மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 15

ந்தப் புதிய சாப்பாட்டுக் கூடைக்காரியைத் தொழிலாளர்கள் இலகுவில் அடையாளம் கண்டுகொண்டார்கள்.

“வியாபாரத்தில் இறங்கிவிட்டாயா, பெலகேயா?” என்று அவள் வந்ததை ஆமோதித்துத் தலையை ஆட்டிக்கொண்டே கேட்டார்கள்.

மாக்சிம் கார்க்கி
மாக்சிம் கார்க்கி
சிலர் அவளது மகன் பாவெல் சீக்கிரத்திலேயே விடுதலையாகிவிடுவான் என்று ஆர்வத்தோடு உறுதி கூறினார்கள். சிலர் அவளுக்கு அனுதாபவுரைகள் புகன்றார்கள். சிலர் போலீஸ்காரர்களையும், மானேஜரையும் வாய்க்கு வந்தபடி முரட்டுத்தனமாய்த் திட்டினார்கள். இவையெல்லாம் தாயின் இதயத்திலேயும் எதிரொலித்தன. சிலர் மட்டும் அவனைப் பழிவாங்கும் வர்ம சிந்தனையோடு பார்த்தார்கள். அவர்களில் ஒருவனான இஸாய் கர்போவ் என்னும் ஆஜர் சிட்டைக் குமாஸ்தா பற்களைக் கடித்துக்கொண்டு முணுமுணுத்தான்:

“நான் மட்டும் கவர்னராயிருந்தால், உன் மகனைத் தூக்கில் போட்டிருப்பேன். மக்களைக் கண்டபடி நடத்திச் செல்வதற்கு அதுதான் சரியான தண்டனை!”

இந்த வர்மப் பேச்சு அவளது எலும்புக் குருத்தைச் சில்லிட்டு நடுக்கியது. அவள் இஸாய்க்குப் பதிலே சொல்லவில்லை. அவனது சின்னஞ் சிறிய மச்சம் விழுந்த முகத்தை மட்டும் ஒரு பார்வை பார்த்தாள். பெரு மூச்செறிந்தவாறு, கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.

தொழிற்சாலையில் அமைதியே நிலவவில்லை. தொழிலாளர்கள் சிறுசிறு கூட்டமாகக் கூடி நின்று ஏதோ இரகசியம் பேசிக்கொண்டார்கள். மனங்கலங்கிப்போன கங்காணிகள் வேவு பார்த்துத் திரிந்தார்கள். ஆங்காரமான வஞ்சின வசவுகளும், குரோதம் பொங்கும் சிரிப்பொலியும் எங்கும் கேட்டுக்கொண்டிருந்தன.

இரண்டு போலீஸ்காரர்கள் சமோய்லவை நடத்திக் கூட்டிக்கொண்டு அவள் பக்கமாகச் சென்றார்கள். அவன் தனது ஒரு கையைச் சட்டைப் பைக்குள் புகுத்தியவாறும், மறு கையால் தனது செம்பட்டை மயிரை ஒதுக்கித் தள்ளியவாறும் நடந்து சென்றான்.

சுமார் நூறு தொழிலாளர்கள் அந்தப் போலீஸ்காரர்களுக்குப் பின்னாலேயே சென்று, ஆங்காரத்தோடு சத்தம் போட்டார்கள்:

போலீஸ்காரர்களைக் கிண்டல் செய்தார்கள்.

”என்ன சமோய்லவ், உலாவப் போகிறாயா?” என்று யாரோ கேட்டார்கள்.

“இப்போதெல்லாம் அவர்கள் நம்மவர்களை மதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால் தான் நாம் உலாவப்போகும் போது கூட, முன் பாரா பின் பாராப் போட்டுத் துணைக்கு ஆளனுப்பி வைக்கிறார்கள்” என்றான் வேறொருவன்.

இதைத் தொடர்ந்து திட்டித் தீர்த்தான். .

“இப்போதெல்லாம் திருடர்களைப் பிடிப்பதில் லாபமில்லை போலிருக்கிறது. அதனால்தான் அவர்கள் யோக்கியமானவர்களையே பிடித்துக்கொண்டு போகத் தொடங்கிவிட்டார்கள்” என்று நெட்டையான ஒற்றைக்கண் தொழிலாளி ஒருவன் சொன்னான்.

“இதுவரையிலும் அவர்களை இராத்திரியில் தான் பிடித்துக் கொண்டு போவது என்ற மரியாதையாவது இருந்தது. இப்போதோ பட்டப் பகலிலேயே பிடித்துக்கொண்டு போகிறார்கள். அயோக்கியப் பயல்கள்!” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் கத்தியது.

அந்தப் போலீஸ்காரர்கள் முகத்தைச் சுழித்துக்கொண்டே எட்டி நடக்க முனைந்தார்கள். தங்கள் மீது ஏவும் வசை மொழிகளைக் காதில் வாங்காத பாவனையில், எதையுமே கவனிக்காதவர்கள் போல் விரைவாக நடந்தார்கள். போகிற வழியில் ஓர் இரும்புக் கடப்பாரையைச் சுமந்து வந்த மூன்று தொழிலாளர்கள் அவர்களை வழிமறித்துக்கொண்டு சத்தமிட்டார்கள்.

“அப்படிப் போங்கடா, அட்டுப் பிடித்தவன்களே!’

சமோய்லவ் தாயைக் கடந்து செல்லும் போது தலையை ஆட்டினான்.

”நாங்கள் போகிறோம்!” என்று கசந்த சிரிப்புடன் கூறினான்.

அவள் வாய் பேசாது அவனை வணங்கி வழியனுப்பினாள். உதட்டிலே புன்னகை பூத்தபடி சிறைக்குச் செல்லும் நாணயமும் ஞானமும் நிறைந்த அந்த இளைஞர்களைக் கண்டு அவளது உள்ளம் நெகிழ்ந்தது. அவனது இதயம் தாய்மையின் பரிவோடும் பாசத்தோடும் விம்மியெழுந்தது.

