Friday, September 22, 2023
முகப்புஅரசியல்ஊடகம்கிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம்!

கிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம்!

-

கிரிக்கெட்: பாக்கிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம்!

தேர்தல் காலத்தில் கிரிக்கெட்டையும் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இந்து மதத்தை விட பெரிய மதம் கிரிக்கெட். ஆனாலும் ஐந்து, பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த கிரிக்கெட் பரபரப்பு இப்போது குறைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை போட்டி, கோப்பை என்று மக்களுக்கு சலித்துப் போகுமளவு ஏராளமான ஆட்டங்கள். 20 ட்வெண்டி வந்ததும் அதன் பரிமாணம் நிறையவே மாறியிருக்கிறது. இரசிகனை பொறுத்த வரை முன்னர் போல நுணுக்கங்களை அணுஅணுவாய் இரசிக்கும் தேவை இப்போது இருப்பதில்லை. ஆறு, நாலு என பரபரவென்று அவன் கூச்சலிடுகிறான்.

சரி, ஒழிந்து போகட்டும் என்றால் கிரிக்கெட்டை வைத்து கல்லா கட்டும் முதலாளிகள் அந்த விளையாட்டை ஏதோ மாபெரும் தேசபக்த போர் போல சித்தரிக்கும் கொடுமை இருக்கிறதே அதைத்தான் தாங்க முடியவில்லை. ஆஸ்திரேலிய அணியுடனான கால் இறுதி ஆட்டத்தில் இந்திய தேசிய கீதம் ஒலித்த போது பலர் அலுவலகங்கள், வீட்டில் எழுந்து நின்றார்களாம். ஒரு அலுவலகத்தில் ஒரு தோழர் எழுந்து நிற்கவில்லை என்று அவரை குமுறி எடுத்துவிட்டார்களாம். கிரிக்கெட் எப்படி தேசபக்தியின் அடையாளமாக மாற முடியும்?

உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்காக பாக், இந்தியா இரண்டிலும் விளம்பரங்கள் மூலம் தேசபக்தியை உலுப்பிவிடும் பெப்சி தேச எல்லையைத் தாண்டி கல்லாக் கட்டுகிறது. இரசிகன் மட்டும் வாயில் பெப்சியை உறிஞ்சிக் கொண்டு பாரத் மாதாகி – பாக் மாதாகி ஜெய் என்று அலறுகிறான். அதிலும் இந்தியா –  பாக் போட்டி என்றால் ஊடகங்களெல்லாம் சிலிர்த்துக் கொண்டு தேசபக்தியை கிளறி விடுகின்றன.

இப்போது கொஞ்சம் பரவாயில்லை.முன்பெல்லாம் பாக் கிரிக்கெட் அணியை  வெறி பிடித்தவர்கள் போல சித்தரித்து எழுதுவார்கள். நிறைய போட்டிகளில் பாக் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 33 ஆண்டுகளாக இந்திய பாக் அணிகள் 119 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் முடிவில்லாத 4 போட்டிகளைத் தவிர பாக் அணி 69-லும்,இந்திய அணி 46-லும் வென்றுள்ளன. விளையாட்டு என்றால் வெற்றி தோல்வி சகஜம் என்று போனால் பிரச்சினை அல்ல. அதை ஒரு மானப்பிரச்சினை போல இவர்கள் சித்தரிக்கிறார்கள்.

1986-ஆம் ஆண்டு ஷெர்ஜாவில் நடந்த போட்டியில் கடைசி பந்தில் 4 ரன் அடித்தால் வெற்றி என்ற நிர்ப்பந்தத்தில் பாக் அணி இருக்கிறது. சேதன் சர்மா போட்ட புல்டாசை ஜாவித் மியான்தத் சிக்சருக்கு அனுப்ப இந்திய ரசிகர்கள் அதை எண்ணி எண்ணி பல மாதங்கள் தூங்கவே இல்லை. இப்படி நிறைய முறை பாக் அணி இந்திய ரசிகர்களை தூங்க விடாமல் செய்திருக்கிறது.

காஷ்மீர் பிரச்சினையை வைத்து இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் உள்நாட்டு மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பும் வண்ணம் இந்த தேசபக்தி வெறியை அவ்வப்போது கிளப்பி விடும். இன்னொரு புறம் ஆயுதங்களை போட்டி போட்டு வாங்கும். இந்தியா அணுகுண்டு வெடித்தால் பாக்கும் வெடிக்கும். இப்படி இந்த போலி தேசபக்தியால் இருநாட்டு மக்களும் இழந்த செல்வத்தின் மதிப்பு எத்தனை இருக்கும்? ஆயுதங்களுக்கும், இராணுவத்திற்கும் ஒதுக்கும் தொகையை மக்கள் நலனுக்கு ஒதுக்கியிருந்தால் இரண்டு நாட்டு ஏழைகளுக்கும் ஓரளவாவது கதிமோட்சம் கிடைத்திருக்குமே?

எனினும் இந்த தேசபக்தி வியாபரத்தில் முதன்மைக் குற்றவாளி இந்தியாதான். காஷ்மீர் மக்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொன்று குவிப்பதும், அது இயல்பாகவே பாக்கிஸ்தானில் ஒரு இந்திய வெறுப்பை தோற்றுவிக்கவும் காரணமாக இருக்கிறது. பாக் ஆளும் வர்க்கம் இதை வைத்து அரசியல் ஆதாயம் அடைகிறது. இரண்டையும் முற்ற வைத்து ஆயுதங்களை விற்பனை செய்து கல்லா கட்டும் அமெரிக்கா எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறது. அமெரிக்க நலனுக்காக பாக்கில் உருவாக்கப்பட்ட தீவிரவாதிகள் பின்பு பல காரணங்களால் முரண்பட்டு இன்று சுயேச்சையாக செயல்படுகிறார்கள். இந்தியாவில் இவர்கள் நடத்திய குண்டுவெடிப்பை விட பாக்கில் நடத்திய வெடிப்புகளும், கொலைகளும் அதிகம். அன்றாடம் ஏதாவது ஒரு பாக் நகரில், மசூதியில் குண்டு வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது.

