ம் ஊர் வங்கியில் சென்று ‘ஐயா.. நான் விவசாயம் செய்ய வேண்டும். 2 லட்சம் கடன் வேண்டும்’ என்று கேட்டுப்பாருங்கள். என்னவோ, அந்த மேலாளரின் சம்பளத்தைக் கேட்பதைப் போல எரிந்து விழுவார். விவசாயக் கடன் வாங்குவது என்பது நம் ஊர் வங்கிகளில் ஒரு கொடுங்கனவு. பல அலைச்சல்கள், அவமானங்கள், இழுத்தடிப்புகளைக் கடந்து, கமிஷன் கை மாறாமல் கணக்கில் கடன் தொகை வரவு வைக்கப்படாது.

ஆனால், நம்புங்கள். கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும், இந்தியா முழுவதும் ஒரு ‘விவசாயி’க்கு 95 கோடி ரூபாய் வீதம் 58,561 கோடி ரூபாயை கடனாக வழங்கியிருக்கின்றன இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள். இந்த மாபெரும் தொகையை 615 விவசாயிகள் விவசாயக் கடனாக பெற்றிருக்கிறார்கள். ’திவயர்’ இணையதளம், இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்ற தகவல்கள் இதை வெளிப்படுத்துகின்றன.

95 கோடி ரூபாய் கடன் வாங்குகிற ஒருவர் விவசாயியா என்பது அடிப்படையான கேள்வி. அவ்வளவு தகுதியுள்ள ஒருவருக்கு எதற்கு ‘விவசாயக் கடன்’ பிரிவில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. பொதுவாக வங்கிகளில் இதர வகை கடன்களுக்கான வட்டி விகிதத்தை விட விவசாயக் கடனுக்கு வட்டி குறைவு. வெறும் 4 சதவிகிதம்தான். ஏழை, சிறுகுறு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் இப்படி வழங்கப்படுகிறது.

ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என்றால், வேளாண் வணிக நிறுவனங்களே பெரும்பகுதி விவசாயக் கடன்களை பெறுகின்றன. மேலே சொன்ன ’ஒரு நபருக்கு 95 கோடி ரூபாய்’ என்ற கடன் கூட இத்தகைய வேளாண் நிறுவனங்கள் பெற்றவையே. விவசாயக் கடனின் பெயரால், விவசாய விளைபொருள் சந்தையில் கோலோச்சும் பெரும் நிறுவனங்கள் மொத்த கடன் தொகையையும் சுருட்டிக்கொள்கின்றன. அம்பானியின் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனம் கூட வேளாண் வணிக நிறுவனப் பிரிவில்தான் வருகிறது. இவர்கள் விவசாயக் கடன் பிரிவில் கடன் பெற்று, தங்கள் நிறுவனங்களின் உள் கட்டமைப்பு வசதிகள், குளிர்பதன கிடங்குகளை நிறுவிக்கொள்கின்றனர். சாதாரண விவசாயிகளோ, ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் கடன் பெறுவதற்குள் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது.

வங்கிகள் கடன் வழங்குவதற்கான கொள்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. இதன்படி விவசாயம், சிறுகுறு தொழில், ஏற்றுமதி, இறக்குமதி, கல்வி, கட்டுமானம் என பல்வேறு பிரிவுகளுக்கும் என்னென்ன விகிதத்தில் கடன் வழங்க வேண்டும் என்ற வரையறை உள்ளது. இந்த முன்னுரிமையின்படி, வங்கிகள், தங்கள் மொத்த கடன் வழங்கும் மதிப்பில் 18 சதவிகிதத்தை விவசாயக் கடனுக்கு ஒதுக்க வேண்டும் என்பது கொள்கை. இதன்படி 18 சதவிகிதத்தை ஒதுக்குகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதன் பயனாளிகள் யார் என்பதுதான் பிரச்னை.

தி வயர் இணையதளம் இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் திரட்டி வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம்.

♦♦♦

டந்த 2016-ஆம் ஆண்டு அரசு வங்கிகள் (ஆள்பவர்களால் அதிகாரம் செலுத்தக்கூடிய) விவசாய கடன் என்கிற பெயரில் கிட்டத்தட்ட ரூ. 59 ஆயிரம் கோடியை 615 வங்கி கணக்குகளுக்கு மட்டும் அளித்திருக்கின்றன. ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட தகவலுக்கு ரிசர்வ் வங்கி இந்த விவரங்களை அளித்திருக்கிறது.

மற்ற கடன்களைக்காட்டிலும் விவசாயக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில், குறைந்த விதிகளின் (ஏட்டளவில் குறைந்த விதிகள்) அடிப்படையில் சிறு விவசாயிகளும் பயன்படும்படி அளிக்கப்படுவதாக அரசு சொல்கிறது. தற்போது 4% வட்டியில் விவசாயக் கடன்கள் அளிக்கப்படுகின்றன.

