ட்டுக்கோட்டை – அதிராம்பட்டினத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரைக்கு அருகாமையில் உள்ளது ஏரிப்புறக்கரை. அதிக அளவில் மீனவர்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் வசிக்கும் கிராமம். கிராமத்திற்குள் நுழைந்தால் வீதியெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக குழுமியிருக்கிறார்கள். வருபவர்கள் அதிகாரிகளா? நிவாரணம் கொடுக்க வரும் தன்னார்வலர்களா? என்ற எதிர்பார்ப்பு அவர்களுடைய கவலை தோய்ந்த முகத்தில் தெரிகிறது.

பெரும்பாலும் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள்தான். அங்கொன்றும், இங்கொன்றுமாக மெத்தை வீடுகள் அவ்வளவுதான். எந்த வீட்டின் மீதும் கூரையும் இல்லை, ஓடும் இல்லை… மொத்தமும் வாரி சுருட்டிக்கொண்டு சென்றுள்ளது கஜா.

ஏதோ ஒரு தொண்டு நிறுவனம் பொருட்கள் கொடுக்க வருவதாக சொன்னதும் சில நிமிடங்களுக்குள் மொத்த கிராமத்தினரும் நீண்ட வரிசைக்கு வந்து விட்டனர். அவர்களை எல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர் சில இளைஞர்கள்.

சற்றுதொலைவில் பேருந்து நிறுத்தத்தின் கீழ் அமர்ந்திருந்த  ஊர் பெரியவர்கள்  மற்றும் மீனவ கிராம தலைவர் ராஜேந்திரனிடம் பேசினோம். “இங்க  ரெண்டு பகுதி இருக்கு. ஏரிப்புறக்கரை, காரையூர்தோப்பு. இந்த இரண்டு ஏரியாவுலயும் மொத்தம் 500 மீனவக் குடும்பம் இருக்கு. மொத்த மக்கள் தொகை 2,000 பேர். எல்லாரும் கடலுக்கு மட்டும்தான் போவோம்.  அதேமாதிரி தாழ்த்தப்பட்ட மக்கள் 400 குடும்பம், 1,800 பேர் இருக்காங்க.  இவங்களோட வேலை விவசாயம். அதுபோக மீனவர்களுக்கு உதவியாளர்களா வருவாங்க. அக்கம்பக்கமா எந்த வேலை இருந்தாலும் போயிடுவாங்க.

ராஜேந்திரன்.

இந்த ஒரு ஊர் மட்டுமில்ல.. காந்தி நகர்ல இருந்து கண்டியன் கொல்லை வரை 1,500 மீனவக் குடும்பம் இருக்கும். கீழத்தோட்டம் மட்டும் கடற்கரை பகுதி. இந்த மொத்த ஏரியாவுலயும் பில்டிங் வீட்ட தவிர மற்ற அனைத்து வீடும் பெருமளவு அழிஞ்சிடுச்சி. எங்களுக்கு கடலை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கு. கடல் இல்லனா நாங்க இல்ல. இந்த புயலால மொத்த படகும், வலையையும் இழந்து நிக்கிறோம். விவசாயிகளுக்கு எப்படி வீடும், நிலமும் சேதமோ, அதே மாதிரி எங்களுக்கு படகும், வலையும் டேமேஜ் ஆகிடுச்சி.

இங்க மொத்தம் 98 பைபர் படகு இருக்கு. அதை நம்பி 1,000 லேபர் இருக்காங்க. ஒரு படகு மூனு லட்சம் இஞ்சினையும் சேர்த்து.  ஒருமுறை படகை ரிப்பேர் பண்ணனும்னா ஒன்னரை இலட்சம் செலவாகும். இஞ்சினை மட்டும் செலவு பாக்கனும்னா இருபதாயிரம் ஆகும்.  இப்ப இந்த புயலால 85% படகு சேதமாகிடுச்சி. இப்ப ஓரளவுக்கு ஒட்டத்துல ஒரு பத்து படகுதான் இருக்கு. அதே மாதிரி வலை யாருக்கும் மிஞ்சல. எல்லாம் சேதமாகிடுச்சி. அடிச்ச காத்துல சேத்துக்குள்ள போயிட்டு பூந்துகிச்சி. இழுத்தா எதுவும் வர்ல. அப்படியே வந்தாலும் எல்லாம் நரம்பு வலை தானே… அறுத்துக்கினு வருது.  இப்ப வலையோட சேர்த்து ஒரு படகு வாங்கனும்னா அஞ்சி லட்சம் ஆவும். எங்கப் போறது?

ஒரு அஞ்சாறு பேரு மட்டும் 2, 3 படகு வச்சிருக்காங்க. இந்த ரெண்டு மூனு இருக்கவங்களுக்கு ஒன்னாவது மிஞ்சிச்சின்னா ஆறுதலா இருந்திருக்கும். அதுவும் இல்ல. எல்லாமும் இழப்பாயிடுச்சி. ஒரு மீனவனுக்கு வீடு மாடி வீடா, கூரை வீடா என்பது பிரச்சனை இல்ல. அதுல அவன் மதிப்பு இல்ல. அவன் எத்தன படகு வச்சிருக்கான் என்பதுல தான் இருக்கு. அதனால இந்த புயல்ல வீடு போனது கூட கவலை இல்ல. ஆனா படகு போனதுதான் ரொம்ப மனவேதனையா இருக்கு.

அரசுதான் நிவாரணம் அறிவிச்சி இருக்கே?

