கார்ல் மார்க்சின் மனைவி ஜென்னி வான் வெஸ்டபாலன் 1814 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் பிறந்தது செல்வம் கொழித்த உயர்குடி. கார்ல் மார்க்சுக்கு நான்கு ஆண்டுகள் மூத்தவர். கல்வியும் அறிவும் எழுத்துத் திறனும் நிரம்பியவர். பேரழகி. பல ஆண்டுகள் கழித்து ஜென்னிக்கு எழுதிய கடிதத்தில் டிரயர் நகரின் “அழகுத் தேவதை” என மக்கள் பாராட்டியதை நினைவுகூர்ந்தார். அத்தகைய அம்மையார் சாதாரணமான வருவாயுடைய யூதமதம் சார்ந்த குடும்பத்தில் பிறந்த கார்ல் மார்க்சைக் காதலித்தது விந்தையிலும் விந்தை.

கார்ல் கிறிஸ்துவராக மதம் மாறினார். ஜென்னி – கார்ல் மார்க்ஸ் சிறுவயது முதல் ஒருவரையொருவர் நேசித்துக் காதலித்து வந்தனர். தம் பெற்றோர் திருமணத்திற்கு இசையமாட்டார்கள் எனக் கருதி ஆறு ஆண்டுகள் காத்திருந்து காலம் கனிந்ததும் 19-6-1843 அன்று காதல் கணவனைக் கைப்பிடித்த ஜென்னி, காரியம் யாவிலும் கைக்கொடுத்தார். அன்றிலும் பெடையும் போல இணைபிரியாது வாழ்ந்தனர். அவர்களை ஒத்த கணவன் மனைவி புராணங்களிலும், கற்பனைக் காவியங்களிலும் மட்டுமே காணப்படுவர். ஜென்னி ஜெர்மன் மொழி – இலக்கியத்தில் வல்லுநர் எனப் பாராட்டப்படுபவர். கார்ல் மார்க்ஸினுடைய அரிய நண்பர் ஹெய்ன் (Heine) தலை சிறந்த ஜெர்மன் மொழிக் கவிஞர். இவரே தம் கவிதை பற்றிய ஜெர்மனியின் மதிப்பீட்டுக்குத் தலை வணங்குவார். அது மட்டுமல்லாமல் அறுவெறுப்பும் அகந்தையும் இன்றிக் கார்ல் மார்க்ஸ் எழுத்துக்களைப் படித்துப் பார்த்து யோசனை வழங்குவது, சொன்னபடி எழுதிச் செப்பனிடப்பட்டவைகளைத் திருத்தமாகப் படி எடுத்துக் கார்ல் மார்க்சுக்குத் தருவது இவருடைய அன்றாடப் பணிகள். வீட்டு வேலைகளைக் கவனித்தல், குழந்தைகளைப் பராமரித்தல், உணவுத் தட்டுப்பாடுகளைச் சரிசெய்தல் எல்லாம் ஜென்னி செய்யும் அன்றாடக் குடும்ப வேலைகள்.

பிரெஞ்சு அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்ட கார்ல் மார்க்ஸ் 1845  பிப்ரவரி, 3 அன்று பாரிசைவிட்டுப் பிரஸல்ஸ் நகருக்குச் சென்றார், இதனை ஜென்னி எதிர் பார்க்கவில்லை. உடனடியாக, ஜென்னி தன்னுடைய கைக் குழந்தையுடன், தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுவிட்டுப் பயணச் சீட்டுக்கு மட்டுமே கிடைத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு மார்க்சைப் பின்தொடர்ந்தார். அங்கு மார்க்சின் மேதமை மக்களை ஈர்த்தது. ஆனால், ஜென்னியின் விருந்தோம்பல் பண்பு புரட்சியாளர்களை ஈர்த்துப் பிணைத்தது. எந்த இடமும் புதியதாகத் தோன்றவில்லை. கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் லீக் மத்தியக் குழுவைத் திருத்தி அமைக்கும் பொறுப்பை மேற்கொண்டார். இதனை மோப்பம் பிடித்து அறிந்த காவல்துறையினர் சட்டத்துக்குப் புறம்பாக நாட்டில் நுழைந்ததாகக் குற்றம் சுமத்தி வீட்டைச் சோதனையிட்டுக் கைது செய்து மார்க்சைக் சிறைக்குக் கொண்டு போனார்கள்.

