டப்பெட்டி திரைப்பட இயக்கம் சார்பாக மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் சென்னையில் பிரத்யேகக் காட்சியாக கடந்த அக்டோபர் 21-ம் தேதி திரையிடப்பட்டது.

தேனி மாவட்ட மலை மற்றும் அதனோடு தொடர்பு கொண்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டம் தான் கதை. வாழ்க்கை தேவைக்காக மலையேறுவது, மலை உச்சியில் கேரளப் பண்ணை நிலங்களில் வேலை செய்வது, சிறு விவசாயத்தில் ஈடுபடுவது, மலையடிவாரத்துக்கு திரும்புவது என்ற செங்குத்தான ஒரு வாழ்க்கையின் படம் பிடிப்பு மேற்கு தொடர்ச்சி மலை. வனகாளியின் உரையாடலிலும், ரங்கசாமியின் நடையிலும் மக்களின் வாழ்க்கைப்பாடு பார்வையாளர்களுக்கு கடத்தப்படுகிறது.

ரங்கசாமியின் வாழ்க்கை சிறு கனவுகளுடனும், ஏமாற்றங்களுடனும் நகர்கிறது. ஒரு சிறு காணி விவசாய பூமியையாவது சொந்தமாக வாங்குவது அவன் லட்சியம். முதல் முயற்சி பத்திரம் எழுதப்போகும் நாளன்று சம்பந்தப்பட்டவர் விற்க மறுப்பதால் தோல்வியடைகிறது. இரண்டாவது முயற்சி கைகூடும் நேரத்தில் துர்பாக்கியம் ஒன்று காத்திருக்கும். கொள்முதல் விலைக்கு வாங்கி வந்த ஏலக்காய் மூட்டை மலையிலிருந்து நழுவி சிதறும்.

மகளை திருமணம் செய்து வைக்க வேண்டிய நெருக்கடி நிலத்தை வைத்திருக்கும் பெண்ணிற்கு ஏற்படுவதால் மூன்றாம் முறை சற்றே குறைந்த விலைக்கு நிலம் ரங்கசாமிக்கு வந்து சேரும். தனது சொந்த நிலத்தில் முதல் விவசாயப் பரிசோதனையை ரங்கசாமி மேற்கொள்வார். புயல் மழையில் அவருடைய பயிர் முற்றாக அழிந்து விடும். பின்னர் பன்னாட்டு வீரிய விதைகளை கடனுக்கு வாங்கி பயிரிடுவார்.

இந்த நிலையில் ஒரு கொலை வழக்கில் ரங்கசாமி கைதாவார். அது இப்படத்தின் துணை கதைப்பொருளோடு தொடர்புடையது. அதன் நாயகன் சாக்கோ. சாக்கோ கேரள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். ரங்கசாமி மலையேறி கேரளப் பகுதியை கடக்கும் போது சாக்கோ தோன்றுவார்.

படிக்க :
மாபூமி – இந்தியப் புரட்சிக்கான ஒத்திகை – திரை விமரிசனம், வீடியோ!
ஆடுகளம்: மண்ணை விடுத்து சினிமாப் புனைவில் ஆடும் களம்!

கொடியேற்றுவது, ஊர்வலம் செல்வது, சங்கத்தில் இணைந்திருக்கும் தொழிலாளர்களை பிரித்து வேலைக்கு அனுப்புவது, முழக்கமிடுவது, போராடுவது என்ற செயல்திறமுள்ள வாழ்க்கை சாக்கோவினுடையது. முழங்கை வரை மடித்து விட்ட சட்டை, தூக்கி கட்டிய வேட்டி, கையில் ஒரு பை, மழையை எதிர்பார்த்து ஒரு குடை, தீவிரத்தை உணர்த்தும் குறுந்தாடி என்று சிக்கனமான தேகத்தில் சாக்கோ காட்சியளிக்கிறார்.

சாக்கோ எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறார். ரங்கசாமியும் கூட நடந்து கொண்டேதான் இருக்கிறார். தத்தமது லட்சியங்களை நோக்கிய தளராத நடை இருவருடையதும்.

