என்னதான் பன்றிக்கு பவுடர் போட்டு சிங்காரித்து வளர்த்தாலும் அது நரகலைக் கண்டால் நாலு கால் பாய்ச்சலில் பாயத் தானே செய்யும்? இந்த ஆவலாதிப் பாய்ச்சலைத் தான் சமீபமாகாலமாக ஐ.பி.எல் மெகா சீரியலில் மக்கள் கண்டுகளித்து வருகிறார்கள். எந்த வடிவம் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் என்று ஐ.பி.எல் முதலாளிகளும் முதலாளித்துவ ஊடகங்களும் ஓதி வந்ததோ அதே வடிவம் தனது சிங்காரங்களைக் கலைத்தெறிந்து விட்டு அம்மணக்கட்டையாக நிற்பது தான் இதன் சிறப்பு.
கடந்த பதினான்காம் தேதி இந்தியா டி.வி என்கிற தனியார் தொலைக்காட்சி நடத்திய இரகசிய விசாரணையை பகிரங்கமாக வெளியிடுகிறது. இரகசிய கேமராவில் பதிவான காட்சிகளில் நான்கு ஐ.பி.எல் வீரர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு மோசமாக விளையாட முன்வந்தது (ஸ்பாட் பிக்சிங்) அம்பலமானது. எந்தக் கூச்சமும் இன்றி, நோ பால் போட இன்ன ரேட், வைடு பால் போட் இன்ன ரேட் என்று சாவகாசமாக இந்த வீரர்கள் பேரம் பேசியதை நாடே பார்த்தது. விசாரணையை நடத்திய இந்தியா டி.வி, பிரச்சினை இது போன்ற ஒரு சில கருப்பு ஆடுகள் தான் என்பது போலவும், பிற சீனியர் வீரர்கள் காசு வாங்காத யோக்கியர்கள் என்றும் சொல்லி நெருப்பின் மேல் வைக்கோலைப் பரப்பி அமுக்கப் பார்த்தாலும் புகை இன்னும் அடங்கிய பாடில்லை.
இந்த ஐ.பி.எல் சீசனில் மட்டும் சுமார் 5000 கோடி ரூபாய்கள் அளவுக்கு சூதாட்டம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி சூதாட்டத்தில் புழங்கும் பணத்தின் அளவு தான் இந்திய அளவில் தரகு முதலாளிகளின் நாவில் எச்சிலூற வைத்துள்ளது. போட்டியில் ஒரு அணி தோற்கலாம்; ஆனால், அதன் உரிமையாளருக்குத் தோல்வியே கிடையாது என்பது தான் ஐ.பி.எல்லின் ஆதார விதி. இதனால் தான் தனது விமானக் கம்பெனி நட்டத்தில் மூழ்கிக் கிடப்பதாக வங்கிகளின் வாசலில் தட்டேந்தி நிற்கும் சாராய மல்லையா, ஆயிரக்கணக்கான கோடிகளை ஐ.பி.எல்லில் கொட்டுவதற்கும் வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கும் தயங்குவதில்லை.
இந்த ஸ்பாட் பிக்சிங் மேட்டரை ஆங்கில ஊடகங்கள் மென்று முழுங்குவதற்குள் அடுத்த பிடி அவலை அள்ளி அவர்கள் வாயில் திணிக்கிறார் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான். கடந்த பதினாறாம் தேதி தனது அணி ஆடிய மேட்ச் ஒன்றைக் காண மும்பை வான்ஹடே மைதானத்துக்கு தனது பிள்ளைகளோடு வந்த ஷாருக்கான், மேட்சின் முடிவில் தனது அணி வென்றதை அடுத்து கொஞ்சம் சோம பானத்தை உள்ளே விடுகிறார். பண போதையோடும் புகழ் போதையோடும் அதிகார போதையோடும் சாராய போதையும் சேர்ந்தது கிறுக்குப் பிடித்த குரங்கு கள்ளைக் குடித்த கதையானது. மேட்ச் முடிந்த பின் மைதானத்துக்குள் தனது நண்பர்களோடு சென்று கொண்டாடலாம் என்று உள்ளே நுழைய முற்பட்டவரை மைதானத்தின் காவலர் வழிமறிக்கிறார்.
