mother Courage), ஷெச்சுவானின் நல்ல பெண்மணி, காக்கேசிய சுண்ண வட்டம், என்பன இன்றும் பேசப்படுவன.
உலகப்போரின் முடிவையொட்டி தொடங்கிய கெடுபிடிப் போரின் (cold War) போது, அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடும் அரசாங்க நடவடிக்கைகள் முனைப்பு பெற்றன. பிரெக்ட் ஒதுக்கப்பட வேண்டியோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டார். அமெரிக்க மக்களனைவரின் அமெரிக்கருக்குத் தகாத செயற்பாடுகள் குழு (Un-American Activities Committee) அவரை விசாரித்த்து. முதலில் தனது அரசியல் பற்றி எதுவுமே சொல்லமாட்டென் என்று அறிவித்த பிரெக்ட், அமெரிக்காவில் தொடர்ந்தும் தங்கியிருக்க விரும்பாமல் தான் கம்யூனிஸ்ட கட்சி உறுப்பினரல்ல என்று சாட்சியமளித்து, விடுவிக்கப்பட்டு, 1947 ல் ஐரோப்பாவிற்கு சென்று சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்தார்.
மேற்கு வல்லரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்த மேற்கு ஜெர்மனியில், பழைய ஃபாசிசவாதிகள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டதையிட்டு வெறுப்படைந்த பிரெக்ட் பவேரியாவில் தன் ஊருக்கு திரும்பவில்லை. சோஷலிச கிழக்கு ஜெர்மனி அவருக்கு அழைப்பு விடுத்த்தையொட்டி 1949 முதல் இறக்கும் வரை ஜெர்மன் ஜனநாயக குடியரசின் குடிமகனாகவே வாழ்ந்தார். அவரது இறுதி ஆண்டுகளில் அடர் நாடகங்கள் எழுதாத போதும், நாடக இயக்கத்தை முன்னெடுப்பதிலும், புதிய தலைமுறையொன்றை உருவாக்குவதிலும் தனது நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டார். கற்பித்தலுக்கான நாடகங்கள் என்ற வகையில் மார்க்ஸிய சிந்தனையை முன்னெடுக்கும் குறு நாடகங்களையும் அவர் தயாரித்தார்.
பிரெக்ட் பற்றிய அவதூறுகள் சிலரால் இன்னமும் மேற்கில் பரப்பப்பட்டாலும், நவீன நாடகத்துறையில் அவருக்குரிய இடத்தை யாராலும் மறுக்க இயலாதுள்ளது. இன்றைய மக்கள் நாடக அரங்குகட்க்கும், பல்வேறு வெகுஜன புரட்சிகர அரங்குகட்க்கும் பிரெக்ட் ஒரு முன்னோடி என்று உறுதியுடன் கூறலாம். வழமையான நாடகத்துறையிலிருந்து அவர் ஏற்படுத்திய விலகல் முக்கியமானது. வழமையான நாடகங்கள் மேடை நிகழ்வுடன் அவையோர் ஒன்றிப் போவதையே நோக்கமாக்க் கொண்டிருந்த சூழலில், அவையோரை மேடை நிகழ்வினின்று தொலைவுபடுத்தி விலகி நிற்கச் செய்வதை பிரெக்ட்டின் “காவிய அரங்கு” முறை முதன்மைப்படுத்தியது. நாடகத்தின் நடுவே பாத்திரங்கள் அவையோரை விழித்து பேசுதல், பிரகாசமான மேடை ஒளி அமைப்பு, நாடகப் போக்கை இடைமறிக்கும் முறையில் புகுத்தப்படும் பாடல்கள் என்பன அந்த நோக்கஞ் சார்ந்த மேடை உத்திகள். விளக்கங்கூறும் விதமான சுலோக அட்டைகளைக் கூட பிரெக்ட் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. பிரெக்ட் தனது நாடகச் சுவடிகளை தொடர்ந்து திருத்தங்கட்கு உட்படுத்தி வந்தார் என்பது நாடகம் பற்றிய அவரது அணுகுமுறைக்குரிய பண்பாகும்.
நன்மை வெல்லும் என்கிற விதமான நாடக முடிவுகளை பிரெக்ட்டிடம் காண்பது அரிது. தீமையும் அநீதியும் தான் வெல்லுகின்றன என்பதை காட்டுவதன் மூலம், நல்லதும் நீதியும் வேண்டுமாயின் உலகின் ஏற்கப்பட்ட நியதிகளை மாற்றவும் மறுக்கவும் வேண்டும் என்பதை பிரெக்ட் நேரடியாகவும் மறைமுகமாகவும் உணர்த்துவார்.
50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு குறிப்புகளை எழுதிய பிரெக்ட் அமெரிக்காவில் வாழ்ந்த ஏழாண்டுகளில் ஹாலிவுட் திரைப்படத் துறையால் முற்றாக ஓரங்கட்டப்பட்டார் என்பதும் கவனிக்கத்தக்க விடயமாகும். கலைஞன் அரசியலை விட்டு விலகி நின்றாலும், அரசியல் கலைஞனை விட்டு வைப்பதில்லை என்பதற்கு பிரெக்ட்டின் அமெரிக்க அனுபவம் ஒரு பயனுள்ள உதாரணம்.
பிரெக்ட் நாடகப்பிரதிகளை எழுதி, நாடகங்களை தயாரித்து Berliner Ensemble என்ற நாடகக் கம்பனியை அவரது இரண்டாவது மனைவியும் புகழ்பெற்ற நடிகையுமான ஹெலெனெ வைகெல் அவர்களுடன் சேர்ந்து நடத்தியவராவர். அதை விட நாடகம் பற்றிய கொள்கையை விருத்தி செய்ததிலும் அவருடைய பங்கு முக்கியமானது. நாடகவியல் பற்றி அவர் ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார்.
பிரெக்ட்டின் நன்கறியப்பட்ட இன்னெரு முகம் கவிதை சார்ந்தது. அவருடைய நாடகங்களில் வரும் பாடலகள் பலவும் கவித்துவம் மிக்கவை. அவற்றுக்கும் அப்பால் அவர் நூற்றுக்கணக்கான கவிதைகளையும் எழுதியுள்ளார். இட்துசாரி இலக்கியப் பரப்பில் பிரெக்ட்டின் கவிதைக்கட்கு முக்கியமானதொரு இடமுண்டு. கிழக்கு ஜெர்மன் அரசாங்கம் மக்கள் கிளர்ச்சி ஒன்றை தவறாக கையாண்ட போது, பிரெக்ட் அதை விமர்சிக்க தவறவில்லை. அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கவிதையைக் வைத்து பிரெக்ட்டுக்கும் ஸ்டாலினுக்கும் கடும் முரண்பாடு கற்பிக்கும் முயற்சிகள் இன்னமும் உள்ளன. பிரெக்ட் இறுதி வரை ஸ்டாலினினதும், சோவியத் ஒன்றியத்தினதும் நண்பனாகவே இருந்தார்.
கலை கலைக்காகவே என்ற கோஷத்தை நிராகரித்துக் கலைப் பண்பு குன்றாமல் அரசியல் தன்மை மிக்க ஆக்கங்களை உலகுக்கு வழங்கியவர் பிரெக்ட். சிங்கள நாடக இயக்கத்தின் எழுச்சி காலமான 1950 களின் பிற்கூற்றிற்கும், 1970 கட்குமிடையில், காக்கேசிய சுண்ண வட்டம், ஹுணு வட்டே கதாவ (சுண்ண வட்ட கதை) என்ற பேரில் தயாராகி வெற்றி பெற்றது. அக்கதை ஒரு குழந்தையின் மீதான உரிமை, பெற்றவளுக்கா, பேணி வளர்த்தவளுக்கா என்ற கேள்வியை எழுப்பி உழுபவனுக்கே நிலம் உடைமை என்ற நீதியை உணர்த்தி நின்றது.
கற்பித்தலுக்கான நாடகங்களில் ஒன்றான “விலக்கும் விதியும்” 1970 களில் ஈழத்தில் தமிழில் “யுகதர்மம்” என்ற பேரில் வர்க்க சமூகத்ஹ்டில் நீதியின் வர்க்க சார்பை உணர்த்தும் நாடகமாக வெற்றி பெற்றது. எனினும் தென்னாசியச் சூழலில் பிரெக்ட் பற்றிய அறிவும் அக்கறையும் மேலும் தேவை என்றே நினைக்கிறேன்.
கீழே காக்கேசிய சுண்ண வட்ட்த்தின் இறுதிக்காட்சியில் ஒரு பகுதியைத் தருகிறேன். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தன் குழைந்தையை கைவிட்டு சென்றவளான ஒரு ஆளுநரின் மனைவிக்கும் குழந்தையைக் காப்பாற்றி தன் வறுமையின் நடுவே வளர்த்தெடுத்த மாளிகை பணிப் பெண் க்ருஷாவுக்குமிடையிலான வழக்கு, சந்தர்ப்ப சூழ்நிலையால் நீதிவானாக்கப்பட்ட அஸ்டாக்கின் முன்பு விசாரிக்கப்படுகிறது. அவ்வழக்கை எடுப்பதற்கு முன், இரு முதியவர்களின் மணமுறிவு வழக்கொன்றைப் பற்றிய தீர்ப்பை பின்னர் வழங்குவதாகக் கூறி விசாரணையை தொடர்கிறான். இப்போது க்ருஷாவை நோக்கிப் பேசுகிறான்.
அஸ்டாக் : (க்ருஷாவைத் தன்னிடம் அழைத்து, அவளை நோக்கி சற்று பரிவாக சரிந்தவாறு) உனக்கு நீதியைப் பற்றி கொஞ்சம் பரிவு இருப்பதை கவனித்தேன். இவன் உன் குழந்தையென்று நான் நம்பவில்லை. அப்படி அவன் உன் குழந்தையாக இருந்தால், பெண்ணே, நீ அவன் பணக்காரன் ஆவதை விரும்பமாட்டாயா? நீ மட்டும் அவன் உன் குழந்தை இல்லை என்று சொன்னால் அவனுக்கு ஒரு மாளிகையும் லாயங்களில் பல குதிரைகளும் அவன் வாசற்படிகளில் பல பிச்சைக்காரர்களும் அவனுக்கு பணியாற்ற படை வீர்ர்களும், அவனுடைய வீட்டு முற்றத்தில் பல மனுதாரர்களும் இருப்பர். இல்லையா? என்ன சொல்கிறாய்- இவன் பணக்காரனாவதை விரும்பவில்லையா?
பாடகர் :
சினந்த பெண்ணும் மனதில் நினைத்து
சொல்லா மொழி கேண்மின்
பொன்னாலான பாதனி இருந்தால்
கரடி போல் பொல்லானாய்
அவனது வாழ்வைத் தீயது தாழ்த்தும்
என்னை அவன் இகழ்வான்
வன்கல் இதயம் ஒன்று சுமந்தல்
தொல்லை மிகும் எல்லை
வல்லமை மிக்க தீயவனாதல்
பிள்ளைக் கது கொடுமை
அஸ்டாக் : பெண்ணே, உன்னை எனக்கு விளங்குகிறதென நினைக்கிறேன்.
க்ருஷா : (திடீரென உரத்து) அவனை நான் கைவிட மட்டேன், நான் அவனை வளர்த்தேன். அவன் என்னை அறிவான்.
(ஷௌவா என்ற பொலிஸ்காரன் குழந்தையுடன் வருகிறான்)
ஆளுநரின் மனைவி : அவன் கந்தல் உடுத்தியிருக்கிறான்.
க்ருஷா : அது உண்மையல்ல. அவனுடைய நல்ல சட்டையை அணிவிக்க எனக்கு நேரம் தரப்படவில்லை.
ஆளுநரின் மனைவி : அவன் ஒரு பன்றி தொழுவத்தில் இருந்திருக்க வேண்டும்.
க்ருஷா : (கடுஞ்சீற்றத்துடன்) நான் பன்றியல்ல. இங்கே பன்றிகள் சில உள்ளன! உன் கைக்குழந்தையை எங்கே விட்டுச் சென்றாய்?
ஆளுநரின் மனைவி : உனக்கு காட்டுகிறேன், இழிந்த ஜன்மமே! (க்ருஷா மீது பாய முனைந்தவளை அவளது வழக்கறிஞர்கள் மறிக்கிறார்கள்) இவள் ஒரு குற்றவாளி, இவளை சவுக்கால் அடிக்கவேண்டும் உடனேயே!
இரண்டாவது வழக்கறிஞர் : (வாய்க்கு மேலாக்க் கையை பிடித்தவாறு ஆளுநரின் மனைவியிடம்) நத்தெல்யா அபாஷ்விலி, நீங்கள் வாக்குறுதி தந்தீர்கள்….. (நீதிவானிடம்) மேன்மை தாங்கியவரே வாதியின் உணர்ச்சி….
அஸ்டாக் : வாதி, பிரதிவாதி! நீதிமன்றம் உங்கள் வழக்குகளை கேட்ட்து. ஆனால் உண்மையான தாய் யாரென்ற முடிவுக்கு வரவில்லை. எனவே நீதிவான் என்ற வகையில் குழந்தைக்கு ஒரு தாயை தெரிவதற்கு நான் கடப்பாடுடையவனாகிறேன். நான் ஒரு பரீட்சை வைக்கிறேன். ஷௌவா ஒரு சுண்ணக்கட்டி கொண்டுவந்து தரையில் ஒரு வட்டம் வரை. (ஷௌவா அவ்வாறே செய்கிறான்) குழந்தையை நடுவில் வை. (ஷௌவா குழந்தை மைக்கலை வட்ட்த்தின் நடுவே வைக்கிறான். குழந்தை க்ருஷாவை நோக்கி முறுவலிக்கிறது.) நீங்கள் இருவரும் வட்ட்த்திற்கு அருகே நில்லுங்கள். (பெண்கள் இருவரும் வட்ட்த்தை நெருங்குகின்றனர்) ஒவ்வெருவரும் குழந்தையின் ஒரு கையைப் பற்றுங்கள். (செய்கிறார்கள்) வட்ட்த்திற்கு வெளியே இழுப்பவளே உண்மையான தாய்.
இரண்டாவது வழக்கறிஞர் : (துரிதமாக) உயர் நீதிமன்றமே, இதை நான் எதிர்க்கிறேன்! பெருமைக்குரிய அபாஷ்விலியின் சொத்துக்கள் அவருடைய வாரிசு என்ற வகையில் இக்குழந்தையுடன் தொடர்புடையனவாக இருப்பதால் அவை இவ்வளவு ஐயத்துக்குரிய ஒரு போட்டியின் மீது தங்கியிருக்கக்கூடாது. அதைவிட என் கட்சிக்காரர் கடும் உழைப்பிற்குப் பழக்கப்பட்ட இவளின் உடல்வலிமையை கொண்டவரல்ல.
அஸ்டாக் : எனக்கு அவர் நன்கு தின்று கொழுத்தவராகவே தெரிகிறார்… இழுங்கள்!….
_____________________________________________
பிரெக்ட்டின் சில கவிதைகள்:
பிரிதல்
நாம் தழுவுகிறோம்
உயர் வகையான துணி என் விரல்களிடையே
மட்டரகமான துணி என் விரல்களிடையே
துரிதமான ஒரு தழுவுதல்
உன்னை இராப் போசனத்துக்கு அழைத்துள்ளனர்
என்னை சட்டத்தின் ஏவலர்கள் பின் தொடர்கின்றனர்.
பருவ நிலையைப் பற்றியும் நம் நிலையான நட்பைப் பற்றியும்
பேசுவோம். மற்ற எதுவுமே கசப்பானதாகவே இருக்கும்.
___________________________________________ விமர்சனக் கண்ணோட்டம் பற்றி
விமர்சனக் கண்ணோட்டம்
சிலருக்கு பயனற்றதாக தெரிகிறது
ஏனென்றால்
அவர்களுடைய விமர்சனத்தை
அரசு அலட்சியப்படுத்துகிறது.
இங்கே பயனற்ற கண்ணோட்டம்
பலவீனமான கண்ணோட்டமே
விமர்சனத்தை ஆயுதபாணியாக்கினால்
அது அரசுகளை அழித்தொழிக்கும்.
ஆற்றிற்கு அணை கட்டல்
கனிமரத்திற்கு ஒட்டு வைத்தல்
எவருக்கும் கற்பித்தல்
அரசை மாற்றியமைத்தல்
இவையெல்லாம்
ஆக்கமான விமர்சனத்திற்கு எடுத்துக்காட்டுக்கள்
அதே வேளை
கலைக்குரிய எடுத்துக்காட்டுகளுமாம்.
___________________________________ எனக்கு இடங்கொடுத்தவன்
எனக்கு இடங்கொடுத்தவன்
தனது வீட்டை இழந்தான்
எனக்காக இசை மீட்டியவன்
தனது இசைக்கருவியை இழந்தான்
சாவைக் கொணர்பவன் என அவன்
என்னைச் சொல்வானா?
அல்லது
தனது உடைமைகள் அனைத்தையும்
பறித்தவனைச் சொல்வானா?
________________________________________________
ஊட்டி சந்திப்பு குறித்து நிறைய சந்தேகங்கள், அளவிலா சம்சயங்கள், முடிவில்லா விசாரணைகள், வந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே அவை குறித்து ஒரு நீண்ட பொதுவான விளக்கம் தரப்படவேண்டியதாகி இருக்கிறது. இது ஒரு சிக்கலான தத்துவப் பிரச்சினையாக இருப்பதால் இலக்கியத்தை மேம்போக்காக சொறிபவர்கள் மேலே படிக்க வேண்டாமென்று அன்புடன் ஆணையிடுகிறேன். லுக்கி லக், பாரு நிவேதிதா போன்ற பதிவுலகின் கஞ்சா காக்டெயில் வழிந்தோடும் வஸ்துக்களை வெறியுடன் குடிக்கும் அடிமைகள் தயவு செய்து கன்ட்ரோல் பிளஸ் டபிள்யு அழுத்தி டாப்பை மூடிவிட்டு சென்று விடுங்கள். இதையே எத்தனை தடவை எழுதுவது, சலிப்பாக இருக்கிறது. ஒரு வேளை நான் எழுத்தை வெறுத்துவிட்டு ரஜினியுடன் இமயமலை சென்று செட்டிலாகிவிட்டேன் என்றால் அதற்கு இதுவே காரணமாக இருக்குமென்று தோன்றுகிறது.
அதே நேரம் வார்த்தைகளால் விளங்கிக் கொள்ள முடியாத, சூக்குமம் சூல் கொண்டுள்ள, குழப்பத்திற்கும் – தெளிவிற்கும் நடுவே நாட்டியமாடும் நன்னெறிக் கருத்துக்களை அபிநயிக்கும் பதிவுகளை பொறுமையாக, விடாப்பிடியாக, தலைவலியோடு, தம்மத்தின் பெருமிதத்தோடு படிக்கும் வாசகர்கள் நிமிர்ந்த நடையுடன் மேலே படிப்பதற்கு தடையொன்றும் இல்லை.
ஊட்டி சந்திப்பு குறித்த அறிவிப்பு வந்தபின் ஆயிரக்கணக்கனோர் இதுவரை வருவதாக மின்னஞ்சல், தொலைபெசி மூலம் தெரிவித்திருக்கிறார்கள். அர்ஜெண்டினா முதல் ஜப்பான் வரை என்னெழுத்துக்களை விடாது படிப்பவர்கள் அவர்களில் அடக்கம். இருப்பினும் அவர்களில் தகுதியானவர்களை பரிசீலித்து ஐம்பது பேரை மட்டுமே நான் அழைத்திருக்கிறேன். அதற்கு மேல் குருகுலத்தில் தங்க வழியில்லை என்பதால் இந்த முடிவு. சாமியார் மடமென்றாலும் அங்கே பன்றிக்குட்டிகள் போல வதவதவென்று யாரும் தங்க முடியாது. சிங்கிளாக காட்டையாளும் சிங்கங்கள் போன்றோரே எங்களுக்குத் தேவை. மற்றவர்கள் ஏமாற வேண்டாம். சந்திப்பு முடிந்து எப்படியும் ஒரு பத்து பதிவு அதைப் பற்றி இருக்குமென்பதால் யாரும் மிஸ் செய்ததாக வருந்தத் தேவையில்லை.
தமிழகம் மட்டுமல்ல அகில உலகமே கண்டிராத இந்த காப்பியச் சிறப்புள்ள இலக்கியச் சந்திப்பிற்கு வருவதாகச் சொன்ன சிங்கங்கள் ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் உறுதி செய்ய வேண்டும். ஏதோ தொலைபேசி, மின்னஞ்சலில் தெரிவித்து விட்டோம் என்று அசால்ட்டாக இருத்தல் கூடாது. உங்களுக்காக குருகுலத்தில் பல ஏற்பாடுகள், கொசுவத்தி சுருள் வாங்குதல், தலையணை உறை துவைத்தல், நாற்காலிகளை துடைத்தல், தயிர் சாதத்திற்கு பால் சேகரித்தல், நொறுக்குத் தீனியாக ஊட்டி பொறையை வாங்கிவைத்தல் முதலானவற்றை பெரும் சிரமத்துக்கிடையில் செய்ய வேண்டியிருப்பதை சிங்கங்கள் உணரவேண்டும்.
வருவதாகச் சொல்லிவிட்டு வராமலிருந்தால் நீங்கள் மிகப்பெரும் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டுமென்பதை ஒரு எச்சரிக்கையாகவே கூறுகிறேன். மேற்கத்திய நாடுகளில் இப்படி நடந்து கொள்வதை மிகவும் இழிவாக கருதுகிறார்கள். இந்தியாவில் இத்தகைய நாகரீகம் என்னைப் போன்ற ஒரு சில உன்னத இலக்கியவாதிகளால் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது. அந்த சத்திய ஆவேசத்திலிருந்து இதை எழுதுகிறேன். இதையும் மீறி நீங்கள் வராமலிருந்தால் அப்புறம் பேச்சு பேச்சாக இருக்காது. மேலும் அதன் பிறகு நீங்கள் எந்த இலக்கிய சந்திப்புகளிலும் அழைக்கப்பட மாட்டீர்கள். உங்களைப் பற்றிய விவரங்கள் புகைப்படத்தோடு எல்லா இலக்கிய பத்திரிகைகள், நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு கருப்பு பட்டியிலில் ரவுடி போல சேர்க்கப்படுவீர்கள்.
அப்படி கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டால் உங்கள் இலக்கிய வாழ்க்கை அதோகதிதான். இப்போது கூட அப்படி பழைய கருப்புப் பட்டியலிலிருந்து சிலர் ஊட்டிக்கு வரவா என்று நைசாக கேட்டிருப்பது எனது கவனத்திற்கு வராமலில்லை. என் வாழ்வில் ஒருவன் ஒருமுறை என்னிடம் மாட்டிக் கொண்டால் அந்த நினைப்பு எப்போதும் அழியாது. உலகமே அழிந்தாலும் எனது மென்பொருள் மெமரி சர்வரை ஆண்டவனே வந்தாலும் பிடுங்க முடியாது. ஆகவே கருப்பு ரவுடிகள் ஒழுங்கு மரியாதையாக அடக்க ஒடுக்கமாக கிடப்பது ஒன்றே நல்லது. இதற்கு மேலும் நான் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். என்ன செய்வேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் உண்மை என்பதையும் சேர்த்து இங்கே வன்மையாக எச்சரிக்கிறேன்.
ஏதோ விஜய் பட காட்சி போல இலக்கிய கூட்டங்களை கருதும் சில்லறை மனநிலை தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது. கழுதைக்கு கற்பூற வாசனை தெரியாது என்றாலும் அந்தக் கழுதைகள் எங்களைப் போன்ற கற்பூரங்களையே நாடி வருகின்றன என்பது ஆச்சரியமான ஒன்று. காசிக்குப் போனால் பாவம் போகும் போல சுயமோகனை தரிசித்தால் அறிவு ஜீவியாகலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ? இலக்கியம்தான் வாழ்வின் முக்கியமான அங்கம். அத்தகைய தவங்களை யாகம் போல மிகுந்த எத்தனிப்புகளுடன் செய்கிறோம். யாகத்திற்கு முடிந்தால் போகலாம் என்ற மனநிலை இருப்பதிலேயே மிகவும் ஆபாசமானது.
இலக்கிய வேள்வியில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் நிறைய இழக்கவும், உழைக்கவும் தயாராக வேண்டும். சென்னை டீக்கடைகளில் ஏனோ தானோவென்று சாயா போடும் மாஸ்டர்களின் உழைப்பல்ல இது. தஞ்சை வயல்களில் குனிந்த இடுப்போடு நாத்து நடும் பெண்களின் ஜாலியான வேலையல்ல இது. நமது தலையில் உள்ள மூளையின் மெல்லிய நரம்புகளை பின்னிப் பினைத்துக் கொண்டு காலவெளியில் கருத்துக்களால் நாட்டியமாடுவது என்பது என்ன சாதாரணமா? ஆகவே இத்தகைய மனிதகுலம் கண்டிராத பேருழைப்புக்கு வணங்காத ஜன்மங்கள் தயவு செய்து எங்களிடமிருந்து விலகிப் போங்கள். இல்லையேல் இனியும் நாங்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் காந்தியை போல அமைதியாக வீற்றிருக்க முடியாது. நான்கூட இலக்கிய வேள்விக்காக எனது பி.எஸ்.என்.எல் வேலையை தூக்கி எறிந்திருக்கிறேன். எனது தியாகத்தோடு மற்றவர்கள் நெருங்க முடியாது என்றாலும் அதில் ஆயிரத்தில் ஒரு பங்காவது நீங்களும் செய்ய வேண்டும் என்று நான் கோரினால் அது பாவமா? புண்ணியமே செய்திராத புண்ணியவான்களே பதில் சொல்லுங்கள்!
இந்தக் கூட்டத்திற்காக எனது நண்பர்கள் அமெரிக்கா முதல் ஆலங்குடி வரை பலநாட்கள் கடுமையாக உழைக்கிறார்கள். ஊட்டி குருகுலத்தில் மூன்று நாட்கள் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்துவது என்றால் அது லேசானது அல்ல. எவ்வளவு வேலைகள்! நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. செம்மொழி மாநாட்டுக்கு பணபலமும், ஆள்பலமும் இருந்தன. எங்களுக்கு பணபலம் மட்டுமே இருக்கிறது. அந்தப் பின்னணியில் இந்த கூட்டத்திற்காக எனது நண்பர்கள் படும் உழைப்பை கேலி செய்யும் செயலை நான் ஒருபோதும் மன்னிக் மாட்டேன். அனுமதிக்கவும் மாட்டேன்.
இந்தக் கூட்டத்திற்காக நான் விதித்திருக்கும் நிபந்தனைகள் பற்றி பாருவின் சில்லறை அடியாட்படை ட்விட்டரிலும், கூகிள் பஸ்ஸிலும் ஒரு விசமப் பிரச்சாரத்தை செய்து வருகிறது. இந்த உலகம் கண்ட எதனையும் ஒரு அடியில் கவிழ்த்துப் போடும் என்னிடமே இந்த வாண்டுகள் அதுவும் அரைக்கால் டிராயரை மட்டும் அவிழ்த்து போட்டுவிட்டு அதையே கலகம் என்று ஊதிப்பெருக்கும் மொக்கைகள் விளையாடுகின்றன. வார்த்தைகளின் சித்தனான என்னிடமே டிவிட்டரின் 140 எழுத்துகளில் விளையாடுகிறீர்களா? நொடிக்கு நூறு எழுத்துக்களை தும்மும் என்னிடமே மோதுகிறீர்களா? எனினும் இதையெல்லாம் நிறைய பார்த்துவிட்டேன், பிழைத்துப் போங்கள்.
இந்த சந்திப்பிற்கு குடிக்காமல் இருங்கள் என்று சொன்னதினாலேயே சிலர் எங்களை ஆச்சார ஒழுக்கர்கள் போல சித்தரிக்கிறார்கள். இலக்கியம் என்ற ஒற்றைக் குறிக்கோளுக்காக நானும் எல்லா வாதங்களையும் – அதாவது பிழைப்புவாதம், காரியவாதம், மிதவாதம், தீவிரவாதம், மதவாதம், சாதிவாதம், பொறுக்கிவாதம், கிரிமினல்வாதம், சதிவாதம், நயவஞ்சக வாதம், நரிவாதம் முதலானவற்றை செய்திருக்கிறேன். அத்தனையும் இலக்கியத்தை காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுக்காக. இதை நான் மட்டுமே தனியொருவனாக நெடுங்காலம் செய்து வந்திருக்கிறேன் என்பதால் நானும் ரவுடிதான், ஜீப்பில் ஏறியவன்தான் என்பதை அந்த வாண்டுக் கலக குட்டிகள் உணரவேண்டும்.
ஆனால் ஒரு இலக்கிய சந்திப்பில் வாழ்வின் மற்ற கலக நடவடிக்கைகளை இணைப்பது அபத்தத்திலும் அபத்தம். குற்றாலத்தில் எனக்குத் தெரிந்த சில இலக்கியவாதிகள் நடத்திய கூட்டங்கள் ஏன் தோல்வியுற்றன? குடி ஒன்றே காரணம். குடிக்காத போது நமது கருத்து உண்மையென்றாலும் எதிரில் இருப்பவரின் முஷ்டிகளை நினைவில் கொண்டு கொஞ்சம் நாசுக்காக பேசுவது சிற்றிதழ் மரபு. ஆனால் குடிக்கும் போது இந்த சபை நாகரீகம் குலைந்து உண்மையான கருத்துக்கள் வெளிவருகின்றன. உண்மை வெளிவந்ததும் உடல் பலம் எழுகிறது.
வார்தைகளின் மயக்கமான இலக்கியத்தை மப்பு பார்ட்டிகள் லௌகீக விசயமாக மாற்றி பார்ப்பதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? நேர்பேச்சில் என்னிடம் குழைபவர்கள் கூட குடிப்பேச்சில் உண்மையை போட்டு உடைத்தால் எப்படி தாங்கமுடியும்? ‘எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்’ என்று பொழுது போக்கும் இலக்கியவாதிகளை திட்டாமல் வீடு, நாடு, காடு, ஆடு, மாடு என அனைத்திலும் இலக்கியத்தையே சுவாசித்து வாழும் என்னையல்லவா திட்டுகிறார்கள்? இதுதான் குற்றால சந்திப்புக்களின் தோல்வி. அதிலிருந்து பெற்ற அனுபவத்திலிருந்தே குடியை நிராகரிக்க வேண்டுமென்று கூறுகிறேன்.
