“மழை விட்டாலும் தூவானம் விடவில்லை” என்பதாக டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் பாதிப்புகள் தொடர்கிறது. ஒரு தலைமுறை மக்கள் , பல தலைமுறை மக்கள் வாழ்வதற்கு உருவாக்கிய விவசாயத்தை ஆணி வேர்வரை அடியோடு சாய்த்து விட்டது கஜா புயல். இந்நிலையில் அரசு அறிவித்த அரைகுறை நிவாரணத்தை பெறுவதில் மக்களுக்கு ஆயிரத்தெட்டு சிக்கல்.

இது தொடர்பாக பலரிடம் பேசிய போது உண்மை நிலவரம் நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டது என்பது புரிந்தது. புயல் பாதித்த மாவட்ட பகுதிகளின் சேதத்தை கணக்கெடுக்கும் வேளாண்மைத்துறை அரசு அலுவலர் ஒருவரிடம் பேசினோம்.

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு நிவாரணம் சரியான முறையில் மக்களுக்கு வந்து சேரலன்னு மக்கள் போராட்டம் பண்றாங்களே, என்னதான் நடக்குது?

“புயல் பாதித்த மாவட்டங்களில் பட்டியலிட மனம் ஒப்பாத வகையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உயிர் முதல் உடமை வரை பறிகொடுத்த மக்களுக்கு நாம் என்ன செய்து இழப்பை ஈடுகட்டிவிட முடியும். சமன்படுத்த முடியாத நிலையை பார்க்கும் போது போகும் இடமெல்லாம் ஒரு விவசாயியாக கண்கலங்கி நிற்கிறேன்.

பாதிப்பு பட்டியலில் விவசாயம் பெரும்பகுதி. அந்த விளைநிலத்தில் விஸ்வரூபமாக பாதித்தது என்றால் தென்னைதான் அதிகம். கடலோர விவசாய பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் மாற்று விவசாயமாக தென்னை உருவாயிற்று. ஆனால், பல வருடமாக தென்னை விவசாயம் செய்து வரும் நிலங்களை பயிர் விவசாய நிலமாகவே அரசு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அது எப்படிங்க ஐயா, பல வருசமா செய்யும் விவசாயத்த பதிவு பண்ணாம இருக்க முடியும். அப்படின்னா பயிர் காப்பீடு திட்டத்துக்கு எந்த அடிப்படையில நஷ்டஈடு குடுப்பீங்க.?

ஒரு விவசாயப் பகுதியில் விவசாயம் செய்யப்பட்ட நிலத்தில் பொதுவான பாதிப்புகள் பெருவாரியாக ஏற்பட்டால் பாதித்த நிலத்தையும் அதன் அளவீட்டையும் வருவாய்த்துறையை சேர்ந்த வி.ஏ.ஓ அதிகாரி கணக்கெடுக்க வேண்டும். அந்தக் கணக்கெடுப்பு பகுதிக்குள் உட்பட்ட நிலத்தில் எத்தனை சதவீதம் பாதித்தது என்பதன் அளவீட்டை வேளாண்துறை அதிகாரி நாங்கள் சொல்ல வேண்டும். இதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்.

நஞ்சை, புஞ்சை, தரிசு என நிலத்தின் வகையும் அதன் பயிர் வகை பற்றிய கணக்கும் வருவாய்த்துறை அதிகாரி வி.ஏ.ஓ-வின் அடங்கல் பதிவேட்டில் தான் இருக்கும். வாய்தா வரி வசூலிக்கும் போது நிலத்தின் பயிர் வகையினை மாற்றம் செய்திருக்க வேண்டும். ஆனால், பல இடத்தில் வேண்டுமென்றே பதிவு செய்யப்படாமல் இருக்கிறது.

படிக்க:
கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் !
மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்

பணப்பயிரை விட வருடத்திற்கு இருமுறை செய்யப்படும் பயிர் விவசாயத்தில் பாதிப்பு சேதம் அதிகம். நெல் போன்ற பயிர் விவசாயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் வறட்சி வந்துவிடும். பருவகாலத்தில் ஏற்படும் அதிக மழையால் வெள்ளம் வந்துவிடும். இப்படி எந்த வகையில் பயிர் சேதம் ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும் என்பதால் மாற்று விவசாயத்தை பதிவு செய்யாமல் இருந்துள்ளனர்.

விவசாயிங்க நிவாரணத்துக்காக மாற்று விவசாய முறையை பதிவு பண்ணாமல் இருந்துருக்காங்கன்னு சொல்றீங்களா?

