ட்டுக்கோட்டையிலிருந்து தம்பிக்கோட்டை செல்லும் வழியில் இருக்கிறது கிருஷ்ணாபுரம். செல்லும் வழி எங்கும் சாலைகளில் உள்ள மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. தென்னை மரங்கள் எல்லாம் போரில் மடிந்த வீரர்களைப் போல் மடிந்து கிடக்கின்றன. குடிசை முதல் தகர ஷீட்டுகள், ஓடு, குடிசை வீடுகள் அனைத்தும் உருக்குலைந்து கிடக்கின்றன. சாலையில் பயணிக்கும்பொழுதே ஒரு மயான அமைதியை உணர முடிகிறது…

கஜா புயலின் கோரம் டெல்டா மக்களை துயரத்தின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது. தென்னை விவசாயிகள் மட்டுமல்ல தேங்காய் வியாபாரிகளும் தப்பவில்லை. அதில் வேலை செய்யும் தொழிலாளிகளின் நிலையோ நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

கிருஷ்ணாபுரத்தில் சாலையோரம் இருந்த கிடங்கில் மலைபோல் குவிந்து கிடந்தன தேங்காய்கள். எதிரே நிறுத்தப்பட்டிருந்த லாரியில் பாதி ஏற்றியும் மீதி ஏற்றுவதற்கும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் பேசியதும் உரிமையாளர் வெளியில் சென்றிருப்பதாக  சொல்லி விட்டு வேலையில் மும்முரமானார்கள்.

வேகவேகமாக வந்த உரிமையாளர், தொழிலாளிகளைப் பார்த்து “இதை ஏன் மூடி வச்சிருக்கிங்க. இது என்ன கொப்பரையா?” என்றார். ஆமாம் என்று சொல்லிக் கொண்டே வேலையை செய்தனர் தொழிலாளிகள். பிறகு நம்மைப் பார்த்து அவசரமா வெளியில போறேன். சீக்கிரம் சொல்லுங்க என்ற தொனியில் கேட்டுவிட்டு தொடர்ந்தார் ராமலிங்கம். “நாங்க தோப்புல நேரடியாக கொள்முதல் செய்வோம். ஒரு காய் 12,13-க்கு எடுப்போம். அதனை எடுத்து வந்து நன்றாக காய வைத்து, பின்னர் அதனை உரித்து விடுவோம். உரித்த மட்டையை நார் ஃபேக்டரிக்கு அனுப்பி விடுவோம். அதில் ஒரு வருமானம் கிடைக்கும்.

இங்கு தொழிலாளர்களுக்கு தினந்தோறும் வேலை இருக்கும்.  ஒரு ஆள் 1,500 காய் உரிக்க வேண்டும்.  இயந்திரம் எதுவும் கிடையாது. கையால்தான் உரிக்க வேண்டும். அதனை 50 கிலோ மூட்டையில் 60 காய் அடங்கிய தேங்காயை பேக் செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பி விடுவோம். முக்கியாமாக ஒரிசா, பீகார், ஜார்கண்ட், பாட்னா, ஆந்திரா மற்றும் நேபாளம் ஆகிய இடங்களுக்குச் செல்லும். அந்த லாரியில் 16 முதல் 24 டன் வரை அனுப்பி விடுவோம்.

இங்கிருந்து ஆந்திரா அனுப்ப வேண்டுமானால் லாரி வாடகை, ஏத்துக்கூலி, இறக்கு கூலி எல்லாம் சேர்த்து 35,000 ஆகிவிடும். இந்த செலவு எல்லாம் போக கிடைப்பதைக் கொண்டு தென்னை உற்பத்தியாளர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுவோம்.

சில உற்பத்தியாளர்களுக்கு முன்னதாகவே முன்தொகை கொடுத்து வைத்திருப்போம். அவர்கள் எங்களிடம் மட்டும்தான் காய் கொடுக்க வேண்டும். அந்த நம்பிக்கையில் வியாபாரத்தை நடத்தி வந்தோம். இதனால் தொடர்ந்து தடையில்லாமல் காய் கிடைத்து வந்தது. ஆனால் இனிமேல் அது முடியாது.  வியாபாரி – விவசாயம் எல்லாம் முடிந்து விட்டது. தோப்புக்காரர்களுக்கு அட்வான்ஸ் சில இலட்சங்கள் கொடுத்திருக்கிறோம். தென்னையே அழிந்துவிட்ட பிறகு அதையெல்லாம் எப்படி வசூலிப்பது என்று தெரியவில்லை. ஒன்னுமே புரியவில்லை!

படிக்க:
ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !!
பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா ? மறுக்கிறதா ?

இந்தப் புயலால் பெரிய வியாபரிகளுக்கு ஒரு கோடி ஒன்னரை கோடி வரையும், எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளுக்கு 50 லட்சம் வரை பெருத்த நஷ்டம்! நாங்களாவது பரவாயில்லை. எப்படியோ பிழைத்துக் கொள்வோம். ஆனால் எங்களை நம்பி இருக்கும் இந்தத் தொழிலாளிகளின் நிலைதான் மோசம்” என்கிறார்!