privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்ஹூண்டாய் காருக்காக கைவிரல்களை வெட்டுக் கொடுத்த கலைவாணன்!

ஹூண்டாய் காருக்காக கைவிரல்களை வெட்டுக் கொடுத்த கலைவாணன்!

-

முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கோர் இரத்த சாட்சியமாய், நோக்கியா நிறுவனத்தின்  இயந்திரத்தால் கழுத்தறுக்கப்பட்டு, ஈராண்டுகளுக்கு முன்பு படுகொலையான இளந்தொழிலாளி அம்பிகாவை அவ்வளவு சீக்கிரம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

இதோ அதன் நீட்சியாய் தனது இடது கை விரல்களைப் பறிகொடுத்து கூடவே தனது எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு தெருவில் நிற்கிறார், கலைவாணன் என்ற 22 வயது இளம் தொழிலாளி.  செயல்துடிப்புமிக்க அந்த இளைஞனின் இணையில்லா கடும் உழைப்பையும் குருதியையும் சேர்த்தே சுவைத்து விட்டு, இன்று எஞ்சிய சக்கையாய் வெளியேற்றியிருக்கிறது, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் ஜே.கே.எம். டைனமிக்ஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம்.

அரியலூர் மாவட்டம் சிலுப்பனூர் கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த கலைவாணன், தொழிற்படிப்பை முடித்துவிட்டு தொழில் பழகுநராக ஜே.கே.எம்.டைனமிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் இணைகிறார். அவருக்கு இரண்டுநாள் மட்டுமே பயிற்சி அளித்த நிர்வாகம், 300 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்திலும் உயர் அழுத்தத்திலும் இயங்கக்கூடிய அபாயம் நிறைந்த அந்த இயந்திரத்தை இயக்கும் பொறுப்பை அவரிடம் வழங்குகிறது.

தொழில் பழகுநரான கலைவாணனுக்கு நிரந்தர தொழிலாளிக்கு நிகரான உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ஷிப்ட் ஒன்றிற்கு அவர்கள் நிர்ணயிக்கப்படும் அளவை விட குறைவான எண்ணிக்கையில் உற்பத்தியை காட்டினால், நிர்வாகத்தின் குடைச்சலுக்கும் நெருக்குதலுக்கும் ஆளாக நேரிடும். அவர்கள் நிர்ணயிக்கும் இலக்கை எட்ட வேண்டுமானால், இரண்டு நிமிடங்களுக்குள்ளாக ஒரு பொருளை உற்பத்தி செய்தாக வேண்டும். “மாடர்ன் டைம்ஸ்” திரைப்படத்தில் வரும் காட்சியைப்போல, உணவுக்கும் இயற்கை உபாதைக்கும் ஒதுக்கும் சொற்ப நேரம் போக மீத நேரமெல்லாம் இயந்திரத்தின் மற்றுமோர் உறுப்பாய் தன்னை இணைத்துக்கொண்டு, அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து தானும் இயங்கியாக வேண்டும். அவ்வாறே, இயங்கியும் வந்தார் கலைவாணன்.

அதிக வெப்பத்திலும் அதிக அழுத்தத்திலும் இயங்கக்கூடிய அபாயம் நிறைந்த இயந்திரம் என்பதினாலேயேதான், எதிர்பாராமல் ஏற்படும் மனித தவறுகளால் தொழிலாளியின் உடல் உறுப்புகள் இயந்திரத்தில் சிக்கி விபத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காகவும் தான், இத்தகைய இயந்திரங்களில் “சென்சார்” கருவிப் பொருத்தப்படுகிறது. குறிப்பாக, கலைவாணன் இயக்கிய இயந்திரத்தில் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை, அச்சுவார்க்கப்பட்ட பொருளை வெளியே எடுக்கவும், அதனிடத்தில் அச்சுவார்ப்பிற்காகப் புதிய பொருள் ஒன்றை வைக்கவும் வேண்டும். எனவே, மனித உறுப்புகளின் குறுக்கீடு என்பது இங்கே தவிர்க்க முடியாததாகிறது.

இயந்திரம் இயக்கநிலையில் இருக்கும் பொழுது, எதிர்பாராத விதமாக மனித உறுப்புகள் குறுக்கிடுமேயானால் சென்சார் கருவி செயல்பட்டு இயந்திரத்தின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும். முதலாளி தீர்மானிக்கும் உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு ‘குறுக்கீடாக’ இருக்கும் இந்த சென்சார் கருவியின் செயல்பாடு இங்கே துண்டிக்கப்பட்டது. இப்படித்தான் கலைவாணன் தனது இடது கை விரல்களை இழந்தார். இவ்வாறு, கரணம் தப்பினால் மரணம் என்ற அபாயகரமான சூழலில் உற்பத்தியில் ஈடுபடுத்திய, மனித உணர்ச்சி ஏதுமற்ற முதலாளித்துவ இலாபவெறிதான்  கலைவாணனின் கைவிரல்களை பறித்துச் சென்றது.