நானும் கூட குடித்திருக்கிறேன். சுந்தர ராமசாமி இறந்த போது இழப்பின் துக்கத்தை கொண்டாட்டமாக மாற்ற எத்தனித்து குடித்தேன். எத்தனை பெக் அடித்தும் போதை என்னிடம் எழவில்லை. வார்த்தைகளின் பின்னிப் பிணைந்த ராக, ஆலாபனைகளில் களித்திருக்கும் என் மூளையின் மடல்களை இந்த குடிபோதை நெருங்க முடியுமா? எனினும் எல்லோரும் என்னைப் போன்று இல்லை என்பதாலேயே குடிக்குத் தடை வேண்டும் என்கிறேன். தாமிரபரணி ஆற்றின் நெல் சோற்றை உண்டு நல் கவிதைகளாக வெளியிட்ட அண்ணாச்சி விக்கிரமாதித்யன் எத்தனை கூட்டங்களை கலைத்திருக்கிறார்? மற்றவர்களைக்கூட சமாளிக்கலாம். ஆனால் அண்ணாச்சி வந்தால் விஷ்ணுபுரத்து பரப்பிரம்மம் கூட ஓடவேண்டியதுதான். ஒருவேளை ஊட்டி சந்திப்பிற்கு அண்ணாச்சி வந்து விட்டால் என்ன ஆகும் என்று யோசித்தே இந்த தடையை மிகுந்த வலியுடன் அமல்படுத்துகிறேன்.
பதிவுலகில் சில ஷோக்குப் பேர்வழிகள் டீக்கடைக்கு செல்வது போல நட்சத்திர விடுதிகளில் குடிப்பதைப்பற்றி ஏதோ உலக சாதனை போல எழுதுகிறார்கள். சீமைச் சாராயத்தை குடித்த இவர்கள் எவரும் கனவிலும், நனவிலும் கலந்துகட்டி அடிக்கும் பெருவாழ்வு தருணங்களை கண்டவரில்லை. கொண்டவருமில்லை. ஆகவேதான் சாராயத்தை உண்டியாக்கி மண்டூ போல தெண்டமாய் கண்டதையும் விண்டு வைக்கிறார்கள். மதிகெட்டவர்களின் கூட்டம் ஊட்டிக்கு வந்து காரியத்தை கெடுத்து விடக்கூடாதல்லவா? அதனால்தான் இது என்பதை என்னுள் துடிக்கும் சத்திய ஆவேசத்தை தரிசித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
குடிப்பவர்களை தடுத்துவிட்டாலும், குடிக்காமல் வந்து காரியத்தை கெடுப்பவர்களையும் பற்றி நான் நெடுங்காலமாய் யோசித்து வந்திருக்கிறேன். நான் மையமாக வீற்றிருக்கும் இலக்கிய கொலுவரங்கில் ஒரு மொக்கை நபர் அவையடக்கமிழந்தால் என்ன நடக்கும்? சான்றாக, பாரதீய ஆன்மீகத்தின் குகைக்குள் அவையோரை சிரமப்பட்டு கை கூட்டிச் செல்லும் போது ஆன்மீகம் என்று சொன்னதை வைத்து நீயும் இந்துத்வாவா என்று மலிவாகக் கேட்டால் என்ன செய்வது? திரும்பவும் முதல்ல இருந்தா ஆரம்பிக்க முடியும்? அப்படியே பொறுமையாக விளக்கினாலும் எனது விஷ்ணுபரத்தை ஆர்.எஸ்.எஸ் விற்பனை செய்கிறதே என்று கேட்டால் என்ன செய்வது? ஒரு வாசிப்பின் பரந்துபட்ட தளங்களை அறியாத சில்லுண்டிகளை என்ன பேசியும் புரிய வைத்துவிட முடியாதே? அதற்குத்தான் கீழ்க்கண்ட நிபந்தனைகளை இலக்கியத்தின் உன்னதத்தை தனியொருவனாக காப்பாற்றும் சுமையின் பொருட்டு உங்கள் முன்வைக்கின்றேன்.
இலக்கிய சந்திப்பில் பங்கு பெறுவோர் கடைபிடித்தே ஆகவேண்டிய நிபந்தனைகள்:
1. வருபவர்கள் எல்லா அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். தமிழ் சினிமாக்களில் பாட்டு வரும்போது சகிக்கவில்லை என்று தம்மடிக்க போவது போல இங்கே நடப்பதற்கு அனுமதி இல்லை. முக்கியமாக குருகுலத்திற்குள் புகை பிடிக்க அனுமதி இல்லை. ஊட்டி குளிருக்கு இதமாக இருக்குமென்ற காரணத்திற்காக சிகரெட்டை நாடாதீர்கள். இலக்கியபுகை தராததையா நிக்கோடின் புகை தரப்போகிறது?
அடுத்து சிறுநீர் கழிக்க வேண்டிகூட இடையில் எழுந்து போக அனுமதி இல்லை. ஊட்டி குளிருக்கு அடிக்கடி இந்த உபத்திரம் மூத்திரத்தால் வருமென்றாலும் நீங்கள் குடிக்கும் தண்ணீரை குறைத்துக் கொண்டால் இது பெரிய பிரச்சினை இல்லை. அமர்வுகள் ஆரம்பிக்கும் போது அனைவரும் அரங்கினுள் இருக்க வேண்டும். தாமதமாக வருபவர்கள் உடனடியாக குருகுலத்தை விட்டு நீக்கப்படுவார்கள். எங்களுக்கு எண்ணிக்கை முக்கியமல்ல, தரம்தான் முக்கியம். பன்றிகளல்ல, சிங்கங்களே வேண்டும். அதே நேரம் பல்லும், நகமும் பிடுங்கப்பட்ட சிங்கங்களாக இருத்தல் நலம்.
2. தனிப்பட்ட விமர்சனங்களும், கடுமையான நேரடி விமரிசனங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. எது தனிப்பட்ட விமரிசனம், எது கடுமையான விமரிசனம் என்று தெரிய நினைப்போர் பத்தாயிரம் ரூபாய் டி.டி அல்லது ஆன்லைனில் செலுத்தினால் அதற்கான யூசர் மேனுவல் அனுப்பித் தரப்படும். எடுத்துக் காட்டாக ஊழல் மந்திரி டத்தோ சாமிவேலு பணத்தில் நான் மலேசியா சென்றதை யாராவது கேட்டால் அது தனிப்பட்ட மற்றும் கடும் விமரிசனமாக கருதப்படும். நாம் பேச இருப்பது சங்க காலப்பாடல்கள் குறித்து. அதை விடுத்து என் சொந்த வாழ்க்கை சமாச்சாங்களை பேசுவது தடைசெய்யப்படும். இதற்காகவே எனது அமெரிக்க நண்பர் வார்லஸ் சில வாட்டசாட்டமான வெள்ளைக்கார பவுன்சர்களை அவரது செலவில் அழைத்து வருகிறார். அவர்கள் சண்டை போட்ட காட்சிகளை டென் சானலில் பார்க்கலாம். பார்த்து விட்டு வந்தால் தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
ஒருவேளை கூட்டத்தில் விமரிசனம் பேசிவிட்டு பவுன்சர்களால் வெளியேற்றப்பட்டு அரங்கின் வெளியே சென்று பேசிவிடலாம் என்று நினைத்துவிடாதீர்கள். குருகுலம் முழுவதும் சி.சி.டி.வி சர்வைவலன்ஸ் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. என்னையறியாமல் ஒரு எழுத்து கூட நாவிலிருந்து விழாது. இதற்கான தொழில் நுட்ப பணிகளை என்னுடைய ரசிகர் அரவிந்தன், பெங்களூர் இன்போசிஸ் செய்கிறார்.
3. சந்திப்பு நிகழும் மூன்று நாட்களிலும் அரங்கிலும் வெளியிலும் மது அருந்தக் கூடாது. இது குறித்து மேலே விரிவாக பேசியிருக்கிறேன். ஒருவேளை திருட்டுத்தனமாக குடிக்கலாம் என்று யாரும் மனப்பால் குடிக்க வேண்டாம். இதற்காக எனது சென்னை நண்பரும் போலீசு அதிகாரியுமான கயவாரம் வருகிறார். ஒவ்வொரு அமர்வின் போதும் என்னைத் தவிர்த்த அனைவரும் இவர் முன் ஊதிக்காட்ட வேண்டும். ஒரு மில்லி அடித்தால் கூட இவரது மூக்கை ஏமாற்ற முடியாது.
4. விவாதங்களின் போது மையப்பொருளுக்கு வெளியே சென்று பேசுவதற்கு அனுமதி இல்லை. எது மையம், எது வெளியே என்பது என்னால் தீர்மானிக்கப்படும். எனது படைப்புக்களை பலமுறை உருப்போட்டு வாசித்திருப்பவர்கள் இந்த மைய, எல்லை வரைபடங்களை சுலபமாக அறிவார்கள். அறியாதவர்கள் அடக்கமாக இருக்க வேண்டும். மீறினால் பவுன்சர்கள் அடக்குவார்கள். சங்ககாலப் பாடல்கள் விவாதத்தின் போது இது தொடர்பாக கோழிப்பண்ணை பொ.மாலுசாமி எனக்கு உதவுவார். அவர் உதவுவதா, கூடாதா என்பதையும் நான் தீர்மானிப்பேன்.
5. நான் உறுதி செய்தவர்களை தவிர வேறு வெளியாட்கள் வர அனுமதி இல்லை. அதே போல அனுமதி பெற்று வருபவர்கள் கூட வேறு யாரையும் கூட்டி வரக்கூடாது. அவர்களது மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தாரையும் அழைத்துவர அனுமதி இல்லை. ஒரு வேளை அந்தக் குழந்தை எனது இலக்கிய தேர்வில் வெற்றிபெறும் பட்சத்தில் அதை நானே முன் கூட்டி தெரிவிக்கும் பட்சத்தில் அழைத்து வரலாம். இலக்கியத் தகுதிக்கு பால், வயது, இனம் வேறுபாடு இல்லை. இந்த விதி எனது குடும்பத்திற்கு மட்டும் பொருந்தாது. கம்பன் வீட்டுத்தறியும் கவிபாடும், இளையராஜா வீட்டு இட்லி சட்டியும் இசையமைக்கும் என்பதுபோல சுயமோகன் வீட்டு நாய் கூட இலக்கியம் பேசும் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.
வெளியாட்கள் யாரும் வருகிறார்களா என்பதை டெல்லியிலிருந்து வரும் எனது நண்பரும் மத்திய உளவுத்துறை அதிகாரியுமான பங்கட் சாமிநாதன் கண்காணிப்பார். இவரது திறமையை இங்குள்ளவர்களை விட பாக்கின் ஐ.எஸ்.ஐ நன்கு அறியும் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
6. அமர்வு நடக்கும் மூன்று நாட்களிலும் வெளியில் தங்குவதற்கு அனுமதி இல்லை. அதை அனுமதித்தால் மது குடிப்பதை தடுக்கமுடியாது. மேலும் அமர்வு இல்லாத நேரங்களில் இடைவிடாமல் சாப்பாட்டு நேரத்திலும் கூட நான் பேசும் சொல்லாடல்களை கேட்டுப் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த நிபந்தனையை விதித்திருக்கிறேன்.
7. அமர்வு நடக்கும் நேரங்களில் அனைவருக்கும் சைவச்சாப்பாடுதான் வழங்கப்படும். சிக்கன் 65, சில்லி பீஃப், ஜிஞ்சர் மட்டன் என்ற நினைவுகளை நாக்கில் வைத்து வாழும் ருசியர்கள் இந்த இலக்கியக் கூட்டத்திற்கு வரத் தேவையில்லை. குருகுலம் முற்றிலும் சைவச்சாப்பாட்டையே கடைபிடிக்கும் என்பதையும் நீங்கள் ஏற்க வேண்டும். முற்றும் துறந்தவன் சைவத்தை மட்டும் ஏன் துறக்கவில்லை என்று கேட்பவர்கள் எங்களுக்கு தேவையில்லை.
இலக்கியம் என்று வந்துவிட்டால் ஒரு மூன்று நாட்களுக்கு நாக்கை கட்டிப் போட்டால் என்ன குடிமுழுகும்? மேலும் அசைவ உணவு உண்டு, அசுர குணத்தை பெற்று விவாதத்தில் என்னை மீறி சென்று விட்டால் என்ன செய்வது? தயிர் சாதமும், சாம்பார் வடையும் உண்பவனே எனது பேச்சை எதிர் கேள்வியின்றி பின் தொடருவான். நீங்கள் குருகுலத்தை விட்டு வெளியே சென்றால் எனது உளவாளிகள் அசைவம் சாப்பிடுகீறீர்களா என்று பின்தொடர்வார்கள். எச்சரிக்கை.
நிகழ்ச்சி விவரங்கள்:
வெள்ளியன்று காலை எனது நண்பர் வார்லஸ் ஏசுநாதர் அப்பம் பங்கிட்ட கதையை மெய்யியலாக பேசுவார். அதுவும் அரை மணிநேரம் மட்டுமே அனுமதி. பின்னர் நீங்கள் அந்த அப்பம் எப்படி சுட்டார்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்கலாம்.
இரண்டாவது அமர்வாக நான் பேசுகிறேன். இந்த சந்திப்பின் மையமான நிகழ்வாக இது இருக்கும். பாரத தத்துவ மரபை பற்றி நேர அளவுகோல் இல்லாமல் பேசுவேன். நசிகேதனது உயிர் தேடல் முதல் நல்லி சில்க்ஸ் குப்புசாமி வரைக்கும் உள்ள தொன்மத்தின் தொடர் இழையை எவரும் வியப்பூட்டும் வண்ணம் பேசுவேன். அது குறித்து என்னளவு யாருக்கும் தெரியாது என்பதால் நிறைய கேள்விகள் வராது. வந்தாலும் அந்தக் கேள்விகளின் பாமரத்தனத்தை புரிய வைத்து விட்டால் பதிலுக்கு தேவையுமில்லை.
மதிய அமர்வில் இந்திய சிந்தனை மரபு குறித்து கேள்விகள் என்னிடம் கேட்கலாம். மாலை ஐந்து மணி வரை நான் பேசிக்கொண்டே இருப்பேன். எனது பதில்கள் மணிக்கணக்கில் இருக்குமென்பதால் கேள்விகள் விநாடிக்கணக்கில் மட்டுமே கேட்கவேண்டும். என்னைத்தவிர வேறுயாரும் பதில் சொல்ல முன்வரமாட்டார்கள் என்பதால் எனக்குச் சுமை அதிகம் என்று யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பட்டியில் அடைபட்டிருக்கும் எருமைமாடு அசைபோட தயங்காது. கற்றார் அவையில் பேசுவதற்கு சுயமோகன் அஞ்சமாட்டான்.
இரவில் சங்க காலப்பாடல்களை வாசித்து இன்புறலாம். தலைவன் தலைவியின் ஊடல், கூடல், காதல், ஈதல் எல்லாம் நுண்ணோக்கிய இரசனையில் கேட்டு இன்புறலாம். அந்த நுண்ணோக்கி பற்றி அறிய விரும்புவர்கள் எனது உரையைக் கேட்டால் போதுமானது.
மறுநாள் அமர்வில் சிக்ஸ்பேஸ் தமிழன் காப்பிய காலத்து பாடல்களை என் அனுமதி பெற்று முன்வைத்து இரசிக்க வைப்பார். அப்போது ஆஹா, ஓஹோ என்று இரசிக்காதவர்கள் கருப்பு ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். பிறகு நாஞ்சில் வேடன் கம்பனது பாடல்களை எனது இரசனைக்கேற்ப அறிமுகம் மட்டும் செய்வார். விவாதத்தை நான் பார்த்துக் கொள்வேன். இராம சரிதத்தின் பரிணாமமாக அயோத்தி ராமன் கோவில் இனி கட்டப்படும் இனிய வேளைக்கு இந்த அமர்வு பொருத்தமாக இருக்கும்.
இப்படி பல நிகழ்வுகள் இருக்கின்றன. முக்கியமாக பாடல்கள், கவிதைகள் குறித்த விவாதம் நான் கூறுகிறபடி மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது கவிதையின் இரசனையே முக்கியமன்றி உள்ளடக்கம் இல்லை. ஒரு கவிதையில் ஓத்தா, ஙொம்மா என்று வருவது பிரச்சினையல்ல. அது எவ்வளவு ரைமிங்காக வருகிறது என்பதே இரசனை. இதற்கும் நீங்கள் நான் எழுதிய கவிதை இரசனை என்ற பத்தாயிரத்து பக்க நூலை வாசித்து மனப்பாடம் செய்து வருவது நல்லது.
6 Response to “ஊட்டி சந்திப்பு குறித்து”
1. சுமோ,
நீங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகள் எப்படி இலக்கியத்திற்கு தேவையோனதோ அதுபோன்றுதான் நமது வருணாசிரம தர்மமும் சமூகம் இயங்குவதற்காக சில நிபந்தனைளை விதித்திருக்க்கிறது. அதை சொன்னால் உடனே பாப்பான், வெறி என்று கிளப்புகிறார்கள். உங்களைப் போன்ற ஞானிகள் இருப்பது இந்து மதம் செய்த புண்ணியம் என்று என் நெஞ்சம் விம்முகிறது.
– ஹாய்ராம், சென்னை.
2. சுயமோகன்,
மேற்கத்திய நாடுகளில் நிபந்தனை இல்லாமலே மக்கள் நாகரீகமாக வாழ்கிறார்கள். முதலீட்டியம் அல்லது உண்மையான முதலாளித்துவம் செய்திருக்கும் சாதனை அது. இங்கே ஏழ்மை என்ற பெயரில் பன்னாடைகள் வசிக்கும் நாட்டில் இத்தகைய நிபந்தனைகளை வேறுவழியின்றி விதிக்க நேரிடுகின்றது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். இதற்காக கடுமுழைப்பு கோரும் நூறு லிங்குகளை இங்கு இணைத்திருக்கிறேன்
சிறுநீர் கழிப்பதற்கு கூட அனுமதி இல்லை என்பது தவிர மற்ற நிபந்தனைகளுடன் உடன்படுகிறேன். இங்கே அமெரிக்கா வந்தபோது உங்கள் நேர்ப்பேச்சில் கண்ட அதே இனிய திமிர் இங்கும் இருக்கிறது. எனக்கும் பிடித்திருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள் என்ற மருத்துவ உண்மையை மட்டும் நீங்கள் பரிசீலிக்க வேண்டும். வாழ்த்துக்கள்!
– கார்.வி, அமெரிக்கா.
4. ஸ்ரீமான் சுயமோகன்,
அவா அவா மல்டிபிளக்ஸ், டிஸ்னி லேண்ட், வாட்டர் ஸ்போர்ட்ஸ் என்று கலிமுத்திய காலத்துல சுத்துறா. நீங்க மட்டும் இலக்கியத்துக்காச்சே வாழரேள். நம்மவா அந்தக்காலத்துல பூணூல பிடிச்சுண்டு இந்த லோகத்தை என்னமா ஆண்டா. உங்க எழுத்த பாக்கறச்சே அது நினைவுக்கு வர்ரது. நன்னா இருங்கோ, நானும் ஊட்டி வாரேன்…
-அன்புடன் காண்டு கஜேந்திரன்
5. சுயமோகன் சார்,
உங்க நிபந்தனைகள் எனக்கும் ஓகே. ஆனா பான்பாராக், ஹன்சா பொகையிலை முதலான லாகிரி வஸ்துக்களையும் சேர்த்து தடை செய்யனும். இது பத்தி விக்கியில் வந்த கட்டுரைகளை லிங்கு குடுத்திருக்கேன். படிச்சுப் பாருங்கோ.
-கிருஸ்ணமூர்த்தி சர்மா, புது தில்லி.
6. dear suyamohan
இங்கே மைக்கேல் ஜாக்சன் தனது பண்ணை வீட்டில் விருந்து கொடுக்கும் போது கூட நிறைய டிரஸ் கோடு, ஆட்டிட்டியூடு கோடு, டேபிள் மேனர் கோடு, வாக்கிங் கோடு, ஈட்டிங் கோடு போன்றவை உண்டாம். சீமான்களது உலகத்தில் இவையும் புகழ் பெற்றவை. சமீபத்தில் கிளிண்டன் டாட்டர் மேரேஜ்ல கூட இது மாதிரி நிறைய இருந்துச்சு. ஐ லைக் யூ வெரி மச். பை
வாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்தின் மழைக்காலம் தோற்றுவிக்கும் ஈரம் போல தற்காலிகமானது.
இதயத்தின் ஈரத்தை வற்றாமல் நீடிக்கச் செய்வது எது?
2002 புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் இதழில் மதுரையைச் சேர்ந்த தோழர் சாக்ரடீஸ் எழுதிய வாசகர் கடிதம் வெளியாகியிருந்தது. புதிய கலாச்சாரத்தில் நூலறிமுகம் பகுதி தொடர்ந்து இடம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தத் தோழர் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் போது,
“…. அரசியல் புத்தகம் படிப்பதற்குத்தான் தோழர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். எனக்கென்னவோ அரசியலும் இலக்கியமும் இரண்டு தண்டவாளங்கள். ஒன்றுக்கொன்று இணையாகச் சென்றால்தான் நாம் நம்மை வறண்டு போகாமல் இருக்கச் செய்ய முடியும். துன்பப்படுகிற மக்களைப் பார்த்து ஏதாவது செய்தாக வேண்டும் என ஈரத்தோடு உள்ளே வருகிறவர்கள், எல்லாவற்றிற்கும் அறிவு ரீதியான விளக்கங்கள் அறிந்து கொண்ட பிறகு நெஞ்சில் இருந்த ஈரம் வற்றி விடுகின்றது. இந்த ஈரம் வற்றாமல் பாதுகாப்பது என்னைப் பொறுத்தவரையில் இலக்கியங்கள்தான்…”
என்று குறிப்பிட்டிருந்தார்.
புரட்சிகர அமைப்பிற்குள் புதிதாக வரும் தோழர்களிடம் இருக்கும் இரக்க உணர்வு, அறிவுரீதியான அரசியல் விளக்கத்தைத் தெரிந்து கொண்ட பிறகு மங்கி விடுகிறது; அப்படி மங்காமல் தங்குவதற்கு அரசியலுக்கு இணையாக இலக்கியமும் அவசியம் என்கிறார் இந்த வாசகர். அரசியலின் அறிவு, இலக்கியத்தின் உணர்வு இரண்டோடும் உறவு கொள்ளும் புதிய தோழர்களைப் பற்றிய இம்மதிப்பீடு தவறாக இருக்கின்றது. மேலும், அரசியல், மார்க்சியம், கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் உருவாக்கியிருக்கும் பொது உளவியலும், அரசியல்வாதிகள் இரக்கமற்றவர்கள், இலக்கியவாதிகள் ஈரமிக்கவர்கள் என்பதையே அடிப்படையாக வைத்து இயங்குகிறது. இத்தகைய இலக்கியவாதிகளைத்தான் போலி கம்யூனிஸ்டுகள் ஆரத் தழுவி அங்கீகரிக்கின்றனர். அந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்கென்றே த.மு.எ.ச. போன்ற அரட்டை மடங்களை நடத்துகின்றனர். இலக்கியத்தின் அற்பவாதிகளும், கம்யூனிசத்தின் போலிகளும் ஒருவரையொருவர் பற்றி நிற்பதில் முரண்பாடு ஏதுமில்லை.
ஆனால் புரட்சியை நேசிக்கும் புதிய தோழர்கள் இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள ஒரு கம்யூனிஸ்டாக மாறுவது குறித்த ஆழ்ந்த பரிசீலனையைத்தான் முதலில் கற்க வேண்டும். வாழ்வில் முதன்முதலாக மார்க்சியத்தைக் கற்கும் இவர்கள் அறிவுரீதியாகப் பெறும் விளக்கம்தான் என்ன?
ஆரம்பமே அவர்களது பழைய அறிவு அழிவதுதான். உலகம், சமூகம், அரசு, பண்பாடு, குடும்பம் அனைத்தும் புதிய பொருளுடன் தென்பட ஆரம்பிக்கின்றன. இவைகள் பற்றிய புதிர்களுக்கு விடை தராத பழைய உலகக் கண்ணோட்டம் உதிர்ந்து போகிறது. விடை தரும் புதிய கண்ணோட்டம் பழைய உலகின் உணர்ச்சிகளை அழிப்பதிலும் தவறுவதில்லை. ஆம். கட்சிக்குள் வரும் புதியவர்கள் தங்களிடமிருக்கும் “ஈரத்தையும், உணர்வையும்’ வெட்டி எறிகிறார்கள். காரணம் அவை புதிய உலகிற்குத் தேவைப்படாத, சுயநலத்திலிருந்து எழும் அற்பவாத மிகையுணர்ச்சிகள்.
இதை எப்படிப் புரிந்து கொள்வது? உயிரின் இயக்கத்தையும் அது நின்று போவதையும் மருத்துவ அறிவியலாகக் கற்றுத் தேறும் ஒரு மருத்துவர் அவரது மனைவி இறந்து போனால் வருந்துவாரா? வருந்துவார். உயிரின் அறிவுரீதியான விளக்கத்தைக் கற்றதனாலேயே அவர் வருந்தாமல் இருக்க மாட்டார். காரணம் அவரது மனைவியுடன் நெருக்கமான ஒரு வாழ்க்கை உறவு உள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத தருமபுரியின் கூலி விவசாயி, எலிக்கறி சாப்பிடும் தஞ்சையின் கூலி விவசாயிகளைக் கேள்விப்பட்டாலே வருத்தப்படுவார். இவருக்கு அறிவு ரீதியான விளக்கமோ, இதயத்தைத் தொடும் இலக்கியமோ தேவைப்படுவதில்லை. காரணம் கூலி விவசாயியாகச் சமூகத்தில் கொண்டிருக்கும் உறவு அந்தத் துயரத்தை எந்தப் பீடிகையுமில்லாமலேயே உணர்த்தி விடுகிறது.
இப்படிச் சமூகத்திலிருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு அரசியல் கல்வியின்றியே, அறிவு விளக்கமின்றியே சக மனிதனை நேசிக்கும் உணர்வு ஏதோ ஒரு வகையில் இருக்கத்தான் செய்கிறது. இதில் சுயநலம் சார்ந்த உறவு (குடும்பம், உறவினர்) பொருளாதார அடிப்படையிலிருப்பதால் நீடிக்கின்றது. அத்தகைய அடிப்படை ஏதுமற்ற பொதுநலம் சார்ந்த உணர்வு (இலக்கியம் மட்டும் படிப்பவர்களையும் உள்ளிட்டு) வெறும் அனுதாபம் என்ற அளவிலே விரைவில் நீர்த்தும் போகிறது. அரசியல் கல்வி நடைமுறையற்ற சகல பிரிவினருக்கும் இதைத் தவிர்த்த உணர்வு ஏதும் கிடையாது.
ஆனால் ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்க்கையைத் துவக்கும் ஒருவர் இந்த இரண்டு அளவுகோல்களிலிருந்தும் வேறுபடுகிறார். இங்கே சுயநலம் சார்ந்த உணர்வு அழிவதையும், பொதுநலம் சார்ந்த உணர்வு திட்டமிட்டு முகிழ்வதையும் பார்க்க முடியும்.
வெளிநாடு சென்று பொருளீட்டுவான் என்பதற்காக, சில வருடங்கள் தன் மகனைப் பிரிந்து வாழச் சம்மதிக்கும் ஒரு தாய், அதே மகன் புரட்சிகர அமைப்பில் பணியாற்றுவதை விரும்புவதில்லை. அழுது அரற்றி அனுமதி மறுக்கும் அந்தத் தாயுடனான பழைய பாசம் இனியும் நீடிக்க முடியாது. உடன் பிறந்தோரை வரதட்சணை, சடங்கு, சாதி எனப் பிற்போக்குச் சங்கிலியுடன் மணம் செய்து கொடுக்கும் தந்தையுடன், கண்டிப்புடன் கூடிய அந்தப் பழைய மரியாதையை இனிமேலும் கொடுக்க முடியாது. பழைய அந்தஸ்தின் மூலம் கிடைத்த நண்பர்கள், கம்யூனிஸ்டு என்ற இந்தப் புதிய தகுதியை விரும்பாத போது அந்த நட்பு எப்படி நீடிக்க முடியும்? கந்து வட்டிக்கு விடும் தாய் மாமனேயானாலும் இனியும் ஒட்டி உறவாட முடியாது. பழைய வாழ்க்கை வழங்கியிருக்கும் இத்தகைய அன்பு, பாசம், நட்பு போன்ற உணர்ச்சிகளெல்லாம் புதிய வாழ்வின் செயலூக்கத்தில் நிச்சயம் வறண்டு போகும்.
அதேபோன்று முதல் வாழ்க்கையில் தோன்றியும் புரிந்துமிராத உணர்ச்சிகளெல்லாம் இந்த இரண்டாம் வாழ்க்கையில் புதிது புதிதாய்ப் பிறந்து வளரும். இன்று தாழ்த்தப்பட்டோருக்காகப் போராடும் ஒரு தோழர், அவர் தேவராக வாழ்ந்த நாட்களில் இதைக் கனவிலும் கருதியிருக்க மாட்டார். அதிகார வர்க்கத்தையும், காக்கிச் சட்டையையும் தைரியமாக எதிர்த்துப் போராடும் ஒரு தோழர், அவர் கூலி விவசாயியாக மட்டும் வாழ்ந்த காலத்தில் இவையெல்லாம் இயற்கைக்கு மாறானது என்றே நம்பியிருப்பார். மனைவியுடன் ஜனநாயக முறைப்படி வாழும் ஒரு தோழர் அவர் ஆணாதிக்கவாதியாக ஆட்சி நடத்திய நாட்களை நினைத்து இப்போது வெட்கப்படுவார். சிறைவாசம் அனுபவித்திருக்கும் பெண் தோழருக்கு அவரது பழைய அடிமைத்தன வாழ்க்கையிலிருந்து வெளியேறிய போராட்டம் இப்போதும் நம்பிக்கையளிக்கும்.
இப்படிச் சமூக வாழ்க்கையில் பழைய உணர்வுகள் நீர்த்துப் போய் புதிய உணர்வுகள் மலருகின்றன. கூடவே அரசியல் அரங்கிலும் புதிய கடமைகளுக்கேற்ற உணர்வுகள் பிறக்கின்றன. கம்யூனிசத்தை அறிவியல் ரீதியாகக் கற்பதன் மூலம் புரட்சி சமூக மாற்றம் பற்றிய எளிமைப்படுத்தப்பட்ட சித்திரங்கள் மறைகின்றன. ராபின்ஹூட் பாணியிலான சாகசம், புரட்சி என்பது ஒரு ரம்மியமான மாலை நேர விருந்து போன்ற “ரொமாண்டிக்’ கற்பனைகள் விரைவிலேயே வெட்கத்துடன் விடை பெறுகின்றன. அதனால்தான் துன்பப்படுகின்ற மக்களைப் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற இரக்க உணர்ச்சி மறைந்து இன்னதுதான் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்ச்சி பிறக்கின்றது.
