சாம் மாநிலத்தில் உள்ள ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு தயாராகி வருகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து துலிஜியானில் உள்ள ஆயில் இந்தியா லிமிடெட் தலைமையகத்தில் தொழிலாளர்கள் ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆயில் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் போராட்டத்துக்கு அசாமிய தேசியவாத குழுக்கள் ஆதரவு அளித்துள்ளன.

அசாமின் ஜோராஜன் மற்றும் தெங்காகட் ஆகிய இடங்களில் உள்ள எண்ணெய் வயல்களின் உற்பத்தியை ‘பெருக்க’, தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் அழைப்பு விடுத்தது ஆயில் இந்தியா நிறுவனம். இந்த இரண்டு வயல்களும் அதிகப்படியான இலாபத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த டெண்டர் அழைப்பு விடுவிக்கப்பட்டது தொழிலாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நிறுவனம், “தனியார் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் இந்த டெண்டர் அறிவிப்பு உற்பத்தியை மேம்படுத்தவே” என விளக்கம் அளித்துள்ளது. “15 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் இருக்கும். தனியார் நிறுவனங்களை அழைப்பதால், இந்த எண்ணெய் வயல்கள் அவர்களுக்கு சொந்தமாகிவிடாது. இது ஆயில் இந்தியா வசமே இருக்கும். வடகிழக்கு ஹைட்ரோ கார்பன் விஷன் 2030-ன் படி, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களின் உற்பத்தியை பெருக்க நினைக்கிறது. ஆனால், எண்ணைய் வளம் குறைந்து வரும் கிணறுகளே எங்களிடம் உள்ளன. எனவேதான், மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து உற்பத்தியை மேம்படுத்தும் யோசனையை சொன்னது” என்கிறார் ஆயில் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ட்ரிடிவ் ஹசாரிகா.

ஆனால், மத்திய அரசின் இந்த முடிவு பொது நிறுவனங்களின் வளங்களை முற்றிலுமாக சுரண்டவே வழிவகை செய்யும் என தொழிலாளர் சங்கங்கள் எதிர்க்கின்றன.  “இந்த இரண்டு வயல்கள்தான் ஆயில் இந்தியா நிறுவனத்தை இயக்குகின்றன. 15 ஆண்டுகளுக்கு எண்ணெய் வயல்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்தால், ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு ஒன்றுமே மிஞ்சாது. ஆயில் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களை அழிப்பதுதான் அரசின் நோக்கம்” என்கிறார் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தத்தா.

தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வயல்கள் என்றால், வேலையிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். “இரண்டு வயல்களிலும் குறைந்தபட்சம் 500 நிரந்தர ஊழியர்களும் 1500 தின சம்பளம் வாங்கும் பணியாளர்களும் இருக்கிறார்கள். இதனால் பலர் விருப்ப பணி ஓய்வில் அனுப்பப்படும் கட்டாயத்துக்கு ஆளாகக்கூடும்” என்கிறார்.

ஆயில் இந்தியா நிறுவன வயல்களில் உற்பத்தியை பெருக்க, தனியார் நிறுவனங்களுக்கு முன்பும் அழைப்பு விடுக்கப்பட்டு, பணிகள் தரப்பட்டன. ஆனால், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள் போராடும் தொழிலாளர்கள்.

திப்ருகார் பல்கலைக்கழக பேராசிரியர் சத்யகாம் போரத்கூர், “ஏற்கனவே முயற்சித்து முடியாத ஒன்றை இப்போது எப்படி செய்ய முடியும்? இது காப்பரேட் ஊழலைப் போல உள்ளது” என்கிறார்.

ஆயில் இந்தியா நிறுவனத்தை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் முடிவை எதிர்க்கும் பலர், தனியார் நிறுவனங்கள் அதிகப்படியான இலாபத்துக்காக சொன்னதைவிட அதிகமாக உறிஞ்சுவார்கள் என்கிறார்கள். ஆயில் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற புவியியலாளர் அஜயானந்த போரத்கூர், “ஐம்பது ஆண்டுகள் வரை எண்ணெய் எடுக்க முடிந்த வயல்களை சில ஆண்டுகளிலேயே சுரண்டி எடுத்துவிடுவார்கள்” என எச்சரிக்கிறார்.

அசாம் தேசியவாத கட்சிகள் எண்ணெய் வளங்கள் தங்கள் மாநில மக்களுக்கே சொந்தம் எனக்கூறி பல ஆண்டுகாலமாக முழங்கி வருகின்றன. 1980-களில் சுத்திகரிப்புக்காக அசாமிலிருந்து வெளி இடங்களுக்கு எண்ணெய் கொண்டு சென்ற குழாய்களை சேதப்படுத்தி போராட்டம் நடத்தினர். “இரத்தத்தை சிந்துவோம்; ஆனால், எண்ணெயை பகிர்ந்துகொள்ள மாட்டோம்” என அப்போது முழுக்கத்தை வைத்தன.  அசாமின் விவசாய சங்கங்கள், மாணவர் அமைப்புகள் போன்றவை மத்திய அரசு தனது முடிவை அமல்படுத்துமானால் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என கடுமையாக எச்சரிக்கின்றன.

படிக்க:
இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம் ! சிறப்புக் கட்டுரை
வாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : பொங்கலும் விவசாயமும்

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு அதிவேகமாக விற்றுக் கொண்டிருக்கிறது மோடி அரசு. முன்பின் தொழில் அனுபவம் இல்லாத ரிலையன்சுக்காக அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனத்தை அழித்து வருகிறது மோடி அரசு. இப்போது அசாமின் ஆயில் இந்தியா நிறுவனத்தை திட்டமிட்டு இலாபத்தை குறைத்துக் காட்டி, தனியாருக்குப் பங்கு போடுகிறது.  மோடி அரசு வெட்கமில்லாமல் கூவும் ‘மேக் இன் இந்தியா’ முழக்கத்தின் பொருள் ‘அதிவிரைவாக நாட்டை தனியாருக்கு விற்றுக்கொண்டிருக்கிறோம்’ என்பதே!


கட்டுரையாளர்: அருணாப் சாகியா
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : கலைமதி
நன்றி: scroll

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க