விவசாயிங்கள குத்தம் சொல்ல முடியாது. அவங்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டம் மட்டும் தான் தெரியும். அதில் உள்ள ஓட்டைகள் அதிகாரிகளுக்கு மட்டும் தான் தெரியும். பயிர் விவசாயம் பணப் பயிர் விவசாயமாக மாற்றப் படாமல் இருந்தால் வருடத்துக்கு ஓரிரு முறை வருமானம் வரலாம் என்பது அதிகாரிகள் மூலமாகத்தான் விவசாயிகளுக்கு போகும். விவசாயிக்கு என்ன தோணும்? முறையா வர்ற நிவாரணத்தையே முழுசா குடுக்க மாட்டாய்ங்க… சரி வந்த வரைக்கும் இலாபம் என இருக்க தோணும். இந்த வகையில் சில பெரும் விவசாயிகள் நடுத்தர விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் சலுகையை வந்தவரை இலாபமென தெரிந்தே பதிவு செய்யாமல் இருந்துள்ளனர்.

ஆனால், வீட்டு அருகில் மட்டும் குறைவான எண்ணிக்கையில் மரம் வைத்திருந்தவர்களும் புஞ்சை நிலமான கட்டுமனை பகுதியில் மட்டும் மரம் வைத்துள்ளவர்களும் அரசு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்ற விபரம் தெரியாமல் இருந்துள்ளனர். இப்போது மரம் விழுந்து அதற்கு நிவாரணம் தருகிறார்கள் என்ற பிறகுதான் அதற்கான வழிமுறையே அவர்களுக்கு தெரிய வருகிறது.

விவசாய முறையை பதிவு பண்ணாத அல்லது கணக்கில் வராத பாதிப்புகள் எவ்வளவு இருக்கும்.?

இன்னும் சரியான கணக்கு வெளிவரவில்லை. இருபது முப்பது வருடம் தென்னை, மா, தேக்கு, என பணப்பயிர் விவசாயம் செய்த நிலங்கள் மூன்றில் ஒரு பங்கு கணக்கில் வரவில்லை. இது போக வரப்பில் உள்ள தென்னை, வீட்டு மனைகளில் உள்ள தென்னை, நத்தம் பொறம்போக்கு என சொல்லப்படும் தரிசு நிலத்தை அனுபவம் செய்து வளர்த்த தென்னை என எதுவுமே பதிவேட்டில் இல்லை.

இது போல் பல இடங்களில் கணக்கில் வராத மரங்கள் சாய்ந்துவிட்ட நிலையில் நிவாரண கணக்கெடுப்பில் பல சிக்கல் வருகிறது. வெளிய சொன்னா வெட்கக்கேடு, வேளாண்துறை, வருவாய்த்துறைன்னு ரெண்டு துறை இருந்துகொண்டு என்ன செஞ்சிங்கன்னு கேப்பாங்க. புயல் வந்துட்டு போயி ரெண்டு மாசம் முடிஞ்சுருச்சி கணக்க சரிகட்ட முடியாம எங்க துறையை சேந்தவங்க மண்ட காஞ்சு நிக்கிறோம். இப்போது ஏற்பட்டிருக்கும் இழப்பை எதனடிப்படையில் சரிசெய்வது என்று குழம்புகிறது அரசு நிர்வாகம்.

பத்து இருபது வருசமா தென்னை இருந்த நிலத்தை பயிர் நிலம் பாதித்ததுன்னு வருவாய்த்துறையும் இத்தன சதவீதம் பாதித்ததுன்னு வேளான்துறையும் கணக்கு எழுதிட்டு இப்ப குழப்பமா இருக்குதுன்னா எப்படி?

எப்படி இந்த தவறு நடந்துச்சுன்னு கேக்கிறீங்க புரியுது. எந்த துறைய சேந்த அதிகாரியக் கேட்டாலும் எனக்கு முன்ன இருந்தவரு பாத்த கணக்கதான் சார் நான் பாக்கிறேன்னு ஈசியா சொல்வாங்க. அதுக்கு மேல உள்ள போயி கேக்க முடியாது. ஏன்னா அதிகாரிகளுக்கு அந்தந்த ஊரு அரசியல் புள்ளிங்க தர்ர அழுத்தம் அப்படி. இப்ப எங்க துறைய பாத்தீங்கன்னா இத்தன சதவீதம் பாதித்த விவசாயத்துக்குதான் காப்பீட்டு தொகை தர வேண்டும் என்பது விதி. குறைவான பாதிப்பையும் நிவாரணத்துக்கு பரிந்துரைக்க வேண்டி கட்டாயப்படுத்துவாங்க. இதே போலதான் விவசாய திட்டத்தில் கிடைக்கும் நலனை பெறுவதற்காக இப்படியான தவறுகள் நடக்கிறது.