ஏழைகளைப் பார்த்து வெறுமனே இரக்கப்படும் பழைய உலகின் இலக்கியங்களும், திரைப்படங்களும் இனிமேலும் புதிய தோழர்களை உணர்ச்சிவசப்படுத்துவதில்லை. தன்னுடைய இயலாமை அற்பவாதத்தையே தியாகமாக நினைக்கும் “அழகி’யின் சண்முகமோ, இந்து மதவெறியை மறைப்பதற்காகச் சோகங்கொள்ளும் “பம்பாயின்’ காதலர்களோ, ஒரு மாபெரும் வரலாற்றுக் காலத்தைத் தன்னுடைய நடுத்தர வர்க்கத்தின் குடும்பக் கண்ணோட்டத்தில் பார்க்கும் சாகேத ராமனின் (ஹேராம் திரைப்படம்) வேதனையோ நமது இதயத்திற்குள் இறங்குவதில்லை.
நம்மைத் தவிர முழு உலகமும் இத்தகைய காவியத் திரைப்படங்களின் கண்ணீரில் முழுகியபோது இந்த மிகையுணர்ச்சிக் கண்ணீரின் கிளிசரின் மோசடியை அகற்றிவிட்டு உண்மையான கண்களையும் கண்ணீரையும் நமக்கு உணர்த்தியது நாம் கற்றுக் கொண்ட கம்யூனிச அரசியல்தான்.
எனவே அரசியல் அறிவு உங்களின் பழைய உணர்ச்சிகளைக் காவு கொள்வதில் கண்டிப்புடன் நடந்து கொள்கிறது; கூடவே புதிய உணர்ச்சிகளை உருவாக்க இடையறாது போராடுகிறது. புதிய தோழர்கள் பெறும் அறிவு விளக்கத்திற்கும், அது அழித்து உருவாக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையிலான இயங்கியல் உறவு இப்படித்தான் இருக்கிறது. ஆதலால் அரசியல் அறிவு உணர்ச்சியை வற்ற வைப்பதில்லை; உண்மையான ஊற்றைத் தோண்டிச் சுரக்க வைக்கின்றது; கண்ணீர்க் குளமாக்குகிறது; இதுவரையிலும் அழாதவற்றுக்கும் அழவைக்கிறது.
ஆயினும் இந்த உண்மையான உணர்ச்சி அவ்வளவு சீக்கிரம் ஏற்பட்டுவிடுவதில்லை. இதையே “எல்லாவற்றிற்கும் விளக்கங்கள் அறிவுரீதியாக அறிந்து கொண்ட பிறகு நெஞ்சிலிருந்த ஈரம் வற்றி விடுகின்றது” என்று வாசகர் சாக்ரடீஸ் தவறாகக் குறிப்பிடுகிறார். நீக்கமற நிரவியிருக்கும் பிற்போக்கான வாழ்க்கை மதிப்பீடுகளிலிருந்து வரும் ஒரு நபர், ஒரு தோழராக மாறுவதில் பல்வேறு சிக்கல்களைக் கடக்க வேண்டியிருக்கிறது.
முதலில் புதிய தோழர்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அறிவுரீதியான விளக்கங்களை அறிந்து கொள்வதில்லை; அது சாத்தியமுமில்லை. “முன்னரே தயாரிக்கப்பட்ட முடிவுகள் முழக்கங்கள் உதவியுடன் மார்க்சியத்தை அளவுக்கு மீறி எளிமைப்படுத்திக் கற்பதற்கு” எதிராக லெனின் எப்போதும் எச்சரிக்கை செய்தார். நாம் கற்கும் முதல் விசயமே நமது பழைய உலகக் கண்ணோட்டம் தவறு என்பதைத்தான். அதனாலேயே நாம் உருவாக்க விரும்பும் புதிய உலகைப் பற்றிய கண்ணோட்டத்தைக் கற்று விட்டோம் என்பதல்ல. அதற்கு அரசியல் அறிவு மட்டும் போதுமானதல்ல; செயலூக்கம் நிறைந்த நடைமுறைப் போராட்டம் தேவை. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், சமூகத்தை ஆய்வு செய்து வினையாற்றுவதற்கு நம்மிடம் அளிக்கப்பட்ட மிகச் சிறந்த வாளே மார்க்சிய லெனினிய ஆய்வு முறையாகும்; ஆயினும் அந்த வாளைத் திறமையாகச் சுழற்றக் கற்றுக் கொள்வதில்தான் அதன் பலம் உறைந்திருக்கிறதே ஒழிய உறையில் போட்டு வைத்திருப்பதனால் அல்ல.
வெளிஉலகில் நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் அக உலகில் நாம் வரைந்து வைத்திருக்கும் புரட்சியுடன் இணைப்பது பற்றிய பிரச்சினை, கேள்வி, ஆய்வு, போராட்டங்கள் ஒரு கம்யூனிஸ்ட கட்சி உயிர் வாழ்வதன் அடிப்படையாகும். இதிலிருந்து மாறுபடுகிறவர்களையே போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கிறோம். மேலும் கட்சியில் புதிதாக வரும் தோழர்களும் தங்களை இறுதி வரை கம்யூனிஸ்டாக வைத்திருப்பதன் பொருளும் மேற்கண்ட பிரச்சினையையும் போராட்டத்தையும் இறுதிவரை செய்வது என்பதே.
முக்கியமாக, இந்தப் போராட்டத்தில்தான் அவர்களது பழைய வர்க்கக் கழிவுகள் நீக்கப்பட்டு மறுவார்ப்பு செய்யப்படுகிறார்கள். அது “நானேதான்’ என்று உறுதியான அகந்தையை அழிக்கிறது; சக தோழர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் வரும் விமர்சனங்களைக் கண்டு அஞ்சும் கோழைத்தனத்தை ஒழிக்கிறது; தனது தவறுகளைத் தானே கண்டுபிடித்து ஏற்கும் வீரத்தைக் கொடுக்கிறது; கற்றுக் கொள்வதில் பணிவையும், கற்றுக் கொடுப்பதில் பொறுமையையும் உருவாக்குகிறது; அடக்குமுறைக்குப் பணியாத கம்பீரத்தைத் தருகிறது; மக்களுடன் இரண்டறக் கலக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.
இவையெல்லாம் ஓரிரு வாரங்களிலோ, மாதங்களிலோ, வருடங்களிலோ கற்றுக் கொள்ளும் பாடமல்ல. சாகும் வரையிலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டிய புரட்சியின் கடினமான பாடம். ஏனெனில் புரட்சியை நேசித்துக் கட்சியால் ஈர்க்கப்படும் தோழர்கள் உழைக்கும் மக்களையும் அப்படி ஈர்க்கின்ற வேலையே அவர்களது அரசியல் வேலையின் சாரமாக இருக்கின்றது.
கள்ளங்கபடமற்ற கூலி விவசாயிகளோ, அரசியல் அறியாமையிலிருக்கும் தொழிலாளிகளோ, கருத்தாதரவும் செயலின்மையும் ஒருங்கே கொண்ட நடுத்தர மக்களோ, புத்தம் புது மலர்களாக இருக்கும் மாணவர்களோ இத்தகைய மக்கட் பிரிவினரிடம் சென்று, ஒன்றி, வாழ்ந்து, கேட்டு, கற்று, இறுதியில் வென்று காட்டும் அந்த பாடம்தான் புதியவர்களைக் கம்யூனிஸ்ட்டாக மாற்றிக் காட்டும். பழைய உலகின் உணர்ச்சிகள் சூழ வாழும் புதிய தோழர்கள் இந்தப் பாதையின் செங்குத்துச் சரிவில் களைப்படைவதும், சோர்வடைவதும் உண்டு. ஆரம்பத்தில் அவர்களிடமிருக்கும் உற்சாகமும், துடிப்பும், உணர்வும் இடையில் சற்று வறண்டு போவதன் காரணம் இதுதான். ஆயினும் இறுதியில் சிகரத்தின் உச்சியைத் தொடுவோம் என்பதால் இடையில் வரும் இந்தத் தடங்கல்களுக்கு அயர வேண்டியதில்லை. மீண்டும் மீண்டும் நடைமுறையில் ஈடுபட வேண்டும். இதைத் தவிர நமது இதயம் ஈரத்தைத் தக்கவைப்பதற்கு வேறு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை.
ஆகவே, இலக்கியம் ஏதும் தேவையில்லை என்கிறோமா? இல்லை. இன்றிருக்கும் பெரும்பான்மை கலை இலக்கியங்கள் பழைய உலகின் உணர்ச்சிகளோடு கட்டுண்டு கிடப்பவையே. நமது புதிய உலகின் உணர்ச்சிகளுக்கு உற்சாகமளிக்கும் இலக்கியங்கள் குறைவுதான். இருப்பினும் கிடைக்கும் எதனையும் படியுங்கள். அவை பழைய உலகம் பற்றிய உங்களின் விமர்சனப் பார்வையைக் கூர்மைப்படுத்த நிச்சயம் பயன்படும். அதுவும் உங்களின் அரசியல் கல்வி போராட்ட நடைமுறையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமைய முடியும்.
ஆம். இலக்கியங்களிலிருந்து உணர்வும், உற்சாகமும் தன்னியல்பாய்ப் பிறக்க முடியாது. பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது.
_____________________________________________
– புதிய கலாச்சாரம் ஆசிரியர் குழு, செப்டம்பர்- 2002
கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).
விலைவாசி உயரவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த அமளி சுமுகமாக’ முடிவுக்கு வர இருக்கிறது. காஷ்மீர்தான் அடங்க மறுக்கிறது. கடந்த சில நாட்களாக தினசரிகளின் முதல்பக்க செய்தி காஷ்மீர்தான். காஷ்மீர் மக்கள் வீசுகின்ற கற்கள் இமயத்துக்கு இணையான ஒரு மலையாக குவிந்து கொண்டிருக்கின்றன. இத்தனை நாள் அழுது அரற்றும் காஷ்மீர் பெண்களின் படங்களைத்தான் தினசரிகளில் பார்த்திருக்கிறோம். இப்போது பெண்கள் கல்லெறிகிறார்கள். முழக்கமிடுகிறார்கள். கையில் தடிக்கம்பு எடுக்கிறார்கள். இதை எப்படி விளக்குவது? தினமணி எப்படி விளக்குகிறது பாருங்கள்.
“பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ, காஷ்மீர் மாநிலத்தில் கலவரத்தை தூடண்டி வருகிறது. ஐ.எஸ்.ஐ யின் கைப்பாவையாக செயல்படும் பிரிவினைவாதிகள் பல இடங்களில் போராட்டத்தை தூண்டி வருகின்றனர். போராட்டக்களத்தில் குழந்தைகளையும் பெண்களையும் முன்நிறுத்தி வன்முறையில் ஈடுபடுகின்றனர். அப்பாவி மக்களுக்கு இடையே மறைந்திருந்தமு படை வீர்ரஃகளை நோக்கி துப்பாக்கியால் சுடுகின்றனர். இதனால் படைவீர்ரஃகளும் திருப்பி சுட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பொதுமக்களே கிளர்ச்சி செய்வது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதே அவரகள் திட்டம்”
-இது இன்றைய தினமணியின் முதல்பக்க செய்தி.
“நடைமுறையில் அரசின் அதிகாரம் என்பதே வீழ்ந்துவிட்டது. காஷ்மீர் போலீசார் ரோட்டில் விட்டு அடிக்கப்படுகின்றனர். அவர்களது ஆயுதங்கள் பிடுங்கப்படுகின்றன. வீடுகள் எரிக்கப்படுகின்றன.அனைத்திலும் துயரமானது என்னவென்றால், ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் இளைஞர்களைச் சுட்டுக் கொல்வது அதிகரித்துக் கொண்டே வருகிறது…ஆனால் எவ்வளவு கடுமையான நடவடிக்கைகளாலும் போராட்டத்தில் முன்நிற்கும் இளைஞர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. காஷ்மீரின் இசுலாமியத் தலைவர் சையத் அலி ஷா கிலானி முதல் ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் முகமது யூசுப் ஷா வரை யாருடைய வேண்டுகோளாலும் இந்த வன்முறைப் போராட்டப் பேரலையைத் தடுத்துநிறுத்த முடியவில்லை”
-இது இந்து பத்திரிகையின் தலையங்கம்
இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கத்தேவையில்லை.
மூன்றாவதாக இந்து ப்த்திரிகையில் மாலினி பார்த்தசாரதியின் நடுகப்பக்க கட்டுரை என்ன சொல்கிறது? டாக்டர்களும் எம்.பி.ஏ பட்டதாரிகளும் கூட வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். காஷ்மீரிகளும் இந்தியர்களே என்று சொல்லிக்கொண்டே, மொபைல் போன், இணையத் தொடர்பு போன்றவற்றில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து, இந்தியப் பொருளாதார வளர்ச்சியிலிருந்து அவர்களை விலக்கி வைப்பதால்தான், தங்களை இந்தியர்களாக அவரள் உணர முடிவதில்லை” என்கிறார் மாலினி.
“பாகிஸ்தான் தூண்டுதல்தான் காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம்.”
“இல்லையில்லை. வளர்ச்சித் திட்டம் போய்ச் சேராததுதான் இளைஞர்கள் வன்முறைப் பாதையை தேர்ந்தெடுக்க காரணம்”
–இதை அடிக்கடி எங்கேயோ கேட்டமாதிரி இல்லை? “மாவோயிஸ்டு தூண்டுதல்தான் பழங்குடி மக்கள் ஆயுதமேந்தக் காரணம்” “இல்லையில்லை. பழங்குடி மக்களின் பொருளாதார வளர்ச்சியைப் புறக்கணித்த்துதான் அவர்கள் மாவோயிஸ்டுகளிடம் போய்ச்சேரக் காரணம்” என்ற அதே லாவணிக் கச்சேரி. அதே ராகம். வெவ்வேறு பாடல்கள்!
ஒரு கோப்பை காக்டெயிலின் விலை 35,000 பவுண்டு.
அதாவது 21 இலட்சம் ரூபாய்.
2007 ஆம் ஆண்டில் பங்குச்சந்தைகளெல்லாம் ஏகபோகமாக விண்ணில் பறந்து கொண்டிருந்த காலத்தில் லண்டன் நைட்கிளப் ஒன்றில்தான் இந்த 21 இலட்சம் ரூபாய் சரக்கு விற்கப்பட்டிருக்கிறது.
அப்புறம் அமெரக்காவின் டவுசர் கிழிந்தது. அந்த அதிர்ச்சியிலேயே ஐரோப்பாவுக்கும் டவுசர் கிழிந்த்து. எப்படிக் கிழிந்த்து என்பது பற்றி பல ஆராய்ச்சி நூல்கள் வந்தபடி இருக்கின்றன. “தி ஸ்பிரிட் லெவல்” என்பது பொதுச்சுகாதார வல்லுநர்களான ரிச்சர்டு வில்கின்சன், கேட் பிக்கெட் ஆகியோர் எழுதிய நூல். ஏழைகளை மென்மேலும் பஞ்சைப் பராரிகளாக்கி பணக்காரர்கள் கொழுத்துக் கொண்டே போவதன் விளைவாக சமூகத்தில் குற்றங்கள் முதல் தற்கொலைகள் வரை எல்லாவகையான தீமைகளும் எப்படிப் பல்கிப் பெருகுகின்றன என்பதை புள்ளிவிவரங்களுடன் நிலைநாட்டியிருக்கிறார்கள். சோ வைப் போன்ற மூளை கொண்ட வலதுசாரிகள் இந்த நூல் மீது நஞ்சைக் கக்கினாலும் அது கூறும் உண்மைகளை மறுக்க முடியவில்லை.
அடுத்து ரகுராம் ராஜன். இவர் ஐ.எம்.எஃப் இன் பொருளாதார வல்லுநர். பண்க்கார வர்க்கத்துக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்த்துதான் சமீபத்திய பொருளாதார நெருக்கடி தோன்றக் காரணம் என்பது அவரது முடிவு. 1976 க்கும் 2007 க்கும் இடையில் அமரிக்கா உருவாக்கிய செல்வத்தில் ஒரு டாலருக்கு 58 சென்டுகளை (1 டாலர்=100சென்ட்) சமூகத்தின் மேல் அடுக்கில் உள்ள 1 சதவீதத்தினர் அபகரித்துக் கொண்டனர். மீதமுள்ள 42 சென்டுகளுக்காக 99% மக்கள் அடித்துக் கொண்டனர். 1929 மாபெரும் மந்தத்திற்கு முன் இதே நிலைமைதான் இருந்த்து. இதன் விளைவாக வால்ஸ்ட்ரீட் கவிழ்ந்த்து. இப்போது நடந்திருப்பதும் அதுவேதான் என்கிறார் ரகுராம் ராஜன்.
“பணக்காரனிடம் பணம் அதிகமாக இருந்தால், லாரி கணக்கில் ரொட்டியையா வாங்கி வைப்பான்? அவன் ஆடம்பரப் பொருட்களில் செலவழிக்கிறான். அல்லது முதலீடு செய்கிறான்” என்று தனது ஆய்வில் கூறுகிறார் கென்னத் கால்பிரெய்த்.
முதலீடு என்றால் மடோப் போன்ற சூதாடிகளிடம் போடப்படும் முதலீடு. ஆடம்பரம் என்றால் ஒரு பெக் காக்டெயில் 21 இலட்சம் ரூபாய் என்பது போன்ற ஆடம்பரம் என்று கூறுகிறார் இந்து கட்டுரையாளர் ஆதித்ய சக்ரவர்த்தி (இந்து 4.8.10, பக்கம் 11)
சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தி, தனிநபர் சுவீகரிப்பு என்பது முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளில் ஒன்று என்கிறது மார்க்சியம். இந்த உண்மையை கம்யூனிஸ்டுகள் சொன்னால் கசக்கிறது. ஐ.எம்.எப் வல்லுநர் ரகுராம் ராஜனும் அதையேதான் சொல்கிறார்.
ஐயா, பூ வுன்னும் சொல்ல்லாம், புட்பம்னும் சொல்ல்லாம். ஐயர் சொல்றாமாதிரியும் சொல்லலாம். அய்யருதான் சொல்லிட்டாரே, அப்பவாவது ஒத்துக்குவாங்களா?
பிரேம் குமார் எஸ்.பிக்கு ஒரு மாத தண்டனை கூட கிடையாதாம்!
1982ஆம் ஆண்டில் முன்னாள் இராணுவ அதிகாரி நல்லகாமன் என்பவரை பொய் குற்றச்சாட்டில் கைது செய்து கைகளைக் கட்டி அடித்தவாறு தெருவில் இழுத்துச் சென்றார் இந்த பிரேம்குமார் என்ற போலீஸ் அதிகாரி. இந்த அநீதிக்கெதிராக சட்டபூர்வமாக 28 ஆண்டுகளாக முதியவர் நல்லகாமன் போராடுகிறார். கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கை மனித உரிமை பாதுகாப்பு மையம் எடுத்து நடத்தி வருகிறது. பல சுற்றுப் போராட்டத்திற்குப் பிறகு மதுரை உயர் நீதிமன்றத்தில் இந்த பிரேம் குமாருக்கு போனால் போகிறது என்று ஒரு மாதம் தண்டனை வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு முறையீடு இருதரப்பினராலும் செய்யப்பட்டது. தற்போது அந்த முறையீட்டில் பிரேம்குமாரை ஒருமாத தண்டனையிலிருந்து உச்சநீதிமன்றம் விடுவித்திருக்கிறது. சட்டப்பூர்வமாக ஒரு போலீசு ரவுடியை தண்டிக்க முடியாது என்பதை நீதிபதிகள் நிருபித்திருக்கிறார்கள். எனினும் கடந்த இருவருடங்களாக பிரேம்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இந்த வழக்கிற்காக மூச்சு வாங்கும் அளவில் அலைய வைத்ததற்கு ம.உ.பா.மையமும், முதியவர் நல்லகாமனின் உறுதியும் காரணமாக இருந்திருக்கிறது.
நீதிமன்றம் விடுவித்தால் என்ன, மக்கள் மன்றத்தில் பிரேம் குமார் ஏற்கனவே தண்டிக்கப்பட்டிருக்கிறார். அதை மாற்ற முடியுமா என்ன?
“டாடா: தி எவலூய்ஷன் ஆப் எ கார்ப்பரேட் பிராண்ட்” என்ற புத்தகம் பெங்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இதை முதலாளித்துவ வரலாற்றாசிரியர் மார்கன் விட்செல் எழுதியிருக்கிறார். இதில் டாடா நிறுவனம் உலகப்புகழ்பெற்ற நிறுவனமாக வளர்ந்தின் பின்னணி எழுதப்பட்டிருக்கிறதாம். டாடா எனும் பிராண்ட் பெயர் எப்படி மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டது என்பதும் ஆராயப்பட்டிருக்கிறதாம்.
இருக்கட்டும். சிங்கூரில் விவசாயிகளின் வயிற்றிலடித்து விட்டு பின்னர் அவர்களது போர்க்குணமிக்க போராட்டத்தால் மூக்குடைபட்டு குஜராத்திற்கு போனது டாடாவின் நானோ கார். குஜராத் அரசு செய்திருக்கும் சலுகைகளை கூட்டிப் பார்த்தால் நானோ காரின் விலைக்கு சமமான தொகையை அரசு செய்கிறது என்றாகிறது.
இப்பேர்ப்ட்ட உண்மையான கொள்ளைக் கதைகள் எதுவும் இந்த உள்ளம் கொள்ளை கொண்ட புத்தகத்தில் இருக்காது என்பது நிச்சயம்தானே?
__________________________________________________
போபாலுக்கு பட்டை நாமம்! அமெரிக்காவுக்கு பாலபிஷேகம்!!
மெக்சிகோ வளைகுடாவில் பிரிட்டீஷ் பெட்ரோலியம் எனும் பன்னாட்டு நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறு கசிந்து அந்த வட்டாரமே எண்ணெயில் மிதக்கிறது. இதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் கேடு மீள்வதற்கே பல ஆண்டுகளாகும் என்று கூறப்படுகிறது. இதன் பொருட்டு அந்த நிறுவனம் அமெரிக்க அரசுக்கு 20 பில்லியன் டாலர் நட்ட ஈடு வழங்க ஒப்புக் கொண்டிருக்கிறதாம். இருக்கட்டும்.
போபாலில் அரசு கணக்குப்படி 3500 பேர்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விபத்திற்கு யூனியன் கார்பைடு நிறுவனம் கொடுக்க முன்வந்த நட்ட ஈடு வெறும் 470 மில்லியன் டாலர் மட்டுமே. எண்ணெய் கசிவுக்கு மட்டும் இதைப் போல இருபது மடங்கு அதிகம் தொகையை அமெரிக்கா வாங்கியிருக்கிறது.
அமெரிக்க கருணையின் இரட்டைவேடத்திற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா என்ன?
மலேசிய நாட்டின் கூட்டமைப்பு பிரதேசம் மற்றும் நகர நலத்துரை மந்திரி ராஜா நோங்சிக் பின் ராஜா ஜெய்னல் அபிதீன், இணை மந்திரி டத்தோ எம். சரவணன் மற்றும் உயர் அதிகாரிகள் தமிழகம் வந்துள்ளனர். கோட்டையில் துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். பின்னர் மலேசிய அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழகத்தில் பல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாகவும், கோவையில் செம்மொழி மாநாடு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டதற்கும் பாராட்டு தெரிவித்து மலேசியாவில் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் கருணாநிதிக்கு பாராட்டு விழாக்கள் குறைவில்லாமல் நடந்து வருகின்றன. இதில் மலேசியா என்பதால் அவரால் போக முடியவில்லை போலும். சரி, மலேசிய பாராட்டு விழாவில் தமிழ் சினிமா குத்துப்பாட்டு உண்டா, இல்லையா? கலைஞர் டி.வி நேரடியாக ஒளிபரப்புமா? போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையும் மலேசிய அமைச்சர் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்து சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை போன்ற நாடுகளில் நடக்கும் பாராட்டு விழாவிற்கு ஒத்திகை பார்க்க முடியும்.
வருடம் முழுக்க பாராட்டு விழா, குத்தாட்டம் என்று போனால் மின்சாரத் தடை, விலைவாசி உயர்வு போன்ற அற்ப பிரச்சினைகளை மறந்துவிட்டு மக்கள் ஜாலியாக இருக்கலாமே?
__________________________________________________
மாவோயிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஆசாத், மற்றும் உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹேம் சந்திர பாண்டே ஆகியோரைச் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றுவிட்டு, துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாகக் கதையளந்திருக்கிறது ஆந்திர போலீசு. மாவோயிஸ்டு அமைப்பின் முக்கியமான தலைவர் ஒருவரைக் கொன்றுவிட்ட மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றது காங்கிரசு அரசு.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த ஒப்புதலின் பேரில், மாவோயிஸ்டுகளுடன் ஒரு போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை சுவாமி அக்னிவேஷ் நடத்திக் கொண்டிருந்த சூழலில் நடத்தப் பட்டிருக்கிறது இந்தப் படுகொலை. போர்நிறுத்தம் தொடங்குவதற்கான தேதியை மட்டுமே முடிவு செய்யவேண்டியிருந்தது என்றும், அது தொடர்பான செய்தியை தோழர் ஆசாத்திடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த சூழலில்தான் இந்தப் படுகொலை நடந்திருக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் சுவாமி அக்னிவேஷ். ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து, இந்தப் படுகொலை குறித்து நீதிவிசாரணை நடத்தவேண்டும் என்று கோரியதற்கு, “அதுபற்றியெல்லாம் ஆந்திர அரசுதான் முடிவு செய்யவேண்டும்” என்று சிதம்பரம் மிக அலட்சியமாகப் பதிலளித்ததாகவும் கூறியிருக்கிறார் அக்னிவேஷ். “அன்று நான் வேறு சிதம்பரத்தைப் பார்த்தேன். அவரது தோரணையே பகைமையாக இருந்தது. அவர் என் கண்ணைப் பார்த்துப் பேசுவதையே தவிர்த்தார். போர்நிறுத்தம் பற்றிய பேச்சே அவரிடமிருந்து வரவில்லை” என்று கூறியிருக்கிறார் அக்னிவேஷ்.
இம்மாதம் டெல்லியில் நடத்தப்பட்ட நக்சல் பாதிப்புக்குள்ளான மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களின் மாநாடு, அக்னிவேஷின் ஏமாற்றத்துக்கும் சிதம்பரத்தின் அணுகுமுறைக்கும் விளக்கமளிக்கின்றது. போலீசு நிலையங்கள் நவீனமயம், சல்வா ஜுடும் போன்ற சிறப்பு காவலர் படை விரிவாக்கம், துணை இராணுவத்துக்கு ஆளெடுப்பு என பலநூறு கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் உள்நாட்டுப் போருக்கான திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நக்சல் எதிர்ப்புப் போருக்கு மனரீதியில் தயாராகுமாறு துருப்புகளுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார் இராணுவ ஜெனரல். விமான ஓடுபாதைகளும் தளங்களும் போர்க்கால வேகத்தில் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பின்புலத்தில்தான் “72 மணிநேரத்துக்கு மாவோயிஸ்டுகள் தமது வன்முறையை நிறுத்தினால், பன்னாட்டு நிறுவனங்களுடன் போடப்பட்டிருக்கும் எல்லா ஒப்பந்தங்கள் குறித்தும் பகிரங்கமாக விவாதிக்கத் தயாராக இருப்பதாகக்” கூறினார் சிதம்பரம். இந்தச் சவடால் பேச்சும், சமாதானத் தூதும் அநீதியான இந்தப் போருக்கெதிராகக் குரல் கொடுப்போரைத் திசைதிருப்புவதற்கான சூழ்ச்சிகள் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் முழுவீச்சிலான இறுதிப் போரை நடத்தவதற்கு சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து திட்டம் போட்டுவிட்டு, தமிழக மக்களை ஏய்ப்பதற்காக, போர்நிறுத்தம் என்று தேர்தலுக்கு முன் நாடகமாடினாரே சிதம்பரம், அதே நாடகம்தான்; அதே சிதம்பரம்தான்.
மத்திய இந்தியாவின் கனிமவளங்களை விழுங்குவதற்கு பசித்த மிருகங்கள் போலக் காத்திருக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். எந்தக் காரணத்துக்காகவும் கணநேரத் தாமதத்தைக்கூடப் பொறுத்துக் கொள்ளவோ, ஒப்பந்தங்களைக் கேள்விக்குள்ளாக்கும் மிகச்சிறிய ஆட்சேபங்களையும் சகித்துக் கொள்ளவோ அவர்கள் தயாரில்லை. மத்திய வனத்துறையின் ஆட்சேபங்களையே தூக்கிக் குப்பையில் வீசிவிட்டு, போஸ்கோவுக்கு இடம் பிடித்துக் கொடுக்க ஒரிசா அரசாங்கம் நேரடியாகக் களத்தில் இறங்கியிருக்கிறது. “இத்தகைய அணுகுமுறை பழங்குடி மக்களை மென்மேலும் மாவோயிஸ்டுகளின் பக்கம் தள்ளுவதற்கே வழிவகுக்கும்” என்று முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலர் விடுக்கும் கவலை தோய்ந்த எச்சரிக்கைகளையோ, விட்டில் பூச்சிகளைப்போல மாவோயிஸ்டுகளின் தோட்டாக்களுக்குப் பலியாகிவரும் துணை இராணுவப்படை சிப்பாய்கள் மத்தியில் பெருகிவரும் அதிருப்தியையோ கூடக் காதில் போட்டுக்கொள்வதற்கு மன்மோகன் அரசு தயாராக இல்லை.
மாவோயிஸ்டுகளை ஒழிப்பது என்ற ஆளும்வர்க்கத்தின் அரசியல் நோக்கம் மட்டுமே இந்தப் போரின் வேகத்தைத் தீர்மானிக்கவில்லை. அரசியல் நிர்ப்பந்தங்கள், இராணுவரீதியான தோல்விகள், மக்களின் கோபம் போன்ற எல்லாக் காரணிகளையும் புறந்தள்ளிவிட்டு, போரை மேலும் முடுக்கி முன்தள்ளுமாறு பன்னாட்டு நிறுவனங்களின் திட்டங்களும் இலாப இலக்குகளும் அரசைத் தார்க்குச்சி போட்டுத் துரத்துகின்றன. தான் அணிந்திருக்கும் ஜனநாயக வெள்ளுடை கோருகின்ற நாசூக்கு கருதி, அக்னிவேஷ் போன்றோரின் முகத்தில் விழிக்கும்போது கூடத் தனது சமாதான முகமூடியையும், பச்சைச் சிரிப்பையும் பராமரிக்க, ப.சிதம்பரத்தால் முடியவில்லை. “போலி மோதலா? நான் நீதி விசாரணை குறித்து பரிசீலிக்கிறேன்” என்று ஒரு விளக்கெண்ணெய் பதிலை வெண்ணெய் போலப் பேசுவதற்குத் தெரியாதவரல்ல சிதம்பரம். அத்தகைய ஜனநாயக சம்பிரதாயங்களின் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை.
