ஜெர்மனியில் 1946-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கத்தோலிக்க பாதிரிகளால் சுமார் 3,677 பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான தகவலை இரண்டு முன்னணி ஜெர்மன் பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன.

ஸ்பீகல் ஆன்லைன் (Spiegel Online) மற்றும் டை செய்ட் (Die Zeit) என்ற இரு பத்திரிகைகளால் திரட்டப்பட்ட அத்தகவலின்படி பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 13 வயதுக்கும் குறைவான ஆண் குழந்தைகள். அவர்களில் 969 சிறுவர்கள் பாதிரிகளுக்கு உதவி செய்வதற்காக வந்த தொண்டுப்பணி சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மன் பாதிரியார்கள் அமைப்பினால் தொடங்கப்பட்ட இந்த அதிகாரபூர்வ ஆய்வு, ஜியெசென் பல்கலைக்கழகம், ஹெய்டல்பெர்க் பல்கலைக்கழகம் மற்றும் மன்ஹெய்ம் பல்கலைக்கழகம் (Universities of Giessen, Heidelberg, and Mannheim) ஆகியவற்றால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் முழு விவரங்கள் எதிர்வரும் செப்டம்பர் 25-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களில் ஆறு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பாலியல் பலாத்காரத்து ஆளாகியுள்ளனர். குறைந்தது 1,670 பாதிரியார்கள் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் என்றும் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அந்த ஆய்வறிக்கையிலிருந்து கசிந்த தகவல்கள் கூறுகின்றன. பெரும்பான்மையான பாதிரியார்கள் குற்றத்தில் ஈடுபட்ட பின்னர் வேறு திருச்சபைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் மூன்றுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மட்டுமே கத்தோலிக்க திருச்சபையால் விசாரிக்கப்பட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழகங்களின் வல்லுனர்களால் நடத்தப்பட்ட அந்த ஆய்வின்படி குற்றங்களின் உண்மையான எண்ணிக்கை இதை விட பன்மடங்கு அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது. ஏனெனில் இவ்விவகாரத்தை ஆய்வதற்கு திருச்சபைகளின் மூலக் கோப்புகளை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. மாறாக, மறை மாவட்ட திருச்சபைகளிடம் கேள்விகளைக் கொடுத்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு அமைந்தது.

கோப்புகள் மற்றும் காப்பகங்கள் சில அழிக்கப்பட்டதற்கும், மாற்றப்பட்டதற்கும் சான்றுகள் இருப்பதாக ஆய்வறிக்கையின் சுருக்கமான விவரணையினை மேற்கோள் காட்டி ’டெர் ஸ்பீகல்’ பத்திரிகை கூறியிருக்கிறது. மேலும் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் – குறிப்பாக பாதிரியார்கள் – புதிய திருச்சபைக்கு அவர்களது குற்றச்செயல்கள் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் இடம் மாற்றம் செய்யப்பட்டனர் என்றும் அப்பத்திரிகை கூறுகிறது.

ஏற்கனவே கத்தோலிக்கத் திருச்சபைகளில் பரவலாக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய குற்றச்சாட்டுகள் வெளி வந்திருந்தாலும் இப்படி அதிர்ச்சிகரமான தகவல்களை தடாலடியாக போட்டுடைப்பது இதுதான் முதன்முறை என்றே கூறலாம். ஏற்கனவே அமெரிக்காவின் பெனிசுலேவியா மாநிலத்தில் மட்டும் சுமார் 1,000 சிறுவர்கள் 300 பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள் என்ற தகவல் கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்ட ஒரு விசாரணையின் முடிவில் வெளியானது.

கத்தோலிக்க திருச்சபைக்குள்ளே நடக்கும் சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பரந்த அளவிலான ஆய்வு ஒன்றை கடந்த 2017-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா நடத்தியது. 1980-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு வரை 1,880 பேர் மீது 4,756 புகார்கள் திருச்சபை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாக அந்த ஆய்வு தெரிவித்தது.

பாலியல் குற்றச்சாட்டினால் பதவி விலகிய முன்னாள் கார்டினலான தியோடர் மெக்காரிக்கின் (Theodore McCarrick) மீதான குற்றச்சாட்டை மறைத்தது தொடர்பாக  போப் பிரான்சிஸ் உள்ளிட்ட வாடிகனின் உயர்மட்ட அதிகாரிகளின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு “தகுந்த விளக்கங்களை” தாம் தயாரித்துக் கொண்டிருப்பதாக கடந்த செப்டம்பர் 10 அன்று வாட்டிகன் (போப் இருக்கும் தலைமை நகரம்) கூறியிருக்கிறது.

பாலியல் துன்புறுத்தல்களை குறைக்கவும் சிறுவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஒவ்வொரு நாட்டின் தலைமை பிஷப்புகளை வரவழைத்து ஒரு மாநாட்டை நடத்த உள்ளதாக வாட்டிகன் கூறியிருக்கிறது. எதிர்வரும் பிப்ரவரி மாதம் 21 முதல் 24 தேதி வரை மாநாடு நடக்க உள்ளதாக வாட்டிகன் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் கசிந்தது குறித்து ஜெர்மன் பாதிரியார்கள் அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்தது உண்மை என்றும் அந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதையும் கூறியுள்ளது.

“இது எங்களுக்கு ஒரு பெருஞ்சுமையாகவும் இழுக்காகவும் இருக்கிறது” என்று ட்ரையர் பாதிரியார் ஸ்டீபன் ஆக்கர்மன் (Stephan Ackermann) ஒரு அறிக்கையில் கூறினார். மேலும் “நான்காண்டுகளுக்கு முன்னர் அந்த ஆய்வினை நாங்கள் தொடங்கினோம். இன்று அதன் முடிவுகளை குறிப்பாக பாதிரியார்களான நாங்கள் எதிர்கொள்ள இருக்கிறோம்” என்று கூறினார்.

நன்றி : RT.com
தமிழாக்கம் : வினவு செய்திப் பிரிவு

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க