அமெரிக்க காவலர்கள் வழிமறித்துத் தடுத்தால் பம்மிப் பதுங்கும் இந்த சூரப்புலி, வான்ஹடே மைதானத்தின் நோஞ்சான் காவலரிடம் பாய்ந்து பிடுங்குகிறது. கேமாராக்களின் வெளிச்சத்தில் அந்தக் காவலரிடம் மல்லுக்கு நிற்கும் அந்தக் காட்சிகளை நீங்கள் அவசியம் காண வேண்டும். பண பலம், அதிகார பலம் போதாதற்கு மும்பை தாதா உலகத்தோடு தொடர்பு என்று ஷாருக்கானுக்கு இருக்கும் அத்தனை பின்புலத்துக்கும் அஞ்சாமல் அந்த காவலர் துணிச்சலாக விசில் அடித்து வாசலைக் காட்டுகிறார். அமெரிக்காவில் பணிந்து குழைந்து ‘வீரம்’ காட்டிய பாலிவுட்டின் பாதுஷாவுக்கு பாடம் நடத்தி வழியனுப்பியுள்ளார் அந்தக் காவலர்.
மேற்படி குழாயடிச் சண்டை ஊடகங்களில் நாறிக் கொண்டிருந்தாலும் கொஞ்சமும் கூச்சமின்றி தனது செயலை நியாயப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறார் ஷாருக்கான். இந்த சம்பவம் பரவலான கவனத்தைப் பெற்றதையடுத்து ஷாரூக் மேல் நடவடிக்கை எடுத்திருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அடுத்து ஐந்தாண்டுகளுக்கு அவர் மும்பை வான்ஹடே மைதனத்துக்குள் நுழைய தடைவிதித்துள்ளது. குடித்து விட்டு பச்சையாக ரவுடித் தனத்தில் ஈடுபட்ட ஷாருக்கான் ஐ.பி.எல் அணியை நடத்தும் உரிமையை திரும்பப் பெறத் துப்பில்லாமல் ஐந்தாண்டுத் தடையென்று மயிலறகால் தடவிக் கொடுத்துள்ளனர்.
ஷாருக் விவகாரம் அடங்கும் முன் அடுத்தடுத்த அசிங்கங்கள் ஒவ்வொன்றாக மேலெழுந்து வந்து கொண்டே இருக்கின்றன. 18ம் தேதி லூக் போமெர்ஸ்பாக் என்கிற ஆஸ்திரேலிய ஐ.பி.எல் ‘வீரர்’ சித்தார்த் மல்லையா (சாராய மல்லையா மகன்) நடத்திய குடிவெறிப் பார்ட்டியில் கலந்து கொள்ள வந்த அமெரிக்கப் பெண் சோகல் ஹமீதை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விவகாரம் வெடித்தது. அடுத்து இரண்டே நாளில், மும்பை ஜூஹூ பீச் அருகே ஒரு ஹோட்டலில் நடந்த ரேவ் பார்ட்டி எனப்படும் போதை மருந்துப் பார்ட்டியை ரெய்டு செய்த போலீசார், இரண்டு ஐ.பி.எல் ‘வீரர்களை’ கைது செய்துள்ளது. மேலும் பார்ட்டி நடந்த இடத்திலிருந்து கெண்ணாபீஸ், கொக்கெய்ன் போன்ற அதி வீரியமுள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
லூக் அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற விவகாரத்தில் கருத்துத் தெரிவித்துள்ள சாராய மல்லையாவின் ஸ்ரேஷ்ட்ட புத்திரன் சித்தார்த் மல்லையா, பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தை சரியில்லையென்றும், சம்பவம் நடந்த நாளில் அந்தப் பெண் தன்னிடம் ஓவராக இழைந்ததாகவும் டிவிட்டரில் எழுதியிருக்கிறார். பாலியல் கொடூரர்கள் வழக்கமாக தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்க கடைபிடிக்கும் அதே உத்தியைத் தான் சித்தார்த்தும் கையாண்டிருக்கிறார். ஒரு வாதத்திற்கு அதை ‘உண்மை’ என்றே வைத்துக் கொண்டாலும் விருப்பமில்லாத பெண்ணை கட்டாயப்படுத்து உரிமை உனக்கு எங்கே இருந்து வந்தது என்று கேட்கத் துப்பில்லாத ஊடகங்கள், அவரிடம் போய் ‘எதாவது விளக்குங்களேன்’ என்று வழிந்திருக்கின்றன. ஊடகங்களின் உண்மையான யோக்கியதையை நன்கு அறிந்து வைத்திருக்கும் சித்தார்த் மல்லையா, மூஞ்சியில் காறி உமிழ்வதைப் போல் நறுக்கென்று காரின் கதவை அடைத்து விட்டுச் சென்றுள்ளார்.