கைது செய்து, நீதிமன்றத்தில் விசாரித்து அதன் பின்னர்தான் தண்டிக்கவேண்டும் என்ற சட்டபூர்வ வழிமுறையை, அரசியல் சட்டத்தையே மதிக்காத மாவோயிஸ்டுகள் விசயத்தில் எதற்காகப் பிரயோகிக்க வேண்டும்? அரசியல் சட்டத்தையே ஒப்புக் கொள்ளாதவனைச் சுட்டுக் கொல்வதில் என்ன தவறு? என்று பகிரங்கமாக வாதிடுகிறார்கள் பல ஆளும் வர்க்க அறிவுஜீவிகள். “ஆயுதப் புரட்சியின் மூலம் அரசைத் தூக்கி எறிவதுதான் மாவோயிஸ்டுகளின் கொள்கை. சுரங்க ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டாலும் அவர்கள் ஆயுதப்போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. பிறகு ஒப்பந்தங்களைப் பற்றி ஏன் பேசவேண்டும். துப்பாக்கிதான் ஒரே தீர்வு” என்று சிதம்பரத்தின் உள்ளக்குரலை ஒலிக்கிறது பாரதிய ஜனதாக் கட்சி.
புதிய தாராளவாதக் கொள்கைகளை முன்தள்ளும் ஊடகங்கள் உருவாக்கிவரும் பொதுக்கருத்தும் இதுதான். தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது, ஓட்டுப் போடாதவர்களுடைய உரிமையைப் பறிக்க வேண்டும் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டு வந்த கருத்துகள் முற்றி, ‘அரசியல் சட்டத்தை ஏற்க மறுப்பவர்களின் ஜனநாயக உரிமைகளை மட்டுமல்ல, அவர்களது உயிர் வாழும் உரிமையையும் பறிக்கலாம்’ என்று கனிந்திருக்கின்றன.
தமது வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பழங்குடி மக்களின் கருத்துரிமையை அங்கீகரிப்பதாக மிகுந்த பெருந்தன்மையுடன் கூறும் ஆளும்வர்க்கங்கள், தோழர் ஆசாத்தின் உயிர்வாழும் உரிமையை மூர்க்கமாக நிராகரிக்கின்றன. டாடாவும், மித்தலும், போஸ்கோவும் தண்டகாரண்யாவில் கால் வைத்திருக்கவில்லையென்றாலும் இந்த அரசமைப்புக்கு எதிராக அவர் ஆயுதம் ஏந்தியிருப்பார் என்பதுதான் ஆசாத்தைக் கொல்வதற்கு ஆளும்வர்க்கம் கூறும் நியாயம். டாடாவும் மித்தலும் தண்டகாரண்யாவுக்கு விஜயம் செய்வதற்கு முந்தைய பொற்காலத்திலும், ஆளும் வர்க்கங்களின் சுரண்டலைப் பாதுகாப்பதற்காக இந்த அரசு அங்கம் முழுதும் ஆயுதம் தரித்துத்தான் நிற்கிறது என்ற உண்மைதான் ஆசாத்தை ஆயுதம் ஏந்த வைத்த புரட்சியின் நியாயம்.
எந்த ‘புனிதமான’ அரசியல் சட்டத்தின் பலிபீடத்தில் தோழர் ஆசாத்தின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறதோ, அந்தப் புனிதமான அரசியல் சட்டத்தின் மீது உலக வர்த்தகக் கழகமோ, ஒபாமாவோ,ரெட்டி சகோதரர்களோ, சல்வா ஜூடுமோ, துணை இராணுவப் படைகளோ சிறுநீர் கழிப்பதையும் காறி உமிழ்வதையும் இந்த அரசு பொருட்படுத்துவதில்லை. அவையெல்லாம் ஆளும் வர்க்கங்கள் தமது சொந்த நலனை ஈடேற்றிக் கொள்ளும் பொருட்டு அரசியல் சட்டத்துக்கு இழைக்க வேண்டியிருக்கும் தவிர்க்க முடியாத அவமதிப்புகள். இவையெல்லாம் மறுகாலனியாக்கப் புதுயுகத்துக்குப் பொருத்தமான புதிய பூசை முறைகளாகவே அங்கீகரிக்கப் பட்டுவிட்டன. ஆனால் ஆசாத் தனது சொந்த நலன் எதையும் ஈடேற்றிக் கொள்வதற்காக ஆயுதம் ஏந்தவில்லை. ஒடுக்கப்படும் வர்க்கங்களின் நலனுக்காக ஆயுதம் ஏந்தினார் என்பதுதான் அவரது தலைக்கு விலை வைக்கப்படுவதற்கான காரணம். மீறல் அல்ல பிரச்சினை. அந்த மீறல் யாருடைய நலனுக்கானது என்பதுதான் பிரச்சினை. இந்தப் போரின் பொருளை இப்படியும் விளங்கிக் கொள்ளலாம். இது ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக அரசியல் சட்டத்தை மீறுபவர்களுக்கும், ஆளப்படும் வர்க்கங்களின் நலனுக்காக அரசியல் சட்டத்தை மீறுவோருக்கும் இடையிலான போர்.
கடற்படை ஒன்று போக மற்றெல்லாப் படைகளும் தண்டகாரண்யாவைச் சுற்றி வியூகம் அமைத்துத் தாக்குதல் தொடுத்த போதிலும், ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் இந்த ஆக்கிரமிப்புப் போரை நடத்த வேண்டிய அவசியம் குறித்து இராணுவ மொழியில் உள்துறை அமைச்சர் அடிக்கடி உரையாற்றிய போதிலும், இதனை ஒரு ‘உள்நாட்டுப் போர்’ என்று அறிவிக்க முடியாமல் வல்லரசுப் பெருமிதம் டெல்லியைத் தடுக்கிறது.
அன்று இந்திய சமஸ்தானங்களில் கிளர்ந்தெழுந்த உள்நாட்டுப் போர்களை ஒடுக்கி, மன்னர்களைப் பாதுகாப்பதற்காக 1939 இல் பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய மத்திய ரிசர்வ் போலீசுப் படையும், 1965 இல் இந்திய-பாக் போரை ஒட்டி ‘எல்லைப்பகுதியில் வாழும் இந்திய மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில்’ உருவாக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையும் இன்று ஜார்கண்டிலும், சட்டீஸ்கரிலும் முகாமிட்டிருக்கின்றன. 60 ஆண்டுகளாக மணிப்பூருக்குக் காவல் நிற்கிறது இந்திய இராணுவம். இந்திய இராணுவத்தின் 50% படைகள் காஷ்மீரில் ‘அமைதியை’ நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன. தற்போது, தண்டகாரண்யாவுக்கு இராணுவத்தை அனுப்புவதற்கு தளபதிகள் தயங்கக் காரணம் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக இராணுவத்தை ஏவக்கூடாது என்ற தரும சிந்தனையல்ல. இந்தியர்களிடமிருந்து இந்தியாவைப் பாதுகாப்பதற்கே மொத்த இராணுவத்தையும் இறக்கிவிட்டால், அந்நியர்களிடமிருந்து இந்திய எல்லைகளைப் பாதுகாக்க ஆளில்லை என்பதுதான் அந்தத் தளபதிகள் வெளிப்படையாகக் கூறவிரும்பாத உண்மை. இப்படி இந்தியப் பேரரரசின் ‘எல்லை’, அதன் இதயப்பகுதியையே நெருங்கி விட்டதென்ற உண்மையை ஒப்புக் கொள்வது வல்லரசுப் பெருமிதத்துக்கு வேட்டு வைத்து விடுமென்பதால், ‘இது போர் அல்ல’ என்று பம்மாத்து செய்கிறார் சிதம்பரம்.
உண்மையிடமிருந்து தப்புவதற்கு சுயமோசடியைக் காட்டிலும் வீரியம் செறிந்த மருந்துண்டா என்ன? கம்யூனிசம் தோற்றுவிட்டது என்பது முதலாளி வர்க்கத்தின் மூடநம்பிக்கை. அந்த நம்பிக்கை தன் கண்முன்னே பொய்த்துக் கொண்டிருப்பதால், தன்னையும் தன் நம்பிக்கையையும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, ‘தோற்றுப்போன’ கம்யூனிசத்தைத் தோற்கடிக்கத் தவிக்கிறது முதலாளி வர்க்கம். தான் மரணத்தின் முகத்தில் விழிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு புரட்சியைக் கொல்ல முனைகிறது ஆளும் வர்க்கம்.
அக்னிவேஷின் கண்களைச் சந்திக்க முடியாமல் சிதம்பரம் முகம் திருப்பிக் கொள்ளக் காரணம் அறம் வழுவிய குற்றவுணர்வோ, நடிப்புத் திறனின்மையோ அல்ல. முயன்றாலும் வெற்றிப் பெருமிதத்தை வரவழைத்துக் கொள்ளமுடியாத அளவிற்கு சவக்களை சிதம்பரத்தின் முகத்தை ஆக்கிரமித்திருப்பதை நாடே பார்த்திருக்கும்போது, சிதம்பரம் மட்டும் பார்த்திருக்க மாட்டாரா என்ன?
எனினும், உண்மை வேறுவிதமாக இருக்கவேண்டும் என்றே சிதம்பரம் விரும்புகிறார். ஆளும் வர்க்கங்களும் அவ்வாறே விரும்புகின்றன. 20 ஆண்டுகள் போர் நடத்தி இலட்சம் பேரைக் காவு கொடுத்த பின்னரும், காஷ்மீர் மக்களின் விடுதலை உணர்வுக்குக் காரணம் பாகிஸ்தானின் தூண்டுதல்தான் என்று தீர்க்கமாக நம்புகிறது இந்திய ஆளும் வர்க்கம். கிராமங்களை எரித்து, நிலங்களைப் பிடுங்கி, பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கி, இளைஞர்களைப் பிடித்துச் சென்று, விலங்குகளினும் கீழாக அமெரிக்கப் பழங்குடிகளை வேட்டையாடிய ஐரோப்பியக் காலனியாதிக்கவாதிகள், அம்மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ள முடியும் என்று ஒருபோதும் நம்பவில்லை. ஆனால் செவ்விந்திய மக்களை வேட்டையாடிய ஐரோப்பியர்களைப் போலவே, பழங்குடி மக்களை வேட்டையாடும் இந்திய ஆளும் வர்க்கமோ, மாவோயிஸ்டுகளை அகற்றிவிட்டால், தங்களது வளர்ச்சித் திட்டத்தால் பழங்குடி மக்களை வளைத்து விடமுடியும் என்று நம்புகிறது.
அதனால்தான் தோழர் ஆசாத்தின் தலைக்கும், கணபதியின் தலைக்கும் விலை. தலைகளைக் கிள்ளும் கலையில் தேர்ந்த இசுரேல் கொலைப்படைத் தலைவர்களைத் தருவித்து நக்சல் எதிர்ப்புப் படையினருக்குப் பயிற்சி. கிளியோபாட்ராவின் மூக்குதான் சாம்ராச்சியத்தின் எதிர்காலத்தைத் தீர்மானித்தென்று கருதும் ஆய்வுமுறை வரலாற்றின் குப்பைக்குப் போய்விட்டது உண்மையேயெனினும், வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குச் செல்லக் காத்திருக்கும் வர்க்கங்களும், அவற்றுக்குத் தலைமை தாங்கும் அறிவாளிகளும் அந்த முறையில் சிந்திக்கும்படியே விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் என்று தங்களது கட்சியின் உயிர்வாழ்வுக்கே தலைகளை நம்பியிருக்கும் கும்பல், ‘தலைகளைக் கிள்ளிவிட்டால் புரட்சி அழிந்துவிடும்’ என்று சிந்திப்பதில் வியப்பேதுமில்லை. முன்னர் ஆசாத் என்பதை ஒரு பெயர்ச்சொல்லாகக் கருதித்தான் பிரிட்டிஷ் சாம்ராச்சியவாதிகள் அவரைப் படுகொலை செய்தனர். பின்னர் தெலிங்கானா முதல் நக்சல்பாரி வரை தேசமெங்கும் முளைத்த புரட்சிகளின் தலைகளைக் கிள்ளிக்கிள்ளி கை ஓய்ந்த பின்னரும் ‘ஆசாத் என்பது வினைச்சொல்’ என்ற உண்மையைப் புரிந்து கொள்ள மறுக்கிறது ஆளும் வர்க்கம்.
‘தலையைக் கிள்ளினால் புரட்சியைத் தடுத்துவிடலாம்’ என்ற தத்துவத்தின்படி, புரட்சியின் தலையைப் பிடிப்பதற்குத் ‘தேடுதல் வேட்டை’ நடத்திக் கொண்டிருக்கின்றன சிதம்பரத்தின் படைகள். ‘ஆசாத்’ தின் உயிர் தலையில் இல்லை என்ற ஞானம் தமது தலைகள் உருளும் தருணத்தில்தான் அவரகளது மண்டைக்குள் பளிச்சிடும் போலும். அப்படியொரு தருணம் வரமாட்டாது என்ற நம்பிக்கையில் அவர்கள் வாழட்டும். அந்தத் தருணத்தை நாம் வரவழைப்போம்.
வீரவணக்கம் தோழர் ஆசாத்!
_____________________________________________
மருதையன், புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2010
_____________________________________________
பெட்ரோல் – டீசல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்களிடம் எழுந்துள்ள அதிருப்தியை எதிர்க்கட்சிகள் அறுவடைய செய்ய நினைக்கின்றன. பாராளுமன்றத்தின் அவைகளை முடக்கி ஒரு வாரம் சீன் போட்டார்கள். இதற்குமேல் நாடகத்தை இழுக்க முடியவில்லை. அதனால் காங்கிரசு அரசுடன் உடன்பாடு போட்டு வாக்களிப்பு இல்லாத தீர்மானத்தை விவாதிப்பது என்று முடிவு செய்தனர். அந்த அலங்கார நாடகம் இப்போது பேஷாக நடக்கிறது.
காமன்வெல்த் விளையாட்டு, உலகக் கோப்பை கிரிக்கெட் என்று ஏகப்பட்ட கிளாடியேட்டர் ஆட்டங்கள் இருப்பதால் விலைவாசியை மக்கள் மறந்து விடுவார்கள் அல்லது பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்பது மத்திய அரசின் கணிப்பு. தாங்கள் ஆளும் மாநிலங்களிலும் விலைவாசி உயர்ந்திருப்பதும், டீசலுக்கான வரியை ரத்து செய்யாமலும் இருக்கும் எதிர்க்கட்சிகள் வேறு வழியின்றி ஒநாய் போல கண்ணீர் விடுகின்றன. இருந்தாலும் இந்த கிளிசரின் அழுகை மக்களுக்கு தெரியாதா என்ன?
தனியார் பள்ளிகளின் ஆட்சியை கோவிந்தராஜன் என்ன செய்ய முடியும்?
தமிழகத்தில் சுமார் 11,000 தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தீர்மானித்த கட்டணத்தை எதிர்த்து சுமார் ஐம்பது சதவீத பள்ளிகள் மேல்முறையீடு செய்திருக்கின்றனர். பத்து ஆடிட்டர்களைப் போட்டு அதை பரிசீலித்து முடிவுகள் விரைவில் அனுப்பப்படும் என்று கோவிந்தராஜன் கூறியிருக்கிறார். ஏற்கனவே அரசு நிர்ணயித்த கட்டணம் அதிகம்தான். அதைக்கூட ஏற்கமாட்டோம் என்று பல பள்ளிகள் வெளிப்படையாக அறிவித்து விட்டு வழக்கமான கட்டணக் கொள்ளையை நடத்திவருகின்றன.
அதை இந்த அரசு ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது இந்த மேல்முறையீடு நாடகம் மூலம் அந்த பகிரங்கக் கொள்ளை சட்டப்பூர்வமாக ஏற்கப்படும் என்றே தோன்றுகிறது. கட்டண முறைப்படுத்தல் என்று சொல்லி நல்லாத்தான் நடத்துராங்க நாடகம்!
என்ன ஆச்சரியம்! நல்ல தமிழில் பேச கருணாநிதி வேண்டுகோள்!!
கோவை டைடல் பார்க் தகவல் தொழில் நுட்ப பூங்காவில் பேசிய கருணாநிதி வெளிமாநில அதிகாரிகள் நல்ல தமிழில் பேசவேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார். கருணாநிதி பேரன், பேத்திகளுக்கெல்லாம் தமிழ் தெரியுமா என்றே சந்தேகமாக இருக்கிறது. சன்.டிவி, கலைஞர் டி.வி, ரெட் ஜெயண்ட் மூவி மேக்கர்ஸ் போன்ற செம்மொழி பல்கலைக்கழகங்கள் மூலம் தமிழை கொலை செய்து, தமிங்கிலத்தை தேசிய மொழியாக்கிவரும் நிலையில், இந்த அட்வைசு சொல்வதற்கு அவர் வெட்கப்படவில்லை என்பதுதான் நல்ல காமடி! அது கிடக்கட்டும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் இனி தமிழில்தான் தீர்ப்பளிக்க வேண்டும் தலைவர் சொல்லிப்பார்க்கட்டுமே! நைனாவுக்கு தில்லிருக்கா?
காங்கிரசு, பாஜக கூட்டணியில் வலது கம்யூனிஸ்ட் சேராதாம்! அப்ப தமிழ்நாட்டுல?
சிவகங்கையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்திருக்கிறது. அதில் பங்கேற்ற அகில இந்திய செயலாளர் ஏ.பி.பரதன் தலைப்பில் உள்ளவாறு செய்தியாளர்களிடம் பேசினாராம். காங்கிரசு, பா.ஜ.க தொழிற்சங்கங்களோடு விலைவாசிக்கெதிராக வேலை நிறுத்தம் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலுக்கு மட்டும் இப்படி ஒதுங்கிக் கொண்டால் எப்படி?
தமிழகத்தைப் பொறுத்தவரை அம்மா கூட்டணியில் வலது தோழர்கள் இருக்கிறார்கள். அம்மாவோ கோவையில் பேசும்போது ‘நீங்கள் நினைக்கும் கூட்டணி அமையும்’ என்று தொண்டர்களிடம் குஷியை கிளப்பியிருக்கிறார். அந்த நினைக்கும் கூட்டணி காங்கிரசோடுதான். அதைக் கேட்டால்,“அப்படி நான் நம்பவில்லை” என்கிறார் பரதன். உண்மைதான். நம்பிக்கைதானே வாழ்க்கை! அ.தி.மு.க அம்மா அப்படி செய்யமாட்டார் என்று நம்பத்தான் முடியும். அது கூடாது என்று கட்டளையிட முடியுமா என்ன? அந்த நிலைமை இருந்தால் தோழர்கள் ஏன் போயஸ் தோட்டத்தில் போய் கூழைக்கும்பிடு போட்டு அரசியல் நடத்தணும். இருந்தாலும் தோழர்கள் கவலைப்பட வேண்டாம். தேர்தலுக்கு நிறைய நேரம் இருக்கிறது என்று பரதன் தீர்வு சொல்கிறார்.
காஷ்மீரில் கூடுதல் துணை இராணுவம்: கூடுதல் துப்பாக்கி சூடு!
ஒரு வாரத்திற்கு மேலாக காஷ்மீர் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதில் சுமார் 25 மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். முன்னர் எதற்கெடுத்தாலும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று பேசி நியாயப்படுத்துவார்கள். இப்போது முடியவில்லை. சாதாதரண மக்கள் பெருந்திரளாக கூடி அரசை எதிர்த்து போராடிவருகிறார்கள். இதில் பெண்களும் விதிவிலக்கு அல்ல. துப்பாக்கியின் நிழலில் தமது பண்பாட்டையும், வாழ்வையும் பறிகொடுத்த மக்கள் இப்போது யாருக்கும் பணிவதாக இல்லை. இந்நிலையில் மத்திய அரசு 2000 துணை இராணுவப்படையை கூடுதலாக காஷ்மீருக்கு அனுப்புகிறது. இதற்கெல்லாம் அந்த மக்கள் அஞ்சப் போவதில்லை. விடுதலைப் போராட்டத்தின் உணர்வை காக்கி சட்டைகளின் அணிவகுப்பு என்ன செய்து விடும்?
35,000கோடி ரூபாய் மக்கள் பணத்தை வாரி இறைத்து நடக்க இருக்கின்ற காமன் வெல்த் போட்டிக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் எல்லா கட்டுமானப்பணிகளும் முடிக்க வேண்டுமென்று அரசு குறியாய் இருக்கிறது. இது ஒரு தேசியப் பெருமிதம் என்று அதற்கு பஜனை பாடுபவர்களும் உண்டு. எனினும் தற்போது நாளுக்கொன்றாய் காமன்வெல்த் போட்டி கட்டுமான பணிகளின் மூலம் பல நிறுவனங்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை ஊழல் செய்து விழுங்கியிருப்பது தெரிகிறது. போட்டி தேதிக்கு முன்ன இது தோண்டத் தோண்ட கிளம்பிக்கொண்டே இருக்கும் போல தெரிகிறது. சில ‘தேசபக்தர்கள்’ இப்போது ஊழலைப் பற்றி பேசுவது சரியில்லை, போட்டி முடிந்த பிறகு பார்க்கலாம் என்று நாட்டுப்பற்று ஆவேசத்தில் சாமியாடுகின்றனர். சரி இந்த ஊழல் செய்த பணம் எவன் அப்பன் வீட்டு சொத்து? மக்கள் பணத்தை திருடியதை பேசினால் அது தேசப்பற்றுக்கு விரோதமா? நல்லா இருக்குய்யா உங்கள் நியாயம்!
தஞ்சை சரபோஜி கல்லூரியின் அலட்சியம் ! பு . மா .இ .மு தலைமையில் மாணவர்கள் போராட்டம் !
கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரியைத் திறந்து இரண்டு மாதங்கள் ஆகியும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச பஸ்பாசை இன்னும் வழங்கவில்லை . அரசின் இந்த அலட்சியத்திற்கு எதிராக மாணவர்களை களத்தில் இறக்கியது பு .மா .இ .மு 2000 த்திற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடியதால் பணிந்தது கல்லூரி நிர்வாகம்.உடனே இலவச பஸ்பாசை பெற்றுத் தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது .
‘மேட் ஃபார் இந்தியா’ – இந்தியாவுக்காகவே தயாரிக்கப்பட்டது என்பது நோக்கியா கைபேசியின் விளம்பர வாசகம். ஒரு ரூபாய் அரிசி, டாஸ்மாக் சாராயம், கலைஞரின் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றுடன் இன்றைய தாராளமயத் தமிழகத்தில் தமிழனின் புதிய அடையாளமாகச் சேர்ந்திருப்பது நோக்கியா கைபேசி.
விளம்பரங்களும், ரிங் டோன்களும் நாள் முழுவதும் கசிந்து கொண்டிருக்கும் நோக்கியா கைபேசியின் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஆலைக்குள் ஜூலை 23 வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு நச்சுவாயு கசிந்தது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அந்த ஆலையில் மதிய உணவை முடித்துவிட்டுப் பணிக்கு திரும்பியிருந்த முதல் ஷிப்டு தொழிலாளர்களுக்கு திடீரென்று மூச்சுத் திணறத் தொடங்கியது. ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். என்ன ஏதென்று பார்ப்பதற்குள் அடுத்தடுத்து ஆண்களும், பெண்களுமாக பல தொழிலாளர்கள் சடசடவென்று ரத்த வாந்தியுடன் மயங்கி விழ ஆரம்பித்தார்கள். “இன்னிக்கி ஆடி மாசம் முதல் வெள்ளிக்கிழமை இல்லையா? விரதம் இருந்திருக்காங்க. பசி மயக்கம். மத்தபடி ஒண்ணுமில்ல. வேலையை பாருங்க…” என்று சூபர்வைசர்கள் தொழிலாளர்களை விரட்டினர். அடுத்த சில நிமிடங்களில் ஷிப்ட் மானேஜரும், ஷிப்டுக்கான லீடரும் மயங்கி விழுந்த பின்னர்தான் நிர்வாகம் அசைந்தது. அன்று மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தொழிலாளர்கள் 127 பேர்.
இதனையடுத்து “என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் வேலைக்கு வரமாட்டோம்” என்று தொழிலாளர்கள் மறுத்தனர். “ஆலைக்குள் ஒரு அறையில் பூச்சி மருந்து அடித்தோம். ஏ.சி ரூம் என்பதால் மருந்து வெளியேறவில்லை. அவ்வளவுதான் பிரச்சினை” என்று சமாளித்தது நிர்வாகம். பெரும்பாலான தொழிலாளர்கள் வரமறுத்தனர். இருப்பவர்களை வைத்து உற்பத்தியைத் தொடங்கியது நிர்வாகம். சிறிது நேரத்தில் மீண்டும் தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கிவிழத் தொடங்கினர். இவர்களின் எண்ணிக்கை 145.
260க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட வண்ணமிருந்தனர். அபாய நிலையில் இருந்தவர்கள் ஐ.சி.யு வுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்களுக்கு ஏதோ சிகிச்சை செய்துவிட்டு, அவசரம் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்து அனுப்பியது மருத்துவமனை. டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்கள் தங்களது மருத்துவ அறிக்கையை வெளியே கொண்டுசெல்லவிடாமல் தடுப்பதில் நிர்வாகம் குறியாக இருந்தது.
தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் யோக்கியதையைத் தெரிந்து கொண்டால், அதன் சென்னை நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைகள் நமக்கு வியப்பளிக்காது. சீனாவில் உள்ள அதன் தொழிற்சாலையில் சமீபகாலத்தில் மட்டும் 10 தொழிலாளிகள் ஆலையின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். 36 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்ய நிர்ப்பந்தித்தது, குறைவான ஊதியத்துக்குக் கசக்கிப் பிழியப்படும் கொடுமை, சூபர்வைசர்களின் கொடுங்கோன்மை போன்றவைதான் தற்கொலைகளுக்குக் காரணம். தற்கொலை குறித்த செய்திகள் உலகம் முழுவதும் பரவி நாறிவிடவே, கவலை கொண்ட நிர்வாகம், தொழிலாளிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் விதத்தில் மாடியிலிருந்து குதிக்க முடியாத வண்ணம், வலைத்தடுப்புகளை அமைத்தது. ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் குரூரமனத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதுமானது.
ஃபாக்ஸ்கானின் சென்னை ஆலையில் சுமார் 6000 தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். காஞ்சிபுரம், திருத்தணி, அரக்கோணம் முதலான ஊர்களிலிருந்து தினந்தோறும் 40 கம்பெனிப் பேருந்துகள் இவர்களைக் கொண்டு வந்து கொட்டுகின்றன. நாளொன்றுக்கு 1.2 இலட்சம் நோக்கியா கைபேசிகளுக்கான உதிரிப் பாகங்களையும் தயாரித்துக் குவிக்கிறார்கள் தொழிலாளர்கள்.
“சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்சு, இந்தியா ஆகிய நாடுகளில் இயங்கும் நோக்கியா, மோடாரோலா, சாம்சங், சோனி, எல்ஜி போனற நிறுவனங்களின் ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படாததால், கடும் நோய்களை உருவாக்கக் கூடிய ரசாயனப்பொருட்களின் பாதிப்புக்கு அவர்கள் உள்ளாகி வருகிறார்கள்” என்று கூறுகிறது பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த ஆய்வுக்கான மையம் (Centre for Research on Multinational Corporations) என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை.
“மின்னணு சாதனத்தயாரிப்பில் ஏராளமான நச்சு உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. காரீயம், காட்மியம், டையாக்சின், ஃப்யூரான், குளோரின், புரோமின், பாலிவினைல் குளோரைடு போன்றவற்றை சூடாக்கும்போது அவை நச்சுவாயுக்களை வெளியிடுகின்றன… கைபேசி உற்பத்தியிலோ ஆர்சனிக், மெர்க்குரி போன்ற அபாயகரமான நச்சு உலோகங்கள் பயன்படுத்தப் படுகின்றன. மின்னணுச் சாதன உற்பத்தியில் நச்சு இரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் இந்தியாவில் இல்லை” என்று எச்சரிக்கிறார் கிரீன் பீஸ் அமைப்பைச் சேர்ந்த ரமாபதி குமார்.
புதிய சட்டங்களை உருவாக்குவது இருக்கட்டும். இருக்கின்ற சட்டங்களையே தம் கால்தூசுக்கு சமமாகத்தான் மதிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள் என்பதும் இந்த விபத்தின் மூலம் அம்பலமானது. விபத்துக்கு மறுநாள் இரவு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகரின் உத்தரவின் பேரில் தொழிற்சாலைக்குள் ஆய்வு நடத்திய சுகாதார ஆய்வாளர்கள் ’ஒரு உண்மையை’ கண்டறிந்தனர். ஆலையைத் துவங்குவதற்கு முன்னரே சுகாதாரத்துறையிடம் பெற்றிருக்க வேண்டிய தடையில்லாச் சான்றிதழைப் பெறாமலேயே ஃபாக்ஸ்கான் ஆலை 5 ஆண்டுகளாக உற்பத்தியை நடத்திக் வந்திருக்கிறது. இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்த பின்னரும் இதுகுறித்து தமிழக அரசு மூச்சு விடவில்லை. ஒருவேளை 100, 150 தொழிலாளிகள் செத்து விழுந்திருந்தாலும் தமிழக அரசு மூச்சு விட்டிருக்காது. நோக்கியா நிறுவனத்துக்கு தமிழக அரசு வாரி வழங்கியுள்ள சலுகைகளைப் பார்ப்பவர்கள் யாரும் இதனைப் புரிந்து கொள்ளமுடியும்.
000
ஸ்ரீபெரும்புதூரில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான ஒப்பந்தம் 2005, ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நோக்கியா நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே கையெழுத்தானது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் சட்டம் வாரி வழங்கியிருக்கின்ற சலுகைகளுக்கு மேல் பல கூடுதல் சலுகைகளை வாரி வழங்கி நோக்கியாவைத் தமிழகத்துக்குக் கவர்ந்திழுத்தது கலைஞர் அரசு.