“இப்போதெல்லாம் திருடர்களைப் பிடிப்பதில் லாபமில்லை போலிருக்கிறது. அதனால்தான் அவர்கள் யோக்கியமானவர்களையே பிடித்துக்கொண்டு போகத் தொடங்கிவிட்டார்கள்”

அன்று அவள் தொழிற்சாலையிலிருந்து திரும்பி வந்த பிறகு குறைப்பொழுதையும் மரியாவுடன் போக்கினாள். அவளது வம்பளப்பைக் கேட்டுக்கொண்டே, அவளது வேலைகளில் தானும் பங்கெடுத்து உதவினாள். மாலையில் வெகு நேரம் கழித்து, அவள் தனது குளிர் நிறைந்து வெறிச்சோடி வசதி கெட்டுப்போன வீட்டுக்குத் திரும்பி வந்தாள். வெகு நேரம் வரையிலும் அவள் மன அமைதியே காணாமல், என்ன செய்வது என்பதும் தெரியாமல், அங்குமிங்கும் நடந்து அலைக்கழிந்தாள். இருள் அநேகமாகக் கவிந்து படர்ந்து விட்டதைக் கண்டு அவள் உள்ளங் கலங்கினாள். ஏனெனில் இகோர் இவான்விச் தான் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டுப்போன அந்த பிரசுரங்களை இன்னும் கொண்டு வந்து கொடுக்கக் காணோம்.

ஜன்னலுக்கு வெளியே இலையுதிர் காலத்தின் கனத்த சாம்பல் நிற பனித்துண்டுகள் விழுந்து கொண்டிருந்தன. அந்தப் பனித்துண்டுகள் ஜன்னல் கண்ணாடிகளில் விழுந்து, உருகி வழிந்து சத்தமின்றி நழுவி வழிந்தன. அவை விழுந்த இடங்களில் ஈரம் படிந்த வரிக்கோடுகள் தெரிந்தன. அவள் தன் மகனைப் பற்றிச் சிந்தித்தாள்……..

கதவை யாரோ எச்சரிக்கையாய்த் தட்டும் ஓசை கேட்டது. தாய் விருட்டென்று ஓடிப்போய் நாதாங்கியைத் தள்ளினாள். சாஷா உள்ளே வந்தாள். தாய் அவளை ரொம்ப நாட்களாய் பார்க்கவே இல்லை. எனவே அவளைப் பார்த்த மாத்திரத்தில் அவள் அளவுக்கு மீறிப் பருத்திருப்பதாகத் தாய்க்குத் தோன்றியது.

”வணக்கம்” என்றாள் தாய், யாராவது ஒருவரேனும் வந்து சேர்ந்ததில் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இனிமேல் அன்றிரவின் கொஞ்ச நேரமாவது தான் தனிமையில் கிடந்து அவதிப்பட வேண்டியிருக்காது என்ற திருப்தி. ”உங்களைப் பார்த்து ரொம்ப நாளாகிறது. இல்லையா? எங்காவது வெளியூர் போயிருந்தீர்களா?” என்று கேட்டாள் தாய்.

”இல்லை. நான் சிறையில் இருந்தேன்” என்று புன்னகையுடன் பதில் சொன்னாள் அந்த யுவதி. “நிகலாய் இவானவிச்சுடன் நானும் இருந்தேன் – அவனை ஞாபகமிருக்கிறதா?”

இல்லாமலென்ன, நன்றாய் ஞாபகமிருக்கிறது என்றாள் தாய்; “நேற்றுத்தான் இகோர் இவானவிச் சொன்னான்; அவனை விடுதலை செய்த செய்தியை மட்டும்தான் சொன்னான். ஆனால் எனக்கு உங்களைப்பற்றித் தெரியாது……. நீங்களும் சிறையிலிருந்தீர்கள் என்று யாரும் எனக்குச் சொல்லவில்லை.”

”பரவாயில்லை. சரி, இகோர் இவானவிச் வருவதற்கு முன்னால் நான் உடை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று அங்கு மிங்கும் பார்த்தாள்.

”உங்கள் கோட்டு முழுவதும் நனைந்து போயிருக்கிறதே.”

“ஆமாம். நான் அறிக்கைகளும் பிரசுரங்களும் கொண்டு வந்திருக்கிறேன்.”

“எடுங்கள் அதை எடுங்கள்!” என்று ஆர்வத்தோடு கத்தினாள் தாய்.

அந்தப் பெண் தனது கோட்டைக் கழற்றி, உடம்பைக் குலுக்கினாள். உடனே மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல, காகிதங்கள் பறந்து விழுந்தன. தாய் சிரித்துக்கொண்டே அந்தக் காகிதங்களைப் பொறுக்கத் தொடங்கினாள்.

”உங்களைப் பார்த்தவுடன் ஏன் இப்படித் தடித்துப்போய் விட்டீர்கள் என்று நான் முதலில் அதிசயப்பட்டேன். ஒருவேளை மணமாகி இப்போது கர்ப்பிணியாயிருக்கிறீர்களோ என்றுகூடச் சந்தேகப்பட்டேன். இப்போதல்லவா புரிகிறது! அடி கண்ணே இவ்வளவு கொண்டு வந்திருக்கிறீர்களா? இத்தனையையும் சுமந்து கொண்டு இவ்வளவு தூரம் நடந்தா வந்தீர்கள்?”

“ஆமாம்” என்றாள் சாஷா. மீண்டும் அவள் தனது பழைய நெடிய ஒல்லியான உருவைப் பெற்றுவிட்டாள்! அவளது முகம் ஒடுங்கி, கண்கள் முன்னை விடப் பெரியதாகத் தோன்றுவதையும், கண்களுக்குக் கீழே கறுத்த வளைவுகள் தெரிவதையும் தாய் கண்டாள்.

”சிறையிலிருந்து இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். வந்தவுடன் கொஞ்சமேனும் ஓய்வெடுக்காமல், அதற்குள் இப்படி வேலை செய்யலாமா? யோசித்துப் பாருங்கள்” என்று தலையை அசைத்துக்கொண்டும் பெரு மூச்செறிந்து கொண்டும் அனுதாபப்பட்டாள் தாய்.

”எப்படியும் இது செய்து முடிக்க வேண்டிய காரியமாயிற்றே!” என்று குளிரால் நடுங்கிக்கொண்டே சொன்னாள் அந்த யுவதி. “சரி. பாவெலைப்பற்றிச் சொல்லுங்கள். அவர்கள் அவனைக் கைது செய்து கொண்டு போகும்போது, மிகவும் கலங்கிப் போய்விட்டானா?”

அதைக் கேட்கும்போது சாஷா தாயைப் பார்க்காமல் தலையைக் குனிந்து நடுங்கும் விரல்களால் தன் தலை மயிரைச் சீர்படுத்திக் கொண்டாள்.

“அது ஒன்றுமில்லை. அவன் ஒன்றும் தன்னைக் காட்டிக்கொடுத்து விடமாட்டான்” என்றாள் தாய்.

