மாணவர் சேர்க்கையிலும் பல கோடி இலஞ்சம்முறைகேடு !
கிரிமினல்மயமாகும் அண்ணா பல்கலைக்கழகத்தை மீட்டெடுப்போம்!

ண்ணா பல்கலை கழகத்தில் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு அம்பலமாகி, முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட விஜயகுமார், சிவகுமார் மற்றும் பதிவாளர் கணேசன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர் சேர்க்கையிலும் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் (RSYF)  மாநில ஒருங்கிணைப்பாளர், கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

”கடந்த 2017 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 100 பேர் மருத்துவம் படிக்க சென்றுவிட்டனர். அந்த இடங்களை நிரப்ப ஒவ்வொருவரிடமும் 20 லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றிருக்கின்றனர். இது லஞ்சம் வாங்கிய பிரச்சனை மட்டுமல்ல. தனியார் கல்லூரிகள் நடத்தும் பகற்கொள்ளையை தடுக்க வேண்டிய அண்ணா பல்கலைக்கழகமே அந்த கொள்ளையை நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் சேர்க்கை நடைபெற்ற போது துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. அப்போது உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் தலைமையிலான 3 பேர் குழுதான் பல்கலைக்கழகத்தை நடத்தியது. இவர்களும் பதிவாளர் கணேசன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோரும் சேர்ந்துதான் பல கோடிகளை சுருட்டியுள்ளனர்.

பேராசிரியர் பணியிடம் நிரப்பியதில் ஊழல், விடைத்தாள் மறுகூட்டலில் லஞ்சம், 10 ஆண்டுகளுக்கான தேர்வு விடைத்தாள்கள் வாங்கியதில் முறைகேடு,  10 ஆண்டுகளாக தற்காலிக விரிவுரையாளராக உழைத்து வரும் 270 பேரை வேலையைவிட்டு நீக்குவது, புதிய பேராசிரியர் பணி நியமனத்திற்கு 25 லட்சம் விலை நிர்ணயம் என அண்ணா பல்கலைக் கழகத்தில் தோண்டத் தோண்ட புதையல் போல் லஞ்ச ஊழல் முறைகேடுகள் வெளிவருகின்றன.

பதிவாளர் கணேசன்.

துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், லஞ்ச – ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் பேராசிரியர்கள் என அனைவரும்  கிரிமினல்களாக இருந்துகொண்டு அண்ணா பல்கலைக் கழகத்தை நடத்தினால் எப்படி  நல்ல, தரமான மாணவர்களை எப்படி உருவாக்க முடியும்?

20-க்கும் மேற்பட்ட  அரசு பொறியியல் கல்லூரிகள், 563 தனியார் பொறியியல் கல்லூரிகள், பல ஆயிரம் பேராசிரியர்கள், பல லட்சம் மாணவர்கள் என வானளாவிய அதிகாரம் கொண்டது அண்ணா பல்கலைக்கழகம். இந்த நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இதனால்  பல ஆயிரம் கோடிகள் சர்வ சாதாரணமாக  புழங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகம் இலஞ்ச ஊழலில் ஊறித்திளைக்க இதுவே காரணம்.

இந்த இலஞ்ச ஊழலை காரணம் காட்டி பல்கலைக்கழக நிர்வாகத்தில்  பலவற்றை தனியார் ஏஜென்சிகளிடம் ஒப்படைக்க திட்டம் தீட்டுகிறார் துணைவேந்தர் சூரப்பா. அண்ணா பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து தனியார்மயமாக்க தன்னாட்சியாக அறிவித்துள்ளது மோடி அரசு.

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.

அண்ணா பல்கலைக்கழகம் ஒரு அபாய கட்டத்தில் இருக்கிறது. இது தெரிந்தும் பல நூறு நேர்மையான பேராசிரியர்களும், பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் வேடிக்கை பார்ப்பது சரியல்ல.  இந்த அநீதியை தடுத்து நிறுத்த தவறினால் அண்ணா பல்கலைக்கழகமே அழிந்துவிடும்!

இலஞ்ச ஊழல் குற்றவாளிகளான உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால், பதிவாளராக இருந்த கணேசன் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி கைது செய்ய வேண்டும். இலஞ்சம் ஊழல் மூலம் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். சிறப்பு புலனாய்வுக்குழு மூலம் விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தை பாதுகாக்க பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் முன்வர வேண்டும். உங்களுடன் எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி துணைநிற்கும்.

த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்.

தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. 9445112675