ஏக்கருக்கு 4.5 இலட்சம் ரூபாய் என்ற கணக்கில் சிப்காட்டுக்குச் சொந்தமான 210.87 ஏக்கர் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு நோக்கியாவுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதில் சிப்காட் இழந்திருக்கும் தொகை குறைந்த பட்சம் 7.4 கோடி ரூபாய். பத்திரப் பதிவுக்கான 4% முத்திரைத்தாள் கட்டணத்தையும் தள்ளுபடி செய்ததுடன், தனது தேவைக்குப் போக மீதமுள்ள நிலத்தை பிற நிறுவனங்களுக்குக் கூடுதல் விலைக்குக் குத்தகைக்கு விடுவதற்கான உரிமையும் நோக்கியாவுக்கு வழங்கியிருக்கிறது தமிழக அரசு.
தடைபடாத மின்சப்ளைக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டிருப்பதுடன், ஆலைக்குத் தேவையான துணை மின்நிலையத்தையும் தனது சொந்த செலவில் மின்வாரியம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. சொந்தமாக ஒரு மின் உற்பத்தி நிலையத்தை நோகியா அமைத்துக் கொள்ளலாம். மின்சாரத்தை தான் விரும்பிய விலையிலும் விற்றுக் கொள்ளலாம். இதன் மீது எவ்வித வரிவிதிப்பும் இருக்காது என்பதுடன், மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான செலவில் 50 சதவீதத்தையும் தமிழக அரசு கொடுக்கும். நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையை அரசே அமைத்துக் கொடுப்பதுடன், அருகாமை நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும்.
வாட் வரியாகவும், மத்திய விற்பனை வரியாகவும் ஆண்டுதோறும் நோக்கியா எவ்வளவு தொகையைச் செலுத்துகிறதோ, அந்தத் தொகையை தமிழக அரசு நோக்கியாவுக்குத் திருப்பிக் கொடுக்கும். அந்த வகையில் 2005 துவங்கி 4 ஆண்டுகளில் நோக்கியாவின் உள்நாட்டு விற்பனையின் அடிப்படையில் தமிழக அரசு நோக்கியாவுக்கு கொடுத்திருக்கும் தொகை 650 கோடி ரூபாய். நோக்கியா தனது தொழிற்சாலையில் போட்டிருக்கும் முதலீடும் ஏறத்தாழ 650 கோடி ரூபாய்தான். தமிழக அரசு நோக்கியாவுக்கு வழங்கியுள்ள சலுகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1020.4 கோடி.
நோக்கியாவுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள சலுகைகள், நோக்கியா சி.பொ.மண்டலத்தில் இருக்கும் அதன் வென்டார் நிறுவனங்களான ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கும் தமிழக அரசால் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும்.
மாநில அரசு வழங்கியிருக்கும் சலுகைகள் ஒருபுறமிருக்க, சி.பொ.மண்டலங்களுக்கு மைய அரசும் சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. நோக்கியா செலுத்தவேண்டிய 20% வருமானவரி தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக ஆண்டுதோறும் மைய அரசுக்கு ஏற்படும் இழப்பு 700 கோடி ரூபாய். உற்பத்தியில் 50% ஏற்றுமதி செய்வதாக ஒப்புக்கொண்டிருந்த போதிலும், 70 சதவீதத்திற்கும் மேல் இந்தியச் சந்தையிலேயே விற்கப்பட்டிருப்பதனால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட சுங்கவரி இழப்பு ரூ.681. 38 கோடி. கலால் வரி, சேவை வரி ஆகியவற்றிலிருந்தும் நோகியாவுக்கு விலக்கு அளிக்கப் பட்டிருக்கிறது
2008 இல் நோக்கியாவில் பணிபுரிந்த தொழிலாளிகள் சுமார் 8000 பேர். அவர்களில் சுமார் 3000 பேர் காண்டிராக்ட் தொழிலாளர்கள். பின்லாந்து நிறுவனமான நோக்கியா, சென்னையில் ஒரு தொழிலாளிக்குக் கொடுக்கும் ஊதியத்தைப் போல 45 மடங்கு அதிகமான தொகையை தனது நாட்டின் தொழிலாளிக்கு ஊதியமாகக் கொடுக்கிறது. இத்தகைய கொடிய உழைப்புச் சுரண்டலை தொழிலாளிகள் எதிர்த்துப் போராடாமல் தடுக்கவும் பொறுப்பேற்றிருக்கிறது தமிழக அரசு. “தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தைத் தடுக்கும்பொருட்டு, நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்தை பொதுப் பயனுக்கானது” என்று அறிவிப்பதாகக் கூறியிருக்கிறது தமிழகஅரசு. இச்சொற்களுக்கான பொருள் விளக்கம் தரப்படவில்லையென்றாலும், அவற்றை திமுக சங்கங்களின் கைக்கூலி நடவடிக்கைகளே விளக்குகின்றன.
அந்நியச் செலாவணி இருப்பையும், வேலைவாய்ப்பையும் பெருக்குவதற்காகவே சி.பொ.மண்டலங்களுக்குச் சலுகை வழங்குவதாகக் கூறுகிறது அரசு. சீனாவுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய கைபேசி சந்தையாக வளர்ந்துவரும் இந்தியாவில் 50% சந்தையைக் கைப்பற்றுவதற்கும், படுமோசமான ஊதியத்தில் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்குமே இச்சலுகைகள் நோக்கியாவுக்குப் பயன்பட்டிருக்கின்றன. இருப்பினும் சி.பொ.மண்டலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளைக் குறைக்கக்கூடாது என்றும், அவை இப்போதுதான் விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாகவும் சமீபத்தில் டெல்லி மாநாட்டில் பேசியிருக்கிறார் ஸ்டாலின். “எங்கள் நாசியில் நுழைந்த நச்சுவாயு ஏற்படுத்தும் விளைவுகளைச் சொல்” என்று கேட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் சென்னை ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள். சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதே இந்த நாட்டின்மீது கவிந்திருக்கும் ஒரு நச்சுவாயுதான் என்பதைத் தங்களது போராட்டத்தின் ஊடாக நிச்சயம் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
“தில்லைக் கோயிலின் தீண்டாமைச் சுவரை அகற்றவேண்டும்” என்று ஜூலை 14 ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சியினர் சிதம்பரத்தில் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஏற்கெனவே ஏப்ரல் மாதத்தில் வலது கம்யூனிஸ்டு கட்சி சிதம்பரத்தில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்திவிட்டது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் இது குறித்து அறிக்கை விட்டுவிட்டார். அடுத்து பா.ஜ.க வின் போராட்ட அறிவிப்பும் வெளிவரக்கூடும். அவ்வளவு ஏன், தீண்டாமைச் சுவரை அகற்றக்கோரி தீட்சிதர்களும் போராடக்கூடும். சிங்கள கடற்படையின் அட்டூழியத்தை எதிர்த்து திமுகவும் காவிரிக்காக காங்கிரசும் போராடுவதில்லையா, அதுபோலத்தான்.
ஒரு நியாயமான கோரிக்கையைப் பலரும் ஆதரிக்கும்போது நாம் மகிழ்ச்சி அடையவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் சிதம்பரம் பிரச்சினை தமிழகத்தின் சர்வகட்சிப் பிரச்சினையாக மாறிவருவதால், காவிரிப் பிரச்சினையின் கதி இதற்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. அதைத் தடுக்கும் பொருட்டு சில உண்மைகளை மீண்டும் மீண்டும் உரத்துக் கூறவேண்டியிருக்கிறது.
மார்க்சிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்திய மறுநாளே தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. முதல்வரின் அறிவுரையின்படி தீட்சிதர்கள் வசமிருந்த சிதம்பரம் நடராசர் கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், இதற்கெதிராக தீட்சிதர்கள் போட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோயில் கட்டுமானங்கள் எதையும் இடிக்கக் கூடாதென்று 15.3.2010 அன்று உத்தரவிட்டிருப்பதாகவும், சுவரை அகற்றக்கோரும் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் அரசு மேற்கொண்டுவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்துவதுதான் என்றும் கூறியது அந்த செய்திக்குறிப்பு.
மறுநாள் காமராசர் பிறந்தநாள் விழாவில் பேசிய கருணாநிதி, “கேட்கக் கூடாததை வேண்டுமென்றே கேட்டு, ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதே இப்போராட்டத்தின் நோக்கம்” என்று சாடியது மட்டுமின்றி, “நந்தனார் இருந்தாரா இல்லையா என்பதை பெரியாரிடம்தான் கேட்கவேண்டும்” என்று கூறி தீட்சிதர்களுக்கு ஆதரவாகப் பெரியாரை இழுத்து வந்து ஆஜராக்கினார்.
‘கோபுரத்தை தாங்குவது நீயா நானா’ என்று இரு பொம்மைகள் அடித்துக்கொள்வதை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பவர்கள் குனிந்து அஸ்திவாரத்தைப் பார்ப்பதில்லை. தீண்டாமைச் சுவரை இடிப்பதற்கு திடீரென்று களம் இறங்கியிருக்கும் மார்க்சிஸ்டு கட்சியின் யோக்கியதையை முதலில் பார்ப்போம். 2006 ஆம் ஆண்டில் சிதம்பரம் நகரில் மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டுப் போராட்டக்குழுவிலிருந்து வெளியேறினார் மார்க்சிஸ்டு கட்சியின் நகரச்செயலர் மூசா. ‘தீட்சிதப் பார்ப்பனர்கள்’ என்று கூறுவது பிராமணர்களின் மனதைப் புண்படுத்தும் என்பதுதான் அவர் தெரிவித்த காரணம். பிறப்பால் இசுலாமியராக இருந்தபோதிலும் மூசாவுக்கு கோயிலுக்குள் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்கள் தீட்சிதர்கள்.
தமிழ் பாடும் உரிமையை நிலைநாட்டியதும், கோயிலை அரசு மேற்கொள்ளும் உத்தரவை உயர்நீதிமன்றத்தில் பெற்றதும் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும், ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளும்தான் என்பதையும், இப்போராட்டத்தில் துவக்கமுதல் துணநின்றவர்கள் முன்னாள் அமைச்சர் விவி.எஸ், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் போன்றோர்தான் என்பதையும் தமிழகம் அறியும்.
இருப்பினும் கடுகளவும் கூச்சமில்லாமல் இவை தங்களுடைய போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று சிதம்பரம் நகரில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டார்கள் மார்க்சிஸ்டுகள். அக்கட்சியின் வழக்குரைஞர் செந்தில்நாதன், தில்லைக்கோயில் வழக்குகள் பற்றி எழுதிய சிறுநூலில், வழக்கை நடத்திய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பெயரை ஒரு விவரம் என்ற அடிப்படையில் கூடப் பதிவு செய்யாமல் இருட்டடிப்பு செய்தார்.
இப்போது தீண்டாமைச் சுவர் விவகாரத்தில் திடீரென்று தலை நுழைத்திருக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள். அவர்களுக்கு உச்சநீதிமன்றத் தடை பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கோயிலை அரசு மேற்கொண்ட மறுகணமே தீட்சிதர்கள் அம்மாவின் காலில் விழுந்ததும், அம்மாவை சு.சாமி சந்தித்ததும், அவர்தான் இந்தத் தடையை வாங்கியவர் என்பதும் மார்க்சிஸ்டுகளுக்குத் தெரியுமா, தோழமைக் கட்சியாகிய தீட்சிதர்களை எதிர்த்து இப்படி ஒரு போராட்டம் நடத்துவதற்கு அம்மாவிடம் அவர்கள் அனுமதி பெற்றிருக்கிறார்களா என்பதெல்லாம் நமக்குத் தெரியவில்லை. “சுவரை அரசு இடிக்காவிட்டால் நாங்கள் இடிப்போம்” என்று சிதம்பரத்தில் வீரவசனம் பேசியிருக்கிறார்கள் மார்க்சிஸ்டு தலைவர்கள். ‘புனிதமான’ உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் மீது மார்க்சிஸ்டுகள் கடப்பாரையை இறக்கும் காட்சியையும், தீட்சிதப் பார்ப்பனர்களின் திருவுள்ளத்தைப் புண்படுத்தும் காட்சியையும் தரிசிப்பதற்கு நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
மார்க்சிஸ்டுகள் கதையை விடவும் மாணப்பெரியது கலைஞரின் வசனம். தில்லைக் கோயிலை அரசாங்கத்தின் பிடியில் கொண்டு வந்துவிட்டதாகப் பெருமைப் பட்டுக் கொள்கிறார் முதல்வர். ‘இந்தா பிடி’ என்று தீட்சிதரின் குடுமியை அரசின் கையில் கொடுத்தது நீதிபதி பானுமதியின் தீர்ப்பு. ஆனால் அதனைப் பிடிக்கின்ற தைரியம் அரசுக்கு இல்லை. இந்தக் கணம் வரை கோயில் நகை, சொத்துக் கணக்கு முதல் கொத்துச் சாவி வரை எதையும் தீட்சிதர்கள் அரசிடம் ஒப்படைக்கவில்லை. அதைக்கேட்கின்ற தைரியமும் இந்த அரசுக்கு இல்லை. தீர்ப்பை அமலாக்க மறுக்கும் குற்றத்துக்காக தீட்சிதர்களை உள்ளே போட்டிருக்கலாம். கோயிலுக்கு வெளியே தூக்கியும் போட்டிருக்கலாம். கலைஞரின் அரசோ தீட்சிதர்களுக்கு எதிராக ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கூடப் போடவில்லை. கோயிலுக்குள் அறநிலையத்துறை அலுவலகம் திறந்துவிட்டது. ஆனால் வீட்டுச் சொந்தக்காரனைக் கண்டு நடுங்கும் குடித்தனக்காரனைப் போல அங்கே குடியிருக்கிறார் நிர்வாக அதிகாரி.
கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்த மறுகணமே, தீண்டாமைச் சுவரை இடிக்கவேண்டுமென்று கோரினோம். உச்சநீதிமன்றம் தடை விதிக்கும் வரை அரசு அசைந்து கொடுக்கவில்லை. இப்போது ‘தடை உத்தரவைக் காட்டி ‘கேட்கக்கூடாததைக் கேட்கிறார்கள்’ என்கிறார் கருணாநிதி.
‘தமிழில் பாடி வழிபடவேண்டும்’ என்ற கோரிக்கை கேட்கக் கூடிய கோரிக்கைதானே! கலைஞர் ஆட்சி செய்த 2000 ஆண்டில் திருவாசகம் பாடிய குற்றத்துக்காகத்தானே ஆறுமுகசாமியை அடித்து வீசினார்கள் தீட்சிதர்கள். இச்செய்தியை பார்ப்பனப் பத்திரிகையான கல்கி அன்று பிரசுரித்த பின்னரும், ‘சூத்திர’ திமுக அரசு செய்தது என்ன?
அதன்பின் இக்கோரிக்கைக்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சிதம்பரத்தில் நடத்திய பொதுக்கூட்டங்களும், தமிழ் பாடச்சென்று கைதான நிகழ்வுகளும் எத்தனை? தமிழுக்கு ஆதரவாக உள்ளூர் திமுகவினர் ஒருவர்கூட குரல் எழுப்பியதில்லை என்பதே உண்மை. தமிழ் பாடும் போராட்டத்தின் வெற்றியைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திறக்கவிரும்பிய கல்வெட்டில் அம்மாவட்டத்தின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் பெயர் இல்லை என்ற காரணத்துக்காக, அக்கல்வெட்டையே இரவோடு இரவாகப் பிடுங்கி எறிந்தனர் கழககக் கண்மணிகள் என்பதும் உண்மை.
தமிழ் பாடுவதற்கான அரசாணையாக இருக்கட்டும், கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக இருக்கட்டும் இரண்டிலுமே திமுக அரசின் வலது கையை பிடித்து இழுத்து, கட்டை விரலில் மை தடவி உத்தரவில் கைநாட்டு போட வைத்தது மனித உரிமைப் பாதுகாப்பு மையம். மக்கள் மன்றத்தில் அதற்கான அரசியல் நிர்ப்பந்தத்தை உருவாக்கியவை ம.க.இ.க வும் அதன் தோழமை அமைப்புகளும். இதுதான் உண்மை. ‘கட்டைவிரல் கழக அரசுக்கு சொந்தம்’ என்கிறார் கலைஞர். அந்த உண்மையை நாம் மறுக்கமுடியுமா என்ன? எனினும் இத்தனை ஆண்டுகளில் திமுக அரசு தீட்சிதர்களுக்கு எதிராகத் தனது சுண்டுவிரலைக்கூட உயர்த்தியதில்லை என்பதற்கான ஆதாரங்களை நாம் அடுக்கமுடியும்.
1997 இல் திமுக அரசு கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமித்தபோது அவரது அலுவலகத்தையே நொறுக்கினார்கள் தீட்சிதர்கள். நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரை ‘உண்மையல்ல’ என்று தூக்கி வீசியது சிதம்பரம் போலீசு. “ஐயோ பாவம் வருமானமில்லாத தீட்சிதர்கள்” என்று சட்டமன்றத்தில் கண்ணீர் வடித்தார் காங்கிரசு எம்.எல்.ஏ அழகிரி. அடுத்த சில நாட்களில் தீட்சிதர்கள் போர்த்திய சால்வைக்குள் அடைக்கலமானார் கலைஞர்.
நகைக்களவு உள்ளிட்ட பல குற்றங்களை தீட்சிதர்கள் இழைத்திருக்கிறார்கள் என்று ஆதாரங்களுடன் கூறியது அறநிலையத்துறை. அவர்கள் மீது கிரிமினல் வழக்கு போட்டு உள்ளே தள்ளுமாறு தனது தீர்ப்பில் (1997) குறிப்பிட்டார் உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடாசலய்யா. உள்ளே தள்ளுவது இருக்கட்டும். திமுக அரசு தீட்சிதர்கள் மீது பெயருக்கு ஒரு திருட்டு கேஸ் கூடப் போடவில்லை.
கோயிலுக்குள் கடந்த 25 ஆண்டுகளில் நடந்த மர்ம மரணங்கள், பாலியல் வன்முறைகள், களவுகள் ஆகியவை குறித்த ஆதாரங்களைக் கொடுத்தும் சிதம்பரம் போலீசு வழக்கு பதிவு செய்ய மறுத்ததால், சிபிஐ விசாரணை கேட்டு மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உயர்நீதி மன்றத்தில் மனுச்செய்திருக்கிறது. இதனை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு. திமுக அரசின் வலது கை ஆறுமுகசாமிக்கு சன்மானம் கொடுத்து விளம்பரம் தேடுகிறது. இடது கையோ கள்ளத்தனமாக தீட்சிதர்களை அரவணைக்கிறது.
2008 இல் அரசாணைப்படி தமிழ் பாடச்சென்ற ஆறுமுகசாமியை மட்டுமின்றி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரையே தீட்சிதர்கள் தாக்கியதை தொலைக்காட்சியில் நாடே பார்த்தது. அந்தத் தீட்சிதர்கள் தனிச்சமையல் செய்து சாப்பிட சிறையில் அடுப்பும் அரிசியும் கொடுத்து அவர்களுடைய பார்ப்பனப் புனிதத்தை பேணியது சிறை நிர்வாகம்.
பல கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை தீட்சிதர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு திருட்டுத்தனமாக விற்றிருப்பதற்கான ஆவணங்களை தேடிப்பிடித்து புகார் கொடுத்தும் திமுக அரசு தீட்சிதர்கள் மீது வழக்கு போடவில்லை. அதற்கும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட பின்னர்தான் வேறு வழியில்லாமல் ஒரு வழக்கு பதிவு செய்தது போலீசு. இப்படி தீட்சிதர்களுக்கு எதிராகத் தனது சுண்டுவிரலைக் கூட அசைக்காத திமுக அரசு, கோயிலைக் கைப்பற்றி சாதனை படைத்துவிட்டதாகக் கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறது.
இப்போது தீட்சிதர்களே எதிர்பார்த்திராத கோணத்தில் அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார் கலைஞர். “பெரியபுராணம் கற்பனை, நந்தன் கதையே கட்டுக்கதை” என்று பகுத்தறிவு விளக்கம் சொல்லி, தீட்சிதர்களைப் பாதுகாப்பதற்கு பெரியாரைத் துணைக்கு அழைக்கிறார்.
பெரியபுராணத்தில் சிவபெருமான் எப்போதுமே அந்தணன் வடிவில் வருவதும், குயவனும், வேடனும், சலவைத்தொழிலாளியுமான நாயன்மார்கள் அந்தணர்களுக்கு பாதசேவை செய்வதும் கற்பனைகள் அல்ல, நிகழ்காலத்திலும் தொடரும் உண்மைகள். தீண்டாமை இன்றும் உண்மை. அந்த அளவில் நந்தன் கதையும் உண்மை. தீண்டாமைச் சுவரும் உண்மை.
பழங்கதை கிடக்கட்டும். புதுக்கதைக்கே வருவோம். 1880 களில் “தில்லைக் கோயிலின் கருவறைக்கு எதிரே, நந்தனாரின் ஆள் உயரச்சிலை இருந்ததாகவும், அங்கே அமர்ந்துதான் கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் கீர்த்தனை எழுதினார்” என்றும் உ.வே.சா பதிவு செய்திருக்கிறார். 1935 இல் அந்தச் சிலையை அங்கே பார்த்திருப்பதாகவும், பின்னர் 1943 இல் அதனைக் காணவில்லை என்றும் முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் பேராசிரியர் கொண்டல் சு மகாதேவனும் எழுதியிருக்கிறார்.
இது அய்யரே கூறியிருக்கும் உண்மை என்பதால் கலைஞர் தைரியமாகப் பேசலாம். ராமர் பாலத்தையோ தீண்டாமைச் சுவரையோ இடிப்பது ‘சாமி’ குத்தம் ஆகிவிடும் என்று அவர் அஞ்சக்கூடும். அழிவு வேலை என்று தயங்கவும் கூடும். சிலை வைப்பதென்பது ‘ஆக்கபூர்வமான’ வேலை மட்டுமின்றி கலைஞரின் மனதுக்கிசைந்த கலையும் அல்லவா? உளியின் ஓசையை அவர் உள்ளே எழுப்பட்டும். வெளியே, தீண்டாமைச் சுவரின் மீது கடப்பாரையின் இசையை நாம் எழுப்புவோம்.
நேர்மையானவர் என்ற அங்கீகாரத்தையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா சங்கரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது உத்தமர் கருணாநிதி அரசு. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி அவர் மீது ஏவப்பட்ட விசாரணை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டதால் ஆத்திரம் தலைக்கேறிப் போய், தலித் கிறித்தவரான உமாசங்கர், தலித் இந்து என்று போலிச்சான்றிதழ் கொடுத்து பதவிக்கு வந்துவிட்டாரெனக்கூறி அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறார் கருணாநிதி.
1995 இல் (ஜெ ஆட்சியில்) மதுரை மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிக்கொண்டு வந்தபோதுதான் உமாசங்கர் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஜெயலலிதா ஆட்சியின் ஊழலைச் சொல்லி, 1996 இல் ஆட்சியைப் பிடித்த கருணாநிதி, ஊழல் கண்காணிப்புத் துறையின் கூடுதல் ஆணையராக உமாசங்கரை நியமித்தார். ஜெ, அவரது அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழல்களை உமாசங்கர் வெளிக்கொணர்ந்த போதிலும், செல்வாக்குள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தது கருணாநிதி அரசு. வெறுப்புற்ற உமாசங்கர், தன்னை இப்பதவியிலிருந்து விடுவிக்குமாறு கோரியவுடனே, அவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
மே 2006 இல் எல்காட் என்ற அரசு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டதும், அதுவரை மைக்ரோசாப்ட் மென்பொருட்களைச் சார்ந்திருந்த அரசுத்துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து பில்கேட்ஸை வெளியேற்றி விட்டு, 2007 ஆம் ஆண்டு முதல் ‘லினக்ஸ்’ என்ற ஓபன் சோர்ஸ் (இலவச) மென்பொருளை அறிமுகப் படுத்தினார் உமாசங்கர்.
“மைக்ரோசாப்ட் ஆத்திரம் கொண்டால் நம் நாட்டின் மென்பொருள் துறையே தேங்கிவிடும் என்று கருதுவது அபத்தமானது… மைக்ரோசாப்ட் இல்லாமல் இந்தியா வாழ முடியும். முன்னேறவும் முடியும். இந்தியா என்ற மிகப்பெரிய சந்தையை இழப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குத்தான் பேரிழப்பு. மைக்ரோசாப்டிலிருந்து வெளியேறியதன் விளைவாக தமிழ்நாடு ஆண்டுக்கு 200 முதல் 500 கோடி வரை மிச்சமாக்க முடியும்” என டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகைக்கு அப்போது அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் உமாசங்கர். மைக்ரோசாப்டின் உயர் அதிகாரி ஒருவர் தமது மென்பொருள் தொகுப்பை 7000 ரூபாய்க்குத் தருவதாக பேரம் பேசினாரென்றும், ஓபன் சோர்ஸில் செலவே இல்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய மென்பொருளுக்கு நாங்கள் எதற்காக 7000 ரூபாய் செலவழிக்கவேண்டும் என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பியதாகவும் அப்பேட்டியில் கூறுகிறார் உமாசங்கர்.
எல்காட்டின் பொறுப்புக்கு உமாசங்கர் வருவதற்கு சில ஆண்டுகள் முன்னர், தியாகராச -செட்டியார் என்பவருக்குச் சொந்தமான ‘நியூ எரா டெக்னாலஜீஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து எல்காட் நிறுவனம், ‘எல்நெட்’ என்றொரு கூட்டுப்பங்கு நிறுவனத்தை உருவாக்கியிருந்தது. 24% பங்குகள் தியாகராச செட்டியாரிடமும், 26% பங்குகள் எல்காட்டிடமும், மீதமுள்ள 50% பங்குகள் பொதுமக்களிடமும் இருந்த இந்நிறுவனம், 2004 ஆம் ஆண்டில், ‘இ.டி.எல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்’ என்ற கட்டுமான நிறுவனத்தைத் தனது துணை நிறுவனமாக உருவாக்கியிருந்தது. சென்னையில் 18 இலட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.700 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (கட்டிடம்) ஒன்றை இந்நிறுவனம் உருவாக்கியிருந்தது. தமிழக அரசின் 26% பங்குகளையும் பொதுமக்களின் 50% பங்குகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனமும், அதன் 700 கோடி சொத்தும், 24% பங்குளை மட்டுமே வைத்திருந்த தியாகராச செட்டியாருக்கு மர்மமான முறையில் கைமாறியிருப்பதை உமாசங்கர் கண்டுபிடித்தார். “2008, ஜூலை 8 ஆம் தேதியன்று தரமணியில் உள்ள எல்நெட் நிறுவனத்தில் இவை தொடர்பான ஆவணங்களை நானே நேரடியாகத் தேடிக்கொண்டிருந்த போது, என்னுடைய பதவி பறிக்கப்பட்ட தகவல் வந்து சேர்ந்தது” என்று தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் உமாசங்கர்.
அடுத்து, சன் டிவி – கருணாநிதி மோதலின் தொடர்ச்சியாக, அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனின் நிர்வாக இயக்குநர் பதவியில் அக்டோபர் 2008 இல் நியமிக்கப்பட்டார் உமாசங்கர். அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை மிரட்டியதுடன், ரவுடிகளை வைத்து வயர்களையும் அறுத்தெறிந்தனர் மாறன் சகோதரர்கள். இவர்களுக்குத் துணை நின்றவர் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி. இது குறித்து பல புகார்கள் கொடுத்தும் போலீசு நடவடிக்கை எடுக்காததால், இவர்களைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்கவேண்டும் என்றும், சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்றும் உமாசங்கர் அரசுக்கு சிபாரிசு செய்திருக்கிறார். உடனே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏவப்படுகிறது. அந்த ஒழுங்கு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் இடைக்காலத்தடை விதித்ததனால், 2009, சனவரி 23 ஆம் தேதியன்று சிறுசேமிப்புத்துறைக்குத் தூக்கியடிக்கப்பட்டார் உமாசங்கர். இவற்றின் தொடர்ச்சியாக இப்போது வந்திருப்பதுதான் ஊழல் வழக்கும் தற்காலிகப் பணிநீக்கமும்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் விதிமுறைகள்
குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் ஊழல் தடுப்புச் சட்டத்துக்கும் விரோதமாக, திட்டமிட்டே வடிவமைக்கப்பட்டிருப்பதை அம்பலமாக்கியிருக்கிறார் உமாசங்கர்.
“ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் போன்றோர் மீது ஊழல் குற்றத்துக்காக யாரேனும் வழக்கு தொடரவேண்டுமானால், அதற்கு அரசின் முன் அனுமதி தேவை” என்று கூறும் இவ்விதிமுறை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையே கேள்விக்குள்ளாக்குவதோடு, ஊழல் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் பயன்படுகிறது என்கிறார் உமாசங்கர். அனுமதி அளிக்கும் அதிகாரம் முதல்வர் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய குழுவிடம் இருப்பதால், நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கும், ஊழல் அதிகாரிகளைத் தப்பவைப்பதற்கும் இது பயன்படுத்தப் படுகிறது என்பதையும் ஆதாரங்களுடன் திரைகிழித்திருக்கிறார் உமாசங்கர்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் கூடுதல் இயக்குநராக 1996 முதல் தான் பணியாற்றிய காலத்தில், கல் குவாரி ஊழல் (1000 கோடி ரூபாய்), சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேசன் தனியார்மயமாக்கல் ஊழல் (200 கோடி ரூபாய்), தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஊழல் (சென்னையின் மையப்பகுதியில் அமைந்த 300 வீடுகள்) போன்ற பல ஊழல் வழக்குகளில் அதிகாரிகள் மீது வழக்கே தொடர முடியாததற்குக் காரணம் முதல்வர் தலைமையிலான குழுவின் அனுமதி கிடைக்காததுதான். அதுமட்டுமல்ல, பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, மேற்படி முதல்வர் குழுவின் அனுமதி கிடைக்காததால் தண்டனையிலிருந்து தப்பிவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி மாலதி என்பவர்தான் தற்போது ஊழல் தடுப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்ற கேலிக்கூத்தையும் போட்டுடைத்திருக்கிறார் உமாசங்கர்.
அவருடைய அனுபவத்தைப் படிக்கும்போதே ரத்தம் கொதிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்த போதிலும் எல்லா அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், எத்தனை முறை பந்தாடப்பட்டும் தளராத அவரது மன உறுதியும் வியக்கத்தக்கவை. அதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது. அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சும் இந்தக் காலத்தில், அதிகாரவர்க்கக் கோட்டையையும் ஆட்டமுடியும் என்று காட்டியிருக்கிறார் உமாசங்கர். அவ்வகையில் அவரது அனுபவம் ஒரு நேர்மறை எடுத்துக்காட்டு. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகி மக்களுக்குத் தொண்டாற்றப் போவதாகக் கூறுவோரின் மடமையையும், ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கத்தை, மக்கள் தொண்டாற்றும்படி மாற்றியமைத்துவிட முடியும் என்று கூறுவோரின் கயமையையும் புரிந்து கொள்வதற்கு, உமாசங்கரின் அனுபவம் ஒரு எதிர்மறை எடுத்துக்காட்டு.