“அவன் உடம்பு திடமாக இருக்கிறதா?” என்று மெதுவாகக் கேட்டாள் அந்தப் பெண்.

அந்தப் பெண் தனது கோட்டைக் கழற்றி, உடம்பைக் குலுக்கினாள். உடனே மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல, காகிதங்கள் பறந்து விழுந்தன. தாய் சிரித்துக்கொண்டே அந்தக் காகிதங்களைப் பொறுக்கத் தொடங்கினாள்.

“அவன் ஆயுளில் அவனுக்கு நோய் நொடி எதுவுமே வந்ததில்லை” என்றாள் தாய். ”அது சரி. ஆனால், நீங்கள் ஏன் இப்படி நடுங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? இருங்கள், கொஞ்சம் தேநீரும், ராஸ்ப்பெர்ரி பழ ஜாமும் கொண்டு வருகிறேன்.”

“அது நன்றாகத்தானிருக்கும். ஆனால், உங்களுக்கு இந்த நேரத்தில் அத்தனை சிரமம் எதற்கு? இருங்கள், நானே தயார் செய்து கொள்கிறேன்.”

“சே! எவ்வளவு களைத்துப் போயிருக்கிறீர்கள், நீங்களே செய்கிறதாவது?” என்று கண்டித்துக் கூறும் தொனியில் பதிலளித்துவிட்டு, தேநீர்ப் பாத்திரத்தை ஏற்றப் போனாள் தாய். சாஷாவும் சமையலறைக்குள் சென்று, அங்கு கிடந்த பெஞ்சின் மீது, கைகளைத் தலைக்குப் பின்னால் அணை கொடுத்துக்கொண்டு, உட்கார்ந்தாள்.

”என்ன இருந்தாலும் சிறை வாழ்க்கை ஆளை இளைத்துப் போகத்தான் செய்கிறது. சங்கடமான சோம்பேறித்தனம் இருக்கிறதே. அதைவிட மோசமானது ஒன்றுமே இல்லை. எவ்வளவோ காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது தெரிந்திருந்தும், அடைபட்ட மிருகத்தைப்போல், அங்கே சும்மா அடங்கியிருப்பது என்பது…”

“உங்கள் உழைப்புக்கெல்லாம் யார் கைம்மாறு செய்யப் போகிறார்கள்?” என்று கேட்டாள் தாய்.

பிறகு ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, தானே அதற்கு விடையும் கூறிக்கொண்டாள்: ”கடவுள் தான் கைம்மாறு செய்ய வேண்டும். ஆனால், உங்களுக்குக் கடவுள் நம்பிக்கையும் கிடையாது, இல்லையா?”

”இல்லை” என்று சுருக்கமாகத் தலையையாட்டிவிட்டுப் பதில் சொன்னாள் அந்தப் பெண்.

”நீங்கள் சொல்வதை நான் நம்பவில்லை” என்று உணர்ச்சி பூர்வமாகச் சொன்னாள் தாய். பிறகு தன் ஆடை மீது படிந்திருந்த கரித்தூசியைக் கையால் தட்டிவிட்டுக்கொண்டு. நிச்சயமான குரலில் பேசினாள்: ”உங்கள் கொள்கையே உங்களுக்குப் புரியவில்லை. கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இந்த விதமான வாழ்க்கை எப்படித்தான் நடத்த முடியும்?”

திடீரென வெளியில் வாசல் பக்கத்தில் காலடியோசையும் கசமுசப்புக் குரல்களும் கேட்டன். தாய் கதவைத் திறக்கப் புறப்பட்டாள்.

அதற்குள் அந்தப் பெண் துள்ளியெழுந்து நின்றாள்.

”கதவைத் திறக்காதீர்கள்” என்று இரகசியமாகக் கூறினாள் சாஷா, அவர்கள் போலீஸ்காரர்களாயிருந்தால். என்னை யாரென்று தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளாதீர்கள். ஏதாவது கேட்டால், நான் இருட்டில் வீடு தெரியாமல் வழி தவறி இங்கு வந்ததாகவும், வாசல் நடையில் மயக்கமுற்று விழுந்திருந்ததாகவும் சொல்லுங்கள். பிறகு என் ஆடையணிகளை அவிழ்த்து என்னை ஆசுவாசப்படுத்தியபோது இந்தக் காகிதங்களைக் கண்டதாகச் சொல்லுங்கள். தெரிந்ததா?”

படிக்க:
அமெரிக்காவின் பால் ராப்சன் பாடும் சோவியத் கீதம்- வீடியோ !
சோவியத் சிறுகதை: வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு !

“அடி என் கண்ணே ! நான் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்?” என்று கனிவாய்க் கேட்டாள் தாய்.

”ஒரு நிமிஷம் பொறுங்கள்” என்று கூறிக்கொண்டே கதவருகே காதைக் கொண்டு போனாள், “இகோர் மாதிரி இருக்கிறது.”

வந்தது இகோர்தான். அவன் ஒரே தெப்பமாக நனைந்து இளைத்துக் களைத்துத் திணறிக்கொண்டிருந்தான்.

”அடேடே! தேநீர் தயாராகிறதா? ரொம்ப சரி! அம்மா, தேநீரைப்போல எனக்கு இப்போது தெம்பு அளிக்கக்கூடியது. எதுவுமில்லை. அட, சாஷாவா? நீங்கள் ஏற்கெனவே வந்துவிட்டீர்களா?”

அடுப்பங்கரை முழுதும் ஒலிக்கும் குரலில் கொரட்டு கொரட்டென்று மூச்சு விட்டபடி, இடைவிடாது பேசிக்கொண்டே, தன்னுடைய கனத்த கோட்டை மெதுவாகக் கழற்றினான்.

“ஏ பிசாசுகளா! நீங்கள் எங்கள் பைகளைச் சோதனை போட்டு என்ன பிரயோசனம்? எங்கள் தலையையல்லவா சோதனை போட வேண்டும்” என்று நெட்டையான சுருண்ட மயிர்த் தலையனான ஒரு தொழிலாளி தன்னைச் சோதனையிட்ட காவலாளிகளைப் பார்த்துக் கத்தினான்.