ஆனால், உடனடியாக விடுதலையானார். 24 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென அரசாங்கம் உத்தரவிட்டது. ஜென்னி பிரஸல் சிலிருந்து வெளியேறும் முன் தம்மிடமிருந்த வெள்ளியை வெய்டிமெயர் உதவியுடன் அடகு வைத்துச் சிறிது தொகையைக் கடன் பெற்றுப் பாரிசில் குடியேறினார். 1848-1849 ஐரோப்பிய தொழிலாளி வர்க்கம் எழுச்சி பெற்ற காலம். ஏங்கெல்சுக்கும் மார்க்சுக்கும் இணைபிரியாத தோழமையும் நட்பும் உருவான காலமிது. மார்க்ஸ் 1845-ம் ஆண்டு பாரிசிலிருந்தும், 1848-ல் பிரஸிலிருந்தும், 1849-ம் ஆண்டு கொலோனிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். 1849 ஆகஸ்டு 23 அன்று மீண்டும் பாரிசிலிருந்து வெளியேற்றப்பட்டார். நாடு கடத்தப்பட்ட மார்க்ஸ் இலண்டனுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தார். ஜென்னியை உடன் அழைத்துச் செல்ல பணம் இல்லை, ஜென்னி கர்ப்பமுற்றிருந்தார். குழந்தைகளுக்கோ இளம் வயது. பலவாறு முயன்று செப்டம்பர் 15 வரை அதாவது 3 வாரங்கள் அவகாசம் பெற்றார். 1850ல் மே 20 அன்று வீட்டுச் சொந்தக்காரி வாடகை தராத காரணத்தினால் நீதிமன்றம் காவலர்கள் துணையுடன் படுக்கை, போர்வை, ஆடை புதிதாகப் பிறந்த குழந்தையின் தொட்டில், விளையாட்டும், பொருள்கள் எல்லாவற்றையும், குழந்தைகள் அழுது  கொண்டிருக்கும்போதே, இரண்டு மணி நேரத்தில் எடுத்துச் சென்றுவிட்டாள். வெய்டிமெயருக்கு ஜென்னி எழுதிய கடிதத்தில் தானும், குழந்தைகளும் கடுங்குளிரில் கட்டாந்தரையில் படுத்து இரவைக் கழித்ததாகவும் பொறுக்கமுடியாத மார்புவலி வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

படிக்க:
மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் !
துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !

கார்ல் மார்க்ஸ் வாடகை தர நண்பர்களிடமிருந்து பண உதவிபெற்றார். ஆனால், மற்ற கடன்கார்கள் வந்து சூழ்ந்துகொண்டதால் வாடகை தர முடியவில்லை. இதனால் பல இடங்களில் குடியிருக்க நேர்ந்தது. 1884-ம் ஆண்டு காலரா என்னும் கொள்ளை நோய் கோலோச்சிய பகுதியில் குடியமர்ந்து ஆறு ஆண்டுகள் மார்க்சும் ஜென்னியும் வாழ்ந்தனர். மார்க்சினுடைய ஏழு குழந்தைகளில் நான்கு ஒன்றன் பின் ஒன்றாக இறந்து போயின. பிறந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்த தோழர்கள் இறந்த குழந்தைகளை அடக்கம் செய்யவும் துயர்துடைக்கவும் உதவி செய்தனர். 1857 ஜூலையில் ஜென்னியின் பிறந்த குழந்தை பிறந்தவுடன் இறந்தது. 8 வயது நிரம்பிய பாலகன் எட்கார். இவன் குடும்பத்தின் “அறிவுச் செல்வ மகன்” எனக் கருதப்பட்டவன். மறைந்தான். இக்குழந்தையின் மறைவு பற்றி ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் தான் பல துன்ப துயரங்களை ஏற்கனவே அனுபவித்திருப்பதாகவும் ஆனால் மகன் – மறைந்தது தம்மைக் கொடுமையாக வாட்டி வதைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இப்படிப்பட்ட நெஞ்சை உருக்கும், இதயத்தைப் பிழியும் நிகழ்ச்சிகள் கார்ல்-ஜென்னி குடும்ப வாழ்க்கையில் ஏராளம்.

மார்க்ஸ் குடும்பத்தின் வரலாற்றாளர்கள் ஜென்னி குழந்தைகளை எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும், பொய் பேசக்கூடாது, யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது, மக்கள் சுதந்திரம் பெற்று நல்வாழ்வு வாழப் பாடுபடவேண்டும், உதவ வேண்டும். அவர்களுடைய போராட்டங்களிலே பங்குபெற வேண்டும் என்று அறிவுறுத்தி, வளர்த்தார் எனக் கூறுகின்றனர்.