சமீபத்தில் சாதி மறுப்பு மறுமணம் ஒன்றை ம.க.இ.க.வின் சார்பில் நடத்தி வைத்தோம். இரு வீட்டாருக்கும் இதில் உடன்பாடு இல்லை. எனினும் நண்பர்களும், தோழர்களும், ஆதரவு காட்டும் ஒரு சில உறவினர்களும் திரண்டிருக்க மணவிழா இனிதே நடந்தேறியது.
தாலி, சடங்கு, வரதட்சிணை, சாதி ஆகியவற்றை மறுத்து மணங்கள், மறுமணங்கள் பலவற்றை ம.க.இ.க. நடத்தியிருந்தபோதும், கண்ணீர்க் கடலைக் கடக்காமல் அநேகமாக எதுவும் “இனிதே’ கரையேறுவதில்லை. கண்ணீர், முறையீடுகள், தற்கொலை முயற்சிகள் ஆகிய அனைத்து ஆயுதங்களும் இந்த மணமக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டன. சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் அரிவாள் தூக்கும் சந்தர்ப்பங்களைக் காட்டிலும் தூக்கு மேடையில் நிற்கும்போது தான் அபாயகரமாகக் காட்சியளிக்கின்றன. பெற்றோரும் உற்றாரும் ஆதிக்கம் செய்யும் நிலையில் இருக்கும் போது நம் உடலை மட்டுமே கட்டுப்படுத்துகிறார்கள். அவல நிலையிலோ உள்ளத்தைக் “கொள்ளை’ கொண்டு விடுகிறார்கள். சாதி, மதத்தை மறுத்து பல காதல் திருமணங்கள் சமூகத்தில் நடக்காமலில்லை. அவர்களும் இத்தகைய பிரச்சினைகளைச் சந்திக்காமலும் இல்லை. இருப்பினும் உணர்ச்சிபூர்வமான முடிவுக்கும், உணர்வுபூர்வமான தெரிவுக்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது.
காதல் திருமணங்கள் பலவற்றின் “புரட்சி’ மணமேடையுடன் முடிவடைகிறது. “கடன் வாங்காதே, சிக்கனமாக இரு, சேமித்துக் கொள், வீடு கட்டு, அளவோடு பெற்றுக் கொள், பிள்ளைகளைப் பெரிய படிப்பு படிக்க வை, இருந்தாலும் வயதான காலத்தில் பிள்ளைகளை நம்பியிராதே” என்ற வகையில் வாழ்த்துரை வழங்கப்பட்ட மணமக்கள் சராசரிகளின் உலகத்தில் சங்கமமாகிறார்கள். புரட்சிகர மணவிழாவிலோ சரியாகச் சொன்னால் மணமேடையிலிருந்துதான் “புரட்சி’ துவங்குகிறது. “தன் வீடு, தன் பிள்ளை, தன் சுற்றம்” என்ற இழிந்த வாழ்க்கை வாழமாட்டோம் என்றும், மக்கள் நலனுக்கும், சமூக விடுதலைக்கும் உளப்பூர்வமாகப் பாடுபடுவோம்” என்றும் மணமக்கள் உறுதியேற்கிறார்கள். இந்த உறுதிமொழியை அமல்படுத்த முனையும்போது குடும்பத்தின் “அமைதி’ கெடுகிறது; அற்ப விசயங்கள் என்று இதுகாறும் கருதப்பட்டவையெல்லாம் அன்றாடத் தலைவலிகளாகின்றன.
கணவன் மனைவியிடையேயான “புதிய’ வேலைப் பிரிவினை, மனைவி பொதுவாழ்வில் ஈடுபடுவதால் “இயல்பாகவே’ பல சங்கடங்களுக்கு உள்ளாகும் கணவன், “இயல்பாகவே’ பொதுவாழ்வில் ஈடுபடத் தயங்கும் மனைவி, அவ்வாறு ஈடுபட மறுப்பது அவள் உரிமையா, ஈடுபடுத்துவது தன் கடமையா என்று தடுமாறும் கணவன், இதற்கிடையில் மகிழ்ச்சியையும், புதிய தலைவலிகளையும் ஒரே நேரத்தில் கொண்டு வரும் குழந்தை, இந்த எதிர்நீச்சலின் வேதனையை தொடர்கதை படிக்கும் ஆர்வத்துடன் கவனிக்கும் அண்டை வீட்டுக்காரர்கள்! தெரிந்த தீர்வுகளை அமல்படுத்துவதில் தயக்கம், தீர்வு காணவேண்டிய பிரச்சினைகளை எண்ணியோ ஆயாசம்! மொத்தத்தில், மகிழ்ச்சிக்காகத் தெரிவு செய்த மணவாழ்க்கை மகிழ்ச்சியையே காவு கேட்பது போலத் தோன்றுகிறது.
சாதி, மதம், ஆணாதிக்கம், சுயநலம், பிழைப்புவாதம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டுமென்பதைக் கொள்கையளவில் கூட ஏற்க மறுக்கும் நபர்களைப் பற்றி நாம் இப்போது பேசவில்லை. முற்போக்கான புதிய ஒழுக்க விழுமியங்களை சமூகம் முழுமைக்கும் பரப்ப வேண்டும் என்பதைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டவர்களைப் பற்றித்தான் பேசுகிறோம். ஏனென்றால் தங்கள் கொள்கை, நடைமுறைக்கு உதவாது என்பதைத் தம் சொந்த அனுபவத்திலிருந்தே நிரூபிக்கும் “ஆற்றல்’ இவர்களுக்குத்தான் உண்டு.
“மகிழ்ச்சி என்றால் என்ன?” என்ற கேள்விக்கு போராட்டம் என்று பதிலளித்தார் கார்ல் மார்க்ஸ். கருத்தியல் துறையிலும், அரசியல் துறையிலுயம் அவர் நடத்திய போராட்டங்கள் ஒருபுறமிருக்கட்டும். குடும்ப வாழ்வில் அவர் சந்தித்த வறுமை, பட்டினி, உடல்நலக் கேடு, குழந்தையின் மரணம் போன்ற பல துன்பங்கள் “போராட்டம்’ என்ற அந்தச் சொல்லுக்குள் உறைந்திருக்கின்றன. போராட்டமே வாழ்க்கை என்றெல்லாம் பேசினாலும், போராட்டம் என்ற சொல் மகிழ்ச்சியின் எதிர்ச்சொல்லாகவே நடைமுறையில் பொருள் கொள்ளப்படுகிறது. மகிழ்ச்சிக்குத் தேவையான இன்ப நுகர்ச்சி அல்லது பயன்பாடு அதில் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
விஞ்ஞானி டார்வினின் ஒரு அனுபவத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது. தனது ஆய்வுகளின் போது ஒரு புராதனப் பழங்குடி இனத்தைச் சந்தித்தார் டார்வின். வழக்கமாக மனித மாமிசம் தின்னாத அவர்கள் பஞ்ச காலத்தில் மட்டும் தங்கள் இனத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த கிழவிகளையே கொன்று தின்கிறார்கள். தாங்கள் தின்றது மட்டுமின்றி, தங்கள் வேட்டை நாய்களின் பசியைத் தீர்ப்பதற்காகவும் கிழவிகளைக் கொன்றார்கள். அதிர்ச்சியுற்ற டார்வின்”நாய்க்கு மனிதனைத் தீனியாக்குகிறீர்களே” என்று கேட்டபோது அவர்கள் இரண்டே வரிகளில் பதில் சொன்னார்கள்: “நாய்கள் வேட்டைக்குப் பயன்படும்; கிழவிகள் பயன்பட மாட்டார்கள்.” தன்னைக் கொல்ல வரும் எதிரியாகவோ அல்லது தன்னால் கொன்று தின்னப்பட வேண்டிய உணவாகவோ சக மனிதனைக் கண்டு கொண்டிருந்த விலங்கு நிலையிலிருந்து, மனிதன் உருவாகிக் கொண்டிருந்த காலம் அது. தனது பசி, தாகம், உறக்கம், வேட்கை ஆகியவற்றைத் தீர்த்துக் கொள்வதற்காக எதையும் செய்யலாம் என்றெண்ணிய காலம் அது. இதைத்தான் செய்யலாமென்ற ஒழுக்கம், மதிப்பீடுகள் போன்றவை தோன்றாத காலம்.
இன்று நாம் வெகுதூரம் வந்து விட்டோம். எனினும் நுகர்வும் பயன்பாடும் மட்டுமே மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிறது என்ற “நுகர்வியல் பண்பாடு’தான் இன்று கோலோச்சுகிறது. உண்பதிலும், உடுத்துவதிலும், அழகியல் ரசனையிலும் இன்னபிற நடவடிக்கைகளிலும், பல அன்றாட மகிழ்ச்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவைதான் அறுதியான மகிழ்ச்சிகளா?
பிற மக்களின் துன்பங்கள், ஆசைகள், விருப்பங்கள் ஆகியவை பற்றி அக்கறையில்லாமல், தனது மகிழ்ச்சி ஒன்றே லட்சியமாக இருக்க எவ்வளவுதான் ஒரு மனிதன் முயன்றாலும், அவை அவனது வாழ்க்கைக்குள் தலைநுழைத்தே தீரும். எந்த வம்பும் வேண்டாமென்று எவ்வளவுதான் நடைபாதையில் ஒதுங்கி, ஒதுங்கிச் சென்றாலும், எங்கிருந்தோ பறந்துவரும் போராட்டக்காரர்களின் கல் ஒன்று தலையைப் பிளக்கும். “சமுதாயத்தில் இருந்து கொண்டே அதிலிருந்து சுதந்திரமாக இருக்க முடியாது” என்ற உண்மையை நேரடியாக மண்டையில் உறைக்க வைக்கும். உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருப்பது, அந்த லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஏற்படும் துன்பங்களை அவை உடல்ரீதியானவையோ, உளரீதியானவையோ சந்திப்பது, இரண்டிலொரு முடிவு காண வேண்டிய தடுமாற்றம் அளிக்கும் தருணங்களில், நாம் கொண்டிருக்கும் கொள்கைக்கு நேர்மையாக நடந்து கொள்வது இவைதான் மகிழ்ச்சியின் தருணங்கள்.
தனது பலவீனங்கள், அற்ப ஆசைகள், பழக்கங்கள், சுயநலம் ஆகியவற்றுக்கும் தான் கொண்டிருக்கும் லட்சியம் கோருகின்ற மதிப்பீடுகளுக்குமிடையே முரண்பாடு வரும் சந்தர்ப்பங்களில் அவற்றை வென்று வெளிக்கிளம்பும் ஆற்றலில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. “மகிழ்ச்சி என்பது போராட்டம்” என்று கூறுவதன் பொருள் இதுதான்.
ஆனால் சமூகப் பணிகளில் மனமுவந்து ஈடுபடுவதற்கு “மகிழ்ச்சியான’ குடும்பம் ஒரு முன் நிபந்தனை என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் மகிழ்ச்சி குறித்த உங்கள் கண்ணோட்டமும் குடும்ப உறுப்பினர்களின் கண்ணோட்டமும் ஒத்துப் போகாதவரை குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது; அல்லது உங்களிடம் மகிழ்ச்சி இருக்காது. எதைப்பற்றியும் கவலைப்படாத எப்போதும் மகிழ்ச்சி ததும்பும் குடும்பம் ஹார்லிக்ஸ் குடும்பம் மட்டும்தான். இத்தகைய குடும்பங்களை உருவாக்குவது நமது நோக்கமல்ல என்பதுடன், இத்தகைய “மகிழ்ச் சியை’ ஒழித்துக் கட்டுவதுதான் நம் நோக்கம் என்பதையும் தெளிவுபடுத்தி விடுவோம். சமூக மாற்றத்தையும் புரட்சியையும் நேசிக்கும் ஒரு நபர், சமூக உணர்வற்றும் சமூக விரோதமாகவும் சிந்திக்கும் குடும்ப உறுப்பினர்களை எங்ஙனம் நேசிக்க இயலும்? லட்சியப் பிடிப்பின் அடிப்படையில் உணர்வுபூர்வமாகத் தெரிவு செய்து கொள்ளும் உறவுகளைக் காட்டிலும் இத்தகைய இரத்த உறவுகள் மேன்மையாகி விடுவதில்லை. அவை தங்கள் கீழ்மையை அவ்வப்போது நிரூபிக்காமலும் இருப்பதில்லை. நிலாவைக் காட்டித் தன் பிள்ளைக்குச் சோ×ட்டும் தாய்மை, பசியுடனும் ஏக்கத்துடனும், அதைப் பார்க்கும் தெருப் பிள்ளையைக் கண்டு முகம் திருப்பிக் கொள்கிறதே, அந்த இரக்கமின்மையின் அருவெறுப்பைக் கொண்டாடவா முடியும்?
ஆளும் வர்க்கங்களை முறியடிக்க ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் போது, அவர்களது பண்பாட்டை கண்ணீர்கூடச் சிந்தாமல் முறியடித்து விட முடியுமா என்ன? சரி. கண்ணீர் சிந்தலாம்; ரத்தமும் சிந்தலாம்; ஆனால் எத்தனைக் காலம்? “என்றோ நடக்கக் கூடிய ஒரு புரட்சிக்காக இன்றைய இளமையையும், வாழ்க்கையையும் பலிகொடுக்கிறோமே என்று உங்கள் தோழர்கள் கருதுவதில்லையா?” என்று ஒரு நிருபர் என்னிடம் கேட்டார். இது அந்த நிருபரின் கேள்வி மட்டுமல்ல; கொள்கையில் உடன்பாடும் அதை நடைமுறைப்படுத்துவதில் “சில சிக்கல்களும்’ உடைய பலரின் கேள்வியும் இதுதான். “ரயில் வரும்போது தொத்திக் கொள்ளலாம்’ என்பதைப் போல “புரட்சி வரும்போது கூட்டத்தோடு சேர்ந்து விடலாம்’ என்று கணக்குப் போட்டு அதுவரை ஒதுங்கியிருக்கும் மதியூகிகளின் மனதிலிருக்கும் கேள்வியும் இதுதான். புரட்சியும், சமூக மாற்றமும் என்று நடக்கும் என்ற தேதி உத்தேசமாகவாவது தெரிந்துவிட்டால், அந்தத் தேதிக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் இன்று துன்பங்களைச் சந்திக்கத் தயாராகலாம் என்பது அவர்கள் கணக்கு. தேர்வுக்குப் பின் வரவிருக்கும் விடுமுறைக் காலத்தின் இன்பத்தை எண்ணியபடியே, கண்விழித்துப் படிக்கும் மாணவனைப் போன்றது இவர்களது சிந்தனை.
போராட்டம் என்பது துன்பம் அது முடிந்தபின் இன்பம் என்ற கண்ணோட்டத்திற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை. அப்படியானால் நிச்சயமில்லாத எதிர்கால மகிழ்ச்சிக்காக, உயிர்த் துடிப்புள்ள நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை இழக்க வேண்டுமா? யாரோ சில அதிர்ஷ்டசாலிகள் (அதாவது நம்முடைய சந்ததியினர்) நோகாமல் வாழ்வதற்காக நாம் துன்புற வேண்டுமா? இது அவர்களுடைய அடுத்த கேள்வி. “நம்முடைய சந்ததிக்காக’ என்றால் கேள்வி எழுப்புபவர்கள் “தம்முடைய சந்ததிக்காக’ என்று வரும்போது கேள்வி எழுப்புவதில்லை. தன்பிள்ளைக்காகப் பட்டினி கிடப்பதை ஒரு தாய் துன்பமாகக் கருதுவதில்லை; தன் மகனைப் படிக்க வைப்பதற்காக அதிகப்படியான நேரம் உழைக்க தந்தை சுணங்குவதில்லை. அவையெல்லாம் இயல்பானவை. துன்பமான இன்பங்கள்.
சமூகத்திற்காக எனும்பொழுது ஒவ்வொரு இழப்பும் துன்பம் தருகிறது. நிகழ்காலம் எதிர்காலம் என்ற தத்துவ விசாரமெல்லாம் வருகிறது. “பலியிடுவதற்கு’ ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையும், இழப்பதற்கு ஒரு “உயிர்த்துடிப்புள்ள’ நிகழ்காலமும் கிடைக்கப்பெறாத பெரும்பான்மை மக்களின் கண்ணோட்டத்திலிருந்து பரிசீலிக்கும்போதுதான் இந்த அற்பத்தனத்தின் முழுப் பரிமாணத்தையும் புரிந்து கொள்ள முடியும். அந்தப் பெரும்பான்மை மக்களுக்கு, தங்கள் உழைப்பின் பயனைப் பறிகொடுத்த மக்களுக்கு. உழைப்பே இல்லாமல் “பயன்’ அளிக்கும் பரலோகத்தை வாக்குறுதியாகத் தருகிறது மதம். உழைப்பு கிடையாது; நாள் முழுவதும் ஓய்வு. மது, மங்கை, களியாட்டம், உல்லாசம்…. இன்னபிற, சுருங்கக் கூறின், உழைப்பின் பயனைத் திருடும் ஆளும் வர்க்கங்கள் பூவுலகில் எதை அனுபவிக்கிறார்களோ, அந்தச் சிற்றின்பங்கள் அனைத்தும் உழைக்கும் மக்களுக்கு பரலோகத்தில் உத்தரவாதம் செய்யப்படுகிறது பேரின்பம் என்ற பெயரில். எனினும், பரலோகத்தை உடனடி லாட்டரி முறியடித்து விட்டது. கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் சொர்க்கம், கண்ணுக்கெட்டாத தொலைவில் உள்ள பரலோகத்தை ஒழித்துக் கட்டியதில் வியப்பில்லை.
ஆனால் கம்யூனிசம் உழைப்பின்றி உல்லாசம் தரும் பரலோகமுமல்ல; தேதி சொல்லி குலுக்கல் நடத்தும் பம்பர் பரிசுச் சீட்டும் அல்ல. உழைப்பின் பயனை உறுதி செய்வது பொதுவுடைமை; உழைப்பை துன்பமாகவும், ஓய்வை இன்பமாகவும் கருதும் நிலை மாற்றி உழைப்பையே இன்பமாக்கும் வாழ்க்கை நெறிதான் பொதுவுடைமை. எனவே, இன்று போராட்டம், நாளை ஓய்வு என்ற இன்பக் கனவு அபத்தமானது. வெட்டியெடுத்துத் துண்டாக நிறுத்தப்பட்ட நிகழ்காலம் என்று ஒன்று இல்லை. கடந்த காலம் தோற்றுவிக்கும் உணர்ச்சிகள் நெஞ்சில் வாழும்வரை அது இறந்தகாலமாகி விடுவதில்லை; எதிர்காலம் குறித்த சிந்தனைகள் தலையில் தோன்றும்வரை அது வெறும் கனவாகி விடுவதில்லை. இவையிரண்டையும் சுமந்து முன்செல்லும் வாழ்க்கைதான் நிகழ்காலம். இதை விளங்கிக் கொண்ட முன்னணியாளர்கள் தங்கள் லட்சியத்திற்காகக் கொடுக்க வேண்டியிருக்கும் “விலை’தான் துன்பம், தியாகம். இது நோக்கமற்ற ஒழுக்கவாதமல்ல; இது தான் வாழ்க்கை. இத்தகைய இடைவிடாத போராட்டங்களினூடாகத்தான் மனித குலம் தனது வாழ்க்கையையும், மதிப்பீடுகளையும், பண்பாட்டையும் செழுமைப்படுத்திக் கொள்கிறது; உன்னதமாக்கிக் கொள்கிறது.
அடுத்த கணமும் எதிர்காலம்தான்; அடுத்த நூற்றாண்டும் எதிர்காலம்தான். எனவே எதிர்காலத்திற்கெதிராக நிகழ்காலத்தை நிறுத்துபவர்கள், புரியும்படி சொன்னால், கடைந்தெடுத்த சுயநலவாதிகள் அல்லது ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள். போராட்டமே மகிழ்ச்சி என்று புரிந்து கொண்டாலும், தங்கள் வாழ்க்கையை அவ்வாறு தகவமைத்துக் கொள்ள முடியாததால் வருந்துபவர்கள் இருக்கிறார்கள்; குற்றவுணர்வுக்கு ஆட்படுபவர்கள் இருக்கிறார்கள். “தன்னால் முடியாததால் யாராலும் முடியாது” என்று பிரகடனம்செய்யும் “தத்துவஞானி’களும் இருக்கிறார்கள். அறிவும், புலமையும் கொண்ட என்னாலேயே கேளிக்கைகளைக் கைவிட முடியாதபோது, குடும்பத்தின் எதிர்காலம் குறித்த கவலையிலிருந்து விடுபட முடியாதபோது, பொது வாழ்வில் குடும்பத்தை ஈடுபடுத்த முடியாதபோது, மற்றவர்களால் எப்படி முடியும் என்று மடக்குகிறார்கள். அத்தகைய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் “வாய்ப்புக் கிடைக்காததால் யோக்கியர்கள்’ அல்லது இரட்டைவேடம் போடுவோர் என்று தூற்றுகிறார்கள்.
முரணற்ற வாழ்க்கை வாழ முயற்சி செய்வோரை வறட்டுவாதிகள் என்றோ, ஒழுக்க விதிகளுக்கு அஞ்சி நடக்கும் முட்டாள்கள் என்றோ ஏளனம் செய்கிறார்கள். போராட்ட வாழ்க்கையில் யாரேனும் தடுமாறுவதாகவோ, தடுக்கி விழுந்துவிட்டதாகவோ தகவல் கிடைத்தால் இவர்கள் உடனே அங்கு தோன்றிவிடுகிறார்கள்; “பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்” என்று ஆறுதல் சொல்கிறார்கள். “அப்பவே சொன்னேனே கேட்டியா” என்று கடிந்து கொள்கிறார்கள். போராட்ட வாழ்க்கையில் சோர்வுற்றவர்களையும், சலிப்புற்றவர்களையும், தள்ளாடுபவர்களையும், சறுக்கி விழுந்தவர்களையும், புறமுதுகு காட்டியவர்களையும் காணும்போதெல்லாம் தங்கள் “கட்சி’ வென்று வருவதை எண்ணிக் குதூகலிக்கிறார்கள். அதேநேரத்தில் ரசியாவிலும், சீனாவிலும் சோசலிசம் தோற்றுப்போனது குறித்தும், இந்தியப் புரட்சி முன்னேறாதது குறித்தும் பெரிதும் வருந்துபவர்களும் இவர்கள்தான் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால் கவலை தோய்ந்த அந்தக் கண்களுக்கு உள்ளே ஒளிந்திருக்கும் குதூகலத்தை எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தாலும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது.
கடந்த காலத்தின் ஒழுக்க நெறிகளையும், காலாவதியாகிப் போன மதிப்பீடுகளையும் சேர்த்துச் சுமந்து கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தில் புதிய விழுமியங்களுக்காகப் போராடுவதும் அதையே வாழ்க்கையாகக் கொள்வதும் வேடிக்கையல்ல. கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ள நம்பிக்கைகளை “மலர்ச் சாடியில் நட்ட இலவம் பஞ்சு மரம்” என்று கேலி செய்யும் அறிவுத்துறையினர் புரட்சிக்கு ஏற்படும் இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும் கண்டு ஆர்ப்பரித்து அகமகிழ்வதைச் சுட்டிக் காட்டுகிறார், லெனின்:
“இயற்கையிலும் சமூக வாழ்விலும் இப்படித்தான். புதியதன் இளங்குருத்துக்களின் வலுவின்மையைக் கேலி செய்தலும், அறிவுத்துறையினரின் கீழ்த்தரமான ஐயுறவு மனப்பான்மையும்… சோசலிசத்துக்கெதிராய் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதே ஆகும். புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்… அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம். இவற்றுள் நிலைத்து வாழ்ந்தவற்றை வாழ்க்கை தெரிந்தெடுத்துக் கொள்ளும். மேக நோயை ஒழித்துக் கட்டும் பொருட்டு 605 மருந்துத் தயாரிப்புகளை சோதித்துப் பார்த்து குறிப்பிட்ட தேவைகளுக்கு உகந்தபடி 606வது தயாரிப்பை உருவாக்கும் பொறுமை ஒரு ஜப்பானிய விஞ்ஞானிக்கு இருந்ததென்றால், இதனினும் கடினமான ஒரு பணிக்கு, முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவது என்ற பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்புவோர்… ஆயிரக்கணக்கில் புதிய போராட்ட முறைகளையும், வழிகளையும், ஆயுதங்களையும் சோதித்துப் பார்க்கும் விடாமுயற்சி உடையோராய் இருக்க வேண்டும் அல்லவா?”
இருக்க வேண்டும். அத்தகைய முயற்சிகளில் மகிழ்ச்சியும் காண வேண்டும். தான் கொண்டிருக்கும் சமூகப்பொறுப்புணர்வின் அளவுக்கே ஒரு மனிதன் சுதந்திரமானவனாக இருக்கவியலும். சமூகப் பொறுப்பின்மையை (சுயநலத்தை) சுதந்திரமாகவும், பொறுப்புணர்வை கட்டுப்பாடாகவும் (சுதந்திரமின்மை) பார்க்கும் தலைகீழ்ப் பார்வைக்கு இது பிடிபடாத புதிராகத்தானிருக்கும். கம்யூனிச ஒழுக்க நெறிகளும், அதனடிப்படையிலான விதிமுறைகளும் மகிழ்ச்சியாக வாழும் உரிமைக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளாகத் தான் இத்தகைய பேர்வழிகளுக்குத் தோன்றும். எனினும் புரட்சியின் ஒழுக்க நெறிகளும், விழுமியங்களும் விதிமுறைகளால் வார்த்தெடுக்கப்படுபவை அல்ல. அவை ஒரே மனிதனுக்குள் உறைந்து கிடப்பவையும் அல்ல. மாறாக, அவை வர்க்கப் போராட்டமெனும் உலைக்களத்தில் உருவாக்கப்படுபவை, சுதந்திரமான மனிதர்களின் தனித்தன்மையினால் வளர்த்தெடுக்கப்படுபவை.
போராட்டமே மகிழ்ச்சி என்று வாழும் போராளிகள் ஒவ்வொருவரும் ஒரு கலைஞனைப் போல வாழ்க்கையின் புதிய பரிமாணங்களை, புதிய அழகுகளைப் படைத்துக் காட்டுகிறார்கள். தூக்குமேடையில் உயிர் துறந்த போராளிகள் ஏராளம். பகத்சிங்கும் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டிருந்தான். கால்களின் கீழிருந்த பலகை இழுக்கப்படுவதற்குமுன் அவனுடைய கடைசி ஆசையைக் கேட்டபோது, “என் கண்களை மறைத்திருக்கும் கருப்புத் துணியை அவிழ்த்து விடு; என் தாய் மண்ணைப் பார்த்தபடி நான் மறைகிறேன்” என்றான்.
அது மரணத்திற்கு முன் அவன் தந்த படைப்பு; அவன் சொன்ன கவிதை.
_______________________________________________
மருதையன், ஆகஸ்டு 1997, புதிய கலாச்சாரம்
_______________________________________________
மராட்டிய மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பையாலால் போட்மாங்கே குடும்பத்தினர் 2006ஆம் ஆண்டு, செப்டம்பர் மாத இறுதியில் சாதி இந்துக்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தை வாசகர்கள் மறந்திருக்க முடியாது.
கயர்லாஞ்சி கிராமத்தில் போட்மாங்கே குடும்பத்தினருக்கு வறண்டு போன ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் தங்களுக்குத் தேவைப்படும் வசதியோடு ஒரு வீடு கட்டிக் கொள்ள பையாலால் விரும்பினார். ஒரு தாழ்த்தப்பட்டவன் கல் வைத்த வீடு கட்டுவதை விரும்பாத அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி வெறியர்கள், பையாலால் குடும்பத்தின் நியாயமான விருப்பத்தை வன்மத்துடன் எதிர்த்து வந்தனர். மேலும், பையாலாலுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்து இரண்டு ஏக்கர் நிலத்தைக் கிராமத்தின் பொதுப் பாதைக்குத் தேவை என வஞ்சகமாகப் பறித்துக் கொண்டனர்.
அபகரிக்கப்பட்ட அந்த நிலம், பையாலாலின் நிலத்தையொட்டியுள்ள ‘பிற்படுத்தப்பட்ட’ சாதியைச் சேர்ந்த அக்கிராமத் தலைவரின் நிலத்திற்குள் டிராக்டர்கள், வண்டிகள் சென்று வருவதற்கான பாதையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சட்ட விரோதமான நில ஆக்கிரமிப்பை பையாலாலின் மனைவி சுரேகா எதிர்த்து வந்தார்.
கயர்லாஞ்சிக்கு அருகில் அமைந்துள்ள துசாலா கிராமத்தில் வசிக்கும் சுரேகாவின் ஒன்றுவிட்ட சகோதரர்களான சித்தார்தும், ராஜேந்திராவும், அந்த இரண்டு ஏக்கர் நிலத்தை சுரேகாவிற்குப் பெற்றுத் தரும் நோக்கத்தோடு, கயர்லாஞ்சியைச் சேர்ந்த ஆதிக்க சாதி பிரமுகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்கச் சாதி வெறியர்கள் பிரச்சினையைத் திசைதிருப்பும் நோக்கில், சுரேகாவுக்கும் அவருக்காகப் பரிந்து பேசிய சித்தார்த்துக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும்; சுரேகா கள்ளச் சாராய வியாபாரி என்றும் கதை கட்டினர்.
கயர்லாஞ்சிக்கு 03.09.2006 அன்று நியாயம் கேட்க வந்த சித்தார்தை, ஆதிக்க சாதி வெறியர்கள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் துரத்தியடித்துத் தாக்கினர். சாதிவெறியோடு நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 29.09.2006 அன்று 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மகாதி தாலுகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அன்றே (29.09.2006) பிணையிலும் விடுவிக்கப்பட்டனர். இதற்குப் பழிவாங்கும் நோக்கத்தோடுதான் கயர்லாஞ்சி வன்கொடுமை தாக்குதல் நடந்தது.
