குழந்தையில்லா பெண்கள் குறித்து நிறைய பேசுகிறோம். குழந்தையில்லா ஆண்களின் நிலை குறித்து நாம் பேசியதுண்டா? தாத்தாவாகும் வயதில் ஆண்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்கிற நிலையில், ஆண்களின் குழந்தையின்மை குறித்து பொதுவெளியில் பேசுவதில்லை.

Robin Hadley
டாக்டர் ராபின் ஹாட்லி

அது தவறான முடிவு. டாக்டர் ராபின் ஹாட்லி(58), தன்னளவில் குழந்தையில்லாதவர். வயதானதன் காரணமாக தாமாக குழந்தை வேண்டாம் என முடிவெடுத்தவர்கள் குறித்து சமீபத்தில் ஆய்வொன்றை செய்திருக்கிறார்.

“பெற்றோராகும் விருப்பத்தில் குழந்தையில்லா ஆண்களும் பெண்களும் சிறிய அளவில் வேறுபடுகிறார்கள். மேலும், இந்த ஆய்வில் குழந்தையில்லா ஆண்களுக்கு வேறு சில எதிர்மறை விளைவுகள் உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. ஏனெனில் இங்கே குழந்தையில்லா ஆண்கள் குறித்து எவரும் பேசுவதில்லை” என தனது ஆய்வு குறித்து பேசுகிறார் ராபின் ஹாட்லி.

குழந்தையில்லா பெண்கள் குறித்து சமூகம் மிக மோசமான பார்வையை வைத்திருக்கிறது. இந்தப் பார்வையும் கூட மாறிவருகிறது. குழந்தையில்லா பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை மாற வேண்டும் என பேசியும் எழுதியும் வருகிறோம். ஆனால் ஆண்கள் குறித்து?

“ஒரு ஆண் தன்னை மலட்டுத்தன்மை உடையவர் என சொல்லிக் கொண்டால், அது மிகப்பெரிய அதிர்ச்சிக்குரிய விசயமாக பார்க்கப்படும். அவர் தன்னை கீழ்மை படுத்திக் கொள்வதாகவோ அல்லது கீழ்மையான பார்வையில் அடுத்தவர்களால் பார்க்கப்படுவார்” என்கிறார் ஹாட்லி.

ஆண்கள் பரிதாபத்துக்குரியவர்களாக பார்க்கப்படுகிறார்களா? “இல்லை. ஆனால், மக்கள் என்னை வித்தியாசமாக பார்க்கிறார்கள்” என்கிறார் 43 வயதான வடிவமைப்பாளர் பணி புரியும் கெல்சே. சந்தர்ப்பவசத்தால் குழந்தையின்மைக்கு ஆளானவர் இவர்.

stressed-man“43 வயதாகியும் திருமணம் ஆகவில்லை; குடும்பம் இல்லை… இதை மக்கள் வித்தியாசமாக பார்க்கிறார்கள். 43 வயதான பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை, அவருக்கு குடும்பம் இல்லை எனில் அவரை இப்படி பார்ப்பேனா என்பது தெரியாது. சினிமாக்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் கூச்ச சுபாவம் உள்ள, அமைதியான பெண் குறித்து பதிவு செய்கிறார்கள். நம்முடைய கலாச்சாரம் அது குறித்து பேசுகிறது. ஆனால், 43 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களின் அமைதியான குணத்தை எவரும் பேசுவதில்லை. அவர் அனைத்திலும் தோற்றவர். அம்மாவின் உதவியுடன் வாழ்பவர் என்பதாகத்தான் காட்டப்படுவார்.

பெண்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதை உணர்கிறார்கள். ஆனால், அவர்களுடைய புறக்கணிப்பு காதுகொடுத்து கேட்கப்படுகிறது. அதுகுறித்து விவாதிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஆண்களைக் காட்டிலும் அவர்களுடைய குரல் கேட்கப்படுகிறது. உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், என்னைக் காட்டிலும் குழந்தையில்லா பெண்கள் அதிகமாக கவலை கொள்கிறார்கள். ஆனால், ஆணுக்கு ஓர் உயிரியல் ரீதியான உணர்வு இருக்கிறது. நான் எப்போதும் ஒரு குழந்தை வேண்டுமென விரும்பியதுண்டு.  நீங்கள் செய்யக்கூடிய ஆகச்சிறந்த செயல்களில் அது ஒன்று” என்கிறார் கெல்சே.

