டந்த நவம்பர் மாதத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆர்த்தர் பௌவார்ட், ஜூல்ஸ் கிரவ்தாட் ஆகிய இரண்டு பத்திரிகையாளர்கள் சென்னை வந்திருக்கின்றனர். அவர்கள் ”ஃபொர்பிடன் ஸ்டோரீஸ்” (Forbidden) என்ற பிரெஞ்சுப் பத்திரிகை சார்பாக தமிழகத்தில் சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்யும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிரட்டல்கள், கைது தாக்குதல் குறித்து ஆய்வு நடத்த வந்திருந்தனர்.

சென்னை வந்த அந்த பத்திரிகையாளர்கள், ஏற்கெனவே வைகுண்டராஜனின் சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்து அம்பலப்படுத்திய சந்தியா ரவிசங்கர் என்ற சென்னை பத்திரிகையாளரின் மூலம், டி. ஆனந்தகுமார் மற்றும் எம்.ஸ்ரீராம் ஆகியோருடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

பிரெஞ்சு பத்திரிகையாளர்கள்.

வைகுண்டராஜனின்  சட்டவிரோத அரிய வகை மணல் கொள்ளை தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் பல பத்தாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள முறையற்ற சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து ஆய்வு நடத்த, ஆனந்தகுமார், ஸ்ரீராம் ஆகியோருடன் ஆர்தர் பௌவார்ட் மற்றும் ஜூல்ஸ் கிரவ்தாட் ஆகியோர் கன்னியாகுமரி சென்று அங்கு நடைபெறும் மணற்கொள்ளை குறித்து விசாரித்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஆர்தர் பௌவார்ட்டும், ஜூல்ஸ் கிரவ்தாட்டும், குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அரியவகை மணல் நிறுவனத்தின் (ஐ.ஆர்.இ.எல்) மேலாளரைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர். அவர்களை உள்ளே அனுமதித்த மேலாளர், அப்பத்திரிகையாளர்களை அவர்களது சந்திப்பின் இடையிலேயே வெளியேறுமாறு கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர்களும் வெளியேறியிருக்கின்றனர்.

அதனைத் தொடந்து மறுநாள் அவர்கள் இருவரும் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். தாது மணல் கொள்ளை குறித்து வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் விசாரிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட மணல் கொள்ளை கும்பல், உடனடியாக உள்ளூர் போலீசு கும்பலை முடுக்கி விட்டிருக்கிறது. உடனடியாக களத்தில் இறங்கிய போலீசு, பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் விசாரித்து அவர்களுடன் வந்த பத்திரிகையாளர்கள் ஆனந்தகுமார், ஸ்ரீராம் ஆகியோரை உடனடியாக விசாரணைக்கு வரவழைத்தது. கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் கடந்த 27-ம் தேதி அனந்தகுமாரையும், ஸ்ரீராமையும் தொடர்பு கொண்டு, நேரில் வந்து நடந்த விசயங்களை விளக்குமாறு கூறியிருக்கிறார்.

இதையடுத்து நவம்பர் 28-ம் தேதி கன்னியாகுமரியில் டி.எஸ்.பி. பாஸ்கரனை காலை 11 மணிக்கு அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். இருவரிடமும் சுமார் 6 மணிநேரத்திற்கும் மேல் போலீசு நிலையத்திலேயே விசாரணையை நடத்தியுள்ளது போலீசு. கூடுதலாக, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளது. அதன் பின்னர் மீண்டும் போலீசு நிலையத்திற்கு அழைத்துவந்து ஆனந்தகுமாரை சிறையிலடைத்தது. ஸ்ரீராமை மட்டும் ஹோட்டலுக்குச் செல்ல அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மூத்த பத்திரிகையாளர்கள் போலீசாரிடம் விசாரித்த பின்னர், அனந்தகுமாரை ஹோட்டலுக்குச் செல்ல அனுமதித்துள்ளது. கூடவே 4 போலீசை அவர்களது அறை வாசலில் காவல் வைத்தது.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்து என். ராம் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள்.

மறுநாள் மீண்டும் இருவரையும் போலீசு நிலையத்திற்கு அழைத்து விசாரணையைத் தொடர்ந்துள்ளது. உளவுப் பிரிவு, க்யூ பிரிவு உள்ளிட்ட ஆளும் வர்க்கத்தின் சேவக பிரிவுகள் அனைத்தும் வரிசையாக விசாரித்துள்ளன. இதனிடையே மூத்த வழக்கறிஞர் கீதாவின் தலையீட்டின் பேரிலேயே அவர்களை விடுவித்தது போலீசு.

