
வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழகத்தின் மலைவாழ் மக்களைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்த கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் சங்கர் பிதாரி, அம்மாநிலத்தின் காவல்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பிதாரியை விடப் பணியில் மூத்தவரான இன்ஃபான்ட் என்ற போலீசு அதிகாரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பணி மூப்புக் காலத்தில் தன்னைவிட இளையவர் என்பது மட்டுமின்றி, வீரப்பன் வேட்டை என்ற பெயரில் சங்கர் பிதாரியின் தலைமையிலான அதிரடிப்படை, பழங்குடி மக்களுக்கும் பெண்களுக்கும் எதிராக இழைத்த வன்முறைகளைத் தேசிய மனித உரிமை ஆணையமும், சதாசிவம் கமிட்டியும் உறுதி செய்துள்ளன. அவ்வாறிருக்கத் தன்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தகுதியற்ற நபரான பிதாரியை கர்நாடக அரசு எப்படி டி.ஜி.பியாக நியமிக்க முடியும் என்பதே இன்ஃபான்ட் தொடுத்திருந்த வழக்கு. இவ்விரு ஆட்சேபங்களையும் ஏற்று, பிதாரியின் நியமனத்தை ரத்து செய்தது, நிர்வாகத் தீர்ப்பாயம்.
இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சங்கர் பிதாரி. “பழங்குடி மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. நான் சதாம் உசேன், கடாபியைப் போல எல்லாம் வல்லவனோ எங்கும் இருப்பவனோ அல்ல; தமிழக-கர்நாடகக் கூட்டு அதிரடிப் படையின் துணைக் கமாண்டராக மட்டுமே நான் இருந்தேன்” என்று திமிர்த்தனமாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். பிதாரியின் நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்த பாதிக்கப்பட்ட பழங்குடிப் பெண்களும், தாங்கள் அனுபவித்த சித்திரவதைகளைப் பிரமாண வாக்குமூலமாகத் தாக்கல் செய்திருந்தனர்.
இவற்றைப் பரிசீலித்த நீதிபதிகள் குமார், கெம்பண்ணா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, “அவர் சதாமோ, கடாபியோ அல்ல என்றால், நிச்சயம் அவர்களைவிட மோசமானவராகத்தான் இருக்க வேண்டும் என்றே அந்தப் பெண்களின் வாக்குமூலத்திலிருந்து தெரிகிறது” என்று கூறி , சட்டத்தின் ஆட்சி, பெண்மை, மனித உரிமைகள், ஏழைகள்பழங்குடி மக்கள் மீது அக்கறை போன்றவற்றின் மீது இந்த அரசுக்குச் சிறிதளவேனும் மரியாதை இருக்குமானால், டி.ஜி.பி., ஐ.ஜி. ஆகிய இரு பதவிகளிலிருந்தும் பிதாரியை உடனே நீக்கவேண்டும்” என்று உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் பிதாரி. உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கு இடைக்காலத் தடை வழங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் ஆழமாக விசாரித்து மே 31க்குள் தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
“தேசிய மனித உரிமை கமிசன் சங்கர் பிதாரி மீது நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை. அவரது ஊழியர்கள் செய்த தவறுக்கு அவர் பொறுப்பாக முடியாது. நிவாரணத் தொகையை அதிகமாகப் பெற வேண்டும் என்பதற்காகப் பழங்குடி மக்கள் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார்கள். பதவி உயர்வு குறித்து முடிவு செய்வதற்குத் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கூற்றுகளை கணக்கில் கொள்ளத் தேவையில்லை” என்று பிதாரிக்கு ஆதரவாக வாதங்களை அடுக்கியிருக்கிறது, கர்நாடக அரசு.
அதிரடிப்படையின் அட்டூழியமென்பது மறுக்கவியலாத உண்மை. நூற்றுக்கணக்கானவர்களது சாட்சியங்களைப் பரிசீலித்த நீதிபதி சதாசிவம் கமிட்டி, மனித உரிமை மீறல்கள் நடந்ததை உறுதி செய்திருக்கிறது. பழங்குடியினர் 89 பேருக்கு இடைக்கால நிவாரணமாக 2.80 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறது. தமிழக, கர்நாடக அரசுகள் பழங்குடியினருக்கு நிவாரணத் தொகையையும் வழங்கியுள்ளன. தேசிய மனித உரிமை ஆணையமும் அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்களை உறுதி செய்திருக்கிறது.
இருந்தபோதிலும் சங்கர் பிதாரிக்கு ஜனாதிபதி விருது இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது. மூத்த அதிகாரியைப் பின்தள்ளிவிட்டுப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. பிதாரியின் மீது உச்ச நீதிமன்றம் அனுதாபம் காட்டுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை! பாதிப்பை ஏற்படுத்திய காக்கி உடை கிரிமினல்களுக்குப் பதவி உயர்வு! ராஜபக்சே பரிந்துரைக்கும் நீதி வழங்குமுறையும் இதுதானே!
_______________________________________________
_______________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- போலீசு, இராணுவம் – மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா ?
- பொடா முதலிய அடக்குமுறை சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவா?
- லாக்-அப் கொலைகள்: கேட்பாரற்ற போலீசு ராஜ்ஜியம்!
- மாதம் இரண்டு லாக்அப் கொலை: “பச்சை”யான போலீசு ஆட்சி!
- அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு!
- வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்!
- சங்கரசுப்பு மகன் படுகொலை: கொலைகாரர்களை பாதுகாக்கும் போலீசு, சி.பி.ஐ!
- விவசாயிகள் மீது தடியடி : ஜெ’வின் பேயாட்சி!
- என்கவுண்டர்: துப்பாக்கி குற்றத்தை உருவாக்குவதுமில்லை – ஒழிப்பதுமில்லை!
- ஏட்டையாவோடு ரேட்டு பேச புரட்சித்தலைவி வழங்கும் பிளாஸ்டிக் நாற்காலி!
- நீதிமன்றத்தால் தேடப்படும் போலீசு குற்றவாளிகள் ! படங்கள் !!
- டேய், யாராவது பக்கத்துல உட்காருங்கடா!
- மகளிர் காவல் நிலையத்தில்…. ஒரு நேரடி அனுபவம்!