திராம்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிலால் நகர். இங்கு முசுலீம்களும் தலித் மக்களும் ஒன்றாக ஒரே இடத்தில் குடியிருக்கின்றனர். தங்களுக்குள் உறவுமுறை வைத்து கூப்பிட்டுக் கொள்ளும் அளவு இணக்கமாக வாழ்கின்றனர். இங்கு உள்ள மக்கள் அனைவரும் அதிராம்பட்டினம் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூலித் தொழிலாளிகளாக வேலைபார்த்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் வீட்டு வேலைக்கு செல்வது, ஆண்கள் கிடைக்கும் போது விவசாய வேலைகளுக்கு செல்வது மற்ற நேரங்களில் தள்ளுவண்டி உணவுக் கடைகளில், தேனீரகங்களில், உணவகங்களில் என வேலை பார்த்து வருகின்றனர். தற்போதைய கஜா புயலின் காரணமாக பெரும் சேதத்தை இப்பகுதி மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

இங்கு 300-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. “பொதுவாகவே இப்பகுதி தாழ்வான இடத்தில் இருப்பதால் சாதாரண மழைக்குக் கூட தண்ணீர் தேங்கி நிற்கும். இதோ பார்க்கிறீர்களே இந்த சாலை கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு மேலாக இதே போல குண்டும் குழியுமாகத்தான் உள்ளது. ஓட்டு வாங்க மட்டும் இப்பகுதிக்கு அரசியல்வாதிகள் வருகிறார்கள், ஆனால் எப்போது பாதித்தாலும் எங்களைப் பார்க்க வருவதில்லை. மீடியாக்கள் கூட எங்களைப் பற்றிய செய்தி ஏதும் வெளியிடவில்லை. பின்னர் நாங்கள் ஈ.சி.ஆர். சாலையில் மீனவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்திய பின்னர்தான் எங்களைப் பற்றிய செய்தி வெளிவந்தது.

புயல் வந்த ஆரம்ப நாள் தொட்டு, இன்றுவரை அரசின் சார்பில் எந்த உதவியும் செய்யவில்லை. எங்களுக்கு தன்னார்வலர்கள் இசுலாமிய அமைப்புகள் தான் உதவிகளைச் செய்து வருகின்றனர். இன்றுதான் சில வீடுகளுக்கு வந்து அரசு மருந்துகளைக் கொடுத்துள்ளது.

எங்கள் பகுதியை சுத்தம் செய்யக்கூட யாரும் இல்லாத காரணத்தால் நாங்களே சுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளோம். எங்களுடன் சேர்ந்து தன்னார்வலர்களும் இந்த வேலைகளைச் செய்கின்றனர். அவர்களும் வராமல் போயிருந்தால் எங்கள் நிலமை இன்னும் மோசம்தான்” என நம்மை பார்த்ததும் குமுறி வெடிக்கின்றனர் மக்கள்.

முகம்மது நியாஸ் (மஞ்சள் பனியன் அணிந்திருப்பவர்).

அப்போது நம்மிடம் பேசிய எலக்ட்ரிசியன் வேலைபார்க்கும் முகமது நியாஸ்: “இங்க உள்ள மக்களுக்கு எப்பவுமே மழையினாலே அதிக பாதிப்புதான். ஆனா இந்த வருசம் ரொம்ப பேரழிவு. ஏன்னா மழை வெள்ளம் வந்தாலும் கூட ஒன்னு ரெண்டு நாட்களில் வேலைய பார்க்க போயிடுவோம். இந்த முறை வீடுகள் முழுக்க சேதமாகிப் போயிடுச்சி. பாத்திர பண்டங்கள் எல்லாம் நாசம். கூரை வீடுகள் எல்லாம் சரிஞ்சு போயிடுச்சி. எல்லா இடமும் பாதிப்பு இருப்பதால எங்கயும் வேலை கிடைக்கல.. ஒருசிலர் தற்போதுதான் வெளிநாடுகளுக்கு சென்று வீடுகட்ட ஆரம்பித்தனர். இப்போது சொல்லப் போனா பலவருசம் பின்னாடி போயிடுச்சி பலரோட வாழ்க்கை.” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாங்க எங்க வீட்ட பாருங்க என அழைத்துச் சென்றார் கலிபுல்லா.