அளவற்ற பணம், புகழ் போதை, அதிகாரத் திமிர் மற்றும் மேட்டுக்குடி கொழுப்பு என்கிற கலவையான ராஜபோதையில் உருண்டு புரண்டு திளைக்கும் தரகு முதலாளிகளும் அவர்கள் வீட்டுச் செல்லக் குட்டிகளும் உண்மையில் தங்கள் சொந்த வாழ்வில் பின்பற்றும் அறம் என்னவென்பதை இந்த ஐ.பி.எல் அசிங்கங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. சித்தார்த் மல்லையாவுக்கு சற்றும் சளைக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதலாளி இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் வாரிசு கடந்த சில வாரங்களுக்கு முன் தான் மும்பையில் இரவு நேரம் கெட்ட நேரத்தில் சரக்கு சப்ளை செய்யவில்லை என்று ஒரு ஹோட்டலில் தகராறு செய்து, தட்டிக் கேட்க வந்த போலீசாரையும் தாக்கியதாக செய்திகள் வெளியானது.
ஐ.பி.எல் என்பதே விளையாட்டு என்கிற அந்தஸ்த்தை இழந்து வெறும் முதலாளிகளின் மூணு சீட்டு என்பதாக சுருங்கிப் போய் விட்ட நிலையில், அதன் தர்க்கப்பூர்வமான விளைவுகள் மட்டும் வேறெப்படி இருக்கும்? ஊரில் கிராமத்தில் சந்து பொந்துகளில் குத்தவைத்து மூணு சீட்டு ஆடும் லும்பன்கள் வாயில் சுவர்முட்டியும், நாட்டுச் சாராயமும் வழிகிறதென்றால், ஐ.பி.எல் வீரர்கள் கொகெய்னை உறிஞ்சுகிறார்கள். என்ன இருந்தாலும் சர்வதேசத் தரமல்லவா?
மனமகிழ் மன்ற சீட்டாட்டக் கிளப்பின் புகை மண்டிய மூடிய அறைக்கும் திறந்தவெளி ஐ.பி.எல் மைதானத்துக்கும் ஐந்து வித்தியாசங்களைத் தோற்றத்தில் கண்டு பிடிக்க முடிந்தாலும் சாராம்சத்தில் ஒன்று தான். மேலே விவரிக்கப்பட்ட சம்பவங்களனைத்தும் இரண்டு நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து நடந்தவைகள். இது இத்தோடு ஓயப்போவதில்லை – ஐ.பி.எல் இருக்கும் வரை இது போன்ற கேலிக் கூத்துகள் தொடர்ந்து நடக்கத் தான் போகிறது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான டிராமாக்களை அரங்கேற்றுவதற்கு இந்தப் போட்டிகளை நடத்துபவர்களின் பணக் கொழுப்பும் அதிகாரத் திமிரையும் தாண்டி வேறு தேவைகளும் காரணங்களும் இருக்கின்றன.
கடந்த ஆண்டு தொலைக்காட்சி நேயர்கள் ரேட்டிங்கை விட இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகள் துவக்கத்திலேயே 18.7% சரிந்திருந்த்து. 9 அணிகள் விளையாடும் இந்த சீசனில், லீக் ஆட்டங்களையும் இறுதியாட்டத்தையும் சேர்த்து மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 76. என்னதான் பாரின் சரக்கு என்றாலும், ஓவராகப் போனால் வாந்தியில் தானே முடிந்தாக வேண்டும்? சலிப்புற்ற தொலைக்காட்சி பார்வையாளர்களை இழுத்துப் பிடிக்க வழக்கமான கிரிக்கெட் போதையைத் தாண்டி வேறு கிளுகிளுப்புகளும் தேவைப் படுகிறது. விறுவிறுப்பு – மேலும் விறுவிறுப்பு – மேலும் மேலும் விறுவிறுப்பு என்கிற இந்த நச்சுச் சுழற்சியில் அவர்கள் விரும்பியே தான் மாட்டிக் கொண்டுள்ளனர்.