காஷ்மீரில் தேச விடுதலை இயக்கங்களை மதவெறி மூலம் மாற்றியமைத்த பெருமை இந்தியா, பாக் இரண்டு நாடுகளுக்கும் சேரும். அதன் விளைவை இப்போது இருவரும் அனுபவிக்கிறார்கள்.

இந்த பின்னணியில்தான் கிரிக்கெட் போட்டிகளையும் கார்கில் போர் போல மாற்றுகிறார்கள். கிரிக்கெட் போட்டியில் பாக் வெற்றி பெற்றால் இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள் என்ற அவதூறை இன்றும் இந்து முன்னணி செய்து வருகிறது. முசுலீம் மக்கள் அனைவரும் பாக்கிஸ்தானின் நலனுக்காக வாழ்பவர்கள் போன்ற சித்திரத்தை உருவாக்கி அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்குவதுதான் இந்துமதவெறியர்களின் நோக்கம்.

இந்தியாவில் இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட் இசுலாம் மக்கள் எத்தனை ஆயிரம் பேர்? இதில் எந்த வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கபடவில்லை எனும்போது ஒரு அப்பாவி முசுலீம் இளைஞன் இயல்பாகவே பாக் கிரிக்கெட் வெற்றியை ஆதரிப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி நடப்பதில்லை. ஏதோ விதியை நொந்து கொண்டு இந்தியாவில் கிட்டத்தட்ட அகதிகளாகத்தான் வாழ்கிறார்கள்.

அகமதாபாத்தில் நடந்த கால் இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றதும் பரிசுகளை வழங்கியவர் மோடி. முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையின் சூத்திரதாரி இந்திய அணிக்கு பரிசளிக்கிறான் என்றால் அதை பார்ப்பதற்கு விகாரமாக இல்லையா? அந்த மைதானத்தில் இந்திய வெற்றிக்காக கூச்சல் போட்ட நடுத்தர வர்க்கம்தான் பங்குச் சந்தையில் அதிக அளவு பங்குகளை வாங்குவதோடு குஜராத் கலவரம் நடந்த போது அதை வேடிக்கை பார்த்தும் ஆதரித்தது. மோடிக்கு இணையாக முகேஷ் அம்பானியும் போட்டியை குடும்பத்துடன் கண்டு களித்தார். ஆக எல்லாரும் ஒன்றாகத்தான் இணைந்திருக்கிறார்கள்.

கிரிக்கெட் - பாகிஸ்தான் வெற்றிபெற வாழ்த்துவோம்

கிரிக்கெட்டிற்கும் தேசபக்திக்கும் என்ன சம்பந்தம்? இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடைகளை பன்னாட்டு நிறுவனங்களின் முத்திரைதானே அலங்கரிக்கின்றது? போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் பெப்சி, சோனி, ஹோண்டா போன்ற நிறுவனங்களெல்லாம் உலகமெங்கும் தொழில் செய்கின்றன. இவர்களின் தயவில் இந்தியாவின் தேசபக்தி எப்படி? இந்தியா ஒரு போட்டியில் வென்றதும் மகிழ்ச்சியில் கூட இரண்டு புரோட்டாவையும், பீயரையும் முழுங்குவதுதான் தேசபக்தியின் விளைவுகள். தேசபக்தி இவ்வளவு சுலபமானது என்றால் டாஸமாக்தான் இந்தியாவின் மிகப்பெரிய தேசபக்தி நிறுவனமாக இருக்கும்.

ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் வீட்டில் பாரதமாதா படத்திற்கு பூஜை செய்வதை தேசபக்தி என்கிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் “கமான் இந்தியா” என்று கூவுவதை தேசபக்தி என்கிறார்கள். இந்தியாவில் கிரிக்கெட்டை இளைஞர்களின் மதமாக மாற்றி நுகர்வு கலாச்சார சந்தையில் சக்கை போடு போடும் நிறுவனங்களை அம்பலப்படுத்த, தேசபக்தி போதையில் மூழ்கியிருக்கும் தருணம் பார்த்து இவர்கள் உங்களது சட்டைப்பையிலிருக்கும் பணத்தை திருடும் வழிப்பறிக்கொள்ளயை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் நாம் பாக் அணியை ஆதரித்தே ஆக வேண்டும்.

தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிக்கும். அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே தேசபக்தியோடு தொடர்புடையவை. காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, குஜராத்தில் முசுலீம் மக்கள் வேட்டையாடப்பட்டது, தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவது, விவசாயிகள் தற்கொலை இதற்கெல்லாம் ஏதாவது சிறு துரும்பையாவது செய்தீர்களென்றால் அது தேசபக்தி எனலாம். அப்படி எதுவும் செய்யாமல் டி.வியை பார்த்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி, பின்னர் உருளை சிப்சை விழுங்கி, பெப்சியை அருந்திக் கொண்டு டெண்டுல்கர் பாடில் ஸ்வீப் அடிப்பதை சிலாகித்தால் அது தேசபக்தியா? இல்லை இதுதான் தேசத்துரோகம்.

பாக்கிஸ்தான் நமது அண்டை நாடு மட்டுமல்ல நமது ரத்தமும் கூட. பாக்கிஸ்தான் மக்கள் நமது சகோதரர்கள். நம்மிடமிருந்து அந்தநாடு பிரிந்ததற்கு ஆங்கிலேயர்கள், காங்கிரசு மற்றும் இந்துமதவெறி கும்பல்தான் முதன்மையான காரணம். இன்று இந்திய ஆளும் வர்க்கங்களால் ஏழை நாடாக வாழ வேண்டிய அவல நிலையில் இருப்பவர்கள். அமெரிக்காவுடன் கூடிக் குலவும் பாக் ஆளும் வர்க்கத்தால் சொந்தநாட்டில் பயங்கரவாத நிகழ்வுகளோடு செத்துப் பிழைக்கும் துர்பாக்கியவாதிகள்.

