ஏப்ரல் 22: தோழர் லெனின் பிறந்த நாள் நினைவுக் கட்டுரை!

சாமானிய உழைப்பாளி மக்களை லெனின் நேசித்தார். லெனினது சவ அடக்கத்தின் போது இது பற்றி நதேஸ்தா கன்ஸ்தன்தீனவ்னா நன்றாகச் சொன்னார்:

”எல்லா உழைப்பாளர்களின் பாலும் அவரது நெஞ்சம் ஆர்வமிக்க அன்பு கொண்டு துடித்தது.”

சோவியத் அரசாங்கத்தின் தலைவராக இருந்த போது விளதீமிர் இலீச் (லெனினது இயற்பெயர்) தொழிலாளர்களுடனும் விவசாயிகளுடனும் விருப்பமுடன் உரையாடினார். மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள், மக்கள் கமிசாரவை உறுப்பினர்கள ஆகியோரின் கருத்தை அறிவது போன்றே தொழிலாளரின், விவசாயியின் மனநிலையை அறிவதும் அவருக்கு முக்கியமானதாகும்.

தொழிலாளர்களுடன் உரையாடுவதற்குக் குறிப்பாக விரும்பினார் விளதீமிர் இலீச். தமது சிந்தனைகளை அவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அவர்களது கருத்துக்களை மிகவும் மதித்தார்.

பெத்னதா (”ஏழ்மை”) என்ற பத்திரிகையில் வந்த விவசாயிகளின் கடிதங்களை உயர்வாக மதித்தார்.

”இவையல்லவா உண்மையான மனித ஆவணங்கள்! எந்தவொரு பேச்சிலும் நான் இதைக் கேட்க முடியாது!”

பெத்னதாவின் ஆசிரியராக இருந்த நான் விவசாயிகளின் கடிதங்களை அவரிடம் எடுத்து வரும்போது என்னிடம் அவர் இவ்வாறு சொன்னார். கிராமத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது, கிராமத்தின் தேவை என்ன என்று அவர் நீண்ட நேரம் கூர்ந்து கேட்பார். ஒரு கடிதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கவனமாகப் பார்ப்பார். வ்பெரியோத், புரொலித்தாரி (”பாட்டளி”) என்ற பத்திரிகைகளுக்காக, தொழிலாளர்கள் எழுதிய கடிதங்களை எவ்வளவு ஆர்வமுடன் அவர் படித்தார், திருத்தினார் என்பது எனக்கு நன்கு நினைவிருக்கிறது.

1920 – 1921 பனிக்காலத்தில் நடந்த உரையாடல் குறிப்பாக என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இது கஷ்டமான காலம். உள்நாட்டுப் போர் முடிந்த நேரம். உழைப்பாளர்களின் தியாகங்களும் இழப்புக்களும் உச்சகட்டத்தை அடைந்திருந்த நேரம். பெத்னதாவுக்கு ஏராளமான கடிதங்களை எழுதியது கிராமம். ஒவ்வொரு கடிதத்தையும் பற்றி விளதீமிர் இலீச் என்னை நிறையக் கேள்விகள் கேட்டார்.

”இதோ, சோவியத் ஆட்சி ஜார் ஆட்சியை விட மோசம் என்று எழுதுகிறார்கள்” என்றேன் நான்.

”ஜார் ஆட்சியை விட மோசமா?” என்று திரும்பக் கேட்டுவிட்டுக் கண்களை நெரித்துக் சிரித்தார் விளதீமிர் இலீச். ”எழுதுவது யார்? குலாக்கா? மத்தியதர விவசாயியா?”

விவசாயிகள் கடிதங்களிலிருந்து மேற்கோள்கள் தந்து, கிராமத்திலுள்ள நிலைமை பற்றி விவரமான அறிக்கை சமர்ப்பிக்கும்படி அவர் கோரினார். உரையாடல் அத்துடன் முடிந்தது.

