தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் சிறை வைப்பு !

நிராயுதபாணியான மக்களை வாயிலும், நெஞ்சிலும், தலையிலும் குறிவைத்து சுட்டுக்கொன்ற குற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது பொய்ப்பழி சுமத்துகிறது எடப்பாடி அரசு.

தூத்துக்குடியில் அரச பயங்கரவாதத்தால் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து, கடந்த மே 25-ஆம் தேதியன்று நள்ளிரவில் மக்கள் அதிகாரம் தோழர்களை வீடு புகுந்து கைது செய்தது போலீசு. கைது செய்யும் போது தாம் எந்த காவல்நிலையத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்பதையோ, அவர்களை என்ன வழக்கிற்காக கைது செய்கிறோம் என்பதையோ, அவர்களை எங்கு அழைத்துச் செல்கிறோம் என்பதையோ, குடும்பத்தாருக்கு சொல்லவில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர்கள் குறித்து எவ்விதத் தகவலும் தராமல் மவுனம் சாதித்தது.

உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர்தான் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவலை அளித்தது போலீசு. அச்சமயத்தில் கைது செய்யப்பட்ட தோழர்களில் ஆறு பேர் மீது, நேற்று இரவு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது.

தே.பா.ச. கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட தோழர்கள் குறித்த விவரம் பின்வருமாறு

உசிலை
1. கோட்டையன் வ/40 , த/பெ சின்னன்
கோவில்பட்டி
2. சரவணன் வ/32 த/பெ பண்டாரம்
ஆலங்குளம்  
3. வேல்முருகன் என்ற முருகன் வ/40, த/பெ செல்லத்துரை
திருநெல்வேலி
4. கலியலூர் ரஹ்மான் வ/50, த/பெ கலீல்
5. முகமது அனஸ் வ/20 , த/பெ கலியலூர் ரஹ்மான்
6. முகமது இர்ஷத் வ/18 , த/பெ கலியலூர் ரஹ்மான்

போலீசின் பொய் வழக்குகளுக்கும், அராஜகங்களுக்கும் எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று கூட வேண்டிய நேரம் இது.

***துப்பாக்கிக் குண்டுக்குத் தப்பினால் தேசியப்பாதுகாப்பு சட்டம்!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட குற்றத்துக்காக அடுக்கடுக்கான பொய்வழக்குகளில் கைது செய்யப்பட்ட மதுரை – நெல்லை மாவட்டங்களைச் சார்ந்த  கோட்டையன், வேல்முருகன், சரவணன், கலிலூர் ரகுமான், முகமது அனஸ், முகமது இஸ்ரத் ஆகியோரை நீதிமன்றம் பிணையில் விடுவித்துவிடக்கூடும் என்ற காரணத்தினால், இவர்கள் அனைவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது எடப்பாடி அரசு.

இவர்களில் முகமது அனஸ் ஹோமியோ மருத்துவக்கல்லூரி மாணவர். அனஸ், இஸ்ரத் ஆகியோரின் தந்தை கலிலுர் ரகுமான். மற்ற மூவரும் தொழிலாளர்கள். இவர்கள் யாரும்  வன்முறையிலும் ஈடுபட்டதற்கு எந்த வித ஆதாரமும் இல்லையென்ற போதிலும், நிராயுதபாணியான மக்களை வாயிலும், நெஞ்சிலும், தலையிலும் குறிவைத்து சுட்டுக்கொன்ற குற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக  மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது பொய்ப்பழி சுமத்துகிறது எடப்பாடி அரசு.

அரசையும் காவல்துறை உயரதிகாரிகளையும் கையில் போட்டுக்கொண்டு அமைதி வழியில் போராடும் மக்களைப் படுகொலை செய்வதற்கு ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நேரடியாகவே உத்தரவிட முடியும் என்பதற்கு தூத்துக்குடி நிகழ்வு ஒரு முன்மாதிரியாக உள்ளது. 

ஒருபுறம், தூத்துக்குடி வன்முறைக்கு சட்டமன்றத்தில் தி.மு.க. மீது முதலமைச்சர் பொய்க்குற்றம் சாட்டினார். இன்னொருபுறம் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாக போராட்டத்தை நடத்திய மக்கள் கூட்டமைப்பினரின் மீதும், அதன் சட்ட ஆலோசகர்களான வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன், ராஜேஷ் ஆகியோர் மீதும், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீதும், புரட்சிகர இளைஞர் முன்னணியினர் மீதும் பொய்வழக்குகள் போடப்படுகின்றன. போராட்டத்தை நடத்திய மக்கள் கமிட்டியை சேர்ந்தவர்களை குறி வைத்து கைது செய்து கொண்டிருக்கிறது போலீசு.