பாக் கிரிக்கெட் அணியையே எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கை அணியோடு நடந்த டெஸ்ட் போட்டியில் தீவிரவாதிகள் தாக்கிய பிறகு எந்த அணியும் அங்கே செல்வதில்லை. இந்த உலகப் போட்டியும் கூட அங்கு நடக்க வேண்டியது, ரத்து செய்யப்பட்டது. பாக் கிரிக்கெட் வாரியத்திற்கு கூட ஏதோ கொஞ்சம் நட்ட ஈடு கொடுத்து வாயை அடைத்தார்கள். மற்ற அணி வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும்போது அவர்களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லை. எளிதாக மேட்ச் பிக்சிங் புரோக்கர்கள் கைகளில் விழுகின்றனர்.  மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் இந்தியா உட்பட மற்ற நாட்டு அணிகளது யோக்கியர்களும் அடக்கம் என்றாலும் பாக் அணிதான் இதில் மிகவும் கெட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது. தற்போது கூட பாக் உள்துறை அமைச்சர் பாக் அணி வீரர்களை நேரடியாகவே மேட்ச் பிக்சிங் குறித்து மிரட்டியிருக்கிறார். அவர்களது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது என்று எச்சரித்திருக்கிறார். இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு அடிமைகளைப் போல ஆடவேண்டிய நிலைமையில் அந்த அணி இருக்கிறது.

இந்தியா பாக் இரண்டு நாடுகளின் மேட்டுக்குடி சூதாடிகள் மொகலியில் நடைபெற இருக்கும் ஆட்டத்தை வைத்து பத்தாயிரம் கோடிக்கு சூதாடப் போவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அப்பாவி இரசிகர்களோ தமது நாடு வெல்லப் போவதை எண்ணி காத்திருக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் இப்படி ஒரு போலி தேசபக்தி சண்டைக்கு என்ன அவசியம் இருக்கிறது?

தற்போது மவுனமோகன்சிங் அழைப்பின் பேரில் பாக் பிரதமர் கிலானி வர இருக்கிறார். இதை கண்டித்து எழுதும் பால்தாக்கரே அப்படியே “கசாப், அப்சல் குருவுக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அழையுங்கள்” என்று கேலி செய்கிறார். முன்னர் போல ஆடுகளத்தை சேதம் செய்யும் பலம் இன்று சிவசேனாவிற்கு இல்லை என்றாலும் இந்துமதவெறியரின் மனப்போக்கிற்கு இதுதான் எடுத்துக்காட்டு. பாக்குடன் எந்த உடன்பாடும் காணாதபடி இருப்பதையே இவர்கள் விரும்புவார்கள். இவர்களது திமிருக்காக இருநாட்டின் ஏழை குடும்பங்களிலிருந்தும் இராணுவத்திற்கு சென்று வாழும் சிப்பாய்கள் மட்டும் சுட்டுக் கொண்டு சாகவேண்டும். ஆர்.எஸ்.எஸ் அம்பிகளோ பூட்டிய அறைக்குள் பாதுகாப்பாக நின்று பாரத்மாதாகி ஜெய் என்று முழங்குவார்கள்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் நடந்த கால்பந்து போட்டியில் ஈரான் வென்றதை அந்நாட்டு மக்கள் அரசியல் வெற்றி போல கொண்டாடியதை கூட ஆதரிக்க முடியும், புரிந்து கொள்ள முடியும். ஆனால் இரண்டு பரதேசி நாடுகள், ஏழைகளை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் இப்படி மோதிக் கொள்வதையும், விளையாட்டு வெற்றியை போர் வெற்றி போல சிலாகிப்பதையும் எப்படி ஆதரிக்க முடியும்?

எனவே இந்த போலி தேசவெறியை தோலுரிக்கும் வண்ணம் நாம் பாக் அணியை ஆதரிக்க வேண்டும். இந்திய-பாக் மக்களின் ஒற்றுமை மூலமே இந்தியா பாக் ஆயுத போட்டியை நாம் தட்டிக்கேட்க முடியும். உடனே சில தேசபக்த குஞ்சுகள் கசாபை அனுப்பிய நாட்டிற்கா நமது ஆதரவு என்று வெடிப்பார்கள். சரி சம்ஜூத்தா எக்ஸ்பிரசுக்கு சங்க பரிவாரங்களை அனுப்பியது மட்டும் என்னவாம்? அதில் கொல்லப்பட்ட பாக்கின் அப்பாவி மக்களது உயிர் மட்டும் மலிவானதா?

பொதுவில் கிரிக்கெட் என்பதே சோம்பேறித்தனமான விளையாட்டு. மனித உடலின் அதீத சாத்தியங்களுக்கும், கொண்டாட்டத்திற்கும் அங்கே இடமில்லை. கால்பந்து, ஹாக்கி போல மனதுக்கும், உடலுக்கும் வேலை கொடுத்து ஆற்றுப்படுத்தும் சக்தி அதற்கில்லை. வீரர்கள் பெரும்பான்மை நேரங்களில் அசையாமல் இருப்பதுதான் கிரிக்கெட்டின் பண்பு. அதனால்தான் அதுஆங்கிலேய ‘துரை’களின் மத்தியில் பிரபலமாக இருந்தது. இந்தியாவில்கூட பெரும்பான்மை ஆதிக்க சாதிகளை சார்ந்தோரே  கிரிக்கெட்டில் நுழைந்து பெரிய ஆளாகும் வாய்ப்பை இன்றும் பெறுகிறார்கள்.  இந்திய அணியின் பலவீனமாகக் கருதப்படும் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவுக்கும் இது முக்கிய காரணம். மற்ற அணிகள் மூன்று வருடத்துக்கு ஒரு அதிவேக பந்து வீச்சாளர்களை தயார் செய்துவிடும் போது இங்கே முப்பது வருடத்துக்கு ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் வருவது பெரிய பாடாக இருக்கிறது. மாட்டுக்கறி சாப்பிட்டு வளர்ந்தால்தான் நூறு மைல் வேகத்தில் பந்து போட முடியும். பார்ப்பனிய ‘மேல்’சாதியினர் பிடியில் இந்திய கிரிக்கெட் இருக்கும் போது இது இப்போதைக்கு சாத்தியமில்லை.  அந்த வகையில் ‘மேல்’சாதி இந்திய அணிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் பாக் அணியைத்தான் ஆதரிக்க வேண்டும். வட இந்தியாவில் இருப்பது போன்ற இந்து தேசிய வெறி தமிழகத்தில் இல்லை. இதன் பாதிப்பில்தான் சென்னையில் இந்திய அணிதோற்றாலும் வெற்றிபெற்ற அணியை இரசிகர்கள் எழுந்து நின்றுபாராட்டுவார்கள் என்பது உலகறிந்த செய்தி. என்ன இருந்தாலும் பெரியார் பிறந்த மண் அல்லவா?