விவசாய சங்க பிரதிநிதியான கிரண் குமார் வீசா , “நிறைய பெரிய நிறுவனங்கள் விவசாயம் தொடர்பான தொழிலைச் செய்கின்றன. அவர்களும் விவசாய கடன்கள் பிரிவில்தான் வங்கிக் கடன்களைப் பெறுகிறார்கள்.  ‘ரிலையன்ஸ் ஃபிரஷ்’ போன்ற நிறுவனங்களும் விவசாயம் தொடர்பான தொழில்கள் செய்யும் நிறுவனங்களின் பிரிவிலேயே வருகின்றன. அவர்கள் விவசாய பொருட்களை வாங்குவதையும் விற்பதையும் செய்கிறார்கள். அவர்கள் வங்கி கடன்களை விவசாய கடன்கள் பிரிவின் கீழ் வாங்கிறார்கள். குடோன்கள் கட்டுவதற்கும் இன்னபிற இதுதொடர்பான பணிகளுக்கும் அந்த பணத்தை பயன்படுத்துகிறார்கள்” என்கிறார்.

சில குறிப்பிட்ட துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ரிசர்வ் வங்கி அந்தத் துறைசார்ந்தவர்களுக்கு கடன் தருவதில் முன்னுரிமை தரவேண்டுமென வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. வேளாண்மை, சிறு-குறு தொழில்கள், ஏற்றுமதி, கல்வி, வீட்டுவசதி, சமூக கட்டமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான துறைகளுக்கு வங்கிக் கடனில் சலுகைகள் தரப்படவேண்டும். இவற்றை முன்னுரிமை துறை கடன்கள் (priority sector lending-PSL)என்பர்.

முன்னுரிமை துறை கடன் கொள்கைபடி, வங்கிகள் அளிக்கும் மொத்த கடனில் 18%  சிறிய, வறிய நிலையில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் துறைக்கு வழங்க வேண்டும். கிரண்குமார் வீசா சொல்கிறார்,  “இந்தக் கடனில் பெரும்பகுதி கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் போகிறது. இதன் விளைவாக விவசாயிகள் கடன்களை பெற முடிவதில்லை”.

மேலும் அவர் தொடர்ந்தார், “உண்மையில், பெரிய நிறுவனங்கள் முன்னுரிமை கடன் கொள்கைப்படி கடன் பெறுவது மிகவும் எளிது. மற்ற கடன்களைக் காட்டிலும் விவசாய கடனுக்கு வட்டியும் குறைவு. பெரிய அளவில் கடன் கொடுப்பதால் தங்களுடைய செல்வமும் அப்படியே இருக்கும் என வங்கிகள் நினைக்கின்றன”.

த வயர், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அனைத்து கிளைகளிலும் வழங்கப்பட்ட கடன் விவரங்களை கேட்ட நிலையில், அவ் வங்கியின் மும்பை மண்டலம் மட்டுமே விவரங்களை அளித்துள்ளது. மும்பை நகர கிளை, ரூ. 29.95 கோடியை மூன்று வங்கி கணக்குகளுக்கு மட்டும் அளித்திருக்கிறது.

அதாவது, சராசரியாக ஒவ்வொரு வங்கி கணக்குக்கும் ரூ. 10 கோடி கடன் அளிக்கப்பட்டிருக்கிறது. அதே வங்கி கிளை, ரூ. 27 கோடிக்கும் அதிகமான கடனை ஒன்பது வங்கிக் கணக்குகளுக்கு அளித்திருக்கிறது. இந்தக் கடனைப் பெற்ற பயனாளர்கள் யார் என்பது குறித்த விவரங்களை வங்கி தெரிவிக்கவில்லை.

வேளாண் அறிஞர் தேவேந்திர சர்மா, விவசாயிகள் என்கிற பெயரை உச்சரித்து வேளாண் கடன்களை பெரிய நிறுவனங்கள் குறைந்த வட்டியில் பெற்றுக்கொள்வதாக குற்றம்சாட்டுகிறார். “விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறோம் என்று சொல்வதன் பொய்முகம் இதுதான். ரூ. 100 கோடி கடன் கொடுக்கக்கூடிய வகையில் இவர்களெல்லாம் என்ன விவசாயம் செய்கிறார்கள்? எல்லாம் பாசாங்குத்தனமானவை. தொழில்சாலைகளுக்கெல்லாம், விவசாயின் பெயரால் ஏன் கடன் தரப்படுகிறது?” என்கிற வினாக்களையும் அவர் எழுப்புகிறார்.