விடுவிக்கப்பட்ட 12 பேரும் தம் உறவினர்கள் சுமார் 40 பேருடன் சித்தார்தைத் தேடி துசாலாவுக்குச் சென்றனர். இவர்கள் வரும் செய்தியைக் கேட்ட சித்தார்த்தும் ராஜேந்திராவும் ஓடி ஒளிந்து கொண்டனர். அவர்கள் இருவரையும் காணாத கூட்டம் அடுத்து கயர்லாஞ்சி நோக்கிச் சென்றது. அக்கூட்டத்துடன் கயர்லாஞ்சியைச் சேர்ந்த ஆதிக்க சாதி இந்துக்களும் சேர்ந்து கொண்டு பையாலாலின் குடிசையை நோக்கிப் பயங்கர ஆயுதங்களுடன் சென்றனர். குடிசைக்குள் பையாலாலின் மனைவியும் குழந்தைகளும் மட்டுமே இருந்தனர்.
குடிசைக்குள் புகுந்த ஆதிக்க சாதிவெறியர்கள், அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்தி, கையோடு கொண்டு வந்திருந்த ஆயுதங்களால் அவர்களைக் கொடூரமாகத் தாக்கினர். அதோடு அந்த நால்வரையும் தெருத்தெருவாக இழுத்துச் சென்றனர். ஊர்ப் பொது இடத்திற்குக் கொண்டு வந்து பையாலாலின் மனைவியையும், மகளையும் கூட்டத்திலிருந்த எல்லா ஆண்களும் மாறிமாறிப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். சூழ்ந்து நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்களுள் ஒருவரும் இந்த வன்செயலைக் கண்டிக்கவுமில்லை, தடுக்கவும் முற்படவில்லை.
பிறகு, ஒரு கொடூரமான செயல் அரங்கேறியது. தாயையும் தங்கையையும் புணருமாறு பையாலாலின் மகன்கள் சுதிருக்கும் ரோஷனுக்கும் கட்டளையிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே அவர்களின் ஆண்குறிகளைக் கத்தியால் வெட்டினர். பிறகு அவர்களை அரைகுறை உயிரோடு வானத்துக்கும் பூமிக்குமாகத் தூக்கியெறிந்து பந்தாடினர். அவர்களது உயிர் பிரியும்வரை இந்த “விளையாட்டு’ நடந்தது.
குற்றுயிராய்க் கிடந்த இரு பெண்களின் குறிகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடியில் பொருத்தப்படும் கம்புகளைச் சொருகினர். சிலர் நன்கு கூர்மையாகச் சீவப்பட்ட மூங்கில் குச்சிகளை அடித்துச் சொருகினர். அதிக இரத்தப் போக்கினாலும் தாங்க முடியாத இச்சித்திரவதைகளினாலும் உயிரிழந்த அப்பெண்களது உடல்களைத் தெருவில் வீசிவிட்டுச் சென்றனர்.
மிகவும் வக்கிரமான முறையிலும், கொடூரமான முறையிலும் நடத்தப்பட்ட இவ்வன்கொடுமைத் தாக்குதல் சம்பவம், அதன் முழு பரிமாணத்தோடு வெளியே தெரிவதற்குக்கூடப் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. குறிப்பாக, மகாராஷ்டிர போலீசும், மருத்துவர்கள் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் – இந்த அதிகாரிகளுள் பலர் “தலித்’கள் என்பதுதான் வெட்கக்கேடு – இவ்வன்கொடுமையை மூடிமறைத்துவிடுவதிலும், பூசி மெழுகுவதிலும் குறியாக இருந்து செயல்பட்டனர். அதிகாரி தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும்கூட, அவரும் சாதிய சமூகம் விதித்திருக்கும் மன ஓட்டத்தின்படிதான் செயல்படுவார் என்பதையே கயர்லாஞ்சி எடுத்துரைக்கிறது.
இச்சம்பவம் நடந்த அன்றிரவே பையாலால், சித்தார்த்தை அழைத்துக்கொண்டு போய் அண்டால்கவான் போலீசு நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அன்றிரவு 11.00 மணிக்கு கயர்லாஞ்சி கிராமத்திற்குச் சென்று விசாரித்தனர். அத்தகைய சம்பவம் எதுவும் அங்கே நிகழவில்லை என சாதி இந்துக்கள் அனைவரும் ஒரே குரலில் சொன்னதையே போலீசார் தேவ வாக்காக எடுத்துக் கொண்டு திரும்பிவிட்டனர். கயர்லாஞ்சியில் வசிக்கும் பிற தாழ்த்தப்பட்ட குடும்பங்களிடமோ, கோண்டு பழங்குடியினர் மத்தியிலோ விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் போலீசுக்குக் கிஞ்சித்தும் இருக்கவில்லை.
புரட்சிகர அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் கயர்லாஞ்சியில் நடத்திய நேரடி விசாரணை; அவ்வமைப்புகள், ஆதிக்க சாதிவெறி பிடித்த குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரி நடத்திய போராட்டங்கள்; அப்போராட்டத்தை ஒடுக்க போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நடந்த ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனின் மரணம்; போராட்டத்தை முன்னின்று நடத்திய முன்னனியாளர்கள் பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டது; நக்சல்பாரிகள்தான் இப்போராட்டத்தைத் தூண்டிவிடுவதாகக் கூறி, இந்த அடக்குமுறையை நியாயப்படுத்திய மகாராஷ்டிர அரசின் திமிர் — இவற்றையெல்லாம் தாண்டிதான் கயர்லாஞ்சி வன்கொடுமை தாக்குதல் சம்பவம் வெளியுலகுக்குத் தெரிந்தது.
அதிகார வர்க்கம் விசாரணை நிலையிலேயே இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்கு எல்லா உள்ளடி வேலைகளையும் செய்தது. போட்மாங்கேயின் மனைவி, மகள், இரு மகன்கள் ஆகிய நால்வரின் சடலங்கள் உருக்குலைந்து போயிருந்ததால், ‘உரிய விதி’களின்படி பிரேதப் பரிசோதனை செய்ய இயலவில்லை என் மருத்துவர் குழு அறிவித்தது. கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் யோனிக் குழாய்களையும் கருப்பைகளையும் சோதித்ததில் பெண்கள் இருவரும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறியது.
தேசிய மனித உரிமை ஆணையமும் பல்வேறு ஜனநாயக இயக்கங்களும் கொடுத்த தொடர் நெருக்கடிகளின் காரணமாக, அந்த நான்கு பேரின் சடலங்களையும் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது. ஆனால், “காலம் கடந்துவிட்ட’தால் இந்தச் சோதனையால் புதிதாக எந்தப் பயனும் கிடைக்கவில்லை என அரசு அறிவித்தது. போலீசார் தமது ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாயினரா என்பதை உறுதிபடுத்தும் நோக்கில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டனர்.
கயர்லாஞ்சி கிராமத்தில் வாழும் ‘பிற்படுத்தப்பட்ட’ சாதியைச் சேர்ந்த பெரும்பாலான குடும்பங்களுக்கு இந்த வன்கொடுமை தாக்குதல் சம்பவத்தில் நேரடித் தொடர்பிருந்தாலும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மையப் புலனாய்வுத் துறை 46 பேரிடம் மட்டுமே விசாரணையை மேற்கொண்டது. அவர்களுள் 35 பேர் விசாரணை நிலையிலேயே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்; 11 பேர் மீது மட்டுமே கொலை, சதி மற்றும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த பண்டாரா மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட பதினொரு பேரில் எட்டு பேரைக் குற்றவாளிகள் என்று அறிவித்திருக்கிறது. இந்த எட்டு பேரில் ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது; மீதி மூன்று பேர் குற்றமிழைத்ததற்குச் சாட்சிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரில், பையாலாலிடமிருந்து இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரித்துக்கொண்ட கயர்லாஞ்சி கிராமத் தலைவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. விடுவிக்கப்பட்ட மூவருமே ஓட்டுக்கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் எனத் தீர்ப்பின் பின் சுட்டிக் காட்டியுள்ளார், பையாலால்.
எனினும், தண்டிக்கப்பட்ட எட்டு பேரில் ஒருவர்கூட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளெனத் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. முகேஷ் புஸம், சுரேஷ் கான்தாதே என்ற இருவரும், “பையாலாலின் மனைவி சுரேகாவையும், அவரது மகள் பிரியங்காவையும் சாதி பெயரைச் சொல்லிக் கேவலமாகத் திட்டியதைக் கேட்டதாக” நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருந்தனர். ஆனால், விசாரணை நீதிமன்றம் அவ்விருவரின் சாட்சியத்தை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.
இதன் மூலம் இந்தக் கொலைகள் சாதிய வெறியினால் நடந்தது என்பது மறுக்கப்பட்டு, ஏதோ தனிப்பட்ட சொத்துத் தகராறில் நடந்த கொலை; முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழி வாங்குவதற்காக நடைபெற்றுள்ள கொலை எனக் குறிப்பிட்டு, உரிய நீதி கிடைப்பதை மறுத்துவிட்டது. மேலும், குற்றவாளிகள் இக்கொலைகளைச் செய்வதற்கு எவ்விதச் சதித் திட்டமும் தீட்டவில்லை எனத் தீர்ப்பு அளித்திருப்பதன் மூலம், இவ்வக்கிரமான படுகொலைகள் ஏதோ உணர்ச்சி வேகத்தில் நடந்துவிட்ட அசாம்பாவிதம் போலப் பூசி மெழுகியிருக்கிறார் நீதிபதி எஸ்.எஸ். தாஸ்.
சிவ்லால் பராடே மகராஜ் என்பவர்தான், போட்மாங்கேயின் மகளான பிரியங்காவின் உடல் தன் நிலத்துக்கு அருகில் ஓடும் கால்வாயில் மிதப்பதாக போலீசாரிடம் தகவல் கொடுத்தார். சடலத்தின் பெண் குறிக்குள் கூரிய கம்பு சொருகப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். பிரியங்காவின் பிரேதத்தையும்கூடப் பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தன் பெயரை வெளியிட விரும்பாத ஒரு போலீசுகாரர் கூறியிருந்தார். ஆனால், விசாரணை நீதிமன்றமோ சுரேகாவும், பிரியங்காவும் பாலியல் பலாத்காரப்படுத்தப்படவில்லை என்பதோடு, அவர்கள் மானபங்கப்படுத்தப்பட்டதற்குக்கூட ஆதாரமில்லை எனக் கூறிவிட்டது.
இராசஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி என்ற ‘கீழ்சாதி’ப் பெண்ணை ஆதிக்கசாதி இந்துக்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், “கீழ்சாதிப் பெண்ணை உயர் சாதியினர் தொட்டிருக்கக்கூட மாட்டார்கள்” எனக் கூறியது. கயர்லாஞ்சி வழக்கில் இராசஸ்தான் நீதிமன்றத்தின் அந்த ஆதிக்க சாதித் திமிரை, ”ஆதாரமில்லை” என்ற வார்த்தைகளில் கக்கியிருக்கிறார், நீதிபதி தாஸ். இது மட்டுமின்றி, நீதிபதி தாஸ் இத்தீர்ப்பை எழுதும் போது கண்ணீர் விட்டதாகக் கூறப்படுகிறது. அது, ஆதிக்க சாதியைச் சேர்ந்த குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் வழிந்த கண்ணீர். இந்திய நீதிமன்றங்களிடம் தீண்டாமை மனோபாவம் எத்தனை தூரம் வேர்விட்டுப் பரவியிருக்கிறது என்பதற்கு தாஸின் கண்ணீரே சாட்சி.
மாண்புமிகு நீதிபதிகளும், புனிதமானதாகக் கூறப்படும் இந்திய நீதிமன்றங்களும் வன்கொடுமை வழக்குகளில் ஆதிக்க சாதியினருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்குவதொன்றும் புதிய விசயம் கிடையாது. இக்குற்றச்சாட்டுக்கு மேலும் ஆதாரம் வேண்டும் என்று ‘நடுநிலையாளர்கள்’ விரும்பினால், மேலவளவு வழக்கிலும், திண்ணியம் வழக்கிலும் நீதிமன்றங்கள் அளித்திருக்கும் தீர்ப்பைப் புரட்டிப் பார்த்துக் கொள்ளட்டும்.
இதே பண்டாரா மாவட்டத்திலுள்ள சுரேவாடா கிராமத்தில் அமைந்திருக்கும் அரசுப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் தலைமை ஆசிரியையாக இருந்தார் என்ற காரணத்திற்காக, அவர் மாறுதல் செய்யப்பட்டவுடன் பொறுப்பேற்றுக் கொண்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆசிரியர், அப்பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது ”கோமியத்தை”த் தெளித்துப் ‘புனித’ப்படுத்தியுள்ளார். இவ்வழக்கை விசாரித்த பண்டாரா மாவட்ட சிறப்பு நீதிமன்றம், ”மாணவர்கள் மீது தெளிக்கப்பட்டது பசு மூத்திரம்தான் என்பதற்கு ஆதாரமில்லை; எனவே, இவ்வழக்கு வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வராது” எனக் குறிப்பிட்டு, வழக்கையே தள்ளுபடி செய்துவிட்டார்.
”மகாராஷ்டிராவில் குற்றங்கள் 2007” என்ற தலைப்பில் மகாராஷ்டிர மாநிலப் புலனாய்வுப் போலீசார் தயாரித்துள்ள அறிக்கையில், ”வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில், 2 சதவீதத்துக்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதாக”க் குறிப்பிட்டுள்ளது. ‘தேசிய’ அளவில் எடுத்துக் கொண்டாலும் இதில் எவ்வித மாற்றமும் இருக்கப் போவதில்லை. உண்மை இப்படியிருக்க, பார்ப்பன சத்திரிய சாதியினரும், ‘பிற்படுத்தப்பட்ட’ சாதியைச் சேர்ந்தவர்களும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு, ”தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், அதனால் அச்சட்டத்தை அடியோடு நீக்க வேண்டும்” என்று கோரி வருகிறார்கள். அதிகார வர்க்கமும் நீதிமன்றங்களும் வழக்குப் பதிவதிலும், விசாரணை நடத்துவதிலும், தீர்ப்பு வழங்குவதிலும் இச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதன் மூலம், சாதி இந்துக்களின் அக்கோரிக்கையை மறைமுகமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதற்கு கயர்லாஞ்சி, மேலவளவு, திண்ணியம், சுரேவாடா வழக்குகளில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகளே சாட்சியங்களாக உள்ளன.
____________________________________________
வினவு குறிப்பு: 2008 ஆம் ஆண்டு இறுதியில் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரை இது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் மீது செசன்ஸ் நீதிமன்றம் (பந்தாரா அமர்வு நீதிமன்றம்) அளித்த தீர்ப்பைத்தான் மேலே கட்டுரையில் பார்த்தீர்கள். இதை எதிர்த்து அந்த குற்றவாளிகள் நாக்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதன்படி தூக்கு தண்டனை பெற்ற ஆறு பேருக்கும், ஆயுள் தண்டனை பெற்ற இரண்டு பேருக்கும் அத்தண்டனைகள் ரத்து செய்யப்பட்டு, 25 வருடங்கள் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது. இது பையாலால் போட்மாங்கேவுக்கும், தலித் – மனித உரிமை – புரட்சிகர அமைப்புகளுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
அரசுத் தரப்பு வேண்டுமென்றே ஆதிக்க சாதி குற்றவாளிகளை காப்பாற்றும் வண்ணம் இந்த வழக்கில் செயல்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றம் இப்படி தீர்ப்பு வழங்குவதற்கு தோதாகத்தான் முந்தைய நீதிமன்ற தீர்ப்பு அமைந்திருந்தன. அதைத்தான் புதிய ஜனநாயகம் அன்றே குறிப்பிட்டிருந்தது.
போபாலுக்கே நீதி வழங்கப்படாத பொழுது ஒரு அப்பாவி தலித்துக்கு மட்டும் நீதி வழங்கப்படுமா என்ன? மிகக் கொடூரமான முறையில் போட்மாங்கே குடும்பத்தினரை கொன்ற ஆதிக்க சாதியினர் இனி மற்ற ஊர்களில் இதை வைத்தே சட்டப்பூர்வமாகவே எல்லா கொடுமைகளையும் செய்யலாம் என்ற திமிரை பெறுவர்.
ஆம். இந்தியாவில் தலித்துகளுக்கு சட்டப்படி எந்த நீதியும் கிடைக்காது. எனில் அந்த சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு நமக்கான நீதியையே நாமே பெறுவது ஒன்றுதான் வழி!
_____________________________________________________
உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, வருமானம் கோபாலபுரத்திற்கு.. !!
தேனினும் இனிக்கும் ஸ்வீட்டஸ்ட் செய்தியை உன்னுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம். அறிவாலாயம் துவங்கி அண்டார்டிகா வரை திருக்குவளையாரின் குடும்பம் செழிக்க, வலுக்க, பெருக்க அல்லும் பகலும், காலையிலும் மாலையிலும், பகலிலும் இரவிலும், தூணிலும் துரும்பிலும் தள்ளாத வயதிலும் பாடுபடும் தானைத் தலைவர், தமிழினம் இனி காணமுடியாத தவப்புதல்வன் செய்திருக்கும் ஈடு இணையற்ற, அமெரிக்கா முதல் ஜப்பான் வரை எடுத்துக்காட்டிற்கு கூட எடுத்தியம்ப முடியாத அந்த வெற்றிச் செய்தினை பகிர்ந்து கொள்கிறோம். படித்ததும் கொலை வாளினை எடுத்து கொடியோர் சங்கை அறுத்திட புறப்படு!
இலங்கைத் தீவில் ஆழி சூழ் விதியில் சிக்கித் தவிக்கும், மானாட மயிலாடாவைக் கூட பார்த்துக் களிக்க இயலாமல் நமதருமை தொப்புள் கொடி மக்காள் படும் துன்பத்தினைக் கண்டு வாடி சினிமா வசனம் எழுதும் சிரமமான பணிக்கிடையிலும் தலைவர் கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவார் என்பது நீ அறிந்ததே.
எழுத்தும் ஓர் ஆயுதமென்று அரிஸ்டாட்டில் முதல் அண்ணாவரை செய்து காட்டியிருக்கிறார்கள். அந்த வரிசையில் கலைஞரும் ஜூலை 17ஆம் தேதி பிரதமர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், “கடந்த 9ஆம் தேதி தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளும் இயன்ற வரையில் தாங்கள் மேற்கொள்வதாக தாங்கள் உறுதி அளித்திருப்பதற்கு நன்றி. இத்தருணத்தில் இந்திய அரசாங்கம், இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தூதரக தொடர்புகள் மூலமாக ஒருவரையோ அல்லது ஒரு சிறப்பு பிரதிநிதியையோ அனுப்பி அங்கு நிலவும் உண்மையான சூழலை மதிப்பிட்டு அறிந்து வரச் செய்யலாம்.” என்று குறளோவியம் போல கலைஞர் தனது வேதனையையும் தீர்வையும் நச்சென்று நாலு வரியில் வடித்திருந்தார்.
டெல்லிக்கு பல பல கடிதங்கள் வகை தொகையின்றி ஏனோ தானோவென்று குவிந்தாலும் கலைஞரின் கடிதமென்றால் அண்டமே நடுநடுங்கும். அய்யாவின் கடிதம் கண்ட கொய்யா மன்மோகன் சிங் உடனே சாப்பிடக்கூட செய்யாமல் அன்னை சோனியாவை தரிசித்து ஆலோசனை பெற்று பதில் எழுதியிருக்கிறார்.
அதில், “தாங்கள் 17 ஆம் தேதி எழுதிய கடிதத்துக்கு நன்றி. இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு காட்டி வரும் ஈடுபாட்டின் தொடர்ச்சியாகவும், இதில் இந்தியா காட்டிவரும் ஆர்வத்தின் காரணமாகவும்இலங்கைக்கு இந்திய வெளிவிவகாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளேன். அவர், இலங்கையில் உள்ள இந்திய தூதர் மற்றும் இலங்கை அதிகாரிகளை சந்தித்து இப்பிரச்சினை பற்றி விவாதிப்பார். புனர்வாழ்வுப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு திரும்புவார்.” என்று கூறப்பட்டிருக்கிறது.
தமிழக வரலாற்றுக் களஞ்சியத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்த வெற்றிச்செய்தியினை உனக்கு விம்மிய நெஞ்சுடன் அளிக்கிறேன். இமயத்திலே புலிக்கொடி பறக்க விட்ட தமிழனுக்கு பிறகு இப்போதுதான் வடக்கில் நமது கொடி பட்டொளி வீசி பறக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. வருமானம்தான்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக இரசியா, சீனாவை எதிர்க்க வேண்டும் என்று இந்திய இறையாண்மைக்கு எதிராக உணர்ச்சிவசப்பட்டு முழங்கிய தம்பி சீமான், காலியாகிவரும் கட்சித் தலைவன் அண்ணன் வைகோ போன்றவர்கள் பேச்சிலே காட்டும் காகித வீரத்தை நமதருமைத் தலைவர் செயலிலே காட்டியிருக்கிறார் என்றால் உன் மகிழ்வுக்காக நீ டாஸ்மாக் சென்றாலும் கொண்டாடமுடியாத கூத்து அது.
சுப.வீரபாண்டியன் போன்ற வேலையில்லாத முன்னாள் பேராசிரியர்கள் ஒரு ஐம்பது பேர் கொண்ட மாபெரும் அரங்கக்கூட்டங்களில் இந்த வெற்றிச் செய்தியினை உலகமே வியப்புறும் வண்ணம் ஆய்வு செய்து வீர உரையாற்றி வருகிறார்கள். அந்நிலையில் தலைநகர் டெல்லியிலிருந்து பிரம்மாஸ்திர ஏவுகணையாக கொழும்புவுக்கு பறக்க இருக்கும் அந்த வெளியுறவு அதிகாரி பெருமானின் நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே உனக்கு தருகிறேன்.
சிறப்பு விமானத்தில் அந்த அதிகாரி இந்தியாவின் பலத்தைக் காட்டும் வண்ணம் சுற்றம், கொற்றம், முற்றம், மற்றும் குடும்ப பரிவார சகிதம் கொழும்பில் தரையிறங்குகிறார். ஹைபுவான் சொல்லி சிங்கள தேசத்தின் அழகுத் தாரகைகள் அவரை வரவேற்க, கோத்தபய ராஜபக்சேவுக்கு வெற்றிலை மடித்து தரும் மாபெரும் அதிகாரி ஒருவர் நம்மவரை அழைத்துச் செல்கிறார்.
கொழும்பு கடற்கரையில் இருக்கும் ஷெர்ட்டன் எனும் அழகிய நட்சத்திர விடுதியின் பிரசிடண்சியல் சூட்டில் நம்மவர் தங்குகிறார். இந்த அறைக்கு வாடகை மிக அதிகம் என்பது தமிழனின் கௌரவத்திற்கு ஒரு சான்று. நன்று மேலே போவோம்.
முதலில் மகிந்த ராஜபக்சேவை காலை சிற்றுண்டியுடன் சந்திக்கிறார். முள்ளிவாய்க்கால் வெற்றிக்காக சிங்கள மக்கள் இராணுவ வீரர்களுக்கு ஊட்டிய பால்சோறு இங்கே தமிழினின் தன்மானத்திற்காக கிண்ணத்தில் இறைஞ்சுவது நிச்சயம். தலைவர் கலைஞரின் விருப்பத்திற்கேற்ப வந்துள்ள நம்மவரை புன்முறுவலுடன் மறித்த இலங்கை அதிபர் ஒரு புவியியல் சிறப்புள்ள அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது வன்னி முகாமில் உள்ள மக்களுக்கு தினசரி தலா 1 லிட்டர் நீர் வழங்கிய அரசு இனி ஒன்றேகால் லிட்டர் வழங்கும் என்பதாகும். குவார்ட்டரில் மூழ்கும் உனக்கு இந்த குவார்ட்டர் வெற்றியின் மகத்துவத்தை விரித்துரைக்கத் தேவையில்லை.
பின்னர் இலங்கை அதிகாரிகளை நம்மவர் சந்திப்பார். தமிழனின் மானம் காக்க அங்கே செல்போன் டவர்களை எழுப்பி வரும் ஏர்டெல் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசித்தீர்ப்பார். ஏர்டெல்லும் இனி தமிழ் மக்கள் அவர்களுக்கிடையில் குமுறி அழுதவற்கு நிமிடத்திற்கு 50 காசு என்ற எவரெஸ்ட் சலுகையை அறிவிக்க இருக்கிறது. எதிர்காலத்தில் கலைஞர் சீரியல்களும் மலிவான விலையில் செல்பேசிச் சேவையில் இடம்பெறும் என்று பேச்சு அடிபடாமல் இல்லை.
பின்னர் தனி ஹெலிகாப்டரில் நம்மவர் வன்னிக்கு செல்கிறார். பறக்கும் போதே முகாம் மக்களுக்கு கனிந்த இதயத்துடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டு உணர்வுடன் அவர் டாடா காண்பிப்பார். முகாமில் சாமி கும்பிடுவதற்காக புதிதாக கட்டப்பட்ட கோவிலையும், இறந்தோர் புதைக்க கட்டப்பட்டுள்ள மாபெரும் மயானத்தையும் திறக்கிறார். இந்த மயானம்தான் ஆசியாவிலேயே பெரியது என்பது நமது தமிழனித்தின் வலிமையினைக் காட்டிடும் என்றால் நீ என்ன சொல்வாய்?
இறுதியாக யாழ்ப்பாணத்திற்கு செல்கிறார். நம்மவரை பக்சேவின் அமைச்சர் டக்ளஸ் வரவேற்று விருந்தளிக்கிறார். கலைஞர் எழுதிட்ட எல்லா புத்தகங்களும் தலா 1000 பிரதிகள் யாழ் நூலகத்திற்கு அளிக்கும் திட்டத்தினை நம் தூதர் அறிவிப்பார். யாழ்ப்பாணத்தில் சன்.டி.வி தெளிவாக தெரியவில்லை எனும் மக்கள் கோரிக்கையைத் தீர்ப்பதாக அறிவிப்பார். எந்திரன் படம் அங்கேயும் ரிலீசாவதற்கு உத்திரவாதத்தையும் அளிப்பார்.
இப்படியாக தமிழனின் குரலை உயர்த்திட்ட பணி முடித்த பின் கொழும்பில் டூடி ஃபிரி அங்காடிகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி விட்டு இந்தியா திரும்புகிறார். வழியில் சென்னையில் இறங்கி கலைஞருடன் சந்தித்து விட்டு சிங்கள தேசத்தில் தமிழன் பெற்ற வெற்றியினை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடுவார். அதை சன், கலைஞர் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்புகின்றன. அன்று மட்டும் நீ டாஸ்மாக் போகும் நேரத்தை சற்று மாற்றிக் கொண்டு அந்த வரலாற்று வெற்றியினை பகிரும் காட்சியினை ஆசை தீர பருகிட வேண்டும் என்று கலைஞர் கேட்பதாக இருக்கிறார்.
ஒரு கடிதம் என்னவெல்லாம் சாதித்திருக்கிறது என்பது குறித்து உடன்பிறப்பே நீ மறவாதிரு! வாங்கும் கட்டிங்கில் தலைமைக் கழகத்திற்கு அனுப்ப வேண்டிய பங்கினை அனுப்ப மறுக்காதிரு!!
தமிழ் வாழ்க! தமிழனின் தன்மானம் ஒழிக! உடன்பிறப்பின் அம்மணம் ஓங்குக!
வினவு குறிப்பு: சென்னை நோக்கியா ஆலையில் சமீபத்தில்தான் வேலை நிறுத்தம் ஒன்று நடந்திருந்தது. அது குறித்து வினவின் சென்னை செய்தியாளர்கள் குழு ஒன்று செய்தி சேகரிக்கச் சென்ற போது ஆலையில் உள்ள தொழிலாளிகள் பெரும் விபத்து ஒன்றை அல்லது சதியை எதிர் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கட்டுரைக்காக சுங்குவார்சத்திரம், நோக்கியா ஆலை, ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று நேரில் பார்த்தும் விசாரித்தும் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. புகைப்படம் எடுப்பதை ஆலை நிர்வாகிகள் எதிர்த்தாலும் விடமால் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. தோழர்களைத் தவிர அங்கே எந்த செய்தியாளர்களும் இல்லை.
மொத்தம் ஆறு தொழிலாளர்கள். அவர்களில் இருவர் பெண்கள். இவர்கள் அனைவருமாக சேர்ந்து சக பெண் தொழிலாளி ஒருவரை தூக்கிக் கொண்டு வேகமாக நோக்கியா நிறுவனத்திலிருந்து ஓடி வந்தார்கள். வேறு யாருமே உடன் வரவில்லை. இந்த ஏழு பேருக்கும் அதிகம் போனால் 24 வயதுதானிருக்கும். அனைவரது உடலிலும் வறுமை குடி கொண்டிருந்தது. கண்களில் இயலாமை, பரிதவிப்பு. அடுத்து எந்தத் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்க மடைவாரோ என்ற பதட்டம் அவர்களது இதயத்தை பலமாக துடிக்க வைத்தது.
கைகள் நடுங்கியபடியே அந்தப் பெண் தொழிலாளியை சுமந்தபடி எத்தனை கிலோ மீட்டர்கள் ஓடி வந்தார்கள் என துல்லியமாக சொல்ல முடியவில்லை. இரும்பு வேலியிட்ட தொழிற்சாலையின் கதவுக்கு வெளியே ‘ஜெயா மருத்துவமனை’ ஆம்புலன்ஸ் வண்டி நின்றிருந்தது. அந்த ஆம்புலன்சை தொழிற்சாலைக்குள் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
எனவே உள்ளடங்கியிருந்த தொழிற்சாலையில் மயக்கமான அப்பெண்ணை காப்பாற்றும் பொருட்டு அந்த ஆறு பேரும் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு சுமந்தபடி ஓடி வந்தார்கள். அப்பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகும் அவர்கள் சமாதானமாகவில்லை. ஆம்புலன்சில் உடன் சென்ற தன் நண்பரிடம், ஒரு தொழிலாளி, ”மச்சான்… ‘ஜெயா மருத்துவமனை’ வேண்டாம்டா… நேரா ராமசந்திரா கூட்டிட்டுப் போங்க…” என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆம்புலன்ஸ் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பறந்துவிட்டது. காற்றில் மிதந்த தனது சொற்களை திரும்பவும் சேகரித்த அத்தொழிலாளி தனது கைப்பேசி மூலம், ஆம்புலன்சில் சென்ற தன் நண்பனை அழைத்து மீண்டும் அதையே சொன்னார்.
நோக்கியா ஆலை விபத்தின் ஆரம்பம்!