வெல்லட்டும் பாக் கிரிக்கெட் அணி ! ஒழியட்டும் போலி இந்திய தேசபக்தி !!

_________________________________________
– இரவிசங்கர்
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

 

  1. கிரிக்கெட் : பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம் ! | வினவு!…

    இந்தியா – பாக் போட்டி என்றால் ஊடகங்களெல்லாம் சிலிர்த்துக் கொண்டு தேசபக்தியை கிளறி விடுகின்றன. கிரிக்கெட்டை வைத்து கல்லா கட்டும் முதலாளிகளும் அதை மாபெரும் தேசபக்த போர் போல சித்தரிக்கும் கொடுமை தாங்க முடியவில்லை….

  2. Mikavum muttalthanamana katturai. Pakistan’s punjabi jats are controlling every aspect of life. There is a big class struggle even in Pakistan. Most of the bombings are due to Sunni-Shia rivalry. You have no clue about the reality there. Chennai crowd is appreciative of good cricket but they are very patriotic as well. E V R has no connection to cricket. Things have changed in the last 10 years. If a pakistani scores well in Chennai today, they won’t get the kind of support they got before.

    • ஆதித்யன்,

      பாக்கில் வர்க்கப்போராட்டம் நடப்பதை ஒத்துக் கொள்ளும் நீங்கள் இந்தியாவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் பற்றி என்ன கருதுகிறீர்கள்? இருநாட்டிலும் இருக்கும் மக்கள் இந்த போலி தேசவெறியிலிருந்து வருவதுதானே நல்லது. இதில் பாக்கை மட்டும் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? சென்னையிலும் வட இந்திய இந்து தேசபக்தி உருவாகி வருகிறது என்றால் அது போற்றுதலுக்குரியது அல்லவே?

  3. வந்துட்டாரய்யா புது பெரியாரு! அன்று பழைய பெரியார், ராவணன் படம் ஒட்டினார்! மாடர்ன் பெரியார், பாகிஸ்தான் படத்தை சூப்பரா ஓட்டுகிறார்!

    என்னே ஒரு உயர்ந்த எண்ணம்! இந்த தேசத்தவன் நாசமா போக வேண்டுமென்று!

    தமிழக கிரிக்கெட் ரசிகர்களையே, மாற்றத் துணிந்த பெரியாரின் தாக்கம், தமிழக அரசியல்வாதிகளிடம், செல்லாக்காசாகிப் போனதேனோ?

    தமிழக மக்கள், கிரிக்கெட் மட்டுமல்லாது, இலங்கை தமிழகர்களைக் குறித்தும்,அதே பாவனையில் தான் உள்ளனர்! யார் ஜெயித்தால் என்ன, என்று!

    • ராமி
      கட்டுரையை படித்துவிட்டு பின்னூட்டம் போடலாமே? இந்த தேசம் அதாவது மக்கள் முன்னேற வேண்டும் என்பதைத்தான் கட்டுரை சொல்கிறது. நீங்கள் கிரிக்கெட்டை வைத்து அதை மதிப்பீடு செய்கீறீர்கள் என்றால் அதுதான் பிரச்சினைக்குரியது, கண்டனத்திற்குரியது.

  4. தேசப் பத்தை, ரொம்ப கலாய்க்கிறீங்கண்ணா! நம்மளோடது என்ன பத்துங்கண்ணோவ்! தெளிவா சொல்லிப் போடுங்கோ!

    • ராமி, உங்கள் கேள்விக்கு பதில் கட்டுரையிலேயே இருக்கிறது.

      //தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிக்கும். அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே தேசபக்தியோடு தொடர்புடையவை. காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, குஜராத்தில் முசுலீம் மக்கள் வேட்டையாடப்பட்டது, தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவது, விவசாயிகள் தற்கொலை இதற்கெல்லாம் ஏதாவது சிறு துரும்பையாவது செய்தீர்களென்றால் அது தேசபக்தி எனலாம். அப்படி எதுவும் செய்யாமல் டி.வியை பார்த்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி, பின்னர் உருளை சிப்சை விழுங்கி, பெப்சியை அருந்திக் கொண்டு டெண்டுல்கர் பாடில் ஸ்வீப் அடிப்பதை சிலாகித்தால் அது தேசபக்தியா?//

      • பல்வேறு சந்தர்ப்பங்களில், உமது தளத்தில்.இந்திய தேச நாட்டுப் பற்று என்பதை, கேவலமான ஒன்று என்பதாகவும், கடைபிடிக்க கூடாதது என்பதாகவும் சித்தரித்து வருகின்றீர்! உமக்கு வேண்டுமெனில், இந்த தேசத்தில், யாராலேயோ நடைபெறும், சில நிகழ்வுகளின் காரணமாக, வெறுப்பு இருக்கலாம்! அது உன்னுடைய உரிமை! ஆனால், அவற்றை சுட்டிக் காட்டி, அனைவரையும், வெறியூட்டி, வெறுப்பேற்றும் உமது செயல் கண்டிக்கத் தக்கதே!

      • உம்முடைய என்று திருத்தி வாசிக்கவும்! தட்டும் போது ஏற்பட்ட பிழை! வருந்துகிறேன்!

        • ஒரு விசயம் தப்புன்னா அதற்கெதிராக எல்லோரையும் ஒன்று திரட்டுறது தானே ரம்மி சரி ?

      • ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி
        I do not understand. can VINAVU explain this please.

