நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகம் – உறுப்புக் கல்லூரிகளில் போராடும் மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்து!
தமிழில் தேர்வெழுத அனுமதி கொடு!

பு.மா.இ.மு. கண்டன அறிக்கை!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அதன் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளம் கலை, அறிவியல் படிப்புகளில் ஆங்கிலப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் தமிழிலும் தேர்வெழுதலாம் என்ற முறையை தற்போது மாற்றி ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் வருகைப்பதிவு குறைவு என காரணம் காட்டி ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.500 அபராதம் விதித்து கொள்ளையடிக்கிறார்கள். இதனை ஏற்க முடியாது என மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இந்த போராட்டங்களை சீர்குலைப்பதற்காக நேற்றைய தினம் (9.10.2018) நெல்லையில் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதற்கெதிராகவும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் அனைத்துக்கல்லூரி மாணவர்களும் வகுப்பை புறக்கணித்து போராட வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம்.

போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதற்கெதிராகவும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் அனைத்துக்கல்லூரி மாணவர்களும் வகுப்பை புறக்கணித்து போராட வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம்.

தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பெருகி கொள்ளையடிக்கும் வகையில் கல்வி வணிகமயமாகிவிட்ட இன்றைய சூழலில் அரசுப்பள்ளியில் படித்துவிட்டு வரும் கிராமப்புற பின்னணி கொண்ட ஏழை மாணவர்கள் பட்டப்படிப்புகளுக்காக இன்று வரக்கூடிய ஒரே இடம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள்தான். ஒவ்வொரு ஆண்டும் +2 முடித்துவிட்டு இலட்சக்கணக்கில் மாணவர்கள் அனைவருக்கும் இடம் கொடுக்கும் வகையில் போதிய அரசுக்கல்லூரிகள் இல்லை. வெறும் 90 அரசுக்கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இந்த மாணவர்கள் யாரும் ஆங்கில பிரிவில் விரும்பி சேர்வதில்லை, வேறு வழியில்லாமல் சேர்கிறார்கள். இது நன்கு தெரிந்துதான் இதுகாலம் வரை அனைத்து பல்கலைக்கழகங்கள், அதன் கீழ் இயங்கும் கல்லூரிகள் அனைத்திலும் ஆங்கில பிரிவு மாணவர்கள் தமிழில் தேர்வெழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.

படிக்க:
ஆங்கில மோகத்திற்கு பலியிடப்படும் அறிவுத்திறன் – ஒரு கள ஆய்வு !
மதுரை காமராசர் பல்கலை : செல்லாத துரை ஆனார் செல்லத்துரை !

ஆனால், மனோன்மணியம் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு திடீர் ஞான உதயம் வந்ததைப்போல் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத வேண்டும் என்று கட்டளையிடுகிறார். தகுதியான மாணவர்களை உருவாக்கத்தான் இப்படி செய்வதாக நியாயப்படுத்துகிறார். ஆங்கில பிரிவில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் அனைவரும் ஆங்கிலத்திலா பாடம் நடத்துகிறார்கள். இல்லையே. தமிழில்தான் நடத்துகிறார்கள். அதற்கு தகுதியான ஆசிரியர்களே இல்லை. அடிப்படை வசதிகளும் இல்லை, போதிய ஆசிரியர்கள் உள்ளிட்ட கட்டுமான வசதிகளும் இன்று அரசு பல்கலைக்கழகங்களில் இல்லை. துணைவேந்தர்கள் கோடிகளை கொடுத்து பதவியை வாங்குகிறார்கள்     (மனோன்மணியம் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது 30 கோடியை கொடுத்து பதவி வாங்கியவர் என்ற புகார் உள்ளது) இதையெல்லாம் செய்து மாணவர்கள் படிக்கும் சூழலை உருவாக்க வக்கில்லாதவர்கள் தான் இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத வேண்டும் என திணிக்கிறார்கள்.

இது ஏழை மாணவர்களை உயர்க்கல்வியில் இருந்து விரட்டும் சதி. இதனை மாணவ சமூகம் அனுமதிக்கக் கூடாது. மாணவர்களை தமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். அபராதம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும். கல்லூரிகள் திறந்து 5 மாதங்களாகியும் இதுவரை வழங்கப்படாமல் இருக்கும் இலவச பஸ்பாஸ், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். அரசு மாணவர் விடுதிகளில் போதிய அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். உரிமைக்காக போராடும் மாணவர்கள் ரவுடிகள், கிரிமினல்கள் அல்ல. அவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்கு பதில் போலீசை ஏவி மண்டையை பிளப்பதை மாணவ சமூகம் ஒருபோதும் அனுமதிக்காது, தமிழ்ச்சமூகமும் அனுமதிக்கக் கூடாது. கல்லூரிகள் சிறைச்சாலையும் அல்ல, மாணவர்கள் அடிமைகளும் அல்ல. போராடும் மாணவர்களுக்கு RSYF என்றும் துணை நிற்கும். மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக அனைத்து மாணவர் அமைப்புகளும், ஆசிரியர் சங்கங்களும், ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டுமென கோருகிறோம்.

இவண்,
த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு. தொடர்புக்கு; 9445112675

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க