குறுகிய கால அவகாசத்திற்குள் அதிக தூரத்தை கடந்தாக வேண்டுமென்பதற்காக, அதிவேக பயணத்தில் ‘குறுக்கீடு’களே இருக்கக்கூடாது என்று “பிரேக் ஷூவை” அறுத்தெறிந்துவிட்டு வாகனத்தை இயக்குவதற்கு எந்த மடையனும் துணிவதில்லை.  ஆனால், தொழிற்சாலைகளில் சென்சார் கருவிகள் செயலிழக்க வைக்கப்படுகின்றன. பாதுகாப்பற்ற பயணத்தின் ஓட்டுநர் இருக்கையில் இளம் தொழிலாளர்கள் அமர்த்தப்படுகின்றனர்.

திட்டமிட்ட கொலை முயற்சிக்கு நிகரான, இந்த விபத்திற்கு ஜே.கே.எம். டைனமிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் தார்மீகப் பொறுப்பைக்கூட ஏற்கவில்லை. நண்பர்களின் ஆதரவோடு, அவர்களது அறையில் தங்கிக்கொண்டு இராயப்பேட்டை அரசுமருத்துவனையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்றிருக்கிறார், கலைவாணன். தொடர் மருத்துவ சிகிச்சை குறித்தும், இழப்பீடு குறித்தும் பலமுறை தொலைபேசியில் அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராஜனை தொடர்புகொண்டிருக்கிறார், கலைவாணன். பெரும்பாலான நேரங்களில் இவரது இணைப்பைத் துண்டித்துவிடும், ராஜன், ஒருகட்டத்தில் “இதுதான் எனக்குப் பொழப்பா?” என எரிந்து விழுந்திருக்கிறார். சட்டப்படி உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு, தொழில்பழகுனராக மேற்கண்ட நிறுவனத்தில் பணியாற்றியதற்கான எந்தவித ஆதாரமும் இல்லாமல், தொடர் மருத்துவசிகிச்சைக்கும் வழி இல்லாமல் சொந்த ஊருக்கும் சென்னைக்குமாக திக்கற்று அலைந்து கொண்டிருக்கிறார், கலைவாணன்.

இது தனிப்பட்ட கலைவாணனுக்கு மட்டுமே நேர்ந்து விட்ட அவலமும் அல்ல; அந்த குறிப்பிட்ட தொழிற்சாலையில் மட்டுமே நிகழக்கூடிய முறைகேடுமல்ல! சிறப்புப்பொருளாதார மண்டலம் என்ற பெயரில் இயங்கும் இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட கொத்தடிமைக்கூடாரங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன இந்த அவலங்களும் முறைகேடுகளும்.

தொழில் பழகுநரை சட்டவிரோதமாக உற்பத்தியில் ஈடுபடுத்துவது தொடங்கி தேர்வுநிலை தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி, தற்காலிக தொழிலாளி எனப் பலப்பிரிவுகளை ஏற்படுத்தி அற்ப கூலி கொடுத்து ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள், இளம்தொழிலாளர்கள். சட்டப்படியான குறைந்தபட்சக்கூலி, எட்டுமணிநேர வேலை, பணிபாதுகாப்பு இவை எதுவும் கிட்டாத போதும் அதுகுறித்து அக்கறை கொள்ளாமல், “பல்லைக்கடித்துக்கொண்டு நிர்வாகம் சொல்லும் படிநிலைகளைத் தாண்டிவிட்டால் சில ஆண்டுகளில் நாமும் நிரந்தரமாக்கப்படுவோம்” என்ற நப்பாசையில் இந்தக் கொத்தடிமைத்தனத்தை சகித்துக்கொள்ளும் அவல மனநிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர், இவ்விளம் தொழிலாளர்கள். இந்தப்படிநிலைகளும், கால அளவுகளும் தொழிற்சாலைகளுக்கேற்ப மாறுபடுகின்றன.

தாம் நிரந்தரமாக்கப்பட வேண்டுமானால், நிர்வாகம் நிர்ணயிக்கும் உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்தாக வேண்டும். எட்டுமணிநேரம் என்பதற்குப் பதில் பத்து மணிநேரம் பணிபுரிந்தாகவேண்டும். எத்தகைய அபாயகரமான சூழலில் தாம் வேலைக்குப் பணிக்கப்பட்டாலும் சிறு முணுமுணுப்பைக்கூட வெளிக்காட்டாமல் அவற்றை ஏற்றாக வேண்டும். நியாயம், தர்மம், சட்டவிதிகள் இந்த சொற்களின் பயன்பாட்டை முற்றிலும் துறந்தாக வேண்டும். நிர்வாகத்தின் நன்மதிப்பை பெற வேண்டுமானால், இவற்றையெல்லாம் செய்தாக வேண்டும்.