  5. These fellows will celebrate even india is captured by pak.. and the people of india is been slaved by them… this is the training and mental moulding done in the name of religion. I personnally know the people in tamilnadu celebrate pakistan victory against india. Moreover somebody attacked the boys who celebrated the victory of india against pakistan…

    What ever VINAVU says as a social wellwisher, His color may be shown in the theme.

    • ஜான் ஜோசப்

      இந்திய மக்களை பாக் பிடித்துத்தான் அடிமையாக்க வேண்டும் என்று புல்லரிப்பதற்கு முன் யதார்த்தத்தை பார்க்கலாமே? தமிழக மீனவர்கள், மரத்வாடா விவசாயிகள், தண்டகாரன்யா பழங்குடியினர், வடகிழக்கு மக்கள், காஷ்மீர் மக்கள் எல்லாரும் உங்க இந்திய அரசினாலே அகதியாக அடிமைகளாக ஆக்கப்பட்டவர்கள். இதெல்லாம் அடிமைத்தனமில்லை, கிரிக்கெட்டில் பாக் வெற்றி பெறுவதுதான் நமக்கு அடிமைத்தனம் என்றால் இதுதான் ஆண்டைகளின் பார்வை.

  6. In india Modi offers the momentom… if the match played in pak some musharaf… gilaani…. sardhaari will do the same… what is the difference between those alll activities.. We can make awareness to the people who don understand really… but we cant those who act like not understand.

    • எனில் மோடி தலைமையில் ஆர்.எஸ்.எஸ் செய்த கொலைக்கு தண்டனை இல்லை. இதுதான் இந்தியாவின் ஜனநாயகமா?

      • புரட்சி,ஒழுக்கம்,வர்க்கவாதம் பற்றி பேசும், நியாயவான்கள், பீஹாரில் மாவோக்கள், பள்ளிக்கு வெடி வைத்ததை, எப்படி நியாயப்படுத்தப் போகிறீர்கள் என்பதை அறிய, ஆவலுடன் இருக்கிறேன்!

        • மாவோயிஸ்டுகள் வைத்தால் அதை அவர்களிடம் போய் கேளுங்கள் மா.க.இ.க விடம் ஏன் கேட்கிறீர்கள் ? அவர்கள் செய்யும் அனைத்திற்கும் இவர்களைப் பொறுப்பாக்குவது எப்படி சரி ?

          மேலும் குண்டு வைத்தவன் மாவோயிஸ்டா இல்லை ப.சிதம்பரமா ?

        • பீஹார், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. ஆனால் நம்ம ஊர் போல பள்ளிக்கூடங்களாக மட்டும் இவை இருப்பதில்லை. கம்பிக் கிரில் போட்ட ஜன்னல்கள், தாக்குதலை தாக்குப்பிடிக்க வசதியான மறைப்புகள் போன்றவை இருக்கும். ஏன்?
          இந்திய அரசின் எல்லையோரக் காவல் படை தங்களது ரோந்துப் பணிகளிலும், காவல் பணிகளிலும் ஈடுபட நேரும் போது கிராமங்களில் கூடாரமடித்து தங்க வேண்டியதில்லை. நேராக பள்ளிக்கூடங்களில் போய் தங்கி்க் கொள்வார்கள். அப்போதெல்லாம் பசங்களுக்கு லீவ் விட்ருவாங்க.
          இவர்கள் போய் கிராமத்தின் மையத்திலிருக்கும் ஸ்கூலில் தங்கினால் பிரச்சனை ஏற்படுவது மாவோயிஸ்ட்டுகளுக்கு அல்ல. கிராம மக்களுக்கு.
          கிராம மக்களின் உணவுப் பொருட்கள், கால்நடைகள் ராணுவத்தினருக்கு விருந்தாகும். பல சமயங்களில் கிராமப் பெண்கள் விருந்தாவார்கள்.
          மாவோயிஸ்ட்டுகள் எங்கே என்று கேட்டு சித்ரவைத மற்றும் கொலைகளையும் செய்வார்கள் ராணுவத்தினர்; அப்படிச் செய்கிறார்கள் ராணுவத்தினர். ஏனென்றால் ராணுவத்தினர் யாரை வேண்டுமானாலும் சந்தேகப்படலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

          இந்த ராணுவத்தினரை தாக்கவேண்டும் என்றால் பள்ளிக் கூடங்கள் மேல் தான் தாக்குதல் தொடுக்கப்பட வேண்டும். பள்ளிகள் தாக்கப்படும். குண்டு வெடித்துச் சேதமாகும். ஆனால் பத்திரிக்கையில் இந்தக் கடைசி வரியை மட்டுமே நீங்கள் படித்து ரத்தம் கொதித்து மாவோயிஸ்ட்டுகள்=கொலைகாரமிருகங்கள் என்று கற்பனை செய்துகொள்வீர்கள். அவ்வளவுதான்.

        • அம்பேத்தன்,

          தண்டகாரன்யாவில், இதுவரை மாவோயிஸ்டுகள் என்ன சாதித்துள்ளனர் என்று அலசும் கட்டுரை இது : (EPW என்னும் மிக மதிக்கப்ப்டும் இடதுசாரி இதழில் வந்த ஆய்வு) :

          Arms Over the People: What Have the Maoists Achieved in Dandakaranya?

          https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B-zhDOdupGDUODlhMzZlMWItMDgzYS00MzJhLWFkOTItOTk2M2RhMDU3YjE2&hl=en

          முழுசா படித்துவிட்டு பிறகு மாவோயிஸ்டுகளின் அறம் பற்றி முழங்குக.