“அம்மா. இதோ இருக்கிறாளே, இந்தப் பெண்ணைக் கண்டால் அதிகாரிகளுக்குப் பிடிப்பதே இல்லை. சிறைக் காவலாளி இவளைக் கண்டபடி பேசத் துணிந்தான் என்பதற்காக அவன் மன்னிப்புக் கேட்கிறவரையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டாள் இவள். எட்டு நாட்களாய் இவள் எதுவுமே சாப்பிடவில்லை. உயிர்தான் போகவில்லை. கெட்டிக்காரிதானே? என் வயிற்றையும் தான் பாரேன்.”

அவன் தனது தொப்பை விழுந்து பெருத்த தொந்தி வயிற்றை நிமிர்த்தி நடந்தவாறே அடுத்த அறைக்குள் போனான். அறைக் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே போகும்போதும் அவன் பேசிக்கொண்டே தானிருந்தான்.

“நீங்கள் என்ன எட்டு நாட்களாகவா சாப்பிடவில்லை? உண்மையாகவா?” என்று அதிசயத்தோடு கேட்டாள் தாய்.

“அவனை மன்னிப்புக் கோர வைப்பதற்கு நானும் ஏதாவது செய்தாக வேண்டியிருந்தது” என்று குளிரால் நடுங்கிக்கொண்டே சொன்னாள் அவள். அந்தப் பெண்ணின் உறுதியும் உக்கிரமும் நிறைந்த பேச்சில் ஏதோ ஒரு கண்டன பாவமும் தொனிப்பதாகத் தாய்க்குத் தோன்றியது.

“இவள் குணம் இப்படி” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் தாய்.

“நீங்கள் செத்துப்போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?’ என்று கேட்டாள் பெலகேயா .

“செத்தால் சாகவேண்டியதுதான்” என்று மெதுவாகச் சொன்னாள் அவள். ”ஆனால், அவன் மன்னிப்புக் கேட்டுவிட்டான். நம்மைப் பற்றி ஒருவன் கேவலமாகப் பேசும்படி நாம் விட்டுவிடக் கூடாது.”

”ஊம்!” என்று மெதுவாக முனகினாள் தாய். ”ஆண்கள் எல்லாருமே அப்படித்தான் – பெண்களாகிய நாம் வாழ் நாள் முழுதும் அவர்களிடம் கேவலப்பட வேண்டியதுதான்.”

”சரி. நான் என் மூட்டையை இறக்கித் தள்ளியாய்விட்டது” என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தான் இகோர். “தேநீர் தயாரா? சரி, இருங்கள். நான் அதை இறக்கி எடுக்கிறேன்.”

அவன் தேநீர்ப் பாத்திரத்தை அடுத்த அறைக்குத் தூக்கிக்கொண்டு போனான்; கொண்டு போகும் போதே அவன் சொன்னான்.

“என்னைப் பெற்ற அருமை அப்பன் இருக்கிறாரே. அவர் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் இருபது குவளை தேநீராவது குடிப்பார். அதனால்தான் அவர் ஆரோக்கிய திடகாத்திரத்தோடு அமைதியுடன் வாழ்ந்தார். 120 கிலோ எடையுள்ள உடம்போடு வஸ்க்ரெசென்ஸ்க் ஊர்த் தேவாலயத்துப் பாதிரியாக வேலை பார்த்து, எழுபத்து மூன்று வருஷம் உயிரோடிருந்தார்.”

”நீங்கள் இவான் சாமியாரின் மகனா?” என்று கேட்டாள் தாய்.

“ஆமாம், ஆமாம். என் தந்தையை உங்களுக்கு எப்படித் தெரியும்?”

”நானும் வஸ்க்ரெசென்ஸ்க் ஊர்க்காரிதான்.”

“அடேடே நீங்கள் என் ஊர்க்காரரா? சரி, நீங்கள் யார் மகள்?”

”உங்கள் அடுத்த வீட்டுக்காரரான செரியோகின் தம்பதிகள்தான் என் பெற்றோர்.”

”நொண்டி நடக்கும் நீல்லின் மகளா நீங்கள்? எனக்கு அவரை நன்றாய்த் தெரியுமே! எத்தனை தடவை அவர் என் காதைப் பிடித்துத் திருகியிருக்கிறார், தெரியுமா?”

அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டே சரமாரியாகக் கேள்வி கேட்டுக்கொண்டார்கள். தேநீரை வடிகட்டிக்கொண்டிருந்த சாஷா புன்னகை செய்தாள். கோப்பைகளின் ஓசை தாயை மீண்டும் சூழ்நிலையின் பிரக்ஞைக்கு இழுத்து வந்தது.

“ஓ! என்னை மன்னித்துவிடுங்கள். எல்லாம் எனக்கு மறந்தே போய்விட்டது. சொந்த ஊர்க்காரர் யாரையாவது சந்திப்பது என்றால், ஒரே மகிழ்ச்சி.”

”இல்லை. மன்னிப்புக் கேட்க வேண்டியது நான்தான். நான் பாட்டுக்கு இங்கேயே பொழுதைப் போக்கிவிட்டேன். மணி பதினொன்று ஆகிவிட்டது. இன்னும் நான் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டும்” என்றாள் சாஷா.

”எங்கே போகிறீர்கள்? நகருக்கா?” என்று வியப்புடன் கேட்டாள் தாய் .

“ஆமாம்.”

“எதற்காகப் போக வேண்டும்? ஒரே இருட்டாயிருக்கிறது. ஒரே ஈரம். களைத்துப் போயிருக்கிறீர்கள், இரவு இங்கேயே தங்கிவிடுங்கள். இகோர் இவானவிச் சமையல் கட்டிலே தூங்கட்டும். நாமிருவரும் இங்கேயே படுத்துக்கொள்ளலாம்.”

“இல்லை. நான் போய்த்தானாக வேண்டும்” என்றாள் சாஷா.

”துரதிருஷ்டவசமாக அவள் போய்த்தான் ஆக வேண்டியிருக்கிறது. அவளை இங்கு எல்லாருக்கும் தெரியும். நாளைக்குக் காலையில் அவளை யாரும் தெருவில் பார்த்துவிடக்கூடாது” என்றான் இகோர்.

“ஆனால் எப்படிப் போவது? தனியாகவா?”

“ஆமாம். தனியாகவேதான்!” என்று சிறு சிரிப்புடன் சொன்னான் இகோர்.

அந்தப் பெண் ஒரு கோப்பையில் தேநீரை ஊற்றினாள். ஒரு கறுத்த ரொட்டியின் மீது உப்பைத் தடவிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிடும்போது தாயையும் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டாள்.