இவ்வளவிற்குப்பிறகும், நிர்வாகம் சொல்லும் இந்தப்படிநிலைகளை கடந்து வந்தால் கூட வேலை உத்திரவாதமா என்றால் அதுவுமில்லை. ஏதோ ஒரு மொன்னையான காரணங்களைக்கூறி நிரந்தரப்படுத்துவதற்கான வாய்ப்பு திட்டமிட்டே மறுக்கப்படுகிறது. அதிகபட்சம் ஆண்டொன்றுக்கு ஆயிரம் பேரில் ஒரு பத்து பேரை நிரந்தரமாக்கினால் அதுவே அதிசயம். இதனை நன்கு அறிந்திருந்தும், அந்த பத்து பேரில் ஒரு நபராக நாம் சென்றுவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் நிர்வாகத்தின் சட்டவிரோத செயல்பாடுகளை ஏற்கும் மனநிலைக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர், இவ்விளம் தொழிலாளர்கள்.

முதலாளித்துவ இலாபவெறிக்கு  தன் உயிரை கொடுத்து; உடல் உறுப்புகளைஇழந்து; இளம்பெண்கள் தம் இளமையை இழந்து, இறுதியில் “யூஸ் அன்ட் த்ரோ”ப் பொருட்களைப்போல எதற்கும் இலாயக்கற்ற  குப்பைகளாய் அன்றாடம் தூக்கியெறியப்படும் தொழிலாளர்கள் எத்தனை ஆயிரம் பேர்?  அன்று அம்பிகாவை இழந்தோம். இன்று கலைவாணன்  தனது இடது கை விரல்களை இழந்திருக்கிறார். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதே என்று நிம்மதியாக ஒதுங்கித்தான் சென்று விட முடியுமா?

செயல்துடிப்பும், வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற வேட்கையும் கொண்ட, வேடந்தாங்கல் பறவைகளாய் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திங்கே குவிந்திருக்கும், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் பணியாற்றும் இளம் தொழிலாளர்களே! இப்பொழுது, சொல்லுங்கள், உங்களுடனே எப்பொழுதும் சிரித்துப்பேசி, சக இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக்கொண்ட சக தொழிலாளியின் இன்றைய நிலையென்ன? ஒற்றுமையாய் இரை தேடி வந்த பறவைகள்,  நாளுக்குநாள் முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு இரையாகிக் கொண்டிருப்பதை எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது, உங்களால்? இன்னும் எத்தனை அம்பிகாவையும், கலைவாணன்களையும் முதலாளித்துவ இலாபவெறிக்கு இரையாக்கப்போகிறோம்? இந்த நிலை நாளை நமக்கும் வராது என்பதற்கு என்ன நிச்சயம்?

சக தொழிலாளியை காப்பது இருக்கட்டும், நாளும் அதிகரித்துவரும் முதலாளித்துவக் கொடுங்கோண்மையிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் கூட, நாம் குறைந்த பட்சம் ஓர் சங்கமாய் சேர்ந்தாக வேண்டும். கலகக்குரல் எழுப்புவது இருக்கட்டும், அதற்கு முன் சிறு முணுமுணுப்பையாவது பதிவு செய்தாக வேண்டும். தொழில்பழகுநர், தேர்வுநிலை தொழிலாளி, ஒப்பந்தத்தொழிலாளி, தற்காலிக தொழிலாளி, நிரந்தர தொழிலாளி என்ற பிரிவினைகள் கடந்து, முதலாளித்துவத்தால் வஞ்சிக்கப்படும் தொழிலாளி வர்க்கம் என்று நெஞ்சு நிமிர்த்தி நின்றாக வேண்டும்.

“நாம் மட்டுமே பேசி என்ன செய்துவிட முடியும்? இதையெல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது சார்” என்ற விரக்தி நிறைந்த வார்த்தைகள் உங்களுடையதென்றால், உம்மை நோக்கித்தான் நீள்கிறது எம் கரங்கள்!

முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராக, உழைப்புச்சுரண்டலுக்கு எதிராக களத்தில் நின்று களமாடிக்கொண்டிருக்கிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. உரிமைக்குரல் எழுப்பும் சங்கம். இது உமக்கான சங்கம்.

கரம் கோருங்கள், களம் காணுவோம்!

__________________________________________________

–          இளங்கதிர்

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

_______________________________________________________________________________