        • அம்பேத்தன்,

          ////ஆனால் நம்ம ஊர் போல பள்ளிக்கூடங்களாக மட்டும் இவை இருப்பதில்லை. கம்பிக் கிரில் போட்ட ஜன்னல்கள், தாக்குதலை தாக்குப்பிடிக்க வசதியான மறைப்புகள் போன்றவை இருக்கும். ஏன்?
          இந்திய அரசின் எல்லையோரக் காவல் படை தங்களது ரோந்துப் பணிகளிலும், காவல் பணிகளிலும் ஈடுபட நேரும் போது கிராமங்களில் கூடாரமடித்து தங்க வேண்டியதில்லை. நேராக பள்ளிக்கூடங்களில் போய் தங்கி்க் கொள்வார்கள். அப்போதெல்லாம் பசங்களுக்கு லீவ் விட்ருவாங்க.
          இவர்கள் போய் கிராமத்தின் மையத்திலிருக்கும் ஸ்கூலில் தங்கினால் பிரச்சனை ஏற்படுவது மாவோயிஸ்ட்டுகளுக்கு அல்ல. கிராம மக்களுக்கு.////

          அதுக்காக அந்த பள்ளி கட்டிடங்களை குண்டு வைத்து தகர்ப்பதை நியாயப்படுத்த முடியுமா ? நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள். ரயில் பாதைகள். மின் கம்பங்கள், செல் போன் டவர்களையும் இதே பொல் ஒரு ‘காரணம்’ காட்டி அழிப்பது மடைமை மற்றும் மக்கள் விரோத செயல். மாவோயிஸ்டுகள் பள்ளிகளை அழிப்பதை பழங்குடி மக்கள் ஆதரிக்கிறார்களலா அல்லது எதிர்க்கிறார்களா என்று விசாரித்து பார்க்கவும். இங்கு உக்காந்து கொண்டு எப்படி வேண்டுமானாலும் கதை பேசலாம். விடுதலை புலிகளின் ஃபாசித்திற்க்கி நிகரான ஃபாசிம் தான் மாவோயிஸ்டுகளின் ‘போர் முறைகள்’ ; ஒப்பிட்டு பார்க்கவும். எதிரியை அழிக்க அதே பாணி ஃபாசி அணுகுமுறை. அதனால் தான் வெற்றி பெற முடியாமல், மானிட அழிவிற்க்கு வகை செய்கிறார்கள்.

  7. “ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் வீட்டில் பாரதமாதா படத்திற்கு பூஜை செய்வதை தேசபக்தி என்கிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் “கமான் இந்தியா” என்று கூவுவதை தேசபக்தி என்கிறார்கள்”.

    “தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிக்கும். அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே தேசபக்தியோடு தொடர்புடையவை. …….. டி.வியை பார்த்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி, பின்னர் உருளை சிப்சை விழுங்கி, பெப்சியை அருந்திக் கொண்டு டெண்டுல்கர் பாடில் ஸ்வீப் அடிப்பதை சிலாகித்தால் அது தேசபக்தியா? இல்லை இதுதான் தேசத்துரோகம்.”

    வெற்றுச் சவடால் அடிக்கும் நடுத்தர மேட்டுக்குடி தேசபக்த அம்பிகளுக்கு இது ஒரு சவுக்கடி.

    “பொதுவில் கிரிக்கெட் என்பதே சோம்பேறித்தனமான விளையாட்டு. மனித உடலின் அதீத சாத்தியங்களுக்கும், கொண்டாட்டத்திற்கும் அங்கே இடமில்லை. கால்பந்து, ஹாக்கி போல மனதுக்கும், உடலுக்கும் வேலை கொடுத்து ஆற்றுப்படுத்தும் சக்தி அதற்கில்லை”.

    விளையாட்டை இரசனைக்கானதாக மாற்றிவிட்டார்கள். கிரிக்கெட்தான் அதற்கு வழிவகுத்தது. அதனால்தான் உடல் நலத்தைப் பேணுவதில் மற்ற விளையாட்டுகளைவிட மிகவும் கீழ் நிலையில் உள்ள கிரிக்கெட் இன்று இரசனையில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரசனைப்போக்கு மிகவும் ஆபத்தானது.

    ”விளையாட்டு இரசனைக்கானதா?” http://hooraan.blogspot.com/2010/10/blog-post.html என்ற தலைப்பில் எனது வலைப்பூவில் நான் எழுதிய முதல் கட்டுரையை இந்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
    நன்றி!

  8. Well analized… , but myopic article. Do you have any example for a minority persion become PM,CM,President or minister in developing countries..?. Basically a hindu become a secularist , because of that a muslim able to get President,minister and chief justice status. Do you have any idea about, Recently a Pakistani muslim MLA seek asylum status to India?.

    • இந்தியாவில் இருக்கும் முசுலீம் மக்களின் பிரதிநிதித்தவத்திற்கும் அரச பதவிகளில் அவர்கள் இருப்பதற்கும் பாரிய ஏற்றத்தாழ்வு உண்டு. பிரதமர், இராணுவம், புலனாய்வுத் துறை போன்ற அதிகாரம் உள்ள துறைகளில் முசுலீம்கள் இதுவரை வந்தது கிடையாது. மற்றபடி அப்துல்கலாமையெல்லாம் ஒரு காமடி ஷோவுக்காக கொண்டு வந்தார்கள்.

      • In this modern era, there are ‘n’ number of ways to gain knowledge, to gather news… But VINAVU could not get anything and even it does not try to find a way to increase their knowledge. That is why still VINAVU gives news like this…

      • இந்திய முசுலிம் பாதி பெர் நாட்டுக்கு எதிரா தான் இருக்கான் அதெல்லாம் உலகத்துக்கெ தெரியும் — உனக்கு என்னடா தெரியும்,இன்டியநாடுக்கு எதிரா எவன் துரொகம் செய்தாலும் அவன் தலய எடுத்துருவொம்

  9. இந்த லட்சணத்தில் இந்த போட்டிக்கு தீவிரவாத பீதி வேறு ஊட்டுகின்றன ஆளும் வர்க்கங்கள். போட்டி நடக்கும் மைதானத்தை சுற்றி ஆளில்லா கண்காணிப்பு ஹெலிகாப்ட்டர் பறக்குமாம். அவ்வளவு பயம் உள்ளவன் எதுக்கு போட்டி நடத்தனும்? மக்கள் அனைவரையும் இளிச்ச வாயன் ஆக்கி கல்லா கட்டுகிறார்கள். எனக்கு தெரிந்து உலகில் மிக நூதன திருட்டு இது தான்.

