மஹா, ராயல் என்ஃபீல்ட், எம்.எஸ்.ஐ. ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்கள் மீதான நிர்வாகத்தின் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலைக் கண்டித்தும், தொழிற்சங்கம் வைத்த காரணத்துக்காக தொழிலாளிகள் இருவர் நிரந்தர வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு தொடர்ச்சியாக தீரமுடன் 18 நாட்களுக்கு மேல் போராடி வருகிறார்கள்.

8.10.2018 அன்று பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவையும் வாழ்த்தையும் தெரிவிக்க சென்றோம்.

அன்றைய போராட்டத்தை முறைப்படுத்தி தலைமை தாங்கிய யமஹா தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி வேல்முருகன் அவர்களிடம் அறிமுகப்படுத்தி கொண்டிருந்தோம், அப்போது மதிய உணவு நேரம். தொழிலாளர்கள், தோழர்களை பார்த்து உற்சாகத்துடன் “சாப்பிட வாங்க” என்றார்கள். “பரவாயில்லை தோழரே” என்ற போது “நீங்கள் எங்களை பார்க்க வந்திருங்கீங்க சாப்பிடாமல் இருக்க கூடாது” என்று கட்டளை போட்டார்கள்.

படிக்க:
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
பதினான்காவது நாளாக யமஹா தொழிலாளர் போராட்டம் !

தோழர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவை ஒரு தொழிலாளரிடம் கொடுத்துவிட்டு உணவு வாங்க வரிசையில் நிற்க சென்ற போது “வேண்டாம் தோழரே நாங்கள் வாங்கி தருகிறோம்” என்று கூறி, அவர்கள் வாங்கி வந்த உணவு தட்டை எங்களிடம் கொடுத்துவிட்டு மீண்டும் நீண்ட வரிசையில் சென்று நின்றார்கள்.

உணவு இடைவேளை முடிந்தவுடன் தொழிலாளர்களை உணர்வூட்டும் விதமாக ம.க.இ.க.வின் புரட்சிகர பாடல்களான “உலகத்தை விடிய வைத்தது நீதானடா”, “மூஞ்சப்பாரு மூஞ்சப்பாரு முதலாளி வர்க்கம்”, “மானத்தை இழந்து வாழ்க்கை வேணுமா” ஆகிய பாடல்களை பாடினோம்.

தொடர்ந்து போராட்டத்தை ஆதரித்து பெ.வி.மு. இணை செயலாளர் தோழர் திலகவதி, “தொழிலாளி வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக முன்னுதாரணமிக்க போராட்டத்தை யமஹா தொழிலாளர்கள் முன்னெடுத்திருப்பது ஒரகடம் SEZ பகுதியில் மாற்றத்திற்கான அறிகுறி.

இந்த போராட்டம், ஆலை கடந்து சங்கம் கடந்து தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைய வேண்டும். அத்தகைய போராட்டமே தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு முடிவுகட்டும்” என்று போராட்டத்தை வாழ்த்தி பேசினார்.

போராட்டக்களத்தில் 8 பெண் தொழிலாளர்களும் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு இயற்கை உபாதைக்காக போலாமா? என்றார்கள். சரி என்று தோழர்களும் அவர்களுடன் சென்றோம். யமஹா தொழிற்சாலைக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்யும் பல ஆலைகளை தாண்டி சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல், குடியிருப்புப் பகுதியில் இருக்கும் ஒரு தொழிலாளரின் வீட்டிற்கு கூட்டி சென்றார்கள். தினமும் இவ்வளவு தூரம் வருவது சிரமமாக இல்லையா? என்றதற்கு “தொழிற்சாலையில் படும் சிரமத்திற்கு இது எவ்வளவோ தேவலை” என்று கூறிவிட்டு சிரித்தார்கள்.

போராடும் தொழிலாளிகள் பல்வேறு இன்னல்களை தாங்கிக் கொண்டு உறுதி குலையாமல் போராடி வருகிறார்கள். அவர்களைச் சென்று சந்தித்து ஆதரவு தெரிவிப்பது நமது கடைமை!

தகவல்: பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை, தொடர்புக்கு – 94990 38982

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க