இந்த விசாரணையின் போது பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் இருவரும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தங்களது பத்திரிகை அடையாள அட்டையைக் காட்டி தாங்கள் சட்டப்பூர்வமாக அனுமதி பெற்றே அங்கு வந்ததற்கும் ஆதாரம் காட்டியுள்ளனர். இந்த விசாரணையின் போது டி.எஸ்.பி. பாஸ்கரன் சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து எதுவும் பேசக் கூடாது என பத்திரிகையாளர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த விசாரணை குறித்து பத்திரிகையாளர் அனந்தகுமார், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு கூறுகையில், டி.எஸ்.பி. அலுவலகத்தில் நாங்கள் சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டது குறித்து மிகவும் அதிர்ச்சியடைந்தோம். மணிக்கணக்கில் எங்களிடம் கேள்வி கேட்டனர். எங்களை சில வாக்குமூலங்களில் கையெழுத்திடச் சொன்னார்கள். நாங்களும் கையெழுத்திட்டோம். ”சன் வேர்ல்ட்” தங்கும் விடுதிக்கு எங்களை அழைத்துச் சென்று அங்கு சுமார் 6 மணிநேரத்திற்கும் மேலாக அடைத்துவைத்தனர் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியுள்ளார் கன்னியாகுமரியின் எஸ்.பி. ஸ்ரீநாத். அவர்கள் இருவரும் ஐ.ஆர்.ஈ.எல் நிறுவனத்திற்குள் அனுமதியின்றி சென்றனர் என்றும் தடை செய்யப்பட்ட இடங்களை புகைப்படங்கள் எடுத்தனர் என்றும் பின்னர் புகைப்படங்கள் எதுவும் எடுக்கவில்லை என்றும் உளறிக் கொட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத நடவடிக்கை ஆகட்டும் அல்லது வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளை ஆகட்டும், திருச்செந்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடக்கும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் புரோக்கர் வேலை செய்து வருகிறது பா.ஜ.க. கும்பல். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அப்பட்டமாக அனில் அகர்வாலுக்கு ஆதரவாக பா.ஜ.க. செயல்பட்டது.

தாதுமணல் கொள்ளை புகழ் வைகுண்டராஜன், சுப்ரமணியசாமி வழியாக தனது பாஜக லாபியை வைத்துள்ளார். ஏற்கனவே எஸ்.வி.சேகர் “அண்ணாச்சி”யிடம் பேசி நியூஸ் 7 தொலைக்காட்சியில் மதிமாறன் போன்றோரை அழைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டதை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். செத்துப் போன ஜெயாவின் தர்பாரில் அங்கம் வகித்த வைகுண்டராஜன் தற்போது நியூஸ் 7 தொலைக்காட்சி மூலம் பாஜக-வின் தமிழகத் திட்டத்திற்கு தீயாய் வேலை செய்கிறார்.  எனவே பா.ஜ.க. கும்பல், தமது கூட்டாளி வைகுண்டராஜனின் சட்டவிரோத மணற்கொள்ளை அம்பலப்பட்டால், சும்மா விட்டுவிடுமா என்ன ?

உடனடியாக களத்தில் இறக்கிவிட்டது பொன்.ராதாகிருஷ்ணனை. மத்திய அமைச்சராக இருந்து கொண்டு கூச்சமே இல்லாமல் பொய் சொல்லக் கூடிய உயிரினங்கள் பா.ஜ.க.வில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. அதற்கு ஒரு உதாரணம் பொன்.இராதாகிருஷ்ணன்.

அந்த இரண்டு பிரெஞ்சு ‘உளவாளிகளும்’ கள்ள பாஸ்போர்ட்டில், கள்ளத் தோணி வழியாக கன்னியாகுமரிக்குள் நுழைந்தனர் என எவ்வித ஆதாரவும் இல்லாமல் அடித்து விடுகிறார் பொன்னார். தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததாக கிளப்பி விட்டவர் வைகுண்டராஜனுக்காக அதிகமாக கூவுகுகிறார்.

சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம்.