கலிபுல்லா

“எங்க வீடு கூரை வீடுதான் மொத்த அதிராம்பட்டனத்துலயே இங்கதான் அதிக பாதிப்பு சார். கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார் தமிழகத்துல ஏழு மாவட்டங்கள் மட்டும் தான் இந்த புயலால பாதிச்சு இருக்கு. கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகப் போவுது எந்த நிவாரணப் பணியும் வேகமா நடக்கல. எடப்பாடி வந்தாரு ஆனா அவரும் எல்லா இடத்தையும் பாக்கல.. கிளம்பிட்டாரு.

படிக்க:
அதிராம்பட்டினம் மீனவர்கள் : கடனில் ஓடிய வாழ்க்கை இனி பெருங்கடனில் போய் நிற்கும்
கஜா புயல் : கலங்கி நிற்கும் மக்களுக்கு கை கொடுப்போம்

இதுவே ஒரு நல்ல அரசா இருந்தா இப்புடி விடுமா யோசிச்சு பாருங்க.. மத்த மாவட்டத்துல இருந்து அதிகாரிங்கள உடனே கொண்டுவந்து எல்லா வேலையும் இன்னேரத்துக்கு முடிச்சு இருக்கலாமா இல்லையா நீங்களே சொல்லுங்க. ஓட்டு கேக்க மட்டும் இங்க வராங்க.. ஓரளவு நிவாரண வேலைகள் நடந்தாலும் கூட முதல் முன்னுரிமை வசதியானவங்களுக்குதான் கிடைக்கிறது. எனக்கு ஒருவிசயம் தெரியல ஏழை முசுலீம்கள், தலித்துகள் எங்களை மட்டும் திட்டமிட்டு ஒதுக்குறாங்களோ” என்று கூறினார்.

அவரைப் போலவே ஒவ்வொரு வீட்டில் இருந்தும் தங்களின் துயரத்தை யாரும் கேட்க மாட்டார்களா என ஏக்கத்துடன் பலரும் பேசினர்.

புயல் குறித்த எச்சரிக்கையைக் கூட இம்மக்களுக்கு ஊருக்குள் வந்து யாரும் அறிவிப்பு செய்யவில்லை. போகிற வழியில் சொல்லிவிட்டு சென்றுவிட்டனர். அதுமட்டுமல்ல புயல் பாதித்த உடனே யாரும் வரவில்லை பல நாளாக குடிநீர் வரவில்லை. அதன் பின்னர் தற்போதுதான் தண்ணீர்கூட வருகிறது. தேங்கிய நீரை சுத்தம் செய்யாது சேறும் சகதியுமாக இந்த இடம் முழுவதுமே இருப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இப்போதே சில குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி ஆகியவை பரவ ஆரம்பித்துள்ளது. இவற்றை உடனே கவனிக்க வேண்டும். என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வினவு களச் செய்தியாளர் பொதுவாக இப்பகுதி மக்களைப் பொருத்தவரை தங்களுக்கான நிவாரணத்தை விடவும் யாரும் வந்து தங்களைப் பார்க்கவில்லை, என்பதே இவர்களின் கவலையாக உள்ளது. 2015-ல் பலநூறு உயிர்கள் பலிவாங்கிய ஜெயாவின் ஆன்மாதானே இங்கு ஆட்சி செய்கிறது. அதனால்தான் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு இல்லாது தவித்த போது மீட்புப் பணிகள் எல்லாம் ஜரூராக நடக்கிறது என பேட்டியளித்துவிட்டு மாமியார் வீட்டில் விருந்து தின்றுகொண்டு இருந்துள்ளார் ‘முதலமைச்சர்’.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க