கட்டாயத் தானியக் கொள்முதல்* பற்றியும், விவசாயிகளின் கடிய நிலைமை பற்றியும் ஐம்பதுக்கு மேற்பட்ட கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. லெனினது சொந்த அறிக்கையில் இவை சேர்க்கப்பட்டன. விவசாயிகள் கடிதங்களின் பொழிப்பு வீணாகப் போகவில்லை என்று நான் விரைவில் உறுதி கொண்டேன். கட்சியின் 10-வது காங்கிரசில் லெனின் சமர்ப்பித்த கட்டாயத் தானியக் கொள்முதலுக்குப் பதிலாக உணவுப் பொருள் வரி விதிப்பது பற்றிய அறிக்கையைக் கேட்ட நான் விவசாயிகளின் கடிதங்களை லெனின் இதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்று பல சந்தர்ப்பங்களில் உணர்ந்தேன்.

அதிலிருந்து பெத்னதாவின் ஒழுங்கான அறிக்கைகள் தமக்குக் கிட்ட வேண்டும் என்று விளதீமிர் இலீச் கோரினார். விளதீமிர் இலீச் நுணுக்கி நுணுக்கி எழுதிய ஒரு துண்டுக் காகிதம் என்னிடம் இன்னும் இருக்கிறது. அதை அப்படியே கீழே தருகிறேன்.

”26.1.1922.

தோழர் கர்பீன்ஸ்கி!

பின்கண்டவை பற்றி எனக்குச் சுருக்கமாக (அதிகபட்சம் 2-3 பக்கங்கள்) எழுத மாட்டீர்களா? விவசாயிகளிடமிருந்து பெத்னதா பத்திரிகைக்கு எத்தனை கடிதங்கள் வந்திருக்கின்றன? முக்கியமாக (குறிப்பாக, முக்கியமாக), புதியதாக இக்கடிதங்களில் என்ன இருக்கிறது? அவர்கள் மனநிலை எப்படி? முக்கியமான பிரச்னை என்ன?

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை (அடுத்தது 15.3.1922) இத்தகைய கடிதங்கள் நீங்கள் எழுத முடியுமா?

அ. கடிதங்களின் சராசரி எண்ணிக்கை

ஆ. மனநிலை

இ. மிக முக்கியமான பிரச்னை.

கம்யூனிச வாழ்த்துக்களுடன்,
லெனின்”

 

லெனின்
விவசாயிகளுடன் தோழர் லெனின்

அரசு, கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாக ஈடுபடுத்தி உழைத்து வந்த விளதீமிர் இலீச் பார்வையாளர்களை வரவேற்கவும் நேரம் கண்டுபிடித்தார். தாமே அவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயிப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிப் பிரதிநிதிகளைச் சந்திக்க விசேஷ தினம் வைத்திருந்தார் லெனின்.

குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும், மரவுரிச் சோடுகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் கிரெம்ளினுக்கு வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையிலும் சுவற்றோரமாகவும் வைத்து விட்டு பதட்டத்துடன் கிசுகிசுத்துக் கொண்டு மக்கள் கமிசாரவைத் தலைவரை, விளதீமிர் இலீச்சைப் பார்ப்பதற்கு எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.

சிறிது நேரமே அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி, உள்ளங்கையால் தலைமுடியை நீவிவிட்டுக் கொண்டு மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ மேசைக்குப் பின்னாலிருந்து அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு, விருந்தினர்களை உட்கார வைத்தார்.

”தாத்தா, நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!”

ஒவ்வொருவரின் பெயரையும், குடும்பப் பெயரையும், தந்தை பெயரையும், அவர் எங்கிருந்து வருகிறார் என்படையும் விளதீமிர் இலீச் கேட்டார். எளிய மனப்பூர்வமான உரையாடல் தொடங்கியது.