இருவர் பயணமும் முடிவுறும் புள்ளியாக ஐந்து ஏக்கர் நிலப்பண்ணையாரின் கொலை இருக்கிறது. கட்சியின் கருங்காலி ஒருவரையும் சேர்த்துக் கொல்கிறார், சாக்கோ. இந்த இரு கொலைகளும் மொத்த நிகழ்ச்சிப்போக்கையும் கலைத்துப் போடுகிறது.

சாக்கோ சிறை சென்ற பிறகு அவர் முன்னெடுத்த போராட்டம் கைவிடப்படுகிறது. அவர் எதிர்த்து கொண்டிருந்தவை எல்லாம் அங்கு வந்து விடுகிறது. சிறை மீண்ட பிறகு சாக்கோ காட்டப்படவில்லை. ரங்கசாமி சிறைவாசத்துக்கு பிறகு எதுவும் பேசவில்லை. இருவரின் மவுனமும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. ஒரு வேளை சாக்கோ பேசியிருந்தால் யாருக்கு எதிராக பேசியிருப்பார்? கம்யூனிசம் தொடர்பாக ரங்கசாமி என்ன நிலைப்பாட்டை பிற்பாடு கொண்டிருப்பார்?

எதிரியிடம் விலை போன கட்சியின் தோழனை கொலை செய்வது என்ற சாக்கோவின் முடிவு சரியா? விலை போன நபர் மீது கட்சியின் நிலைப்பாடென்ன? சாக்கோவின் கொலை ஒரு கையறு நிலையின் எதிர்வினையா? இவை சாக்கோ சார்ந்திருந்த கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் மீது திரைப்படம் கொண்டிருக்கும் மறைமுகமான விமர்சனமாகவும் நாம் பார்க்க முடியும்.

சாக்கோவின் செயல்பாடுகள் படத்தில் ஒரு அறக்குரலாக ஒலிக்கிறது. அதே நேரம் அவரது அரசியல் புரிதல் மீது கேள்விகள் எழாமலில்லை. ‘வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றிருப்பவன் கம்யூனிஸ்ட் அல்ல’ என்ற அவரது பஞ்ச் டயலாக் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெறுகிறது. மலைக்கு சாலை அமைக்கும் திட்டத்தை சாக்கோ கடுமையாக எதிர்க்கிறார்.

நடந்தும், மாட்டுவண்டியிலும் அலைக்கழியும் மக்களின் வாழ்வை எளிதாக்கும் வகையில் வருகின்ற சாலை எதிர்க்கக்கூடியதா?

அச்சமின்றி நடமாடவும், விரைவாக செல்லவும், யானை போன்ற விலங்குகளிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும், கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யவும் சாலை அவசியம் அல்லவா? அது எட்டு வழிச்சாலை போன்ற உதவாக்கரை திட்டமல்லவே. ஒரு கம்யூனிஸ்டாக சாக்கோ போராடுவது பழைய நிலப்பிரபுத்துவ முறையை பாதுகாக்கவா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

நமது சமூக அமைப்பை ஒரே நேரத்தில் நிலப்பிரபுத்துவம் என்றோ, முதலாளித்துவம் என்றோ மட்டும் அறுதியிட முடியாத அளவுக்கு ஒரு கலவை நிலையில் இருக்கிறது. நவீனத்துவ வளர்ச்சி கண்ட ஒரு பகுதி நாற்புறமும் பழமையின் தாக்குதலுக்குள்ளாகிறது. பிறகொரு கட்டத்தில் அதன் செல்வாக்குக்குள் மறுபடியும் செல்வதை பார்க்கிறோம். ஓரடி முன்னால், ஈரடி பின்னால் என்ற ஆடுபுலி ஆட்டமாக இந்தியச் சமூகம் சுழல்கிறது.

தருமபுரி நாயக்கன் கொட்டாய் கலவரம் ஒரு சான்று. ஒரு காலத்தில் நக்சலிச கம்யூனிசம் செழித்தப்பகுதியா இது? என்று இந்துப் பத்திரிகையே கவலைப்படும் அளவுக்கு தான் நிலைமை இருக்கிறது. முதலாளித்துவம் சமச்சீரற்ற நிலையை மக்களிடம் மட்டும் ஏற்படுத்தவில்லை; அதன் நகர்வே கூட சமச்சீரற்று தான் உள்ளது.