    • //போட்டி நடக்கும் மைதானத்தை சுற்றி ஆளில்லா கண்காணிப்பு ஹெலிகாப்ட்டர் பறக்குமாம். அவ்வளவு பயம் உள்ளவன் எதுக்கு போட்டி நடத்தனும்?//

      முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பையு பலப்படுத்துவது பயமில்ல… அப்பாவி ரசிகர்களை பாதுகாக்க. ஏதாவது அசம்பாவும் நடந்தால் பின்பு பாதுகாப்பையும், அதிகாரிகளையும் கூறை கூறுவீர்கள்.

  10. ஊடகங்கள் மாமா ன்னு சொன்ன வினவும் மாமாவாக ஆனதில் ஆச்சர்யமில்லை.

    • இனி கொஞ்ச நாள் கழிச்சு அத தான் செய்யப்போறோம். அதுக்கும் ஒரு அழகான காரணம் வைப்போம்.

  11. பொதுவில் கிரிக்கெட் என்பதே சோம்பேறித்தனமான விளையாட்டு. மனித உடலின் அதீத சாத்தியங்களுக்கும், கொண்டாட்டத்திற்கும் அங்கே இடமில்லை. கால்பந்து, ஹாக்கி போல மனதுக்கும், உடலுக்கும் வேலை கொடுத்து ஆற்றுப்படுத்தும் சக்தி அதற்கில்லை. வீரர்கள் பெரும்பான்மை நேரங்களில் அசையாமல் இருப்பதுதான் கிரிக்கெட்டின் பண்பு.//

    அதே..

    இதை ஏன் இத்தனை பிரபலப்படுத்தணும்.?

    அதுக்குள்ளதான் எத்தனை அரசியல் , மேட்ச் பிக்சிங், விளம்பரம்.?

    கிராமப்புறந்திலிருந்து கஞ்சிக்கே வழியில்லாமல் விளையாட்டில் தங்கம் பெறும் எத்தனையோ பெண்ணும் , ஆணும் ஊக்கமில்லாமல் , சில பெண்கள் பாலியல் மிரட்டலோடு பயந்து வெளியேறுவதையும் காண்கையில் கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எரிச்சலூட்டத்தான் செய்கிறது..

    🙁

    • மாட்டுக்கறி தின்பவர்கள் உடல்ரீதியான வேலைகளை மட்டுமே நன்றாக செய்யமுடியும் என்று சொல்லும் அம்பி இரவிசங்கரை வினவு காய்ச்சி எடுக்கவேண்டும் என்பது எனது அவா. எவ்வளவு ஒரு மேலாதிக்க சிந்தனை பாருங்க. வினவு போன்ற ஒரு போராளி குழுவில் இப்படிப்பட்ட ஒரு நபர் இருப்பது பிரச்சனை இல்லை. அவரை மாற்றாமல் இருக்கும் போராளிகளின் மீது தான் வருத்தம் மேலிடுகிறது.

      • //மட்டுமே நன்றாக செய்யமுடியும்//

        உங்க மூளைக்கு அப்புடியா புரியுது!

      • மணிகண்டன் உங்களுக்கு தேசபக்தி இருக்கு போலிருக்கே ?
        அதை என்னென்ன முறையில் எல்லாம் வெளிக்காட்டுவீர்கள்
        என்று கொஞ்சம் சொல்ல முடியுமா ? நான் எப்படின்னு
        உங்களை வைச்சி கொஞ்சம் உரசிப்பார்த்துக்கலாம்னு தான்..

      • வாங்க மணிகண்டன், பாத்து ரொம்ப நாளாச்சு,

        இந்த கட்டுரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நேரடியாகவே கூறலாமே? உடலுழைப்புக்கு மாட்டுக்கறி அவசியம் என்பதையே கட்டுரை கூறுகிறது. மாட்டுக்கறி தின்பவர்களை இழிந்த சாதியாக பார்ப்பது பார்ப்பனியத்தின் மரபு. ஹரியாணாவில் செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்று ஐந்து தலித்துகளை ‘மேல்’ சாதி இந்துக்களால் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இந்த சேதியாவது தெரியுமா? மற்றபடி மாட்டுக்கறி என்பது அடிப்படையாக மனிதனின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் தேவையான ஒன்று. இதில் மூளை உழைப்புக்கு மாட்டுக்கறி தேவையில்லை என்று கட்டுரை சொல்லாத ஒன்றை நீங்கள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்திருப்பது, எதன் பொருட்டோ தெரியவில்லை. எனினும் புதிய கலாச்சாரம் மாடு குறித்து சிறப்பிதழ் ஒன்றை சில வருடங்கள் முன்பு வெளியிட்டிருந்தது. உங்களுக்காகவே அதனை வினவில் விரைவில் வெளியிடுகிறோம்.

        • வினவு, நான் இதை எழுதாமல் போயிருந்தால் அந்த சிறப்பதழை வெளியிடாமல் இருந்திருப்பீர்கள் 🙂 சோ, நல்லது தானே !

        • பாத்தீங்களா மக்களே… மணிகண்டனார் 2011ல் கேட்ட கேள்விக்கு பயந்துட்டு ம.க.இ.க 2005லேயே சிறப்பிதழ் கொண்டாந்துருக்காங்க.

          ஏன்னா… மணிகண்டனார் அப்பேர்பட்ட டெரர்ர்ர்ர்ரு

      • நீ யாருப்பா அத சொல்றதுக்கு? உங்க அப்பன் வீட்டு சொத்தா? ரொம்ப உணர்ச்சி வசப்படுற!

        • ஆமாங்க சார் இந்திய எங்கப்பா வீட்டு சொத்து தான் … வேனும்ம்னா நீயும் ஓடிரு பாகிஸ்தானுக்கே

        • ஜால்ரா சார்! நான் சொல்றேன், இந்திய எங்க அப்பன் வீடு சொத்து. நீ வேணும்னா நேபாளத்துக்கு போயிடேன்.

        • ஜால்ரா! நானும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியா ஜெயிக்குறது சந்தோசம் தான். ஆனா அதுக்கு பேரு தேசபக்தி இல்லன்னு சொல்றேன்.