விளதீமிர் இலீச் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் குடும்பப் பெயர், தந்தை பெயர் சொல்லி அழைத்தது வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும், அவர்களிடம் இருக்கும் நிலம் எத்தகையது என்றும் அவர் அறிந்திருந்ததும் அவர்களைச் சுரண்டுகிற நிலச்சுவான்தாரரின் பெயரையும் கூட விளதீமில் இலீச் சொன்னதும் விவசாயிகளை இன்னும் அதிகமாக வியப்பில் ஆழ்த்தியது. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தின் பொருளாதாரத்தையும் மிகவும் நன்றாக லெனின் ஆய்வு செய்திருந்தார் என்பது பற்றி விவசாயிகட்கு எதுவும் தெரியாது.

வரவேற்பறையில் ஒருநாள் பின்கண்ட சம்பவம் நடந்தது. வந்தவர்களில் ஒருவர் திடீரென்று குதித்தெழுந்து மிகவும் பதற்றத்துடன் சொன்னார்:

”தோழர் லெனின், இதெல்லாம் என்ன?! அவர்கள் எங்களை முன் போலவே கசக்கிப் பிழிகிறார்கள், கசக்கிப் பிழிகிறார்கள்!”

விளதீமிர் இலீச்சுக்கு ஒன்றும் பிரியவில்லை.

”இவான் ரதியோனவிச், அமைதி கொள்ளுங்கள். என்னவென்று விளக்கிச் சொல்லுங்கள். அவர்கள் என்பது யார்?”

”யார் என்கிறீர்களா? எங்கள் கிராம சோவியத்துக் காரர்கள்! அநியாய வரிகள் தண்டி எங்களை வாட்டி வதைக்கிறார்கள்!”

”அவர்களைத் தேர்ந்தெடுத்து யார்?”

”நாங்கள்தான். வேறு யார்?…”

”வேறு ஆட்களைத் தேர்ந்தெடுங்களேன்!”

”அப்படி முடியுமா என்ன?”

”முடியும். அப்படித்தான் செய்ய வேண்டும். மக்களின் நம்பிக்கைக்கு நியாயமாக நடந்து கொள்ளாத எந்த சோவியத் பிரதிநிதியையும், அவரது பணியின் காலம் முடிவதற்குள் ஒதுக்கி வேறொருவரைத் தேர்ந்தெடுக்க சோவியத் சட்டம் அனுமதிக்கிறது. இதுதான் விஷயம், இவான் ரதியோனவிச்!”

இத்தகைய உரையாடல்களுக்குப் பின்பு அவசியமான சந்தர்ப்பங்களில் உடனடியாக ஆணைகள் பிறப்பித்தார் விளதீமிர் இலீச். தொழிலாளர்கள், விவசாயிகளுடன் நடந்த உரையாடல்களில் கிடைத்த தகவல்கள் அவ்வப்போது தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகத் திகழ்ந்திருக்கின்றன.

___________

(*கட்டாயத் தானியக் கொள்முதல் – உணவுப் பொருள் சேகரிப்பதற்காக அரசு கடைப்பிடித்த நிர்ப்பந்த முறை. அன்னிய இராணுவத் தலையீட்டின் போது, உள்நாட்டுப் போரின் போது (1918 – 1921) இம்முறையைச் சோவியத் அரசு கடைப்பிடித்தது. விவசாயிகளிடமிருந்த அதிகப்படியான உணவுப் பொருளையும், தீவனத்தையும் நிர்ணயமான ஒரு விலை கொடுத்து அரசு எடுத்துக் கொண்டது. 1921-ல் கட்டாயத் தானியக் கொள்முதலுக்குப் பதிலாக நிர்ணயமான உணவுப் பொருள் வரிவிதிக்கப்பட்டது. இது விவசாயிகட்கு அதிக அனுகூலமானது. –

*V.I.Lenin, collected works, “To V.A.Karpinsky”, Vol. 35, p.543.-

__________________________________________________________________

– கர்பீன்ஸ்கி,
“லெனின் சமகாலத்தவர்களின் நினைவுகள்” – நூலிலிருந்து.