வெறும் மாமியார் மருமகள் சண்டை என்றால் எத்தனை வருடங்கள் தான் பார்ப்பார்கள்; ஒரு கள்ளக் காதல், ஒரு கொலை என்று இருந்தால் தானே ஆட்டம் களை கட்டும்? அந்த கிளுகிளு ஊறுகாய்கள் தான் இது போன்ற பொறுக்கித்தனங்களை ஊடகங்கள் மேலும் மேலும் சுவை சொட்டச் சொட்ட நமக்கு வழங்குவது.
ஊடங்கள் ஐ.பி.எல்லில் நடக்கும் கூத்துகளை கடைவிரிப்பது அதை ஒழித்துக் கட்டுவதற்காக இல்லை. தங்களுக்கு கோடிக்கணக்கில் விளம்பரங்கள் மூலம் படியளக்கும் பொன் முட்டையிடும் வாத்தை அத்தனை சீக்கிரம் கொன்று விட முதலாளித்துவ ஊடகங்களும் முட்டாள்கள் அல்ல. தொய்வாகப் போய்க் கொண்டிருந்த திரைக்கதையின் நடுவே ஒரு கற்பழிப்புக் காட்சியை வைப்பதன் மூலம் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு இழுத்து வரும் அதே பழைய கோடம்பாக்கத்து உத்தி இது. அதனால் தான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடக்கும் அத்தனையையும் கண்டும் காணாததும் போல் கடந்து செல்கிறது.
ஆப்ரிக்க சப்சஹாரா பாலைவனங்களில் வாழும் குழந்தைகளை விட அதிகளவில் சத்துக்குறைவால் வாடும் நோஞ்சான் குழந்தைகளைக் கொண்டுள்ள ஒரு நாட்டில், நாலில் ஒருவர் மூன்று வேளை சோறில்லாமல் பட்டினியில் வாடும் வறியவர்களைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் இப்படிப் பட்ட ஆடம்பரக் கூத்துகளை எந்த வெட்கமும் இன்றி நடத்த வேண்டுமென்றால் அதற்கு ஹிட்லரின் இதயமும், அம்பானியின் மூளையும், மன்மோகனின் ஆன்மாவும், மல்லையாவின் உடலையும் கொண்டு பிறந்த ஒரு கலவையான விஷஜந்துவால் தான் முடியும்.
ஐ.பி.எல்லின் வண்ணமயமான காட்சிகளைக் கண்டு மகிழும் ரசிகர்கள் அவர்களை வைத்து நடத்தப்படும் இந்த நாடகத்தை எப்போது உணரப் போகிறார்கள்? முழுமையான மேட்டுக்குடி கேளிக்கையாள மாறி விட்ட இந்த ஆட்டத்தில் இன்னும் கொலை மட்டும்தான் நடக்கவில்லை. அது நடந்தாலும் ஆச்சரியமில்லை.!
__________________________________________
– தமிழரசன்
__________________________________________
ஆதாரங்கள்:
- Siddharth Mallya’s logic is worth dying for
- Two IPL players held at Mumbai rave
- Another RCB Player KP Appanna Identified In IPL Molestation Row
- IPL Scandal Intensifies: Notice Served To Siddharth Mallya
- In IPL, scandals continue
- Indian Premier League cricket stung by scandals
- 2012 Indian Premier League Criticism and controversy – Wiki
- Audience measurement – Wiki
- Shah Rukh Khan banned from Mumbai stadium after row
- Shah Rukh Khan defends ‘scuffle’ in Mumbai
- Pomersbach case: Defamation notice for Sidhartha Mallya for his tweets
- Busted rave party in Mumbai was advertised on Facebook: Cops
- Mumbai police bust rave party, two IPL players questioned
- IPL spot-fixing scandal: channel stands by sting operation
- IPL sting: Who are Sudhindra, Srivastava, Mishra?
- Because You’re Worth It: The Indian Premier League, Sex, Lies And Capitalism
- Decadence and the IPL
__________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
- ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா!
- ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?
- BCCI : பில்லியனர்கள் கட்டுப்பாட்டில் இந்திய கிரிக்கெட்- பி சாய்நாத்
- உங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா?
- டெண்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி!
- உழவர்கள் மடியும் போது கிரிக்கெட் ஒரு கேடா?
- No Ball: சாமியாடும் இந்திய ஊடகங்கள் !
- சச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம் !!
//பன்றிக்கு பவுடர் போட்டு வளர்த்தாலும் அது நரகலைக் கண்டால்பாயத் தானே செய்யும்?//
தாழ்த்தப்பட்டவர்களின் பண்பு குறித்து சொல்லப்படும் பார்பனீய சொலவாடை அடிக்கிறது. சகிக்க முடியவில்லை. உபதேசம் ஊருக்கா ?
