தங்கத்தில் உருளும் இந்திய மகாராஜாக்களின் திருமணங்கள் ! ஆவணப்படம்

மேட்டுக்குடி இந்திய பணக்காரர்களின் பகட்டு வாழ்க்கையின் இருட்டு பக்கங்களை படம் பிடித்து காட்டுகிறது இந்த ஆவணப்படம்.

ந்த ஆவணப் படத்தின் துவக்கத்தில் பணக்காரத் திருமணம் ஒன்று காட்டப்படுகின்றது. ஆவென் லூத்தரா எனும் இளம் இந்தியப் பணக்காரனின் உறவினருடைய திருமணம். தனது இருபதுகளின் துவக்கத்தில் இருக்கும் ஆவென், மாதம் ஒரு மில்லியன் டாலருக்கும் ( ஏழு கோடி ரூபாய்) அதிகமாக சம்பாதிக்கிறார்.

மாதத்தின் பெரும் பகுதியை வெளிநாடுகளில் கழிக்கும் ஆவென், இந்த திருமணத்திற்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுடன் வந்திருக்கிறார்.

“எந்தக் காரணத்திற்காகவும் இந்தத் திருமணத்தை தவற விட்டிருக்க மாட்டேன். எத்தனை வளர்ந்தாலும் நீங்கள் ஆரம்பித்த இடத்தை மறக்கக் கூடாது என்பார்கள் அல்லவா?” என்கிறார், ஆவென்.

ஆவென் லூத்தரா ( நடுவில் கருப்பு சட்டை அணிந்திருப்பவர் )

ஆவணப் படத்திற்காக மூன்று பணக்காரர்களைத் தெரிவு செய்துள்ளார் அதன் இயக்குனர். ஆவென் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலேயே சொந்தமாக தொழில் துவங்கியவர்.

அடுத்து மகாராஷ்ட்ராவில் தலித் குடும்பம் ஒன்றில் பிறந்து, 12 வயதில் திருமணமாகி, 16 வயதில் கணவரைப் பிரிந்து, ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து, பின் ரியல் எஸ்டேட்டில் கால்பதித்து முன்னேறிய கல்பனா சூரஜ்.

மூன்றாவதாக, ரேமண்ட்ஸ் கௌதம் சிங்கானியா. இம்மூவருக்குமான பொது இழை தங்கள் ‘பணக்காரத்தனத்தை’ பறைசாற்றிக் கொள்வது. இதை இம்மூவரும் வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்துகின்றனர்.

படிக்க :
கேரளா : வெள்ளத்தால் தள்ளிப் போன திருமணம் !
வரதட்சிணையால் நின்றுபோன திருமணம்! அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட்!!

ஆவென் லூத்தரா ஒரு இணையத் தொழில்முனைவோர் என தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். தனது 12வது வயதிலேயே செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியவர் என இயக்குனர் நமக்கு அறிமுகம் செய்கிறார். தற்போது மேட்டு ‘குடிமகன்கள்’ அல்லது மேட்டுக்குடியினரைப் போல் பீற்றிக் கொள்ள விரும்பும் உயர் நடுத்தரவர்க்கத்தினருக்காக ‘பாட்டில்பாப்’ என்கிற செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.

ஐந்து நட்சத்திர மதுக்கூடங்களில் எல்லோரும் பார்க்க வாகான இடத்தில் இருக்கும் மேசையை முன்பதிவு செய்ய உதவும் செயலி. இதை சந்தைப்படுத்த இங்கிலாந்து செல்லும் ஆவென், அடுத்த விமானத்தில் பெர்லின் செல்கிறார்.

பெர்லினில் இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமான சீனா, ரசியா, ஜெர்மன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணக்கார குடும்பங்களின் குலக் கொழுந்துகளோடு மது விருந்து. ”எல்லோரும் கடினமாக உழைத்து கவனமாக கொண்டாட வேண்டும் என்கிறார்கள். நான் அறிவுப்பூர்வமாக உழைத்து கடினமாக கொண்டாட வேண்டும் என்கிறேன். கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியாது; அவர்கள் முட்டாள்கள். முட்டாள்களால் பணம் சம்பாதிக்கவும் முடியாது”. மது ஆறாக ஓடும் அந்த விருந்தின் நோக்கம் என்ன? தன்னைப் இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் 2 லட்சம் பேருக்கு தன்னுடைய பணத்தின் வலிமையைக் காட்டுவதற்கு என்கிறார் ஆவென்.

தங்கமுலாம் பூசப்பட்ட ஜாகுவார் கார், தங்க இழைகளால் நிறுவன இலட்சிணை என ஆவெனைச் சுற்றிலும் செல்வம் ஆபாசமாய்ச் சிரிக்கிறது. மலைப்பாம்பின் தோலால் தயாரிக்கப்பட்ட காலணியைக் காட்டி, இது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்றுதான் ஆனால் அதையெல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள் என நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார். சுவரெழுத்து எழுதியதற்கும் போஸ்டர் ஒட்டியதற்கும் ‘தீவிரவாதிகள்’ என தீர்ப்பெழுதப்பட்டு கைது செய்யப்படும் தோழர்களின் நினைவு வந்தது.

படிக்க:
தீம் திருமணங்கள் : அழகின் வக்கிரம் !