__________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

24 மறுமொழிகள்

  1. ஜீவராசிகளின் பரிணாம வளர்சியின் மிக உயர்ந்த கட்டமான மனிதன் வெறும் தோற்றத்தை மட்டும் வந்தடைந்துள்ள நிலையில் உள்ளடக்கத்திலும் மனிதனுக்குரிய பண்பில் வாழ்ந்து, எல்லா சமூக ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிக்க உலகிற்கே வழி வழிகாட்டியவர் தோழர் லெனின். இன்று அவர் பிறந்த நாள். இந்திய விடுதலைக்காக நக்சல்பாரிகள் தலைமையில் அணிதிரள்வோம்.

  2. ஜார் கால ஆட்சியில் தோன்றிய எழுத்துலக மேதைகளான டாஸ்தாஎவ்ச்கி,கார்க்கி போன்றோர் லெனின் போன்ற தலிவர்கள் ஏன் கம்யூனிஸ்ட் ஆட்சியில் தோன்றவில்லை?

  3. மக்களிடம் மண்டி கிடப்பதோ
    துன்பமெனும் வலி!
    கண்ணீர் துடைக்க வந்ததே
    லெனின் எனும் ஒளி!
    இந்த உலகை மாற்றுவோம்
    புரட்சியின் வழி!
    தோழர்களே அதுவே நமது பணி!

  4. ஆவேசத் தோழர்களுக்கு உண்மை சுடுகிறதோ? நியாயமான விமர்சனத்தை தூக்கி எறிந்துவிட்டீர்! லெனின் ஜெயந்தியைக் கடத்தல்/கொலை மூலம் கொண்டாடியது,கொள்கை பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது!

    • மாமேதை லெனின் பிறந்த நாள் அன்று மக்கள் நலனுக்காக போராடும் மாவோக்கள் செய்தது ஒன்றும் தவரில்லையே, முதலில் சட்டிஸ்கர், மந்திய பிரதேசத்தில் சென்று பழங்குடி மக்கள் படும் அவலத்தை பார்த்து வந்து பேசுங்கள். மிட்டலுக்காகவும் டாட்டாவுக்காகவும் அவர்களை மாந்த இனத்தைக் காட்டிலும் கொடுமையாக நடத்தப் படுவதை அரிவீர்கள். இந்தியாவின் முல்லிவாய்காள் உங்களுக்கு தெறியும்.

      மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டிய இந்திய அரசாங்கமும் அவர்கள் அதிகாரிகளும் அதை விடுத்து கார்ப்பிரேட் முதலாளிகலுக்கு பணியாற்றி அப்பாவி பழங்குடி மக்களுக்கு இன்னற்ற துயரங்களை செய்து வருகிறார்கள். அப்படி செய்பவர்களை மக்கள் முன் நிறுத்தி மக்களாள் விசாரிக்கப் பட்டு மக்களாள் தீர்ப்பு வழங்கும் படி செய்கிறார்கள். இந்த காரியத்தை ஏன் உங்கள் அரசாங்கம் செய்ய முடிவதில்லை.

      உங்கள் இந்திய அரசாங்கத்தின் ஜனநாயக போலி தனத்துக்கு ஒரு சவலாக மாறிவிடும் என்பதால் அவர்களையும் தீவிரவாதிகள் என்று முத்திரையிட்டுள்ளார்கள். எது உண்மை என்று தெறியாமல் பொது புத்தியுடனே வாழும் உங்களை போன்றோர்களை பார்ப்பதால் தான் அவர்களுக்கு சுடுகிறது. எது உண்மை என்று பிறித்து பார்க்கும் ஆற்றலை பெருக்கிக் கொண்டால் எது நியாயமான விமர்சனம் என்று உங்களுக்கு விளங்கும்.

      லெனின் பிறந்த நாளில் மக்கள் பணியில் அயராது உழைக்கும் தோழ்ர்களுக்கு வாழ்த்துக்கள்

      • அப்பாவிகளைக் கொலை செய்தது சரிதான் என வாதாடுவோரிடம் என்ன சொல்லி நியாயம் கேட்பது! அரசாங்க ஊழியர் அட்டூழியம் செய்கின்றனர் எனில் புது யுக லெனின் கள் செய்தது மட்டும் யாகமா?