இந்த புயலை பொருத்தவரை வருவாய்த்துறை செய்த வேலையை (நில அளவீடு விவசாய முறை கணக்கெடுப்பு) வேளாண்துறையை செய்ய சொல்லிட்டாங்க. வருவாய்துறைக்கு (வி.ஏ.ஓவுக்கு) கால்நடை துறையை மாத்தி குடுத்துருக்காங்க. துறைகளை மாத்தி மாத்தி குடுத்ததனால் வசூல் வேட்டையில் துண்டு விழுந்துவிடும் என்பது அதிகாரிகளின் மனக்கவலை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இருப்பதை இழந்துவிட்டு எதிர்காலம் என்னவென்று தெரியாமல் நிற்கும் விவசாயியை விட நிவாரணம் வருவதில் அதிகாரிகளுக்குதான் சந்தோசம்.” என்று முடித்தார் அந்த அலுவலர்.

ரசு துறையில் நடக்கும் ஊழலை ஒரு அரசு அலுவலரே வாக்குமூலமாக ஒப்புக்கொண்டார் என சொல்லலாம். இவர் பகிர்ந்து கொண்டதில் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பாதிப்பும் அதற்காக அரசு கொடுக்கப்படும் நிவாரணத்தில் ஏற்படும் நிர்வாக பிரச்சனைகளும்தான் நிறைந்திருந்தது.  ஆனால், நிலமற்ற ஒரு கூலி விவசாயி எந்த சிட்டா அடங்கலை காண்பித்து வருவாய்துறை அடங்கலுக்குள் தன் கணக்கை கொண்டுவர முடியும்?

நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை எந்த நிவாரணமும் ஈடு செய்து விட முடியாது. புயல் பாதித்த பகுதியில் விழுந்த மரத்தை வாங்குவதற்கு ஆள் இல்லை. ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக கொண்டு போட போக்குவரத்துக்கு செலவு செய்ய முடியவில்லை. பிணத்தைப் புதைப்பது போல் குழிதோண்டி புதைக்கிறார்கள் விவசாயிகள். ஆனால், அந்த பரிதாபத்தை தாண்டி அவர்களுக்கு நிலம் என்ற ஒரு உடமை இருக்கிறது. அதை வைத்திருப்பதால் மகிழ்ச்சியை விட சோகமே அவர்களிடம் நிறைந்திருக்கிறது.

அரசு நிவாரண கணக்கில் வராத ஒரு பிரிவு இருக்கிறது. விவசாயக் கூலிகள். இவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாய பிரிவினர். எதை ஆதாரமாகக் காட்டி இவர்கள் இழப்பீடு வாங்க முடியும். குத்தகைக்கும் கூலிக்கும் விவசாயம் பார்த்த இவர்கள் எதை முதலீடாக போட்டு முன்னுக்கு வர முடியும். அடுத்த நாள் சாப்பாட்டுக்கு கூலி வேலையை நம்பியிருந்தவர்கள் யாரிடம் போய் வேலை கேட்பார்கள். சூறையாடப்பட்ட விவசாய பூமியில் கூலி விவசாயிகள்தான் அகதிகளாக அவதிப்படுகிறார்கள்.

பட்டுக்கோட்டை கரிக்காடு கிராமத்தை சேர்ந்த கூலி விவசாயி மாரிமுத்து பெற்ற மகனை விற்றுள்ளார். புயலில் தன் குடிசை பாத்திரம் அனைத்தையும் இழந்துள்ளார். ஒரு மாத காலம் பசியும் பட்டினியுமாக மனைவி நான்கு குழந்தைகளுடன் வறுமைக்குள்ளானதால் இப்படி செய்ததாக கூறுகிறார்.

வினவு களச் செய்தியாளர் புயல் பாதித்த பகுதிகளில் அவசியம் கருதி அரசு அல்லாத தனிமனிதர்கள் அமைப்புகள் என மனிதநேயம் உள்ளவர்கள் உரிய நேரத்தில் அடிப்படை உதவிகளை அனைத்து மக்களுக்கும் செய்தனர். அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் கட்டாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு நிர்வாக குளறுபடிகளை எடுத்துக் கூறி பட்டை நாமம் போட இருக்கிறது, அரசு. கஜா புயலின் பாதிப்புகளை பதிவு செய்வதற்கே முடியாத போது நம் விவசாயிகளை எப்படிக் காப்பாற்ற முடியும்? மனிதாபிமானத்தோடு உதவி செய்த அனைவரும் மனிதாபிமானமற்று இருக்கும் இந்த அரசை எதிர்த்து போராட வேண்டும். உண்மையில் இதுதான் நமது விவசாயிகளுக்கு செய்ய வேண்டிய அவசரமான உதவி!

– வினவு செய்தியாளர்.


 

தொடரும், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களின் நிவாரணப் பணிகள் !

ஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் வட்டம் நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அப்பகுதி மக்கள் அதிகார தோழர்களும் இளைஞர்களும் ஆசிரியர்களும் இணைந்து மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் – எழுதுபொருட்கள் வழங்கினர்.

தகவல்: மக்கள் அதிகாரம், வேதாரண்யம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க