வங்கிகள் தங்களுடைய வேலையை எளிதாக்கிக்கொள்ள, பெரிய கடன்களை வேளாண் கடன்கள் என்ற பெயரில் வழங்குவதாகச் சொல்கிறார் சர்மா. “ரூ. 100 கோடியை எளிதாக ஒரு நிறுவனத்துக்கு தந்துவிட முடியும். அதுவே, விவசாயிகளுக்கு தருவதென்றால் குறைந்தபட்சம் 200 பேருக்கு தர வேண்டும். பெரும் கடன்கள் மூலம் தங்களுடைய பணம் ஒரே இடத்தில் இருக்கும் அதே சமயம் 18% ஒதுக்கீட்டை நிறைவேற்றியது போலவும் இருக்கும் என்ற காரணத்தாலேயே இப்படி செய்கின்றன” என்கிறார் அவர்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2014-15 ஆம் ஆண்டில் ரூ. 8.5 லட்சம் கோடியை வேளாண் கடனாக வழங்கியது. இது 2018-19-ஆம் ஆண்டில் ரூ. 11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. த வயர் மூலம் ரிசர்வ் வங்கியிடம் பெற்ற தகவலில், இதில் பெருமளவு பெரிய கடனாக அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.  வேளாண் அறிஞர்கள் இந்த நிதி வேளாண் துறை நிறுவனங்களுக்கும் தொழிற்துறைகளுக்கும் போவதாக சொல்கிறார்கள்.

விவசாய கடன், அடிப்படை விவசாய உள்கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளுக்கு என வேளாண் கடன்கள் மூன்று கிளை பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் அமைத்தல் உள்கட்டமைப்பு பிரிவின் கீழ் வருகின்றன. இதற்காகத்தான் ரூ. 100 கோடி அளவிலான கடன்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. வேளாண் கிளினிக்குகள் மற்றும் வேளாண் வர்த்தக மையங்கள் விவசாயம் தொடர்பான செயல்பாடுகள் பிரிவின் கீழ் வருகின்றன. இதற்காகவும் ரூ. 100 கோடி அளவிலான கடன்கள் வழங்கப்படுகின்றன.

ரிசர்வ் வங்கி அளித்த டேட்டாவின் படி பெரிய அளவிலான கடன்கள், வேளாண் கடன்கள் என்கிற பெயரில் 2016-ஆம் ஆண்டுக்கும் முன்பிருந்தே வழங்கப்பட்டிருக்கின்றன. 2015-ஆம் ஆண்டில் 604 வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 52,143 கோடியை கடனாக வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு கணக்குக்கும் சராசரியாக ரூ. 86.33 கோடி கடன் அளிக்கப்பட்டிருக்கிறது. 2014-ஆம் ஆண்டு ரூ. 60,156 கோடி அளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கணக்குக்கும் சராசரியாக ரூ. 91.28 கோடி. இதே கடன் வழங்கும் முறை, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது.

2013-ஆம் ஆண்டு, ரூ. 56 ஆயிரம் கோடி கடனை 665 வங்கிக் கணக்குகள் பெற்றுள்ளன. சராசரியாக ரூ. 84.30 கோடி. 2012-ஆம் ஆண்டில் ரூ. 55, 504 கோடி 698 வங்கிக்கணக்குகள், சராசரியாக ஒவ்வொன்றும் ரூ. 79.51 கோடியை பெற்றுள்ளன.

“ஒரு விவசாயி போதாத நேரம் காரணமாக விவசாயம் பொய்த்துபோய் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிக்கும்போது, வங்கி அதிகாரிகளால் வேட்டையாடப்படுகிறார். விவசாயிகள் என்கிற பெயரில் கார்ப்பரேட் நிறுவங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனை அரசு அளிக்கிறது என்பதை ஒரு சாதாராண விவசாயியால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை”  என்கிறார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கேதார் சிரோகி என்ற விவசாயி.

உத்தரபிரதேசம் இட்டாவாவில் வசிக்கும் சஞ்சீவ் என்ற விவசாயி, நான்கு ஏக்கரில் விவசாயம் செய்கிறார். “வாங்கும் விவசாய கடனில் பெரும்பகுதி தரகருக்கு தரவேண்டியிருக்கிறது. பல அழுத்தங்களின் காரணமாகத்தான் விவசாயி கடன் பெறுகிறார், அதற்கும் வங்கிக்கு நடையாய் நடக்க வேண்டும், வங்கி அதிகாரிகளின் பேச்சுக்களை சகித்துக்கொள்ள வேண்டும். இது ஒருபுறம் இருக்க இந்த 615 வங்கி கணக்குக்கு சொந்தக்காரர்கள் யார், அவர்கள் ஏன் வேளாண் கடன் என்கிற பெயரில் கடன் பெறுகிறார்கள் என்பது மர்மமாக உள்ளது” என்கிறார் அவர்.

வேளாண் அறிஞர் தேவேந்திர சர்மா சொல்வது போல் விவசாயிக்கு தனியாகவும் வேளாண் தொழில்சார்ந்த நிறுவனங்களுக்கு தனியாகவும் கடன்கள் அளிக்கப்பட வேண்டும். ‘வேளாண்மை’ என்ற முத்திரையுடன் நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதன் மூலம் விவசாயிகள் ஏமாற்றப்படக்கூடாது.  இதை நிதியமைச்சரிடன் நேரடியாக சொன்னபோதும் இதுவரை ஒரு எதிர்வினையும் வரவில்லை என்கிறார் சர்மா.

மூலம்: Exclusive: Agricultural Loans Worth Rs 59,000 Crore Went to 615 Accounts in One Year

தமிழாக்கம் :
– வினவு செய்திப்பிரிவு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க