கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் பூந்துறையைச் சேர்ந்த மீனவர் ஜினீஷ் ஜெரோன். கடந்த கேரள பெருவெள்ளத்தின் போது மீட்புப் பணியில் அயராது ஈடுபட்ட ஜெரோன் கடந்த வெள்ளிக்கிழமை (28-09-2019) அன்று கன்னியாகுமரி அருகே ஒரு சாலை விபத்தில் சிக்கினார். விபத்தில் அடிபட்டு இரத்தம் வெளியோடிய நிலையில் சுமார் 30 நிமிடங்கள் மீட்பதற்கு யாருமில்லாமல் இருந்திருக்கிறார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜினீஷ், கடந்த சனிக்கிழமை (29-09-2018) தனது 23-ம் வயதிலேயே உயிரிழந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் பெய்த பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆலப்புழா மாவட்டம், செங்கனூர் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது ஜினீஷ் ஜெரோன் கடற்கரை வீரர்கள் என்ற மீனவ குழுவினருடன் இணைந்து தமது நாட்டுப்படகை எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் ஜினீஷ் ஜெரோன். இக்குழுவினரின் சேவையைப் பாராட்டி கேரள அரசு கடந்த செப்டம்பர் மாதம் இவர்களை கவுரவித்தது.

ஜினீஷ் ஜெரோன் கடந்த வெள்ளிக்கிழமையன்று பூந்துறையிலிருந்து கன்னியாகுமரி அருகே உள்ள கொல்லங்கோடுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். கொல்லங்கோட்டிலிருந்து மீன்பிடிக்கக் கிளம்பும் மீன் பிடி கப்பலோடு இணைந்து கொள்ள அவர் அங்கு சென்று கொண்டிருந்தார். அவ்வாறு சென்று கொண்டிருக்கையில், போக்குவரத்து சந்தடி இல்லாத ஒரு சாலைப்பகுதியில் சென்று கொண்டிருக்கையில் கனரக வாகனம் ஒன்று மோதியதில் வீதியில் தூக்கியெறியப்பட்டார்.

அவரது கடற்கரை வீரர்கள் குழுவைச் சேர்ந்த ஜான் மேத்யூ கூறுகையில் “அச்சமயத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாத காரணத்தால், விபத்து நடந்து அரை மணி நேரம் வரையில் கவனிப்பாரற்று இரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. மிகப்பெருமளவிலான இரத்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது.” என்றார்.

அரை மணி நேரத்திற்குப் பின்னர் அவரைக் கண்டவர்கள் அவரை அருகில் உள்ள நெய்யாட்டின்கரா மருத்துவனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர்.விபத்து குறித்த தகவல் பரவியதும் அவருக்கு இரத்தமளிக்க பல்வேறு மக்கள் மருத்துவமனைக்கு வந்து குவியத் தொடங்கினர். “அவரது இரத்தம்  ‘பி-’ வகையைச் சேர்ந்தது. கிடைப்பதற்கு அரிதான வகை இரத்தம்.நூற்றுக்கும் அதிகமான மக்கள் மருத்துவமனையில் அவருக்கு இரத்தமளிக்க வரிசையில் நின்றனர்.” என்கிறார் மேத்யூ.

படிக்க:
கேரளா : மீனவர்கள் வரலேன்னா என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது ! நேரடி ரிப்போர்ட்
நீ ஒரு கிறித்தவனா? வெள்ளம் வடிந்தாலும் வடியாத ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன வெறி

எனினும் சிகிச்சை பலனின்றி ஜினீஷ் ஜெரோன் சனிக்கிழமை (29-09-2018) மரணமடைந்துவிட்டார். மறுநாள் நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். செங்கனூர் சட்டமன்ற உறுப்பினர், சாஜி செரியன் அவரது சவ அடக்க நிகழ்வில் கலந்து கொண்டார். “இது ஒரு மோசமான நிகழ்வு. கடந்த ஆகஸ்ட் 17-ல் ஜெரோன் மற்றும் அவரது கடற்கரை வீரர்களால் கொண்டு வரப்பட்ட மீன்பிடி படகில் நான் பயணம் செய்தேன். மிகவும் சிக்கலான இடத்தில் மாட்டிக்கொண்ட சுமார் 60-க்கும் மேற்பட்டோரை அவர் காப்பாற்றியிருக்கிறார்” என நினைவுகூர்ந்தார் செரியன்.

மேலும், ஜெரோனின் பெற்றோர் மற்றும் இரண்டு தம்பிகளைக் கொண்ட அவரது குடும்பத்தை ஆதரிக்க செங்கனூர் மக்கள் நிதி திரட்டி அளிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இறுதி நிகழ்வில் சசி தரூர்.

ஜெரோனின் இறுதி ஊர்வலத்தில் கேரள நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் திருவனந்தபுரம் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆதித்ய வர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.சசிதரூர் தனது டிவிட்டர் பக்கத்தில், “கேரள வெள்ளத்தில் 60 உயிர்களை தனிப்பட்ட ரீதியில் காப்பாற்றிய ஒரு நாயகனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். அவரது இருசக்கர வாகனத்தில் லாரி மோதியதால் நேற்று அவர் இறந்தார். ஒரு பழமொழி சொல்வார்கள், “நல்லவர்கள் இளவயதில் இறந்து விடுவார்கள்” என்று.” எனக் கூறியிருக்கிறார்.

படிக்க:
ஒக்கி புயல் பேரழிவு குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை !

ஜெரோனும் அவரது ’கடற்கரை வீரர்கள்’ குழுவினரும் காப்பாற்றியவர்களுள், லீனா சூசன் மேத்யூவின் பெற்றோரும் அடக்கம். கேரள வெள்ளத்தின் சமயத்தில் அமெரிக்காவில் இருந்த சூசன் மேத்யூ, அதன் பின்னர் இந்தியாவிற்குத் திரும்பியிருக்கிறார்.

“இந்த மீனவர்களைத் தவிர வேறு யாரும் எனது பெற்றோரைக் காக்க இங்கு இல்லை. நான் அவர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருந்தேன். ஆனால் வருத்தத்திற்குரிய வகையில், நான் ஜினீஷ் ஜெரோனின் உடலை மட்டும்தான் பார்க்க முடிந்தது” என வருந்தினார் லீனா சூசன் மேத்யூ.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் Kerala: Saviour fisherman of floods dies in accident, state mourns
தமிழாக்கம்:
வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

3 மறுமொழிகள்

  1. மனித நேயர் ஜெரோனின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

  2. உடல் மரணித்தாலும் அவரின் சேவை போற்றப்பட்டுக்கொண்டே இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க