அந்த வார்த்தை எந்த இடத்தில சொல்லப்பட்டது என்பதை பொருத்து தானே அர்த்தம் மாறும்.இங்கே எங்கு தாழ்த்தப்பட்டவர்கள் வந்தார்கள் .
“எதிர்ப்பு” என்ற வார்த்தையின் அர்த்தம் யாரை எதிர்க்கிறோம் என்பதில் இருந்து மாறுகிறதே . கட்டுரை மிகவும் அருமை .கட்டுரையை சார்பாக
விமர்சிக்கலாமே .
சரியாக சொன்னீர்கள் ,
மிகவும் அருமையான கட்டுரை.பாராட்டு.
//தாழ்த்தப்பட்டவர்களின் பண்பு குறித்து சொல்லப்படும் பார்பனீய சொலவாடை அடிக்கிறது// அப்படி சொல்ல முடியாது..பழமொழி என்பது உவமை மாதிரிதானே! எங்கே எதற்காக பயன்படுத்துகிறோம் என்பதுதான் கேள்வி..ஐபிஎல் சீனிவாசனின் கம்பெனி இந்தியா சிமென்ட்ஸ் சென்ற ஆண்டு மின்சாரத்திருட்டுக்காக 97 லட்சம் ரூ அபராதம் கட்டியிருக்கிறது..களவாண்டு தின்னும் புத்தி இன்னும் போகலையேன்னு சொல்லலாமே..அதனால் ஆதிக்க சாதி தனக்குக் கீழானவர்களை குறிக்கும் மொழி இதுன்னு சொல்லிடலாம்தான்..ஆனால் அது சரியான முடிவல்ல என்பது என் கருத்து.
மிக அருமையான கட்டுரை. பாராட்டுகள் பல. இந்த நாடு சினிமாக்காரன்,சாரயக்காரன் கிரிக்கெட்காரனுக்குத்தானெ சொந்தம். இது மூன்றும் சேர்ந்திருக்கும் சாருக்கானை விழுந்து கும்பிடாமல் விரட்டி அடித்த காவலரின் செயல் விவரம் கெட்ட செயல். கிரிக்கெட் மைதானத்தில் போய் என்ன ஒழுங்கை கடைப்பிடித்துவிட முடியும். அமெரிக்க காவலன் விரட்டியதற்கு இந்தியப் பாராளுமன்றமெ ஒன்று சேர்ந்து கண்டித்துள்ளது. உடுக்கை இழந்தவன் கை போல் இடுக்கண் களைந்துள்ளது. மும்பைப்ப்ரச்சினையில் தலையிடாததே பெரிய விசயம். சேப்பாக்கத்தில் ஒரு வேளை ரஜினி இவ்வாறு நடந்திருந்தால் கண்டிக்க முடியுமா? வெளியில் வரும் செய்திகள் யெல்லாம் நாடகம்யென்பதை ஏற்க இயலாது. அக்கிரமம் அதிகமாகிவிட்டதால் ஒன்றிரண்டு வெளியில் வருகிறது என்றுதான் தோன்றுகிறது.
மொக்கையான பதிவு. ஒரு தொலைகாட்சியில் பார்த்த நிகழ்ச்சியின் எழுத்து வடிவம்; கொஞ்சம் மசாலா தடவி.
இது எல்லாருக்குமே தெரியும் சார். சும்மா கிடந்தது பொலம்பாம csk ஜெயிப்பதுற்கு சப்போர்ட் பண்ணுங்க.
அருமையான கட்டுரை. ஆனால் இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பாவன் டென்டுல்கர் இந்த போட்டியை வரவேற்கிறார்.எல்லாம் பணமயம்.
பணம் கொட்டுகிறது என்றால், விபச்சாரத்தை கூட வரவேற்பார்கள், சூதாட்டம் மட்டும் விதிவிலக்கா என்ன! விரைவில் சட்டபூர்வமாகவே அனுமதிக்கப்படலாம்! பணநாயகமல்லவா !
கூடிய சீக்கிரம் ” ஆத்தாவே” போட்டியை, ஏற்றுநடத்தும்!
னாட்டுக்கு வருவாயி….கூடவே மலிவு விலயில் கன்ஞா அறிமுகம்