கல்பனா சுராஜ் தனது பூர்வீக கிராமத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். பஞ்சைப் பராரிகள் நிறைந்த கிராமத்தின் தலித்துகள் குடியிறுப்பு. தனது இன்னோவா காரில் இருந்து பகட்டான உடையில் இறங்கி அந்தத் தெருக்களில் நடக்கும் கல்பனா, ஆதிக்க சாதித் தெருவையும் தங்கள் தெருவையும் பிரிக்கும் சாக்கடையைக் காட்டி விளக்குகிறார். பின் தான் பிறந்த வீட்டில் இருந்த விறகடுப்பை நமக்கு அறிமுகம் செய்கிறார். அதன் பின் ஒரு கண் பரிசோதனை முகாம். அந்த நாளின் பயணத் திட்டங்கள் முடிவுற்ற நிலையில் மும்பைக்குத் திரும்புகிறார்.

கல்பனா சுராஜ்

மும்பையில் தான் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ந்தது குறித்து கேமராவிற்கு விளக்கமாக சொல்கிறார். அவரது ஞாயிற்றுக் கிழமைகளை சமூக கடமைகளுக்காக ஒதுக்கியுள்ளதாக பின்னணிக் குரல் விளக்குகின்றது. அந்த ஞாயிற்றுக் கிழமை தனது பூர்வீக கிராமத்தில் இருந்து தங்களது இரண்டு மகள்களின் திருமணத்திற்கு உதவி கேட்டு வந்த பெற்றோரை கேமராவின் முன் சந்திக்கிறார்.

அவர்களிடம் 50,000 ரூபாய் உதவித் தொகை வழங்குகிறார். அந்த தந்தையின் கண்களில் கண்ணீர் வழிகின்றது. துரதிருஷ்டவசமாக அவர் கேமராவுக்கு முதுகைக் காட்டி நிற்கவே, “இதோ பாருங்கள், இவர் அழுகிறார்” என்று அவரது தோளைப் பிடித்து கேமராவை நோக்கித் திருப்புகிறார்.

பணக்காரப் பரம்பரையில் பிறந்தவர் கௌதம் சிங்கானியா. இன்னொரு விஜய் மல்லையா. தனது ஓய்வு நேரங்களை கார் ரேஸ்களிலும், தனது சொகுசுக் கப்பல் பார்ட்டிகளிலும் கழிக்கிறார். கார் பந்தையத்தில் இந்தியா முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என தனது தேசபக்தியைப் பறைசாற்றிக் கொள்கிறார். திரையில் காட்சிகள் மாறுகின்றன.. இதே போல் மற்றொரு கார் ரேஸ் பிரியரான விஜய் மல்லையா தோன்றுகிறார்.

கௌதம் சிங்கானியா

பணக்கார அல்பைகளின் இருண்ட மற்றொரு பாகமாக வரி ஏய்ப்பில் ஈடுபடும் பணக்காரர்களைக் குறிப்பிடுகிறது ஆவணப்படம். ஆனால் உண்மையில் அது மட்டும் தான் இருண்ட பாகமா? ஆவெனின் நிறுவனத்தைக் கேமரா படம் பிடித்துக் கொண்டிருந்த போது பின்னணியில் வர்ணணையாளர் விவரிக்கிறார் ”மிகக் குறைந்த கூலிக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் கிடைக்கும் நாடு இந்தியா…”; அதே போல், எந்நேரமும் பார்ட்டியிலும் பந்தைய மைதானத்திலும் கழிக்கும் சிங்கானியா (கேமராவுக்காக) தனது நேரடி விற்பனையகத்திற்கு ஆய்வு நடத்தச் செல்கிறார்.

அப்போது அங்கே பணிபுரியும் பெண் ஊழியர் “சார் இம்மாத இலக்கான இரண்டரை கோடியை நேற்றே அடைந்து விட்டோம்” என பணிவாக விளக்கிக் கொண்டிருக்கிறார்.

பணக்காரர்களின் உலகம் இந்தக் கூலிக்காரர்களின் வியர்வையின் மீதே நிற்கிறது என்பதற்கு ஆவணப்படம் நெடுக ஆங்காங்கே தெறிப்புகளைப் போல் சில வசனங்கள் உள்ளன. உண்மையும் அது தான். ஏழைகளும் உழைப்பாளர்களையும் சுரண்டுவதாலேயே பணக்காரச் சோம்பேரிகளின் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

கல்பனா சூரஜ்ஜின் தயாள குணமும் பணம் சேர்க்கும் வித்தையும் விதந்தோதப்பட தெருக்களைப் பிரிக்கும் அந்த சாக்கடை தேவையாக இருக்கிறது. தனது சொந்த மக்கள் இன்னமும் சாதியச் சாக்கடையில் உழன்று கொண்டிருக்கையில் தனது படாடோபமான வாழ்க்கை எந்த உறுத்தலும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை அந்த ஐம்பதாயிரம் உறுதி செய்து கொடுக்கிறது.

அதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்த ஏழைத் தகப்பனின் தோளைப் பிடித்து திருப்பி நமக்கு அந்த கண்ணீரை அறிமுகம் செய்து வைக்கிறார் கல்பனா.

நன்றி: அல்ஜசீரா
பதிவு: சாக்கியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க