உடல்ரீதியாக ஆண்களுக்கு குழந்தை வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுமா? ஹாட்லி சொல்கிறார், “எனக்கு அந்த உணர்வு இருந்த காரணத்தாலேயே குழந்தையில்லா ஆண்கள் குறித்து ஆராயும் ஆர்வம் உண்டானது. பெண்களுக்கு அவர்களுடைய சுழற்சியின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்துக்கு குழந்தை வேண்டும் என்கிற உணர்வு இருக்கும். அப்போது அவர்களுக்கு பாலுறவு கொள்வதற்கு விருப்பம் இருக்கும். ஆண்களுக்கு அப்படிப்பட்ட உணர்வு நிலையில் பாலுறவு விருப்பம் தோன்றுவதில்லை எனினும், உயிரியல் அடிப்படையில் குழந்தை வேண்டும் என்கிற உணர்வு பைத்தியக்காரத்தனமாக இருக்கும். எப்படியாயினும் குழந்தை எனக்கு வேண்டும் என்பதாக அந்த உணர்வு இருக்கும்”.

“குழந்தை வேண்டும் என என்னுடைய இருபது வயதுகளின் தொடக்கத்தில் நான் உறுதியாக இருந்தேன். என்னுடைய குழந்தைப் பருவத்தின் காரணமாக எனக்கு மகன் வேண்டும் என விரும்பினேன். எனக்கு மகள் வேண்டுமென நான் ஒருபோதும் விரும்பியதில்லை. வலிகள் நிறைந்த குழந்தை பருவத்தை அது மாற்றிவிடாது என்றபோதிலும், நான் பெறாத ஒரு குழந்தைப் பருவத்தை என்னுடைய மகனுக்கு அளிக்க விரும்பினேன். நான் நல்ல தகப்பனாக இருப்பேன் என நினைத்தேன்” குழந்தை வேண்டும் என்கிற ஏக்கம் தனக்கும் இருந்ததாக ஒப்புக்கொள்கிறார் கெல்சே.

“நான் 30 வயதை நெருங்கியபோது, எனக்கு குழந்தை பிறக்காது என தெரிந்து கொண்டேன். நான் வருத்தமுற்றேன். ‘இது நடக்கும், கவலைப்படாதே’ என நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள்.  ஆனால், இது நடக்காது என்கிற உணர்வு எனக்கிருந்தது. 40 வயதை எட்டியபோது உணர்வு நிலையில் நான் இன்னும் கீழிறங்கிப் போனேன். ‘இது நடக்கப்போவதே இல்லை’ என்கிற உணர்வு வந்தது” என்கிறார்.

குழந்தையில்லா பெண்களுக்கான அரவணைப்பு அமைப்பை நடத்திவரும் ஜோடி டே, “குழந்தையில்லா ஆண்கள் தனக்கென ஒரு துணையை தேடிக்கொள்வது அவசியம். அவர் அந்த ஆணைப் பற்றி புரிந்தவராய் இருக்க வேண்டும். குழந்தையில்லா ஆண்கள் துணையில்லாமல் எப்படி சமாளிக்க முடியும்?” என்கிறார்.

Rod Silvers
நடிகரும் எழுத்தாளருமான ராட் சில்வர்ஸ்

நடிகரும் எழுத்தாளருமான ராட் சில்வர்ஸ் (52), அவரும் அவருடைய முன்னாள் மனைவியுடன் சேர்ந்து ஐ.வி.எஃப் எனப்படும் செயற்கை கரூவுட்டல் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் முயற்சியை இரண்டு முறை செய்தவர். ஆண்கள் எந்த வழியிலும் தங்களுடைய உணர்வுகளை சொல்ல ஒரு இடம் இல்லை என்கிறார் இவர். “நீங்களாகவே உங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு உங்களை தேற்றிக் கொள்ள வேண்டும். இளம் ஆண்கள் இப்போது வெளிப்படையாக இருக்கிறார்கள். ஆனால், பணியாற்றும் வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்கள், தங்களுடைய உணர்வுகள் குறித்து பேசமுடியாது. வலி? காயம்? இந்த வார்த்தைகளை நான் அங்கீகரிக்கவேயில்லை” என குழந்தையில்லா ஆண்கள் சமூகத்தில் எதிர் கொள்கிற பிரச்சினைகளை பேசிகிறார் சில்வர்ஸ்.

சில்வர்ஸ், குழந்தையில்லா வயதான இரண்டு ஆண்களின் வாழ்க்கை குறித்து ஒரு நாடகம் ஒன்றை எழுதியிருக்கிறார். தன்னுடைய ஐவிஎஃப் (IVF) அனுபவத்தை வைத்து குறும்படம் ஒன்றையும் இயக்கியிருக்கிறார். அவர் ஏன் இவற்றை படைக்கிறார்? “எழுதுவது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. சிலர் பேசுவார்கள். நான் எழுதுகிறேன். நினைப்பதைக் காட்டிலும் செயல்படுத்துவதை விரும்புகிறது. நான் முன்பு எப்போதும் இதுகுறித்து பேசியதில்லை. அந்த நேரத்தில் என்னுடைய பெண்ணின் வலிக்கு ஆதரவாக நின்றேன்” என்கிறார்.

