ர்நாடகத்தின்  மிகப் பிரபலமான ஊழல் பேர்வழியான ஜனார்த்தன ரெட்டி தலைமறைவாகியுள்ளார்.

எடியூரப்பாவுடன் ஜனார்தன ரெட்டி.

சுரங்கத் தொழிலில் பல முறைகேடுகளைச் செய்து தொழிலதிபராகவும் முறைகேடுகளை மறைக்க அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்த ரெட்டி சகோதரர்களை அணைத்து ஆதரித்தது பாஜக. கர்நாடகத்தில் அமைந்த முதல் பாஜக ஆட்சியில் முதலமைச்சர் எடியூரப்பா, தன் பதவியில் இருந்தபோதே ஜெயிலுக்குப் போன ’பெருமை’யைப் பெற்ற காலத்தில் அவரோட உள்ளே சென்றவர் அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டி.

மூன்று ஆண்டுகள் உள்ளே இருந்துவிட்டு, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீது ஏராளமான ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரூ. 18 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் சிபிஐ-யால் தேடப்பட்டு வந்த ஜனார்த்தன் ரெட்டி காணாமல் போயுள்ளதாக பெங்களூரு போலீசு தெரிவிக்கிறது. ஜனார்த்தன் ரெட்டி அமைச்சராக இருந்தபோது, ஆம்பியண்ட் குழுமம் என்ற தனியார் நிறுவனத்தை ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க வைப்பதற்காக ரூ. 18 கோடி லஞ்சம் கேட்டுள்ளார்.

அந்தப் பணம், ஜனார்த்தன ரெட்டியின் உதவியாளரிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. நிதி நிறுவனமான ஆம்பியண்ட், ரூ. 600 கோடி முதலீட்டாளர்களின் பணத்தை ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

படிக்க :
♦ பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்: சுரங்கத் தொழில் மாஃபியாகள்!
♦ கர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …

அந்நிறுவனத்தை நடத்தி வந்த சையது அகமது ஃபரீத்திடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ஜனார்த்தன ரெட்டியை பெங்களூருவில் உள்ள ஓட்டல் ஒன்றில் சந்தித்ததாகவும், அவர் உதவுவதாக வாக்குறுதி தந்ததாகவும் கூறினார்.

அதற்கு பிரதிபலனாக ரூ. 18 கோடியை தங்க வர்த்தகரான ரமேஷ் கோத்தாரியிடம் கொடுத்ததாகவும் அவர் நகை செய்பவரிடம்  கொடுத்து அந்தப் பணத்துக்கு ஈடான 57 கிலோ தங்க நகைகள் செய்ததாகவும் ஃபரீத் கூறியுள்ளார்.  தங்க நகைகள் அனைத்தும் ஜனார்த்தன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளரான அலி கானிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசு கூறுகிறது. இந்த வழக்கில் அலி கான் மற்றும் ஜனார்த்தன ரெட்டியை தேடியபோது அவர்கள் மாயமானது தெரியவந்துள்ளது.

நாடே பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அல்லாடிக் கொண்டிருந்த போது தனது மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியவர் இந்த ஜனார்தன்.

கடந்த ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, நாடே ஏடிஎம் மற்றும் வங்கிகள் முன் வரிசையில் நின்றது. 500, 1000-க்காக வரிசையில் நின்ற பலர் மாண்டுபோனார்கள். ஆனால், ஜனார்த்தன ரெட்டி ரூ. 500 கோடி செலவில் மிக ஆடம்பரமாக தனது மகளுக்கு திருமணம் செய்தார். அந்தப் பணம் எப்படி வந்தது என்பது குறித்து இன்னமும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

ஊழலை ஒழிக்கப் ’பிறந்த’ அமித் ஷா – மோடி தலைமையிலான பாஜக கர்நாடகாவின் மாபெரும் ஊழல் பேர்வழிகளான ரெட்டி சகோதரர்களுடன் இணைந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது. ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர்களான சோமசேகர் ரெட்டியும் கருணாகர ரெட்டியும் பாஜக வேட்பாளர்களாக இவர்களின் கோட்டையாக கருதப்பட்ட பெல்லாரியை சுற்றியுள்ள தொகுதிகளில் நிறுத்தப்பட்டு வென்றார்கள்.

சட்டப்பேரவையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் திடீர் கூட்டணி அமைத்து, பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அமித் ஷாவின் தந்திரம், ரெட்டிக்களின் பணபலம் வெற்றி பெறாதநிலையில் ஆட்சி கனவை இழந்தது பாஜக. இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பல ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள ரெட்டி சகோதரர்களே.

படிக்க :
♦ மோடியின் கபட நாடகத்திற்கு ரெட்டி திருமணமே சாட்சி – வீடியோ
♦ டெல்லியில் ஒபாமா பெங்களூருவில் ரெட்டி பிரதர்ஸ் – பாஜக சியர்ஸ்

சமீபத்தில் நடந்த பெல்லாரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில்  14 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியை சந்தித்திருக்கிறது பாஜக. பாஜகவைக் காட்டிலும் ரெட்டி சகோதரர்களுக்கு இது பெரிய இடி. இந்த நிலைமை வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கலாம் என்கிற அச்சம் ஜனார்த்தன் ரெட்டிக்கு வந்திருக்க வேண்டும்.

வழக்கம்போல, ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டிக் கொண்டு ஓடும் தொழிலதிபர்களை வழியனுப்பி வைக்கும் பாஜக அரசு, தனது நெருங்கிய கூட்டாளியான ஜனார்த்தன ரெட்டியையும் அனுப்பி வைத்திருக்கலாம்.

 

செய்தி ஆதாரம் :
♦ Janardhan Reddy, Wanted In Rs. 18-Crore Bribery Case, Goes Missing

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க