நீங்களும் நதாஷாவும் எப்படித்தான் துணிந்து போகிறீர்களோ? நானாயிருந்தால் போகவே மாட்டேன், எனக்கு ஒரே பயந்தான்!” என்றாள் பெலகேயா.

“இவளுக்கும் பயம்தான்” என்றான் இகோர். ”என்ன, சாஷா. பயந்தான், இல்லையா?”

”இல்லாமலிருக்குமா? பயம்தான் என்றாள் அந்தப் பெண். தாய் அவளையும் இகோரையும் பார்த்தாள்.

”நீங்கள் எல்லாம் என்ன பிறவிகளோ, அம்மா!” என்று அதிசயித்தாள் தாய்.

தேநீர் பருகி முடிந்தவுடன், சாஷா ஒன்றும் பேசாமல் இகோருடன் கைகுலுக்கிவிட்டு, சமையல் கட்டுக்குள் வந்தாள். தாயும் அவளைப் பின் தொடர்ந்தாள்.

“நீங்கள் பாவெலைப் பார்க்க நேர்ந்தால். நான் கேட்டதாகச் சொல்லுங்கள். மறந்துவிடாதீர்கள்” என்றாள் சாஷா.

கதவின் கைப்பிடியில் கை வைத்துத் திறக்கப்போகும் சமயம் அவள் மீண்டும் திரும்பினாள்.

“நான் உங்களை முத்தமிடட்டுமா?”

தாய் ஒன்றுமே பேசாமல் அவளை ஆர்வத்தோடு அணைத்து அன்பு ததும்ப முத்தம் கொடுத்தாள்.

“ரொம்ப நன்றி” என்று கூறிவிட்டு அந்தப் பெண் தலையை அசைத்து விடை பெற்றவாறே வெளியே சென்றாள்.

தாய் அறைக்குள் திரும்பி வந்தவுடன், ஜன்னல் வழியாக கவலையோடு வெளியே எட்டிப் பார்த்தாள். இருளில் குளிர்ந்த பனித்துளிகள்தான் பெய்து கொண்டிருந்தன.

“அம்மா. இதோ இருக்கிறாளே, இந்தப் பெண்ணைக் கண்டால் அதிகாரிகளுக்குப் பிடிப்பதே இல்லை. சிறைக் காவலாளி இவளைக் கண்டபடி பேசத் துணிந்தான் என்பதற்காக அவன் மன்னிப்புக் கேட்கிறவரையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டாள் இவள். எட்டு நாட்களாய் இவள் எதுவுமே சாப்பிடவில்லை. உயிர்தான் போகவில்லை. கெட்டிக்காரிதானே?

”உங்களுக்கு புரோசரவ் தம்பதிகளை ஞாபகமிருக்கிறதா?” என்று கேட்டான் இகோர். அவன் தன் கால்களை அகலப் பரப்பியவாறு, தேநீரை ஓசையெழும்ப உறிஞ்சிக் குடித்தான். அவனது முகம் சிவந்து திருப்தி நிறைந்து வியர்வை பூத்துப்போய் இருந்தது.

“ஆமாம் நினைவு இருக்கிறது” என்று ஏதோ நினைவாய்க் கூறிக்கொண்டு மேஜையருகே வந்தாள் அவள். அவன் பக்கத்திலேயே உட்கார்ந்து இகோரைச் சோகம் ததும்பப் பார்த்தாள்.

“ச்சுக்சூ! பாவம் அந்த சாஷா! அவள் எப்படி நகருக்குப் போய்ச் சேரப் போகிறாள்?”

“அவள் மிகவும் களைத்துப் போவாள்” என்று தாய் கூறியதை ஆமோதித்துப் பேசினான் இகோர்; “சிறை வாழ்க்கை அவள் உடல் பலத்தை உருக்குலைத்துவிட்டது. அவள் எவ்வளவு பலசாலியாயிருந்தாள்? செல்லமாய் வளர்க்கப்பட்ட பெண்…… அவள் நுரையீரல் ஏற்கெனவே கெட்டுப் போயிருப்பது போலத்தான் தோன்றுகிறது….”

“யார் அவள்?” என்று மெதுவாகக் கேட்டாள் தாய்.

அவள் ஒரு கிராமாந்திரக் கனவானின் மகள். அவள் சொல்வதைப் பார்த்தால் அவள் தந்தை ஓர் அயோக்கியனாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் இரண்டு பேரும் கல்யாணம் செய்துகொள்ள விரும்பினார்களே, தெரியுமா. அம்மா?”

”யார்?”

”அவளும் , பாவெலும் தான். ஆனால் நீங்கள் தான் பார்க்கிறீர்களே, அது ஒன்றும் நடக்கிற வழியாய்க் காணோம். அவன் வெளியே இருந்தால், அவள் சிறையில் இருக்கிறாள். அவள் வெளியில் இருந்தால் அவன் சிறையிலிருக்கிறான்.”

“எனக்குத் தெரியாதே” என்று ஒரு கணம் கழித்துப் பதில் சொன்னாள் தாய். ”பாவெல் தன்னைப்பற்றிப் பேசுவதே இல்லை.”

தாய்க்கு அந்தப் பெண்மீது அதிகப்படியான அனுதாப உணர்ச்சி மேலோங்கியது. தன்னை மீறிய ஒரு வெறுப்புணர்ச்சியோடு அவள் இகோரிடம் திரும்பிப் பேசினாள்.

”நீங்கள் ஏன் அவளை வீட்டுக்குக் கொண்டுபோய் விடவில்லை?”

“அது முடியாது” என்று அமைதியுடன் பதில் சொன்னான் இகோர். ”எனக்கு இங்கே எத்தனையோ வேலைகள் ஆக வேண்டியிருக்கிறது. விடிந்து எழுந்திருந்தால் ஒவ்வொரு இடமாகப் போய்வர வேண்டும். என்னை மாதிரி மூச்சு முட்டும் பேர்வழிக்கு அதுவே ரொம்பச் சிரமமான காரியம்.”

“அவள் நல்ல பெண்” என்றாள் தாய். அவளது மனத்தில் இகோர் அப்போது சொன்ன விஷயமே நிறைந்து நின்றது. அந்த விஷயத்தைத் தன் மகன் மூலமாகக் கேள்விப்படாமல், ஓர் அன்னியன் மூலமாகக் கேள்விப்பட்டதானது அவளது மனத்தைப் புண்படுத்திவிட்டது அவள் தன் புருவங்களைச் சுருக்கிச் சுழித்து, இரு உதடுகளையும் இறுகக் கடித்து மூடிக்கொண்டாள்.

