3-7-2018

பத்திரிக்கை செய்தி

தூத்துக்குடி, திரேஸ்புரம் மீனவ சங்க பிரதிநிதி ராபர்ட் வில்லவராயர் உட்பட ஒரு சிலர் கொடுத்த புகார் மனுவில்……

“காவல் துறையினரால் மீனவ மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மீனவ மக்கள் மீது வழக்குகள் பதிய தேடுதல் என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுத்து இதனால் அமைதியற்ற சூழலில் பய உணர்வுடன் வாழ்ந்து வருகிறோம்.

தற்போது அந்த இரு வழக்கறிஞர்களும் தங்களை காத்துக்கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தில் மீனவ அமைப்புகளே மே 22 போராட்டத்தை முன்னெடுத்து சென்றன என்றும், தங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறான வாதங்களை முன்வைப்பதாக அறிகிறோம்.

‘‘தூத்துக்குடி வன்முறை சம்பவத்துக்கும் மீனவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, உணர்வுகளைத் தூண்டி மே 22 போராட்டத்தில் பங்கேற்க செய்தனர்’’ என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரிடம் மீனவர் அமைப்பு நிர்வாகிகள் 29-6-2018 அன்று மனு அளித்தனர்“ மேற்கண்ட சில வரிகள்தான், மொத்த மனுவின் சாரம்.

2-7-2018 அன்று மடத்தூரை சேர்ந்த பொன்பாண்டி என்பவர் தந்திருக்கும் மனுவில் “ மே22 ல் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கில் எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் அரசு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டபோது நாங்களும் மேற்படி கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு வணிகர்கள் மற்றும் இதர தொழில் அமைப்புகளோடு இணைந்து செயல்படுவோம் என்று எங்கள் மடத்தூர் கிராம முக்கியஸ்தர்களும் உறுதியளித்து அதன்படியே கையொப்பமிட்டு வந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது” என குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவின் சட்ட ஆலோசகர்களான இரு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பை சொல்ல முடியாமல் தடுக்கப்பட்ட நிலையில் இந்த புகார் மனு தற்போது வருவதன் பின்னால் போலீசின் அச்சுறுத்தலும் சதித்திட்டமும் உள்ளதைப் புரிந்து கொள்ள முடியும். மே 22 போராட்டத்தை மீனவ அமைப்புகள் முன்னெடுத்தார்கள் என எந்த நீதிமன்றத்திலும் யாரும் சொல்லவில்லை. மீனவ சங்க பிரதிநிதிகள், மடத்தூர் பொன்பாண்டி ஆகியோரின் மனுவிலும் போலீசின் தற்போதைய அடக்குமுறையைக் கண்டித்தோ, துப்பாக்கிச்சூடு படுகொலையைக் கண்டித்தோ ஒரு வரிகூட கிடையாது. அவர்கள் சுதந்திரமாக இந்தப் புகாரை கொடுக்கவில்லை. ஒரே அச்சில் வந்த இரு புகார்கள்.

மக்களை மூளைச்சலவை செய்து போராடத் தூண்டினார்கள்; அதில் பங்கேற்றார்கள் என்ற குற்றச்சாட்டில் யாரும் கைது செய்யப்படவில்லை. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் 20 க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். வழக்கறிஞர் அரிராகவனை எண்ணற்ற வழக்குகளில் கைது செய்ய போலீசு தேடுகிறது. மக்கள் அதிகாரத் தோழர்கள் ஆறு பேர் தேசிய பாதுபாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மக்கள் அதிகார உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என எழுபதுக்கும் மேற்பட்டவர்களை பொய்யாக ஒப்புதல் வாக்குமூலத்தில் சேர்த்து எழுதி வைத்துக்கொண்டு தென் மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது, போலீசு. பேருந்துகளை சேதப்படுத்தியது, வாகனங்களுக்கு தீ வைத்தது, ஸ்டெர்லைட் குடியிருப்புக்கு தீ வைத்தது என மே 22 இல் தூத்துக்குடியில் காலை 10-00 மணிமுதல் மாலை 3-00 மணி வரை நடந்த அனைத்து சம்பவங்களையும் இரு வழக்கறிஞர்கள் நேரடியாக நின்று கேங் லீடர் போல் வழி நடத்தி சென்று நடத்தினார்கள் என்று ஜோடித்து வைத்துக்கொண்டு கைது செய்துள்ளனர். போலீசின் இந்த வஞ்சக செயல் மனு கொடுத்த மடத்தூர், திரேஸ்புரம் மக்களுக்குத்  தெரிய வாய்ப்பில்லை.

தமிழகத்தில் எந்த போராட்டத்திலும் வெளியில் இருந்து ஆதரவு தந்தாலோ பங்கேற்றாலோ, தூத்துக்குடியில் நடந்ததைப் போல் வன்முறை செய்ய வருகிறீர்களா என அச்சுறுத்தி போலீசார் அடக்குமுறையை ஏவுகின்றனர். இதை அப்படியே உயிர்ப்போடு வைத்திருக்க மீனவர்  சங்கம், மடத்தூர் பொன்பாண்டி போன்றோரின் புகார்கள் மூலம் அவதூறு பிரச்சாரத்தை கிளப்பி போலீசின் செயல்களை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். இதை அனைவரும் எதிர்த்து போராட வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து சுமார் 40 நாட்கள் கடந்து விட்டன.  இந்தியாவிலேயே வேறு எங்கும் நடந்திராத வகையில் போராட்டத்தில் பங்கேற்றவர்களை  குறிபார்த்து சுட்டுக் கொன்ற இந்த சட்டவிரோதமான துப்பாக்கிச் சூடு குறித்த பின்னணி இன்று வரை மர்மமாகவே இருந்து வருகிறது. துப்பாக்கிச்சூடு நடந்தவுடன் தனக்கே தெரியாது என்று முதல்வர் பேசினார். உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு பத்து நாட்களுக்கு விடை கிடைக்கவில்லை.