ஒரு சமயம் மார்க்சின் மகன் அவருடைய கரங்களிலே உயிர்விட்டான். அந்தக் காலம்தான் ஏங்கெல்ஸ் மார்க்சின் குடும்பப் பொறுப்பை ஏற்றிருந்த காலம். ஏங்கெல்சுக்கு மார்க்ஸ் எழுதினார்: “இச் சோதனை நிகழ்ந்த காலத்தில்தான் உங்களுடைய நட்பின் பெருமை தெரிகிறது; உதவியை என்றும் மறவேன்; அந்த நினைவிலேயே உம்மையும் உம் நட்பையும் நம்பி வாழ்க்கையைத் தொடங்குகிறேன். இருவரும் இணைந்து இவ்வுலக மக்களுடைய நல்வாழ்வுக்கான பணியைத் தொடர்வோம்”.

ஜென்னிக்கு 1870 நவம்பரில் அம்மை நோய் கண்டது, குழந்தைகள் பக்கத்தில் குடியிருந்த லிப்னெட்ஸ் பாதுகாப்பில் விடப்பெற்றனர். வெய்டிமெயருக்கு எழுதிய கடிதத்தில் கார்ல் தன்னைக் கருணை உள்ளத்துடன் பராமரித்ததாகவும், வீட்டு வேலைகள் அனைத்தையும் அவரே செய்ததாகவும், அவருடைய அன்புப் பிணைப்பு தம்மைக் காப்பாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டார். ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் தன் மனைவி நெடுநாள் மிகத் துன்புற்று வருந்தி உழன்றார்; ஆனால் நோயின் கொடுமை சிறிது சிறிதாகக் குறைந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

மார்க்சின் பணி தடைப்பட்டது. ஜென்னி தேறியபின் கார்ல்மார்க்ஸ் நோய்வாய்ப்பட்டார். கடன் மேல் கடன் கூடிற்று. மார்க்ஸ் மூலதனம் பற்றி எழுதிவந்தார். அது ஒரு பெருநூலாகயிருக்கும் ஜெர்மன் நிலத்தில் வெடிகுண்டு வீசுவது போலிருக்கும் என்று தன்னுடைய தோழிக்கு (பெர்தா மர்கின்) ஜென்னி எழுதினார். மூலதனம் முதல் பகுதி 1869ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ம் அன்று வெளியிடப்பட்டது. இதிலிருந்து கிடைத்த வருமானம் தான் புகைத்த சுருட்டின் விலைக்கும் காணாது என்று குறிப்பிட்டார்.

1880ஆம் ஆண்டு ஜென்னியின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஈரலில் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர் கண்டு பிடித்துச் சொன்னார். 1881-ம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் ஜென்னி மறைந்தார். அப்பொழுது ஏங்கெல்ஸ் எழுதினார். “இம் மறைவுகுறித்து மிக்க வருத்தத்துடன் கூறுகிறேன். ஜென்னியின் அறிவாற்றலும், துணிச்சலும், எச்சரிக்கை நிரம்பிய ஆலோசனையும் இனி நமக்குக் கிட்டா. அவர் அஞ்சாதவர், தற்பெருமை கொள்ளாதவர், நிதானமானவர். ஆனால் கண்ணியமானவர்…”

தாம் இறக்கும் முன் தம்முடைய மகள் எலியனாரிடம் மூலதனத்தின் எஞ்சியுள்ள இரண்டு பகுதிகளின் கையெழுத்துப் பிரதிகளை ஏங்கெல்ஸிடம் சேர்ப்பிக்குமாறு பணித்திருந்தார். ஏங்கெல்ஸின் மேற்பார்வையில் மூலதனம் இரண்டாம் பகுதி 1885-ம் ஆண்டும் மூன்றாம் பகுதி 1894-ம் ஆண்டும் வெளிவந்தன. மார்க்சின் விருப்பத்தின்படி ஏங்கெல்ஸ் ஜென்னியின் நினைவாக அவருக்குப் படையலாக இவ்விரண்டு பகுதிகளை வெளியிட்டார்… (நூலின் பதிப்புரையிலிருந்து)

நூல்: எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை,
ஆசிரியர்: ஜென்னி மார்க்ஸ்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.
பேச: 044 – 26251968, 26359906

பக்கங்கள்: 60
விலை: ரூ.40.00 (டிச-2016 பதிப்பு)

இணையத்தில் வாங்க: என்.சி.பி.ஹெச் | பனுவல்

இதர மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க