எனவே சாலை அமைவதை தன்னிலையாக எதிர்ப்பது சரியானதா? அது தொடர்பான கொள்கை பயனுடைமை அடிப்படையில் எடுக்கப்பட வேண்டியதல்லவா? ரங்கசாமியின் குழந்தை வளர்கிறது. அவன் பள்ளிக்கு செல்ல வேண்டாமா? இந்த பிரச்சினைகளை சரிவர கவனத்தில் கொள்ளாததால் மேற்கு தொடர்ச்சி மலை காலமாற்றத்தில் காணாமல் போகிற ஒன்றின் மீதான இரங்கல் கவிதையாக இறுதியில் அர்த்தம் கொள்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இயக்குநர் லெனின் பாரதி பயன்படுத்தியுள்ள சில திரைநுணுக்கங்கள் திரைமொழி சார்ந்து முக்கியத்துவம் பெறுபவை. யானைகள் பற்றிய சித்தரிப்பு குறிப்பிடும்படியான ஒன்று. படத்தில் கதைக்கப்படும் யானைகளை பார்க்க ஆர்வம் ஏற்படும். யானை ஒரு பெண்ணின் கணவனை அடித்துக் கொன்ற கதை ஊரில் பிரசித்தி பெற்றது. அப்பெண் பித்துப்பிடித்து மலையிலேயே தங்கி விடுவாள். ஒரு நாகத்தின் சீற்றத்தை அவள் அடைகாத்து வைத்திருப்பாள். யானைகள் அவளை தீண்டுவதில்லை.

படிக்க :
தேனி : சிறுவனைக் கொன்ற மதயானை – வேடிக்கை பார்க்கும் அரசு 
உசிலை வட்டார வெண்டைக்காய் விவசாயம் | படக் கட்டுரை

மலைக்கு சென்று திருமணப்பத்திரிகை வைக்க யானைக்கு பயந்து செல்ல மாட்டார் ஒருவர். பின்னர் ரங்கசாமியின் துணையுடன் மலையேறுவார். ஒரு தமிழ் மனத்திற்கு யானைகளை பற்றி சொல்ல யானைகளை காட்ட வேண்டியதில்லை. யானைகளை காட்டாமலே யானை பற்றிய கதைகள் பேய்த்தோற்றத்துடன் அச்சுறுத்துகின்றன.

இயக்குநர் லெனின் பாரதி

மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து நாம் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு முக்கியமான ஒன்றாக தமிழக – கேரள மக்களுக்கிடையே நிலவும் நல்லுறவு செய்தி உள்ளது. ஐந்து ஏக்கர் நிலத்தின் முதலாளி தொழிலாளர்களை பிரிக்க தந்திரமாக இனவாதத்தை கையிலெடுக்க முற்படும் போது சாக்கோ அதனை கடுமையாக எதிர்க்கிறார். இரு மாநில மக்களும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கிறார்கள். கேரளாவிடமிருந்து விடுவித்துக் கொண்டு தமிழகத்துடன் இணைந்த குமரிப்பகுதியில் காணப்படுவது போன்ற மலையாள வெறுப்பு அங்கில்லை.

ஜெயமோகன் கதைவசனம் எழுதிய ஒழிமுறி முதற்கொண்டு பல மலையாளப் படங்களில் தமிழ்ப்பேசும் மக்களை மட்டம் தட்டுவது, வில்லன்களாக சித்தரிப்பது போன்றவற்றை சர்வசாதரணமாக காணலாம். இந்த குறுகிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க முடிந்தது மோசமான காலத்தின் சிறந்த ஒன்றாக இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை –யில் மனிதர்கள் பொதுவாக நல்லுள்ளம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஒருவர் துன்பத்தை மற்றவர்கள் புரிந்து கொள்வது, இயன்றவரை பிறருக்கு ஆதரவாக இருப்பது போன்ற எளிய மக்களுக்குரிய குணங்கள் உரிய கவனம் கொடுக்கப்பட்டுள்ளன. ரங்கசாமிக்கு பணத்தேவையை பூர்த்தி செய்ய ஒரு தோட்டத் தொழிலாளி ஒரு ஏலக்காய் மூட்டையை கொள்முதல் விலைக்கு கொடுத்துதவுகிறார். ரங்கசாமி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு கடைக்காரப் பெண்மணி மிகவும் பிரயாசப்படுகிறார். ரங்கசாமிக்கு ஐந்து ஏக்கர் தோட்டத்தில் ஒரு வேலையும் சாக்கோவின் உதவியால் கிடைக்கிறது.