அதற்குப் பின் மூன்று துணைத் தாசில்தார்கள்தான் உத்தரவிட்டதாக அரசுத் தரப்பு கூறியது. அந்த துணை தாசில்தார்களை இதுவரை எந்த ஊடகமும் பேட்டி எடுக்க முடியவில்லை. ஒரு துணை தாசில்தார், தான் புகாரை கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மே 22 அன்று இந்தப் போராட்டத்தால் தங்களுக்கு எந்த பாதிப்பும்  ஏற்படவில்லை என்றும் அவ்வாறு அச்சுறுத்தப்பட்டதாக புகார் கொடுக்குமாறு போலீசு நிர்ப்பந்திப்பதாகவும் கூறியிருக்கின்றனர். துப்பாக்கிச்சூடு படுகொலை குறித்து  மே 22 முதல் நேற்று டி.ஜி.பி. சொன்னது வரை அனைத்தும் முரண்பாடுகளாகவும் உண்மைக்கு புறம்பானவையாகவும் இருப்பதைக் காணமுடியும்.  144 தடை உத்தரவு இன்று வரை வெளியிடப்படாத மர்மம் என்ன? அன்றைக்கு மாவட்ட ஆட்சியர் ஏன் தூத்துக்குடியில் இல்லை?

துப்பாக்கிச் சூட்டிற்காக குற்றவாளிக் கூண்டில் நிற்கும் தூத்துக்குடி போலீசார், இன்று போராடிய மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள். இதன் மூலம் தங்களுக்கு எதிராக யாரும் சாட்சியம் அளிக்கக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்திக் கொள்கிறார்கள்.  மக்களை மிரட்டிப் பணிய வைத்து விட்டு, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதுதான் இவர்களது நோக்கம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகராக செயல்பட்ட மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீதும் சுமார் 20 வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. அவர் சொன்னதாக போலீசே ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தயாரித்து அதில் தமிழகம் முழுவதும் போராடுபவர்களின் தந்தை பெயர் உட்பட முகவரியோடு எண்ணற்றவர்களை வழக்கில் சேர்த்துள்ளது. அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளோம். இதனை, படிப்பவர்கள் யாரும் இந்த குற்றவிசாரணை எந்தத் திசையில் கொண்டு செல்லப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

அதாவது,  மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்கள் மட்டுமின்றி கடந்த மூன்றாண்டுகளில் அதன் கூட்டங்களில் பங்கேற்ற பேச்சாளர்கள், தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் போராட்டம் நடத்தியவர்கள், இதற்கு கருத்து ரீதியாக ஆதரவு தந்த அறிவுத்துறையினர் அனைவரையும் மே 22 கலவரம் மற்றும் தீவைப்பு சம்பவங்களில் கூட்டுக்குற்றவாளிகளாக சேர்த்து வருகிறது, தமிழக போலீசு.

போலீசின் இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் அதிகாரத்தின் மீது மட்டும் தொடுக்கப்படும் தாக்குதல்கள் அல்ல. தமிழகத்தில் மக்கள் போராட்டங்களில் பங்கேற்கின்ற அமைப்புகள் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இவ்வாறு இனி ஒடுக்கப்படுவார்கள் என்பதையே இந்த தூத்துக்குடி மாடல் ஒடுக்குமுறை காட்டுகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் வெளியூர்காரர்களுக்கு என்ன வேலை  என்ற கோணத்தில் பிரச்சாரம் செய்த போலீசு, தற்போது எட்டுவழிச்சாலை விவகாரத்தில் பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவர்கள் சக விவசாயிக்கு ஆதரவாக வந்தால் உனக்கென்ன வேலை என்று அவர்களையும் மிரட்டுகிறது. இந்த அடக்குமுறையை செய்திகளாகத் தரும் ஊடகங்களும் மிரட்டப்படுகின்றன.

மொத்தத்தில்  போலீசு, எத்தகைய பொய்வழக்கையும் போடலாம், யாரையும் கைது செய்யலாம், தேவைப்பட்டால் சுட்டுக் கொல்லலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

அப்படியொரு தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கின்ற சூழலில் சட்டவிரோதமான தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான கொலைக்குற்றவாளிகளை ஒருபோதும் தண்டிக்க இயலாது. எனவே, மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை தொடர்பான குற்ற விசாரணையை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஒரு சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும்; தற்போது, துப்பாக்கிச் சூட்டின் குற்றவாளிகளான தூத்துக்குடி போலீசால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருக்கும் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென்றும் கோருகிறோம்.

தமிழக மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதம், தீவிரவாதம்  என்ற பூச்சாண்டிகளை பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டே பரப்பி வருகிறார்கள். தற்போது, தமிழகத்தில் நடப்பது, காவியும் காக்கியும் இணைந்த ஒரு கொடுங்கோலாட்சி. இதனை எதிர்த்து போராடுவதற்கு எல்லா கட்சிகளும் இயக்கங்களும் தமிழ்ச்சமூகமும் ஓரணியில் திரள வேண்டுமென்று கோருகிறோம்.

இப்படிக்கு
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
பேச – 99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க