கன்னியாகுமரியில் திடீர் திடீரென போஸ்டர்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. ”கன்னியாகுமரி மாவட்டத்தில் ஃப்ரான்ஸ் நாட்டு உளவாளிகள்.. பொதுமக்களே உஷார்!” என இரண்டு பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் புகைப்படத்தையும் போட்டு, அவர்களது பெயரை தப்பும் தவறுமாக எழுதி மொட்டையான போஸ்டர்கள் அடித்து வெளியிட்டுள்ளது ஒரு கும்பல். இதை பாஜக ஆதரவுடன் வைகுண்டராஜனின் ஆட்கள் செய்திருக்க வேண்டும். அல்லது பாஜக-வே வைகுண்டராஜன் ஆதரவுடன் செய்திருக்கும்.

எது எப்படி இருந்தாலும், இந்த விவகாரத்திலும் பத்திரிகையாளர்களை மிரட்டி, இனி யாரும் ஆய்வு செய்ய வரக்கூடாது என்பதில் வெற்றி பெற்றுவிட்டதாக வைகுண்டராஜன் கும்பல் நினைத்துக் கொண்டிருக்கலாம்.

படிக்க:
மணற் கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன் !
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !

இவ்விவகாரம் ஊடகங்களில் போலீசு செய்தியாகவே வெளிவந்து கொண்டிருந்ததை, இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் உடைத்துள்ளார். நேற்று 3.12.2018 அன்று ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் சார்பில் ஏற்பாடு செய்யபட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் என்.ராம், போலீசின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தி, வந்திருந்தவர்கள் ஃப்ரெஞ்சு நாட்டு பத்திரிகையாளர்கள் என்பதையும், அவர்கள் முறையான வழியில்தான் வந்திருக்கின்றனர் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் சங்க பரிவாரக் கும்பல், சட்டவிரோத கார்ப்பரேட்டுகளுக்கான தனது ’மாமா’ வேலையை சலியாமல் செய்து கொண்டுதான் இருக்கிறது. தமிழக பத்திரிகைகளும் இவ்விவகாரம் குறித்து எதுவும் வெளியாகாதவாறு அவற்றை அடக்கி வாசிக்கின்றன. நாளை (05-12-2018) அன்று இவ்விவகாரத்தைக் கண்டித்து பா.ஜ.க,, கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது.  ’இந்து’ என்.ராம், வந்தவர்கள் பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் என ஒருபக்கம் கூறிக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் பா.ஜ.க.வின் போராட்டச் செய்தியை அப்படியே வெளியிட்டிருக்கிறது தமிழ் இந்து இணையதளம். அதில் மேற்படி பிரான்ஸ் உளவாளிகள் எனும் அவதூறை அச்சுபிசகாமல் வெளியிட்டிருக்கிறது.

பிரான்சில் இருந்து ரஃபேல் விமானத்தை வாங்குகிறது இந்திய அரசு. அந்த விமான பேரத்தில் ஊழல் வெளி வந்து நாறிக் கொண்டிருப்பது தனிக் கதை. ஆனால் பிரான்சில் இருந்து தனது விமானப்படைக்கு தேவையான போர் விமானங்களை வாங்கும் இந்தியாவிற்கு பிரான்ஸ் நாடு ஏன் உளவாளிகளை அனுப்ப வேண்டும்? ரஃபேல் விமான பேர ஊழலில் பிரான்சை காப்பாற்ற இந்தியாவும், மோடியைக் காப்பாற்ற பிரான்சும் முயற்சி செய்யும் போது இந்த உளவாளி கதைக்கு அடிப்படையே இல்லை.

ஒருவேளை பிரான்ஸ் இந்தியாவை வேவு பார்க்க நினைத்திருந்தால் ரஃபேல் விமானத்தில் ஒரு ‘கருவி’ யை பொருத்தி விட்டால் போயிற்று! புதியத 2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் கருவியை பதியும் போது ஹைடெக்கான ரஃபேல் விமானத்தில் ஒரு ஒட்டுக் கருவியை பொருத்த முடியாதா என்ன? மோடி அமைச்சர்களே பிரான்சின் தயவில் காலம் கழிக்கும் போது இவர்கள் ஏன் இரண்டு பத்திரிகையாளர்களை உளவாளிகளாக அனுப்ப வேண்டும்?

மோடி ஊர் ஊராக போய் இந்தியாவில் தொழில் நடத்த வெளிநாட்டு கம்பெனிகளை வருந்தி அழைக்கும் காலத்தில் யார் யாரை உளவு பார்க்கிறார்கள்?

மேலும் படிக்க :
பத்திரிகையாளர்களை சட்டவிரோத காவலில் விசாரித்தது தவறு: விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட ‘இந்து’ என்.ராம் வலியுறுத்தல்

‘French Spies’ in Tamil Nadu Were Journalists Exposing Sand Mining

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க