“அவள் நல்ல பெண்தான். சந்தேகமே இல்லை” என்று தலையை ஆட்டினான் இகோர், ”நீங்கள் அவளுக்காக வருத்தப்படுவது எனக்குத் தெரிகிறது. அதில் அர்த்தமே கிடையாது. எங்களை மாதிரிப் புரட்சிக்காரர்களுக்கெல்லாம் அனுதாபப்பட்டுக்கொண்டிருந்தால், இதயமே தாங்காது. உண்மையைச் சொல்லப்போனால், எங்களில் யாருக்குமே சுக வாழ்க்கை கிடையாது. என்னுடைய தோழர்களில் ஒருவன் நாடு கடத்தப்பட்டு, சமீபத்தில்தான் திரும்பி வந்தான். அவன் நீஸ்னி நோவ்கரத் சென்ற பொழுது, அவனது மனைவியும் குழந்தையும் ஸ்மலென்ஸ்கில் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் ஸ்மலேன்ஸ்கிக்குத் திரும்பி வருவதற்குள், அவர்கள் மாஸ்கோ சிறைக்குள் சென்றுவிட்டார்கள். இப்போதோ அவனது மனைவி சைபீரியாவுக்குப் போகப்போகிறாள். எனக்கும் ஒரு மனைவி இருந்தாள். ரொம்பவும் அருமையானவள்தான். இந்த மாதிரிதான் நாங்களும் ஐந்து வருஷம் தத்தளித்தோம். பிறகு அவளது வாழ்வும் முடிந்தது.”

அவன் தன் முன்னிருந்த தேநீரை ஒரே மடக்கில் பருகினான்; பிறகு தன் கதையை மேலும் தொடர்ந்தான். அவனது சிறைவாச காலத்தின் புள்ளிவிவரங்கள், நாடு கடத்தப்பட்டு சைபீரியாவில் பட்ட பசிக்கொடுமை, சிறையிலே விழுந்த அடி உதைகள், எல்லாவற்றையும் அவளிடம் சொன்னான். அவள் அவனையே பார்த்தாள். துன்பமும் துயரமுமே நிறைந்த சோகவாழ்வுச் சித்திரத்தை அவன் அமைதியோடு எளிதாக நினைவு கூர்ந்து சொல்லுகின்ற முறையைக் கண்டு அவள் அதிசயித்தாள்…….

”சரி. நாம் நம் விஷயத்துக்கு வருவோம்.”

அவனது குரல் மாறிவிட்டது, முகமும் முன்னைவிட உக்கிரம் அடைந்தது. அவள் எப்படித் தொழிற்சாலைக்குள் அந்தப் பிரசுரங்களைக் கொண்டு போக உத்தேசித்திருக்கிறாள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்து கேட்கும் அவனது அறிவைக் கண்டு தாய் பிரமிப்பு அடைந்தாள்.

”சிறையிலிருந்து இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். வந்தவுடன் கொஞ்சமேனும் ஓய்வெடுக்காமல், அதற்குள் இப்படி வேலை செய்யலாமா? யோசித்துப் பாருங்கள்” என்று தலையை அசைத்துக்கொண்டும் பெரு மூச்செறிந்து கொண்டும் அனுதாபப்பட்டாள் தாய்.

அவர்கள் இந்த விஷயத்தைப் பேசி முடித்தவுடன், மீண்டும் தங்களது பிறந்த ஊர் ஞாபகங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். அவனோ மிகவும் குஷாலாகப் பேசினான். அவளோ தனது கடந்து போன வாழ்வின் நினைவுலகத்தில் தன்னை மறந்து சுற்றித் திரிந்தாள். அது ஒரு சதுப்பு நிலம்போலத் தோன்றியது. சதுப்பு நிலத்தில் சிறுசிறு மண் குன்றுகள் குன்றுகளின் மீது குத்துக்குத்தான் காட்டுப்பூச்செடிகள்; குன்றுகளுக்கிடையே வெண்மையான பெர்ச் மரக் கன்றுகளும் குத்துப் புல் செடிகளும் அடர்ந்து வளர்ந்திருந்தன. மெல்லிய பூச்செடிகள் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தன. பெர்ச் மரக்கன்றுகள் சிறுகச் சிறுக வளர்ச்சி பெற்று, ஐந்து வருஷங்களுக்குப் பிறகு அந்தப் பிடிப்பற்ற நிலத்தில் கால் ஊன்றி நிற்கமுடியாமல் முடி சாய்ந்து விழுந்து அதிலேயே அழுகிப் போயின. இந்தக் காட்சியை கண்டபோது, அவளது இதயத்தில் ஒரு பெரும் சோக உணர்ச்சி கவிழ்ந்து சூழ்ந்தது. மீண்டும் அவளது மனக் கண் முன்னால் ஒரு இளம் பெண்ணின் உருவம் தோன்றியது. அந்த இளம் பெண்ணின் முகம் துடிப்பும் எடுப்பும் நிறைந்து உறுதியைப் பிரதிபலிக்கும் உணர்ச்சியோடு விளங்கியது. அந்தப் பெண் தன்னந்தனியாக, தள்ளாடித் தள்ளாடி கொட்டும் பனிமழையின் ஊடாக நடந்து சென்றாள்… அவளது மகன் சிறையிலே இருந்தான். அவன் தூங்கிவிடவில்லை. வெறுமனே படுத்துக்கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்…. அவன் அவளைப்பற்றி, தன் தாயைப்பற்றிச் சிந்திக்கவில்லை. இப்போது அவனது அன்பைக் கவர்ந்திருப்பது தாயல்ல; வேறொருத்தி… கட்டுலைந்து சிதறிப்போன மேகத்திரள்களைப் போல் வேதனை தரும் சிந்தனைகள் அவளைச் சூழ்ந்தன. அவளது ஆத்மாவையே இருளில் மூழ்கடித்தன….

“அம்மா, நீங்கள் களைத்துப் போயிருக்கிறீர்கள். சரி, நாம் படுக்கலாம்” என்று இகோர் புன்னகை செய்து கொண்டே சொன்னான்.

அவனிடம் விடைபெற்றுக்கொண்டு, சமையலறையை நோக்கி ஜாக்கிரதையாக வந்தாள். அவளது இதயம் முழுதிலும் நமைச்சல் தரும் கசப்புணர்ச்சி நிரம்பியிருந்தது.

மறுநாள் காலையில் சாப்பிடும்போது இகோர் சொன்னான்.