தூத்துக்குடி புலன்விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் மாற்றப்பட்டுவிட்டதாக அரசு ஒருபுறம் அறிவிக்கிறது. இன்னொருபுறம் சட்டவிரோதமான முறையில் உள்ளூர் போலீசார் அடுக்கடுக்கான பொய்வழக்குகளைப் போட்டு மக்களைக் கைது செய்கின்றனர். சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (U.A.P.A) கீழ் எங்கள் அமைப்பும் வேறு சில அமைப்புகளும் தடை செய்யப்படவிருப்பதாக உளவுத்துறை ஊடகங்களில் வதந்தி பரப்புகிறது.

காக்கை குருவிகளைப் போல மக்களைச் சுட்டுக்கொன்ற குற்றவாளிகள் மீது எந்த விசாரணையும் இல்லை. மாறாக ஜாலியன் வாலாபாக் போன்ற படுகொலையை நடத்தியவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மீது மறுபடியும் தாக்குதல் தொடுக்கிறார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அரசின் உயர்மட்டத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. மே 22 போராட்டத்தை மேலாண்மை செய்வது குறித்து சார் ஆட்சியாளர் பிறப்பித்த உத்தரவுகள் மீறப்பட்டது ஏன் என்ற கேள்வியை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவருக்கே பேசுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இதுவரை நடந்துள்ள பல துப்பாக்கிச் சூடுகளிலிருந்து தூத்துக்குடி மாடல் முற்றிலும் வேறுபட்டது என்று கருதுகிறோம். அரசையும் காவல்துறை உயரதிகாரிகளையும் கையில் போட்டுக்கொண்டு அமைதி வழியில் போராடும் மக்களைப் படுகொலை செய்வதற்கு ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நேரடியாகவே உத்தரவிட முடியும் என்பதற்கு தூத்துக்குடி நிகழ்வு ஒரு முன்மாதிரியாக உள்ளது.  சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக கருத்து கூறும் விவசாயிகள் கருத்து சொன்ன குற்றத்துக்காகவே கைது செய்யப்படுகிறார்கள். இவையெல்லாம் தூத்துக்குடி மாடல் அடக்குமுறைகள்தான்.

சமூக நீதி அடிப்படையிலான நீட் எதிர்ப்புப் போராட்டம், மோடிக்கு எதிரான கருப்புக்கொடி, கார்ப்பரேட் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் ஆகிய அனைத்திலும் தமிழகம் முன்நிற்பதால் பா.ஜ.க. அரசு தமிழகத்தை குறிவைத்து ஒடுக்குகிறது. எடப்பாடி அரசு டெல்லியின் ஏவலாளாக செயல்படுகிறது.

விரைவிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது, வாழ்வாதாரங்களை காப்பாற்றிக் கொள்ளப் போராடும் மக்களை அச்சுறுத்துவதும், போராட்ட அமைப்புகளை முடக்குவதும்தான் இதன் நோக்கம்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய பொது நிகழ்ச்சியில் அரங்கிலிருந்து பெரும்பான்மையான மக்கள் தூத்துக்குடி போராட்டத்துக்கு ஆதரவாகவும், பா.ஜ.க.-வுக்கு எதிராகவும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தியவுடன், அந்த தொலைக்காட்சி மீதும், அங்கே பேசிய இயக்குநர் அமீர் மீதும் வழக்கு போட்டிருக்கிறது எடப்பாடி அரசு. இவையெல்லாம் நாம் தமிழகத்தில் இதுவரை காணாதவை. போராடும் மக்களை ஒடுக்குவது மட்டுமல்ல, போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் ஊடகங்களையும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கான ஒரு அபாயகரமான துவக்கம் இது.

காக்கை குருவிகளைப் போல மக்களைச் சுட்டுக்கொன்ற குற்றவாளிகள் மீது எந்த விசாரணையும் இல்லை. மாறாக ஜாலியன் வாலாபாக் போன்ற படுகொலையை நடத்தியவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மீது மறுபடியும் தாக்குதல் தொடுக்கிறார்கள். விரைவிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது, வாழ்வாதாரங்களை காப்பாற்றிக் கொள்ளப் போராடும் மக்களை அச்சுறுத்துவதும், போராட்ட அமைப்புகளை முடக்குவதும்தான் இதன் நோக்கம்.

தமிழ்ச்சமூகம் முழுவதும் இந்த அடக்குமுறையை எதிர்த்து நின்று, போராடும் ஜனநாயக உரிமையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், தூத்துக்குடி படுகொலையின் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.

தங்கள்
தோழர்.காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க