        • கிரிக்கெட் பக்தர்களே, தேசபக்தியென்பது கிரிக்கெட்டில் இல்லை – அது மக்கள் நலத்தை நாடுவதிலும் அதற்காக உழைப்பதிலும் இருக்கிறது.
          நன்றி நண்பர் மன்னாரு!

        • RAJA:ஜால்ரா! நானும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியா ஜெயிக்குறது சந்தோசம் தான். ஆனா அதுக்கு பேரு தேசபக்தி இல்லன்னு சொல்றேன்.

          INDIA JEYCHADHUKKU APRAM VERA ENNA SOLLA MUDIYUM??????????????????????

  12. 500 ரூ டிக்கெட் இப்போ 8000க்கு கிடைக்குது. ஊரே ஜன்னி வந்தமாதிரி பிதற்றல்:(

    மொஹாலிப்பக்கம் போலீஸைக் குவிச்சாச்சு. எல்லா வேடிக்கையையும் நேரில் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

  13. கிரிக்கெட் மக்களை சுரண்டுது என்பதி உண்மை,
    மொத்த கிரிக்கடே ஒழிக்க பட வேண்டியது…
    இதில் இந்தியா பாக்கிஸ்தான் பேதம் எல்லாம் இல்லை.

  14. நீங்கள் சொல்வது அத்தனையும் சரியே. கிரிக்கெட் என்னும் மயக்கம் ஒழிக்க படவேண்டியது தான். பிற விளையாட்டுக்கள் இந்தியாவில் சவக்குழியில் கிடக்க இதுவே காரணம். கிரிகெட்டின் வருமானம் ஒரு போதும் ஏழைக்கு ஒரு வேளை சோறு போட்டதில்லை. இதில் இந்தியா பாக் பேதமே இல்லை. இளையசமுதாயத்தின் சக்தியை கிரிகெட்டின் பெயரில் திசை திருப்பபடுகிறது.

    ஆனால் ஒட்டு மொத்த கிரிக்கெட் அரசியலும் ஒழிக்கபடவேண்டியது என்று சொல்லி “கிரிகெட்டை புறக்கணியுங்கள்” என்று சொல்லி இருந்தால் இன்னும் சந்தோசபட்டுருப்பேன்.

    அதை விடுத்து பாக் அணி வெல்ல வேண்டும் என்ற வாதத்தில் எனக்கு உடன்பாடில்லை. எதிர்ப்பது எந்த அணியாக இருந்தாலும் , எந்த விளையாட்டு என்றாலும், இந்திய அணியில் ஆயிரத்தெட்டு அரசியல் இருந்தாலும் அது வெல்ல வேண்டும் என்பதே ஒரு இந்தியனாக எனது ஆசை.

    • மீனாட்சி நாச்சியார்,

      விளையாட்டில் யார் வென்றாலும் அதை ஆதரிப்பதுதானே முறை? ஏனெனில் விளையாட்டு என்பது விளையாடித்தானே வெல்லப்படவேண்டும். நீங்கள் இந்தியா வெல்ல வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் உங்கள் ஆசை களத்தில் நிறைவேறவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? பலர் அதை வைத்து பாக்கின் மீது கோபம் கொள்கிறார்கள். கால் இறுதியில் ரிக்கிபாண்டிங் சதமடித்த பிறகு குஜராத் ரசிகர்கள் அதை கைதட்டி வரவேற்கவில்லை என்போடு ஊளையிட்டு கேலி செய்தார்கள். இதை நேற்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஒருவர் கூறினார். இது என்ன மனநிலை?

      டெண்டுல்கர் சதமடிக்க வேண்டும் என்று விரும்பலாம். ஆனால் அது நடக்காமல் அப்ரிடி சதமடித்தால் அதை பாராட்டுவதுதானே நாகரீகம்?

      • இதே மொஹாலில நடக்காம பெஷாவர்ல நடந்திருந்தா உன் பதிவு “இந்தியா வெற்றி பெற வாழ்த்துவோம்”ன்னு இருக்கவா போவுது ?

  15. +1
    கிரிக்கெட் மோகத்தை ஒழிக்க இந்தியா கிரிக்கெட்டில் தோற்பது தான் நாட்டுக்கு நல்லது. பள்ளிக் கூட பொதுத் தேர்வுகளையும் பொருட்படுத்தாது பன்னாட்டு கம்பெனிகளின் விற்பனை வளர்ச்சிகாக இந்தியா மைதானமாக்கப்பட்டுள்ளது

    உங்கள் பெரும்பாலன கருத்துகளுடன் உடன்படுகிறேன்

    • ஒரு தருதலைக்கு இன்னொரு தருதலை உடன்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

      • /*ஒரு தருதலைக்கு இன்னொரு தருதலை உடன்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.*/

        இந்த வரி உங்களுக்கும் பொருந்தும் திரு மொக்கச்சாமி!!!!!!!!!!!!!!

  16. […] வினவு சொல்வது அத்தனையும் சரியே. கிரிக்கெட் என்னும் மயக்கம் ஒழிக்க படவேண்டியது தான். பிற விளையாட்டுக்கள் இந்தியாவில் சவக்குழியில் கிடக்க இதுவே காரணம். கிரிகெட்டின் வருமானம் ஒரு போதும் ஏழைக்கு ஒரு வேளை சோறு போட்டதில்லை. இதில் இந்தியா பாக் பேதமே இல்லை. இளையசமுதாயத்தின் சக்தி கிரிகெட்டின் பெயரில் திசை திருப்பபடுகிறது. […]

  17. […] வினவு சொல்வது 95% சரியே. கிரிக்கெட் என்னும் மயக்கம் ஒழிக்க பட வேண்டும். பிற விளையாட்டுக்கள் இந்தியாவில் சவக்குழியில் கிடக்க இதுவே காரணம். கிரிகெட்டின் வருமானம் ஒரு போதும் ஏழைக்கு ஒரு வேளை சோறு போட்டதில்லை. இதில் இந்தியா பாக் பேதமே இல்லை. இளையசமுதாயத்தின் சக்தி கிரிகெட்டின் பெயரில் திசை திருப்பபடுகிறது. […]