ஜா புயலின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்திதான். மக்களுக்கு உரிய இழப்பீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம் தொடர்கிறது.

இன்னும் சகஜநிலைக்கு திரும்பாத பகுதிதான் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள வெள்ளப்பள்ளம். இப்பகுதியில் இன்னமும் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த கடல்நீர் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. மேலும் சேதமான மீனவர்களின் படகுகளுக்கு அரசு உரிய இழப்பீடுகளை வழங்கவில்லை.

கடல் நீர் வெளியேற்றப்படாத குடியிறுப்புப் பகுதி

புயலில் வீழ்ந்த மரங்கள், மற்றும் கூரைகள் அகற்றப்படவில்லை. இந்த நிலைமையை சீர் செய்ய எந்த அதிகாரிகளும் முயற்சி செய்யாத நிலையில், அப்பகுதி மக்களும் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளும் தான் நிலமையை சீர் செய்ய தொடர்ந்து களப்பணியாற்றி வருகின்றனர். இச்சூழலில்தான் நுண்கடன் நிறுவனங்களின் கோரத்தாண்டவம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

வாழ்வை இழந்து ஏதிலிகளாக நிற்கும் மக்களின் கழுத்தை இறுக்குகிறது நுண்கடன் நிறுவனங்கள். சாதாரண நாட்களில் “மடிவற்றிய நிலையில் பால் கறக்கும் இக்கயவர்கள் தற்போது மடியறுக்கவும் தயங்க மாட்டோம்” என்பது போல் செயல்படுகின்றனர். வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்பவர்களை இது போன்ற ஒட்டுண்ணி கும்பல் நிர்பந்திப்பதன் மூலம் சாவை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

சீரமைக்கப்படாத படகுகள்

ஆம். கஜாவின் கோரத்தாண்டவத்திற்கு பின்னர் அப்பகுதிகளில் இருந்து வெளியாகும் தற்கொலை செய்திகள் பலவும் அம்மக்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இந்த நிலையில் அப்பகுதி மக்கள், மக்கள் அதிகாரம் தோழர்களை அணுகியுள்ளனர்.

அதன் பிறகு மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் பின்னரும் நுண்கடன் கும்பல் அடங்கவில்லை. எனவே கடந்த 24-12-2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் ஆயக்காரன்புலம் பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் அங்கு வந்த வட்டாட்சியர் இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு நீங்கள் உங்கள் கடன்களைச் செலுத்துங்கள் என கூறியுள்ளார். அதனடிப்படையில் மக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளனர்.

இந்த தகவலானது ஆயக்காரன்புலம் பகுதி முழுக்க மக்கள் அதிகாரம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரமாக கொண்டு செல்லப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
வேதாரண்யம், தொடர்புக்கு : 90944 98693.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க