கவர்மெண்ட் அறிவிச்சிருக்க இந்த நிவாரணம், முழுசா சேதமடைஞ்ச போட்டுக்கு 85  ஆயிரம்னு சொல்லிருக்கு. இது நான்குல ஒரு பங்குதான். இத வச்சிக்கினு எப்படி படக வாங்குறது? இல்ல படகத்தான் எப்படி சீர்திருத்தம் பண்றது?

எங்க ஏரியா எம்.எல்.ஏ-வைப் பார்த்து நஷ்டஈடு பத்தாது. உயர்த்த சொல்லி பேசலாம்னு இருக்கோம். அப்பவும் எந்த நடவடிக்கையும் எடுக்கலனா தஞ்சை மாவட்ட மீனவர்கள் எல்லாம் சேர்ந்து மீன்வளத்துறை அமைச்சரை சந்திக்கலாம்னு இருக்கோம்.

நிவாரண பணிகள், உணவு தங்குமிடம் எல்லாம் எப்படி இருக்கு?

ஒருவேளை சாப்பாடு மட்டும் முகாமுக்கு அனுப்பிடுவாங்க. இப்ப பிஸ்கட் குடுத்திருக்காங்க. மத்தபடி வேற எதையும் செய்யிறது இல்ல.  இங்க மொத்தம் அஞ்சி முகாம்கள் இருக்கு. இரண்டு மீனவர்களுக்கு. மூன்று தலித் மக்களுக்கு இருக்கு.  இரண்டு வேளைக்கு கிராமத்து சார்பாதான் சாப்பாடு சமச்சி போடுறோம்.  கஜா புயல் வந்த பிறகு இந்த முன்னெச்செரிக்கை அறிவிப்பைத் தவிர வேற எதுவும் செய்யல. இதுவரைக்கும் ஆளும் அரசு ஒருத்தன் கூட வந்தும் பாக்கல.

கடலுக்கு போற ஒருத்தனுக்கும் யாருமே துணை இல்ல. போட், வலை, ஐ.டி கார்ட் இழந்தா உடனடியா தரனும். அவனோட வாழ்க்கையே அதுலதான் இருக்கு அப்படின்னு எந்த அரசும் சிந்திக்காது. இது வரைக்கும் சாப்பாடே முறையா தரல. இவனுக என்ன பண்ணிடப்போறனுங்க?

புயல் வந்த நாள்ல இருந்து கடல் பக்கம் போக புடிக்காம வீட்டுலயே முடங்கிட்டோம். வேறபோக்கு இல்ல. கவுந்துகிடந்த படகை எல்லாம் இப்பதான் நிமித்தி வச்சோம். இன்னும் சில படகு எங்க தூக்கி போட்டு கெடக்கோன்னு தெரியல.

இந்த துறை அதிகாரிங்க வந்து கணக்கெடுத்துனு போனாத்தானே ஏதாவது ஆறுதலாவது இருக்கும்.  எவனும் வந்து கணக்கெடுக்கல. எங்களுக்கு தெரிஞ்ச அனைத்து மட்டத்திலும் சொல்லிட்டோம். இதுவரைக்கும் ஒருத்தனும் வர்லன்னா பாத்துக்கோங்களேன். இப்படியே இருந்தா எங்க வாழ்வாதாரம் என்ன ஆவுறது?

நாங்க ஏற்கனவே வேலை இல்லாம இருக்கோம். ஒரு மீனவனுக்கு வருஷத்துல 6 மாசத்துக்கு தான் வேலை. மீன்பிடிக்க தடை, விழாக்காலம், மழைக்காலம்னு ஒரு ஆறு மாசம் சும்மாவே போயிடும். ஒரு நாளைக்கு கடலுக்கு போனா 1000 ரூபா கெடைக்கும். இன்னொரு நாளைக்கு 10000 ரூபா கெடக்கும்… அந்த சமயம் கெடக்கிற பணத்த வச்சிதான் வேலை இல்லாத நாள ஓட்டிக்கிட்டு இருந்தோம். இப்ப அதுவும் இல்ல.

இன்னொரு பிரச்சனை என்னன்னா, கொஞ்சம் பணக்கார மீனவங்க எல்லோரும் விசைப்படகுல போயிட்டு இரட்டை மடி வலையை வீசி மீன் பிடிக்கிறாங்க. இந்த வலையில மாட்டுன மீனு எதுவும் மிஞ்சாது. முட்டை முதல் குஞ்சி வரை வாறி இழுத்து வந்துடும். இந்த இரட்டை மடி வலை பயன்படுத்த அரசால் தடை விதிக்கப்பட்டிருக்கு. இருந்தும் அதை சில மீனவர்கள் பயன்படுத்துறாங்க. அதுக்குப்புறம் கடலுக்கு போற நாட்டுப்படகு மீனவனுக்கு மீனு கெடக்காது.

படிக்க:
அதிராம்பட்டினம் மீனவர்கள் : கடனில் ஓடிய வாழ்க்கை இனி பெருங்கடனில் போய் நிற்கும்
கடலோர மேலாண்மை திட்டத்தை எதிர்க்கும் சென்னை மண்டல மீனவர்கள்

இந்த விசைப்படகால ஏற்கனவே எங்களுக்கு சிக்கல்தான். இப்ப இந்த புயல் ஒரு சேதாரம்.. இயற்கை ஒரு பாதிப்புனா. அரசாங்கமும் பெரிய பாதிப்பாதான் இருக்கு. எங்களோட வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராட்டம் பண்ணுறதைத் தவிர வேற வழியில்லை” என்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க