        மற்றவரை பழிபோடும் எந்தவித துப்பாக்கி இயக்கங்களும் நேர்மையற்றவர்களே: புனிதர்கள் அல்ல..பயங்கரவாதிகள் என ஒத்துக் கொண்டதற்கு பாராட்டுக்கள்!

        இந்த நவயுக லெனின் களை எதிர்த்து அந்த மாவட்ட மக்கள்,ஆர்ப்பாட்டம் செய்துள்ளமை,மக்களின் காவலர்களுக்கு அவமானம்..கேவலம்!

        கேவலமான, கொள்கை விறோத செயல்களை நியாயப்படுத்துவது, தாங்கள் ஒன்றும் புனிதரல்ல..சந்தர்ப்பவாதிகளே என்பதை நிரூபிக்கிறது!

        • //இந்த நவயுக லெனின் களை எதிர்த்து அந்த மாவட்ட மக்கள்,ஆர்ப்பாட்டம் செய்துள்ளமை,மக்களின் காவலர்களுக்கு அவமானம்..கேவலம்!//

          அவர்களை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களா? ஏங்கே நடந்தது யார் தலைமையில் நடந்தது என்று பட்டியல் இட முடியுமா?. மக்கள் ஆதரவு உள்ளதால் தான் அவர்கள் இன்றலவும் போராட முடிகிறது முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்.

          //கேவலமான, கொள்கை விறோத செயல்களை நியாயப்படுத்துவது, தாங்கள் ஒன்றும் புனிதரல்ல..சந்தர்ப்பவாதிகளே என்பதை நிரூபிக்கிறது!//

          அவர்களின் கொள்கை பற்றி உங்களுக்கு என்ன தெறியும்? சரி அவர்கள் கொள்கைகளை பட்டியல் இடுங்கள் பார்ப்போம். நான் என்னை புனிதன் என்று எப்பொழுதும் சொன்னதில்லை.

          பழங்குடி மக்களை அவர்கள் வாழும் இடங்களில் இருந்து வலுக்கட்டாயமாக இடம் பெயர செய்து அவர்களின் தத்தம் வாழ்வுரிமையை பறிக்க முயலுவதின் பெயர் சந்தர்பவாதம் இல்லாமல் தியாகமா?

          • செந்தமிழன்… நக்சல்களை நீங்கள் ஆதரிப்பதால் அவர்கள் எப்போதுமே தவறு செய்யமாட்டார்கள்; அனைத்து நக்சல்களும் நல்லவர்கள்; அதே போன்று அனைத்து அரசு அதிகாரிகளும் மக்களுக்கு விரோதமானவர்கள் என சொல்ல வருகிறீர்களா?

      • எதிர் வாதம் வைத்தால், உடனே கார்பரேட், முதலாளித்துவம் என்று அரைத்த மாவையே அரைக்கிறீர்களே. அந்த ஊரில் உள்ள நிலைமையை நேரில் பார்த்துவிட்டு பேச சொல்லும் நீங்கள் அந்த கலெக்டரைப் பற்றி அறிந்து கொண்டு தான் பேசுகிறீர்களா? அவர் ஏழைகளுக்கு எதிராக செயல்பட்டவர் போல பேசுகிறீகளே, அதற்கு ஏதேனும் சான்று உண்டா?

        நான் மத்தியபிரதேசத்தில் ஒரு கலெக்டரை நேரில் சந்தித்து பேசி உள்ளேன். டிஸ்டிரிக்ட் நோடல் ஆபிசர் (தமிழாக்கம் தெரியவில்லை) – கலெக்டருக்கு அடுத்த ரேங்கில் உள்ளவர். அவரோடு ஒரு வாரம் கிராமம் கிராமமாக சுத்தி இருக்கிறேன். மக்களோடும், ஆரம்ப கல்வி ஆசிரியர்களோடும், ஆரம்ப சுகாதார மைய ஆயாவோடும் பேசி இருக்கிறேன் (அந்த ஆபிசர் முன்னிலையிலும், தனிமையிலும்).