கடந்த சனிக்கிழமை (24.07.10) மாலை 6 மணிக்கு நோக்கியா என்ற பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் நடந்த சம்பவம் இது. இச்சம்பவம் நடப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்னால் வரை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சாலையின் வாயிலில் குழுமியிருந்தார்கள். பணிக்கு திரும்ப மாட்டோம் என்ற உறுதி அனைவரிடமும் தென்பட்டது. ஆனால் தி.மு.க.வின் கொடி பறந்த காரிலிருந்து இறங்கிய கரை வேட்டி மனிதர், ‘அனைத்தையும்’ தான் பார்த்துக் கொள்வதாகவும், ‘இனி எதுவுமே’ நடக்காது என்றும் சொன்ன பிறகு தொழிலாளர்களின் உறுதி நொறுங்கியது. வேறு வழியின்றி தொழிற்சாலைக்குள் சென்றார்கள்.
கரை வேட்டியின் நடிப்புக் கருணை கனவானின் கார் சென்ற 15 நிமிடத்தில் மீண்டும் அந்த கொடூரம் நிகழ ஆரம்பித்தது. மீண்டும் ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்கமானார். அவரை ஆறு தொழிலாளர்கள் மட்டுமே ஆம்புலன்ஸ் வரை சுமந்து வந்தார்கள். மற்றவர்களை வெளியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
விஷவாயு கசிவுதான் இதற்கு காரணம். 1984ம் ஆண்டு போபாலில் அரங்கேறியதே ஒரு கொடூரம், அதற்கு சற்றும் குறையாத சம்பவங்கள் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரிலும் நடைபெற ஆரம்பித்திருப்பதன் அறிகுறிதான் மேற்கண்ட சம்பவம்.
நோக்கியாவும் அதன் சகோதரத்துவ நிறுவனங்களும்!
‘நம்ம நாட்டு செல்ஃபோன்’ என்ற அடைமொழியுடன் இந்திய சந்தையில் கோலோச்சும் நோக்கியா நிறுவனத்தின் கிளை, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இருக்கிறது. ஃபெர்லெக்ஸ், ஸ்கல்காம், டெர்லாஸ், ஃபாக்ஸ்கான் ஆகியவை நோக்கியா நிறுவனத்துடன் தொடர்புடைய துணை நிறுவனங்கள். இந்த துணை நிறுவனங்களின் தொழிற்சாலைகளும், நோக்கியா தொழிற்சாலையின் எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கின்றன. சந்தைக்கு வரும் நோக்கியா கைப்பேசியின் உதிரி பாகங்களை இந்த துணை நிறுவனங்கள் தங்களுக்குள் பங்கிட்டு தயாரிக்கின்றன.
இதில் ஃபாக்ஸ்கான் என்ற துணை நிறுவனத்தின் சைட் 3இல்தான் கடந்த வெள்ளிக்கிழமை (23.07.10) மதியம் ஒன்றரை மணிக்கு மேல் அந்தக் கொடூரம் நிகழ ஆரம்பித்தது. முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள், மதிய உணவை சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் பணிக்கு திரும்பியிருந்தார்கள். சீராக இருக்க வேண்டிய சுவாசம், எக்குத்தப்பாக மாறியது. பலருக்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது. கண்கள் எரிந்தன. திரண்ட உமிழ்நீரில் ரத்தம். அது குளிர்பதனம் பொருத்தப்பட்ட தொழிற்சாலை. எனவே உள்ளிருக்கும் காற்று வெளியேறவும், வெளியிலிருந்து காற்று உள்ளே வரவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
காரணம் தெரியாத விபத்தும், பாதிப்படைந்த தொழிலாளிகளும் !
ஏதோ விபரீதம் என தொழிலாளர்கள் உணர்வதற்குள், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், பணியிலிருந்த ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். பதறிப் போன மற்ற தொழிலாளர்கள், அவரை அணுகி என்ன ஏது என்று பார்ப்பதற்குள் அடுத்தடுத்து ஆண்களும், பெண்களுமாக பல தொழிலாளர்கள் சடசடவென்று ரத்த வாந்தியுடன் மயங்கி விழ ஆரம்பித்தார்கள். பணியில் இருந்த மற்ற தொழிலாளர்களுக்கு எதுவும் புரியவில்லை.
என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு சொல்ல வேண்டிய நிர்வாகம் அலட்சியமாக இருந்தது. ‘இன்னிக்கி ஆடி மாசம் முதல் வெள்ளிக்கிழமை இல்லையா? அதான் விரதம் இருந்திருக்காங்க. பசி மயக்கம் விழுந்துட்டாங்க… மத்தபடி ஒண்ணுமில்ல. வேலையை பாருங்க…’ என்று சூபர்வைசர்கள் ஷிப்டுக்கான உற்பத்தி குறைந்துவிடக் கூடாதே என்ற அக்கறையுடன் மற்ற தொழிலாளர்களை வேலை செய்யும்படி மிரட்டியிருக்கிறார்கள்.
ஆனால், சிவா என்கிற ஷிப்ட் மானேஜரும், மாரிமுத்து என்ற ஷிப்டுக்கான லீடரும் மயங்கி விழவே பதட்டம் அதிகரித்தது. தொழிலாளர்கள் மயங்கி விழுந்தபோது அவர்களை கண்டுக்கொள்ளாத நிர்வாகம், ஷிப்ட் மானேஜரும், ஷிப்ட் லீடரும் மயங்கி விழுந்ததும் பதறியது. உடனடியாக ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு தகவல் பறக்க, ஆம்புலன்ஸ் விரைந்துவந்து அவர்களை அழைத்துச் சென்றது. இதற்கு மேலும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்பதை உணர்ந்துக் கொண்ட நிர்வாகம், மயங்கி விழுந்த தொழிலாளர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தது.
இப்படியாக சிகிச்சைக்கு சென்ற தொழிலாளர்கள் 127 பேர்.
இதனையடுத்து முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள் பணி செய்ய மறுத்து, தொழிற்சாலையை விட்டு வெளியே வந்தனர். நிர்வாகமும் அதன் பின் முதல் ஷிப்டை தொடர விரும்பாததுடன், இரண்டாவது ஷிப்டையும் ரத்து செய்தது. தொழிலாளர்கள் உடனே ஜெயா மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். அங்கே கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
அடுத்தடுத்து சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களை மருத்துவமனைக்குள் நுழையவிடாமல், மருத்துவமனையின் செக்யூரிட்டி அடித்து விரட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார். இப்படி செய்யும்படி மருத்துவமனையும், தொழிற்சாலை நிர்வாகமும் செக்யூரிட்டிகளிடம் கட்டளையிட்டிருக்கிறது. இதை மீறியே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மருத்துவமனைக்குள் மற்ற தொழிலாளர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
ஆனால் ரத்த வாந்தி எடுத்து மயக்கமான எந்தத் தொழிலாளிக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவேயில்லை. முதலுதவியுடன் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனையறிந்த தொழிலாளர்கள் ஆவேசத்துடன் மருத்துவர்களிடம் நியாயம் கேட்டபோது கிடைத்த பதில்: “நிர்வாகம் முதலுதவி தர மட்டும்தான் சொல்லியிருக்கு. என்ன விஷவாயு கசிந்ததுனு சொல்லலை. அது தெரிஞ்சாதான் மாற்று மருந்து தர முடியும்”.
விபத்துக்கு காரணம் ஆடி விரதமா?
மருத்துவர்கள் இதை சொல்லி முடித்த மறு விநாடி, சிகிச்சைக்கு வந்திருந்த சிவாவையும், மாரிமுத்துவையும் பார்க்க வந்திருந்த மற்றொரு நிர்வாகியை தொழிலாளார்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். “நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்கிறார்கள். அவர்களில் இஸ்லாமிய தொழிலாளர்களும் அடக்கம். இவர்களுமா ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்திருப்பார்கள்? தொழிற்சாலையில் வேறு ஏதோ நடந்திருக்கிறது. விஷவாயு கசிந்திருக்கிறது. அது என்ன வாயு என்று சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியும்” என்று கதறியிருக்கிறார்கள்.
எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அந்த நிர்வாகி சொன்ன பதில்: “இந்த யூனிட்டுக்குள்ள ஒரு ரூம் இருக்கு இல்லையா? அதுல பழைய இரும்பு சாமான்களை போட்டு வச்சிருக்கோம். இது உங்களுக்கும் தெரியும். முதல் ஷிப்ட்டுக்காரங்க சாப்பிட போயிருந்தப்ப, அந்த ரூம்ல பூச்சி மருந்து அடிச்சோம். ஏசி இருந்ததால அந்த பூச்சி மருந்தோட வாடை வெளியேற முடியலை. அதான் இப்படி ஆகியிருக்கு. டாக்டர்கள் கிட்ட இதை சொல்லியாச்சு. அவங்களும் பூச்சி மருந்தை சுவாசிச்சவங்களுக்கு மாற்று மருந்து கொடுக்கறேனு சொல்லிட்டாங்க. ஒண்ணும் பிரச்னையில்லை. அரை மணி நேரத்துல எல்லாரையும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. கவலைப்படாம போங்க. மூணாவது ஷிப்டுக்கு வர வேண்டியவங்க வந்துடுங்க…”
இந்த வாக்குறுதியை நம்ப தொழிலாளர்கள் தயாராக இல்லை. சைட் 3இல் நடைபெற வேண்டிய மூன்றாவது ஷிப்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொழிலாளர்கள் வரவில்லை. எனவே சைட் 2லிருந்து பல தொழிலாளர்களை சைட் 3க்கு செல்லும்படி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், காலை முதலே சைட் 3இல் நடந்து வரும் கொடூரம், சைட் 2 தொழிலாளகளுக்கு தெரிந்திருந்ததால் யாரும் சைட் 3க்கு செல்லவில்லை. நிர்வாகமும் அசரவில்லை. சைட் 3இன் 3வது ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்களை வைத்து உற்பத்தியை தொடங்கியிருக்கிறது.
ஆனால் முதல் ஷிப்டில் நடந்த அதே கொடூரம் மூன்றாவது ஷிப்டிலும் தொடர்ந்தது. இம்முறை பாதிக்கப்பட்டு ரத்த வாந்தியுடன் மயக்கமான தொழிலாளர்களின் எண்ணிக்கை 145 ஆக இருந்தது. கொந்தளித்த தொழிலாளர்கள் சைட் 3லிருந்து வெளியேறினார்கள். பாதிக்கப்பட்ட 260க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மருத்துவ வசதியும், மருந்துகளும் ஜெயா மருத்துவமனையில் இல்லை.
மருத்தவமனையில் மயக்கமடைந்த தொழிலாளிகள்!
எங்கே இந்த விபரீதம் கசிந்து மீடியாவில் பரபரப்பாகி விடுமோ என்ற பயந்த நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களையும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆரம்ப கட்ட சிகிச்சைக்குப் பின் பல தொழிலாளர்களை மருத்துவமனை அவசரம் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்தது. அவர்களை மற்ற தொழிலாளர்களுடன் பேச விடாமல் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் நிர்வாகம் முழு மூச்சுடன் இறங்கியது. சீரியசாக இருக்கும் தொழிலாளர்கள் மட்டும் ஐசியூவில் சிகிச்சை பெற நிர்வாகம் ஒப்புக் கொண்டது.
ஆனால், எதனால் இப்படி இருநூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற விபரத்தை மருத்துவமனையும் சரி, நிர்வாகமும் சரி சக தொழிலாளர்களிடம் சொல்லவில்லை. எந்த விஷவாயு கசிந்தது… அதை சுவாசிப்பவர்களுக்கு என்ன மாற்று மருந்து தர வேண்டும் ஆகிய விபரங்கள் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த நிர்வாகிகளுக்கும் தெரியவில்லை.
இந்த அடிப்படையை அலட்சியப்படுத்தி, ஆரம்பக்கட்ட சிகிச்சை முடிந்து வலுக் கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களின் மருத்துவ ரிப்போர்ட்டை எந்தக் காரணம் கொண்டும் தொழிலாளர்கள் கொண்டு செல்லக் கூடாது என்பதிலேயே நிர்வாகம் குறியாக இருந்ததை – இருப்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இதற்காகவே நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர், கண் கொத்திப் பாம்பைப் போல வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களையே கண்காணித்துக் கொண்டிருந்தார்.
கொடூரம் நடந்த மறுநாள் – சனிக்கிழமை – இரவு வரை அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்துக் கொண்டேயிருந்தது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற படியே இருந்தார்கள். வாசலில் நின்றபடி உள்ளே அழைத்து செல்லப்படும் தொழிலாளர்களின் பெயரை ஒரு தாளில் எழுதியபடியே ஒரு நிர்வாகி இருந்தார். தாள்கள் நிரம்ப நிரம்ப அதை ஸ்டாப்ளர் பின் அடித்து கத்தையாக மாற்றினார். ஒரு கட்டத்துக்கு பிறகு, வெறும் எண்ணிக்கையின் அளவிலேயே அந்த நிர்வாகி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பார்க்க ஆரம்பித்தார்.
சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களில் பெண்கள் அதிகம். ஐசியூவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு அடுத்த மாதம் திருமணமாம். இதுவரை அப்பெண்ணின் பெற்றோருக்கு நிர்வாகம் எந்தத் தகவலையும் சொல்லவில்லை என்று ஆவேசத்துடன் தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஃபாக்ஸ்கான் தொழிலாளரின் சாலரி ஸ்லிப்.
தொழிலாளர்களை சுரண்டும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்!
இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமையகம் தைவானில் இருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் இந்த பன்னாட்டு நிறுவனம், தொடர்ந்து உலகம் முழுக்க செய்திகளில் அடிபட்டபடியே இருக்கிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகள் உலகம் முழுக்க இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அடிப்படை சலுகைகளை கூட வழங்காமல் நிர்வாகம் கசக்கிப் பிழிகிறது என சர்வதேச மீடியாக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றன. அம்பலப்படுத்தியிருக்கின்றன.
இந்த ஆண்டு மட்டுமே, இதுவரை உலகம் முழுக்க இயங்கி வரும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 10 தொழிலாளர்கள், பணியிடத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள். காரணம், நிர்வாகத்தின் அடக்குமுறை. கடந்த மே மாதம் சீனாவில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் மாடியிலிருந்து ஒரு தொழிலாளி குதித்து தற்கொலை செய்து கொண்டதை குறித்து ‘சதர்ன் வீக்லி’ சீன இதழ், விரிவாக செய்தி வெளியிட்டிருக்கிறது.
சென்னையில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை, அசெம்பிளிங், மோல்டிங், பெயிண்டிங், ஸ்டாம்பிங், எம்பிஎம் (மொபைல் ஃபோன் மெட்டல்ஸ்), ஷீட் விண்டோ, வேர் அவுஸ், குவாலிட்டி என பல பிரிவுகளாக இயங்கி வருகிறது. நோக்கியா செல்ஃபோனுக்கான போர்ட் தவிர, மற்ற அனைத்து உதிரி பாகங்களையும் தயாரித்து தருவது இவர்களது பணி. தினமும் 3 ஷிப்டுகளில் உற்பத்தி நடக்கின்றன. சராசரியாக ஒரு ஷிப்டுக்கு நாளொன்றுக்கு நாற்பதாயிரம் செல்ஃபோன் உதிரி பாகங்கள் அனைத்து பிரிவிலுமாக சேர்ந்து தயாராகின்றன. அதாவது ஒரு நாளைய உற்பத்தி மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம்.
காஸ்ட்லியான செல்பேசிக்காக வதைபடும் தொழிலாளிகள்!
ஒவ்வொரு பிரிவிலும் ஒரு ஷிப்டுக்கு குறைந்தது ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இரண்டாவது ஷிப்டில் மட்டும் தொழிலாளர்களின் எண்ணிக்கை – குறிப்பாக பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை – குறைவாக இருக்கும். ஆக சென்னை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்கிறார்கள். அனைவருமே அதிகபட்சமாக முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். ப்ளஸ் 2 படித்தவர்கள் முதல், பட்டம், டிப்ளமா படித்தவர்கள் வரை இங்கு தொழிலாளியாக இருக்கிறார்கள்.
அனைவரின் சம்பளமும் ஒரேயளவுதான். கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வரும் இத்தொழிற்சாலையில், ஆரம்பம் முதல் பணிபுரியும் தொழிலாளிக்கு அதிகபட்சமாக ரூபாய் 6 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த 6 ஆயிரம் சம்பளத்தையும் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவே. பெரும்பாலானவர்களின் சம்பளம் 4,200 ரூபாயை தாண்டவில்லை. அத்துடன் இதுவரை ஊதிய உயர்வு அளிக்கப்படவேயில்லை. ஓராண்டு நிறைவடைந்த தொழிலாளிக்கு மட்டும் தீபாவளி சமயத்தில் ஒரு மாதச் சம்பளம் போனசாக வழங்கப்படுகிறது.
இப்படி ‘அநியாயமாக’ போனஸ் என்னும் பெயரில் பணம் வீணாவதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்த நிர்வாகம் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்கிறது. அதாவது ஓராண்டு முடிந்ததுமே தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது. இவர்களுக்கு பதிலாக புதிதாக தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது. இதற்காக ஆண்டுதோறும் அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் தருவதை நிர்வாகம் வழக்கமாக கொண்டிருக்கிறது.
தி.மு.க. தலைமையிலான தொழிற்சங்கம் தவிர இங்கு வேறெந்த தொழிற்சங்கமும் செயல்படவில்லை. நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். மற்ற அனைவருமே டிரெயினிஸ் – பயிற்சியாளர்கள் – என்ற பிரிவிலேயே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இப்படி பயிற்சியாளர்களாக இருப்பவர்கள் தொழிற்சங்கம் கட்டவும் முடியாது, சலுகை கேட்டு போராடவும் முடியாது. இந்திய சட்டத்தில் இருக்கும் இந்த சாதகமான அம்சத்தையே அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்கு ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையும் விதிவிலக்கல்ல. ஆனால், பயிற்சியாளர்களைக் கொண்டு உற்பத்தியை நடத்தக் கூடாது என்ற சட்டத்தை மட்டும் கவனமாக, பகிரங்கமாக மீறுகிறார்கள். இதற்கு அரசு உடந்தையாக இருக்கிறது.
காஞ்சிபுரம், திருத்தணி, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை, செங்கல்பட்டு ஆகிய சிறு நகரங்களிலிருந்து தொழிலாளர்கள் பணிக்கு வருகிறார்கள். இவர்களுக்காகவே தினமும் 45 பேருந்துகளை நிர்வாகம் இயக்குகிறது. இது தவிர சிறு சிறு கிராமங்களிலிருந்து வருபவர்களுக்காக வேன்களும் இயங்குகின்றன. இது சென்னையை சுற்றியுள்ள தொழிலாளர்களின் நிலவரம் என்றால், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வேலை செய்ய வந்திருக்கும் தொழிலாளர்களின் அவலம் இன்னும் மோசமானது. இவர்களுக்காகவே டார்மிட்ரியை(தங்கும் விடுதிகள்) நிர்வாகம் கட்டியிருக்கிறது. அறைக்கு 8 தொழிலாளர்கள் வீதம் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். உணவு, இருப்பிடம் சேர்த்து மாதந்தோறும் இவர்களது சம்பளத்திலிருந்து ரூபாய் 800 கழிக்கப்படுகிறது.
தொழிற்சாலையில் வழங்கப்படும் உணவு எந்தளவுக்கு மோசமாக இருக்க வேண்டுமோ அந்தளவுக்கு மோசமாக பரிமாறப்படுகிறது. கரப்பான் பூச்சி முதல் சிறு சிறு புழுக்கள் வரை அனைத்தையும் இந்த உணவில் பார்க்கலாம் என்கிறார்கள் தொழிலாளர்கள். உணவுக்கான காண்டிராக்டை ஏற்றிருக்கும் கொடாக்ஸோ, நோக்கியா ஊழியர்களுக்கு தரமான உணவையும், ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு படு கேவலமான உணவையும் வழங்குவதாக குமுறலுடன் சொல்கிறார்கள். அசைவ சாப்பாடு கிடையவே கிடையாது என்பது ஒருபுறமிருக்க, சைவ சாப்பாடு அளவுடனேயே வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு தொழிலாளிக்கு இவ்வளவு கிராம் என்பதுதான் கணக்கு. அதைத்தாண்டி ஒரு பருக்கை அளவுக்குக் கூட உணவை வழங்குவதில்லை. மிக தாராள மனதுடன், ஷிப்ட் நேரத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உண்ணும் இந்த ‘ கரப்பான் பூச்சி வாழும் கிராம்’ உணவுக்கு நிர்வாகம் எந்தவிதமான கட்டணத்தையும் அவர்களது சம்பளத்திலிருந்து வசூலிப்பதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அதேபோல் இத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நேரத்தில் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துக்குக் கூட எந்த மருத்துவரையும் நிர்வாகம் நியமிக்கவில்லை. வார்டு பாய் போன்ற ஒருவரும், நர்ஸ் ஒருவரும் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு… என சகலத்துக்கும் ஒரே மாத்திரையைத்தான் இவர்கள் தருகிறார்களாம்.
நோக்கியா சுரண்டலுக்கு அடியாள் வேலை செய்யும் தி.மு.க!
இவையனைத்தையும் எதிர்த்தும், பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தியும், ஊதிய உயர்வு கேட்டும் கடந்த ஆண்டு சென்னையிலுள்ள ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராடினார்கள். தி.மு.க.வை சேர்ந்த தொழிலாளர் துறை அமைச்சரான தா.மோ.அன்பரசன் – காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க செயலாளரும் கூட – தலைமையில் நிர்வாகம் நடத்திய கட்டப் பஞ்சாயத்தில் தொழிலாளர்களின் போராட்டம் கொடூரமாக ஒடுக்கப்பட்டதுடன், முன்னின்று போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது ஊதிய உயர்வு அளிப்பதாக நிர்வாகமும், தா.மோ.அன்பரசனும் வாக்குறுதி அளித்தார்கள்.
ஆனால், இந்த வாக்குறுதி மாதங்கள் பல கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்த கட்டப்பஞ்சாயத்து ஒடுக்கியது. இந்த போராட்ட விபரங்கள் எதுவும் வெளியுலகுக்கு தெரியாது. அப்படி தெரியாதபடி நிர்வாகமும், தி.மு.க. அமைச்சரும் பார்த்துக் கொண்டார்கள்.
இந்த அடக்குமுறைக்கு பணிவதைத் தவிர இத்தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதான எண்ணத்தை நிர்வாகம் மட்டுமல்ல, ஒவ்வொரு தொழிலாளர்களின் குடும்பமும் ஏற்படுத்தியிருக்கிறது. தங்கைக்கு திருமணம், தம்பியின் கல்வி, அக்கா மகளுக்கு காது குத்தல், திருமணத்துக்கான வரதட்சணை, நகை சேகரிப்பு… என ஒவ்வொரு தொழிலாளியையும் அழுத்தும் பிரச்னைகளுக்கும் குறைவில்லை.
வெளியூரில் வசிக்கும் தொழிலாளியின் குடும்பங்கள், நோக்கியா செல்ஃபோன் மூலமாகவே இவர்களை தொடர்பு கொள்கிறார்கள். பேசுகிறார்கள். குடும்பத்தின் சுக, துக்கங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள். ஆனால், தாங்கள் பயன்படுத்தும் நோக்கியா செல்ஃபோன் வழியே யாரிடம் பேசுகிறோமோ அவரது ரத்தம்தான் அதே ஃபோனில் கலந்திருக்கிறது என்ற உண்மை மட்டும் குடும்பத்தினருக்கு தெரிவதேயில்லை.
ஆமாம், இந்தத் தொழிலாளர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள்.
சென்னையில் ஒரு போபால்?
இந்த பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடூரத்துக்கு வருவோம்.
விஷவாயு கசிந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டது சைட் 3இல். அதாவது அசெம்பிளிங் செக்ஷனில். இந்தப் பிரிவு இத்தொழிற்சாலை இயங்க ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே ‘எதன் காரணமாகவோ’ மூடப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்புவரை இந்தப் பிரிவு செயல்படாமல் ‘சும்மா’தான் இருந்தது. ‘பராமரிப்பு’ வேலைகள் நடப்பதாக நிர்வாகம் சொன்னது. அதன்பின், கடந்த மே மாதம் முதல் இந்தப் பிரிவு இயங்க ஆரம்பித்தது. இப்போது விஷவாயு கசிந்து 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுவே தொழிலாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. எதனால் இந்தப் பிரிவை மூடி வைத்தார்கள்? இடைப்பட்ட காலத்தில் என்ன பராமரிப்பு செய்தார்கள்? பராமரிப்பு சரியாக இருப்பதாக யார் சொன்னதன் பேரில் இப்போது திறந்திருக்கிறார்கள்? இங்கு என்ன விதமான ரசாயன வாயு பயன்படுத்தப்படுகிறது? அது கசிந்தால் என்ன தற்காப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கூடவா நிர்வாகத்துக்கு தெரியாது?
தொடரும் இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு முன்பே சனிக்கிழமை இரவு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகர் உத்தரவின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தொழிற்சாலைக்குள் ஆய்வு நடத்தி ‘ஒரு உண்மையை’ கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் சுகாதாரத் துறையிடம் தடையில்லாச் சான்றிதழை பெறவே இல்லையாம்! எனவே சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே தொழிற்சாலையை இயக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்!
அடப்பாவிகளா, 5 ஆண்டுகளாக ஒரு பன்னாட்டு நிறுவனம் சான்றிதழ் பெறாமலேயே இயங்கி வந்திருக்கிறது என்று கூடவா தெரியாமல் இருந்திருக்கிறார்கள்? ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள்? இதுதான் தமிழகம் ஒளிரும் பட்சணமா?
இந்த அயோக்கியத்தனம் ஒருபுறம் இருக்க, இதன் மறுபுறம் அழுகி சீழ்வடியும் இந்த அமைப்பின் வீக்கத்தில் இருக்கிறது. அதாவது விஷவாயு கசிவு என்பதையே திட்டமிட்டு மூடிமறைத்து ஏதோ சான்றிதழ் பெறவில்லை என்பதான பிம்பத்தை தோற்றுவிக்க ஃபாக்ஸ்கான் நிர்வாகமும், ஆளும் தி.மு.க. அரசும் முயல்கிறது.
உலகமயமாக்கலின் அதிகபட்ச கொடுமை இதுதான். உற்பத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான உற்பத்தி கருவியை பயன்படுத்துகிறோம், எந்தவிதமான ரசாயனங்கள் அதில் கலந்திருக்கின்றன, இந்த ரசாயனங்களை கையாள்வதால் என்னவிதமான நோய்களால் தாங்கள் பாதிக்கப்படுவோம், இதில் குறுகிய காலத்தில் என்ன நோய்வரும், நீண்ட காலத்தில் என்ன பாதிப்பு வரும், இதற்கு மாற்று மருந்தாக எதை உண்ண வேண்டும்…. ஆகிய அனைத்தும் மறைக்க; மறுக்கப்படுகின்றன.
சென்னை நோக்கியா – ஃபாக்ஸ்கான் – தொழிற்சாலையில் நடந்திருக்கும் இந்த விஷவாயு கசிவு ஒரு விபத்தல்ல. தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்து பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் தொழில். இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர் போபாலில் என்ன நடந்ததோ அதுவே இங்கேயும் நடக்கிறது. போபாலில் நகரத்து மக்கள் அனைவரும் வதைபட்டார்கள். இங்கே அது தொழிலாளிகளுக்கு மட்டும் நடக்கிறது.
இன்றும் ராமச்சந்திரா அவசர சிகிச்சை பிரிவில் பல தொழிலாளர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை 25.7.2010 அன்று இதே மருத்துவமனைக்கு மூப்பனாரின் தம்பியைப் பார்க்க வந்த கருணாநிதி இந்த தொழிலாளர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சென்னையை சுற்றியுள்ள புறநகரங்களில் இருக்கும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் எல்லா முறைகேடுகளோடும் இயங்குவதற்கான அனுமதியை தி.மு.கதான் வழங்கியிருக்கிறது. இதற்கான ஆதாயத்தை வட்டம் முதல் அமைச்சர் வரை பெறுகிறார்கள். அவர்கள் பெறும் ஆதாயம் என்பது கோடிகளில் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
இந்த விபத்தை மறைப்பதற்கு நிர்வாகத்தோடு தி.மு.க உள்ளூர் தலைவர்களும் மும்மூரமாக ஈடுபட்டிருந்ததை நேரிலேயே பார்த்தோம். ஆம்புலன்சுகளோடு தி.மு.க கொடி ஏந்திய வண்டிகளும் அன்று பூந்தமல்லி சாலையை நிறைத்திருந்தன. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக வந்திருந்த தொழிலாளர்களை அப்புறப்படுத்துவதில் தி.மு.க தலைவர்கள் முன்னணி வகித்தனர்.
நோக்கியாவின் காலன் ட்யூன்!
நோக்கியா ஃபோனை பயன்படுத்தாதவர் யாருமில்லை. நமது துக்கம், மகிழ்ச்சி, காதல், நட்பு, அரட்டை அனைத்தும் இந்த சிறிய கருவியை வைத்தே இயங்குகின்றன. புகழ்பெற்ற நோக்கியா காலர் ட்யூனை மனப்பாடம் செய்யாதவர் யாருமில்லை. ஆனால் இந்த இனிமையான எலக்ட்ரானிக் பொருளின் பின்னேதான் இத்தகைய சுரண்டலும், தொழிலாளிகளின் இரத்தமும் கலந்திருக்கிறது. சில ஆயிரங்களுக்காக தமது உயிரையும், ஆரோக்கியத்தையும் பணயம் வைத்தே தொழிலாளிகள் வேலை செய்கின்றனர்.
கேமரா உள்ள ஒரு செல்பேசியின் விலை கூட இங்கு தொழிலாளிக்கு சம்பளமாகத் தரப்படவில்லை. இப்படியான கடும் சுரண்டலின்றி பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரமான இலாபம் என்பது சாத்தியமில்லை. இவர்களை இந்தியாவை விட்டு விரட்டாதவரை நமக்கும் விடுதலை இல்லை. அது வரை இந்த தொழிலாளிகள் மெல்ல மெல்ல இறந்து கொண்டுதான் நமக்கான செல்பேசிகளை தயாரிக்க வேண்டும்.
நினைவுகள் அழுத்த செல்பேசியை பார்த்தபடியே ராமச்சந்திரா மருத்துவமனையை விட்டு அகன்றோம். அப்போதும் ஒரு ஆம்புலன்ஸ் இறைந்தபடியே ஒரு பெண்தொழிலாளியோடு வந்திறங்கியது. அந்த ஆம்புலன்சின் சத்தம் ஒரு சுடுகாட்டின் ஒலிபோல இன்னமும் காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது. இனி செல்பேசியின் காலர் ட்யூனைக்கேட்கும் போது அது காலன் ட்யூனாகத்தான் உணருவோம்.
காலனை தொழிலாளிகள் எதிர்கொண்டு வதம் செய்யும் நாளுக்காக காத்திருக்கிறோம்.