பிணியொன்று நம்மை பீடித்துள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைகழக மாணவர் தலைவர்களான கன்னையா குமார், உமர் காலித் மற்றும் அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியவர்களை தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்ய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் நன்கறியப்பட்ட அறிவுஜீவியும் எழுத்தாளருமான ஆனந்த் தெல்தும்டே மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை மராட்டிய போலீசு எடுத்து வருவதாக செய்திகள் வருகின்றன.

ஆனந்த் தெல்தும்டே.

சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது சான்றுகள் ஏதுமின்றி பிணையும் வழங்காமல் பல மாதங்கள் வரை அவரை சிறையில் அடைக்க முடியும். ஏனைய ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதாரண மக்கள் உட்பட சிறையிலடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் போன்றே அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் அபாயகரமானவை.

இவர்கள் அனைவரும் உயர் நீதிமன்றங்களால் விடுவிக்கப்படுவார்கள் என்பதில் ஐயம் ஏதுமில்லை. அவ்வாறு நடக்கும் போது இம்மண்ணின் நீதிமன்றங்கள் மீது நாமனைவரும் ஒருமனதாக மீண்டும் நம்பிக்கை வைப்போம். ஆனால் கைது செய்யப்பட்டவர்களைப் பொறுத்தவரையில் அதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதுவரைக்கும் சிறையில் அவர்கள் சிதைந்து போவார்கள். அவர்களது வாழ்க்கை முடங்கி போகும்.

படிக்க:
நானும் ஒரு நகர்ப்புற நக்சல்தான் – அருந்ததி ராய் !
மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் !

அவர்களது அன்புக்குரியவர்கள் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டு துவண்டு போவார்கள். அவர்களை உணர்ச்சிபூர்வமாகவும் பொருளாதார ரீதியாகவும் நிலைகுலைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்தியாவில் சட்ட நடைமுறைகள் தான் உண்மையான தண்டனை என்பது நம்மனைவருக்கும் தெரியும்.

அருந்ததி ராய்.

மக்களுக்கான இன்றியமையாத அறிஞர்களில் ஆனந்த் தெல்தும்டேயும் ஒருவர் . அம்பேத்கரின் மகத் சத்தியாக்கிரகம், கயர்லாஞ்சி படுகொலை மற்றும் மிகச் சமீபத்தில், சாதி குடியரசைப் பற்றிய அவரது நூல்கள் இன்றியமையாத மற்றும் அவசியமான வாசிப்பிற்குரியதாகும். அவரை கைது செய்வது என்பது குற்றமற்ற அறிவுசார் பின்புலத்தை கொண்ட ஒரு சக்தி வாய்ந்த மற்றும் தனித்துவமான தலித் குரலை நசுக்குவதற்கான முயற்சியாகும்.

அவர் மீதான கைது நடவடிக்கையை அரசியல் ரீதியிலான நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியும். நம்முடைய வரலாற்றில் கேவலமான மற்றும் அதிர்ச்சிகரமான தருணம் இது.


நன்றி: scroll
கட்டுரையாளர்: அருந்ததி ராய்
தமிழாக்கம்: சுகுமார்


இதையும் பாருங்க…

அபாயமான காலத்தில் வாழ்கிறோம் | பேரா. ஆனந்த் தெல்தும்டே உரை