        அங்கே முன்னேற்றம் கொண்டு வருவதற்கு அந்த கலெக்டர்கள் எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்று நேரில் போய் பார்த்து சொல்லுங்களேன். வேலைக்கு உணவு திட்டத்தில் ஒரு நாளுக்கு நூறு ரூபாய் என்று வேலை செய்யவரும் பலர், கையில் நூறு ரூபாய் கொடுத்ததும் அடுத்தநாள் வேலைக்கு வரமாட்டார்கள். அந்த நூறு ரூபாய் செலவான பிறகுதான் மீண்டும் வருவார்கள். ஆரம்ப கல்வி ஆசிரியர் நாங்கள் சென்ற அன்று மதியம் 12.30 மணிக்கு தான் பள்ளிக்கு வந்தார். விசாரித்துப் பார்த்தால் அந்த ஊரில் மாணவர்கள் எல்லம் மதியம் 12.30 மணிக்கு போய் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டுக்கு போய்விடுகின்றனர். பெற்றோரைக் கேட்டால், அக்கரையே இல்லாமல் பதில் சொல்கின்றனர்.

        அரசின் பல திட்டங்கள் இப்படி மக்களின் சோம்பேறித்தனம், அறியாமையால் வீணாக போகும் அதே நேரம் அத்திட்டங்களை முறையாக பயன்படுத்தி பயனடைந்த குடும்பங்களையும் சந்திதோம். பல சுய உதவிக் குழுக்கள் நல்ல வருமானம் ஈட்டுகின்றனர். சுயமுயற்சியால் எழுதப்படிக்க கற்றுக்கொண்டு வங்கி கணக்குகளைக் கையாளுகின்றனர். ஆகவே பொத்தாம்பொதுவாக அரசு அதிகாரிகளைக் குறைக்கூறுவதை விட்டுவிட்டு மக்களுக்கு விழிப்புணர்வும், சுறுசுறுப்புத் தன்மையும் பெற வகை செய்யுங்கள்.

  5. // ”அவர்களைத் தேர்ந்தெடுத்து யார்?”

    ”நாங்கள்தான். வேறு யார்?…”

    ”வேறு ஆட்களைத் தேர்ந்தெடுங்களேன்!”

    ”அப்படி முடியுமா என்ன?”

    ”முடியும். அப்படித்தான் செய்ய வேண்டும். மக்களின் நம்பிக்கைக்கு நியாயமாக நடந்து கொள்ளாத எந்த சோவியத் பிரதிநிதியையும், அவரது பணியின் காலம் முடிவதற்குள் ஒதுக்கி வேறொருவரைத் தேர்ந்தெடுக்க சோவியத் சட்டம் அனுமதிக்கிறது….” //

    கட்சித் தலைமை பேசுகிற பேச்சா இது என்று நம் ஜனநாயக அரசியல்வாதிகள் பொருமுவார்கள்..

  6. தோழர் லெனினது உன்னத வாழ்க்கையே நாளும் நமது படிப்பினைகள்.

  7. கலக்டர் துரைமார் நல்லவுன்கலாம். அம்பி தனமான மூட நம்பிக்கை. நிலவுகின்ற அரசு அமைப்பின் அத்தனை அயோக்கியத்தனங்களின் பிரதிநிதியாக செயல்படுபவர்தான் கலக்டர்.அதுக்கு ஒரே ஒரு சாம்பிள். பட்டினி சாவுகளை எப்படி மறைப்பது ன்னு I.A..S.பயிற்சிலேயே சொல்லித்தரப்படுகிறது.

    அவரோட தனிப்பட்ட கல்யாண குணங்களை அலசி ஆராய இது ஒன்னும் matrimonial column இல்லை.