குழந்தையில்லாவர்களுக்கு அது ஏற்படுத்தும் வலி, இழப்பு, துக்கம், மன அழுத்தம் போன்றவை சமூகத்தின் பார்வையால் ஏற்படுகின்றன. ஹாட்லியின் ஆய்வில் தங்களுடைய அனுபவத்தை ஆண்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:
ஆண்மைக் குறைவும் ஆச்சி மனோரமாவின் கவலையும் !!
♦ சிசேரியன் எனும் உயிர்காக்கும் சிகிச்சை !

“பலர் தங்களுடைய குழந்தையின்மை பிரச்சினைக்கு மன அழுத்தமே காரணம் என்றார்கள். பொருளாதார ரீதியில் எப்படி இருக்கிறேன்? சமூக ரீதியாக எப்படி இருக்கிறேன்? என சிந்திக்கத் தொடங்கும்போது, நான் அவற்றில் சிறக்கவில்லை என்றால், நான் உயிரியல் அடிப்படையில் மறு உற்பத்தி செய்ய முடியாதவனாகிறேன் – எனில் ஆணாக நான் யார்?

30 வயதுகளில் குழந்தை பெற்றுக் கொள்ளும் உணர்வு இருந்த போது,  நான் இவை பற்றியெல்லாம் சிந்தித்து விரக்தியடைந்திருந்தேன். ஆனால், நான் அவற்றையெல்லாம் எனக்குள்ளே வைத்துக் கொண்டேன். விரக்தியடைவது, மீள்வது என போய்க் கொண்டிருந்தேன். வேலையில் கவனம் செலுத்தினேன்; குடிப்பதில் கவனம் திருப்பினேன். இப்போது, என்னுடைய ஆய்வு காரணமாக, நான் அவமானம் கொள்ளவில்லை” என்கிறார் ஹாட்லி.

மேலும் “உங்களுக்கு ஒன்று தெரியுமா? குழந்தையில்லா பெண்களைக் காட்டிலும் குழந்தையில்லா ஆண்களே அதிகம். இது குறித்து சரியான புள்ளிவிவரங்கள் தெரியவில்லை என்றாலும், பிரிட்டனில் குழந்தையில்லா ஆண்கள் 25 சதவீதமும் குழந்தையில்லா பெண்கள் 20 சதவீதமும் உள்ளனர்” என்கிற தகவலை பகிர்கிறார்.

இழப்பு இருக்கத்தான் செய்யும் என்கிறார் சில்வர்ஸ், “குழந்தை, திருமணம் குறித்த துக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்ன செய்ய முடியும்? அதை ஏற்றுக் கொண்டு, நேர்மறையாக எதையாவது செய்யத்தானே வேண்டும். அதனால்தான் நான் குறும்படம் எடுத்தேன். நாடகம் எழுதினேன். என்னைபோல குழந்தையில்லா சக ஆண்கள், தான் மட்டும் தனியாக இல்லை என்பதை உணர்த்துவதற்காக அதைச் செய்தேன்” என்கிறார்.

70 வயதிலும் குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் இருக்கிறார்களே? என்கிற கேள்விக்கு, ஹாட்லியின் சூடான பதில், “வயதானாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனமானது. அறத்தின் அடிப்படையில் அது தவறானதும்கூட. எல்லாவற்றுக்கும் ஒரு வரையறை இருக்கிறது” என்கிறார்.

“குழந்தையில்லையே என கவலைப் பட்ட காலம் கடந்து விட்டது. ஆனால், குழந்தைகளைப் பார்க்கும்போது நமக்கு இதுபோன்றதொரு குழந்தை இல்லையே என்கிற உணர்வு வருவது உண்மைதான். உங்களைப் போன்று தோற்றமளிக்கும் உங்கள் குழந்தையை பார்ப்பது என்ன மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தும் என என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.” குழந்தையின்மை குறித்த ஏக்கம் ஹாட்லிக்குள்  அவ்வப்போது வெளிப்படுவதை உணர முடிகிறது.

ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி குழந்தையின்மை என்பது குழந்தை பிறப்பை போன்ற இயல்பான உயிரியல் நிகழ்வாக இருக்கிறது என்பதை சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதோடு, ஆண்களுக்கும் ஏக்கங்கள், இழப்புகள், வலிகள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளவும் வேண்டும்.

சுருக்கப்பட்ட தமிழாக்கம்: அனிதா
நன்றி : தி கார்டியன் 

 

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க