”அவர்கள் உங்களைப் பிடித்து, இந்தத் துவேஷப் பிரசுரங்கள் எல்லாம் எங்கிருந்து கிடைத்தன என்று கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்?”

“அது ஒன்றும் நீங்கள் கேட்டுத் தெரிய வேண்டியதில்லை என்பேன்” என்றாள்.

“அப்படிச் சொன்னால் அவர்கள் அதை ஒப்புக்கொண்டு உங்களை விட்டுவிட மாட்டார்கள்” என்றான் இகோர். ”கேட்டுத் தெரிய வேண்டியதுதான் தங்கள் வேலை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே உங்களை அப்படியும் இப்படியும் புரட்டிப் புரட்டிக் கேள்வி கேட்டு, உண்மையை உங்கள் வாயிலிருந்து பிடுங்கப் பார்ப்பார்கள்.”

”எப்படிக் கேட்டாலும் நான் சொல்லவே மாட்டேன்.”

”சிறையில் போடுவார்கள்.”

”போடட்டுமே! அதற்காவது நான் லாயக்கு என்றால் கடவுளுக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும்” என்று பெருமூச்சுடன் சொன்னாள் அவள். “என்னை யார் விரும்புகிறார்கள்? ஒருவருமில்லை. அவர்கள் என்னைச் சித்ரவதை செய்யமாட்டார்கள். இல்லையா?”

“ஊம்!” என்று அவளைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே சொன்னான் இகோர். “சித்ரவதை செய்யமாட்டார்கள். ஆனால், தங்கள் நலனைத் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் அதுதான் கெட்டிக்காரத்தனம்.”

“ஆமாம். அதை நீங்கள் சொல்லித்தான் அப்பா, எனக்குத் தெரிய வேண்டும்” என்று சிறு சிரிப்புடன் சொன்னாள் தாய்

இகோர் பதிலே பேசாமல் அறைக்குள் மேலும் கீழும் நடந்தான். பிறகு அவள் பக்கம் திரும்பிச் சொன்னான்.

”அம்மா, இது கஷ்டம் தான்! உங்களுக்கு எவ்வளவு கடினமாயிருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.”

”எல்லோருக்கும்தான் கஷ்டமாயிருக்கிறது” எனக் கையை ஆட்டிக்கொண்டே பதிலளித்தாள் அவள். “புரிந்து கொண்டவர்களுக்கு அத்தனை சிரமமில்லை. எந்த நன்மைக்காக மக்கள் இப்படிக் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நானும் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரிந்து கொண்டு வருகிறேன்.”

”அதை மட்டும் நீங்கள் உணர்ந்துகொண்டால் ஒவ்வொருவரும் உங்களை விரும்புவார்கள், அம்மா! ஒவ்வொருவரும் விரும்புவார்கள்” என்று மனப்பூர்வமாகச் சொன்னான் இகோர்.

அவள் அவனை லேசாகப் பார்த்து, புன்னகை புரிந்தாள்.

மத்தியானத்தில் அவள் தொழிற்சாலைக்குப் புறப்படத் தயாரானாள். போவதற்கு முன் அந்தப் பிரசுரங்களைத் தன் ஆடைகளுக்குள், வெளியே தெரியாமல் நாசூக்காக வைத்துக் கட்டிக்கொண்டாள். அவள் எல்லாவற்றையும் ஒளித்து வைத்துக் கொண்ட லாவகத்தைக் கண்டு திருப்தியோடு சப்புக் கொட்டினான் இகோர்.

படிக்க:
சபரிமலை பெண்கள் நுழைவை எதிர்த்த சங்கி ராகுல் ஈஸ்வர் பிடிபட்ட கதை !
மேற்கு தொடர்ச்சி மலை : செங்குத்து வாழ்க்கையின் படம் | ராஜ்

“ஸேர் குட்” என்று கத்தினான். முதல் புட்டி பீரைக் குடித்த உற்சாகத்தில் ஜெர்மானியர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள். ”இந்த பிரசுரங்களை உடையிலேயே பொதிந்து வைத்துக்கொண்டதால், ஆள் வித்தியாசமாகத் தோன்றவில்லை. அம்மா நீங்கள் இப்போதும் சதை விழத் தொடங்கும் நடுத்தர வயதுப் பெண் போலவே நெட்டையாக இருக்கிறீர்கள்! விகாரம் தென்படவில்லை. கடவுள் உங்கள் சேவையை ஆசீர்வதிக்கட்டும்”

அரைமணி நேரத்துக்குப்பின் அவள் தொழிற்சாலையின் வாசலில் நின்றாள். அமைதியும் நம்பிக்கையும் நிறைந்தவளாய்த் தன் கையிலுள்ள கூடைகளின் கனத்தால் குனிந்து போய் நின்றாள். தொழிற்சாலைக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு தொழிலாளியையும் அங்கு நின்ற இரண்டு காவலாளிகளும் சோதனை போட்டு உள்ளே விட்டார்கள். இதனால் அந்தத் தொழிலாளிகள் கொதிப்படைந்து அந்தக் காவலாளிகளின் மீது தாறுமாறாக வசைமாரி பெய்தார்கள். கிண்டல் செய்தார்கள். ஒரு புறத்தில் படபடக்கும் கண்களும் சிவந்த முகமும் நீண்டுயர்ந்த கால்களும் கொண்ட ஒருவனும் போலீஸ்காரனும் நின்று கொண்டிருந்தார்கள். தாய் தனது அன்னக்காவடியின் நுகக்காலை ஒரு தோளிலிருந்து மறுதோளுக்கு மாற்றினாள். அந்த நெட்டைக்காலனைப் புருவங்களுக்கு மேலாக லேசாகப் பார்த்தாள். அவன் ஒரு வேவுகாரன் என்று சந்தேகம் அவளுக்குத் தட்டியது.

“ஏ பிசாசுகளா! நீங்கள் எங்கள் பைகளைச் சோதனை போட்டு என்ன பிரயோசனம்? எங்கள் தலையையல்லவா சோதனை போட வேண்டும்” என்று நெட்டையான சுருண்ட மயிர்த் தலையனான ஒரு தொழிலாளி தன்னைச் சோதனையிட்ட காவலாளிகளைப் பார்த்துக் கத்தினான்.

“உன் தலையிலே உண்ணிப் புழுவைத் தவிர வேறு என்ன இருக்கும்?” என்று பதில் கொடுத்தான் காவலாளிகளில் ஒருவன்.