    • அதேபோல் கடத்தல்காரனுக்கு கொள்கை,ஏழைப் பங்காளன்,விடுதலைப் போராளி என்று அலங்காரம் சூட்டுவதும்,நியாயம் கற்பிப்பதும் கேனத்தனமானது..எடுபடாது!

      நம் துப்பாக்கி நியாயம் தான் பேசும் என நம்புவதும்,பேசுவதும் பலமான மூடநம்பிக்கை அன்றி வேறொன்றுமில்லை!

      • மாவோயிஸ்டுகள் ஏழைப் பங்காளர்கள் இல்லாம அம்பானிக்கு பங்காளியா.கொண்ட கொள்கைக்காக உயிரையும் துறக்க சித்தமாக போராடும் அவர்களை விடுதலை போராளிகள் என சொல்வதில் என்ன தவறு.அவர்களை கடத்தல்காரன் ன்னு இழிவுபட சொல்றதுதான் கேனத்தனம்.அவர்கள் கஞ்சா கடத்தினார்களா.சாராயம் கடத்தினார்களா.அரசு தன சொந்த நாட்டு மக்கள் மீது தொடுத்திருக்கும் போரில் மாவோயிஸ்டுகள் கலக்டரை போர் கைதியாக சிறைஎடுத்திருக்கிரார்கள்.தங்கள் கோரிக்கைகளில் கணிசமான அளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர்.கேனைகளுக்கு இதெல்லாம் புரியாதுதான்.

        \\நம் துப்பாக்கி நியாயம் தான் பேசும் என நம்புவதும்,பேசுவதும் பலமான மூடநம்பிக்கை அன்றி வேறொன்றுமில்லை!//
        வந்துட்டார்யா பகுத்தறிவு சிங்கம்.அரசு தரப்பில் நியாயம் உள்ளதா,மாவோயிஸ்ட் தரப்பில் நியாயம் உள்ளதான்னு ஒரு நாலு வரி எழுதிப் போடுங்களேன்.எது மூட நம்பிக்கைன்னு பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.

        • எல்லாவித புரட்(சி)டுக் குழுக்களுமே தஙளுக்குத் தானே ஏழைப் பங்காளன் பட்டம் கொடுத்துக் கொள்வதை ஈர வெங்காயத்தார் உணர்வது எப்போது?

          கடத்தியதற்கும்,இரண்டு உயிர்களைப் பறித்ததற்கும் உமக்குக் கூறிக் கொள்ள நியாயம் உண்டெனில் அரசாங்கமோ,பாதிக்கப்பட்டவர்க்ளோ நடவடிக்கை எடுத்தாலும் அவர்களும் நியாயமே பேசுவர்!

          இங்கு யாருக்கும் வெTகமில்லை…குற்றம் புரிய!

          • கலெக்டர் என்ன வேற்றுநாட்டுக் காரரா? இல்லை குண்டடிபட்டு செத்த இருவரும் அந்நியர்களா? என்னெ மொன்னைவாதம்!

            ஆளக் கடத்திட்டு சாராயக் கடத்தலப் பத்தி பேசுகிறீர்..வெத்துவேட்டு வாதம்!

            ஒத்துக்கொண்டாலும் இல்லையானாலும் இந்தக் கடத்தல்/கொலைக் கலாச்சாரம் மக்கள் ஆதரவு பெறாது! சில கும்பல்கள் ஆதரவு தான் கிடைக்கும்!

            ஆயுதம் தரிக்காதவன் அம்பி எனில்,ஆயுதம் தரித்தவன் அறிவீனன் எனலாம்!

            • \\ எல்லாவித புரட்(சி)டுக் குழுக்களுமே தஙளுக்குத் தானே ஏழைப் பங்காளன் பட்டம் கொடுத்துக் கொள்வதை ஈர வெங்காயத்தார் உணர்வது எப்போது?//
              எம்.ஜி.ஆர். ஜெயலலிதா,விஜயகாந்த் போன்ற மாமேதைகளின் முன்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் புரட்சியை வைத்துதான் எல்லோரையும் எடை போடுவீங்களோ. ஒரு அரசியல் இயக்கம் யாருக்கான நலனை முன்வைத்து போராடுகிறது என்பதை வச்சு ஏழைப் பங்காளர்களா இல்லையா என்பதை முடிவு பண்ணிக்கலாம்.இது கூட புரியலன்னா நீர்தான் ஈர வெங்காயம்.