பொதுவாக இவர்கள் பழைய தலைமுறையை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஐந்து ஏக்கர் தோட்ட முதலாளியின் மகன் சாக்கோவையும், அவர் ஊடாக கம்யூனிசத்தையும் வெறுக்கிறான். ஐந்து ஏக்கரையும் அவன் பாகப்பிரிவினை செய்வதன் மூலமாக கம்யூனிச சங்கத்தை அவன் கலைக்க முற்படுகிறான். மனிதர்களுக்கிடையிலான உராய்வு திரைப்படத்தில் அங்கு தான் முதன்முறையாக தொடங்குகிறது.

அதற்கு முன்பு வரை அந்த உராய்வு மக்களுக்கும் இயற்கை அல்லது ஏழ்மைக்கும் இடையேயானதாக இருக்கிறது. கண்ணுக்கு தெரியாததாக இருந்த முரண் சுரண்டலாக, நிலப்பிரபுத்துவ வகைப்பட்ட ஒன்றாக பின்னர் உருவம் கொள்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் காரணகாரியம் சார்ந்து கேள்விகள் இருந்தாலும் அதன் திரைஅனுபவம் மார்க்சிய அழகியலாக இருப்பதை மறுப்பதற்கில்லை. இயக்குநர் ஜனநாதனின் புறம்போக்கு என்ற பொதுடமை அடிப்படையில் காந்திய சிந்தனையை முன்வைக்கின்ற திரைப்படம் தான் என்றாலும் அது மக்கள் போராளிகள் எல்லாம் அரசு சித்தரிப்பது போல அவ்வளவு மோசமானவர்களில்லை என்ற குறைந்தபட்ச உண்மையை உரத்து கூறுகிறது.

லெஃப்ட் ரைட் லெஃப்ட் என்ற திரைப்படம் கேரளாவில் மைய நீரோட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உள்விவகாரங்களை விவாதிக்கும் முக்கியத் திரைப்படம். மேற்கு தொடர்ச்சி மலையின் கதைக்களன் வேறு என்றாலும் அதில் வரும் கருங்காலிப் பிரச்சினையை மேலதிகமாக புரிந்து கொள்ள லெஃப்ட் ரைட் லெஃப்ட் தான் உதவும்.

படிக்க :
போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்
போலி கம்யூனிஸ்டுகளுக்கு தேவைப்படாத நிஜப் போராளி !

சமூகம் புறநிலையில் அடையும் பெயர்ச்சிக்காலத்தை மேற்கு தொடர்ச்சி மலை ஒரு கதைக்கருவாக கொண்டிருக்கிறது. ரங்கசாமியின் நிலம் அவனிடமிருந்து பறிக்கப்பட்டு காற்றாலைகள் அதில் முளைக்கின்றன. அங்கு செக்யூரிட்டி வேலைக்கு ரங்கசாமி ஒரு வாகனத்தில் ஏறி செல்கிறார். அவர் தலை கவிழ்ந்து இருக்கிறது. அவருக்கு மேலாக கேமரா உயர்கிறது. தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த மலையின் தற்போதைய அளவின் பிரம்மாண்டத்தை கேமரா காட்டுகிறது. வனகாளி விவரிக்கும் பாடுகளின் போதும் கேமரா உயர்ந்து மலையின் உரு அளவை குறைத்து காட்டும். அப்போது மலையின் வனப்பு ரொமாண்டிக் கவிஞர்களால் பாடப்பட்ட இசைகவிதையாக துலங்கும். மலை நிலப்பிரபுத்துவ வாழ்க்கை முறையில் கட்டுண்டு கிடக்கும்.

ஒன்று கொடூரமாகவும் மற்றொன்று அனுதாபத்துடனும் காட்டப்படுகிறது. இரண்டுமே இரு வேறு சுரண்டல் வடிவங்கள் தான் என்றாலும் மேற்கு தொடர்ச்சி மலை காலத்தால் நிற்காத இழப்பு ஒன்றின் வலியை சுமக்கிறது. செங்கொடியை எடுத்து நிலப்பிரபுத்துவம் மீது போர்த்தியுள்ளது.

ராஜ்