”பின்னே , உண்ணிப் புழுவைப் பிடித்து, பத்திரம் பண்ணு. எங்களை விடு” என்று எரிந்து விழுந்தான் தொழிலாளி.

அந்த வேவுகாரன் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டுக் கசப்போடு காறி உமிழ்ந்தான்.

”என்னை உள்ளே போகவிடு. இந்த மாதிரிச் சுமையைத் தாங்கிக் கொண்டு நின்றால் என் முதுகுதான் முறிந்து போகும்” என்று சொன்னாள் தாய்.

“போ, போய்த் தொலை” என்று எரிச்சலோடு கத்தினான் காவலாளி “வருகிறபோதே திண்டு முண்டு பேசிக்கொண்டேதான் வருகிறது” என்று முனகிக்கொண்டான்.

தாய் உள்ளே வந்து தனது வழக்கமான இடத்துக்குச் சென்று. கூடைகளைக் கீழே இறக்கினாள். முகத்தில் சுரந்திருந்த வியர்வையைத் துடைத்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டாள்.

கூஸெவ் சகோதரர்களில் இருவர், இருவரும் யந்திரத் தொழிலாளிகள் அவளிடம் உடனே வந்து சேர்ந்தார்கள்.

“அப்பம் இருக்கிறதா?” என்று அவர்களில் மூத்தவனான வசீலி முகத்தைச் சுழித்துக்கொண்டே கேட்டான்.

”நாளைக்குத்தான் கிடைக்கும்” என்றாள் அவள்.

அதுதான் அவர்களது பரிபாஷை. அந்தச் சகோதரர்களின் முகங்கள் பிரகாசமடைந்தன.

“அட என் அம்மாக்கண்ணு ” என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னான் இவான்.

வசீலி கூடைக்குள் பார்க்கும் பாவனையில் குனிந்து உட்கார்ந்தான் , அதே கணத்தில் ஒரு கத்தைப் பிரசுரங்களும் அவனது சட்டைக்குள்ளாக, நெஞ்சுக்குப் பக்கமாகத் திணித்து ஒளித்து வைக்கப்பெற்றன.

படிக்க:
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி
#Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை !

”நாம் இன்றைக்கு வீட்டுக்குப் போகவேண்டாம்” என்று சத்தமாகச் சொன்னான் அவன், “இவளிடமே வாங்கிச் சாப்பிடலாம்.” அப்படிப் பேசிக் கொண்டே அவன் இன்னொரு கத்தையை எடுத்து பூட்சுக் காலுக்குள் திணித்துக் கொண்டான். இந்தப் புதிய கூடைக்காரிக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறிக்கொண்டான்.

“ஆமாம்!” என்று சிரிப்புடன் ஆமோதித்தான் இவான். தாய் சுற்றுமுற்றும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டாள். ”சூடான சேமியா, சூப்” என்று கத்தினாள்.

பிறகு மிகவும் சாதுரியத்தோடு பிரசுரக் கட்டுகளை ஒவ்வொன்றாய் எடுத்து அவர்கள் கையிலே கொடுக்க ஆரம்பித்தாள். அவளது கண்முன்னால் அந்த மஞ்சள் மூஞ்சி அதிகாரியின் முகம் நெருப்புப் பற்றிய தீக்குச்சியைப் போலத் தெரிந்தது. அவள் தனக்குத்தானே வன்மத்துடன் ஏதோ சொல்லிக்கொண்டாள்.

”இதோ, இது உனக்கு அப்பனே.” பிறகு அடுத்த கத்தையைக் கொடுத்தாள். ”இந்தா….”

தொழிலாளர்கள் கைகளில் குவளைகளை ஏந்தியவாறு அவள் பக்கமாக வந்தார்கள். அவர்களில் யாரேனும் பக்கத்தில் வருவதாகத் தெரிந்தால் உடனே இவான் கூஸெவ் வாய்விட்டுச் சிரிப்பான். உடனே தாய் பிரசுரங்களைக் கொடுப்பதை மறைத்துவிட்டு, சேமியா சூப், கொடுக்க ஆரம்பித்துவிடுவாள்.

”நீ ரொம்பக் கெட்டிக்காரி, பெலகேயா நீலவ்னா” என்று கூறி அந்தச் சகோதரர்கள் இருவரும் சிரித்தார்கள்.

”தேவை வந்தால் திறமையும் கூடவே வந்துவிடும்” என்று பக்கத்தில் நின்ற கொல்லுத் தொழிலாளி ஒருவன் சொன்னான். ”பாவம் அவளுக்கு உழைத்துப் போட்டு உணவு கொடுத்தவனை அவர்கள் கொண்டு போய்விட்டார்கள் அயோக்கியப் பயல்கள்! சரி, எனக்கு மூன்று கோபெக்குக்குச் சேமியா கொடு. கவலைப்படாதே, அம்மா . எப்படியாவது உன்பாடு நிறைவேறிவிடும்.”

”நல்ல வார்த்தை சொன்னாயே. உனக்கு ரொம்ப நன்றி” என்று இளஞ்சிரிப்போடு பதில் கூறினாள் தாய்.

“நல்ல வார்த்தைக்கு என்ன காசா பணமா?” என்று சொல்லிக்கொண்டே அவன் ஒரு பக்கமாக ஒதுங்கிச் சென்றான்.

”சூடான சேமியா, சூப்” என்று கத்தினாள் பெலகேயா.

தன் மகனிடம் தனது பிரசுர விநியோகத்தின் முதல் அனுபவத்தை எப்படிச் சொல்வது என்பதைப்பற்றி அவள் யோசித்துப் பார்த்தாள். ஆனால் அவளது மனத்தாழத்தில் அந்தக் கோபாவேசமான புரிய முடியாத கடுகடுத்த மஞ்சள் மூஞ்சி அதிகாரியின் முகம்தான் நிழலாடிக் கொண்டிருந்தது. அவனது திருகிவிட்ட கரியமீசை நிமிர்ந்து நின்றது; இறுக மூடிய அவனது பற்கள் பிதுங்கிப் போன உதடுகளின் இடையே வெள்ளை வெளேரெனப் பளிச்சிட்டன. தாயின் இதயத்தில் வானம்பாடியைப் போல் ஆனந்த உணர்ச்சி பாடித் திரிந்தது. அவள் தன் புருவங்களை வளைத்து உயர்த்தி, வந்து போகும் வாடிக்கைக்காரர்கள் அனைவரையும் பார்த்து தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்தாள்.

”இதை வாங்கு, அதை எடு”.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க