              \\கடத்தியதற்கும்,இரண்டு உயிர்களைப் பறித்ததற்கும் உமக்குக் கூறிக் கொள்ள நியாயம் உண்டெனில் அரசாங்கமோ,பாதிக்கப்பட்டவர்க்ளோ நடவடிக்கை எடுத்தாலும் அவர்களும் நியாயமே பேசுவர்!
              இங்கு யாருக்கும் வெTகமில்லை…குற்றம் புரிய!//

              சும்மா கிடந்த சங்கை ஊதியது அரசாங்கம்தானே.இந்திய மக்கள் அனைவருக்கும் உரிமையான கனிம வளங்களை முதலாளிகள் கொள்ளையிட வசதியாக பல கோடி மக்களின் வாழ்வாதரங்களை பறிப்பதும்,வாழ்விடங்களை விட்டு துரத்துவதும் எதிர்ப்போர் மீது போர் தொடுப்பதும் என்ன வகையான நியாயம்.எந்த வழியில் போராட வேண்டும் என்பதை மக்களுக்கு நிர்ணயம் செஞ்சு கொடுக்கிறதே அரசுதான்.அதுனால அரசும் நியாயம் பேச முடியும் னு கதை விட வேண்டாம்.நம்புவதற்கு மக்கள் ஏமாளிகளில்லை

              \\கலெக்டர் என்ன வேற்றுநாட்டுக் காரரா? இல்லை குண்டடிபட்டு செத்த இருவரும் அந்நியர்களா? என்னெ மொன்னைவாதம்!

              ஆளக் கடத்திட்டு சாராயக் கடத்தலப் பத்தி பேசுகிறீர்..வெத்துவேட்டு வாதம்!//

              சல்வா ஜுடும் சிறப்பு ஆயுத படை இப்படி பல பேர்ல வந்து பழங்குடி மக்கள் மீது கொலை வெறியாட்டம் போடும் வெறியர்களும்,அவர்களை இயக்கும் அரசை வழி நடத்துவோரும்,அந்த அரசின் கங்காணி கலக்டரும் இந்த நாட்டுக்காரர்கல்தான்.அவர்கள் வேட்டையாடும் பழங்குடி மக்கள் தான் வேற்றுநாட்டுக் காரர்கள்.

              \\ஒத்துக்கொண்டாலும் இல்லையானாலும் இந்தக் கடத்தல்/கொலைக் கலாச்சாரம் மக்கள் ஆதரவு பெறாது! சில கும்பல்கள் ஆதரவு தான் கிடைக்கும்!//

              மக்கள் ஆதரவு இல்லாமலா மாவோயிஸ்ட் கள் இவ்வளவு வலுவாக இருக்கிறார்கள்.நீர்தானய்யா மொன்னை.

              \\ஆயுதம் தரிக்காதவன் அம்பி எனில்,ஆயுதம் தரித்தவன் அறிவீனன் எனலாம்!//

              இங்கயும் ஏனய்யா அம்பிகளை இழுக்கிறீர்.ஆயுதம் தரித்தவன் அறிவு பற்றிய ஆராய்ச்சி இருக்கட்டும்.ஓடிசாவிலும் சத்தீஸ்கரிலும் அவர்களை ஆதரிக்கும் சாதாரண படிக்காத பழங்குடி மக்களின் கேள்விகளுக்கே பதில் சொல்ல முடியாம ஓடி ஒழியுது மெத்தப் படித்த அதிகார வர்க்கம்.

  8. ஏற்கனவே புத்தகத்தில் படித்தது என்றாலும், இதுபோன்ற நினைவூட்டுகள் தேவைப் படுகின்றன. நன்றி

Leave a Reply to உண்மைத்தோழன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க