ந்தியாவுக்கு
வாய் தேவை இல்லை
யாரும் பேசக் கூடாது.
காதுகள் மட்டும்
போதும்.
அதுவும்
மனிதக் காதுகளாய்
இருக்கக் கூடாது.

பார்ப்பன பாசிசத்தின்
அதட்டல்களையும்
ஆணைகளையும்
உள் வாங்கத் தக்க
ஓட்டைகள் மட்டும்
போதும்.

கண்கள்,
கண்டும் காணாத
காட்சி மறதிகளாய்
வெளிப் பார்வையின்
புதை குழிகளாய்
இருக்க வேண்டும்

இயலாதெனில்,
கெடுநிலைக்கு மத்தியில்
நடுநிலை தேடும்
அறிவாளிகளின் அளவுக்காவது
கருவிழிகள் கட்டாயம்
கடை பிடிக்க வேண்டும்.

இதயம்?
அது
இந்து மதத்திற்கு
தேவையே இல்லை!

சொரணையற்று
உள்ளே
புதைந்துக்கொள்வது
இதயம்.

உயிரற்று
வெளியே புதைப்பது
உடல்.

எந்த அளவுக்கு
நீ
நீ அற்றுப் போகிறாயோ
தெய்வ சங்கல்பம்.
நீயானால்,
ஜெயில் சம்பவிக்கும்.

ஏற்றால்
பிரசாதம்
இல்லையேல்,
சம்ஹாரம்.

அவ்வப்போது வரும்
அறிவிப்புகளுக்காக மட்டும்
விழித்துக் கொண்டால் போதும்
மற்றபடி பேசாமல்
மரண யோகாவில்
கண்ணை மூடுவது
உடம்புக்கு நல்லது!

அசரீரீ
அவாளுக்கும்
அகர்வாலுக்கும்
மட்டுமே உரியது,

மாஃபியாக்களுக்கு
எதிராக
சோஃபியாக்கள்
குரல் எழுந்தால்
பின்புலம் ஆராயப்படும்
முன்புலம் முடக்கப்படும்.

அத்து மீறுவதற்கு
அனுமார்களுக்கு மட்டுமே
அனுமதி.
கொலை செய்வதற்கு
ராமனுக்கு மட்டுமே
மனு ஸ்மிருதி!

கார்ப்பரேட் ராமாயணத்திற்கு
துடுப்பசைத்தால்
குகனுடன் அய்வராவோம்.
கார்ப்பரேட் பாசிசத்துக்கு
எதிர்ப்பசைத்தால்
வரவரராவ், சுதா பரத்வாஜ்
கன்சால்வேஸ், அருண் பெரிரா
கவுதம் நவ்லகாவுடன்
கைதாவோம்.

அரசியல் புரியாத
ட் யூப் லைட்டுகளின்
அஞ்ஞான இருளை அகற்றி
அருளுரைக்கிறார் பகவான்,

”சதுர் வர்ணம் நமா சிருஷ்டம்
சாகாதிருந்தால் உன் அதிர்ஷ்டம்
யதா யதாகி
நாடே நக்சலைட்டாகி….”

ந மோ.. நாராயணா..
நாவசைத்தாலே நக்சலைட்னா
அதே..‍ அதாகி..
என குழப்பத்தில்
ஒத்துக்கொள்ள மறுத்தாலும்
உங்களையும் நக்சலைட்டாக்காமல்
விடமாட்டார் பகவான்!

– துரை. சண்முகம்

2 மறுமொழிகள்

 1. //சதுர் வர்ணம் நமா சிருஷ்டம்
  சாகாதிருந்தால் உன் அதிர்ஷ்டம்
  யதா யதாகி
  நாடே நக்சலைட்டாகி….”//👌👌👌

  பாசிச பா.ஜ.க ஒழிக என்ற உண்மையை ஆகாயத்தில் முழக்கமிட்டதற்க்கும் சோபியாக்களுக்கு சிறை ஆபாச வக்கிரமான அர்ச்சனைகள்,
  வன்முறை மிரட்டல்கள்…
  என்னே இந்துத்வா ஜனநாயகம்…
  நாடே நக்சலைட் ஆகிவிடும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க